Tuesday, 30 December 2025

திருப்பித் தரும் வானம்!!!

 

திருப்பித் தரும் வானம்!!!

அல்லாஹ்வின் அற்புதமான படைப்புகளில் ஒன்று வானம். வானம் என்பது பிரம்மாண்டமான படைப்பாகும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருள்மறையில் சில விஷயங்களை மிகப் பெரியது என்று குறிப்பிடுகின்றான்.

அப்படியான மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாக வானம் மற்றும் பூமியை படைத்ததை குறிப்பிடுகின்றான்.

لَخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ 

"நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். ( அல்குர்ஆன்40: 57 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வானம் மற்றும் பூமியை படைத்ததன் நோக்கம் குறித்து பேசும் போது பின் வருமாறு குறிப்பிடுகின்றான்.

وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ

‘‘வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை’’ ( அல்குர்ஆன்: 21: 16 ) 

  وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ‏

‘‘வானங்களையும், பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை’’ ( அல்குர்ஆன்: 44: 38 )  

  وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ‌ؕ

வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை’’ ( அல்குர்ஆன்: 38: 27 ) 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பிரம்மாண்டமான முறையில் படைத்துள்ள வானம் மற்றும் பூமியை மனித சமூகத்திற்கு பல்வேறு வகைகளில் நன்மைகள் வழங்கிடும் அமைப்புக்களிலேயே படைத்துள்ளான். 

மேலும், வானம் குறித்து அது நிறுவப்பட்ட அமைப்பு குறித்து சிந்தித்து பார்க்குமாறு தூண்டுகிறான்.

أَفَلَمْ يَنظُرُوٓا۟ إِلَى ٱلسَّمَآءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَٰهَا وَزَيَّنَّٰهَا وَمَا لَهَا مِن فُرُوجٍ

அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டாமா? ( அல்குர்ஆன்: 50: 6 )

இறைநம்பிக்கையாளர்களின் சிறப்பு பண்புகளில் ஒன்றாக அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்கள் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வானம் மற்றும் பூமியை படைத்த விதத்தையும், அவ்விரண்டிலும் படைக்கப்பட்ட படைப்புகள் குறித்தும் சிந்தித்து சிலாகித்து பிரார்த்தனை வாயிலாக தங்களது வியப்பை வெளிப்படுத்தி கொடும் நரகில் இருந்து பாதுகாக்குமாறு வேண்டுவார்களாம்.

 

الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

"அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்து சிந்திப்பார்கள். எங்கள் இறiவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!’ (என்று கூறுவார்கள்.) ( அல்குர்ஆன்: 3: 191 )

இப்படிப்பட்ட பிரம்மாண்ட படைப்பான வானத்தின் ஆச்சரியமான ஒரு ஆற்றலை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் அழகான முறையில் குறிப்பிடுகின்றான்.

وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ (11) وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ (12) إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ (13) وَمَا هُوَ بِالْهَزْلِ (14)

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! இது தெளிவான கூற்றாகும். இது கேலிக்குரியதல்ல' ( அல்குர்ஆன்: 86: 11 - 14 )

வானம் நமக்கு எதைத் திருப்பித் தருகிறது?

மேலே இருந்து திருப்பித் தருகின்ற அம்சத்தோடு வானத்தை படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். அப்படியானால் வானம் நமக்கு எதைத் திருப்பித் தருகிறது? என்ற கேள்வி நமக்கு இயல்பாகவே வரும்.

"ட்ராபோஸ்பியர் (troposphere) என்ற வளிமண்டல இடமானது பூமியிலிருந்து 6 முதல் 10 கிலோ மீட்டர் வரை பரந்துள்ளதாக" அறிவியலார் கணிக்கின்றனர். இந்த பகுதிதான் பூமியின் நீரை உறிஞ்சி எடுத்துக் கொண்டு பின்னர் அதனை மழையாக திரும்ப பூமிக்குத் தருகிறது.

அயனோஸ்பியர் (ionosphere) என்ற வளிமண்டலமானது பூமியிலிருந்து 80 முதல் 1000 கிலோ மீட்டர் வரை பரந்து விரிந்துள்ளது. இந்த வளி மண்டலத்திலுள்ள காந்த கதிர்கள் பூமியிலிருந்து ரேடியோ, டிவி, செல்பேசி போன்றவை வெளியிடும் அலைகளை உள்வாங்கிக் கொண்டு திரும்ப பூமிக்கு கொடுத்துக் கொண்டுள்ளது.

பூமிக்குத் தேவையான வெப்பத்தை பூமி சூரியனிலிருந்து எடுத்துக் கொள்கிறது. வருகின்ற வெப்பத்தையெல்லாம் பூமி தன்னகத்தே எடுத்துக் கொண்டால் பூமியில் தாங்க முடியாத வெப்பம் ஏற்பட்டுவிடும். எனவே பூமி தனக்குத் தேவையான வெப்பத்தை எடுத்துக் கொண்டு மீதியை வானத்துக்கு அனுப்பி விடுகிறது. இவ்வாறு வானுக்கு அனுப்பப்பட்ட வெப்பத்தை வானம் சிதறடித்து விடாமல் தன்னகத்தே பாதுகாத்து வைத்துக் கொள்கிறது. (இந்த பாதுகாப்பு பணியை ஓஜோனோஸ்பியர் (ozonosphere - ஓசோன் அடுக்குகள்) வளிமண்டலத்தில் இருக்கும் இந்த அடுக்குகள் மேற்கொள்கின்றன.)

பூமியின் தேவையை விட வெப்பம் குறையும்போது, பூமியிடமிருந்து பெற்று சேமித்து வைத்திருந்த வெப்பத்தை வானம், பூமிக்கே திருப்பித் தருகிறது. இதனால் பூமியில் மனிதன் வாழத்தக்க அளவு வெப்பம் நிரந்தரமாக பராமரிக்கப்படுகிறது. இப்படி வெப்பத்தைத் திரும்ப பூமிக்குத் தருகிறது.

மழை எப்படி உருவாகின்றது?...

வானம் திருப்பித் தரும் பல்வேறு விஷயங்களில் மழையும் ஒன்று.

ஐந்து வகையான மழைப் பொழிவுகள் பூமியில் நிகழ்கிறது. இந்த மழைப் பொழிவுகளில் சிலதை நாம் பார்த்திருக்கிறோம். சிலதை நாம் கேள்வி பட்டிருப்போம்.

1. Normal Rain (மழை)

2. Snow Rain (பனி மழை)

3. Sleet or Ice pellets (சிறு பனி கட்டிகள் மழை)

4. Freezing Rain (உறையும் மழை)

5. Hail Stone rain (ஆலங்கட்டி மழை)

எந்த மழையாக இருந்தாலும் அது இங்கிருந்து - பூமியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட நீர் தான் என்பதை பின்வரும் வசனம் நிரூபணம் செய்கிறது.

கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது சூரியனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. 

மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவதும் உண்டு. இந்த அற்புதத்தைத் தான் 

  وَاَرْسَلْنَا الرِّيٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَيْنٰكُمُوْهُ‌ۚ وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِيْنَ‏

"சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை' ( அல்குர்ஆன்: 15: 22 ) என்று அல்லாஹ் கூறுகிறான்.

பனி மழை:

வானத்தில் வெப்பநிலை மிக குறைவாக இருக்கும் போது மழை பனியாகிறது. அந்தப் பனி பூமி வரும் வரை வெப்பநிலை குறைவாகவே இருந்தால் மழை பனியாக பொழிகிறது. வெப்பநிலை, நீர் உறையும் அளவோ, அதைவிட குறைவாகவோ (மைனஸில்) இருந்தால் மழை பனியாக பொழிய வாய்ப்புண்டு, இந்த வெப்பநிலை Troposphere (இதற்கான தமிழ் பதம் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்) முழுவதும் நிலவ வேண்டும் . இந்தப்பனி பஞ்சு போல் இருக்கும், ஆரம்பத்தில் இதில் விளையாட உற்சாகமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் பனி பட்ட இடம் எல்லாம் எறிய ஆரம்பித்துவிடும்.

சிறு ஐஸ் கட்டிகள் மழை:

மேலே சொன்ன அதேப்பனி காற்று மண்டலத்தில் ஏற்படும் வெப்ப மாற்றம் காரணமாக சிறு பனி கட்டி மழையாக பெய்யும். பனியாக ஆரம்பிக்கும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில், காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம், உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது மீண்டும் நீராகி, நிலத்தை நெருங்கும் முன் மீண்டும் குறைந்த வெப்பம் காரணமாக சிறு ஐஸ் கட்டிகளாக விழும். இந்த கட்டிகள் சிறு கற்கண்டு அளவிலோ இல்லை அதை விட கொஞ்சம் பெரியதாகவோ இருக்கும்.

உறையும் மழை:

பனியாக வரும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில், காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம், உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது மீண்டும் நீராகிவிடுகிறது அல்லவா, அந்த நீர் பூமியை அடைந்து பின் உறைந்தால் அது உறையும் மழை. அதாவது பனி நீரான பின்பு மீண்டும் பனியாவதற்கு குறைந்த வெப்பம் தேவை, பூமியில் இருந்து மிக கொஞ்சம் உயரத்திற்கே குறைந்த வெப்பம் இருந்து நீர் பனியாக விழாமல், பூமியில் விழுந்த பின் நிலத்தின் குறைந்த வெப்பம் காரணமாக பனியானால் அது உறையும் மழை. இந்தப்பனி நிலத்தில் கண்ணாடி போல உறைந்திருக்கும். இது கொஞ்சம் ஆபத்தான மழை, நிலத்தில் நீர் உறைந்திருப்பதே தெரியாது, தரை வழுக்கும், வண்டிகள் ஓட்டுவதற்கு கடினமாக இருக்கும்.

ஆலங்கட்டி மழை:

மேலே சொன்ன மழையெல்லாம் மழை மற்றும் பனி காலங்களில் வரும், ஆனால் ஆலங்கட்டி மழை வெய்யில் காலங்களில் வரும். இந்த காலங்களில் சில சமயம் உருவாகும் ஒரு வகை மேகங்களில் ஏற்படும் சிறு புயலில் நீர் துளிகள் ஒன்றாகி உருவாகுவது தான் இந்த பெரிய ஆலங்கட்டிகள், பெரிய பனி கட்டிகள். இந்த கட்டிகள் கற்கண்டு அளவில் இருந்து உள்ளங்கை அளவில் வரை இருக்கும். நம் மேல் விழுந்தால் வலிக்கும். இந்த கட்டிகள் கார் கண்ணாடியெல்லாம் உடைத்து விடும்.

இதில் சாதாரண மழையைத் தவிர்த்து ஏனைய நான்கு மழைப்பொழிவுகள் எப்படி ஏற்படுகிறது என்பதை பின்வரும் இரண்டு வசனங்கள் உறுதி படுத்துகிறது.

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُزْجِیْ سَحَابًا ثُمَّ یُؤَلِّفُ بَیْنَهٗ ثُمَّ یَجْعَلُهٗ رُكَامًا فَتَرَی الْوَدْقَ یَخْرُجُ مِنْ خِلٰلِهٖ 

“(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் பார்க்கவில்லையா?” ( அல்குர்ஆன்: 24: 43 )

இப்போது அடுக்கடுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இம்மேகங்கள் எமது பார்வைக்கு சிலபோது சாதாரணமாகத் தென்பட்டாலும் அவை மிகப் பிரம்மாண்டமானவையாக உயர்ந்த மலைகள் போன்று காட்சியளிக்கும். வானியல் வல்லுணர்களின் தகவல்படி இந்நிலையில் உள்ள மேகங்கள் சுமார் 25,000 அடி முதல் 30,000 அடிவரை உயர்ந்த மலைகளைப் போன்று வளரக்கூடியது என்கின்றனர்.

 

وَیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِیْهَا مِنْ بَرَدٍ

இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்” ( அல்குர்ஆன்: 24: 43 )

சிறிய மேகக்கூட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்து உருவாகும் மலை மேகங்களுக்குள் மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் (updraft) அதிகரிக்கின்றது. இதன்போது மேகத்தின் மையப் பகுதியில் மற்ற ஓரப் பகுதிகளை விட காற்றின் மின்னோட்டம் வலிமையானதாக இருக்கும். இதனால் செங்குத்தாக உயரத் தொடங்கும் மேகம் குளிர்ச்சியடையத் தொடங்கும். இதன்போது வளிமண்டலத்தில் ஏற்படும் குளிர் காற்று எமக்கு மழை வரப்போவதை கூறும் நற்செய்தியாக இருக்கிறது.

வினோதமான பல விஷயங்களை மழைகளின் ஊடாக இந்த வானம் திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது.

முதல் நூற்றாண்டில், உரோம இயற்கையியலாளர் மூத்பிளினி மீன், தவளை மழை குறித்து பதிவுசெய்துள்ளார். 

1794 இல், பிரெஞ்சு படைவீரர்கள் இம்மாதிரியான மழையை பிரெஞ்சு நகரான லீல் அருகில் உள்ள லலெய்ன் என்ற இடத்தில் கண்டதாக பதிவுசெய்துள்ளனர். 

18 ஆம் நூற்றாண்டில் நடு அமெரிக்கா நாடான ஹொண்டுராஸ் நாட்டில் கனமழைக்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்மழை என்பது பெய்ததாக தகவல் உண்டு.

கடலில் ஏற்படும் நீர்பீச்சு மூலமாக காற்றில் உறிஞ்சப்படும் மீன்கள் மீண்டும் மழை மூலமாக பூமிக்கு தரப்படுகின்றது.

நீர்ப்பீச்சு கடலில் மட்டுமல்ல, மிகப் பெரிய ஏரிகளிலும்கூட ஏற்படும் 1939 ஆம் ஆண்டு சூன் 17 அன்று ஈரான் நாட்டிலுள்ள டாப்ரெஜ் என்ற நகரில் விநோதமாக தவளை மழை பெய்தது. இந்த தவளை மழைக்கு அந்த நகரை ஒட்டிய ரிஜாயே ஏரியில் ஏற்பட்ட நீர்ப்பீச்சுதான் காரணம் என்பர்.

1974, 2004 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் உள்ள வறண்ட பகுதிகளில் மீன் மழை பெய்திருக்கிறது.

இந்தியாவில் தெலுங்கானாவில் உள்ள ஜாக்டியால் பகுதியிலும், உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்று மீன் மழை பெய்துள்ளது. 

இதே போல புழுக்கள் மழை, சிலந்தி மழை, தவளை மழை, மஞ்சள் நிற மழை, எறும்பு மழை என்று சில, வினோத மழைகளும் பெய்துள்ளது.

2013 ஆண்டு பிரேசிலில் சிலந்தி மழை பெய்துள்ளது.

1873 - கன்சாஸ் சிட்டி, 1882 - டுபுக் லாவா, 2005 - செர்பியா ஆகிய பகுதிகளில் தவளை மழை பெய்துள்ளது.

1970 ல் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் மஞ்சள் மழை பெய்துள்ளது. இது வகையான பூஞ்சை அல்லது கடும் விஷம் வாய்ந்த தேனீயின் எச்சம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2010 ல் அர்க்கன்ஜாஸ் எனும் பகுதியிலும், லூசியானா பகுதியிலும் சிகப்பு இறக்கைகள் கொண்ட ஆயிரக்கணக்கான பறவைகள் உள்ளடக்கிய பறவை மழை பெய்துள்ளது. 2011 ல் காய்ந்த புற்களை கொண்ட மழை இங்கிலாந்தில் பெய்துள்ளது.

2001-ம் ஆண்டு கேரளாவின் தென் மாநிலங்களில் ரத்த மழை பெய்துள்ளது. கேரளாவின் கடற்கரை பகுதிகளில் இருந்து, ஒரு வித பாசிகள் மேகங்களுக்குள் சென்று தங்கி விடுகின்றன. அந்த மேகங்கள் மழையைப் பொழியும் போது சிவப்பு வண்ணத்தில் காட்சி தருகின்றன. இதனைத்தான் 'ரத்த மழை' என்கிறார்கள். ( நன்றி: தினத்தந்தி, 25/09/2023, https://science.howstuffworks.com/nature/climate-weather/storms/10-times-it-rained-something-other-than-water.htm )

மீன் மழை அல்லது விலங்கு மழை இதுபோன்ற மழைகள் வானிலையில் காணப்படும் ஒரு அரிதான நிகழ்வாகும். 

பறக்க இயலாத விலங்குகள் மழையின்போது வானில் இருந்து மழையுடன் சேர்ந்து விழுவது ஆகும். இது போன்ற சம்பவங்கள் வரலாறு முழுவதும் பல நாடுகளில் நடந்ததாக தகவல்கள் உள்ளன.

இது எதனால் ஏற்படுகிறது என்றால், ஒரு கருத்தின்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின்போது கூடவே வேகமாக மாறும் வானிலை மாற்றத்தின்போது ஏற்படும் நீர்ப்பீச்சு என்பதுதான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அதாவது கடல் அல்லது ஏரி போன்றவற்றின் மேற்பரப்பில் திடீரென்று காற்று சூடாகும்போது அது விரைந்து மேலெழும்பும். இவ்வாறு காற்று மேலெழும்பும் போது அந்த வெற்றிடத்தை நோக்கி கடல்நீர் எழும்பிவரும். இவ்வாறு கடல்நீர் உறிஞ்சப்படுகையில் அதனுடன் சேர்த்து அப்பகுதியில் வாழும் தவளைகள், மீன்கள், சிப்பிகள், பறவைகள், பூச்சிகள் போன்றவை என எல்லாம் நீருடன் சேர்ந்து மேலெழும்பி காற்றுடன் பயணப்பட்டு சிறிது தொலைவில் கடலிலோ அல்லது கடற்கரை நகரங்களிலோ மழையாய் பொழியும். ( நன்றி: "Can it rain frogs, fish or other objects". Library of Congress. 26 August 2010.

 How can it rain fish?

 When It Rains Animals: The Science of True Weather Weirdness.

 Rivas, Orsy Campos (7 November 2004). "Lo que la lluvia regala a Yoro (discusses a rain of fishes that occurs annually in Honduras)". Hablemos. Archived from the original on 2 ஏப்ரல் 2012. Retrieved 9 மார்ச் 2016. "நீர்ப்பீச்சு: வானத்திலிருந்து கொட்டிய தவளை!". தி இந்து. 9 மார்ச் 2016. Retrieved 11 மார்ச் 2016 )

மொத்தத்தில் பூமியில் இருந்து பெற்றுக் கொள்கிற எதையும் வானம் திருப்பித் தராமல் இருப்பதில்லை.

திருப்பி அனுப்பி வைக்கப்படும் விண்வெளி குப்பைகள்...

புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள வெற்றிடம், விண்வெளி என அழைக்கப்படுகிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 200 முதல் 2,000 கி.மீ. தொலைவில் பல்வேறு நாடுகள் அனுப்பி வைத்துள்ள செயற்கைக் கோள்கள் இயங்குகின்றன.

தொலைக்காட்சி, இன்டர்நெட் மற்றும் ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள் மனிதனின் பல்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டன. அவை தொடர்ந்து இயங்க வேண்டுமானால் பல்வேறு வகையான செயற்கைக் கோள்களும், இதர விண்வெளி ஆய்வுக் கருவிகளும் விண்வெளிக்கு ஏவப்பட வேண்டும். ஒவ்வொரு நாட்டின் ராணுவம், வணிகத்துறை, வங்கிகள் உள்பட அனைத்துப் பணிகளும் செயற்கைகோள்கள் மூலமே இப்போது இயங்குகின்றன.

ரஷியாவால் 1957 அக்டோபர் 4-ல் ஸ்புட்னிக்-1 என்னும் செயற்கைக்கோள் விண்ணுக்கு செலுத்தப்பட்டதன் மூலம் ஆரம்பமானதுதான் விண்வெளி யுகம்.

கடந்த 50 ஆண்டுகளில், விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.  

2023 -ம் வருடத்தில் மட்டும் ஒன்வெப் நிறுவனத்தின் 550 செயற்கைகோள்கள், ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் 3,500 செயற்கைகோள்கள், ஸ்டார்லிங்கின் 12,000 செயற்கைகோள்கள, அமேசான் கியூபர் புராஜக்ட்டின் 3,236 விண்கலங்களையும் விண்ணில் செலுத்தியுள்ளன.

2023 -ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கீழ்புவி வட்டப்பாதையில் 9,000 செயற்கைக்கோள்கள் இருப்பதாகவும் இது 2030-ம் ஆண்டுக்குள் 6,0000-மாக அதிகரிக்கும் என கூறுகின்றனர் பிரிட்டன் அறிவியலாளர்கள். ( நன்றி: தினத்தந்தி, 12/04/2023 )

பிரிட்டன் அறிவியலாளர்கள். 100 டிரில்லியன் அளவிலான விண்வெளி குப்பைகள் கீழ்புவி வட்டப்பாதையில் சுற்றி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

விண்வெளி கழிவுகள் அல்லது குப்பைகள் (space junk) என்பது?

விண்வெளி கழிவுகள் அல்லது குப்பைகள் (space junk) என்பது விண்வெளியில் மனிதர்களால் விடப்பட்ட, இனி பயன்பாட்டில் இல்லாத செயற்கைக்கோள்கள், ராக்கெட் பாகங்கள் மற்றும் பிற உபகரணங்களாகும்.

அதாவது ராக்கெட்டை ஏவும்போது அதன் பாகங்கள் ஒவ்வொன்றாக கழன்று விழும். இப்படி விழும் பாகங்கள் குப்பைகளாக மாறுகிறது. அதேபோல செயற்கைக் கோள்களைச் சுற்றியுள்ள ஓடுகளும் (Launch Fairings) விண்வெளி குப்பைகளாக மாறிவிடுகிறது. அது போல சர்வதேச விண்வெளி மையங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் உடைந்த உபகரணங்கள் ஆகியவையும் குப்பைகளாக பூமியை சுற்றி வருகின்றன.

இவற்றின் முக்கிய பாதிப்புகள் என்று பார்த்தால் விண்வெளிப் பயணங்கள் மற்றும் ஆய்வுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு எதிர் காலத்தில் மனிதர்களுக்கும் இந்த குப்பைகள் கடும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று நாசா எச்சரிக்கை செய்கிறது.

ஏனெனில், எந்த குப்பை எப்போது எங்கு விழும் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது என்பதுதான்.

ஒரு மதிப்பீட்டின்படி, 10 செ.மீ.க்கு மேல் உள்ள 34,000க்கும் மேற்பட்ட துண்டுகள், 1 செ.மீ. முதல் 10 செ.மீ. வரை உள்ள 9,00,000 பொருள்கள், 1 மி.மீ. முதல் 1 செ.மீ வரையிலான 12.8 கோடிக்கும் மேற்பட்ட நுண்ணியத் துகள்கள் விண்வெளிக் குப்பைகளாக பூமியை வலம்வருகின்றன.

விண்வெளியில் மனிதன் செலுத்திய பொருள்களின் மொத்த நிறை 13,486 டன்கள்.

இதில் சுமார் 4,000 டன்கள் பயனற்ற ராக்கெட் பகுதிகளும், 8,000 டன்கள் செயற்கைக்கோள்களும் அடங்கும். இந்தச் செயற்கைக்கோள்களில் பாதி, தங்கள் வாழ்நாள் முடிந்த பின்னர் குப்பைகளாகவே சுற்றிவருகின்றன. ( நன்றி: தினத்தந்தி, 12/04/2023, தமிழ் திசை இந்து, 24/12/2025 ) 

மூன்று வகையான பாதிப்புகள்...

பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாக இந்த குப்பைகள் மாறுவது.

கடந்த 50 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு துண்டு குப்பைகள் பூமியில் விழுந்துள்ளதாக நாசா கூறுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 200 முதல் 400 வரையிலான, கண்காணிப்பின் கீழுள்ள விண்வெளிக் குப்பைப் பொருள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து எரிகின்றன. அதாவது, தினமும் குறைந்தபட்சம் ஒரு விண்வெளிக் குப்பையாவது பூமியின் வளிமண்டலத்தில் நுழைகிறது.

 பூமியின் 70 சதவீதப் பரப்பு பரந்த பெருங்கடல்களாலும், மக்கள் வசிக்காத பகுதிகளாலும் ஆனதால், பெரும்பாலும் அங்கே விழுந்து விடும். இவை மனிதர்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்துவது மிகக் குறைவு.

விண்வெளிக் குப்பையால் முதன்முறையாகப் பாதிக்கப்பட்டவர் அமெரிக்காவின் லாட்டி வில்லியம்ஸ். 1997 ஜனவரி 22 அன்று அவர் ஒரு பூங்காவில் நடந்து கொண்டிருந்தபோது, 12.7 செ.மீ. நீளமுள்ள ஒரு துண்டு அவர் தோளில் விழுந்தது. இது ஒரு டெல்டா II ராக்கெட்டின் பகுதி என இனம் காணப்பட்டது. இந்த ராக்கெட் 1996 ஏப்ரல் 24 அன்று ஏவப்பட்டு, சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்தது.

இது வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து எரிந்தபோது, அதன் துண்டுகள் சிதறின. அதில் ஒன்றுதான் லாட்டி வில்லியம்ஸ் மீது விழுந்தது.

மார்ச் 2024இல், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு பயனற்ற பேட்டரி, புளோரிடாவில் ஒரு வீட்டுக் கூரையில் விழுந்து சேதம் விளைவித்தது. நல்வாய்ப்பாக, அப்போது வீட்டில் இருந்த இளைஞருக்குக் காயம் ஏற்படவில்லை.

டிசம்பர் 30, 2024 அன்று, கென்யாவின் முகுகு கிராமத்தில் 600 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள, 8 அடி விட்டமுள்ள ஒரு ராக்கெட் பகுதி உலோக வளையம் விழுந்தது.யாருக்கும் பாதிப்பு இல்லை, எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை.

சமீபத்தில் டெக்சாஸில் இருந்து 2025 ஜனவரியில் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம், விண்ணில் ஏவிய சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.

இதன் காரணமாக, தெறித்த துண்டுகளிடமிருந்து தப்பிக்க, மெக்சிகோ வளைகுடா பகுதியில் பயணித்த விமானங்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. விழும் ராக்கெட் துண்டுகள் நேரடியாகப் பாதிக்கக்கூடும் என்கிற அச்சத்தின் காரணமாகப் பல விமான நிலையங்கள் மூடப்பட்டன.

இரண்டாவது பாதிப்பு....

புவியிலிருந்து ஏவப்படும் விண்கலங்கள் மற்றும் ராக்கெட்டுகளில் மோதுவது.

மணிக்கு 17,500 மைல்கள் (28,160 கிலோமீட்டர்) வேகத்தில் பயணிக்கும் பொழுது சில அங்குல அளவுள்ள ஒரு சிறு போல்ட் கூட வேகமாகச் செல்லும் விண்கலத்தைத் தாக்கினால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மூன்றாவது பாதிப்பு....

மனிதர்கள் மீது விழுவதையும் தாண்டி, அணைகள், அணுமின் நிலையங்கள், வெடிபொருள் கிடங்குகள் மீது விழுந்தால் பூமிக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். இதில் இன்னொரு சிக்கல் என்னவெனில், ரஷ்ய நாட்டை சேர்ந்த விண்வெளி குப்பைகள் அமெரிக்காவிலோ, அமெரிக்காவின் விண்வெளி குப்பைகள் வடகொரியாவிலோ விழுந்தால் உலகப்போரே வெடித்துவிடும் என்பதும் கவனிக்கத்தக்கது. ( நன்றி: கல்கி ஆன்லைன், 02/11/2025 ஒன் இந்தியா, 28/12/2024, தமிழ் திசை இந்து, 24/12/2025 )

இஸ்லாமிய வரலாற்றில் பெய்த வினோதமான மழைகள்…

1) முகட்டின் ஊடாக கொட்டப்பட்ட தங்க மழை...

وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

بَيْنَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا، فَخَرَّ عَلَيْهِ جَرَادٌ مِنْ ذَهَبٍ، فَجَعَلَ أَيُّوبُ يَحْتَثِي فِي ثَوْبِهِ، فَنَادَاهُ رَبُّهُ: يَا أَيُّوبُ، أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى؟ قَالَ: بَلَى وَعِزَّتِكَ، وَلَكِنْ لاَ غِنَى بِي عَنْ بَرَكَتِكَ “ وَرَوَاهُ إِبْرَاهِيمُ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَيْنَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا»

அய்யூப் (அலை) அவர்கள் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்தபோது தங்க வெட்டுக்கிளி ஒன்று அவர்களின் மீது விழுந்தது. அதை அய்யூப்(அலை) அவர்கள் தங்களின் ஆடையில் எடுத்தார்கள்.

உடனே அவர்களின் இரட்சகன் அவர்களை அழைத்து அய்யூபே! நீர் பார்க்கிற இதைவிட்டு உம்மை தேவையற்றவராக நான் ஆக்கவில்லையா?’ எனக் கேட்டான். அதற்கு உன் கண்ணியத்தின் மீது ஆணையாக அப்படித்தான்; எனினும் உன்னுடைய பரகத்தைவிட்டு நான் தேவையற்றவனாக இல்லைஎன அய்யூப்(அலை) அவர்கள் கூறினார்கள்என நபி அவர்கள் கூறினார்கள்: என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்கள். ( நூல்: புகாரி )

فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ وَّاٰتَیْنٰهُ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰی لِلْعٰبِدِیْنَ 

நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது. ( அல்குர்ஆன்: 21: 84 )

அல் அன்பியா அத்தியாயத்தின் 84 வது வசனத்தின் விளக்க உரையில் இமாம் முஜாஹித் (ரஹ்) மற்றும் இமாம் இக்ரிமா (ரஹ்) வாயிலாக இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது...

وعلى قول مجاهد وعكرمة يكون المعنى :وآتيناه أهله في الآخرة ومثلهم معهم في الدنيا . وفي الخبر : إن الله بعث إليه جبريل - عليه السلام - حين ركض برجله على الأرض ركضة فظهرت عين ماء حار ، وأخذ بيده ونفضه نفضة فتناثرت عنه الديدان ، وغاص في الماء غوصة فنبت لحمه وعاد إلى منزله ، ورد الله عليه أهله ومثلهم معهم ، ونشأت سحابة على قدر قواعد داره فأمطرت ثلاثة أيام بلياليها جرادا من ذهب . فقال له جبريل : أشبعت ؟ فقال : ومن يشبع من فضل الله ! . فأوحى الله إليه : قد أثنيت عليك بالصبر قبل وقوعك في البلاء وبعده ، ولولا أني وضعت تحت كل شعرة منك صبرا ما صبرت .

            அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அய்யூப் (அலை) அவர்களின் துஆவை ஏற்றுக் கொண்டு அவர்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் கொடுத்தான்.

பின்னர், அவர்களின் வீட்டு முகட்டின் மேலே மழை மேகத்தைப் போன்று ஒன்று திரட்டி அவர்களின் வீட்டிற்குள் மூன்று நாட்கள் தங்க வெட்டுக்கிளிகளை மழையாக பொழிவித்தான். அதை ஆர்வத்துடன் சேகரித்த போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜிப்ரயீல் அலை அவர்களை அனுப்பி "இன்னும் உங்கள் பசி நிரம்பவில்லையா?" என்று கேட்கச் செய்தான். அதற்கு, அய்யூப் அலை அவர்கள் "பொழிவது அல்லாஹ்வின் அருள் மழையல்லவா பசி எப்படி நிரம்பும்?" எப்படி பதிலுரைத்தார்கள். அப்போது, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அய்யூப் அலை அவர்களிடம் "சோதனைக்கு முன்பாகவும் சரி சோதனைக்கு பிறகும் சரி உம்மை நாம் புதழுக்குரியவராகவே நிலைத்திருக்கச் செய்துள்ளோம். உம்முடைய தலை முடி ஒவ்வொன்றுக்கும் கீழாக நாம் பொறுமையை முளைக்கச் செய்திருக்கா விட்டால் உம்மால் பொறுமையை கடைபிடித்திருக்க முடியாது" என்று வஹி அறிவித்தான். ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ )

2) சுடப்பட்ட கல் மழை...

இதற்கு முன் மனித சமூகத்தில் யாருமே செய்யாத புதியதொரு பாவச் செயலை நபி லூத் (அலை) அவர்களின் சமூக மக்கள் செய்தனர். அதுதான் ஆணோடு ஆண் உறவு கொள்ளும் ஓரினச் சேர்க்கை ஆகும். அதையும் கேளிக்கை விடுதிகளில், மக்கள் கூடும் பொது இடங்களில் என்று பலர் பார்க்குமளவில், எத்தகைய வெட்கமுமின்றி செய்தனர். தொடர்ந்து செய்து அது அவர்களுக்கு மிக பழகிப் போய்விட்டது. இயல்பாகிவிட்டது.  இயற்கைக்கு மாறான இந்த உறவை கைவிட அவர்கள் மறுத்தனர்.

 

اَىِٕنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ وَتَقْطَعُوْنَ السَّبِیْلَ  وَتَاْتُوْنَ فِیْ نَادِیْكُمُ الْمُنْكَرَ ؕفَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللّٰهِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ 

நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராகஎன்பது தவிர வேறு எதுவுமில்லை.

قَالَ رَبِّ انْصُرْنِیْ عَلَی الْقَوْمِ الْمُفْسِدِیْنَ ۟۠

லூத் (அலை)  அவர்கள், “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!என்று (பிரார்த்தித்துக்) கூறினார்கள். ( அல்குர்ஆன்: 29: 29, 30 )

இறுதியில் ஒருநாள் இறைவன், நபி லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் துஆவை எற்றுக்கொண்டான். தண்டனையை அல்லாஹ் மழை வடிவில் அனுப்பி வைத்தான்.

وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًا ‌فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِيْنَ

இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக. ( அல்குர்ஆன்: 7: 84 )

பயங்கர இடிமுழக்கத்துடன் கூடிய கொடுங்காற்று சுடப்பட்ட கற்களை சுமந்து வந்து அவ்ஊர் மக்கள் மீது வீசி எறிந்து அனைத்து அநியாயக்கார வரம்பு மீறிய மக்களையும் அழித்து அவ்வூரை அல்லாஹ் தலைகீழாக புரட்டி விடுகிறான் . 

  فَجَعَلْنَا عَالِيـَهَا سَافِلَهَا وَ اَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّيْلٍؕ‏ 

பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்ட விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். ( அல்குர்ஆன்: 15: 74 )

وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًۭا فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ

இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்; எனவே, எச்சரிக்கப்பட்ட அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் கெட்டது. ( அல்குர்ஆன்: 27: 58 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் சிந்தித்து செயல்படும் மேன்மக்களாக ஆக்கியருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!