Thursday 9 March 2017

பிறரை மகிழ்ச்சிப்படுத்தி வாழ்தல் இனிது!!!



பிறரை மகிழ்ச்சிப்படுத்தி வாழ்தல் இனிது!!!



வெற்றி என்றால் என்ன? உண்மையான வெற்றி என்றால் என்ன? இந்த கேள்விக்கான பதில் நம்மில் பலருக்கு இது நாள் வரை தெரியாது என்று சொன்னால் அது மிகையல்ல.

பெரும்பாலும் நாம் ஒருவரின் பதவி, அதிகாரம், செருக்கு, கௌரவம், மரியாதை, சமூக அந்தஸ்து, பட்டங்கள், அவர் புரிந்த சாதனைகள், அவர் வெளிக்காட்டும் ஆடம்பரங்கள், அவரின் வெளிப்புறப் பகட்டு ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்கின்றோம்.

உண்மையில் இவற்றை வைத்து நாம் ஒருவரின் வெற்றியை மதிப்பிடவே முடியாது. ஏனெனில், இவையெல்லாம் வெளிப்புற விஷயம் தான்.

ஒரு மனிதனின் உண்மையான வெற்றி என்பது ஏதோ ஒரு விதத்தில் அவனுக்கு மனநிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்து கொண்டு இருக்க வேண்டும்.

ஒரு மனிதன் செல்வத்தை இழக்கின்றான் என்றால் அந்த இழப்பு தற்காலிகமானது தான். ஒருவன் ஆரோக்கியத்தை இழக்கின்றான் என்றால் அந்த இழப்பு கொஞ்சமானது தான். ஒருவன் தம்மிடம் இருக்கும் அதிகாரம், பதவி, அந்தஸ்து என்று இப்படி எதை அவன் இழந்தாலும் அந்த இழப்பு மிதமானது தான்.

ஏனெனில், ஒரு கட்டத்தில் இழந்த ஒவ்வொன்றையும் அவனால் மீண்டும் இன்னொரு கட்டத்தில் மீட்டெடுக்க முடியும்.

ஆனால், ஒரு மனிதன் மன நிம்மதியை இழக்கும் போது, மகிழ்ச்சியை இழக்கும் போது அந்த இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது. மனநிம்மதியும், மகிழ்ச்சியும் இல்லையென்றால் வாழ்க்கையில் எது இருந்தும் உபயோகமில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

நாம் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும், நாம் நிம்மதியாய் இருந்து மற்றவர்களை நிம்மதியாய் வைத்திருப்பதும், மற்றவர்களை நேசித்து, மற்றவர்களின் நேசத்தை மனதார ஏற்றுக் கொள்வதும் தான் உண்மையான வெற்றியாகும்.

இந்த உண்மைகளை விளங்கி, வெளிப்புற விஷயங்களை வெற்றியாக மதிக்கிற மனோநிலையில் இருந்து விலகி உண்மையான வெற்றியை நோக்கி பயணிக்குமாறு இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

يَعْلَمُونَ ظَاهِرًا مِنَ الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ عَنِ الْآخِرَةِ هُمْ غَافِلُونَ ()

மக்கள் உலக வாழ்வின் புறத்தோற்றத்தை மட்டுமே கவனிக்கின்றனர். மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர்”.            ( அல்குர்ஆன்: 30: 7 )

இந்த இறைவசனத்தின் தொடர் பத்ர் குறித்த வெற்றிச் சோபனத்தை இறை நம்பிக்கையாளர்களுக்கு சொன்னதன் பின்பு சொல்லப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளித்தோற்றத்தைக் கொண்டு முடிவெடுப்பது?

إِنَّ قَارُونَ كَانَ مِنْ قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ

காரூண் மூஸாவின் சமுதாயத்தைச் சார்ந்தவன். அவன் தன் சமூகத்திற்கு எதிராக வரம்பு மீறி நடந்தான். மேலும், நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகள் ஒரு குழுவால் கூட சிரமப்பட்டுத்தான் தூக்கமுடியும்.             ( அல்குர்ஆன்: 28: 76 )

وقال خيثمة: وجدت في الإنجيل أن مفاتيح خزائن قارون وقر ستين بغلا غراء محجلة، وأنها لتنوء بها من ثقلها، وما يزيد مفتح منها على إصبع، لكل مفتح منها كنز مال، لو قسم ذلك الكنز على أهل البصرة لكفاهم. قال مجاهد: كانت المفاتيح من جلود الإبل. وقيل: من جلود البقر لتخف عليه، وكانت تحمل معه إذا ركب على سبعين بغلا فيما ذكره القشيري. وقيل: على أربعين بغلا. وهو قول الضحاك. وعنه أيضا: إن مفاتحه أوعيته.

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் 40 அல்லது 60 அல்லது 70 கோவேறுக்கழுதைகள் அவனுடைய கருவூலங்களின் சாவியைச் சுமந்து வரும் என்று கூறுவதோடு, அவனுடைய கருவூலத்தில் இருக்கும் செல்வங்களை பங்கு வைத்தால் பஸராவின் பகுதி மக்கள் எல்லோருக்கும் போதுமான வாழ்க்கைப் பேறு கிடைக்கும் என்று கூறுவார்கள்.                      ( தஃப்ஸீர் அல் குர்துபீ )

ஒரு கட்டத்தில் அவனது சமூக மக்கள் காரூணின் வெளிப்புறப் பகட்டு வாழ்க்கையைப் பார்த்து அங்கலாய்த்து

فَخَرَجَ عَلَى قَوْمِهِ فِي زِينَتِهِ قَالَ الَّذِينَ يُرِيدُونَ الْحَيَاةَ الدُّنْيَا يَا لَيْتَ لَنَا مِثْلَ مَا أُوتِيَ قَارُونُ إِنَّهُ لَذُو حَظٍّ عَظِيمٍ ()

ஒரு நாள் அவன் தன்னுடைய அலங்கார மிடுக்குடன் தன் சமூகத்தார் முன்னிலையில் வந்தான். எவர்கள் உலக வாழ்க்கையை விரும்புவோராய் இருந்தனரோ அவர்கள்ஆஹா! காரூணுக்கு வழங்கப்பட்டிருப்பது போன்று நமக்கும் கிடைத்திட வேண்டுமே! அவன் மகத்தான பாக்கியசாலி தான்!” என்று கூறினார்கள்.

فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ () وَأَصْبَحَ الَّذِينَ تَمَنَّوْا مَكَانَهُ بِالْأَمْسِ يَقُولُونَ وَيْكَأَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَوْلَا أَنْ مَنَّ اللَّهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا وَيْكَأَنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ ()

இறுதியில், நாம் அவனையும், அவனுடைய வாழ்விடத்தையும் பூமியில் புதைத்து விட்டோம். அல்லாஹ்வுக்கு எதிராக அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை. தனக்குத் தானே உதவி செய்யக் கூடியவனாகவும் அவன் இல்லை.

நேற்று அவன் பெற்றிருந்த அந்தஸ்தை அடைய வேண்டும் என்று ஏக்கம் கொண்ட அதே மக்கள் இப்போதுஐயகோ! நாம் மறந்து போயிருந்தோம், அல்லாஹ் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகின்றான். மேலும், தான் நாடியோருக்கு அளவோடு கொடுக்கின்றான் என்பதை!

அல்லாஹ் மாத்திரம் எங்களுக்கு உபகாரம் செய்திராவிட்டால், எங்களையும் பூமியில் புதையுண்டு போக வைத்திருப்பான். ஐயகோ! நிராகரிப்பாளர்கள் வெற்றியடைவதில்லை என்பது எங்களுக்கு நினைவில்லாமல் போய் விட்டதே!” என்று கூறினார்கள்.                                     ( அல்குர்ஆன்: 28: 79 – 82 )

இங்கே, அல்லாஹ் வெளித்தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்வது தவறென்றும், ஒரு கட்டத்தில் அந்த முடிவு தவறென்று உணர்வார்கள் என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

செல்வச்செழிப்பின் உச்சத்தில் வாழ்பவர்கள் வெற்றியாளர்களா?...

وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ () الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ () يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ () كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ ()

மக்களை நேருக்கு நேர் இழித்துரைத்துக் கொண்டும், முதுகுக்குப் பின் குறை கூறிக் கொண்டும் அலைகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான். அவன் எத்தகையவனென்றால், தன்னுடைய செல்வம் தனக்கு நிரந்தர வாழ்வை அளித்து தன்னை நிலைத்திருக்கச் செய்யும் நோக்கில் அவன் சேகரித்து வைக்கின்றான்.

அவ்வாறன்று! சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஓரிடத்தில் அவன் வீசியெறியப்படுவான்.                                    ( அல்குர்ஆன்: 104: 1 – 4 )

செல்வச் செழிப்பின் உச்சத்தில் இருக்கும் ஒருவனால் வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்றால் இருக்க முடியாது என்று சொல்ல முடியும்.

ஆனால், அதே நேரத்தில் மகிழ்ச்சி தருகிற அனுபவங்களின் மூலம் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் செல்வச் செழிப்பின் உச்சத்தை நாம் அனுபவிக்கலாம்.

அலீ (ரலி) அவர்கள் மகனார் ஹுஸைன் (ரலி) அவர்களின் மகன் வழிப் பேரர் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 38 –இல் பிறந்தார்கள்.

மிகப்பெரும் கல்விமானாக வாழ்ந்தார்கள். அரபுலகத்தில் பிரபல்யமாக அறியப்பட்ட ஸயீத் இப்னுல் முஸய்யப் (ரஹ்) இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) இமாம் ஸுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) ஆகியோர் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்களிடம் வந்து தங்களின் சந்தேகங்களுக்கான விளக்கங்களைப் பெற்றுச் செல்வார்கள்.

செல்வச் செழிப்பிலும் மிகச் சிறந்து விளங்கினார்கள். அதே அளவு கொடைத் தன்மையிலும் சிறந்து விளங்கினார்கள்.

ஹிஜ்ரி 94 முஹர்ரம் 25 –இல் வலீத் இப்னு அப்துல் மலிக் எனும் ஆட்சியாளரால் விஷம் வைத்து ஷஹீதாக்கப்படுகின்றார்கள்.

அவர்களின் உடலை குளிப்பாட்டும் போது அங்கிருந்தவர்கள் முதுகில் பெரிய, பெரிய சுமை தூக்கியதற்கான வடுக்களை பார்க்கின்றார்கள்.

அறியப்படும் செல்வந்தராக வாழ்ந்தவர்களின் முதுகில் ஏன் இவ்வளவு பெரிய வடுக்கள்? ஏன் அவர்கள் சுமை தூக்க வேண்டும்? என்கிற வினாக்கள் எழுப்பட்டு மதீனா நகரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது.

அப்போது, தான் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்களின் முதுகில் இருந்த வடுக்களுக்கான காரணங்கள் தெரிய வந்தது.

ஆம்! தினந்தோரும் இரவிலே மதீனாவின் தெருக்களில் அநாதைகள், ஏழைகள், ஆதரவற்றோர்கள், விதவைகள் ஆகியோரின் வீடுகளின் கதவுகளைத் தட்டி ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மூட்டையை கொண்டு கொடுப்பார்களாம்.

அந்த மூட்டையில் அவரவர்களின் தேவைக் கேற்ப சில போது உணவுப் பொருட்கள், விறகுக் கட்டைகள், திர்ஹம்கள், தீனார்கள், ஆடைகள் என இருக்குமாம்.

மதீனாவின் தெருக்களில் வசிப்போர் யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காகவும், யார் உதவி செய்கின்றார்கள் என்பதை உதவியைப் பெறுபவர்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காகவும் முகத்தை மூடியவர்களாகச் சென்று கொடுப்பார்களாம்.

நீண்ட காலமாக உதவியைப் பெற்று வாழ்ந்தவர்களுக்கு அவர்களின் முதுகில் இருந்த வடுக்கள் தான் இது வரை யார் உதவி செய்தார் என்பதைக் காண்பித்துக் கொடுத்தது.

ஒருவர் பின் ஒருவராக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவர்களால் பயனடைந்தவர்கள் வந்து சொன்னதன் பின்னால் தான் அந்த வடுக்களுக்குப் பின்னால் இருந்த நெகிழ்வான வரலாறு உலகிற்கு தெரிய வந்தது.

                                                ( நூல்: இலலுஷ் ஷராயிஃ )

எனவே, செல்வச் செழிப்பின் உச்சத்தில் இருக்கும் ஒருவனால் வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்றால் இருக்க முடியாது என்று சொல்ல முடியும்.

ஆனால், அதே நேரத்தில் மகிழ்ச்சி தருகிற அனுபவங்களின் மூலம் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் செல்வச் செழிப்பின் உச்சத்தை நாம் அனுபவிக்கலாம் என்பதை இந்த வரலாற்றுச் செய்தி நமக்கு உணர்த்துகின்றது.
   
உலகப் புகழ் பெற்ற டயர் நிறுவனம்டன்லப் டயர்ஸ்இதை நிறுவியவர் ஜார்ஜ் சி டன்லப் என்பவர்.

மிக மிகச் சாதாரணமான குடும்பத்தைச் சார்ந்த மனிதர் அவர். அவருக்கும், செல்வச் செழிப்பிற்கும்மிகப் பெரிய இடைவெளி இருந்தது.
அவர் வாழ்வின் ஆரம்பக்கட்டத்தில் தன் வீட்டருகே வசித்த ஒரு மூதாட்டியின் மேல் அன்பும் கரிசனமும் கொண்டிருந்தார்.

அந்தப் பெண்மணியின் கடைசிக் கட்ட வாழ்க்கையானது சக்கர நாற்காலியில் தான் கழிந்தது.

உண்மையில் சொல்லப்போனால், அந்தப் பெண்மணியால் யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

ஜார்ஜ், பெரும்பாலான நேரங்களில் அந்தப் பெண்மணியின் சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு வெளியில் அழைத்துச் செல்வார்.

அப்போதெல்லாம் சக்கர நாற்காலியின் சக்கரங்கள் ஸ்டீலினால் மட்டுமே தயாரித்து வந்தனர்.

சக்கர நாற்காலியில் வைத்து அப்பெண்மணியை தள்ளிக் கொண்டு போகும் போது மேடு பள்ளமான பகுதிகளில் அதன் சக்கரங்கள் ஆட்டம் கண்டதால் அந்த முதிய பெண்மணியின் தளர்ந்த உடலுக்கு வேதனையைத் தந்தது.

ஜார்ஜ் இதை எப்படி சரி செய்வது, சக்கர நாற்காலியின் மூலம் ஏற்படும் பாதிப்பில் இருந்து எப்படி மூதாட்டியை காப்பாற்றுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தார்.

அந்த காலகட்டத்தில் மக்களிடையே ஒரு பொருள் பிரபலமாகிக் கொண்டு இருந்தது. அந்தப் பொருள் மிகவும் மிருதுவானதாகவும், அதிக இழுவைத் தன்மையுடையதாகவும் இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டனர்.

ஜார்ஜின் கவனம் அதன் பக்கம் சென்றது. அந்தப் பொருள் வேறொன்றுமில்லை அது தான் ரப்பர்.

ஜார்ஜ் ஒரு முறை கடை வீதிக்குச் சென்று நீளமான ரப்பர் ஒன்றை வாங்கி வந்தார். நீண்ட நேரம் கையில் வைத்து சிந்தனை செய்து கொண்டிருந்தார்.

பின்னர், நீளமான அந்த ரப்பரை எடுத்து சக்கர நாற்காலியின் சக்கரத்தைச் சுற்றி இணைத்தார். அதற்கு பிறகு அந்த சக்கர நாற்காலியில் அந்த மூதாட்டியை வைத்து மேடு, பள்ளமான இடங்களிலும், கடுமையான தரைப் பகுதிகளிலும் தள்ளிச் சென்றார்.

இப்போது, அவர் தள்ளுவதற்கு மிக எளிதாக இருப்பதையும், அந்த மூதாட்டிக்கு வேதனை நீங்கி சுகமானதாக அமைந்திருப்பதையும் உணர்ந்தார்.

யாருக்கும், எந்தப் பிரயோஜனமும் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்த அந்த மூதாட்டியின் கடைசி கால வாழ்க்கையில் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து அதை மகிழ்ச்சியோடு அனுபவித்தார்.

பின்னர், அங்கிருந்து தான்ட்ன்லப் டயர்எனும் வித்து உருவாகியது. அதற்குப் பிறகு படிப்படியாக செல்வச் செழிப்பிற்கும், ஜார்ஜிற்கும் இடையே இருந்த இடைவெளி காணாமல் போனது.

 இன்று உலகெங்கிலும் மிகப் பெரும் தொழில் சகாப்தமாக வியாபித்து நிற்கின்றது.

( இன்ஃபினி எனும் மாதமிருமுறை வெளியாகும் தமிழ் இதழில் தாதா ஜே. பி வஸ்வானி என்பவர் எழுதிய உண்மையான வெற்றி எனும் கட்டுரையில் இருந்து )

ஆட்சியும், அதிகார கம்பீரமும் பெற்றவர்கள் வெற்றியாளர்களா?....

ஆட்சியும், அதிகாரமும் வழங்கப்ப்பட்ட ஃபிர்அவ்ன், நம்ரூத், ஹாமான், போன்றோரின் வாழ்க்கையும், அவர்களின் முடிவும் அவர்கள் யார் என்பதை அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் உலகிற்கு உணர்த்தி இருக்கின்றார்கள்.

ஹிஜ்ரி 15 –ஆம் ஆண்டு பைத்துல் முகத்தஸ் வெற்றி சாத்தியம் ஆனது. முஸ்லிம்களின் வசம் பைத்துல் முகத்தஸ் நகரத்தின் திறவுகோல் ஒப்படைக்கப்பட்டது.

அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் வெற்றியின் அடையாளமாக அந்த புனித தலத்தின் திறவு கோலை ஆண்டாண்டு காலமாக கோலோச்சிக் கொண்டிருந்த, பாரம்பர்யமாய் ஆண்டு கொண்டிருந்த மன்னர்களின் கையில் இருந்து பெறுகின்றார்கள்.

இந்த வெற்றி எப்படி சாத்தியமானது? இதன் பின்னர் எவ்வளவு பெரிய அதிகாரப் பிரயோகம் நடந்திருக்கும்? என்றெல்லாம் எண்ணியவர்களாக வரலாற்றின் பக்கங்களை திறந்து பார்ப்போமேயானால் வியப்பின் விளிம்பிற்கே வந்து விடுவோம்!

ஆம்! திமிஷ்க்கை வெற்றி கொண்ட கையோடு ஃபலஸ்தீனை நோக்கி, பைத்துல் முகத்தஸை நோக்கி தங்களின் படையை திருப்பினார்கள் அபூ உபைதா அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள்.

வந்த நோக்கத்தை விளக்கி கடிதம் ஒன்றை எழுதி வீரர் ஒருவரின் மூலமாக அனுப்பினார்கள் படைத்தளபதி அபூஉபைதா (ரலி) அவர்கள்.

நாங்கள் போரிட விரும்பவில்லை, அதே நேரத்தில் உங்கள் மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை எங்களோடு உங்கள் ஆட்சித்தலைவர் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைத்து பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார் ஈலியா – ஃபலஸ்தீனை உள்ளடக்கிய நகரத்தை மையமாகக் கொண்டு தலைமையிடமாக செயல்பட்டுக் கொண்டிருந்த அரசர்.

விவரத்தை அறிக்கையாக தயார் செய்து மதீனாவிற்கு அனுப்பி வைத்தார்கள் தளபதி அபூஉபைதா (ரலி) அவர்கள்.

இதோ நான் புறப்பட்டு விட்டேன் என தங்களுக்கு முன்னால் பதில் கடிதத்தை தளபதி கையில் சேர்க்கும் வகையில் வந்த வீரரிடமே கொடுத்து அனுப்பினார்கள் உமர் (ரலி) அவர்கள்.

2400 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நீண்ட பயணம் ( தற்போதைய தொலை தூரத்தின் கணக்குப்படி ) தங்களின் பணியாளர் ஸாலிம் (ரலி) அவர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு ஒரேயொரு ஒட்டகத்தை வாகனமாக தேர்ந்தெடுத்துக் கொண்டு, வழித்துணைக்கு தேவையான சில சாதனங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மதீனாவில் இருந்து புறப்பட்டார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.

ஸாலிம் (ரலி) அவர்களின் பலத்த மறுப்புக்கு பின்னர் முறை வைத்து பயணம் செய்வது என்ற முடிவெடுத்து பயணம் துவங்கப்பட்டது.

 சிறிது தூரம் உமர் (ரலி) ஒட்டகத்தின் மீது பயணிப்பார்கள் ஸாலிம் ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து நடந்து வருவார். பின்னர் ஸாலிம் (ரலி) ஒட்டகத்தின் மீது பயணிப்பார்கள், உமர் (ரலி) அவர்கள் ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து நடந்து வருவார்கள். பின்னர் இருவரும் ஓய்வெடுத்து, ஒட்டகத்துக்கும் ஓய்வு கொடுப்பார்கள்.

இப்படியே முறை வைத்து பயணம் செய்து ஃபலஸ்தீனின் எல்லையை அடைகிற போது ஸாலிம் (ரலி) அவர்களின் முறை ஆரம்பிக்கும்.

ஊரின் எல்லையைத் தொட்டதும் அங்கே தளபதி அபூஉபைதா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் வருகைக்காக காத்திருந்தார்கள்.

ஸாலிம் (ரலி) அவர்கள் பயணிக்க மறுக்கவே, உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் பெயரால் பயணிக்கக் கேட்டுக் கொள்வார்கள். இப்படி முறை மாற்றி பயணிப்பது அநீதம், அல்லாஹ்வின் திருமுன் கேள்வி கேட்கப்படுவேன் எனக் கூறி ஸாலிம் (ரலி) அவர்களை ஒட்டகத்தின் மீது பயணிக்க வைத்து, ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றை பிடித்து நடந்து வருவார்கள்.

وعندما علمت جيوش المسلمين بمقدم أمير المؤمنين، هب قائدها أبو عبيدة مع قواده الأربعة ليستقبلوه استقبالا يليق بمقام خليفة المسلمين، حين شاهد ابو عبيدة ما ناب ساقي أمير المؤمنين من الوحل قال له عن طيب نية، والحرص على أمير المؤمنين عمر رضي الله عنه:" يا أمير المؤمنين لو أمرت بركوب، فإنهم ينظرون إلينا".
غضب عمر بعد مقولة أبي عبيدة هذه غضبته التاريخية الشهيرة، وصاح بوجه هذا القائد الذي هزم الدولة
" والله لو غيرك قالها يا أبا عبيدة لجعلته عبرة لآل محمد صلى الله عليه وسلم!!! لقد كنا أذلة فأعزنا الله بالاسلام، فإذا ابتغينا عزاً بغير الاسلام أذلنا الله".

சற்று தொலைவில், உமர் (ரலி) அவர்களின் இந்த நிலையைக் கண்ட அபூஉபைதா (ரலி) அவர்கள் அங்கே அரசர்களும், அரசப் பிரதானிகளும், உங்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர். நீங்கள் நடுவில் வாருங்கள்! நாங்கள் இருபுறமும் அணிவகுத்து உங்களை அழைத்துச் செல்கின்றோம்!” என்றார்கள்.

முகம் சிவக்க, உமர் (ரலி) அவர்கள் “அபூஉபைதாவே! அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித வாயால் சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட உம்மைத்தவிர இந்த வார்த்தையை வேறு எவர் கூறியிருந்தாலும் இந்த உம்மத்துக்கே பாடமாக அமையும் ஓர் தண்டனையைக் கொடுத்திருப்பேன்!

அபூஉபைதாவே! நாம் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பாரும்! நாம் கேவலப்பட்டவர்களாக இருந்தோம்! அல்லாஹ் நமக்கு இஸ்லாம் எனும் இம்மார்க்கத்தின் மூலம் கண்ணியத்தைக் கொடுத்தான்.

நாம் இம்மார்க்கம் காடித்தராத வேறெந்த வழியின் மூலம் கண்ணியத்தைப் பெற முயற்சி செய்தோம் எனில் விளங்கிக் கொள்ளும்! அடுத்த கனமே அல்லாஹ் நம்மை கேவலப்படுத்தி விடுவான்!” என்று கூறினார்கள்.

ஃபலஸ்தீனின் தலைநகரை அடையும் போது வழிநெடுகிலும் ஒரு புறம் முஸ்லிம் வீரர்களும், இன்னொரு புறம் எதிரிப்படையினரின் வீரர்களும் அணிவகுத்து நிற்கின்றார்கள்.

எதிர் பார்த்துக் காத்திருந்த அரசரும், அரசப் பிரதானிகளும் அங்கே ஸாலிம் அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து வருவதைப் பார்த்து ஆட்சியாளர் அவர் தாம் என பார்வையை மேல் நோக்கி பார்க்கும் போது அருகில் நின்ற அபூஉபைதா (ரலி) மூக்கணாங்கயிற்றைப் பிடித்து நடந்து வரும் உமர் (ரலி) அவர்கள் தாம் ஆட்சியாளர் என்று கூறினார்கள்.

ஒட்டகம் அருகே வந்ததும், உமர் (ரலி) அவர்களை உற்று நோக்கிப் பார்க்கின்றார்கள் முகத்தில், தலையில், ஆடையில் பிரயாணக் காற்றின் புழுதிகள் நிரம்பி இருந்தது.

கந்தலான ஒரு ஆடை, ஆட்சியாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள எந்த ஒரு அடையாளமோ உமர் (ரலி) அவர்களிடம் இல்லை.

படோடாபத்தடுடனும், ஆடம்பரத்துடனும் வாழ்ந்து பழகிய அவர்களுக்கு உமர் (ரலி) அவர்களை ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் மாசில்லாத் தலைவரை இப்படிப் பார்ப்போம் என்று அவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.

இறுதியாக, உமர் (ரலி) அவர்களைப் பார்த்து ”நீங்கள் தான் அரபுலகத்தின் அரசரா? என்று கேட்க, இல்லை, இறைநம்பிக்கை கொண்ட மக்களின் ஆட்சியாளர் என்று பதில் கூறினார்கள் உமர் (ரலி) அவர்கள்.

அப்படியானால், இதோ ஒட்டகத்தின் மீதமர்ந்து வரும் இவர் யார்? என்று கேட்க, இவர் என் பணியாளர் என்று கூறி பயண விவரத்தைக் கூறினார்கள் உமர் (ரலி) அவர்கள்.

எந்தவொரு ஆடம்பரமும், தம்பட்டமும் இல்லாத ஓர் ஆட்சியாளரிடம் தம் பகுதியை ஒப்படைப்பதில் மிகுந்த ஆசையும் ஆவலும் கொண்டார்கள் அந்த அரசரும், அரசப் பிரதானிகளும்.

இறுதியாக, உமர் (ரலி) அவர்களின் கரங்களின் அம்மாநரத்தின் திறவு கோல் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் வரலாற்றுச் சிறப்பு மிக்க சில நிகழ்வுகளும், சில கையெழுத்துகளும் அங்கே நிகழ்ந்தன.

( நூல்: முக்ததஃபாத் மின் ஸியரத்தி உமர் இப்னுல் ஃகத்தாப் (ரலி)… )

அதிகார கம்பீரத்தின் உச்சத்தில் இருக்கும் ஒருவரால் எல்லாத் தருணங்களிலும் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. ஆனால், மகிழ்ச்சியான அனுபவங்களைப் பிறருக்குத் தருவதின் மூலம் அதிகார கம்பீரத்தின் உச்சத்தை அடையலாம் என்பதற்கு இது மிகச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாகும்.



أتى شابّان إلى عمر وكان في المجلس، وهما يقودان رجلاً من البادية فأوقفوه أمام عمر بن الخطاب قال عمر: ما هذا، قالوا: يا أمير المؤمنين، هذا قتل أبانا، قال: أقتلت أباهم؟ قال: نعم قتلته، قال كيف قتلتَه؟
قال دخل بجمله في أرضي، فزجرته، فلم ينزجر، فأرسلت عليه حجراً، وقع على رأسه فمات.
قال عمر: القصاص.. قرار لم يكتب. وحكم سديد لا يحتاج مناقشة

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு நாள் உமர் (ரலி) அவர்களின் சபைக்கு இரண்டு வாலிபர்கள் நடுத்தர வயதுடைய ஒரு கிராமவாசியை கயிற்றால் கட்டி இழுத்து வந்தனர்.

உமர் (ரலி) அவர்கள் இவர் யார்? என்று கேட்க, இரு வாலிபர்களும் இவர் எங்கள் தந்தையைக் கொன்றுவிட்டார் என்றனர்.

அந்தக் கிராமவாசியிடம் இவ்விரு இளைஞர்களும் சொல்வது உண்மைதானா? என்று கேட்க, அந்த கிராமவாசி “ஆம்” என்று பதில் கூறினார்.

எப்படிக் கொலை செய்தீர்? ஏன் கொலை செய்தீர்? என்று கேட்டார்கள் அமீருல் முஃமினீன் அவர்கள்.

அவர், நான் தூரமான இன்ன பகுதியில் இருந்து ஒட்டகங்களை மேய்ச்சலுக்காக கொண்டு வந்திருக்கின்றேன். நான் கொண்டு வந்திருக்கும் ஒரு ஒட்டகம் இவ்விரு வாலிபரின் தந்தைக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்து மேய்ந்திருக்கின்றது. நான் அதை கவனிக்கவில்லை.

பின்னர், நான் கவனித்ததும் அதை அங்கிருந்து விரட்ட எத்தனித்தேன். அதே நேரத்தில் இவ்விரு இளைஞர்களின் தந்தையும் விரட்டினார். அது நகர மறுக்கவே பெரிய கல்லொன்றை எடுத்து ஒட்டகத்தின் மீது வீசினார். அந்த இடத்திலேயே அது இறந்து போனது.

அவர் ஒட்டகத்தின் மீது எறிந்த அதே கல்லை எடுத்து அவர் மீது நான் எறிந்தேன். அது அவரின் தலையில் பட்டு அவரும் அதே இடத்தில் இறந்து போனார்” என்றார்.

பெரிய அளவிலான விசாரணைக்கு ஏதும் சந்தர்ப்பம் கிடைக்காததால், குற்றவாளியும் தன் குற்றத்தை ஒத்துக் கொண்டதால் உமர் (ரலி) அவர்கள் குற்றம் செய்த அவருக்கு மரண தண்டனை என தீர்ப்பு வழங்கினார்கள்.

قال الرجل: يا أمير المؤمنين: أسألك بالذي قامت به السماوات والأرض، أن تتركني ليلة؛ لأذهب إلى زوجتي وأطفالي في البادية، فأُخبِرُهم بأنك سوف تقتلني، ثم أعود إليك، والله ليس لهم عائل إلا الله ثم أنا، قال عمر: من يكفلك أن تذهب إلى البادية، ثم تعود إليَّ، فسكت الناس جميعاً..
இந்த தீர்ப்பைக் கேட்ட அந்த கிராமவாசி: ”அமீருல் முஃமினீன் அவர்களே! எந்த பூமியும், வானமும் எந்த இறிவனின் ஆற்றலால் நிலை கொண்டிருக்கின்றதோ அந்த இறைவனை முன்னிருத்தி நான் உங்களிடம் கேட்கின்றேன்.

எனக்கு ஒரேயொரு நாள் அவகாசம் கொடுங்கள்! நான் என் மனைவி, மக்களை சந்தித்து விட்டு வருகின்றேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! அல்லாஹ்விற்கு பிறகு அவர்களுக்கு என்னைத்தவிர வேறு யாரும் இல்லை!

நான் அவர்களிடம் சென்று அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான இதர அம்சங்களை செய்து விட்டு, நடந்த நிகழ்வுகளையும் கூறி நான் ஒரு மரண தண்டனை குற்றவாளி என்பதையும் எடுத்துக் கூறி அவர்களிடம் இருந்து விடை பெற்று மீண்டும் இங்கு வந்து விடுகிறேன். அதன் பின்னர் எனக்கு தண்டனையை வழங்குங்கள்!” என்றார்.

அதற்கு, நீர் ஒரு மரண தண்டனைக் குற்றவாளி, நீர் ஊர் சென்று திரும்பும் வரை உம் சார்பாக எவராவது பொறுப்பேற்றுக் கொண்டால் உம்மை நான் அனுப்பி வைக்கின்றேன். நீரும் சென்று விட்டு வரலாம்! என்றார்கள்.

إنهم لا يعرفون اسمه، ولا خيمته، ولا داره، ولا قومه، فكيف يكفلونه، وهي كفالة ليست على عشرة دنانير، ولا على أرض، ولا على ناقة، إنها كفالة على الرقبة أن تُقطع بالسيف.

ومن يعترض على عمر في تطبيق شرع الله؟ ومن يشفع عنده؟ ومن يمكن أن يُفكر في وساطة لديه؟ فسكت الصحابة،
சபை முழுவதும் நீண்ட மவுனம் நிலவியது. அவரும் சபை முழுவதிலும் ஒரு பார்வை பார்த்தார்.

எவராவது நமக்கு பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டாரா? நம் அருமைக் குழந்தைகளையும், மனைவியையும் மரணிப்பதற்கு முன் ஒரு முறை பார்த்து விட்டு வந்து விடலாமே! எனும் ஏக்கம் அந்தப் பார்வையில் தெரிந்தது.

சபையினரின் அமைதிக்கும் ஓர் அர்த்தம் இருந்தது. முன் பின் அறியாதவர், அவரின் பெயரோ, ஊரோ, கோத்திரமோ எதுவும் அங்கிருக்கும் யாருக்கும் தெரியவில்லை இது ஒரு புறம்.

இவருக்குப் பதிலாக பொறுப்பேற்க இருப்பது ஒன்றும் தீனாரோ அல்லது திர்ஹம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவே! சென்றவர் திரும்ப வராவிட்டால் போவது உயிர் அல்லவா?

وعمر مُتأثر، لأنه وقع في حيرة، هل يُقدم فيقتل هذا الرجل، وأطفاله يموتون جوعاً هناك، أو يتركه فيذهب بلا كفالة، فيضيع دم المقتول؟
سكت الناس، ونكّس عمر رأسه، والتفت إلى الشابين، أتعفوان عنه؟ قالا: لا، من قتل أبانا لا بد أن يُقتل يا أمير المؤمنين، قال عمر: من يكفل هذا أيها الناس، فقام أبو ذر الغفاريّ بشيبته وزهده، وصدقه، قال: يا أمير المؤمنين، أنا أكفله،

உமர் (ரலி) அவர்களுக்கு, அந்த கிராமவாசியின் தவிப்பும் ஏக்கமும் நன்கு புலப்பட்டது. என்ற போதிலும் இறைஷரீஅத் சம்தப்பட்ட விஷயம் அல்லவா? ஆதலால் தலை மீது கைவைத்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்கள்.

இரண்டு இளைஞர்களையும் நோக்கி “இளைஞர்களே! இவரை மன்னிக்க முன்வருகின்றீர்களா? என்று கேட்டார்கள் அமீருல் முஃமினீன் அவர்கள்.

”எங்கள் தந்தையைக் கொன்றவனை நாங்கள் மன்னிக்க விரும்பவில்லை, மரண தண்டனையை நிறைவேற்றியே ஆகவேண்டும்” என்று ஒருமித்த குரலில் கூறினார்கள்.

சுற்றியிருந்த சபையினரை நோக்கிய உமர் (ரலி) அவர்கள் “இவருக்கு யாராவது பொறுப்பேற்கின்றீர்களா?” என்று கேட்டார்கள்.

அந்த அவையில் நிலவிய நிசப்தத்தை கலைத்தது அந்தக் குரல். ஆம்! ”நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்! அமீருல் முஃமினீன் அவர்களே!” என்று ஒலித்தது அந்தக் குரல்.

குரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல! அஞ்சாநெஞ்சர் என்று அறியப்படுகிற அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) அவர்கள்.

قال عمر: هو قَتْل، قال: ولو كان قتلاً، قال: أتعرفه؟ قال: ما أعرفه، قال: كيف تكفله؟ قال: رأيت فيه سِمات المؤمنين، فعلمت أنه لم يكذب، وسيأتي إن شاء الله، قال عمر: يا أبا ذرّ، أتظن أنه لو تأخر بعد ثلاث أني تاركك! قال: الله المستعان يا أمير المؤمنين، فذهب الرجل، وأعطاه عمر ثلاث ليالٍ؛ يُهيئ فيها نفسه، ويُودع أطفاله وأهله، وينظر في أمرهم بعده، ثم يأتي، ليقتص منه لأنه قتل

அமீருல் முஃமினீன் அவர்கள் அபூதர் (ரலி) அவர்களை நோக்கி “அபூதர் அவர்களே! நீங்கள் கொலைப்பழிக்கு பகரம் ஏற்றிருக்கின்றீர்கள் தெரியுமா உங்களுக்கு?” என்று வினவ, ஆம் நன்றாகத்தெரியும்!” என்று பதில் கூறினார்கள்.

அவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்ற உமர் (ரலி) அவர்களின் வினாவிற்கு, “இல்லை, தெரியாது” என்று பதிலளித்தார்கள் அபூதர் (ரலி) அவர்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “பின்னர் எந்த அடிப்படையில் நீர் பொறுப்பேற்றுக் கொண்டீர்? என்று வினவியதற்கு, “ அமீருல் முஃமினீன் அவர்களே! அவரின் முகத்திலே நான் இறைநம்பிக்கையாளர்களின் ஒளியைப் பார்த்தேன்! அவர் பொய் பேசமாட்டார், இன்ஷாஅல்லாஹ் சொன்னது போன்று ஊர் சென்று திரும்பி வருவார் என்று நான் விளங்கிக் கொண்டேன்” என்று அபூதர் (ரலி) பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் “அவர் வரவில்லையென்றால் உம்மை விட்டு விடுவேன் என்று மட்டும் கருதி விடாதீர்கள்! இறைச்சட்டத்தின் முன் அனைவரும் எனக்கு சமமே!” என்று கூறினார்கள். அதற்கு, அபூதர் (ரலி) அவர்கள் “அல்லாஹ் எனக்கு பேருதவி செய்வான் அமீருல் முஃமினீன் அவர்களே! என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் மூன்று நாள் அவகாசம் கொடுத்து மூன்றாம் நாள் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்குள் நீர் ஊர் சென்று மதீனாவிற்கு வந்து விடவேண்டும் என்று அந்த கிராமவாசியிடம் சொல்லி ஊர் சென்று வர அனுமதி கொடுத்தார்கள்.

وبعد ثلاث ليالٍ لم ينس عمر الموعد، يَعُدّ الأيام عداً، وفي العصر نادى في المدينة: الصلاة جامعة، فجاء الشابان، واجتمع الناس، وأتى أبو ذر، وجلس أمام عمر، قال عمر: أين الرجل؟ قال: ما أدري يا أمير المؤمنين، وتلفَّت أبو ذر إلى الشمس، وكأنها تمر سريعة على غير عادتها،

وقبل الغروب بلحظات، وإذا بالرجل يأتي، فكبّر عمر، وكبّر المسلمون معه،

அமீருல் முஃமினீன் அவர்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்கள். மூன்றாம் நாள் அஸர் தொழுகையின் நேரம் வந்தது. தொழுகைக்கான அழைப்பும் கொடுக்கப்பட்டு, இகாமத்தும் கொடுக்கப்பட்டு தொழுகை முடிந்தும் விட்டது. ஆனால், இப்போது வரை அந்த கிராமவாசி மதீனாவுக்கு வரவில்லை.

தொழுகை முடிந்தது. வாதிகளான இரு வாலிபர்களும், அமீருல் முஃமினீன் அவர்களும் மற்றும் எல்லோரும் அங்கே கூடி மஸ்ஜிதுன் நபவியை ஒட்டியிருக்கிற பாதையை பார்த்தபடியே அமர்ந்திருக்கின்றார்கள்.

சற்று நேரத்தில் அபூதர் (ரலி) அங்கே வந்தார்கள். முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் அபூதர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் முன் வந்து அமர்ந்தார்கள்.

அபூதர் (ரலி) அவர்களே! நீங்கள் பொறுப்பெடுத்த அம்மனிதரை எங்கே? என்று கேட்டார்கள் உமர் (ரலி) அவர்கள்.

சூரியனை திரும்பிப் பார்த்தவாறே, இன்றைக்கு மட்டும் எப்படி வழக்கத்திற்கு மாறாக இந்தச் சூரியன் விரைவாக மறையப்போகிறது என்று நினைத்தவர்களாக அமீருல் முஃமினீன் அவர்களே! உங்களைப் போன்று தான் நானும் அவரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்!” என்றார்கள்.

சூரியன் அஸ்தமிக்கும் சற்றும் முன்பாக, மஸ்ஜிதுன் நபவீயை நோக்கி ஓர் உருவம் விரைந்து வருவதை மாநபியின் மஸ்ஜிதில் எதிர்பார்த்து குழுமியிருந்த அனைவரும் கண்டனர்.

அருகில் வர வர அனைவரின் முகத்திலும் அப்படியொரு ஆனந்தம், மகிழ்ச்சி, அபூதர் (ரலி) பிழைத்துக் கொண்டார் என்பதற்காக அல்ல. எந்த காரணத்தைக் காட்டி அபூதர் (ரலி) அவருக்காக பொறுப்பேற்றாரோ அதை அவர் உண்மை படுத்தி விட்டார் என்பதற்காக.

மாநபி மஸ்ஜிதின் முன்பிருந்த உமர் (ரலி) அவர்கள் அல்லாஹு அக்பர் என்று முழங்க, சுற்றியிருந்தவர்களும் மகிழ்ச்சிப் பெருக்கில் விண்ணுயர தக்பீர் முழக்கத்தை எழுப்பினர்.
فقال عمر: أيها الرجل أما إنك لو بقيت في باديتك، ما شعرنا بك، وما عرفنا مكانك، قال يا أمير المؤمنين، والله ما عليَّ منك ولكن عليَّ من الذي يعلم السرَّ وأخفى! ها أنا يا أمير المؤمنين، تركت أطفالي كفراخ الطير، لا ماء ولا شجر في البادية، وجئتُ لأُقتل، فوقف عمر وقال للشابين: ماذا تريان؟ قالا وهما يبكيان: عفونا عنه يا أمير المؤمنين لصدقه، قال عمر: الله أكبر، ودموعه تسيل على لحيته

ஆச்சர்யம் விலகாத பார்வையோடு நோக்கிய உமர் (ரலி) அவர்கள் “ஓ! கிராமவாசியே! நீர் நினைத்திருந்தால் உம் ஊரிலேயே தங்கியிருக்கலாம், உம் ஊரையோ, உம் வீட்டையோ தெரிந்து கொள்ளாத எங்களை நீர் ஏமாற்றி இருக்கலாம்! ஆனாலும், சொன்ன நேரத்தில் நீர் வந்து எங்களை ஆச்சர்யப்படுத்தி விட்டீர்! ஆனந்தப்படுத்தி விட்டீர்!” என்று கூறினார்கள்.

அமீருல் முஃமினீன் அவர்களே! உங்களுக்கும் எனக்குமான விஷயம் அல்லவே இது? எனக்கும் இரகசியத்தையும், பரகசியத்தையும் அறிந்து கொள்கிற எல்லாம் வல்ல இறைவனோடல்லவா தொடர்புள்ள ஓர் விஷயம் இது!” எப்படி ஏமாற்ற முடியும் என்று கூறினார்.

அமீருல் முஃமினீன் அவர்களே! தண்ணீரும், மரமும் இல்லாத ஓர் ஊரிலே எப்படி தவித்துக் கொண்டிருக்கும் ஓர் பறவை தன் குஞ்சுகளுக்கு தன் இறகால் அரவணைத்து இரக்கம் காட்டுமோ அது போன்று அரவணைத்து அன்பு காட்டி. என் குழந்தைகளை ஊரில் விட்டு விட்டு வந்திருக்கின்றேன்.

எனக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள்!” என்று அந்தக் கிராமவாசி கூறினார்.

கண்களில் நீர் ததும்பி வழிந்தோடிய நிலையில் இருந்த உமர் (ரலி) அவர்கள் வாதிகளான இரு இளைஞர்களையும் நோக்கி “இப்போது உங்கள் நிலைப்பாடு என்ன? கேட்க, பொங்கி வரும் கண்ணீரை அடக்க முடியாமல் விம்மியவர்களாக “அமீருல் முஃமினீன் அவர்களே! நாங்கள் மன்னித்து விட்டோம்!” என்று கூறினார்கள்.

இது கேட்ட உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹு அக்பர்” என்று கூறினார்கள். அவர்களின் கண்களில் இருந்து நீர் தாடியை நனைத்து வழிந்தோடிக் கொண்டிருந்தது.

{ இந்தச் சம்பவம் எந்தவொரு வரலாற்று நூலிலும் இடம் பெறவில்லை. எனினும் உமர் (ரலி) அபூதர் (ரலி) மற்றும் நபித்தோழர்கள் ஆகியோரின் கண்ணியத்திற்கும் மாண்பிற்கும் எவ்வித இழப்பையும், ஏற்படுத்தாததோடு மார்க்க அம்சங்களில் எந்த ஒன்றோடும் முரண்படாததால் இந்தச் செய்தியை ஒரு வரலாற்று நிகழ்வாக பார்ப்பதில் எவ்வித குற்றமும் இல்லை என சமகாலத்து அறிஞர்கள் ஆய்வு செய்து சான்றளிக்கின்றார்கள். }

ஆகவே, நாம் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும், நாம் நிம்மதியாய் இருந்து மற்றவர்களை நிம்மதியாய் வைத்திருப்பதும், மற்றவர்களை நேசித்து, மற்றவர்களின் நேசத்தை மனதார ஏற்றுக் கொள்வதும் தான் உண்மையான வெற்றியாகும்.

அல்லாஹ் நம் அனைவரையும் மகிழ்ச்சியோடும், மனநிம்மதியோடும் வாழச் செய்வதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியோடும், மனநிம்மதியோடும் நடத்துவதற்கு நல்லருள் பாளிப்பானாக!

      ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!