Wednesday 22 May 2019

ரமழான் சிந்தனை, தொடர் – 19 துஆ எனும் இணையில்லா அருட்கொடை!


ரமழான் சிந்தனை, தொடர் – 19
துஆ எனும்  இணையில்லா அருட்கொடை!

 

 
18 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 19 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் ஸாத் அத்தியாயம், அஸ் ஸுமர், அத்தியாயம் மற்றும் அல் முஃமின் அத்தியாயம் என 248  வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

 இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட ஸாத் அத்தியாயத்தின் 38 –ஆவது வசனம் துஆ என்பது அல்லாஹ் மனித சமூகத்திற்கு வழங்கியிருக்கிற இணையில்லா அருட்கொடை என்பதை உணர்த்துகின்றது.

ஆம்! நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் கேட்ட துஆவை அல்லாஹ் அங்கீகரித்து உலகில் அதற்கு முன்பும் சரி, உலக யுக நாள் வரையிலும் சரி எவருக்கும் வழங்காத ஆட்சி அதிகாரத்தை வழங்கினான்.

எனவே, துஆ என்கிற இணையில்லா அருட்கொடை மூலம் ஒரு முஃமின் அல்லாஹ்விடம் கேட்கிற போது சாத்தியமே இல்லை, முடியவே முடியாது என்று கை விரிக்கப்பட்ட உலகின் எந்தத் தேவையையும் பெற்றுக் கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் நியதியை, விதியை மாற்றியமைத்த துஆ...

اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرٰنَ رَبِّ اِنِّىْ نَذَرْتُ لَـكَ مَا فِىْ
 اِنَّكَ اَنْتَ السَّمِيْعُبَطْنِىْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىْ
 الْعَلِيْمُ‌‏ 
"இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன் அறிந்தவன்'' என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக!

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّىْ وَضَعْتُهَاۤ اُنْثٰىؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْؕ وَ لَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى‌‌ۚ وَاِنِّىْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ 

அவர் ஈன்றெடுத்தபோது, "என் இறைவா! பெண் குழந்தையாக ஈன்றெடுத்து விட்டேனே'' எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கறிவான். "ஆண், பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டேன். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித் தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்'' எனவும் அவர் கூறினார்.

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنْبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِنْدَهَا رِزْقًا قَالَ يَامَرْيَمُ أَنَّى لَكِ هَذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ

அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்றபோதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, "மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்'' என்று (மர்யம்) கூறினார்.

ஆஸிம் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அபூர்வ துஆ…


وقتل يوم أحد من أصحاب ألوية المشركين
 مسافعًا، والحارث. فنذرت أمهما سلافة بنت سعد أن تشرب في قحف رأس عاصم الخمر، وجعلت لمن جاءها برأسه مائة ناقة، فقدم ناس من بني هذيل على رسول الله صلى الله عليه وسلم فسألوه أن يوجه معهم من يعلمهم، فوجه عاصمًا في جماعة، فقال لهم المشركون: استأسروا فإنا لا نريد قتلكم وإنما نريد أن ندخلكم مكة فنصيب بكم ثمنًا، فقال عاصم: لا أقبل جوار مشرك، فجعل يقاتلهم حتى فنيت نبله، ثم طاعنهم حتى انكسر رمحه، فقال: اللهم إني حميت دينك أول النهار فاحم لي لحمي آخره، فجرح رجلين وقتل واحدًا، فقتلوه وأرادوا أن يحتزوا رأسه، فبعث الله الدبر فحمته، ثم بعث الله سيلًا في الليل فحمله، وذلك يوم الرجيع.
ولما قتله المشركون أرادوا رأسه ليبيعوه من سلافة بنت سعد، وكانت نذرت أن تشرب الخمر في رأس عاصم لأنه قتل ابنيها بأحد، فجاءت النحل فمنعته، فقالوا: دعوه حتى يمسي فنأخذه. فبعث الله الوادي فاحتمل عاصمًا، وكان عاهد الله أن لا يمس مشركًا ولا يمسه مشرك، فمنعه الله في مماته كما منع في حياته يقول صاحب فرسان النهار تذكر عاصم نذر سلاقة الذي نذرته وجرد سيفه وهو يقول: "اللهم إني احمي لدينك وادفع عنه فاحمي لحمي وعظمي لا تظفر بهما أحدًا من أعداء الله، الله إني حميت دينك أول النهار فأحمي جسدي أخره"
وكانت وفاته في غزوة الرجيع العام الرابع الهجري.

”எவர் ஆஸிம் இப்னு ஸாபித் அவர்களின் தலையை கொய்து வந்து கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு நூறு ஒட்டகைகளும், அவர் கேட்கிற பணமும் தரப்படும்” இந்த அறிவிப்பை கேட்டதிலிருந்து அரபுலக குரைஷி இளைஞர்களுக்கு கண்ணில் உறக்கமே இல்லை.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் தலைக்கு வைத்த விலைக்குப் பிறகு ஆஸிம் இப்னு ஸாபித் (ரலி) அவர்களுக்கு தான் இந்த விலை என மக்காவில் பிரபல்யமாக பேசப்பட்டது.

விலை வைக்கிற அளவுக்கு அவர் என்ன தான் செய்தார்? மக்காவில் பிரபல்யமான ஒரு குடும்பத்தின் ஒட்டு மொத்த தலைமுறையையும் உஹதில் காலி செய்தார் ஆஸிம் (ரலி) அவர்கள்.

அந்த குடும்பத்தின் சுலாஃபா பிந்த் ஸஅத் என்கிற பெண்மணி என் குடும்பத்தை கூண்டோடு காலிசெய்த ஆஸிமின் மண்டை ஓட்டில் மதுவருந்தாமல் நான் ஓய மாட்டேன்”  என சபதம் செய்திருந்தாள்.

ஆம்! உஹதில் அவரின் கணவர் தல்ஹா என்பவரையும், அவர்களின் இரண்டு மகன்கள் ஹாரிஸ் இப்னு தல்ஹா, மற்றும் மஸாஃபிஉ இப்னு தல்ஹா ஆகியோரையும் அம்பெய்து வீழ்த்தியிருந்தார்கள்.

குற்றுயிராய் வீழ்ந்து கிடந்த மாஸாஃபிஉ வை தனது மடியில் கிடத்தி  உங்களைக் கொன்றது யார்? என சுலாஃபா கேட்ட போது, ”என்னை அம்பெய்து வீழ்த்தியவர் என்னை கீழே கிடத்தி என் அருகாமையில் நின்று கொண்டு நான் தான் ஆஸிம் இப்னு ஸாபித் இப்னு அபில் அக்லஹ் என கர்ஜித்தார். அவர் தான் என் சகோதரனையும், என் தந்தையையும் கொலை செய்தார்”  என்று சொல்லி விட்டு இறந்து போனான்.

என்றாலும் சுலாஃபா வுக்கு ஒரேயொரு ஆறுதல் இருந்தது உஹதில் குஃப்ஃபார்களின் கொடியை ஏந்தி வந்த அவரின் இன்னொரு மகன் உஸ்மான் இப்னு தல்ஹா உயிரோடி இருந்தார்.
 

ஆஸிம் (ரலி) அவர்களின் முடியை கூட எளிதில் நெருங்கிட முடியாது என்பதை அறிந்திருந்ததால் தான் இவ்வளவு விளம்பரம், இவ்வளவு வெகுமதிகள்.

இந்த சபதம் ஆஸிம் இப்னு ஸாபித் (ரலி) அவர்களுக்கும் தெரியும்! ஆனாலும் அவர்கள் அதை அலட்டிக் கொள்ளவே இல்லை.

ஏனென்றால், உலகமே திரண்டு வந்தாலும் அல்லாஹ் விதித்ததை தவிர வேறெதுவும் நிகழ்ந்து விடாது என்பதில் ஆஸிம் (ரலி) அவர்கள் மிக உறுதியாய் இருந்தார்கள்.

இந்த தருணத்தில் தான் அல்லாஹ்வின் நாட்டம் அது நடந்தது.

ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ஸஃபர் மாதம், அளல், காரா எனும் இரு குலத்தார்கள் மாநபி {ஸல்} அவர்களைச் சந்தித்து எங்களிடையே இஸ்லாம் மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது.

எங்களில் அநேகம் பேர் முஸ்லிம்களாக இருக்கின்றனர், ஆகவே எங்களுக்கு சன்மார்க்கத்தின் விளக்கத்தை போதிப்பதற்கும், எங்களுக்கு வழிகாட்டவும் எங்களோடு சில நபித்தோழர்களை அனுப்பித்தர வேண்டுமென கோரினர்.

அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப நபி {ஸல்} அவர்கள் ஆஸிம் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட நபித்தோழர்களின் குழுவொன்றை அனுப்பி வைத்தார்கள்.

                           (நூல்: புகாரி, பாடம், பாபு ஃகஜ்வதிர் ரஜீஉ)

மற்ற அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் அல் ஃகனமீ என்பவர்களின் தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு குழுவை நபி {ஸல்} அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

1.மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் (ரலி) 2.ஆஸிம் இப்னு ஸாபித் (ரலி) 3.ஸைத் இப்னு தஸினா (ரலி) 4.காலித் இப்னு புகைர் (ரலி) 5.குபைப் இப்னு அதீ (ரலி) 6.அப்துல்லாஹ் இப்னு தாரிக் (ரலி) 7,8,9,10.ஆகியோர் பெயர் அறியப்பட வில்லை.

இவர்கள் இக்கூட்டத்தாருக்கு சன்மார்க்க நெறிகளை போதிப்பதுடன், மக்கா தலைவர்களின் நிலையை தெரிந்து கொண்டு உளவு தகவல் அனுப்ப வேண்டும் எனும் நோக்கத்துடன் நபிகளார் {ஸல்} அவர்களால் அனுப்பப்படுகின்றார்கள்.

இவர்கள் புறப்பட்டு ஹுதைல் எனும் அரபு பூர்வீக குடிமக்கள் வசித்து வரும் ரஜீஉ எனும் பகுதியை அடைந்தனர். (ரஜீஉ எனும் இடம் மக்காவிற்கும் ஹிஜாஸிற்கும் மத்தியில் இருக்கின்றது)

இந்த தகவல் ஹுதைல் குலத்தாரின் பனூ லிஹ்யான் கூட்டத்தினருக்கு தெரிந்து விடுகின்றது. இவர்கள் நபித்தோழர்களின் குழுவினரை பிடித்து குறைஷிகளிடம் கொடுத்தால் பணம் சம்பாதிக்கலாம் எனும் ஆசையில் தேடிப் பிடித்து சூழ்ந்து கொண்டனர்.

ஏதோ நடக்கப் போகின்றது என்பதை உணர்ந்த நபித்தோழர்கள் அருகே இருந்த ஃபத்ஃபத் எனும் மலைக்குன்றில் ஒளிந்து கொண்டனர்.

கீழிருந்த பனூ லிஹ்யான் கூட்டத்தினர் குன்றில் ஒளிந்து கொண்டிருந்த நபித்தோழர்களை நோக்கி கீழிறங்கி வந்து விடுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் உங்களை கொல்ல மாட்டோம். நாங்கள் உங்களை பிடித்துச் சென்று மக்காவாசிகளிடம் விலை பேசி விற்றுவிடத்தான் இங்கு வந்திருக்கின்றோம். எங்களை நம்புங்கள். கீழே வந்து விடுங்கள் என்றார்கள்.

அதற்கு ஆஸிம் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் நான் இறை மறுப்பாளர்களின் வாக்குறுதியை நம்பி அவர்களின் பாதுகாப்பில் ஒரு போதும் இறங்கிச் செல்ல மாட்டேன்! இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்கு தெரிவித்து விடு”  என்று கூறினார்கள்.

அப்போது, அக்கூட்டத்தினர் நபித்தோழர்கள் மீது அம்பெய்து தாக்குதல் நடத்தினர். எதிர் பாராத இத்தாக்குதலில் ஆஸிம் (ரலி) அவர்கள் உட்பட ஏழு பேர் ஷஹீதாக்கப்பட்டனர்.

மீதமிருந்த மூவரும் அவர்களின் வாக்குறுதியை நம்பி கீழிறங்கி வந்தனர் அவர்களில் குபைப் (ரலி), ஜைத் இப்னு தஸினா (ரலி) ஆகியோரை மக்காவில் கொண்டு விற்று விட்டனர்.

கிழிறங்கி வந்த மூன்றாமவரையும் அவர்கள் கொன்று விட்டனர். மொத்தம் 8 பேர் ஷஹீதாக்கப் பட்டார்கள்.

பனூ லிஹ்யான் கூட்டத்தில் ஒருவன் ஆஸிம் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஷஹீதாகி கிடப்பதை கண்டு ஆனந்தப்பட்டான்.

ஆம்! சுலாஃபா வின் சபதம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவரின் தலையை கொய்து கொண்டு போய் சுலாஃபா விடம் தந்தால் கேட்கும் பணமும் 100 ஒட்டகையும் பரிசாக கிடைக்கும் என்ற ஆசையால் உந்தப்பட்டு சில நண்பர்களை அழைத்துக் கொண்டு ஆஸிம் (ரலி) அவர்களின் தலையை வெட்டி எடுக்க அருகே சென்றான்.

அங்கு தான் ஆச்சர்யம் காத்திருந்தது. அவனும் நண்பர்களும் ஆஸிம் (ரலி) அவர்களின் அருகே சென்றதும் தேனீ போன்ற வண்டு கூட்டம் ஒன்று அவர்களின் புனித உடலை நெருங்க முடியாத படி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

அவர்கள் அருகே செல்லும் போதெல்லாம் அவர்களை விரட்டியடித்தது.

எப்படியும் இரவில் வண்டுகள் சென்று விடும். இரவின் பிற்பகுதியில் சென்று எப்படியாவது தலையை கொய்து, பரிசில் பெற்று விட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தனர்.

இதற்குள் இந்தச் செய்தி சுலாஃபாவின் காதுகளுக்கு எட்ட குறைஷி இளைஞர்கள் சிலரை அனுப்பி ஆஸிம் (ரலி) அவர்களின் தலையை கொய்து வாருங்கள். என்னுடைய சபதத்தை நிறைவேற்றும் நாள் நெருங்கி விட்டது என ஆர்ப்பரித்தாள்.

அவர்களும் வந்து சேர்ந்தனர். சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லவா வல்ல ரஹ்மானாகிய அல்லாஹ், பெரும் மழையை பொழியச் செய்தான்.

இரவு முழுவதும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது. அந்த இடம் முழுக்க நீரால் வழிந்தோடியது.

மழை நின்றதும் காலையில் பனூ லிஹ்யான் கூட்டத்தினரும், குறைஷி இளைஞர்களும் தேடிப்பார்த்தனர் உடலை மழை நீர் அடித்துச் சென்றதை அறிந்து ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.

மறுநாள் மக்காவிலும், மதீனாவிலும் இதைத் தான் பிரபல்யமாக மக்கள் பேசிக்கொண்டனர்.

كان عمر بن الخطاب يقول حين بلغه أن الدبر منعته: "يحفظ الله العبد المؤمن كان عاصم نذر أن لا يمسه مشرك ولا يمس مشركًا أبدًا في حياته فمنعه الله بعد وفاته كما امتنع في حياته".

இந்தச் செய்தியை கேள்வி பட்ட உமர் (ரலி) அவர்கள் ஆஸிம் (ரலி) அவர்கள் உயிருடன் வாழும் காலத்தில் அல்லாஹ்விடம் அதிகமதிகம் இப்படிக் கேட்பார்களாம் யாஅல்லாஹ் நான் எந்த ஒரு இறை மறுப்பாளனையும் தொட மாட்டேன். என் உடலையும் எந்த ஒரு இறை மறுப்பாளனையும் தொடும் படிச் செய்து விடாதே”  என்று..

இதன் பின்னர் உமர் (ரலி) அவர்கள் அவரின் இந்த வேண்டுதலையும், உறுதியையும் அல்லாஹ் நிறைவேற்றினான்.” மேலும், அல்லாஹ் முஃமினான அடியானை உயிருடன் இருக்கும் போது பாதுகாப்பது போன்று, அவரின் மரணத்திற்கு பின்னரும் பாதுகாக்கின்றான்.”  என்று கூறினார்கள்.

ஃபத்ஹ் மக்காவில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் நேர்மையை கண்டு வியந்து போன சுலாஃபா பிந்த் ஸஅத், தம் மகன் உஸ்மான் இப்னு தல்ஹா வோடு சேர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

( நூல்: அல் மஃகாஸீ லில் வாகிதீ, பக்கம்:354-357, தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:155,156., ஜாதுல் மஆத், அல் இஸாபா, அல் இஸ்தீஆப். )

துஆக் கேட்பவர் வானவர்களால் கவனிக்கப்படுகின்றார்…

عن علي بن أبي طالب رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم
 أنه أتاه جبرئيل عليه السلام ، فبينما هو عنده إذ أقبل أبو ذر ، فنظر إليه جبرئيل فقال : هو أبو ذر . قلت : يا أمين الله ! وتعرفون أنتم أبا ذر ؟ فقال : نعم والذي بعثك بالحق إن أبا ذر أعرف في أهل السماء منه في أهل الأرض ، وإنما ذلك لدعاء يدعو به كل يوم مرتين ، وقد تعجبت الملائكة منه ، فادع به فسل عن دعائه

அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஜிப்ரயீல் (அலை) அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது அங்கே அப்போது அந்த இடத்தை அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள்.

அதைக் கண்ட ஜிப்ரயீல் (அலை) அவர்கள்இவர் அபூதர் அல் ஃகிஃபாரி தானே? என்று வினவினார்கள். ஆம்! அவர் அபூதர் தான் என கூறிய மாநபி {ஸல்} அவர்கள்அல்லாஹ்வின் நம்பிக்கைக்குரியவரே! நீங்கள் எப்படி அவர்களை அறிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார்கள்.

உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீதாணையாக! பூமியில் எப்படி அவர் அறியப்படுகின்றாரோ, அது போன்றே வானுலகில் இருக்கிற வானவர்கள் அனைவரும் அவரை அறிவார்கள்.

ஒவ்வொரு நாளும் இரண்டு நேரங்கள் அவர் கேட்கும் துஆவின் மூலம் வானவர்கள் ஆச்சர்யமடைந்ததோடு, அதுவே அவர் வானவர்கள் அறிந்து கொள்வதற்கு காரணமாகவும் ஆகிவிட்டதுஎன ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறி விட்டு, வேண்டுமானால் நபியே! நீங்கள் அவரை அழைத்து அது எந்த துஆ என்று கேளுங்கள்!” என்று சொன்னார்கள்.

فقال رسول الله صلى الله عليه وسلم: يا أبا ذر ! دعاء تدعو به كل يوم مرتين ؟ قال : نعم فداك أبي وأمي ، ما سمعته من بشر ، وإنما هو عشرة أحرف ألهمني ربي إلهاما ، وأنا أدعو به كل يوم مرتين ، أستقبل القبلة فأسبح الله مليا ، وأهلله مليا ، وأحمده مليا ، وأكبره مليا ،

மாநபி {ஸல்} அவர்கள்அபூதர் (ரலி) அவர்களை அழைத்து, தினந்தோரும் நீர் ஏதோ ஒரு துஆவை அல்லாஹ்விடம் கேட்கின்றீராமே? அப்படியா? அது என்ன துஆ கொஞ்சம் ஓதிக் காட்டுங்கள்!” என்று கேட்டார்கள்.

அதற்கு, அபூதர் (ரலி) அவர்கள்என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும்! அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எனக்கு இல்ஹாமாக கற்றுத் தந்த 10 பத்து கலிமாக்களை உளூ செய்து விட்டு, கிப்லாவை நோக்கி அமர்ந்து அல்லாஹ்வை வேண்டிய அளவிற்கு தஸ்பீஹும், தஹ்லீலும், தக்பீரும், தஹ்மீதும் கூறிய பின்னர் கேட்கிறேன்என்று பதில் கூறிவிட்டு அந்த துஆவை மாநபி {ஸல்} அவர்கள் திருமுன் ஓதிக்காண்பித்தார்கள்.

ثم أدعو بتلك العشر الكلمات : اللهم إني أسألك إيمانا دائما ، وأسألك قلبا خاشعا ، وأسألك علما نافعا ، وأسألك يقينا صادقا ، وأسألك دينا قيما ، وأسألك العافية من كل بلية ، وأسألك تمام العافية ، وأسألك دوام العافية ، وأسألك الشكر على العافية ، وأسألك الغنى عن الناس

அல்லாஹ்வே! உன்னிடம் நிலையான இறைநம்பிக்கையை (ஈமானை) க் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் (உனக்கு மட்டுமே) அஞ்சுகிற இதயத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் பயன் தருகிற கல்வியைக் கேட்கின்றேன்!

அல்லாஹ்வே! உன்னிடம் உண்மையான (தீனின்) உறுதிப்பாட்டைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் அனைத்து வகையான நோய்களில் இருந்தும் ஆரோக்கியத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் பரிபூரணமான ஆரோக்கியத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் நீடித்த, நிலையான ஆரோக்கியத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! நீ வழங்கிய ஆரோக்கியத்திற்கு நன்றி செலுத்தும் நற்பேற்றை உன்னிடம் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன் அன்றி பிற மனிதர்களிடம் தேவையாகாத தன்மையைக் கேட்கின்றேன்!” என்று துஆ கேட்பேன் என அபூதர் (ரலி) கூறினார்கள்.

قال جبرئيل : يا محمد ! والذي بعثك بالحق لا يدعو أحد من أمتك هذا الدعاء إلا غفرت له ذنوبه وإن كانت أكثر من زبد البحر وعدد تراب الأرض ، ولا يلقاك أحد من أمتك وفي قلبه هذا الدعاء إلا اشتاقت إليه الجنان ، واستغفر له الملكان ، وفتحت له أبواب الجنة ، ونادت الملائكة : يا ولي الله ! ادخل من أي باب شئت

அப்போது, ஜிப்ரயீல் (அலை) அவர்கள்முஹம்மத் {ஸல்} அவர்களே! உங்கள் உம்மத்தில் எவர் இந்த துஆவை ஓதுகின்றாரோ அவரின் பாவங்கள் கடலின் நுரையளவு இருந்தாலும், பாலை மணலின் எண்ணிக்கையளவு இருந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான்.

இந்த துஆ குடி கொண்டிருக்கும் இதயத்தை சுவனம் நேசிக்கின்றது! அவருக்காக சதா இரு வானவர்கள் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்கின்றனர், அவருக்காக சுவனத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன! மறுமையில், வானவர்கள்அல்லாஹ்வின் நேசம் பெற்றவரே! நீர் விரும்பிய வாசல் வழியாக சுவனத்திற்குள் பிரவேசிப்பீராக!” என்று அழைப்பு கொடுப்பார்கள்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

أخرجه الحكيم الترمذي في " نوادر الأصول " (3/40-41) قال : ثنا عمر بن أبى
 عمر ، قال ثنا أبو همام الدلال – محمد بن محبب (221هـ)، عن إبراهيم بن طهمان ، عن عاصم بن أبى النجود ، عن زر بن حبيش ، عن علي بن أبي طالب به . – نقلنا الإسناد من " جمع الجوامع " للسيوطي ، ، وعنه صاحب " كنز العمال " (2/678
لا حرج على من دعا بالكلمات الواردة بهذا الدعاء ، إذ ليس فيها شيء مستنكر ولا مستغرب ، لكن دون أن يعتقد لها هذا الفضل الذي لم ثبت

( நூல்: நவாதிருல் உஸூல் லிஇமாமி அல்ஹகீமித் திர்மிதீ (ரஹ்), கன்ஜுல் உம்மால், ஜம்உல் ஜவாமிஉ லிஇமாமிஸ் ஸுயூத்தீ (ரஹ்)…. )

மேற்கூறிய ஹதீஸை ஹதீஸ் விரிவுரையாளர்கள் சிலர் ளயீஃப் என்றும், மவ்ளூஃ என்றும் விமர்சிக்கின்றனர். இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரில் வருகிற உமர் இப்னு உமர் என்பவரே இதற்கு பிரதான காரணமானவர்.

எனினும் இந்த ஹதீஸுக்கு விளக்கம் தருகிற ஹதீஸ் விரிவுரையாளர்கள் இந்த வாசகத்தைக் கொண்டு துஆ ஓதுவதென்பது ஒன்றும் பாவமான செயல் இல்லை. ஆனாலும், மேற்கூறிய ஹதீஸில் சொல்லப்பட்ட சிறப்புக்களோ, சோபனங்களோ கிடைக்கும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லைஎன்று கூறுகின்றார்கள்.

சில போது வானவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றார்....

وقد قال ابن أبي حاتم في تفسيره: حدثنا أبو عبد الله أحمد بن عبد الرحمن
 أخي ابن وهب، حدثنا عمي(عبد الله ابن وهب)، حدثني أبو صخر أن يزيد الرقاشي حدثه سمعت أنس بن مالك ولا أعلم إلا أن أنسا يرفع الحديث إلى رسول الله صلى الله عليه وسلم
 " أن يونس النبي عليه السلام حين بدا له أن يدعو بهذه الكلمات وهو في بطن الحوت قال: (اللهم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين) فأقبلت الدعوة تحت بالعرش فقالت الملائكة يا رب صوت ضعيف معروف من بلاد غريبة فقال أما تعرفون ذاك ؟ قالوا: يا رب ومن هو ؟ قال: عبدي يونس، قالوا: عبدك يونس الذي لم يزل يرفع له عملا متقبلا ودعوة مجابة، قالوا: يا ربنا أولا ترحم ما كان يصنعه في الرخاء فتنجيه من البلاء ؟ قال: بلى، فأمر الحوت فطرحه في العراء
 ورواه ابن جرير، عن يونس، عن ابن وهب

நபி யூனுஸ் {அலை} அவர்கள் மீன் வயிற்றில் இருக்கும் போது அல்லாஹ்வே! உன்னைத்தவிர வேறு இறைவன் இல்லை! நீ தூய்மையானவன், திண்ணமாக, நான் குற்றம் செய்து விட்டேன்!என்று அழுது பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.

இந்த அழுகுரல் அர்ஷைச் சுற்றியுள்ள வானவர்களுக்கும் கேட்டது. அப்போது, வானவர்கள் அல்லாஹ்வே! நாங்கள் அதிகம் அறிந்த ஓர் குரல் இப்போது எங்கேயோ தூரமாக இருந்து அபயமும், மன்னிப்பும் கேட்பது போல் தெரிகின்றது. அல்லாஹ்வே! அவரின் குரலில் நாங்கள் பலகீனத்தை உணர்கிறோம்! என்றார்கள்.

அதற்கு, அல்லாஹ் நீங்கள் அந்த சப்தத்தை கேட்கின்றீர்களா? என்று கேட்டான். அப்போது, வானவர்கள் ஆம்! நாங்கள் கேட்கிறோம்! அல்லாஹ்வே! யார் அவர்? என்று வினவினார்கள்.

அதற்கு, அல்லாஹ் என்னுடைய அடியார் யூனுஸ்என்று பதில் கூறினான்.

அப்போது, வானவர்கள் அல்லாஹ்வே! உன்னுடைய அடியார் யூனுஸ் நல்ல நிலையில் இருக்கும் போது ஏற்றுக் கொள்ளப்படுகிற அளவிலான இபாதத்களும், பதிலளிக்கத்தக்க நிறைய துஆக்களும் செய்திருக்கின்றாரே! இப்போது, அவர் ஏதோ ஆபத்தில் இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். அல்லாஹ்வே! நீ அவரைக் காப்பாற்றி ஈடேற்றம் கொடுப்பாய் அல்லவா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, அல்லாஹ் ஆம்! அவரை நான் காப்பாற்றுவேன்! ஈடேற்றம் நல்குவேன்என பதில் கூறிவிட்டு, மீனுக்கு கரையில் வந்து யூனுஸ் {அலை} அவர்களைக் கக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே மீனும் யூனுஸ் {அலை} அவர்களை கரையில் வந்து கக்கி விட்டுச் சென்றது.

                                                ( நூல்: தஃப்ஸீர் அத் தபரீ )

இதே போன்று, ஃபிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்படுகிற போது இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எந்த இறைவன் மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லைஎன்று நானும் நம்பிக்கை கொண்டேன். மேலும், அந்த இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பவர்களில் நானும் ஒருவனாவேன்என்று கூறும் போது, அர்ஷைச் சுற்றிலும் உள்ள வானவர்கள் இதுவரை நாங்கள் கேட்டிராத ஓர் கெட்ட ஒரு குரலைக் கேட்கின்றோம் இறைவா என்று கூறுவார்கள்.

அதற்கு, அல்லாஹ்! நீங்கள் அந்தச் சப்தத்தைக் கேட்கின்றீர்களா? அவன் தான் ஃபிர்அவ்ன் என்பான்.

அப்போது, வானவர்கள் அல்லாஹ்வே! இவன் நல்ல நிலையில் இருக்கின்ற போது நல்ல அமல்களோ, பதிலளிக்கத் தக்க பிரார்த்தனைகளோ, இபாதத்களோச் செய்ய நாங்கள் கேட்டதில்லை என்பார்கள்.

அப்போது, அல்லாஹ் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் ஃபிர்அவ்னை நோக்கி இப்போதா நம்பிக்கை கொள்கின்றாய்? இதற்குச் சற்று முன்பு வரை நீ மாறு செய்து கொண்டிருந்தாய்! குழப்பம் விளைவிக்கும் ஒருவனாகவும் இருந்தாய்என கூறுவான்”. என அல்லாமா தபரீ (ரஹ்) அவர்கள் தங்கள் விரிவுரை நூலிலே குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே, துஆ எனும் இணையில்லா அருட்கொடையைப் பயன்படுத்தி ஈருலகத்தின் அனைத்து நன்மைகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருந்து பெற்றுக் கொள்வோம்.

வஸ்ஸலாம்!!!