Thursday 3 October 2019

நினைவிருக்கும் வரை… கடந்த காலத்தில் செய்யப்பட்ட நலவுகளை, உதவி செய்த உறவுகளை மறவாதே!!!


நினைவிருக்கும் வரை…
 கடந்த காலத்தில் செய்யப்பட்ட நலவுகளை,
உதவி செய்த உறவுகளை மறவாதே!!!




சமூகத்தில் கல்வியால், செல்வாக்கால், அந்தஸ்த்தால், பொருளாதாரத்தால், அதிகாரத்தால் மரியாதையை, உச்சத்தை தொட்டிருக்கும் நம்மில் பலர் ஒரு காலத்தில் எப்படி இருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்க மறந்து விடுகின்றார்கள்.

ஒரு நேர உணவு அன்று அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்திருக்கலாம்; துவக்கக்கல்வி அன்று அவர்களுக்கு கனவாக இருந்திருக்கலாம்; நல்ல மருத்துவம் அன்று அவர்களுக்கு கானல் நீர் போன்று இருந்திருக்கலாம்.

இன்றைய உச்சத்தை அவர்கள் அடைய அன்று அவர்களுக்கு உதவியவர்கள், உறுதுணையாய் நின்றவர்கள், தாங்கிப்பிடித்தவர்கள், தூக்கிவிட்டவர்கள் என ஒரு பெரும் அல்லது சிறு மனித கூட்டமே உண்டு.

சில போது பெற்றோர்கள், சில போது சகோதர, சகோதரிகள், சில போது மனைவி, சில போது உறவினர்கள், சில போது நண்பர்கள், சில போது அண்டை வீட்டுக்காரர் இப்படியாக சிலரோ அல்லது முன் பின் அறியாத, முகம் தெரியாத எவரோ ஒருவர் கூட உதவி இருக்கலாம்.

ஆனாலும், அதை எண்ணிப்பார்க்கவோ, நினைக்கவோ சமூகத்தில் இன்றைக்கு பலருக்கு மனம் வருவதில்லை.

கடந்த காலத்தில் செய்யப்பட்ட நலவுகளையும், உதவி, உபகாரம் செய்த உறவுகளையும் நினைவில் வைப்பதை இஸ்லாம் ஈமானிய பண்பு என உயர்த்திக் கூறுகின்றது.

இறைநம்பிக்கையாளனின் ஈமானின் முழுமைக்கு அதுவே அழகும், அடையாளமும் என்று வரையறுக்கின்றது.

ஆம்! “இன்ன ஹுஸ்னுல் அஹ்தி மினல் ஈமான்என்று மாநபி {ஸல்} அவர்கள் திருவாய் மலர்ந்தார்கள்.

பொதுவாகவே, கடந்த கால நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் மீதும், குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையும், கடப்பாடும் ஆகும்.

وقال ابن أبي حاتم: حدثنا أبو زُرْعَة، حدثنا أبو عُمر الحَوضي، حدثنا حماد بن زيد، حدثنا عطاء بن السائب، عن سعيد بن جبير، عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "سألت ربي مسألة وَدَدْتُ أني لم أكن سألته، قلت: قد كانت قبلي أنبياء، منهم من سخرت له الريح  ومنهم من يحيي الموتى. قال: يا محمد، ألم أجدك يتيما فآويتك؟ قلت: بلى يا رب. قال: ألم أجدك ضالا فهديتك؟ قلت: بلى يا رب. قال: ألم أجدك عائلا فاغنيتك؟ قال: قلت: بلى يا رب. قال: ألم أشرح لك صدرك؟ ألم أرفع لك ذكرك؟ قلت: بلى يا رب"

பெருமானார் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்விடம் சில தேவைகளை முறையிடுகிற போது முன் சென்ற நபிமார்களுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதங்களை முன்னிறுத்தி அல்லாஹ்வே! நீ இன்ன நபிக்கு காற்றை வசப்படுத்தி கொடுத்தாய்! நீ இன்ன நபிக்கு இறந்தவர்களை உயிர்பிக்கும் ஆற்றல் வழங்கினாய்! என்று கூறி கேட்டார்களாம்.

அப்போது, அல்லாஹ் நான் உம்மை அநாதையாய் கண்டு, புகலிடம் தரவில்லையா? என்று கேட்டான். அதற்கு நான்ஆம்! உண்மைதான் இறைவா! நீ தான் புகலிடம் தந்தாய் என்றேன்”. மீண்டும், அவன்உம்மை வழியறியாதவராய் கண்டு நேர்வழி காண்பிக்க வில்லையா? என்றான். அதற்கு, நான் ஆம்! உண்மைதான் இறைவா! நீ தான் நேர்வழி காண்பித்தாய்என்றேன். மீண்டும் அல்லாஹ்உம்மை ஏழையாய் கண்டு செல்வந்தனாக ஆக்கினேனா இல்லையா? என்றான். அதற்கு, நான்  ஆம்! உண்மைதான் இறைவா! நீ தான் என்னை செல்வந்தனாக ஆக்கினாய் என்றேன்”. மீண்டும், அவன்உம்முடைய இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா? உமக்காக உம் புகழினை உயர்த்தவில்லையா? என்றான். அதற்கு, நான்ஆம்! உண்மை தான் இறைவா! என் உள்ளத்தை விரிவாக்கினாய்! என் புகழினை நீதான் உயர்த்தினாய்என்று கூறினேன்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். மேலும், அல்லாஹ் அல் இன்ஷிராஹ் அத்தியாயத்தையும் இறக்கியருளினான் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.                                (இப்னுகஸீர்)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உயர்வு மேவும் திருநபிக்கு கடந்த காலத்தை கொஞ்சம் திரும்பிப் பார்க்குமாறும், அங்கே செய்யப்பட்ட நலவுகளையும், உதவி, உபகாரம் செய்த அல்லாஹ்வையும் நினைத்துப் பார்க்குமாறும் நினைவு படுத்துகின்றான்.

பெற்றெடுத்த தாய் தந்தையரின் தியாகங்களை மறந்து விடாதீர்கள்

وروى البخاري في الأدب المفرد عن أبي الطفيل قال
 "رأيت النبي -صلى الله عليه وسلم- يقسم لحماً بالجعرانة، وأنا يومئذ غلامٌ أحمل عضو البعير، فأتته امرأةٌ فبسط لها رداءه، قلت: من هذه؟ قيل: هذه أمه التي أرضعته"، أي: هي حليمة السعدية -رضي الله عنها-، مد لها رداءه.

ஜிஇர்ரானா எனும் இடத்தில் நான் இறைச்சிகளை பங்கிட்டுக் கொண்டிருந்தேன் அப்போது வயது முதிர்ந்த பெண்மணி அந்த இடத்திற்கு வருகை தந்தார்கள். அப்போது அங்கிருந்த நபி {ஸல்} அவர்கள் எழுந்து அவர்களை வரவேற்று தங்களின் மேலாடையை விரித்து அதிலே அமரச் சொன்னார்கள்.

வியப்போடு அதைப் பார்த்து நான் இவர் யார்? என்று கேட்ட போதுஇவர் ஹலீமா அஸ்ஸஅதிய்யா (ரலி) ஆவார். எனக்கு பால்குடித் தாயாவார்கள்என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                        ( நூல்: அல் அதபுல் முஃப்ரத் )

மாநபி {ஸல்} பிறந்த 6 மாதங்களுக்குப் பின்னர் பால்கொடுக்க ஆரம்பித்து, பால்குடி நிறுத்தும் வயதா 2 வயது வரை ஹலீமா (ரலி) அவர்கள் மாநபி {ஸல்} அவர்களுக்கு பால் கொடுத்தார்கள். பின்னர், 50 மாதங்கள் பெருமானார் {ஸல்} அவர்கள் ஹலீமா (ரலி) அவர்களின் பராமரிப்பில் வளர்ந்தார்கள். என அப்துல் ஹமீத் கதீப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

பால் கொடுத்த செவிலித்தாயாரோடே இவ்வளவு மரியாதையோடு நடக்க வேண்டுமானால் நம்மோடு வாழ்ந்து வரும் நம் தாயோடு நாம் எப்படி நடந்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நெருங்கிய உறவின் (மனைவியின்) தியாகங்களை மறந்து விடாதீர்கள்….

இன்ன ஹுஸ்னுல் அஹ்தி மினல் ஈமான்என்று மாநபி {ஸல்} அவர்கள் இந்த செய்தியை உம்மத்துக்கு சொன்ன நேரமும், சொன்ன இடமும் மிகவும் கவனத்திற்குரியது.

عن عائشة رضي الله عنها قالت : جاءت عجوزٌ إلى النبيِّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ وهو عندي فقال لها رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ : «من أنتِ ؟» قالت : أنا جثَّامةُ المُزنيَّةُ فقال : «بل أنتِ حسَّانةُ المُزنيَّةُ كيف أنتُم ؟ كيف حالكم ؟ كيف كنتُم بعدنا ؟» قالت : بخيرٍ بأبي أنت وأمِّي يا رسولَ اللهِ فلما خرجتُ قلتُ : يا رسولَ اللهِ تُقبِلْ على هذه العجوزِ هذا الإقبالَ فقال : «إنها كانت تأتينا زمنَ خديجةَ وإنَّ حسنَ العهدِ من الإيمانِ». (السلسلة الصحيحة

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “என்னுடைய வீட்டில் நானும், நபி {ஸல்} அவர்களும் அமர்ந்திருந்த போது மூதாட்டியொருவர் வருகை தந்து, மாநபி {ஸல்} அவர்களைக் காண அனுமதி கோரினார்.

அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் நீங்கள் யார்? என்று வினவினார்கள். அதற்கு, அந்த மூதாட்டி “நான் தான் ஜஸ்ஸாமா அல் முஸனிய்யா என்று பதில் கூறினார்கள். வந்திருப்பது யார் என்பதை விளங்கிக் கொண்ட மாநபி {ஸல்} அவர்கள் “நீங்கள் ஹஸ்ஸானா அல் முஸனிய்யா என்று பெயரை மாற்றி விட்டு, அழகிய முறையில் நலம் விசாரித்தார்கள்.

நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது? எங்களுக்கு பின்னால் நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள்? என்று அடுக்கடுக்கான விசாரிப்புகள்.

அதற்கு அந்த மூதாட்டி “என் தாய் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் தூதரே! நலமாக இருக்கின்றேன்” என்றார். சிறிது நேரத்திற்குப் பின் அவர் வெளியே சென்றார்.

அவர் வெளியே சென்றதும் “ஒரு மூதாட்டிக்கு இவ்வளவு வரவேற்பும், உபசரிப்பும் தேவையா?” என்று கேட்டேன். அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் “வந்து சென்ற அந்த மூதாட்டி அன்னை கதீஜா (ரலி) உயிரோடு இருக்கும் காலங்களில் எம் வீட்டுக்கு வந்து செல்பவராக இருந்தார்கள்” என்று கூறி விட்டு “கடந்த கால உறவுகளை பேணுவது ஈமானின் ஓர் அம்சமாகும்” என்று கூறினார்கள்.

عاشت حسانة رضي الله عنها بعد أن غيّر النبي صلى الله عليه وسلم اسمها من جثامة إلى حسانة في المدينة عيشة كريمة تحت عناية النبي صلى الله عليه وسلم فكان يصلها ويرسل إليها الهدايا والعطايا  فعن أنس رضي الله عنه قال  كان إذا أُتِيَ بِشيءٍ للنبي صلى الله عليه وسلم يقولُ : «اذْهَبُوا بهِ إلى فُلانةَ ، فإِنَّها كانَتْ صَدِيقَةَ خديجةَ ، اذهبُو إلى بيتِ فلانةَ فإنَّها كانَتْ تُحبُّ خديجةَ» .

ஹஸ்ஸானா (ரலி) அவர்கள் மதீனாவில் பெருமானார் {ஸல்} அவர்களின் அரவணைப்பில் மகத்தான வாழ்வு வாழ்ந்தார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பெருமானார் {ஸல்} அவர்களுக்கு ஏதாவது அன்பளிப்புகள் வழங்கப்பட்டால் அதில் ஒரு பகுதியை என்னிடம் தந்து “போய் கதீஜா (ரலி) அவர்களின் தோழியிடம் கொடுத்து வா! ஏனெனில், என் துணைவி கதீஜா (ரலி) அவர்களை நேசித்தவராக அவர் இருந்தார்” என்று சொல்வார்கள்.

பெருமானார் {ஸல்} அவர்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்களோடு வாழ்ந்தது 25 ஆண்டுகள். நபித்துவத்திற்கு முன்பாக 15 ஆண்டுகள் நபித்துவத்திற்கு பின்பாக 10 ஆண்டுகள் ஆனால், மாநபி {ஸல்} அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்னை கதீஜா (ரலி) அவர்களை நினைத்துக் கொண்டே இருந்தார்கள்.

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மனைவியாக, இறைத்தூதரை நம்பிக்கை கொண்ட விசுவாசியாக, அல்லாஹ்வின் தூதரை காதலித்த நேசராக நின்று வாழ்வில் செய்த எந்த தியாகத்தை தான் மாநபி {ஸல்} அவர்களால் மறக்க முடியும்??

இந்த ஆறுதலுக்கு ஈடுண்டா?...

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّهَا قَالَتْ أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْوَحْيِ الرُّؤْيَا الصَّالِحَةُ فِي النَّوْمِ فَكَانَ لَا يَرَى رُؤْيَا إِلَّا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ ثُمَّ حُبِّبَ إِلَيْهِ الْخَلَاءُ وَكَانَ يَخْلُو بِغَارِ حِرَاءٍ فَيَتَحَنَّثُ فِيهِ وَهُوَ التَّعَبُّدُ اللَّيَالِيَ ذَوَاتِ الْعَدَدِ قَبْلَ أَنْ يَنْزِعَ إِلَى أَهْلِهِ وَيَتَزَوَّدُ لِذَلِكَ ثُمَّ يَرْجِعُ إِلَى خَدِيجَةَ فَيَتَزَوَّدُ لِمِثْلِهَا حَتَّى جَاءَهُ الْحَقُّ وَهُوَ فِي غَارِ حِرَاءٍ فَجَاءَهُ الْمَلَكُ فَقَالَ اقْرَأْ قَالَ مَا أَنَا بِقَارِئٍ قَالَ فَأَخَذَنِي فَغَطَّنِي حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ اقْرَأْ قُلْتُ مَا أَنَا بِقَارِئٍ فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ اقْرَأْ فَقُلْتُ مَا أَنَا بِقَارِئٍ فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّالِثَةَ ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ  عَلَقٍ  اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ  
فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْجُفُ فُؤَادُهُ فَدَخَلَ عَلَى خَدِيجَةَ بِنْتِ خُوَيْلِدٍ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقَالَ زَمِّلُونِي زَمِّلُونِي فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ فَقَالَ لِخَدِيجَةَ وَأَخْبَرَهَا الْخَبَرَ لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي فَقَالَتْ خَدِيجَةُ كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ

ஒரு நாள் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிராகுகையில் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அப்போது வானவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிகள் (ஸல்) முன்பு தோன்றி, ‘‘இக்ரா’ (ஓதுவீராக!) என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனக்கு ஓதத் தெரியாதுஎன்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இறுகக் கட்டித் தழுவினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பின்னர் ‘‘ஓதுவீராக’’ என்று கூறி மீண்டும் நபி (ஸல்) அவர்களைக் கட்டித் தழுவிவிட்டுகுர்ஆனில்’ 96ம் அத்தியாயமாகிய அல்-அலக்கின் இக்ர எனத்துவங்கும் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்களும் அப்படியே ஓதினார்கள். பின்பு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் சென்று விட்டார்கள்.

இந்த நிகழ்ச்சியால் அதிர்ச்சியடைந்து பயந்து நடுங்கிய நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து ‘‘என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்என்று கூறினார்கள். கதீஜா (ரழி) அவர்கள் போர்த்திவிட்ட பின்னர் நபி (ஸல்) அவர்கள், நடந்த சம்பவத்தை விளக்கினார்கள். பின்னர் தமக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதாகவும் கூறினார்கள்.

அப்போது கதீஜா (ரழி) அவர்கள் தமது கணவருக்கு மிக அழகான முறையில் ஆறுதல் கூறி மனதைரியத்தை ஊட்டினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். சோதனைகளில் (சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்என்று கூறி பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் கூறினார்கள்.

روى البخارىّ أنَّ عائشة رضى الله عنها قالت: ما غرتُ على (أى مِن) أحد من نساء النبىّ ﷺ ما غرتُ على خديجة
 هلَكَتْ قبل أن يتزوجَنِى وما رأيتُها. ولكن كان النبىُّ صلى الله عليه وسلم يكثر من ذكرها. وربما ذبح الشاةَ ثم يقطعها أعضاءً، ثم يبعثها فى صدائق خديجة، فيهدِى فى خلائلها (صديقاتها) منها ما يسعهن (يكفيهنّ). فربما قلت له: كأنه لم يكن فى الدنيا امرأةٌ إلا خديجة؟ فيقول لها: إنها كانت وكانت. وكان لى منها الولد

கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி {ஸல்} அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி {ஸல்} அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி {ஸல்} அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள்.

அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி {ஸல்} அவர்களிடம், ‘உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களேஎன்று கேட்டதுண்டு.

அப்போது அவர்கள், ‘அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்ததுஎன்று பதில் கூறினார்கள்.

عن عائشة -رضي الله عنها- قالت
 استأذنت هالة بنتُّ خويلد -أخت خديجة- على رسول الله صلى الله عليه وسلم، فعرف استئذان خديجة، فارتاح لذلك، فقال: اللهمَّ هالة. قالت: فَغِرْت. فقلت: ما تذكر من عجوز من عجائز قريش، حمراء الشِّدقين، هلكت في الدَّهر، قد أبدلك الله خيرًا منها

ஹாலா பின்த்து குவைலித் கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி இறைத்தூதர் {ஸல்} அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே மாநபி {ஸல்} அவர்கள் (கதீஜா ரலி அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, “இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்என்று கூறினார்கள்.

உடனே நான் ரோஷமடைந்து விட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.)என்று கேட்டேன்.                             ( நூல்: புகாரி )

கொள்கை மாறுபட்டவர்களின் உதவிகளை துச்சமாக கருதிவிட வேண்டாம்

பத்ர் யுத்தம் நடைபெற்று முடிந்து, வெற்றியோடும், ஏராளமான ஃகனீமத்தோடும் முஸ்லிம்கள் மதீனா திரும்பி இருந்தனர்.

எதிரணியில் பங்குகொண்ட 70 பேர் கைதிகளாகவும் மதீனாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

فقد روى البخاريُّ رحمه الله في الجامع الصحيح؛ أنه لما أسَر المسلمون في غزوة بدر سبعين من المشركين، قال عليه الصلاة والسلام - وهو ينظر لهؤلاء الأسرى -: ((لو كان المُطعم بن عديٍّ حيًّا ثم كلمني في هؤلاء لتركتُهم له))، وفي رواية عند أبي داود
 (لأطلقتُهم له)

முதல் யுத்தம், முதல் வெற்றி ஆதலால் கிடைக்கப்பெற்ற 70 கைதிகளை என்ன செய்வதென்று தோழர்களோடு ஆலோசித்து ஈட்டு தொகை கொடுத்து விடுதலை செய்யலாம் என மாநபி {ஸல்} அவர்கள் கைதிகள் விவகாரத்தில் முடிவை அறிவித்தார்கள்.

இதே நேரத்தில், மக்காவின் தலைவர்கள் அனுப்பிய பிரதிநிதிகள் குழுவொன்று மாநபி {ஸல்} அவர்களின் முன்பாக அமர்ந்து கைதிகள் விடுதலை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களிடையே பேசிய மாநபி {ஸல்} அவர்கள்முத்இம் இப்னு அதீ இப்போது உயிருடன் இருந்து நாற்றம் பிடித்த இந்த கைதிகள் விவகாரத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தால் எவ்வித ஈட்டுத்தொகையும் பெறாமல் அவருக்காக இந்த கைதிகளை விடுதலை செய்திருப்பேன்என்றார்கள்.

وفي موقف آخر حينما قام أبو البختري، وكان في صفوف المشركين يوم بدر، لما كان يُقاتل معهم ضد المسلمين، فقال عليه الصلاة والسلام: ((لا تقتلوا أبا البختري))، ويوضِّح هذا ما أورده البيهقي في دلائل النبوة؛ أنه عليه الصلاة والسلام قال: ((مَن لقِيَ أبا البختري بن هشام فلا يقتلْه))،


இதே பத்ர் யுத்தத்தின் முதல் நாள் படை வீரர்களின் அணிவகுப்பை சரி செய்து முடித்து வீரர்களிடையே உரையாற்றிய மாநபி {ஸல்} அவர்கள்தோழர்களே! உங்களில் எவர் களத்தின் உள்ளே அபுல் புஃக்தரீயை நேருக்கு நேர் சந்தித்தாலும் அவரை கொல்ல வேண்டாம்என்று கூறினார்கள்.

யார் இவர்கள்?...

தாயிஃப் மாநபி {ஸல்} அவர்கள் ஏகத்துவ அழைப்பிற்காக தேர்ந்தெடுத்த இரண்டாவது தளம்.

விழலுக்கு இறைத்த நீர் போல் ஆனது மாநபி {ஸல்} அவர்களின் விருப்பம். ஆம்! மக்காவின் இறைமறுப்பாளர்கள் தயங்கித் தயங்கி செய்த கொடுமைகளை ஒரே நாளில் ஒட்டு மொத்தமாக அரங்கேற்றினார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள், கவலையோடு மனம் தளர்ந்தவர்களாக, உடல் சோர்வானவர்களாக மக்காவை நோக்கி நடக்கின்றார்கள்.

மாநபி {ஸல்} அவர்களின் உள்ளம் பலவாறாக யோசிக்கிறது. இறுதியாக, இதே நிலையில் மக்கா சென்றால் மக்காவாசிகளின் எதிர்ப்பும், ஏளனமும் முன்பை விட அதிகமாக இருக்கும். எனவே, இனி மக்காவிற்குள் அடியெடுத்து வைக்கும் போது சக்தி வாய்ந்த ஒருவரின் அடைக்கலத்தின் பேரில் நுழைய வேண்டும் என முடிவெடுத்து முத்இம் இப்னு அதீயை சந்தித்து தமக்கு அடைக்கலம் தருமாறு கோரினார்கள்.

முத்இம் இப்னு அதீ சம்மதித்து மாநபி {ஸல்} அவர்களை தம் வாகனத்தின் மீது அமர வைத்து, தம் நண்பர்கள், வியாபார கூட்டாளிகள், குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக மக்காவின் வீதிகளில் அழைத்து வந்து கஅபாவின் அருகே நின்றுமுஹம்மதுக்கு {ஸல்} நான் அடைக்கலம் கொடுத்திருக்கின்றேன். அவரை யாராவது தாக்கும் பொருட்டு நெருங்கினால் விளைவு கடுமையாக இருக்கும்என்று எச்சரித்து விட்டு மாநபி {ஸல்} அவர்களை கஅபாவின் அருகே இறக்கி விட்டுச் சென்றார்.

சற்றேறக்குறைய ஆறு ஆண்டுகள் கழித்து நடைபெறுகிற யுத்தம் அது. அதுவும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கருவறுக்க வேண்டும் என்கிற முனைப்போடு வந்தவர்கள் மூக்கறுபட்டு, தோல்வியுற்று அவர்களில் கைதிகள் எனும் பெயரில் 70 பேர் நிராயுதபாணிகளாய் நின்று கொண்டிருக்கும் வேளை இது.

மாநபி {ஸல்} அவர்கள் கடந்த காலத்தில் தாம் நிராயுதபாணியாய் நின்ற போது தமக்கு செய்யப்பட்ட நலவை நினைத்துப் பார்த்தார்கள். அதற்கான வெளிப்பாடாக இந்த அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.

பெருமானார் {ஸல்} அவர்களையும், முஸ்லிம்களையும், அபூதாலிப் அவர்களையும், பனூமுத்தலிப், பனூஹாஷிம், அபூதாலிப் கிளையார்களையும் ஊர் விலக்கம் செய்து ஷுஅப அபூ தாலிப்அபூதாலிப் பள்ளத்தாக்கில் எவ்வித உதவியும் இன்றி சிரமப்படுத்திக் கொண்டிருக்கும் தருணம் அது.

இரண்டு ஆண்டுகளைத் தாண்டி மூன்றாவது ஆண்டைக் கடந்து கொண்டிருக்கும் வேளை உயிருக்கு நிகராக நேசித்த மனைவி கதீஜா (ரலி), உயிரைக் காப்பாற்றிய அபூதாலிப் ஆகியோரின் மரணம் கூடுதல் வலியை பெருமானாருக்கு ஏற்படுத்திய நேரம் அது.

அரபுலகின் அத்துனை மக்களில் அபுல் புக்தரியின் இதயத்தை மட்டுமே நேரடியாக தாக்கியது. உணர்வு பொங்கியது, கொதித்தெழுந்த அவர் கஅபாவின் முகட்டின் மீதேறி ஊர் விலக்க தீர்மானம் எழுதப்பட்டிருந்த பலகையை உடைத்தெறிந்தார்.

மொத்தமாக பள்ளத்தாக்கின் கொடுமையில் இருந்து அனைவரையும் மீட்டெடுத்தார்.

இதுவும் சற்றேறக்குறைய பத்ருக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற சம்பவம்.

எனினும் மாநபி {ஸல்} அவர்கள் கொள்கை கடந்து நன்றிப்பெருக்கோடு அந்த மாமனிதன் செய்த நலவை நினைத்துப் பார்த்தார்கள். அதற்கான வெளிப்பாடாக இந்த அறிவிப்பை வெளியிடவும் செய்தார்கள்.             ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் )

சாமானியர்களின் தியாகங்களையும், ஆபத்துகளில் இருந்து காப்பாற்றியவர்களையும் மறந்து விட வேண்டாம்

மக்கா வெற்றிக்கான மாநபி {ஸல்} அவர்களும், மாநபித் தோழர்களும் ஆயத்த மாகிக் கொண்டிருந்த தருணம் அது.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ، حَدَّثَنَا بَهْزٌ ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ ثَابِتٍ ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ ، عَنْ عَائِذِ بْنِ عَمْرٍو ، أَنَّ أَبَا سُفْيَانَ ، أَتَى عَلَى سَلْمَانَ ، وَصُهَيْبٍ ، وَبِلَالٍ فِي نَفَرٍ ، فَقَالُوا : وَاللَّهِ مَا أَخَذَتْ سُيُوفُ اللَّهِ مِنْ عُنُقِ عَدُوِّ اللَّهِ مَأْخَذَهَا ، قَالَ فَقَالَ أَبُو بَكْرٍ : أَتَقُولُونَ هَذَا لِشَيْخِ قُرَيْشٍ وَسَيِّدِهِمْ ؟ ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ ، فَقَالَ : يَا أَبَا بَكْرٍ لَعَلَّكَ أَغْضَبْتَهُمْ ، لَئِنْ كُنْتَ أَغْضَبْتَهُمْ ، لَقَدْ أَغْضَبْتَ رَبَّكَ فَأَتَاهُمْ أَبُو بَكْرٍ فَقَالَ : يَا إِخْوَتَاهْ أَغْضَبْتُكُمْ ؟ قَالُوا : لَا يَغْفِرُ اللَّهُ لَكَ يَا أَخِي

அபூஸுஃப்யான் அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகியோரின் அடைக்கலத்தில் மாநபி {ஸல்} அவர்களைச் சந்திக்க சென்று கொண்டிருந்தார்கள்.

அப்போது, அவ்வழியில் பிலால், ஸுஹைப், ஸல்மான் (ரலியல்லாஹு அன்ஹும்) மற்றும் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, மூவரும் அபூ ஸுஃப்யானைப் பார்த்து “இன்று அல்லாஹ்வின் வாள்கள் எவ்வாறு சுழல வேண்டுமோ அவ்வாறு சுழலவில்லை; யாரைப் பிடிக்க வேண்டுமோ அவரைப் பிடிக்கவில்லை” ( சிலேடையாக அபூஸுஃப்யான் கொல்லப் பட்டிருக்க வேண்டும் என்பதையே இவ்வாறு) என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் மூவரையும் நோக்கி “நீங்கள் குறைஷி குலத்தின் மரியாதைக்குரிய தலைவரைப் பார்த்தா இப்படிப் பேசுகின்றீர்கள்” என்று கோபமாக பேசிவிட்டு பெருமானார் {ஸல்} அவர்களிடம் அபூஸுஃப்யான் அவர்களை நிறுத்தினார்கள்.

 வருகிற வழியில் நடந்த நிகழ்வுகளையும், மூவரும் பேசியதையும், தாம் கண்டித்ததையும் ஒன்று விடாமல் அபூபக்ர் (ரலி) அவர்கள் மாநபி {ஸல்} அவர்களிடம் விவரித்தார்கள்.
அப்போது நபி {ஸல்} அவர்கள் “அபூபக்ர் அவர்களே! நீர் அம்மூவரையும் கோபப்படுத்தி விட்டீரா? ஒருக்கால் அவர்களை நீர் கோபப்படுத்தி இருப்பீர் எனில் நன்றாக விளங்கிக் கொள்வீராக! உம்முடைய அதிபதியாகிய அல்லாஹ்வை கோபப் படுத்தி விட்டீர்!” என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மாநபியின் முன் தாழிட்டு அமர்ந்து தாம் பேசியவைகளுக்காக வருந்தியவராக அங்கிருந்து எழுந்து நேராக சென்று “ஓ! என் சகோதரர்களே! உங்களை நான் கோபப்படுத்தி விட்டேனா?” என்று கேட்டார்கள். அதற்கு, அம்மூவரும் இல்லை, அபூபக்ர் அவர்களே! என்று கூறிவிட்டு, அபூபக்ர் அவர்களே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.                              (நூல்: முஸ்லிம்)

இந்த சம்பவத்தின் ஊடாக நாம் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

முதலாவதாக, உலகில் பெரும்பாலும் செல்வாக்கும், அரசியல் அதிகாரமும் பெற்றவர்கள் தாங்கள் ஒன்றும் இல்லாதவர்களாக இருந்த போது அவர்களுக்காக இன்னல்களையும், துன்பங்களையும் சந்தித்த சாமானியர்களை, தியாகங்கள் பல செய்தவர்களை பின் நாளில் செல்வாக்கும் அதிகாரமும் கைவரப் வெறுகிற போது மறந்து விடுவதோடு மாத்திரமல்லாமல் எதிரிகளாக இருந்தவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டு அவர்கள் சமரசமாக செல்வதைப் பார்க்க முடிகின்றது.

இங்கே, எதிரிக்கூட்டத்தின் ஒரு தலைவர் அபூஸுஃப்யான் அவர் முன்பாக அவரைக் குத்திக் காட்டிப் பேசிய மூன்று சாமானியர்கள், அந்தத் தலைவருக்காக கோபப்பட்ட தம் தனிப்பெரும் பாசத்திற்குரியவர் என முக்கியமான கட்டத்தில் மாநபி {ஸல்} அவர்கள் ஏகத்துவத்தின் துவக்க காலத்தில் இந்த மார்க்கத்திற்காக எல்லா வகையான இன்னல்களையும் தாங்கி நின்ற சாமானியர்களான அம்மூவரின் பக்கம் நின்று பேசினார்கள்.

ஆம்! அவர்கள் பேசியதிலும் நியாயம் உண்டு. ஆரம்ப காலத்தில் இம்மூவரின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகள் அனைத்திற்கும் அபூஸுஃப்யானும் ஒரு காரணமாக இருந்தார்.

எனவே, அபூஸுஃப்யான் எனும் தலைவருக்காக சமரசமாக மாநபி சென்று விடவில்லை.

இன்னொரு பக்கம், தாம் பேசியவைகளுக்காக வருத்தம் தெரிவித்து நின்ற மாமனிதர் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பார்த்து “உங்களின் மீது எங்களுக்கு எந்தக் கோபமும் இல்லை. அல்லாஹ் உங்களை மன்னிக்கட்டும்!” என துஆ செய்கிற இம்மூவரின் அடிமைத்தள விடுதலையில் அபூபக்ர் (ரலி) அவர்களின் மகத்தான பங்களிப்பு இருந்ததை அம்மூவரும் மறக்கவுமில்லை.  

இப்படியும் உறவுகளை மதித்த மேன்மக்கள்….

كان عبد الله بن سلام مؤاخيًا لأبى الدرداء رضى الله عنهما. فلما مات عبد الله بن سلام ذهب ولده يوسف [3] إلى الشام ليسأل عن أبى الدرداء (تجديدًا للعهد، ورعاية للحرمة والألفة، وتأديةً للحقوق. فإن أبا الدرداء كان محبًّا لعبد الله بن سلام). فجاءه يوسف وهو يحتضر قد قارب مفارقة الدنيا. ففرح به أبو الدرداء.

பெருமானார் {ஸல்} அவர்கள் அபுத்தர்தா (ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களையும் ஹிஜ்ரத் வந்த புதிதில் சகோதரர்களாக ஆக்கினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் உயிர் வாழ்கிற காலம் வரை இந்த உறவை மிகவும் பேணினார்கள்.

இந்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் இறைவன் அழைப்பை ஏற்றார்கள்.

சில நாட்கள் கழித்து ஷாமில் வசித்து வருகிற அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்து, உறவை புதுப்பித்துக் கொள்ள அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களின் மகனார் யூஸுஃப் (ரலி) அவர்கள் பயணம் மேற்கொண்டார்கள்.

ஆனால், அங்கே மரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டிருந்தார் அபுத்தர்தா (ரலி) அவர்கள்.

யூஸுஃப் (ரலி) அவர்கள், அபுத்தர்தா (ரலி) அவர்களைப் பார்த்து  நலம் விசாரித்து முடித்ததும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் யூஸுஃபை நோக்கி என் சகோதரனின் மகனே! இவ்வளவு தூரம் பயணித்து வந்திருக்கின்றாயே ஏதாவது முக்கியமான வேலையா? என்று கேட்க, யூஸுஃப் (ரலி) அவர்கள் இல்லை! உங்களுக்கும் என் தந்தைக்குமிடையே இருந்த உறவை புதுப்பித்துக் கொள்ளவே இங்கு வந்தேன்!” என்று பதில் கூறினார்கள்.

أخرج مسلم والترمذي عن ابن عمر رضي الله عنهما أنه كان إذا خرج إلى مكة أخذ معه حماراً له يتروح عليه إذا مل ركوب الراحلة، وعمامة يشد بها رأسه، فبينما هو يوماً على ذلك الحمار مر به أعرابي فقال له ابن عمر: ألست ابن فلان؟ قال: بلى فنزل ابن عمر عن حماره وأعطاه للرجل قائلا: اركب هذا ثم ناوله العمامة قائلاً: واشدد بهذه رأسك. ثم ودعه وانصرف فقال له بعض أصحابه: غفر الله لك، أعطيت هذا الأعرابي حماراً كنت تتروح عليه، وعمامة كنت تشد بها رأسك؟ فقال ابن عمر: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
 "إن من أبر البر صلة الرجل أهل ود أبيه بعد أن يولي –أي يموت- وإن أبا هذا كان وداً لوالدي عمر رضي الله عنه.

மக்காவிற்கு செல்கின்ற வழியில் ஒரு கிராம வாசி இப்னு உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸலாம் கூறி அவரை தன்னுடைய கழுதையில் ஏற்றினார்கள்.

தன்னுடைய தலையில் இருந்த தலைப்பாகையை அவருக்கு வழங்கினார்கள். (இதைக்கண்ட நாங்கள்) அல்லாஹ் உங்களை நன்றாக்குவானாக. இவர்கள் கிராமவாசிகள் கொஞ்சத்தையும் கூட பொருந்திக்கொள்வார்களே (அவர்களிடம் ஏன் நீங்கள் இவ்வாறு மிகுதியாக நடந்து கொள்ளவேண்டும்) என்று கேட்டோம்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் '' இவருடைய தந்தை (என்னுடைய தந்தையாகிய) உமர் (ரலி) அவர்களுக்கு நண்பராக இருந்தார்.

(தந்தைக்கு செய்யும்) பணிவிடைகளிலேயே மிகச் சிறந்தது மகன் தன் தந்தையின் நண்பரின் குடும்பத்தார்களை இணைத்து வாழ்வதுதான் என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள். ( அறிவிப்பவர் : இப்னு தீனார், நூல் : முஸ்லிம் (4629) )

ஆகவே, வாழ்வின் உச்சத்தில் நாம் எவ்வளவு தூரம் பயணித்தாலும் நாம் கடந்து வந்த பாதையையும், கடந்த காலத்தில் நமக்கு செய்யப்பட்ட நலவுகளையும், நமக்கு உதவிய உறவுகளையும் ஒருக்காலும் மறந்து விடக்கூடாது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஈமானின் அங்கமான இந்த நற்பண்புகளை பேணி வாழ்கிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!