Thursday 8 October 2020

 

எண்ணிய முடிதல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும்!!

தெளிந்த நல்லறிவு வேண்டும்!!!

 

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் விதி எண் 110 –ன் கீழ் தமிழகத்தில் புதிய ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதனடிப்படையில் பல்லாவரத்தில் உள்ள வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான இடத்தை, சமீபத்தில் வக்ஃப் வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது ஜான் தலைமையிலான புதிய நிர்வாகிகள் குழு பார்வையிட்டு அந்த இடத்தில் ஹஜ் இல்லம் சிறப்பான முறையில் அமைக்கப்படும் என்று இராமநாதபுரம் எம்பியும், வக்ஃப் வாரிய உறுப்பினருமான நவாஸ் கனி அவர்களின் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆண்டு தோறும் தமிழகத்தில் இருந்து ஹஜ் செய்ய செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் புதிய ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பும், அதை உடனடியாக அமைக்க வக்ஃப் வாரியம் மேற்கொள்ளும் முயற்சியும் வரவேற்கத்தக்கதே! அல்ஹம்துலில்லாஹ்

மிகப்பெரிய சட்டப்போராட்டத்திற்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வக்ஃப் வாரியத்தின் புதிய நிர்வாகக்குழுவினரை மனதார வாழ்த்தி, சிறப்பாக சேவையாற்றிட துஆ செய்வதோடு சமுதாய நலனில் அக்கறை கொண்டு எதிர்காலத்தின் செயல்பாடுகளை திட்டமிட்டு அமைத்து ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்யுமாறு சமுதாயத்தின் சார்பாக நாம் கேட்டுக் கொள்கிறோம்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பிற்கு வந்துள்ள புதிய நிர்வாகிகளை வாழ்த்தி துஆ செய்ததோடு நின்றுவிடாமல் பொறுப்பு குறித்த இஸ்லாம் கூறும் அழகிய வழிகாட்டலை அவர்களுக்கு நினைவு படுத்துவது ஒரு இறைநம்பிக்கையாளன், ஈமானிய சகோதரன் என்ற அடிப்படியில் நமக்கான கடமையும் காலத்தின் அவசியமும் ஆகும். 

நம்மில் பெரும்பாலானவர்கள் பதவியை ஒரு அதிகாரமாக கருதிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பதவி என்பது அமானிதம் மகத்தான பொறுப்பு என்பதை உணர வேண்டும்.

பொறுப்பை - அமானிதத்தை உரிய முறையில் பேணி மக்களின் நன்னம்பிக்கையைப் பெற வேண்டும். இன்னும் சொல்வதாக இருந்தால், பொறுப்புகளைப் பெறுகின்றவர்கள் புகழ், அதிகாரம், செல்வாக்கு ஆகிய காரணங்களைத் தாண்டி சமூகத்தின், சமுதயாத்தின் உயர்வை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.

இஸ்லாம் பொறுப்பு என்பது ஓர் அமானிதம் என்றும் அதை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. பொறுப்பு எனும் அமானிதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

 

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنِ الحَسَنِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ

عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً، فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ، إِلَّا لَمْ يَجِدْ رَائِحَةَ الجَنَّةِ

 

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார்.

அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்' என்று சொல்ல கேட்டேன்' எனக் கூறினார்கள்.

 

قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَلَا تَسْتَعْمِلُنِي؟ قَالَ: فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِي، ثُمَّ قَالَ: «يَا أَبَا ذَرٍّ، إِنَّكَ ضَعِيفٌ، وَإِنَّهَا أَمَانَةُ، وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ، إِلَّا مَنْ أَخَذَهَا بِحَقِّهَا، وَأَدَّى الَّذِي عَلَيْهِ فِيهَا

‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (ஏதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா?’’ என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள்பட்டையில் அடித்துவிட்டு, ‘‘அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம். யார் அதை கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்’’ என்று கூறினார்கள். ( நூல்:முஸ்லிம் )     

பொறுப்பு ஓர் அமானிதம் என்றும், அதைக் கையாள வேண்டிய முறைப்படி கையாளத் தவறினால் மறுமையில் மிகப்பெரும் இழிவையும், கைசேதத்தையும் சந்திக்க நேரிடும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

 

«مَا مِنْ أَمِيرٍ يَلِي أَمْرَ الْمُسْلِمِينَ، ثُمَّ لَا يَجْهَدُ لَهُمْ وَيَنْصَحُ، إِلَّا لَمْ يَدْخُلْ مَعَهُمُ الْجَنَّةَ

 

ஓர் ஆட்சியாளர் முஸ்லிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர், அவர்களுக்காக உழைக்காமலும் (அவர்கள்மீது) அக்கறை காட்டாமலும் இருந்தால், அவர்களுடன் அவர் சொர்க்கத்துக்குச் செல்லவே மாட்டார்’’ என்று சொல்ல நான் கேட்டேன் எனக் கூறினார்கள்.                             ( நூல்: முஸ்லிம் )

 

வக்ஃபு வாரியத்தின் முன் உள்ள சவால்களும்சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளும்

முஸ்லிம் சமூகத்தின் நிறைவேறாத ஆசைகள் என்று நிறையவே இருக்கின்றது. சமூகமாக முன்னேற்றப்பாதையில் பயணிக்க வேண்டும் என்கிற இலட்சியமும், கனவுகளும் இருக்கின்றது.

எனினும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கையேந்தும் நிலையும், கெஞ்சும் நிலையும் தான் இருப்பதைப் பார்க்க முடிகின்றது.

இந்த நிலை மாறி முஸ்லிம் சமூகம் முன்னேற்றப்பாதையில் பயணிக்க, இலட்சியங்களைத் தொட, கனவுகளை நனவாக்கிட வக்ஃபு வாரியம் என்கிற ஒற்றை அமைப்பு சீர் பெறுமானால் இது சாத்தியம் எனலாம்.

உலகிலேயே அதிகமாக வக்ஃபு சொத்துக்கள் உள்ள நாடு இந்தியாதான். இந்தியாவில் ரயில்வே துறை, இராணுவத்துறைக்கு அடுத்தபடியாக சொத்துக்கள் இருப்பது வக்ஃபு வாரியத்திற்கு மட்டுமே. நாட்டில் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமாக பதிவு மற்றும் பதிவு செய்யப்படாத 4.49 லட்சம் சொத்துக்கள் உள்ளன.

வக்ஃபு என்ற அரபி வார்த்தைக்கு அர்ப்பணித்தல் என்ற பொருளாகும். இந்த சொத்துக்கள் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் சுல்தான்களால் வஃக்பு செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது.   

பள்ளிவாசல்களைப் பராமரித்திட, முஸ்லிம்களின் அடக்க ஸ்தலங்களை உருவாக்கிட, ஈத்கா மைதானம் உருவாக்கிட மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்திட ஆதரவற்றோர் காப்பகம் மற்றும் மதரசாக்கள் ஆரம்பித்திட சுல்தான்கள், முகலாய மன்னர்கள், ராஜபுத்திர மன்னர்கள், திப்புசுல்தான், சேதுபதி மன்னர்கள், பாளையக்காரர்கள், இறையச்சம் நிறைந்த பல செல்வந்தர்கள் என அனைத்து தரப்பினரும் பாரபட்சமின்றி குளம், கண்மாய், நஞ்சை என கொடையாக கொடுத்த சொத்துக்கள் தான் அவை.  

அரசு நிர்ணயித்துள்ள விலையின் படி மொத்த சொத்துக்களின் விலை மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயாகும். ஆனால், சந்தை மதிப்பு இதை விட பன்மடங்கு கூடுதல் ஆகும்.

1857 ஆம் ஆண்டு வெள்ளையர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு வக்ஃபு சொத்துக்களுக்கு கடுமையான வரிவிதிப்பு விதிக்கப்பட்டது. இதனால் பல செல்வந்தர்கள் தங்களது சொத்துக்களைப் பாதுகாக்க ஆங்கில அரசு ஒப்புதலுடன் வக்ஃபு-அல்-அவுலாத் என்ற வாரிசுகள் அல்லது குறிப்பிட்ட பெயருக்கு வக்பு செய்தார்கள்.

அதன் பின்னர் 1906 ஆம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக்கின் உருவாக்கத்திற்குப் பிறகு வக்பு சொத்துக்களைக் காப்பாற்ற முஸ்லிம்கள் முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரசில் தஞ்சமடைந்தனர். அதன் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் என நாடு பிரிக்கப்பட்டபோது 800 ஆண்டு கால பராம்பரிய வக்பு சொத்துக்கள் சூறையாடப்பட்டன‌. அதன் பின்னர் 1954 ஆம் ஆண்டு மத்திய வக்பு வாரியம் தொடங்கப்பட்டது. ஆனாலும் வக்பு சொத்துக்களை இன்று வரை பாதுகாக்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

 

அரசு மற்றும் மாஃபியா கும்பலின் ஆக்கிரமிப்பில் வக்பு சொத்துக்கள்

 

மத்திய அரசு, டெல்லி டெவலப்மெண்ட் அத்தாரிட்டி, தொல்பொருள் ஆய்வு நிறுவனம், அரியனா நகர மேம்பாட்டு ஆணையம் என அரசு நிறுவனங்கள் முக்கால்வாசி வக்பு சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தன‌.

 

இதனை கருத்தில் கொண்டு டெல்லி வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வி.சி.ராஜ்பிராச்சார் அவர்கள் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார்.

 

டெல்லியில் பதிவு செய்யப்பட்ட பல சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டது என்றும் டெல்லி கோல்ப் கிளப், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், மத்திய புலனாய்வு அமைப்பின்  தலைமை அலுவலகம், ஓபராய் நட்சத்திர ஹோட்டல் ஆகியவை ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதாக தெரிவித்தார்.

 

இதே போல மும்பையில் சாதாரண மக்கள் நெருங்கமுடியாத இடமாக உள்ள ஆல்டா மவுண்ட் பகுதியில் 4,532 சதுரஅடி நிலத்தை ரூபாய் 16 இலட்சத்திற்கு முகேஷ் அம்பானிக்கு மகாராஷ்டிரா வக்பு வாரியம் விற்பனை செய்துள்ளது.

 

அதே போல பரீதாபாத்தில் 5 ஏக்கர் நிலத்தை மாதம் வெறும் 500 ரூபாய்க்கு பல ஆண்டுகளுக்கு லீசுக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்து அதில் தொழிற்சாலையும் உருவாக்கியுள்ளார்கள். பெங்களுரில் வின்ட்சர் மானர் என்ற நட்சத்திர விடுதிக்கு 500 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை மாதம் மிகவும் குறைந்த 12 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விட்டுள்ளனர்.

 

மக்களவையில் (21.11.2019) பாஜக எம்.பி. அஜய் நிஷாத் எழுத்து மூலமான கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் முக்தர் அப்பாஸ் நக்வி, நாடு முழுவதும் வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான 16,937 சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதிகபட்சமாக பஞ்சாப் மாநிலத்தில் 5,610 சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

இதேபோன்று மத்தியப் பிரதேசத்தில் 3240, மேற்கு வங்கத்தில் 3082, தமிழகத்தில் 1335, கா்நாடகத்தில் 862 சொத்துகள், டெல்லியில் 373 வீதம் 24 மாநிலங்களில் வக்ஃபு வாரிய சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன” என்று தெரிவித்தார்.

 

வக்ஃபு வாரிய சொத்துகளைப் பாதுகாக்கவும், அத்துமீறலைத் தடுக்கவும், பிரத்யேகமான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆக்கிரமிப்புகளை கையகப்படுத்துவதற்காக இந்திய வக்ஃபு சொத்து மேலாண்மை அமைப்பு’ (Waqf Assets Management System of India) வம்சி போர்ட்டல் WAMSI உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த திட்டத்தின் வாயிலாக இதுவரை, 5,94,139 வக்ஃபு வாரியத்தின் அசையா சொத்துகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், வக்ஃபு சட்டத்தின் பிரிவு 51 (ஐஏ)- இன் படி வக்ஃபு சொத்தின் எந்தவொரு சொத்தும் விற்பனை, பரிசு, பரிமாற்றம், அடமானம் அல்லது பரிமாற்ற செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

 

வக்பு வாரிய சம்பந்தபட்ட பிரச்சினைகளை கையாள ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி எம்.ஒய். இக்பால் தலைமையில் மத்திய அரசு ஒரு நபர் தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது.

 

எனினும், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்கள் இன்னும் ஆக்கிரமிப்பிலேயே இருக்கிறது என்பது தான் வேதனையாகும்.

 

தமிழ்நாடு வக்ஃபு வாரிய பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்க!..

 

தேசிய அளவிலான வக்ஃபு சொத்துக்களை கண்டறிந்து ஆவணப்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் வக்ஃபு சொத்துக்களை கண்டறிந்து ஆவணப்படுத்த முன்வர வேண்டும்.

 

முந்தைய பொறுப்பில் இருந்தவர்கள் 2013 –ஆம் ஆண்டு வாக்கில் இந்த திட்டத்தின் கீழ் ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் சில காரணங்களால் அது தடைபட்டு நிற்கிறது. தடையை நீக்கி தொடர்ந்து ஆவணப்படுத்தும் முயற்சியில் புதிய நிர்வாகம் முன்வர வேண்டும்.

 

ஏனெனில், தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வக்ஃபு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், திருடப்பட்டும், மோசடி செய்யப்பட்டும் உள்ளது என்பது கண் முன்னே நடக்கும் உண்மையாகும்.

 

தமிழகத்தில் வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான 1335 சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று மக்களவையில் (21.11.2019) பாஜக எம்.பி. அஜய் நிஷாத் எழுத்து மூலமாக கேட்ட கேள்விக்கு அமைச்சா் முக்தர் அப்பாஸ் நக்வி பதிலளித்துள்ளார்.

 

தமிழகத்தின் வக்ஃபு வாரிய தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் அவர்கள் “தமிழகத்தின் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக முன்பு பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார்.

 

புதிய நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை கையகப்படுத்தும் முயற்சியில் அனைத்து வகையான ஜனநாயக ரீதியான போராட்டங்களை மிகவும் வீரியத்தோடு முன்னெடுக்க முன்வர வேண்டும்.

 

துவக்கமாக வக்ஃப் வாரியத்தின் கீழ் பதிவு செய்திருக்கிற பள்ளிவாசல்களுக்காவது வக்ஃபு சட்டங்களின் மூலம் பிரத்யேக ஆணை பிறப்பித்து வக்ஃபு சொத்துகள் இனி வரும் காலங்களில் ஆக்கிரமிக்கப்படுவதில் இருந்து தடுத்திட வேண்டும்.

 

மீண்டும் நினைவு படுத்துகின்றோம். உங்களுக்கு தரப்பட்டிக்கின்ற இந்த ஐந்தாண்டு கால பதவி என்பது எதிர் கால முஸ்லிம் சமூகத்தின் கனவுகள் நனவாகிட, இலட்சியங்கள் நிறைவேறிட வழங்கப்பட்டிருக்கிற மகத்தான அமானிதம் ஆகும்.

 

பொறுப்பிற்கு வந்தோம், அதிகாரம் பெற்றோம், புகழ் சேர்த்தோம், செல்வாக்கு அடைந்தோம் என்று ஐந்தாண்டுகளை கழிப்பீர்களேயானால் மாநபி {ஸல்} அவர்களின் பின்வரும் எச்சரிக்கையை பயந்து கொள்ளுங்கள்.

من لم يهتم بأمر المسلمين فليس منهم

 

ஹுதைஃபா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களில் கவலை கொள்ளாமல் ( கண்டும் காணாதது போல ) வாழ்கிறவர் முஸ்லிம் சமூகத்தையே சார்ந்தவர் அல்லர்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (தப்ரானீ)

 

عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: (أَلَا كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسؤولٌ عَنْ رَعِيَّتِهِ،

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                   ( நூல்: புகாரி )

 

வீடற்றவர்களுக்கு விடியல் தருவோம்!!

 

100 முஸ்லிம்களில் 35 பேர் குடி தண்ணீர் கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வசிக்கின்றனர் என்றும், 100 முஸ்லிம்களில் 41 பேர் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத வீடுகளிலும், 100 -க்கு 23 முஸ்லிம்கள்தான் வசிக்கத் தகுந்த வீடுகளில் வசிக்கின்றனர் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிஷனின் அறிக்கை கூறுகிறது.

 

இந்தியாவில் கிட்டத்தட்ட இருபது லட்சம் பேர் வெளிப்புறத்தில் தான் உறங்குகின்றார்கள். அப்படி வெளியில் தங்குகின்றவர்களில் 35% பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனநலப் பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

 

தொற்று நோய்கள் ஏற்பட்டால் மிக விரைவாக பாதிப்படைபவர்களும் வீடின்றி வெளிப்புறத்தில் வசிப்பவர்களே. ஸ்பானிஷ் காய்ச்சல் வந்த போது இந்தியாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் 66.1% பேர் வீடற்றவர்களும், சுகாதாரமற்ற வீடுகளில் வசிப்பவர்களுமே.

 

வக்ஃபு சொத்துக்கள் முறைப்படுத்தப்பட்டால் வீடின்றி தவிக்கும் சொந்த சமூகத்திற்கு அரசின் உதவி மூலம் இலவச வீடுகளை கட்டித்தர முடியும்.

 

மஸ்ஜிதுன் நபவீயை முகவரியாகவும், அண்ணல் நபி (ஸல்) அவர்களையும், நபியவர்களின் குடும்பத்தாரையும், தனது குடும்பமாகவும், ஸஹாபாக்களை உறவினர்களாகவும், திண்ணைத் தோழர்களை நண்பர்களாகவும், எண்ணி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு ஏழை ஸஹாபி தான் ரபீ அத்துல் அஸ்லமீ அவர்கள்.

 

நபி (ஸல்) அவர்களின் மீது அளவற்ற நேசமும், காதலும் கொண்டிருந்தவர்கள்.ஒரு நடு நிசி மாநபியின் உறக்கத்தை கலைத்தது கதவை தட்டும் ஓசை. கதவை திறந்து வெளியில் வந்த நபிகளார் உற்று பார்க்கிறார்கள், அங்கே, கடும் குளிரில் நடுங்கியபடி நின்று கொண்டிருந்தார் ரபீஆ (ரலி)

என்ன இந்த நேரத்தில்? ரபீஆவே! என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

 

ஒன்றுமில்லை, அல்லாஹ்வின் தூதரே! உங்களை காண வேண்டுமென எனதுள்ளம் ஆவல் கொண்டது.அது தான் உங்களைக்காண இங்கு வந்தேன்! என ரபீஆ கூறினார். மாநபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறே ரபீஆவை அனுப்பி வைத்தார்கள்.

 

மற்றொருமுறை..அல்லாஹ்வின் தூதரே! “சுவர்க்கத்திலும் உங்களோடு உங்கள் நெருக்கத்தைப் பெற்று இருக்க விரும்புகின்றேன் என தனது பேரன்பின் ஆவலை வெளிப்படுத்தியபோது அதிகமான ஸஜ்தக்களைக் கொண்டு என்னோடு சுவனத்தில் இருக்க உன்னை தயார் படுத்திக் கொள்! என நபி (ஸல்) அவர்கள் மறுமொழி பகிர்ந்தார்கள்.

 

ஈருலகிலும் நபிகளாரை அருகிலிருந்து கண்குளிர கண்டு கொண்டே இருக்க வேண்டுமென விரும்பியவர் தான் ரபீஅத்துல் அஸ்லமீ (ரலி) அவர்கள்.

 

ஒரு நாள் ரபீஆ வை அழைத்து என்ன ரபீஆ திருமணம் செய்து கொள்ளவில்லையா?எனக் கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்; இன்னொரு நாள் மாநபி (ஸல்) அவர்கள் அதே கேள்வியை கேட்கிறார்கள்.

 

சிரிப்பையும், ஏக்கப்பார்வையையும் பதிலாக தந்து விட்டு செல்கிறார்கள் ரபீஆ.

மூன்றாவது முறையாக மாநபி (ஸல்) அவர்கள் அதே கேள்வியை கேட்டபோது, இம்முறை ரபீ (ரலி) நபி (ஸல்) அவர்களின் அருகே வந்து மஸ்ஜிதுந் நவபீயின் திண்ணையில் படுத்துறங்கும் இந்த ஏழைக்கு யார் பெண் தருவார்? எனக் கேட்டார்.

 

உடனே, நபி (ஸல்) ஒரு வீட்டின் முகவரியை கொடுத்து அந்த வீட்டில் உள்ளவரிடம் நான் உனக்கு பெண் கேட்டதாகச் சொல்லவும் எனக் கூறி அனுப்பினார்கள்.

 

அந்த முகவரியில் உள்ளவரிடம் சென்று மாநபியின் விருப்பத்தை தெரியப்படுத்திய போது, முதலில் யோசித்த அக்குடும்பத்தினர் பெண் கேட்டு அனுப்பியதும், பெண் கொடுக்குமாறும் கூறுவதும் அல்லாஹ்வின் தூதரல்லவா? எனவே ரபீஆவிற்கு பெண் கொடுக்க முன் வந்தனர்.

 

நபி (ஸல்) அவர்களிடம் அந்த செய்தியை சொல்லிவிட்டு தனது அடுத்த கவலையை தெரிவித்தார் ரபிஆ (ரலி) ஆம்! பெண் தயார். ஆனால் குடும்பம் நடத்த வீடு வேண்டுமே, என்ன செய்வேன்! அல்லாஹ்வின் தூதரே! என்றார்.

 

நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டகுமுஸ்ல் ஒரு சிறு நிலம் இருந்தது. அதை ரபீஆவிடம் தந்தார்கள். பின்பு, ரபீஆவின் தூரத்து உறவினர்களையும், நபித்தோழர்களையும் ரபீஆவிற்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

 

வீடு, தேவையான சில பாத்திரங்கள், என சில சாதனங்களுடன் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ரபீஆ அவர்களுக்கு ஒரு நிரந்தரமான முகவரியை ஏற்படுத்தி கொடுத்தனர்.                     ( நூல்: இஸ்தீஆப்: பாகம்:1 பக்கம்: 270 )

 

 

மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நிறுவுவோம்

 

கல்வி, அரசியல், அதிகாரம், தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் தன்னிறைவை நோக்கிய நகர்வில் ஏனைய பின் தங்கிய மக்களை விட கீழ்நிலையில் இருப்பதாகவே மத்திய அரசுகள் அமைத்த பல்வேறு கமிஷன்களின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

 

இன்றைய கால கட்டத்தில் மிகவும் அத்தியாவசியத் தேவையாக கல்வியும், மருத்துவமும் மாறி இருப்பதை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம்.

 

அதை விட பணம் சம்பாதிக்கும் வழியாக மாறி சாமானிய, நடுத்தர மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் களமாக கல்வியும், மருத்துவமும் மாறிப்[போய் இருப்பதையும் நாம் கண்டு வருகின்றோம்.

 

எனவே, தரமான கல்வி நிறுவனங்களையும், தரமான மருத்துவமனைகளையும் முஸ்லிம் சமூகம் தமிழகத்திலும், தேசமெங்கிலும் தொண்டாற்றும் எண்ணத்தோடு நிறுவ வேண்டும்.

 

மருத்துவ சேவை என்பது எல்லா காலத்திலும், எல்லா காலத்து மக்களாலும் புனிதமாகவே கருதப்படுகிறது.

 

وقد عرف المسلمون أول مستوصف في الإسلام في عهد رسول الله – صلى الله عليه وسلم – عندما أمر بإقامته أثناء غزوة الخندق في (5 هـ - 627 م) على هيئة خيمة في مسجد المدينة لعلاج الجرحى والمصابين وتضميد جراحهم، فكانت بمثابة أول مستشفى حربي متنقل، ويؤكد ذلك ما روته أم المؤمنين السيدة عائشة – رضي الله عنها – حيث قالت: (أصيب سعد يوم الخندق في الأكحل فضرب النبي صلى الله عليه وسلم خيمة في المسجد ليعودوا من قريب، فلم يرعهم – وفي المسجد خيمة من بني غفار – إلا الدم يسيل إليهم فقالوا: يا أهل الخيمة ما هذا الذي يأتينا من قبلكم فإذا سعد يغذو جرحه دما فمات فيها) (يغذو: أي يسيل)

أمر النبي –صلى الله عليه وسلم– أن يتم نقل سعد بن معاذ –رضي الله عنه- إلى "خيمة رفيدة الأسلمية" -التي كانت تعتبر بمثابة أول ممرضة تقوم بعلاج المرضى- لمداواتهم حتى لا يفقدوا الكثير من الدماء، (كان رسول الله -صلى الله عليه وسلم- قد جعل سعد بن معاذ في خيمة لامرأة من أسلم، يقال لها رفيدة، في مسجده، كانت تداوي الجرحى، وتحتسب نفسها على خدمة من كانت به ضيعة من المسلمين، وكان رسول الله -صلى الله عليه وسلم- قد قال لقومه حين أصابه السهم بالخندق: اجعلوه في خيمة رفيدة حتى أعوده من قريب)، وفقا لما جاء في كتاب (السيرة النبوية) لابن هشام.

 

இஸ்லாமிய வரலாற்றில் முதல் மருத்துவமனை மாநபி ஸல் அவர்கள் வாழும் காலத்தில் நடமாடும் மருத்துவமனைகளாக செயல்பட்டது.

 

பின்னர் ஹிஜ்ரி 5- ஆம் ஆண்டு ஃகன்தக் யுத்தத்தின் போது மஸ்ஜிதுன் நபவீயின் ஓரப்பகுதியில் நிறுவப்பட்டது.

அந்த மருத்துவமனையின் முதல் மருத்துவராக அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ருஃபைதா அல் அஸ்லமீ (ரலி - அன்ஹா) என்கிற பெண்மணி மாநபி ஸல் அவர்களால் நியமனம் செய்யப்பட்டார்கள்.

 

முதல் சிகிச்சையாளராக ஸஅத் இப்னு முஆத் (ரலி - அன்ஹு) சிகிச்சை பெற்றார்கள்.

 

தங்களுடைய தந்தையின் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறையை கற்று தந்தையிடம் நர்ஸ் - செவிலியராக சேவை செய்து பின்னர் மருத்துவராக உயர்வு பெற்று பல்வேறு செவிலியர்களையும் மருத்துவர்களையும் உருவாக்கினார்.

 

ஆங்கிலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் ருஃபைதா (ரலி - அன்ஹா) அவர்களை "Rufaitha (rali) she is not doctor but she is a Institute" "அவர் மருத்துவர் இல்லை, பல மருத்துவர்களை உருவாக்கிய மாபெரும் நிறுவனத்திற்கு நிகரானவர்கள்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்கள்.

 

இன்று சர்வதேச அளவில் பல இஸ்லாமிய நாடுகளில் ருஃபைதா (ரலி - அன்ஹா) அவர்களின் பெயரால் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் பயிற்சி கல்லூரிகள், மகளிர் கலை அறிவியல் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளது.

 

இதற்கு ஒரு படி மேலாக செவிலியர் துறையில் மனித நேயத்துடன் சேவையாற்றுகிற செவிலியர்களுக்கும், மருத்துவத் துறையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றுகிற மருத்துவர்களுக்கும் ருஃபைதா (ரலி - அன்ஹா) அவர்களின் பெயரால் உயரிய விருதை ஆண்டு தோறும் வழங்கி கௌரவித்து வருகிறது பஹ்ரைன் அரசு.

 

இந்த விருது மருத்துவத் துறையில் மிகவும் உயர்ந்த விருதாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.

 

أما أول من بنى البيمارستان أو المستشفى الثابت، فهو الخليفة الأموي الوليد بن عبدالملك، "قال تقي الدين المقريزي: أول من بنى البيمارستان في الإسلام ودار المرضى، الوليد بن عبدالملك الخليفة الأموي في سنة 88هـ 706م وجعل في البيمارستان الأطباء وأجرى لهم الأرزاق وأمر بحبس المجدمين لئلا يخرجوا وأجرى عليهم وعلى العميان الأرزاق"، وفقا لما جاء في (تاريخ البيمارستانات في الإسلام) لأحمد عيسى.

அதன் பின்னர் உமைய்யா ஆட்சியாளர்களின் வரிசையில் வந்த வலீத் இப்னு அப்துல் மலிக் அவர்கள் ஆட்சியில் ஹிஜ்ரி 88 -ல் சிரியாவில் திமிஷ்க் பகுதியில் பெரிய மருத்துவமனை நிறுவப்பட்டது என வரலாற்று ஆசிரியர் தகிய்யுத்தீன் அல் முக்ரீஸீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

 

இந்த மருத்துவமனை பிரதானமாக தொழு நோயாளிகளையும், இன்னபிற நோயாளிகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டது.

 

உஸாமா ஹம்தான் அர் ரகப் ( ரஹ்) அவர்கள் தங்களது ரிஆயத் தவில் இஆக்கா ஃபில் இஸ்லாம் எனும் நூலில் "கலீஃபா வலீத் இப்னு அப்துல் மலிக் அவர்கள் நோயாளிகளுக்கு இலவச மருத்துவத்தை வழங்கியதோடு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் காலம் வரை அந்த நோயாளியின் குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொண்டு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்கள்" என்று குறிப்பிடுகிறார்கள்.

 

ஆனால், 12- ஆம் நூற்றாண்டில் தான் ஐரோப்பாவில் தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனை மற்றும் அனைத்து நோய்களுக்கான மருத்துவமனை நிறுவப்பட்டது.

 

அதன் பின்னர் அப்பாஸிய ஆட்சியாளர்கள் இமாம் ராஸீ (ரஹ்) அவர்களின் சீரிய ஆலோசனைப்படி சிரியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக டமாஸ்கஸ், குர்துபா, கெய்ருவான், பாக்தாத், காஹிரா பகுதிகளில் மிகவும் தூய்மையான தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவமனைகளை நிறுவினார்கள்.

 

இந்த காலகட்டத்தில் தான் கால்நடைகளுக்கான தனி மருத்துவமனைகளும் நிறுவப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

ஆனால், 20 கோடி முஸ்லிம்கள் வாழும் இந்தியாவில் அதிலும் குறிப்பாக ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் தமிழகத்தில் பெரிய அளவிலான (மல்ட்டி ஸ்பெஷாலிட்டி) மருத்துவமனைகள் ஏதும் முஸ்லிம்கள் நிறுவவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமே.

 

நூறாண்டுகளைக் கடந்து நிற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இருபத்தைந்து ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், பதிமூன்று ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பண்ணிரெண்டாம் ஆண்டில் அடியெடுத்து நிற்கும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா போன்ற இஸ்லாமிய அமைப்புகள் எந்த ஒன்றின் கீழும் பெரிய மருத்துவமனைகள் ஏதும் இல்லை.

பாரம்பரியத்தை சுமந்து நிற்கும் பல பள்ளிவாசல்கள், பல ஜமாஅத் நிர்வாகங்கள், தொண்டு அமைப்புக்கள் என எதற்கு கீழும் மருத்துவமனைகள் இல்லை.

 

ஆங்காங்கே சில ஊர்களில் (வேலூர், காயல் பட்டினம், ஏர்வாடி, மேலப்பாளையம், கடையநல்லூர், நாகர்கோவில் கோட்டார்) சிறிய அளவிலான வசதிகள் கொண்ட மருத்துவமனை மற்றும் சிறு கிளினிக்குகள் முஸ்லிம்களால் நிறுவப்பட்டுள்ளன.

 

இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து மருத்துவமனைகள் நிறுவவும், தரமான மனித நேயமுள்ள மருத்துவர்களை உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ள முன் வர வேண்டும்.

 

இந்த உலகத்தில் நாம் நினைக்கும் அனைத்தும் நடைபெற வேண்டும் என்று எல்லோரும் நினைப்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் நாம் நினைத்த இலக்குகளை நோக்கி, தினமும் பயிற்சியும் முயற்சியும் செய்தால் தான் நினைப்பது எல்லாம் நிறைவேறும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

 

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்என்பார் மகாகவி பாரதியார்.

 

ஆகவே, வக்ஃபு வாரியத்தின் புதிய நிர்வாகப் பெருமக்கள் எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் உயர்வில் நிச்சயம் பங்காற்றுவார்கள் என்று நம்புவோம்.

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய எல்லா வகையான எண்ணங்களையும் நிறைவேற்றியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!