Thursday 22 October 2020

 

வாழ்வியல் முன்மாதிரி வள்ளல் நபி {ஸல்} அவர்கள்!!

 

 


 

உலகில் எத்தனையோ சீர்திருத்தவாதிகள், ஆன்மீகத்தலைவர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள்.

ஏதோ ஒரு வகையில் அவர்கள் வாழ்ந்த காலகட்டங்களில் மக்கள் சந்தித்த பிரச்சினைகள் பலவற்றிற்கு போராடி வெற்றியையும், தீர்வையும் தந்து சென்றிருக்கின்றார்கள்.

சாதாரணமாக வாழ்ந்திடாமல் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள். அதன் காரணமாக காலம் கடந்தும் புகழுக்குரியவர்களாக இன்றளவும் மக்களின் மனங்களில் இடம் பெற்றுள்ளனர். 

ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன், அலெக்ஸாண்டர், ஆபிரஹாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, மாவீரன் நெப்போலியன், அண்ணல் காந்தி, ஈவேரா, அறிஞர் அண்ணா, பாரதி என இப்படி பல்வேறு மனிதர்களை அடையாளப்படுத்தி பட்டியலிடலாம்.

இவர்கள் அனைவரும் மனித சமூகத்தின் ஏதோவொரு பிரச்சனைகளுக்கு தீர்வைத் தந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்த தீர்வுகள் காலங்கள் பல தாண்டி இன்றளவும் பயனளிக்கின்றதா? என்றால் அது விடை காண முடியாத கேள்வியே!

 

அமெரிக்காவின் ஆபிரஹாம் லிங்கன், மார்ட்டீன் லூதர் கிங், தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலா நிற, இன வெறிக்கு எதிரான தங்களின் வலுவான போராட்டங்களால் 20- ஆம் நூற்றாண்டில் உலக மக்களின் கவனத்தையும், சர்வதேச அரசியலையும் ஈர்த்தவர்கள்.

 

ஒரு நூற்றாண்டைக் கூட கடந்திடவில்லை. இன்றும் கூட அமெரிக்காவில் நிற வெறி சிந்தனை முற்றிலுமாக அழிந்திடவில்லை.

 

அமெரிக்காவின் மினசொட்டா மாகாணம் மினியாபொலிஸ் நகரில் கடந்த மேமாதம் 25/2020 –ஆம் தேதி கறுப்பினத்தைச் சேர்ந்த 46 வயது ஜார்ஜ் ஃஃபிளாய்ட் என்பவரை வெள்ளையர் 44 வயதான டெர்ரக் சவுலின் என்ற போலீஸ்காரர் சந்தேகத்தின் பேரில் பிடித்து கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தி மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி அமெரிக்காவின் நிறவெறியை உலகிற்கு தோலுரித்துக் காட்டியது.

 

அஹிம்சை தான் மனித மனங்களை வெல்லும் ஆயுதம் என பரப்புரை செய்து இந்திய தேசத்தின் சுதந்திர வேட்கையை உலகறியச் செய்து உலகின் கவனத்தை ஈர்த்தவர் அண்ணல் காந்தி.

 

அவர்களைப் பிரிந்து நூறாண்டுகளைக் கூட கடக்காத இந்த தேசத்தில் தான் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், தீண்டாமையின் பெயரால் நாள் தோறும் எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்.

 

எனவே, இது போன்ற மனிதர்கள் உருவாக்கிய சித்தாந்தங்கள், கொள்கைகள் என்பது மனித சமூகம் நினைவு கூரத்தக்கது என்கிற வகையிலானது என்று சொல்வது தான் சாலச் சிறந்ததாகும்.

 

ஆனால், இந்த உலகில் மானுட சமூகம் வாழும் காலமெல்லாம் எடுத்து நடந்திட, பின்பற்றி வாழ்ந்திட ஏதுவான முறையில் வாழ்ந்த ஒரே மனிதர், மனிதப் புனிதர் மாமனிதர் முஹம்மது {ஸல்} அவர்கள் மாத்திரம் தான் என்றால் அது மிகையல்ல.

 

ஏனெனில், மானுட சமூகத்தின் வாழ்வியல் கோட்பாடுகளுக்கும், நெறிகளுக்கும் மகத்தான முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர்கள் மாநபி {ஸல்} அவர்கள்.

 

இந்த நற்சான்றை வழங்கி கௌரவிப்பவன் வல்லோனாம் அல்லாஹ்!..

 

 

 

لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا

 

உங்களில் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவருக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது”.       ( அல்குர்ஆன்: 33: 21 )

 

வாழ்வியல் என்பது ஒரு அற்புதமான கலையாகும். தனிமனித பண்புகளிலும், பொதுவாழ்க்கைக்கான பண்புகளிலும் நிறைவு பெற்றவர்களே இந்த உலகில் முன் மாதிரி மனிதர்களாக பரிணமிக்க முடியும் என்பதை பெருமானார் {ஸல்} அவர்கள் வாழ்வியல் இலக்கணமாக வகுத்து தந்திருக்கின்றார்கள்.

 

மானுட சமூகம் அன்றாடம் சந்திக்கிற மிக முக்கியமான பத்து அம்சங்களில் மாநபி {ஸல்} அவர்களின் முன்மாதிரியை இந்த தலைப்பின் கீழ் பார்க்க இருக்கின்றோம்.

 

1.பிறரின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன்  (Empathy)

2.பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் (Problem solving)

3.உறவு முறையை வலுப்படுத்தும் திறன் (Inter personal Relationship)

4.உருவாக்கும் திறன் (Creative Thinking)

5.கூர்சிந்தனைத் திறன் (Critical Thinking)

6.மன அழுத்தத்தை எதிர் கொள்ளும் திறன் (Coping with Stress)

7.உணர்வுகளை கையாளும் திறன் (Managing Feelings)

8.தன்னை அறியும் திறன் (Awarness)

9.முடிவெடுக்கும் திறன் (Decision making)

10.தகவல் தொடர்பு திறன் (Effective Communication Skilks)

 

1.   பிறரின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன்  (Empathy)…

 

தனிமனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூகம் சார்ந்த பொதுவாழ்விலும் இன்று நடைபெறுகிற பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமே இந்த திறன் இல்லாமல் போனது தான்.

 

தன்னை அறிவது எவ்வளவு முக்கியமோ அதே போன்று நம்முடன் இருப்பவரை அறிவதும், அவரின் சூழ்நிலையை அறிவதும், அவரின் உள்ளுணர்வை புரிந்து கொள்வதும் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

 

يقول ابن عباس رضي الله عنهما : إن زوج بريرة كان عبدا يقال له مغيث ، كأني أنظر إليه يطوف خلفها يبكي ودموعه تسيل على لحيته فقال النبي صلى الله عليه وسلم لعباس : يا عباس ، ألا تعجب من حب مغيث بريرة ومن بغض بريرة مغيثا ؟.

فلما رأى مغيث إصرار بريرة على صده ، وأنها عازمة على تركه ، استشفع بالنبي صلى الله عليه وسلم ، فشفع له عندها ، فقال النبي صلى الله عليه وسلم : لو راجعته ، فإنه زوجك وأبو ولدك . قالت : يا رسول الله ، تأمرني ؟ قال : إنما أنا أشفع . قالت : لا حاجة لي فيه

رواه البخاري

 

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பரீரா (ரலி) கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் (ரலி) என்று பெயர் சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பது போன்றுள்ளது.

 

அப்போது நபி {ஸல்} அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள்.

 

(முஃகீஸீடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபி (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா? என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா (அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார். ( நூல்: புகாரீ (5283) )

 

பரீரா (ரலி) அவர்கள் ஆரம்பத்தில் அடிமையாக இருந்தார்கள். அப்போது அவர்கள் முஃகீஸ் என்ற நபித்தோழரை திருமணம் செய்திருந்தார்கள். இவர்களும் அடிமையாகவே இருந்தார்கள். இந்நிலையில் பரீரா (ரலி) அவர்களை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். இதனால் பரீரா (ரலி) அவர்கள் சுதந்திரமானவர்களானார்கள்.

 

இஸ்லாத்தின் சட்டப்படி ஒருவர் அடிமையிலிருந்து விடுதலையானால் அவர் விரும்பினால் முந்தைய கணவருடன் வாழலாம், விரும்பினால் அவரை விட்டுவிடவும் செய்யலாம். இதன் அடிப்படையில் பரீரா (ரலி) அவர்கள் முஃகீஸ் (ரலி) அவர்களுடன் வாழ விரும்பவில்லை.

 

ஆனால் முஃகீஸ் (ரலி) அவர்களோ பரீரா (ரலி) அவர்கள் மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்தார்கள். அவர்களுடன் வாழ விரும்பினார்கள். ஆனால் பரீரா (ரலி) அவர்கள் தொடர்ந்து மறுத்துவந்தார்கள். எனினும் பரீரா (ரலி) அவர்கள் பின்னால் அழுது கொண்டே சென்று தன்னுடன் வாழுமாறு கோரினார்கள். ஆனாலும் பரீரா (ரலி) அவர்கள் ஏற்கவில்லை.

 

முஃகீஸ் (ரலி) அவர்கள், பரீரா (ரலி) அவர்கள் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு இரக்கமுற்ற நபி (ஸல்) அவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் என்ன? என்று பரீரா (ரலி) அவர்களிடம் கூறினார்கள். இதைக் கேட்ட பரீரா (ரலி) அவர்கள், இது அல்லாஹ்வின் கட்டளையா? அல்லது உங்கள் சொந்த விருப்பமா? என்று கேட்கிறார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது என் சொந்த விருப்பம்தான், நான் பரிந்துரைதான் செய்கிறேன்” என்றார்கள்.

 

இருவரின் உள்ளத்து உணர்வுகளையும் புரிந்து கொண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் இருவரையும் இணைத்து விட முடியாதா? என பரிதவிக்கின்றார்கள். அதற்காக முயற்சியும் எடுத்தார்கள். இறுதியில் பரீரா (ரலி) அவர்களின் உள்ளுணர்வில் இருக்கும் காரணம் வலுவாக இருப்பதால் அவரின் முடிவை அங்கீகரித்தார்கள்.

 

بينا أنا أصلي مع رسول الله

إذ عطس رجل من القوم فقلت: يرحمك الله فرماني القوم بأبصارهم فقلت: واثكل أمياه ما شأنكم؟ تنظرون إلي فجعلوا يضربون بأيديهم على أفخاذهم فلما رأيتهم يصمتونني لكني سكت, فلما صلى رسول الله

فبأبي هو وأمي ما رأيت معلمًا قبله ولا بعده أحسن تعليمًا منه فوالله ما كهرني ولا ضربني ولا شتمني قال: "إن هذه الصلاة لا يصلح فيها شيء من كلام الناس إنما هو التسبيح والتكبير وقراءة القرآن"

 

முஆவியா இப்னு ஹகம் சுலமீ (ரலி) அறிவிக்கின்றார்கள்: “நான் நபி {ஸல்} அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். மக்களில் ஒருவர் தொழுகையில் தும்மிய போது நான் யர்ஹமுக்கல்லாஹ் என்று கூறினேன். மக்கள் என்னை முறைத்துப் பார்த்தார்கள். “என் தாய்க்கு வந்த கேடே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் என்னை இவ்வாறு பார்க்கின்றீர்கள்? என்று கேட்டேன்.

 

அப்பொழுது, மக்கள் தங்களின் கைகளால் தங்கள் தொடைகளில் தட்ட ஆரம்பித்தார்கள். அவர்கள் எனக்கு சமிக்ஞை செய்வது கண்டு நான் வாய்மூடி விட்டேன். நபி {ஸல்} அவர்கள் தொழுகையை முடித்து விட்ட போது, “என் தாயும், தந்தையும் அவர்களுக்கே அர்ப்பணம் ஆகட்டும்! இதற்கும் முன்போ பின்போ அவர்களை விட மிக அழகாகக் கற்றுத் தரும் நபர் ஒருவரை நான் ஒரு போதும் கண்டதில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் என்னை விரட்டவும் இல்லை, அடிக்கவும் இல்லை, திட்டவும் இல்லை.

 

“நிச்சயமாக இது தொழுகையாகும். இதில் மனிதர்களின் பேச்சு எதுவும் கூடாது. இதில் தஸ்பீஹ், தக்பீர், குர்ஆன் ஓதுதல் மட்டுமே உண்டு” என்று எனக்குக் கூறினார்கள்.                ( நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன், பாடம்: 91, ஹதீஸ்: 701 )

 

தொழுகையில் சட்ட திட்டங்கள் படிப்படியாக மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற துவக்க நாட்களில் நடைபெறுகிற நிகழ்வு இது.

 

முஆவியா (ரலி) அந்த மாற்றங்களை அறியாத நிலையில் செய்த செயல் இது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

 

தொழுது முடித்ததும் என்ன ஆகுமோ? ஏது ஆகுமோ? என்று பதை பதைத்துக் கொண்டிருந்த ஒருவரின் உள்ளுணர்வை புரிந்து கொண்ட மாநபி {ஸல்} அவர்கள் நடந்து கொண்ட விதத்தைக் கண்டு வியப்படைந்த முஆவியா (ரலி) அவர்கள் கூறிய அந்த வார்த்தைகளே போதுமானதாகும்.

 

இன்ஷா அல்லாஹ்... அடுத்த ஜும்ஆவில் தொடரும்...