Thursday 10 December 2020

 

வேளாண்மையும்விவசாயிகளும்

ஓர் இஸ்லாமியப்பார்வை!!!


 


 

கடந்த நவம்பர் 26 –ம் தேதி முதல் டெல்லியின் எல்லைப்பகுதியில் குவிந்த விவசாயிகள் தொடர்ந்து 11/12/2020 வெள்ளிக்கிழமை இன்றோடு 16 –வது நாளாக இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை ரத்து செய்யக் கோரி போராடி வருகின்றனர்.

 

4 கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், 5 –ம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த செவ்வாயன்று 07/12/2020 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் நடைபெற்றது. அந்த பேச்சு வார்த்தையும் தோல்வியடையவே 6 –ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டிருக்கின்றது.

 

தொடர்ந்து வீரியமாக போராடிவரும் விவசாயிகள்அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து பின்வாங்கவோ, சமரசம் செய்து கொள்ளவோ மாட்டோம்” என்று திட்டவட்டமாக கூறுகின்றனர்.

 

போராட்டத்தின் அடுத்த நகர்வாக

 

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு முன்மொழிந்த வரைவு யோசனையை நிராகரித்துள்ள விவசாயிகள், வரும் 12ஆம் தேதி டெல்லி - ஜெய்பூர் நெடுஞ்சாலையை முடக்குவதாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்பாக வரும் 14ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

 

இது தொடர்பாக விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் டெல்லி சிங்கு பகுதியில் செய்தியாளர்களை புதன்கிழமை மாலையில் சந்தித்தனர். அப்போது ராஷ்ட்ரிய கிசான் மஸ்தூர் மகாசங்கத்தின் தலைவர் ஷிவகுமார் காக்கா, "டெல்லி எல்லையில் உள்ள விவசாயிகள், தலைநகருக்குள் நுழைந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விரைவில் முடிவெடுப்போம்" என்று கூறினார்.

 

அத்துடன், அதானி, அம்பானி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனப் பொருள்களைப் புறக்கணிக்கவுள்ளதாகவும், குறிப்பாக அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சிம் கார்டுகளைப் புறக்கணிக்க உள்ளதாகவும் விவசாயிகள் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

 

விவசாயிகளுக்கு ஆதரவாக

 

சர்வதேச அளவில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவின் பிரதமர் குரல் கொடுத்துள்ளார்.

 

மேலும், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூஸிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளின் இந்திய தூதரகம் முன்பாக இந்திய மக்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தினர்.

 

இந்திய அளவில் கடந்த 08/12/2020 அன்று காலை 11:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை அனைத்து கட்சிகள், கூட்டமைப்புகள் சார்பில் பாரத் பந்த் நடைபெற்றது.

 

தமிழகத்திலும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

எதிர்கட்சித்தலைவர்களின் கோரிக்கை மனு..

 

"விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் தொடர்பாக குடியரசு தலைவரிடம் 20 எதிர்கட்சிகள் சார்பில் மனு கொடுத்துள்ளதாகவும், வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு பாதிப்பாக இருப்பதால் அதை திரும்பப் பெற மத்திய அரசை கேட்டுக் கொள்ள வேண்டும் என குடியரசு தலைவரிடம் கேட்டுக் கொண்டோம்"

 

இந்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் நடவடிக்கையில் பின்வாங்குவதற்கோ, சமரசத்துக்கோ இடமில்லை என்று டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிறகு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

 

மௌனம் சாதிக்கும் ஊடகங்கள்

 

டெல்லியில் தற்போது நடைபெற்றுவரும் வீரஞ்செறிந்த விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்கள், பொய்களைச் சொல்வதையும், இருட்டடிப்பு செய்வதையும் மேற்கொண்டு வருகின்றன.

 

செய்தி நாளிதழ்களும் தனது பங்குக்கு விவசாயிகளின் போராட்டத்தைக் குறித்த தவறான பார்வை ஏற்படும்படியான செய்திகளையும் அரசியல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றன.

 

கடந்த வாரத்தில் விவசாயிகள் மீது டெல்லி போலீசு தாக்குதல் தொடுத்ததையும், விவசாயிகள் அதைக்கண்டு அஞ்சாமல் எதிர்கொண்டு நிற்பதையும் ஊடகங்கள் மறைத்தாலும், சமூக வலைத்தளங்களில் அதுகுறித்து பல்வேறு படங்களும், காணொலிகளும் வெளியிடப்பட்டன.

 

அந்த மூன்று மசோதாக்கள்...

 

விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020,விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகியன கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேறின.

 

இந்திய வேளாண் அமைப்புகள் மற்றும் எதிர்க் கட்சிகளின் வேண்டுகோளை மீறி, நரேந்திர மோதி அரசின் வேளாண் மசோதாக்களை சட்டமாக்க ஞாயிறு (செப்டம்பர் 27) மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

 

சட்டங்கள் என்னென்ன, அவை என்ன சொல்கின்றன?

 

மொத்தம் மூன்று சட்டங்கள். 1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, 2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, 3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. இவை ஆங்கிலத்தில் முறையே Essential Commodities (Amendment) Act 2020, Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020, The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020 என அழைக்கப்படுகின்றன.

 

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

 

இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை பின்வரும் சூழலில்தான் விதிக்க முடியும்: அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின் விலை கடந்த 12 மாதங்களின் சராசரி விலையைவிட 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும். தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி விலையைவிட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.

 

விளைபொருட்களை உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் விற்பனை செய்யவும் விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசு. இதனால், இந்தத் துறையின் பொருளாதாரம் மேம்பட்டு, நேரடி அந்நிய முதலீடு விவசாயத் துறையில் கிடைக்குமென மத்திய அரசு நம்புகிறது. உணவு விநியோகச் சங்கிலியில் தேவைப்படும் குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டத் தேவைப்படும் முதலீட்டை இந்தச் சட்டம் எளிதாக்கும் என்பது இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களின் வாதம்.

 

இரண்டாவதாக உள்ள விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டத்தைப் பொருத்தவரை விவசாய விளை பொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரமும் வர்த்தகமும் செய்ய வழிவகுக்கிறது. இதன் மூலம், மாநில அரசுகளால் இயக்கப்படும் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வெளியிலும் பொருட்களை விற்க வழிசெய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்தி பொருட்களுக்குக் கூடுதல் விலை கிடைக்குமென அரசு கூறுகிறது.

 

ஆனால், விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாடு இந்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் போகிறது. வேறு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் சொல்லலாம் என்பதால், ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்ற அச்சமும் இருக்கிறது.

 

மூன்றாவது சட்டம், விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், விவசாய கான்ட்ராக்ட்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.

 

மத்திய அரசைப் பொருத்தவரை இந்த மூன்று சட்டங்கள் மூலமும் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு நல்ல விலையைப் பெற முடியும், கூடுதலான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறது. மேலும், நுகர்வோரும் வர்த்தகர்களும் பயனடைவார்கள். ஆகவே மூன்று தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய சட்டங்கள் இவை என்கிறது மத்திய அரசு.

 

விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?

 

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது: “இந்திய விவசாயத்தை முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, இந்திய விவசாயிகளையும் இந்திய விவசாயத்தையும் குழிதோண்டிப் புதைப்பதற்குத்தான் இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் என்பது பாடுபட்டு விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருள்களை, சாதாரண மக்களால் வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.

 

இதுவரை, உணவுப்பொருள்களைப் பதுக்கிவைக்க முடியாத நிலை இருந்தது. இந்தப் புதிய சட்டம், எவ்வளவு உணவுப்பொருள்களை வேண்டுமானாலும் பதுக்கிவைக்கலாம், எத்தனை காலத்துக்கு வேண்டுமானாலும் பதுக்கிவைக்கலாம் என்பதை அனுமதிக்கிறது. அதைப் பயன்படுத்தி, செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, எவ்வளவு வேண்டுமானாலும் விலையை உயர்த்தி விற்பார்கள். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஏழை எளிய மக்களால் வாங்க முடியாத அளவுக்கு உணவுப்பொருள்களின் விலை உயர்ந்துவிடும்.

 

இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால், `ஒப்பந்தச் சாகுபடிஎன்ற பெயரில் இந்திய விவசாய நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது. வேளாண் விளைபொருள்களின் விலையை கார்ப்பரேட் நிறுவனத்தினர் முன்கூட்டியே தீர்மானிப்பார்கள். `இது நல்லதுதானே...என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விலையை நிர்ணயிக்கும் நிறுவனங்கள், விளைபொருள்களின் தரம் குறித்து ஏகப்பட்ட நிபந்தனைகளை விதிப்பார்கள். `அந்த நிபந்தனைகளின்படி விளைபொருள்கள் இல்லைஎன்று சொல்லி, தீர்மானிக்கப்பட்ட விலையைத் தர மறுக்கும் நிலைதான் உருவாகும்.

 

மேலும், இந்திய மக்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களை உற்பத்தி செய்வது என்பதற்கு பதிலாக, ஏற்றுமதிக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வது என்ற நிலை ஏற்படும். உலகச் சந்தையில் எந்தப் பொருளுக்கு அதிகமான டிமாண்ட் இருக்கிறதோ, அந்தப் பொருளை உற்பத்தி செய்யுங்கள் என்ற அழுத்தத்தை இந்திய விவசாயிகளுக்குக் கொடுப்பார்கள். இப்படியாக, இந்திய விவசாயம் முழுவதும் கார்ப்பரேட் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்லப்படும். நிலம் மட்டும் விவசாயிகளின் பெயர்களில் இருக்கும். மற்ற அனைத்தையும் மற்றவர்கள் தீர்மானிப்பார்கள். இதன் மூலம், இந்திய விவசாயிகளை மத்திய அரசு கைகழுவிவிடுகிறது.

 

`ஒரே நாடு ஒரே சந்தைஎன்கிற முறையில் இந்தியாவில் எந்த மூலையில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அந்தப் பொருளுக்கு எந்த இடத்தில் அதிகமான விலை கிடைக்கிறதோ, அங்கு போய் அந்தப் பொருளை விற்கலாம் என்று மத்திய ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்திய விவசாயிகளில் 86 சதவிகிதம் பேர் சிறு, குறு விவசாயிகள்.

 

இவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பதற்கு, அவர்கள் வசிக்கும் தாலுகாவைத் தாண்டி வர மாட்டார்கள். எனவே, இதனால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. அது வியாபாரிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும்தான் சாதகமாக இருக்கும். `ஒரே நாடு ஒரே சந்தைஎன்பது ஒரு வெற்று முழக்கம்.

 

விவசாயிகள் அன்றும்.. இன்றும்.. இனியும்...

 

ஆசியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்தியா 32 லட்சத்து 82 ஆயிரம் ச.கி.மீ பரப்பளவில் காணப்படுகிறது. இங்குச் சுமார் 126 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

 

உலக வங்கியின் அறிக்கையின்படி, `2013-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள 60.5 சதவிகித நிலம் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 50 சதவிகித மக்கள் விவசாய நடவடிக்கை தொடர்பான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்திய மக்களில் 70 சதவிகித கிராமப்புற மக்கள் விவசாயத்தையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 முதல் 18 சதவிகிதம் வரை விவசாயத்தின் மூலமாகப் பூர்த்தி செய்யப்படுகிறது. 2013-14 -ம் ஆண்டில் 3.7 சதவிகிதம் வளர்ச்சி கண்ட விவசாயம் 2016-17-ம் ஆண்டு முதல் சற்று சரியத் தொடங்கியுள்ளது.

 

இந்தியா உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களில் 85 சதவிகிதம் பொருள்கள் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. மீதமுள்ள பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியா அரிசி, பருப்பு, கோதுமை, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது.

 

மேலும், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் பணக்கார நாடாகத் திகழ்கிறது. இந்தியா தன் மொத்த உற்பத்தி வருமானத்தில் 24 லட்சம் கோடி ரூபாயை விவசாயத்தின் மூலம் ஈட்டுகிறது. 

 

( இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பான விஷயங்கள் பிபிசி நியூஸ்.தமிழ், விகடன்.காம், விகாஸ்பீடியா போன்ற ப்ளாக்கரில் இருந்து பகிரப்பட்டுள்ளது)

 

விவசாயிகளின் சீற்றமும், போராட்டமும் அறமானதா? நியாயமானதா? என்று பார்த்தோமேயானால் உண்மையில் அது அறச்சீற்றமே! நியாயமான போராட்டமே! என்பதை அறிய முடியும்.

 

இது நாள் வரை பெற்று வந்த பல்வேறு உரிமைகளை விவசாயிகள் இந்த மூன்று மசோதாக்களின் மூலம் இழக்கின்றார்கள் என்பதை மேலே நாம் பார்த்தோம்.

 

இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?

 

1.   ஒரு பொருளுக்கு சொந்தக்காரரே அந்த பொருளுக்கான விலையை நிர்ணயிக்க உரிமை பெற்றவர்.

 

قال: ثم أمر ببناء المسجد فأرسل إلى ملأ بني النجار فجاءوا فقال

 (يا بني النجار ثامنوني بحائطكم هذا)

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி {ஸல்} அவர்கள் மதீனாவிற்கு வந்த போது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளையிட்டார்கள். ( பள்ளிவாசலுக்கான இடத்தை தேர்வு செய்த போது, அது பனூ நஜ்ஜார் கிளையாருக்கு சொந்தமான இடமாக இருந்தது. எனவே, ) பனூ நஜ்ஜார் குலத்தினரே! உங்கள் தோட்டத்தை எனக்கு விலை பேசி விற்று விடுங்கள்” என்று கூறினார்கள். ( நூல்: புகாரி, பாடம்: மதீனாவின் சிறப்புகள், பாபு ஸாஹிபுஸ் ஸில்அத்தி அஹக்கு பிஸ்ஸூம் )

 

2.   இடைத்தரகர்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு..



أنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ قالَ: لا تَلَقَّوُا الرُّكْبَانَ

ولَا يَبِعْ حَاضِرٌ لِبَادٍ،

 

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “சந்தைக்கு வரும் வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள். கிராமத்திலிருந்து சரக்கு கொண்டு வருபவர்களுக்காக உள்ளூர் வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                             ( நூல்: புகாரி )

 

حدثنا موسى بن إسماعيل حدثنا جويرية عن نافع عن عبد الله رضي الله عنه قال كنا نتلقى الركبان فنشتري منهم الطعام فنهانا النبي صلى الله عليه وسلم أن نبيعه حتى يبلغ به سوق الطعام قال أبو عبد الله هذا في أعلى السوق يبينه حديث عبيد الله

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாங்கள் வெளியூரிலிருந்து சக்கு கொண்டு வரும் வணிகர்களை எதிர்கொண்டு அவர்களிடம் உணவுப் பொருட்களை வாங்கி வந்தோம். அவ்வாறு நாங்கள் வாங்கி வரும் பொருள் சந்தைக்குக் கொண்டு செல்லும் முன்பாகவே அதை நாங்கள் விற்கக்கூடாது” என நபி {ஸல்} அவர்கள் தடை செய்தார்கள்.                                 ( நூல்: புகாரி )

 

விவசாயிகளோடு இந்த பாதிப்புகள் நின்று விடாமல் சாமானிய மக்களும், நடுத்தர மக்களும் பெரும் பாதிப்பை அடைவார்கள்.

 

பதுக்கல் வியாபாரம் கொடி கட்டி பறக்கும், விலைவாசி ஏற்றம் பெரும், உணவுத்தட்டுப்பாடு ஏற்படும், உணவு தேவை அதிகமாகி உற்பத்தி இல்லாமல் போகும் இப்படி எல்லா தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

 

மலிவு விலை அரிசி கூட நாளை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டாலும் ஆச்சர்யத்திற்கில்லை.

 

குறிப்பாக கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கி வேளாண்மையும், விவசாயிகளும் இந்த தேசத்தில் இல்லாமலே போய் விடுவார்கள்.

 

எனவே, நாம் விவசாயிகளின் போராட்டத்தில் உள்ள அறத்தையும், நியாயத்தையும் விளங்கி அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதும் அவர்களோடு இணைந்து போராடுவதும் நம் மீது தார்மீகக் கடமையாகும்.

 

 

 

குடிமக்களின் வலியை ஆள்பவர்கள் உணர வேண்டும்..

 

உரிமைகளை இழந்தவர்களின் வலிகளை வார்த்தைகளால் வடித்திட இயலாது. அதிலும் குறிப்பாக இதுவரை தனக்கானதாக இருந்த, தனக்குரியதாய் கருதி வந்த ஒன்றை இழக்கும் போது ஏற்படுகிற வலி மிகவும் கடுமையானது.

 

அந்த அடிப்படையில் இந்த சட்ட மசோதாக்கள் விவசாயிகளின் உரிமைகளை இழக்கச் செய்கிறது என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

மக்களுக்கான தலைவர் என்பவர் அப்படித்தான் உணர்ந்து செயல்படுவார். இதோ உரிமையை இழந்து அரசின் முன்னால், மக்களுக்கான ஒரு தலைவருக்கு முன்னால் நின்ற ஒரு பெண்மனியின் விவகாரத்தை இஸ்லாம் எப்படி நிவர்த்தி செய்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

 

عبد الله بن محمد بن عقيل عن جابر بن عبد الله قال جاءت امرأة سعد ابن الربيع بابنتيها من سعد فقالت يا رسول الله هاتان بنتا سعد قتل أبوهما معك يوم أحد شهيدا وإن عمهما أخذ مالهما فلم يدع لهما مالا ولا تنكحان إلا ولهما مال قال ( يقضي الله في ذلك ) فأنزلت آية المواريث فبعث إلى عمهما فقال ( أعط بنتي سعد الثلثين وأعط أمهما الثمن وما بقي فهو لك )

 

ஒருநாள் ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களின் முன்வந்து நின்று அல்லாஹ்வின் தூதரே என் கணவர் இறந்துவிட்டார்.

 

என் கணவரின் சகோதரர் எங்களுக்கு என் கணவரின் சொத்தில் எந்தப் பங்கும் இல்லை எனக்கூறி விரட்டிவிட்டார். இதோ பாருங்கள் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர் என பரிதாபத்துடன் கூறி நின்றாள்.

    

ஆம்! ஸஅதுப்னு ரபீஃ (ரலி) என்கிற நபித்தோழரின் மனைவி தான் அவர்கள். உஹத் களத்திற்குச் சென்ற ஸஅத் அங்கேயே வீர மரணமடைந்து போவார் என்று அப்பெண்மணி நினைத்துக்கூட பார்க்கவில்லை.

    

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹத் யுத்தம் முடிந்த பிறகுத ஸஅத் இப்னு ரபீஃ (ரலி) அவர்களின் தியாகம் குறித்து ”அல்லாஹ் ஸஅதுக்கு அருள்புரிவானாக! அவர் வாழும் போதும் இறக்கும் போதும் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நலம் நாடுபவராகவே அமையப் பெற்றிருந்தார்” என சிறப்பித்து துஆ செய்தார்கள்.

    

அந்த சிறப்பிற்கு சொந்தமான ஸஅதின் மனைவிதான் தன் இரண்டு பெண்மக்களோடு நபிகளார் முன் வந்து நின்று தனது அவலத்தை கூறி நின்றார்.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே! இதோ! நான் அழைத்து வந்திருக்கிற இந்த இரண்டு பெண்மக்களும், உங்களுடன் உஹத் யுத்தகளத்தில் பங்கு பெற்று வீரமரணம் அடைந்த ஸஅத் அவர்களின் பெண் மக்களாவார்கள்.

 

இந்த பெண்மக்களின் பெரிய தந்தையானவர் (என் கணவரின் சகோதரர்) என் இரண்டு பெண்மக்களுக்கு உரிய செல்வத்தை எடுத்துக் கொண்டார். எதையும் வழங்க வில்லை.

 

எந்தச் செல்வமும் இல்லாமல் இவர்களை வளர்த்து நான் எப்படி திருமணம் செய்து வைக்க முடியும்?” என்று கேட்டார்கள்.

    

நபி (ஸல்) அவர்கள் ”அல்லாஹ் உன் விஷயத்தில் தீர்வை தரும் வரை பொறுமையாக இரு!” என்று கூறி ஸஅது (ரலி) அவர்களின் மனைவியை அனுப்பிவைத்தார்கள்.  பின்பு தான் அல்லாஹ்...

 

“உங்களுடைய பிள்ளைகள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு ஏவுகிறான். ஓ ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்கு சம்மானது (இறந்து போனவருக்கு) இரண்டுக்கும் மேற்பட்ட பெண்மக்கள் இருந்தால் இறந்தவர் விட்டச் சென்ற சொத்தில் மூன்றில் இரு பங்கு அர்களுகுரியதாகும்.

 

மேலும், ஒரு மகள் மட்டும் இருந்தால் (சொத்தில் ) பாதி அவளுக்கியதாகும் இறந்து போனவருக்கு குழந்தை இருப்பின் அவருடைய பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு அவருக்கு குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் மட்டுமே இருப்பின் தாய்க்கு மூன்றில் ஒரு பங்கு அளிக்கப்பட வேண்டும்.

 

அவருக்கு சகோதர, சகோதரிகளிருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பங்கு உண்டு இறந்து போனவர் செய்த மரண சாசனம் (வஸிய்யத்) நிறைவேற்றப்பட்ட பின்பும் (அவர் மீதுள்ள) கடன் அடைக்கப்பட்ட பின்பும் தான் (சொத்துக்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்).

 

 உங்களுடைய பெற்றோர்களிலும், உங்களுடைய பிள்ளைகளிலும் உங்களுக்கு நன்மை செய்வதில் யார் மிக சமீபமாக  இருப்பார் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் (இப் பங்குகளை) அல்லாஹ்வே நிர்ணயம் செய்துள்ளான் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுட்பமானவனாகவும் இருக்கின்றான்.   ( அல்குர்ஆன் ; 4 ;11 ) இவ்வசனத்தை இறக்கியருளினான்.

 

முதலில் உரிமைகளை இழந்தவர்களின் வேதனைகளை உணர்ந்து அவர்களின் கோரிக்கைகளுக்கு கனிவுடன் செவி சாய்க்க வேண்டும். பின்பு அது குறித்து பரிசீலித்து தம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதுவும் மக்களுக்கான ஒரு தலைவரின் அரசின் மகத்தான பண்பாகும். இதோ இதோ உரிமையை இழந்து அரசின் முன்னால், மக்களுக்கான ஒரு தலைவருக்கு முன்னால் நின்ற ஒரு இளைஞரின் விவகாரத்தை மாநபி {ஸல்} அவர்கள் எப்படி நிவர்த்தி செய்தார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

 

    وروى عقيل عن ابن شهاب أن يتيماً خاصم أبا لبابة في نخلة فقضى بها رسول الله صلى الله عليه وسلم لأبي لبابة فبكى الغلام. فقال رسول الله صلى الله عليه وسلم لأبي لبابة أعطه نخلتك فقال لا فقال: " أعطه إياها ولك بها عذق في الجنة " . فقال لا. فسمع بذلك أبو الدحداح فقال لأبي لبابة: أتبيع عذقك ذلك بحديقتي هذه قال نعم فجاء أبو الدحداحة رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله، النخلة التي سألت لليتيم إن أعطيته إياها ألي بها عذق في الجنة؟ قال: نعم

 

ஒரு அநாதை வாலிபருக்கும், நபித்தோழர் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கும் ஒரு பேரீத்தமரம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது.

 

இறுதியாக, நபி {ஸல்} அவர்களிடம் இந்த வழக்கு கொண்டு வரப்பட்டது. அண்ணலார் இருவரையும் அழைத்து மரம் சம்பந்தமாக விசாரித்தார்கள்.

 

ஆதாரங்களின் அடிப்படையில் அந்த மரம் அபூலுபாபா (ரலி) அவர்களுக்குச் சொந்தமானது என்பதை அறிந்து கொண்ட நபி {ஸல்} அவர்கள் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கு உரியதென தீர்ப்பளித்தார்கள்.

 

இதைக் கேட்ட அந்த வாலிபரின் முகம் முற்றிலும் மாறிப்போய் விட்டது. அழுதார், இது நாள் வரை தமது சொந்தமெனக் கருதி வந்த மரம் தமக்குரியதாக இல்லை என்றதும் நிலைகுலைந்து போனார்.

 

அதைக் கண்ணுற்ற அண்ணலார், அந்த அநாதை வாலிபரின் வாழ்வில் இழந்த அந்த சந்தோஷத்தை மீண்டும் கொடுக்க விரும்பினார்கள்.

 

அபூலுபாபா (ரலி) அவர்களை அருகே அழைத்த நபி {ஸல்} அவர்கள் அந்த மரத்தை ஆதரவற்ற அந்த வாலிபருக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுங்களேன்என்று தமது விருப்பத்தை விண்ணப்பித்தார்கள்.

 

ஆனால், அபூலுபாபா (ரலி) அவர்களோ தம்மால் அப்படி தர இயலாது என்று கூறி விட்டார்கள்.

 

நபி {ஸல்} அவர்கள் விடவில்லை. ”அபூலுபாபா அவர்களே! நீங்கள் அந்த மரத்தை அவருக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டீர்களென்றால், அதற்குப் பகரமாக சுவனத்தில் உங்களுக்கு மதுரமான கனிகள் தரும் ஓர் உயர்ந்த சோலையை பெற்றுத்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்என்று கூறி மீண்டும் கேட்டார்கள்.

 

இரண்டாவது முறையாகவும் தம்மால் தர இயலாது என அபூலுபாபா (ரலி) அவர்கள் கூறிவிட்டார்கள்.

 

இந்தக் காட்சிகளை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு நபித்தோழரான அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள் நேராக அபூலுபாபா (ரலி) அவர்களின் அருகே சென்று மதீனாவின் இன்ன பகுதியிலே இருக்கிற 100 பேரீத்தமரங்கள் கொண்ட ஒரு சோலையை நான் தருகிறேன் எனக்கு அந்த ஒரு பேரீத்த மரத்தை தருவீர்களா?” என்று கேட்டார்கள்.

 

உடனடியாக, அதற்குச் சம்மதம் தெரிவித்தார் அபூலுபாபா (ரலி) அவர்கள். அடுத்து அதற்கான ஒப்பந்தமும் செய்து கொண்டார்கள். 

 

இப்போது, அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள், மாநபி {ஸல்} அவர்களின் அருகே வந்துஅல்லாஹ்வின் தூதரே! நான் அபூலுபாபா (ரலி) அவர்களிடம் இருந்து அந்த மரத்தை என்னுடைய நூறு பேரீத்தமரங்கள் நிறைந்த ஒரு சோலையை விலையாகக் கொடுத்து வாங்கி விட்டேன்.

 

அந்த ஆதரவற்ற வாலிபருக்கு அந்த மரத்தைக் கொடுத்து உங்களின் விருப்பத்தையும் நான் நிறைவேற்றுகின்றேன்!

 

ஆனால், நீங்கள் அவருக்கு அளித்த உத்தரவாதத்தை எனக்கும் அளிப்பீர்களா?” என்று ஏக்கத்தோடு கேட்டார்கள்.

 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அகமும், முகமும் மலர்ந்தவர்களாக ஆம்! உமக்கும் நான் அந்த உத்தரவாதத்தை தருகின்றேன்என்று கூறினார்கள்.

 

பின்னர், அந்த வாலிபரை அழைத்து வாஞ்சையோடு அணைத்து அந்த மரம் இனி உமக்கு சொந்தமானது என்று கூறினார்கள்.

 

இதைக்கேட்ட அந்த வாலிபர் மிகவும் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

 

ثم قتل أبو الدحداحة شهيداً يوم أحد فقال رسول الله صلى الله عليه وسلم: " رب عذق مذلل لأبي الدحداحة في الجنة " .

 

வாய் மொழியாகச் சொன்ன அந்த உத்தரவாதத்தை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உஹத் யுத்தகளத்திலே வீரமரணம் அடைந்து ஷஹீதாகக் காட்சி தந்த அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்களை ஆரத்தழுவி, தங்களது புனித மடியில் கிடத்தி விட்டுகனிகள் தரும் மதுரமான எத்தனையோ சோலைகள் சுவனத்தில் அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனஎன்று கூறி உறுதிபடுத்தினார்கள்.

 

                    ( நூல்:  الإستيعاب في معرفة الأصحاب,பாகம்:3, பக்கம்:102 )

 

வாழ்வில் இதுவரை தனக்கானதாக கருதி வந்த ஒன்றை இழந்து, அதனால் மன வேதனையும், விரக்தியும் அடைந்த ஒரு அநாதை வாலிபரின் கோரிக்கையை நிறைவேற்ற  நபி {ஸல்} அவர்கள் எந்த அளவிற்கு முயற்சி மேற்கொண்டார்கள் என்பதை இந்த வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

 

விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்!! வேளாண் மசோதா திரும்பப் பெறப்படட்டும்!!