Thursday 28 November 2013

குறை காணும் குணத்தை விட்டொழிப்போம்!


     
     குறை காணும் குணத்தை விட்டொழிப்போம்!

நிறைவானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!

ஒரு சிலர் எப்போதும் பிறரைப் பற்றிக் குறை கூறிக் கொண்டேஇருப்பார்கள்.                                             நிறைவான எந்த விஷயங்களைக் கண்டாலும் அவர்களின் கண்களுக்கு அது மிகச் சாதாரணமாகவே தோன்றும்.
எல்லோரும் குறை உள்ளவர்கள் தான். குற்றம் செய்யாத மனிதர்கள் என்று யாரும் இவ்வுலகத்தில் கிடையாது.
பிறகெப்படி நாம் ஒருவரை யொருவர் குறை பேசுகிறோம்? இதற்கான விடையை ஓர் அறிஞன் இப்படிச் சொல்வான்.  1.தன்னை விட ஒரு காரியத்தை வேறு ஒருவர் திறம் பட செய்து முடிக்கிற போதும்,                              2.ஒரு மனிதரிடம் பொறாமைக் குணம் அதிகரிக்கிற போதும், 3.பிற மனிதன் தன் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுகிற போதும்,
4.தன்னை ஒருவர் மிக உயர்வாக கருதுகிற போதும்,
அங்கே பிறரை குறை காணும் குணம் குடி கொண்டு விடுகிறது.
பிறகு அதைத் தூக்கிக் கொண்டு தினசரி பத்திரிக்கையைப் போன்று அலையோ அலையென்று அலைந்து திரிகின்றோம்.
திருப்தி படுத்த முடியாது
லுக்மான் {அலை} அவர்கள் ஒரு நாள் தன் மகனுடன் ஓரிடத்திற்கு பயணம் மேற்கொண்டார்கள்.         தன்னோடு பலகீனமான ஒரு கோவேறுக் கழுதையையும் அழைத்துச் சென்றார்கள். வழியில் சில மக்கள்  பேசிக் கொண்டனர். “கழுதையிருக்க ஏன் இருவரும் நடந்து செல்கின்றனர்?” என்று.
மகன் தந்தை லுக்மான் {அலை} அவர்களிடம் நாம் இருவரும் முறை வைத்து பயணம் செய்வோம் என்றார். முதலில் லுக்மான் {அலை} அவர்கள் பயணமானார்கள். சிறிது தூரம் சென்ற பின் வழியில் சில மக்கள் பேசிக்கொண்டனர். “சின்னப் பையனை நடக்க விட்டு இரக்கம் இன்றி வாகனத்தின் மீது பயணம் செய்கின்றாரே? இவரெல்லாம் ஒரு பெரிய மனிதரா?” என்று.
வாகனத்திலிருந்து கீழிறங்கி தன் மகனை அமர வைத்து லுக்மான் {அலை} அவர்கள் நடந்து சென்றார்கள். சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள்.மீண்டும் வழியில் சில பேர்,”தந்தைக்கு மரியாதை செய்யாத இந்த சிறுவனை என்ன வென்று சொல்வது?” என்று பேசிக் கொண்டனர்.
வேறு வழியின்றி இருவரும் கழுதை மீதேறி அமர்ந்து பயணம் மேற்கொண்டனர்.  சிறிது தூரம் தான் சென்றிருப் பார்கள். மீண்டும் வழியில் சிலர் நின்று கொண்டு “பலகீனமான இந்தக் கழுதையை தந்தையும்,மகனும் சேர்ந்து இப்படி கொடுமை செய்கிறார்களே?” என்று பேசிக்கொண்டனர்.
இப்போது லுக்மான் {அலை] அவர்களும் அவர்களது மகனும் மீண்டும் முன்பு போலவே  நடந்து சென்றனர்
இது போல எப்போதும் சிலர் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். நம்முடைய எந்த செயலாலும் இது போன்றவர்களை திருப்தி படுத்தவே முடியாது.
மிக அருகில் நரகம்
அறிஞர் ஸஅதீ என்பவரின் மகன் இரவின் கடைசி நேரத்தில் இனிய குரலில் குர்ஆன் ஓதும் பழக்கமுடையவராய் இருந்தார். அவரின் தந்தை ஸஅதீ அவரருகே அமர்ந்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார். ஒரு நாள் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போது “ நான் எவ்வளவு இனிமையாக குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கிறேன். நீங்களும் எவ்வளவு அருமையாக அருகே அமர்ந்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.                              தூங்கிக் கொண்டிருக்கும் தம் குடும்பத்தார்களை நோக்கி “பாக்கியம் கெட்டவர்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள்” என்றார். உடனே அறிஞர் ஸஅதீ  தம் மகனை நோக்கி “ குர் ஆனை மூடிவிட்டு, போய் தூங்கு. பிறரை குறை கூறுகிற நோக்கில் நீ குர்ஆனை ஓதினாய் என்றால் ஓதிய நன்மை உன்னை சுவனத்தில் சேர்க்கும்முன், நீ கண்ட குறை உன்னை அதிவேகத்தில் நரகில் தள்ளி விடும்” என்று கண்டித்தார்கள்.                                     இன்றும் நம் சமூகத்தில் நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.  பள்ளிவாசலில் தொழ நுழைந்ததிலிருந்து தொழுது விட்டு வெளியே செல்லும் வரை முஅத்தின்,இமாம் என்று ஆரம்பித்து தலைவர்,செயலாளர்,முதல்வீடு,மூன்றாம்தெரு என்று தொடர்ந்து,வெளிநாட்டில் உள்ளவன் வரை குறை பேசி திருப்தி படுபவர்கள் தான் எத்தனை பேர்?             தொழுத நன்மைகளை உடனடியாக அழித்துவிட்டு கூடுதலான பாவ அழுக்காறுகளை சுமந்து வருகின்றனர்.
கடுமையை உணர்வோம்
அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:  ”நான் நபி {ஸல்} அவர்களிடம் ஒரு முறை கூறினேன்: “ஸஃபிய்யா “இப்படி” இருக்கிறார் என்னும் குறையே அவருக்குப் போதுமானதாகும்.” {அதாவது ஸஃபிய்யா குள்ளமானவர் என்பது அவருக்கு ஒரு பெரும் குறையாகும்} அது கேட்ட நபி {ஸல்} அவர்கள் “ஆயிஷாவே! நீஎவ்வளவு மாசு படிந்த சொல்லை உன் வாயினால் வெளிப்படுத்திவிட்டாய் எனில், அதனை கடலில் கரைத்து விட்டால் அது கடல் நீர் முழுவதையும் அசுத்தப்படுத்தி இருக்கும்” என்று என்னிடம் கூறினார்கள்.                                
                               நூல்:மிஷ்காத், பக்கம்:414    
அல்லாஹ் கூறுகின்றான்:                            “இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் நீதி {நேர்மை} யான சொல்லை மொழியுங்கள்.                       அல்குர்ஆன்:33:70
எப்போதும் குறை கண்டுபிடித்துக் கொண்டிருப்பவர்களிடம் நீதி,நேர்மை என்பதை துளி அளவு கூட காணமுடியாது.
முன்மாதிரியின் முன்மாதிரி
அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கிறார்கள்:               “நான் நபி {ஸல்} அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். ஒரு நாளும் நான் செய்த ஒரு செயலை சுட்டிக்காட்டி “ஏன் இவ்வாறு செய்தாய்?” என என்னிடம் பெருமானார் {ஸல்} அவர்கள் கடிந்து கொண்டது கிடையாது. ஒரு போதும் என்னைக் குறை கூறியதும் கிடையாது.“சீ”என்று கூட சொன்னது கிடையாது.” நூல்:புகாரி.
அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் அறிவிக்கிறார்கள்:         “நபி {ஸல்} அவர்கள் ஒரு நாளும் உணவை குறை கூறியது கிடையாது.பிடித்திருந்தால் உண்ணுவார்கள். இல்லையேல் உண்ணாமல் விட்டுவிடுவார்கள்.”             நூல்: புகாரி ”நபி {ஸல்} அவர்களின் சொல்லும், செயலும் தானே நமக்கு முன் மாதிரி! நாமும் அப்படித்தானே செயல் பட வேண்டும்?.                   
சீர் குலைக்கும் ஆயுதம்
இஸ்லாத்தில் ஏகத்துவத்திற்கு அடுத்த அந்தஸ்தைப் பெறுவது சகோதரத்துவம் ஆகும்.   ஏனெனில்,      அல்லாஹ் கூறுவான்:
              (إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ (الحجرات:10
“இறை நம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரர் ஆவார்கள். எனவே, உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள்.           அல்குர்ஆன்:49:10
இந்த சகோதரத்துவத்தை சீர் குலைக்கும் வலிமையான ஆயுதங்கள் எவை என்பதை அடுத்தடுத்த வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்தும் போது,
1.பிறரை பரிகாசம் செய்ய வேண்டாம்.               2.பிறரை குத்திப் பேச வேண்டாம்.                    3.பிறரை பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்க வேண்டாம். 4.பிறரின் மீது தவறான எண்ணங்கள் கொள்ள வேண்டாம்.  5.பிறரின் குறைகளை துருவித்துருவி ஆராய வேண்டாம்.   6.பிறரைப் பற்றி புறம் பேச வேண்டாம்.                    7. பிறரை விட தம்மை உயர்வாகக் கருத வேண்டாம்.
பார்க்க: அல்குர்ஆன்: 49:11முதல்13வரை உள்ள வசனங்கள். அல்லாஹ் சொன்ன வலிமையான ஆயுதங்களில் பிறரின் குறைகளை ஆராய்வதும் ஒன்றாகும்.
எப்போது ஓர் மூஃமினிடத்தில் மேற்கூறிய பண்புகளில் ஏதேனுமொன்று குடி புகுந்துவிடுமோ அப்போதே சகோதரத்துவம் சீர்குலைந்து விடும்.
நபிகளாரின் கண்டிப்பு
மக்கா வெற்றியின் போது நபி {ஸல்} அவர்களின் வருகையையும்,முஸ்லிம்களின் எழுச்சியையும் கண்டு பயந்துபோய் இக்ரிமா எமனுக்குச் சென்று விட்டார். இக்ரிமா வேறு யாருமல்ல. அபூஜஹ்லின் மகன், இவரும் தந்தையைப் போலவே இஸ்லாத்திற்கெதிராக கடும் பகமை கொண்டிருந்தார்.
இவரின் மனைவி உம்மு ஹக்கீம் பின்த் ஹாரிஸ் {ரலி} அவர்கள் எமனுக்குச் சென்று அழைத்து வந்தார்கள். பின்பு மாநபியின் சபைக்கு அழைத்து வந்தார்கள். தூரத்தில் இக்ரிமா வருவதைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் “வெகு தூரத்திலிருந்து சிரமத்துடன் பயணித்து வரும் பயணியே, வாருங்கள்! தங்கள் வருகை நல்வரவாகட்டும்!” என்று கூறி தம் அருகே அமர வைத்தார்கள்.
இக்ரிமா கேட்டார்: இப்போது நான் என்ன சொல்ல வேண்டும்.?                                             நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ஷஹாதத் சொல்லுங்கள். உடனடியாக ஷஹாதாவை மொழிந்து இக்ரிமா முஸ்லிமானார்கள். பின்னர் நபி {ஸல்} அவர்கள் ”இக்ரிமா.. உமக்கு என்ன வேண்டும் கேளுங்கள். எது கேட்டாலும் தருகிறேன்.” என்றார்கள்.
இக்ரிமா {ரலி} அவர்கள் சொன்னார்கள்:       “அல்லாஹ்வின் தூதரே! ஆரம்பமாக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். உங்கள் மீதான பகைமையால் உங்களை நான் கடுமையாக ஏசியிருக்கிறேன். போர்களில் கலந்து கொண்டு கண்மூடித்தனமாக நான் நடந்து கொண்டிருக்கிறேன். இவை அத்தனைக்காகவும் என்னை மன்னித்து விடுங்கள்.”  அப்போது நபி {ஸல்} அவர்கள் தம் இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி “யா அல்லாஹ்! இந்த இக்ரிமா எனக்கு எதிராக நடத்திய போருக்காக, என்மேல் கொண்டிருந்த பகைமைக்காக, என்னை ஏசியதற்காக, இவை அத்தனைக்காகவும் இவரை மன்னித்துவிடு” என்று துஆ செய்தார்கள்.           இதனைக் கேட்ட இக்ரிமா {ரலி} அவர்கள்:                   “ அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த மார்க்கத்தை தடுப்பதற்காக எவ்வளவு பொருளாதாரத்தை செலவு செய்தேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக நான் செலவு செய்வேன். இந்த மார்க்கத்திற்கெதிராக எவ்வளவு போர்களில் நான் கலந்து கொண்டேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக இறைவனின் பாதையில் நான் போர் செய்வேன்.” என முக மலர்ச்சியோடு கூறினார்கள்.  
 மாநபி {ஸல்} அவர்கள், இக்ரிமா {ரலி} அவர்கள் தம்மை நோக்கி சபைக்குள் நுழைகிற போதே அவரின் நோக்கத்தை அறிந்து கொண்டு “அபூஜஹ்லின் மகன் இக்ரிமா நம்பிக்கை கொண்டவராக உங்கள் முன் வருகிறார். அவரைக் கண்டால் அவரின் தந்தையைக் குறித்து குறை கூறி விமர்சனம் செய்யாதீர்கள். இறந்து போன ஒருவரை ஏசினால் அது உயிருடன் இருப்பவருக்கு மனவேதனையையே தரும். என்றார்கள்.”   நூல்: இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:269,270,271.      மனிதர்களின் இயல்பே தங்களுக்கு பிடிக்காத ஒருவர் கண்முன்னால் சாதாரணமாக வருகிறார் என்றால் அவரை குறை கூறி இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது தான். ஆனால்,வந்திருப்பதோ அபூஜஹ்லின் மகன் சும்மா விட்டுவிடுவார்களா? நபித்தோழர்கள். ஆகவே தான் நபி{ஸல்} அவர்கள் கண்டிப்போடு அவரின் தந்தை குறித்து குறை கூறி விமர்சனம் செய்யவேண்டாம் என கூறிவிட்டார்கள்.
விளைவு அவர் தனது நெஞ்சில் உள்ள பாரத்தையெல்லாம் இறக்கிவைத்து விட்டு நபித்தோழர் எனும் மாணிக்கமாக மாறிச் சென்றார்.
வஞ்சப்புகழ்ச்சியும் குறைதான்
ஃகலீஃபா உமர் {ரலி} அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஷாம் தேசத்திலிருந்து ஒரு முஸ்லிம் உமர் {ரலி} அவர்களைக் காண வந்திருந்தார். இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த மனிதர் ”அமீருல் முஃமினீன் அவர்களே!   மாநபி {ஸல்} அவர்களுக்குப் பிறகு சிறந்த மனிதராகவும், முஃமின்களின் சிறந்த தலைவராகவும் உங்களைத் தான் நான் கருதுகிறேன். என்றார்.                          அதற்கு உமர் {ரலி} அவர்கள் அப்படியா? என்று கேட்டுவிட்டு, “நீர் எனதருமைத் தோழர் அபூபக்ர் ஸித்தீக் {ரலி] அவர்களைப் பார்த்திருக்கிறீரா? என்று கேட்டார்கள்.     அதற்கு அவர் இல்லை நான் பார்த்ததில்லை என்று பதில் கூறினார். உடனே உமர் {ரலி} அவர்கள் “நீர் மட்டும் என் தோழர் அபூபக்ர் {ரலி} அவர்களை பார்த்திருக்கிறேன் என்று கூறியிருந்தீர் என்றால் உம்மை சாட்டையால் அடித்து விரட்டி இருப்பேன். என் தோழரை குறைபடுத்தி,என்னை உயர்வாக்கி புகழ்கிறீரோ?                       எத்தனையோ நாட்கள் அபூபக்ர் {ரலி} அவர்களின் நெஞ்சில் முளைத்திருக்கும் ரோமத்தைப் போன்றாவது நான் இருந்திருக்கக் கூடாதா? என ஏங்கிய நாட்கள் உண்டு. அப்படிப்பட்ட என் தோழரை குறைத்து மதிப்பிட்டு, என்னை உயர்வாகக் கருதுகிறீரோ?” என்று கேட்டார்கள்.
                நூல்: ஃகுல்ஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:86
உம்மத்தின் நிலை
பெரும்பாலும் குறை கூறுவோர் ”தாம் மிக உயர்வாகவும், மதிப்போடும் நடத்துகிறவர்களிடம் தான் உற்று நோக்கிப் பார்த்து அதை பிறரிடம் கூறிக் கொண்டிருப்பார்கள்.” அதனால் தான் இன்று ஆலிம்கள்,சமுதாயத் தலைவர்கள் மீது வெகு விரைவாக குறை கூற முடிகிறது. ஆனால், அது இந்த உம்மத்திற்கு அழகல்ல என்று பெருமானார் {ஸல்} அவர்கள் நயம்பட உரைத்திருக்கிறார்கள்.             ஹிஜ்ரி 8 ஜமாதில் அவ்வல் மாதம் நடை பெற்ற மூத்தா யுத்தம். அந்த யுத்தத்தில் பெருமானார் {ஸல்} அவர்களால் நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக வீர மரணம் அடைய, இறுதியாக இக்கட்டான நேரத்தில் காலித் இப்னு வலீத் {ரலி} அவர்கள் படைத்தளபதி பொறுப்பை ஏற்கிறார்கள். அதுவரை பெரும் நெருக்கடிக்கும், துன்பத்திற்கும் உள்ளான முஸ்லிம்களின் படை காலித் [ரலி} பொறுப் பேற்றதும் புதுத்தெம்பையும், பொலிவையும் அடைகிறது. ஆனாலும் எதிரிப்படையினர் இரண்டு லட்சம் பேர், முஸ்லிம்களின் படையின் எண்ணிக்கையோ வெறும் பத்தாயிரம் தான், காலித் {ரலி} அவர்கள் தங்களது மதியூகத்தால் பெரும் படையை பின் வாங்கி ஓட வைத்தார்கள். ஒரு கட்டத்தில் தொடர்ந்து சென்று தாக்க வேண்டாம் என தளபதி காலித் {ரலி] உத்தரவு பிறப்பிக்கிறார்கள். அன்று மாலையே படையை மதீனாவிற்கு திருப்பிடுமாறு மீண்டும் படையினருக்கு மறு உத்தரவு பிறப்பிக்கிறார்கள் தளபதி காலித் இப்னு வலீத் {ரலி} அவர்கள். வீரர்கள் மதீனா வருவதற்கு முன் இஸ்லாமியப் படை பின்வாங்கி ஓடி வருகிறது எனும் செய்தி காட்டுத் உதீப்போல மதீனமாநகரெங்கும் பரவியது. மதீனாவிற்குள் நுழைந்த படையினரை வரவேற்று வாழ்த்துச் சொல்வதற்குப் பதிலாக, மதீனாவின் எல்லையில் திரண்டிருந்த மக்களெல்லாம் ”அல்லாஹ்வின் பாதையில் மன உறுதியோடு போராடாமல் விரண்டோடி வந்தவர்களே! என்று ஒட்டுமொத்தப் படையினர் மீதும் மண் வாரி தூற்றினர். செய்தி கேள்விப்பட்டு ஓடி வந்த அண்ணலார் தளபதியிடம் யுத்த களம் குறித்து விசாரிக்கிறார்கள். தளபதி காலித் [ரலி} அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எதிரிகள் இரண்டு லட்சம் பேர்,முஸ்லிகளோ வெறும் பத்தாயிரம் பேர் தான். மேலும் சூழ்நிலைகள் சாதகமாகி,எதிரிகள் பின் வாங்கி ஓடும் போது தான் திரும்பி வந்து விடுவது சாலச் சிறந்ததாக நான் கருதி படையினரை மதீனா திரும்புமாறு நான் கட்டளையிட்டேன். என்று கூறினார்கள். திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தை நோக்கி மாநபி {ஸல்} அவர்கள் “மக்களே! இவர்கள் விரண்டோடி வந்தவர்களல்லர். எதிர்காலத்தில் அல்லாஹ் நாடினால்…உறுதியுடன் போராடுபவர்கள். என்று கூறினார்கள்.
           நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:213
 இங்கே குறை கூறுவதற்கு முன்னால் குறைகளை சுமத்து வோரின் இடத்தில் தங்களை வைத்துப் பார்க்க வேண்டும். என நபி [ஸல்} அவர்கள் தங்களின் நடவடிக்கயின் மூலம் இந்த உம்மத்திற்கு படிப்பினை தருகிறார்கள்.
மொத்தத்தில் எந்த ஒரு முஸ்லிமும் வேறெந்த ஒருமுஸ்லிமின் குறைகளையும் தேடித் திரிந்து அதைப் பரப்பிக் கொண்டு அலையக் கூடாது என இஸ்லாம் இயம்புகிறது.
அல்லாஹ் கூறுகின்றான்:                             “இறை நம்பிக்கை கொண்டவர்களே! அதிகமான எண்ணங்களில் இருந்து தவிர்ந்துவிடுங்கள். ஏனெனில், எண்ணங்களில் சிலது பாவமாக இருக்கின்றன.மேலும், பிறரின் குறைகளை துப்பறிவதில் ஈடுபடாதீர்கள்.
                                         அல்குர்ஆன்:49:12
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ ஓ நாவால் ஈமான் கொண்டு உள்ளத்தால் உறுதி கொள்ளாத கூட்டமே! முஸ்லிம்களைப் பற்றி புறம் பேசாதீர்கள்;மேலு அவர்களின் குறைகளை தேடித்திரியாதீர்கள். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை தேடித்திரிகின்றாரோ,அவரின் குறைகளை அல்லஹ்வும் தேடுவான், எவரின் குறைகளை அல்லாஹ் தேட ஆரம்பித்து விடுவானோ அவரை அல்லாஹ் கேவலப் படுத்திவிடுவான் அவர் தன் வீட்டில் வைத்து மறைவாக செய்த போதிலும் சரியே!” அறிவிப்பாளர்: அபூ பர்ஸா {ரலி}
                     நூல்: தஃப்ஸீர் குர்துபீ,பாகம்:9,பக்கம்:139
நெப்போலியன் ஹில் எனும் எழுத்தாளன் சொல்வான் “வீட்டிலும்,வீதியிலும் சுற்றித்திரியும் நாய் தான் உடலைச் சுற்றி பறக்கும் பூச்சிகளைக் கண்டு குரைத்துக் கொண்டிருக்கும். அது போலத்தான் சிலர் மற்றவர்களின்             குறையை பெரிதுபடுத்தி பேசித்திரிவார்கள். அவர்களைக் கண்டுப் பயப்படாதீர்கள். காரியம் ஒன்றையே கருத்தில் கொண்டு முன்னேறுங்கள்.
எனவே குறை  கூறும் குணத்தை விட்டொழிப்போம்!
ஈமானை மாசு படுத்தும் குணத்திலிருந்து விடுபடுவோம்!
ஈருலக நன்மைகளைப் பெறுவோம்!!!
                    வஸ்ஸலாம்!


    

5 comments:

  1. அற்புதமான கட்டுறை அழகான செய்திகள் நல்ல தமிழ் நடை உங்களின் பணி தொடரட்டும்

    ReplyDelete
  2. நல்ல செய்திகள்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்! ஹழ்ரத் அவர்களே மிக அருமை இது வரை தங்களின் கட்டுரையை நான் படித்ததில்லை. உஸ்மானிகளில் பெரும் பெரும் திறமையாளர்கள் இருக்கிறார்கள்.அல்ஹம்து லில்லாஹ்.

    ReplyDelete
  4. அல்ஹம்துளிலாஹ் சிறப்பான topic தங்களின் தீன் பணி தொடர துவா செய்கின்றோம்

    ReplyDelete