Wednesday, 20 November 2013

எண்ணம் போல் வாழ்வு

             எண்ணம் போல் வாழ்வு
நம் வாழ்க்கையை தீர்மானிப்பது நம் செயல்களை விட நம் எண்ணங்கள் தான்
ஓர் அறிஞன் சொன்னான்:
“எண்ணங்களைப் பற்றி கவனமாக இருங்கள்.அவைகள் வார்த்தைகளாக மாறுகின்றன.
வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.அவை தான் செயல்களாக மாறுகின்றன.
செயல்களில்கவனமாக இருங்கள்.அவை தான் பழக்கமாக மாறுகின்றன.
பழக்கங்களில்கவனமாக இருங்கள். அவை தான் ஒழுக்கமாக மாறுகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள். அவை தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகின்றன.”
ஆம்!ஷைத்தான் வழி தவறியதும் அவனுடைய கீழான எண்ணத்தால் தானே!
ஒருவனின் உயர்வும் தாழ்வும் அவனின் எண்ணத்தால் தான் அமைகிறது என்று இஸ்லாம் உரக்கச்சொல்கிறது
அல்லாஹ் கூறுகின்றான்:
”ஒவ்வொருவரும் தத்தமது எண்ணங்களின்{வழிமுறைப்}படி செயலாற்றுகின்றனர்.”                   {அல்குர்ஆன்:17:84}
நபி{ஸல்}அவர்கள் கூறினார்கள்:
”மறுமை நாளில் ஓர் அடியான் அல்லாஹ்வின் சமூகத்தில் கொண்டு வரப்படுவான் அவனோடு மலை போல் குவிக்கப்பட்ட அவனுடைய நற்செயல்களும் கொண்டு வரப்படும். அப்போது அங்கே ஓர் வானவர் “இவரால் பாதிப்புக்குள்ளானவர்கள் எவரும் உண்டோ? வாருங்கள் இவரின் நன்மைகளில் இருந்து அதற்கான ஈட்டை பெற்றுச் செல்லுங்கள்.என்று அறிவிப்புச் செய்வார்.அப்போது சிலமனிதர்கள் அங்கே வந்து அவரின் நன்மைகளில் இருந்து எடுத்துச் சென்றிடுவர். இறுதியில் அம்மனிதர் மட்டும் தனியே நின்று கொண்டிருப்பார்.
அப்போது அல்லாஹ் அவரை அழைத்து “ஓஅடியானே உன்னுடைய பொக்கிஷம் ஒன்று என்னிடம் உள்ளது அதை என் படைப்பினங்களில் எவரும் அறிய மாட்டார்.பரிசுத்த என்வானவர்களும் கூட அறியமாட்டார்கள்.” என்று சொல்வான்.
அப்போது அந்த அடியான் “அல்லாஹ்வே அது என்ன”? என்று கேட்பான்.  அதற்கு அல்லாஹ் ”ஓஅடியானே உன்னுடைய தூய்மையான எண்ணங்கள் தான்! நீ ஒவ்வொரு முறை எண்ணும் போதும் அதற்கு நான் எழுபதுமடங்கு நன்மைகளை எழுதினேன்.” என்பான்.
நூல்:புகாரி, 2449,6534. தன் பீஹுல் gகாஃபிலீன்,பாகம்:2,பக்கம்:377
ஆக எண்ணங்கள் தான் ஒரு மனிதனின் உலக,ஆன்மீக வாழ்வின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கின்றன.
அல்லாஹ்வைப் பற்றிய எண்ணம்
அல்லாஹ் கூறுகின்றான்:
“அல்லாஹ்வை எவ்வாறு மதிப்பிட வேண்டுமோ அவ்வாறு அவர்கள் மதிப்பிடவில்லை”.               அல்குர்ஆன்:6:91
இந்த இறைவசனத்தின் கருத்தின் அடிப்படை இன்றைய     அநேக முஸ்லிம்களோடு ஒத்துப்போவதை காணமுடிகிறது அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையில் இந்த உம்மத் எப்படி இருக்கிறது என்பதே இதற்கு போதுமானதாகும்.
அனஸ்{ரலி}அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒட்டகத்தைக் கட்டி வைத்துவிட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதா? அல்லது அதனை கட்டாமல் அப்படியே அவிழ்த்து விட்டுவிட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதா?”.என்று வினவினார். அதற்கு நபிகளார், “அதனை நீர் கட்டி வைத்துவிட்டு பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையும்! என்று பதில் கூறினார்கள். நூல்:திர்மிதீ பல்கு தேசத்தைச் சேர்ந்த ஷகீக்{ரஹ்} அவர்கள் ஒரு முறை இப்ராஹீம் பின் அத்ஹம்{ரஹ்} அவர்களைச் சந்தித்து தாம் வியாபார விஷயமாக பயணம் மேற்கொள்வதாக கூறிச் சென்றார்கள். ஆனால் பயணம் சென்ற சில நாட்களிலேயே ஷகீக்{ரஹ்}திரும்பிவிட்டார்கள் எனும் செய்தி கேள்வி பட்டு இப்ராஹீம் பின் அத்ஹம் {ரஹ்} அவர்கள் ஷகீக்{ரஹ்} அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள். திரும்பி வந்த காரணம் என்ன? என்று வினவியபோது, ஷகீக் {ரஹ்} கூறினார்கள்:              ”நான் நெடுந்தூரம் பயணம் செய்த களைப்பில் ஓரிடத்தில் ஓய்வு பெற ஒரு மரத்தடியில் அமர்ந்தேன். அங்கே நான் கண்ட காட்சி தான் எனக்கு அல்லாஹ்வைப் பற்றியான ஓர் உண்மையை உணர்த்தியது. அப்படியா? என்ன அந்தக் காட்சி கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் என்றார்கள் மாமேதை இப்ராஹீம் {ரஹ்} அவர்கள்.
நான் அமர்ந்திருந்த அந்த மரத்தின் ஒரு கிளையில் ஊனமான,குருடான ஒரு பறவை அதன் கூட்டில் இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில் யார் வந்து உணவளிக்கப்போகிறார்கள்? என்று நினைத்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில், எங்கிருந்தோ வந்த இன்னொரு பறவை ஊனமான அந்த பறவைக்கு தன் அலகுகளால் உணவளித்தது. இதனைக் கண்ணுற்ற நான் ”ஏன் நமக்கும் அல்லாஹ் இவ்வாறு உணவளிக்க மாட்டான்? என்ற எண்ணம் தோன்றவே நான் ஊர் திரும்பிவிட்டேன்.” அதற்கு இப்ராஹீம் {ரஹ்} அவர்கள், “தோழரே! நீங்கள் எந்தப் பறவையிலிருந்து படிப்பினை பெற்றிருக்கின்றீர்கள்? தனக்காகவும் - தன் சக உயிரினத்திற்காகவும் பாடுபட்ட அந்த நல்ல பறவையிடமிருந்தல்லவா பாடம் பெற்றிருக்கவேண்டும். காலொடிந்த பறவையிடமிருந்தா வல்லோனை விளங்கிக்கொண்டீர்கள்? என்று கேட்டார்கள்.”                    
            நூல்: அல் உஸுஸில் அஃக்லாக்கியா, பக்கம்,80
நபிகளாரின் மீதான எண்ணம்
அல்லாஹ் கூறுகின்றான்:
“இறைத்தூதர் எதை உங்களுக்கு கொடுக்கிறாரோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களை தடுக்கிறாரோ அதனை விட்டும் விலகி இருங்கள்.”                  
                                          அல்குர்ஆன்:59:7
இன்றைய முஸ்லிம்களில் அதிகமானோர் வாழ்வின் அனைத்து துறைகளிலும் மேலோங்கிட துடிக்கின்றனர். ஆனால், அங்கே நபிகளாரின் வார்த்தைக்கோ,வாழ்க்கை வழிகாட்டலுக்கோ முக்கியம் தருவதில்லை.
நபி {ஸல்} அவர்களின் அருமைத்தோழர்களில் ஒருவர் ஜுலைபீப் {ரலி} அவர்கள். தன்னைப் பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தார்.காரணம் அவ்வளவாக அழகாக இருக்கமாட்டார்.
ஒரு முறை நபி {ஸல்} அவர்கள்,ஜுலைபீப் அவர்களை அழைத்து என்ன திருமணம் செய்து கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள்.அதற்கு ஜுலைபீப் அவர்கள் ”அருவருப்பான தோற்றம் கொண்ட எனக்கு இந்த மதீனாவில் யார் பெண் கொடுப்பார்? என்று விரக்தியுடன் கேட்டார்”. தோழரே! அல்லாஹ்விடத்தில் நீர் ஒன்றும் அருவெறுப்பானவர் இல்லை. ஊரின் இந்த பகுதியில் உள்ள {ஒரு இடத்தை சுட்டிக்காட்டி}இன்ன மனிதரிடம் சென்று நான் உமக்கு பெண் கேட்டதாக சொல்லுங்கள்.என்று கூறி அனுப்பி வைத்தார்கள் நபி {ஸல்} அவர்கள். அந்த வீட்டிற்குச் சென்று நபிகளார் சொன்ன அந்த விஷயத்தைக் கூறினார்கள். அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மறுக்கவும் முடியாமல், ஆமோதிக்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர்.அவருக்கு பெண் தர அவர்களின் மனம் இடம் தர வில்லை.                          அப்போது உள்ளிருந்தவாரே தமது பெற்றோரின் உரையாடலையும் ஜுலைபீப் அவர்களின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணி தமது பெற்றோரை அழைத்து, வந்திருப்பவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே எனக்காக அனுப்பிய மணாளன், நீங்கள் எப்படி எனக்காக மாப்பிள்ளை பார்ப்பீர்களோ அதை விட பன்மடங்கு அக்கறையோடு தான் மா நபி {ஸல்} அவர்கள் எனக்கான மணாளனை தேர்ந்தெடுத்து அனுப்பியிருப்பார்கள்.என்று கூறிவிட்டு “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனுமொரு விவகாரத்தில் முடிவு செய்துவிட்டால் பிறகு அந்த விவகாரத்தில் மாற்று முடிவு எடுக்கும் அதிகாரம் இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும்,இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது.” எனும் இறை வசனத்தை தம் பெற்றோரிடம் ஓதிக் காண்பித்துவிட்டு என் விஷயத்தில் நபிகளாரின் முடிவையே நான் திருப்தி அடைகிறேன். ஜுலைபீப் அவர்களை என் மணாளராக்க மனப்பூர்வமாக சம்மதிக்கின்றேன்.என்று கூறினார்கள்
நபி {ஸல்} அவர்களின் முன்னே அமர்ந்து அந்த வீட்டில் நடை பெற்ற அத்துனை நிகழ்வினையும் ஜுலைபீப் {ரலி} விவரித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி உதிர்த்த வார்த்தைகளை கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் “அல்லாஹூம் மஸ்புப் அலைஹல் ஃகைர ஸப்பா! வலா தஜ்அல் அய்ஷஹா கத்தா!
இறைவா! அப்பெண்மணியின் வாழ்க்கையில் அனைத்து வகையான நலவுகளையும் கொட்டுவாயாக! கேடுகளும்,சோதனைகளும் நிறைந்த வாழ்வை கொடுத்து விடாதே! என்று அகம் மகிழ துஆ செய்தார்கள். இந்த செய்தியை அறிவிக்கின்ற அபூ பர்ஸா {ரலி} அவர்கள் ”மதீனாவிலேயே,அன்ஸாரிப்பெண்களிலேயே இந்தப் பெண்மணியை விட செல்வச் சீமாட்டியை நாங்கள் கண்டதில்லை”.என்று கூறுகின்றார்கள்
பின்னர் ஜுலைபீப் {ரலி} அவர்களை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்துகொண்டிருந்தார்கள் அப் பெண்மணி.
பெருமானார் {ஸல்} அவர்களோடு ஒரு போரில் கலந்து கொள்ள ஜுலைபீப் அவர்கள் புறப்பட்டுச்சென்றார்கள். அந்தப் போரில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை நல்கினான். இறுதியாக ஷஹீதானவர்களை கணக்கிடும் பணியில் நபிகளாரும்,தோழர்களும் ஈடுபட்டிருந்தனர். எவரையாவது விட்டு விட்டீர்களா?என நபியவர்கள் வினவ,ஆம் இன்னின்னாரை விட்டு விட்டோம். என தோழர்கள் கூறினார்கள்.மீண்டும் நபியவர்கள் வினவ, முன்பு போலவே தோழர்கள் பதில் கூறினர். மூன்றாம் முறையும் நபியவர்கள் கேட்டுவிட்டு ஜுலைபீபை காணவில்லையே? சென்று போர்க்களம் முழுவதும் நன்றாக தேடுங்கள் என்றார்கள். ஓரிடத்தில் ஜுலைபீப் ஷஹீதாக்கப்பட்டு கிடப்பதாக நபியிடத்தில் வந்து தோழர்கள் கூறினார்கள்.உடனடியாக கிளம்பி அந்த இடத்திற்கு வந்த நபி {ஸல்} அவர்கள் அங்கே ஜுலைபீபை சுற்றி ஏழு இறை மறுப்பாளர்கள் கொல்லப்பட்டுக்கிடந்ததை பார்த்தார்கள். நபி{ஸல்} அவர்கள் கூறினார்கள்:”இதோ இங்கு ஷஹீதான ஜுலைபீப் ஏழு காஃபிர்களுடன் கடுமையாக போரிட்டு பின்னர் அவர்களை கொன்றுவிட்டு பிறகு அவர் ஷஹீதாகி இருக்கிறார். “அறிந்து கொள்ளுங்கள்! ஜுலைபீப் என்னைச் சார்ந்தவர், நான் அவரைச் சார்ந்தவர்! என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் அவரை தம் இரு கைகளாலும் வாரி அணைத்து தூக்கிச் சென்று தாமே கப்ரில் அடக்கம் செய்தார்கள் மா நபி {ஸல்} அவர்கள்.                        நூல்:இப்னு ஹிப்பான்,பாகம்:9,பக்கம்:334,இஸ்தீஆப்,பாகம்:1,பக்கம்:155,156,முஸ்னத் அஹ்மத்,பாகம்:4,பக்கம்:422.
ஒரு முஸ்லிமின் எண்ணங்களில் மிக உயர்ந்தது அவன் அல்லாஹ்வை குறித்தும்,{ஸல்}அவர்களை குறித்தும் மிகச் சரியாக விளங்கி வைத்திருப்பதாகும்.
எனவே மேற்கூறிய வரலாறுகளில் இருந்து பாடம் பெறுவோம்.
தன்னைப்பற்றிய எண்ணம்
ஒரு மனிதன் தன்னைப் பற்றி தற்பெருமை கொள்ளவும் கூடாது,அதே நேரத்தில் கீழான எண்ணமும் கொள்ளக்கூடாது. ஆனால்,இவ்வுலகில் வெற்றிக்கான வாழ்க்கையை தன்னால் வாழ இயலும் என உறுதியாக எண்ணவேண்டும்.
ஒரு முறை யமனின் நஜ்ரான் பகுதியைச் சார்ந்த சில முஸ்லிம்கள் தங்களுக்கு மார்க்கவிஷயங்களை கற்றுத் தரவும்,தங்கள் பகுதியில் அழைப்புப்பணி செய்யவும்,தங்களுக்கு இமாமத் செய்யவும் ஒருவரை தங்களோடு அனுப்பி வைக்குமாறு மாநபி {ஸல்} அவர்களிடம் வேண்டி நின்றனர்.அப்போது நபி {ஸல்} அவர்கள் ”உங்களோடு நம்பிக்கையான ஒருவரை அனுப்பி வைக்கிறேன்” என்றுகூறினார்கள். இந்த நேரத்தில் லுஹர் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. நபிகளார் கூறிய அந்த நம்பிக்கையாளராக நாமாக இருக்க மாட்டோமா? என்று ஒவ்வொரு ஸஹாபியும் ஆசைப்பட்டனர்.
இகாமத் சொல்லப்பட்டது, நபி {ஸல்} அவர்கள் தொழ வைத்தார்கள்,உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்.தொழுது முடித்ததும் நபி {ஸல்} அவர்கள் வலது புறம் பார்த்தார்கள்,பின்பு இடது புறம் பார்த்தார்கள். என் மீது நபியவர்களின் பார்வை பட வேண்டும், என்னை அழைக்க வேண்டும் என்பதற்காக குதிங்காலால் ஊனி எட்டி எட்டிப் பார்த்தேன்.இறுதியாக நபி {ஸல்} அவர்களின் பார்வை அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி} அவர்களைச் சென்றடைந்தது. பின்னர் நபி {ஸல்} அவர்கள் அபூ உபைதாவை அழைத்தார்கள், பின்னர் நஜ்ரான் முஸ்லிம்களை அழைத்து இதோ இவரை அழைத்துச் செல்லுங்கள். “ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர் நம்பிக்கையாளர் உண்டு.என்னுடைய உம்மத்தின் நம்பிக்கையாளர் அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி}” என்று கூறினார்கள்.
உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:
”ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அந்த நேரம் வரை நான் எந்த புகழுக்கும்,பதவிக்கும் ஆசைபட்டது கிடையாது அன்று நான் ஆசை பட்டேன் நபிகளாரின் புனித வாயால் அந்த புகழாரத்தை அடையவேண்டுமென்று ஆனால்  அபூ உபைதா அவர்கள் அதை தட்டிச் சென்று விட்டார்கள்”.           நூல்:ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:241
 ஃகைபர் கோட்டையை முற்றுகையிட்டிருந்தது மா நபி {ஸல்} அவர்களின் தலைமையிலான முஸ்லிம்களின் அணி கோட்டைக்கு உள்ளிருந்து குடைச்சல் கொடுத்தனர் அல்லாஹ்வை மறுக்கும் எதிரணியினர்.முதல் நாள் முடிவுக்கு வந்தது. அப்போது நபி {ஸல்} அவர்கள் “ நாளை நான் ””அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற, அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நேசிக்கின்ற ஒருவரிடம் கொடியை கொடுப்பேன். அல்லாஹ் அவர் கரங்களின் மூலம் வெற்றியை வழங்குவான்”” என்று கூறினார்கள்.
உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:                               ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அதுவரை நான் எந்த புகழுரைக்கும்,அந்தஸ்துக்கும் ஆசைப் பட்டது கிடையாது. அன்று நான் அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற ஒருவனாக ஆக வேண்டும், நபிகளாரின் அமுத வாயால் சொல்லப்பட்ட சோபனத்திற்கு சொந்தக்காரனாய் ஆக வேண்டும் என ஆசைப் பட்டேன்”.ஆனால் அதை அலீ {ரலி} அவர்கள் தட்டிச் சென்று விட்டார்கள்.
.                                                               நூல்: ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:294                         இந்த இரு வேறு அறிவிப்புக்களையும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஃகாலித் முஹம்மத் ஃகாலித் {ரஹ்} தங்களது இரு வேறு நூற்களில் பதிவு செய்திருக்கின்றார்கள்.
இங்கே உமர் {ரலி} அவர்கள் தங்களின் மீதான எண்ணத்தை எவ்வாறு அமைத்திருந்தார்கள்!.இது தான் பிற்காலத்தில் ஆட்சியாளராக பரிணமிக்கும் உயர்வைப் பெற்றுத்தந்தது.
பிறரின் மீதான எண்ணம்
அல்லாஹ் கூறுகின்றான்:
“இறை நம்பிக்கையாளர்களே! உங்களின் எண்ணங்களில் அதிகமானதை தவிர்த்துக்கொள்ளுங்கள், ஏனெனில் சில எண்ணங்கள் பாவமாக இருக்கின்றன.”
                                       அல்குர்ஆன்:49:12             இன்று ஒருவரைப் பற்றி நாம் யாரிடமாவது விசாரித்தால் அவரைப்பற்றிய தவறான நடவடிக்கைகளையே நம்மிடம் கூறப்படும். காரணம் சதா அவரைப் பற்றி வேயப்பட்டுள்ள எண்ண வலைகளே! ஆனால், அல்லாஹ் இவ்வாறான நடவடிக்கைகளை கைவிடுமாரு பணிக்கின்றான்.
அன்னை ஆயிஷா {ரலி} அவர்களைப் பற்றி நயவஞ்சகர்கள் அவதூறு பரப்பிய அந்த தருணங்களில் பெரும்பாலான முஃமின்கள் மவுனமாக இருந்தனர்.
அத்தகைய முஃமின்களை நோக்கி அல்லாஹ் பேசினான்:              “நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே, நம்பிக்கையாளர்களான ஆண்களும்,பெண்களும் தங்களைப் பற்றி  நல்லெண்ணம் கொண்டிருக்க வேண்டாமா? இது ஓர் அப்பட்டமான அவதூறு என்று சொல்லியிருக்க வேண்டாமா?
                                          அல்குர்ஆன்:24:12
ஃபத்ஹ் மக்காவின் போது பிலால் {ரலி} அவர்களை நபி {ஸல்} அவர்கள் கஃபாவின் முகட்டின் மீதேறி பாங்கு சொல்லச் சொன்னார்கள். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த உத்தாப் இப்னு உஸைத் என்பவன் “இந்த நாளின் கொடுமையான இந்தக் காட்சியை காண்பதற்கு முன்பே என் தந்தை இறந்துவிட்டார்” என ஏளனமாகக் கூறினான். ஹாரிஸ் இப்னு ஹிஷாம் என்பவனோ “அடிமையான இந்த கருப்பு காக்கையை விட்டால் முஹம்மதுக்கு வேறு மனிதரே கிடைக்கவில்லையா? என்று கேலி பேசினான். அபூசுஃப்யான் சொன்னார் “ நான் ஒன்றும் சொல்லமாட்டேன் அப்புறம் அது குறித்து அல்லாஹ் இறை வசனத்தை இறக்கிவிடுவானோ என நான் அஞ்சுகிறேன்” என்றார். அப்போது அல்லாஹ் பின் வரும் வசனத்தை                “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம்.பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும்,கோத்திரங்களாகவும் அமைத்தோம்.”உண்மையில் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தான்.” நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தையும்அறிந்தவனாகவும்,தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.”                           அல்குர்ஆன்:49:13
இறக்கியருளினான்.
பிறரின் மீதான எண்ணத்தின் அளவுகோலை அல்லாஹ் இங்கே விவரித்துக் காட்டுகின்றான்.
ஆக நமது இன்றைய எண்ணமும் செயலும் தான் நாளைய நம் வாழ்க்கையை வடிவமைக்கின்றன.
    எனவே எண்ணங்களை தூய்மையாக்குவோம்!
         உயர்வான வாழ்வைப் பெறுவோம்!
                    வஸ்ஸலாம்.
 

4 comments:

  1. உங்கள் நல்ல எண்ணத்துக்கு ஜன்னத் கிடைக்க துஆ செய்கிறேன்!

    ReplyDelete
  2. அற்புதமான அழகான கட்டுறை. அல்லாஹ் மென்மேலும் உங்களுக்கு எழுத்தாற்றலை அதிகப்படுத்துவானாக...

    ReplyDelete
  3. எண்ணங்களைக் கொண்டே வாழ்கை

    ReplyDelete