Thursday, 1 May 2025

உழைப்பின் மாண்பை அறிவோம்! உழைப்பாளர்களின் உரிமையை வழங்குவோம்!!

 

உழைப்பின் மாண்பை அறிவோம்!

உழைப்பாளர்களின் உரிமையை வழங்குவோம்!!



இன்று நாம் உலக அதிசயங்களாக பார்த்து ரசிக்கிற ஏழு அதிசயங்கள், கடல் நீரின் மீது படர்ந்து செல்லும் பிரம்மாண்ட கப்பல்கள், வானில் ஊர்ந்து செல்லும் விமானங்கள், நவீன கண்டுபிடிப்புகளால் சந்தைக்கு கொண்டு வரப்படுகிற மக்கள் பயன்படுத்தும் பொருட்கள், புருஜ் கலீஃபா கோபுரம், கன்னியாகுமரி கண்ணாடிப்பாலம் என்று ஒரு நீண்ட பட்டியலைத் தர முடியும்.

இவைகள் ஒவ்வொன்றின் பிண்ணனியிலும் இருப்பது ஆயிரக்கணக்கானோர்களின் உழைப்புகள் தான்.

உழைப்பு என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், உழைக்கும் வர்க்கம் ஒன்று இல்லாமல் போயிருந்தால் மனித குலம் கற்கால மனிதர்கள் போல காடுகளிலும் குகைகளிலும், மலைக்குன்றுகளிலுமே வாழ்ந்திருக்கும்.

மனித குலம் அனுபவிக்கும் அத்துனை வாழ்க்கை வசதிகளின் பின்னாலும் நிச்சயமாக ஏதோ ஒரு உழைப்பு, யாரேனும் ஒருவரின் உழைப்பு இருக்கவே செய்கிறது.

ஆதலால் தான் அல்லாஹ் மனித குலத்திற்கு வழங்கி இருக்கிற அருட்கொடைகள் பலவற்றை குறித்து பேசி முடித்த பிறகு சிந்தனை செய்து பார்க்குமாறு கூறுகின்றான்.

அந்த வகையில் உழைப்பு குறித்தும், உழைப்பாளர்களின் உரிமைகள், கடமைகள் குறித்தும் இஸ்லாம் மிக விரிவாகவே, விசாலமாகவே பேசியிருப்பதை பார்க்க முடிகிறது.

மே 1, உழைப்பாளர்கள் தினம் சர்வதேச அளவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதில் என்ன துரதிஷ்டம் என்றால் இந்த நாளுக்கு முன்பாகவோ அல்லது இந்த நாளுக்கு பின்பாகவோ அந்த உழைப்பாளர்கள் குறித்து அவர்களின் நலன் குறித்து எந்த பயனாளர்களும் சிந்திப்பதும் இல்லை. அக்கறை கொள்வதும் இல்லை.

ஆயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகளாக அவர்களின் உரிமை குறித்தும், அவர்களின் நலன் குறித்தும் அறைகூவல் விடுத்துக் கொண்டே இருக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என்றால் அது மிகையல்ல.

இந்த உலகில் அதிக அளவிலான உழைக்கும் மக்களைக் கொண்ட சமூகமாக இஸ்லாமிய சமூகமே இருக்கிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆம்! இந்தியாவின் சச்சார் கமிட்டியின் தரவுகள் முஸ்லிம் சமூகத்தின் நலிவடைந்த நிலையை உணர்த்திய போதும் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலானவர்கள் உழைத்துச் சாப்பிடுகின்றார்கள் என்று உணர்த்தியது. மேலும், அவர்களின் உழைப்புக்கு தகுந்த உயர்வு அவர்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கவில்லை என்றும் கூறியது நாம் நினைவில் வைக்க வேண்டிய விஷயமாகும்.

நம்மில் பலர் உழைப்பாளியாக இருக்கலாம், உழைப்பாளர்களை வைத்து வேலை வாங்கும் முதலாளியாக இருக்கலாம், அல்லது யாரேனும் ஒருவரின் உழைப்பின் மூலம் பயன் பெறுபவராக இருக்கலாம் நாம் இஸ்லாமிய வழிகாட்டுதலின் படி உழைப்பின் மகத்துவத்தை, உழைப்பாளர்களின் உரிமையை சரிவர நிறைவேற்றி வருகின்றோமா? ஒரு முஸ்லிமாக நாம் இதில் சரியாக நடக்கின்றோமோ? என்று சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.

இரண்டு அம்சங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் நபிமார்களுக்கு எதை கட்டளையாக கூறினானோ அதையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையாக கூறினான்.

1) தக்வா - இறையச்சம் 

2) ஹலாலான உணவு 

، عن النبي أنه قال: أَيُّها النَّاسُ، إنَّ اللَّهَ طَيِّبٌ لا يَقْبَلُ إلَّا طَيِّبًا، وإنَّ اللَّهَ أمَرَ المُؤْمِنِينَ بما أمَرَ به المُرْسَلِينَ، فقالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} [المؤمنون: 51]، وقالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: 172]، ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أشْعَثَ أغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إلى السَّماءِ، يا رَبِّ، يا رَبِّ، ومَطْعَمُهُ حَرامٌ، ومَشْرَبُهُ حَرامٌ، ومَلْبَسُهُ حَرامٌ، وغُذِيَ بالحَرامِ، فأنَّى يُسْتَجابُ لذلكَ؟!tعن أبي هريرة

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்

அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறி விட்டு

 

يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا‌ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ

 

தூதர்களே! தூய்மையானவற்றை உணணுங்கள்! நல்லறம்; செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் அறிந்தவன்

( அல்குர்ஆன்: 23: 51 )

 

يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ

 

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!

( அல்குர்ஆன்: 2: 172 ) ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். பின்பு ஒரு மனிதரைப் பற்றி குறிப்பிட்டார்கள். அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதி படிந்து பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின் பால் கைகளை உயர்த்தி எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை அவனது உணவு அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனே ஹராமில் மூழ்கி விட்டான். இந்த நிலையில் அவனது துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

( நூல்: முஸ்லிம் )

 

ஹலாலான உணவு என்பது ஹலாலான உழைப்பு, ஹலாலான சம்பாத்தியம், ஹலாலான பொருளீட்டல் மூலமே சாத்தியம் ஆகும்.

 

மாநபி ஸல் அவர்கள் அந்த உழைப்பின் மதிப்பை உணர வைக்கும் பொருட்டு உவமானமாகக் கூறியது, நபிமார்களையும், அரசராக இருந்த இறைத் தூதர் தாவூத் (அலை) அவர்களையும் தான்.

 

இறைவனுக்கு நெருக்கமானவராக இருப்பினும் சரி, அதிகாரமும் செல்வாக்கும் பெற்றவராக இருப்பினும் சரி ஒருவரின் பொருளீட்டும் முறை மிகவும் கவனிக்கப்படும் என்பதையே இது உணர்த்துகிறது.

 

«مَا بَعَثَ اللَّهُ نَبِيًّا إِلَّا رَعَى الغَنَمَ»، فَقَالَ أَصْحَابُهُ: وَأَنْتَ؟ فَقَالَ: «نَعَمْ، كُنْتُ أَرْعَاهَا عَلَى قَرَارِيطَ لِأَهْلِ مَكَّةَ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது… “அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள்,“நீங்களுமா?” என்று கேட்டார்கள். ஆம். மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ( நூல்: புகாரி )

 

مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ، خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ

 

ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள்

அறிவிப்பவர்: மிக்தாம் (ரலி), ( நூல்: புகாரி )

 

அல்லாஹ்விற்காக செலவிடப்படும் அறச் செலவுகளில் கூட ஹலால் இருந்தாலே அது அறம் என்கிறது இஸ்லாம்.

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِنْ طَيِّبٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّاۤ اَخْرَجْنَا لَـكُمْ مِّنَ الْاَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاٰخِذِيْهِ اِلَّاۤ اَنْ تُغْمِضُوْا فِيْهِ‌ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ

 

இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன், புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

( அல்குர்ஆன்: 2: 267 )

 

مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ، وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ، وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ، كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ، حَتَّى تَكُونَ مِثْلَ الجَبَلِ

 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை. யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ, அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்துவிடுவான்அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ( நூல்: முஸ்லிம் )

 

உழைப்பு என்பது சுயமரியாதையின் அடையாளம் என்கிறது இஸ்லாம்...

 

لَأَنْ يَحْتَطِبَ أَحَدُكُمْ حُزْمَةً عَلَى ظَهْرِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ أَحَدًا، فَيُعْطِيَهُ أَوْ يَمْنَعَهُ

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- பிறரிடம் யாசகம் கேட்பதைவிட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.

( நூல்: புகாரி )

 

لَأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ أَحْبُلًا، فَيَأْخُذَ حُزْمَةً مِنْ حَطَبٍ، فَيَبِيعَ، فَيَكُفَّ اللَّهُ بِهِ وَجْهَهُ، خَيْرٌ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ، أُعْطِيَ أَمْ مُنِعَ

 

உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதைவிடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவருக்கு இழிவு ஏற்படாமல் தடுத்துவிடுவான். மக்கள் அவருக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம்” ( நூல்: புகாரி )

 

இஸ்லாத்தில் உழைப்பு முக்கியத்துவம் பெறப் பல காரணங்கள் உள்ளன.

 

உழைப்பை அல்லாஹ்வின் அருளை தேடும் ஒரு முயற்சியாக கட்டமைக்கின்றது இஸ்லாம்....

 

 ‘அவன் தான் உங்களுக்கு பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே பல கோணங்களிலும் தேடிச் சென்று அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவைகளைப் புசித்துக் கொண்டிருங்கள்’. ( அல்குர்ஆன்:  67: 15 )

 

மேலும் (ஜும்ஆ ) தொழுகை முடிந்ததும் பூமியில் பரந்து சென்று அல்லாஹ்வின் அருளை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். ( அல்குர்ஆன்:  62: 10 )

 

உழைப்பை முஸ்லிமின் மீதுள்ள கடமையாக முன் வைக்கின்றநு இஸ்லாம்....

 

இஸ்லாம் முஸ்லிம்கள் மீது விதியாக்கியுள்ள கடமைகளுள் சில அவனது செல்வத்துடன் தொடர்புடையனவாகும். ஸகாத், ஹஜ், குடும்பப் பராமரிப்பு, தான தர்மங்கள் போன்ற கடமைகளை நிறைவேற்ற செல்வம் அவசியம். எனவே செல்வத்தை உழைப்பின் மூலம் பெற்றுக்கொள்வது கடமை.

 

உழைப்பை இபாதத்தாக- வணக்கமாக வரையறுக்கின்றது  இஸ்லாம்... 

 

ஒரு செயலை இஸ்லாமிய வழிகாட்டலில் செய்யும்போது அது வணக்கமாகின்றது அது போலவே உழைப்பும் அவ்வழிகாட்டலுக்கு அமைய மேற்கொள்ளும் போது அது வணக்கமாக இபாதத்தாக மாறுகின்றது.

 

عن ابن عباس قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "من أمسى كالّاً من عمل يده أمسى مغفوراً له". في الكبير في الأوسط. مجمع الزوائد - باب اتخاذ المال /ج2 ص66

 

"எவர் ஹலாலான உழைப்பில் ஈடுபட்டு, களைப்படைந்த நிலையில் ஓர் இரவை அடைகின்றாரோ அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் அவ்விரவை அடைந்தவராவார்" என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னு மாஜா )

 

உழைப்பை அல்லாஹ்வின் நேசத்திற்கான அடையாளமாக சிறப்பிக்கின்றது இஸ்லாம்....

 

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் உழைத்து வலுவேறிய ஒரு தொழிலாளியின் கையை நீண்ட நேரம் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இதனை நபித்தோழர்கள்  ஆச்சரியப்பட்டு பார்த்த போது,  

 

وفي رواية: إن الله يحب من العامل إذا عمل عملاً أن يحسن. صححه الألباني.

 

நபி (ஸல்) அவர்கள் "நிச்சயமாக அல்லாஹ் தொழில் புரியும் விசுவாசியை நேசிக்கின்றான்" என்று கூறினார்கள். ( நூல்: தபரானி )

 

உழைப்பாளரின் மகத்துவத்தை உயர்த்திக் கூறிய இஸ்லாம்....

 

عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رضي الله عنه قَالَ: مَرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ، فَرَأَى أَصْحَابُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم مِنْ جَلَدِهِ وَنَشَاطِهِ مَا أَعْجَبَهُمْ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ ، لَوْ كَانَ هَذَا فِي سَبِيلِ اللهِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: " وَمَا سَبِيلُ اللهِ إِلَّا مَنْ قَتَلَ؟ إِنْ كَانَ خَرَجَ يَسْعَى عَلَى وَلَدِهِ صِغَارًا ، فَهُوَ فِي سَبِيلِ اللهِ، وَإِنْ كَانَ خَرَجَ يَسْعَى عَلَى أَبَوَيْنِ شَيْخَيْنِ كَبِيرَيْنِ ، فَهُوَ فِي سَبِيلِ اللهِ، وَإِنْ كَانَ يَسْعَى عَلَى نَفْسِهِ يُعِفُّهَا ، فَهُوَ فِي سَبِيلِ اللهِ، وَإِنْ كَانَ خَرَجَ يَسْعَى رِيَاءً وَتَفَاخُرًا ، فَهُوَ فِي سَبِيلِ الشَّيْطَانِ

 

ஒரு மனிதரின் வலுவையும் சுறுசுறுப்பையும் கண்ட நபித்தோழர்கள் (நபியிடம்) அல்லாஹ்வின் தூதரே இவர் அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதில் ஈடுபட்டுக்கொண்டு) இருந்தால் நன்றாயிருக்கும் என்றார்கள். அதற்கு நபியவர்கள் இவர் தனது சிறு பிள்ளைகளுக்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். வயதான பெற்றோருக்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார்.தான் சுயமரியாதையுடன் வாழ்வதற்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். முகஸ்துதிக்காகவும் பெருமையடித்துக்கொள்வதற்காகவும் புறப்பட்டுச் சென்றால் அவர் ஷைத்தானின் பாதையில் தான் இருப்பார்; என்று கூறினார்கள்;.

நூல் தப்ரானி: 15619.

 

உழைப்பவரின் உரிமையும், கண்ணியமும்....

 

لَقِيتُ أبَا ذَرٍّ بالرَّبَذَةِ، وعليه حُلَّةٌ، وعلَى غُلَامِهِ حُلَّةٌ، فَسَأَلْتُهُ عن ذلكَ، فَقالَ: إنِّي سَابَبْتُ رَجُلًا فَعَيَّرْتُهُ بأُمِّهِ، فَقالَ لي النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: يا أبَا ذَرٍّ أعَيَّرْتَهُ بأُمِّهِ؟ إنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ، إخْوَانُكُمْ خَوَلُكُمْ، جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أيْدِيكُمْ، فمَن كانَ أخُوهُ تَحْتَ يَدِهِ، فَلْيُطْعِمْهُ ممَّا يَأْكُلُ، ولْيُلْبِسْهُ ممَّا يَلْبَسُ، ولَا تُكَلِّفُوهُمْ ما يَغْلِبُهُمْ، فإنْ كَلَّفْتُمُوهُمْ فأعِينُوهُمْ

 

நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) ரபதாஎன்ற இடத்தில்சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர் களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்என அபூதர் கூறினார்என மஃரூர் கூறினார்.

புகாரி: 30.

 

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: "قالَ اللَّهُ: ثَلاثَةٌ أنا خَصْمُهُمْ يَومَ القِيامَةِ: رَجُلٌ أعْطَى بي ثُمَّ غَدَرَ، ورَجُلٌ باعَ حُرًّا فأكَلَ ثَمَنَهُ، ورَجُلٌ اسْتَأْجَرَ أجِيرًا فاسْتَوْفَى منه ولم يُعطِه أجرَه.

 

மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன் சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன் கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!என்று அல்லாஹ் கூறினான். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புகாரி: 2270.

 

عن ابن عمر رضي الله عنه قال: "جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، كم نعفو عن الخادم؟ فصمت، ثم أعاد عليه الكلام، فصمت، فلما كان الثالثة قال: "اعفُوا عنهُ (يعني: الخادم) في كُلِّ يومٍ سبعينَ مرةً

 

ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் என்னுடைய பணியாளரிடம் அவர் (ஏதாவது தவறிழைத்துவிட்டால்) எத்தனை முறை மன்னிப்பை மேற்கொள்வது?" என்று கேட்க, நபியவர்கள் மௌனம் காத்தார்கள். பிறகு அம்மனிதர் மீண்டும் அதே போன்று கேட்க, அப்போதும் மாநபி ஸல் அவர்கள் மௌனம் காத்தார்கள். மீண்டும் அவர் மூன்றாவது முறையாக கேட்ட போது "ஒவ்வொரு நாளும் எழுபது முறை மன்னிப்பை மேற்கொள்வீராக!" என்று நபி (ஸல்) பதிலளித்தார்கள். ( நூல்: திர்மிதீ )

 

عن أبي مسعود البدري رضي الله عنه قال: (كنتُ أَضرِب غلامًا لي بالسوط، فسمعتُ صوتًا مِن خلفي: اعلم أبا مسعود، فلم أفهم الصوت مِن الغضب، قال: فلما دنا مني إذا هو رسول الله صلى الله عليه وسلم فإذا هو يقول: اعلم أبا مسعود، اعلم أبا مسعود، قال: فألقيتُ السَّوط من يدي، فقال: اعلم أبا مسعود أن الله أقدر عليك منك على هذا الغلام، قال: فقلت: لا أَضرِب مملوكًا بعده أبدا) رواه مسلم. أي: بعد هذا القول الذي سمعه وذلك امتثالا وطاعة للنبي صلى الله عليه وسلم.

 

அபூ மஸ்வூத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் என்னுடைய பணியாளரை அடிப்பவனாக இருந்தேன். ஒருநாள் அப்படி நான் அடித்துக் கொண்டிருந்த போது "அபூ மஸ்வூதே! விளங்கிக் கொள்!' என்று யாரோ சொல்வது போல் என் செவியில் கேட்டது. எனினும் நான் கோபத்தில் இருந்ததால் யார் சொன்னார்கள் என்பதை நான் அறியவில்லை. சற்று நேரத்தில் ஒரு உருவம் என்னை நோக்கி வந்ததை கண்டு பார்த்த போது அந்த உருவம் நபி ஸல் அவர்கள் தான் என்பதை அறிந்து கொண்டேன். அப்போது நபி ஸல் அவர்கள் " அறிந்து கொள்! அபூ மஸ்வூதே! உம்மையும் இது போல் தண்டிப்பதற்கு அல்லாஹ் சக்தி வாய்ந்தவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்! என்றார்கள். அப்போது நான்"அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! இனி ஒரு போதும் என் பணியாளரை நான் அடிக்க மாட்டேன் என்று உறுதி கூறினேன். என்றார்கள். ( நூல்: முஸ்லிம் )

 

وقال الإمام أحمد أيضًا: حدثنا أبو نوح قراد  أنبأنا ليث بن سعد، عن مالك بن أنس، عن الزهري، عن عروة، عن عائشة؛ أن رجلا من أصحاب رسول الله صلى الله عليه وسلم، جلس بين يديه، فقال: يا رسول الله، إن لي مملوكين، يكذبونني، ويخونونني، ويعصونني، وأضربهم وأشتمهم، فكيف أنا منهم؟ فقال له رسول الله صلى الله عليه وسلم: "يحسب ما خانوك وعصوك وكذبوك وعقابك إياهم، إن  كان عقابك إياهم دون ذنوبهم، كان فضلا لك [عليهم] وإن كان عقابك إياهم بقدر ذنوبهم، كان كفافا لا لك ولا عليك، وإن كان عقابك إياهم فوق ذنوبهم، اقتص لهم منك الفضل الذي يبقى  قبلك". فجعل الرجل يبكي بين يدي رسول الله صلى الله عليه وسلم: ويهتف، فقال رسول الله صلى الله عليه وسلم: "ما له أما يقرأ كتاب الله؟: { وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ } فقال الرجل: يا رسول الله، ما أجد شيئًا خيرًا من فراق هؤلاء -يعني عبيده-إني أشهدك أنهم أحرار كلهم.

 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அருமைத் தோழர்களோடு மஸ்ஜிதுன் நபவீயில் வீற்றிருக்கின்ற தருணம் அது.

 

மாநபியின் அருமைத் தோழர்களில் ஒருவர் அண்ணலாரின் சபைக்குள் முகமன் கூறி உள்ளே நுழைகிறார்.

 

அவரின் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது. அவரின் பதற்றமான குரலே அவர் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் என்பதை உணர்த்தியது.

 

அண்ணலாரின் மிகச் சமீபமாக வந்த அந்த நபித்தோழர், மாநபி {ஸல்} அவர்களின் அருகாமையில் அமர்ந்தார்.

 

அல்லாஹ்வின் தூதரே! நான் சில தொழில்கள், வியாபாரங்கள் செய்து வருகின்றேன். என்னிடம் சில பணியாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களை நான் நம்பி பணியில் அமர்த்தி இருக்கின்றேன்.

 

ஆனால், தவறு செய்கின்றார்கள் ஏன் செய்தீர்கள் என்று கேள்வி கேட்டால் கொஞ்சம் கூட பயமில்லாமல் பொய் பேசுகின்றார்கள்.

 

என் பொருளை, என பணத்தை எனக்குத் தெரியாமல் எடுத்து எனக்கு நம்பிக்கைத் துரோகம் இழக்கின்றார்கள்.

 

நான் ஏதாவது செய்யுமாறு ஆணையிட்டால், நான் சொன்னதற்கு நேர் மாறான ஒன்றை செய்கின்றார்கள்.

 

அவர்களின் இந்த செயல்களால் சில போது நான் அவர்களை கடுமையான முறையில் பேசியும், திட்டியும் விடுகின்றேன். கட்டுப்படுத்த முடியாத தருணங்களில் அடித்தும் விடுகின்றேன்.

 

அல்லாஹ்வின் தூதரே! நான் அவர்களோடு நடந்து கொள்ளும் முறை சரிதானா? நான் சராசரி மனிதனாக நடந்து கொள்கிறேனா? அல்லது ஒரு முஸ்லிமாக நான் நடந்து கொள்கிறேனா? என பதறியவாறே தமது இந்த நடத்தை தங்களுடைய நல்ல குணத்தை பாதிக்கும் செயல்களாக மாறி விடுமோ எனும் அச்சத்தை நபி (ஸல்) அவர்களிடம் வெளிப்படுத்தினர்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின் வருமாறு பதில் கூறினார்கள்:

தோழரே! நாளை மறுமை நாளில் விசாரணை மன்றத்தில் அல்லாஹ் உங்களுக்கும் அடிமைகளுக்கும் நடந்த நிகழ்வுகள் குறித்து உங்களையும், அவர்களையும் அழைத்து விசாரிப்பான்.

 

பணியாளர்கள் உங்களுக்கு எதிராக மோசடி செய்ததும், பொய் சொன்னதும், மாறு செய்ததும் மீஜான் தராசின் தட்டில் வைக்கப்படும். நீங்கள் அவர்களிடம் நடந்து கொண்டதும், ஏசியதும், பேசியதும் அவர்களை அடித்ததும் தராசின் இன்னொரு தட்டில் வைக்கப்படும்.இரண்டும் சமமாக இருந்தால் இருவருக்கும் பிரச்சனை இல்லை.

 

உங்களிடம் இருந்து நிகழ்ந்த செயல்பாடுகள் அவர்களின் எதிர் செயல்களை விட குறைவாக இருந்தால் அவர்களிடமிருந்து அவர்களின் நன்மைகளை எடுத்து உங்களுக்கு தரப்படும்.

 

நீங்கள் நடந்து கொண்ட விதம் அதிகம் என்றால் உங்களிடமிருந்து நன்மைகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்படும்! என்று அதனை கேட்ட மாத்திரத்தில் அந்த நபித்தோழர் அழுதார். அதிர்ச்சியில் அலறினார், கூக்குரலிட்டு அழுதார்.

 

அந்த நபித்தோழரை மீண்டும் அழைத்த மாநபி (ஸல்) அவர்கள் நாம் மறுமை நாளில்,துல்லியமாக் எடை போடும் தராசுகளை நிறுத்துவோம். பிறகு எவருக்கும் அணுவளவு கூட அநீதி இழைக்கப்பட மாட்டாது. அவருடைய ஒரு கடுகு மணியளவு செயலாயினும் அதனை நாம் (அங்கு) அவர் முன் கொண்டு வருவோம். கணக்கு கேட்பதில் நாமே போதுமானவனாக இருக்கின்றோம் ( அல்குர்ஆன்: 21: 47 ) எனும் இறை வசனத்தை ஓதிக்காண்பித்து நீர் அல்லாஹ்வின் வேதத்தில் ஓதியதில்லையா? எனக் கேட்டார்கள்.

இத்தனையையும் மிகவும் அதிர்ச்சி விலகாமல் கேட்டுக் கொண்டிருந்த அந்த நபித்தோழர், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! பிரச்சனைக்குரிய பணியாளர்களை விடுதலை செய்வதே தனக்கும், அவர்களுக்கும் நன்மை பயக்கும் என்று கூறியவாறே அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் அனைவரையும் இக்கணமே விடுதலை செய்கிறேன்! அதற்கு நீங்களே சாட்சியாயிருங்கள்! என கூறியவாறே சபையில் இருந்து விடை பெற்றுச் சென்றார்.  ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, முஸ்னத் அஹ்மத் )