Wednesday, 15 January 2014

அண்ணல் நபி {ஸல்} அவர்களின் அறிவார்ந்த அணுகுமுறைகள்!!

    அண்ணல் நபி {ஸல்} அவர்களின் அறிவார்ந்த
                 அணுகுமுறைகள்!!

 

 உலகத்தின் அத்துணை ஆட்சியாளர்களாலும் கைவிடப்பட்டவர்கள் அரேபியர்கள்.அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தால் அவர்களின் பூமியைக் கைப்பற்ற நினைத்து படை திரட்டி வந்த பல மன்னர்கள் பின் நாளில் வருந்தி, திரும்பிச் சென்றதும் உண்டு.                                    
 அப்படி திரும்பியவர்களில் அலெக்ஸாண்டர் கூட விலகிப் போனதாக ஓர் வரலாறு உண்டு. அவர்களின் அருகே நெருங்க நினைத்தவர்களை விட, அவர்களை விட்டும் விரண்டோடியவர்கள் ஏராளம், தாராளம்.                ஆனால், அவர்களின் வரலாற்றுத் தியரியை அடியோடு மாற்றிக் காட்டி, நாகரீகத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்று, உலகாளும் ஆட்சியாளர்களாய், ஆளுமைத் திறன் மிக்கவர்களாய், மனிதர்களாய், மனிதப் புனிதர்களாய் மிளிரச் செய்தவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்.                                                                                                                அப்படியென்றால், அந்த மனிதர்களை நல்வழிப் படுத்த எத்துணை ஆண்டுகளை மாநபி {ஸல்} எடுத்திருப்பார்கள்?.              சற்றேரக்குறைய வெறும் 23 ஆண்டுகளில் தான் இச்சாதனையை செய்து முடித்தார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.                         அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் அறிவார்ந்த, அழகிய அணுகுமுறைகள் தான், அம்மக்களை அறியாமையிலிருந்து அறிவுடமையின் பக்கமும், காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நாகரீகத்தின் உச்சத்திற்கும் கொண்டு வந்ததாக அல்லாஹ் அல்குர்ஆனில் பாராட்டிக் கூறுவான்.

அல்லாஹ் கூறுகின்றான்:
 “ (நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் அவர்களிடம்  மென்மையாக (அறிவார்ந்த அணுகுமுறையோடு) நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும், வன்நெஞ்சம் கொண்டோராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லாம் உம்மை விட்டும் விலகிப் போயிருப்பார்கள். ஆகவே இவர்களின் தவறுகளைப் பொறுத்துக் கொள்வீராக! மேலும், இவர்களுக்காக (அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருவீராக! மேலும், தீனுடைய காரியங்களில் இவர்களிடமும் கலந்தாலோசிப்பீராக! ஏதேனுமொரு விவகாரத்தில் நீர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டீர்களேயானால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! நிச்சயமாக, தன்னை முழுமையாகச் சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான்.                                    (அல்குர்ஆன்:3:159.)


1.அறியாமையில் உளன்றவர்களிடத்தில்….

 அதாவு இப்னு யஸார் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “ஒரு நபித்தோழர் நபி {ஸல்} அவர்களிடம் வந்து கேட்டார்: “அல்லாஹ்வின் தூதரே! என் தாயைச் சந்திக்க நான் அனுமதி கேட்க வேண்டுமா?”                                                                                                                      ஆம்! என்றார்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள். மீண்டும் அந்த நபித்தோழர் அவ்வாறே கேட்க? நபி {ஸல்} அவர்கள் முன்பு போன்றே பதில் தந்தார்கள் அவருக்கு.                             மூன்றாம் முறையும் அவர் “என் சொந்தத் தாயைச் சந்திக்கக் கூடவா அனுமதி கேட்க வேண்டும்? என்றார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “உன் தாயை ஆடையின்றி நிர்வாணமாக பார்க்க விரும்புகின்றாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை அல்லாஹ்வின் தூதர் அவர்களே!” என்றார். ”அப்படியென்றால் உன் தாயைச் சந்திக்க அனுமதி கேட்டு விட்டு உன் வீட்டினுள் நுழை” என்று பதில் கூறினார்கள்.
                              (நூல்:தஃப்ஸீர் குர்துபீ,பாகம்:7,பக்கம்:151.)
 அபூ ஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
@ஒரு நபித்தோழர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து ”அல்லாஹ்வின் தூதரே! என் அண்டை வீட்டார் எனக்கு அதிகம் துன்பம் தருகின்றர்கள். என்னால் அவர்களின் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.” என்றார்.                               அப்படியென்றால், ”நேராக வீட்டிற்குச் சென்று உங்கள் வீட்டில் உள்ள சாதனங்களையெல்லாம் வெளியே எடுத்துப் போட்டு விட்டு வீதியில் அமர்ந்து கொள்ளுங்கள்.” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். அவரும் அப்படியே செய்தார்.                                 
 வீதியில் வருவோரும், செல்வோரும் ஏன் இப்படி நடு வீதியில் சாதனங்களையெல்லாம் அள்ளிப் போட்டு உட்கார்ந்திருக்கின்றீகள் என விசாரித்தனர்.                                                         அவர் நடந்த சம்பவங்களையும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறியதையும் மக்களிடம் கூறினார். வீதியில் செல்பவர்களெல்லாம் அவரின் அண்டை வீட்டாரை சபித்தனர். அல்லாஹ்வின் சாபமும், கேவலமும் உண்டாகட்டும்! என கூறிச் சென்றனர்.                                                      
 வீட்டிற்குள் இருந்து இவைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த அண்டை வீட்டார் ஓடி வந்து “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இனி ஒரு போதும் உனக்கு நான் துன்பம் தர மாட்டேன்.  நீ வெறுக்கும் எந்த காரியத்தையும் இனி நான் மேற்கொள்ளமாட்டேன்” உடனடியாக  நீ உன் சாதனங்களை உன் வீட்டிற்குள் எடுத்துச் செல்” என்றார்.        (நூல்:முஸ்தத்ரக், ஹதீஸ் எண்:7382.பக்கம்:231. பாடம், கிதாபுல் அத்இமா, பாபு லா யுஃதில் ஈமான இல்லா மன் யுஹிப்புஹூ.)


 அபூ உமாமா அல் பாஹிலீ {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “ நாங்கள் அண்ணலாரோடு அமர்ந்திருந்த சபைக்கு ஓர் வாலிபர் வருகை தந்தார்.                                               
  வந்தவர் நேராக அண்ணலாரின் முன் வந்து நின்று “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு  நீங்கள் விபச்சாரம் செய்ய அனுமதி தர வேண்டும்” என்றார்.                                         
 அங்கிருந்த நபித்தோழர்கள் அவரை தாக்கிட முனைந்தனர். நபித்தோழர்களில் ஒருவர் இப்படிக் கேட்டார் “அல்லாஹ்வின் தூதரே! அனுமதி கொடுங்கள்! அவரின் கழுத்தை கொய்து விடுகின்றேன்.  அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ”அவரை ஒன்றும் செய்து விட வேண்டாம்” என்பது போன்று சைகை செய்தார்கள்.                        பின்பு தங்களின் பக்கம் வருமாறு அவ்வாலிபரை அழைத்தார்கள். அருகே வந்து அமர்ந்த அந்த வாலிபரிடம் “உன் தாய் விபச்சாரம் செய்திட நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள்.               
 ”இல்லை, அல்லாஹ்வின் தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்.” என்றார் அவ்வாலிபர்.                   
 மீண்டும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “உன் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ அங்கீகரிப்பாயா?” என்று கேட்டார்கள். பதறித்துடித்தவராக, அவ்வாலிபர் “ஒரு போதும் எனது மனம் விரும்பிடாது” என்றார் அவ்வாலிபர்.                                  அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் ”அப்படித்தான் நீ மட்டுமல்ல! உலகில் வேறெவரும்  இதற்கு விரும்ப மாட்டார்கள்”. என்றார்கள். மீண்டும், அண்ணலார் அவ்வாலிபரிடத்தில் “உனது தாயின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா? உனது தந்தையின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள். அண்ணலாரின் இந்த கேள்விகள் ஒவ்வொன்றும் அவரை வெகுவாகவே ”தாம் எத்தகைய பார தூரமான கேள்வியை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் கேட்டு விட்டோம்” என்பதை உணர்த்தியிருக்க வேண்டும்.                                        அவர் வெட்கத்தால் தலைகுனிந்தவராக, இல்லை, இல்லை, அல்லாஹ்வின் தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்” என்றார்.                                                          அதன் பின்னர், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவரை நோக்கி சீர் திருத்தும் தொணியில் “உமக்கு எதை நீ விரும்புகின்றாயோ, அதையே பிறருக்கும் நீ விரும்புவாயாக! உம் விஷயத்தில் எதை நீ வெறுப்பாயோ அதையே பிறரின் விஷயத்திலும் வெறுப்பாயாக!” என்று கூறினார்கள்.                                                  
  இதைக் கேட்டதும், அந்த வாலிபர் மிகவும் பணிவுடன் “அல்லாஹ்வின் தூதரே! எனது உள்ளம் தூய்மை பெற இறைவனிடம் இறைஞ்ச மாட்டீர்களா?” என ஏக்கத்துடன் கேட்டார்.                          
 அவரை அருகில் அழைத்த மாநபி {ஸல்} அவர்கள், தமதருகே அமரவைத்து அவரின் நெஞ்சத்தின் மீது கை வைத்து, யாஅல்லாஹ்! இவரின் இதயத்தை தூய்மை படுத்துவாயாக! யாஅல்லாஹ்! இவரின் பிழைகளை பொறுத்தருள்வாயாக! யாஅல்லாஹ்! இவரின் கற்பொழுக்கத்தை பாதுகாப்பாயாக!” என்று துஆ செய்தார்கள். இறுதியாக அந்த வாலிபர் பெருமானார் {ஸல்} அவர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்கிற போது….                                  
 “இந்தச் சபையில் நான் நுழைகிற போது, விபச்சாரம் தான் நான் அதிகம் நேசிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது நான் அதிகம் வெறுக்கும் விஷயமாக அந்த விபச்சாரமே மாறிவிட்டது” என்று சொல்லியவாறே சென்றார்.                                     
 இந்த சம்பவத்தை அறிவிக்கும் அபூ உமாமா {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: “இதன் பின்பு அந்த வாலிபரின் வாழ்வினில் எந்த ஒரு தருணத்திலும் கற்பொழுக்கத்தை உரசிப்பார்க்கும் எந்த ஒரு செயலும் இடம் பெற வில்லை.”

 (நூல்:ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அஸ் ஸஹீஹா லில் அல்பானீ, பாகம்:1, பக்கம்:370, முஸ்னத் அஹ்மத், பாகம்:5, பக்கம்:256,257.)

 நாகரீகம் என்றால் என்னவென்றே அறிந்திடாத, எளியோர்களின் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து மூர்க்கர்களாய் வாழ்ந்திட்ட, நற்குணங்களின் வாடையைக் கூட நுகர்ந்திடாத, ஒரு சமூகத்தினரின் தொடக்க கால தொடர்பின் போது, அவர்களில் ஒருவராய், அல்லாஹ்வின் தூதராய் இருந்து அணுகிய அறிவார்ந்த அணுகு முறை இது.                                                                
 அன்று வரை அப்படியொரு நாகரீகத்தை கேள்விப் படாத அந்தச் சமூகம். அன்று முதல் தங்களின் பெற்றோரைச் சந்திக்கக் கூட அனுமதி கேட்டனர். அண்டை அயலார்களை தங்களின் சொந்த உறவினர்களைப் போல் பாவித்தனர். மானக்கேடான காரியங்களில் இருந்தும் விலகி, உயர்பண்புகளின் உறைவிடமாகவே மாறிப்போனார்கள்.


2.ஆசையோடு வந்து நின்றவர்களிடத்தில்….

அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் புரிந்து ஷஹீத் எனும் நற்பேற்றை அடைபவர்களுக்கான அளப்பெரும் பேறுகளைக் குறித்து, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் அதிகமதிகம் ஆர்வமூட்டிக் கூறியிருக்கின்றார்கள்.                                ஆதலால், நபித்தோழர்கள் அநேகம் பேர் அன்றாடத் தொழுகையின் பின்னர் பிரார்த்தனையாக கேட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.                        இன்னும் சிலரோ தாம் ஷஹீதாக மரணிக்க துஆ செய்யுமாறு அல்லாஹ்வின் தூதரிடமே கேட்டுப் பெற்றிருக்கின்றார்கள். மதீனாவில் ஓர் அன்ஸாரிப் பெண்மணி இருந்தார்.                        அவருடைய பெயர் உம்மு வரக்கா {ரலி} அவர்கள். இறையச்சத்தை இதயத்தில் நிரப்பமாக பெற்றிருந்த பெண்மணி. அல்குர்ஆனை அழகிய குரலால் அலங்கரித்து, கேட்போரின் செவிகளையும், இதயங்களையும் கசிந்துருக வைத்திடுவார். அம்மணியின் அழகிய ஓதுதலை செவிதாழ்த்தி கேட்கும் ஸஹாபாக்கள் பலர் உண்டு. அதில் உமர் {ரலி} அவர்களும் ஒருவர். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உம்மு வரக்கா {ரலி} அவர்களை பெண்களுக்கு இமாமத் செய்யும் பொறுப்பிலும் அமர்த்தியிருந்தார்கள். ஒரு முஅத்தினையும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள்.                                                     
  பத்ர் யுத்தத்திற்கான ஆயத்தப் பணிகளை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மேற்கொண்டிருந்த தருணம் அது..                    அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன் வந்து நின்றார்கள் உம்மு வரக்கா {ரலி} அவர்கள். அல்லாஹ்வின் தூதரே! நானும் இஸ்லாமியப் படையோடு வர ஆசிக்கின்றேன். நானும் உங்களோடு வருவதற்கு அனுமதி தாருங்களேன்? எனக்கும் ஷஹாதத்-வீரமரணம் அடையும் நற்பேறு கிடைக்கும் அல்லவா? என்று மிக ஆசையோடு கேட்டார்கள்.                                                 
 அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “ நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள், அல்லாஹ் வீட்டில் வைத்தே ஷஹீதாகும் வாய்ப்பை நல்குவான்” என நவின்றார்கள்.                     இவ்வாறு ஒரு முறையல்ல இரு முறையல்ல, பகவர்களுக்கு எதிராக இஸ்லாமியப் படை புறப்படும் ஒவ்வொரு முறையும்  நடந்துள்ளது இப்படியான உரையாடல்.                         வீட்டிலிருக்கும் போதே ஷஹாதத்தா? என மக்கள் ஒருவருக்கொருவர் வியப்போடு கேட்டுக்கொள்ளும் அளவுக்கு பிரபல்யமாகி விட்டிருந்தது.                              அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூட உம்மு வரக்கா {ரலி} அவர்களைக் காணும் போதெல்லாம் “இதோ! ஷஹீதா வருகிறார்” என்று கூறுவார்கள்.                                       ”வாருங்கள் நாம் ஷஹீதாவின் வீடு வரை சற்று போய் வரலாம்” என்று நபித்தோழர்கள் பேசிக்கொள்கிற அளவிற்கு நிலைமை மாறிவிட்டிருந்தது.                                              இறைத்தூதர் {ஸல்} அவர்கள் காணும் போதெல்லாம் இவ்வாறு குறிப்பிட்டதிலிருந்து இறைவன் அப் பெண்மணிக்கு ஷஹாதத்தை உறுதியாக வழங்குவான் என்பதை நபித்தோழர்கள் நம்பினார்கள். அதை அம் மக்கள் எதிர் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள்.                                                                               காலம் கனிந்தது. உம்மு வரக்கா {ரலி} அவர்களின் வீட்டில் காஃபிரான ஓர் அடிமையும், ஓர் அடிமைப் பெண்ணும் பணிபுரிந்து வந்தனர்.                                                            
 ”எப்போது நான் இறக்கின்றேனோ அப்போதே உங்களின் அடிமத்தனம் முடிவுக்கு வந்து விடும். நீங்கள் இருவரும் விடுதலையாகி விடுவீர்கள்” என உம்மு வரக்கா {ரலி} அவர்கள் கூறியிருந்தார்கள்.                                ஆனால், விரைவில் விடுதலையாக வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்களே தவிர, அந்தக் காலம் வரும் வரை அவர்கள் காத்திருக்க வில்லை.                                               
 மாறாக, உம்மு வரக்கா {ரலி} அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு துணியை கழுத்தில் இறுக்கிக் கொன்று விட்டார்கள். வீட்டை விட்டும் ஓடியும் விட்டார்கள் அந்த அடிமைகள். அதிகாலை நேரம் ஆட்சித் தலைவர்-அமீருல் முஃமினீன் உமர் {ரலி} அவர்கள் வழக்கம் போல் உம்மு வரக்கா {ரலி} அவர்களின் வீட்டுச் சுவரோரமாக  அவர்கள் குர்ஆன் ஓதும் இனிமையைக் கேட்பதற்காக நின்று கொண்டிருந்தார்கள்.                      ஆனால், நீண்ட நேரமாகியும் குர்ஆன் ஓதப்படுகிற சப்தம் வரவில்லை. ஏதோ உள்ளுணர்வு உறுத்தவே வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்க்கின்றார்கள். இன்னா லில்லாஹ்… உயிரைப் பிரிந்த உடல் உணர்வற்று துணியால் இறுக்கப் பட்டுக் கிடந்தது.                       “வீட்டிலேயே நீங்கள் ஷஹீதாவீர்கள் என அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உண்மையே உரைத்தார்கள்” என உமர் {ரலி} அவர்கள் வாய்விட்டுக் கூறினார்கள்.                                   தப்பியோடிய இரு அடிமைகளையும் கைது செய்து கொண்டு வந்து, கழு மரத்தில் ஏற்றி மரண தண்டனையை நிறைவேற்றினார்கள் கலீஃபா உமர் {ரலி} அவர்கள்.                       மதீனாவில் முதன் முதலாக இவர்களுக்குத்தான் கழுமரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 (நூல்: இஸ்தீஆப், பாகம்:3, பக்கம்:290., அஹ்மத், பாகம்:6, பக்கம்:405., அபூ தாவூத், பாபு இமாமத்துன் நிஸா, ஹதீஸ் எண்:591.)

3.ஏழைகளுக்கு உதவிடும் போது…

 உஹதில் ஷஹீதாகிப் போன தம் தந்தை, ஏராளமான கடன் சுமை,  வயதுக்கு வந்த ஒன்பது சகோதரிகள், ஏழ்மையான சூழ்நிலை என ஏராளமான பிரச்சனைகளோடு நடமாடிக் கொண்டு, கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் பகைவர்களை எதிர்த்துப் போரிட முதல் ஆளாய் வந்து நிற்கிற இளைஞர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் {ரலி} அவர்களைப் பார்க்கிற போதெல்லாம் காருண்ய நபியவர்கள் அவருக்கு பெரிய அளவில் உதவிட வேண்டும், அந்த உதவி அவரின் முழுச் சூழ்நிலைகளையும் மாற்றிட வேண்டும். என தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.                             ஏனெனில், தன்மான உணர்வும், உயர்குலத்தில் பிறந்த சிறப்பும் பெற்றிருந்தவர். நேரிடையாகச் சென்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உதவிட தயக்கம் காட்டியதற்கு இது தான் காரணமாய் அமைந்திருந்தது.                                               
 அன்று அருமையாய் ஒரு சந்தர்ப்பம் அதை நழுவ விட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு மனமில்லை.                
 இன்றைக்கு எப்படியாவது அவரின் துயர் துடைத்திடும் உதவியை செய்தேயாக வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு தயாரானார்கள். தாதுர் ரிகாஃ ஹிஜ்ரி நான்கில் பனூ ஃகத்ஃபான் கிளையாரை எதிர்த்துப் போரிட மாநபி {ஸல்} அவர்களின் தலைமையில் நபித்தோழர்கள் சென்றனர்.                                                           பெரிய அளவில் போரெல்லாம் நடைபெறவில்லை. முஸ்லிம்கள் வெற்றியோடு திரும்பினார்கள். போர் முடிந்து எல்லோரும் கிளம்பிச் சென்று கொண்டிருந்தனர்.                                            இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் ஜாபிர் {ரலி} அவர்களும் எஞ்சியிருந்தனர்.                                 மெதுவாகப் பேச்சை துவக்கினார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள் ”என்ன ஜாபிர்? ஏன் இவ்வளவு தாமதம்?” அதுவா? அல்லாஹ்வின் தூதரே!? கிழட்டு ஒட்டகம் ஆதலால் தான் தாமதம் என்றார்கள் ஜாபிர் {ரலி}.                             கீழிறங்கி என்னிடம் தாருங்கள் என்று ஜாபிரிடம் கூறிவிட்டு, அதை வாங்கிய அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒட்டகத்தின் மீதேறி, பிஸ்மில்லாஹ் கூறி தடவிக்கொடுத்தார்கள்.                     ஒட்டகம் வேகமாகச் செல்ல ஆரம்பிக்கின்றது. அதன் பின்னர் அல்லாஹ்வின் ரஸூல் ஜாபிர் அவர்களிடம் ஒட்டகத்தைக் கொடுத்தார்கள்.                             அதன் மீதேறி அமர்ந்த ஜாபிர் {ரலி} ஒட்டகம் வேகமாகச் செல்வதைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.                   
 மீண்டும் பேச்சைத் தொடர்கின்றார்கள் நபி {ஸல்} அவர்கள் “ஜாபிர் திருமணம் முடித்து விட்டீர்களா?”                             
 ஆம்! என்றார் ஜாபிர் {ரலி}. ”கன்னிப் பெண்ணா? விதவைப் பெண்ணா?”  என்று நபிகளார் கேட்டார்கள். அதற்கவர் “விதவைப் பெண்ணை திருமணம் செய்திருக்கின்றேன்” என்றார்கள்.                   
 ”ஏன் ஒரு கன்னிப் பெண்ணை திருமணம் செய்திருக்கலாமே? மண வாழ்வு மகிழ்ச்சி மிக்கதாய் அமைந்திருக்குமே? “ என்று மாநபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.                                     
 ஜாபிர் {ரலி} சொன்னார்கள் “இல்லை அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு ஒன்பது சகோதரிகள். தந்தை உஹதில் ஷஹீதாகி விட்டார். கடனும் ஏராளமாய் இருக்கின்றது.                         
 இந் நிலையில் நான் என் சகோதரிகளைக் கவனிக்க என் சகோதரிகளின் ஒத்த வயதினில் உள்ள ஒரு கன்னிப் பெண்ணை  திருமணம் செய்தேனென்றால் அது நன்றாக இருக்காது என்பதற்காகத்தான் விதவைப் பெண்னை மணம் முடித்திருகின்றேன்”.
   ஜாபிரே! நாம் மதீனாவின் எல்லையை நெருங்குகிற போது உடனடியாக  நீர் ஊருக்குள் நுழைந்திட வேண்டாம். உமது வருகையை உமது மனைவிக்கு தெரிவித்து விடுங்கள். உமது மனைவி உமக்காக தலையணையைச் சரி செய்து வைப்பார்கள்” என்றார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.                                        

 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சாடையை புரிந்து கொள்ள முடியாமல் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என் வீட்டில் தலையணைகளே இல்லை அல்லாஹ்வின் தூதரே! என்றார் ஜாபிர் {ரலி}.                                                                                                                          அல்லாஹ் நாடினால்… இனி வரும்..என்றார்கள் சிரித்துக் கொண்டே நபி {ஸல்} அவர்கள். தொடர்ந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} தங்களது உரையாடலை “ஜாபிரே! உமது ஒட்டகத்தை எனக்கு விலைக்குத் தருகின்றீரா?”….                                                  
 என்னது என் ஒட்டகத்தையா? அது விலை போகாது இறைத்தூதரே! வேண்டுமானால் நான் அன்பளிப்பாக உங்களுக்குத் தந்து விடுகின்றேன்” என்றார் ஜாபிர் {ரலி} அவர்கள்.                          
 ”இல்லை, ஜாபிர் விலைக்குத் தருவதாக இருந்தால் கூறுங்கள். அன்பளிப்பாகவெல்லாம் தர வேண்டாம்” என்றார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.                                                                   அப்படியானால், ”நீங்களே ஒரு விலையைக் கூறுங்கள்” என்றார் ஜாபிர் {ரலி}.                                                            
அப்போது நபி {ஸல்} அவர்கள் “ஒரு திர்ஹம்” என்றார்கள். என் ஒட்டகம் அவ்வளவு தான் விலை போகுமா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டார் ஜாபிர் {ரலி}.                                           அப்போது நபி {ஸல்} அவர்கள் “இரண்டு திர்ஹம்” என்றார்கள். “வேண்டாம் அல்லாஹ்வின் தூதரே! அன்பளிப்பாகவே எடுத்துக் கொள்ளுங்கள்!” என்றார் ஜாபிர் {ரலி}.                                   ஒவ்வொரு திர்ஹமாக உயர்த்தி, உயர்த்தி இறுதியாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் 700 எழுநூறு திர்ஹமாக அந்த ஒட்டகத்திற்கு விலையாக நிர்ணயித்தார்கள்.                          விலை பேசி நபியவர்கள் முடித்த போது உடனடியாக ஒட்டகத்தின் மேல் இருந்து கீழிறங்கிய ஜாபிர் அவர்களைப் பார்த்த நபியவர்கள் “நீங்களே ஓட்டி வாருங்கள் ஊர் வந்ததும் வாங்கிக் கொள்கின்றேன்” என்று கூறினார்கள்.                                  மதீனா வந்ததும் நேராக மஸ்ஜிதுன் நபவீக்குச் சென்று அங்குள்ள ஒரு தூணில் ஒட்டகத்தை கட்டிப் போட்டு விட்டு, வீட்டுக்கு வந்து விடுகின்றார்கள் ஜாபிர் {ரலி}.                                 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைகிற போது அங்கே ஒட்டகம் கட்டப்பட்டிருப்பதை பார்த்து விட்டு, அதை அங்கே கட்டியவர் யார்? என அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கின்றார்கள்.                     மக்கள் ஜாபிர் என்று கூறினார்கள். உடனடியாக, அங்கிருந்த பிலால் {ரலி} அவர்களை அழைத்து 700 திர்ஹத்தை ஒருபையிலே போட்டுக் கொடுத்து, இந்த ஒட்டகத்தையும், இந்த பணமுடிப்பையும் ஜாபிர் அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் இந்த பண முடிப்பை உங்களிடம் தரச் சொன்னார்கள்.                 
 மேலும், இந்த ஒட்டகத்தை உமக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அன்பளிப்பாக தந்திருக்கின்றார்களாம்” என்று கூறிடுமாறு அனுப்பி வைத்தார்கள்.                                     

 பிலால் {ரலி} அவர்களும் அப்படியே சொல்லி கொடுத்து விட்டுச் சென்றார்கள்.                                                      இந்தச் செய்தியை அறிவிக்கின்ற அறிவிப்பாளர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் ”அதற்குப் பின்னர் தாம் எப்போதுமே வாழ்வில் ஏழ்மை நிலைக்குத் தள்ளப் பட்டதில்லை.                    
அது எங்களின் பொருளாதரத்தை பல்கிப் பெருக்கியது” என்று கூறுகின்றார்கள்.

 (நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பாடம்: ஃகஸ்வது தாதுர் ரிகாஃ, பக்கம்:164,165.)

4.பொறுப்பாளர்கள் தவறு செய்யும் பட்சத்தில்…

 தாதுஸ் ஸலாஸில் எனும் போருக்கு அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களின் தலைமையில் 300 பேர் கொண்ட ஒரு படையை நபி  {ஸல்} அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.                      
  அவருக்கு உதவியாக அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் {ரலி} அவர்களின் தலைமையில் ஓர் துணைப் படையையும் பின்னால் அனுப்பி வைத்தார்கள்.                                                
 அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களின் தலைமையின் கீழ் அபூபக்ர் {ரலி}, உமர் {ரலி} போன்ற பெரும் ஸஹாபிகளெல்லாம் படை வீரராக கலந்து கொண்டார்கள். அவர்கள் கடும் குளிர் காலத்தில் பயணமேற்கொண்டனர்.                                        
 ஸலாஸில் என்பது மதீனாவில் இருந்து 10 நாட்கள் நடந்து செல்லும் தொலைவில் உள்ள ஓர் மணற்பாங்கான பகுதியாகும். போருக்குச் செல்கிற வழியில் இந்த உம்மத்திற்கு பெரும் பாடங்களை கற்றுத் தந்த மூன்று நிகழ்வுகள் நடந்தேறியது.                                  
 பெரும்பாலும் படைத் தளபதிகளே மக்களுக்கு இமாமாக நின்று தொழவைப்பார்கள். அது தான் அண்ணலாரின் வழக்கமாகவும் இருந்தது.                                                           
 ஒரு நாள் இரவு அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களுக்கு குளிப்புக் கடமையாகி விடுகின்றது. தயம்மும் செய்து சுபுஹ் தொழுகையை தொழ வைத்தார்கள்.                            
 இதை அறிந்து கொண்ட உமர் {ரலி} அவர்கள் உட்பட, படை வீரர்கள் அனைவரும் ஆட்சேபித்தனர். ஆனாலும், தளபதியின் முடிவுக்கு கட்டுப் பட வேண்டுமென்ற மாநபியின் கட்டளை அவர்களைத் தடுத்து விட்டது.                                    
அடுத்து ஸலாஸிலை சமீபித்திருந்த ஒரு பகுதியில் இரவு தங்க நேரிட்டது. குளிரின் தாக்கம் அதிகமாகி விடவே, வீரர்கள் நெருப்பு மூட்டினர்.                                                           
 சிறிது நேரத்தில் அங்கு வந்த தளபதியார் “தீயை அணைத்து விடுங்கள்; இனி யாரும் நெருப்பு மூட்ட வேண்டாம். இது தளபதியின்  உத்தரவாகும்” என்று அனைவரிடத்திலும் கூறினார்கள்.                     
 மீண்டும் படை வீரர்களுக்கு மத்தியில் சலசலப்பு  முணுமுணுப்பு. இறுதியாக, போர் நடந்தது.                                
 முஸ்லிம்கள் மாபெரும் வெற்றி வாகை சூடினர். எதிரிகள் தலை தெறிக்க புறமுதுகு காட்டி ஓடினர்.                            
 இப்போது தளபதி அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களிடம் இருந்து ஓர் கட்டளை “எதிரிகளை யாரும் துரத்திச் சென்று தாக்கிட வேண்டாம்; அப்படியே திரும்பி விடுங்கள்.                      யாரும் இப்படியொரு உத்தரவை அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் போடுவார்கள்” என சற்றும் எதிர் பார்க்கவில்லை.                   
  எதிரிகளை பதம் பார்த்திட அருமையானதொரு சந்தர்ப்பம். இனிமேல், இதுபோன்றதொரு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. இம்முறை எதிர்ப்பு கடுமையாகவே தளபதியிடம் வீரர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ”நாம் எதிரிகளை விரட்டிச் சென்று தாக்குவோம்” இல்லை, இப்போதே படை வாபஸ் பெறப்படுகிறது.              உடனடியாக, நாம் மதீனா திரும்பிச் செல்கின்றோம்” என்றார் தளபதி. பல்வேறு சிக்கலுக்குப் பிறகு மதீனா வந்து சேர்ந்தது முஸ்லிம்களின் படை.                                        உடனடியாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் உமர் {ரலி} அவர்கள் மற்றும் இன்னும் சில வீரர்கள் சேர்ந்து தளபதியின் நடத்தை குறித்து முறையிட்டனர்.                                      அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், உமர் கூறிவிட்டார். அபூபக்ர் கூறிவிட்டார். இன்னும் கண்ணியத்திற்குரிய பெரும் ஸஹாபாக்களெல்லாம் கூறிவிட்டனர். உடனே  அம்ர் {ரலி}  அவர்களை அழைத்து அதற்காக தண்டிக்கவில்லை.                     அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்களை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். அம்ர் {ரலி} அவர்கள் வந்ததும் “அம்ரே! மக்கள் உம் மீது இன்னின்னவாறான ஆட்சேபனைகளை என்னிடம் முறையிட்டுள்ளனர். உம்முடைய பதில் என்ன?” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.                அதற்கு அம்ர் {ரலி} அவர்கள் “ ஆம்! அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். கடுமையான குளிரில் குளித்தால் மரணித்து விடுவேனோ என நான் அஞ்சினேன்.                                                  
  அப்போது எனக்கு “உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்கள் மீது அளப்பெரும் கருணையாளனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன்:4:29) எனும் இறை வசனம் நினைவுக்கு வந்தது.                                
 எனவே நான் தயம்மும் செய்து தொழவைத்தேன். அது தவறா இறைத்தூதரே!?” என்று கேட்டார்.                                         அது கேட்ட அண்ணலார் புன்முறுவல் பூத்தவராக “இல்லை, தப்பொன்றும் இல்லை” என்று கூறிவிட்டு, ”ஏன் நெருப்பை மூட்ட வேண்டாம் என்று கூறினீர்கள்” என்று கேட்டார்கள்.                                                                                  அதற்கு அம்ர் {ரலி} அவர்கள் “எதிரிகளின் இடத்தை நாங்கள் நெருங்கிய பின்பு தான் நான் அவ்வாறு கூறினேன். காரணம் நம் நடமாட்டத்தை அறிந்து எதிரிகள் நம்மைத் தாக்கி விடுவார்களோ என நான் அஞ்சினேன்.                                                    
 அதன் பின்னர் தான் அப்படி நான் கட்டளை பிறப்பித்தேன்” என விளக்கம் தந்தார்கள். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் புன்னகை பூத்தார்கள். பின்னர், ”ஏன் விரட்டிச் சென்று தாக்கிட வேண்டாம் என்று உத்தரவிட்டீர்கள்” என மாநபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.                                        
 அதற்கு “எதிரிகளின் எண்ணிக்கை நம் எண்ணிக்கையை விட அதிகம். அவர்கள் களத்தை விட்டும் வெளியேறி பரந்த வெளியில் ஓடிக்கொண்டிருந்தனர்.                                         தொடர்ந்து சென்று தாக்கினால் அவர்கள் சுற்றி வளைத்து நம்மை தாக்கி, வெற்றி பெற்றுவிடுவார்களோ என நான் அஞ்சிய போது அந்த முடிவை எடுத்தேன்” என்று அம்ர் {ரலி} அவர்கள் கூறினார்கள். இப்போதும் நபி {ஸல்}  சிரித்தார்கள்.                             
 பின்பு, “என்ன தான் இருந்தாலும் களத்தில் நிற்கிற போது படைவீரர்களிடம் நீங்கள் ஆலோசித்து முடிவெடுத்து இருக்க வேண்டும். என அறிவுரை கூறி அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

 (நூல்:தாரீகுல் இஸ்லாம் லி இப்னி அஸாக்கிர், பக்கம்: 59 முதல் 67 வரை.)

5.தோழர்களிடத்தில்…

 அபூ ஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “ ஒரு நாள் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களோடு அமர்ந்திருந்தோம். அப்போது நபியவர்கள் “நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன்.                   அப்போது அங்கே மாளிகை ஒன்றின் அருகில் பெண்ணொருத்தி உளூ செய்து கொண்டிருந்தாள். அப்போது நான் ”அந்த மாளிகை (யின் அழகைப் பார்த்து ஆச்சர்யப்பட்டவனாக)  யாருக்குரியது?” எனக் கேட்டேன்.                                                          
 வானவர் ஒருவர் வந்து என்னிடம் சொன்னார் “இது உமர் {ரலி} அவர்களுக்குரியது” என்று சொன்னார். அந்த மாளிகையினுள் நான் உலவ நினைத்தேன்.                                                    
 ”உமர் அவர்களின் ரோஷம் எனக்கு நினைவுக்கு வந்தது. உடனடியாக அங்கிருந்து திரும்பிவிட்டேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                             
 அந்த அவையிலிருந்த உமர் {ரலி} அவர்கள் அழுதுவிட்டார்கள். ”தங்களிடமா நான் ரோஷத்தைக் காட்டுவேன் அல்லாஹ்வின் தூதரே!” என்று உமர் {ரலி} அவர்கள் கேட்டார்கள்.

                           (நூல்: தமிழ் புகாரி, ஹதீஸ் எண்:5226,5227.)


6.மனைவியிடத்தில்….

 அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “முற்காலத்தில் பதினொன்று பெண்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி அமர்ந்து ஒவ்வொருவரும் தங்களின் கணவர் குறித்து ஒளிவு மறைவின்றி உள்ளபடி கூறவேண்டும் என உறுதிமொழியும், தீர்மானமும் எடுத்துக் கொண்டனர்.”                                        
 (மிக நீளமான ஹதீஸின் சுருக்கம்) அதில் பதினொன்றாவதாக பேசிய உம்மு ஸர்உ என்ற பெண்மணி தன்னுடைய கணவர் அப்பெண்மணியை வைத்திருக்கும் விதம் குறித்து ரொம்ப பாராட்டிக்கூறினார்.                                                     
 தான் விரும்புவது போன்று அவர் வைத்திருப்பதாகக் கூறினார். இதை நபி {ஸல்} அவர்களிடம் தெரிவித்த அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் ஒரு கட்டத்தில் பேச்சை நிறுத்தி விட்டார்கள்.                என்ன ஆயிஷா? ஏன் பேச்சின் இடையே நிறுத்தி விட்டாய்? என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.                   அதற்கு அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் “ஆனால், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவரின் கண்வர் அபூ ஸர்உ அப் பெண்மணியை மணவிலக்கு செய்து விட்டார்” எனக் கூறினார்கள். அதற்கு மாநபி {ஸல்} அவர்கள் “அபூ ஸர்உ, உம்மு ஸர்உவை எப்படி வைத்திருந்தாரோ அதைப் போன்றே நானும் உன்னை வைத்துக் கொள்கின்றேன்.                                                  
ஆனால், ஒரு போதும் அவரைப் போன்று நான் உன்னை மணவிலக்கு செய்ய மாட்டேன்” என்று கூறினார்கள். (மனைவி ஆயிஷாவின் உள்ளத்து உணர்வுகளை மிகச் சரியாக உணர்ந்து)

         (நூல்: புகாரி, பாடம்: ஹுஸ்னுல் மஆஷரத்தி மஅல் அஹ்ல்.)


7. நண்பர்களிடத்தில்…

 அபுத் தர்தா {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:
 “ நான் நபி {ஸல்} அவர்களின் அருகே அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் {ரலி} அவர்கள் தமது முழங்கால் தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தைத் தூக்கிப் பிடித்த படி நபிகளாரை நோக்கி வந்தார்கள். உடனே நபி {ஸல்} அவர்கள் “உங்களது தோழர் வழக்காட வந்து கொண்டு இருக்கின்றார்.” என்று சொன்னார்கள்.                               அபூபக்ர் {ரலி} அவர்கள் நபியவர்களுக்கு ஸலாம் கூறி விட்டு, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனார் உமருக்கும் இடையே சின்ன வாக்குவாதம் ஏற்பட்டது. நான் கோபமாக அவரை நோக்கி விரைந்தேன். பிறகு என் செயலுக்காக நான் மனம் வருந்தி, என்னை மன்னிக்குமாறு அவரிடம் வேண்டினேன்.                            ஆனால், அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்களிடம் நான் வந்தேன்” என்று கூறினார்.                       உடனே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} ”அபூபக்ரே! அல்லாஹ் உம்மை மன்னிப்பானாக!” என்று மூன்று முறை கூறினார்கள்.    சிறிது நேரத்தில் உமர் {ரலி} அவர்கள், அபூபக்ர் {ரலி} அவர்களின் வீட்டிற்கு  ”தாம் மன்னிக்க மறுத்ததற்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கலாம்” என்று சென்றிருந்தார்கள்.                 வீட்டார்களிடத்தில் அபூபக்ர் {ரலி} இருக்கின்றார்களா? என்று கேட்டார்கள். வீட்டார்கள் “இல்லை” என பதில் கூறினார்கள்.         ஆகவே, உமர் {ரலி} அவர்கள் நபி {ஸல்} அவர்கள் சமூகத்திற்கு வந்தார்கள்.                                                  
 அப்போது மாநபி {ஸல்} அவர்களின் முகம் கோபத்தால் சிவந்து போயிற்று.                                                       அப்போது, அபூபக்ர் {ரலி} அவர்கள் பயந்து போய் தங்களது முழங்காலின் மீது மண்டியிட்டவர்களாக “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தான் உமரை விட அதிகம் அநீதி இழைத்தவனாவேன்” என இரு முறைக் கூறினார்கள்.              அப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்களை நோக்கி “மக்களே! அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். நீங்கள் நான் பொய்யன் என்று கூறினீர்கள்.                          ஆனால், அபூபக்ர் {ரலி} அவர்களோ “ என்னைப் பார்த்து நீங்கள் உண்மையாளர்” என்று கூறினார்; மேலும், சன்மார்க்கத்தை தூக்கி நிறுத்திடும் பணியில் தன்னையும், தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் அன்பொழுக நடந்து கொண்டார்.                    அத்தகைய என் நண்பரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா?” என்று இரு முறை சொன்னார்கள்.                          அந்த நாளுக்குப் பிறகு ஒரு போதும் அபூபக்ர் {ரலி} அவர்கள் எவராலும் மன வேதனைக்குள்ளாக்கப் படவில்லை.

(நூல்:புகாரி, பாடம்: பாபு ஃபள்லி அபீபக்ர் {ரலி} பஅதன் நபிய்யீ {ஸல்}.)


8.தன்னை நம்பியவர்களிடத்தில்…

முஹம்மத் {ஸல்} அவர்கள் நபியாக அனுப்பப் படாத அந்தக் காலத்தில் மக்காவை புணர் நிர்மானம் செய்யும் பணியில் மக்கத்து தலைவர்கள் ஈடுபட்டிருந்தனர்.                                      இறுதியாக, ஹஜ்ருல் அஸ்வத் கல்லை ” அது இருந்த இடத்தில் யார் வைப்பது என்று சண்டையிட்டுக் கொண்டனர்.” இறுதியாக அவர்களே ஒரு முடிவுக்கும் வந்தனர்.                                                                                                     
 யார் நாளைக் காலை ஹரமுக்குள் முதலாம் நபராக நுழைகின்றாரோ, அவர் சொல்லும் தீர்வுக்கு கட்டுப்படுவது என முடிவு செய்தனர்.                                                       
 மறு நாள் காலை முஹம்மத் {ஸல்} அவர்கள் முதலாம் நபராக நுழைவதக் கண்ட அவர்கள் தங்களின் பிரச்சனையையும், தாங்கள் எடுத்த முடிவையும் கூறி நீங்கள் தான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வைத் தரவேண்டும்” என வேண்டி நின்றார்கள்.                
 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நீண்ட ஒரு போர்வையைக் கொண்டு வரச் சொல்லி, அதனுள் ஹஜருல் அஸ்வத் கல்லை வைத்து அந்தப் போர்வையின் முனைகளைப் பிடித்து கல் இருந்த இடத்தில் வைக்கச் சொன்னார்கள்.                       மக்கத்து தலைவர்கள் மகிழ்ச்சியோடு அந்தத் தீர்வை ஏற்றுக் கொண்டார்கள்.

                     (நூல்: அல் உஸுஸில் அஃக்லாக்கியா, பக்கம்:76.)                                                                  இந்தத் தீர்வு மக்கத்தின் தலைவருக்கு மாத்திரம் பொருந்திப் போவதில்லை. ஒற்றுமையோடு செயல்படுமாறு அன்று சொன்ன அந்தத் தீர்வு இன்றைய நம்முடைய இயக்கத் தலைவர்களுக்கும் பொருந்திப் போவதைக் காணலாம்.                            
 ”நம்முடைய எந்தத் தலைவருக்கும் தான் இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்தின் மீது அக்கறை இல்லையே!”                         ”இந்த உம்மத்தின் உயர்வில் உடன்பாடு இல்லையே! இந்த சமூகத்தின் எழுச்சியில் ஏற்றமான எண்ணங்களில்லையே!”

 ஆக, ஒரு மனிதராக நாம் வாழ்வில் எந்தத் துறைகளிலெல்லாம், எந்தத் தளங்களிலெல்லாம் பயணிக்கின்றோமோ, அத்துணை நிலைகளிலும் மாநபி {ஸல்} அவர்கள் பயணித்து இருக்கின்றார்கள்.

 ஒரு நண்பராக, ஒரு வீரராக, ஒரு தளபதியாக, ஒரு குடும்பத்தலைவராக, ஒரு ஆசிரியராக, ஓர் அரசியல் தலைவராக, ஓர் பணியாளராக, ஓர் சேவையாளராக, ஓர் அதிகாரியாக,                
 ஓர் சாம்ராஜ்ஜியத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத்தலைவராக, இன்னும் எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.          உலகத்தில் மக்கள் செல்வாக்கும், அரசியல் செல்வாக்கும் கொண்ட எந்த ஒரு தலைவரும், எந்த ஒரு சாதனையாளரும், சாதிக்காத சாதனைகளையும், வெற்றியையும் வெறும் 23 ஆண்டுகளில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} முழுமையாக பெற்றார்கள் என்றால் அங்கே அண்ணலாரின் “அறிவார்ந்த அணுகுமுறைகள்” ஆளுமை செலுத்தியதைக் காணமுடியும்.

எல்லாம் வல்ல நாயன் நம் எல்லோரையும் அண்ணலாரின் அறிவார்ந்த அழகிய அணுகுமுறையின் படி வாழ்ந்திடும் நற்பாக்கியத்தை நல்குவானாக! ஆமீன்!

                          வஸ்ஸலாம்!!  
     



    


5 comments:

  1. மவ்லானா! நபியின் அணுகுமுறையை தாங்கள் அணுகிய முறை மெய்சிலிர்க்க வைக்கிறது. இறைவன் தங்களுக்கு அருள்புரிய வேண்டும்.

    ReplyDelete
  2. மிக அற்புதமான சிந்தனை.

    ReplyDelete
  3. Hadisai Arabi lum padhivu panninal miha nandraha irukume

    ReplyDelete
  4. fentastic! no:8th point samudhaayatthai adamaanam vaikum nambikkai dhurohihalukkaana savukkadi. allah ungal kalvi il barakkath seivaanaaha aameen....

    ReplyDelete
  5. அல்லாஹ் உங்கள் முயற்சிக்கு இம்மையிலும் மறுமையிலும் நிரப்பமான கூலியை தருவானாக

    ReplyDelete