Wednesday, 12 March 2014

உன் வெற்றி.. உன் முடிவில்...2 சென்றவாரத் தொடர்ச்சி..



               உன் வெற்றி.. உன் முடிவில்...2
                   சென்றவாரத் தொடர்ச்சி..









உலகில் எந்த ஒரு மனிதனையும், சக மனிதர்கள் மிக எளிதாக அடையாளப்படுத்துவது அவன் பெற்றிருக்கிற வெற்றியைக் கொண்டு தான்.

அது அவன் சார்ந்திருக்கிற துறை ரீதியிலான வெற்றியாக இருக்கலாம். அல்லது குடும்ப ரீதியிலான வெற்றியாக இருக்கலாம்.

நிர்வாக ரீதியிலாகவோ அல்லது அரசியல் தொடர்பானதாகவோ, அல்லது ஆன்மீக ரீதியிலான வெற்றியாகக்கூட இருக்கலாம்.

எந்த வெற்றியாக இருந்தாலும் அதன் பிண்ணனியில் அவன் மேற்கொண்ட முடிவுகளும், அதை அவன் கையாண்ட விதமும்தான் அடிப்படையாக அமைந்திருக்கும்.

இறைமார்க்கம் இஸ்லாமும் அதைத்தான் வெற்றிக்கான இலக்காக, படிக்கல்லாக வகுத்துத்தந்துள்ளது.
இப்லீஸ் மல்வூனாக மாறுவதற்கும், பர்ஸீஸா வழிகேட்டில் வீழ்வதற்கும், பல்ஆம் இப்னு பாவூரா நாயை விட கேவலமான நிலைக்கு தள்ளப்படுவதற்கும் அவர்கள் மேற்கொண்ட தவறான முடிவுகள் தான் காரணமாக அமைந்ததாக அல்குர்ஆன் விளக்கிக் கூறுகின்றது.

எனவே, வாழ்வில் ஒரு மனிதன் மேற்கொள்கிற முடிவு தான் அவன் வாழ்க்கைப் போக்கையே மாற்றுகிறது. அது தான் அவன் வாழ்க்கையின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது என்பதை நாம் விளங்க வேண்டும்.

5. நன்மையளிக்கிற முடிவு (Fair)

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் “இஸ்லாமிய உலகை, இஸ்லாமிய ஆளுமையை, இஸ்லாமிய அரசியல் கலாச்சாரத்தை உலகிற்கு உணர்த்திய பொற்காலம்ஆகும்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உலகத்தின் அத்தனை ஆட்சியாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் வியந்து போற்றும் அளவிற்கு மாட்சிமை பொருந்திய ஆட்சியை வழங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் உமர் (ரலி) அவர்கள்.

காரணம் தங்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பல்வேறு முக்கியமான தருணங்களின் போதும், குழப்பமான பிரச்சனைகளின் போதும் அவர்கள் மேற்கொண்ட அழகிய முடிவுகள் தான் என உறுதியாகச் சொல்ல முடியும்.

முஆவியா (ரலி) அவர்களை ஷாமின் ஒரு பகுதியான ஹிம்ஸ் –ல் இருந்து பதவி நீக்கம் செய்த பிறகு அந்த இடத்திற்கு நல்ல ஒரு ஆட்சியாளரை அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டது.
அன்றைய சூழ்நிலையில் இரண்டாம் கூஃபா என்று அழைக்கும் நிலைக்கு பெரும் வர்த்தக நகரமாக ஹிம்ஸ் மாறிக்கொண்டிருந்தது.

அங்குள்ள மக்களும் எந்த ஒரு ஆட்சியாளரையும் பொருந்திப் போகிற மனோ நிலையில் இல்லை. யாரை நியமித்தாலும் ஏதாவது குற்றங்குறைகளை சுமத்தி அவரை பதவியில் நீடிக்க வைப்பதில்லை.

ஆதலால் உமர் (ரலி) அவர்களுக்கு இது பெரும் மன உளைச்சலை தந்து கொண்டிருந்தது.

உடனடியாக அவசர ஆலோசனை மன்றத்திற்கு முக்கியமான நபித்தோழர்களை வரச்சொல்லி ஆணை பிறப்பித்தார்கள்.

ஆலோசனை மன்றம் கூடியதும் உமர் (ரலி) அவர்கள் வருகை புரிந்திருந்தவர்களை நோக்கி “இந்த ஷாம் மக்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நாம் மிருதுவான சுபாவம் கொண்ட ஒருவரை ஆட்சியாளராக நியமித்தால், அவரை பலவீனப்படுத்தி விடுகின்றார்கள்.

 நல்ல வலுவான ஆற்றல் கொண்ட ஒருவரை ஆட்சியாளராக நியமித்தால், அவரின் மீது குறை கூறுகின்றனர். நல்ல நம்பிக்கையும், பலமும் அவர்களை புரிந்து கொண்டு செயல்படும் தன்மையும் கொண்ட ஒருவர் நம்மிடையே இருந்தால் அடையாளம் காட்டுங்கள். அவரை நாம் அம்மக்களுக்கு ஆட்சியாளராக நியமிப்போம்  என்றார்கள்.

அங்கிருந்தவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன்! அப்படிப்பட்ட ஒருவர் இன்று இங்கேயே இருக்கின்றார்என்றார். உமர் (ரலி) அவர்கள் பேரார்வத்தோடு யார்? என வினவினார்கள்.

அதற்கவர், உங்கள் மகனார் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தான் அதற்கு முழுத்தகுதியும் வாய்ந்தவர் எனக் கூறினார்.

அப்துல்லாஹ்வை அதற்கான தகுதிகள் உடையவராக நான் கருதவில்லை. அப்படியே அவர் தகுதிபடைத்தவராக இருந்தாலும் அப்படியான நியமனம் எதையும் நாம் அவருக்குச் செய்யமாட்டோம் என்றார்கள்.

                               (நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:122)

திடீரென உமர் (ரலி) அவர்கள் நான் ஒருவரை கண்டு கொண்டேன். அவர் தான் அம்மக்களுக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார். அவர் வேறு யாருமல்ல ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் தான். போய் அழைத்து வாருங்கள் என்று ஆளனுப்பினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை வரலாற்று ஆசிரியர்கள் கூறும் போது பின்வரும் ஒரு நிகழ்வினை சுட்டிக்காட்டுகின்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த துவக்க காலத்தின் ஒரு நாள் காலைப் பொழுதில், உமர் (ரலி) அவர்களைச் சந்திக்க வருகிறார்கள் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள்.

வழக்கமான சம்பிரதாய விசாரிப்புகள் முடிவடைந்த்தும் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களை நோக்கி “முஃமின்களின் தலைவரான உமர் அவர்களே! இஸ்லாம் உயர்த்திப் பிடிக்கிற சில அரசியல் கொள்கைகளை உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

குடிமக்களின் விவகாரங்களில் அல்லாஹ்வை நீங்கள் அதிகம் அஞ்சிக் கொள்ளுங்கள். ஏகனாகிய அல்லாஹ்வின் விவகாரங்களில் எந்த மனிதருக்கும் நீங்கள் அஞ்சிட வேண்டாம்.

உங்களின் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாட்டை உருவாக்கி விடாதீர்கள். ஏனெனில், சொற்களில் மிகச் சிறந்தது அதை செயலில் கொண்டுவருவது தான்.

அல்லாஹ் உங்களை முஸ்லிம்களின் பொருப்புதாரியாக நியமித்து இருக்கிறான். அவர்களின் விஷயத்தில் பேதங்களின் அடிப்படையில் நீங்கள் நடந்து கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே ஆதரவு வைத்துச் செயல்படுங்கள்.

உங்களுக்கும், உங்கள் வீட்டாருக்கும் விரும்புவதையே, மக்களின் விஷயத்திலும் விரும்புங்கள். உங்கள் விஷயத்திலும், உங்கள் வீட்டாரின் விஷயத்திலும் எதையெல்லாம் நீங்கள் வெறுப்பீர்களோ மக்களின் விஷயத்திலும் வெறுத்துவிடுங்கள்.

சத்தியத்தில் நிலைத்து நின்று, சத்தியத்திற்கே சான்றாய் நீங்கள் விளங்குங்கள். அல்லாஹ்வின் விஷயத்தில் எவருடைய பழிப்புக்கும் நீங்கள் அஞ்ச வேண்டாம்என்று கூறினார்கள்.

                            (நூல்: அல் பிதாயா வன் நிஹாயா, பாகம்:4, பக்கம்:55)

ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் வந்ததும், தாம் அவர்களை ஷாமின் ஹிம்ஸ் பகுதிக்கு ஆளுநராக நியமனம் செய்துள்ளதாகக் கூறினார்கள்.

அதைக்கேட்டதும் ஸயீத் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன் அவர்களே! என்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடாதீர்கள்! நான் ஆளுநராகச் செல்ல மாட்டேன்! என்று மறுத்தார்கள்.

கடும் கோபமடைந்த உமர் (ரலி) அவர்கள் “உங்கள் பொறுப்புக்களையும், பிரதிநிதித்துவத்தையும் என் கழுத்தில் சுமத்தி, என்னை தனியாக தவிக்க விட்டு ஓடிடலாமென்று நினைக்கின்றீர்களா? ஒரு போதும் விட மாட்டேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஹிம்ஸ் பகுதியின் மக்களுக்கு உம்மை விட சிறந்த ஓர் ஆட்சியாளரை என்னால் தர இயலாது. மறுக்காமல் அல்லாஹ்வின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்!என்றார்கள்.

பின்னர் வேறு வழியின்றி அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள்.

பின்னர் தமது மனைவியோடு ஹிம்ஸ் – க்கு பயணமானார்கள். தமது நன்னடத்தை மற்றும் சிறந்த நிர்வாகம் ஆகியவற்றால் அம்மக்களிடம் ஓர் நிலையான நன் மதிப்பையும் பெற்றுக்கொண்டார்கள்.

 கட்டுப்பாடற்ற தன்மைக்கு பெயர் போன ஷாம் தேசத்து மக்கள் முழுக்க முழுக்க ஸயீத் (ரலி) அவர்களின் ஆளுமையின் கீழ் கட்டுப்பாடான நிலைக்கு மாறிப் போயிருந்தனர்.

இந்நிலை கண்டு ஆச்சர்யப்பட்டுப்போன உமர் (ரலி) அவர்கள், நேரில் சென்று கள ஆய்வு செய்திட அரசியல் நல்லெண்ணப் பயணமாக ஷாம் புறப்பட்டு வந்தார்கள்.

ஷாமின் அத்துனை பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்ட உமர் (ரலி) அவர்கள், தம்மை எதிர்கொண்ட எல்லா மக்களிடமும் ஸயீத் (ரலி) அவர்கள் குறித்து விசாரித்தார்கள். மக்கள் அனைவரும் ஸயீத் (ரலி) அவர்கள் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதை அவர்கள் உதிர்த்த பதில் அதை உறுதிபடுத்தியது.

ஒரு நாள் பொழுது, உமர் (ரலி) அவர்கள் ஸயீத் (ரலி) அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் “ஸயீதே! ஷாம் தேசத்து மக்கள் அனைவரும் உம்மை நேசித்து, உம் ஆளுமையின் கீழ் ஓரணியாய் செயல்பட என்ன காரணம்?என்று கேட்டார்கள்.

அதற்கு, ஸயீத் (ரலி) அவர்கள் “அமீருல் முஃமினீன் அவர்களே! என்னை ஆளுநராக அனுப்பிய அந்நாளிலேயே “அல்லாஹ்வின் ஷரீஅத்துடைய விஷயத்தில் நான் எவ்வாறு நடந்து கொள்வேன்என்று அம்மக்களிடம் மிகத்தெளிவாக கூறி விட்டேன்.

மேலும் அவர்களுக்கான தேவைகளின் போது நல்லதொரு உதவியாளனாகவும், அவர்களின் தளர்ந்த நேரங்களில் ஆறுதல் சொல்பவனாகவும் நான் அவர்களிடம் நடந்து கொள்கின்றேன்என்று பதில் கூறினார்கள்.

வரலாற்று ஆசிரியர் காலித் முஹம்மத் காலித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “மிக முக்கியமான தருணத்தில் ஸயீத் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்து ஹிம்ஸ் - க்கு ஆளுநராய் அனுப்ப உமர் (ரலி) அவர்கள் எடுத்த அந்த முடிவு தான் அவர்களின் ஆட்சி மிகச்சிறப்பாய் அமைய உதவியது.

ஏனெனில், பின்நாளில் ஃகிலாஃபாவிலே பிரச்சனைகளை ஏற்படுத்தியவர்களாக, கிளர்ச்சியாளர்களாக கூஃபா மற்றும் ஷாம், ஹிம்ஸ் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தவர்கள் தான் பங்கெடுத்தனர்.

ஆனால், கட்டுப்பாடற்ற தன்மைக்கு பெயர்போன ஷாம் தேசத்து மக்களை, முழுக்க முழுக்க தம் ஆளுமையின் கீழ் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள், கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிறைந்த மக்களாய் மாற்றிக்காட்டினார்கள்.
                 (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:151 – 159.)


6. நடைமுறைக்கு இணக்கமான முடிவு (Practical Harmonious)

ஹுதைபிய்யா உடன்படிக்கை ஹிஜ்ரி 6-ல் மக்கா குறைஷிகளுக்கும், நபிகளாரின் தலைமையில் உம்ரா செய்யச் சென்ற முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெற்ற உடன்படிக்கையாகும்.

மக்காவிற்குள் நுழையக்கூடாது என தடுக்கப்பட்ட பின் ஏற்பட்ட உடன்படிக்கையாகும்.

வெளிப்படையாக பார்க்கிற போது இது முஸ்லிகளுக்கு ஏற்பட்ட தோல்வி போன்று தோன்றினாலும் இது தான் இஸ்லாம் உலகம் தழுவிய அளவில் விரிவடைவதற்கு பெரும் அரணாய் அமைந்தது.

உடன்படிக்கையில் கூறப்பட்ட 4 அம்சங்கள்

1.நபியவர்கள் இந்த ஆண்டு திரும்பிச் செல்ல வேண்டும். மக்காவிற்குள் நுழையக்கூடாது. அடுத்த வருடம் முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால், அவற்றை உறைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித தொந்தரவும் கொடுக்கப்பட மாட்டாது.

2.பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கை எடுக்கக் கூடாது. யாரும் எவருக்கும் எவ்வித தீங்கும் செய்யக்கூடாது.

3.எவர் வேண்டுமானாலும் முஹம்மதின் ஒப்பந்தத்திலும், குறைஷியரின் ஒப்பந்தத்திலும் சேர்ந்து கொள்ளலாம். அது அவரவரின் விருப்பத்தைச் சார்ந்தது. எந்த ஒரு கிளையாரும் இந்த இரு வகுப்பாரில் சேர்ந்து கொள்கிறாரோ அவர் அந்த வகுப்பாரையே சேர்ந்தவராவார். அதற்குப் பின் அந்தக் கிளையாருடன் யாராவது அத்துமீறி நடந்து அது அந்த வகுப்பினர் மீது அத்துமீறி நடந்து கொண்டதற்குச் சமமாகும்.

4.குறைஷிகளில் எவராவது தனது பாதுகாவலரான நெருங்கிய உறவினரின் அனுமதியின்றி தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால், குறைஷியர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், முஸ்லிம்களில் எவராவது தப்பித்து குறைஷியர்களிடம் வந்து விட்டால் அவர் மீண்டும் முஹம்மதிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்.

இந்த ஒப்பந்தம் ஏற்படுத்திய விளைவுகள்

1.முஹம்மது {ஸல்} அவர்களையும், முஸ்லிம்களையும் எப்படியாவது வேரோடு அழித்து விட வேண்டும் என்பதிலேயே குறிக்கோளாக இருந்த குறைஷியர்கள் சமாதான உடன்படிக்கைக்கு பணிந்து வந்ததே முஸ்லிம்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

2.இனி முஸ்லிம்களை எதிர்த்து போராட தங்களிடம் எவ்வித ஆற்றலும் இல்லை என்பதை குறைஷிகள் ஒத்துக் கொண்டது போல் அமைந்து விட்டது.

3.ஒப்பந்தத்தின் முதல் அம்சம் முஸ்லிம்களுக்கு கிடைத்த இரண்டாம் வெற்றியாகும். “இது நாள் வரை முஸ்லிம்களைக் குறைஷிகள் அல்லாஹ்வின் பள்ளியிலிருந்து தடுத்து வந்ததற்கு ஓர் முற்றுப்புள்ளியாய் அது அமைந்து விட்டது.இதுவும் குறைஷிகளுக்கு தோல்வி தான். ஏனெனில், இந்த வருடம் மட்டுமே அவர்களால் தடுக்க முடிந்ததே தவிர வேறெந்த சாதகமும் அவர்களுக்கு இல்லை.

4.ஒப்பந்தத்தின் இரண்டாம் அம்சம் முஸ்லிம்களுக்கு கிடைத்த மூன்றாம் வெற்றியாகும்.  “முஸ்லிம்கள் குறைஷிகளுடன் ஒருபோதும் தாங்களாக போரைத்தொடர்ந்தது கிடையாது. மேலும், இப்படி ஒப்பந்தம் செய்ததால் குறைஷிகளின் அகம்பாவம், ஆணவம் ஆகியவற்றிற்கும், அல்லாஹ்வின் பாதையிலிருந்து தடுக்கும் அவர்களின் வம்புத்தனத்திற்கும் ஒரு முடிவு கட்டப்பட்டது.  மேலும், அவர்கள் வலுவிழந்து தோற்றுப்போனார்கள் என்பதை சுட்டிக் காட்டுவதாயும் அது அமைந்து விட்டது. இதுவும் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வியே.

5.ஒப்பந்தத்தின் மூன்றாம் அம்சம் முஸ்லிம்களுக்கு கிடைத்த நான்காம் வெற்றியாகும். “குறைஷிகள் அதுவரை கட்டிக்காத்து வந்த தங்களது தலைமைத்துவத்தை முற்றிலுமாக இழந்து விட்டிருந்தனர் என்பதையும், இனி தங்களை பாதுகாத்துக் கொள்வதே மிக முக்கியம் என்பதை ஒத்துக்கொண்டனர் என்பதையும் எடுத்துக் கூறிற்று.மேலும், இதுவும் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விதான்.

6.ஒப்பந்த்த்தின் நான்காம் அம்சம் முஸ்லிம்களுக்கு கிடைத்த ஐந்தாம் வெற்றியாகும். “எந்த ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளனும் அல்லாஹ்வை விட்டோ, அவனின் சத்திய தூதரை விட்டோ, உயர்வான தீனுல் இஸ்லாத்தை விட்டோ, முஸ்லிம்களின் கூட்டமைப்பை விட்டோ விலகிச் செல்ல விரும்ப மாட்டார். அப்படியே விலகிச் சென்றாலும் அது இறைமார்க்கத்திற்கோ, முஸ்லிம்களுக்கோ எவ்வித நஷ்டமும் இல்லை. இந்த நான்காவது அம்சத்தின் மூலமும் குறைஷிகள் தோல்வியைத்தான் தழுவினர்.

(நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:200-203. தமிழ் ரஹீக், பக்கம்:417-423.)


இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அல்லாஹ்வின் தூதர் எடுத்த நடைமுறைக்கு இணக்கமான அந்த முடிவால் வெறும் இரண்டே ஆண்டுகளில் 1400-க இருந்த முஸ்லிகளின் எண்ணிக்கை ஹிஜ்ரி 8 மக்கா வெற்றியின் போது 10000 –க உயர்ந்ததையும், அயல் நாடுகளில் இஸ்லாம் விரிவடைவதற்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அண்ணலாரின் இறுதிஉரையின் போது 100000 –க்கும் மேற்பட்டோர் அணிவகுத்து நிற்பதற்கும் அச்சாரமாய் அமைந்தது என்றால் அது மிகையல்ல.


7. நியாயமான முடிவு (Ethical)

ஃபத்ஹ் மக்கா- மக்கா வெற்றி, முஸ்லிம்கள் இது நாள் வரை அடைந்திருந்த எல்லா துன்பங்களுக்கும் முழுமையான விடை கொடுக்கப்பட்ட நாள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் கரத்தில் முழுமையான அதிகாரங்கள் வரப்பெற்றிருந்த நாள்.

ஒரு புறம் முஸ்லிம்கள் வெற்றியின் மகிழ்ச்சியிலும், மறு புறம் குறைஷிகள் என்ன நடக்குமோ என பீதியிலும் உறைந்திருந்த நாள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கஃபாவின் உள்ளே நுழைந்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக இரண்டு ரக்அத் தொழுது விட்டு வெளியே வந்தார்கள்.

கஃபாவின் வாசலில் நிலைப்படியை பிடித்துக் கொண்டு, குறைஷிகளை நோக்கி “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன். அவனுக்கு எவ்வித துணையுமில்லை.

அவன் தனது வாக்கை நிலை நாட்டினான்; தன் அடியாருக்கு உதவி செய்தான்; அவனே ராணுவங்கள் அனைத்தையும் தோற்கடித்தான். இதுவரை நடைமுறையில் இருந்து வந்த அல்லாஹ்வின் இந்த இல்லத்தை பராமரிப்பது, ஹாஜிகளுக்கு தண்ணீர் புகட்டுவது ஆகிய இவ்விரண்டைத் தவிர ஏனைய அனைத்துச் சிறப்புக்களையும், மற்ற பொருள் அல்லது உயிர் சம்பந்தப்பட்ட அனைத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எனது இவ்விரண்டு கால்களுக்குக் கீழ் புதைத்து விட்டேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தவறாக்க் கொலை செய்து விடுதல் என்பது “ஷிப்ஹுல் அம்தைப் போன்றுதான். (சாட்டை அல்லது கைத்தடி போன்ற கொலைசெய்யப் பயன்படாத ஆயுதங்களால் தாக்கும் போது ஏற்படும் எதிர்பாராத உயிரிழப்புக்கு ஷிப்ஹுல் அம்த்எனப்படும்.) இதற்கு கடுமையான குற்றப் பரிகாரம் கொடுக்கப்பட வேண்டும். அதாவது, 100 பெண் ஒட்டகைகள் கொடுக்க வேண்டும். அதில் 40 சினை ஒட்டகையாக இருக்க வேண்டும்.

குறைஷிக்கூட்டமே! அறியாமைக்காலத்தில் நீங்கள் கடைபிடித்த மூடத்தனமான பழக்கவழக்கங்களையும், முன்னோர்களைக்கொண்டு பெருமையடித்து வந்ததையும் இப்பொழுது அல்லாஹ் போக்கி விட்டான்.

மக்கள் அனைவரும் ஆதமின் சந்ததியினர் ஆவர். என்று கூறிவிட்டு “அல்குர்ஆனின் 49-ஆம் அத்தியாயத்தின் 13-ஆம் வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்.

பின்னர், குறைஷிக் கூட்டத்தினரே! நான் உங்களிடம் எவ்விதம் நடந்து கொள்வேன் எனக் கருதுகின்றீர்கள்? என அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கேட்க, “நல்ல முறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களுக்குச் சிறந்த சகோதரராகவும், எங்களில் சிறந்த சகோதரரின் மகனாகவும் இருக்கின்றீர்கள்என குறைஷிகள் பதில் கூறினார்கள்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள் “நான் உங்களுக்கு யூஸுஃப் நபி {அலை} அவர்கள் தனது சகோதரர்களுக்குக் கூறியதைப் போன்றுதான் கூறுவேன். உங்களை எவ்வித்த்திலும் பழிக்கப்படாது, நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள். நீங்கள் எவ்வித அச்சமும் இன்றி உங்கள் இல்லங்களுக்குச் செல்ல்லாம்என்று கூறினார்கள்.

(நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:226,227. தமிழ் ரஹீக், பக்கம்:495,496.)

கண்ணில் மரண பயமும், எவ்வித ஆதரவும் இன்றி நிராயுதபாணிகளாய் சரணடைந்து, குற்ற உணர்வுடன் கூனிக்குறுகி நின்று கொண்டிருந்த மக்கள் விஷயத்தில் அண்ணல் நபிகளார் மேற்கொண்ட நியாயமான முடிவு உலக மனித வரலாற்றில் இன்றளவும் யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக மிளிர்ந்து கொண்டிருப்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கின்றது.

8.ஆலோசனை செய்து எடுக்கிற முடிவு (Consideration)

ஸபா நாட்டு அரசிக்கு இஸ்லாமிய நற்பேறு கிடைக்க அவர்கள் மேற்கொண்ட ஆலோசனைதான் வழிவகை செய்ததாக அல்குர்ஆன் இயம்புகிறது. (பார்க்க: அல்குர்ஆன்:27:23-44)
அஹ்ஸாப் யுத்தத்தின் வெற்றியைத் தீர்மானிக்க பாரசீகத்தைச் சார்ந்த ஸல்மானுல் ஃபார்ஸி (ரலி) அவர்களின் ஆலோசனையும் முக்கிய பங்கு வகித்ததாக வரலாறு பதிவு செய்திருக்கின்றது.


9.சட்ட ரீதியான முடிவு (Legal)

ஹிஜ்ரி 6, துல்கஅதா மாதம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தாங்கள் கண்ட கனவின் அடிப்படையில் உம்ரா செய்ய 1400 தோழர்களுடன் மக்கா நோக்கி பயணமானார்கள்.

 நபி {ஸல்} தங்களின் நிலையையும், நோக்கத்தையும் உறுதியாகத் தெளிபடுத்திக் கூறவும், குறைஷிகளிடம் ஒரு தூதரை அனுப்ப விரும்பியும் உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள்.

ஆனால், உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அங்கு சென்ற பின் எனக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் எனக்காக களமிறங்கிப் போராடும் அதீ இப்னு கஅப் கிளையைச் சார்ந்த எவரும் அங்கில்லை. எனவே, உஸ்மான் (ரலி) அவர்களை அனுப்புங்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தை அவர் தான் சரியான முறையில் குறைஷிகளிடம் எடுத்து வைப்பார்!என்று கூறினார்கள்.

நபியவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்து “நீர் குறைஷிகளிடம் சென்று, நாம் போருக்காக வரவில்லை; உம்ராவிற்காகத்தான் வந்திருக்கின்றோம் என்று எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு அவர்களை சத்திய தீனின் பக்கம் அழையுங்கள்! மேலும், மக்காவில் இருக்கும் முஸ்லிகளைச் சந்தித்து வெற்றி நமக்குத்தான் என்ற நற்செய்தியைக் கூறுங்கள்! அல்லாஹ் அவனது மார்க்கத்தை மிக விரைவில் மக்காவில் ஓங்கச் செய்வான். ஆகவே, யாரும் இறைநம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்களிடம் சொல்லுங்கள்! என்று கூறினார்கள்.

ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். வழியில் பல்தஹ் எனும் இடத்தை கடந்த போது சில குறைஷிகளை சந்தித்தார்கள். தங்களின் உரையாடலின் போது தாங்கள் மக்காவிற்கு செல்வதின் நோக்கத்தை குறைஷிகளிடம் தெரிவித்தார்கள் உஸ்மான் (ரலி) அவர்கள்.

அதற்கு குறைஷிகள் நீர் சொல்வதை நாங்கள் கேட்டு விட்டோம். நல்ல விஷயம் தான். நீர் உமது நோக்கத்தை நிறைவேற்ற மக்காவிற்குச் செல்ல்லாம்என்றனர்.

கூட்டத்தில் இருந்த அபான் இப்னு ஸயீத் இப்னு அல் ஆஸ் என்பவர் எழுந்து உஸ்மான் (ரலி) அவர்களை வரவேற்று, பின்னர் தம் குதிரைக்கு கடிவாளமிட்டு அதில் தன் பின்னால் அமரவைத்து, அவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்து மக்காவிற்கு அழைத்து வந்தார்.

மக்கா வந்ததும் குறைஷித்தலைவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் ஆசையை உஸ்மான் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், நீங்கள் வேண்டுமானால் கஅபாவை வலம் வர அனுமதிக்கின்றோம். ஆனால், நபியவர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்று குறைஷிகள் கூறிவிட்டனர்.

ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் நபிகளார் இல்லாமல் தாம் வலம் வர இயலாது என மறுத்து விட்டார்கள்.

குறைஷிகள் உஸ்மான் (ரலி) அவர்களை கையில் காப்பு இட்டு மக்காவில் ஓரிடத்தில் தடுத்து வைத்து விட்டனர். இந்த பிரச்சனையில் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கும் வரை உஸ்மான் அவர்களை அனுப்பாமல் தடுத்து வைத்திடுவோம் என அவர்கள் முடிவெடுத்தனர்.

ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் எனும் செய்தி மக்காவிலும், மக்காவிற்கு வெளியிலும் மிக விரைவாக பரவியது.

இப்படியே முஸ்லிம்களுக்கும் வந்து கிடைத்தது. இந்தச் செய்தி மாநபி {ஸல்} அவர்களிடம் சொல்லப்பட்ட போது “குறைஷியர்களிடம் போர் செய்யாமல் இவ்விடத்தை விட்டு நாம் நகரக்கூடாது.என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

மேலும், தங்களது தோழர்களைப் போருக்காக உடன்படிக்கை செய்து தர அழைத்தார்கள். ஸஹாபாக்கள் உயிர் இருக்கும் வரை போராடுவோம் என்பதாகவும், அதற்காக உயிரைக் கொடுக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் நபிகளாரிடம் ஒப்பந்தம் செய்தார்கள்.

அபூ ஸினான் அல் அஸதீ (ரலி) என்பவர்தான் முதன் முதலில் ஒப்பந்தம் செய்தார். ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அவர்களோ மூன்று முறை ஒப்பந்தம் செய்தார். அதாவது, மக்கள் ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்த போதும், பின்பு நடுவிலும், பின்னர் இறுதியிலும் ஒப்பந்தம் செய்தார்.

நபி {ஸல்} அவர்கள் தங்களின் ஒரு கையால் மற்றொரு கையைப் பிடித்துக் காட்டி “இந்தக் கை உஸ்மான் சார்பாகஎன்று கூறினார்கள். அதாவது, உஸ்மான் (ரலி) உயிருடன் இருந்தால் இதிலும் பங்கெடுத்து இருப்பார் என்பதை உணர்த்தும் முகமாக நபிகளார் இதைச் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு மரத்திற்கு கீழ் இவ் உடன்படிக்கையை வாங்கினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபியின் கையைத் தாங்கி பிடித்து இருந்தார்கள். மஃகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் மரத்தின் ஒரு கிளையைச் சாய்த்து நபிகளாருக்கு நிழல் தரும் வண்ணமாக பிடித்திருந்தார்கள்.

இந்த உடன்படிக்கையைத் தான் “பைஅத்துர் ரிள்வான் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இறைபொருத்த்த்திற்குரிய உடன்படிக்கைஎன இஸ்லாமிய வரலாறு சான்று பகர்கின்றது.

அல்லாஹ்வும், இது குறித்து திருமறையில் “இறை நம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களை குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்.என்று (அல்குர்ஆன்:48:18). குறிப்பிடுகின்றான்.

நிலைமை இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க ஆயத்தமாகி விட்டார்கள். எனும் செய்தி குறைஷிகளுக்குத் தெரியவரவே, இனியும் உஸ்மான் (ரலி) அவர்களை தடுத்து வைத்திருப்பது தங்களுக்கு நல்லதல்ல என்று கருதி உஸ்மான் (ரலி) அவர்களை விடுதலை செய்துவிட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், நபித்தோழர்களும் புறப்பட்டு சில எட்டுக்கள் தான் வைத்திருப்பார்கள். அதற்குள் உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கே வந்து விடுகின்றார்கள்.

(நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:9, பக்கம்:100-102, தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:199.)

இதன் பின்னர் தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்வு நடந்தேறியது.

அன்றும் தூதுவர்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டும், அவர்கள் துன்புறுத்தப்படவோ, கொலை செய்யப்படவோ கூடாது எனும் நடைமுறை சட்டரீதியாக மதிக்கப்பட்டு வந்தது.

லாவகமாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சட்ட ரீதியான அந்த முடிவை கையில் எடுத்து, மூர்க்கத்தனமும் துரோகமிழைக்கும் குணமும் கொண்ட குறைஷிகளை சட்டத்தின் முடிவின் முன் மண்டியிட வைத்து மாபெரும் வெற்றியை ஈட்டினார்கள்.

எனவே, வாழ்க்கையில் வெற்றிகளை குவித்துத் தருகிற, முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்கிற முடிவுகளை மேற்கொள்கிற நல்ல ஆற்றல் படைத்தோராக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்புரிவானாக!

முன்னேற்றம் தருகிற முடிவுகளை கையாள்கிற தகுதிவாய்ந்தோராக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!

           ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

                     வஸ்ஸலாம்!!

  



  

   



 

2 comments:

  1. subhanallah vaalthuvadarku vaarthai podadu . very nice . pudumayana talaipu .irai pani sirakka iraivanidam vendugiren

    ReplyDelete
  2. ஹழ்ரத் இந்த வார பதிவுக்காக கார்திருக்கிறோம் (20:3:14)

    ReplyDelete