Thursday, 29 October 2015

இறை சாபத்தைப் பெற்றுத் தரும் பதுக்கல் வியாபாரம்!



இறை சாபத்தைப் பெற்றுத் தரும் பதுக்கல் வியாபாரம்!



 
நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், உணவுப் பொருள்களுக்கான தேவையும் பல மடங்கு அதிகரித்து வருகிறது.உணவுப் பொருள்களின் விலை உயர்வு மக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.

அதிலும் குறிப்பாக பருப்பின் விலை சமீப நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அரசியலிலும் பெரும் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வுக்கு உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து வருவது, பெட்ரோலிய பொருள்கள் விலையேற்றம், முன்பேர வர்த்தகம் மற்றும் தேவையில்லா ஏற்றுமதி போன்றவற்றால் தான் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவதாக பல காரணங்கள் கூறப்படுகிறது.

உணவு தானியங்களின் உற்பத்தியைப் பொறுத்த வரையில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பல மடங்கு குறைவாகவே உள்ளது.

இந்தியாவில், ஒரு எக்டரில் நெல் உற்பத்தி, 2.20 டன் என்ற அளவில் தான் உள்ளது. அதேசமயம், ஜப்பான் நாட்டில் ஒரு எக்டரில், 6.50 டன்னும், சீனாவில் 6.70 டன்னும், எகிப்தில் 7.50 டன்னும், இஸ்ரேலில் 5.50 டன் என்ற அளவிலும் நெல் உற்பத்தியாகிறது, இத்தனைக்கும் மேலே குறிப்பிட்டுள்ள நாடுகள் அனைத்தும், முழு அளவில் விவசாயத்தை மேற்கொள்ளும் நாடுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும், லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் சார்ந்திருந்த விவசாய தொழிலை விட்டு, வெளியேறி உள்ளனர் என்பது வருந்தத்தக்க செய்தியாகும்.

இந்தியாவில், 2.30 லட்சம் எக்டரில் 1.05 கோடி டன் அளவுக்கு பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது, போதியளவிற்கு இல்லாததால், ஆண்டுதோறும் 30 லட்சம் டன் அளவுக்கு பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. பருப்பு வகைகளை தொடர்ந்து இறக்குமதி செய்வதால், அதன் விலை நிலையில்லாமல் உள்ளது. 118 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், 2001ம் ஆண்டுக்குப் பிறகு வேளாண் உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளது.

என்றாலும் விலைவாசி உயர்வுக்கு பதுக்கலும் மிக முக்கிய காரணியாக இருக்கிறது என்பதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.

இதையடுத்து மத்திய அரசு பதுக்கி வைத்திருக்கிற பருப்புகளை பறிமுதல் செய்ய பறக்கும் படைகளை நியமித்தது.

இதன் பலனாக இதுவரை நடத்தப்பட்ட 6 ஆயிரத்து 77 பதுக்கல் வேட்டையில் 13 மாநிலங்களில் 74,846.35 டன் பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 46,397 டன்னும், கர்நாடகத்தில் 8,755.34 டன்னும், பீகாரில் 4,933.89 டன்னும், சத்தீஷ்காரில் 4,530.39 டன்னும், தெலுங்கானாவில் 2,546 டன்னும், மத்திய பிரதேசத்தில் 2,295 டன்னும், ராஜஸ்தானில் 2,222 டன்னும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.                           ( தினத்தந்தி, 25.10.2015 )

இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மக்களின் அன்றாட, அத்தியாவசியமான உணவுப் பொருட்களில் ஒன்றைப் பதுக்குவது குறித்து இஸ்லாம் காட்டும் நெறிகளைப் பார்ப்போம்.

பொருளாதாரத்தின் அவசியம்

செல்வம், பொருளாதாரம் மனித வாழ்க்கையின் இன்றியமையாதத் தேவைகளில் பிரதானமான ஒன்றாகும்.

ஒரு மனிதனை அவன் உயிரோடு இருக்கும் போதும், இறந்த பின்னரும் சமூகத்திற்கு நல்லவனாய் அடையாளப்படுத்துகிற முக்கிய காரணியாகும்.

அந்த பொருளாதாரத்தை உலகின் நாலா பாகங்களிலும், ஏன் கடல் கடந்தும் சென்று தேடித் திரட்டுமாறு இஸ்லாம் தூண்டுகிறது.

பொருளாதாரத்தை அலங்காரம் என்று அறிமுகப்படுத்தும் அல்குர்ஆன்..

الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا

செல்வ வளமும், மக்கள் செல்வமும் ( மனிதனின் ) உலக வாழ்வின் அழகிய அலங்காரமாகும்”. ( அல்குர்ஆன்: 18:46  )

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ

 பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியினாலான பெருங் குவியல்கள், உயர் ரகக் குதிரைகள், கால் நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது ஆசை கொள்வது (ரசனை கொள்வது) மனிதர்களுக்கு அழகாக்கப் பட்டுள்ளது. இவை அனைத்தும் இவ்வுலகின் வாழ்க்கைக் குரிய சாதனங்கள் ஆகும். திண்ணமாக, அழகிய மீள்விடம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது.”    
                                                        ( அல்குர்ஆன்: 3:14 )

பொருளாதாரத்தை அல்லாஹ்வின் அருள்வளம் என்று வர்ணிக்கும் அல்குர்ஆன்..

وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا (11)

மேலும், நாம் பகலை வாழ்க்கைத் தேவைகளை தேடிடும் நேரமாக ஆக்கவில்லையா?” ( அல்குர்ஆன்: 78:11 )

فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ

நீங்கள் பூமியில் பரவிச்செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருள்வளங்களைத் தேடும் பொருட்டு!” ( அல்குர்ஆன்: 62:10 )

اللَّهُ الَّذِي سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِيَ الْفُلْكُ فِيهِ بِأَمْرِهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ

அல்லாஹ் தான் உங்களுக்கு கடலினை வசப்படுத்திக் கொடுத்தான். அவனது கட்டளைப்படி கப்பல்கள் அதில் செல்வதற்காகவும், நீங்கள் அவனுடைய அருள்வளங்களை தேடிச்செல்வதற்காகவும்!” ( அல்குர்ஆன்: 45:12 )

அதே வேளையில் பொருளாதாரத்தைத் தேடுகிற வழி அனுமதிக்கப்பட்டதாகவும், ஆகுமானதாகவும் அமைந்திருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

وعن مالك بن أنس، رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال: «طلب الحلال واجب على كل مسلم» رواه الطبراني.

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ஆகுமான வழியில் சம்பாதித்து பொருளீட்டுவது முஸ்லிமான ஒவ்வொரு ஆணின் மீதும், பெண்ணின் மீதும் கட்டாயக் கடமையாகும்”. ( நூல்: தப்ரானி )

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ                           

இறை விசுவாசிகளே! உங்களில் ஒருவர் மற்றொருவரின் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்!”. ( அல்குர்ஆன்: 4:29 )

வியாபாரமும்வளமும்

மனித வாழ்க்கையின் இன்றியமையாத் தேவையான பொருளாதாரத்தை அடைய வேண்டுமானால், அதை தேட வேண்டும். அதற்காக அனுமதிக்கப்பட்ட, ஆகுமான வழியை மேற்கொள்ள வேண்டும்.

அதற்காக இஸ்லாம் ஆகுமான பல வழிகளையும், நெறிகளையும் பகல் வெளிச்சம் போல் தெளிவாகக் காண்பித்து தந்திருக்கிறது.

عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : إن الله تعالى طيب لا يقبل إلا طيبا ، وإن الله تعالى أمر المؤمنين بما أمر به المرسلين ، فقال : ياأيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا ( المؤمنون : 51 ) ، وقال تعالى : ياأيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ( البقرة : 172 ) ، ثم ذكر الرجل يطيل السفر : أشعث أغبر ، يمد يديه إلى السماء : يا رب يا رب ، ومطعمه حرام ، ومشربه حرام ، وملبسه حرام ، وغذي بالحرام ، فأنى يستجاب لذلك ؟ . رواه مسلم .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் எங்களிடையே நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் தூயவன், அவன் தூய்மையான பொருட்களையே ஏற்றுக் கொள்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைவிசுவாசிகளுக்கும் கட்டளையிடுகின்றான். மேலும், அல்லாஹ் கூறினான்: “தூய ஆகாரத்தையே புசித்து நற்செயல் புரியுங்கள்!” (23:53)

இறைவிசுவாசிகளை நோக்கி இறைவன் இவ்வாறு கூறினான்: “இறை விசுவாசிகளே! நாம் உங்களுக்கு அருளிய ஹலாலான தூய ஆகாரத்தையே புசியுங்கள்!” (7:8)

பிறகு, நபி {ஸல்} அவர்கள் ஒரு மனிதனைப் பற்றி குறிப்பிட்டார்கள். அவன் நெடுந்தூரம் பயணம் மேற்கொண்டு புழுதி படிந்து, அழுக்கடைந்த நிலையில் வருகின்றான். தனது இரு கரங்களையும் வானத்தை நோக்கிஎன் இறைவனே! என்று இறைஞ்சுகின்றான்.

ஆயினும், அவன் உண்ணும் உணவு ஹராம், பருகும் நீர் ஹராம், உடுத்தியிருக்கும் ஆடை ஹராம். அவன் முழுமையான ஹராமிலே வளர்ந்துள்ளான். அவ்வாறெனில், அவனின் இறைஞ்சுதல் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?”

                                                        ( நூல்: முஸ்லிம் )

 رضي الله عنه ، عن رسول الله - صلى الله عليه وسلم  قال
 رواه أحمد وكذا في " شرح السنة "

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி, அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது. தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் அதிலிருந்து செலவிட்டால் பாக்கியம் அற்றதாகவே இருக்கும். அதனை விட்டு விட்டு அவன் இறந்து விட்டால் அவனது நரகப் பயணத்திற்கு அது சாதகமாகத்தான் அமையும். அல்லாஹ் தீமையை தீமையின் வாயிலாக அழிப்பதில்லை. மாறாக, தீய செயலை நற்செயலின் வாயிலாகவே அழிக்கின்றான். ஓர் அசுத்தம் இன்னொரு அசுத்தத்தை அழிப்பதில்லைஎன்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                   ( நூல்: மிஷ்காத் )

இந்த இரு நபிமொழிகளிலிருந்து நமக்கு புலப்படும் விஷயம் எதுவென்றால்ஆகுமான வழிகளில் ஈட்டப்பட்ட தூய்மையான பொருளாதாரத்தையே அல்லாஹ் விரும்புகின்றான். ஹராமான வழியில் பெறப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டு செலவழித்தாலும், தர்மம் செய்தாலும் அதனை அவன் ஏற்றுக் கொள்வதில்லை. மேலும், எவனுடைய சம்பாத்தியம் ஹராமான வழியில் இருந்து பெறப்படுகிறதோ அவனுடைய இறைஞ்சுதலை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை”.

ஆகவே, ஆகுமான வழிகளில் பொருளாதாரத்தை பெற்றிட இஸ்லாம் கூறும் நெறிகளைக் கையாள்வதோடு, அது கூறும் வழிகளில் சென்று பெற்றிட வேண்டும்.

இஸ்லாம் கூறும் வழிகள் இரண்டு. ஒன்று உடல் உழைப்பு இன்னொன்று உடல் உழைப்பும், செல்வமும் கலந்திருக்கிற வியாபாரம், வணிகம்.

உடல் உழைப்பு

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,  அல்லாஹ்வின் தூதரே!  நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். ஏதாவது உதவி செய்யுங்கள்” என்று வேண்டி நின்றார்.

அதற்கு,  நபி (ஸல்) அவர்கள் உன்னிடம் ஏதேனும் பொருள் இருக்கிறதா? என்று வினவினார்கள். அதற்கவர், கிழிந்த போர்வையைத்தவிர என்னிடம் வேறொன்றும் இல்லை என்றார்.

அப்படியானால் அதைக் கொண்டு வாரும்! என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

வீட்டிலிருந்த போர்வையை எடுத்துக் கொண்டு நபிகளாரிடம் கொடுத்தார் அவர். மாநபியின் அவையில் இரண்டு தீனாருக்கு ஏலம் போனது அந்தப்போர்வை.

இரண்டு தீனாரை அம்மனிதர் கையில் கொடுத்து ஒன்றை உமது வீட்டின் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வீராக!, மற்றொன்றை வைத்து உனக்கு தெரிந்த தொழிலுக்கான சாதனத்தை வாங்கி உழைத்து பொருளாதாரத்தை திரட்டிக் கொள்வீராக!” என்று கூறி அனுப்பி வைத்தார்கள் நபி (ஸல்) அவர்கள். ( நூல்:  )

ஒரு சமயம் நபிகளரிடம்எந்தப் பொருளதாரம் சிறந்தது? ”என வினப்பட்டது.

அதற்கு “ஒரு மனிதர் தன் உடலால் உழைத்து ஈட்டும் பொருளாதாரமே  மிகச் சிறந்தது” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

வியாபாரம்..
ராஃபிவு இப்னு ஃகதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! யாவற்றிலும் சிறந்த சம்பாத்தியம் எது?” என்று மாநபி {ஸல்} அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு, நபி {ஸல்} அவர்கள்ஒருவன் தன்கையால் உழைப்பதும், மோசடி செய்யாமல், பொய் பேசாமல் ஒருவன் செய்யும் வணிகமும் தான்என்று பதிலளித்தார்கள். ( நூல்: மிஷ்காத் )

வணிகத்தில் அல்லாஹ் எதிர்பார்க்கும் அழகிய பண்புகள்….

أخبرنا قبيصة أخبرنا سفيان عن أبي حمزة عن الحسن عن أبي سعيد 
عن النبي صلى الله عليه
 وسلم قال
 التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “உண்மை பேசி, நேர்மையுடனும், நாணயத்துடனும் நடந்து கொள்ளும் ஒரு வணிகர், மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் ஆகியோருடன் இருப்பார்.”

                                                               ( நூல்: திர்மிதீ )
وعن عبيد بن رفاعة ، عن أبيه - رضي الله عنه - عن الرسول - صلى الله عليه وسلم - قال : " التجار يحشرون يوم القيامة فجارا ، إلا من اتقى وبر وصدق " . رواه الترمذي ، وابن ماجه ، والدارمي .

ரிஃபாஆ இப்னு ராஃபிவு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “தம்முடைய வியாபாரத்தில் இறையச்சத்துடன் இறைக்கட்டளைகளை மீறாமல் நடந்து கொண்டவர்கள், மக்களின் உரிமையை முழுமையாகத் தந்து நன்மையை மேற்கொண்டவர்கள் இவர்களே வாய்மையைக் கடை பிடித்தவர்கள் ஆவார்கள். இவர்களைத் தவிர உள்ள மற்றெல்லா வணிகர்களும் மறுமை நாளில் பாவிகளாகவே எழுப்பப்படுவார்கள்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )

வணிகம் என்பது உலகியலைச் சார்ந்த ஒரு செயலாக இருந்த போதிலும் அதில் உண்மை, நேர்மை, மக்களின் நலன், நாணயம், இறையச்சம் ஆகிய பண்புகளை மேற்கொள்ளும் போது அதுவே ஓர் இபாதத் இறைவணக்கமாக மாறி விடுகின்றது.

ஆகவே தான் இத்தகைய வணிகர்களுக்கு வாய்மையாளர்களாக மறுமையில் எழுப்பப்படும் வாய்ப்பும், இறையன்பு கொண்ட தூயவர்களான நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லோர்கள் ஆகியோருடன் சுவனத்தில் தோழமை கிட்டும் பாக்கியமும் கிடைக்கின்றது.


கைஸ் அபூகர்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒருமுறை அண்ணலார் ஒரு வணிகக் கூட்டத்தை கடந்து சென்ற போதுவியாபாரிகளே! வியாபாரத்தில் ஒரு பொருளை விற்பதில் தகாத பேச்சுக்களைப் பேசுவதற்கும், பொய் சத்தியம் செய்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது; எனவே, நீங்கள் உங்கள் வியாபாரத்தில் தர்ம சிந்தனையோடு நடந்து கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.

எனவே, வியாபாரம் என்பது வெறுமெனே உலகியல் நோக்கோடு மேற்கொள்ளப்படாமல் நன்மையை நோக்கமாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

பதுக்கல் பேர்வழிகளும்… பாவச்சுமைகளும்….

மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருள்களை தடுத்து வைப்பதும், பதுக்கிவைப்பதும் பாவமான குற்றச்செயல் என இஸ்லாம் கூறுகிறது.

பொதுவாக வணிகர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. அத்தியாவசியமான பொருள்களைப் பதுக்கி வைத்து, விலை ஏறுவதை எதிர்பார்த்து, விலை ஏறும் போது கொண்டு வந்து அதிக விலையில் விற்பது.

இந்த மனநிலை வந்து விட்டால் அந்த வணிகரிடம் இரக்க குணம் இல்லாமல் ஆகி, வன்னெஞ்சம் அதிகரித்து விடும் அபாயம் உண்டு என இஸ்லாம் எச்சரிக்கின்றது.

عن معمر بن عبد الله- رضي الله عنه- عن رسول الله صلّى الله عليه وسلّم قال: «لا يحتكر إلّا خاطىء»  مسلم

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பதுக்கல் செய்பவன் பாவியாவான்” இன்னொரு அறிவிப்பில் “பாவியைத் தவிர வெறெவனும் பதுக்கமாட்டான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

عن عمر- رضي الله عنه- قال
الجالب مرزوق، والمحتكر محروم،

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “தேவையான பொருட்களைப் பதுக்கி வைக்காமல் அவற்றை கடைவீதிக்கு கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தானவன்! மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், தேவையான பொருட்களைப் பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: மிஷ்காத் )


முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “தேவையான பொருட்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கின்றான்! அல்லாஹ் பொருள்களின் விலையை மலிவாக்கி விட்டாலோ இவன் துக்கப்படுகின்றான். விலை ஏறிவிட்டாலோ ஆனந்தம் அடைகின்றான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: மிஷ்காத் )

முன் மாதிரி வியாபாரிகள்….

مظفر بن سهل قال: سمعت غيلان الخياط يقول: اشترى سري السقطي كرّ لوز بستين ديناراً وكتب في رونامجه ثلاثة دنانير ربحه، فصار اللوز بتسعين ديناراً، فأتاه الدلاّل فقال له: إنّ ذلك اللوز أريده، فقال: خذه، فقال: بكم؟ قال: بثلاثة وستين ديناراً، قال له الدلاّل: إنّ اللوز قد صار الكرّ بسبعين ديناراً، قال له السري: قد عقدت بيني وبين الله عقداً لا أحله لست أبيعه إلاّ بثلاث وستين ديناراً، قال له الدلاّل: وأنا قد عقدت بيني وبين الله عقداً لا أحله، أن لا أغشّ مسلماً، لست آخذ منك إلاّ بسبعين ديناراً، قال: فلا الدلاّل اشترى منه ولا سري باعه

ஸிர்ரீ ஸிக்தீ (ரஹ்) அவர்கள் மாபெரும் வணிகராகத் திகழ்ந்தார்கள். ஒரு சமயம் 60 தீனார் கொடுத்து ஒரு கூஜாவை விலைக்கு வாங்கி தங்களது கடையில் விற்பனைக்காக வைத்தார்கள். மேலும், ”அன்றைய நாட்குறிப்பில் 60 தீனாருக்கு விற்பனை செய்வதற்காக வாங்கிய கூஜாவிற்கு 10 தீனாருக்கு அரை தீனார் வீதம் மூன்று தீனார் லாபமாக வைத்து 63 தீனாருக்கு அதை விற்க வேண்டும்” என்று எழுதி வைத்தார்கள்.

கொஞ்ச நாட்கள் கழித்து கூஜாவின் விலை ஏறியது. இந்த நிலையில், ஒரு கிராமவாசி கடைக்கு பொருள் வாங்க வந்தார். வந்தவரை கூஜாவின் அழகு ஈர்த்தது. ஸிர்ரீ (ரஹ்) அவர்களிடம் தனக்கு அந்த கூஜா வேண்டும். எவ்வளவு விலை? என்று கேட்டார்.
ஸிர்ரீ (ரஹ்) அவர்கள், கிராமவாசியிடம் 63 தீனார் அதன் விலை, அதில் 3 தீனார் எனக்கான லாபம் என்றார்கள்.

அதற்கு அந்த கிராமவாசி சிரித்தவராக, பிழைக்கத் தெரியாதவராக இருக்கின்றீர்களே! இதன் விலை மற்ற கடைகளில் எவ்வளவு தெரியுமா? 90 தீனார்.

இருந்து விட்டு போகட்டும்! நான் வாங்கும் போது 60 தீனார் தான், எனக்கான லாபம் 3 தீனார் தான் நான் இதை வாங்கும் போதே இன்ன விலைக்குத் தான் விற்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன். மற்ற கடைகளின் விலை விபரமோ, விலையேற்றமோ எனக்கு அவசியமில்லை.

அதற்கு, அந்த கிராமவாசி வெளியில் 70 தீனாருக்கு விற்பனையாகும் ஒரு பொருளை 63 தீனாருக்கு வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் சக முஸ்லிம் ஒருவரிடம் இப்படி குறைந்த விலைக்கு வாங்குவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை. எனவே, 70 தீனாருக்கு தர முடியும் என்றால் அந்த கூஜாவை வாங்கிச் செல்கின்றேன் என்று உறுதியாகக் கூறினார்.

அதைக் கேட்ட ஸிர்ரீ (ரஹ்) அவர்கள் “63 தீனாரை விட கால் தீனார் கூட கூட்டி வாங்கமாட்டேன், வேண்டுமானால் 70 தீனார் கொடுத்து மற்ற கடைகளில் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்! என்றார்கள்.

அந்தக்கிராமவாசியும் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஸிர்ரீ (ரஹ்) அவர்களும் விட்டுக் கொடுக்கவில்லை.

இறுதியில் கிராமவாசி வாங்கவும் இல்லை, ஸிர்ரீ (ரஹ்) அவர்கள் விற்கவும் இல்லை.

                              ( நூல்: இஹ்யா உலூமுத்தீன், கிதாபுல் பைஉ )
قال يونس بن عبيد: ويقال: إنه كانت عنده حلل على ضربين أثمان ضرب منها أربعمائة كل حلة، وأثمان الآخر مائتان، فذهب إلى الصلاة وخلف ابن أخيه ليبيع فجاءه أعرابي يطلب حلة بأربعمائة فعرض عليه من حلل المائتين فاستحسنها ورضيها فاشتراها منه ومشى بها هي على يده ينظر إليها خارجاً من السوق فاستقبله يونس بن عبيد خارجاً من المسجد فعرف حلته فقال بكم أخذت هذه الحلة؟ فقال: بأربعمائة، فقال: لا تسوي إنما قيمتها مائتان فقال: يا ذا الرجل إنّ هذه تساوي ببلدنا خمسمائة درهم، فقال له يونس: إنّ النصح في الدين خير من الدنيا كلها ثم أخذ بيده فرده إلى ابن أخيه فجعل يخاصمه ويقول: أما اتقيت الله؟ أما أستحيت أن تربح مثل الثمن وتترك النصح لعامة المسلمين؟ فقال: والله ما أخذه إلاّ عن تراضي، فقال: وإن رضي ألا رضيت له ما رضيت لنفسك، ثم ردّ على الأعرابي مائتي درهم،

யூனுஸ் இப்னு உபைத் (ரஹ்) அவர்கள் தங்க ஆபரண வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் கடையில் இருக்கும் போது தொழுகைக்கான நேரம் வந்தவுடன் தனது சகோதரர் மகனைக் கடையில் வைத்து விட்டு தொழுவதற்காக பள்ளிக்குச் சென்றார்.

தொழுது முடித்து திரும்பி வரும் வழியில் ஒரு கிராமவாசியைக் கண்டார். அவர் கையில் தங்க ஆபரணம் ஒன்று இருந்தது. அதைப் பார்த்த யூனுஸ் அது தமது கடையில் வாங்கப்பட்டது தான் என்பதை விளங்கிக் கொண்டார்.

அருகில் சென்று இதை என்ன விலை கொடுத்து வாங்கினீர்? என்று கேட்டார்கள். அதற்கவர் இது எனக்கு பிடித்துப் போனமையால் 400 திர்ஹம் கொடுத்து இதோ இந்த கடையில் தான் வாங்கினேன் என்றார்.

அவரை கையோடு அழைத்துச் சென்ற யூனுஸ் அவர்கள் இதன் விலை வெறும் 200 திர்ஹம் தான் ஆகவே உங்கள் 200 திர்ஹத்தைப் பெற்றுச் செல்லுங்கள் என்று பரிவுடன் கூறினார்.

அது கேட்ட கிராமவாசி, உலகம் தெரியாத ஆளாய் இருக்கின்றீர்களே? எங்கள் ஊரில் இதன் விலை 500 திர்ஹம், நான் முழு மன திருப்தியோடு தான் 400 திர்ஹம்  கொடுத்தேன் என்று சாதாரணமாக பதில் கூறினார்.

இருந்து விட்டு போகட்டும்! உங்கள் ஊரில் எவ்வவு விலைக்கு கொடுத்தாலும் பரவாயில்லை, இந்தாருங்கள் உங்களின் அதிகப்படியான பணம் 200 திர்ஹம் என்று திருப்பிக் கொடுத்தார்கள் யூனுஸ் (ரஹ்) அவர்கள்.

அவர் அதைப் பெற்றுக் கொண்டு இன்முகத்தோடு திரும்பிச்சென்றார். அவரின் உடல் கடைவீதியை விட்டு மறைந்ததும் தனது சகோதரன் மகனை கண்டித்து விட்டு, அல்லாஹ்விற்கு பயப்படவேண்டாமா? இனிமேல் இப்படி நடந்து கொள்ளாதே! உனக்கு எதை நீ விரும்புவாயோ, அதையே பிறரின் விஷயத்திலும் விரும்பு என்று கூறினார்கள். ( நூல்: இஹ்யா )

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களைச் சந்தித்த தாபியீ ஒருவர் “உங்களுக்கு எப்படி இவ்வளவு செல்வம் வந்தது? என்று கேட்டார்.

அதற்கு அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் “எனக்கு மூன்று காரணங்களால் செல்வம் கிடைத்தது. 1. எப்போதுமே நான் குறைவான லாபத்தையே பொருளுக்கு வைப்பேன். 2. மக்களுக்கு தேவையான சாமான்களை பதுக்கி வைக்க மாட்டேன். 3. தூய்மையான பொருளையே விற்பேன்” என்று பதில் கூறினார்களாம்.

وحدثونا عن بعض السلف أنه كان بواسط فجهز سفينة حنطة إلى البصرة وكتب إلى وكيله: مع هذا الطعام في يوم تدخل البصرة فلا تؤخره إلى غد، قال: فوافق السعر فيه سعة، قال له التجار: إن أخرته جمعة ربحت فيه أضعافاً فأخره جمعة فربح فيه أمثاله، وكتب إلى صاحبه بذلك فكتب إليه صاحب الطعام: يا هذا قد كنا قنعنا أن نربح الثلث مع سلامة ديننا وإنك قد خالفت أمرنا وقد جنيت علينا جناية، فإذا أتاك كتابي فخذ المال كله فتصدّق به على فقراء أهل البصرة وليتني أنجو من الاحتكار كفافاً لا عليّ ولا لي

ஒரு சமயம் பஸ்ராவுக்கு விற்பனைக்காக மூட்டை மூட்டையாகக் கோதுமை கொண்டு செல்லப்பட்டது. அதன் உரிமையாளர் பஸ்ராவில் உள்ள தங்களது ஊழியர்களுக்கு சரக்குகளோடு ஒரு கடிதமும் எழுதி இருந்தார்.

அதில்..”சரக்கு கைக்கு வந்ததும் விற்பனையை துரிதப் படுத்தி விடுங்கள்! அதிக லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில் தாமதப்படுத்த வேண்டாம்” என்று எழுதி இருந்தார்.

ஒரு நாள் வெள்ளிக்கிழமையன்று பஸ்ராவிற்கு சரக்கு வந்து சேர்ந்தது. ஊழியர்கள் கடிதத்தைப் படித்து விற்பதற்கு தயாரானார். அருகில் இருந்த ஒரு வியாபாரி இன்னும் ஒரு வாரம் கழித்து விற்றால் பன்மடங்கு லாபம் ஈட்டலாம். இன்னும் ஓரிரு நாட்களில் கோதுமை விலையேற்றம் பெறும் என்றார்.

அது போன்றே கோதுமையின் விலை கிடுகிடுவெனெ எகிறியது. இவர்களுக்கும் பன்மடங்கு லாபம் கிடைத்தது.

நடந்த சம்பவத்தை ஊழியர்கள் கடிதத்தில் மகிழ்ச்சியோடு எழுதி அனுப்பினார்கள். அதை பார்த்து விட்டு, உரிமையாளர் பதில் கடிதம் எழுதினார்.

அதில்… “உங்கள் கடிதம் கிடைத்தது. உங்களின் தவறான நடவடிக்கைகளுக்காக முதலில் நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், நீர் விற்றது கோதுமையை மாத்திரம் அல்ல, மார்க்கத்தையும், மார்க்கத்தின் பொன்னான சட்டங்களையும் தான். நீர் குற்றம் செய்ததோடு நின்று விடாமல் என்னையும் குற்றவாளியாக ஆக்கிவிட்டீர். ஏனெனில், சரக்கு என்னுடையது தானே? நீங்கள் மக்களுக்குத் தேவையான ஒன்றை பதுக்கி விற்று லாபம் ஈட்டியிருக்கின்றீர்கள். ஆகவே, இந்தக் கடிதம் கிடைத்ததும் லாபத்தொகை அனைத்தையும் பஸராவின் ஏழைகளுக்கு தர்மம் செய்து விடுங்கள்! இந்த தர்மத்தின் மூலமாவது பதுக்கல் செய்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்கு அல்லாஹ் என்னை தண்டிக்காமல் இருக்க வேண்டும் என ஆதரவு வைக்கின்றேன்” என்று எழுதப்பட்டிருந்தது.

                              ( நூல்: இஹ்யா உலூமுத்தீன், கிதாபுல் பைஉ )

ஆகவே, இஸ்லாம் வழிகாட்டும் நெறிகளைப் பேணி பொருளாதாரத்தை ஈட்டுவோம்!

வளமோடும், நலமோடும் வாழ்வோம்! வல்ல ரஹ்மானின் சாபத்திலிருந்து விலகி இருப்போம்!

அல்லாஹ் நம் எல்லோருக்கும் அவனின் மார்க்கத்தின் படி எல்லா நிலைகளிலும் வாழ அருள் புரிவானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
  


10 comments:

  1. சரியான நேரத்தில் சரியான கட்டுரை

    ReplyDelete
  2. சரியான நேரத்தில் சரியான கட்டுரை

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ்

    அழகான,ஆழமான கோா்வை

    ஹதீஸ்,சம்பவம் போங்கு

    மிகவும் அருமை

    தங்களின் சிந்தனையை

    அல்லாஹ் கபூல்

    செய்வானாக


    ஆமீன்.

    ReplyDelete
  4. மிகச் சரியான நேரத்தில் நல்ல கட்டுரை ஷுக்ரன

    ReplyDelete
  5. الحمد لله அற்புதமான தகவல்கள் Jazakallahu khairan كثيرا في الدارين அல்லாஹ் தங்களது இல்மில் பரக்கத் செய்வானாக! ஆமீன்!

    ReplyDelete
  6. அல்ஹம்துலில்லாஹ அருமையான கட்டுரை

    ReplyDelete
  7. அல்ஹம்து லில்லாஹ் நல்ல செய்தி
    அறபுச் சொற்கள் சிலது இடம் மாறியுள்ளன

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ் .....என்னுடய பயானுக்கு மிக உதவியாக இருந்தது

    ReplyDelete