Thursday, 6 October 2016

வெற்றி என்பது….



வெற்றி என்பது….

 


அல்லாஹ்வின் அருளால் நாம் ஹிஜ்ரி 1437 –ஆம் ஆண்டை நிறைவு செய்து விட்டு 1438 –ஆம் ஆண்டின் துவக்க பொழுதின் முதல் ஜும்ஆவில் வீற்றிருக்கின்றோம்.

கடந்து சென்றிருக்கிற 1437 –ஆம் ஆண்டில் இந்த முஸ்லிம் உம்மத் சொந்த வாழ்விலும் சரி, சமூகத்தின் வாழ்விலும் சரி, எந்த அளவிற்கான வெற்றிகளை குவித்திருக்கிறது என்கிற சுய பரிசோதனையைச் செய்ய கடமைப் பட்டிருக்கின்றது.

ஏனென்றால், கொடியோனாம் ஃபிர்அவ்னிடம் இருந்து மூஸா (அலை) அவர்களும் அவர் தம் சமூகமும் அல்லாஹ்வின் உதவியால் ஈடேற்றம் பெற்ற நாளான ஆஷூரா தினம் இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது.

வெற்றி மொழிவதற்கு இலகுவாக இருந்தாலும், அனுபவிப்பதற்கு அழகாக இருந்தாலும் அதை அடைவதற்கான வழிகள் என்பது ஒன்றும் அவ்வளவு இலகுவான ஒன்றல்ல.

சில போது வெற்றிகள் துவக்கத்திலேயே கிடைத்து விடும். இன்னும் சில போது தோல்வியின் விளிம்பில் இருக்கும் போது கிடைக்கும். இன்னும் சில போது இனி வழியே இல்லை என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிற போது கிடைக்கும்.

அல்லாஹ்வும் அல்குர்ஆனில் வெற்றி குறித்து, வெற்றி பெற்றவர்கள் குறித்து பல்வேறு வசனங்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு கோணத்தில் கூறுகின்றான்.

வெற்றி குறித்த வார்த்தைகளைக் கூட அல்லாஹ் பல்வேறு விதமாக பயன் படுத்துகின்றான். சுமார் 6 வார்த்தைகளைப் பயன் படுத்துகின்றான்.

அந்நஸ்ர், அல்ஃபத்ஹ், அல்ஃபலாஹ், அல்ஃபவ்ஸ், அல் ஃகலப், அல்அஃலா ஆகியவைகளாகும்.
முறையே, 3: 123 லும், 48: 1 லும், 23: 1, லும், 33: 72 லும், 26: 41,42,44 லும், 3: 39 லும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

வெற்றியை அதிகம் விரும்புகிற, அதற்காக அல்லும் பகலும் அயராது உழைக்கிற, அதற்காக எதையும் இழக்கத்துணிகிற மனித சமூகத்திற்கு, குறிப்பாக முஸ்லிம் உம்மத்திற்கு வெற்றிக்கான வாசல்களையும், வழிகளையும் அல்லாஹ் திறந்தே வைத்திருக்கின்றான்.

ஆனாலும், தற்கால முஸ்லிம் சமூகம் அந்த வாசல்களின் மூலம் வெற்றி பெறுவதற்கோ, அந்த வழிகளை அறிந்து அதன் மூலம் வெற்றியின் உச்சத்திற்கு சென்றிடவோ முயலவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

வெற்றியைக் குறித்து அகமகிழ்ந்து, வெற்றியை நல்கியதற்காக நோன்பு நோற்று அதை நினைவு கூர்ந்திடும் வகையில் ஆஷூரா நன்னாளை எதிர் நோக்கி இருக்கும் இந்த முஸ்லிம் சமூகம் தங்களுக்கான வெற்றி வாயில்களைத் திறந்திட, வழிகளை அறிந்திட கடமைப்பட்டிருக்கின்றோம்.

வாருங்கள்! இதோ மிகச் சமீபத்தில் இருக்கிற வெற்றியையும், வெற்றிக்கான வாயில்களையும், வழிகளையும் அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் வழிகாட்டுதலில் அறிந்து புத்தாண்டை வெற்றியோடு துவங்குவோம்!!

1. இறைநம்பிக்கையாளனாக இருப்பது வெற்றியை தேடித்தரும்….

وقد روى مسلم في صحيحه (1054) من حديث عبدالله بن عمرو رضي الله عنه قال قال النبي صلى الله عليه و سلم:" قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒருவர் முஸ்லிமாக வாழ்வாரேயானால் அவர் வெற்றி பெற்றுவிடுவார். எவர் அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு போதுமென்ற மனதோடு வாழ்கின்றாரோ, அவரின் வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வாதாரத்தை அல்லாஹ் வழங்குகின்றான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                              ( நூல்: முஸ்லிம், 1054 )

عِمْرَانَ بْنِ حُصَيْنٍ في قصة صاحب العضباء لما أُسِرَ فمر به النبي عليه الصلاة والسلام فنادى يا محمد؛ فَقَالَ:"مَا شَأْنُكَ؟ " قَالَ: إِنِّي مُسْلِمٌ. قَالَ:" لَوْ قُلْتَهَا وَأَنْتَ تَمْلِكُ أَمْرَكَ أَفْلَحْتَ كُلَّ الْفَلَاحِ

இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஏதோ ஒரு யுத்தத்தின் போது கைதியாக பிடிக்கப்பட்டவர்கள் மஸ்ஜிதுன் நபவீயின் அருகே தங்க வைக்கப்பட்டிருந்த தருணத்தில் ஒரு முறை அண்ணலார் அவ்விடத்தைக் கடந்து செல்ல முயன்ற போது, அங்கிருந்த கிராமவாசியான கைதி ஒருவர் மாநபி {ஸல்} அவர்களை முஹம்மதே! என்று பெயர் கூறி அழைத்தார்.

அருகே சென்ற அண்ணலார், பெயர் கூறி அழைத்ததன் நோக்கம் என்ன? உம்முடைய நிலை தான் என்ன? என்று அக்கிராமவாசியிடம் கேட்டார்கள்.

அதற்கவர், நான் முஸ்லிமாகிவிட்டேன் என்றார். அப்போது, நபி {ஸல்} அவர்கள் “அப்படியாயின், நீர் சொல்வதில் உண்மை இருப்பின் உன் காரியங்கள் யாவும் இனி உனக்கு சாதகமாக அமைந்து விடும்; நீர் மகத்தான அனைத்து வெற்றியையும் அடைந்து விடுவீர்!” என்று பதில் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற இமாம் கதாபீ (ரஹ்) அவர்களும், இமாம் நவவீ (ரஹ்) அவர்களும் ”வாழ்க்கையில் எல்லா வகையான வெற்றிகளையும் பெறுவதற்கு இறைநம்பிக்கையாளனாய் (முஃமின்) இறைவனுக்கு கட்டுப்பட்டவனாய் (முஸ்லிம்) இருப்பது அவசியம்” என்பதை மேற்கூறிய நபிமொழி சுட்டிக் காட்டுவதாக கூறுகின்றார்கள்.

2. நற்காரியங்களை அதிக ஈடுபாட்டுடன் செய்வது…

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمُ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

“இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் ருகூவு செய்யுங்கள்! ஸுஜூதும் செய்யுங்கள்! உங்களின் இறைவனையே வணங்குங்கள்! நற்காரியங்களைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி அடைவீர்கள்”.                   ( அல்குர்ஆன்: 22: 77 )

3. அல்லாஹ்வின் பாதையில் உயிராலும், பொருளாலும் அர்ப்பணம் செய்வது…

لَكِنِ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُواْ مَعَهُ جَاهَدُواْ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ وَأُوْلَئِكَ لَهُمُ الْخَيْرَاتُ وَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ()

“அல்லாஹ்வின் தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும், தங்களின் பொருட்களைக் கொண்டும், உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்விற்காக அர்ப்பணம் செய்கின்றனர்; அத்தகையோரின் நன்மைகள் அனைத்தும் அவர்களுக்கே உரியன – மேலும், அவர்கள் தாம் வெற்றியாளர்கள்”.                     ( அல்குர்ஆன்: 9: 88 )

4. குர்ஆன், ஸுன்னாவை பின் பற்றி நடப்பது…

فَالَّذِينَ آمَنُواْ بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُواْ النُّورَ الَّذِيَ أُنزِلَ مَعَهُ أُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ()
“ஆகவே, எவர்கள் அவர் {முஹம்மது ஸல்} மீது நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து அவருடன் இறக்கி வைக்கப் பட்டுள்ளதே அந்த வேத ஒளியைப் பின்பற்றினார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்”.                                           ( அல்குர்ஆன்: 7: 157 )

وأخرج الإمام أحمد رحمه الله: عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه و سلم صلى الله عليه وسلم: "لكل عمل شرة ولكل شرة فترة فمن كانت فترته إلى سنتي فقد أفلح ومن كانت إلى غير ذلك فقد هلك ". وهو في الصحيح المسند للعلامة الوادعي رحمه الله وقال: هذا حديث صحيح على شرط الشيخين

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒவ்வொரு செயலுக்கும் ஒரு வரையறை இருக்கின்றது. ஒவ்வொரு வரையறைக்கும் ஒரு (இயற்கை) மார்க்கம் இருக்கின்றது. எவருடைய (இயற்கை) மார்க்கம் என் வழியாக, நடைமுறையாக இருக்கின்றதோ அவர் வெற்றி பெறுவார்; என் வழியல்லாத, நடைமுறையல்லாத மார்க்கமாக எவருடைய மார்க்கம் இருக்கின்றதோ அவர் தோல்வியைத் தழுவுவார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

5. அல்லாஹ், ரஸூலின் முடிவுக்கு செவி தாழ்த்துவதும், கட்டுப்பட்டு நடப்பதும்….

إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

“இறைநம்பிக்கையாளர்களுடைய சொல்லாக இருந்ததெல்லாம், அவர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தூதராகிய அவர் தீர்ப்பு வழங்குவதற்காக, அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் அவர்கள் அழைக்கப்பட்டால், ”நாங்கள் செவியுற்றோம்! இன்னும் கட்டுப்பட்டோம்! என்று அவர்கள் சொல்வது தான்; இன்னும், அவர்கள் தாம் வெற்றியாளர்கள்”.                   ( அல்குர்ஆன்: 24: 51 )

6. இஸ்லாத்தின் கடமைகள் மீது பேணுதலாக இருப்பது…

أخرج البخاري في صحيحه عن طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُ
"جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلَا يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا فَإِذَا هُوَ يَسْأَلُ عَنْ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصِيَامُ رَمَضَانَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُ قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ إِنْ صَدَقَ

தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நஜ்த் பகுதியைச் சார்ந்த ஒருவர் தலைவிரி கோலத்துடன் அண்ணலாரின் சபைக்கு வருகை தந்து, மென்மையான குரலில், இஸ்லாத்தைக் குறித்து கேட்டார், இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்திற்குப் பின்னர், மாநபி {ஸல்} அவர்கள் தினமும் ஐவேளை தொழ வேண்டும் என்றார்கள். அப்போது, அவர் இவையல்லாத வேறெந்த கடமையான தொழுகைகளும் என் மீது விதியாக்கப்பட்டுள்ளதா? நான் வேறெந்த தொழுகைகளையும் அவசியம் தொழ வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “இல்லை! நீர் உபரியான தொழுகைகளை விரும்பினால் தொழுது கொள்ளலாம்” என்றார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணை! கடமையான ஐவேளைத் தொழுகையை விட கூடுதலாகவோ, அதை விடக் குறைவாக நான் ஒரு போதும் செய்யப்போவதில்லை!” என்றார்.

பின்னர், நபி {ஸல்} அவர்கள் ஜகாத் குறித்து கூறினார்கள். முன்பு போலவே, அவர் இவையல்லாத பொருளாதாரம் சம்பந்தமான வேறெந்த கடமைகளும் என் மீது விதியாக்கப்பட்டுள்ளதா? நான் பொருளாதாரம் சம்பந்தமான வேறெந்த கடமைகளையும் அவசியம் நிறைவேற்ற வேண்டுமா? என்று கேட்டார்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “இல்லை! நீர் உபரியான தான தர்மங்களை, விரும்பினால் கொடுக்கலாம்” என்றார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணை! கடமையான ஜகாத்தை விட கூடுதலாகவோ, அதை விடக் குறைவாக நான் ஒரு போதும் செய்யப்போவதில்லை!” என்றார்.

பின்னர், அவர் அண்ணலாரிடம் இருந்து விடை பெற்று அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். இப்போது, மாநபி {ஸல்} அவர் எங்களை நோக்கி “இவர் சொன்னது போன்று நடந்து கொண்டார் எனில் வெற்றி பெறுவார்” என்று கூறினார்கள்.

                                                            ( நூல்: புகாரி )

7. தொழுகையை பேணுதலோடும், உள்ளச்சத்தோடும் தொழுவது…

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ () الَّذِينَ هُمْ فِي صَلاتِهِمْ خَاشِعُونَ

இறைநம்பிக்கையாளர்கள் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார்கள்; அவர்கள் எத்தகையோரென்றால் தொழுகையில் அவர்கள் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள்”.  (அல் குர்ஆன்: 23: 1 ) இதே தொடரில்…


وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ ()

“இன்னும், அவர்கள் தம் தொழுகைகளின் மீது பேணுதலும் கவனமும் உள்ளவர்களாக இருப்பார்கள்”.                                 ( அல்குர்ஆன்: 23: 9 )

இவ்வுலகத்தில் மாத்திரமல்ல மறுமையிலும் வெற்றியைத் தீர்மானிக்கும் ஆற்றல் தொழுகைக்கு உண்டு.

وأخرج الترمذي رحمه الله: عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:" إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته، فإن صلحت، فقد أفلح وأنجح، وإن فسدت، فقد خاب وخسر، فإن انتقص من فريضته شيئاً، قال الرب، عز وجل: انظروا هل لعبدي من تطوعٍ، فيكمل منها ما انتقص من الفريضة؟ ثم يكون سائر أعماله على هذا" قال الترمذي حديث حسن

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மறுமையில் ஓர் அடியானிடம் முதன் முதலாக தொழுகை குறித்தே விசாரிக்கப்படும்; அக்கேள்விக்கான பதில் சரியாக இருந்தால் அந்த அடியான் பெரும் வெற்றியை எய்தப் பெறுவார். இல்லையெனில், பெரும் தோல்வியையும், நஷ்டத்தையும் சந்திப்பார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                   ( நூல்: திர்மிதீ )


8. பாவமன்னிப்பின் மூலம் அல்லாஹ்வை நெருங்குவது…

فَأَمَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَى أَن يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ

“எவர் பாவமன்னிப்புப் பெற்று, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்கின்றாரோ அவர் வெற்றியாளர்களில் ஒருவர் தாம்”.       ( அல்குர்ஆன்: 28: 67 )

9. அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டவைகளை தவிர்த்து வாழ்வதும், பெரும்பாவங்களில் இருந்து விலகி வாழ்வதும்…

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

”இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளும், குறிபார்க்கும் அம்புகளும் ஷைத்தானுடைய செயல்களிலுள்ள அருவருக்கத் தக்கவையாகும்; ஆகவே, அவைகளில் இருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”.                      ( அல்குர்ஆன்: 5: 90 )

قال العلامة السعدي رحمه الله في تفسيره:" فإن الفلاح لا يتم إلا بترك ما حرم الله، خصوصا هذه الفواحش المذكورة

அல்லாமா ஸஅதீ (ரஹ்) அவர்கள் இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற போது “வெற்றி என்பது அல்லாஹ் தடை செய்தவற்றிலிருந்து முற்றிலுமாக விலகி வாழாத வரை சாத்தியமே இல்லை. குறிப்பாக மேற்கூறிய காரியங்கள் வெற்றிக்கு மிகப் பெரும் தடையாகும்.

10. வாழ்வில் எல்லா நிலைகளிலும் இறையச்சத்தோடு இருப்பது..

قُل لاَّ يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ فَاتَّقُواْ اللَّهَ يَا أُوْلِي الأَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (100)
قال العلامة السعدي: "أخبر أن الفلاح متوقف على التقوى التي هي موافقةُ اللهِ في أمرهِ ونهيهِ، فمن اتقاه أفلح كل الفلاح، ومن ترك تقواه حصل له الخسران وفاتتهُ الأرباح

“நபியே! அம்மக்களை அழைத்து நீங்கள் கூறிவிடுங்கள்! தீயதும், நல்லதும் சமமாக மாட்டாது; தீயவை பரவலாக நடைமுறையில் இருப்பது உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் சரி! எனவே, அறிவுடையோரே! வாழ்வில் எல்லா அம்சங்களிலும் இறையச்சத்தைக் கடைபிடியுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”. ( அல்குர்ஆன் 5:100 )

அல்லாமா ஸஅதீ (ரஹ்) அவர்கள் இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற போது “அல்லாஹ் வாழ்வின் எல்லா நிலைகளிலும் தக்வாவோடு நடந்து கொள்கிற போது தான் வெற்றியை வசப்படுத்தி கொடுக்கின்றான்” என்று கூறுகின்றார்கள்.

11. அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ர் செய்வது..

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُواْ وَاذْكُرُواْ اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلَحُونَ (45) وقال تعالى: (فَإِذَا قُضِيَتِ الصَّلاةُ فَانتَشِرُوا فِي الأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ (10) قال ابن القيم رحمه الله في بيان فوائد ذكر الله عز وجل:"أنّ الذّكر يوجبُ صلاةَ اللّهِ- عزّ وجلّ- وملائكتِهِ على الذّاكر، ومن صلّى اللّهُ تعالى عليه وملائكتُهُ فقد أفلح كلّ الفلاح وفاز كلّ الفوز

“இறைநம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் போரில் எதிரிகளைச் சந்தித்தால் உறுதியாக இருங்கள்; அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”.                                                 ( அல்குர்ஆன்: 8: 45 )

“தொழுகை முடிந்து விட்டதென்றால் நீங்கள் அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் விரைந்து செல்லுங்கள்! அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்யுங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”.                                        ( அல்குர்ஆன்: 62: 10 )

இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் இந்த வசனங்களுக்கு விளக்கம் தருகிற போது “திக்ர் செய்பவர் மீது அல்லாஹ்வின் வானவர்கள் துஆ செய்கின்றார்கள். வானவர்களின் பிரார்த்தனைகளின் மீது அல்லாஹ் பிரத்யேகமான கவனத்தைச் செலுத்தும் போது அவர் வெற்றிக்கு மேல் வெற்றியை குவிப்பார்” என்று கூறுகின்றார்கள்.

12. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை சிந்தித்துப் பார்ப்பது…

وَاذكُرُواْ إِذْ جَعَلَكُمْ خُلَفَاء مِن بَعْدِ قَوْمِ نُوحٍ وَزَادَكُمْ فِي الْخَلْقِ بَسْطَةً فَاذْكُرُواْ آلاء اللَّهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஹூத் {அலை} அவர்களின் சமூகத்தை நோக்கி அல்லாஹ் தான் வழங்கிய அருட்கொடைகளை நினைத்துப் பார்க்குமாறு கட்டளையிடுகின்றான்.

“நூஹுடைய சமூகத்தாருக்குப் பின் உங்களை இப்பூமியில் பின் தோன்றல் களாக அவன் ஆக்கி வைத்து, உடலமைப்பில் சக்தியையும், உங்களுக்கு அவன் அதிகப்படுத்தியுள்ளதையும் நினைவு கூர்ந்து பாருங்கள்! மேலும், அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் நினைவு கூர்ந்து பாருங்கள்; நீங்கள் வெற்றியாளர்களாய் வலம் வருவீர்கள்”.                                           ( அல்குர்ஆன்: 7: 69 )

மேற்கூறிய அம்சங்களில் தற்கால முஸ்லிம் சமூகம் அவ்வளவாக முன்னேறி இருப்பதாக தெரியவில்லை.

ஆதலால் தான் உலகெங்கும், சென்ற இடங்களிலெல்லாம், அடியெடுத்து வைத்த இடங்களிலெல்லாம் மாபெரும் வெற்றிகளை குவித்து வரலாற்றுச் சாதனை படைத்த முஸ்லிம் சமூகம் இன்று உலகளாவிய அளவில் தோல்விகளுக்கு மேல் தோல்விகளை அடுக்கடுக்காகச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

ஊடகச் சித்தரிப்புக்களுக்கும், ஏகாதிபத்திய மிரட்டலுக்கும், இஸ்ரேலிய கருவருப்பிற்கும், ஃபாஸிச தாக்குதலுக்கும், வறுமை, அகதிகளாகுதல், சிறைபடுதல், போன்றவற்றிற்கும் எதிராக இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம் சமூகம் வெற்றிகள் பலதைப் பெற வேண்டி இருக்கிறது.

ஆஷூராவின் தினத்தன்று அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனின் உதவியை நாடி நின்ற மூஸா {அலை} அவர்களுக்கும், அவரின் சமூகத்தாருக்கும் உதவி புரிந்து வெற்றியை நல்கிய அல்லாஹ் தான் இப்போதும் இருக்கின்றான்.

நாமும் அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டிருக்கின்றோம், அல்லாஹ்வின் உதவியை நாடிக்கொண்டிருக்கின்றோம் எனினும் வெற்றியின் வாயிற்கதவுகளின் அருகே கூட நாம் செல்லவில்லை, அதன் வழிகளை அடைந்திடும் முயற்சிகளில் கூட இன்னமும் இறங்கவில்லை.

எப்படி வெற்றி பெறுவோம்!

எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம் சமூகத்திற்கு இந்த புத்தாண்டில் பல்வேறு வெற்றிகளைக் குவித்து, நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் வாழும் நல்ல நஸீபைத் தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!


2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு வெற்றி பெற வழிவகைகளை கூறும் இறைவசனங்களாக தொகுத்து தாங்கள் வழங்கியிருப்பது அருமையான கோர்வை மவ்லானா! அல்லாஹ் தங்களின் அறிவாற்றலில் பர்கத் செய்வானாக.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு வெற்றி பெற வழிவகைகளை கூறும் இறைவசனங்களாக தொகுத்து தாங்கள் வழங்கியிருப்பது அருமையான கோர்வை மவ்லானா! அல்லாஹ் தங்களின் அறிவாற்றலில் பர்கத் செய்வானாக.

    ReplyDelete