Thursday, 23 March 2017

கவலையளிக்கும் முஸ்லிம் சமூகத்தின் ஆரோக்கியம்!!!



கவலையளிக்கும் முஸ்லிம் சமூகத்தின் ஆரோக்கியம்!!!


இன்று முஸ்லிம் சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கிற மிகப் பெரிய பிரச்சனை என்ன? என்று யாராவது ஒருவர் உங்களிடம் கேட்டால் நீங்கள் எதைச் சொல்வீர்கள்?

பாபர்மசூதி பிரச்சனை, சிறைவாசிகள், தீவிரவாதிகள், பி.ஜே.பி & ஆர்.எஸ்.எஸ் அச்சுறுத்தல், இல்லை இயக்கவெறி, பிரிவினைகள், விவாகரத்துகள் இப்படி எல்லாம் நீங்கள் சொன்னால் நிச்சயம் அது சொந்த சமூகத்தைப் பற்றிய உங்களது அறிவின்மையை அறிவித்துக் காட்டுவது போல் அமைந்து விடும்.

அப்படியென்றால் இதுவெல்லாம் பிரச்சனையே இல்லையா? என்றும் கேட்டு விடக்கூடாது. ஏனெனில், இவைகளை ஏதாவது ஒரு தருணத்தில் சரி செய்து விடலாம்.

அப்படியென்றால், முஸ்லிம் சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கிற தலையாய பிரச்சனை எதுவாக இருக்க முடியும்? என்ற கேள்விகளோடு முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை முறையை அணுகினால் அங்கே, முஸ்லிம் சமூகம் நோய்ச்சமூகமாக மாறி இருப்பதைப் பார்க்க முடியும்.

மருத்துவமனை சகிதம், மருந்துகள் சகிதம் வாழும் சமூகமாக மாறி விட்டிருப்பதை உணர முடியும்.

சிறு குழந்தை முதற்கொண்டு பெரியவர்கள் வரை உடல் சார்ந்த உபரியான நோய்கள், அறுவை சிகிச்சகைகள், புற்று நோய்கள், இளவயது மரணங்கள், என ஒரு நீண்ட பட்டியலை தொகுக்க முடியும்.

பள்ளிவாசலின் வாசல் முன்பாக சகோதர சமயத்தைச் சார்ந்த மக்களில் பாமரர்கள் முதற்கொண்டு படித்தவர்கள் வரை நீண்ட க்யூவில் நின்று ஓதிப்பார்த்து குணம் பெறுவதாக ஒரு சமூகம் வெளியில் சொல்லிக் கொண்டிருக்க, அதே பள்ளி வாசலில் தொழுகையின் பின்பாக எழுந்து நின்று இன்ன ஆபரேஷனுக்காக, இன்ன நோய்க்காக உங்கள் உதவியை நாடி வந்திருக்கின்றேன் என்று முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி ஒருவரின் குரல் இப்படி ஒலித்தால் இந்த சமூகம் எந்த நிலையில் இருக்கின்றது என்று சொல்லவும் வேண்டுமா?

பொதுவாகவே, இன்று நோய்கள் பெருகிவிட்டது. முஸ்லிம் சமூகத்தைத் தாண்டி வெகுவாக மனித சமூகம் அனைத்தும் மருத்துவமனை வாழ்க்கைக்கு பழகிப் போய் விட்டது.

தமிழகத்தில் மருத்துவக்கல்லூரியுடன் இணைந்த பெரிய அரசு மருத்துவமனைகள் 28, இதர அரசு மாவட்ட மற்றும் தாலுக்கா மருத்துவமனைகள் 388, இது தவிர்த்து கிராம, பஞ்சாயத்து அரசு மருத்துவமனைகள் ஏராளம் இருக்கின்றன.

இவையெல்லாம் போக ஆயிரக்கணக்கான தனியார் மருத்துவமனைகள், இது போக தமிழ்நாட்டில் 1,047 சித்தா மருத்துவமனைகளும், 100 ஆயுர்வேதா மருத்துவமனைகளும், 65 யுனானி மருத்துவமனைகளும், 107 ஓமியோபதி மருத்துவமனைகளும், 56 யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைகள் என மொத்தம் 1,375 மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

அதிகம் கவனிக்கப்படாத சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி மருத்துவமனைகளில் ஓராண்டில் சிகிச்சைப் பெற்றவர்களின் புள்ளி விபரத்தைப் பாருங்கள். அதிர்ச்சி அடைந்து விடுவோம்.

கடந்த 2013-14-ம் ஆண்டின் படி, சித்தா மருத்துவமனையில் 3 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரத்து 874 பேர் புறநோயாளிகளாகவும், 2 லட்சத்து 98 ஆயிரத்து 510 பேர் உள்நோயாளிகளாகவும், ஆயுர்வேதா மருத்துவமனையில் 21 லட்சத்து 87 ஆயிரத்து 132 பேர் புறநோயாளிகளாகவும், 46 ஆயிரத்து 886 பேர் உள்நோயாளிகளாகவும், யுனானி மருத்துவமனையில் 5 லட்சத்து 62 ஆயிரத்து 327 பேர் புறநோயாளிகளாகவும், 19 ஆயிரத்து 529 பேர் உள்நோயாளிகளாகவும், ஓமியோபதி மருத்துவமனையில் 29 லட்சத்து 80 ஆயிரத்து 699 பேர் புறநோயாளிகளாகவும், 26 ஆயிரத்து 921 பேர் உள்நோயாளிகளாகவும், யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் 8 லட்சத்து 58 ஆயிரத்து 91 பேர் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மருத்துவமனைகளில் மொத்தம் 4 கோடியே 16 லட்சத்து 30 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

புள்ளி விபரம் இப்படியானால், அலோபதி மருத்துவம் பார்த்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துப் பார்த்தால் நடமாடுகிறவர்களில் எவருமே நோய்களை விட்டும் தப்பியதில்லை என்கிற முடிவுக்கு வந்து விடலாம்.

இதில் முஸ்லிம் சமூகத்தின் விகிதாச்சாரம் எவ்வளவு இருக்கும்? அல்லாஹ்வே நன்கறிவான். அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.

ஆரோக்கியம் எனும் அருட்கொடை!..
 
அல்லாஹ் இந்த மனித சமுதாயத்திற்கு எண்ணற்ற அருட்கொடைகளை வாரி வழங்கியிருக்கின்றான்.

அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளில் மகத்துவம் வாய்ந்த அருட்கொடை ஆரோக்கியம் ஆகும்.

 وما بكم من نعمة فمن الله
يقول الإمام القرطبي –رحمه الله- :"(من نعمة )أي: صحة جسم، وسعة رزق، وولد فمن الله
تفسير القرطبي 10/114

”மேலும், உங்களுக்கு கிடைத்துள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருந்து வந்தவைதாம்”. ( அல்குர்ஆன்: 16: 53 ) எனும் இறை வசனத்திற்கு விளக்கம் தருகிற இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள் “உடல் ஆரோக்கியம், விசாலமான வாழ்வாதாரம், குழந்தைபேறு ஆகியவைகளைத் தாம் இங்கே நிஃமத் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்” என கூறுவார்கள். ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ )

فعن عبيد الله بن مِحْصَن الأنصاري –رضي الله عنه- أن رسول الله صلى الله عليه وسلم قال " من أَصْبَحَ مِنْكُمْ آمِنًا في سِرْبِهِ، مُعَافًى في جَسَدِهِ، عِنْدَهُ قُوتُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ له الدُّنْيَا ".رواه الترمذي ( 2346)

அப்துல்லாஹ் இப்னு மிஹ்ஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் படுக்கையில் இருந்து நிம்மதியோடு எழுகின்றாரோ, எழுந்த அன்றைய நாளில் உடலில் ஆரோக்கியத்தை உணர்கின்றாரோ, எழுந்த அன்றைய நாளில் உணவை உண்கின்றாரோ அவருக்கு இந்த உலகம் முழுவதும் கிடைத்ததற்குச் சமமாகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                  ( நூல்: திர்மிதீ )

يقول وهب بن منبه –رحمه الله-:"رؤوس النِّعم ثلاثة؛ فأولها: نعمةُ الإسلام التي لا تتمُّ نعمُه إلا بها، والثانية: نعمةُ العافية التي لا تطيبُ الحياةُ إلا بها،والثالثة: نعمة الغنى التي لا يتمُّ العيشُ إلا به"
عدة الصابرين لابن القيم(ص117

வஹப் இப்னு முநப்பஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் அருட்கொடைகளில் மிக உன்னதமானது மூன்று அருட்கொடைகளாகும். 1. இஸ்லாம் எனும் அருட்கொடை அது இல்லை எனில் வெறெந்த அருட்கொடைகளும் ஓர் அடியானுக்கு பூர்த்தியாக இருக்காது. 2. ஆரோக்கியம் எனும் அருட்கொடை அது இல்லை என்றால் மனித வாழ்வு அழகு பெறாது. 3. பொருளாதாரம் எனும் அருட்கொடை அது இல்லை என்றால் மனித வாழ்க்கை பூரணம் அடையாது”.

         ( நூல்: இத்ததுஸ் ஸாபிரீன் லிஇமாமி இப்னுல் கைய்யிமி (ரஹ்)…. )

جاء رجل إلى يونس بن عبيد –رحمه الله- يشكو ضيق حاله، فقال له
 "أيسرك ببصرك هذا الذي تبصر به مائة ألف درهم؟"،قال الرجل:لا،قال: "فبيديك مائة ألف؟"،قال الرجل: لا ، قال:" فبرجليك؟"قال الرجل: لا ، فذكره يونس بن عبيد
رحمه الله
بنعم الله عليه،ثم قال له
"أرى عندك مئين ألوف!،وأنت تشكو الحاجة!".الشكر لابن أبي الدنيا (101

ஒரு மனிதர் யூனுஸ் இப்னு உபைத் (ரஹ்) அவர்களிடம் வருகை தந்து, தான் மிகவும் கஷ்டப்படுவதாக, வறுமையில் வாடுவதாக முறையிட்டார்.

அது கேட்ட யூனுஸ் (ரஹ்) அவர்கள் அவரிடம் “உம்முடைய கண்ணை எனக்கு ஒரு லட்சம் திர்ஹமுக்கு விலைக்கு தந்து விடுகின்றாயா? என்று கேட்டார்கள். அதற்கவர், இல்லை நான் தரமாட்டேன்” என்றார்.

சரி, அப்படியானால் உன் இரு கைகளையும் ஒரு லட்சம் திர்ஹமுக்கு எனக்கு விலைக்கு தந்து விடுகின்றாயா? என்று கேட்டார்கள். அதற்கவர், இல்லை, நான் தரமாட்டேன்” என்றார்.

சரி, அப்படியானால் உன் இரு கால்களையும் ஒரு லட்சம் திர்ஹமுக்கு எனக்கு விலைக்கு தந்து விடுகின்றாயா? என்று கேட்டார்கள். அதற்கவர், இல்லை, நான் தரமாட்டேன்” என்றார்.

அப்படியானால், அல்லாஹ் உனக்கு பேருபகாரம் செய்திருக்கின்றான். உன்னிடம் நான் பல லட்சம் திர்ஹம் மதிப்புடைய இறைவனின் உபகாரங்களைக் காண்கின்றேன். ஆனால், நீரோ! வாழ்க்கையில் கஷ்டப்படுவதாக என்னிடம் வந்து முறையிடுகின்றீர்?!” என்று கூறினார்கள். ( நூல்: அஷ்ஷுக்ரு லிஇப்னி அபித்துன்யா )

ஆரோக்கியத்திற்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்....

عن أبي هريرة- رضي الله عنه- قال
سمعت أبا بكر الصّدّيق- رضي الله عنه- على هذا المنبر يقول: سمعت رسول الله صلّى الله عليه وسلّم في هذا اليوم من عام الأوّل، ثمّ استعبر أبو بكر وبكى، ثمّ قال:
سمعت رسول الله صلّى الله عليه وسلّم يقول: «لم تؤتوا شيئا بعد كلمة الإخلاص مثل العافية، فاسألوا الله العافية»

மஸ்ஜித்துன் நபவீயின் மிம்பரில் நின்று பிரசங்கம் செய்து கொண்டிருந்த ஃகலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள்நீங்கள் லாயிலாஹா இல்லல்லாஹீ என்ற வார்த்தைக்குப்பிறகு ஆரோக்கியத்தைத்தவிர வேறு எதனையும் உங்களுக்குச் சிறந்த ஒன்றாக வழங்கப்பட வில்லை. எனவே, நீங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள்! என்று இதே போன்றதொரு நாளில், இதே மின்பரில் நின்று நபி {ஸல்} அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் என்று கூறிய அபூபக்கர் சித்தீக் (ரலி)­ அவர்கள் மாநபி {ஸல்} அவர்களின் நினைவு சூழ்ந்து கொள்ளவே அழுதார்கள்.

                                    ( நூல்: முஸ்னத் அபூ யஃலா, நஸாயீ  )

 மாநபி {ஸல்} அவர்கள் மக்களுக்கு கட்டளையிட்டதோடு நின்று விடாமல், அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை அதிகமதிகம் கேட்டும் இருக்கின்றார்கள்.

وعن ابن عمر -رضي الله عنهما- قال: كان رسول الله صلى الله عليه وعلى آله وسلم يقول
اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك أخرجه مسلم

யா அல்லாஹ்! உன்னுடைய அருள் என்னை விட்டு நீங்குவதில் இருந்தும், நீ எனக்கு கொடுத்த ஆரோக்கியம் என்னிலிருந்து விலகுவதை விட்டும், உன்னுடைய தண்டனை திடீரென்று வருவதையும், உன்னுடைய அனைத்து கோபத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்!” என்று பிரார்த்தனை செய்வார்கள். இது அவர்களின் (வழமையான) பிரார்த்தனைகளில் ஒன்றாகும் அப்துல்லாஹ் இப்னு உமர் (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.                                ( நூல்: முஸ்லிம் )

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உடல் பலகீனமான இறை நம்பிக்கையாளரை விட ஆரோக்கியமான, பலம் நிறைந்த இறைநம்பிக்கையாளரே சிறந்தவரும், அல்லாஹ்வுக்கு அதிக விருப்பமானவரும் ஆவார்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                            ( நூல்: திர்மிதீ )

ஆரோக்கியத்தை விரும்பி இறைவனிடம் பிரார்த்திப்பவரின் உயரிய நிலை….

عن علي بن أبي طالب رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم
 أنه أتاه جبرئيل عليه السلام ، فبينما هو عنده إذ أقبل أبو ذر ، فنظر إليه جبرئيل فقال : هو أبو ذر . قلت : يا أمين الله ! وتعرفون أنتم أبا ذر ؟ فقال : نعم والذي بعثك بالحق إن أبا ذر أعرف في أهل السماء منه في أهل الأرض ، وإنما ذلك لدعاء يدعو به كل يوم مرتين ، وقد تعجبت الملائكة منه ، فادع به فسل عن دعائه

அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஜிப்ரயீல் (அலை) அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது அங்கே அப்போது அந்த இடத்தை அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள்.

அதைக் கண்ட ஜிப்ரயீல் (அலை) அவர்கள்இவர் அபூதர் அல் ஃகிஃபாரி தானே? என்று வினவினார்கள். ஆம்! அவர் அபூதர் தான் என கூறிய மாநபி {ஸல்} அவர்கள்அல்லாஹ்வின் நம்பிக்கைக்குரியவரே! நீங்கள் எப்படி அவர்களை அறிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார்கள்.

உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீதாணையாக! பூமியில் எப்படி அவர் அறியப்படுகின்றாரோ, அது போன்றே வானுலகில் இருக்கிற வானவர்கள் அனைவரும் அவரை அறிவார்கள்.

ஒவ்வொரு நாளும் இரண்டு நேரங்கள் அவர் கேட்கும் துஆவின் மூலம் வானவர்கள் ஆச்சர்யமடைந்ததோடு, அதுவே அவர் வானவர்கள் அறிந்து கொள்வதற்கு காரணமாகவும் ஆகிவிட்டதுஎன ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறி விட்டு, வேண்டுமானால் நபியே! நீங்கள் அவரை அழைத்து அது எந்த துஆ என்று கேளுங்கள்!” என்று சொன்னார்கள்.

فقال رسول الله صلى الله عليه وسلم: يا أبا ذر ! دعاء تدعو به كل يوم مرتين ؟ قال : نعم فداك أبي وأمي ، ما سمعته من بشر ، وإنما هو عشرة أحرف ألهمني ربي إلهاما ، وأنا أدعو به كل يوم مرتين ، أستقبل القبلة فأسبح الله مليا ، وأهلله مليا ، وأحمده مليا ، وأكبره مليا ،

மாநபி {ஸல்} அவர்கள்அபூதர் (ரலி) அவர்களை அழைத்து, தினந்தோரும் நீர் ஏதோ ஒரு துஆவை அல்லாஹ்விடம் கேட்கின்றீராமே? அப்படியா? அது என்ன துஆ கொஞ்சம் ஓதிக் காட்டுங்கள்!” என்று கேட்டார்கள்.

அதற்கு, அபூதர் (ரலி) அவர்கள்என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும்! அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எனக்கு இல்ஹாமாக கற்றுத் தந்த 10 பத்து கலிமாக்களை உளூ செய்து விட்டு, கிப்லாவை நோக்கி அமர்ந்து அல்லாஹ்வை வேண்டிய அளவிற்கு தஸ்பீஹும், தஹ்லீலும், தக்பீரும், தஹ்மீதும் கூறிய பின்னர் கேட்கிறேன்என்று பதில் கூறிவிட்டு அந்த துஆவை மாநபி {ஸல்} அவர்கள் திருமுன் ஓதிக்காண்பித்தார்கள்.

ثم أدعو بتلك العشر الكلمات : اللهم إني أسألك إيمانا دائما ، وأسألك قلبا خاشعا ، وأسألك علما نافعا ، وأسألك يقينا صادقا ، وأسألك دينا قيما ، وأسألك العافية من كل بلية ، وأسألك تمام العافية ، وأسألك دوام العافية ، وأسألك الشكر على العافية ، وأسألك الغنى عن الناس

அல்லாஹ்வே! உன்னிடம் நிலையான இறைநம்பிக்கையை (ஈமானை) க் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் (உனக்கு மட்டுமே) அஞ்சுகிற இதயத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் பயன் தருகிற கல்வியைக் கேட்கின்றேன்!

அல்லாஹ்வே! உன்னிடம் உண்மையான (தீனின்) உறுதிப்பாட்டைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் அனைத்து வகையான நோய்களில் இருந்தும் ஆரோக்கியத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் பரிபூரணமான ஆரோக்கியத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் நீடித்த, நிலையான ஆரோக்கியத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! நீ வழங்கிய ஆரோக்கியத்திற்கு நன்றி செலுத்தும் நற்பேற்றை உன்னிடம் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன் அன்றி பிற மனிதர்களிடம் தேவையாகாத தன்மையைக் கேட்கின்றேன்!” என்று துஆ கேட்பேன் என அபூதர் (ரலி) கூறினார்கள்.

قال جبرئيل : يا محمد ! والذي بعثك بالحق لا يدعو أحد من أمتك هذا الدعاء إلا غفرت له ذنوبه وإن كانت أكثر من زبد البحر وعدد تراب الأرض ، ولا يلقاك أحد من أمتك وفي قلبه هذا الدعاء إلا اشتاقت إليه الجنان ، واستغفر له الملكان ، وفتحت له أبواب الجنة ، ونادت الملائكة : يا ولي الله ! ادخل من أي باب شئت

அப்போது, ஜிப்ரயீல் (அலை) அவர்கள்முஹம்மத் {ஸல்} அவர்களே! உங்கள் உம்மத்தில் எவர் இந்த துஆவை ஓதுகின்றாரோ அவரின் பாவங்கள் கடலின் நுரையளவு இருந்தாலும், பாலை மணலின் எண்ணிக்கையளவு இருந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான்.

இந்த துஆ குடி கொண்டிருக்கும் இதயத்தை சுவனம் நேசிக்கின்றது! அவருக்காக சதா இரு வானவர்கள் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்கின்றனர், அவருக்காக சுவனத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன! மறுமையில், வானவர்கள்அல்லாஹ்வின் நேசம் பெற்றவரே! நீர் விரும்பிய வாசல் வழியாக சுவனத்திற்குள் பிரவேசிப்பீராக!” என்று அழைப்பு கொடுப்பார்கள்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

أخرجه الحكيم الترمذي في " نوادر الأصول " (3/40-41) قال : ثنا عمر بن أبى
 عمر ، قال ثنا أبو همام الدلال – محمد بن محبب (221هـ)، عن إبراهيم بن طهمان ، عن عاصم بن أبى النجود ، عن زر بن حبيش ، عن علي بن أبي طالب به . – نقلنا الإسناد من " جمع الجوامع " للسيوطي ، ، وعنه صاحب " كنز العمال " (2/678
لا حرج على من دعا بالكلمات الواردة بهذا الدعاء ، إذ ليس فيها شيء مستنكر ولا مستغرب ، لكن دون أن يعتقد لها هذا الفضل الذي لم ثبت

( நூல்: நவாதிருல் உஸூல் லிஇமாமி அல்ஹகீமித் திர்மிதீ (ரஹ்), கன்ஜுல் உம்மால், ஜம்உல் ஜவாமிஉ லிஇமாமிஸ் ஸுயூத்தீ (ரஹ்)…. )

மேற்கூறிய ஹதீஸை ஹதீஸ் விரிவுரையாளர்கள் சிலர் ளயீஃப் என்றும், மவ்ளூஃ என்றும் விமர்சிக்கின்றனர். இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரில் வருகிற உமர் இப்னு உமர் என்பவரே இதற்கு பிரதான காரணமானவர்.

எனினும் இந்த ஹதீஸுக்கு விளக்கம் தருகிற ஹதீஸ் விரிவுரையாளர்கள் இந்த வாசகத்தைக் கொண்டு துஆ ஓதுவதென்பது ஒன்றும் பாவமான செயல் இல்லை. ஆனாலும், மேற்கூறிய ஹதீஸில் சொல்லப்பட்ட சிறப்புக்களோ, சோபனங்களோ கிடைக்கும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்று கூறுகின்றார்கள்.

ஆரோக்கியத்தின் விஷயத்தில் எச்சரிக்கையும், விழிப்புணர்வும் தேவை…..

وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال : قال لي رسول الله صلى الله عليه وسلم : يا عبد الله ألم أخبر أنك تصوم النهار وتقوم الليل فقلت : بلى يا رسول الله ، قال : فلا تفعل صم وأفطر وقم ونم فإن لجسدك عليك حقا وإن لعينك عليك حقا وإن لزوجك عليك حقا وإن لزوْرك عليك حقا وإن بحسبك أن تصوم كل شهر ثلاثة أيام فإن لك بكل حسنة عشر أمثالها فإن ذلك صيام الدهر كله فشدَّدتُ فشدَّد عليَّ قلت يا رسول الله إني أجد قوة قال فصم صيام نبي الله داود عليه السلام ولا تزد عليه قلت وما كان صيام نبي الله داود عليه السلام قال نصف الدهر فكان عبد الله يقول بعد ما كبر يا ليتني قبلت رخصة النبي صلى الله عليه وسلم . رواه البخاري ( 1874 ) ومسلم ( 1159 ) . زوْرك : أي ضيفك .

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ர­லி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”நபி {ஸல்} அவர்கள் என்னிடம், ''அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக நான் அறிகின்றேனே!'' அது உண்மையா? என்று கேட்டார்கள். அதற்கு, நான் ''ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் ''இனி அவ்வாறு செய்யவேண்டாம்! (சில நாட்கள்) நோன்பு வைத்து; (சில நாட்கள்) விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுது; (சிறிது நேரம்) உறங்குவீராக!

ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் சிலது உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் சிலது உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் சிலது உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்!

ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!'' என்று கூறினார்கள்.

நான் சிரமத்தை வரிந்து கட்டிக்கொண்டு ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது!'' ஆம்! அப்போது அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!'' என்று நான் கூறினேன். அதற்கு நபி {ஸல்} அவர்கள் ''தாவூத் நபி {அலை} அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!'' என்றார்கள்.

 தாவூத் நபியின் நோன்பு எது?' என்று நான் கேட்டேன். ''வருடத்தில் பாதி நாட்கள்!'' என்றார்கள். ''அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ர­லி) அவர்கள் வயோதிகம் அடைந்த காலத்தில் ”எனக்கு 'நபி {ஸல்} அவர்கள் அளித்த சலுகைகளை நான் ஏற்காமல் போய்விட்டேனே!' என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!'' என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

                                                           ( நூல்: புகாரி )

இங்கே, அதிகமாக தொழுகிற, நோன்பு நோற்கிற, நபித்தோழரை அழைத்து  மாநபி {ஸல்} அவர்கள் பாராட்டவில்லை. பரிசில்கள் வழங்கி சோபனங்களோ, நன்மாராயமோ கூறவில்லை.

மாறாக, கருணையே உருவான மாநபி {ஸல்} அவர்கள் வணக்க, வழிபாடுகளின் பெயரால் தன்னுடைய ஆரோக்கியத்தை இழந்து விடுவதன் ஆபத்து குறித்து எச்சரிக்கை செய்தார்கள்.

عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله (صلى الله عليه وسلم) لرجل وهو يعظه : " اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك
أخرجه الحاكم في المستدرك رقم ( 7846 ) 4 / 341

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் உபதேசம் செய்யுமாறு வேண்டி நின்ற ஒருவரிடம் ”ஐந்து வருவதற்கு முன்பாக ஐந்து அம்சங்களைப் பேணிக் கொள்ளுங்கள்!
1) முதுமை வருவதற்கு முன் உள்ள வாலிபம்
2) வறுமை வருவதற்கு முன் உள்ள செல்வம்
3) நோய் வருவதற்கு முன் உள்ள ஆரோக்கியம்
4) வேலை வருவதற்கு முன் உள்ள ஓய்வு
5) மரணம் வருவதற்கு முன் உள்ள வாழ்வு”. என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்..                                        ( நூல் : முஸ்னத் ஹாக்கிம் )

எனவே, ஆரோக்கியம் குறித்து இஸ்லாம் வலியுறுத்தும் அம்சங்களை விளங்குவதோடு ஏன் முஸ்லிம் சமூகம் ஆரோக்கியத்தை இழந்து நோய்ச்சமூகமாக மாறி நிற்கிறது என்பதற்கான காரண காரியங்களையும், அதில் இருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளையும் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் வாரத்தில் பார்ப்போம்.

அல்லாஹ்வே! உன்னிடம் அனைத்து வகையான நோய்களில் இருந்தும் ஆரோக்கியத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் பரிபூரணமான ஆரோக்கியத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் நீடித்த, நிலையான ஆரோக்கியத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! நீ வழங்கிய ஆரோக்கியத்திற்கு நன்றி செலுத்தும் நற்பேற்றை உன்னிடம் கேட்கின்றேன்!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

5 comments:

  1. மாஷா அல்லாஹ்! ஆரோக்கிய‌ம் குறித்த‌ த‌ங்க‌ளின் அக்க‌ரை மிக‌ அருமை.

    த‌மிழ‌க‌த்தின் ம‌ருத்துவ‌ம‌னைக‌ள் ப‌ற்றிய‌ த‌ங்க‌ளின் ச‌ர்வே அற்புத‌ம்.

    ஒவ்வொரு நாளின் அன்ற‌ய‌ விலையுய‌ர்ந்த‌ ச‌ம்பாத்திய‌ம் ஆரோக்கிய‌ மே.அது வாழ்நாளின் மாபெரும் சொத்து என்ப‌தை புரிய‌ வைக்க‌ தாங்கள் கொண்டுவ‌ந்திருக்கும் இர‌ண்டு ஹ‌தீஸ்க‌ள் க‌ட்டுரையின் திருப்புமுனை.

    ஆரோக்கிய‌த்தை அல்லாஹ்விட‌ம் எப்ப‌டி கேட்க‌ வேண்டும் என்ப‌த‌ற்கு அபூத‌ர் ர‌லி அவ‌ர்க‌ளின் செய்தியும்.அதை எப்ப‌டி பாதுகாக்க‌ வேண்டும்? என்ப‌த‌ற்கு அப்துல்லாஹ் இப்னு அம்ர் ர‌லி அவ‌ர்க‌ளுக்கு அண்ண‌லார் வ‌ழ‌ங்கிய‌ அ(றி)ருள் உரைக‌ளும் க‌ட்டுரையின் நிறைவான‌ முடிவுரை

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்! ஆரோக்கிய‌ம் குறித்த‌ த‌ங்க‌ளின் அக்க‌ரை மிக‌ அருமை.

    த‌மிழ‌க‌த்தின் ம‌ருத்துவ‌ம‌னைக‌ள் ப‌ற்றிய‌ த‌ங்க‌ளின் ச‌ர்வே அற்புத‌ம்.

    ஒவ்வொரு நாளின் அன்ற‌ய‌ விலையுய‌ர்ந்த‌ ச‌ம்பாத்திய‌ம் ஆரோக்கிய‌ மே.அது வாழ்நாளின் மாபெரும் சொத்து என்ப‌தை புரிய‌ வைக்க‌ தாங்கள் கொண்டுவ‌ந்திருக்கும் இர‌ண்டு ஹ‌தீஸ்க‌ள் க‌ட்டுரையின் திருப்புமுனை.

    ஆரோக்கிய‌த்தை அல்லாஹ்விட‌ம் எப்ப‌டி கேட்க‌ வேண்டும் என்ப‌த‌ற்கு அபூத‌ர் ர‌லி அவ‌ர்க‌ளின் செய்தியும்.அதை எப்ப‌டி பாதுகாக்க‌ வேண்டும்? என்ப‌த‌ற்கு அப்துல்லாஹ் இப்னு அம்ர் ர‌லி அவ‌ர்க‌ளுக்கு அண்ண‌லார் வ‌ழ‌ங்கிய‌ அ(றி)ருள் உரைக‌ளும் க‌ட்டுரையின் நிறைவான‌ முடிவுரை

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்! ஆரோக்கியம் நல்கும் நோன்பு எனும் கடமையை சரியான முறையில் நிறைவேற்ற இப்போதிருந்தே ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.. என்பதை தங்களது ஆக்கம் சொல்லாமல் சொல்கிறது. جزاكم الله خيرا كثيرا يا أستاذ

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்! ஆரோக்கியம் நல்கும் நோன்பு எனும் கடமையை சரியான முறையில் நிறைவேற்ற இப்போதிருந்தே ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.. என்பதை தங்களது ஆக்கம் சொல்லாமல் சொல்கிறது. جزاكم الله خيرا كثيرا يا أستاذ

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் ........ கவனிக்கப்படாத களம் ... தாங்கள் கவனப்படுத்தியது இந்த சமூகத்தின் பலம் .....

    ReplyDelete