Thursday, 18 January 2018

ஜமாஅத்துல் உலமா தலைமையின் கீழ் ஒன்றிணைவது காலத்தின் அவசியம்!!!



ஜமாஅத்துல் உலமா தலைமையின் கீழ் ஒன்றிணைவது
காலத்தின் அவசியம்!!!



பெண்கள் பாதுகாப்பு என்கிற போலிப்பெயரில் புறவாசல் வழியே ஊடுருவ முயன்ற ஃபாஸிச மத்திய பா. . அரசை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஜனவரி 05/01/2018 வெள்ளிக்கிழமை அன்று மாலை முதல் இரவு வரை நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் பெரும் திரளான மக்கள் எழுச்சியோடு நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்!

உலமா சமூகத்தின் தலைமையில் அமைந்த இந்த மாபெரும் எழுச்சி உண்மையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாபெரும் நிகழ்வாகும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வு நம்மிடம் விதைத்துச் சென்றிருக்கிற உயர்ந்த அம்சங்களையும், எதிர்கால வியூகம் எப்படி இருக்க வேண்டும் என்கிற மகத்தான திட்டங்களையும் தூர நோக்கோடு அசைபோட்டுப் பார்க்க நாம் அவசியம் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இயக்க தலைவர்களுக்கு சில செய்திகளையும், உம்மத்திற்கு சில செய்திகளையும், இயக்க தலைவர்கள் & உம்மத் இரண்டு தரப்பாருக்கும் சேர்ந்தாற்போல் சில செய்திகளையும், ஜமாஅத்துல் உலமாவின் தலைமைக்கு சில செய்திகளையும் அந்த நாள் சொல்லிச் சென்றிருக்கின்றது.

ஆலிம்களின் தலைமை இந்த உலகில் மட்டுமல்ல, மறுமையிலும் அது வெற்றியை பெற்றுத்தரும் என்று அல்குர்ஆன் சான்று பகர்கின்றது.

இந்த உம்மத்தின் ஒரு சந்ததி இந்த உலகைச் சந்திக்கிற நாள் முதற்கொண்டு, அது மண்ணறைக்கு செல்லும் வரை உலமா சமூகத்தின் பங்களிப்பு என்பது மகத்தானது.

உலமா சமூகம் தலைமையேற்று இந்த உம்மத்தை வழிநடத்திய எல்லா காலங்களிலும், உலமா சமூகத்தின் தலைமையின் கீழ் இந்த உம்மத் ஒன்று பட்டிருந்த எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ் இந்த உம்மத்திற்கு வெற்றியையே நல்கியிருக்கின்றான்.

வாருங்கள்! உலமா சமூகத்தின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து களம் கண்ட அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் சொல்ல வரும் மகத்தான செய்திகளை அறிந்து, ஆய்ந்து செயல்வடிவம் கொடுத்து தோற்க்கடிக்கப்பட முடியாத மகத்தான உம்மத்தை உருவாக்குவோம்.

உலமா சமூகத்தின் தலைமையின் கீழ் ஒன்றிணைவதன் அவசியம்….

குத்வத், உஸ்வத் – முன்னோடி, முன்மாதிரி இவ்விரண்டு வார்த்தைகளும் அதன் பதங்களும் மார்க்கத்தின் பார்வையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் ஓர் இடமுண்டு.

குத்வத், உஸ்வத் இவ்விரண்டிலும் இரண்டு வகை இருப்பதாக அல்லாமா ஸஅதீ (ரஹ்) அவர்கள் தங்களின் தஃப்ஸீர் நூலிலே குறிப்பிடுவார்கள்.

குத்வதே ஹஸனா, குத்வதே ஸய்யிஆ உஸ்வத்தே ஹஸனா, உஸ்வத்தே ஸய்யிஆ இது குறித்த குர்ஆனின் வழிகாட்டலோடு குறிப்பிடுவார்கள்.

அல்லாஹ் மாநபி {ஸல்} அவர்களுக்கு முந்தைய நபிமார்கள் பலரின் பெயர்களை குறிப்பிட்டுக் கூறிவிட்டு பின்வருமாறு கூறுவான்.

“நபியே! அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களுடைய வழியினையே நபியே நீரும் பின்பற்றிச் செல்வீராக!”

                                                       ( அல்குர்ஆன்: 6: 90 )
  
இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: அல்லாஹ் முன்மாதிரி புருஷரான நபி {ஸல்} அவர்களையே முன் சென்ற நபிமார்களின் வழியில் செல்லுமாறு பணிக்கின்றான் என்றால் அவர்களின் உம்மத்தாகிய நாம் நமக்கு முன் சென்ற முன்னோர்களின் பாதையில் பயணிப்பது எத்தகைய முக்கிய அம்சம் ஆகும் என்பதை கவனிக்க வேண்டும்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தலை சிறந்த முதலாம் நூற்றாண்டின் மத்திப் பகுதியில் வாழும் நபித்தோழர் ஆவார்கள்.

பல்வேறு வகையான குழப்பங்களிலும், பிரச்சனைகளிலும் சிக்குண்ட மக்களை நோக்கி அவர்கள் “எவர் அழகிய நடைமுறையை மேற்கொள்ள வேண்டுமென விரும்புகின்றாரோ அவர் அழகிய நடைமுறைகளை உருவாக்கிச் சென்ற முன்னோர்களின் வாழ்க்கையை உற்று நோக்கட்டும்.

ஏனெனில், அவர்கள் தான் மாநபியின் தோழர்கள், அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான். மேலும், இந்த உம்மத்தின் தலைசிறந்த மனிதர்களும் அவர்களே!

அவர்கள் தூய்மையான இதயங்களும், ஆழமான அறிவாற்றலும், கொண்டவர்கள். அல்லாஹ்வே அவர்களை தன்னுடைய நபியின் தோழர்களாக, அவனுடைய தீனின் பாதுகாவலர்களாக தேர்ந்தெடுத்தான்.

அவர்களின் சிறப்புக்களை தெரிந்து கொள்ள நீங்கள் முயற்சி மேற்கொள்ளுங்கள்! அவர்கள் சென்ற வழிகளில் நீங்கள் செல்லுங்கள்! அவர்களின் வாழ்வில் இருந்தும், குண நலன்களில் இருந்தும் உங்களால் எவ்வளவு பற்றிப் பிடித்து வாழ முடியுமோ அவ்வளவு வாழ்ந்து கொள்ளுங்கள்!

ஏனெனில், அவர்கள் நிலையான நேர்வழியில் நீடித்து வாழ்ந்தவர்கள்” என்று கூறினார்கள்.

இங்கே, இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தங்கள் காலத்தில் வாழ்ந்த ஏனைய மக்களை முதல் தர ஆலிம்களான, உலமா சமூகத்தின் முதலாம் தலைமுறையினரான, வாழ்ந்து கொண்டிருக்கிற, காலஞ்சென்ற நபித்தோழர்களின் வழிமுறைகளின் படி, வழிகாட்டுதலின் படி வாழத் தூண்டுகின்றார்கள்.

இந்த இரண்டு அம்சங்களையும் மேற்கோள்களாக காட்டி இமாம் ஸஅதீ (ரஹ்) அவர்கள் உலமா சமூகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த உம்மத் ஒன்று படுவது அவசியம் இதற்கு குத்வதே ஹஸனா என்று குறிப்பிடுகின்றார்கள்.

ஆகவே, உலமா சமூகத்தின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து அவர்களின் வழிகாட்டலின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது இந்த உம்மத்தின் மீது அவசியமாகும்.

உலமா சமூகத்தின் தலைமையே வெற்றியின் தலைமை....

உலமா சமூகம் தலைமையேற்று இந்த உம்மத்தை வழிநடத்திய எல்லா காலகட்டங்களிலும், உலமா சமூகத்தின் தலைமையின் கீழ் இந்த உம்மத் ஒன்று பட்டிருந்த எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ் இந்த உம்மத்திற்கு வெற்றியையே நல்கியிருக்கின்றான்.

இந்த உம்மத்திற்கு எல்லாகாலத்திலும் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றது. அந்த காலங்களில் எல்லாம் இந்த உம்மத் தலைசிறந்த உலமாக்களின் தலைமையின் கீழ் ஒன்றுபட்டது.

அதன் பலனாக அந்த பிரச்சனைகள் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு அந்த சமூகம் மிகப் பெரிய அளவிலான வெற்றியையும் காலத்திற்கும் நிம்மதியையும் அடைந்தது.

மாநபி {ஸல்} அவர்கள் காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகள் அதற்கான தீர்வுகளை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முன் நின்று அல்லாஹ்வின் உதவிகளோடு அவைகளை தீர்த்து வைத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட பிரச்சனைகள், அதற்கான தீர்வுகளை நோக்கி இந்த உம்மத் நகர்ந்த விதம் மிகவும் அற்புதமானது.

ஏனெனில், இந்த உம்மத்தின் முதல் தரமான உலமாக்கள் சத்திய ஸஹாபா பெருமக்கள் வாழ்ந்த காலம் அது.

இந்த உம்மத்தின் முதல் தர உலமாக்கள் என்கிற இந்த பதம் நாம் கொடுத்ததல்ல.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே! எப்படி விண்மீன்கள் என்றார்களோ, முஹாஜிர்கள் என்றார்களோ, அன்ஸார்கள் என்றார்களோ அது போன்றே அவர்களை உலமாக்கள் என்றும் அடையாளப்படுத்தினார்கள்.

عن النبي صلى الله عليه وسلم أنه قال
" إنكم اليوم في زمان كثير علماؤه قليل خطباؤه

நீங்கள் இப்படியான காலத்தில் வாழ்கின்றீர்கள்! அதிகமான செயல்படுகிற உலமாக்களும், குறைவான செயல்படாத பேச்சாளர்களும் நிறைந்த ஒரு காலத்தில்

அப்படியான அந்த உலமா சமூகம் நிறைந்து வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் போது இந்த உம்மத் அணுகியது அந்த மேன்மக்களான உலமாக்களைத் தான்.

நபி {ஸல்} அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர் நபித்தோழர்கள் காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள்..

நபி {ஸல்} அவர்களின் காலத்தைத் தொடர்ந்து வாழ்ந்த நபித்தோழர்கள் நபி {ஸல்} அவர்களின் மறைவுக்குப் பின்னர் உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் ஏராளமான பிரச்சனைகளைச் சந்தித்தனர்.

ஏன் நபி {ஸல்} அவர்கள் வஃபாத்தாகி விட்டார்களா? இல்லையா? என்பதில் கூட அவர்களிடையே முரண்பாடு நிலவியது.

உமர் (ரலி) அவர்கள் உருவிய வாளோடு நின்றார்கள் என்கிற செய்தியும்,  அபூபக்ர் (ரலி) அவர்கள் அதை தீர்த்து வைத்த விதமும் நாம் அறிந்ததே.

ويروي ابن عباس رضي الله عنهما عن سيدنا عمر رضي الله عنه أنه قال له في خلافته:
"يا ابن عباس هل تدري ما حملني على مقالتي التي قلت حين توفي رسول الله صلّى الله عليه وسلم؟ قال: قلت: لا أدري يا أمير المؤمنين أنت أعلم.

قال: فإنه - والله - إن كان الذي حملني على ذلك إلاّ أني كنتُ أقرأ هذه الآية: ((وكذلك جعلناكُم أمَّةً وسطاً لِتَكُونوا شُهداء على الناسِ ويَكُون الرَّسولُ عليكمُ شهيداً )) [البقرة:143] فوالله إن كنت لأظن أن رسول الله صلّى الله عليه وسلم سيبقى في أمته حتى يشهد عليها بآخر أعمالها، فإنه الذي حملني على أن قلت ما قلت (26). فكأنه رضي الله عنه قد اجتهد في معنى الآيات الكريمة، وفهم أن المراد منها: الشهادة في الدنيا، وذلك يقتضي بقاء رسول الله صلّى الله عليه وسلم ، إلى آخر أيامها. "

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பின் நாளில், உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த போது ஒருமுறை நானும் அவர்களும் சந்தித்துக் கொண்டோம்.

உமர் (ரலி) அவர்கள் என்னிடம்இப்னு அப்பாஸே! அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மறைவின் போது நான் ஏன் உருவிய வாளோடு நின்றிருந்தேன் தெரியுமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, நான்என்னை விட நீங்கள் தானே அறிவீர்கள்என்றேன். அப்போது, உமர் (ரலி) அவர்கள்நான் பகராவினுடைய 143 –வது இறைவசனத்தின் கருத்தைஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} உலக முடிவின் இறுதி நாள் வரை உயிரோடி இருப்பார்கள்என்று விளங்கி வைத்திருந்தேன்என்றார்கள்.

ثم اختلفوا في المكان الذي ينبغي أن يدفن فيه رسول الله صلّى الله عليه وسلم ، فقال قائل: "ندفنه في مسجده. وقال قائل: بل ندفنه مع أصحابه. فقال أبو بكر رضي الله عنه: إني سمعت رسول الله صلّى الله عليه وسلم يقول: "ما قبض نبي إلاّ دفن حيث يقبض " فرفع فراش رسول الله صلّى الله عليه وسلم الذي توفي عليه، فحفر له تحته "

அடுத்து நபி {ஸல்} அவர்களை எங்கே அடக்கம் செய்வது? என்ற பிரச்சனை எழுந்தது. சிலர் மக்காவில் என்றும், சிலர் மதீனாவில் என்றும், வேறு சிலர் ஜன்னத்துல் பகீஃயிலும் என்றனர்.

அப்போது அங்கே பிரசன்னமாகி இருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள்நபி {ஸல்} அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்எந்த ஒரு நபியும் அவரின் ஆன்மா எங்கே கைப்பற்றப்படுகின்றதோ அங்கேயே அடக்கம் செய்யப்படுவார்கள்என்று கூறி தீர்த்து வைத்தார்கள்.

يقول ابن إسحاق: "ولما قبض رسول الله صلّى الله عليه وسلم انحاز هذا الحي من الأنصار إلى سعد بن عبادة في سقيفة بني ساعدة واعتزل علي بن أبي طالب، والزبير بن العوام، وطلحة بن عبيد الله في بيت فاطمة، وانحاز بقية المهاجرين إلى أبي بكر، وانحاز معهم أسيد بن حضير في بني عبد الأشهل "

அடுத்து முஸ்லிம் உம்மாவை வழி நடத்தும் தலைவர் யார்? எனும் பிரச்சனை எழுந்தது. அன்ஸாரிகள் ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவாகவும், முஹாஜிர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவாகவும் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். இந்த இரு குழுவிலும் கலந்து கொள்ளாமல் அலீ (ரலி) தல்ஹா (ரலி) ஜுபைர் (ரலி) ஆகியோர் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டில் தஞ்சமடைந்திருந்தனர்.

يقول سيدنا عمر: "ولم أكره شيئاً مما قاله غيرها - أي: غير ترشيحه لعمر وأبي عبيدة - وكان- والله أن أقدم فتضرب عنقي لا يقرِّبني ذلك إلى إثم، أحب إلي من أن أتأمّر على قوم فيهم أبو بكر… ".

இப்போது இங்கே பல்வேறு விதமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அடுத்த தலைவர் முஹாஜிர் தான் என்று முஹாஜிர்களும், அல்ல அன்ஸார்கள் தான் என்று அன்ஸாரிகளும், அல்ல முஹாஜிர்களில் ஒருவர் அன்ஸாரிகளில் ஒருவர் என இருவர் தலைவராக இருக்கட்டும் என்றும், முஹாஜிர்கள் என்றார் முஹாஜிர்களில் யார்? என்றும், அன்ஸாரிகள் என்றால் அன்ஸாரிகளில் யார்? என்றும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இன்னும் சிலர், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாழும் காலத்தில் அதிகமாக நபிகளாரோடு நெருக்கத்திலும், இணைத்தும் பேசப்பட்டவர்கள் உமர், அபூபக்ர் ஆகிய இருவர் தான். எனவே இருவரில் ஒருவர் தான் தலைவராக வரவேண்டும் எனவும் கூறினர்.

இப்படிப்பட்ட பல்வேறு முரண்களும், கருத்து வேறுபாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்ததை அறிந்த உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களையும், முஹாஜிர்களையும் கையோடு அழைத்துக் கொண்டு ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களும் அன்ஸாரிகளும் குழுமியிருந்த பனூ ஸாயிதாவினரின் இல்லத்தருகே வந்தார்கள்.

ثم قام من الأنصار خطيب آخر يريد أن يرجع الأمر إلى الإطار الأول الذي وضعه خطيبهم الأول فيه .. فقال: "…منا أمير ومنكم أمير يا معشر قريش " قال عمر: "فكثر اللغط، وارتفعت الأصوات حتى تخوّفت الاختلاف " فقلت: "ابسط يدك يا أبا بكر فبسط يده فبايعته، ثم بايعه المهاجرون،ثم بايعه الأنصار ". وقد كاد سعد بن عبادة مرشح الأنصار رضي الله عنه أن يقتل في الزحام "فقد تدافع الناس لمبايعة أبي بكر حتى كادوا يقتلون سعداً دون أن ينتبهوا له ".

அங்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் எழவே, உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் கையில் பைஅத் செய்தார்கள். உடனே, மற்றெல்லா நபித்தோழர்களும் அடுத்தடுத்து வந்து அபூபக்ர் (ரலி) அவர்களின் கரத்தில் பைஅத் செய்தார்கள்.

சத்திய ஸஹாபாக்கள் எல்லா பிரச்சனையின் போதும் உடனடியாக உலமாக்களின் வழிகாட்டல்களை அப்படியே ஏற்றுக் கொண்டனர். அவர்கள் ஒருபோதும் மனோ இச்சையின் அடிப்படையில் செயல்பட்டது கிடையாது.

இரண்டாம் நூற்றாண்டின் தாபியீன்கள் தபவுத் தாபியீன்களின் காலம்

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்கா வெற்றியின் போது 10000 முஸ்லிம்களை இந்த உம்மத்தின் முன்னால் சமர்ப்பித்தார்கள்.

ஹுனைன் யுத்தத்தின் போது 13000 முஸ்லிம்களை சமர்ப்பித்தார்கள். இதுவே ஹஜ்ஜத்துல் விதாவிலே லட்சத்தையும் தாண்டி நின்றது.

அதன் பின்னர் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி அன்ஹும்) ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் உலக நாடுகளை நோக்கிய படையெடுப்புகள் என பல்வேறு பகுதிகளில் நபித்தொழர்கள் பிரிந்து போயினர்.

அந்தந்த நபித்தோழர்கள் தங்கள் வசித்த பகுதியில் தங்களுக்கு கிடைத்திருந்த நபிமொழிகளின் படி அப்பகுதி மக்களிடையே தீர்ப்பளித்துக் கொண்டும், புனித நபித்தோழர்கள் வழங்கிய ஃபத்வாக்களை வழங்கியும் வந்தனர்.

وقد حمل علم وفقه الفقهاء والقراء من الصحابة بعدهم من تلقى عنهم من التابعين، أمثال: سعيد بن المسيب  الذي يعتبر راوية عمر وحامل فقهه في المدينة، وعطاء بن أبي رباح في مكة، وطاووس في اليمن، ويحيى بن أبي كثير في اليمامة، والحسن في البصرة، ومكحول في الشام، وعطاء في خراسان، وعلقمة في الكوفة وغيرهم. . . وهؤلاء كانوا كثيراً ما يمارسون الفتوى والاجتهاد بمشهد من أصحاب رسول الله صلى الله عليه وسلم الذين تلقوا العلم والفقه عنهم، وتربوا على أيديهم، وتأدبوا بآدابهم، وتأثروا بمناهجهم في الاستنباط، فما خرجوا عن آداب الصحابة في الاختلاف عندما اختلفوا، ولا جاوزوا تلك السيرة، وهؤلاء هم فقهاء الجمهور الذين تأثرت بهم جماهير الأمة، وعنهم تلقوا الفقه، ولعل مما يوضح ذلك الأدب هاتان المناظرتان في الدية.

இந்த நபித்தோழர்களிடம் மாணவர்களாகவும், தோழர்களாகவும் இருந்த பல தாபீயீன்கள் அவர்களின் ஷரீஆ விவகாரங்களையும், மார்க்க ஃபத்வாக்களையும் தீவிரமாக கண்காணித்து பதிவு செய்து கொண்டனர்.

மதீனாவிலே ஸயீத் இப்னு முஸய்யிப் (ரஹ்) அவர்களும், மக்காவிலே அதாஃ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்களும், யமனிலே தாவூஸ் (ரஹ்) அவர்களும், யமாமாவிலே யஹ்யா இப்னு அபீகஸீர் (ரஹ்) அவர்களும், பஸராவிலே ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களும், ஷாமிலே மக்ஹூல் (ரஹ்) அவர்களும், குராஸானிலே அதாஃ (ரஹ்) அவர்களும், கூஃபாவிலே அல்கமா (ரஹ்) அவர்களும் இம்மாபெரும் பணியில் தங்களின் ஆயுட்காலத்தை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

அடுத்த தலைமுறையினரான தபவுத்தாபியீன்களிடம் தங்களின் இல்மையும், ஃபிக்ஹையும், நபித்தோழர்களின் ஃபத்வாக்களையும் அழகிய முறையில் ஒப்படைத்துச் சென்றனர். (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!)

இமாம்களின் காலம்

மிகவும் கவனமாக தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இல்மையும், ஃபிக்ஹையும், முன்னோர்களான ஃபத்வாக்களையும் அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய உலகுக்கு புத்துயிர் கொடுத்தனர். தங்களின் மாணவர்களிடம் இந்த அமானிதத்தைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தனர்.

காலங்கள் மாறுகிற போது காட்சிகளும், பிரச்சனைகளும் மாறிக் கொண்டிருந்தன. தபவுத் தாபியீன்கள் இங்கு தான் கியாஸ் மற்றும் தஃவீல் என்ற இருவழிப்பாதைகளைத் தேர்ந்தெடுத்தனர்.

அதுவும் முந்தைய இருவழிகளான அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவுக்கு முரண்படாத, முன்னோர்களான நபித்தோழர்களின் இஜ்மாவை புறந்தள்ளாத அமைப்பில் தங்களின் சட்ட முன்வரைவைத் தொகுத்தனர்.

தபவுத்தாபியீன்களின் காலம் தான் ஃபிக்ஹ் ன் பொற்காலம் எனலாம். அந்த அளவுக்கு பெரும் பெரும் இஜ்திஹாதுகளும், முஜ்தஹிதளும் இந்த உம்மத்திற்கு கிடைத்தனர்.

அவர்களிடம் இருந்து அறிவுச்சுடரைப் பெற்ற இமாம்கள் சிற்சில மாற்றங்களோடு தங்களிடம் அந்த அமானிதம் தரப்பட்டதை உணர்ந்தார்கள். அதைச் சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டார்கள்.

இதன் பின்னர் தபவுத்தாபியீன்களும், இமாம்களும் உயிர் நீக்கவே மக்களிடையே பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட ஆரம்பித்தன.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களின் புரட்சி...

இரண்டாம் நூற்றாண்டு ஹிஜ்ரி 200 க்கும் 280 க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் இஸ்லாமிய உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய காலம் என்றே சொல்ல வேண்டும்.

முஃதஜிலாக்களின் ஆதிக்கம் ஓங்கி இருந்த தருணம் அது. அப்பாஸிய ஆட்சியாளர்களில் சிலரும் கூட அவர்களோடு கை கோர்த்துக் கொண்டு இஸ்லாமிய கொள்கைகளில், கோட்பாடுகளில் சராமாரியாக விளையாடிக் கொண்டிருந்த அபாயகரமான, குழப்பமான சூழல் அது.

குர்ஆன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டது அல்ல. அது அல்லாஹ்வால் படைக்கப்பட்டது என்கிற புதியதோர் குழப்பத்தை ஆட்சியாளர்களின் துணை கொண்டு முஃதஜிலாக்கள் நிறுவ முயன்று கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் அன்றைய உலமாக்கள் அணி திரண்டு கடுமையாக எதிர்த்தனர். எதிர்த்த அத்துனை உலமாக்களும் மிரட்டப்பட்டனர். சிலர் சிறை வைக்கப்பட்டனர். சிலர் சித்ரவதை செய்யப்பட்டனர்.

உலமாக்களை சிறைகளிலும், வீடுகளிலும் முடக்கி விட்டு தங்களின் புதிய விஷமக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றனர். மக்களும் அவர்களின் தர்க்க ரீதியிலான வாதங்களுக்கு முன்னால் தோற்றுப் போய் குர்ஆன் படைக்கப்பட்டது தான் எனும் கருத்துக்கு உடன் பட ஆரம்பித்தனர்.

உடன்பட மறுக்கின்றவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். எதிர்த்துப் போராடுகின்றவர்கள் சிலுவையில் அறையப்பட்டு கழுகளுக்கும், விலங்கினங்களுக்கும் இரையாக ஆக்கப்பட்டனர்.

لم يصبر فى المحنة إلا أربعة : أحمد بن حنبل أبو عبد الله . و أحمد بن نصر بن مالك الخزاعى ، و محمد بن نوح بن ميمون المضروب ، و نعيم بن حماد و قد مات فى السجن مقيدا ، فأما أحمد بن نصر فضربت عنقه .و مات محمد بن نوح فى فتنة الخليفة المأمون ، والخليفة المعتصم ضرب الإمام أحمد بن حنبل .
قال الحافظ فى "تقريب التهذيب" ص / 85 :قتل ظلما .

இந்த தருணத்தில் உலமாக்களில் தலை சிறந்த உலமாக்களாக அன்றைய காலத்தில் அறியப்பட்ட இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள், இமாம் அஹ்மத் இப்னு நஸ்ர் (ரஹ்) அவர்கள், முஹம்மத் இப்னு நூஹ் (ரஹ்) அவர்கள், நயீம் இப்னு ஹம்மாது (ரஹ்) ஆகிய நால்வரும் வெகுண்டெழுந்து, மக்களை ஒன்று திரட்டி குர்ஆன் படைக்கப்படது என்று கூறுவதும், நம்புவதும் ஷரீஆவிற்கு முரணானது, குர்ஆன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டது என்று கூறி பிரச்சாரம் செய்தனர்.

ஆனாலும், அப்பாஸிய ஆட்சியாளர்கள் இந்நான்கு இமாம்களுக்கும் சித்ரவதைகளையும், சிறைக்கூடங்களையும், கொடூர மரணங்களையும் பரிசாக வழங்கினர்.

இமாம் முஹம்மத் இப்னு நூஹ் (ரஹ்) அவர்கள் சிறைக்குள் அடித்து சித்ரவதை செய்யப்பட்டார்கள். கலீஃபா மாமூன் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கலகம் ஒன்றில் கலகக்காரர்களால் கொல்லப்பட்டு ஷஹீத் ஆக்கப்பட்டார்கள்.

இமாம் நயீம் இப்னு ஹம்மாது (ரஹ்) அவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, உண்ண உணவு கொடுக்கப்படாமலும், குடிக்க நீர் வழங்கப்படாமலும், சங்கிலியால் கட்டப்பட்ட நிலையிலேயே ஷஹீதாக ஆக்கப்பட்டார்கள்.

ஆட்சியாளர் முஃதஸிம் அவர்களின் கட்டுங்கடங்காத சித்ரவதைகளை உடல் முழுவதும் தாங்கியவர்களாக இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள்  நீண்ட நாட்கள் சிறைக்குள் தனிமையில் வாழ்ந்து வந்தார்கள்.

பின் வந்த ஆட்சியாளர்களால் அந்த கருத்து பின் வாங்கப்பட்டு, சிறையில் இருந்த இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். மரியாதையோடும், கண்ணியத்தோடும் இமாம் அவர்கள் நடத்தப்பட்டார்கள்.

இமாம் அவர்களின் பின்னால் இந்த உம்மத் ஒன்றிணைந்து நின்று செயல் பட்டது.

குர்ஆன் சம்பந்தப்பட்ட அந்தப் பிரச்சனை அவர்களின் காலத்தோடே நீர்த்துப் போய் உம்மா நிம்மதியடைந்தது.

ஹதீஸ் கலையில் புரட்சி செய்த இமாம் புகாரி (ரஹ்) அவர்கள்...

அல்லாமா இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம் ஹதீஸ் துறை மிகவும் குழப்பத்தின் உச்சத்தைத் தொட்டிருந்த காலம்.

ஒரு நாள் ஹதீஸ் பாடம் நடத்திக் கொண்டிருந்த இமாம் அவர்கள் மாணவர்களிடையே “இந்த உம்மத் ஸஹீஹான ஹதீஸ் எது? ளயீஃபான ஹதீஸ் எது? என்று தெரியாமல் பெரும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

எனவே, இந்த உம்மத் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனையில் இருந்து கியாமத் நாள் வரையிலான நிரந்தரமான தீர்வை எவராவது தரமாட்டார்களா? என்கிற காத்திருப்பு இனிமேலும் பயன் தராது.

எனது மாணவர்களான உங்களில் ஒருவர் தான் இந்த உம்மத்தை இந்த குழப்பத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.

வகுப்பறையிலே அமர்ந்திருந்த அப்போது மாணவராயிருந்த இமாம் புகாரி (ரஹ்) அவர்களை நோக்கிய ஆசிரியர் இமாம் இப்னு இஸ்ஹாக் (ரஹ்) “முஹம்மத் நீதான் இந்தப் பணியை செய்து முடிக்க வேண்டும். நபி {ஸல்} அவர்களின் ஸஹீஹான நபிமொழிகள் அடங்கிய நபிமொழித்திரட்டு ஒன்றை இந்த உம்மத்திற்கு வழங்க வேண்டும்” என்றார்கள்.

அந்த வார்த்தை ஏற்படுத்திய தாக்கத்தில் இந்த உம்மத்திற்கு கிடைத்த பொக்கிஷம் தான் “ஸஹீஹ் அல் புகாரீ”

இதன் பின்னர் இந்த உம்மத்திற்கு கிடைத்த வெற்றி மகத்தானது. ஆம்! இதன் தொடர்ச்சியாக ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா, நஸாயீ, திர்மிதீ என ஐந்து ஸஹீஹான நபிமொழிகள் அடங்கிய நபிமொழித்திரட்டுகள், அஸ்மாவுர் ரிஜால் நபிமொழி அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்கள் என்று ஹதீஸ் துறை மிகவும் வலுப்பெற்றது.


இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களால் இந்த உம்மாவிற்கு ஏற்பட்ட மறுமலர்ச்சி...

ஹிஜ்ரி மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த இந்த உம்மத் மிகப் பெரிய அளவிலான பிரச்சனைகளைச் சந்தித்தது. உள்கட்டமைப்பு மிகவும் சிதைந்து, மக்கள் தங்களின் மனோஇச்சையின் படி வாழத்துவங்கி, முன்னோர்களான உலமா சமூகம் அரும்பாடு பட்டு கட்டமைத்த, பாதுகாத்த ஃபிக்ஹை சீரழித்தனர்.

அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கின்ற ஓர் அறிவிப்பில்….

أما بعد القرن الرابع فقد تغيرت الحال ولندع حجة الإسلام الغزالي (توفي: 505هـ ) يصف لنا ذلك حيث يقول: "اعلم أن الخلافة بعد رسول الله صلى الله عليه وسلم تولاها الخلفاء الراشدون المهديون، وكانوا أئمة علماء بالله تعالى، فقهاء في أحكامه، وكانوا مشتغلين بالفتاوى في الأقضية، فكانوا لا يستعينون بالفقهاء إلاّ نادراً في وقائع لا يستغني فيها عن المشاورة، فتفرغ العلماء لعلم الآخرة، وتجردوا لها وكانوا يتدافعون الفتاوى وما يتعلق بأحكام الخلق من الدنيا، وأقبلوا على الله تعالى بكنه اجتهادهم كما نقل من سيرهم، فلما أفضت الخلافة من بعدهم (أي الخلفاء) إلى قوم تولوها بغير استحقاق ولا استقلال بعلم الفتاوى والأحكام اضطروا إلى الاستعانة بالفقهاء، وإلى استصحابهم في جميع أحوالهم لاستفتائهم في مجاري أحكامهم،

وقد يسال أحدهم عن الوضوء من لمس المرأة، ومس الذكر فيقول: لا ينتقض به الوضوء عند أبي حنيفة.
وإذا سئل عن لعب الشطرنج وأكل لحوم الخيل قال: حلال عند الشافعي .
وإذا سئل عن تعذيب المتهم، أو مجاوزة الحد في التعزيرات قال: أجاز ذلك مالك .

وإذا أراد أن يحتال لأحد في بيع وقف إذا تخرب وتعطلت منفعته، ولم يكن لمتوليه ما يعمره به أفتاه بجواز ذلك على مذهب أحمد؛ حتى أصبحت أوقاف المسلمين تتحول من الوقف إلى الملك الخاص في كل مجموعة من السنين(161).
وهكذا ضاعت مقاصد الشرع بضياع تقوى الله، وأهملت قواعده الكلية، حتى بلغ الأمر بسفهاء الشعراء وغواتهم ومجّانهم حد التندر بأحكام الله كأن يقول أبو نواس:
أباح العراقي النبيـذ وشربه وقال حرامان المدامة والسكر
وقال الحجازي الشرابان واحد فحلت لنا من بين قوليهما الخمر
سآخذ من قوليهما طرفيهما وأشربها لأفارق الوازر الوزر

நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் தங்களின் மனோ இச்சையின் அடிப்படையில் வாழத்துவங்கினர். முன்னோர்களான நபித்தோழர்களின் காலத்திலும், தாபியீன்கள் காலத்திலும், தபவுத்தாபியீன்கள், இமாம்கள் காலத்திலும் பின்பற்றப்படாத பல நடைமுறைகளைப் பின்பற்றினர்.

அதற்காக முன்னோர்களின் ஃபத்வாக்களை தர்க்க ரீதியில் அணுகினர்.

பெண்ணை தொட்டால் உளூ முறியுமா? ஒரு ஆண் தன் மர்ம உறுப்பைத் தொட்டால் உளூ முறியுமா? என்று கேட்டால் இமாம் ஷாஃபிஇ முறியும் என்கிறார். இமாம் அபூஹனீஃபா முறியாது என்கிறார் எனவே அபூஹனீஃபாவைப் பின் பற்றுவோம்.

சதுரங்கம் விளையாடலாமா? ஆம்! இமாம் ஷாஃபிஇ கூடும் என்கிறார். எனவே விளையாடலாம். குதிரை இறைச்சி சாப்பிடலாமா? ஆம்! இமாம் ஷாஃபிஇ கூடும் என்கிறார். எனவே சாப்பிடலாம்.

சந்தேகத்திற்குரிய நபரை அடிக்கலாமா? ஆம்! இமாம் மாலிக் கூடும் என்கிறார். எனவே அடிக்கலாம்.

இராக் வாசிகள் போதை தரும் குடிபானங்களைச் சாப்பிடக் கூடாது. நபீத் எனும் பழச்சாற்றை சாப்பிடலாம் என்றனர்.

ஹிஜாஸ் வாசிகள் மதுவைத்தவிர மற்றெல்லாவற்றையும் சாப்பிடலாம் என்றனர்.

மக்களைத் திருப்தி படுத்தவும், ஆட்சியாளர்களின் அன்பைப் பெறுவதற்கும் சட்டமியற்றும் ஃபுகஹாக்கள் உருவானார்கள்.

இப்படியே குழப்பங்களும் பிரச்சனைகளும் முற்றி அழகிய தோற்றத்திலிருந்த ஃபிக்ஹை அழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றனர்.

أما الذين تأصلت مذاهبهم وبقيت إلى يومنا هذا، ولا يزال لها الكثير من المقلدين في ديار الإسلام كلها، ولا يزال فقههم وأصوله مدار التفقه والفتوى - عند الجمهور- أولئك هم الأئمة الربعة: أبو حنيفة، ومالك، والشافعي، وأحمد.

அல்லாஹ் அந்த காலத்திலும் வாழ்ந்த சில நல்லுள்ளம் கொண்ட உலமாக்களின் இதயத்தில் சில உதிப்புகளை வழங்கினான்.

அவர்கள் மீண்டும் இந்த உம்மத்தைப் புணரமைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தினர்.

அவர்கள் மக்கள் முன் ஒருமித்த ஓர் தீர்மானத்தை முன் வைத்தனர். இனிமேல் அவரவர் விருப்பம் போல் ஃபிக்ஹைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

நான்கு இமாம்களோடு நின்று விடுவோம். அவரவர்கள் அவரவர்களின் இமாம்களோடு நின்று விடுவோம்.

அந்த மேன்மக்களின் பெரும் முயற்சியால் விளைந்த மாபெரும் நன்மையே இன்று அவனியில் நான்கு மத்ஹபுகளின் தோற்றமும் வளர்ச்சியும்.

சிதறிப் போயிருந்த மக்களையும், கருத்து வேறுபாடுகளால் காணாமல் போயிருந்த நல்ல பண்புகளையும் இன்று வரை நிலைத்திருக்க வைத்திருக்கும் மத்ஹப் எனும் அழகிய வழிமுறை உருவாக மிகப் பெரிய முயற்சி செய்து அந்த காலத்து ஆலிம்களை ஒன்றிணைத்து உம்மத்தை மகத்தான வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றதில் மாபெரும் பங்களிப்பு அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களையே சாரும்!

பைத்துல் முகத்தஸை மீட்டுக் கொடுத்த அபுல் முளஃப்ஃபர் ஸலாஹுத்தீன் அய்யூபி, புரட்சியாளர் உமர் முக்தார், தாரிக் இப்னு ஸியாத், கிஸ்திந்தீனியாயை வெற்றி கொண்ட அல்ஃபாதிஹ் முஹம்மத் என்று நீண்ட பட்டியல் உண்டு.

இப்படியாக, வரலாறு நெடுகிலும் இந்த உம்மத் சந்தித்த பிரச்சனைகள் அதிலிருந்து இந்த உம்மத்தை மீட்டெடுத்து நிம்மதியோடும், எழுச்சியோடும், வெற்றியோடும் நடைபோட வைத்தவர்கள் உலமா பெருமக்களும் அவர்களின் தலைமையும், ஒன்றினைந்து நின்ற உம்மத்தும் தான் என்பதை உணர முடியும்.

எனவே, தற்போதைய ஒன்றிணைந்த இந்த செயல்பாடு இனிவரும் காலங்களிலும் அது நீடிக்க வேண்டும்.

மஹல்லா ஜமாஅத் அமைப்புகளும், இயக்கத் தலைவர்களும் இந்த உம்மாவின் பொதுவான பிரச்சனைகளின் போது உலமா சமூகத்தை அணுகி அதற்கான தீர்வைப் பெற வேண்டும்.

ஜமாஅத்துல் உலமா சபையின் மீதான எதிர்பார்ப்புகள்....

கடந்த காலங்களில் செய்யப்பட்ட விமர்சனங்களுக்கு தக்க விளக்கமாக இந்த 05/01/2018 நாள் அமைந்தது என்றால் அது மிகையல்ல.

தற்போது, உள்ளாட்சி தேர்தல், அரசியல் பிரவேசம், சிறைக்கைதிகள் விவகாரம், ஹெஜ். ராஜாவின் முஸ்லிம் விரோதப் போக்கு இவைகள் குறித்த விவகாரங்களின் ஜமாஅத்துல் உலமாவின் நிலைப்பாடு என்ன? என்று தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றது.

மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமை எல்லாவற்றையும் உற்று நோக்கி நன்கு கவனித்து வருகின்றது.

எப்படி மத்திய அரசை கண்டித்து மாநில அளவில் மிகப் பெரிய கண்டனத்தை பதிவு செய்ய ஜமாஅத்துல் உலமா உடனடியாக உள்ளே பிரவேசித்ததோ அதே போன்று தேவை ஏற்படுகிற பட்சத்தில் நாடு தழுவிய அளவிலும் ஜமாஅத்துல் உலமா சபை தலைமை ஏற்று இந்த உம்மத்தை வழி நடத்தும்.

அதுவரை அவரவர்கள் அவரவர்களின் பணியை சீர்பட செய்யட்டும்! இனி வரும்காலங்களில் மஹல்லா ஜமாஅத் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு, தலாக், சொத்து, குடும்பப்பிரச்சனை என இந்த உம்மத்தின் எல்லா பிரச்சனைகளும் உலமா சமூகத்தின் பக்கம் கொண்டு செல்லப்பட வேண்டும்.

அதற்கேற்றாற் போல் மாநில ஜமாஅத்துல் உலமா சபையும், ஆலிம் சமூகமும் இந்த உம்மத்தின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு அரசியல், ஆன்மீகம், கல்வி, சமூகக் கட்டமைப்பு, இளைஞர் நலன், ஆரோக்கியம் என அத்தனையிலும் கவனம் செலுத்தி இப்போது ஏற்பட்டிருக்கிற இந்த எழுச்சியை தக்க வைத்துக் கொள்வதோடு, இனிவரும் காலங்களிலும் இதே எழுச்சியோடு இந்த தேசத்தில் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான எல்லா முட்டுக்கட்டைகளையும் தகர்த் தெறிந்து வெற்றியோடு வீறு நடை போட வேண்டும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன்! இந்த உம்மத்தை ஒன்று படுத்துவானாக! ஆலிம் சமூகத்தின் தலைமையை அங்கீகரிப்பானாக! எதிர்வரும் காலங்களில் ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையின் கீழ் இந்த உம்மத்தை ஒன்றிணைப்பானாக!

இந்த தேசத்திலும், உலகின் நாலா பாகங்களிலும் இந்த உம்மத்திற்கு வெற்றியை நல்குவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!!

4 comments:

  1. மாஷா அல்லாஹ் மிக அருமை காலத்திற்கு ஏற்ற கட்டுரை

    ReplyDelete
  2. பாரகல்லாஹ் மாஷா அல்லாஹ் அருமை அருமை நல்ல பல தகவல்களை தந்துள்ளீர்கள்

    ReplyDelete
  3. بارك الله في علمك

    ReplyDelete