Thursday, 4 January 2018

ஷரீஅத்தில் கை வைத்தால்…..?



ஷரீஅத்தில் கை வைத்தால்…..?



நாட்டை ஆளும் பாஜக நடுவண் அரசு 18 மாநிலங்களில் ஆளும் தலைமைப் பொறுப்பில் இருப்பதாலும், மக்களவையில் அருதிப் பெரும்பான்மை வகிப்பதாலும், மாநிலங்களவையில் முதலிடத்தில் இருப்பதாலும், இன்னபிற மாநிலங்களில் வளர்ச்சியடைந்து வருவதாலும் இந்திய இறையாண்மையின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், மதச்சார்பின்மையின் மீதும் அதன் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்ற வெகுஜன குடிமக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமூக மக்களின் மீதும் புதிய புதிய சட்டங்களை இயற்றி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து வருவதை இந்த தேசத்தின் குடிமகனாய் அதை அனுபவித்து வரும் எவரும் மறுக்க முடியாது.

அந்த வகையில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது முதற்கொண்டு சிறுபான்மை சமூகமான இஸ்லாமிய சமூகத்திற்கெதிரான எல்லா வகையான திட்டங்களையும் மிகவும் முனைப்போடு செயல் படுத்தி வருவதை இந்த தேசத்தின் குடிமக்கள் அனைவரும் அறிவார்கள்.

பொதுசிவில் சட்டத்தை இலக்காகக் கொண்டு அதை முழு அளவில் நடை முறை படுத்தும் பொருட்டு முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஒவ்வொன்றாக இந்த நாட்டில் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டு முத்தலாக்கை கையில் எடுத்து நீதிமன்றம், மக்களவை, மாநிலங்களவை என்று ஓடிக் கொண்டு இருப்பதை நாம் பார்த்து வருகின்றோம்.

கடந்த வாரம் முத்தலாக் தடை சட்ட மசோதாவை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மக்களவையில் தாக்கல் செய்து, வெற்றி கண்ட ஆளும் நடுவண் அரசு பாஜக, நேற்று 3/1/2018 ( புதன்கிழமை ) மாநிலங்களவையில் தாக்கல் செய்து வெற்றி பெற்று விட்டால் முத்தலாக் தடை சட்டத்தை நடைமுறை படுத்தி விடலாம் என்று பகல் கனவு கண்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பினால், நிறைவேற்ற முடியாமல் போனது. ஆகவே, இன்று தாக்கல் செய்து வெற்றி பெற்று விடலாம் என முயற்சி மேற்கொண்டிருக்கிறது பாஜக.
பாஜக வின் பகல் கனவு பலிக்காமல் போகட்டும். மக்களவையில் நிறைவேறியது போன்று மாநிலங்களவையில் நிறைவேறினாலும் இந்த ஷரீஅத்தில் ஏதாவது குறைந்து போய் விடுமா? என்றால் நிச்சயம் குறைந்து போகாது.

இந்த நேரத்தில் முத்தலாக தடை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்புகள் தெரிவித்த அனைத்துக் கட்சி மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

முத்தலாக் தடைச் சட்ட மசோதா கடந்து வந்த பாதை…. 

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான ஷாயரா பானு தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவரது கணவர் ரிஸ்வான் அஹமது 2015 –ஆம் ஆண்டு அக்டோபர் 15 –ஆம் தேதி ஒரு கடிதத்தில் மூன்று முறை தலாக் எனக் குறிப்[பிட்டு அவரை விவாகரத்துச் செய்தார்.

கடந்த 2016, பிப்ரவரி மாதம் 23 –ஆம் தேதி  முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி முஸ்லிம் தனி நபர் சட்டத்துக்கு எதிராக ஷாயரா பானு என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

2016, டிசம்பர் 9 ம் தேதி முத்தலாக் சட்டவிரோதம், அரசியலமைப்புக்கு எதிரானது:  என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு  வெளியிட்டது.

2017, ஆகஸ்ட் 22 ல்  முத்தலாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் முத்தலாக் சட்டவிரோதமானது என்றும் காஜிகள் முத்தலாக்கிற்கு சார்பான சான்றிதழ்களை வழங்க கூடாது என்றும் தீர்ப்பளித்தது.

அப்போது,  நீதிமன்றத்தில் உச்சநீதிமன்றம் சட்ட விரோதம் என்று கருதுமானால் அதற்கு எதிரான ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் என்று பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கான தீர்ப்பை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு (பென்ச்)  விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹரும், நீதிபதி நஜீரும், முத்தலாக் முஸ்லிம் மதத்தினரின் அடிப்படை உரிமை என்று கூறினர்.

ஆனால், நீதிபதிகள் குரியன் ஜோசஃப், ஆர்.எஃப். நாரிமன், யு.யு.லலித் ஆகியோர், முத்தலாக் வழக்கத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தனர்.

இந்த மூவரும் கூட அரசாங்கத்திடம் சேர்ந்து சொன்னது. முஸ்லிம்களிடம் கலந்தாலோசித்து ஒரு மாற்று சட்டத்தை கொண்டு வருமாறு கூறினர்.

ஆனால்,  மத்திய பாஜக  அரசு உச்ச நீதிமன்றத்தின் ஒரு தரப்பு நீதிபதிகளின் கருத்தை மட்டும் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்களின் ஷரீஆவில் கை வைக்க துணிந்து சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட ஐவர் குழு ஒன்றை அமைத்து முத்தலாக் தடை சட்ட மசோதா ஒன்றை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டது.

இதன் பேரில் அந்த குழு முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) மசோதா என்ற பெயரில் முத்தலாக்கை தடை செய்யவும், அதை பயன்படுத்தும் நபருக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது அபராதத்துடன் கூடிய சிறை மற்றும் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கும் குழந்தைக்கும் ஜீவனாம்சம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட சில அம்சங்களை குறிப்பிட்டு கடந்த வாரம் இதே வியாழக்கிழமையில் பாராளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்தது.

அந்த நாளை வரலாற்றில் ஒரு முக்கிய நாள் என்று கூறியிருக்கிறார். மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத். உண்மையில் அந்த நாள் இந்திய  ஜனநாயக தேசத்தின் இரண்டாவது கருப்பு நாளாகும்.

ஆம்! 06/12/1992 பாபர் மஸ்ஜிதை உடைத்து இந்திய ஜனநாயகத்திற்கு கருப்பு நாளைத் தந்தவர்கள் இப்போது, மீண்டும் ஒரு கருப்பு நாளை 28/12/2017 நாடாளுமன்றத்திற்குள் முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் தந்திருக்கின்றார்கள்.

இவர்களின் நோக்கம் தான் என்ன?..

1.   இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இல்லாமல் ஆக்குவது…

يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ (32)

அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் ஒளியைத் ( இஸ்லாமிய மார்க்கத்தை ) தம் வாயால் ஊதி அணைத்து விட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆயினும் அல்லாஹ் தன் ஒளியை நிறைவு செய்யாமல் விடமாட்டான். இறை நிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!
                                                       ( அல்குர்ஆன்: 9: 32 )

இஸ்லாம் என்பது இப்பூமியில் 4000 –க்கும் மேற்பட்ட மதங்களில் இருந்தும் ஃபில்டர் செய்யப்பட்டு அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் ஆகும்.

முஸ்லிம் என்கிற அடையாளம் இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு அல்லாஹ் அவனே சூட்டி அழகு பார்க்கும் பெயர் ஆகும்.

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ

திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட வாழ்க்கை நெறி ( மார்க்கம்தீன் ) ஆகும்”. ( அல்குர்ஆன்: 3: 19 )

هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا

மேலும், அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும், அவன் வழங்கிய மார்க்கத்தில் ( இஸ்லாத்தில் ) உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை.

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் தான் இதற்கு முன்பும், இப்போதும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியுள்ளான். தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக!”.         ( அல்குர்ஆன்: 22: 78 )

ஆக இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் மார்க்கம், முஸ்லிம் என்பதும் அல்லாஹ் வைத்த பெயர் உலகில் எவரா (னா) லும் இஸ்லாத்தை இல்லாமல் ஆக்கவோ, முஸ்லிமை இஸ்லாத்தை விட்டும் பிரித்துப் பார்க்கவோ இயலாது.

2. ஷரீஆவின் சட்டங்களை மாற்றி விட வேண்டும்..

அல்லாஹ் தன் திருமறையில் மூன்று அம்சங்கள் எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாகாது எனப்பிரகடனப் படுத்துகின்றான்.

1. அல்லாஹ்வின் படைப்புகள் அதன் இயற்கைத் தன்மைகளில் இருந்து மாறாது.

لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ

அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்ய முடியாது”.                                ( அல்குர்ஆன்: 30: 30 )

2. அல்லாஹ்வின் நியதியில் யாதொரு மாற்றமும் நிகழாது

فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَبْدِيلًا وَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَحْوِيلًا (43)

 அல்லாஹ்வின் நியதியில் யாதொரு மாற்றத்தையும் எப்போதும் நீர் காணமாட்டீர். மேலும், அல்லாஹ்வின் நியதியை எந்தவொரு சக்தியாலும் திருப்பிட முடியும் என்பதையும் நீர் காணமாட்டீர்”.                      ( அல்குர்ஆன்: 35: 43 )

3. அல்லாஹ்வின் வார்த்தையில் மாற்றத்தைக் காண இயலாது….

لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ۚ

”அல்லாஹ்வின் வார்த்தைகள் ஒரு போதும் மாறக்கூடியவை அல்ல” ( அல் குர்ஆன்: 10: 64 )

4. முஸ்லிம்களை இஸ்லாமிய நெறிகளைப் பின்பற்றுவதில் இருந்தும் தூரமாக்க வேண்டும்..

“வேதம் அருளப்பட்டவர்களில் பலர்  நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு விட்டதற்குப் பின்னர் உங்களை எவ்விதத்திலாவது நிராகரிப்பவர்களாய் திருப்பி விட வேண்டும் என விரும்புகின்றார்கள். சத்தியம் தமக்கு தெளிவாகி விட்ட பின்னரும் தங்களிடமுள்ள பொறாமையின் காரணமாக இவ்வாறு செய்ய முனைகின்றனர்”.

                                                      ( அல்குர்ஆன்: 2: 109 )

5. முஸ்லிம் பெண்களை ஷரீஆவின் நீரோட்டத்தில் இருந்து விலக்கி, தேசிய மற்றும் ஆபாச நீரோட்டத்தில் திருப்பி விட வேண்டும்.

அதாவது தங்களை பெண் சமூகத்தின் பாதுகாவலர்களாக அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் பாதுகாவலர்களாக சித்தரிக்கும் இவர்கள் தான் கடந்த காலங்களில் முஸ்லிம் பெண்களை கற்பழித்தனர். உயிரோடு தீயிட்டு கொழுத்தினர். கருவுற்றிருக்கும் பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவை சூலாயுதத்தால் கீறிக் கிழித்தனர். தற்போது முஸ்லிம் பெண்களின் கருவில் இந்து ஆணின் விந்துத்துளி இருக்க வேண்டும் என்று இளைஞர்களைத் தூண்டி லவ் ஜிஹாத் செய்து வருகின்றன.

இவைகள் போதாதென்று முஸ்லிம் பெண்கள் ஷரீஆவின் கட்டுப்பாடுகளைத் தாண்டி வந்து இவ்வுலகத்தின் ஆசாபாசத்திலும், மோகத்திலும் வீழ்ந்து ஈமானை இழக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.  

“இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவி விட வேண்டுமென இவர்கள் விரும்புகின்றார்கள். அத்தகையோருக்கு இம்மையிலும், மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனை உண்டு. அல்லாஹ் அறிகின்றான். நீங்கள் இதை அறிவதில்லை”.                                    ( அல்குர்ஆன்: 24: 19 )

ஷரீஅத்தில் கை வைத்தால்…?

இவர்களின் திட்டங்களும், சதிகளும், சூழ்ச்சிகளும், முயற்சிகளும் ஒரு போதும் நிறைவேறாது.

வட்டார பாஷைகளில் சொல்ல வேண்டுமானால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது.


“உண்மையில் தீய சூழ்ச்சிகளும், திட்டங்களும் அவற்றைச் செய்பவர்களையே தாக்கும்”. ( அல்குர்ஆன்: 35: 43 )

وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِنْدَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ ﴿٤٦﴾

“அவர்கள் விதவிதமான சூழ்ச்சிகளைச் செய்து பார்க்கின்றனர். அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளையே பெயர்த்துவிடக் கூடியதாக இருப்பினும் அவர்களுடைய ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடிக்கும் சூட்சமம் அல்லாஹ்விடம் இருக்கின்றது”.

                                                      ( அல்குர்ஆன்: 14: 46 )

وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ                                                

”அவர்கள் சதித்திட்டங்கள் தீட்டினார்கள். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக தகுந்த திட்டங்களை தீட்டினான். மேலும், இத்தகைய திட்டங்களைத் தீட்டுவதில் அல்லாஹ் யாவரிலும் வல்லவன் ஆவான்”.                    ( அல்குர்ஆன்: 3: 54 )

ஷரீஆ என்பது சாதாரணமான ஒன்றல்ல சாமானியமாக விட்டு விடுவதற்கு!!...

ثُمَّ جَعَلْنَاكَ عَلَىٰ شَرِيعَةٍ مِّنَ الْأَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ لَا يَعْلَمُونَ (18

“{ நபியே! } இப்போது தீன் சம்பந்தமான விஷயங்களில் தெளிவான, பிரதான ஷரீஆவில் உம்மை நாம் நிலை நிறுத்தியிருக்கின்றோம்! எனவே, நீர் அதனையே பின்பற்றுவீராக! அறியாத மக்களின் மன இச்சைகளைப் பின் பற்றாதீர்!

அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு அவர்களால் எந்தப் பயனும் தர இயலாது. மேலும், கொடுமை புரிபவர்களே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். மேலும், இறையச்சமுடையோருக்கு அல்லாஹ் தோழனாவான்.

இந்த ஷரீஆ என்பது அனைவருக்கும் பகுத்துணரும் சான்றுகளாய் இருக்கின்றன. மேலும், உறுதி கொள்ளக்கூடிய மக்களுக்கு வழிகாட்டியாகவும், கருணையாகவும் இருக்கின்றன”.                         ( அல்குர்ஆன்: 45: 18,19,20 )

அல்லாஹ்வை விட ரோஷம் மிக்கவரா நீங்கள்?...

عن ابن عباس، قال: لما نـزلت هذه الآية
 وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً وَلا تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا وَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ قال سعد بن عبادة: لهكذا أنـزلت يا رسول الله؟ لو أتيتُ لَكَاع قد تفخذها رجل لم يكن لي أن أهيجه ولا أحرّكه حتى آتي بأربعة شهداء، فوالله ما كنت لآتيَ بأربعة شهداء حتى يفرغ من حاجته، فقال رسول الله صلى الله عليه وسلم: " يا مَعْشَرَ الأنْصَار أما تَسْمَعونَ إلى ما يَقُول سَيدُكُمْ؟ " قالوا: لا تلمه فإنه رجل غَيُور، ما تزوّج فينا قطّ إلا عذراء ولا طلق امرأة له فاجترأ رجل منا أن يتزوّجها؛ قال سعد: يا رسول الله، بأبي وأمي، والله إني لأعرف أنها من الله، وأنها حقّ، ولكن عجبت لو وجدت لَكَاعِ، قد تفخذها رجل لم يكن لي أن أهيجه ولا أحركه حتى آتي بأربعة شهداء، والله لا آتي بأربعة شهداء حتى يفرغ من حاجته،
فقال رسول الله صلى الله عليه وسلم
 " فإنَّ الله يَأبَى إلا ذَاكَ"

எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வில்லையோ அவர்களுக்கு எண்பது (80) சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே (மனிதர்களில் மிகவும்) கெட்டவர்கள்.” (அல்குர்ஆன்:24:4) எனும் இறைவசனம் இறக்கியருளப்பட்ட போது...

அன்ஸாரிகளின் தலைவர் ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவ்வாறு தான் இறைவசனம் அருளப் பெற்றுள்ளதா? என்று கேட்டார்கள்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “அன்ஸாரித் தோழர்களே! உங்கள் தலைவர் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள்.

அப்போது, அன்ஸாரித் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவரைப் பழித்து விட வேண்டாம். அவர் மிகவும் ரோஷக்காரர். அல்லாஹ்வின் மீதாணை! கன்னியைத் தவிர வேறெந்தப் பெண்ணையும் அவர் மணம் முடிக்கமாட்டார். அவர் மணவிலக்குச் செய்த பெண்ணை மறுமணம் செய்து கொள்கிற துணிவு எங்களில் யாருக்கும் இல்லை! அவரது கடும் ரோஷமே இதற்கு காரணம்!” என்றார்கள்.

அப்போது, ஸஅத் இப்னு உப்பாதா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த வசனம் உண்மையென்பதும் இது அல்லாஹ்விடமிருந்தே அருளப்பெற்றுள்ளது என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்.

எனினும், கேவலமான ஒரு பெண்ணுடன் ஓர் ஆண் சேர்ந்திருப்பதைக் கண்டால், அவனை விரட்டியடிப்பதற்கு கூட நான்கு சாட்சிகளைத் தேட வேண்டும் என்பது தான் எனக்கு வியப்பாக உள்ளது” என்றார்கள்.

இந்த உரையாடலை ஆச்சர்யத்தோடு கேட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்ன ஸஅத் அவர்களின் ரோஷத்தை நீங்கள் ஆச்சர்யத்தொடு பார்க்கின்றீர்கள் போலிருக்கின்றதே? நிச்சயமாக நாம் அவரை விட நிரம்பவே ரோஷம் நிறைந்தவராவோம். அல்லாஹ் என்னை விட ரோஷம் நிறைந்தவனாவான்” என பதிலளித்தார்கள்.          ( நூல்: தஃப்ஸீர் அல் மள்ஹரீ )


உணர்வுகளை விடவும் உயர்ந்தது உயர் ஷரீஅத்!!!

ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்கள், நபிகளாரின் நற்பெரும் தோழர்களில் ஒருவர். அல்லாஹ் இவர் விஷயத்தில் தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தமைக்காக தவ்பா செய்த போது, மன்னித்து அருள் பாளித்தான் என்று அல்குர்ஆன் 9-ஆம் அத்தியாயம் 118-வது வசனம் சான்று பகர்கின்றது.

ஒரு காலகட்டம் பெரும் சோதனை ஒன்று அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அதுவரை அவருக்கு பக்கபலமாகவும், உற்ற துணையாகவும் இருந்து வந்த அவரின் துணைவியார் அவருக்கு துரோகம் விளைவித்ததை கண்ணால் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மான உணர்வு உள்ள எந்த ஓர் ஆணும் அந்த இழி செயலை ஏற்றுக் கொள்ள மாட்டான். மிகவும் பேணுதல் நிறைந்த மனிதர் ஆ ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்கள் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபையை நோக்கி மிக விரைவாக வந்தார்கள் ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்கள்.

சபையின் முன் வந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! கர்ப்பவதியாக இருக்கும் என் மனைவிக்கும் ஷரீக் இப்னு சஹ்மா என்பவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக நான் கருதுகின்றேன்” என்றார்கள். ( அதாவது “கருவில் தம் மனைவி சுமக்கும் குழந்தைக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்கள் )

இது கேட்கப் பிடிக்காத அண்ணலார் {ஸல்} அவர்கள் தக்க ஆதாரத்தைக் கொண்டுவாருங்கள். இல்லையேல் உங்களுக்கு பத்தினிப் பெண்கள் மீது அவதூறு சொன்ன குற்றத்திற்காக 80 கசையடிகள் தண்டனையாக வழங்கப்படும்” என்றார்கள்

அதற்கு, ஹிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நம்மில் ஒரு மனிதர் தம் மனைவியரோடு இன்னொரு ஆண் தனித்திருக்கக் கண்டால், ஆதாரத்தை தேடிக்கொண்டிருக்க வேண்டுமா?” எனக் கேட்டார்கள்.

ஹிலால் (ரலி) அவர்களின் முறையீட்டைக் கேட்ட அண்ணலார் {ஸல்} அவர்கள் முன்பு போலவே ஒன்று நான்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள். இல்லையேல் அவதூறு குற்றத்திற்கான தண்டனை உமக்கு அளிக்கப்படும்” என்றார்கள்.

فقال هلال : والله إني لأرجو أن يجعل الله لي منها مخرجا .
إذ أنزل الله على رسول الله صلى الله عليه وسلم الوحي - وكان إذا نزل عليه الوحي عرفوا ذلك ، في تربد وجهه . يعني : فأمسكوا عنه حتى فرغ من الوحي - فنزلت
 ( والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم ) الآية ،

இதைக் கேட்ட ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணை! நான் உண்மையாளன். உண்மையைத் தான் சொல்கின்றேன்! அல்லாஹ் என்னுடைய இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு சட்டத்தை இறக்கியருளுவான். எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து என்னைக் காப்பாற்றுவான். மேலும், என்னுடைய உயிரையும் பாதுகாப்பான் என்கிற நம்பிக்கை எனக்கு மிகுதியாகவே இருக்கிறது”  என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ் மேலும், யார் தம் மனைவியரின் மீது அவதூறு சுமத்துகிறார்களோ, மேலும் அதற்கு தங்களைத் தவிர வேறு சாட்சிகள் அவரிடம் இல்லையோ, அப்படிப்பட்ட ஒவ்வொருவரின் சாட்சியமும் (இவ்வாறு இருக்க வேண்டும். அதாவது, தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் உண்மையாளன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் பகர வேண்டும்.

மேலும், ஐந்தாவது தடவை (தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் பொய்யனாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும்” என்று கூறவேண்டும்.

இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) பொய்யன் ஆவான்” என அவள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு தடவை கூறி, ஐந்தாவது தடவையாக இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்!” என்று அவள் சாட்சியம் அளிக்க வேண்டும்.

மேலும், அவள் அளிக்கும் இந்த சாட்சியம் அவளை விட்டுத் தண்டனையைத் தடுக்கக்கூடியதாகும். உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் இல்லாது போயிருந்தால், மேலும், அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இல்லாது போயிருந்தால் (மனைவியர் மீது அவதூறு கற்பிக்கும் விவகாரம் உங்களைப் பெரும் சிக்கலில் ஆழ்த்தி விட்டிருக்கும்!)” என்கிற 24-ஆம் அத்தியாயத்தின் 6-10 ஆகிய (லிஆன் சாப அழைப்பு பிரமாண சட்ட) வசனங்களை இறக்கியருளினான்.

فسري عن رسول الله صلى الله عليه وسلم ، فقال
 " أبشر يا هلال ، قد جعل الله لك فرجا ومخرجا
فقال هلال : قد كنت أرجو ذلك من ربي ، عز وجل
 فقال رسول الله صلى الله عليه وسلم 
 فأرسلوا إليها ، فجاءت ، فتلاها رسول الله صلى الله عليه وسلم عليهما ، وذكرهما وأخبرهما أن عذاب الآخرة أشد من عذاب الدنيا . فقال هلال : والله - يا رسول الله - لقد صدقت عليها . فقالت : كذب .

அங்கு நின்று கொண்டிருந்த ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்களை அழைத்து, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹிலாலே அல்லாஹ்விட்த்திலிருந்தும் உண்டான சுபச்செய்தியை பெற்றுக் கொள்ளுங்கள்! இதோ அல்லாஹ் உங்கள் விவகாரத்தில் மகிழ்ச்சி தரும் சட்டத்தை இறக்கியருளியுள்ளான்” என்றார்கள்.

அதற்கு ஹிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அதைத் தானே நானும் அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைத்தேன்”  என்று பதில் கூறினார்கள்.

பின்னர், குற்றம் சுமத்தப்பட்ட அவரின் மனைவி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சபைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

இருவருக்கும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அந்த இறைவசனத்தின் சட்டத்தை விளக்கி கூறினார்கள். பின்னர் குரலை உயர்த்தி நன்றாக அறிந்து கொள்ளுங்கள்! உலகத்தின் தண்டனையை விட மறுமையின் தண்டனை மிக மிகக் கடுமையானது” என்று கூறினார்கள்.

அதற்கு, ஹிலால் (ரலி) அவர்கள் நான் இவள் மீது சொன்ன குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மையானது”  என்றார்கள்.

இதற்கு அவரின் மனைவி இவர் என் மீது சொன்ன குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்யாகும்” என்றார்.
فقال رسول الله صلى الله عليه وسلم
 " لاعنوا بينهما "
 فقيل لهلال : اشهد . فشهد أربع شهادات بالله إنه لمن الصادقين ، فلما كان في الخامسة قيل له : يا هلال ، اتق الله ، فإن عذاب الدنيا أهون من عذاب الآخرة ، وإن هذه الموجبة التي توجب عليك العذاب . فقال : والله لا يعذبني الله عليها ، كما لم يجلدني عليها . فشهد في الخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين . ثم قيل [ لها : اشهدي أربع شهادات بالله إنه لمن الكاذبين ، فلما كانت الخامسة قيل ] لها : اتقي الله ، فإن عذاب الدنيا أهون من عذاب الآخرة ، وإن هذه الموجبة التي توجب عليك العذاب . فتلكأت ساعة ، ثم قالت : والله لا أفضح قومي فشهدت في الخامسة أن غضب الله عليها إن كان من الصادقين . ففرق رسول الله صلى الله عليه وسلم بينهما ، وقضى ألا يدعى ولدها لأب ولا يرمى ولدها ، ومن رماها أو رمى ولدها فعليه الحد ، وقضى ألا [ بيت لها عليه ولا ] قوت لها ، من أجل أنهما يتفرقان من غير طلاق ، ولا متوفى عنها .

இருவரின் வாக்குமூலத்தையும் கேட்ட அண்ணலார் இருவரையும் லிஆன் (சாப அழைப்பு பிரமாணம்) செய்யுமாறு கூறினார்கள்.

முதலில் ஹிலால் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் சட்டத்திற்கேற்ப நான்கு சத்தியங்களைச் செய்தார். அவர் ஒவ்வொரு முறை சத்தியம் செய்யும் போதும் நபி {ஸல்} அவர்கள் உங்களில் ஒருவர் பொய் சொல்கிறீர்கள் என்று இறைவனுக்கு தெரியும். எனவே, பாவ மன்னிப்புக் கேட்டு மீள்கிறவர் உண்டா?  என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

ஐந்தாவது முறை சத்தியம் செய்வதற்கு ஹிலால் (ரலி) அவர்கள் முனைந்தபோது, சுற்றியிருந்த நபித்தோழர்கள் ஹிலால் (ரலி) அவர்களை நோக்கி அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள். மறுமையின் தண்டனையை விட இம்மையின் தண்டனை மிக எளிதானது. ஆகவே, ஐந்தாவது சத்தியம் செய்யும் முன் நன்கு யோசித்துக் கொள்ளும்! நீர் செய்யும் இந்த ஐந்தாவது சத்தியம் உம்மீது இறைத்தண்டனையை கட்டாயமாக்கிவிடும்”  என்று கூறி எச்சரித்தார்கள்.

அதற்கு, ஹிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் ஒரு போதும் என்னை தண்டிக்கவோ, வேதனை செய்யவோ மாட்டான்”  என்று கூறியவாறு ஐந்தாவது முறை சத்தியம் செய்தார்கள்.

அதன் பின்னர் அப்பெண்மணி எழுந்து, அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தம்மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

ஐந்தாவது முறை அவள் சத்தியம் செய்ய தயாரானபோது, சுற்றியிருந்த நபித்தோழர்கள் அப்பெண்மணியை நோக்கி அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள். மறுமையின் தண்டனையை விட இம்மையின் தண்டனை மிக இலகுவாகும். ஆகவே, ஐந்தாவது சத்தியம் செய்யும் முன்பாக நன்கு யோசித்துக்கொள்! நீ செய்யும் இந்த ஐந்தாவது சத்தியம் உம்மீது அல்லாஹ்வின் தண்டனையை அவசியமாக்கிவிடும்” என்று கூறி எச்சரித்தார்கள்.

அப்போது, அப்பெண்மணி அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்னுடைய இந்த நிலைகண்டு என் சமூகத்தினர் ஒருபோதும் என்னை கேவலமாக கருதமாட்டார்கள்”  என்று கூறியவாறு ஐந்தாவது முறை சத்தியம் செய்தாள்.

பின்பு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இருவரின் விவாக ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார்கள்.

பிறக்கும் குழந்தைக்கும் ஹிலாலுக்கும் எந்த உறவும் இல்லை என்று கூறினார்கள்.

”மேலும்,ஹிலாலைப்போன்று குழந்தை பிறந்தால் அது ஹிலாலுக்கு பிறந்த குழந்தை தான் என ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள்.
وقال
إن جاءت به أصيهب أريسح حمش الساقين فهو لهلال ، وإن جاءت به أورق جعدا جماليا خدلج الساقين سابغ الأليتين ، فهو الذي رميت به " فجاءت به أورق جعدا جماليا خدلج الساقين سابغ الأليتين ، فقال رسول الله صلى الله عليه وسلم
 " لولا الأيمان لكان لي ولها شأن " .

மேலும், இவளைக் கவனித்து வாருங்கள்! இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால் அது ஷரீக் இப்னு சஹ்மாவுக்கு பிறந்த குழந்தை என ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள்”  என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அது போன்றே அவளுக்கு பிறந்த குழந்தை அல்லாஹ்வின் தூதர் சொன்ன அருவருப்பான தோற்றத்துடன் பிறந்ததாக இருந்ததை நாங்கள் கண்டோம், இது பற்றி நபி {ஸல்} அவர்களிடம் நாம் கூறிய போது அல்லது இது பற்றி நபி {ஸல்} அறிந்து கொண்ட போது “இந்த விவகாரம் குறித்த லிஆன் இறைச்சட்டம் மட்டும் அருளப் பட்டிருக்காவிட்டால் நான் அவளைக் கடுமையாக தண்டித்திருப்பேன்” என்று கூறினார்கள்.

 ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ,  இப்னு கஸீர், அல் மள்ஹரீ, ( வசனம் 6 – 10 ) மற்றும் ஸிஹாஹ் ஸித்தா அனைத்திலும் லிஆன் பாடத்தில். )


இன்ஷா அல்லாஹ்…. உயிர் போகும் வரை எதிர்த்துப் போராடுவோம்!...

ஃபிர்அவ்னின் ஒடுக்கு முறையும்முஸ்லிம்களின் போர்க்குணமும்

அல்லாஹ்வின் அற்புதத்தை மூஸா (அலை) வெளிப்படுத்திய போது, அவன் வழங்கிய அற்புதப் படைப்பான அழகிய கண்ணின் துணை கொண்டு பார்த்து விட்டு, அந்த சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் வீழ்ந்து..

فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى (70) قَالَ آمَنْتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُوعِ النَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَا أَشَدُّ عَذَابًا وَأَبْقَى (71)

நாங்கள் ஹாரூன் மற்றும் மூஸாவின் இறைவனை ரப்பாக ஏற்றுக் கொண்டோம்என்று உரக்கக் கூறினார்கள்.

அப்போது ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிக்கும் முன் நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? அவர் தான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களின் குரு என்று இப்போது தெரிந்து விட்டது.

இப்போது, நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்து விடுவேன். மேலும், பேரீச்சம் மரத்தின் கம்பங்களில் அறைந்து உங்களை கொல்லப்போகின்றேன், அப்போது தெரியும் யாருடைய வேதனை மிகக்கடுமையானது என்று”.

قَالُوا لَنْ نُؤْثِرَكَ عَلَى مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنْتَ قَاضٍ إِنَّمَا تَقْضِي هَذِهِ الْحَيَاةَ الدُّنْيَا (72) إِنَّا آمَنَّا بِرَبِّنَا

அதற்கு, முஸ்லிம்களாக மாறியிருந்த சூனியக்காரர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக! தெளிவான சான்றுகள் எங்கள் கண்முன்னே நடந்த பின்னரும் நாங்கள் சத்தியத்தை விட உனக்கு ஒரு போதும் முன்னுரிமை தரமாட்டோம்.

எனவே, நீ என்ன செய்ய விரும்புகின்றாயோ செய்து கொள். அதிகபட்சம் இவ்வுலக வாழ்வில் மட்டுமே உன்னால் தீர்ப்பு வழங்க முடியும். திண்ணமாக, நாங்கள் எங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு விட்டோம்”.

                                                  ( அல்குர்ஆன்: 20: 59 – 73 )

எவ்வளவு பெரிய அடக்குமுறையை ஃபிர்அவ்ன் அவர்களின் மீது கட்டவிழ்த்து விட்டான். கொடுமை நிறைந்த சித்ரவதைகளை செய்திடுவேன் என மிரட்டினான்.

இஸ்லாத்தால் கவரப்பட்ட அடுத்த வினாடியில், முஸ்லிமாக வாழ ஆரம்பித்து ஒரு வினாடி தான் ஆகியிருந்தது. அவர்களின் வாயில் இருந்து வந்த பதில் எவ்வளவு வீரியம் நிறைந்ததாய் அமைந்திருந்தது!?”

ஆகவே, இன்று 05/01/2018 மாலை தமிழகமெங்கும் நடைபெறுகிற ஃபாஸிச மத்திய அரசுக்கெதிரான தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக அனைத்து இயக்கங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகள் பங்குபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் & பொதுக்கூடங்களில் முழுமையாக பங்கெடுத்து ஜனநாயக ரீதியிலான முஸ்லிம் சமூகத்தின் கண்டனத்தைப் பதிவு செய்வோம்!

இன்றைய நம்முடைய போராட்டம்! இன்றைய நம்முடைய கடமை!
இன்றைய நம்முடைய கண்டனம்! நாளைய நம் தலைமுறையினரின் வாழும் உரிமை!

பங்கெடுப்போம்! போராடுவோம்! ஷரீஆவின் சட்டங்களுக்கு உயிர் கொடுப்போம்!!!

வல்ல ரஹ்மான் இந்த தேசத்தில் முஸ்லிம்கள் இஸ்லாமிய முறையோடும், நெறியோடும் வாழ்ந்திட நல்லருள் பாளிப்பானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். மத்திய அரசின் இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளை - நோக்கங்களை அல்லாஹ்வே நேரடியாக கண்டிப்பதைப்போன்று இறைவசனங்களை தொகுத்து வழங்கியுள்ளீர்கள். جزاكم الله خيرا كثيرا يا أستاذ

    ReplyDelete