Thursday, 19 September 2019

அஸ்திவாரம் இல்லாமல் அழகு பெறத்துடிக்கும் கோபுரங்கள்!!


அஸ்திவாரம் இல்லாமல் அழகு பெறத்துடிக்கும் கோபுரங்கள்!!
                       



சர்வதேச அளவில் முஸ்லிம் சமூகம் தொடர் தோல்விகளையும், கடும் நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றது.

அவமானங்கள், விமர்சனங்கள், சித்ரவதைகள், சிறைச்சாலைகள், அகதிகள், உயிரிழப்புகள், தீவிரவாத, பயங்கரவாத முத்திரை என நீண்ட போராட்டங்களை எதிர் கொண்டும் வருகின்றது.

சொல்லிக்கொள்ளும் படியான முன்னேற்றங்களையோ, வெற்றிகளையோ முஸ்லிம் சமூகத்தால் பெற இயலவில்லை.

இத்தனைக்கும் சர்வதேச அளவில் முஸ்லிம் சமூகம் சகோதர சமய மக்களோடு இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து சகோதர வாஞ்சையோடும், மனித நேயத்தோடும், மத நல்லிணக்கத்தோடும் கலந்துறவாடி வருகின்றது.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று துபையில் கோயில் கட்ட அனுமதி வழங்கியது, சர்வதேச நாடுகளின் வேண்டுகோளை ஏற்று சவூதி அரசு பெண்களுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இஸ்லாமிய, முஸ்லிம் விரோத போக்கை கடுமையாக கடைபிடிக்கும் மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாராட்டும், பதக்கமும் வழங்கி கௌரவித்தது என சர்வதேச முஸ்லிம் சமூகமும், கஜா புயலால் கேரளாவும், வர்தா புயலால் சென்னையும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது பிற சமூக மக்களின் தஞ்சம் புகும் இடமாக பள்ளிவாசல்களைத் திறந்து விட்டது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், இரத்ததானம், மருத்துவ, கல்வி உதவிகள் என இந்திய, தமிழக முஸ்லிம் சமூகமும் நடந்து கொண்டு வருகின்றது.

இப்படியெல்லாம் செய்து தான் முஸ்லிம்களாகிய நாங்கள் நல்லவர்கள், சமூக, சமய நல்லிணக்கத்தை விரும்புபவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய சூழலுக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளதோ என நினைக்கத் தோன்றுவதை தடுக்க இயலவில்லை.

இதோ நாளேடுகளில் வந்த சில செய்திகளை உங்கள் கவனத்திற்கு அறியத் தருகின்றேன்.

1.   வாரணாசியில் வசித்துவந்த சோனி (19), சில தினங்களாக மலேரியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று திடீரென அவர் உயிரிழந்தார்.

அவரது தந்தை ஹோரிலால் விஸ்வகர்மா சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிப் போயிருந்தார். மேலும் அவரது தாயார் இதய நோயாளி. குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே உறுப்பினர் சோனியின் சகோதரர் மட்டும்தான்.

சோனி இறந்தபோது, ​​அக்கம் பக்கத்தில் வசிக்கும் முஸ்லிம் ஆண்கள் ஹொரிலாலின் வீட்டிற்கு வந்து தகனம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கூறினர். அவர்களில் சிலர் தங்கள் தொப்பிகளை அணிந்துகொண்டு, ஏற்பாடுகளைச் செய்து, பின்னர் தோள்களில் சடலத்தைச் சுமந்துகொண்டு அருகிலுள்ள மணிகர்னிகா காட்டிற்கு தகனம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.

இறுதியஞ்சலி ஊர்வலத்தின்போது இந்து மரபுப்படி வழக்கமாகச் சொல்வதுபோல் அவர்கள் வழியெங்கும் 'ராம் நாம் சத்யா ஹை' என்று கோஷமிட்டனர். இது வழியில் எதிர்ப்பட்டவர்களை மனம் நெகிழ வைத்தது. ( இந்து தமிழ் திசை, ஆகஸ்ட் 12/2019 )

2.   அசாம் மாநிலம் டர்ராங் மாவட்டத்தின் நிர்வாக தலைநகராக உள்ளது மங்கல்டோய். இப்பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் பனாவுல்லா அகமது மற்றும் தபாஷ் பகவதி ஆகியோர் ஆவர்.

இருவரும் மனிதநேயம் என்ற பேஸ்புக் குழுவை இயக்கி வருகின்றனர். இதில் இந்தியாவில் உள்ள ரத்ததானம் செய்பவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தகவல்களை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ரம்ஜான் மாதம் என்பதால் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நோன்பு தொடங்கியது. பனாவுல்லா முஸ்லிம் என்பதால் அவர் தற்போது ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளார். இந்த நிலையில் பகவதிக்கு கடந்த 8-ஆம் தேதி ஒரு போன் வந்தது.

அதில் தீமாஜி என்பவருக்கு கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவருக்கு பி பாசிட்டிவ் ரக ரத்தம் உடனடியாக தேவைப்படுகிறது என்று செல்போனில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பகவதியும் அகமதும் மருத்துவமனைக்கு சென்று தங்கள் பேஸ்புக் பக்கத்தில் உள்ள ரத்ததானம் அளிப்பவர்களை தொடர்பு கொண்டனர். அதில் சிலர் வந்து ரத்தம் கொடுக்க இயலாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து அகமது அதே ரத்தவகையை சேர்ந்தவர் என்பதால் அவர் கொடுக்கலாம் என நினைத்தார். பொதுவாக முஸ்லிம் சகோதர சகோதரிகள் ரம்ஜான் நோன்பு இருக்கும்போது அவர்களது ரத்தம் சிந்தக் கூடாது என்பது ஐதீகம்.
இதையடுத்து ஒரு உயிரை காக்க நோன்பை கைவிடுவது என முடிவு எடுத்தார் அகமது. பின்னர் நோன்பை கைவிட்டுவிட்டு ரத்தம் கொடுத்தார். இதனால் அந்த நோயாளியின் உயிரும் காக்கப்பட்டது.

இதுகுறித்து அகமது கூறுகையில் ரத்தம் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தவுடன் எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. உடலளவில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் அனைவரும் ரத்தம் கொடுக்க தகுதியானவர்கள். ரத்த தானம் என்பது கடவுளுக்கு செய்யும் தொண்டை போன்றது என்றார்.  ( தமிழ் ஒன் இந்தியா, மே, 11/2019 )

3.   இந்துக்களை 81 சதவீதம் கொண்ட நாடான நேபாளில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அடுத்த வினாடியே முகநூல் முழுவதும் முஸ்லிம்களால் பகிரப்பட்டு அனைத்து முஸ்லிம்களும் இறைவனிடத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள்.

தமிழகத்திலுள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் நேபாள் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்வதாக அறிவித்தனர்.

பாகிஸ்தான், மலேசியா, கத்தார் என்று அனைத்து முஸ்லிம் நாடுகளும் உணவுப்பொருட்களையும், மருந்துகளையும் விமானம் மூலம் அனுப்பி விநியோகித்தது.

நேபாள் நிலநடுக்கத்தில் மரணித்த இந்துக்களை போன்று பாகிஸ்தானிலும், இந்தோனேஷியாவிலும் கடந்த வருடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு முஸ்லிம்கள் மரணித்தவேளையில்....

இதே முகநூலில் இந்துத்துவாவினர் துளுக்கன் செத்துட்டான், துளுக்கன் செத்துட்டான் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததை காண முடிந்தது.

ஆனால் இன்றோ நேபாளில் 2 ஆயிரம் இந்துக்கள் இறந்த நிலையிலும் ஒரே ஒரு முஸ்லிம் கூட இந்துத்துவாவை போன்ற ஈனத்தனமான செயலில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை.

மாறாக அனைத்து முஸ்லிம்களும், அனைத்து முஸ்லிம் அமைப்புகளும், அனைத்து முஸ்லிம் நாடுகளும் பதறிப்போய் இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டு மருந்து உணவுப்பொருட்கள் என்று அனுப்பி வைத்து உதவினர். ( முஸ்லிம் முகநூல் மீடியா, ஏப்ரல் 27/2015 )

இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனினும் நோக்கம் அதுவன்று.

இன்னொரு புறம், சொந்த சமூக மக்களோடு கருத்து வேறுபாடுகளைக் கடந்து கரிசனம், காருண்யம், கருணை போன்ற உயர் பண்புகளை பேணுவது.

ஹஜ், உம்ரா, நோன்பு போன்ற வழிபாடுகளில் கவனம், சமூகம் சார்ந்த இஜ்திமாக்கள், மார்க்க விளக்க கூட்டங்கள், மாநாடுகள், அறவழிப் போராட்டங்கள் என சமூகம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது.

மதரஸாக்கள், பள்ளிவாசல்கள், பைத்துல்மால்கள், டிரஸ்ட்கள், கல்வி, மருத்துவ உதவிகள் என பொருளாதாரம் சார்ந்த ஒத்துழைப்புகள்.

இஸ்லாம் உயர்த்திக் கூறுகிற எல்லாப் பண்புகளையும் முஸ்லிம் சமூகம் சொந்த சமூகத்தோடும், சகோதர சமய மக்களோடும் கடைபிடித்து வருகிற போதிலும் பசியிலிருந்து விடுதலை இல்லையே?
பயத்திலிருந்து விடுதலை இல்லையே?
சிறைக்கதவுகள் திறக்கவில்லையே?
விமர்சனங்கள் விலகவில்லையே?
அவமானங்கள் அகலவில்லையே?
சித்தரவதைகள் நின்ற பாடில்லையே?
உயிர்களுக்கு மதிப்பில்லையே?

மொத்தத்தில் முஸ்லிம் சமூகம் சந்தித்து வருகிற தொடர் தோல்விகளுக்கு வெற்றியோ, தொடர் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளியோ ஏற்பட வில்லையே?

ஏன்? நாம் நல்லவர்களாகத் தானே இருக்கின்றோம்? பண்பாளர்களாகத்தானே வாழ்கின்றோம்? பின் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது எனும் கேள்விகள் நமக்கு எழலாம்.

மேலோட்டமாக பார்த்தால் இந்த கேள்வி நியாயமானதே! என்றாலும், இஸ்லாமிய வழிகாட்டலை, இஸ்லாம் கூறும் வெற்றிக்கான பாதைகளை, பண்புகளை ஆராய்ந்தால் இவைகள் மட்டுமே போதாது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

ஏனெனில், வழிபாடுகளைத் தவிர்த்து உலகில் எல்லா சமூக மக்களிடமும் முஸ்லிம் சமூகம் செய்வதாகக் கூறுகிற எல்லாப் பண்புகளும் இடம் பெற்று தான் இருக்கின்றது.

முஸ்லிம் சமூகத்தோடு நல்லிணக்கத்தைப் பேணுகிற எத்தனையோ நாடுகள், எத்தனையோ சமூக மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படியானால் முஸ்லிம் சமூகத்தின் நிலை மாற, நெருக்கடி தீர, வெற்றி பெற முஸ்லிம் சமூகம் என்ன செய்ய வேண்டும்?

வாருங்கள்! பார்த்து வருவோம் இஸ்லாமிய வழிகாட்டலை..

எல்லாவற்றையும் கடைபிடிக்கிற முஸ்லிம் சமூகம் வெற்றிக்கு வித்திடும், இறை உதவியை சாத்தியமாக்கும், நெருக்கடிகளை இல்லாமல் ஆக்கும் ஒரு கடமையை முழுமையாக கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றது.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் குறிப்பிட்ட அந்த கடமையை முழுமையாக கடைபிடிக்குமானால் முஸ்லிம் சமூகம் எழுச்சியோடும், வளர்ச்சியோடும் இந்தப் பாருலகில் வெற்றி நடைபோடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வழுவாக பற்றிப் பிடிக்க வேண்டிய அந்தக் கடமை தொழுகை தான்.

இன்றைக்கு சமூகத்தின் தொழுகையின் நிலை எவ்வாறு உள்ளது? நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வியாகும்.

வானுயர மினாராக்கள், உயர்தர மார்பிள்ஸ், டைல்ஸ் கற்கள், எல்..டி மின் விளக்குகள், கலை நுட்பத்துடன் கூடிய கட்டிடங்கள், கதவு, ஜன்னல்கள், குளிர் சாதன வசதிகள் என லட்சங்களிலும், கோடிகளிலும் இன்றைய பள்ளிவாசல்கள் மிளிர்வதை, ஒளிவதைக் காண்கிறோம்.

ஆனால், ஜும்ஆ, இருபெரு நாட்கள், விசேஷ நாட்கள் தவிர்த்து பள்ளிவாசல்களில் குவியும் கூட்டத்தின் நிலைமை என்ன?

பள்ளிவாசல்கள் கட்டுவதையும், உயர்தர அம்சத்தில் உருவாக்குவதையும், ஒளியூட்டுவதையும் இஸ்லாம் விரும்புவது போன்று தொழுகையாளிகளால் பள்ளிவாசல் அலங்கரிக்கப்படுவதையே அதிகம் விரும்புகின்றது, வலியுறுத்துகின்றது.

இஸ்லாமிய வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிற உண்மை இது தான் பள்ளிவாசல் விரிவாக்கம் என்பது தொழமுடியாதவாறு நெருக்கடிகளும், ஜனக் கூட்டமும் அதிகரித்த போது தான் நபி {ஸல்} அவர்களின் காலங்களிலும், நபித்தோழர்கள் காலங்களிலும் நிகழ்ந்திருக்கிறது.

பெருமானார் {ஸல்} அவர்கள் எப்படி ஹிஜ்ரத் பயணத்தில் துவக்கமாக மஸ்ஜித் குபாவையும்,  ஹிஜ்ரத் வந்த பின்னர் மஸ்ஜித் நபவீயையும் நிர்மானித்தார்களோ அதே போன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு துவக்கமாக தொழுகையையே கற்றுக் கொடுக்க ஆணையிட்டார்கள் என்பதைப் பார்க்கின்றோம்.

பள்ளிவாசல் என்பது முஸ்லிம்களின் வாழ்க்கையில் பத்தோடு ஒன்று பதினொன்றாக அல்ல. அது தான் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கான, வெற்றிக்கான அடையாளம்.

முஃமின்களின் வெற்றிக்கான பண்புகளை அல்லாஹ் பட்டியலிட்டு குர்ஆனின் பல இடங்களில் கூறுகின்றான். பிரதான பண்பாகவும், அடிப்படை பண்பாகவும் அல்லாஹ் கூறுவது தொழுகையை தான்.

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2)

திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில் தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்”.                                      ( அல்குர்ஆன்: 23: 1,2 )

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ (153)

இறைநம்பிக்கையாளர்களே! தொழுகையை கொண்டும், பொறுமையை கொண்டும் உதவி தேடுங்கள். திண்ணமாக, அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருக்கின்றான்”.                                             ( அல்குர்ஆன்: 2: 153 )

إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا (19) إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا (20) وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا (21) إِلَّا الْمُصَلِّينَ (22) الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ (23)

மனிதன் பதற்றக்காரனாக படைக்கப்பட்டிருக்கின்றான். ஒரு துன்பம் அவனுக்கு வந்தால் பொறுமை இழந்து போகின்றான். அதே நேரம் வசதி வாய்ப்புகள் வந்தால் கஞ்சத்தனம் செய்ய முற்படுகின்றான். ஆயினும், தொழுகையாளிகள் (இத்தகைய தவறான பண்புகளில் இருந்து விடுபட்டிருக்கின்றார்கள்) தவிர. ஏனெனில், அவர்கள் தொழுகையை நிரந்தரமாக நிறைவேற்றுவார்கள்”.           ( அல்குர்ஆன்: 70: 19-23 )

அல்லாஹ் அருள்மறையில் நேரடியாக 70 முறை மறைமுகமாக 15 முறை என சுமார் 85 இடங்களில் தொழுகையைப் பற்றி பேசுகின்றான்.

அப்படியான இறைவசனங்களில் இந்த மூன்று வசனங்களும் மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு வசனம் வெற்றியையும், இன்னொரு வசனம் இறைஉதவியையும் குறிப்பிடுகிறது. மூன்றாவது வசனம் சாதாரணமான மனித பண்புகளையே மாற்றும் வல்லமை தொழுகைக்கு உண்டு என்று கூறுகிறதென்றால் அசாதாரணமான நிலைகளில் இருந்து நம்மை மாற்றாதா என்ன?

நம்முடைய வெற்றியையும், இறைஉதவியையும் தீர்மானிக்கிற நம்முடைய நிலைமைகளை மாற்றுகிற ஆற்றல் கொண்ட தொழுகை இன்று நம்மிடையே எப்படி இருக்கிறது?

மகிழ்ச்சி, கவலை மற்றும் துக்கத்தின் போது….

வீட்டில் நிச்சயதார்த்தம், சுன்னத், புதுவீடு புகுதல், திருமணம், போன்ற ஏதேனும் விசேஷங்கள் நடந்தாலோ, அல்லது விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் வருகை தந்தாலோ முதலில் நாம் விடுவது தொழுகையைத் தான்.

வீட்டில் மௌத், அல்லது ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்றால் முதலில் நாம் விடுவது தொழுகையைத் தான்.

ஏழு வயதை அடைந்து விட்டால் உங்கள் குழந்தைகளை தொழுமாறு ஏவுங்கள் என்று கட்டளையிடப்பட்ட இந்த சமூகம் செய்கிற மிகப்பெரும் துரோகம் என்ன தெரியுமா? அந்த வயதில் கல்வியின் பெயரால் கிருஸ்துவ மிஷினரி பள்ளிகளிலும், இந்து வித்யாலயா பள்ளிகளிலும் சேர்த்து விடுவது.

ஏழு வயதில் பள்ளியை விட்டு தூரமாகும் அந்த மனது பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடல் வரை பள்ளிவாசல், தொழுகையை விட்டும் முற்றிலுமாக தூரமாகியே இருக்கிறது.
இதில் குறைவான எண்ணிக்கையினரே பள்ளி, கல்லூரி, வேலை தேடல், அலுவலகம், கடை என அந்த காலங்களிலும் தொழுகையோடு ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால், மார்க்கத்தில் தொழுகையை விட எந்த நிலையிலும் அனுமதி இல்லை என்பது தான் நிதர்சனம்.

ஊரில், பிரயாணத்தில், போர்க்களத்தில், இயற்கை சீற்றம், பேரிடர், சந்திர, சூரிய கிரகணம் என எல்லா நிலையிலும், நின்று, அமர்ந்து, படுத்து, சைகை என எவ்வழியிலாவது தொழுகையை நிறைவேற்றிட வேண்டும்.

1.   விருந்தினர், உறவினர், நண்பர் போன்றோருக்காக தொழுகையை தமதிப்போர், விடுவோர் சிந்திக்க

ويوم جاء وفد نجلاان من اليمن مسلمين، وسألوه أن يبعث معهم من يعلمهم القرآن والسنة والاسلام، قال لهم رسول الله:
" لأبعثن معكم رجلا أمينا، حق أمين، حق أمين.. حق أمين"..!!
وسمع الصحابة هذا الثناء من رسول الله صلى الله عليه وسلم، فتمنى كل منهم لو يكون هو الذي يقع اختيار الرسول عليه، فتصير هذه الشهادة الصادقة من حظه ونصيبه..
يقول عمر بن الخطاب رضي الله عنه:
، فرحت الى الظهر مهجّرا، فلما صلى بنا رسول الله صلى الله عليه وسلم الظهر، سلم، ثم نظر عن يمينه، وعن يساره، فجعلت أتطاول له ليراني..
فلم يزل يلتمس ببصره حتى رأى أبا عبيدة بن الجرّاح، فدعاه، فقال: أخرج معهم، فاقض بينهم بالحق فيما اختلفوا فيه.. فذهب بها أبا عبيدة؟..!!

ஒரு முறை யமனின் நஜ்ரான் பகுதியைச் சார்ந்த சில முஸ்லிம்கள் தங்களுக்கு மார்க்கவிஷயங்களை கற்றுத் தரவும்,தங்கள் பகுதியில் அழைப்புப்பணி செய்யவும்,தங்களுக்கு இமாமத் செய்யவும் ஒருவரை தங்களோடு அனுப்பி வைக்குமாறு மாநபி {ஸல்} அவர்களிடம் வேண்டி நின்றனர்.

அப்போது நபி {ஸல்} அவர்கள்உங்களோடு நம்பிக்கையான ஒருவரை அனுப்பி வைக்கிறேன்என்றுகூறினார்கள். இந்த நேரத்தில் லுஹர் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. நபிகளார் கூறிய அந்த நம்பிக்கையாளராக நாமாக இருக்க மாட்டோமா? என்று ஒவ்வொரு ஸஹாபியும் ஆசைப்பட்டனர்.

இகாமத் சொல்லப்பட்டது, நபி {ஸல்} அவர்கள் தொழ வைத்தார்கள். உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்.தொழுது முடித்ததும் நபி {ஸல்} அவர்கள் வலது புறம் பார்த்தார்கள்,பின்பு இடது புறம் பார்த்தார்கள். என் மீது நபியவர்களின் பார்வை பட வேண்டும், என்னை அழைக்க வேண்டும் என்பதற்காக குதிங்காலால் ஊனி எட்டி எட்டிப் பார்த்தேன்.

இறுதியாக நபி {ஸல்} அவர்களின் பார்வை அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி} அவர்களைச் சென்றடைந்தது. பின்னர் நபி {ஸல்} அவர்கள் அபூ உபைதாவை அழைத்தார்கள், பின்னர் நஜ்ரான் முஸ்லிம்களை அழைத்து இதோ இவரை அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர் நம்பிக்கை யாளர் உண்டு.என்னுடைய உம்மத்தின் நம்பிக்கையாளர் அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி}” என்று கூறினார்கள்.          ( நூல்:ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:241 )

இங்கே யமனின் நஜ்ரான் வாசிகளின் வருகை ஒன்றும் சாதாரணமாக நடந்த விஷயமல்ல.

இந்த வருகைக்கும் முன்பாக யமனின் நஜ்ரானிய கிருஸ்துவ பாதிரிமார்கள் வருகை தந்து, பெரிய அளவிலான முஜாதலாவும், முபாஹலாவும் நடைபெற்றிருந்தது. தோல்வியுற்று சென்ற நஜ்ரான் வாசிகளின் ஒரு பிரிவினர் தான் இப்போது இஸ்லாத்தை ஏற்ற நிலையில் வருகை தந்திருந்தனர்.

பெருமானார் {ஸல்} அவர்கள் ஒருவருக்கு ஹிதாயத் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்? அவர்களோடு உறவாட, அளவளாவ எவ்வளவு ஆசைப்படுவார்கள்?

ஆனால், அதை விட மிகப்பெரிய மகிழ்ச்சி அவர்களுக்கு முன்பாக காத்திருந்தது. ஆம்! அல்லாஹ்விடம் உறவாட, அளவளாவிட தொழுகைக்கான அழைப்பு அப்போது விடப்பட்டது.

பெருமானார் {ஸல்} அவர்களை வருகை தந்திருந்தவர்களை அங்கேயே, அப்படியே விட்டு விட்டு தொழுகைக்கு சென்று விட்டார்கள்.

2. எவ்வளவு பெரிய ஆலோசனையில் இருந்தாலும், முக்கியமான விவகாரத்தில் ஈடுபட்டிருந்தாலும்

ஹுனைன் யுத்தம் மக்கா வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் புளுங்கிக்கொண்டிருந்த ஹவாஸின் மற்றும் ஸகீஃப் கோத்திரத்தார்கள் முன்னிலை வகிக்க இன்னும் சிலரால் தொடுக்கப்பட்ட யுத்தமாகும்.

இறுதியில், நபிகளாரின் தலைமையில் சென்ற முஸ்லிம்கள் மாபெரும் வெற்றிவாகை சூடினார்கள்.

ஸகீஃப் கோத்திரத்தார்களில் 70 பேர் கொல்லப்பட்டனர். ஹவாஸின் கோத்திரத்தார்களில் பெருமளவு ஆண்கள் மற்றும் பெண்கள் சிறுவர்கள் என ஏராளமானோர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

ஹவாஸின் கோத்திரத்தார்களின் மிகப்பெரிய அளவிலான செல்வங்கள் ஃகனீமத்தாக கிடைத்தன.

இந்நிலையில், ஜுஹைர் இப்னு ஸுர்த் என்பவரின் தலைமையில் 14 நபர்கள் அடங்கிய ஹவாஸின் குழு ஒன்று இஸ்லாமை ஏற்று நபி {ஸல்} அவர்கள் ஜிஇர்ரானா எனும் இடத்தில் இருக்கும் போது வந்தனர்.

அந்தக் குழுவில் நபி {ஸல்} நபி {ஸல்} அவர்களுடைய பால்குடி தந்தையின் சகோதரர் அபூ ஃபுர்கானும் இருந்தார்.

நபிகளாரிடம் அவர்கள் பைஅத் செய்த பின்னர் அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் கைதிகளாக பிடிபட்டவர்களில் எங்களின் தாய்மார்களும், சகோதரிகளும், மாமிமார்களும், தாயின் சகோதரிகளும் இருக்கின்றனர்.

அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்படுமேயானால் அது எங்களின் சமுதாயத்திற்கே ஏற்பட்ட கேவலமாகும்.

ஆகவே, எங்களின் போர்க் கைதிகளையும், செல்வங்களையும் எங்களிடம் திருப்பித் தந்து விடுங்கள்” என்றார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சுற்றியிருந்த நபித்தோழர்களை சுட்டிக்காட்டி என்னுடன் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இவர்களும் (இந்தப் போர் வீரர்களும்) இருக்கின்றனர்.

எனவே, நான் என் தனிப்பட்ட முடிவை அறிவிக்க முடியாது. ஆகவே, ழுஹர் தொழுகைக்குப் பின்னர் எங்களிடம் வாருங்கள். வந்து, சபையில் எழுந்து நின்று நாங்கள் அல்லாஹ்வின் தூதருடைய பரிந்துரையால் முஃமின்களிடமும், முஃமின்களின் பரிந்துரையால் அல்லாஹ்வின் தூதரிடமும் எங்கள் கைதிகளை திரும்ப கொடுக்கும்படி கோருகின்றோம்” என்று கூறுங்கள்” என கூறி அனுப்பி வைத்தார்கள்.

ஹவாஸின் குழுவினர் ழுஹர் தொழுகைக்குப் பின்னர் வந்து நபிகளார் கூறிய படியே சபையில் எழுந்து கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து விட்டு, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகின்றேன்: உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர்.

இவர்களில் (நம்மிடம்) போர்க்கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை நான் சிறந்த்தாகக் கருதுகின்றேன். உங்களில் எவர் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கின்றார்களோ அவர் திருப்பித் தந்து விடட்டும்.

 அல்லாஹ் எதிர் காலத்தில் முதலாவதாக தரவிருக்கின்ற (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து நாம் தருகின்ற வரை அவர்களைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகின்றாரோ அவர் அவ்வாறே வைத்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

பின்பு, ”எனக்கும் அப்துல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் அவர்களிடமே திருப்பித் தந்து விடுகின்றேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

இதனைக் கேட்ட அன்ஸாரிகளும், முஹாஜிர்களும் அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சொந்தமானது உங்களுக்கும் சொந்தமானது தான்! நாங்களும் இதற்கு உடன் படுகிறோம்” என்றார்கள்.

ஆனால், கூட்டத்திலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரலி) அவர்கள் நானும், பனூதமீம் கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள். உயய்னா இப்னு ஹிஸ்ன் (ரலி) அவர்கள் நானும் ஃபஸாரா கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள்.

இது போன்றே அப்பாஸ் இப்னு மிர்தாஸ் (ரலி) அவர்கள் நானும் பனூ ஸுலைம் கிளையாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள். அப்போது, பனூ ஸுலைம் கிளையார்கள் இடைமறித்து அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குரியதை தந்து விடுகிறோம்” என்றனர்.

மீண்டும் அண்ணலார் {ஸல்} அவர்கள் மக்கள் முன் எழுந்து நின்று இவர்கள் இஸ்லாத்தை ஏற்று நம்மிடம் வந்திருக்கின்றார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்துத்தான் கனீமா பங்கீட்டை தாமதம் செய்தேன்.

நான் இவர்களிடம் பொருள் வேண்டுமா? அல்லது கைதிகள் வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கவர்கள் எங்களின் குடும்பம் தான் வேண்டும்” என்று கூறி விட்டனர். அதற்கு நிகராக அவர்கள் எதையும் கருதவில்லை.

எனவே, யார் கைதிகளை எவ்வித பகரமும் இன்றி விடுவிக்கின்றார்களோ அவர் இனிதே செய்திடட்டும். அல்லது பகரம் பெற விரும்பினால், அதற்குரிய பகரத்தைப் பிற்காலத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கும் கனீமாவிலிருந்து அவருடைய பங்கிற்கு பகரமாக ஆறு பங்குகள் வழங்கப்படும்” என்று கூறினார்கள்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்கள் அனைவரும் ஒரு மனதாக அல்லாஹ்வின் தூதரே! எந்தப்பகரமும் இல்லாமல் நாங்கள் இந்தக் கைதிகளை விடுவித்திட முன் வருகின்றோம்” என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உங்களில் முழுமையான திருப்தியுடன் செய்பவர் யார்? திருப்தியின்றி செய்பவர் யார்? என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் சென்று ஆலோசித்து உங்கள் தலைவர்களிடம் உங்கள் முடிவை தெரிவித்து விடுங்கள்.

உங்களின் தலைவர்கள் வந்து என்னிடம் உங்களின் முடிவை தெரிவிக்கட்டும்!” என்று கூறி அமர்ந்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தலைவர்கள் வந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்து விட்டதாகத் தெரிவித்தார்கள்.

( நூல்: புகாரி, பாடம், பாபு கவ்லில்லாஹி வயவ்ம ஹுனைனின்.. தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்: 241,242.  ரஹீக் அரபி, பாடம், குதூமு ஹவாஸின்...)

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனை குறித்து பேசவும், முடிவெடுக்கவும் வந்த ஒரு கோத்திரத்தாரிடம் தொழுகையின் நேரம் நெருங்கி வரவே தொழுகைக்குப் பின்னர் வந்து பேசுமாறு பெருமானார் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

3.தொழாமல் இருக்கும் பள்ளியின் நிர்வாகிகளும், பள்ளிவாசல் காம்ப்ளக்ஸ் கடை, வீடுகளில் வாடகைக்கு இருப்போரும், பள்ளிவாசலுக்கு அருகில் குடியிருப்போரும் சிந்திக்க…

உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், ‘நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் ஒவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!என்று கூறினார்கள். ( ஸஹீஹ் முஸ்லிம் )

4.   மரணத்தின் விளிம்பில் இருக்கும் போதும்….

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கடைசி உபதேசம் “தொழுகை! தொழுகை” என்பதாகவே இருந்தது.

مَشْهَدُ ذَلِكَ الحَدَثِ يُصَوِّرُ لَنَا أَمِيرَ المُؤْمِنِينَ عُمَرَ بْنَ الخَطَّابِ يَخْرُجُ مِنْ دَارِهِ إِلَى مَسْجِدِ رَسُولِ اللهِ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ-، حَتّى إِذَا دَخَلَ المَسْجِدَ جَعَلَ يُسَوِّي الصُّفُوفَ، وَيَقُولُ
 "اسْتَوُوا
حَتَّى إِذَا لَم يَرَ فِيهِمْ خَلَلاً تَقَدَّمَ فَكَبَّرَ لِصَلاَةِ الفَجْرِ، وَالنَّاسُ لاَ يَكَادُ يَعْرِفُ بَعْضُهُمْ بَعْضًا مِنَ الظَّلاَمِ.
وَبَعْدَ التَّكْبِيرِ وَفِي أَثْنَاءِ قِرَاءَةِ الفَاتِحَةِ يَنْطَلِقُ مُجْرِمٌ مَجُوسِيٌّ قَدِ اخْتَرَقَ قَلْبَهُ غَيْظٌ وَحِقْدٌ عَلَى الإِسْلامِ، فَتَحَرَّكَ مِنْ طَرَفِ الصَّفِّ بِسُرْعَةٍ نَحْوَ الخَلِيفَةِ، وَمَعَهُ خِنْجَرٌ ذَاتُ طَرَفَيْنِ، فَوَسَّطَهَا بَطْنَ الفَارُوقِ، ثُمَّ أَتْبَعَهَا بِطَعَنَاتٍ عِدَّةٍ.
وَيَسْقُطُ الفَارُوقُ -رَضِيَ اللهُ عَنْهُ- مُضرجًا بِدِمَائِهِ، وَيَنْقَطِعُ صَوْتُهُ عَنِ النَّاسِ، فَجَعَلَ مَنْ كَانَ فِي خَلْفِ الصُّفُوفِ أَوْ أَطْرَافِهَا يُسَبِّحُونَ، سُبْحَانَ اللهِ، سُبْحَانَ اللهِ!!
وَانْطَلَقَ المَجُوسُيُّ أَبُو لُؤْلُؤَةُ يَشُقُّ الصُّفُوفَ لاَ يَمُرُّ عَلَى أَحَدٍ إِلاَّ طَعَنَهُ بِخِنْجَرِهِ المَسْمُومِ، حَتَّى طَعَنَ ثَلاثَةَ عَشْرَ رَجُلاً، فَتَقَدَّمَ نَحْوَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فَطَرَحَ عَلَيْهِ بُرْنُسًا لَهُ، وَاجْتَمَعَ عَلَيْهِ الرِّجَالُ، فَلَمَّا تَيَقَّنَ المَجُوسُيُّ أَنَّهُ مَأْخُوذٌ لاَ مَحَالَةَ نَحَرَ نَفْسَهُ بِالسِّكِّينِ ذَاتِهَا.
وَيُحْمَلُ الفَارُوقُ إِلَى بَيْتِهِ وَقَدْ أُغْشِي عَلَيْهِ، وَجُمُوعُ النَّاسِ تَتَقَاطَرَ إِلَى دَارِهِ، وَقَدْ بَلَغَ بِهِمُ الخَوْفُ مِنْ مَصِيرِهِ كُلَّ مَبْلَغٍ، وَيَجْتَمِعُ الصَّحَابَةُ عَلَى رَأْسِ عُمَرَ وَقَدْ أَسْفَرَ الصُّبْحُ.
فَجَعَلُوا يُنَادُونَهُ بِاسْمِهِ وَلَقَبِهِ وَعُمَرُ لا يَرُدُّ لَهُمْ كَلامًا، فَقَالَ بَعْضُ الصَّحَابَةِ مِمَّنْ يَعْرِفُ حَالَ عُمَرَ: إِنَّكُمْ لَنْ تَفْزَعُوهُ بِشَيْءٍ مِثْلَ الصَّلاةِ، فَقَالُوا: "الصَّلاةُ يَا أَمِيرَ المُؤْمِنِينَ، الصَّلاةُ"، فَانْتَبَهَ عُمَرُ مِنْ غَشْيَتِهِ، وَفَتَحَ عَيْنَهُ، وَقَالَ: "الصَّلاةُ وَاللهِ".
ثُمَّ سَأَلَ ابْنَ عَبَّاسٍ: أَصَلَّى النَّاسُ؟! قَالَ: نَعَمْ، فَقَالَ عُمَرُ: "لاَ حَظَّ فيِ الإِسْلامِ لِمَنْ تَرَكَ الصَّلاةَ"، ثُمَّ دَعَا بِالمَاءِ فَتَوَضَّأَ وَصَلَّى وَجُرْحُهُ يَنْزِفُ دَمًا.

துல்ஹஜ் மாதத்தின் 26ம் பிறை மறைந்து பொழுது புலர்ந்துகொண்டிருந்தது என்றும் போல் அன்றும் காலைத் தொழுகையை கலீஃபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) நடத்திகொண்டிருந்த போது அபூ லூலு என்றழைக்கப்பற்ற பைரோஸ் என்னும் நிஹாவந்தை சேர்ந்த ஒரு மஜூசி முஸ்லிம்களைப் போல் வேடம் தரித்து தொழுகை அணியில் இருந்தான்.

திடீரென பாய்ந்து கலீஃபா அவர்களின் உடலில் தனது குறு வாளால் குத்தினான். அடுத்தடுத்து ஆறு முறைகள் குத்தினான். அடிவயிற்றில் பட்ட ஆழமான தாக்குதல் கலீஃபா அவர்களை அயரச்செய்தது. சற்று பின் நகர்ந்து தன் பின்னே நின்ற ஹஸ்ரத் அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கரம் பற்றி தொழுகை நடத்துமாறு முன் நகர்த்தி விட்டு கீழே சாய்ந்தார்கள்.

அணியில் தொழுதுகொண்டிருந்த ஸஹாபாக்கள் திடுக்கிட்டு பைரோஸை பிடிக்க பாய்ந்தார்கள். பைரோஸ் பிடிபடுவதிலிருந்து தப்பிக்க தன் குறுவாளை சுழற்றிய படியே ஓடினான். அதன் தாக்குதல் 13 ஸஹாபாக்களின் மேல் பட்டு அதில் அறுவர் இறந்தனர்.

இறுதியாக ஓர் ஈராக்கிய வீரர் முரட்டுத் துணியை அவன் முகத்தின் மேலாக வீசி அவனை பிடித்து விட்டார். இனி தான் தப்பிக்க முடியாதென உணர்ந்த அவன் அந்த குறுவாளாலேயே தன்னையும் குத்தி தற்கொலை புரிந்துகொண்டான். பின்னர் மயக்க நிலையில் இருந்த கலீஃபா அவர்கள் வீடு சேர்க்க பட்டார்கள்.

மரணத்தின் மடியில் மூன்று நாட்கள் வரை எல்லா அறபோதங்களையும் செய்துகொண்டிருந்த கலீஃபா அவர்கள் தொழுகைக்கான அழைப்பொலி கேட்கும்போதெல்லாம் இரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையிலேயே தொழுதுக்கொண்டார்கள். தொழுகையை விட்டவனுக்கு இஸ்லாத்தில் இடம் இல்லைஎன்றார்கள் கலீஃபா.

الخَلِيفَةُ الصَّالِحُ عُثْمَانُ بْنُ عَفَّانَ شَهِدَ لَهُ أَهْلُ عَصْرِهِ أَنَّهُ كَانَ قَوَّامًا بِالصَّلاةِ مُتَعَلِّقًا بِهَا تَعَلُّقًا يَعِزُّ نَظِيرُهُ، رَوَى الطَّبَرَانِيُّ أَنَّ زَوْجَةَ عُثْمَانَ -رَضِيَ اللهُ عَنْهُ- قَالَتْ لِلثُّوَّارِ الَّذِينَ حَاصَرُوا دَارَهُ
 "إِنْ تَقْتُلُوهُ أَوْ تَتْرُكُوهُ؛ فَإِنَّهُ كَانَ يُحْيِي اللَّيْلَ كُلَّهُ فِي رَكْعَةٍ؛ يَجْمَعُ فِيهَا القُرْآنَ".

உஸ்மான் (ரலி) அவர்கள் கிளர்ச்சியாளர்களால் வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த போது உஸ்மான் (ரலி) அவர்களை கிளர்ச்சியாளர்கள் கொலை செய்ய நெருங்கிய போது, கிளர்ச்சியாளர்களைப் பார்த்து உஸ்மான் (ரலி) அவர்களின் துணைவியார் “ நீங்கள் கொலை செய்தாலும் சரி அல்லது கொல்லாமல் விட்டு விட்டாலும் சரி, என் கணவர் நேற்று இரவுத்தொழுகையின் போது ஒரே ரக்அத்தில் முழுக்குர்ஆனையும் ஓதி இரவை தொழுகையால் உயிரூட்டினார்கள்” என்றார்கள்.
அல்லாஹ் என்னையும், உங்களையும் மற்றும் முஸ்லிமான நம் அனைவரையும் பாதுகாத்து தொழுகையை முறைப்படி தொழுவோரின் கூட்டத்தாருடன் சேர்த்துவைத்து நம்மை சுவனபதியில் சேர்த்தருள்வானாக!

 ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். தாங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை ஹஜ்ரத்.
    சமுதாயம் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
    தாங்கள் கூறிய இந்த பயான் குறிப்புகள் முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொருவரின் கவனத்திற்கு செல்ல வேண்டும்.
    எனவே அனைத்து இமாம்களும் ஜும்ஆவில் இந்த விஷயத்தை பேசவேண்டும்.
    அருமையான ஆக்கம் ஹஜ்ரத்.
    جزاكم الله خير الجزاء يا استاذ திருப்பூர் முஜீப்.

    ReplyDelete