நிவர் புயல்..
பயமுறுத்தும் இறைவனின் அத்தாட்சி!!
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக வங்கக்கடலில் உருவான நிவர் புயல் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகள், சேதங்கள் எதுவுமின்றி நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.
இது என்னுடைய அல்லது உங்களுடைய அல்லது அரசு அதிகாரத்தின் முயற்சியைக் கொண்டு நடந்த ஒன்றல்ல! மாறாக, இது நம் அனைவரின் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கிற மாபெரும் அருட்கொடையாகும்.
وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ
”உங்களுக்கு வழங்கப்படுகிற எந்த ஒரு அருட்கொடையும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்தே உங்களுக்கு அருளப்படுகின்றது”. ( அல்குர்ஆன்: 16: 53 )
இதற்காக நாம் முதலாவதாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்! அல்ஹம்து லில்லாஹ்!
لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
”நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அதிகப்படுத்தி தருவான்”. ( அல்குர்ஆன்: 14: 7 )
அல்லாஹ்! நம் அனைவருக்கும் வாழ்வின் இறுதி வரை இது போன்று பேரிடர்களில் இருந்து பாதுகாத்து அருள் புரிவானாக! ஆமீன்!!
ஏனெனில், பசி, பஞ்சம், இழப்புகள், பாதிப்புகள், பயம் போன்றவற்றிலிருந்து விலகி நிம்மதியோடு இருப்பதும் அவனின் மாபெரும் கருணையின் துணை கொண்டே…
فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ () الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ ()
“நீங்கள் கஅபாவின் இறைவனை வணங்கி, வழிபடுங்கள்! அவனே பசியிலிருந்து உங்களை விடுவித்து, உங்களுக்கு உணவளிக்கின்றான். மேலும், பயத்திலிருந்து உங்களை காத்து உங்களுக்கு நிம்மதியை வழங்குகின்றான்” ( அல் குர்ஆன்: 106: 3,4 )
இது போன்ற இயற்கையோடு தொடர்பிலிருக்கும், நமக்கான வாழ்வாதரங்களின் அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருக்கிற மழை, காற்று, நீர், சூரியன், சந்திரன் ஆகியவற்றின் மூலம் நடைபெறுகிற இந்த மாற்றங்கள் குறித்தான விளக்கத்தை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
وَمَا نُرْسِلُ بِالْآيَاتِ إِلَّا تَخْوِيفًا
”இத்தகைய அத்தாட்சிகளை மக்களை அச்சுறுத்துவதற்காகவே அன்றி நாம் அனுப்புவதில்லை”. ( அல்குர்ஆன்: 17: 59 )
அருட்கொடை ஆபத்தாக மாறுமா?..
காற்று..
நைட்ரஜன் 78.09 சதவீதமும், ஆக்ஸிஜன் 20.95 சதவீதமும், ஆர்கான் 0.93 சதவீதமும் உள்ள வாயுக்களின் மொத்த கலவையே காற்று எனப்படும்.
மீதமுள்ள 0.03 சதவீதம் கார்பன்டை ஆக்ஸைடு, ஹீலியம், கிரிப்டான் போன்ற வாயுக்கள் ஆகும்.
இந்த அகண்ட பிரபஞ்சத்தில் 500 கோடி டன்கள் எடை கொண்ட காற்று இருக்கின்றது. தூய்மையான காற்று கண்களுக்கு புலப்படாது. காற்றுக்கு சுவையோ, வாடையோ கிடையாது.
பூமிக்கு மிக அருகில் உள்ள அடுக்கில் தான் மொத்த காற்று மண்டலத்தின் 80 சதவீத காற்று இருக்கின்றது.
இதுவரை 1.75 மில்லியன் (பெயரிடப்பட்ட உயிரினங்கள் மனிதன் உட்பட) உயிரினங்கள் இந்த உலகில் வாழ் (ந்த) வதாகவும், 12 மில்லியன் (பெயரிடப்படாத) உயிரினங்கள் வாழ்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக (Catalog Of The Programe) எனும் தளத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றது.
இந்த உயிரினங்கள் அனைத்தும் காற்றைச் சார்ந்தே உயிர்வாழ்கின்றன. மனிதன் உயிர் வாழ இன்றியமையாத மூன்று அடிப்படை பொருட்களில் (நீர், காற்று, உணவு) காற்றும் ஒன்று.
ஒரு மனிதனுக்கு நாளொன்றுக்கு ஏறத்தாழ 16 கிலோ கிராம் காற்றும், 2.5 லிட்டர் தண்ணீரும், 1.5 கிலோ கிராம் உணவும் தேவை.
ஆனால், நீரின்றி ஐந்து நாட்கள் வரையிலும், உணவின்றி ஐந்து நாட்கள் வரையிலும் உயிர் வாழ இயலும் ஆனால், காற்று இன்றி ஐந்து நிமிடங்கள் கூட உயிர் வாழ முடியாது.
ஒரு மனிதன் உட்கொள்ளும் பொருட்களில் 80 சதவீதம் காற்றாகவே இருக்கின்றது. காற்றை உட்கொள்வதற்கு சராசரியாக ஒரு மனிதன் நாளொன்றுக்கு 22,000 தடவை சுவாசிக்க வேண்டி இருக்கின்றது.
மனிதன் உயிர் வாழ மட்டும் அல்ல காற்று பயன்படுவதில்லை. நாம் பயன்படுத்துகிற எரி பொருளுக்கும் காற்றின் பணி மிக முக்கியம்.
நாளொன்றுக்கு உலகம் முழுவதிலும் மின்சக்திக்காக 7*106 டன்கள் நிலக்கரி எரிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் உலக மின் நிலையங்களில் எரிக்கப்படுகின்ற அளவு 88.9*106 டன்களாகும்.
இதே போன்று பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், இயற்கைவாயு, விறகு ஆகிய எரி பொருட்கள் பயன்படுத்துவதற்கும் காற்றின் துணை வேண்டும்.
நமது நாட்டில் உள்ள வாகனங்களுக்கு மட்டும் 90 கோடி கிலோ கிராம் காற்று தேவப்படுகின்றது.
இது போக கிணறு, குளம், ஆறு போன்ற நீர் நிலைகளிலும் நிலங்களிலும் ஏற்படுகிற மாசுகளைத் தூய்மை படுத்தும் ஆற்றலும் காற்றுக்கு உண்டு.
(நூல்: அ.கான் பாக்கவி அவர்கள் எழுதிய “அருள் மறை குர்ஆனும் அறிவியல் கண்டுபிடிப்புகளும்”)
அல்லாஹ் காற்றின் மூலம் இத்தகைய நலவுகளை, நன்மைகளை மனித சமூகத்திற்கு வழங்குகின்றான்.
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ
அல்லாஹ் கூறுகின்றான்: “வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவும் பகலும் ஒன்றன் பின் ஒன்றாக மாறி வருவதிலும், மக்களுக்கு பயன் தருபவற்றை சுமந்து கொண்டு கடலில் செல்கின்ற கப்பல்களிலும், மேலிருந்து அல்லாஹ் இறக்கி வைக்கும் மழை நீரிலும், பின்னர் அதைக்கொண்டு பூமியை – அது இறந்து போன பின்னர் கூட உயிர்பித்து மேலும், அதில் எல்லா விதமான உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், ”காற்றுகளைச் சுழலச்செய்வதிலும்,” வானங்களுக்கும் பூமிக்கும் இடையே கட்டுப்படுத்தப்பட்ட மேகங்களிலும், சிந்திக்கும் மக்களுக்கு தாராளமான சான்றுகள் இருக்கின்றன.
وَمِنْ آيَاتِهِ أَنْ يُرْسِلَ الرِّيَاحَ مُبَشِّرَاتٍ وَلِيُذِيقَكُمْ مِنْ رَحْمَتِهِ وَلِتَجْرِيَ الْفُلْكُ بِأَمْرِهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், நற்செய்தி கூற்வதற்காக காற்றை அனுப்புவது அவனுடைய சான்றுகளில் உள்ளதாகும்; எதற்காகவெனில், அவனுடைய அருளிலிருந்து உங்களை சுவைக்கச் செய்வதற்காகவும், மேலும், அவனுடைய கட்டளைப்படி கப்பல்கள் செல்வதற்காகவும், நீங்கள் அவனுடைய அருளை தேடுவதற்காகவும், அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழ்வதற்காகவும் தான்!”
மேலே நாம் சொன்ன புள்ளி விவரங்களை விவரிப்பதாக மேற்கூறிய இறை வசனங்கள் அமையப் பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது.
ஆனால், அல்லாஹ் காற்றின் மூலம் சில போது மனித சமூகத்திற்கு ஆபத்தை விளைவிப்பான் என்று குர்ஆன் சான்று பகர்கின்றது.
كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ (18) إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي يَوْمِ نَحْسٍ مُسْتَمِرٍّ (19) تَنْزِعُ النَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ مُنْقَعِرٍ (20) فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ (21) وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ (22)
(அல்லாஹ் கூறுகின்றான்: பார்க்க: 54:18 – 22, 51: 41,42, 69:6, 41: 15,16)
அதே காற்றை அல்லாஹ் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான் என்று அல்குர்ஆனின் 34:12, 21:81. ஆகிய வசனங்களிலும், அஹ்ஸாப் யுத்தத்தின் போது எதிரிகளின் மீது வீசிய புயற்காற்று முஃமின்களை கடந்து சென்ற போது இதமான காற்றாக வீசிச்சென்றதாக 33:9 –ஆம் வசனத்தின் விளக்கத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் கூறுவார்கள்.
பிரபஞ்சத்தின் அமைப்பும்.. காற்றின் தேவையும்…
இந்தப் பூமியை வளிக்கோளம், நீர்க்கோளம், நிலக்கோளம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
'வளிக்கோளம்' என்பது வாயு நிலையில் உள்ள பொருள். 'நீர்க்கோளம்' என்பது திரவப்பொருள். 'நிலக்கோளம்' என்பது திடப்பொருள்.
காற்றுகளின் சேர்க்கைதான் வளிக்கோளம். வளிக்கோளத்தில் அடங்கியுள்ள காற்றுகள் நைட்ரஜன், ஆக்சிஜன், ஆர்கான், கரியமில வாயு, நியான், ஹீலியம், கிரிப்டான், செனான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் முதலியன. இவற்றில் நைட்ரஜன் கன அளவில் 78 சதவீதம்; ஆக்சிஜன் 21 சதவீதம். மற்ற காற்றுகள் எல்லாம் சேர்ந்து ஒரு சதவீதம் மட்டுமே உள்ளன.
காற்றில் ஒரு சில
வாயுக்களின் செறிவு நிலை மாறாமல் இருக்கும். உலகமெங்கும் இவைகளின் அளவு ஒரே விதத்தில் இருக்கும்.
காற்றின் வேகத்தைப் பொறுத்து தென்றல், புயல் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கிறோம். காற்றின் வேகத்தை அளக்க, திசையைக் கண்டறிய என்று அது தொடர்பாக ஆராய்வதற்குப் பல கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்குக் காரணம் என்ன? காற்று என்பது சாதாரணமானது அல்ல. அதன் மூலமும் அபாயகரமான அதிபயங்கர மான விளைவுகளும்கூட ஏற்படும்.
சில நேரங்களில் வீசும் காற்று மிகவும் வேகமானதாக இருக்கும். சுழன்று சுழன்று வீசுவது,
மண்ணை, மணலை வாரி வீசுவது, மழையோடு சேர்ந்து தாக்குவது என்று பல வகையில் இருக்கும்.
புயல் எப்படி உருவாகிறது?..
ஒரு புயலானது தோன்றி மறைவது மூன்று நிலைகளில் நடக்கிறது, தோன்றும் நிலை, வலுவடையும் நிலை மற்றும் வலுவிழந்த நிலை. இந்த அனைத்து நிலைகளும் ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று நடைபெறுகிறது.
கடற்பரப்பில் 26'C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும்போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது. அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது. மேலே செல்லும் வெப்பக்காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்குகிறது.
இதன் காரணமாகத் தாழ்வு நிலை உண்டாகிறது. தாழ்வு நிலையின் காரணமாக அங்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதுவே காற்றழுத்த தாழ்வு நிலையாகும். பூமியின் சுழற்சி காரணமாகக் காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகின்றது.
இந்நிலையிலேயே புயலின் கண் உருவாகும். காற்றழுத்தத் தாழ்வு நிலையின்போது 31 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாகும்.
புயலின் கண் பகுதியென்பது அதன் மையத்திலிருக்கும் மிதமான காற்றழுத்தப் பகுதி. இது, சுமார் 30 - 65 கி.மீ விட்டம் கொண்டிருக்கக் கூடும். அங்கு நிலவும் காற்றழுத்தம் வெளிப்புறத்தில் இருப்பதைவிடக் குறைத்தே காணப்படும். காற்று மேலெழுந்து, பின் குளிரும் நிலையினில் சில அடர்த்தியான காற்று கீழ் நோக்கி நகர்ந்து தெளிவான புயலின் கண் பகுதி உருவாகும். அதிக வலுக்கொண்ட புயலின் மையப்பகுதி அடர்ந்த உருளை வடிவில் தோற்றமளிப்பதால் அது புயலின் கண் எனப்படுகிறது.
அப்படிச் சுழலும் மேகச்சுருளின் வேகத்தையும், அதன் அடர்த்தி, பரப்பளவைப் பொறுத்துதான் புயலின் வலிமையை வரையறை செய்ய இயலும். இப்படிச் சுழலும் மேகக் கூட்டங்களைக்கொண்ட காற்று, கடற்பகுதியிலிருந்து கரையை நெருங்கும்போது, கனமழையுடன்கூடிய புயற்காற்று தாக்குகிறது.
இந்தப் புயல் நிலப்பரப்பில் நீண்டதூரம் பயணித்ததும் வலுவிழந்து காற்றின் வேகம் குறைகிறது. இந்தப் புயல் மீண்டும் கடலை அடையும்போது வலுவடையவும் வாய்ப்பிருக்கிறது.
காற்றின் மொழி…
புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19 ஆம் நூற்றாண்டில் நினைத்தார்.
இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார்.
இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று ( Gale ), மரக்கிளைகள் ஒடியலாம்.
10 என்றால் புயல் காற்று (Strom ). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ., வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவை.
1.காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.
2.காற்றானது மணிக்கு 32 - 51 கி.மீ வேகத்தில் வீசினால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
3.காற்றானது மணிக்கு 52 - 62 கி.மீ வேகத்தில் வீசினால் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.
4.காற்றானது மணிக்கு 63 - 87 கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல்.
5.காற்றானது மணிக்கு 88 - 117 கி.மீ வேகத்தில் வீசினால் அது தீவிர புயல்.
6.காற்றானது மணிக்கு 118 - 165 கி.மீ வேகத்தில் வீசினால் அது மிகத் தீவிர புயல்.
7.காற்றானது மணிக்கு 165 - 221 கி.மீ வேகத்தில் வீசினால் அது கடும் தீவிர புயல்
8.காற்றானது மணிக்கு 222 கி.மீ-க்கு மேல் வீசினால் அது அதி தீவிர புயல்.
உலகில் புயலால் பாதிக்கப்படும் 6 முக்கியப் பகுதிகளுள் இந்தியக் கடற்கரைப் பகுதியும் ஒன்று. இந்தியா, அயன மண்டலப் புயலால் பாதிக்கப்படுகிறது. தென்னிந்தியக் கடற்கரைப் பகுதிகள் மற்றப் பேரிடர்களை விடப் புயலால் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் பெரும்சேதத்திற்கு உள்ளாகின்றன.
புயலின் தாக்கம்
புயல் எப்பொழுதும் பலத்த காற்றுடன் பெருமழையை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக, மரங்கள் சாய்தல், வடிகால் பாதித்தல், மின்சாரத் துண்டிப்பு, நீர் தேங்குதல், நோய்கள் பரவுதல், பயிர்கள் அழிதல், மண் அரிப்பு, கட்டடங்கள் சிதைவடைதல் மற்றும் உயிர்ச்சேதங்கள், பொருட்சேதங்கள் முதலியன ஏற்படுகின்றன. புயலின் பாதிப்பால் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான மக்கள் உயிரிழக்கின்றனர்.
தமிழகமும்... புயலும்...
இதுவரை தமிழகத்தை 30-க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்கியுள்ளன. இதில் 1966-ம் ஆண்டு உருவான புயலினால் பெரும் சேதம் ஏற்பட்டது. 1977-ம் ஆண்டு ஒரு பெரும் புயல் தமிழகத்தைத் தாக்கியது. இந்தப் புயலினால் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டம் பலத்த சேதத்திற்கு உள்ளது. அடுத்து, 1985-ம் ஆண்டில் ஒரு புயல் தமிழகத்தைத் தாக்கியது. கடந்த 1998-ல் உருவான புயல் அதிக அளவில், அதாவது சராசரியை விட 30 விழுக்காடு கூடுதலான மழையைக் கொட்டித் தீர்த்தது.
தமிழ்நாட்டில் 13 கடற்கரை மாவட்டங்கள் அயன மண்டலப் புயலால் பாதிக்கப்படுகின்றன. இப்புயல் மே-ஜூன் மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வீசுகிறது.
திருவள்ளூர், சென்னை , காஞ்சிபுரம் , விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,
கன்னியாகுமரி
புயலுக்கு ஏன் பெயரிடப்படுகின்றது? யார் பெயரிடுகின்றார்கள்?..
ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகும் பட்சத்தில் எந்த புயல் எந்தத் திசையில் வருகிறது என்பதை அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.
சுவிட்சர்லாந்தின் அமைத்துள்ள சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம், உலகம் முழுவதிலும் நிலவும் தட்பவெப்ப நிலைகளைக் கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பில் 191 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவ்வமைப்பு அனைத்து நாடுகளையும் ஏழு மண்டலங்களாகப் பிரித்துள்ளது.
'வட இந்தியப் பெருங்கடல்' மண்டலத்தில் இந்தியா உட்பட வங்கதேசம், மியான்மர், மாலத்தீவு, பாகிஸ்தான், ஓமன், இலங்கை, தாய்லாந்து போன்ற எட்டு நாடுகள் இடம் வகிக்கின்றன.
இந்த எட்டு நாடுகளும் எட்டு பெயர்களைப் பரிந்துரை செய்தது. மொத்தம் 64 புயல் பெயர்களைக் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்தியப்பெருங்கடல் பகுதியில் புயல்கள் உருவெடுக்கும் போது, இந்த அட்டவணையிலிருந்துதான் பெயர்கள் தேர்வுசெய்யப்படும். இப்பணியை டெல்லியில் அமைந்துள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மேற்கொள்கிறது. இந்தியாவில் புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் 2004-ம் ஆண்டு முதல்தான் தொடங்கியது.
இப்போது தமிழகத்தை புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு ஈரான். இரானிய மொழியில் நிவர் என்றால் வெளிச்சம் என்று அர்த்தம். வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்காக உருவாக்கப்பட்ட புது பெயர் பட்டியலில் மூன்றாவது பெயராக இது இருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்பாடுகள், ஊரடங்கு உத்தரவுகள், வான்வழி, தரைவழி, கடல்வழி போக்குவரத்து ரத்துகள், அரசு விடுமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என கரையை கடக்கும் வரை ஒரே திக்... திக்.. திக் தான்.
நாம் பெற வேண்டிய பாடமும்.. படிப்பினையும் என்ன?
பொதுவாக நம் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படுகிற நெருக்கடிகளின் போதும், சோதனைகளின் போதும் நாம் எப்படி நடந்து கொள்கின்றோம் என்பதை நாம் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.
மகிழ்ச்சியான, சந்தோஷமான நிகழ்வுக்கு தாமே காரணமாக இருப்பதாகக் கூறும் நாம் நெருக்கடியின் போதும் சோதனையின் போதும் மிக இலகுவாக பிறரின் மீது பழி போட்டு விடுகின்றோம்.
சுனாமி ஏற்பட்ட போதும் சரி, இதற்கு முந்தைய பேரிடர்கள் மூலம் பேரழிவுகள் ஏற்பட்ட போதும் சரி அவர்கள் அல்லாஹ்வுக்கு மாற்றமாக நடந்தார்கள், இவர்கள் அல்லாஹ்வுக்கு மாற்றமாக நடந்தார்கள் ஆதலால் தான் இத்தகைய தண்டனையை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான் என்று.
சமீபத்திய கொரோனா மிகப்பெரிய உதாரணம் ஆகும். முதன் முதலாக சீனாவில் துவங்கிய போது ஹராமான உணவுகளைச் சாப்பிடுகின்றார்கள், உய்குர் முஸ்லிம்களை சித்ரவதை செய்தார்கள் அதனால் தான் இந்த நிலை, என்று கூறினோம்.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு நாடுகளைத் தாக்கிய போது அந்த நாட்டு மக்களின் செயல்பாடுகளை விமர்சித்தோம்.
உலக நாடுகள் முழுவதையும் கொரோனா ஆட்கொண்டு இறையில்லங்கள் மூடப்பட்ட பின்னர் அல்லாஹ்வின் சோதனை என்றோம்.
இந்தப் பார்வை மிகவும் தவறான ஒன்றாகும் என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
مَا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللَّهِ وَمَا أَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَفْسِكَ
“மனிதா! உமக்கு ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டதாகும். உன்னை ஏதேனும் தீங்கு பிடித்தால் அது உன்னிலிருந்தே ஏற்பட்டதாகும்”. ( அல்குர்ஆன்: 4: 79 )
وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ
“மேலும், எத்துன்பம் உங்களை வந்தடைந்தாலும், அது உங்கள் கரங்கள் சம்பாதித்துக் கொண்ட தீயவற்றின் காரணத்திலாகும். எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்து விடுகின்றான்”. ( அல்குர்ஆன்: 42: 30 )
فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ ()
“ஒவ்வொருவரையும் அவரவருடைய பாவத்தின் காரணமாக நாம் பிடித்தோம், சிலர் மீது நாம் கல்மாரி பொழியும் காற்றை அனுப்பினோம். வேறு சிலரை ஒரே ஓர் உரத்த முழக்கம் பிடித்துக் கொண்டது. இன்னும் சிலரை நாம் பூமியில் புதைத்து விட்டோம். மேலும் சிலரை நாம் மூழ்கடித்து விட்டோம்.
அல்லாஹ் அவர்கள் மீது கொடுமை புரிபவனாக இருக்கவில்லை. ஆனால், அவர்களே தங்கள் மீது கொடுமை இழைத்துக்கொண்டிருந்தார்கள்”. (அல்குர்ஆன்: 29:40)
உண்மை முஃமின்களின் பண்பு...
جاء رسول بِالشَّامِ
عمر بن الخطاب من إحدى الغزوات فبشره بالنصر
فسأله عمر بن الخطاب : متى بدأ القتال ؟
فقالوا : قبل الضحى
قال : ومتى كان النصر ؟
فقالوا : قبل المغرب
فبكى سيدنا عمر حتى ابتلت لحيته..
فقالوا : يا أمير المؤمنين نبشرك بالنصر فتبكى ؟
فقال رضي الله عنه : والله إن الباطل لا يصمد أمام الحق
طوال هذا الوقت إلا بذنب أذنبتموه أنتم أو أذنبته أنا
ابن الحاج في كتاب المدخل 3ج/ص5
أبو بكر الطرطوشي في كتاب سراج الملوك ص: 174
ஷாம் தேசத்திற்கு உமர் (ரலி) அவர்கள் அனுப்பியிருந்த படைப்பிரிவுகளின் ஓர் படைப்பிரிவில் இடம் பெற்றிருந்த தூதுவர் ஒருவர் அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களின் சபைக்கு வந்திருந்தார்.
வந்தவர், ”அமீருல் முஃமினீன் அவர்களே! நமது இஸ்லாமியப் படை வெற்றி பெற்றுவிட்டது. அல்லாஹ் நமது படைப்பிரிவுக்கு வெற்றியை நல்கினான்” என்று கூறினார்.
அது கேட்ட உமர் (ரலி) அவர்கள் “எப்போது நமது படை வீரர்கள் எதிரணியினரின் படை வீரர்களோடு போரிட ஆரம்பித்தனர்?” என்று கேட்டார்கள்.
அதற்கவர், ”ளுஹா உடைய நேரத்திற்கு சற்று முன்னதாக” என்று பதில் கூறினார்.
அப்போது, உமர் (ரலி) அவர்கள் “எப்போது முஸ்லிம் படையினருக்கு வெற்றி கிடைத்தது?” என்று கேட்டார்கள்.
அதற்கவர், “மஃக்ரிப் உடைய நேரத்திற்கு சற்று முன்னதாக” என்று பதில் கூறினார்.
இந்த பதிலைக் கேட்டதும் தான் தாமதம் உமர் (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அழுகையின் உச்சபட்சமாக தாடி முழுவதும் நனைந்து தேம்பித் தேம்பி அழுதார்கள்.
சபையில் இருந்தவர்கள், உமர் (ரலி) அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றார்கள். எனினும், உமர் (ரலி) அவர்கள் அழுகையை நிறுத்தவில்லை.
அப்போது, சபையில் இருந்தவர்கள் “அமீருல் முஃமினீன் அவர்களே! அவர் இப்போது என்ன சொல்லி விட்டார் என்று நீங்கள் அழுகின்றீர்கள்? அவர் நல்ல செய்தியைத் தானே சொல்லியிருக்கின்றார்? நமது படை வெற்றி பெற்றது மகிழ்ச்சியான செய்தி தானே?” என்று கேட்டனர்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அசத்தியத்திற்கெதிரான அறப்போரட்டத்தில் சத்தியத்தின் வெற்றி இவ்வளவு நேரம் வரை தாமதம் ஆகாது, அப்படியானால், நான் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்? அல்லது மக்களாகிய நீங்கள் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்?” இல்லையென்றால், இவ்வுளவு நேரம் வெற்றி தாமதப்பட்டிருக்காது”. என்று பதில் கூறினார்கள்.
( நூல்: அல் மத்ஃகல் லிஇமாமி இப்னுல் ஹாஜ் (ரஹ்)…, ஸிராஜுல் முலூக் லி இமாமி அத் தர்தூஸீ (ரஹ்)… )
சோதனைகளை, ஆபத்துக்களை விட்டும் நம்மை காக்கும் இபாதத்களும், நற்பண்புகளும்..
அல்லாஹ் மனித வாழ்வில் ஏற்படும் சோதனை குறித்து குர்ஆனில் பேசும் போது இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவான்.
ஒன்று முஸீபத் – مُصِيبَةٍ, இன்னொன்று பலாஉ - الْبَلَاءُ, இதில் முதல் வகை அல்லாஹ்வை முற்றிலும் மறந்தவர்களுக்கும், மறுத்தவர்களுக்கும் ஏற்படும் சோதனையாகும்.
அந்தச் சோதனை என்பது அல்லாஹ்வை வழிபட்டவர்கள் காப்பாற்றப்பட்டு அல்லாஹ்வை வழிபடாதவர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவதாகும். அதுவும் அல்லாஹ் அதற்கென ஒரு நாளை தேர்ந்தெடுத்து, ஒட்டு மொத்தமாக ஓரிடத்தில் ஒன்றிணைத்து அழித்தொழிப்பான்.
உதாரணமாக, நிலநடுக்கம், பூகம்பம், சுனாமி, பெருவெள்ளம் ஆகியவைகளை எடுத்துக்கொள்ளலாம்.
இதற்கு முன் சென்ற நபிமார்களின் சமூகம் சந்தித்த பேரழிவுகள் சான்றுகளாகும். அல்குர்ஆனின் வசனங்களில் அநேக வசனங்கள் இது குறித்துப் பேசுகின்றன.
இரண்டாவது வகை சோதனை இது இறைநம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே ஏற்படுகிற சோதனையாகும்.
இவ்வகை சோதனைகளின் மூலம் அல்லாஹ் அவர்களின் ஈமானையும், தவக்குலையும், தக்வாவையும் சோதிப்பான்.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ()
”மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள், மற்றும் விளைப்பொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக, உங்களை நாம் சோதிப்போம்” ( அல்குர்ஆன்: 2:155 )
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ ()
“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். மேலும், நல்ல, கெட்ட நிலைமைகளைத் தந்து நாம் உங்களைச் சோதிப்போம். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்”. ( அல்குர்ஆன்: 21:35 )
அல்லாஹ் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு ஆணை பிறப்பித்ததையும், அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்களும், இஸ்மாயீல் (அலை) அவர்களும் கட்டுப்பட்ட அந்த தருணத்தையும் விவரித்து விட்டு அல்லாஹ் கூறும் போது…
أَنْ يَا إِبْرَاهِيمُ () قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ () إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ
“இப்ராஹீமே! நீர் கனவை நனவாக்கி விட்டீர். நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம். திண்ணமாக, இது தெளிவான சோதனையாய் இருந்தது”. (அல்குர்ஆன்: 37:105,106) என்று கூறுகின்றான்.
وَلَقَدْ فَتَنَّا سُلَيْمَانَ وَأَلْقَيْنَا عَلَى كُرْسِيِّهِ جَسَدًا ثُمَّ أَنَابَ ()
“பிறகு, நாம் ஸுலைமானையும் சோதனைக்குள்ளாக்கினோம்; அவருடைய அரியணையில் ஒரு சடலத்தைக் கொண்டு வந்து போட்டோம். அப்போது, அவர் தம் இறைவனின் பக்கம் திரும்பினார்”. ( அல்குர்ஆன்: 38: 34 )
மேலும், யஃகூப் (அலை) அவர்களை அல்லாஹ் யூஸுஃப் (அலை) அவர்களின் மூலமாகவும், மூஸா (அலை) அவர்களை ஃபிரவ்ன் மற்றும் தம் சொந்த சமூகத்தின் மூலமாகவும், லூத் (அலை) அவர்களை காஃபிரான தம் மனைவியின் மூலமாகவும், நூஹ் (அலை) அவர்களை தம் மனைவி மற்றும் மகன் மூலமாகவும் சோதித்தான் என அல்குர்ஆன் சான்றுரைக்கின்றது.
இந்தச் சோதனைகளின் மூலம் பாதிக்கப்படுபவர்களின் மனோ நிலையும், ஈமானிய வலிமையும் சோதிக்கப்படுகின்றது என்பது தான் உண்மை.
ஆகவே, முதல் வகையான சோதனைகள் ஏற்படாமல் இருக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். மேலும், அச்சோதனைகள் எதன் மூலம் எல்லாம் ஏற்படும் என அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றார்களோ அவைகளில் இருந்து தவிர்ந்து, விலகி வாழ வேண்டும்.
இரண்டாவது வகையான சோதனை அது ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சமாகும். அவ்வகையான சோதனைகளின் போது அல்லாஹ்விடம் “பொறுமையைத் தருமாறு” பிரார்த்திக்க வேண்டும்.
சோதனைகள் தொடருமேயானால்...
أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ
“நிச்சயமாக! அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறையோ, அல்லது இரு முறையோ சோதிக்கப்படுகின்றார்களே ஏன் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அவ்வாறிருந்தும் அவர்கள் தவ்பாச் செய்து மீளுவதுமில்லை, நல்லுணர்வு பெறுவதுமில்லை”. ( அல்குர்ஆன்: 9: 126 )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும், நீடித்த ஆயுளையும், விசாலமான வாழ்வாதாரத்தையும், நோய் நொடிகள், ஆபத்துகள், சோதனைகள், இயற்கை பேரிடர்கள், இல்லாத வாழ்க்கையை வாழவும், நிம்மதியான வாழ்க்கை வாழவும் அருள் பாளிப்பானாக! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
Mashaallah arumaiii barakallah feeka
ReplyDelete