Monday, 11 April 2022

தெவிட்டாத தேன்மறை – தராவீஹ் உரை:- 11. நன்றி சொல்லவே உனக்கு என் இறைவா!!

 

தெவிட்டாத தேன்மறை – தராவீஹ் உரை:- 11.

நன்றி சொல்லவே உனக்கு என் இறைவா!!



அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் 10 –வது நோன்பை நோற்று, 11 – வது தராவீஹை நிறைவு செய்து, 11 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் அர் ரஅது அத்தியாயத்தின் எஞ்சிய 25 வசனங்களையும், சூரா இப்ராஹீம், சூரா அல் ஹிஜ்ர் ஆகியவற்றையும், சூரா அன் நஹ்லின் 87 வசனங்கள் என 264 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களில் குறிப்பாக அன் நஹ்ல் அத்தியாயத்தின் பெரும்பகுதி வசனங்கள் மனித சமூகத்தின் மீது அல்லாஹ் செய்த அருட்கொடைகள் குறித்து பேசுவதைப் பார்க்க முடிகின்றது. கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்ட இறைவசனங்களில் அல்லாஹ் மனித சமூகத்திற்கு வழங்கிய அருட்கொடைகளை குறிப்பிடுகின்றான்.

وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَحِيمٌ

“அல்லாஹ் (உங்களுக்கு) வழங்கியிருக்கும் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிடுவீர்களாயின் அவற்றை எண்ணி முடியாது”.          ( அல்குர்ஆன்: 16: 18 )

எப்படி முடியும்? ஏனெனில்..

وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ

“மேலும், உங்களிடமிருக்கும் அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடைகளில் நின்றும் உள்ளதாகும்”..                                       ( அல்குர்ஆன்: 16: 53 )

அருட்கொடைகளை வாரி வழங்கியிருக்கும், வாரி, வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அல்லாஹ் அதை அனுபவிக்கும் அடியார்களிடமிருந்து எதை எதிர் பார்க்கின்றான். அதைப் பின் வரும் வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.

وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ

“ (கப்பலில் செல்லும்) அவர்களை, மலைமுகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால், அல்லாஹ்வுக்கே வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக்கரைசேர்த்து விட்டால், அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள் எனினும் மிகவும் நன்றி கெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை.                                           ( அல்குர்ஆன்: 31: 32 )

وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ

(மனிதர்களே) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம். எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்’.                    ( அல்குர்ஆன்: 7: 10 )

எனக்கு நன்றி செலுத்தினால் நான் உங்களை தண்டிக்க மாட்டேன் என்று பின் வரும் வசனத்தின் மூலம் அல்லாஹ் வாக்களிக்கிறான்.

مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِنْ شَكَرْتُمْ وَآمَنْتُمْ وَكَانَ اللَّهُ شَاكِرًا عَلِيمًا

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான்.                              ( அல்குர்ஆன்: 4: 147 )

அமல்கள் மூல் இறைவனுக்கு நாம் நன்றி செய்யா விட்டால் தான் அல்லாஹ் நம்மை தண்டிப்பதாக எச்சரிக்கிறான்.

அதே நேரம் நாம் தொடர்ந்து நன்றி செலுத்தினால் நமது தேவைகளை அதிகப்படுத்தி தருவதாக பின் வரும் வசனத்தின் மூலம் அல்லாஹ் கூறுகிறான்.

وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

“(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). ( அல்குர்ஆன்: 14: 07 )

ஆகவே, கேட்டும், கேட்காமலும் நாம் பெற்றுக் கொண்டிருக்கும் அருட்கொடைகளுக்கும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அருட்கொடைகளுக்கும் நாம்  அதை வழங்கிக் கொண்டிருக்கும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்.

நபிமார்களும்… நன்றியும்…

நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் போது அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றிமிக்க அடியார்களாகத் திகழ்ந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். நீண்டகாலம் குழந்தைப் பேறு இல்லாத நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இரண்டு ஆண் குழந்தைகளைக் கொடுத்தற்காக இறைவனைப் புகழ்ந்தார்கள்.

الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَهَبَ لِي عَلَى الْكِبَرِ إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ ۚ إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاءِ

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

( அல்குர்ஆன்: 14: 39 )

பாவிகளிடமிருந்து தன்னையும் தன் சமுதாய மக்களையும் காப்பாற்றியமைக்காக நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்.

فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَنْ مَعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

நீரும், உம்முடன் உள்ளோரும் கப்பலில் அமர்ந்ததும் அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’’ எனக் கூறுவீராக!                                                  ( அல்குர்ஆன்: 23: 28 )

ஜின் இனத்தையும் பறவை இனத்தையும், காற்றையும் தனக்கு வசப்படுத்திக் கொடுத்து ஆட்சி அதிகாரங்களை வழங்கிய இறைவனை நபி சுலைமான் (அலை) மற்றும் தாவூத் (அலை) அவர்கள் புகழ்ந்தார்கள்.

وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا ۖ وَقَالَا الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَىٰ كَثِيرٍ مِنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ

தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். ‘‘நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’’ என்று அவ்விருவரும் கூறினர்.                ( அல்குர்ஆன்: 27: 15 )

ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا

நபி நூஹ் (அலை) தொடர்பாகக் கூறும் போது: நிச்சயமாக அவர் (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார்” (அல்குர்ஆன்: 17: 3 ) என்கிறான்.

شَاكِرًا لِأَنْعُمِهِ اجْتَبَاهُ وَهَدَاهُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

மேலும் இப்றாஹீம் (அலை) அவர்களைப் பற்றிக் கூறும் போது: “(அல்லாஹ்வாகிய) அவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார்                                      ( அல்குர்ஆன்: 16: 121 ) என்கிறான்.

நமது நபி {ஸல்} அவர்களும்... நன்றியும்...

وقد كان النبي صلى الله عليه وسلم إذا أصابته سراء قال: «الحمد لله الذي بنعمته تتم الصالحات»، وإن نزل به بلاء قال: «الحمد لله على كل حال».

நபி {ஸல்} அவர்களுக்கு ஏதேனும் மகிழ்ச்சி தரும் காரியம் நடந்தால் “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவன் வழங்கிய அருட்கொடைகளில் நல்லவைகளைக் கொண்டு பூர்த்தியாக்கினான்” என்று கூறுவார்கள். அதே நேரம் ஏதேனும் சோதனைகளைச் சந்தித்தால் “அனைத்து நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவார்கள்.

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم إذا جاء الشئ يُسَرُّ بِهِ خَرَّ سَاجِدًا شُكْرًا لِلَّهِ تَعَالَى

ஏதேனும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தவுடன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக ஸஜ்தாச் செய்வார்கள்” என அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: அபூதாவூத், திர்மிதி )

عن النوّاس بن سمعان قال : سرقت ناقة رسول الله صلى الله عليه وسلم فقال لئن ردها الله لأشكرن ربي ، فوقعت في حي من أحياء العرب فيهم امرأة مسلمة ، فوقع في خلدها أن تهرب عليها ، فرأت من القوم غفلة فقعدت عليها ثم حركتها فصبحت بها المدينة ، فلما رأها المسلمون فرحوا بها ، ومشوا بمجيئها حتى أتوا رسول الله صلى الله عليه وسلم فلما رأها قال { الحمد لله } فانتظروا هل يحدث رسول الله صلى الله عليه وسلم صوماً أو صلاة؟ فظنوا أنه نسي فقالوا : يا رسول الله قد كنت قلت لئن ردها الله لأشكرن ربي . قال : ألم أقل الحمد لله.

நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு தடவை நபி {ஸல்} அவர்களின் ஒட்டகம் திருட்டு போனது . அப்போது நபி {ஸல்} அவர்கள் ”அல்லாஹ் எனக்கு ஒட்டகத்தை திரும்பத் தந்தால் நான் அவனுக்கு நன்றி செலுத்துவேன்!” என்றார்கள்.

அந்த ஒட்டகத்தை ஒரு அரபி கோத்திரத்தார்களில் ஒரு கோத்திரத்தார் திருடி இருந்தனர். அந்த கோத்திரத்தில் ஒரு ஸாலிஹான பெண்ணும் இருந்தால் இந்த விஷயத்தை அறிந்த அப்பெண் இரவில் அக்கூட்டத்தார் தூங்கிய நேரத்தில் அந்த ஒட்டகத்தில் ஏறி இரவோடு இரவாக பயணித்து காலையில் நபி {ஸல்} அவர்களிடம் கொண்டுவந்து ஒப்படைத்தார்.

அதை கண்ட நபி {ஸல்} அவர்களும், அவர்களின் தோழர்களும் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். ஒட்டகத்தை கண்டவுடன்  الحمد لله     என்று கூறி அல்லாவை புகழ்ந்தார்கள். வேறு எதுவும் செய்யவில்லை ஆனாலும் இதற்கு நன்றி செலுத்தும் முகமாக நபி {ஸல்} அவர்கள் ஒரு நோன்பையோ அல்லது தொழுகையையோ அறிவித்து அதை செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் நபி {ஸல்} அவ்வாறு ஏதும் செய்யவில்லை. ஒரு வேளை நபி {ஸல்} அவர்கள் தாங்கள் (”அல்லாஹ் எனக்கு ஒட்டகத்தை திரும்பத் தந்தால் நான் அவனுக்கு நன்றி செலுத்துவேன்!”)  சொன்னதை மறந்திருப்பார்களோ என்று எண்ணிய மக்கள் நபி {ஸல்} அவர்களிடம் ”அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகத்தை இறைவன் திரும்பத்தந்தால் நன்றி செழுத்துவேன்! என்று சொன்னீர்களே?” என்று கூறிய பொழுது நபி அவர்கள் “நான்    الحمد لله என்று கூறவில்லையா? என்று கேட்டார்கள்.    

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ وَهْوَ ابْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرِضَ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ: «أَسْلِمْ»، فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ: أَطِعْ أَبَا القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمَ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ»

நபி {ஸல்} அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி {ஸல்} அவர்கள் அவனிடம் வந்தபோது, அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள்!’’ என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், “அபுல் காசிம் எனும்- நபி {ஸல்} அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு!’’ என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி {ஸல்} அவர்கள், “இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’’ எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.                                           ( நூல்: புகாரி-1356 ) 

நன்றி செலுத்துவதன் முதல் நிலை அல்லாஹ்வைப் புகழ்வதாகும்.

قال رسول الله صل الله عليه وسلم

الحمد راس الشكر  ما شكرالله عبد لا يحمده

“அல்லாஹ்வைப் புகழ்வது நன்றிசெலுத்துவதின் தலையாகும். அல்லாஹ்வை புகழாத அடியான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆகமாட்டான்” வில்லை என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

முதல் நிலையை வெற்றிகரமாக செய்பவருக்கு அல்லாஹ் வழங்கும் சன்மானம்...

1.பொறுமையாளர், நன்றியுள்ளவர் எனும் சான்று கிடைத்தல்.

 عن عمرو بن شعيب ، عن أبيه ، عن جده ، قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : « خصلتان  من كانتا فيه كتبه الله صابرا شاكرا ، ومن لم يكونا فيه لم يكتبه صابرا ولا شاكرا ، من نظر في دينه إلى من هو فوقه فاقتدى به ، ومن نظر في دنياه إلى من هو دونه  فحمد الله على ما فضله به عليه ، كتبه الله صابرا شاكرا ، ومن نظر في دينه إلى من هو دونه ، ونظر في دنياه إلى من هو فوقه فأسف على ما فاته ، لم يكتبه الله صابرا ولا شاكرا »

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். யாரிடம் இரண்டு நற்குணங்கள் இருக்குமோ அவர்களை அல்லாஹ் நன்றி உள்ளவராகவும் பொறுமையாளராகவும் பதிவு செய்வான்.

 1. தீனுடைய விஷயத்தில் தன்னைவிட மேலானவரை பார்த்து அவரைப் பின்பற்றினான்.

2. உலக விஷயத்தில் தன்னைவிடவும் கீழ் நிலையில் உள்ளவரை கண்டு அவனைவிடவும் தன்னை சிறப்பாக்கிய அல்லாஹ்வை புகழ்ந்தான்.

2. அல்லாஹ்வின் திருப் பொருத்தம் கிடைத்தல்..

وقال النبي صلى الله عليه وسلم: “إن الله ليرضى عن العبد أن يأكل الأَكْلَة فيحمده عليها، أو يشرب الشَّربة فيحمده عليها”.

நபி {ஸல்} அவர்கள் நவின்றதாக அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஓர் உணவை உண்டு, அதற்காக அல்லாஹ்வைப் புகழக்கூடிய மற்றும் ஒரு பானத்தை பருகி அதற்காக அல்லாஹ்வைப் புகழக் கூடிய அடியாரை நிச்சயமாக அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான். (முஸ்லிம்)

3. அல்லாஹ்வின் சந்திப்பும், சந்திக்கும் வரையுள்ள கால அளவு கூலியும்..

أن عبدا من عباد الله قال: يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك فعضلت بالملكين فلم يدريا كيف يكتبانها فصعدا إلى السماء وقالا يا ربنا إن عبدك قد قال مقالة لا ندري كيف نكتبها، قال الله عز وجل وهو أعلم بما قال عبده: ماذا قال عبدي قالا: يا رب إنه قال: يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، فقال الله عز وجل لهما: اكتباها كما قال عبدي حتى يلقاني فأجزيه بها

"அல்லாஹ்வின் அடியார்களில் ஒரு மனிதர் கூறினார்: "யா ரப்பி லகல்-ஹம்து கமா யன்பஃகீ லி-ஜலாலி வஜ்ஹிக்க வலிஅளீமி சுல்தானிக்க". இந்த வார்த்தைகள் இரு வானவர்களையும் சோர்வடையச் செய்தன, அவற்றை எவ்வாறு எழுதுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. பின்னர் இந்த வானவர்கள் வானத்திற்கு ஏறி அல்லாஹ்விடம் கூறினார்கள்: " எங்கள் இறைவா, உண்மையாகவே, உமது அடியவர்களில் ஒருவர் எங்களைக் கடினமாக்கும் வார்த்தைகளை உச்சரித்தார், அவற்றை எப்படி எழுதுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை.". எல்லாம் வல்ல அல்லாஹ்விடம், தன் அடியான் கூறியதைப் பற்றி அவர்களை விட நன்றாக அறிந்தவன்: "என் அடியான் என்ன சொன்னான்?" அவர்கள் பதிலளித்தார்கள்: "எங்கள் இறைவனே, அவர் கூறினார்: "யா ரப்பி லகல்-ஹம்து கமா யன்பஃகீ லி-ஜலாலி வஜ்ஹிக்க வலிஅளீமி சுல்தானிக்க".  பின்னர் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களிடம் கூறினார்: "இந்த வார்த்தைகளை என் அடிமை உச்சரித்தபடி, அவன் என்னைச் சந்திக்கும் வரை எழுதுங்கள், அதனால் நான் அவர்களுக்கு வெகுமதி அளிப்பேன்."                                                ( நூல்: இப்னு மாஜா )

நன்றி செலுத்துவதால் நிறைவு செய்தவர்களாக ஆகி விடுவோமா?..

இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாக இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். நபி தாவூத் (அலை) அவர்கள் கூறினார்களாம்:

روى الإمام أحمد في الزهد عن الحسن قال : قال داود » إلهي لو أن لكل شعرة مني لسانين يسبحانك الليل والنهار والدهر كله ما قضيت حق نعمة واحدة

"என் இறைவா! என் ஒவ்வொரு முடிக்கும் ஒரு ஜோடி நாக்குகள் இருந்தால், அது இரவும் பகலும், என் வாழ்நாள் முழுவதும், தஸ்பீஹ் செய்திருக்கும்! எனினும், நீ எனக்கு வழங்கிய ஒரு அருட்கொடைக்கு கூட நான் உனக்கு நன்றி செலுத்தியவனாக ஆக முடியாது."

 فقال داود عليه السلام كيف أطيق شكرك وأنت الذي تنعم علي ثم ترزقني على النعمة الشكر فالنعمة منك والشكر منك فكيف أطيق شكرك؟ فقال جل وعلا : يا داود الآن عرفتني حق معرفتي

தாவூத் (அலை) அல்லாஹ்விடம் யா அல்லாஹ்! நான் உனக்கு நன்றி செலுத்த எப்படி சக்தி பெறமுடியும்?! ஏனென்றால் நீ எனக்கு உபகாரம்செய்கின்றாய் பிறகு அந்த உபகாரத்துக்கு நன்றி செலுத்தவும் நீ எனக்கு உதவி செய்கின்றாய்.

 எனவே உபகாரத்தையும் அந்த உபகாரத்துக்கு நன்றி செலுத்துவதையும் உன்னிடமே நான் பெற்றேன். எனவே, நான் உனக்கு நன்றி செலுத்தும் சக்தியை எப்படி பெறமுடியும் என்று கூறியபோது, அல்லாஹ் சொன்னான். தாவூதே! இப்பொழுதான் நீர் என்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துகொண்டீர்கள் என்றான்.                                        ( நூல்: அஹ்மத், அஸ் ஸுஹ்த் )

 

நன்றி செலுத்த மறு(ற)க்கின்றோமா? எச்சரிக்கை தேவை...

தனக்கு நன்றி செலுத்தாத மக்கள் வாழ்ந்த ஊரை அல்லாஹ் அழித்திருக்கின்றான்.

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَٮِٕنَّةً يَّاْتِيْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُـوْعِ وَالْخَـوْفِ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ

ஓர் ஊரை அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். அது நிம்மதியுட னும், அமைதியுடனும் இருந்தது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவ்வூருக் குரிய உணவு தாராளமாக வந்து சேர்ந்தது. ஆனால் அவ்வூர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்தது. எனவே அவர்கள் செய்து கொண்டிருந் ததன் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் அவ்வூருக்கு அணிவித்தான். ( அல்குர்ஆன்: 16: 112 )

لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ (15) فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ (16) ذَلِكَ جَزَيْنَاهُمْ بِمَا كَفَرُوا وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ

“ஸபா என்னும் ஊர் வாசிகளுக்கு அவர்கள் வசித்த இடத்தில் திட்டமாக ஓர் அத்தாட்சி இருக்கின்றது. அதன் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் இரு தோட்டங்கள் இருந்தன. உங்கள் ரப்பின் உணவிலிருந்து உண்ணுங்கள். இன்னும் அவனுக்கு நன்றி செலுத்துங்கள். இந்த ஊர் பரிசுத்தமான ஊராகும். இன்னும் இறைவனோ மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். ஆனால், அவர்கள் நன்றி செலுத்தாமல் புறக்கணித்தனர். ஆகவே, அவர்கள் மீது அணையின் பெரு வெள்ளத்தை நாம் அனுப்பினோம். சுவை மிகுந்த கனிகளுடைய இரு தோட்டங்களுக்குப் பதிலாக கசப்பும், புளிப்பும் கொண்ட மரங்களாகவும், சில இலந்தை மரங்களையும் உடைய இரு தோட்டங்களாகவும் மாற்றிவிட்டோம்.

இது அவர்கள் நன்றி மறந்ததன் காரணமாக, அவர்களுக்கு கூலியாக நாம் கொடுத்தோம். இன்னும் நன்றி மறப்போருக்கே அன்றி இது போன்ற முடிவுகளை நாம் கொடுப்போமா?”.                                     ( அல்குர்ஆன்: 34: 15-17 )

நன்றி செலுத்தும் நற்பண்பை அல்லாஹ்விடமே கேட்போம்..

عن معاذ بن جبل أن رسول صلى عليه وسلم أخذ بيده، وقال: ((يا معاذ، والله إني لأحبك، والله إني لأحبك))، فقال: ((أُوصيك يا معاذ، لا تَدَعنَّ في دُبر كل صلاة تقول: اللهم أعني على ذكرك، وشكرك، وحسن عبادتك))؛ رواه أبو داود

முஆத் பின் ஜபல் {ரலி} அவர்களை ஏமனுக்கு நபிகளார்  அனுப்பிய போது, அவர்களிடம் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் அல்லாஹ்வே! உன்னை நினைவு கூர்வதற்கும், உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி புரிவாயாக! என்று பிரார்த்திக்குமாறு வஸிய்யத் செய்தார்கள்.

2 comments:

  1. ஜஸாகல்லாஹ் கைர்...

    ReplyDelete
  2. 12ம் தராவீஹ் பயான் இருக்கா?

    ReplyDelete