Sunday, 17 April 2022

தெவிட்டாத தேன்மறை – தராவீஹ் உரை:- 17. பத்ரிலிருந்து பாடம் படிப்போம்!!!

 

தெவிட்டாத தேன்மறைதராவீஹ் உரை:- 17.

பத்ரிலிருந்து பாடம் படிப்போம்!!!



அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் 16 –வது நோன்பை நோற்று, 17 – வது தராவீஹை நிறைவு செய்து, 17 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் சூரா அல் அன்கபூத்தின் எஞ்சிய 24 வசனங்களையும், சூரா அர் ரூம், சூரா லுக்மான், சூரா அலிஃப்,லாம்,மீம் ஸஜ்தா, சூரா அல் அஹ்ஸாப் ஆகிய சூராக்கள் நிறைவு செய்யப்பட்டு 191 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.

இன்றைய இஸ்லாமிய உலகு பல்வேறு சோதனைகள், எதிர்பார்ப்புகள், கனவுகள் என பல்வேறு சுமைகளோடு இந்த புனித ரமழானில் அடியெடுத்து வைத்துள்ளது.

முஸ்லிம் நாடுகளின் மௌனம். ஏகாதிபத்திய நாடுகளுக்கு சாமரம் வீசி அடி வருடும் கோழைத்தனம். ஈகோவால் பிளவுபட்டு நிற்கும் அவலம் என சர்வதேச அளவில் சோதனைகளை முஸ்லிம் சமூகம் சந்தித்து வருகிறது.

தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி சதா பீதியிலும் பயத்திலும் உறைய வைக்கும் ஃபாசிஸத்தின் கோரத்தை தேசிய அளவிலும் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வருகிறது.

ஏதாவது அற்புதம் நடந்து விடாதா? இந்த சோதனைகள் அகன்று விடாதா? என எதிர்பார்ப்புகளைச் சுமந்து, வெறும் கனவுகளாகவே போய் விடுமோ எனும் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது இன்றைய இஸ்லாமிய உலகு.

எப்படி ரமழான் அருளும் மன்னிப்பும் நிறைந்த மாதமோ அது போன்றே வெற்றியின் மாதம் ஆகும். நமது முன்னோர்கள் இது போன்ற ரமழானில்
பல படையெடுப்புக்களை சந்தித்து இறை உதவியால் மகத்தான வெற்றிகள் பல பெற்றுள்ளனர்.

அந்த வகையில் இந்த ரமழான் நமது ஈமானை வலுப்படுத்தி, முழுமையான முஸ்லிமாக வாழக் கூடிய மனப்பக்குவத்தை வழங்கட்டுமாக. 
சோதனைகள் நீங்கி சுபிட்சமும், எதிர்பார்ப்புகள் நிறைவேறி ஏற்றமும் விரக்தி விலகி விடியலும் இந்த சமூகத்திற்கு கிடைக்கட்டுமாக!

இன்றைய இந்த நாள் நினைவு கூறப்பட வேண்டிய ஒரு நாளாகும். இந்த இஸ்லாமிய உலகு அசை போட்டு பார்க்க வேண்டிய ஒரு நாளாகும்.

1400 ஆண்டுகள் பின்னோக்கிப் போய் பார்த்தோமேயானால் இறைநம்பிக்கையும் இறைத்தூதரையும் தவிர வேறெந்த ஆயுதங்களும் போர்த்தளவாடங்களும் இல்லாமல் நிராயுதபாணியகளாக பத்ர் எனும் இடத்திலே அன்றைய ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகும் எதிரிகளால் சூழப்பட்டிருந்த தருணம்.

நபி ஸல் அவர்களின் ஒற்றை வார்த்தை இதை நமக்கு உணர்த்தும்.

ஆம்!வல்லோன் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வலிகள் நிறைந்த வலிமையான வார்த்தையும் கூட.

اللَّهُمَّ إِنْ تُهْلِكْ هَذِهِ الْعِصَابَةَ مِنْ أَهْلِ الْإِسْلَامِ لَا تُعْبَدْ فِي الْأَرْضِ

நீ இந்த சின்னஞ்சிறிய கூட்டத்திற்கு உதவி புரியவில்லை என்றால் இந்தப் பூமியில் உன்னை வணங்க எவருமே இருக்கமாட்டார்கள் என உருக்கமா இறைஞ்சினார்கள்.   ( நூல்: முஸ்லிம் )

அதன் பின்னர் இந்த உம்மத் பெற்ற ஏற்றத்திற்கு நீங்களும் நானும் தான் சாட்சி!

ஆம்! அந்த வலிமையான வார்த்தை தான் உங்களையும் என்னையும் இந்த இடத்தில் இறைநம்பிக்கையாளனாய் அமர வைத்துள்ளது.

இன்ஷா அல்லாஹ்... உலக முடிவு நாள் வரை இன்னும் கோடான கோடி இறைநம்பிக்கையாளர்களை உருவாக்க இருக்கிறது.

ஆகவே தான் இந்த நாளை நினைவு கூறச் சொல்லி அல்லாஹ்வே இயம்புகிறான். இந்த நாளை அசை போட்டு பார்குமாறு அல்லாஹ்வே ஆர்வமூட்டுகிறான்.

اِذْ تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَـكُمْ اَنِّىْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ مُرْدِفِيْنَ‏

(நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.                          ( அல்குர்ஆன்: 8: 9 )

وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ ۖ

பத்ருபோரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَن يَكْفِيَكُمْ أَن يُمِدَّكُمْ رَبُّكُم بِثَلَاثَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُنزَلِينَ

(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று கூறியதை நினைவு கூர்வீராக!

بَلَىٰ ۚ إِن تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُم مِّن فَوْرِهِمْ هَٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُم بِخَمْسَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ

ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான். ( அல்குர்ஆன்: 3: 123 – 125 )

வாருங்கள்! நாம் அந்த நாளை நினைவு கூர்வோம். அசை போட்டுப்  பார்ப்போம்!

உலகத்தின் மதிப்பீடுகளுக்கு அப்பால் பத்ர் களத்தில் மகத்தான வெற்றியை முஸ்லிம்கள் பெற்றனர்.

படைப்பலத்தை மட்டும் வைத்து நோக்குவது ஈமானற்ற  உள்ளங்களின் நிலைப்பாடாகும்.

ஈமானிய உள்ளங்கள் முழுமையாக அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து தம்மைத் தயார் படுத்தி காத்து நின்றது.

அந்த வகையில் அல்லாஹ் அவர்களிடம் இடம் பெற்றிருந்த மூன்று காரணிகளுக்காக ஐந்து வகையான உதவிகள் மூலம் பத்ரை வெற்றியுடன் முடித்து வைத்தான்.

முதல் காரணி:- இறைத்தூதரின் துஆ...

 

روى مسلم في صحيحه من حديث عمر ابن الخطاب رضي اللهُ عنه قال

 لَمَّا كَانَ يَوْمُ بَدْرٍ نَظَرَ رَسُولُ اللَّهِ صلى اللهُ عليه وسلم إِلَى الْمُشْرِكِينَ وَهُمْ أَلْفٌ وَأَصْحَابُهُ ثَلَاثُ مِائَةٍ وَتِسْعَةَ عَشَرَ رَجُلًا، فَاسْتَقْبَلَ نَبِيُّ اللَّهِ صلى اللهُ عليه وسلم الْقِبْلَةَ، ثُمَّ مَدَّ يَدَيْهِ فَجَعَلَ يَهْتِفُ بِرَبِّهِ

 اللَّهُمَّ أَنْجِزْ لِي مَا وَعَدْتَنِي، اللَّهُمَّ آتِ مَا وَعَدْتَنِي، اللَّهُمَّ إِنْ تُهْلِكْ هَذِهِ الْعِصَابَةَ مِنْ أَهْلِ الْإِسْلَامِ لَا تُعْبَدْ فِي الْأَرْضِ

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: பத்ருடைய அந்நாளில் மாநபி {ஸல்}  அவர்கள் முஷ்ரிக்களைப் பார்க்கின்றார்கள் 1000 பேர் இருக்கின்றார்கள். முஸ்லிம்களைப் பார்க்கின்றார்கள் 313 பேர் இருக்கின்றார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் கிப்லாவை முன்னோக்கி, இரு கரத்தையும் ஏந்தி தங்களின் ரட்சகனிடத்தில் இறைவா! நீ வாக்களித்ததை விரைவாகக் கொடு! நீ இந்த சின்னஞ்சிறிய கூட்டத்திற்கு உதவி புரியவில்லை என்றால் இந்தப் பூமியில் உன்னை வணங்க எவருமே இருக்கமாட்டார்கள் என உருக்கமாக இறைஞ்சினார்கள்.              ( நூல்: முஸ்லிம் )

இரண்டாம் காரணி:- அஞ்சா நெஞ்சம்...

நபி {ஸல்} அவர்கள் தனது தோழர்களின் மனநிலையை அறிவதற்காக முயற்சித்தார்கள். யாரிடம் கேட்டால் போர் புரியச் சொல்வார்களோ அவர்களிடம் கேட்டுப் பார்த்தார்கள். உமர் (ரலி), அபூபக்கர் (ரலி) போன்ற குறைஷிகள் போராடத்தான் வேண்டுமென்றனர். ஆனாலும், நபியவர்கள் மதீனத்து அன்ஸாரிகளின் மனநிலை எவ்வாறுள்ளது என்பதை அறியவே விரும்பினார்கள். இதனை உணர்ந்து கொண்ட ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள், எங்கள் எண்ண ஓட்டத்தையே தெரிய விரும்புகிறீர்கள் என நினைக்கிறேன். எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக! கடலில் மூழ்க நீங்கள் கட்டளையிட்டால் அதற்கும் தயார் என்று வீர முழக்கமிட்டார்கள். (முஸ்லிம்)

 

அதேபோல் மிக்தாத் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நீரும் உமது இறைவனும் சேர்ந்து போரிடுங்கள் என்று மூஸாவின் சமூக் கூறியது போன்று நாங்கள் கூறமாட்டோம். உங்கள் வலது புறமும், இடது புறமும், முன்னாலும், பின்னாலும் நின்று போர் புரிவோம் என்று கூறியபோது, நபியவர்களின் முகம் பிரகாசமடைந்தது.                                                  ( நூல்: புகாரி )

மூன்றாம் காரணி:- வாய்மை

அஞ்சா நெஞ்சத்தோடு சொன்னதோடு மாத்திரமல்லாமல் வாய்மையோடு யுத்தம் செய்ய புறப்பட்டும் வந்தனர். தங்களை விட எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகமாகவே இருந்த, பலமான போர் வீரர்களுடனும், போர்க் குதிரை, தளவாடங்களுடனும் களம் புகுந்திருந்த எதிரிகளைச் சந்திக்க நோன்பு வைத்த நிலையில், உடலியல் பலம் குறைந்தவர்களாக, ஆயுத, படைப்பலம் குன்றிய நிலையிலும் 76 முஹாஜிர்களும், 237 அன்ஸாரிகளும் ( மொத்தம் 313) பங்கேற்க பத்ர் களம் வந்திருந்தனர்.

அல்லாஹ் வழங்கிய ஐந்து வகையான உதவிகள்...

1.முஃமின்களுக்கு அமைதியை வழங்கி, தூக்கத்தைக் கொடுத்து, அவர்களது மனநிலையை அல்லாஹ் உறுதிப்படுத்தினான்.

(விசுவாசிகளே! உங்கள் மனம் மிகக் கூடுதலான எதிரிகளைக் கண்டு பயப்படாது.) அபயம் பெறுவதற்காக அவனிடமிருந்து உங்களுக்கு சிறிய தூக்கத்தை அவன் போட்டான் என்பதை (நினைத்துப் பார்ப்பீர்களாக!) (அல்குர்ஆன் 08:11)

2. மழை மூலம் தூய்மையாக்குதல்..

அல்லாஹ் அருள் மழையை இறக்கி அதன் மூலமாக முஃமின்களைத் தூய்மையாக்கி, அவர்களின் பாதங்களை உறுதிப்படுத்தினான்.

(அது சமயம்) உங்களை அதைக் கொண்டு தூய்மைப் படுத்துவதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தை (தீய ஊசலாட்டத்தை)ப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் இதயங்களைப் பலப்படுத்தி, அதைக் கொண்டு உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல்குர்ஆன் 08:11)

3. வானவர்களைப் பங்கேற்க வைத்தான்..

அல்லாஹுத்தஆலா, தனது உதவியை நேரடியாகவே வழங்கினான். ஆகவே, வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான். ஆயிரம் வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான்.

لَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ () إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلَاثَةِ آلَافٍ مِنَ الْمَلَائِكَةِ مُنْزَلِينَ () بَلَى إِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُمْ مِنْ فَوْرِهِمْ هَذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ آلَافٍ مِنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ ()

பத்ருப் போரிலே அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருந்தான். அப்போது நீங்கள் மிகவும் வலுவற்றவர்களாய் இருந்தீர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்விற்கு நன்றி  கொல்வதிலிருந்து விலகி வாழுங்கள். இதன் மூலம் நீங்கள் நன்றி செலுத்துவோராய்  திகழக்கூடும்!

உங்களுடைய இறைவன் மூவாயிரம் வானவர்களை இறக்கி உங்களுக்கு உதவி செய்தது போதுமானதில்லையா?  என்று நீர் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டதை  நினைவு கூரும்!

ஆம்! நீங்கள் நிலைகுலையாமலிருந்து இறைவனுக்கு அஞ்சிப் பணியாற்றினால்  எந்தக் கணக்கில் பகைவர்கள் உங்கள் மீது படையெடுத்து வருகின்றார்களோ, அந்தக்  கணக்கில் உங்கள் இறைவன் மூவாயிரம் என்ன? போர் அடையாளமுடைய ஐயாயிரம் வானவர்களின் மூலம் உங்களுக்கு உதவி செய்வான்.                ( அல்குர்ஆன்: 3: 123 – 125 )

إِذْ يُوحِي رَبُّكَ إِلَى الْمَلَائِكَةِ أَنِّي مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِينَ آمَنُوا سَأُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوا فَوْقَ الْأَعْنَاقِ وَاضْرِبُوا مِنْهُمْ كُلَّ بَنَانٍ

நான் உங்களுடன் இருக்கிறேன். நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத்துங்கள்! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே, கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்! என்று (முஹம்மதே!) உமது இறைவன் வானவர்களுக்கு அறிவித்ததை நினைவூட்டுவீராக!  (அல்குர்ஆன் 08:12)

பத்ர் களத்தில் வானவர்கள் இறங்கி எதிரிகளை நிலை குலையும் அளவு தாக்கினார்கள். அவர்களின் தாக்குதலால் பலர் மாண்டனர். இன்னும் சிலர் புறமுதுகு காட்டிஓடினர்.

அலீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் பத்ர் களத்தில் மூன்று முறை கடும் காற்று வீசியது. அப்படியான காற்றை நான் முன் எப்போதும் உணரவில்லை. ஜிப்ரீல் (அலை), மீக்காயீல் (அலை), இஸ்ராஃபீல் (அலை) ஆகியோர் முறையே இறங்கியதன் அடையாளமே அந்த காற்றுஎன்று கூறுகின்றார்கள்.

ஜிப்ரீல் (அலை) அவர்களும் அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களும் நபி {ஸல்} அவர்களின் வலப்பக்கமாகவும், மீக்காயீல் (அலை) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் நபி {ஸல்} அவர்களின் இடப்பக்கமாகவும் நின்று போர்செய்தனர். இஸ்ராஃபீல் (அலை) அவர்கள் முதல் வரிசையில் நின்று போர்செய்தார்கள்.

وقد أسر رجل قصير من الأنصار 

 فقال العباس

العباس بن عبد المطلب 

 يا رسول الله إن هذا والله ما أسرني، لقد أسرني رجل أجلح 

انحسر الشعر عن جانبي رأسهمن أحسن الناس وجها، على فرس أبلق(به سواد وبياضما أراه في القوم، فقال الأنصاري

 أنا أسرته يا رسول الله، فقال ـ صلى الله عليه وسلم ـ اسكت فقد أيدك الله تعالى بملك كريم )

அன்ஸரிகளில் ஒருவர் அப்பாஸ் (ரலி) (அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை) அவர்களைக் கைது செய்து, நபி {ஸல்} அவர்களிடம் கொண்டுவந்த போது, அப்பாஸ் (ரலி), அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சியமாக இவர் என்னை கைது செய்யவில்லை. அழகிய முகமுடைய தலையில் முடியில்லாத ஒருவர் கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்துடைய குதிரையில் வந்து என்னைக் கைது செய்தார். ஆனால், அவரை இப்போது இக்கூட்டத்தில் நான் பார்க்கவில்லை! என்று கூறினார். அதற்கு, அன்ஸாரித் தோழர் அல்லாஹ்வின் தூதரே! இவரை நான் தான் கைது செய்தேன் என்று கூறினார். நீர் அமைதியாக இரும். கண்ணியமிக்க வானவர் மூலம் அல்லாஹ் (இவரை) உன் கையால் பிடித்துத் தந்துள்ளான் என்று நபி (ரழி) அவர்கள் கூறினார்கள்.               ( நூல்: அஹ்மத் )

فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَكِنَّ اللَّهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى وَلِيُبْلِيَ الْمُؤْمِنِينَ مِنْهُ بَلَاءً حَسَنًا إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ

(விசுவாசிகளே பத்ருப் போரில் எதிரிகளாகிய) அவர்களை நீங்கள் கொல்லவில்லை. அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். (நபியே! விரோதிகளின் மீது) நீர் (மண்ணை) எறிந்த போது (அதனை) நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் (உம் மூலம் அதனை) எறிந்தான். (அதன் மூலம்) அழகான முறையில் விசுவாசிகளுக்கு அருட்கொடையை நல்குவதற்காக (இவ்வாறு அல்லாஹ் செய்தான்.) நிச்சியமாக அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன். (அல்குர்ஆன் 08:17)

4. எதிரிகளின் கண்களுக்கு முஸ்லிம்களை அதிகமாகவும்..
முஸ்லிம்களின் கண்களுக்கு எதிரிகளை குறைவாகவும் காட்டுதல்..

பத்ரில் கலந்து கொண்ட முஸ்லிம் போராளிகள் குறைவாக இருந்தும், அல்லாஹ் அவர்களுக்கு காபிர்களைக் குறைவாகக் காண்பித்து, முஃமின்களின் தொகையைக் காபிர்களுக்கு அதிகமாகக் காண்பித்தான்.

إِذْ يُرِيكَهُمُ اللَّهُ فِي مَنَامِكَ قَلِيلًا وَلَوْ أَرَاكَهُمْ كَثِيرًا لَفَشِلْتُمْ وَلَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَلَكِنَّ اللَّهَ سَلَّمَ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ (43) وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ

(நபியே! உம்முடைய கனவில் அல்லாஹ் (எண்ணிக்கையில்) அவர்களைக் குறைத்துக் காண்பித்ததையும், (நினைவு கூர்வீராக) அவர்களை (எண்ணிக்கையில்) அதிகபடுத்தி உமக்குக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியமிழந்து யுத்தம் செய்வதைப் பற்றி உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டு இருந்திருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களைப்) பாதுகாத்துவிட்டான். நிச்சியமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிந்தவன்.

நீங்கள் (இரு படையினரும்) சந்தித்த சமயத்தில் அவர்க(ளுடைய எண்ணிக்கை)களை, உங்கள் கண்களுக்குக் குறைவாக அவன் காட்டியதையும், உங்க(ளுடைய எண்ணிக்கை)களை அவர்களுடைய கண்களுக்கு அவன் அதிகமாகக் காட்டியதையும் (நினைவு கூருங்கள்.) நடந்தேறப்பட வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக (அல்லாஹ் அவ்வாறு செய்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்) மேலும், அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் திரும்பக் கொண்டுவரப்படும். ( அல்குர்ஆன் 08: 43-44 )

5. எதிரிகளின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி உதவுதல்

إِذْ يُوحِي رَبُّكَ إِلَى الْمَلآئِكَةِ أَنِّي مَعَكُمْ فَثَبِّتُواْ الَّذِينَ آمَنُواْ سَأُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُواْ الرَّعْبَ فَاضْرِبُواْ فَوْقَ الأَعْنَاقِ وَاضْرِبُواْ مِنْهُمْ كُلَّ بَنَان ﴾

والنصر بالرعب من خصائص نبينا محمد صلى اللهُ عليه وسلم كما في الصحيحين من حديث جابر بن عبدالله رضي اللهُ عنه أن النبي صلى اللهُ عليه وسلم قال: "نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ

உம் இறைவன் வானவர்களிடம் அறிவித்துக் கொண்டிருந்ததையும் நீங்கள் நினைவு கூர்ந்து பாருங்கள்!நிச்சயமாக! நான் உங்களோடு இருக்கின்றேன். எனவே,  நம்பிக்கையாளர்களை நீங்கள் உறுதியாக இருக்கச் செய்யுங்கள்!

இதோ! நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விடுகின்றேன். எனவே, நீங்கள் அவர்களின் பிடரிகளில் தாக்குங்கள். அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டுகளிலும் அடியுங்கள்!                                                                                                              ( அல்குர்ஆன்: 8: 12 )

இறுதியாக, பத்ர் போரில் அல்லாஹ் மகத்தான வெற்றியை முஸ்லிம்களுக்கு நல்கினான். போரில் கலந்து கொண்ட குறைஷிகளில் 70 பேர் கொல்லப்பட்டு, 70 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதில் முக்கிய தலைவர்களில் 24 பேர் கொல்லப்பட்டனர். மேலும்

மக்காவில் நபியவர்கள் கஃபாவில் தொழும்போது, ஒட்டகக் குடலை கழுத்தில் போட்டு வேதனைப்படுத்தியவர்கள் பத்ரு களத்தில் வேரறுத்த மரங்களாக சரிந்தனர் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்களில் 14 பேர் ஷஹீதாகினர். அவர்களில் 6 முஹாஜிர்கள் 8 அன்ஸாரிகள் ஆவர்.

அல்லாஹ்வின் அருளில் உறுதியான நம்பிக்கை வைக்கும் உள்ளங்கள், காரண காரியங்கள் எதுவும் இல்லாது இந்த உலகின் அறிவுக்கும், முடிவுக்கும் அப்பாற்பட்ட வெட்டியை ஈட்டும் என்கிற மகத்தான செய்தியைத் தாங்கி நிற்பது தான் இந்த பத்ர் எனும் வெற்றியாகும்.

இன்றைய இஸ்லாமிய உலகு எதை இழந்திருக்கின்றது என்பதையும், இறை உதவியின் தாமதத்திற்கான காரணிகள் எது என்பதையும் ஆய்வு செய்து தம்மைச் சீரமைத்துக் கொள்ள, எதிரிகளுக்கும், சோதனைகளுக்கும் எதிராக வெற்றி பெற்றிட முயற்சி மேற்கொள்ள முன் வரவேண்டும்.

نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ

ஏனெனில், அல்லாஹ்வின் உதவியும், அல்லாஹ் வழங்கும் வெற்றியும் மிகச் சமீபத்திலேயே இருக்கின்றது” என்கிறது குர்ஆன்.

அல்லாஹ் இந்த ரமழானின் மூலமாக முழு உலக முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியருள்வானாக!

முழு உலக முஸ்லிம்களையும் பாதுகாத்து அருள் புரிவானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

 

No comments:

Post a Comment