Wednesday, 27 April 2022

தித்திக்கும் திருமறை – ரமழான் சிந்தனை:- 27. பாக்கியம் நிறைந்த லைலத்துல் கத்ர்!!!

 

தித்திக்கும் திருமறைரமழான் சிந்தனை:- 27.

பாக்கியம் நிறைந்த லைலத்துல் கத்ர்!!!


அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் 26 –வது நோன்பை நோற்று, 27 – வது தராவீஹை நிறைவு செய்து, 27 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் அல் லைல் முதல் ஸூரா அந்நாஸ் வரை நிறைவு செய்யப்பட்டு அல் பகராவின் ஆரம்ப 5 வசனங்கள் ஓதப்பட்டு, அல்ஹம்துலில்லாஹ் புனித குர்ஆன் முடிக்கப்பட்டுள்ளது.

இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அல் கத்ர் அத்தியாயம் அல்லாஹ் இந்த உம்மத்தின் மீது செய்த பேருபகாரத்தைக் குறித்துப் பேசுவதை இன்றைய அமர்வில் பேசவும், கேட்கவும் இருக்கின்றோம்.

பாக்கியம் நிறைந்த இரவுகளில் ஒன்றான லைலத்துல் கத்ர் இரவில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

ஆயிரம் மாதங்களை விட மேன்மையான இந்த லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகளை முஸ்லிம் சமுதாயம் அறியாமல் இல்லை.

உலகப் பொதுமறையான அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட நாளை புனித நாளாக அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான். மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டியாக வந்த அல்குர்ஆன் அருளப்பட்ட அந்த இரவை பாக்கிய மிக்க இரவாக ஆக்கி, அதில் தன்னை வணங்குவோருக்கு ஆயிரம் மாதங்கள் வணங்கிய நன்மைகளை வல்ல அல்லாஹ் வழங்குகின்றான்.

وَعَنْ أَبي هُريرةَ 

عن النَّبِيِّ ﷺ قَالَ

 مَنْ قَامَ لَيْلَةَ القَدْرِ إِيمانًا واحْتِسَابًا، غُفِر لَهُ مَا تقدَّم مِنْ ذنْبِهِ 

. متفقٌ عَلَيْهِ

ஒருவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்க, அது லைலத்துல் கத்ராகவே அமைந்துவிட்டால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். (அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் 1818).

குர்ஆனின் 97-வது அத்தியாயம் இந்த இரவின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டு அதன் சிறப்புகளைப் பின்வருமாறு அறிவிக்கிறது.

بسم الله الرحمن الرحيم

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (1) وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ (2) لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (3) تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ (4) سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ (5)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. நிச்சயமாக நாம் (குர்ஆனாகிய) இதனை மகிமை மிக்க இரவில் இறக்கி வைத்தோம். 2. (நபியே!) மகிமைமிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா?

3. (அந்த) மகிமைமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும்.

4. அதில் மலக்குகளும் (ஜிப்ரீலாகிய பரிசுத்த) ஆவியும், தங்களுடைய ரப்பின் கட்டளையை கொண்டு சகல காரியத்தின் பொருட்டும் (பூமியில்) இறங்குகின்றனர்.

5. (அது) சாந்திமயமானதாகும்: அது, அதிகாலை உதயமாகும் வரை இருக்கும்.

* இந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது. அதாவது, ஆயிரம் மாதங்கள் ஒருவர் வணக்கங்களில் ஈடுபட்டுப் பெறுகிற நன்மைகளைக் காட்டிலும் அதிகமான நன்மைகளை இந்த ஓர் இரவை அடைவதின் மூலம் பெற முடியும்.

ஆண்டு முழுவதிலும் நமக்கு இத்தகைய சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. வாழ்நாள் முழுவதும் இந்த இரவு நமக்கு கிடைக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, கிடைத்த இந்த இரவை பாக்கியமாக கழிக்க வேண்டும். ஆயிரம் மாதங்கள் என்பது 83 ஆண்டுகளை விட அதிகமானது. நம்மில் பலர் அத்தனை காலம் வாழ்வதுமில்லை (ஏனெனில், உலகின் பெரும்பாலான மனிதர்களின் ஆயுள் 55-65 ஆண்டுகள் தான்). அல்லாஹ்வுடைய மகத்தான கருணையால், 83 ஆண்டுகள் வணங்கியதற்கான நன்மையை, அவனை ஒரு இரவில் வணங்குவதன் மூலம் தருகிறான். இதை விட மகத்தானதாக எதாவது இருக்க முடியுமா?

அதனால், இந்த இரவில் நாம் முயன்று செய்ய வேண்டிய வழிபாடுகள், 1. உபரித் தொழுகைகள், 2. திக்ருகள், 3. கூடுதல் குர்ஆன் வாசிப்பு, 4. தர்மங்கள் 5. துஆக்கள்.

இந்த வசனத்திற்கு விளக்கம் தரும் சில அறிஞர்கள், “ஆயிரம்என்ற சொல் மிக அதிகமான ஒன்றைக் குறிப்பதற்கு அடையாளமாக கூறப்பட்டுள்ளது என கூறுகிறார்கள். உண்மையில் அதை விட அதிக நற்கூலிகள் கிடைக்கும். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் தாராளமானவன்.

* இந்த இரவில் வானவர்களின் சிறப்பு வருகை நடக்கிறது. அவர்களுடன் அவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களும் வருகிறார்கள்.

* ஜிப்ரீலும் அவர்களது படையும் இறங்குவதின் காரணம், அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கொண்டு வருகிறார்கள். விதி நிர்மாணிக்கப்படுகிறது.

இந்த இரவில் தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அடுத்த ஆண்டு நடைபெற வேண்டிய கட்டளைகளை அனுப்புகிறான். இந்த இரவில் தான் அடுத்த ஆண்டுக்கான நம்முடைய விதி விதிக்கப்படுகிறது. இறை விதியை மாற்றக்கூடியது ஒன்றே ஒன்று தான், அது தான் துஆ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதனால், எல்லா கட்டளைகளும் பூமிக்கு அனுப்பப்படும் இரவை விட துஆ செய்வதற்கு ஏற்ற நேரம் வேறெதுவாக இருக்க முடியும்? மேலும், இந்த இரவின் கண்ணியம், ஜிப்ரீல் (அலை) அவர்கள் அந்த புனிதமான இரவில் இறங்கி வருவதால், அந்த இரவின் கண்ணியம் உறுதி செய்யப்படுகிறது. ஆயிரமாயிரம் மலக்குகள் உலகிற்கு இறங்கி வரும் இரவு அது. இது, அதிகமதிகமான துஆக்களை நாம் கேட்பதற்கும், அதிகமதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் இது நமக்கு அருமையான சந்தர்ப்பம் ஆகும்.

* இந்த இரவில் அமைதி நிலவும். அது அதிகாலை வரை நீடித்திருக்கும்.

நம்முடைய வாழ்வின் எல்லா காலங்களிலும், நிலைகளிலும் அமைதி தவழ்வது அவசியமாகிறது. இம்மையிலும், மண்ணறயிலும், மறுமையிலும் சிறப்பிற்குரியவர்கள் அமைதி பெற்றவர்கள், தான் என அல்குர்ஆனும் ஸுன்னாவும் சான்று பகர்கின்றது. எனவே, இன்றைய இரவில் தவழும் இந்த அமைதி நம் இதயத்தின் அமைதியாக, நம் வாழ்வின் அமைதியாக, நம் ஈருலகின் அமைதியாக என்றென்றும் இடம் பெற்றிட எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம்.

`லைல்என்றால் இரவு. `கத்ர்என்றால் சிறப்பு, கண்ணியம் மற்றும் விதி, தீர்ப்பு ஆகிய நான்கு அர்த்தங்களும் அந்த இரவுக்குப் பொருந்தும். எப்படியெனில், அந்த இரவில் தான் விதியிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்த அல்லாஹ் கட்டளைகளை இறக்குகிறான்.

இந்த அத்தியாயத்தின் மூலம் இந்த இரவின் மூலம் நாம் அறிய வேண்டிய முக்கியமான நான்கு விஷயங்கள் இருக்கின்றன.

1.   விதியைப் பற்றிய நம்பிக்கை.

உலகில் நடக்கும் அனைத்து காரியங்களும் இறைவன் விதித்த விதிப்படியும், அளவுப்படியுமே நடக்கிறது என்று நம்பிக்கை கொள்வதுதான், ‘விதியை நம்புவதன் முழுப் பொருள்ஆகும்.

நன்மை-தீமை, லாபம்-நஷ்டம், செல்வம்-வறுமை, இன்பம்-துன்பம், பிறப்பு-இறப்பு, வெற்றி-தோல்வி என இவை அனைத்தும் இறைவனால் உண்டாக்கப்பட்டவை. இவை அனைத்தும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நடக்கிறது.

விதியை நம்புவதைப் பொறுத்தவரை நான்கு படித்தரங்கள் உள்ளன. 

1.    அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்து வைத்துள்ளான் என நம்புவதாகும். 

وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.                     ( அல்குர்ஆன்: 6: 59 )

2.  மறுமை நாள் வரை நடக்க இருக்கும் அனைத்தையும் அல்லாஹ் எழுதி வைத்துள்ளான் என நம்புவதாகும்.

 اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمَآءِ وَالْاَرْضِ‌ اِنَّ ذٰ لِكَ فِىْ كِتٰبٍ‌  اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ 

நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது.                                                 ( அல்குர்ஆன்: 22: 70 ) 

يَمْحُوْا اللّٰهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ ‌ۖ ‌ۚ وَعِنْدَهٗۤ اُمُّ الْكِتٰبِ

(எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது. ( அல்குர்ஆன்: 13: 39 ) 

3.  அல்லாஹ் நாடியது நடக்கும் அவன் நாட்டமின்றி எதுவும் நடக்காது என நம்புவதாகும்.

 اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـٴًـــا اَنْ يَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ 

எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.                                                                                                                    ( அல்குர்ஆன்: 36: 82 ) 

 وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ 

ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.                  ( அல்குர்ஆன்: 81: 29 ) 

4.  அல்லாஹ் அனைத்தையும் படைக்க ஆற்றலுடையவன் என நம்புவதாகும்.

 اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ 

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்.                ( அல்குர்ஆன்: 39: 62 ) 

 وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ 

 உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.                                        ( அல்குர்ஆன்: 37: 96 ) 

விதியின் வழியிலேயே நாம் செயல்படுகின்றோம்..

ஒவ்வொருவரின் விதியும் அவர் படைக்கப்படுவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை.

مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَا فِي أَنْفُسِكُمْ إِلَّا فِي كِتَابٍ مِنْ قَبْلِ أَنْ نَبْرَأَهَا إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ (22) لِكَيْلَا تَأْسَوْا عَلَى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (23)

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது இறைவனுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறிவிட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்)’. (திருக்குர்ஆன் 57: 22,23)

عن

 عبد الله بن عمرو بن العاص

 قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول

 " كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة . " .

இறைவன் வானங்களையும், பூமியையும் அமைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து படைப்பினங்களின் விதிகளையும் தீர்க்கமாக எழுதிவிட்டான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), முஸ்லிம்)

மனிதன் செய்யும் நன்மையான காரியங்களுக்கு நற் கூலியையும், தீமையான காரியங்களுக்கு தண்டனையையும் இறைவன் வழங்குவான்.

நன்மையும், தீமையும் இறைவன் நாட்டப்படி அரங்கேறினாலும், அவன் நன்மையை பொருந்திக்கொள்வான். தீமையைப் பொருந்தமாட்டான் என்றும் நம்பவேண்டும்.

إِنْ تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكُمْ وَلَا يَرْضَى لِعِبَادِهِ الْكُفْرَ وَإِنْ تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ

அவன் தனது அடியார்களிடம் மறுப்பைப் பொருந்திக் கொள்ள மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக்கொள்வான்’. ( அல்குர்ஆன்: 39: 7 )

நன்மை-தீமை இரண்டும் இறைவன் நாட்டமில்லாமல் நடக்காதுஎன்று கூறும் பொழுது, நன்மை புரிந்தவருக்கு நல்ல பிரதி பலனும், தீமை செய்தவருக்கு தண்டனையும் கொடுப்பது நியாயமா? என்ற ஒரு நியாயமான கேள்வி எழுகிறது அல்லவா?.

ஆம், பின்னாளில் நடக்க இருக்கிற காரியங்களை அவன் இன்னதென நமக்கு தெரிவிக்கவில்லையே. அவன் நமக்கு வெளிப்படையாக அறிவித்ததெல்லாம் ஏவல்களும், விலக்கல்களும் தான். எனவே, அறிவித்தபடி ஏவலை ஏற்றும், விலக்கியதை விட்டும் தவிர்ந்து நடந்திட வேண்டும். இது ஒரு சாத்தியமான நடவடிக்கையே. இதுகுறித்து குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.

وَنَفْسٍ وَمَا سَوَّاهَا (7) فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (8) قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا

உள்ளத்தின் மீதும், அதை வடிவமைத்தவன் மீதும் சத்தியமாக, அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்’.                                           ( அல்குர்ஆன்: 91: 7-10 ).

விதி ஒரு பக்கம் இருந்தாலும், இவ்வாறு கூறியதிலிருந்து நன்மை-தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து செயல்களில் ஈடுபடுவதற்குரிய தகுதியை இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

விதி அடிப்படையில் எதுவும் நடக்கும் என்று எப்படியும் இருந்து விடக்கூடாது. நடந்ததை விதியின் மீது சுமத்தி, நடக்க இருப்பதை முழுமுயற்சியால் அடைய முற்பட வேண்டும்.

عن عمران بن حصين، قال: قال رجل: يا رسول اللّه، أيعرف أهل الجنة من أهل النار؟ قال: نعم، قال: فلم يعمل العاملون؟

قال: كلّ يعمل لما خلق له، أو لما يسّـر له

இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்?, நரகவாசிகள் யார்? என்று (முன்பே இறைவனுக்குத்) தெரியுமா?’ என முகம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.ஒருவர், ‘ஆம்! தெரியும்என்றார்கள் நபிகளார்.

அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரிய வேண்டும்?’ என்று அந்த நபர் கேட்டார்.

அதற்கு நபியவர்கள், ‘ஒவ்வொருவரும் எதை அடைவதற்காகப் படைக்கப்பட்டார்களோ அல்லது எதை அடைவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ அதற்காகச் செயல் படுகிறார்கள்என்று பதில் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹூஸைன் (ரலி), புகாரி)

எது நடந்தாலும், அது விதியின் அடிப்படையிலேயே நடக்கிறது. நடந்துவிட்ட ஒன்றுக்கு யாரும் யாரையும் குறைகூறக்கூடாது.

حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " احْتَجَّ آدَمُ وَمُوسَى، فَقَالَ لَهُ مُوسَى: أَنْتَ آدَمُ الَّذِي أَخْرَجَتْكَ خَطِيئَتُكَ مِنَ الجَنَّةِ، فَقَالَ لَهُ آدَمُ: أَنْتَ مُوسَى الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالاَتِهِ وَبِكَلاَمِهِ، ثُمَّ تَلُومُنِي عَلَى أَمْرٍ قُدِّرَ عَلَيَّ قَبْلَ أَنْ أُخْلَقَ " فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَحَجَّ آدَمُ مُوسَى مَرَّتَيْنِ»

‘(இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும், மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதமிடம் மூஸா (அலை) அவர்கள், ‘ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்களின் பாவத்தின் காரணமாக) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள்என்றார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘மூஸாவே! இறைவன் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் வேதத்தை) வரைந்தான். இப்படிப்பட்ட நீங்கள், இறைவன் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்து விட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?’ என்று கேட்டார்கள்.

(இந்த பதில் மூலம்) மூஸா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டதாக மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

விதியின் வினைகளை ஏற்றுக் கொள்ளும் விஞ்ஞானம்..

மனிதர்களின் நல்ல செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் மனிதனிடம் உள்ள மூளையின் அமைப்பும், மரபணுக்களும், அவனிடம் சுரக்கும் ஹார்மோன்களும், மனநிலையில் ஏற்படும் மாற்றங்களும் காரணமாக உள்ளன என்று ஆய்வுகள் பல மேற்கொண்டு கண்டுபிடித்துள்ளனர். சில குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் என்னதான் முயன்றாலும் அதில் இருந்து அவர்களால் மீள முடியாமல் அவர்களை மீறிய ஒரு சக்தி கட்டுப்படுத்துகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்.

6-5-2012 அன்று த ஹிந்து நாளிதழில் “Who am I? my brain or my mind?”  என்ற தலைப்பில் நரம்பியல் துறை நிபுணரான டாக்டர் கணபதி அவர்கள் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார்.

இதில் பல அறிவியல் உண்மைகளை அவர் விளக்கியுள்ளார். ஒருவன் தெரசாவாகவோ பின் லேடனாகவோ இருப்பதற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட மரபணு அமைப்பு தான் காரணமாகும். pre-determined genetic profile  மனிதனின் மூளைநரம்புகள் எந்த வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொருத்தும், நரம்புக் கடத்திகள் (neurotransmitters) எவ்வாறு இணைப்புகளில் (synapses) இடம் பெயர்கின்றது என்பதைப் பொருத்தும் மனிதனின் செயல்பாடுகள் அமைகின்றன என்று அவர் குறிப்பிடுகிறார்.

நரம்பியல் புகைப்படவியல் (neuroimaging)  என்னும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் மூளையின் கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளின் மாறுதல்களை அறியலாம்.

எல்லா நாடுகளும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு ஏற்ப சட்டங்களை வகுத்துக் கொண்டுள்ளன. அதன்படி தண்டித்தும் வருகின்றன. எதிர்காலத்தில் இது கேள்விக்குறியாகலாம். ஆம் குற்றம் செய்தவர்கள் நரம்பியல் புகைப்படத்தை எடுத்து வைத்து எனது மூளை அமைப்பு இப்படி உள்ளதால்தான் நான் குற்றம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்; இதோ ஆதாரம் எனக்கூறி குற்றவாளிகள் கருணை மனு போடலாம் என அவர் விளக்குகிறார்.

மனிதனின் சிந்தனை தீய செயலைச் செய்ய அவனைத் தூண்டும் போது தீய செயலைத் தடுக்கும் inhibitory impulses (தடுக்கக்கூடிய பல்ஸ்)  பகுதி சரியாக வேலை செய்து தீய செயல்களில் இருந்து அவனைத் தடுத்து விடுகின்றது. inhibitory cortex (தடுக்கக்கூடிய புறணி) சரியாக வளர்ச்சி அடையவில்லை என்றால் தீய செயலை அவன் செய்தே தீருவான்.

அப்படி இருக்கும் போது அந்தச் செயலுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்? என்று மனிதன் வாதிடும் காலம் தூரத்தில் இல்லை என்பதை அவர் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

அதாவது இஸ்லாம் சொல்வதை சற்று வார்த்தைகளை மாற்றி இன்றைய அறிவியலும் சொல்கிறது. ( நன்றி: பயான் ஆப், - இந்த ஒரு தகவல் மட்டும் பயான் ஆப்பில் எடுக்கப்பட்டது. )

விதியை நம்புவதால் முஸ்லிமுக்கு மட்டும் ஏற்படும் நன்மைகள்...

لِكَيْلَا تَأْسَوْا عَلَى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (23)

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (அல்லாஹ் விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.                     ( அல்குர்ஆன்: 57: 23 )

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِىُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ – وَاللَّفْظُ لِشَيْبَانَ – حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ ».

முஸ்லிமின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவனுக்கு எல்லாமே நன்மையில் முடிகின்றது. அவனுக்குத் துண்பம் நேர்ந்தால் அதைப் பொறுத்துக் கொள்கிறான். எனவே அது அவனுக்கு நன்மையாகி விடுகின்றது. அவனுக்கு இன்பம் ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அதுவும் அவனுக்கு நன்மையாகி விடுகின்றது. இந்த நிலை முஸ்லிமைத் தவிர யாருக்கும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ( நூல்: முஸ்லிம் )

2.   திருக்குர்ஆனோடு உள்ள தொடர்பு..

இன்று குர்ஆனையே பார்க்காத, குர்ஆனையே ஓதத் தெரியாத ஒரு சமூகம் உருவாகி வருகின்றது. உலகக் கல்வியின் மீதான அதீத ஆசையால் குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்ள வரும் சிறார்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதைப் பார்க்கின்றோம். இது இந்த உம்மத்துக்கு அழகல்ல.

ஏனெனில், குர் ஆனைக் கொண்டே இந்த சமூகம் இந்த உலகிலும், மறுமையிலும் உயர்வடையும். மேலும், எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கப்படும் என்பதை இந்த உம்மத் உணர வேண்டும்.

குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளவும், குர்ஆனை ஓதவும் இந்த உம்மத் முன் வர வேண்டும்.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ أَهْلِينَ مِنَ النَّاسِ» قَالُوا: مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَهْلُ الْقُرْآنِ هُمْ أَهْلُ  اللَّهِ وَخَاصَّتُهُ                                             

அல்லாஹ்விற்கென்றே சொந்தமானோர் மக்களில் சிலர் இருக்கின்றனர் என்று நபி (ஸல்) கூறிய போது அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார் என ஸஹாபாக்கள் கேட்டனர். அவர்கள் குர்ஆன் உடையவர்கள். அவர்கள் தான் அல்லாஹ்விற்கு  உரியவர்கள், அல்லாஹ்விற்கு சொந்தமானவர்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.  (ஹாகிம்)

குர்ஆனை இனிமையாக ஓதுவோம்!

عَنِ الْبَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ، فَإِنَّ الصَّوْتَ الْحَسَنَ يَزِيدُ الْقُرْآنَ حُسْنًا»   حاكم   

இனிமையான குரலைக் கொண்டு குர்ஆன் ஓதுவதை அழகுபடுத்துங்கள் . ஏனெனில், இனிய குரல் குர்ஆன் ஓதுவதின் அழகை அதிகரிக்கச் செய்கிறது.                                               (ஹாகிம்: 2125) 

குர்ஆன் ஓதத் தெரிந்தவருக்கு மட்டுமே கியாமத் நாளில் கிடைக்கும் சிறப்பு..

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يُقَالُ، يَعْنِي لِصَاحِبِ الْقُرْآنِ،: اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا.

 

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.                        ترمذي 

கியாமத் நாளில் குர்ஆன் உடையவரிடம் சிறப்புமிக்க குர்ஆனை ஓதிக் கொண்டே செல், சுவனத்தின் படித்தரங்களில் ஏறி நிறுத்திக் கொண்டே செல். உலகில் நிறுத்தி, நிறுத்தி ஓதிக் கொண்டிருந்தது போல் , இங்கும் நீர் நிறுத்தி ஓது. நீர் கடைசி ஆயத்தை ஓதி முடிக்கும் இடம் தான் உமது தங்குமிடம் என்று சொல்லப்படும்.

குர்ஆனை பிறர் ஓதுவதைக் கேட்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டியுள்ளார்கள்.

குர்ஆன் கொடுக்கப்பட்ட இறைத் தூதர் (ஸல்) அவர்கள், குரல் வளமிக்கவர்கள் அதை ஓதும் போது கேட்டு ரசித்திருக்கின்றார்கள். அவ்வாறு ஓதுவோரின் இல்லங்களை அடையாம் கண்டிருக்கிறார்கள்.

قَالَ أَبُو بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ 

"‏ إِنِّي لأَعْرِفُ أَصْوَاتَ رُفْقَةِ الأَشْعَرِيِّينَ بِالْقُرْآنِ، حِينَ يَدْخُلُونَ بِاللَّيْلِ، وَأَعْرِفُ مَنَازِلَهُمْ مِنْ أَصْوَاتِهِمْ بِالْقُرْآنِ بِاللَّيْلِ، وَإِنْ كُنْتُ لَمْ أَرَ مَنَازِلَهُمْ حِينَ نَزَلُوا بِالنَّهَارِ، وَمِنْهُمْ حَكِيمٌ، إِذَا لَقِيَ الْخَيْلَ ـ أَوْ قَالَ الْعَدُوَّ ـ قَالَ لَهُمْ إِنَّ أَصْحَابِي يَأْمُرُونَكُمْ أَنْ تَنْظُرُوهُمْ ‏"‏‏.‏

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும் போது அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்காவிட்டாலும், இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும், அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார். அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால்.... அல்லது எதிரிகளைச் சந்தித்தால்.... அவர்களைப் பார்த்து, "என் தோழர்கள், தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடுகின்றனர்' என்று (துணிவோடு) கூறுவார்'' என்று கூறினார்கள். ( அறிவிப்பவர்: அபூமூசா (ரலி) நூல்: புகாரி 4232 )

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، رضى الله عنه قَالَ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ اقْرَأْ عَلَىَّ الْقُرْآنَ ‏"‏‏.‏ قُلْتُ آقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ ‏"‏ إِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي ‏"‏‏.‏

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "குர்ஆனை எனக்கு ஓதிக் காட்டுங்கள்!'' என்று சொன்னார்கள். நான் "தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?'' என்று கேட்டேன். அவர்கள் "பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள். ( அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)  நூல்: புகாரி 5049 )

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَهُ ‏ "‏ يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ ‏"

நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) "அபூ மூசா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது'' என என்னிடம் கூறினார்கள். ( அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)  நூல்: புகாரி 5048 )

அழகிய குரலில் ஓதுவார்கள் நபி {ஸல்} அவர்கள்..

அடுத்தவர் ஓதக் கேட்டு ரசிக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அந்த அருள்மிகு குர்ஆனை ஓதினால் அதன் அருமை எப்படியிருக்கும்?

இதோ அதன் அருமையையும் அழகையும் நபித்தோழர்கள் கூறக் கேட்போம்.

حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنَا عَدِيُّ بْنُ ثَابِتٍ، سَمِعَ الْبَرَاءَ، رضى الله عنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ ‏‏ ‏

‏ فِي الْعِشَاءِ، وَالتِّينِ وَالزَّيْتُونِ

وَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا مِنْهُ أَوْ قِرَاءَةً‏.‏

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையில் (95ஆவது அத்தியாயமான) "வத்தீனி வஸ்ஸைத் தூனி'யை ஓதக் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை விட "அழகிய குரலில்' அல்லது "அழகிய ஓதல் முறையில்' வேறெவரும் ஓத நான் கேட்டதில்லை

( அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி),  நூல்: புகாரி 769 )

குர்ஆனை அல்லாஹ் ரசித்துக் கேட்கின்றான்

அல்குர்ஆனை அருளிய அல்லாஹ்வே, அவனது தூதர் (ஸல்) அவர்கள் ஓதும் போது அதை ரசிக்கின்றான். அதாவது ஓதக்கூடிய அவர்களை ரட்சிக்கின்றான். அவர் மீது தன் அருள்மழையைப் பொழிகின்றான்.

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ ، حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ الزُّهْرِيِّ ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ ، مَا أَذِنَ لِلنَّبِيِّ أَنْ يَتَغَنَّى بِالْقُرْآنِ . قَالَ سُفْيَانُ : تَفْسِيرُهُ يَسْتَغْنِي بِهِ .

நபி (ஸல்) அவர்கள், "நான் இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அல்லாஹ் செவிகொடுத்துக் கேட்டது போல் வேறெதனையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 5024 )

குர்ஆனின் தொடர்பில் உள்ளவர்கள் குர்ஆனின் தொடர்பை அதிகரிப்பதோடு தொடர்பில் இல்லாதவர்கள் குர்ஆனோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குர்ஆனே ஓதத் தெரியாதவர்கள் குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்ள வேண்டும்.

குர்ஆன் ஓதுதலே எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து காக்கும் கேடயமாகும்..

 وَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَّسْتُوْرًا ۙ‏

(நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்.                                                ( அல்குர்ஆன்: 17: 45 )

குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது உண்மை. உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள்.

நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். குர்ஆனைப் படியுங்கள். அதைப்படிப்பது மிகவும் இலகுவானதாகும்.

3.   வானவர்களின் துஆ முக்கியமானதாகும்...

வானவர்களுக்கும் இறைநம்பிக்கையாளனுக்கும் இடையேயான தொடர்பு என்பது பிரிக்க முடியாத ஓர் பந்தமாகும். தாயின் கருவறையில் துவங்கி சுவனத்தின் வாசலில் நின்று “ஸலாம்” முகமன் கூறி வரவேற்பது வரை தொடர்கிற, இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்ற ஒரு கொடையாகும்.

அப்படியான வானவர்கள் நமக்காக பல்வேறு பிரார்த்தனைகளைச் செய்கின்றார்கள் என இஸ்லாம் கூறுகின்றது.

நபிமார்களுக்குப் பிறகு பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதற்கு தகுதியான வானவர்களின் துஆ ஒரு முஃமினின் வாழ்வில் இன்றியமையாததாகும்.

அர்ஷைச் சுமந்து கொண்டும், அர்ஷை வலம் வந்து கொண்டும் இருக்கும் வானவர்கள் இறைநம்பிக்கையாளர்களுக்காகச் செய்யும் துஆவை குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

اَلَّذِيْنَ يَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُوْنَ بِهٖ وَيَسْتَغْفِرُوْنَ لِلَّذِيْنَ اٰمَنُوْا‌ ۚ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِيْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِيْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيْمِ

அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!

رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ اۨلَّتِىْ وَعَدْتَّهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآٮِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ۙ‏

எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

وَقِهِمُ السَّيِّاٰتِ ؕ وَمَنْ تَقِ السَّيِّاٰتِ يَوْمَٮِٕذٍ فَقَدْ رَحِمْتَهٗ ؕ وَذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ

இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் - அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்றும் கூறுவர்). (அல்குர்ஆன்: 40:7-9)

தர்மம் செய்பவர்... வானவரின் துஆவைப் பெறுகிறார்..

 

حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي أَخِي ، عَنْ سُلَيْمَانَ عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي مُزَرِّدٍ ، عَنْ أَبِي الْحُبَابِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ :

مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلاَّ مَلَكَانِ يَنْزِلاَنِ فَيَقُولُ أَحَدُهُمَا اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا وَيَقُولُ الآخَرُ اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதி பலனை அளித்திடுவாயாக!என்று கூறுவார். மற்றொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!என்று கூறு வார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: புகாரி )

தொழுத இடத்தில் அமர்ந்திருப்பவர்... வானவரின் துஆவைப் பெறுகிறார்..

 

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ : حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :

صَلاَةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ وَصَلاَتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ لَمْ يَخْطُ خُطْوَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ خَطِيئَةً حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ ، وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ وَتُصَلِّي ، يَعْنِي عَلَيْهِ – الْمَلاَئِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ مَا لَمْ يُحْدِثْ فِيهِ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்க சுத்தி (உளூ) செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழு கின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளி வாசலுக்கு வந்தால் அவர் பள்ளி வாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின் றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான். (ஜமாஅத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்ளிவாசலில் இருக்கும்போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கரு தப்படுகிறார். மேலும் அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத் தில் தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும்வரை அவ ருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்க சுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்று பிரிதல் மூலம்) அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். அப்போது வானவர்கள், “இறைவா! இவருக்கு கருணை புரிவா யாக! என்றுபிரார்த்திக்கின்றார்கள். ( நூல்: புகாரி )

தொழுகையை எதிர்பார்த்து இருப்பவர்.. வானவரின் துஆவைப் பெறுகிறார்..

وَحَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِىِّ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-

« إِنَّ الْمَلاَئِكَةَ تُصَلِّى عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِى مَجْلِسِهِ تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ مَا لَمْ يُحْدِثْ وَأَحَدُكُمْ فِى صَلاَةٍ مَا كَانَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ ».

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்து வீற்றிருக்கும் வரை அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார்; அவருக்குச் சிறு துடக்கு ஏற்படாமல் இருந்தால். அப்போது அவ ருக்காக வானவர்கள், “இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அறி : அபூஹுரைரா (ரலி), ( நூல்: முஸ்லிம் )

இந்த காரியம் மலக்குமார்களின் துஆவை பெற்றுத் தருவதோடு இன்னும் பல நன்மைகளையும் அள்ளித் தருகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல இந்த ஒரே செயல்மூலமாக பலநன்மைகளை அள்ளிவிடலாம்.

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ – أَخْبَرَنِى الْعَلاَءُ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ

« أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ ». قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ « إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ فَذَلِكُمُ الرِّبَاطُ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல் கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட் டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை (உளுவை) முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்என்று கூறினார்கள்.                        ( நூல்: முஸ்லிம் ) 

பிறருக்காக துஆ செய்பவர்...  வானவரின் துஆவைப் பெறுகிறார்..

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ حَدَّثَنَا مُوسَى بْنُ سَرْوَانَ الْمُعَلِّمُ حَدَّثَنِى طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ قَالَ حَدَّثَتْنِى أُمُّ الدَّرْدَاءِ قَالَتْ حَدَّثَنِى سَيِّدِى أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ

« مَنْ دَعَا لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ ».

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், “ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!என்று கூறுகிறார். ( நூல்: முஸ்லிம் ) 

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِى سُلَيْمَانَ عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ صَفْوَانَ – وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ

وَكَانَتْ تَحْتَهُ الدَّرْدَاءُ قَالَ قَدِمْتُ الشَّامَ فَأَتَيْتُ أَبَا الدَّرْدَاءِ فِى مَنْزِلِهِ فَلَمْ أَجِدْهُ وَوَجَدْتُ أُمَّ الدَّرْدَاءِ فَقَالَتْ أَتُرِيدُ الْحَجَّ الْعَامَ فَقُلْتُ نَعَمْ. قَالَتْ فَادْعُ اللَّهَ لَنَا بِخَيْرٍ فَإِنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ يَقُولُ « دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لأَخِيهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ ».

ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவி யின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், “இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?” என்று கேட்டார்.

நான் ஆம்என்றேன். அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார்.

அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும் போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், “இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்என்று கூறினார்கள்.        ( நூல்: முஸ்லிம் )                                            

தொழுகைக்கு முந்தி வருபவர்... வானவரின் துஆவைப் பெறுகிறார்..

முதல் வரிசையில் இருப்பவர்களின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகள் இறைவனிடம் (அவர்களுக்காக) அருள் வேண்டுகிறார்கள் என நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார் கள். இதை பராஃ பின் ஆஸிப் அறிவிக்கின்றார்கள்.

நூல்கள்: அஹ்மத்(17878), நஸயீ (642)

மேற்கூறப்பட்ட அனைத்திலும் நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம். மலக்குமார்களின துஆவை பெற்று இறைவனின் மன்னிப்பையும் அருளையும் பெறுவோமாக!

புனிதம் நிறைந்த இந்த லைலத்துல் கத்ர் இரவின் அனைத்து ஃகைர் பரக்காத்துகளையும் நிரப்பமாக பெற்றவர்களில் உங்களையும், என்னையும் இணைத்தருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

 

2 comments:

  1. நான்காவது விஷயம்?

    ReplyDelete
    Replies
    1. இறைவன் புறத்திலிருந்து கிடைக்கப் பெறும் ஸலாம். இது நமது ப்ளாக்கில் தனி தலைப்பாக உள்ளது.

      ஸலாமத்தான வாழ்வைத் தந்தருள்வாய் யாஅல்லாஹ்!!

      https://vellimedaiplus.blogspot.com/2021/03/1.html?m=1

      Delete