Thursday, 14 April 2022

ஜகாத் – வாங்கும் கரங்களை வழங்கும் கரங்களாக உயர்த்தும் திட்டம்!!!

 

ஜகாத் – வாங்கும் கரங்களை வழங்கும் கரங்களாக உயர்த்தும் திட்டம்!!!



அல்லாஹ்வின் மகத்தான கருணையும், அருளும், மன்னிப்பும் பிரவாகமெடுத்துப் பாய்ந்தோடும் அருள் நிறைந்த ரமழான் மாதத்தின் இரண்டாவது பத்தின் முதல் ஜும்ஆவில் நாம் வீற்றிருக்கின்றோம்.

ரமழானின் முதல் பத்து நாட்களில் அல்லாஹ்விடம் அவனது அருளையும், இரண்டாம் பத்தில் அல்லாஹ்விடம் அவனது மேலான மன்னிப்பையும், மூன்றாம் பத்தில் கொடிய நரகிலிருந்து அவனிடம் விடுதலையையும் கேட்டுப் பிரார்த்திக்குமாறு மாநபி {ஸல்} அவர்கள் நமக்கு வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எல்லையில்லா அவனது அருளையும், மன்னிப்பையும் உங்களுக்கும், எனக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், என் குடும்பத்தாருக்கும் ஈருலகத்திலும் நிரப்பமாக வழங்கியருள்வானாக!

இஸ்லாம் கடமையாக்கி இருக்கும் ஐந்து கடமைகளும் தனித்தனியானது. ஒவ்வொன்றும் தனித்தன்மைகளோடு கடமையாக்கப்பட்டது. எனவே, ஒவ்வொன்றும் எவ்வாறு கடமையாக்கப்பட்டு, எவ்வாறு செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதோ அதுபோன்றே செயல்படுத்தப் படுத்தப்பட வேண்டும்.

ஒரு கடமையை வேறொறு கடமையோடு ஒப்பீடு செய்து, அதைப் போன்றுதான் இதனையும் செய்ய வேண்டும் என்று கூறுவது அறிவீனமாகும்." என இமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் காலத்திற்கு முன் வாழ்ந்த ஹதீஸ் கலை அறிஞரும், வல்லுனரும் இஸ்லாமிய பொருளாதார நிபுணருமான அபூ உபைத் (ரஹ்) அவர்கள் 'அல் அம்வால்' என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இதை இங்கு குறிப்பிடக் காரணம் இன்று நம்மில் ஒரு பிரிவினர் ஹஜ்ஜைப் போன்று ஆயுளில் ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதுமானது என்று பிதற்றி வருகின்றனர். அது பிழையான கருத்தும் வழிகேடான கொள்கையும் ஆகும்.

ஏனெனில், பெருமானார் {ஸல்} அவர்களின் காலந்தொட்டு, அவர்களின் காலத்திற்கு பிந்தைய கலீஃபாக்களின் ஆட்சியைத்தொடர்ந்து 1400 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தி வருகிற ஒரு நடைமுறைய இல்லையென்று துணிந்து சொல்ல வேண்டுமானால் அது பிழையான நிலைப்பாடாகவும், வழிகேடான கொள்கையுமாகவே இருக்க வேண்டும். இது போன்ற நஜீஸான, வழிகேடான கொள்கையில் இருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்து அருள் புரிவானாக! ஆமீன்.

இன்று இந்த உம்மத்தில் சிலர் எவ்வளவு நன்கொடை வேண்டுமானாலும் கேட்டு என் வீட்டுக்கு வாருங்கள். அள்ளித்தருகின்றேன். ஆனால், தொழுகைக்கு மட்டும் என்னை கூப்பிடாதீர்கள் என்று சொல்வது போல எந்த நிதியுதவியும் செய்ய தயாராக இருக்கின்றார்கள். ஆனால், தொழுகை விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றார்கள். இதற்கு நேர் முரணாக இன்னும் சிலர் தொழுவதென்னவோ முதல் ஸஃப்ஃபில் தான், முன் பின் ஸுன்னத் போக உபரியான எந்த தொழுகையையும் விடுவதில்லை. ஆனால், கணக்குப் பார்த்து ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால் காத தூரம் சென்று விடுகின்றார்கள்.

இந்த இரண்டு வகையான சிந்தனை கொண்ட மனிதர்களும் ஒரு விஷயத்தை ஆழ் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும் நம் ஷரீஅத்தில் தொழுகையும் ஜகாத்தும் பிரிக்க முடியாத வணக்கமாகும். 

திருக்குர்ஆனில் சுமார் 27 இடங்களில் தொழுகையையும் ஜகாத்தையும் இணைத்தே அல்லாஹ் கூறுகிறான். சுமார் 30 இடங்களில் ஸகாத்தை தனியாக கூறுகிறான்.  சூரா தவ்பா முழுவதும் ஸகாத் பற்றிய வலியுறுத்தல் அதிகமாக கூறப்படுகிறது.

 மாத்திரமல்ல, தொழுகையை நிறைவேற்றுவதும், ஜகாத்தை வழங்குவதும் தான் மார்க்க அடிப்படையிலான சகோதரத்துவ உறவின் அளவுகோல் என்றும், மஸ்ஜித்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளின் உயர்பண்புகளில் ஒன்றாக அல்லாஹ் அடையாளப்படுத்துவதும் தொழுகையை நிறைவேற்றுவதும், ஜகாத்தை வழங்குவதும் தான். ஸகாத் கடமையாக்கப்பட்டது தொடர்பான வசனமும் இந்த அத்தியாயத்தில் தான் இடம் பெற்றுள்ளது.

 وقد قال عبد الله بن عباس رضي الله عنهما

 ثلاث مقرونة بثلاث، لا تقبل واحدة منهن إلا بالأخرى

 لا تقبل طاعة الله إلا بطاعة رسوله، ولا تقبل الصلاة إلا بأداء الزكاة، ولا يقبل الله شكره إلا بشكر الوالدين

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்” “அல்லாஹ் மூன்று அமல்களை மூன்று அமல்களுடன் இணைத்தே கூறுகின்றான். எந்த அமலை எந்த அமலுடன் சேர்த்து கூறுகிறானோ அதில் ஒன்றை செய்து மற்றொன்றை செய்யாமல் விட்டு விட்டால் செய்த அந்த அமலையும் அல்லாஹ் கபூல் செய்யமாட்டான்.

முதலாவது:

قُلْ أَطِيعُوا اللَّـهَ وَأَطِيعُوا الرَّسُولَ

அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்பபடியுங்கள் என்று கூறுகிறான்.

ஒருவர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவனின் ரஸூலுக்கு கட்டுப்பட வில்லையானால் அல்லாஹ் அவரை ஏற்க மாட்டான்.

இரண்டாவது:

أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ

நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்று கூறுகிறான்.

ஒருவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார். ஆனால் தன் பெற்றோருக்கு நன்றி செலுத்தவில்லையானால் அவரையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

மூன்றாவது:

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ

தொழுகையைக் நிலை நிறுத்துங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; என்று கூறுகிறான்.

ஒருவர் தொழுகையை நிறைவேற்றுகிறார். ஆனால் ஜகாத் கொடுப்பதில்லை என்றால் அவரின் தொழுகையையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று கூறுகிறார்கள்.

எனவே, ஆரம்பமாக ஜகாத் என்பதும் தொழுகை என்பதும் ஒரு இறை நம்பிக்கையாளனின் வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அமல் – வணக்கம் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.

ஏழு பண்புள்ளவரின் மீதே ஜகாத் கடமை..

அடுத்து ஜகாத் என்பது தொழுகை போன்று நோன்பு போன்று அனைவரின் மீது கடமை என்று நாம் விளங்கிக் கொள்ளக்கூடாது.

ஜகாத் ஒரு இறைநம்பிக்கையாளருக்கு கடமையாகுவதற்கு சில தகுதிகளை இஸ்லாம் வரையறுத்துள்ளது. அவை: 1. இறைநம்பிக்கையாளராக இருக்க வேண்டும், 2. சுதந்திரமானவராக இருக்க வேண்டும். 3. புத்தி சுவாதீனமுள்ளவராக இருக்க வேண்டும். 4. பருவ வயதை அடைந்திருக்க வேண்டும். 5. 87 கிராம் தங்கமோ அல்லது 612 கிராம் வெள்ளியோ இருக்க வேண்டும். பணமாக இருந்தால் 612 கிராம் வெள்ளியின் மதிப்பில் ரொக்கம் இருக்க வேண்டும். 6. பொருளின் மீது முழு அதிகாரம் படைத்தவராக இருக்க வேண்டும். 7. இத்தகைய பொருளாதாரம் குறைவில்லாமல் ஒரு வருடம் முழுவதும் பரிபூரணமாக சேமிப்பில் இருக்க வேண்டும்.

இத்தகைய ஏழு பண்புகளும் ஒருவரிடம் பரிபூரணமாக அமைந்து விட்டால், அவர் ஆண்டுக்கு ஒருமுறை ரமலான் மாதமோ, அல்லது வேறு மாதங்களிலோ கடமையான ஜகாத்தை நூற்றுக்கு இரண்டரை சதவீதம் இறைவன் சுட்டிக்காட்டும் எட்டு வகையினருக்கு வழங்கிட வேண்டும்.

எட்டு வகையினர் யார்?

ஸகாத் எனும் நிதிகள் 1) வறியவர்கள், 2) ஏழைகள், 3) நிதியை வசூலிக்கும் ஊழியர்கள், 4) எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அத்தகைய (சகோதர சமுதாயத்த)வர்கள், 5) அடிமைகள் விடுதலை செய்வதற்கும், 6) கடனாளிகள், 7) இறைவனின் பாதையில் (அறப்போராட்டத்தில்) உள்ளவர்கள், 8) வழிப் போக்கர்கள் ஆகியோருக்கு உரியவை. இது இறைவன் விதித்த கடமையாகும். இறைவன் (யாவும்) அறிபவன்; மிக்க ஞானமிக்கவன்’.                                              ( அல்குர்ஆன்: 9: 60 )

ரமழான் மாதத்தில் தான் கொடுக்க வேண்டுமா?..

பொதுவாக, ரமழான்  மாதத்தில்தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்து ஜகாத் வழங்குபவர்களிடையே நிலவுகின்றது. ரமழானில் ஸதகா’ வழங்குவது வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

எனினும், ஜகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும் என்ற நிபந்தனை தான் இருக்கின்றது. ஒரு வருட பூர்த்தி என்ற வருடக் கணக்குப் பார்ப்பதற்கு முஸ்லிம்கள் பிறைக் கணக்கின் அடிப்படையில் சந்திர கணக்கு அடிப்படையில்தான் கணிக்க வேண்டும். மாறாக, சூரிய அடிப்படையிலான கணிப்புகளை செய்தால் நாட்கள் வேறுபடும். எப்படி பிறை பார்த்து நோன்பு வைக்கிறோமோ, எப்படி பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுகிறோமோ அது போன்று சந்திர கணக்கின் படி ஒரு வருடத்தைக் கணக்கிட்டு ஜகாத் வழங்க வேண்டும்.

ரமழான் மாதத்தை ஜகாத் வழங்குவதற்கு முன்னோர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் ரமழான் மாதத்தில் செய்யப்படும் நன்மைகளுக்கும், அமல்களுக்கும் இறைவனிடத்தில் பன்மடங்கு நன்மைகள் கிடைக்கும் என்கிற அடிப்படையின் காரணமாகவே.

மேலும் பொதுவாக செல்வந்தர்கள் பலர் ரமழான் மாதத்தில் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று நோன்பு மற்றும் அமல்களில் ஈடுபட வேண்டும் என விரும்புவார்கள்.  ஜகாத்தை தங்களின் கரங்களால் வழங்க வேண்டுமென்று விரும்புவோர்களும் உண்டு.  இந்தக் காரணத்தினாலும் ஜகாத் வழங்குவதற்கு ரமழான் மாதத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் ரமழானில்தான் வழங்க வேண்டுமென்பது மார்க்கச்  சட்டமல்ல. அந்தந்த தேவைகளுக்கு சூழ்நிலைகளுக்கு  ஏற்றபடி ஜகாத்தை வழங்கலாம். உதாரணமாக மார்க்கக் கல்விப் பணிகளுக்கு உதவ வேண்டும், ஏழை மாணவர்களின் கல்விப் பணிகளுக்கு உதவ வேண்டும், புதிதாக இஸ்லாத்துக்கு வந்த சகோதரர்களுக்கு உதவ வேண்டும் என்றால் ரமழான் வரும் வரை காத்திருக்க வேண்டும். எனவே, தேவையில் உதவுவதே உண்மையான உதவி என்பதையும் கவனத்தில் நிறுத்த வேண்டும்.

ஜகாத் கொடுப்பவர்களின் நோக்கம் தூய்மையாக இருக்க வேண்டும்...

ஏனெனில், ஜகாத் என்பது ஒரு அமல். நான் பணம் இருக்கின்றது கொடுக்கிறேன் எனக்கு ஜகாத் கடமை ஆதலால் கொடுக்கின்றேன் என்ற எண்ணத்தை விட மார்க்கம் வலியுறுத்தியுள்ள அமலின் அடிப்படையில் நான் நிறை வேற்றுகிறேன். இதை அல்லாஹ் பூரணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனோ நிலையில்  ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் தற்பெறுமை, முகஸ்துதி, பெறுமை போன்ற தீய எண்ணம் ஏற்படாமல் இந்த சிந்தனை ஜகாத் கொடுக்கக் கூடியவர்களைக் காக்கும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَعْطَيْتُمْ الزَّكَاةَ فَلَا تَنْسَوْا ثَوَابَهَا أَنْ تَقُولُوا اللَّهُمَّ اجْعَلْهَا مَغْنَمًا وَلَا تَجْعَلْهَا مَغْرَمًا – إبن ماجة

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நீங்கள் ஜகாத்தை வழங்கினால் அதற்கு இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் நன்மைகளை மறந்து விடாதீர்கள். எனவே, அதனைக் கவனத்தில் கொண்டு “அல்லாஹ்வே! நான் வழங்கிய இந்த ஜகாத்தை பல்கிப் பெருகுவதாக ஆக்குவாயாக! நான் வழங்கிய இந்த ஜகாத்தை ஒன்றுமில்லாததாக ஆக்கி விடாதே!” என்று பிரார்த்தனை செய்யுங்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ஜகாத்தை வாங்கும் ஏழைகளின் எண்ணம் சிறப்பானதாக இருக்க வேண்டும்..

அவருக்கு கடமை அதான் நம்மை தேடிக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போகிறார் என்று கருதாமல், தந்த பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு முகத்தில் ஒரு சிரிப்போடு நிறுத்திக் கொள்ளாமல் அவருக்காக, அவரின் பொருளாதார வளத்திற்காக துஆச் செய்ய வேண்டும். ஏனெனில், மார்க்கப் போர் ஒன்றிற்காக நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபி {ஸல்} அவர்களிடம் த்ம் பொருளாதரத்தைக் கொண்டு வந்து கொடுத்த நபித்தோழர் ஒருவருக்காக மாநபி {ஸல்} துஆச் செய்தார்கள் என்பதைப் பார்க்கின்றோம்.


فبادر عبد الرحمن بن عوف إلى منزله وعاد مسرعاً وقال : يا رسول الله عندي أربعة آلاف 
ألفان منها أقرضتهما ربي وألفان تركتهما لعيالي .
فقال الرسول صلوات الله وسلامه عليه :
(بارك الله لك فيما أعطيت ...
وبارك الله لك فيما أمسكت ...)

ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யுத்த களத்திற்குச் செல்ல  சன்மார்க்க பணிக்காக பொருளுதவி செய்யுமாறு ஆர்வமூட்டிக் கொண்டிருந்த போது  ஒவ்வொரு நபித்தோழர்களும் தமது பங்களிப்பை நபிகளாரிடம் வந்து கொடுத்தார்கள்.

அப்போது, அப்துர்ரஹ்மான்  இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள்  நபி {ஸல்} அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே!என் பொருளாதாரத்தில் சரி  பாதியை இதோ அல்லாஹ்விற்காக வைத்துள்ளேன் என்று கூறி கொடுத்தார்கள்.  அதைக் கேட்ட நபிகளார் “நீர் அல்லாஹ்விற்காக அர்ப்பணித்ததிலும்,  உம்  குடும்பத்திற்காக எடுத்து வைத்துக்கொண்டதிலும் அல்லாஹ் பரக்கத் - அபிவிருத்தியை நல்குவானாக! என துஆச் செய்தார்கள்.( நூல்: உஸ்துல்  காபா,  பாகம்: 1, பக்கம்:523 அல்-இஸாபா, பாகம்:1, பக்கம்:1559 )

வாங்கும் நிலையில் இருந்து நாமும் நாளு பேருக்கு இது போன்று கொடுக்க வேண்டும் அல்லது நாளு காசு சம்பாதித்துச் சேமித்து இது போன்று ஜகாத், தான தர்மமெல்லாம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொள்ள வேண்டும். மேலும், அதற்காக அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும்.

رواه حكيم بن حزام: (سَأَلْتُ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ فأعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فأعْطَانِي، ثُمَّ قالَ لِي: يا حَكِيمُ، إنَّ هذا المَالَ خَضِرٌ حُلْوٌ، فمَن أَخَذَهُ بسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ له فِيهِ، ومَن أَخَذَهُ بإشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ له فِيهِ، وكانَ كَالَّذِي يَأْكُلُ ولَا يَشْبَعُ، واليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى، قالَ حَكِيمٌ: فَقُلتُ: يا رَسولَ اللَّهِ، والذي بَعَثَكَ بالحَقِّ، لا أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شيئًا حتَّى أُفَارِقَ الدُّنْيَا)


ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி)* அறிவித்தார்கள்;நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (தருமம்) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும் நபி அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘ஹகீமே! இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். இதை தாராள மனத்துடன் (பேராசையின்றி) எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அருள் வளம் (பரக்கத்) வழங்கப்படுகிறது. இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேல் கை, கீழ்க் கையை விடச் சிறந்ததாகும்என்று கூறினார்கள்.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! சத்திய மார்க்கத்துடன் தங்களை அனுப்பியவன் மீது ஆணையாக! தங்களுக்குப் பின் எவரிடமும் எதையும் நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும் வரை கேட்க மாட்டேன்என்று கூறினேன்.

فكان أبو بكر رضي الله عنه يَدْعُو حكيمًا إلى العطاء، فيأبى أن يَقْبَلَه منه، ثمَّ إنَّ عُمَرَ رضي الله عنه دَعَاه ليُعطيَهُ، فأبى أن يَقْبَلَ منه شيئًا، فقال عمر: إني أُشْهدُكُم يا مَعْشَرَ المسلمين على حكيم، أنِّي أَعْرِضُ عليه حَقَّهُ من هذا الفَيْء فيأبى أن يأْخُذَه، فلم يَرْزَأْ حكيمٌ أحدًا من الناس بعد رسول الله صلى الله عليه وسلم حتى تُوفي

அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்: ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அவர்களை அபூ பக்ர்(ரலி) அன்பளிப்புத் தருவதற்காக அழைத்தார்கள். அவர்களிடமிருந்து எதையும் ஏற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டார். பிறகு, உமர்(ரலி) அவருக்கு (அன்பளிப்புகள் சிலவற்றைக்) கொடுப்பதற்காக அழைத்தார்கள். அதையும் ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

எனவே, உமர்(ரலி) (மக்களிடையே), ‘முஸ்லிம்களே! இந்த (ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வங்களிலிருந்து அல்லாஹ் ஒதுக்கிய அவரின் உரிமையை அவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தேன். ஆனால், அதை எடுத்துக் கொள்ள அவர் மறுத்துவிட்டார்என்று அறிவித்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த மனிதரிடமும், ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி), தாம் மரணிக்கும் வரை (எதுவும்) கேட்கவில்லை. அல்லாஹ் அவரின் மீது கருணை புரிவானாக! ( நூல்: புகாரி எண் 2750 )

சற்றேரக்குறைய 120 வயது வரை வாழ்ந்தார்கள். தங்களின் வாழ்க்கையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தாம் இஸ்லாத்திற்கு தாமதமாக வந்ததை நினைத்து கண்ணீர் வடிப்பார்கள்.

அப்படி ஒரு நாள் அவர்கள் அழுது கொண்டிருந்த போது அவர்களின் மகனார் தந்தையே! ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கவர், ”என் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் எனக்கு முன்னாலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நன்மையால் முந்திக் கொண்டு விட்டார்கள். நான் அவர்களுடைய அந்தஸ்துக்கு அருகில் கூட செல்லமுடியாதே என நினைத்து அழுகின்றேன்” என்றார்களாம்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஜாஹிலிய்யாவிலும், 60 ஆண்டுகள் இஸ்லாத்திலும் வாழ்ந்த அவர்கள் மிகக் கடுமையாக போட்டி போட்டு இஸ்லாமிய வாழ்க்கையில் இபாதத்கள் செய்தார்கள்.

ஒருமுறை ஹஜ் செய்ய வரும் போது தன்னுடன் 100 ஒட்டகைகளை அழைத்து வந்து, அவைகளை குர்பானி கொடுத்து ஏழைகளுக்கு வினியோகித்தார்களாம்.

மற்றொரு முறை ஹஜ் செய்ய வரும்போது தன்னுடன் நூறு அடிமைகளை அழைத்து வந்தார்கள். அவர்களின் கழுத்துகளில் அல்லாஹ்விற்காக ஹகீம் இப்னு ஹிஸாம் அவர்களால் விடுவிக்கப்படுவர்கள்” என வெள்ளி யால் ஆன பட்டைகளில் பொறிக்கப்பட்டு இருந்ததாம். பின்னர் அவர்களை விடுதலை செய்தார்கள். ( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபதில் அஸ்ஹாப், பாகம்:1, பக்கம்:184,185 )

ஆனால், இன்றோ ஜகாத் வாங்குபவர்களில் சிலர் தலைமுறை தலைமுறையாக ஜகாத் வாங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். தரித்திரம் பிடித்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வாங்கிக் கொண்டே இருக்கக் கூடாது. இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் கொடுக்கும் நிலைக்கு நாம் உயர வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

ஜகாத் வழங்குபவருக்கு ஏற்படும் நன்மைகள்

1 .அல்லாஹ் கொடுத்த பொருளுக்கு நன்றி செலுத்தியதன் நன்மையையும், அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிய நன்மையையும் பெறுகின்றார்.

ஆகவே, அல்லாஹ் குர்ஆனில் நன்றி செலுத்தியவருக்கும், ஜகாத்தை நிறைவேற்றியவருக்கும் என்னென்ன நன்மைகளையும், நலவுகளையும் வழங்குவதாக சோபனமாக கூறியுள்ளானோ அந்த சோபனங்கள் அனைத்திற்கும் உரியவராகின்றார்.

2. அவரின் பொருளாதாரம் பாதுகாப்பு பெறுகின்றது.

وعَن الحسن بنِ عليّ رضي الله عنه قال: قالَ رسول الله : ((حصِّنوا أموالَكم بالزّكاةِ، وداووا مرضَاكم بالصّدقة، واستقبِلوا أمواجَ البلاءِ بالدعاء والتضرُّع)) رواه الطبرانيّ والبيهقيّ

ஹஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்களின் பொருட்களை ஜகாத்தைக் கொண்டு பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களின் நோய்களுக்கு ஸதகாவை கொண்டு மருந்திடுங்கள். உங்களின் சோதனைகளை துஆவின் மூலம் சரி செய்யுங்கள் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ரானீ )

عن جابر رضي الله عنه قال: قال رجل: يا رسول اللهِ، أرأيتَ إن أدَّى الرجل زكاةَ ماله، فقال رسول الله : ((مَن أدَّى زكاةَ ماله فقد ذهبَ عنه شرُّه)) رواه الحاكم والطبرانيّ في الأوسط واللفظ له وابن خزَيمة.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “தன் பொருளுக்கான ஸகாத்தை நிறைவேற்றிய ஒரு மனிதர் பற்றி உங்களின் அபிப்ராயம் என்ன? என நபி {ஸல்} அவர்களிடம் வினவப்பட்டபோது- தன் பொருளாதாரத்திற்கான ஜகாத்தை செலுத்தியவர் அந்த பொருளை விட்டும் தீங்கு போய்விட்டது” என்று பதில் கூறினார்கள். ( நூல்: இப்னு குஸைமா )

3. அவரின் பொருளாதாரமும், அவரும் தூய்மை அடைகின்றார்கள்.

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَاللَّـهُ سَمِيعٌ عَلِيمٌ

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து ஸகாத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.        ( அல்குர்ஆன்: 9: 103 )

4. மறுமையின் தண்டனையிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றார்.

وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّـهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

يَوْمَ يُحْمَىٰ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَىٰ بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ ۖ هَـٰذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.

(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) "இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்). ( அல்குர்ஆன்: 9: 34, 35 )

ஜகாத்தின் இலக்கை நோக்கி இந்த சமூகம் எப்போது பயணிக்கப் போகின்றது?

இன்று பெரும்பாலான செல்வந்தர்கள் தனியாகவே தங்களின் ஜகாத்தை நிறைவேற்றி வருகின்றார்கள். ஆனால், இதன் மூலம் ஜகாத் வாங்குவோரின் எண்ணிக்கை நிச்சயம் குறையாது. மேலும், தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை நோக்கி அவர்களால் நகரவும் முடியாது. ஜகாத் கொடுக்கும் நிலைக்கு தங்களின் தரத்தை அவர்களால் உயர்த்தவும் முடியாது.

ஏனெனில், ஒரு ஊரின், ஒரு மஹல்லாவின் ஜகாத் கொடுப்பவர்கள் ஒன்றிணைந்து அவர்கள் வசிக்கும் பகுதியின் ஏழைகளைக் கணக்கிட்டு அவர்களுக்கு ஜகாத்தை வழங்கி வந்தால் ஓரிரு வருடங்களில் அந்த ஏழைகளின் நிலை மாறிடும் வாய்ப்பு இருக்கின்றது. அவர்கள் ஏற்றம் பெரும் சூழலும் இருக்கின்றது.

இன்று தமிழகத்தில் 6000 க்கும் மேற்பட்ட மஹல்லாக்கள் (பள்ளிவாசல்களைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் குடியிருப்புகள்) உள்ளன. வறுமையில் வாடும் பலர் தொழில் தொடங்குவது, மருத்துவம் பார்ப்பது, கல்விக்குச் செலவு செய்வது, திருமணம் நடத்துவது போன்ற காரணங்களுக்காக வட்டிக்கு கடன் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றார்கள். இது போன்ற இஸ்லாம் தடுத்துள்ள வட்டியின் தீமையில் இருந்து அவர்களைக் காக்கவும், அவர்களின் தேவைகள் நிறைவேற்றப் படவும் ஜகாத் கொடுப்பவர்கள் ஒண்றினைந்து பைத்துல்மால் அமைப்பை நிறுவி அதன் மூலம் மஹல்லாவின் ஏழைகளை கணக்கிட்டு அந்த அமைப்பின் மூலம் ஜகாத் தொகையை வழங்கி வந்தால் வறுமை இல்லா, ஏழைகள் இல்லா, வழங்கும் கரங்கள் மட்டுமே நிறைந்த ஊராக, மஹல்லாவாக மாற்றம் பெரும்.

وكذلك نفَّذ معاذ وصية النبي -صلى الله عليه وسلم-، ففرّق زكاة أهل اليمن في المستحقين من أهل اليمن، بل فرّق زكاة كل إقليم في المحتاجين منه خاصة

நபி {ஸல்} அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமன் தேசத்துக்கு ஆளுனராக அனுப்பி வைக்கும்போது செய்த உபதேசங்களில் ஒன்று:

அந்நகரத்தின் செல்வந்தர்களிடமிருந்து ஜகாத் வசூல் செய்து அந்நகரத்தின் ஏழைகளுக்கு கொடுத்து அவர்களின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றார்கள்.

முஆத் (ரலி) அவர்களின் அண்ணலாரின் உபதேசத்தை அவர்களின் காலத்துக்கு பின்னும் அமல்படுத்தி வந்தார்கள். யமன் தேசத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள தேவையுள்ளவர்களுக்கு ஜகாத் பங்கு வைத்து கொடுக்கப்படும். இப்படி அவர்கள் செய்ததால் யமனின் நிலை எப்படி மாறியது என வரலாறு சான்றழிப்பதைப் பாருங்கள்.
روى أبو عبيد: أن معاذ بن جبل لم يزل بالجند (الجند موضع باليمن). إذ بعثه رسول الله -صلى الله عليه وسلم- إلى اليمن حتى مات النبي -صلى الله عليه وسلم- وأبو بكر، ثم قدم على عمر، فرده على ما كان عليه، فبعث إليه معاذ بثلث صدقة الناس، فأنكر ذلك عمر، وقال: لم أبعثك جابيًا ولا آخذ جزية، ولكن بعثتك لتأخذ من أغنياء الناس فترد على فقرائهم، فقال معاذ: ما بعثت إليك بشيء وأنا أجد أحدًا يأخذه مني - فلما كان العام الثاني بعث إليه شطر الصدقة، فتراجعا بمثل ذلك، فلما كان العام الثالث بعث إليه بها كلها، فراجعه عمر بمثل ما راجعه قبل ذلك، فقال معاذ: ما وجدتُ أحدًا يأخذ مني شيئًا (نفس المرجع ص596،

உமர் (ரலி) ஆட்சி காலத்தில் முஆத் (ரலி) அவர்கள் யமன் தேசத்தில் வசூல் செய்யப்பட்ட ஜகாத்தில் மூன்றில் ஒரு பகுதியை மதீனாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இது உமர் ரலி அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் முஆத் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், ”உம்மை ஜகாத் வசூல் செய்து மதீனாவுக்கு அனுப்பவோ,அல்லது ஜிஸ்யா வரியை வசூல் செய்து அனுப்பவோ உம்மை நான் ஆளுனராக தேர்வு செய்யவில்லை. அங்கு வசூல் செய்த ஜகாத் நிதியை அங்குள்ள ஏழைகளுக்கு பங்கு வைப்பதே மிகவும் பொருத்தமாகும்” என்றார்கள்.

நான் இங்குள்ள ஏழைகளுக்கு கொடுக்காமல் மதீனாவுக்கு அனுப்பி விட்டேன் என்று தாங்கள் தவறாக எண்ணிக்கொண்டீர். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் இங்கு ஜகாத்தைப் பெருவதற்கு தகுதியான நபர் யாரும் இல்லை என்றார்கள். மறு வருடம் ஸகாத் நிதியில் பாதியை அனுப்பினார்கள்.மூன்றாம் ஆண்டு முழு தொகையையும் மதீனாவுக்கு அனுப்பி வைத்து எமனில் ஏழைகள் இல்லை என்று கூறினார்கள்.

قال البيهقي : قد وقعت الثالثة في زمن عمر بن عبد العزيز ، ثم أخرج عن عبد الرحمن بن زيد بن الخطاب قال : إنما ولِيَ عمر بن عبد العزيز سنتين ونصفاً ، والله ما مات عمر بن عبد العزيز حتى جعل الرجل يأتينا بالمال العظيم فيقول : اجعلوا هذا حيث ترون في الفقراء ، فما يبرح حتى يرجع بماله ، نتذكر من يضعه فيهم فلا نجد فيرجع بماله

இரண்டரை ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் வஃபாத்தாகும் போது எங்களில் ஒவ்வொருவரும் ஒரு பெரும் தொகைக்கு சொந்தமாக இருந்தோம். ஏழைகள் இல்லாத அரபுலகத்தை அன்று நாங்கள் கண்டோம். ஒருவர் தன் வீட்டை விட்டு ஜகாத் பணத்துடன் வருவார். அதை வாங்கும் ஆளின்றி அத்துடன் திரும்பி செல்வார் என அப்துர்ரஹ்மான் இப்னு ஜைத் (ரஹ்) அவர்கள் கூறுவதாக இமாம் பைஹக்கீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஆகவே, ஜகாத் எனும் இஸ்லாமியக் கடமையை, அதன் இலக்கை, அதன் நோக்கைப் புரிந்து, அதை செலுத்துவதற்கான முறைப்படி செலுத்தி, வாங்கும் கரங்கள் இல்லா வழங்கும் கரங்கள் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவோம்!

ஜகாத் – அதன் இலக்கு வாங்குவோர் நிறைந்திருப்பது அல்ல. வழங்குவோர் பெருகியிருப்பதாகும்.

ஜகாத் – இந்த உம்மத்தின் உயர்வு! இஸ்லாத்தின் பெருமை! பரந்து விரிந்த இப்பாருலகிற்கான பொருளாதாரச் சீர்திருத்தம்!!

 

3 comments:

  1. மாஷா அல்லா நிறைவான கட்டுரை மிக அருமையாக உள்ளது அல்லாஹுத்தஆலா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பரக்கத் செய்வானாக உங்கள் கல்வியில் ஏயும் அல்லாஹுத்தஆலா பரக்கத் பொருந்தியதாக ஆக்கி அருள் புரிவானாக ஆனேன்

    ReplyDelete
  2. Masha Allah.Very informative and beneficial at appropriate time.jazakkallah Khairan Moulana.

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ். ஜஸாகுமுல்லாஹ் உஸ்தாத்.
    ஜகாத் குறித்து விரிவான விளக்கம்.

    ReplyDelete