Monday 8 April 2024

ஈதுல் ஃபித்ர் - ஈகைத் திருநாள் சிந்தனை - (2024) பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டு என்ன செய்து விடும்!?

 

ஈதுல் ஃபித்ர்  - ஈகைத் திருநாள் சிந்தனை - (2024)

பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டு என்ன செய்து விடும்!?



இந்த ஆண்டு ரமழானின் மத்திய நாட்களில் உலக முஸ்லிம்களின் உள்ளத்தை உலுக்கிய வலி மிகுந்த ஒரு வார்த்தை உண்டு.

كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِنْدَهَا رِزْقًا قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌

அந்த வார்த்தை புறப்பட்ட இடம் மர்யமே! நான் பார்க்கும் போதெல்லாம் உயர்ந்த உணவுகளை உண்கிறாயே! இந்த உணவுகள் உனக்கு எங்கிருந்து கிடைக்கிறது? யார் தருகிறார்கள் என்று ஜகரிய்யா (அலை) கேட்க, இந்த உணவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து எனக்கு கிடைக்கிறது" என்று மர்யம் (அலை) அவர்கள் சொன்னார்களே" அது போன்றதொரு மிஹ்ராபின் அருகிலிருந்து "உலக முஸ்லிம்களின் உள்ளத்தை உலுக்கிய அந்த வார்த்தை புறப்பட்டது.

سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌

"நம் அத்தாட்சிகளை குவித்து வைத்திருக்கின்றோமே! நம்முடைய அருள் வளங்களால் சூழ்ந்திருக்கின்றதே அந்த பூமிக்கு தன்னுடைய அடியாரை இரவில் அழைத்து வந்தானே! அந்த இறைவன் மிகத்தூய்மையானவன்" என்று அல்லாஹ் அடையாளப் படுத்தி கூறுகின்றானே அந்த பரிசுத்த பூமியில் இருந்து அந்த வார்த்தை புறப்பட்டு வந்திருக்கிறது.

ஆம்! ஃபலஸ்தீன பூமியில் இருந்து, இஸ்ரேலிய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, போரால் சின்னாபின்னமாகி போகியிருக்கும் புண்ணிய பூமியான பைத்துல் முகத்தஸை சுமந்திருக்கும் காஸாவிலிருந்து.

வலி மிகுந்த அந்த வார்த்தை என்ன வார்த்தை? உள்ளத்தை உலுக்கிய அந்த வார்த்தை என்ன வார்த்தை?

”அல்லாஹும்ம இன்னீ ஜூஇன் ஃப அத்இம்னீ - யாஅல்லாஹ்! நான் பசியோடு இருக்கின்றேன்! எனக்கு உணவளிப்பாயாக!!

காஸாவின் இமாம் தமது துஆவில் அழுது கொண்டு தழு தழுத்த குரலில் அல்லாஹ்விடம் முறையிட்ட அந்த வார்த்தையை சமூக ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து கொண்டோம்!

பசி வலியது! பசியால் ஏற்படும் வேதனைகள் கொடியது!

பசி பண்பானவர்களை பக்குவப்படுத்தும்! ஈமானிய உள்ளங்களை பண்படுத்தும்!

அதுவே, சாமானிய மக்களை நிலை குலையச் செய்து விடும்! ஈமானிய வாழ்வை உரசிப் பார்த்து விடும்!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மையும் நம் குடும்பத்தார்களையும் பசியிலிருந்து பாதுகாப்பானாக! பசியின் மூலம் சோதிப்பதில் இருந்து நம்மையும் நம் குடும்பத்தார்களையும் காத்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

நாம் வாழும் இந்த உலகில் பல்வேறு வகையான மக்கள் தேவை உடையவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் தேவை இருக்கிறது.

சிலருக்கு கனிவான வார்த்தை, சிலருக்கு அன்பான அடைக்கலம். சிலருக்கு அனுசரணையான பணிவிடை, ஆனால், சமூகத்தின் நிலையோ இன்று வெற்று வார்த்தைகளாகத்தான் இருக்கிறது. களப் பணிகள் குறைவாகவே இருக்கிறது.

அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுவது காலத்தின் கட்டாயமும் அவசியமும் ஆகும்.

ஆரோக்கியமாக இருப்பவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிப்பதும், நல்ல நிலையில் வாழ்பவர்கள் சோதனைகளில் சிக்குண்டவர்களை, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை மறந்து விடுவதும் வேதனையைத் தருகிறது.

ஆனால், இன்றைய நிலையில் இது போன்ற தேவையுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உதவிகள் சென்றடைய வேண்டும்.

இந்த வகையில் மாநபி (ஸல்) அவர்கள் தேவையுடையோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உதவிகளை நான்கு வழிகளில் ஏதேனும் ஒன்றின் வழியாகவோ, அல்லது நான்கு வழிகளின் ஊடாகவோ கொண்டு சேர்க்க வேண்டும் என்று வழிகாட்டி இருப்பதை "முன்மாதிரி வாழ்வியல்" அமைப்பில் வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.

இன்றைய ஈதுல் ஃபித்ர் - ஈகைத் திருநாள் சிந்தனையாக நாம் பெற்றுக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

1. ஆறுதல் வார்த்தைகள் மூலம் அவர்களை அணுக வேண்டும்.

2. சமூகத்தில் தர்ம சிந்தனை உடையவர்களின் கவனத்திற்கு அவர்களை அறியத் தர வேண்டும்.

3. நேரடியாக நாமே அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

4. அவர்களின் துயர் நீங்க அவர்களுக்காக துஆ செய்ய வேண்டும்.

1. ஆறுதல் வார்த்தைகள் மூலம் அவர்களை அணுக வேண்டும்.

இஸ்லாம் ஒரு இறைநம்பிக்கையாளனிடம் இரண்டு பண்புகளை விரும்புகின்றது.

1. தீபுன் நஃப்ஸ் - எல்லா சூழ்நிலைகளையும் மனநிறைவுடன் எதிர் கொள்வது. 

2. தத்யீபுன் நஃப்ஸ் - சிரமமான சூழ்நிலையில் வாழ்பவர்களை எதிர் கொண்டால் அவர்களின் மனதிற்கு ஆறுதல் தரும் விதமாக நடந்து கொள்வது.

يا جابر: مالي أراك منكسراً؟

ஜாபிரே! உன்னை நான் மனம் உடைந்த நிலையில் காண்கிறேனே!?

عن جابر بن عبد الله رضي الله عنهما أنه قال: لقيني رسول الله صلى الله عليه وسلم، فقال لي: « يا جابر: مالي أراك منكسراً؟» قلت: يا رسول الله استشهد أبي قتل يوم أحد، وترك عيالاً وديناً، قال: «أفلا أبشرك بما لقي الله به أباك؟» قلت: بلى يا رسول الله، قال: « ما كلَّم الله أحداً قط إلا من وراء حجاب، وأحيا أباك فكلمه كفاحاً، فقال: يا عبدي تمنَّ عليَّ أعطك؟ قال: يا رب تحييني فأقتل فيك ثانية، قال الرب عز وجل: إنه قد سبق مني أنهم إليها لا يُرجعون » (رواه الترمذي وحسنه الألباني ).

يا أبا أمامة مالي أراك جالساً في المسجد في غير وقت الصلاة؟

அபூ உமாமாவே! தொழுகை அல்லாத நேரத்தில் பள்ளிவாசலில் அமர்திருக்க காண்கிறேனே!?

فقد دخل ذات يوم المسجد ؛ فإذا هو برجل من الأنصار يقال له أبو أمامة رضي الله عنه، فقال: «يا أبا أمامة مالي أراك جالساً في المسجد في غير وقت الصلاة؟»، قال: هموم لزمتني و وديون يا رسول الله، قال: «أفلا أعلمك كلاماً إذا أنت قلته أذهب الله همك وقضى عنك دينك؟ » قلت: بلى يا رسول الله قال: «قل إذا أصبحت و إذا أمسيت: اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعو بك من الجبن والبخل، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال»، قال: ففعلت ذلك، فأذهب الله عز وجل همي، وقضى عني دَيني

வாழ்க்கையில் பிரச்சினைகளை, சிரமங்களை, கஷ்டங்களை சந்தித்து கொண்டிருப்பவர்கள் பிறரிடம் எதிர் பார்ப்பது "ஆறுதல் வார்த்தைகள்" தாம்.

துவக்கமாக நாம் கூறும் ஆறுதல் வார்த்தைகள் அவர்களின் ஆழ்மனதில் இருக்கும் பிரச்சினைகளை அவர்கள் எளிதாக நம்முடன் பகிர்ந்து கொள்வதற்கும், அவர்களின் மன பாரங்களை இறக்கி வைப்பதற்கும் காரணமாக அமையும்.

ஜாபிர் (ரலி) அவர்கள் மாநபி (ஸல்) அவர்களின் அந்த ஆறுதல் வார்த்தையை கேட்டதும் தமது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்கள்.

கடன் வைத்துள்ள நிலையில் மார்க்கப் போராளியாய் ஷஹீதான தமது தந்தையின் மறுமை நிலை என்ன? கடன் குறித்து கடனை வைத்து விட்டு மரணித்து போனவர்கள் குறித்து மாநபி (ஸல்) அவர்கள் கூறிய எச்சரிக்கைகளால் தமது தந்தை பாதிக்கப்பட்டு விடுவாரோ என்று ஜாபிர் (ரலி) அவர்கள் மனமுடைந்து போயிருந்தார்கள்.

தொடர்ந்து மாநபி (ஸல்) அவர்கள், "ஜாபிரே! உமது தந்தையோடு எவ்வித திரையும் இன்றி பேசினான்" என்று அடுத்த கட்ட நகர்வுக்கு ஜாபிர் (ரலி) அவர்களைக் கடத்தினார்கள்.

அபூ உமாமா (ரலி) அவர்கள் மாநபி (ஸல்) அவர்களின் ஆறுதல் வார்த்தைகளை கேட்டதும், அல்லாஹ்வின் தூதரே! இந்த நேரத்தில் என்னை இங்கே வர வைத்தது என் கடன்களும், அந்த கடனை அடைப்பதற்கு வழி இல்லாமல் நான் படும் அவஸ்தைகளால் உண்டான கவலைகளும் தான்" என்று தமது மனதில் இருந்து பேசினார்கள்.

 

அதன் பின்னர் மாநபி (ஸல்) அவர்கள்  அந்த கவலைகள் மற்றும் கவலைகளுக்கு காரணமான கடன் பிரச்சினைகளில் வெளியேறும் தீர்வை வழங்கி மிகச் சமீப நாட்களிலேயே அதிலிருந்து வெளியேறும் நம்பிக்கையை விதைத்தார்கள். 

இதன் காரணமாகவே பல கட்டங்களில் தமக்கு ஷஹீதுடைய அந்தஸ்து வேண்டும் என்று துஆச் செய்யக் கோரி விண்ணப்பித்த  அபூ உமாமா (ரலி) அவர்களின் ஆசையை மாநபி (ஸல்) அவர்கள் நிராகரித்து விட்டு, நீண்ட ஆயுளுக்கும், நிறைவான செல்வத்திற்கும், யுத்த களத்தில் இருந்து எவ்வித பாதிப்பும் இன்றி திரும்பி வர வேண்டும் என்றும் துஆச் செய்தார்கள் என்பதை வரலாற்றில் நாம் பார்க்கின்றோம்.

அபூ உமாமா (ரலி) அவர்களும் தமது நெருக்கடி நிலையில் இருந்து அல்லாஹ் தம்மை வெளியாக்கினான் என்று மன நிறைவோடும், மகிழ்வோடும் தெரிவித்ததை நபிமொழி மூலமாக நாம் அறிந்து கொள்கின்றோம்.

ஆகவே, தத்யீபுன் நஃப்ஸ் - பிறரை ஆறுதல் படுத்துவதை நாம் அவசியமாக்கிக் கொள்ள முன்வர வேண்டும்.

2. சமூகத்தில் தர்ம சிந்தனை உடையவர்களின் கவனத்திற்கு அவர்களை அறியத் தர வேண்டும்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக நாளொன்றுக்கு ஒரு தண்டனை எனும் விதமாக புதுப்புது தண்டனைகளை, சித்ரவதைகளை பிலால் (ரலி) அவர்களின் மீது உமைய்யா இப்னு கலஃப் கட்டவிழ்த்து விட்டிருந்தான்.

أن النبي صلى الله عليه وسلم قال عندما بلغه ما يلقى بلال من التعذيب: ((لو كان عندنا شيء، لابتعنا بلالاً))،.  أن أبا بكر اشترى بلالاً وهو مدفون في الحجارة بخمس أواقٍ ذهبًا، فقالوا: لو أبيت إلا أوقية واحدة لبعناكه، فقال أبو بكر: لو أبيتم إلا مائة أوقيه لأخذته

அப்படியாக நாட்கள் கடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் பெருமானார் {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் பிலால் போன்று இஸ்லாத்திற்காக சித்ரவதைகளை தாங்கிக் கொண்டிருப்பபவர்களை நம்மிடம் பணம் மட்டும் இருந்தால் எவ்விலை கொடுத்தாவது அவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம்என கவலையோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் பிலால் (ரலி) அவர்களை உமைய்யா சித்ரவதை செய்து கொண்டிருக்கும் போது அங்கு சென்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் என் இறைவன் அல்லாஹ்! என்று சொல்லும் ஒரே காரணத்திற்காகவா இந்த அடிமையைத் துன்புறுத்துகிறீர்கள்? கொலை செய்து விட வேண்டும் என்று துடிக்கின்றீர்கள்? அவருக்கான விலையைச் சொல்லுங்கள். நான் வாங்கிக் கொள்கிறேன்என்றார்.

உமைய்யா, அபூபக்ர் (ரலி) அவர்களை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு விலையைச் சொன்னான். பேரம் பேசாமல், கேட்ட தொகையை மறுக்காமல் அத்தொகையைக் கொடுத்து உடனே பிலாலை வாங்கினார் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

 

ஐந்தோ அல்லது. ஏழோ அல்லது நாற்பதோ அவாஃகின் தங்கம் விலையாகக் கொடுத்தார் என்று பல்வேறு அறிவிப்புகள் உள்ளன.

பிலாலை அழைத்துக் கொண்டு, வா போவோம்என்று நடக்க ஆரம்பித்த அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அதிகமான விலை கொடுத்து ஏமாறி விட்டீரே. இதை விட மிகக் குறைவான ( ஒரே ஒரு காசுக்குக் ) விலைக்குக் கேட்டிருந்தாலும் பிலாலைத் தந்திருப்பேனே?” என ஏளனமாகச் சொன்னான் உமைய்யா.

நீதான் ஏமாறி விட்டாய் உமைய்யா. இதைவிட அதிகமான விலையை நீ கேட்டிருந்தாலும் கொடுப்பதற்கு நான் தயாராகவே இருந்தேன்இன்னொரு அறிவிப்பில் நூறு அவாக் தங்கம் கேட்டிருந்தாலும் அவருக்காக நான் கொடுத்திருப்பேன்என்று பதில் அளித்து அங்கிருந்து பிலால் (ரலி) அவர்களுடன் விடை பெற்றார் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

தம்மோடு அழைத்து வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கி விட்டோம் என்று பிலாலைத் தம் அடிமையாக ஆக்கிக் கொள்ளவில்லை. மாறாக, பெருமானார் {ஸல்} அவர்களின் சமூகத்திற்கு அழைத்து வந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியவனாக நான் பிலாலை விடுதலை செய்கின்றேன்என்று அந்த நொடிப்பொழுதே விடுதலை அளித்துவிட்டார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

அவர்கள் அளித்த அந்த விடுதலையை அடி, உதையிலிருந்து விடுதலை என்று வெறுமெனே சொல்லிவிட முடியாது. மாறாக, மகத்தான, மாபெரும் விடுதலை என்று தான் சொல்ல வேண்டும். ( நூல்: உஸ்துல் ஃகாபா, ரிஜாலுன் வ நிஸாவுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, ஸியரு அஃலா மின் நுபலா )

3. நேரடியாக நாமே அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

وذات يوم، خرج سعد من بيته قاصدا مسجد النبي صلى الله عليه وسلم، وهناك جلس الى النبي الكريم صلى الله عليه وسلم مع من جلس حوله من الصحب الكرام رضوان الله عليهم ليستمع الى حديثه وارشاداته السديدة واقواله الحكيمة، في امور الدين والدنيا، فما لبث حتى قام وقال: يا رسول الله، أيمنع سوادي ودمامتي دخول الجنة؟ فقال له الرسول صلى الله عليه وسلم: لا والذي نفسي بيده ما اتقيت ربك وآمنت بما جاء به رسوله، فرد سعد قائلا: قد شهدت انه لا اله الا الله، وان محمدا عبده ورسوله، وجاهدت في سبيل الله، فما لي يا رسول الله؟ فأجابه صلى الله عليه وسلم: لك ما للقوم وعليك ما عليهم وانت اخوهم، فقال سعد: قد خطبت الى عامة من بحضرتك فردوني لسوادي ودمامتي، فقال له الرسول صلى الله عليه وسلم: اذهب الى عمرو بن وهب فأقرع الباب وسلم عليه، فاذا دخلت فقل زوجني رسول الله من فتاتكم.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமைத் தோழர்களில் ஒருவரான ஸஅதுல் அஸ்வத் அஸ்ஸுலமீ அல்லது ஸாலிம் அஸ்வத் அஸ் ஸுலமீ (ரலி) அவர்கள் மாநபி ஸல் அவர்களின் சபைக்கு வருகை தந்தார்கள். முகத்தில் வடுக்களையும், தோற்றத்தில் கருப்பாகவும் அந்த நபித்தோழர் அமையப் பெற்றிருப்பார்.

நபி (ஸல்) அவர்களின் சபையில் நபித்தோழர்களுடன் அமர்ந்து கொண்டார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு எழுந்து "அல்லாஹ்வின் தூதரே! என் வடுக்களும், என் கறுப்பு நிற தோற்றமும் சுவனத்தில் நுழைவதற்கு தடையாக அமையுமோ?!" என்று தமது மனதை உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

அப்போது, நபி ஸல் அவர்கள், இல்லை! என் உயிர் எவன் வசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வை நீர் பயந்து, அவன் தூதராக இருக்கும் என்னையும், நான் அவன் புறத்தில் இருந்து கொண்டு வந்து இருக்கிற தூதுத்துவத்தையும், இந்த தீனையும் நம்பிக்கை கொள்ளவில்லையா?" என்று கேட்டார்கள்.

அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே! வணங்கத்தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி பகர்ந்திருக்கின்றேன். மேலும், அல்லாஹ்வின் பாதையில் மார்க்கப் போரில் நான் பங்கேற்றுள்ளேன்" எனக்கு என்ன கிடைக்கும்" என்றார்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள் "அப்படியானால் இங்குள்ளவர்களுக்கு என்ன கிடைக்குமோ அதுவே உமக்கும் கிடைக்கும்! இஸ்லாம் உமக்கும் அவர்களுக்கும் சமமான அந்தஸ்தையே வழங்கும்! நீர் அவர்களின் சகோதரர் ஆவீர்" என்று பதில் கூறினார்கள்.

அதற்கவர், "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு முன்பாக இந்த சபையிலே அமர்ந்திருக்கும் பலரிடமும் எனக்கு திருமணம் செய்ய அவர்களின் மகளை பெண் கேட்டேன். ஆனால், அனைவரும் என் தோற்றத்தையும் வடுவையும் காரணம் காட்டி பெண் தர மறுத்து விட்டனர்" என்றார்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள் "அம்ர் இப்னு வஹப் (ரலி) என்பவரின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி அவருக்கு ஸலாம் சொல்லி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களது மகளை எனக்கு திருமணம் செய்து தருமாறு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்கள்" என்று அவரிடம் சொல்லுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

فانطلق سعد الى بيت عمرو، وما ان وصل حتى دق بابه، وبعد لحظات فتح الباب، فحيا سعد عمرا وقال له: اني وافد من عند رسول الله صلى الله عليه وسلم وهو يقول لكم انه قد زوجني من فتاتكم فزجره عمرو برد قبيح، فعاد سعد الى رسول الله صلى الله عليه وسلم ليخبره عما حدث من عمرو معه بيد ان ابنة عمرو قد سمعت حديث سعد مع ابيها من وراء حجاب فأخذت تحفز اباها وتحثه كي يستجيب لأمر رسول الله صلى الله عليه وسلم قبل ان ينزل الوحي فيهم من السماء فيفضحهم بين العرب، ثم تلت عليه قوله تبارك وتعالى (وما كان لمؤمن ولا مؤمنة اذا قضى الله ورسوله امرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ـ الاحزاب: 36)، عندئذ سارع عمرو بالاعتذار لرسول الله صلى الله عليه وسلم وارتضى سعدا زوجا لابنته فبارك النبي الكريم زواج سعد، وقال لسعد: اذهب الى صاحبتك فادخل بها.

ஸஅத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் சொன்னது போன்று அம்ர் இப்னு வஹப் (ரலி) அவர்களின் வீட்டுக்குச் சென்று நபி ஸல் அவர்கள் கூறியது போன்று கூறினார்.

ஆனால், அம்ர் இப்னு வஹப் (ரலி) அவர்களும் பெண் தர மறுத்து விட்டார். 

ஸஅத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் சபை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில் அம்ர் இப்னு வஹப் (ரலி) அவர்களின் மகள் தமது தந்தையிடம் மாநபி ஸல் அவர்களே ஒருவரை கணவராக தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்பட்டு நடப்பது கட்டாயம் என்றம், அவர்களது முடிவுக்கு மாற்று முடிவு செய்வது தவறு, வழிகேடு என்றும் அல்குர்ஆனின் அஹ்ஸாப் அத்தியாயத்தின் 36 -ம் வசனம் நமக்கு கட்டளை இட வில்லையா? மேலும், நமது இந்த தவறான முடிவு குறித்து, நம்மை குறித்து அல்லாஹ் ஏதேனும் வசனத்தை இறக்கியருளும் முன்பாக "என்னை அவருக்கு திருமணம் செய்து தர சம்மதம்" என்பதை அவருக்கு முன்பாக நீங்கள் மாநபி (ஸல்) அவர்களின் சமூகம் சென்று சொல்லி விட்டு வாருங்கள்!" என்று கூறி அனுப்பி வைத்தார்.

ஸஅத் (ரலி) அவர்கள் மாநபி (ஸல்) அவர்களின் சபைக்கு சென்று சேரும் முன்பாக தமது நிலைப்பாட்டையும், தமது மகளுடைய நிலைப்பாட்டையும் எடுத்துக் கூறி ஸஅத் (ரலி) அவர்களுக்கு பெண் தர தமது சம்மதத்தை தெரிவித்தார் அம்ர் இப்னு வஹப் (ரலி) அவர்கள்.

மாநபி (ஸல்) அவர்களின் சபைக்கு ஸஅத் (ரலி) வரும் போது அம்ர் இப்னு வஹப் (ரலி) அவர்கள் தமக்கும் முன்பாக வந்து நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் வந்ததும் மாநபி (ஸல்) அவர்கள் அம்ர் இப்னு வஹப் (ரலி) அவர்களின் மகளை திருமணம் செய்து கொடுத்து பரக்கத்துக்ககாக திருமணம் செய்து அனுப்பி வைக்கும் போது நபி (ஸல்) அவர்கள் "உம் மனைவியோடு இல்லற வாழ்வில் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வீராக!" என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

 فسر بذلك سعد، لكنه قصد السوق لشراء متاع لنفسه ولعروسه، وبينما هو في السوق سمع صيحة الجهاد ينادي بها داعية قائلا: يا خيل الله اركبي وبالجنة ابشري، فترك كل ما اراد من متاع العرس دون تردد منصرفا الى سوق الخيل والسلاح فاشترى بمهر عروسه فرسا وسيفا ورمحا، وسارع بالانضمام الى صفوف المجاهدين مشاركا في قتال المشركين، فكان في رحى المعركة فارسا جسورا، وبطلا مغوارا حتى لقي الله شهيدا،

மகிழ்ச்சியோடு திரும்பிய அவர்  இல்லற வாழ்வுக்கு தமக்கும், தமது மனைவிக்கும் தேவையானதை வாங்க மதீனாவின் கடை வீதிக்குச் சென்றார்.

அவர் கடை வீதிக்கு நுழையும் அந்த தருணமும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்ய விரைந்து வாருங்கள்!" என்று ஒரு அழைப்பாளர் அழைத்த தருணமும் ஒன்றாக ஒரே நேரத்தில் நிகழ்கிறது.

"அல்லாஹ்வின் குதிரை வீரர்களே! உங்கள் வாகனத்தை போர் களத்திற்கு திருப்புங்கள்! சுவனத்தை கொண்டு சோபனம் பெறுங்கள்!" என்ற அழைப்பாளரின் அழைப்பை ஏற்று "தமக்கும், தமது மனைவிக்கும் தேவையானதை கடை வீதிக்கு வாங்கச் சென்ற அவர் அங்கிருந்து  அப்படியே போர்த்தளவாடங்கள்  விற்கப்படும் கடை வீதிக்குச் சென்று ஒரு குதிரை ஒரு வாள் ஒரு ஈட்டி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு நேராக போர்க்களம் விரைகிறார். தம்மை போராளிகளின் அணியில் இணைத்துக் கொண்ட அவர் இஸ்லாத்திற்கு எதிராக போராடிய எதிரிப் படை வீரர்களுடன் கடுமையாக போரிட்டு ஷஹீத் ஆனார்.

 فأتاه النبي صلى الله عليه وسلم فوضع رأسه في حجره الطاهر، وبعث بفرسه وسلاحه الى زوجته التي لم يدخل بها قائلا لمبعوثيه: قولوا لهم قد زوجه الله خيرا من فتاتكم، وهذا ميراثه، قال تعالى (ان المتقين في مقام امين في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين ـ الدخان: 51 ـ 54)

யுத்தம் முடிவுக்கு வந்து ஷஹீதுகளின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்ட நபித்தோழர்களுடன் நபி ஸல் அவர்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.

எதிரிகள் முகாமிட்டிருந்த இடத்தில் ஒரு சடலம் கிடப்பதை கண்டு அருகில் சென்ற பெருமானார் (ஸல்) அவர்கள் அவரின் கறுப்பு நிற தோற்றத்தை அடையாளம் கண்டு, புது மாப்பிள்ளையாக இருந்த அவரும் யுத்த களத்தில் பங்கேற்றதை உறுதி செய்து கொண்டார்கள்.

பின்னர் அவரது தலையை தமது மடியில் கிடத்தி அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு ஒருவரை அழைத்து "இதோ! அவரின் குதிரை, வாள், ஈட்டி இதை அவரின் மனைவியிடம் கொண்டு சென்று கொடுத்து இவைகளைத் தான் அவர் இந்த உலகில் வராஸத் - சொத்தாக விட்டுச் சென்றுள்ளார்" என்று கூறி கொடுத்து விட்டு, அவர்களின் வீட்டாரிடம் சொல்லி விடுங்கள்! "

பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்). ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம். ( அல்குர்ஆன்: 44: 51 - 54 ) என்ற அத் துஃகான் அத்தியாயத்தின் 51 முதல் 54 வசனம் வரை உள்ள இந்த வசனங்களை அவர்களிடம் ஓதிக் காட்டி விட்டு வாருங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: அல இஸாபா ஃபீ தம்யீஸிஸ் ஸஹாபா, அல் அஃலாம் லித் தக்வானீ )

( குறிப்பு:- இந்த சம்பவம் ஜுலைபீப் (ரலி) அவர்களின் நிகழ்வோடு சில இடங்களில் ஒத்துப் போகிறது. எனினும் அந்த நிகழ்வு வேறு இந்த நிகழ்வு வேறு என்று இந்த நிகழ்வை அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பில் இருந்து பதிவு செய்துள்ள அல் அஃலாம் எனும் வரலாற்று நூலின் ஆசிரியர் தக்வான் (ரஹ்) அவர்கள் அல் இஸாபா ஃபீ தம்யீஸிஸ் ஸஹாபா எனும் ஆதாரப்பூர்வமான வரலாற்று நூலில் இடம் பெற்றுள்ள தகவலையும் மேற்கோள் காட்டுகின்றார்கள்.

மேலும், இமாம் ஹாகிம் (ரஹ்) அவர்கள் இந்த நிகழ்வை அறிவிப்பு செய்கிற அறிவிப்பாளர்கள் பட்டியலில் ளயீஃபான சிலர் இடம் பெற்றுள்ளனர் என்று சுட்டிக் காட்டி இது மவ்ளூஉ என்றும், ஹதீஸ் கலை வல்லுநர் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் அறிவிப்பாளர் தொடரில் குறைபாடுள்ளவர்கள் இடம் பெற்றிருந்தாலும் பல்வேறு வழிகளில் இந்த நிகழ்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

மேலும், சமகால அறிஞர்கள் இமாம் அல் அரீஃபீ, மஹ்மூதுல் ஹஸனாத் போன்றோர்கள் இந்த வரலாற்று நிகழ்வை பேசுகின்றார்கள். அஷ் ஷஃராவீ, முஹம்மது ராத்திப் அந் நாபுலுஸீ, முஹம்மது ஸாலிஹ் அல் முனஜ்ஜித் போன்ற அறிஞர்களும் தங்களுடைய பல்வேறு ஆக்கங்களில் இந்த நிகழ்வை மேற்கோள் காட்டுகின்றனர் இது சரியான நிகழ்வு தானா? என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் "ஜுலைபீப் (ரலி) அவர்களின் நிகழ்வோடு சில இடங்களில் ஒத்துப் போனாலும் இரு நிகழ்வின் முடிவுகளும் வெவ்வேறாக இருப்பதால் பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் இதை பதிவு செய்திருப்பதாலும், இதில் இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணான எதுவும் இடம் பெறாததாலும் இதை உரையில் மேற்கோள் காட்டுவதில் தவறில்லை என்று பதில் தரப்பட்டுள்ளது.)

4. அவர்களின் துயர் நீங்க அவர்களுக்காக துஆ செய்ய வேண்டும்.

1. பெருமானார் (ஸல்) அவர்கள் தம்மிடம் பிரச்சினைகளோடு வந்த பலருக்கு துஆச் செய்து அவர்களின் பிரச்சினைகளில் இருந்து வெளிவர துஆச் செய்து இருக்கின்றார்கள்.

ஒரு இளைஞர் தவறான வாழ்க்கையில் தமது வாழ்க்கையை கழித்து விட்டதாகவும், அந்த வாழ்க்கையில் இருந்து தம்மால் விடுபட இயல வில்லை என்று மிகவும் மன வருத்தத்தோடு பகிர்ந்து கொள்ளும் போது அவருக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள்.

قَالَ : فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ وَقَالَ : اللَّهُمَّ اغْفِرْ ذَنْبَهُ ، وَطَهِّرْ قَلْبَهُ ، وَحَصِّنْ فَرْجَهُ ، فَلَمْ يَكُنْ بَعْدُ ذَلِكَ الْفَتَى يَلْتَفِتُ إِلَى شَيْءٍ .

அந்த இளைஞர் மிகவும் பணிவுடன் அல்லாஹ்வின் தூதரே! எனது உள்ளம் தூய்மை பெற இறைவனிடம் இறைஞ்ச மாட்டீர்களா?” என ஏக்கத்துடன் கேட்டார். அவரை அருகில் அழைத்த மாநபி {ஸல்} அவர்கள், தமதருகே அமரவைத்து அவரின் நெஞ்சத்தின் மீது கை வைத்து, 

யாஅல்லாஹ்! இவரின் இதயத்தை தூய்மை படுத்துவாயாக! 

யாஅல்லாஹ்! இவரின் பிழைகளை பொறுத்தருள்வாயாக! 

யாஅல்லாஹ்! இவரின் கற்பொழுக்கத்தை பாதுகாப்பாயாக!என்று துஆ செய்தார்கள். 

இறுதியாக அந்த வாலிபர் பெருமானார் {ஸல்} அவர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்கிற போது….“இந்தச் சபையில் நான் நுழைகிற போது, விபச்சாரம் தான் நான் அதிகம் நேசிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது நான் அதிகம் வெறுக்கும் விஷயமாக அந்த விபச்சாரமே மாறிவிட்டதுஎன்று சொல்லியவாறே சென்றார்.                                     

இந்த சம்பவத்தை அறிவிக்கும் அபூ உமாமா {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: இதன் பின்பு அந்த வாலிபரின் வாழ்வினில் எந்த ஒரு தருணத்திலும் கற்பொழுக்கத்தை உரசிப்பார்க்கும் எந்த ஒரு செயலும் இடம் பெற வில்லை.

( நூல்:ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அஸ் ஸஹீஹா லில் அல்பானீ, பாகம்:1, பக்கம்:370, முஸ்னத் அஹ்மத், பாகம்:5, பக்கம்:256,257.)

2. தம்மிடம் வர இயலாமல் பிரச்சினைகளை எதிர் கொண்டவர்களுக்காக தம்மால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என்று அப்போதும் அவர்களுக்காக துஆச் செய்துள்ளார்கள்.

أَبِى هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى صَلاَةِ الفجر شَهْرًا، يَقُولُ فِى قُنُوتِهِ: "اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِى رَبِيعَةَ... اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ"، ثم يستمر في دعائه فيقول: "اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى قريش، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِىِّ يُوسُفَ".

قَالَ أَبُو هُرَيْرَةَ: وَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَلَمْ يَدْعُ لَهُمْ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ

 "وَمَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا".

صحيح البخاري ومسلم والسنن

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் சோதனைக் காலப்பிராத்தனை) ஓதினார்கள். அவர்கள் "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" என்று கூறியதும்  பின்வருமாறு குனூத் ஓதுவார்கள்:

 

இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப் பட்டவர்களை நீ காப்பாற்றுவாயாக!

இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக! தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இதன் பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான் பார்த்தேன்.

உடனே நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஒடுக்கப்பட்ட) மக்களுக்காகப் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதாகக் கருதுகிறேன்" என்றேன். அப்போது, "(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள் (மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்கப்பட்டது. ( நூல்: புகாரி, முஸ்லிம் )

1)   தேவையுடையவர்களை தேடித் தேடிச் சென்று துயர் துடைப்பதால் நிகழும் மாற்றங்கள் என்ன?

பிறரின் தேவையை நிறைவு செய்வதால், பிறரின் வறுமையை அகற்றுவதால், பிறரின் ஏழ்மையை துடைப்பதால், பிறரின் கஷ்டங்களை மாற்றுவதால் சம்பந்தப்பட்ட அந்த மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி சமூகத்தில் கௌரவமான ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ள அது காரணமாக அமையும்.

அப்படி அவர்கள் படிப்படியாக மேல் நிலைக்கு ஏற்றம் பெற்று வரும் போது அதன் பயன்பாடு சமூகத்தில் பிரதி பலிக்கும். கால ஓட்டத்தில் அவர்களின் பங்களிப்பும் சமூகத்திற்கு கிடைக்கும்.

ஒரு காலத்தில் மனமுடைந்து காணப்பட்ட ஜாபிர் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிய அண்ணலார் அவரின் தந்தைக்கு கடன் தந்தவர்களிடம் ஆளனுப்பி சென்று தவணை கேட்டு சிபாரிசு செய்தார்கள்.

அவர்கள் மறுக்கவே வல்லோன் அல்லாஹ்விடம் ஜாபிர் (ரலி) அவர்களின் மகசூல் செய்யப்பட்ட பேரீத்தம் பழக் கூடைக்கு "பரக்கத்" அருள் வளம் வேண்டி துஆ செய்தார்கள்.

பிரத்யேகமான முறையில் அவரின் ஒட்டகத்தை விலை பேசி அவருக்கு அதன் விலையை கொடுத்து அந்த ஒட்டகத்தையும் அன்பளிப்பாக வழங்கி அவரின் வாழ்க்கை மேலோங்கிட கரம் கொடுத்தார்கள்.

சற்றேறக்குறைய நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் ஜாபிர் (ரலி) அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததோடு அவரின் பங்களிப்பை சமூகம் "முஃஜிஸாவின் - பேரற்புதத்தின்" துணையோடு அனுபவித்ததை வரலாறு வாகாய் பதிவு செய்துள்ளது.

கடைநிலையில் உள்ளவர்களுக்கு இக்லாஸாக நாம் செய்யும் உதவிகளுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்கும் பிரதிபலன் வார்த்தையால் விவரிக்க முடியாததாகும்.

 

இஸ்லாமிய வரலாற்றில் அகழ்ப்போர் மிகவும் நெருக்கடியான கால சூழலில் நடைபெற்ற ஒரு போராகும்.

மாநபி (ஸல்) அவர்கள் உட்பட மாநபித் தோழர்கள் அனைவரும் நாட்கணக்கில் பசியோடு இருந்த கால கட்டமாகும்.

கையிருப்பில் இருந்த உணவு கூட உண்பதற்கு தகுதியில்லாத கெட்டுப் போன உணவுகளாகும். ஆனாலும், பசிக் கொடுமையால் அதை சகித்துக் கொண்டு சாப்பிட்டதாக வரலாறு சான்றுரைக்கின்றது.

فكانوا يُؤْتَوْنَ بِمِلْءِ كَفِّي مِنْ الشَّعِيرِ فَيُصْنَعُ لَهُمْ بِإِهَالَةٍ سَنِخَةٍ تُوضَعُ بَيْنَ يَدَيْ الْقَوْمِ، وَالْقَوْمُ جِيَاعٌ، وَهِيَ بَشِعَةٌ فِي الْحَلْقِ وَلَهَا رِيحٌ مُنْتِنٌ !!" البخاري 

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: (அகழ் தோண்டிக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு எனது ஒரு கையளவு வாற்கோதுமை கொண்டு வரப்பட்டு, கெட்டுப் போன கொழுப்புடன் சேர்த்துச் சமைக்கப்பட்டு அந்த மக்களுக்கு முன் வைக்கப்படும். அப்போது அவர்கள் எல்லாரும் பசியுடன் இருப்பார்கள். அந்தக் கெட்டுப்போன கொழுப்பு நாற்றமடித்தபடி தொண்டையிலேயே சிக்கிக் கொள்ளும். ( நூல் : புகாரி )

عن أبي طلحة قال : شكونا إلى رسول الله صلى الله عليه وسلم الجوع ورفعنا عن بطوننا عن حجر حجر ; فرفع رسول الله صلى الله عليه وسلم عن حجرين . خرجه أبو عيسى الترمذي

அபூ தல்ஹா (ரழி) அறிவிக்கிறார்கள் : எங்களின் பசியைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். எங்களது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டி இருந்ததைக் காட்டினோம். நபி (ஸல்) அவர்களோ தங்களது வயிற்றில் இரண்டு கற்கள் கட்டி இருந்ததைக் காட்டினார்கள். ( நூல் : திர்மிதீ )

أن جابر بن عبد الله رضي الله عنهما يحدثنا فيقول: (لما حفر الخندق رأيت بالنبي صلى الله عليه وسلم خمصا (جوعا) شديدا، فانكفأت (رجعت) إلى امرأتي، فقلت: هل عندك شيء؟ فإني رأيت برسول الله صلى الله عليه وسلم خمصا شديدا، فأخرجت إلي جرابا فيه صاع من شعير ولنا بهيمة داجن (شاة في البيت) فذبحتها، وطحنت الشعير، ففرغت إلى فراغي وقطعتها في برمتها، ثم وليت إلى رسول الله صلى الله عليه وسلم، فقالت: لا تفضحني برسول الله صلى الله عليه وسلم وبمن معه. فجئته فساررته (كلمته سرا بصوت منخفض)، فقلت: يا رسول الله ذبحنا بهيمة لنا، وطحنا صاعا من شعير كان عندنا، فتعال أنت ونفر معك، فصاح النبي صلى الله عليه وسلم وقال: يا أهل الخندق! إن جابرا قد صنع لكم سؤرا (بقية طعام) فحيهلا بكم (هلموا مسرعين)، وقال رسول الله صلى الله عليه وسلم: لا تنزلن برمتكم (قدركم)، ولا تخبزن عجينتكم حتى أجيء، فجئت وجاء رسول الله صلى الله عليه وسلم يقدم الناس حتى جئت امرأتي، فقالت: بك وبك (أي عتبت عليه)، فقلت: قد فعلت الذي قلت لي.. فأخرجت له عجينتنا فبصق فيه وبارك، ثم عمد إلى برمتنا فبصق فيها وبارك، ثم قال: ادعي خابزة فلتخبز معك، واقدحي (اغرفي) من برمتكم ولا تنزلوها، وهم ألف .. فأقسم بالله لقد أكلوا حتى تركوه وانحرفوا (شبعوا وانصرفوا)، وإن برمتنا لتغط (تغلي وتفور من الامتلاء) كما هي، وإن عجيننا ليخبز كما هو) رواه البخاري.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :(போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, நபி (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா? என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு ஸாவு' அளவு வாற்கோதுமையிருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக் குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள். நான் (அறுத்து) முடிக்கும் போது அவளும் (அரைத்து) முடித்து விட்டாள். மேலும் அதனைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியிலிட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும் போது என் மனைவி,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப் படுத்திவிட வேண்டாம். (உணவு கொஞ்சம் தானிருக்கிறது' என்று கூறிவிடுங்கள்) என்று சொன்னாள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு ஸாவு' அளவு வாற்கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள் என்று அழைத்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலில், அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜாபிர் -ரலி- அவர்களிடம்), நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம் என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி -ஸல்- அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) என்னைக் கடிந்து கொண்டாள். உடனே நான், நீ நபி (ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன் என்று கூறினேன்.

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி (ஸல்) அவர்கள் அதில் (தமது திரு வாயினால்) ஊதினார்கள். மேலும், மாவில் பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள்.

பிறகு அதில் வாயால் ஊதி பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே என்று கூறினார்கள் அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.

ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவை விட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்த மெழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சமும் குறையாமல்) முன்பிருந்தது போலவே இருந்தது. மேலும், எங்கள் குழைத்த மாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது. ( நூல்: புகாரி )

2)   பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டு என்ன செய்து விடும்!?

பெருமானார் (ஸல்) அவர்கள் நரக நெருப்பின் தீங்கிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள தூண்டும் போது சொன்ன வார்த்தை மிகவும் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

عن عَدِي بن حاتم رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: «ما منكم من أحد إلا سَيكَلِّمُه رَبُّه ليس بينه وبينه تُرْجُمان، فينظر أيْمَن منه فلا يرى إلا ما قَدَّم، وينظر أَشْأَمَ منه فلا يَرى إلا ما قَدَّم، وينظر بين يديه فلا يرى إلا النار تَلقاء وجهه، فاتقوا النار ولو بِشقِّ تمرة».

அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காணமாட்டார். பிறகு தம(து முகத்து)க்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்புதான் வரவேற்கும். எனவே, முடிந்தால் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அதீ இப்னு ஹாத்திம் (ரலி) ( நூல்: புகாரி )

ஏனெனில்,  பேரீத்தம் பழத்தின் அந்த ஒரு துண்டு பசியில் இருந்து ஒருவரை விடுவிக்கும்.  அதன் மூலம் அவருக்கு வாழ்வின் மீதான பிடிப்பும், உடலில்   புத்துணர்வும், நம்மை ரப்புல் ஆலமீன் கை விட வில்லை என்ற நம்பிக்கையும் பிறக்கும்.

அவர் தடம் புரண்டு செல்லும் நிலையில் இருந்து தடம் பதிக்கும் நிலைக்கு உயர்கிறார்.

ஆதலால் தான் "நீங்கள் வழங்கும் பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டு உங்களை நரகில் இருந்து காக்கும்" என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

3)   உங்களிடம் இருப்பதைக் கொடுங்கள்! உங்களால் இயன்றதைக் கொடுங்கள்!!

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( سَبَقَ دِرْهَمٌ مِائَةَ أَلْفٍ درْهَم ) قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ ؟ قَالَ : ( رَجُلٌ لَهُ دِرْهَمَانِ فَأَخَذَ أَحَدَهُمَا فَتَصَدَّقَ بِهِ ، وَرَجُلٌ لَهُ مَالٌ كَثِيرٌ فَأَخَذَ مِنْ عُرْضِ مَالِهِ مِائَةَ أَلْفٍ فَتَصَدَّقَ بِهَا

ஒரு நாள் மாநபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் அமர்ந்திருந்த சபையில் "ஒரு திர்ஹம் ஒரு லட்சம் திர்ஹத்தை நன்மையால் முந்தி விட்டது" என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள் "அல்லாஹ்வின் தூதரே! அது எப்படி?" என்று வினவினார்கள்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள் "ஒருவர் தம்மிடம் இரண்டு திர்ஹம் வைத்திருந்தார். அவர் ஒரு திர்ஹத்தை தர்மம் செய்தார். அவர் தம்மிடம் இருந்த பாதி பொருளாதாரத்தை தர்மம் செய்தவராகின்றார். இன்னொருவர் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவருக்கு பல்வேறு வகையான பொருளாதாரத்தை வழங்கி இருந்தான். அவர் அதிலிருந்து ஒரு லட்சம் திர்ஹத்தை தர்மம் செய்தார். (இந்த இடைவெளி தான் அந்த ஒரு திர்ஹம் நன்மையால் முந்திச் செல்ல காரணமாக அமைந்தது) என்று நபி ஸல் அவர்கள் பதிலளித்தார்கள். ( நூல்: நஸாஈ )

ஆகவே, நாம் மகிழ்ச்சியோடு இருக்கும் இந்த ஈத் திருநாளில் மகிழ்ச்சியை எதிர் பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு மாநபி ஸல் அவர்களின் வழி நின்று மகிழ்ச்சியை வழங்கிட சபதமேற்போம்!

நாம் மகிழ்ச்சியோடு இருக்கும் இந்த ஈத் திருநாளில் மகிழ்ச்சியை தொலைத்து நம் வாழ்வில் மகிழ்ச்சி வந்து விடாதா என ஏங்கிக் கொண்டிருக்கும் ஃபலஸ்தீனின் காஸா மக்களுக்கு மாநபி ஸல் அவர்களின் வழி நின்று மகிழ்ச்சி  ஏற்பட எல்லாம் வல்ல இறைவனிடம் கைகளை ஏந்தி பிரார்த்திப்போம்!!

மஸாபீஹுல் மிஹ்ராப் வாசகர்கள் அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் - ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த நன்நாளில் நாம் நமது குடும்பத்தாருடன், நமது தாய் தந்தையருடன், நமது மனைவி மக்களுடன், நமது நண்பர்கள், அண்டை அயலாருடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்று நாளை மறுமையில் சுவனத்திலும் இதே போன்று மகிழ்ச்சியுடன் ஒன்று கூட்டுவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

வரும் ஜும்ஆ அன்று நமது தளத்தில் பதிவு செய்யப்படாது. இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜும்ஆவிற்கு பதிவு செய்யப்படும்!

No comments:

Post a Comment