Thursday 4 April 2024

யாஅல்லாஹ்! எங்களின் அமல்கள் அழிந்து போகாமல் பாதுகாப்பாயாக!!!

 

யாஅல்லாஹ்! எங்களின் அமல்கள் அழிந்து போகாமல் பாதுகாப்பாயாக!!!



அல்லாஹ்வின் மகத்தான கருணையால் ரமழானின் இறுதிப் பத்தில், லைலத்துல் கத்ரை எதிர் நோக்கி, ரமழானை நிறைவுடன் வழியனுப்ப காத்திருக்கின்றோம்.

கிட்டத்தட்ட தமிழகத்தின் பெருவாரியான பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகையில் ஹாஃபிழ்கள் நேற்றுடன் 29 ஜுஸ்வுகளை நிறைவு செய்திருப்பார்கள்.

நாட்கள் தான் எவ்வளவு வேகமாக செல்கின்றது. இப்போது தான் ரமழான் ஆரம்பித்தது போன்று இருந்தது. 25 நோன்பு ஆகி விட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

ரமழான் மாதம் துவங்கியதில் இருந்து தற்போது வரை தம்மால் முடிந்த வரை, கடுமையான வெயிலின் வெப்பத்தில்பகலில் நோன்பு நோற்றுக் கொண்டு, தான தர்மங்கள், மனித நேய உதவிகள், இஃப்தார் ஏற்பாடுகள், அதன் உஷ்ணம் தணியும் முன்னரே இரவு நேரத்தில் தராவீஹ் தொழுகை, தஸ்பீஹ் தொழுகை, நஃபில் தொழுகை, தஹஜ்ஜத் தொழுகை, திக்ர், திலாவத்துல் குர்ஆன், ஸஹர் நேர சாப்பாடுக்கு நிதியுதவி என்று அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய முறையில் பல்வேறு நல்லமல்களை செய்து ரமழானை பூர்த்தியாக்கும் நிலையில் இருக்கும் நாம் மீதமிருக்கும் ரமழானின் நாட்களிலும் இது போன்ற நல்லறங்களை மனமுவந்து செய்து முடிக்க வேண்டும்.

பொதுவாக நன்மைகள், நல்லறங்கள், வணக்க வழிபாடுகள் செய்வதுவே ஒரு முஃமுனுடைய உயர்ந்த இலட்சியமாகும். 

ஏனெனில், ஈமானுக்குப் பின்னர் அல்லாஹ் நம்மிடம் இருந்து எதிர் பார்ப்பதும், விரும்புவதும் அவைகளைத் தான்.

ஆதலால் தான் "ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்தவர்கள்என்று அல்குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பல்வேறு இடங்களில் சிறப்பித்துக் கூறுகின்றான்.

மகத்தான பல்வேறு சோபனங்களுக்கு அச்சாரமாக ஈமானுக்குப் பின்னர்  நல் அமல்கள் செய்தவர்களைத் தான் அல்லாஹ் சொந்தக்காரர்கள் என்று அடையாளப் படுத்துகின்றான். 

அதிகமாக நல் அமல்கள் செய்வதற்கு நாம் ஆர்வம் காட்டுவதைப் போன்று அந்த அமல்கள் பாழாய் போகாமல், அழிந்து போய்விடாமல் இருப்பதிலும், நாம் அக்கறை கொள்ள வேண்டும்.

அந்த வகையில் அல்குர்ஆனும், மாநபி ஸல் அவர்களும் நமது நல் அமல்களை அழிக்கும் என்றும் பாழாக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள காரியங்கள் சிலதை இந்த ஜும்ஆவில் நாம் பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய நல் அமல்களைப் பாழாய் போகாமல் பாதுகாப்பானாக! அழிந்து போகாமல் காத்திடுவானாக! நம் நல் அமல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

அமல்களை பாழாக்கிட வேண்டாம்!!

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறைநம்பிக்கை கொண்டவர்களே என்று அழைத்து கட்டளை இடும் பல்வேறு கட்டளைகளில் பின் வரும் கட்டளையும் ஒன்று. 

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَـكُمْ‏

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இறைத்தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்(அமல்) களை பாழாக்கிவிடாதீர்கள் ( அல்குர்ஆன்: 47: 33 )

يقول الطبري في تفسيره الآية أي ولا تبطلوا بمعصيتكم إياهما - الله ورسوله-،

இமாம் தபரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வதன் ஊடாக உங்கள் அமல்களை, அமல்களின் நன்மைகளை பாழாக்கி விடாதீர்கள்.

பதினைந்து (15) காரியங்கள் (பாவங்கள்) இருக்கிறது அதை யார் செய்கின்றாரோ அவர்களின் அமல்கள் அனைத்தும் அழிந்து போவதற்கும், நன்மைகள் கிடைக்காமல் ஆவதற்கும்,  அல்லாஹ்வின் தண்டனைக்கும், நரக தீர்ப்புக்கும் காரணமாக அமைந்து விடும்.

1. மதம் மாறிப் போவதும், 2. குஃப்ர் - இறைவனை நிராகரிப்பதும், 3. ஷிர்க் - இணைவைப்பதும்...

ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون

உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்". ( அல்குர்ஆன்: 2: 217 )

وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ 

தனது (ஈமானை) நம்பிக்கையை இறை மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது ( அல்குர்ஆன் : 5: 5 )

وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ 

நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும். நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக நன்றி செலுத்துவோரில் ஆவீராக| என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது ( அல்குர்ஆன்: 39: 65 )

4. அஸர் தொழுகையை விடுவது.

عَنْ أَبِي المَلِيحِ، قَالَ: كُنَّا مَعَ بُرَيْدَةَ فِي غَزْوَةٍ فِي يَوْمٍ ذِي غَيْمٍ، فَقَالَ: بَكِّرُوا بِصَلاَةِ العَصْرِ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ تَرَكَ صَلاَةَ العَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ

 

மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி) அவர்களுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள் அஸர் தொழுகையை முன் வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றனஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்என்று குறிப்பிட்டார்கள். ( நூல் : புகாரி )

5. அல்லாஹ்வின் கண்ணியத்தை களங்கப்படுத்துவது.

عَنْ جُنْدَبٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَدَّثَ ‘ أَنَّ رَجُلًا قَالَ: وَاللهِ لَا يَغْفِرُ اللهُ لِفُلَانٍ، وَإِنَّ اللهَ تَعَالَى قَالَ: مَنْ ذَا الَّذِي يَتَأَلَّى عَلَيَّ أَنْ لَا أَغْفِرَ لِفُلَانٍ، فَإِنِّي قَدْ غَفَرْتُ لِفُلَانٍ، وَأَحْبَطْتُ عَمَلَكَ ‘ أَوْ كَمَا قَالَ

(முற்காலத்தில் வாழ்ந்த) ஒரு மனிதர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ன மனிதனை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்என்று கூறினார். அல்லாஹ் இன்ன மனிதனை நான் மன்னிக்கமாட்டேன் என என்மீது சத்தியமிட்டுச் சொன்னவன் யார்? நான் அந்த மனிதனை மன்னித்துவிட்டேன். உன் நல்லறங்களை அழித்துவிட்டேன்என்றோ அதைப் போன்றோ கூறினான். ( நூல் : முஸ்லிம் )

6. நபி (ஸல்) அவர்களை அவமதிப்பது..

"يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَن تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنتُمْ لَا تَشْعُرُونَ".

முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும். ( அல்குர்ஆன்: 49: 2, )

நபி {ஸல்} அவர்களின் குரலை விட நமது குரல் உயர்ந்து விடக்கூடாது என்கிறது இந்த இறை வசனம். நாம் வாழும் காலத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் இல்லையே நம்முடன் இந்த இறைவசனத்தை எப்படி பொருந்திப் பார்ப்பது என்றால் நம்முடைய வாழ்க்கையின் நலவுகளுக்காக ஏதேனும் ஒரு நபி மொழி மேற்கோள் காட்டப்படுகிறது எனில், வேறு யாரோ ஒருவர் சொன்ன ஒன்றை உதாரணமாக காட்டி நபி மொழியை தள்ளி வைத்து விடுவது அல்லது மறுத்துக் கூறுவது போன்றாகும்.

عن جابر بن عبدالله قال: “بينما النبي - صلى الله عليه وسلم - يوم الجمعة إذ قَدِمت عِيرٌ إلى المدينة؛ فابتدرها أصحابُ رسول الله - صلى الله عليه وسلم - حتى لم يبقَ معه إلا اثنا عشر رجلاً، فقال رسول الله - صلى الله عليه وسلم -: ”والذي نفسي بيده، لو تتابعتم حتى لا يبقى منكم أحدٌ لسال بكم الوادي نارًا"؛ فنزلت هذه الآية: ﴿ وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا ﴾ [الجمعة: 11] .

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறினார்கள் : நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்று விட்டனர். பன்னிரண்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. அப்போது, நபி (ஸல்) அவர்கள் அங்கே இருந்த எங்களை நோக்கி "நீங்களும் அவர்களின் பின்னால் சென்றிருப்பீர்கள் என்றால் உங்களில் எவரும் நரகத்தின் ஒரு ஓடையை கடக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள்" என்று சொன்ன இந்த நேரத்தில் தான், "அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்.'' (62:11) என்ற வசனம் இறங்கியது.

நபி (ஸல்) அவர்களை அவமதிப்பது எவ்வளவு தூரம் கண்டிக்கத்தக்கது, தண்டனைக்குரிய பாவம் என்பதை நாம் உணர வேண்டும்.

فمَن التزم الأدب معه - صلى الله عليه وسلم - لهم مغفرة وأجر عظيم، بعد اجتيازهم امتحانهم ونجاحهم فيه.

எவர் நபி (ஸல்) அவர்களுடன் தற்காலத்தில் அவர்களின் நபிமொழியுடன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கின்றாரோ அவருக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு.

إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُولِ اللَّهِ أُولَئِكَ الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَى لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ

நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு. ( அல்குர்ஆன்: 49: 3 )

7. கூடுதல் விலைக்கு பேசி ஒப்பந்தம் எழுதி குறைந்த விலைக்கு விற்பதும் வாங்குவதும்.

أخرج

 عبد الرزاق 

 في

مصنفه

أخبرنا

معمر ، والثوري عن أبي إسحاق السبيعي 

  عن امرأته أنها دخلت على عائشة في نسوة

 فسألتها 

امرأة ، فقالت يا أم المؤمنين كانت لي جارية فبعتها من زيد بن أرقم بثمانمائة إلى العطاء ، ثم ابتعتها منه بستمائة ، فنقدته الستمائة ، وكتبت عليه ثمانمائة ، فقالت عائشة : بئس ما 

اشتريت ، وبئس ما اشترى ، أخبري

 زيد بن أرقم

   أنه قد أبطل جهاده مع رسول الله صلى الله عليه وسلم إلا أن يتوب ، فقالت المرأة لعائشة

 أرأيت إن أخذت رأس مالي ورددت عليه الفضل ، فقالت : { فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف } رواه أحمد.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சமூகத்திற்கு அபூ இஸ்ஹாக் அஸ் ஸபீஈ (ரஹ்) அவர்களின் மனைவி ஆலியா பின்த் அய்ஃபஉ இப்னு ஷராஹீல் அவர்கள் வருகை தந்து, நான் எனது அடிமைப் பெண்ணை 800 திர்ஹத்திற்கு விலை பேசினேன். அது தான் ஒப்பந்த பத்திரத்தில் பதிவும் செய்யப்பட்டது. எனினும் 600 திர்ஹத்தை தந்து அவர் என் அடிமைப் பெண்ணை சொந்தமாக்கிக் கொண்டார். அது போதுமானதாகவும் இருக்கிறது. இந்த வியாபார முறை குறித்து மார்க்கத்தின் கருத்து என்ன? என்று கேட்டார்.

அதற்கு, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் "நீங்கள் வாங்கியதும், விலை பேசியதும் தவறான வழியில் இருந்தும் உள்ள வியாபார முறையாகும்.

நீங்கள் சென்று ஜைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களிடம் கூறி விடுங்கள்! மாநபி (ஸல்) அவர்களுடன் ஜிஹாதில் பங்கேற்ற நன்மைகளும், ஹஜ்ஜில் கலந்து செய்த அமல்களும் அழிந்து போய் விட்டது என்று அறிவித்து விடுங்கள்" என்று கூறினார்கள்.

அதற்கு ஆலியா (ரஹ்) அவர்கள் "நான் எனது மூல முதலீட்டைப் பெற்றுக் கொண்டேன். எனக்கு வர வேண்டிய மேல் மிச்சமான லாபத்தை அவரிடமே விட்டு விட்டேன்" என்றார். அப்போது, ஆயிஷா (ரலி) அவர்கள் பகரா அத்தியாயத்தின்

فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَؕ

"ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது" என்ற 275 வது வசனத்தின் மத்திய பகுதியை ஓதிக் காண்பித்தார்கள்.  ( நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், முஸ்னத் அஹ்மத் )

முஸ்னத் அஹ்மதின் ரிவாயத்தில் அடிமைப் பெண் (ஜாரியா)  என்பதற்கு பதிலாக அடிமை (குலாம்) என்று இடம் பெற்றுள்ளது.

8. பிறருக்கு அநீதம் இழைப்பது.

قال النّبيّ صلّى الله عليه وسلّم : « المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة، ويأتي وقد شتم هذا وسب هذا، وقذف هذا، وأكل مال هذا، وسفك دماء هذا، وضرب هذا، فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضي ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار » رواه مسلم

திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். மக்கள் யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை நோன்பு ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்;இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால் (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

9. தனிமையில் அல்லாஹ்வின் தடைகளை தகர்த்தெறிவது.

عن ثوبان رضي الله عنه قال : قال النّبيّ صلّى الله عليه وسلّم : « لأعلمن رجالا من أمتي يأتون يوم القيامة بحسنات كأمثال جبال تهامة بيضاء، فيجعلها الله هباءً منثوراً، قالوا: يا رسول الله! صفهم لنا، جلهم لنا، لئلا نكون منهم ونحن لا ندري، قال: أما إنهم منكم يصلون كما تصلون، ويأخذون من الليل كما تأخذون، إلا أنهم إذا خلوا بمحارم الله انتهكوها » رواه ابن ماجه .

எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தாரை நான் அறிவேன். மறுமை நாளில் திஹாமா மலைகள் போன்ற நன்மைகளுடன் அவர்கள் வருவார்கள். அவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவான் என்று நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே அவர்களைப் போன்று நாங்கள் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள் அவர்களை எங்களுக்குத் தெரியாது என்றோம். அதற்கு நபியவர்கள் அவர்கள் உங்களின் சகோதரர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் நீங்கள் இரவு வணக்கத்தில் ஈடுபடுவதைப் போன்றே அவர்களும் இரவில் வணக்கம் புரிவார்கள் ஆயினும் அல்லாஹ்வின் தடைகளை மீறுவதற்கான சந்தர்பங்கள் அவர்களுக்கு வாய்த்தால் அல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்து விடுவார்கள் அவர்களே அக்கூட்டத்தினர்என்று கூறினார்கள். ( நூல் : இப்னு மாஜா )

தனிமையில் இருக்கும் போது அல்லாஹ்வின் வரம்புகள் விஷயத்தில் கவனம் செலுத்துவோர் கண்ணியத்திற்குரியோர்!!

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ أَكْرَمُ النَّاسِ؟ قَالَ: «أَتْقَاهُمْ» قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَيُوسُفُ نَبِيُّ اللَّهِ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்சமுடையவரே’’ என்று பதிலளித்தார்கள். மக்கள், “நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை’’ என்றனர். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)’’ என்று சொன்னார்கள். ( நூல்: புகாரி )

யார் அல்லாஹ்வுக்கு அஞ்சி வெளிப்படையிலும் தனிமையிலும் பயபக்தியுடன் வாழ்கிறாரோ, அவரே மக்களில் கண்ணியத்திற்குரியவர் என்றார்கள். மேலும், இறையச்சத்தின் முன்மாதிரி நபி யூஸுஃப் (அலை) அவர்கள் தனிமையில் இருந்த போதும் கூட, அல்லாஹ்வின் அருளால் தன்னுடைய கற்பை, தன்னுடைய எஜமானியிடமிருந்து தற்காத்துக் கொண்டார். இவரும் மக்களில் கண்ணியத்திற்குரியவர் என்றார்கள்.

எனவே, தனிமையில் இறையச்சம் உள்ளவர்கள் கண்ணியத்திற்குரியவர்களாவர்.

وكان عمر بن الخطاب رضي الله عنه يسير في طريق ومعه الأحنف بن قيس، فمروا على راعي غنم فقال له عمر: يا راعي الغنم! بعنا شاة من هذه الغنم، فقال الراعي: إنني والغنم مملوكين لسيدي ولا أملك شيئاً، فقال: بعنا شاة وقل: أكلها الذئب، فرفع الغلام بصره إلى السماء وقال: وأين الله؟ فبكى عمر رضي الله عنه حتى اخضلت لحيته، وذهب إلى سيد هذا الراعي واشتراه وأعتقه، وقال: كلمة أعتقتك في الدنيا وأرجو الله أن تعتقك من النار يوم القيامة.

உமர் (ரலி) அவர்கள் ஒரு நாள் அஹ்னஃப் இப்னு கைஸ் (ரஹ்) அவர்களுடன் வீதியொன்றின் வழியாக சென்றார்கள்.  அப்போது அங்கே ஒரு இடையன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அவனருகே சென்ற உமர் (ரலி) அவர்கள் "இடையனே! இந்த ஆடுகளில் ஒரு ஆட்டை விலைக்கு தருகிறாயா?" என்று கேட்டார்கள்.

அதற்கவன் "நானும் இந்த ஆடுகளும் என் எஜமானனுக்கு சொந்தமானவர்கள்! நான் இந்த ஆடுகளுக்கு சொந்தக்காரன் அல்ல. எனவே, உங்களுக்கு நான் இதை விற்பனை செய்ய முடியாது' என்று கூறினான்.

அப்போது, உமர் (ரலி) அவர்கள் "எங்களுக்கு ஒரு ஆட்டை விற்று விடு. உன் எஜமான் ஒரு ஆடு குறைகிறதே? அது எங்கே என்று கேட்டால் அந்த ஆட்டை ஓநாய் அடித்துச் சாப்பிட்டு விட்டது! என்று சொல்லி விடு"  என்றார்கள்.

அதற்கு அந்த இடையன் " வானத்தின் பக்கம் பார்த்தவாறு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எங்கே சென்று விட்டான்? இந்த காரியங்களை எல்லாம் அவன் பார்த்துக் கொண்டு இருக்க வில்லையா?" என்று கேட்டான்.

அது கேட்ட உமர் (ரலி) அவர்கள்"தங்களது தாடி நனையும் அளவுக்கு அழுதார்கள். பின்னர் அந்த ஆட்டு இடையனோடு சென்று அவன் எஜமானிடம் அவனை விலைக்கு வாங்கி உரிமை விட்டார்கள். 

பின்னர் அவனை நோக்கி "நீ சொன்ன ஒரு வார்த்தை உலகில் நீ விடுதலை பெறுவதற்கு காரணமாக அமைந்தது. அதே வார்த்தையால் நாளை மறுமையில் நரகில் இருந்தும் உமக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்று நான் ஆதரவு வைக்கிறேன்" என்று கூறினார்கள். ( நூல்: பிதாயா வன் நிஹாயா, அல்பயானு வத் தப்யீன் )

10. முகஸ்துதிக்காக அமல்கள் செய்வது.

قال النّبيّ صلّى الله عليه وسلّم : « أَخْوَفُ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ " . قَالُوا : يَا رَسُوَلَ اللَّهِ وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ ؟ قَالَ : " الرِّيَاءُ ، يَقُولُ اللَّهُ تَعَالَى لَهُمْ يَوْمَ يُجَازِي الْعِبَادَ بِأَعْمَالِهِمْ : اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ لَهُمْ فِي الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ خَيْرًا » رواه أحمد .

"நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரியா (முகஸ்துதி)என்று பதிலளித்தார்கள். 

நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காகச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி) ( நூல்: அஹ்மத் )

இவ்வுலகில் யார் முகஸ்துதிக்காக நற்காரியங்கள் புரிந்தார்களோ அவர்களை இறைவன் மறுமை நாளில் அம்பலப்படுத்துவான்; அடையாளப்படுத்துவான்.

 

مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ

நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள், “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகின்றாரோ அவர் பற்றி அல்லாஹ் (மறுமையில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் (மறுமையில்) அம்பலப்படுத்துவான்என்று கூறியதைக் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி), ( நூல்: புகாரி )

يَكْشِفُ رَبُّنَا عَنْ سَاقِهِ، فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ، فَيَبْقَى كُلُّ مَنْ كَانَ يَسْجُدُ فِي الدُّنْيَا رِيَاءً وَسُمْعَةً، فَيَذْهَبُ لِيَسْجُدَ، فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்.

முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும். அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ (ரலி),, ( நூல்: புகாரி )

11. பித்அத்தை செய்வது.

قال النّبيّ صلّى الله عليه وسلّم : « من عمل عملا ليس عليه أمرنا فهو ردّ  » متّفق عليه ، واللّفظ لمسلم .

எவர் மார்க்கத்தில் நாம் கட்டளையிடாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துவாரோ அது நிராகரிக்கப்படும்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

المَدِينَةُ حَرَمٌ مِنْ عَيْرٍ إِلَى كَذَا، فَمَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلًا

மதீனா நகரம் அய்ர்எனும் மலையிலிருந்து இன்ன (ஸவ்ர்) இடம் வரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துகிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும் அவன் புரிந்த கடமையான வழிபாட்டையும் கூடுதலாக வழிபாட்டையும் அவனிடமிருந்து அல்லாஹ் ஏற்கமாட்டான். ( நூல்: புகாரி )

قال الإمام مالك رحمه الله: من ابتدع في الإسلام بدعة يراها حسنة فقد زعم أن محمدا خان الرسالة لأن الله يقول “اليوم أكملت لكم دينكم (المائدة: 3)

الإعتصام للشاطبي رحمه الله

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: எவன் இஸ்லாத்தில் ஒரு பித்அத்தை உருவாக்கி அதை நன்மையாகக் கருதுகின்றானோ, அவன் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது தூதுத்துவப் பணியில் மோசடி செய்துவிட்டதாகத் தான் வாதிடுகின்றான். ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்: இன்றைய தினம் நான் உங்களது மார்க்கத்தை பூர்த்தியாக்கி விட்டேன்” (அல்மாயிதா: 3). ( நூல்: அல்இஃதிஸாம்,லிஇமாமிஷ் ஷாதிபி ).

பாக்கியம் நிறைந்த ஹவ்லுள் கவ்ஸர் நீர் அருந்த தடை!

عن عبد الله بن عمرو رضي الله عنه أنه قال : ‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : "‏ حَوْضِي مَسِيرَةُ شَهْرٍ وَزَوَايَاهُ سَوَاءٌ مَاؤُهُ أَبْيَضُ مِنْ اللَّبَنِ وَرِيحُهُ أَطْيَبُ مِنْ الْمِسْكِ وَكِيزَانُهُ كَنُجُومِ السَّمَاءِ مَنْ شَرِبَ مِنْهَا فَلَا يَظْمَأُ أَبدا " ‏

அல்கவ்ஸர்எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ( நூல்: புகாரி )

عن سهل بن سعد الخدري - رضي الله عنه - قال: سمعت النبي - صلى الله عليه وسلم -، يقول: ( أنا فَرطُكُم – أي أتقدمكم - على الحوض فمن ورده شرب منه، ومن شرب منه لم يظمأ بعده أبدا . ليردنَّ علي أقوامٌ أعرفهم ويعرفوني، ثم يحال بيني وبينهم.

நான் உங்களுக்கு முன்பே அல்கவ்ஸர்தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வர முடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். (அதை) அருந்துகிறவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்து கொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி). ( நூல்: புகாரி )

عن أبي سعيد الخدري - رضي الله عنه - قال: سمعت النبي - صلى الله عليه وسلم -، يقول: ( أنا فَرطُكُم – أي أتقدمكم - على الحوض فمن ورده شرب منه، ومن شرب منه لم يظمأ بعده أبدا . ليردنَّ علي أقوامٌ أعرفهم ويعرفوني، ثم يحال بيني وبينهم، فأقول: إنهم مني، فيقال: إنك لا تدري ما بدلوا بعدك، فأقول: سحقاً سحقاً لمن بدل بعدي )

(நான் இந்த ஹதீஸை அறிவித்தபோது) நான் கூறுவதை செவியேற்றுக் கொண்டிருந்த நுஅமான் இப்னு அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்கள் இவ்வாறுதான் ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியேற்றீர்களா?’ என்று கேட்டார்கள். நான் ஆம்என்று சொன்னேன். அதற்கவர்கள் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் இதைவிட அதிகபட்சமாக அறிவிப்பதை கேட்டுள்ளேன்” ‘(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்என்று நான் கூறுவேன்.

அதற்கு உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்என்று சொல்லப்படும். உடனே நான் எனக்குப் பின்னால்(தம் மார்க்கத்தை) மாற்றி விட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!என்று (இரண்டு முறை) கூறுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி). ( நூல்: புகாரி )

12. செய்த தர்மத்தை சொல்லிக் காட்டுவது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تُبْطِلُواْ صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالأذَى كَالَّذِي يُنفِقُ مَالَهُ رِئَاء النَّاسِ وَلاَ يُؤْمِنُ بِاللّهِ وَالْيَوْمِ الآخِرِ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا لاَّ يَقْدِرُونَ عَلَى شَيْءٍ مِّمَّا كَسَبُواْ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை” ( அல்குர்ஆன்:  2: 264 )

أَخْبَرَنَا ‏ ‏عَمْرُو بْنُ عَلِيٍّ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏ثَلَاثَةٌ لَا يَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ الْعَاقُّ لِوَالِدَيْهِ وَالْمَرْأَةُ الْمُتَرَجِّلَةُ ‏ ‏وَالدَّيُّوثُ ‏ ‏وَثَلَاثَةٌ لَا يَدْخُلُونَ الْجَنَّةَ الْعَاقُّ لِوَالِدَيْهِ وَالْمُدْمِنُ عَلَى الْخَمْرِ ‏ ‏وَالْمَنَّانُ ‏ ‏بِمَا أَعْطَى ‏

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- "மூன்று கூட்டத்தினர் சுவனம் நுழைய மாட்டார்கள்:1) பெற்றோரை நிந்திப்பவன், 2) மதுவில் மூழ்கியிருப்பவன், 3) செய்த நன்மைகளை சொல்லிக்காட்டுபவன். ( நூல் : நஸாஈ, ஹாக்கிம், பஸ்ஸார் )

13. அடைக்கலம் தந்ததை முறிப்பது.

ذِمَّةُ المُسْلِمِينَ وَاحِدَةٌ، يَسْعَى بِهَا أَدْنَاهُمْ، فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلًا

முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும் (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்). அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள் கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். ஒரு முஸ்லிம் அளித்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்.

அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம் கூடுதலான வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்க மாட்டான். ( நூல் : புகாரி )

14. இரத்த உறவுகளை முறித்து வாழ்வது.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ‘ إِنَّ أَعْمَالَ بَنِي آدَمَ تُعْرَضُ كُلَّ خَمِيسٍ لَيْلَةَ الْجُمُعَةِ، فَلَا يُقْبَلُ عَمَلُ قَاطِعِ رَحِمٍ

ஆதமுடைய மக்களின் நல்லமல்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை வெள்ளி இரவில் எடுத்துக்காட்டப்படுகின்றன. இரத்த உறவைத் துண்டித்து வாழ்ந்தவரின் நல் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ( நூல்:  அஹ்மத் )

15. இறைநம்பிக்கையாளனை கொலை செய்வது.

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّهُ سَمِعَهُ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: مَنْ قَتَلَ مُؤْمِنًا فَاعْتَبَطَ بِقَتْلِهِ، لَمْ يَقْبَلِ اللَّهُ مِنْهُ صَرْفًا، وَلَا عَدْلًا

"எவன் ஒரு முஃமினை (மார்க்க அடிப்படையிலான எந்த காரணமும் இல்லாமல்) க் கொலை செய்தானோ அவன் செய்த கடமையான வணக்கம், கூடுதலான (உபரியான)  வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்" என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )

குறிப்பிட்ட சில அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாமல் போவதும், மறுக்கப்படுவதும்....

மேலே நாம் நம்முடைய அமல்கள் அனைத்தையும் அழிக்கக்கூடிய ஆபத்தான காரணிகளைப் பார்த்தோம். இப்போது, குறிப்பிட்ட சில அமல்களை பாழாக்கும் காரணிகள் குறித்து பார்க்க இருக்கின்றோம்.

01. நாய் வளர்ப்பது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَمْسَكَ كَلْبًا، فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ، إِلَّا كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ

நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர. ( நூல்: புகாரி )

2. மது அருந்துதல்.

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَرِبَ الخَمْرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا

யார் மது அருந்துகின்றானோ அவனுடைய நாற்பது காலைகளின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.  ( நூல் திர்மிதி )

3,4,5 இந்த வகை மனிதர்கள்.

 

أَبو أُمَامَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

 ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ آذَانَهُمْ: العَبْدُ الآبِقُ حَتَّى يَرْجِعَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ

மூவரின் தொழுகை அவர்களின் காதுகளைக் கூடத் தாண்டாது. ( தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது )

1. தனது எஜமானனை விட்டும் ஓடிப்போன அடிமை தனது எஜமானிடம் திரும்பி வரும் வரைக்கும், ) 

2. தனது கணவர் தன் மீது கோபமடைந்திருந்த நிலையில் இரவைக் கழித்த பெண்மணி, 

3.:மக்களின் வெறுப்புக்குள்ளான (நிலையில் அவர்களுக்குத் தொழுகை நடாத்திய) இமாம். ( நூல்: திர்மிதீ )

மூவரின் தொழுகை அவர்களின் காதுகளைத் தாண்டாதுஎன்ற வாசகத்தின் விளக்கம் மூவரின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது என்பது பொருளாகும்.

தனது கணவர் தன் மீது கோபமடைந்திருந்த நிலையில் இரவைக் கழித்த பெண்மணிஎன்று குறிப்பிடப்படுவது, தனது கெட்ட குணங்கள் மற்றும் சுபாவங்களால்,  நடத்தைகளால், கணவனுக்குக் கட்டுப்படாது கணவனின் வெறுப்புக்குள்ளான பெண்ணைத்தான். 

இதே போன்று இன்னொரு நபிமொழியில், ‘இரவில் கணவன் அழைத்து அதற்கு மறுத்த பெண்ணை விடியும் நேரம் வரை வானவர்கள் சபிக்கின்றார்கள்என்று நபி ஸல் அவர்கள் கூறிய ஹதீஸையும் இங்கு கவனிக்க வேண்டும். 

மேற்சொன்ன காரணங்களல்லாத மார்க்கம் குற்றமாக ஆக்காத  காரணங்களுக்காக ஒரு கணவர் தனது மனைவியைக் கோபிக்கின்றார் என்றால் அப்பெண்மணி இந்த நபி மொழியின் கீழ் வர மாட்டார்.

மக்களின் வெறுப்புக்குள்ளான (நிலையில் அவர்களுக்குத் தொழுகை நடாத்திய) இமாம்என்று சுட்டிக்காட்டப்படுவது, 

மார்க்க அடிப்படையிலான காரணங்களுக்காக மக்களால் வெறுக்கப்பட்ட இமாமை மட்டும் தான் இது குறிக்கும். இதுவல்லாத உலக காரணங்களுக்காக ஒரு இமாம் வெறுக்கப்படுவார் எனில் அவரும் இந்த நபி மொழியின் கருத்துக்கு உள்ளாக மாட்டார்.

6. விதியை (களா - கத்ரை) மறுப்பது.

عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، قَالَ: كَانَ أَوَّلَ مَنْ قَالَ فِي الْقَدَرِ بِالْبَصْرَةِ مَعْبَدٌ الْجُهَنِيُّ، فَانْطَلَقْتُ أَنَا وَحُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيُّ حَاجَّيْنِ – أَوْ مُعْتَمِرَيْنِ – فَقُلْنَا: لَوْ لَقِينَا أَحَدًا مَنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلْنَاهُ عَمَّا يَقُولُ هَؤُلَاءِ فِي الْقَدَرِ، فَوُفِّقَ لَنَا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ بْنِ الْخَطَّابِ دَاخِلًا الْمَسْجِدَ، فَاكْتَنَفْتُهُ أَنَا وَصَاحِبِي أَحَدُنَا عَنْ يَمِينِهِ، وَالْآخَرُ عَنْ شِمَالِهِ، فَظَنَنْتُ أَنَّ صَاحِبِي سَيَكِلُ الْكَلَامَ إِلَيَّ، فَقُلْتُ: أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنَّهُ قَدْ ظَهَرَ قِبَلَنَا نَاسٌ يَقْرَءُونَ الْقُرْآنَ، وَيَتَقَفَّرُونَ الْعِلْمَ، وَذَكَرَ مِنْ شَأْنِهِمْ، وَأَنَّهُمْ يَزْعُمُونَ أَنْ لَا قَدَرَ، وَأَنَّ الْأَمْرَ أُنُفٌ، قَالَ: «فَإِذَا لَقِيتَ أُولَئِكَ فَأَخْبِرْهُمْ أَنِّي بَرِيءٌ مِنْهُمْ، وَأَنَّهُمْ بُرَآءُ مِنِّي»، وَالَّذِي يَحْلِفُ بِهِ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ «لَوْ أَنَّ لِأَحَدِهِمْ مِثْلَ أُحُدٍ ذَهَبًا، فَأَنْفَقَهُ مَا قَبِلَ اللهُ مِنْهُ حَتَّى يُؤْمِنَ بِالْقَدَرِ

யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் முதன் முதலில் விதி தொடர்பாக (அப்படி ஒன்று இல்லை என மாற்று)க் கருத்துத் தெரிவித்தவர் மஅபத் அல் ஜுஹனீ என்பவரேயாவார். இந்நிலையில் நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்களும் ஹஜ்அல்லது உம்ராச் செய்வதற்காக (புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் யாரேனும் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்கள் கூறிவருவதைப் பற்றிக் கேட்க வேண்டும்என்று சொல்லிக் கொண்டோம்.

அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. உடனே, நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சூழ்ந்துகொண்டு எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப்பக்கத்திலும் மற்றொருவர் அவர்களுக்கு இடப்பக்கத்திலும் இருந்துகொண்டோம். (நான் சரளமாகப் பேசக்கூடியவன் என்பதால் அன்னாருடன்) பேசுகின்ற பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டுவிடுவார் என எண்ணி நானே பேசினேன்.

அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்து கல்வி பயில்கின்றனர்என அவர்களது (நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து ஆனால் அவர்கள் விதி என்று ஏதுமில்லை எனவும் நடக்கின்ற காரியங்கள் (இறைவன் திட்டமிடாமலேயே) தற்செயலாகத்தான் நடக்கின்றன என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இத்தகையோரை நீங்கள் சந்தித்தால் அவர்களை விட்டு நானும் என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்கள் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள்.

(இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார்மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹுத் மலையளவு தங்கம் இருந்து அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கை கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றும் கூறிவிடுங்கள்). ( நூல் : முஸ்லிம் )

இன்னும் பல காரியங்கள் (பாவங்கள்) இருக்கின்றன. விரிவை அஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ்... இனியொரு சந்தர்ப்பத்தில் இது குறித்து பார்ப்போம்.

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது அமல்களை அழிக்கும் அனைத்து வகையான காரணிகளில் இருந்தும் நம்மையும் நமது அமல்களையும் காத்தருள்வானாக!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது அமல்கள் பாழாய் போவதற்கு காரணமாக இருக்கும் காரியங்களை செய்வதை விட்டும் நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

2 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு இரு உலகிலும் நற்பாக்கியத்தை தருவானாக

    ReplyDelete