இந்தியாவின்
இதயத்தில் இஸ்லாமிய சமூகத்திற்கு இடமில்லையா?
கிபி 1526 - 1530 இடையே முகலாயர்களால் உபியின் சம்பல் நகரத்தில் கட்டப்பட்ட ஜமா மஸ்ஜித்,
இந்து கோவிலை இடித்து பாபரால் கட்டப்பட்ட மசூதி என சில
ஹிந்துத்துவ கும்பலால்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பள்ளிவாசலை (இதுவரை யாரும் சொல்லாத) 500 வருடங்களுக்குப்பின் கிபி 2024 ல் வழக்காடப் படுகிறது.
அதிலும் ஆச்சரியம் என்னவெனில் நவம்பர் 19 செவ்வாய் கிழமை
தான் மனு தாக்கல் செய்யப்படுகிறது, அதே நாளில் பள்ளிவாசலை survey செய்ய குழு அமைக்க கீழ் நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க, ஒரு சில மணி நேரங்களிலேயே அந்த பள்ளிவாசலுக்கு survey செய்ய இந்த குழு விரைகிறது. நவம்பர் 19ம் தேதி survey வை முடித்த குழு மீண்டும் இரண்டாம் முறை survey செய்ய நவம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை காலை 7.30 மணிக்கு பள்ளிவாசலுக்கு
பலத்த போலீஸ் பாதுாப்புடன் செல்கிறது. உடன் ஹிந்துத்துவ கும்பலும் வருவது
குறிப்பிடத் தக்கது.
ஏற்கனவே பாபரி
மஸ்ஜிதை இழந்த முஸ்லிம்கள்,
ஞானவாபி மஸ்ஜித், ஷாஹி ஈத்காஹ் மஸ்ஜித்
எல்லாம் சதிகாரர்களின் குறியில் இருக்கும் இத்தருணத்தில் மேலும்
ஆக்கிரமிப்பு என்ற பேரில் இடிக்கப்பட்ட பல்வேறு மஸ்ஜிதுகளை தொடர்ந்து இந்த
மஸ்ஜிதும் தொடர் கதையில் இணையக் கூடாது எனக் கருதிய முஸ்லிம்கள் பள்ளிக்கு வெளியே
ஒன்று கூடினார்கள்.
(இங்கே கவனிக்க தக்க
இன்னொரு விஷயமும் உண்டு உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தலைமை நீதிபதி சந்திரசூட் ஞானவாபி
மற்றும் மதுரா மஸ்ஜித்களை survey
செய்ய உத்தரவிட்ட தாக்கம் தான் இன்று தொடர்கிறது. வரலாறு
உம்மை மன்னிக்காது சந்திர சூட்டே)
போலீசார் மீது
கல்வீசப்பட்டது என்ற காரணம் காட்டி 5 இளைஞர்களை இரக்கமின்றி
சுட்டுக் கொன்றது காவல் துறை. வன்முறையை தூண்டுவதற்கான வெறுப்பு பேச்சுக்கள் மூலமும் லத்தி சார்ச் மூலமும் காவல் துறை தான்
வேண்டுமென்றே அராஜகத்தை ஆரம்பித்தது பின்னர் அரசு வழங்கிய மற்றும் சொந்த
துப்பாக்கிகளால் திட்டமிட்டு சுட்டார்கள் என பல்வேறு நேரடி சாட்சிகள் கூறுகிறது.
அகிலேஷ் யாதவ்
மற்றும் பல்வேறு அரசியல் சமூக செயல்பாட்டாளர்கள் இது அரசின் திட்டமிடப்பட்ட
அடக்குமுறை என்று கூறுகின்றனர். இதற்கான video ஆதாரங்கள்
மக்களிடம் தெளிவாக உள்ளது என்பதையும் கூறுகிறார்கள்.
அந்த பள்ளிவாசலின்
கமிட்டி தலைவர் ஸஃபர் அலி செய்தியாளர் சந்திப்பில் தான் பார்த்த சாட்சியத்தை
ஊடகத்தின் வாயிலாக பேசிய பின் அவரையும் கஸ்டடியில் வைத்துள்ளது காவல்துறை.
அப்பட்டமாக தெரியும் இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு பின்னும் முஸ்லிம் அல்லாத
தலைவர்கள்,
பொதுசமூகம் மௌனம் காக்குமெனில்
அவர்களின் நயவஞ்சகத்தை என்னவென்று சொல்வது.
முஸ்லிம் சமூகத்தை
பொறுத்தவரை தன் இன்னுயிரே போனாலும் இனி மஸ்ஜிதுகளை அபகரிக்க விட மாட்டோம் என்ற
உறுதியைத்தான் பாடமாக பெற கடமைபட்டிருக்கிறோம்
இறை இல்லதிற்காக
இறந்த நயீம் (28),
முஹம்மத் பிலால்(25), முஹம்மத் கைஃப்(17), நோமான் மற்றும் அயான் ஆகியோரை அல்லாஹ் ஷுஹதாக்களின் பட்டியலில் சேர்த்து
உயர்ந்த சுவனத்தை தருவானாக! அவர்களை இழந்து வாடும் உறவுகளுக்கு பொறுமையையும்
உறுதியையும் தருவானாக!
இந்தியாவின்
மிகப்பெரிய மாநிலங்களில் உத்திரப்பிரதேசமும் ஒன்று. இந்தியாவின் இதயம் என்று உத்திரப்பிரதேசத்திற்கு ஒரு பெயர் உண்டு.
உத்திரப்பிரதேச
முஸ்லிம் சமூகம் அங்கே பன்னெடுங்காலமாக பிரச்சினைகளை மட்டுமே எதிர் கொண்டு
வருகிறது.
பாபரி மஸ்ஜித்
பிரச்சினை முதற் கொண்டு தற்போது வரை இந்தியாவின் மாநிலம் ஒன்றில் ஒரு சமூகம்
தொடர்ந்து அதிகமான நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும், உயிரிழப்புகளையும்,
கைதுகளையும் சந்தித்து வருகிறது என்றால் அது உத்திரப்
பிரதேச மாநிலத்தில் தான்.
தற்போது சம்பால்
ஷாஹி ஜும்ஆ மஸ்ஜித் விவகாரம் கலவரமாக மாறி 5 ஷஹீதுகளையும் 25 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டும் உள்ள தகவல்கள் உள்ளபடியே
இந்திய முஸ்லிம் சமூகத்தை அச்சமடையச் செய்துள்ளது.
இந்திய முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள்…
உணவு, உடை,
உறைவிடம், தொழில், வழிபாட்டுத் தலம்,
குடியுரிமை, வெறுப்புப் பேச்சு, கைது நடவடிக்கை,
பாலியல் வன்புணர்வு, கர் - வாப்ஸி தாய் மதம்
திரும்புதல், லவ் ஜிஹாத் என்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டு
கட்டமைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் -ன் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முன்னோடி
மாநிலமாக உ.பி மாறி வருகிறதோ என அச்சம் கொள்ளச் செய்கிறது.
இந்திய மக்கள்
தொகையில் 13.4
சதவீதம் இருப்பதாக சொல்லப்படும் இந்திய முஸ்லிம் சமூகம்
கலவரத்தில் 65
சதவீதம் கொல்லப்படுகின்றார்கள் என்கின்றார் தேசிய காவல்துறை
அகாடமியின் ஆய்வாளர் வி.என் ராய்.
இந்திய மக்கள்
தொகையில் 13.4
சதவீதம் இருப்பதாக சொல்லப்படும் இந்திய முஸ்லிம் சமூகம்
சிறைச்சாலைகளில் 21
சதவீதம் அடைபட்டு கிடக்கின்றனர் என்கிறது தேசிய
குற்றப்புலணாய்வு புள்ளி விவரம்.
இந்திய மக்கள்
தொகையில் 13.4
சதவீதம் இருப்பதாக சொல்லப்படும் இந்திய முஸ்லிம் சமூகத்தின்
சொத்துக்கள்,
உடமைகள், நிறுவனங்கள், கடைகள் மட்டுமே கலவரங்களின் போது பெருத்த சேதாரத்தை சந்திக்கின்றது என்கிறது
கலவரங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு கமிஷன்களின் ஆய்வறிக்கை.
மொத்தத்தில்
முஸ்லிம்கள் என்பதற்காகவே இந்த தாக்குதல்கள், சேதாரங்கள், சிறைச்சாலைகள்,
உயிர்ப்பலிகள் நிகழ்த்தப்படுகின்றன என்றால் அது மிகையல்ல
1) உணவு
இந்தியாவில், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக, வைத்திருந்ததாகக் கூறி
குறிப்பிட்ட கும்பலால் அடித்துக்கொல்லப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இப்படியான
சூழலில்,
பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடக்கும் உபி மற்றும் பாஜக
தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் மகாராஷ்டிரா மற்றும் இதர பாஜக ஆளும்
மாநிலங்களில் இந்தப் படுகொலைகள் நாள் தோறும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
இதில் வெட்கக்கேடு
என்னவென்றால் உலக அளவில் மாட்டிறைச்சி அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின்
பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா இருக்கிறது.
2) உடை
மத்தியில் பிரதமர்
நரேந்திர மோடியும்,
உ.பி.யில் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியும் இருப்பதால் புர்கா
அணியத் தடை செய்ய வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன் என்று உ.பி அமைச்சர்
ரகுராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
உ.பி யின் பல
கல்லூரிகளில் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், புர்கா அணிந்து ஓட்டு போடச் சென்ற பெண்களை புர்காவை கழற்றச் செய்த அவலங்களும்
உ.பியில் அரங்கேறி இருக்கிறது.
3) உறைவிடம்
புல்டோசர் கொண்டு
முஸ்லிம்கள் வீடுகளை இடித்து அவர்களை நடுத்தெருவில் நாதியற்றவர்களாக்கும் சூழல்
உ.பியில் அதிகரித்து வருகிறது.
The
Housing and Land Rights Network (HLRN) has compiled alarming statistics on
these demolitions. Its 2024 report reveals that from 2022 to 2023,
approximately 1,53,820 homes were demolished, displacing over 7,38,438 people.
From 2017 to 2023, bulldozer operations affected more than 10.68 lakh people.
The number of demolitions has only increased, with 2,22,686 homes destroyed in
2022 and 5,15,752 in 2023 alone. The report notes that 59% of these evictions
were carried out under the pretext of slum clearance, land clearance, or urban
beautification.
உத்திரப் பிரதேசம்
மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் கடந்த (2017 - 2023) 6 ஆண்டுகளில் 15
லட்சம் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது. 70 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாக நிராயுதபாணியாக ஆக்கப்பட்டுள்ளதாக
ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ( பார்க்க:- ஆங்கிலத்தில் ...https://clarionindia.net/bulldozer-justice-over-15-lakh-homes-razed-in-two-years-70-lakh-displaced/?amp=1)
4) தொழில்
உத்திரப்
பிரதேசத்தில் முஸ்லிம்கள் நடத்தும் இறைச்சி கடைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடி சீல்
வைக்கப்பட்டுள்ளது. மேலும்,
ஏதாவது கலவரம் ஏற்படும் போது முஸ்லிம் சமூகத்தின் கடைகள்
மற்றும் பொருட்கள் களவாடப்படுவதும், தீயிட்டு கொளுத்தி
எரிக்கப்படுவதும் கடந்த பல ஆண்டுகளாக வாடிக்கையாகி இருக்கிறது
5) வழிபாட்டுத்தலம்
பாபரி மஸ்ஜிதைத்
தொடர்ந்து இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட மஸ்ஜிதுகள் கோயில்களை இடித்து அதன் மேல்
கட்டப்பட்டுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி அதை மக்களிடையே பரப்பி
நீதிமன்றங்கள் வழியாக கையகப்படுத்தும் பெரியளவிலான திட்டம் தீட்டப்பட்டு தயார்
நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
6) வெறுப்புப்பேச்சு
முஸ்லிம் வெறுப்பை
முன் நிறுத்தி இந்தியாவில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பெரிய அளவிலான கட்டமைப்பை
நோக்கி ஃபாசிஸம் முன்னேற்றம் அடைந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
ஏழு கட்டங்களாக
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது முதல் கட்ட தேர்தல்
நடந்து முடிந்த நிலையில் பிரதமர் மோடி உட்பட பாஜகவின் தலைவர்கள் தங்களுடைய தேர்தல்
பிரச்சாரத்தின் போது முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரத்தையே பல்வேறு மாநிலங்களில்
தேர்தல் பரப்புரையாக முன் வைத்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
இந்தியாவில்
பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம் வெறுப்புப் பேச்சுக்கள் காணப்படுகின்றன
கடந்த ஏழு
ஆண்டுகளில்,
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு-பேச்சு
குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் 500% அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தெரிவித்துள்ளது.
80% வெறுப்புப் பேச்சு
நிகழ்வுகள் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் வெளிப்பட்டதாக சிஜேபி அறிக்கை
மேலும் வெளிப்படுத்தியுள்ளது.
அதிகபட்சமாக உத்தரப்
பிரதேசத்தில் 243
வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வெறுப்புப் பேச்சு
என்பது முஸ்லிம்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள்,
நடைமுறைகள் ஆகியவையாகும்.
மேலும், சமூக ஊடகங்கள் ஊடாக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் வழியாக முஸ்லிம் சமூகத்தைப் பற்றி தவறான செய்திகளை தொடர்ந்து
காட்சிப்படுத்தல் மற்றும் பரப்புதல்.
7) தாய் மதம் திரும்புதல்.
இந்துவாக இருந்து
இஸ்லாத்தை தழுவிய மக்களை வலுக்கட்டாயமாக மீண்டும் இந்துவாக மாற்றும் முயற்சிகள்
ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
2013 டிசம்பர் 25 அன்று உத்திர பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள்
தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்பினர். இந்த முக்கியமான நிகழ்வு
குறித்த செய்திகளை ஆஜ்தக்,
ஜாக்ரன் போன்ற பிரபல ஹிந்தி பத்திரிகைகள் விரிவாக
வெளியிட்டன.
இஸ்லாமோ போபியா
மூலம் விதைக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய பீதியும் அச்சமும், முஸ்லிம்கள் குறித்த வெறுப்பும் காழ்ப்புணர்வும் தற்போது அதன் கோர விளைவுகளை சங்கிகள் முஸ்லிம் உம்மத் மீது காட்டத் தொடங்கி உள்ளனர்..
1. முஸ்லிம்களை
இஸ்லாமிய நெறிகளைப் பின்பற்றுவதில் இருந்தும் தூரமாக்க வேண்டும்..
وَدَّ
كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ
كُفَّارًا حَسَدًا مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ
الْحَقُّ فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ إِنَّ اللَّهَ
عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
“வேதம் அருளப்பட்டவர்களில்
பலர் நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு விட்டதற்குப் பின்னர் உங்களை எவ்விதத்திலாவது
நிராகரிப்பவர்களாய் திருப்பி விட வேண்டும் என விரும்புகின்றார்கள். சத்தியம்
தமக்கு தெளிவாகி விட்ட பின்னரும் தங்களிடமுள்ள பொறாமையின் காரணமாக இவ்வாறு செய்ய
முனைகின்றனர்”.(
அல்குர்ஆன்: 2: 109 )
2) முஸ்லிம்களை இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டும்.
يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ
وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
அல்லாஹ்
கூறுகின்றான்: “இவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால் ஊதி அணைத்து விட
விரும்புகின்றார்கள். ஆனால், அல்லாஹ்வின் முடிவு
என்னவெனில் தன் ஒளியை முழுமையாகப் பரப்பியே தீர்வது என்பதாகும். இறை
நிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!”. ( அல்குர்ஆன்: 61:
8 )
1) ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கக் கூடாது.
عن أبي
ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال
من لم
يهتم بأمر المسلمين فليس منهم
أخرجه
الطبراني في "المعجم الأوسط" (1/29)
“முஸ்லிம் சமூகத்தின்
விவகாரங்களில் யார் ஒதுங்கி இருக்கின்றார்களோ, கவலைப் படாமல்
இருக்கின்றார்களோ அவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்களே அல்லர்” என நபி {ஸல்}
அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: தப்ரானீ )
தபூக்
யுத்தத்திற்கு வராமல் ஊரிலேயே தங்கி விட்டவர்களின் நிலைமை, அவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார நெருக்கடி, அவர்களின் மன்னிப்பு என பேசி வந்த இறைவன் தொடர்ந்து அவர்களின் செயல் குறித்து
ஆதங்கத்துடன் பதிவு செய்வதை அவ்வளவு எளிதாக ஒரு முஃமின் கடந்து போய்விட முடியாது.
مَا
كَانَ لِاَهْلِ الْمَدِيْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ
يَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَ لَا يَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ
نَّـفْسِهٖ ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ لَا يُصِيْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا
مَخْمَصَةٌ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَطَــٴُـــوْنَ مَوْطِئًا يَّغِيْظُ
الْكُفَّارَ وَلَا يَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّيْلاً اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ
عَمَلٌ صَالِحٌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَۙ
மதீனா வாசிகளானாலும்
சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும்
தகுதியுடையதல்ல;
ஏனென்றால்
அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி,
காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து
அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு
நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின்
கூலியை வீணாக்க மாட்டான்.
وَلَا يُنْفِقُوْنَ نَفَقَةً صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً وَّلَا يَقْطَعُوْنَ وَادِيًا اِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப் பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை; அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான். ( அல்குர்ஆன்: 9: 120 )
2) பிரார்த்தனை கேட்க வேண்டும்....
رَبَّنَا
لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ
عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا
وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا
وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (286)
(முஃமின்களே! பிரார்த்தனை
செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!
எங்கள் இறைவா!
எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக!
எங்கள் இறைவா!
எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை
மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி
செய்தருள்வாயாக!” ( அல்குர்ஆன்: 2:
286 )
3) மஸ்ஜித்களை பாதுகாக்க உறுதியேற்க வேண்டும்.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் இழந்த இறையில்லங்கள் எத்தனை தெரியுமா?
நாம் 1992 –ல் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால், இந்த தேசத்தில் இடிக்கப்பட்ட, தரைமட்டமாக்கப்பட்ட
பள்ளிவாசல்களின் எண்ணிக்கை 12,000 த்தை தாண்டியது.
டிசம்பர் 21, 2010 அன்று, “ஆலய இடிப்பில் அவமதிக்கப்படும் மதம்’ என்ற தலைப்பில்
ஹைதராபாத்தைச் சேர்ந்த உமர் காலித் என்ற கட்டுரையாளர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில்
(அதன் தமிழாக்கம் இது!)
1992ல் இடிக்கப்பட்ட
பாபரி மஸ்ஜித், 1995ல் காஷ்மீரில் இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில்
பாதிப்புக்குள்ளான சரார்-இ-ஷெரீஃப்
இந்த வழிபாட்டுத்
தலங்கள் மட்டுமே நமக்கு வெளியில் தெரிபவை. இவை தவிர்த்து இன்னும் அழிக்கப்பட்ட
பள்ளிவாசல்கள்,
எதிரிகளால் அபகரிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கை நம்மை
திகைப்பில் ஆழ்த்துகின்றது.
சண்டிகர், ஹரியானா,
ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் ஆகிய பகுதிகள்
அடங்கிய பழைய பஞ்சாபில் 12,000
பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன; அல்லது இந்துக் கோயில்களாக, கடைகளாக, வீடுகளாக,
மாட்டுத் தொழுவங்களாக அதை விடவும் கேடாக மாற்றப்பட்டுள்ளன.
இதற்குக் கூறப்பட்ட காரணமும், கற்பிக்கப்பட்ட நியாயமும் என்ன?
1947ல் நாடு
பிரிவினையின் போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் உள்ள குருத்துவாராக்கள், கோயில்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத்
தான் என்று பதில் தரப்படுகின்றது. முஸ்லிம்கள் இந்தப் பகுதிகளில் வாழவில்லை என்ற
பொய்யான,
போலியான காரணங்களைச் சொல்லி, பள்ளிவாசல்களை அவற்றின் பழைய பயன்பாட்டுக்குக் கொண்டு வர விடாமல்
அரசியல்வாதிகள் தடுக்கின்றனர்.
ஆனால் உண்மை நிலை
என்ன? பீகாரிலிருந்தும் உத்தர பிரதேசத்திலிருந்தும் அதிகமதிகம் முஸ்லிம்கள்
பஞ்சாபிற்குக் குடிபெயர்ந்து பண்ணைத் தொழிலாளர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
முன்னாள் மன்னர்
மாநிலங்கள் என்று அழைக்கப்பட்ட ஆல்வார், பாரத்பூர் மாநிலங்களில்
இருந்த பள்ளிவாசல்கள் அனைத்தும் அண்டை மாநிலமான பஞ்பாப் பள்ளிவாசல்கள் சந்தித்த
அதே கதியைத் தான் சந்தித்தன.
நாடு விடுதலையின்
போது டெல்லியில் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டன. லாகூரில் உள்ள
கோயில் மற்றும் குருத்துவாராக்கள் தாக்கப்பட்டதற்குப் பழி வாங்கும் படலம் தான்
என்று இந்த அக்கிரமத்திற்குக் காரணம் சொல்லப்பட்டது.
மூன்று வகை சூழ்ச்சிகள்...
அவர்கள்
பள்ளிவாசல்களை,
தர்ஹாக்களை, முஸ்லிம்கள் உருவாக்கிய
நினைவுச் சின்னங்களை அழிக்க மூன்று வகையான தந்திரங்களை, சூழ்ச்சிகளை கையாளுகின்றனர்.
1.கலவரங்களின் மூலம்
அழித்தல். 2.தொல்லியல் துறை மூலம் அழித்தல். 3. நீதிமன்றங்களின்
துணை கொண்டு அழித்தல்.
1.கலவரங்களின் மூலம் அழித்தல்.
இந்தியாவில்
பாழாக்கப்பட்ட,
பறிக்கப்பட்ட 12,000 பள்ளிவாசல்களைப்
புள்ளி விபரங்களுடன் தருகின்றார்.
1947க்குப் பின்
நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் பள்ளிவாசல்களும், தர்ஹாக்களும் தரைமட்டமாக்கப்பட்டன.
1979ல் மத்திய
பிரதேசத்தில் 55
பள்ளிவாசல்கள்!, 1989ல் பாகல்பூர் இரத்தக் களரியில், வகுப்புக் கலவரத்தில் 57 பள்ளிவாசல்கள்!,1990ல் ஹைதராபாத் கலவரத்தில் பலியான 77 முஸ்லிம்
கட்டடங்கள்!
2002ல் குஜராத் இனப்
படுகொலையில் 236
பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் புனிதத்
தலங்கள்,
தர்ஹாக்கள் தகர்த்தெறியப்பட்டன.
குஜராத்தைப் புகழ்ந்து
கவிதை பாடிய “வலி தக்கானி’
என்பவரின் நினைவுக் கோபுரமும் பெருக்கெடுத்து ஓடிய காவி
பயங்கரவாத வெள்ளத்தில் அடித்து நொறுக்கப்பட்டது.
2. தொல்லியல் துறை மூலம் அழித்தல்.
தொல்லியல்
துறையும் தன் பங்குக்கு நினைவுச் சின்னம் என்ற பெயரில் முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசல்களில்
தொழுவதற்குத் தடைக் கல்லாக நிற்கின்றது.
தொல்லியல் துறை
தன் கட்டுப்பாட்டில் 118
பள்ளிவாசல்களை வைத்திருக்கின்றது. அந்தப் பள்ளிகளில்
தொழுகைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நிஜாம் ஆட்சி செய்த
ஹைதராபாத்தின் எல்லைகளில் உள்ள பள்ளிவாசல்களைத் தவிர வேறு பள்ளிவாசல்களில்
தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முஸ்லிம் மக்கள்
இல்லை என்ற காரணத்தைக் காட்டி பள்ளிவாசல்களைத் தொல்லியல் துறை பூட்டி
வைத்திருக்கின்றது. ஆனால் அவ்வூர்களில் முஸ்லிம்கள் வாழத் துவங்கிய பின்னரும்
பள்ளிவாசல்களை முஸ்லிம்களிடம் தர மறுக்கின்றது.
3. நீதிமன்றங்களின் துணை கொண்டு அழித்தல்.
பாபரி மஸ்ஜித்
விவகாரம் இதற்கு முழுச் சான்றாகும்.
முஸ்லிம் சமூகம் செய்ய வேண்டிய முதல் பணி என்ன?
1992 –ம் ஆண்டு டிசம்பர்
6 பாபரி மஸ்ஜிதை இடித்த கையோடு ஃபாசிஸ சங்கிகள் தங்களின் அடுத்த இலக்குகள் காசி, மதுரா உட்பட ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்கள் என அறிவித்தார்கள். மேலும், 100 ஆண்டு கால ஆர்.எஸ்.எஸ்ஸின் அஜெண்டாவை இடதுசாரிகள் மற்றும் நடுநிலை வரலாற்று
ஆய்வாளர்கள் நமக்கு எச்சரிக்கை வடிவில் தந்து கொண்டே இருந்தார்கள். ஆனால், கடந்த 30
ஆண்டுகளாக நாம் இயக்க மற்றும் மஸாயில் ரீதியான
தர்க்கங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம். காங்கிரஸும் நீதிமன்றமும்
பார்த்துக் கொள்ளும் என்று கனவு கண்டு கொண்டிருந்தோம்.
எதிர்வரும்
காலங்களிலும் நாம் இது போன்று அலட்சியமாக இருந்து விடுவோம் என்றால் நமது
வழிபாட்டுத்தலங்கள் ஒவ்வொன்றும் இது போன்று நம்மிடம் இருந்து பறிக்கப்படும்.
இடிக்கப்படும்,
அழிக்கப்படும். நவூதுபில்லாஹ்... அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
அதன் முதற்கட்டமாக
கோயிலை இடித்து தான் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது என்கிற வரலாற்றுத் திரிபு
பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். முஸ்லிம்கள் பள்ளிவாசலை புனிதமாக கருதுவார்கள்.
பிறமதங்களையும்,
பிற மதத்தவர்களையும் பாதுகாப்பார்கள், பிற மதவழிபாட்டுத்தலங்களை முஸ்லிம்கள் இடிக்கவில்லை இடிக்கவும் மாட்டார்கள்
என்ற கருத்தாக்கத்தை வெகுஜன இந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
அடுத்து, கலவரங்களின் போது பள்ளிவாசல்களை தாக்குவதை, இடிப்பதை அவர்கள்
கொள்கையாகவே வைத்திருக்கின்றார்கள். சமீபத்திய டெல்லி கலவரத்தின் போது டெல்லியின்
மஸ்ஜிதுகள் தாக்கப்பட்டதும், தமிழ் மாநில ஜமாஅத்துல்
உலமா சபையின் சார்பாக புணரமைத்ததும் நாம் அறிந்த செய்தியே.
எனவே, எதிர்வரும் காலங்களில் கலவரத்தின் போது மஸ்ஜிதுகள் தாக்கப்படாமல் இருக்கவும், முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்கள், உயிர்கள் ஆகியவற்றுக்கு
சேதம் ஏற்படாமல் இருக்கவும் நாம் முன்னேற்பாடுகளை செய்து வைக்க வேண்டும்.
4. தவறான நோக்கத்துடன் ஒரு பள்ளிவாசல் கட்டப்படுமானால் அதை முஸ்லிம்களே இடித்து
விடுவார்கள்.
وَٱلَّذِينَ
ٱتَّخَذُواْ مَسْجِداً ضِرَاراً وَكُفْراً وَتَفْرِيقاً بَيْنَ ٱلْمُؤْمِنِينَ
وَإِرْصَاداً لِّمَنْ حَارَبَ ٱللَّهَ وَرَسُولَهُ مِن قَبْلُ وَلَيَحْلِفُنَّ
إِنْ أَرَدْنَا إِلاَّ ٱلْحُسْنَىٰ وَٱللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ }
இன்னும் (இஸ்லாம்
மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு
(நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு
உண்டுபன்னவும்,
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப்
போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்; ''நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை"" என்று
நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள்
என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
لاَ تَقُمْ فِيهِ أَبَداً لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقْوَىٰ
مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن
يَتَطَهَّرُواْ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُطَّهِّرِينَ
ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப
தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது அதில் நீர் நின்று
(தொழவும்,
தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது ஆங்கிருக்கும் மனிதர்கள்
தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே
விரும்புகிறான்.
{ أَفَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىٰ تَقْوَىٰ مِنَ اللَّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَم مَّنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٍ فَٱنْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَٱللَّهُ لاَ يَهْدِي ٱلْقَوْمَ ٱلظَّالِمِينَ }
யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை
அமைத்தவரா?
அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி
அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக
நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான். அவர்கள் எழுப்பிய
அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே
ஒருவடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக
ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை) . அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன். ( அல்குர்ஆன்: 9: 108-110 )
நயவஞ்சகர்கள் ‘குபா’
பள்ளிவாசலுக்கு அருகே (போட்டிப்) பள்ளி ஒன்றைக்
கட்டலாயினர். அதை நன்கு உறுதியாகக் கட்டிய அவர்கள்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்படுவதற்கு முன்பாகவே
கட்டுமான வேலையை முடித்து விட்டனர்.
பின்னர் அந்த
நயவஞசகர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களிடம் வந்து, ‘(அல்லாஹ்வின் தூதரே) நீங்கள் எங்களிடம் வர வேண்டும்;: நாங்கள் கட்டியிருக்கும் பள்ளிவாசலில் தாங்கள் தொழ வேண்டும்: அவ்வாரு தாங்கள்
தொழுவதன் மூலம் உங்கள் ஓப்புதலுக்கும் அங்கீகாரத்துக்கும் அதையே நாங்கள் சான்றாகக்
கொள்வோம்’
என்றனர்.
அந்தப் பள்ளிவாசலைத்
தங்களில் உள்ள பலவீனமானவர்களும் நோய் வாய்ப்பட்டவர்களும் குளிர் கால இரவுகளில்
பயன்படுத்திக் கொள்வதற்குக் கட்டியதாகத் தெரிவித்தனர்.
ஆனால் அதில்
தொழுவதிலிருந்து நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் பாதுகாத்து விட்டான். அப்போது
நபி(ஸல்)அவர்கள் (அந்த நயவஞ்சகளிடம்) நாங்கள் (தற்போது) பயணத்தில் உள்ளோம்.(எனவே, இப்போது அங்கு தொழ வருவது இயலாது.) எனினும், நாங்கள் (பயணத்தை முடித்துவிட்டுத்) திரும்பும் போது (வேண்டுமானால்) அல்லாஹ்
நாடினால் பார்க்கலாம்.’’
என்றார்கள்.
பின்னர் நபி
(ஸல்)அவர்கள் தபூக்கிலிருந்து மதீனாவை நோக்கி திரும்பி வந்து
கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கும் மதீனாவுக்கும் இடையே ஒரு நாள் பயணத் தொலைவு, அல்லது அதை விடக் குறைவான தூரம் தான் எஞ்சியிருந்தது.
அப்போது நபி(ஸல்) அவர்களிடம் (வானவர் தலைவர்) ஜிப்ரீல்
(அலை) அவர்கள் வந்து (நயவஞ்சகர்கள் கட்டிய) அந்த ஊறு விளைவிக்கும் பள்ளிவாசல்
(மஸ்ஜித் ளிரார்) தொடர்பான செய்தியை எடுத்துரைத்தார்கள்.
அந்த பள்ளிவாசலை
நிறுவியவர்கள்,
இறை மறுப்பை வளர்க்க வேண்டும் என்றும், தொடக்க நாள் முதல் இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசலாகிய ‘குபா’
பள்ளிவாசலின் இறை நம்பிக்கையாளர்களிடையே பிரிவினையை
ஏற்படுத்த வேண்டும் என்றும் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
எனவே அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் தாம் மதீனா வந்து சேர்வதற்கு முன்னரே அந்தப்பள்ளிவாசலைத்
தரைமட்டமாக்குவதற்காக அனுப்பி வைத்தார்கள்.
அடுத்த வசனத்தில்
(108)>
‘’(நபியே) நீர் அதில் ஒரு போதும் தொழுவதற்காக நிற்க வேண்டாம்.’’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இது நபி (ஸல்)
அவர்களுக்கு இடப்பட்ட தடையுத்தரவாகும். நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்து அவர்களுடைய
சமுதாயத்தர்குக்கும் இந்தத் தடையுத்தரவு பொறுந்தும்.ஆக> நபி(ஸல்)அவர்களுடைய சமுதாயத்தாரும் சரி> யாருமே ஒரு போதும்
அந்தப் பள்ளி வாசலில் நின்று தொழலாகாது என்பது இதன் கருத்தாகும்.
(
நூல்:: தப்ஸீர் இப்னு கஸீர் )
கோல்கொண்டாவில்
மசூதி ஒன்று இடிக்கப்பட்டதாகவும் கூறுவார்கள். கோல்கொண்டா மன்னன், தானஷா,
பல ஆண்டுகள் வரியெதுவும் கட்டாமல், அந்த பணத்தை புதைத்து மசூதி ஒன்றைக் கட்டிவிட்டான். கோபமடைந்த ஒளரங்கசீப்
(ரஹ்) மசூதியை இடிக்கச்சொன்னார்கள். மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை பதுக்கி வைத்து
அதை மறைக்க கட்டிய பள்ளிவாசலை இடிக்க உத்தரவிட்டார்கள் ஔரங்கசீப் (ரஹ்) அவர்கள்.
பள்ளிவாசல் இடிக்கப்பட்டு அதில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பணம் மீட்கப்பட்டு
அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டது.
5. இதுவும் வரலாறு தான்!! இதை நாம் தான் சொல்ல வேண்டும்..
சிவனின்
இருப்பிடமான கைலாஷ் மானசரோவர் சீனாவின் ஆதிக்கத்தில் உள்ளது.. நம் நாட்டு
விடுதலைக்குப் பிறகு,
சீனா கைலாஷ் பர்வத் (கைலாசமலை) அல்லது கைலாஷ் மானசரோவர்
மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆக்ரமித்ததால் அப்போது பிரதமராக
இருந்த ஜவஹர்லால் நேரு ஐநா அவைக்குச் சென்று, "சீனா எங்கள் பகுதியை வலுக் கட்டாயமாக ஆக்ரமித்துள்ளது, எங்கள் பகுதியை மீண்டும் எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள்" என்றார்.
இதற்குச் சீனா
தரப்பிடமிருந்து வந்த பதில்: "நாங்கள் இந்தியாவின் பகுதியை ஆக்ரமிக்கவில்லை.
எங்கள் நாட்டின் பகுதியை 1680ல் இந்தியாவை ஆண்ட
பேரரசர் பிடுங்கியதை நாங்கள் திரும்ப எடுத்துக்
கொண்டோம்".
இந்த பதில்
இன்றும் ஐநா அவையின் அதிகாரபூர்வ ஆவணங்களில் உள்ளது.
சீனா எந்த இந்தியப் பேரரசரின் பெயரை குறிப்பிட்டது தெரியுமா?
"ஔரங்சேப் - Aurangzeb".உண்மையில் ஔரங்சேப் காலத்திலும் சீனாதான் இந்தியப் பகுதியை ஆக்ரமித்தது. இதைக்
குறித்து பேரரசர் ஔரங்சேப்,
அப்போதைய சீன நாட்டின் சிங் வம்ச (Ching dynasty) மன்னர் முதலாம் ஷுன்ஜிக்கு (Shunji I) எழுதிய கடிதத்தில், "கைலாஷ் மானசரோவர் இந்தியாவின் ஒரு பகுதி. அது மட்டுமின்றி, அது எங்கள் இந்து சகோதரர்களுக்கு புனிதமான இடம். எனவே, அந்த இடத்தை விட்டுவிலகுங்கள்" என எழுதினார்.
கடிதம் எழுதி
ஒன்றரை மாதமாகியும் சீன தரப்பிடமிருந்து பதில் இல்லாததால் குமாவோன் பகுதி அரசர் பாஜ்
பஹதூர் சந்த் அவர்களின் படையுடன் இணைந்து குமாவோன் வழியாக மலையேறிச் சென்று
சீனாவைத் தாக்கி,
கைலாஷ் மானசரோவர் பகுதியை இந்தியாவுடன் மீண்டும் இணைத்தார்.
எந்த பேரரசர்
ஔரங்சேப் அவர்களை தீவிர இஸ்லாமிய அரசர் என்றும், இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் பரப்புரை செய்யப்படுகிறதோ அதே பேரரசர்தான்.
அவர்தான் இந்தியாவின் முதல் உண்மையான 'சர்ஜிகல் ஸ்டிரைக்' நடத்தியவர்.
வரலாற்றின் இந்த
பக்கங்கள்,
இந்தியா விடுதலை அடைந்த காலத்து ஐநா அவையின் ஆவணங்களில்
உள்ளன. அது மட்டுமின்றி அந்த ஆவணங்கள் நாடாளுமன்றத்திலும் பாதுகாப்பாக உள்ளன.
அந்த வரலாற்றுச்
சம்பவங்களை நீங்கள் கீழ்க்கண்ட புத்தகங்களிலும் காணலாம்.. ஹிஸ்டரி ஆஃப்
உத்தராஞ்சல் - உத்தராஞ்சல் வரலாறு. ஆசிரியர்: ஓ.சி. ஹாண்டா மற்றும் த டிராஜிடி
ஆஃப் திபத் - திபத்தின் துயரம் (அல்லது சோகமுடிவு). ஆசிரியர்: மன்மோஹன் ஷர்மா.)
6. முஸ்லிம்கள் பிற மத ஆலயங்களை அழிப்பார்களா?
فهذا
أبو بكر الصديق أول خليفة للمسلمين يوصي أمير أول بعثة حربية في عهده أسامة بن زيد
فيقول: (لا تخونوا ولا تغلوا ولا تغدورا ولا تمثلوا ولا تقتلوا طفلاً صغيرًا ولا
شيخًا كبيرًا ولا امرأة ولا تقطعوا نخلاً ولا تحرقوه ولا تقطعوا شجرة مثمرة ولا
تذبحوا شاة ولا بقرة ولا بعيرًا إلا لمأكلة وسوف تمرون على قوم فرَّغوا أنفسهم في
الصوامع فدعوهم وما فرَّغوا أنفسهم له)
உங்களிடம்
போர்செய்ய வருபவர்களிடம் மட்டுமே போர்செய்ய வேண்டும்.
மோசடி செய்யக்
கூடாது, ஏமாற்றக் கூடாது. வரம்பு மீறக் கூடாது.
பெண்களை-குழந்தைகளை-சிறுவர்களை-வயோதிகர்களை
கொலை செய்யக்கூடாது.
மதகுருமார்களை-வியாபாரிகளை-விவசாயிகளை
கொலைசெய்யக்கூடாது.
பிறமத ஆலயங்களை, மடாலயங்களை சேதப்படுத்தக்கூடாது.
தேவையின்றி
மரங்களை வெட்டவோ,கட்டிடங்களை இடிக்கவோ கூடாது. எரிக்கவோ கூடாது.
ஆடு, மாடு,
ஒட்டகம் போன்ற உயிரினங்களை கொல்லக் கூடாது.
தான் அனுப்பிய
முதல் படைப்பிரிவின் தளபதியான உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்களிடம் முதல் கலீஃபா
அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்டிப்புடன் இட்ட கட்டளையாகும் இது.
எனவே, தொடர்ந்து முஸ்லிம் மன்னர்கள் மீது கோயிலை இடித்து அந்த இடத்தில் பள்ளிவாசலை
கட்டி வைத்தார்கள் என்று குற்றம் சுமத்துவது வரலாற்று திரிபும், அவதூறும் ஆகும்.
மாறி வரும் சூழல்....
கடந்த காலங்களில்
இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பாரிய அளவிலான பிரச்சாரங்களை முன்னெடுத்த
நாடுகள் எல்லாம் தற்போது இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் ஆதரவாக குரல்
எழுப்பி வரும் சூழலை நாம் கண்டு வருகிறோம்.
அமெரிக்க இரட்டை
கோபுர தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தீவிர வாத
முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தாலிபான்களை இன்று (25/11/2024 அன்று) உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு பங்கேற்க வருமாறு சர்வதேச
நாடுகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது கவனிக்கத்தக்கதாகும்.
1940 - 1945 கால கட்டங்களில் ஸ்டாலின் ஜோஸப் தலைமையிலான ரஷ்ய அரசு நடத்திய இனப்படுகொலையின்
போது 20 லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நாடு
கடத்தப்பட்டனர். இந்த கால கட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறு நெருக்கடிகளை
ரஷ்யா கொடுத்து வந்தது.
அதில் ஒன்று
குர்ஆன் ஓதக் கூடாது. மதரஸாவில் குர்ஆன் கற்றுக் கொடுக்க கூடாது என்று சட்டம்
இயற்றியது. அத்தோடு நிற்காமல் வீடு வீடாக சென்று குர்ஆன் அனைத்தையும் பறிமுதல்
செய்தது.
ஆனால், மிகச் சரியாக 79
ஆண்டுகளுக்குப் பின்னால் இன்றைய ரஷ்ய அரசின் நீதிமன்றம்
குர்ஆனை எரித்த குற்றவாளி ஒருவனுக்கு 17 ஆண்டு காலம் சிறை
தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் "சர்வதேச உலகம் இஸ்லாத்தையும் முஸ்லிம்
சமூகத்தையும் தீவிர வாத முத்திரை குத்தி ஒதுக்கி வைப்பதாகவும், இந்த குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்" என்றும் அறிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில்
இதுவரை ஃபலஸ்தீன் மக்களை கொன்று குவித்து வந்த இஸ்ரேலுக்கு எதிராக மௌனம் காத்து வந்த சர்வதேச நாடுகள் பல, சர்வதேச நீதிமன்றம்
இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவை தேடப்படும் கொவைக் குற்றவாளியாக அறிவித்ததும்
தங்களுடைய நாட்டிற்குள்ளோ,
நாட்டின் எல்கையிலோ கால் பதித்தால் கைது செய்வோம்"
என்று பகிரங்கமாக அறிவித்திருப்பதை நாம் ஊடகங்கள் வாயிலாக பார்த்தோம்.
கடந்த பதினைந்து
ஆண்டுகளுக்கும் மேலாக நமது அண்டை நாடான இலங்கையில் சிங்கள அரசு முஸ்லிம்
சமூகத்திற்கு பல்வேறு வகையான நெருக்கடிகளை கொடுத்து வந்த நிலையில் தற்போது
அமைந்துள்ள புதிய சிங்கள அரசு "முஸ்லிம் சமூகத்தோடு இணக்கமான உறவை மேம்படுத்த
விரும்புவதாகவும்,
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடந்து
முடிந்து விட்ட சம்பவங்கள் மற்றும் கசப்பான அனுபவங்களில் இருந்து மீள
விரும்புவதாகவும்" அறிவித்துள்ளது. உண்மையில் இது நல்ல அறிகுறியாகும்.
ஆகவே, மாறி வரும் இந்த சூழலை இஸ்லாமிய உலகு தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், இது போன்ற ஆதரவுக் குரலை மேம்படுத்த சீரிய முறையில் முயற்சி மேற்கொள்ள
வேண்டும்.
அல்லாஹ்வின்
வார்த்தைகளும் அப்படித்தான் நமக்கு வழிகாட்டுகின்றன.
عَسَى
اللّٰهُ اَنْ يَّجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ الَّذِيْنَ عَادَيْتُمْ مِّنْهُمْ
مَّوَدَّةً وَاللّٰهُ قَدِيْرٌؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
உங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே
அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும்
மன்னிப்பவன்;
மிக்க கிருபையுடையவன். ( அல்குர்ஆன்: 60: 7 )
وَتِلْكَ
الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِۚ
இத்தகைய கால
மாற்றங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம். ( அல்குர்ஆன்: 3: 140 )
எப்போதும் நாம் உதவி செய்யப்பட...?
இந்த மார்க்கம்
உலகில் நிலை பெற அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு வழங்கி இருக்கும் அருட்கொடைகளை
வைத்து ஏதாவது வகையில் நாம் உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும். மேலும், முழுமையாக இறைவனின் உதவியையே நாம் சார்ந்திருக்க வேண்டும் அப்படி நாம்
இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் நமக்கு உலகின் நாலாபுறங்களில் இருந்தும் நமக்கு
உதவிக் கொண்டே இருப்பான். நம்மையும், நம் சமூகத்தையும்
எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு அப்பாலும் அவர்களை எதிர் கொள்ளும் காரியங்களில் நம்மை
தொடர்ந்து நிலை பெறச் செய்வான்.
يٰۤـاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَـنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ
اَقْدَامَكُمْ
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால்,
அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். ( அல்குர்ஆன்: 47:
7 )
اِنْ
يَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَـكُمْۚ وَاِنْ يَّخْذُلْكُمْ فَمَنْ ذَا
الَّذِىْ يَنْصُرُكُمْ مِّنْۢ بَعْدِهٖ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ
الْمُؤْمِنُوْنَ
(முஃமின்களே!) அல்லாஹ்
உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும்
இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு
உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு)
பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். ( அல்குர்ஆன்: 3: 160 )
மாநபி (ஸல்)
அவர்களுடன் முஸ்லிம் சமூகம் பயணித்த துன்பங்கள் நிறைந்த மக்கா வாழ்க்கையாகட்டும், போர் மேகம் சூழ்ந்த மதீனா வாழ்க்கையாகட்டும் அவர்களுக்கு நெருக்கடிகளைத்
தாண்டி நிம்மதியான ஒரு சூழல் நிலவியது என்றால் அது மேற்கூறிய அடிப்படையில் அவர்கள்
தங்களுடைய வாழ்க்கையை தகவமைத்துக் கொண்டதன் அடிப்படையில் தான்.
பின்னால் வந்த
கலீஃபாக்கள்,
தாபியீன்கள், இமாம்கள் என்று இரண்டு, மூன்று நூற்றாண்டுகள் வரையான கால கட்டங்களிலும் இத்தகைய சூழலையே முஸ்லிம் சமூகம்
எதிர் கொண்டது.
அதற்குப் பின்னர்
இன்று வரை இந்த சமூகம் மேலெழுந்து வர இயலாது போனதன் காரணங்கள் நமது கண் முன்னே
விரவிக் கிடக்கின்றன. நாம் விரைவாக அவைகளை சரி செய்ய வேண்டும்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்திய முஸ்லிம்களுக்கு
இனிய வாழ்வைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
நிறைய புல்லி விபர கணக்கு,!
ReplyDeleteகுறிப்பாக ஔரங்கசீப் பற்றிய செய்தி அருமை,
கடைசியில்...
மாற்றம் பற்றி பேசியதும் சூப்பர்.
காலத்திற்கே ஏற்ற சிறந்த ஆய்வு. சிறந்த வழிகாட்டல்.
ReplyDeleteமாஷா அல்லாஹ் 💐
பாரகல்லாஹ் ஹஜ்ரத்...