Thursday, 9 January 2025

ஹஜ் – உம்ரா! போலிகள் ஜாக்கிரதை!!!

 

ஹஜ் – உம்ரா! போலிகள் ஜாக்கிரதை!!!


ஹஜ் மற்றும் உம்ராவின் பெயரால் சமீப காலமாக பெரிய அளவில் மோசடிகளும் ஏமாற்று வேலைகளும் சர்வதேசம் முதற் கொண்டு நாம் வசிக்கும் நமது ஊர் வரையில் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கின்றது.

பெரிய பெரிய பணக்காரர்கள், படித்தவர்கள் முதற் கொண்டு படிக்காத சாமானிய பணக்காரர்கள் நடுத்தர செல்வந்தர்கள் என ஏமாறுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

சின்ன சின்னதாய் செய்த மோசடி இன்று லட்சங்களைத் தாண்டி கோடிகளைத் தொட்டு நிற்கிறது.

ஒரு நபர் இரண்டு நபர்கள் என்று தொடங்கி இன்று ஒரு ஊரைச் சேர்ந்த, ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய எண்ணிக்கையில் ஏமாறுபவர்கள் அதிகரித்து விட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக வந்த உம்ரா மோசடி செய்தியை நாம் உள்வாங்கி இருக்கின்றோம்.

கோவை உக்கடம் அல்-அமீன் காலனியை சேர்ந்தவர் அமீதா (62). இவர், இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்கு உம்ரா அழைத்து செல்வதற்கான ஏற்பாட்டினை செய்து வந்தார். இதற்காக, கோவை உக்கடம், கடைவீதி, கோட்டைமேடு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் 66 பேர் அமீதாவிடம் ரூ.36.50 லட்சம் கொடுத்தனர். இந்த பணத்தை அமீதா சென்னை புரசைவாக்கம் பெருமாள்பேட்டையை சேர்ந்த ஜாபர்அலி (45) என்பவரது வங்கி கணக்கிற்கு அனுப்பினார். ஜாபர்அலி நாஸ் உம்ரா சர்வீஸ்என்ற நிறுவனத்தில் ஏஜென்டாக உள்ளார். ஆனால், அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பின் ஜாபர்அலி, இஸ்லாமியர்களை உம்ரா அழைத்து செல்வதற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை.

இதுகுறித்து அமீதா கேட்டபோது, உரிய பதில் அளிக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து அமீதா, கடைவீதி போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் மோசடி பிரிவில் ஏஜென்ட் ஜாபர் அலி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஏமாற்றுபவர்கள்?

1) டிராவல்ஸ் ஏஜென்சி துவங்கும் முன்பும், துவங்கிய பின்னரும் அந்த ஏஜென்சியை நடத்துபவர் நல்லவராகவே மக்களால் அடையாளப்படுத்தப்பட்டவராக இருக்கின்றார்.

ஆனால் சில நபர்கள் அவர்களின் மேல் உள்ள நிறுவனங்களிடம், எங்கேயோ பணத்தை மொத்தமாக இழந்து ஏமாற்றப்பட்டு விடுகின்றார்கள். ஆதலால், இவர் யாரிடமெல்லாம் பணம் வாங்கினாரோ அவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க முடியாமலும், திட்டமிட்ட படி ஹஜ் மற்றும் உம்ரா பயணத்திற்கு அழைத்துச் செல்ல முடியாமலும் தம்மை நம்பி பணம் கட்டியவர்களை ஏமாற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகின்றார்கள். அவமானம் தாங்க முடியாமல் தலைமறைவாக வாழ்பவர்களும், தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

2) திட்டமிட்டே ஏஜென்சி தொடங்கி ஏமாற்றுபவர்களும் உண்டு.

3) தொடக்கத்தில் சிறப்பாக செயல்படுவது போல் காட்டிக்கொண்டு பின்னர் தங்களுடைய கை வரிசையை காட்டியவர்களும் உண்டு.

4) முன் அனுபவம் ஏதும் இல்லாமல் ஒரு ஆர்வத்தில் யாரையாவது நம்பி ஏஜென்சி ஆரம்பித்து, லாபம் பார்த்து விட்டு பின்னர் மோசடி வலையில் ஈடுபவர்களும் உண்டு.

ஏமாறுபவர்கள்?..

1) கவர்ச்சியான விளம்பரங்களால்

2) ஹரமுக்கு மிக அருகாமையில் என்ற வாசகத்தால்...

3) தமிழ்நாட்டின் அறுசுவை உணவு என்ற தூண்டலால்...

4) பணம் குறைவாக இருக்கிறது என்ற நப்பாசையால்...

5) ஏஜென்சி தொடர்பான எந்த விதமான விவரமும் இல்லாத காரணத்தால்...

6) பிறரின் பரிந்துரையை நம்பியதால்...

7) ஏஜென்சியை திறந்து வைத்தவர்கள், வழிகாட்டிகள் பிரபலமான ஆலிம்களாக இருப்பதை நம்பியதால்....

விழிப்புணர்வு அவசியம்....

முதலில் தமது ஏஜெண்ட் நம்பிக்கைக்குரிய ட்ராவல் ஏஜென்சி தான் நடத்துகின்றாரா? என்பதை முதலில் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்னர் அவர் சவூதியில் நமக்கு தர உள்ளதாக வாக்களித்துள்ள ஹோட்டல் இன்ன பிற பயன்பாடுகள் உண்மையானது தானா என்பதையும் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.

சௌதி அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டில் (2024) ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது, அவர்களில் 90% பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.

போலி நிறுவனங்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த மொத்த நபர்களில் 3% பேர் மட்டுமே அதிகாரப்பூர்வ புகார்களை தாக்கல் செய்கிறார்கள் என்றும், அதிகம் பாதிக்கப்படும் பக்தர்களின் சராசரி வயது 42 என்றும் அந்த கவுன்சில் மதிப்பிடுகிறது.

நுஸ்க் (Nusuk platform) தளத்தின் அறிமுகத்துக்கு பின்னர் ஹஜ் தொடர்பான மோசடிகள் கணிசமாகக் குறைத்துள்ளதாக கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த தளம் 126 நாடுகளைச் சேர்ந்த பக்தர்களுக்கான முன்பதிவு செயல்முறையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் ஹஜ் யாத்திரையை முன்பதிவு செய்வதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக செய்யப்பட்ட அனைத்து அடையாள ஆவணங்கள் மற்றும் நிதி பரிமாற்றங்களையும் சரிபார்க்கிறது. ( நன்றி: பிபிசி தமிழ் 14/06/2024 ) 

 

கடைசி நேர பேக்கேஜ், விலை குறைப்பு, விலை தள்ளுபடி போன்ற கவர்ச்சியான விளம்பரங்களைக் கண்டு மயங்காமல் நிதானமாக கலந்தாலோசித்து ஏஜென்சியையும், ஏஜென்ட்டையும் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

ஏமாற்றுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்...

فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ

உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்!

( அல்குர்ஆன்: 2:  283 )

وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا

ஒரு குவியலையே நம்பி ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேத முடையோரில் உள்ளனர். ஒரு தங்கக்காசை நீர் நம்பி ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். ( அல்குர்ஆன்: 3: 75 )

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، وَأَبُو أُسَامَةَ ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ – يَعْنِي أَبَا قُدَامَةَ السَّرَخْسِيَّ – قَالاَ حَدَّثَنَا يَحْيَى، – وَهُوَ الْقَطَّانُ – كُلُّهُمْ عَنْ عُبَيْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ،  – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏ ‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِذَا جَمَعَ اللَّهُ الأَوَّلِينَ وَالآخِرِينَ يَوْمَ الْقِيَامَةِ يُرْفَعُ لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ فَقِيلَ هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ ‏”‏

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- 

"அல்லாஹ் மறுமை நாளில் (விசாரணைக்காக மக்களில்) முன்னோர் பின்னோர் அனைவரையும் ஒன்றுதிரட்டும்போது, (உலகில்) மோசடி செய்த ஒவ்வொருவனுக்கும் (அவன் செய்த மோசடிக்கு அடையாளமாகக்) கொடி ஒன்று ஏற்றப்படும். பிறகு இது இன்னவருடைய மகன் இன்னவனின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)என்று கூறப்படும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். ( நூல்: புகாரி )

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا الْمُسْتَمِرُّ بْنُ الرَّيَّانِ، حَدَّثَنَا أَبُو نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ :‏ ‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ يُرْفَعُ لَهُ بِقَدْرِ غَدْرِهِ”‏

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- மோசடிக்காரன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். அது அவனது மோசடியின் அளவுக்கு (உயரமாக) ஏற்றப்படும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். ( நூல்: புகாரி )

 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُلَيْدٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ :‏ ‏ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ عِنْدَ اسْتِهِ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- மோசடிக்காரன் ஒவ்வொருவனுடைய பிட்டத்திலும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும்என்று நபி (ஸல்) கூறினார்கள். ( நூல்: புகாரி )

1)   மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றுபவனுக்கு தண்டனை கடுமையானது...

இறைத்தூதர் மூஸா நபியின் சமூகம் பிர்அவ்னின் பிடியில் இருந்து பாதுகாக்கப்பட்டு, கடல் பிளந்து வழிவிட்டு, மூஸா நபியும் அவர்களது சமூகமும் கடலைக் கடந்து கரை சேர்ந்தனர். பிர்அவ்னும் அவனது கூட்டமும் அழிக்கப்பட்டது.

மூஸா நபியின் சமூகம் வரும் வழியில் சிலை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தைக் கண்டனர். பார்த்து வணங்க அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கு ஒரு கடவுளை ஏற்பாடு செய்யுங்கள்என்று கேட்டனர். அவர்களின் உள்ளத்தில் சிலை வழிபாட்டின் மீது ஈர்ப்பு இருந்தது. அதேவேளை அவர்கள் மாட்டையும் நேசித்தனர். 

மூஸா நபி சமூகத்தில் ஸாமிரி என்ற ஒருவன் இருந்தான். இந்த ஸாமிரி என்பவன் மூஸா நபியுடன் உரையாடிக் கொண்டிருந்த ஜிப்ரீல்(அலை) அவர்களின் காலடிபட்ட மண்ணை எடுத்து வைத்திருந்தான். மூஸா நபி தலைமைப் பொறுப்பை ஹாரூண் நபியிடம் கொடுத்துவிட்டு, அல்லாஹ்வின் அழைப்பின் பெயரில் சென்று விட்டார்கள்.

அப்போது இந்த ஸாமிரி, மக்களின் நகைகளையும் அணிகலன்களையும் வாங்கினான். அவற்றை உருக்கினான். ஒரு காளை மாட்டை சிலையாக வடித்தான். அதன் மீது ஜிப்ரீல் (அலை) அவர்களின் காலடி தடம்பட்ட மண்ணைப் போட்டான். ஒரு அதிசயம் நடந்தது. அந்தக் காளை மாட்டுச் சிலை மாடு போன்று கத்தியது. அதற்கு சதையும் உண்டானது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் ஏமாந்தனர். அதிசயங்கள் ஆதாரமாகாது என்பது அவர்களுக்கு தெரியாது அல்லவா?

அல்லாஹ் சோதிப்பதற்காக கெட்டவன் மூலமாகக் கூட அதிசயத்தை வெளிப்படுத்தலாம். மக்கள் அந்த காளை மாட்டுச் சிலையை வணங்க ஆரம்பித்தனர். 

ஹாரூன் நபி இது என்ன சிலை? இதென்ன இறைவனை விட்டுவிட்டு சிலைக்கு வழிபாடு? அல்லாஹ் சோதிக்கின்றான். வழிதவறிச் சென்று விடாதீர்கள்என்று எடுத்துச் சொன்னார், கடுமையாக எச்சரித்தார். ஆனால் கேட்கும் நிலையில் அந்த மக்கள் இருக்கவில்லை. மாட்டின் மீதுள்ள மோகம் அதிகரித்தது. ஹாரூன் நபியைக் கொலை செய்யவும் முற்பட்டனர்.

மூஸா நபிக்கு அல்லாஹ் நடந்ததைச் சொன்னான். கடும் கோபத்தில் அவர் தன் சமூகத்திடம் வந்தார். ஹாரூன் நபி மீது கோபப்பட்டு விசாரித்தார். அவர் நடந்ததை விவரித்தார்.

 

மூஸா நபி, ஸாமிரியை அழைத்து விசாரித்தார். அவனைக் கண்டித்தார். நீ எங்கு சென்றாலும் தீண்டாதேஎன நீ கூறும் நிலைதான் இருக்கும். நீ வணங்கிய உனது கடவுளைப் பார்எனக்கூறி அதை எரித்து அதைக் கடலில் தூவினார். காளை மாட்டுச் சிலைக்குக் கடவுளின் தன்மை இல்லை என்பதை நிரூபித்தார்.

நடந்த இந்த நிகழ்வுகளை எல்லாம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சூரா அல் அஃராஃப் (138 – 154) மற்றும் சூரா தாஹாவில் (77 – 97) விரிவாகவே கூறுகின்றான்.

قَالَ فَمَا خَطْبُكَ يٰسَامِرِىُّ‏

ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?” என்று மூஸா அவனிடம் கேட்டார்.

قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَـبْصُرُوْا بِهٖ فَقَبَـضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِىْ نَفْسِى

அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்றுஎன (ஸாமிரி பதில்) சொன்னான்.

قَالَ فَاذْهَبْ فَاِنَّ لَـكَ فِى الْحَيٰوةِ اَنْ تَقُوْلَ لَا مِسَاسَ‌ وَاِنَّ لَـكَ مَوْعِدًا لَّنْ تُخْلَفَهٗ‌ ۚ وَانْظُرْ اِلٰٓى اِلٰهِكَ الَّذِىْ ظَلْتَ عَلَيْهِ عَاكِفًا‌ ؕ لَّـنُحَرِّقَنَّهٗ ثُمَّ لَـنَنْسِفَنَّهٗ فِى الْيَمِّ نَسْفًا‏

நீ இங்கிருந்து போய் விடு; நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) தீண்டாதீர்கள்என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு; அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்: நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த நாயனைப்பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்என்றார். ( அல்குர்ஆன்: 20: 95 97 )

2)      தன்னுடைய "பிரபலமான அடையாளத்தால்" ஏமாற்றுபவனுக்கு தண்டனை கடுமையானது...

عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: (افْتَتَحْنَا خَيْبَرَ وَلَمْ نَغْنَمْ ذَهَبًا وَلا فِضَّةً، إِنَّما غَنِمْنا الْبَقَرَ وَالإِبِلَ وَالْمَتاعَ وَالْحَوائِطَ، ثُمَّ انْصَرَفْنا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم إِلى وادي الْقُرى وَمَعَهُ عَبْدٌ لَهُ يُقالُ لَهُ مِدْعَمٌ، أَهْداهُ لَهُ أَحَدُ بَني الضِّبابِ؛ فَبَيْنَما هُوَ يَحُطُّ رَحْلَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم إِذْ جاءَهُ سَهْمٌ عائِرٌ حَتّى أَصابَ ذَلِكَ الْعَبْدَ فَقالَ النَّاسُ: هَنيئًا لَهُ الشَّهادَةُ فَقالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: بَلى وَالَّذي نَفْسِي بِيَدِهِ إِنَّ الشَّمْلَةَ الَّتي أَصابَها يَوْمَ خَيْبَرَ مِنَ الْمَغانِمِ لَمْ تُصِبْها الْمَقاسِمُ لَتَشْتَعِلُ عَلَيْهِ نارًا فَجاءَ رَجُلٌ، حِينَ سَمِعَ ذَلِكَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم، بِشِراكٍ أَوْ بِشِراكَيْنِ، فَقالَ: هذا شَيْءٌ كُنْتُ أَصَبْتُهُ فَقالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: شِراكٌ أَوْ شِرَاكانِ مِنْ نارٍ).

 

கைபர் யுத்தத்தின் போது எதிரிகளது அம்பெய்தலுக்கு இலக்காகிக் கொல்லப்பட்ட மித்அம் என்பவரைப் பார்த்து "அவர் உயிர்த்தியாகம் செய்திருப்பதால் வாழ்த்துக்கள்" என ஸஹாபாக்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறிக்கிட்டு ''முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் (அல்லாஹ்) மீது ஆணையாக! கைபரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள் பங்கிடப்படுவதற்கு முன்னர் அவற்றிலிருந்து அவர் அபகரித்த ஒரு சிறிய போர்வை (ஷம்லா) அவர்மீது நெருப்பாகப் பற்றி எரிகிறது" என்றார்கள். 

இதுகேட்டு மக்கள் பதட்டமாக இருக்கையில் செருப்பின் ஒரு தோல் வார் அல்லது இரண்டு வார்களை எடுத்துக் கொண்டு அங்கு வந்த ஒரு நபர் 'இவை கைபரில் நான் (திருட்டுத்தனமாகக கனீமத்திலிருந்து) எடுத்தவை" என்றார். 

அதுகேட்ட நபியவர்கள் ''இவை! நெருப்பிலான ஒரு வார் அல்லது நெருப்பிலான இரண்டு வார்கள்"" என்றார்கள். ( நூல்: முஸ்லிம் )

3)   தன்னுடைய "சாதுரியத்தால்" ஏமாற்றுபவனுக்கு தண்டனை கடுமையானது...

حدثنا عبد الوارث بن سفيان حدثنا قاسم بن أصبغ أخبرنا المطلب ابن سعيد أخبرنا عبد الله بن صالح قال: حدثني الليث قال: حدثني ابن الهادي عن أبي بكر بن محمد بن عمرو بن حزم قال: جاءت أروى بنت أويس إلى أبي محمد بن عمرو بن حزم فقالت له: يا أبا عبد الملك إن سعيد بن زيد بن عمرو بن نفيل قد بنى ضفيرة في حقي فأته بكلمة فلينزع عن حقي فوالله لئن لم يفعل لأصيحن به في مسجد رسول الله صلى الله عليه وسلم فقال لها: لا تؤذي صاحب رسول الله صلى الله عليه وسلم فما كان ليظلمك ولا ليأخذ لك حقاً. فخرجت وجاءت عمارة بن عمرو وعبد الله بن سلمة فقالت لهما ائتيا سعيد بن زيد فإنه قد ظلمني وبنى ضفيرة في حقي فوالله لئن لم ينزع لأصيحن به في مسجد رسول الله صلى الله عليه وسلم. فخرجا حتى أتياه في أرضه بالعقيق فقال لهما: ما أتى بكما؟ قالا: جاءتنا أروى بنت أويس فزعمت أنك بنيت ضفيرة في حقها وحلفت بالله لئن لم تنزع لتصيحن بك في مسجد رسول الله صلى الله عليه وسلم فأحببنا أن نأتيك ونذكر ذلك لك. فقال لهما: إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " من أخذ شبراً من الأرض بغير حقه يطوقه الله يوم القيامة من سبع أرضين " . فلتأت فلتأخذ ما كان لها من الحق اللهم إن كانت كاذبة فلا تمتها حتى تعمي بصرها وتجعل ميتتها فيها فرجعوا فأخبروها ذلك فجاءت فهدمت الضفيرة وبنت بنيانا فلم تمكث إلا قليلاً حتى عميت وكانت تقوم بالليل ومعها جارية لها تقودها لتوقظ العمال فقامت ليلة وتركت الجارية فلم توقظها فخرجت تمشي حتى سقطت في البئر فأصبحت ميتة.

 

மர்வான் இப்னு ஹகம் (ரஹ்) அவர்களிடம் அர்வா பிந்த் உவைஸ் எனும் பெண்மனி சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட பத்து நபித்தோழர்களில் ஒருவரான ஸயீத் இப்னு ஜைத் (ரலி) அவர்களைக் குறித்து நில அபகரிப்புக் குற்றச்சாட்டு ஒன்றை சமர்ப்பித்தார்.

அபூ அப்துல் மலிக் அவர்களே! எனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை ஸயீத் இப்னு ஜைத் அவர்கள் அபகரித்துக் கொண்டார். நீங்கள் வந்து பேசி என் நிலத்தை அவரிடம் இருந்து மீட்டுத்தரவேண்டும். இல்லையெனில், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! மஸ்ஜிதுன் நபவீக்கு முன்னால் நின்று நான் கூச்சலிடுவேன்என்று கூறினாள்.

அப்போது, மர்வான் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் நபித் தோழருக்கு நோவினை கொடுக்காதே! அவர் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார். முதலில் இங்கிருந்து கிளம்புஎன்று விரட்டி விட்டார்கள்.

அங்கிருந்து வெளியேறிய அப்பெண்மனி நேராக அம்மாரா இப்னு அம்ர், மற்றும் அப்துல்லாஹ் இப்னு ஸலமா என்பவர்களிடத்தில் சென்று மர்வான் அவர்களிடத்தில் முறையிட்டது போன்று முறையிட்டாள்.

இருவரும் ஸயீத் (ரலி) அவர்களிடம் வந்து அர்வா வின் முறையீடு குறித்தும், அவளின் மிரட்டல் குறித்தும் கூறிவிட்டு இது குறித்து உங்களின் அபிப்பிராயம் என்ன? என்று கேட்டனர்.

அப்போது, ஸயீத் (ரலி) அவர்கள் “”எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை கழுத்தில் மாலையாகக் கட்டி தொங்க விடப்படுவார்என நபி {ஸல்} அவர்கள் கூறியதை ( தங்களின் செவியைப் பிடித்துக் காட்டி ) இந்தச் செவியால் நான் கேட்டிருக்கின்றேன்.

பிறகு, நான் எப்படி அவ்வாறு அப்பெண்மனியின் நிலத்தின் ஒரு பகுதியை அபகரிப்பேன்?” என்று அவ்விருவரிடமும் கேட்டு விட்டு

தங்களின் இரு கரங்களையும் வானை நோக்கி உயர்த்தி இறைவா! அவள் பொய் சொல்கிறாள் என்றால் அவளின் பார்வையை குருடாக்கி விடு! எந்த நிலத்தை நான் அபகரித்ததாகச் சொல்கிறாளோ அதிலேயே அவளை மரணிக்கச் செய்! என துஆச் செய்தார்கள்.

அல்லாஹ் ஸயீத் அவர்களின் துஆவைக் கபூலாக்கினான். பின் நாளில் அது போன்றே அவளின் மரணமும் நடந்தேறியது.

மக்கள் கூட அல்லாஹ் அர்வாவைக் குருடாக்கியது போல் உன்னையும் குருடாக்குவானாக! என ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிலையை நாங்கள் கண்டோம் என அலாவு இப்னு அப்துர்ரஹ்மான் மற்றும், முஹம்மத் இப்னு அபூபக்ர் ஆகிய இந்த அறிவிப்பின் இரு ராவிகளும் கூறுகின்றார்கள்.  ( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபத்தில் அஸ்ஹாப் )

4)   அதீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைகளுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!...

 

قَالُ رَسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ اتَّقِ  دَعوةِ المَظلومِ فإنَّه ليس بيْنه وبيْنَ اللهِ حِجابٌ

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:- “அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும்! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை. ( நூல்: புகாரி )

قَالُ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ لِمُعَاذِ بنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إلى اليَمَنِ:  واتَّقِ دَعْوَةَ المَظْلُومِ؛ فإنَّه ليسَ بيْنَهُ وبيْنَ اللَّهِ حِجَابٌ

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை* என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். ( நூல்: புகாரி )

ஏமாறுபவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...

01)  சிரமத்துடன் செய்யும் அமல்களுக்கே கூலி அதிகம்....

சுவர்க்கமே சிரமங்கள் இன்றி பெற்றுக் கொள்ள இயலாது எனும் போது அந்த சுவர்கத்தைப் பெற்றுத் தரும் காரணிகளில் ஒன்றாக இருக்கும் அமல்களை சிரமமின்றி செய்து விட முடியுமா? என்று சிந்திக்க வேண்டும்.

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «حُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ، وَحُجِبَتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ».  صحيح البخاري

அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் கூறினார்கள்:- "மன இச்சைகளால் நரகம் சூழப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் சூழப்பட்டுள்ளது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். ( நூல்: புகாரி )

 

கடமையான நோன்பை பயணத்தில் இருக்கும் ஒருவர் அந்த நோன்பை விட்டுவிடுவதற்கு அனுமதியும் இன்னொரு நாளில் வைத்துக் கொள்வதற்கு சலுகையும் தருகிற அல்லாஹ் "பிரயாணத்தில் இருக்கும் நிலையில் நோன்பு வைப்பதே" சிறந்த செயல்பாடு என சிலாகித்து கூறுகின்றான்.

اَيَّامًا مَّعْدُوْدٰتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ‌ وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهٗ وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّـکُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர்) அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை மற்ற நாட்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும்; எனினும், அதற்கு சக்தி பெற்றிருப்போர் (அதற்குப்) பரிகாரமாக, ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்; எனினும், எவரேனும் உபரியாக நன்மைசெய்தால் அது அவருக்கு நல்லது ஆயினும், நீங்கள் (நோன்பின் பலனை) அறிவீர்களானால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்.

( அல்குர்ஆன்: 2: 184 )

ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்கள் சிரமங்கள் இன்றி இலகுவாக ஹஜ் மற்றும் உம்ரா பயணம் அமைந்து விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது அடிப்படையிலேயே தவறானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு அமலைச் செய்கின்ற போது எந்தளவு சிரமங்களும் சுமைகளும் கூடுதலாக இருக்கிறதோ அந்தளவு நன்மைகளும் கூடுதலாக இருக்கும்.

عَنْ عَائِشَةَ رضى الله عنها أَنَّ النَّبِى صلى الله عليه وسلم قَالَ لَهَا فِى عُمْرَتِهَا: «إِنَّ لَكِ مِنَ الْأَجْرِ قَدْرَ نَصَبِكِ

ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி () அவர்கள் உம்ராவின் போது 

"நிச்சயமாக! உன்னுடைய சிரமத்தின் அளவிற்கு உனக்கு கூலி கிடைக்கும்" என்று கூறினார்கள். ( நூல்: ஹாகிம் )

قال  النَّبِى صلى الله عليه وسلم: “ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات”؟ قالوا: بلى يا رسول الله قال: “إسباغ الوضوء على المكاره وكثرة الخطا إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلك الرباط

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் அறியத்தரட்டுமா?” என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், “ஆம்!  அல்லாஹ்வின் தூதரே! (சொல்லுங்கள்) என்று கூறினார்கள். அப்போது, மாநபி அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி  காலடிகளால் அதிகமான எட்டுக்களை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின்னர் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தான் கட்டுப்பாடுகளாகும்”. ( நூல்: முஸ்லிம் ) 

عن عائشة رضي اللَّه عنها قالَتْ: قالَ رسولُ اللَّهِ ﷺ: الَّذِي يَقْرَأُ القُرْآنَ وَهُو ماهِرٌ بِهِ معَ السَّفَرةِ الكِرَامِ البَرَرَةِ، وَالَّذِي يقرَأُ القُرْآنَ ويَتَتَعْتَعُ فِيهِ وَهُو عليهِ شَاقٌّ لَهُ أَجْران متفقٌ عَلَيْهِ.

ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "அல்குர்ஆனில் நன்கு தேர்ச்சி பெற்ற நிலையில் ஓதுபவர் சங்கையான மலக்குமார்களோடு இருப்பார். திக்கித் திக்கி சிரமப்பட்டு அந்தக் குர்ஆனை ஓதக்கூடியவருக்கு இரு கூலிகள் உண்டு" என மாநபி அவர்கள் கூறினார்கள்.. ( நூல்: முஸ்லிம் )

ஹரமுக்கு அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். ஆனால், தூரமாக இருந்து அங்கிருந்து நடந்து வந்து ஹரமில் அமல் செய்வது பாக்கியமாகும்.

லட்சத்திற்கு நெருக்கமான பணத்தை செலவழித்து உம்ரா செய்யச் சென்று சொகுசாக இருப்பதெல்லாம் எந்த வகையான வணக்க வழிபாட்டு ஆர்வம் என்று தெரியவில்லை 

1) வயது முதிர்வு காரணமாக 

2) நோய் காரணமாக 

 

ஹஜ்ஜாக இருக்கட்டும் அல்லது உம்ராவாக இருக்கட்டும் அவ்வளவு தூரம் வரை சென்று திரும்பி வர ஆற்றலும் சக்தியும் உள்ளவர்களுக்கு தான் ஹஜ் கடமையாகும். 

ஹஜ் அல்லாத காலங்களில் தனியாக உம்ரா செய்ய செல்வது கடமை ஒன்றும் இல்லை. உபரியான வகையைச் சார்ந்தது தான். ஆகவே, வயது முதிர்ந்த நிலையில் அமல்கள் செய்ய முடியாத அளவுக்கு சும்மா சென்று வருவது தவிர்க்கப்பட வேண்டும்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ رواه البخاري

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:- ஃபள்ல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது கஸ்அம்எனும் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் அப்பெண்ணைப் பார்க்க, அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?’ எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்!என்றார்கள். இது கடைசி ஹஜ்ஜின்போது நிகழ்ந்தது. ( நூல்: புகாரி )

3) ஹரமுக்கு தொலைவில் இருந்து வருவதற்கே விரும்ப வேண்டும்...

عن جابر رضي الله عنه؛ قال: كانت ديارنا نائية عن المسجد، فأردنا أنْ نبيع بيوتنا، فنقترب من المسجد، فنهانا رسول الله صلى الله عليه وسلم؛ فقال: «إنَّ لكم بكل خطوة درجة

وفي لفظ آخر: (خَلَتِ الْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ فَأَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَنْتَقِلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَقَال لَهُمْ: (إِنَّهُ بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ أَنْ تَنْتَقِلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ)، قَالُوا: نَعَمْ يَا رَسُولَ اللهِ! قَدْ أَرَدْنَا ذَلِكَ، قَال:(بَنِي سَلِمَةَ! دِيَارَكُمْ تُكْتَبُ آثَارُكُمْ، ديَارَكُمْ تُكتبُ أثَارُكُمْ).

 

எங்களுடைய (பனூஸலமா கோத்திரத்தார்கள்) இல்லங்கள் பள்ளிவாசலிலிருந்து தூரமாக இருந்தன. எனவே நாங்கள் பள்ளிவாசலுக்கு அருகாமையில் வீடுகளை வாங்கி அங்கே குடியேற நாடினோம். அப்போது நபி அவர்கள் எங்களைத் தடுத்து, நீங்கள் பள்ளிவாசலுக்காக எடுத்து வைக்கிற ஒவ்வொரு எட்டுக்கும் அந்தஸ்து இருக்கிறது என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் ) 

புகாரியுடைய ஒரு அறிவிப்பில்.... "மஸ்ஜிதுன் நபவீக்கு அருகாமையில் காலி இடம் ஒன்று இருக்க அதை விலைக்கு வாங்கி அங்கே குடியேறும் முயற்சியில் பனூஸலமா கோத்திரத்தார்கள் ஈடுபட்டிருக்கும் வேளையில் மாநபி அவர்களின் கவனத்திற்கு இந்த செய்தி எட்டவே, பனூஸலமா கோத்திரத்தாரை அழைத்த மாநபி () அவர்கள் "உங்கள் இடங்களை விட்டுவிட்டு நீங்கள் இங்கே இடம் பெயர்ந்து வர இருப்பதாக நான் கேள்விப்படுகின்றேனே! அது உண்மையா?" என்று கேட்க, அப்போது "பனூஸலமா கோத்திரத்தார் ஆம் என்றனர்". அதற்கு, மாநபி அவர்கள் ”பனூ ஸலமாவினரே! உங்கள் வீடு அங்கேயே இருக்கட்டும்! நீங்கள் அங்கேயே குடியிருங்கள்! நீங்கள் பள்ளிவாசலுக்காக எடுத்து வைக்கிற ஒவ்வொரு எட்டும் (நன்மைகளாக) பதிவு செய்யப்படுகிறது" என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

عن أُبَيّ بن كعب رضي الله عنه؛ قال: كان رجل لا أعلم رجلًا أبعد من المسجد منه، وكان لا تخطئه صلاةٌ، قال: فقيل له أو قلتُ له: لو اشتريتَ حمارًا تركبه في الظلماء وفي الرمضاء. قال: ما يسرني أنَّ منزلي إلى جنب المسجد، إني أريد أنْ يُكتب لي ممشاي إلى المسجد، ورجوعي إذا رجعت إلى أهلي. فقال رسول الله صلى الله عليه وسلم: «قد جمع الله لك ذلك كله»، وفي رواية: «إن لك ما احتسبت     

மதீனாவில் ஒரு நபித்தோழர் இருந்தார். அவரை விட பள்ளிக்கு வெகுதூரமாக இருந்த நபரை நான் பார்த்ததில்லை. (அதே வேளை) அவருக்கு ஒரு தொழுகை கூட தவறியதில்லை. கடுமையான இருட்டிலும் கடும்வெப்பத்திலும் ஏறிவருவதற்காக ஒரு கழுதையை வாங்கலாம் தானே என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் என்னுடைய வீடு பள்ளிக்கு அருகில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்க வில்லை. பள்ளிக்கு நான் நடந்து வருவதிலும் குடும்பத்தாரிடம் திரும்பி செல்வதிலும் (என் கால் எட்டுக்களுக்குமான) நன்மைகள் பதியப்படுவதையே விரும்புகிறேன் என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உனக்கு இந்த நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் சேர்த்துத் தருவானாக!  என கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

4) நமது பகுதி உணவுகளை நாம் விரும்புவது தவறல்ல...

وقال سعيد بن جبير: صنعت لابن عباس - رضي الله عنه - وأصحابه ألوانا من الطعام والخبيص، فقال لي: يا سعيد إنا قوم عرب، فاصنع لنا مكان هذه الألوان الثريد، ومكان هذه الأخبصة الحيس، ولولا أنك رجل منا أهل البيت ما قلت لك. [موسوعة ابن أبي الدنيا 4/ 124].

ஸயீத் இப்னு ஜுபைர் ரலி அவர்கள் இப்னு அப்பாஸ் ரலி மற்றும் அவர்களின் தோழர்களுக்காக ஒரு முறை (கலர் கலரான) வகை வகையான உணவுகளைத் தயார் செய்து வைத்தார்கள். அதைப் பார்த்த இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் நாங்கள் அரபுகள் எங்கள் பகுதியின் உணவுகளை எங்களுக்கு இன்னின்ன வகையில் (கலரில்) தயார் செய்து தாருங்கள் " என்று கூறினார்கள்.

ஆனால், அளவாக சாப்பிட வேண்டும். மேலும், உடலுக்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் இடையூறு ஏற்படாதவாறு நமது உணவுப் பழக்க வழக்கம் அமைந்திருக்க வேண்டும்.

وعن أَبي كَريمَةَ المِقْدامِ بن مَعْدِيكَرِب قالَ: سمِعتُ رَسُولَ اللَّه ﷺ يقولُ: مَا ملأَ آدمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطنٍ، بِحَسْبِ ابنِ آدمَ أُكُلاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فإِنْ كَانَ لا مَحالَةَ فَثلُثٌ لطَعَامِهِ، وثُلُثٌ لِشرابِهِ، وَثُلُثٌ لِنَفَسِهِ رواه الترمذي

நபித்தோழர் மிக்தாம் இப்னு மஃதீகரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- ஆதமின் மகன் வயிறை விடக் கெட்ட ஒரு பையை நிரப்புவதில்லை. ஆதமுடைய மகனின் முதுகெலும்பை நிமிர்த்துவதற்கு சில கவளம் உணவே அவனுக்குப் போதுமானது! அவசியமானால் அவனுடைய வயிற்றில் மூன்றில் ஒரு பகுதி உணவுக்காகவும், மற்றொரு பகுதி தண்ணீருக்காகவும், பிரிதொரு பகுதி மூச்சு விடுவதற்காகவும் (காலியாக) இருக்கட்டும்" என்று நபி அவர்கள் கூறினார்கள். ( நூல் : திர்மிதீ )

وفي رواية للبخاري: عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلًا كَانَ يَأْكُلُ أَكْلًا كَثِيرًا، فَأَسْلَمَ فَكَانَ يَأْكُلُ أَكْلًا قَلِيلًا، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ  إِنَّ الْمُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَالْكَافِرَ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ البخاري

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். ஒரு மனிதர் அதிகமான அளவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வயிறு புடைக்க சாப்பிடுவார். அப்படிப்பட்டவர் ஒரு நாள் புனித இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து அவர் குறைவாக உண்ணும் பழக்கமுடையவராக ஆகிவிட்டார். அவரின் உணவுப் பழக்கம் அடியோடு மாறி - அளவோடு உணவு உண்பவராக மாறிவிட்டார். இந்த நபரின் இந்த மாற்றம் குறித்து அண்ணலார் (ஸல்) அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு அண்ணலார் {ஸல்} அவர்கள் இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்.  இறை மறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்என்று கூறினார்கள். (  நூல்: புகாரி )

இந்த ஹதீஸிற்கு விளக்கம் இவ்வாறு எழுதப்படுகிறது. அதாவது இறை மறுப்பாளன் தன் மனம் விரும்பும் எல்லா உணவுகளையும் விதிவிலக்கில்லாமல் புசிப்பான். ஆனால், இறைநம்பிக்கையாளர் (முஃமின்) அனுமதிக்கப்பட்ட (ஹலால்) உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவார். அப்போது தான் இபாதத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும் - அதிகமாக உண்பதால் ஏற்படும் இடையூறுகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் அவருக்கு இலகுவாயிருக்கும்.                                 ( நூல்:  ஃபத்ஹுல்பாரி )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாம் பிறரை ஏமாற்றுவதில் இருந்தும், நம்மை பிறர் ஏமாற்றுவதில் இருந்தும் பாதுகாப்பானாக! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் ஆரோக்கியமான நிலையில் ஹஜ்ஜையும், உம்ராவையும், பெருமானார் {ஸல்} அவர்களின் தூய சந்திப்பையும் வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

4 comments:

  1. மிக அவசியமான தலைப்பு

    ReplyDelete
  2. ஹலோ நம்மல் பேங்கில் இருந்து பேசுறான்... நும்மல் OTP நம்பர் சொல்றான்..

    ReplyDelete
  3. காலத்திற்கேற்ப தலைப்பு உஸ்தாத்.
    அருமையான ஆக்கம். جزاكم الله خير الجزاء يا استاذ الكريم 💖🎉

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் காலத்திற்கு அவசியமான அருமையான தலைப்பு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் நன்மையை தருவானாக ஆமீன்

    ReplyDelete