Thursday, 10 April 2025

நமது வக்ஃப்! நமது உரிமை!!

 

நமது வக்ஃப்! நமது உரிமை!!


சமூகத்தில் எங்கெல்லாம் அசமத்துவம், அடக்குமுறை இருக்குமோ அங்கெல்லாம் உரிமைகள் இன்மை இருக்கும்.  அதற்கு எதிராக உரிமைகளைப் பெற வேண்டும் என்ற பேரவா இருக்கும். 

அந்த அசமத்துவம் என்பது குடிமக்கள் Vs அரசு என்பதாக இருக்கலாம்; தலித்துகள் Vs பிராமணர்கள் என்பதாக இருக்கலாம்;  பெண்கள் Vs ஆண்கள் என்பதாக இருக்கலாம்; பழங்குடியினர் Vs பழங்குடியினர் அல்லாதவராக இருக்கலாம்; பாகுபாட்டிற்கு இரையான பிராந்தியங்கள் Vs  ஆதிக்கம் செலுத்தும் பிராந்தியங்கள் என்று இருக்கலாம்  என்கிறார்  ஆந்திராவைச் சார்ந்த  மனித உரிமைப் போராளியான கே.பாலகோபால்.

தற்போது இதில் சனாதனம் (ஃபாசிஸம்) Vs சிறுபான்மையினர் (முஸ்லிம் சமூகம்) என்பதையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த அளவுக்கு பாஜக நடுவண்  (ஆளும்) அரசாக வந்த பிறகு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான  சிந்தனைகள், பிரச்சாரங்கள், நடவடிக்கைகள், சட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாங்கு சொல்லும் உரிமை, தொழும் உரிமை, முத்தலாக், ஜீவனாம்சம், மஹ்ரம் துணையின்றி ஹஜ் உம்ரா பயணம் மேற்கொள்வது, மாட்டிறைச்சிக் கொலை, புல்டோசர் கலாச்சாரம், திரைப்படத்தின் ஊடாக தீவிரவாத சாயம், ஊர்வலம் மூலம் கலவரம் செய்வது, ஜெய் ஶ்ரீ ராம் கோஷம், ஹிஜாப் தடை, லவ் ஜிஹாத், குடியுரிமை திருத்த சட்டம், என ஒரு நீண்ட பட்டியல் உண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான ஃபாசிஸத்தின் கோர முகத்திற்கு.

தற்போது இந்த பட்டியலில் "வக்ஃப் சட்ட திருத்த மசோதா" எனும் பெயரில் முஸ்லிம் சமூகத்தின் அமானிதமான  சொத்துக்களை ஆட்டையை போடும் வேலையில் மத்திய பாசிஸ பாஜக அரசு இறங்கி இருக்கிறது.

வக்ஃபு சொத்துக்களை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதாகக் கூறியும், முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டும், முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காகவும் வக்ஃபு வாரிய சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் செய்வதாக கூறியது. 

இதற்கான வக்பு சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட விவாதம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மக்களவையில் இந்த மசோதா கடந்த 3ம் தேதியும், மாநிலங்களவையில் கடந்த 4ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மசோதா குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவர் கடந்த 5ம் தேதி ஒப்புதல் அளித்தார். 

இந்நிலையில், வக்ஃபு திருத்த சட்டத்தை ஏப்ரல் 8-ம்தேதி முதல் அமலுக்கு கொண்டு வருவதாக ஒன்றிய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘வக்பு சட்ட திருத்தம் 2025ன் விதிகள் ஏப்ரல் 8ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன’’ என கூறப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து இந்த சட்டம் முஸ்லிம்களின் உரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, ஆம் ஆத்மி தரப்பிலிருந்து எம்எல்ஏ அமனத்துல்லா கான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, திமுக, தமுமுக, எஸ்டிபிஐ, என வக்ஃப் மசோதாவுக்கு எதிராக இதுவரை 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு 06/04/2025 அன்று கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிரான வழக்கில் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் எந்த தீர்ப்பும் வழங்கக்கூடாது என தெரிவித்துள்ளது.

வக்பு வாரிய சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் செய்ததற்கான காரணத்தை பின் வருமாறு கூறியிருக்கிறது...

1. வக்பு (வக்ஃப்) சொத்து நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை

2. முழுமையற்ற ஆய்வுகள் மற்றும் வக்ஃப் நிலப் பதிவுகளின் பிறழ்வு

3. பெண்களின் பரம்பரை உரிமைகளுக்கு போதுமான ஏற்பாடுகள் இல்லாமல் இருத்தல்.

4. ஆக்கிரமிப்பு உள்ளிட்ட நீண்ட கால வழக்குகள் ஏராளம். 2013-ம் ஆண்டு 10,381 வழக்குகள் நிலுவையில் இருந்தன. வழக்குகள் தற்போது 21,618 ஆக அதிகரித்துள்ளன.

5. வக்ஃப் வாரியங்கள் தாங்களாகவே விசாரித்து எந்த ஒரு சொத்தையும் வக்ஃப் நிலமாக அறிவிக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத அதிகாரம்.

6. அரசு நிலம் தொடர்பான ஏராளமான சர்ச்சைகள் வக்ஃப் என அறிவிக்கப்பட்டுள்ளன.

7. வக்ஃப் சொத்துக்களின் சரியான கணக்கு மற்றும் தணிக்கை இல்லாமை.

8. வக்ஃப் நிர்வாகத்தில் நிர்வாகத் திறமையின்மை. '

9. அறக்கட்டளை சொத்துக்களை முறையற்று நடத்துதல்.

10. மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் பங்குதாரர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லாமை.

திருத்தம் செய்யப்பட்டதா? எதேச்சையதிகாரம் திணிக்கப்பட்டுள்ளதா?

மொத்தத்தில், இந்த திருத்த சட்டத்தின் அடிப்படையானது இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 25 (டி) மற்றும் 26 ஆகியவற்றை மீறுவதாக அமைந்துள்ளது.

வக்ஃப் சட்டம் 1995-ல் திருத்தம் கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்த மசோதா, இந்த மசோதாவின் பெயர் "ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு'' சட்டம் (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act (UMEED)). அதாவது உமீத்.

 

முதல் திணிப்பே மசோதாவின் பெயரில் உள்ள வக்ஃப் என்பது சுருக்கமாக கூறும் போது (Waqf - W) தவிர்க்கப்பட்டுள்ளது.

அடுத்து இதில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் பலதும் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சாசன சட்டங்களுக்கு முரணாக இருக்கிறது.

உதாரணத்திற்கு, வக்ஃப் நிலத்தை விற்க முடியாது. வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ தான் கொடுக்க முடியும்.

ஆனால் புதிய மசோதாவின் படி 12 வருடங்களுக்கு மேல் ஒருவர் அந்த சொத்தை வைத்திருந்தால் அவருக்கு அந்த சொத்தின் உரிமை கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இது முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மஹ்மூத் பிரச்சா பிபிசியிடம், “ஒரு வகையில் வக்ஃப் என்பது ஒரு சமூகத்தின் பொது நிலம். அரசு நிலத்தில் எப்படி ஆக்கிரமிப்புக்காரர்கள் உரிமை கோர இயலாதோ, அதே போலத்தான் வக்ஃப் சொத்து விஷயத்திலும் உரிமை கோருதல் பொருந்தாது," என்று தெரிவித்தார்.

நடைமுறையில் இருந்த சட்டத்தில் வெறும் 44 திருத்தங்களை மட்டுமே செய்துள்ளோம் என்று ஒன்றிய அரசு கூறிய போதிலும் 33 அம்சங்களை புதியதாக சேர்த்துள்ளது. 45 அம்சங்களில் விதிகளை மாற்றம் செய்துள்ளது. 37 அம்சங்களை நீக்கியுள்ளது. ஆக மொத்தம் 115 திருத்தங்களுடன் இச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரு சட்டத்தில் 115 திருத்தங்களை செய்தால் அந்த சட்டம் அதன் அடிப்படை தன்மையையே இழந்து விடும் என்பது தான் எல்லோரும் அறிந்த உண்மை.

உண்மையில் வக்ஃபு சொத்து விவகாரத்தில் ஒன்றிய அரசு செய்திருக்க வேண்டியது என்னவெனில், கூடுதல் அதிகாரமும் கண்காணிப்புமே அன்றி புதிதாக எந்த ஒரு சட்டமும் இயற்ற வேண்டிய அவசியம் இல்லை.

பாராளுமன்றத்தில் வக்ஃப் சட்டத்தை அறிமுகம் செய்த போது, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு "முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மேம்படவே" இந்த சட்ட திருத்தம் என்கிறார்.

ஆனால், முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை நிலையற்றதாக ஆக்கியதில் பாஜகவின் கடந்த கால நிலைப்பாடுகளும் அதற்கான முன்னெடுப்புகளும் நாட்டு மக்கள் அறிந்ததே.

கலவரங்களில் "முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்களை சூறையாடுவது, வணிக நிறுவனங்களை நிர்மூலமாக்குவது, கும்பலாக கொலை செய்வது, புல்டோசர் கொண்டு வீடுகளை வாழ்வாதாரங்களை இடிப்பது" என்று இவர்கள் செய்து விட்டு இன்று நல்லவர்கள் போன்று நாடகம் ஆடுகின்றார்கள்.

வக்ஃபு கடந்து வந்த பாதை....

வக்ஃப் அமைப்புகள் நிறுவப்பட்ட  முறையானது, இந்தியாவில் முகலாயர்கள் ஆட்சிக்காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கிறது.

 

பிரிட்டிஷ் காலத்தில்....

முகலாயர்கள் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர் வக்ஃபு சொத்துக்களின் நிலைமை மோசமடைந்ததையடுத்து 1800-களில் பிரிட்டிஷ் ஆட்சியில் பல்வேறு காலகட்டங்களில் இதற்கென சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

ஆரம்பத்தில், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட காஜிக்கள் (qazi) அதாவது இஸ்லாமிய மாஜிஸ்திரேட்டுகள் என அழைக்கப்படுபவர்கள் இந்த வக்ஃப் சொத்துக்களை மேற்பார்வையிட்டனர். பின்னர், வக்ஃப் சொத்துக்களின் மேற்பார்வையை, வருவாய் வாரியம் மற்றும் ஆணையர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, 1863-ல் அதற்கு முந்தைய சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, முத்தவவாலிகள் (வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள்) அதிகார வரம்புக்குள் மத வக்ஃபுகள் கொண்டுவரப்பட்டு, மற்ற வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை அரசு தக்கவைத்துக்கொண்டது.

தொடர்ச்சியாக, வக்ஃபு சொத்துக்களை ஆங்கிலேயர்கள் அபகரிப்பதற்கு ஏதுவாக பிரிட்டிஷ் நீதிபதிகள் தீர்ப்புகள் வழங்கிவர, அதுவே நாட்டில் வக்ஃபு மசோதாவுக்கான கிளர்ச்சியைத் தூண்டியது.

1910-ல் இந்திய அரசாங்கத்தில் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற பாரிஸ்டர் சர் சையத் அலி இமாம், 1911-ல் வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் வக்ஃப் மசோதாவைக் கொண்டுவந்து இம்பீரியல் கவுன்சிலிடமிருந்து ஒப்புதல் பெற்றார்.

அதன்படி, 1913-ல் `முசல்மான் வக்ஃப் சரிபார்ப்புச் சட்டம் 1913 (The Mussalman Wakf Validating Act, 1913)' கொண்டுவரப்பட்டு, வக்ஃபு சொத்துக்களை உருவாக்க அனுமதிக்கப்பட்டது.

அதுவரையில், பிரிட்டிஷார் அதை அங்கீகரிக்கவில்லை. பின்னர், முசல்மான் வக்ஃப் சட்டம் 1923 (The Mussalman Wakf Act, 1923) மூலம் வக்ஃப் நிர்வாகத்தில் முறையான கணக்கு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான விதிகளை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, 1913 சட்டத்தின் கீழ் குடும்ப வக்ஃப்களுக்கு சட்டப்பூர்வ ஆதரவை வழங்க, 1930-ல் சட்டம் கொண்டுவரப்பட்டது.

சுதந்திர இந்தியாவில்....

பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலையடைந்த பிறகு, வக்ஃப் சொத்துக்களை முறையாக நிர்வகிக்க 1954-ல் வக்ஃப் சட்டம் (The Waqf Act, 1954) கொண்டுவரப்பட்டு, மாநில வக்ஃப் வாரியங்கள் (State Waqf Boards) அமைக்கப்பட்டன.

அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலுள்ள வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்க இந்த வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்பட்டன. இவை, மாவட்ட வக்ஃப் கமிட்டிகள், மண்டல வக்ஃப் கமிட்டிகள் ஆகியவற்றை அமைத்து, வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்க, ஒழுங்குபடுத்த, பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கின்றன. இந்த வாரியத்தில் 11 உறுப்பினர்கள் இருப்பார்கள். அனைவரும் இஸ்லாமியர்கள். நாட்டில் தற்போது மொத்தமாக 30 வக்ஃப் வாரியங்கள் இருக்கின்றன.

 

பின்னர், 1964-ல் மாநில வக்ஃப் வாரியங்களை மேற்பார்வையிடவும், வழிகாட்டவும் சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் மத்திய வக்ஃப் கவுன்சில் (Central Waqf Council) அமைக்கப்பட்டது.

இது, மாநில வக்ஃப் வாரியங்களுக்கு அவற்றின் நிதி செயல்திறன், வக்ஃப் பத்திரங்களின் கணக்கெடுப்பு, பராமரிப்பு, வருவாய் பதிவுகள், வக்ஃப் சொத்துக்களின் ஆக்கிரமிப்பு, ஆண்டு அறிக்கை, தணிக்கை அறிக்கை குறித்து உத்தரவுகளை மத்திய வக்ஃப் கவுன்சில் பிறப்பிக்கும். இந்தக் கவுன்சிலில், 22 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதிலும் அனைவரும் முஸ்லிம்கள்.

தொடர்ந்து, வக்ஃப் சொத்துக்கள் மீதான நிர்வாகத்தை மேம்படுத்த 1959, 1964, 1968, 1984 ஆகிய ஆண்டுகளில் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், 1995-ல், நடைமுறையில் இருந்த வக்ஃப் சட்டத்தை விரிவாக்கம் செய்து வக்ஃப் சட்டம் 1995 (The Waqf Act, 1995) கொண்டுவரப்பட்டது. அப்போது, வக்ஃப் தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டன.

வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான பிரச்னைகளில் இந்தத் தீர்பாயங்களே இறுதி முடிவெடுக்கும். இந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை நீதிமன்றங்களில் சவால் செய்ய முடியாது.

அதையடுத்து, வக்ஃப் சட்டத்தில் 2013-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்தத் திருத்தங்களின்படி...

ஒரு முஸ்லிம் சட்ட நிபுணர் உட்பட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட வக்ஃப் தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டது. வக்ஃப் சொத்துக்களின் குத்தகைக் காலம் 3 ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு மாநில வக்ஃப் வாரியத்திலும் இரண்டு பெண் உறுப்பினர்கள் இருப்பார்கள் என கொண்டுவரப்பட்டது.

இன்றைய அளவில் மொத்தமாக 8.72 லட்சம் வக்ஃப் சொத்துக்கள் (அசையா) நாட்டில் இருக்கின்றன. 16,716 அசையும் சொத்துக்கள் இருக்கின்றன என்கிறது தரவுகள்.

மொத்தம் 38 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கும் அதிகமான நிலம் வக்ஃப் சொத்துக்களாக இருக்கிறது. 

முன் வைக்கப்படும் பரப்புரைகள்...

1) நாட்டிலேயே, பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே அமைச்சகத்துக்கு அடுத்தபடியாக அதிக நிலங்களை உடைய அமைப்பாக வக்ஃப் வாரியங்கள் இருக்கிறது.

2) சச்சார் கமிஷன் தரவுகள் முஸ்லிம் சமூகம் மிகவும் பின்தங்கியுள்ளதாக சுட்டிக் காட்டும் நிலையில், முஸ்லிம்கள் இந்த நாட்டில் சிறுபான்மை சமூகமாக இருக்கும் சூழலில், பல்வேறு அரசு மற்றும் தனியார் சொத்துக்களை வக்ஃப் வாரியம் தங்களுடைய சொத்து என்று உரிமை கோருவது இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது? எனும் சந்தேகக் கேள்வி எழுப்பப்படுகிறது.

3) இவையெல்லாம் விட பாராளுமன்றத்தில் இந்த சட்ட திருத்த மசோதாவின் மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது அமைச்சர் ஒருவர் "நாளை இந்த பாராளுமன்றம் அமைந்துள்ள இடமே வக்ஃபு இடம் தான்" என்று கூறுவார்களோ? என்று இந்த நாட்டின் வெகுஜன மக்களின் மனதில் வெறுப்பு விதைக்கப்படுகிறது.

முஸ்லிம் சமூகம் ஏன் எதிர்க்கின்றது?

1)   இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளது என்பதால் எதிர்க்கிறது.

பிரிவு 26 - மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்

26 (a) மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக அமைப்புகளை நிறுவி அவற்றைப் பராமரிக்கவும்,

26 (b) மத விஷயங்களில் அதன் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கவும்,

26 (c) அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கவும், வாங்கவும்

26 (d) சட்டத்தின்படி அத்தகைய சொத்தை நிர்வகிக்கவும் ஒவ்வொரு மதத்துக்கும் சுதந்திரம் அளிக்கப்படுகிறது.

( குறிப்பு: பொது ஒழுங்கு மற்றும் குடிமக்களை இது பாதிக்காத பட்சத்தில் அரசு இதில் தலையிட உரிமை இல்லை. )

இவ்வாறு சட்டம் அளித்திருக்கும் மத சுதந்திரத்தை புறந்தள்ளிவிட்டு, சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களின் வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை மேம்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல் என்ற பெயரில் அதன் மீது அரசு தனது அதிகாரத்தை விரிவடையடையச் செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவது எப்படி இஸ்லாமியர்களுக்கு நன்மையாக அமையும்?

2) வக்ஃப் செய்வதற்கு புதிய மசோதா 5 ஆண்டு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை இடுகிறது.

புதிதாக இஸ்லாத்தை தழுவும் ஒருவர் வக்ஃப் செய்வதை இந்த மசோதா தடுக்கிறது.

ஏற்கனவே, முஸ்லிமாக இருந்து வரும் ஒருவர் வக்ஃப் செய்ய முன்வந்தாலும் அவர் 5 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிமாக இருக்கிறார் என்று நிரூபிக்க சொல்கிறது இந்த மசோதா.

ஆனால், இஸ்லாம் ஒருவர் இஸ்லாத்தை தழுவிய மறு நொடியில் இருந்தே அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கத் தூண்டுகிறது.

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ لَمْ يَرْتَابُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ‏

நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள். ( அல்குர்ஆன்: 49: 15 )

 

ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் மக்கா வெற்றியின் சில நாட்களுக்குப் பின்னர் இஸ்லாத்தை தழுவினார்கள். இஸ்லாத்தைத் தழுவிய சில நாட்களிலேயே ஒரு லட்சம் திர்ஹத்தை ஏழைகளுக்கு வழங்குவதற்கு அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தார்கள்.

 إن حكيما باع دار الندوة من معاوية بمائة ألف . فقال له ابن الزبير : بعت مكرمة قريش ، فقال : ذهبت المكارم يا ابن أخي إلا التقوى ، إني اشتريت بها دارا في الجنة ، أشهدكم أني قد جعلتها لله 

மக்காவில் தாருந் நத்வா என்றொரு இல்லம் இருந்தது. அந்த இல்லம் ஹகீமின் வசம் வந்து சேர்ந்தது. தனக்கும் தன்னுடைய கடந்த கசந்த காலத்திறகும் இடையில் பலமான தடுப்பொன்றை ஏற்படுத்த விழைந்தார் ஹகீம். என்ன செய்யலாம் என்று நினைத்தவருக்கு அந்த யோசனை உதித்தது. அதனால் அந்த வீட்டை இலட்சம் திர்ஹங்களுக்கு விற்றார்.

அந்த வீட்டை விற்று வந்த பணமிருக்கிறதே அதை இஸ்லாத்தின் பாதையில் நற்காரியங்களுக்கு அளித்து விடப்போகிறேன். அதைக் கொண்டு எனக்கு மறுமையில் அங்கு வீடு கிடைக்கலாம்

குரைஷியர்களுக்குத் தெரிவித்தார், “இதோ பாருங்கள். உங்கள் எல்லோரையும் சாட்சியாக வைத்துக் கூறுகிறேன், அந்தப் பணத்தை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கிறேன்என்றார். ( நூல்: தஹ்தீபுல் கமால் )

3) புதிய மசோதா முஸ்லிம் அல்லாத இருவர் வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக, நிர்வாகத்தில் உயர் பொறுப்புகளில் இடம் பெற வழி வகுக்கிறது. மேலும், பழைய மசோதாவின் அடிப்படையில் மூன்று முஸ்லிம் எம்.பிக்கள் இடம் பெற்றிருந்த நிலையில் புதிய மசோதா மூன்று எம்.பிக்கள் என்று பொதுவாக கூறி முஸ்லிம் என்பதை நீக்கி உள்ளது.

"சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் பெரும்பான்மையாக இருப்பார்கள்,"

முந்தைய சட்டத்தில் அமைச்சர் தவிர்த்து கவுன்சில் மற்றும் வாரியங்களில் இஸ்லாமியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க இயலும். ஆனால் திருத்தச் சட்டத்திற்கு பிறகு, மத்திய வக்ஃப் கவுன்சிலில் 22 உறுப்பினர்களில் 12 பேரும், மாநில வக்ஃப் வாரிய உறுப்பினர்களில் 11-ல் 7 பேரும் இஸ்லாமியர் அல்லாதோர் இடம் பெறக் கூடும். ( நன்றி: பிபிசி தமிழ் )

முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இது பாதிக்கச் செய்கிறது என்பதோடு நின்று விடாமல் இவர்களின் நுழைவு அரசுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி வக்ஃபு சொத்துக்கள் அரசுக்கு தாரை வார்த்துக் கொடுக்க வழி வகுக்கும் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

முஸ்லிம் சமூகத்தின் மஸ்ஜிதுக்கோ மஸ்ஜித் தொடர்பான பரிபாலன விவகாரங்களுக்கோ முஸ்லிம் அல்லாதவர்கள் இடம் பெறுவதை இஸ்லாம் தடை செய்கிறது. அதே நேரத்தில் அரசியல் சாசனம் வழங்கியுள்ள பிரிவு 25 (மத சுதந்திரம்) க்கு எதிரானது.

مَا كَانَ لِلْمُشْرِكِيْنَ اَنْ يَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِيْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ بِالْكُفْرِ‌ؕ 

குஃப்ரின்மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; ( அல்குர்ஆன்: 9: 17 )

4) இந்த மசோதா மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரத்தை வழங்குவதோடு, வக்ஃப் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை முடிவுக்கு கொண்டு வந்து நீதிமன்றத்திற்கு செல்லும் வாசலை திறந்து வைத்துள்ளது.

ஏற்கனவே இந்த சமூகம் மாவட்ட ஆட்சியர் ஒருவரின் அதிகாரத்தை கண்டிருக்கிறது.

அவரது அதிகாரத்தால் இந்த சமூகம் பாபரி மஸ்ஜிதை இழந்து நிற்கிறது.

1949 டிசம்பர் 22-23 இரவு, அபய் ராம்தாஸும் அவரது தோழர்களும் சுவர் ஏறி குதித்து, ராம்-ஜானகி மற்றும் லக்ஷ்மன் சிலைகளை மசூதிக்குள் வைத்து, ராமர் அங்கே தோன்றி தனது சொந்த இடத்திற்கு திரும்பிவிட்டதாக பிரசாரம் செய்தனர்.

அடுத்த வெள்ளிக்கிழமை, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காலை தொழுகைக்காக வந்தனர். ஆனால் நிர்வாகம் சில நாட்கள் ஒத்திவைப்பு கேட்டுக் கொண்டு அவர்களை திருப்பி அனுப்பியது.

அபய் ராமின் இந்த திட்டத்தை கலெக்டர் நய்யர் ரகசியமாக ஆதரித்ததாக கூறப்படுகிறது. அவர் காலையில் இந்த சந்தர்ப்பத்தில் வந்தபோதும், ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சிக்கவில்லை. ஆனால் இந்த ஆக்கிரமிப்பை பதிவில் கொண்டு வந்து, அதை உறுதிப்படுத்திவிட்டார்.

முழு சர்ச்சையும் உண்மையில் இங்கிருந்துதான் தொடங்கியது.

இந்த சிலைகள் உடனடியாக அகற்றப்பட்டிருந்தால், சர்ச்சை இவ்வளவு காலம் இழுக்கப்பட்டிருக்காது என்று பின்னர் உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போதும் கூறப்பட்டது. ( நன்றி: பிபிசி தமிழ், 18/09/2020 )

ஒரு மாவட்ட ஆட்சியரின் கள்ள மௌனமும், கயமைத்தனமான எழுத்தும் தான் முஸ்லிம் சமூகம் பாபரி மஸ்ஜிதை இழப்பதற்கு அடிப்படை காரணம்.

5) முஸ்லிம் அல்லாத ஒருவர் தானமாக வழங்கக் கூடாது என்று இந்த மசோதா கூறுகிறது.

இதன் மூலம் ஏற்கனவே முஸ்லிம் அல்லாதவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்ட தானங்கள், கொடைகள் என்னவாகும் என்பது குறித்த சந்தேகம் நிலவுகிறது.

முஸ்லிம் பள்ளிவாசல், தர்காகக்களுக்கு பிற்காலப் பாண்டியர், நாயக்கர், சேதுபதிகள் உள்ளிட்ட தமிழக மன்னர்கள் தானம் வழங்கியுள்ளனர். அவ்வாறு முஸ்லிம் வழிபாட்டு தலங்களுக்கு நிலம் உள்ளிட்டவற்றை தமிழகத்தை ஆண்ட பல்வேறு மன்னர்கள் தானம் கொடுத்துளளனர்.

 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியது: “108 திவ்விய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில், கி.பி.1247-ல் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப்பட்டினத்து (பெரியபட்டினம்) பிழார் பள்ளிக்கு, ஆம்பத்தூர், மருதூர் ஆகிய ஊர்களை தானமாக வழங்கியதற்கான கல்வெட்டு உள்ளது.

சேதுபதி மன்னர்கள் முஸ்லிம்களுடன் கொண்டிருந்த நல்லுறவு காரணமாக அதிக பள்ளிவாசல்களுக்கு மானியம் வழங்கியுள்ளனர். பூலாங்கால் பள்ளிவாசலுக்கு அவ்வூரின் சில பகுதிகளை கி.பி.1722-ல் முத்துவிஜய ரெகுநாத சேதுபதியும், கி.பி.1759-ல் செல்லமுத்து சேதுபதியும் அளித்துள்ளனர். குமாரமுத்து விசயரகுநாத சேதுபதி ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் அன்னதான தர்மத்துக்கு கி.பி.1734-ல் கிழவனேரி என்ற ஊரையும், முத்துக்குமார விசயரகுநாத சேதுபதி ஏர்வாடி தர்காவுக்கு கி.பி.1742-ல் மாயாகுளம் என்ற ஊரையும், ராமேசுவரம் ஆபில் காபில் தர்காவுக்கு கி.பி.1745-ல் புதுக்குளம் என்ற ஊரையும் தானமாகக் கொடுத்துள்ளனர். காரேந்தல் பள்ளிவாசலுக்கு திருச்சுழி என்ற ஊரை ராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி தானமாக விட்டுள்ளார். அவர் மகன் ரணசிங்கத் தேவர் புதுக்கோட்டை மாவட்டம், காட்டுபாவா பள்ளிவாசலுக்கு அடுங்குளம், காஞ்சவன்குளம் ஆகிய ஊர்களை தானமாக கொடுத்துள்ளார்.

காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் பாண்டியர் காலக் கல்வெட்டுகள் 5 உள்ளன. முதலாம் சடையவர்மன் குலசேகரப் பாண்டியன் (கி.பி.1190-1218) காயல்பட்டினம் கடற்கரைப் பள்ளிக்கு முத்துச் சலாபத்தை தானமாகக் கொடுத்துள்ளான். இரண்டாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் காலத்தில், இவ்வூர் வியாபாரி வடவணிகன், கி.பி.1325-ல் கறுப்புடையார் பள்ளியில் சந்தியா தீப விளக்கு ஏற்ற இரண்டு அச்சு நாணயம் கொடுத்துள்ளான். அதே மன்னன் காலத்தில், கி.பி.1330-ல் இரட்டைக்குளம் பள்ளிவாசலுக்கு சுல்தான், உய்யவந்தான், திருவனந்தான் ஆகியோர் தானம் வழங்கியுள்ளனர்.

முதலாம் மாறவர்மன் வீரபாண்டியன் காலத்தில் (1334-1367) காகிற்றூர் நாடாள்வான் அவ்வூர் கறுப்புடையார் சோனகப்பள்ளிக்குக் அவ்வூரில் உள்ள நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார். அரிகேசரி பராக்கிரம பாண்டியன் காலத்தில் (கி.பி.1422-1463) துருக்க நயினாப்பள்ளியில் அர்த்தமண்டபம், இடைநாழி, பெருமண்டபம், தண்ணீர்க்குளம் அமைத்து மாத்தூர் என்ற ஊர் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

கி.பி.1387-ல் உதயமார்த்தாண்டன் சோணாடுகொண்டான் பட்டினத்து ஜும்மாப் பள்ளிவாசலைப் புதுப்பித்து தன் பெயரால் உதையமார்த்தாண்டப் பெரும்பள்ளி என பெயர் வைத்து இவ்வூர் துறைமுகத்து மகமை பணத்தை பள்ளிவாசலுக்கு வழங்கவும் செய்துள்ளதை வீரபாண்டியன்பட்டினம் காட்டு மகதூம் பள்ளிவாசல் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும், அதிராம்பட்டினம் தர்காவுக்கு தஞ்சை செவ்வப்ப நாயக்கர் கி.பி.1531-ல் அவ்வூர் முழுவதையும் மானியமாகக் கொடுத்துள்ளார்,” என்று அவர் கூறினார். ( நன்றி: தமிழ் திசை இந்து, 20/09/2024 )

 

இந்த மசோதாவின் இந்தப் பகுதி முஸ்லிம் அல்லாதவர் தானம் செய்யக்கூடாது. அப்படியே முஸ்லிம் ஒருவர் தானம் செய்தால் அவர் தானம் வழங்குவதர்கு முன் 5 ஆண்டுகள் முஸ்லிமாக இருந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் வக்ஃப் வாரிய உறுப்பினர்களில் இரண்டு பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருப்பார்கள்” என்கிற இந்தப் பகுதியும் ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின் போது குறைஷிகள் குறிப்பிடுவது போன்று (“மக்காவில் இருந்து யாராவது முஸ்லிமாகி வந்தால் திருப்பி அனுப்பி விட வேண்டும். மதீனாவில் இருந்து முஸ்லிம் ஒருவர் வந்தால் நாங்கள் திருப்பி அனுப்ப மாட்டோம்”) இருக்கின்றது.

இந்த தேசத்தில் வாழும் ஒரு சமூகம் தான் சார்ந்த அவர்களின் வாழ்வும், வாழ்வுரிமையும் அவர்கள் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்பால் வஞ்சிக்கப்பட்டு, சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் ஆட்படுத்தப்படும்போது அதிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ளவும், தம்முடைய இயற்கை உரிமை சார்ந்த சுதந்திர வாழ்வை நிலை நிறுத்தவும் தங்களின் பூர்வீக அடையாளத்தை முன்னிறுத்தி செய்யும் அறப் போராட்டம் என்பது இந்திய அரசியலமைப்பு தரும் அங்கீகாரம் ஆகும்..

அந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட  தலைநகரங்களிலும் எதிர் வரும் 13/04/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில்  எதிர்ப்பை பதிவு செய்ய திரளாக கலந்து கொள்ளுமாறு ஜமாஅத்தார்களை கேட்டுக் கொள்கிறோம்.

உரிமையை நிலை நாட்ட போராடுவது கடமை...

பொதுவான சட்ட அமைப்பை ஒரு அரசோ, ஒரு நிறுவனமோ, ஒரு அமைப்போ மீறுகின்ற போது அதற்கெதிராக முஸ்லிம் சமூகம் ஒன்றிணைவதும், போராடுவதும் கடமையாகும்.

وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ الصُّلْحِ قَدْ بَعَثَ عُثْمَانَ بْنَ عَفَّانَ إِلَى مَكَّةَ رَسُولًا، فَجَاءَ خَبَرٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنَّ أَهْلَ مَكَّةَ قَتَلُوهُ، فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَئِذٍ إِلَى الْمُبَايَعَةِ لَهُ عَلَى الْحَرْبِ وَالْقِتَالِ لِأَهْلِ مَكَّةَ، فَرُوِيَ أَنَّهُ بَايَعَهُمْ عَلَى الْمَوْتِ. وَرُوِيَ أَنَّهُ بَايَعَهُمْ عَلَى أَلَّا يَفِرُّوا. وَهِيَ بَيْعَةُ الرِّضْوَانِ تَحْتَ الشَّجَرَةِ، الَّتِي أَخْبَرَ اللَّهُ تَعَالَى أَنَّهُ رَضِيَ عَنِ الْمُبَايِعِينَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَهَا. وَأَخْبَرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُمْ لَا يَدْخُلُونَ النَّارَ. وَضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بيمينه على شِمَالِهِ لِعُثْمَانَ، فَهُوَ كَمَنْ شَهِدَهَا. وَذَكَرَ وَكِيعٌ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنِ الشَّعْبِيِّ قَالَ: أَوَّلُ مَنْ بَايَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْحُدَيْبِيَةِ أَبُو سُفْيَانَ الْأَسَدِيُّ.

ஹிஜ்ரி 6துல்கஅதா மாதம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் தாங்கள் கண்ட கனவின் அடிப்படையில் உம்ரா செய்ய 1400 தோழர்களுடன் மக்கா நோக்கி பயணமானார்கள்.

நபி {ஸல்தங்களின் நிலையையும்நோக்கத்தையும் உறுதியாகத் தெளிபடுத்திக் கூறவும்குறைஷிகளிடம் ஒரு தூதரை அனுப்ப விரும்பியும் உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள்.

ஆனால், உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அங்கு சென்ற பின் எனக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் எனக்காக களமிறங்கிப் போராடும் அதீ இப்னு கஅப் கிளையைச் சார்ந்த எவரும் அங்கில்லை. எனவேஉஸ்மான் (ரலி) அவர்களை அனுப்புங்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தை அவர் தான் சரியான முறையில் குறைஷிகளிடம் எடுத்து வைப்பார்!என்று கூறினார்கள்.

நபியவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்து நீர் குறைஷிகளிடம் சென்றுநாம் போருக்காக வரவில்லைஉம்ராவிற்காகத்தான் வந்திருக்கின்றோம் என்று எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு அவர்களை சத்திய தீனின் பக்கம் அழையுங்கள்! மேலும்மக்காவில் இருக்கும் முஸ்லிகளைச் சந்தித்து வெற்றி நமக்குத்தான் என்ற நற்செய்தியைக் கூறுங்கள்! அல்லாஹ் அவனது மார்க்கத்தை மிக விரைவில் மக்காவில் ஓங்கச் செய்வான். ஆகவேயாரும் இறைநம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்களிடம் சொல்லுங்கள்! என்று கூறினார்கள்.

ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். வழியில் பல்தஹ் எனும் இடத்தை கடந்த போது சில குறைஷிகளை சந்தித்தார்கள். தங்களின் உரையாடலின் போது தாங்கள் மக்காவிற்கு செல்வதின் நோக்கத்தை குறைஷிகளிடம் தெரிவித்தார்கள் உஸ்மான் (ரலி) அவர்கள்.

அதற்கு குறைஷிகள் நீர் சொல்வதை நாங்கள் கேட்டு விட்டோம். நல்ல விஷயம் தான். நீர் உமது நோக்கத்தை நிறைவேற்ற மக்காவிற்குச் செல்ல்லாம்என்றனர்.

கூட்டத்தில் இருந்த அபான் இப்னு ஸயீத் இப்னு அல் ஆஸ் என்பவர் எழுந்து உஸ்மான் (ரலி) அவர்களை வரவேற்றுபின்னர் தம் குதிரைக்கு கடிவாளமிட்டு அதில் தன் பின்னால் அமரவைத்து, அவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்து மக்காவிற்கு அழைத்து வந்தார்.

மக்கா வந்ததும் குறைஷித்தலைவர்களிடம்அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களின் ஆசையை உஸ்மான் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால்நீங்கள் வேண்டுமானால் கஅபாவை வலம் வர அனுமதிக்கின்றோம். ஆனால்நபியவர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்று குறைஷிகள் கூறிவிட்டனர்.

ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் நபிகளார் இல்லாமல் தாம் வலம் வர இயலாது என மறுத்து விட்டார்கள்.

குறைஷிகள் உஸ்மான் (ரலி) அவர்களை கையில் காப்பு இட்டு மக்காவில் ஓரிடத்தில் தடுத்து வைத்து விட்டனர். இந்த பிரச்சனையில் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கும் வரை உஸ்மான் அவர்களை அனுப்பாமல் தடுத்து வைத்திடுவோம் என அவர்கள் முடிவெடுத்தனர்.

ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் எனும் செய்தி மக்காவிலும், மக்காவிற்கு வெளியிலும் மிக விரைவாக பரவியது.

இப்படியே முஸ்லிம்களுக்கும் வந்து கிடைத்தது. இந்தச் செய்தி மாநபி {ஸல்}  அவர்களிடம் சொல்லப்பட்ட போது குறைஷியர்களிடம் போர் செய்யாமல் இவ்விடத்தை விட்டு நாம் நகரக்கூடாது.என நபி {ஸல்அவர்கள் கூறினார்கள்.

மேலும், தங்களது தோழர்களைப் போருக்காக உடன்படிக்கை செய்து தர அழைத்தார்கள். ஸஹாபாக்கள் உயிர் இருக்கும் வரை போராடுவோம் என்பதாகவும்அதற்காக உயிரைக் கொடுக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் நபிகளாரிடம் ஒப்பந்தம் செய்தார்கள்.

அபூ ஸினான் அல் அஸதீ (ரலி) என்பவர்தான் முதன் முதலில் ஒப்பந்தம் செய்தார். ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அவர்களோ மூன்று முறை ஒப்பந்தம் செய்தார். அதாவதுமக்கள் ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்த போதும்பின்பு நடுவிலும்பின்னர் இறுதியிலும் ஒப்பந்தம் செய்தார்.

நபி {ஸல்அவர்கள் தங்களின் ஒரு கையால் மற்றொரு கையைப் பிடித்துக் காட்டி இந்தக் கை உஸ்மான் சார்பாகஎன்று கூறினார்கள். அதாவதுஉஸ்மான் (ரலி) உயிருடன் இருந்தால் இதிலும் பங்கெடுத்து இருப்பார் என்பதை உணர்த்தும் முகமாக நபிகளார் இதைச் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் ஒரு மரத்திற்கு கீழ் இவ் உடன்படிக்கையை வாங்கினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபியின் கையைத் தாங்கி பிடித்து இருந்தார்கள். மஃகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் மரத்தின் ஒரு கிளையைச் சாய்த்து நபிகளாருக்கு நிழல் தரும் வண்ணமாக பிடித்திருந்தார்கள்.

இந்த உடன்படிக்கையைத் தான் பைஅத்துர் ரிள்வான்” – அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இறைபொருத்தத்திற்குரிய உடன்படிக்கைஎன இஸ்லாமிய வரலாறு சான்று பகர்கின்றது.

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا (18) وَمَغَانِمَ كَثِيرَةً يَأْخُذُونَهَا وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا

அல்லாஹ்வும், இது குறித்து திருமறையில் இறை நம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களை குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால்அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்.என்று (அல்குர்ஆன்:48:18). குறிப்பிடுகின்றான்.

நிலைமை இவ்வாறிருக்கமுஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க ஆயத்தமாகி விட்டார்கள். எனும் செய்தி குறைஷிகளுக்குத் தெரியவரவேஇனியும் உஸ்மான் (ரலி) அவர்களை தடுத்து வைத்திருப்பது தங்களுக்கு நல்லதல்ல என்று கருதி உஸ்மான் (ரலி) அவர்களை விடுதலை செய்துவிட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களும்நபித்தோழர்களும் புறப்பட்டு சில எட்டுக்கள் தான் வைத்திருப்பார்கள். அதற்குள் உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கே வந்து விடுகின்றார்கள். ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீபாகம்: 9பக்கம்: 100-102தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்: 199.)

சமூகத்தின் அனைத்து மக்களும் மாநபி {ஸல்} அவர்களின் பின்வரும் எச்சரிக்கையை பயந்து கொள்ள வேண்டும்.

من لم يهتم بأمر المسلمين فليس منهم 

ஹுதைஃபா (ரலி) அறிவிக்கின்றார்கள்: முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களில் கவலை கொள்ளாமல் ( கண்டும் காணாதது போல ) வாழ்கிறவர் முஸ்லிம் சமூகத்தையே சார்ந்தவர் அல்லர்என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (தப்ரானீ)

நாம் மதிக்கின்ற ஒன்று, நாம் பாதுகாக்கிற ஒன்று சேதப்படுத்தப்படுமானால், நம்மிடம் இருந்து பறிக்கப்படுமானால் அதற்காக போராட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

جاء رجل إلى رسول الله، فقال: يا رسول الله، أرأيت إن جاء رجل يريد أخذ مالي؟ قال: "فَلاَ تُعْطِهِ مَالَكَ". قال: أرأيت إن قاتلني؟ قال: "قَاتِلْهُ". قال: أرأيت إن قتلني؟ قال: "فَأَنْتَ شَهِيدٌ". قال: أرأيت إن قتلته؟ قال: "هُوَ فِي النَّارِ

مسلم: كتاب الإيمان

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து... அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் என் பொருளை அபகரிக்க வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார்.

அதற்கு அண்ணலார் உன் பொருளை அவன் கைப்பற்றிவிடாமல் நீ பாதுகாக்க வேண்டும் என்று பதில் கூறினார்கள்.

நான் அவனை தடுக்கிறபோது, அவன் என்னிடம் சண்டையிட்டால் இப்போது நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் மீண்டும் கேட்டார்.

அதற்கு நபி ஸல் அவர்கள் நீ அவனுடன் போராடியேனும் உன் உரிமையை மீட்க வேண்டும்  என்றார்கள்.

அப்படி அவனிடம் நான் போராடும் போது அவன் என்னை கொலை செய்துவிட்டால் இப்போது என் நிலை என்ன?” என்று அவர் கேட்ட போது... நீ மார்க்கப்போராளி எனும் ஷஹீது அந்தஸ்தைப் பெறுவீர்”. என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

சரி! நான் அவனை கொலை செய்து விட்டால் இப்போது என்ன சொல்கிறீர்கள்?”  என்று அவர் கேட்டதும் அப்போது அண்ணலார் அவன் நரகவாதியே!என்று பதில் கூறினார்கள்.                            (  நூல்: முஸ்லிம் )

1.   அல்லாஹ்வுக்காக போராட களம் காணுங்கள்..

وعن أبي موسى عبد الله بن قيس الأشعري رضي الله عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم عن الرجل يقاتل شجاعة، ويقاتل حمية ويقاتل رياء، أي ذلك في سبيل الله ؟ فقال رسول الله صلى الله عليه وسلم: من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله متفق عليه

அபூமூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்களிடம் ஒருவர் வீரத்தை நிலை நாட்ட போராடுகின்றார், இன்னொருவர் மனமாச்சர்யங்களுக்காக (இன, மொழி, குல, குடும்ப, நிற பெருமையை நிலை நாட்ட) போராடுகின்றார், வேறொருவர் முகஸ்துதிக்காக போராடுகின்றார் இவர்களில் இறைவழியில் போராடுகின்றவர் யார்? என்று கேட்கப்பட்டது.

அதற்கு, மாநபி {ஸல்} “இறைமார்க்கம் மேலோங்கித் திகழ வேண்டும் என்பதற்காக எவர் போராடுகின்றாரோ அவரே இறை வழியில் போராடுபவர் ஆவார்என பதிலளித்தார்கள்.                               ( நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன் )

எனது மாவட்டம், எனது ஊர், எனது மஹல்லா, எனது ஜமாஅத், எனது அமைப்பு, எனது இயக்கம், எனது கட்சி என்கிற சிந்தனையை தூக்கி எறியுங்கள்.

நான் இதைச் செய்தேன், என் அமைப்பால் தால் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்ட முடிந்தது, என் ஜமாஅத்தின் பங்களிப்பே அதிகம், என் இயக்கத்தினரே அதிகம் பங்கேற்றனர் என்பது போன்ற பிதற்றலை விட்டொழியுங்கள்.

போராட்ட களங்களில் இயக்க, அமைப்பு, கட்சி, ஜமாஅத் சார்ந்த கோஷங்களை முற்றிலும் புறக்கணித்து விடுங்கள்.

2.   சாலை மற்றும் பாதைகளின் ஒழுங்குகளைப் பின்பற்றுங்கள்

عن أبي سعيد الخدري رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: «إياكم والجلوس على الطرقات»: قالوا: ما لنا بدٌّ، إنما هي مجالسنا نتحدث فيها، قال: «فإذا أبيتم إلا المجالس، فأعطوا الطريق حقها» قالوا: وما حق الطريق؟ قال: «غض البصر، وكف الأذى، ورد السلام، وأمر بالمعروف، ونهي عن المنكر»

وزاد في رواية عن عمر بن الخطاب: «وتغيثوا الملهوف، وتهدوا الضال»

அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பாதைகளில் அமர்வதன் விஷயத்தில் உங்களை நான் எச்சரிக்கின்றேன் என நபி {ஸல்} அவர்கள் எங்களோடு அமர்ந்திருந்த சபை ஒன்றில் கூறினார்கள். அப்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! இது நாள் வரை அப்படி அமர்ந்து தானே நாங்கள் பேசி வருகின்றோம்! ஏன் அப்படிக் கூறுகின்றீர்கள்?” என்று கேட்டோம்.

இனி நீங்கள் பேசினால் அதற்கான இடங்களில் அமர்ந்து பேசுங்கள்! பாதையின் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுங்கள்  என்றார்கள். அப்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதரே!  பாதையின் கடமைகள் என்ன? என்று கேட்டோம்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் பார்வையை தாழ்த்திக் கொள்வதும்,  நோவினை தருபவைகளை அகற்றுவதும், ஸலாம் உரைத்தால் பதில் சொல்வதும், நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும், (உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிற அறிவிப்பில் கூடுதலாக) அபயக்குரல் எழுப்புவோருக்கு உதவி செய்வதும், வழி தவறியவர்களுக்கு வழிகாட்டுவதும் தான் பாதையின் கடமைகள் என்றார்கள். ( நூல்: புகாரி,அபூதாவூத் )

போராட்டக்களங்கள் என்பது இன்று பெரும்பாலும் சாலைகளும், பொதுமக்கள் கூடும் இடமாகத்தான் இருக்கின்றது எனவே, மிகவும் கவனமாக நாம் பாதையின் ஒழுங்குகளைப் பேண வேண்டும்.

3.   வெறுப்புணர்வை தூண்டும் முழக்கங்களை தவிர்க்க வேண்டும்..

عن أنس - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ((يسِّروا ولا تعسِّروا، وبشِّروا ولا تنفِّروا))؛ متفق عليه.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நீங்கள். எளிதாக இந்த மார்க்கத்தை அடையாளப்படுத்துங்கள்! இஸ்லாத்தை சிரமமாக காட்டி விடாதீர்கள் மக்களுக்கு சோபனம் தருகிற வார்த்தைகளையே கூறுங்கள். நம்மை விட்டும் விரண்டோடுகிற அளவிலான வார்த்தைகளைக் கூறாதீர்கள் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                            ( நூல்: புகாரி, முஸ்லிம் )

போராட்டக்களங்களுக்கு பங்கெடுக்க வாகனத்தில் செல்லும் போதோ, போராட்டக்களத்தில் பயணிக்கும் போது சகோதர சமயத்தவர்களின், சகோதர இயக்கத்தவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகவோ, முஸ்லிம் சமூகத்தின் மீது தவறான எண்ணங்களை ஏற்படுத்தும் விதமாகவோ கோஷங்களை ஒரு போதும் எழுப்பி விடக்கூடாது.

போராட்டத்தின் இறுதி வெற்றியே!

سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ

பலப்பிரயோகம் செய்யும் பலம் கொண்ட குழுவினர் அதிவிரைவில் தோல்வி அடைவதையும், அனைவரும் புறமுதுகிட்டு ஓடுவதையும் காணலாம்”. (அல்குர்ஆன்: 54: 45 )

كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّه

எத்தனையோ சின்னஞ்சிறு கூட்டம், அல்லாஹ்வின் அனுமதி கொண்டு  பெரும் பெரும் கூட்டங்களை வெற்றி கொண்டிருக்கின்றது”.    ( அல்குர்ஆன்: 2: 249 )

فَأَمَّا الزَّبَدُ فَيَذْهَبُ جُفَاءً وَأَمَّا مَا يَنْفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ

பலன் தராத நுரை ஒன்றுமில்லாமல் போய் விடும்; எது மக்களுக்குப் பயன்  தருகின்றதோ அது பூமியில் நிலைத்து நிற்கும்”.               ( அல்குர்ஆன்: 13: 17 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சுயநலப் போக்கும், ஃபாஸிச சிந்தனையும் கொண்ட ஆட்சியாளர்களின் சிந்தனை, செயல்பாடு. சூழ்ச்சி ஆகிய அனைத்திலிருந்தும் முஸ்லிம்களையும், ஒட்டு மொத்த இந்திய மக்களையும் காத்தருள் புரிவானாக!!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

3 comments:

  1. முஸ்லிம் அல்லாத ஒருவர் தானமாக வழங்கக் கூடாது என்று இந்த மசோதா கூறுகிறது.

    இது புரியவில்லை.
    ஹஜ்ரத்!

    ReplyDelete
    Replies
    1. வக்ஃப் செய்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்கள் வக்ஃப் செய்யக் கூடாது.

      Delete