Thursday, 21 August 2025

இன்றைய உலகுக்கு தேவை...முஹம்மது நபி ﷺ அவர்களே!

 

இன்றைய உலகுக்கு தேவை...முஹம்மது நபி அவர்களே!

இதோ இன்னும் ஓரிரு நாட்களில் ரபீவுல் அவ்வல் மாதம் பிறக்க இருக்கிறது.

பூமான் நபி அவர்கள் இப்பூவுலகில் வந்துதித்த புனித மாதம்.

இந்த மாதத்தை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பெருமானார் அவர்களின் மீதான மஹப்பத்தை வெளிப்படுத்தும் விதமாக மாநபி அவர்களின் புகழ் மாலைகள் பாடி, வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறி மாநபி அவர்களின் மீலாதை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

பொதுவாகவே, நபிமார்களின் பிறந்த நாட்களை ஸலாமத் நிறைந்த நாட்கள் என அல்லாஹ் அல்குர்ஆனில் அடையாளப்படுத்துகிறான்.

நபி யஹ்யா (அலை) அவர்களின் பிறந்த நாள் குறித்து....

وَسَلٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوْتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا

ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும்.  ( அல்குர்ஆன்: 19: 15 )

وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا‏

இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்என்று (அக்குழந்தை) கூறியது. ( அல்குர்ஆன்: 19: 33 )

நமது நபி அவர்கள் கூட தாங்கள் ஏன் திங்கட்கிழமை நோன்பு நோற்றார்கள் என்பதற்கான காரணத்தை கூறும் போது நான் திங்கட்கிழமை தான் பிறந்தேன். எனக்கு நபித்துவமும் திங்கட்கிழமை தான் வழங்கப்பட்டது என்று கூறுவதை பார்க்க முடிகிறது.

روى مسلم (1162) عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ : فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ

திங்கட்கிழமை நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, நபி (ஸல்) அவர்கள், "நான் பிறந்த நாளும், எனக்கு வஹீ அறிவிக்கப்பட்ட நாளும் அதுதான்" என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

ஆகவே, நபி அவர்களின் மீலாது பிறந்த தினம் என்பது ஒரு முஸ்லிம் எளிதாக கடந்து சென்று விடும் ஏனைய நாட்களைப் போன்று அல்ல என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றே கூறலாம்.

எவர் நபிமார்களை தம்முடன் இணைத்துக் கொண்டார்களோ, பிணைத்துக் கொண்டார்களோ அவர்களின் வாழ்க்கை ஈமானிய ஜோதியால் நிரப்பப்படும் என்று அல்குர்ஆனில் அல்லாஹ் சான்றுரைக்கின்றான்.

ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியா (ரலி) அவர்கள் பச்சிளம் குழந்தையாய் இருந்த நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்த கணப் பொழுதில் சொன்ன வார்த்தையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பதிவு செய்கிறான்.

وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّىْ وَلَكَ‌ لَا تَقْتُلُوْهُ ‌ عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ اَوْ نَـتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏

இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறதுஎன்று சொன்னார்; ( அல்குர்ஆன்: 28: 9 )

சுவனத்து பெண்களில் சிறந்த பெண்கள், உலகப் பெண்களில் சிறந்த பெண்கள் யார்?" என்பது என்பது குறித்து மாநபி குறிப்பிடும் வேளையில் அன்னை ஆஸியா (ரலி) அவர்களின் பெயரையும் குறிப்பிட்டார்கள்.

عن أبو هريرة : خير نساء العالمين أربع مريم بنت عمران وآسية بنت مزاحم امرأة فرعون وخديجة بنت خويلد وفاطمة بنت محمد

உலகப் பெண்மனிகளில் மிகச்சிறந்தவர்கள் நான்கு பேர்.1, மர்யம் பின்த் இம்ரான் (அலை) அவர்கள். 2, ஆசியா பின்த் மஸாஹிம் (ரலி) அவர்கள் 3, கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் 4, ஃபாத்திமா (ரலி) பின்த் முஹம்மத் (ஸல்) அவர்கள். ( நூல்: புகாரி ) இன்னொரு ரிவாயத்தில்...

ومن حديث ابن عباس عن النبي - صلى الله عليه وسلم - : أفضل نساء أهل الجنة خديجة بنت خويلد وفاطمة بنت محمد ومريم بنت عمران وآسية بنت مزاحم امرأة فرعون .

சுவனத்து பெண்மனிகளில் மிகச்சிறந்தவர்கள் நான்கு பேர்.1, கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்கள். 2, ஃபாத்திமா பின்த் முஹம்மத் (ரலி) அவர்கள். 3, மர்யம் பின்த் இம்ரான் (அலை) அவர்கள். 4, ஆசியா பின்த் மஸாஹிம் (ரலி) அவர்கள். ( நூல்: இப்னு ஹிப்பான் )

ஸபா நாட்டு அரசிக்கு இறைத்தூதர் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எழுதிய இஸ்லாமிய அழைப்பு தொடர்பான கடிதத்தை அந்த நாட்டு அரசி தமது அரசப் பிரதானிகளிடம் அறிமுகப்படுத்தி ஆலோசனை கேட்ட போது "எனக்கு, என்னிடம், என்னுடைய இந்த விஷயத்தில்" என்று தம்மோடு இணைத்துக் கூறினார். தம்மோடு பிணைத்துக் கூறினார்.

قَالَتْ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اِنِّىْۤ اُلْقِىَ اِلَىَّ كِتٰبٌ كَرِيْمٌ‏

(அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.

اِنَّهٗ مِنْ سُلَيْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏

நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்என்று (துவங்கி) இருக்கிறது.

اَلَّا تَعْلُوْا عَلَىَّ وَاْتُوْنِىْ مُسْلِمِيْنَ

நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).  

قَالَتْ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِىْ فِىْۤ اَمْرِىْ‌ۚ مَا كُنْتُ قَاطِعَةً اَمْرًا حَتّٰى تَشْهَدُوْنِ‏

எனவே பிரமுகர்களே! என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்லஎன்று கூறினாள். ( அல்குர்ஆன்: 27: 29-32 )

இதன் விளைவாக அந்த அரசிக்கு கிடைத்த மகத்தான பாக்கியம் என்ன தெரியுமா? அதையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீனே அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

قَالَتْ رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَـفْسِىْ وَ اَسْلَمْتُ مَعَ سُلَيْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ

 இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்எனக் கூறினாள். ( அல்குர்ஆன்: 27: 44 )

இங்கு நாம் ஒன்றை நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். எப்போது நாம் நமது நபியின் தொடர்பான விஷயங்களை நாம் நம்முடன் இணைத்துக் கொள்கின்றோமோ, பிணைத்துக் கொள்கின்றோமோ நாம் ஈமானிய ஜோதியில் இரண்டறக் கலந்து விடுகிறோம்.

எனவே தான் நமது நபி அவர்களின் பிறந்த நாளை நாம் நமது வாழ்வுடன் இணைத்துப் பார்க்கவும், பிணைத்துப் பார்க்கவும் கடமைப்பட்டுள்ளோம்.

மீலாது தொடர்பான விமர்சனக் கணைகளை புறந்தள்ளிவிட்டு நமது வாழ்க்கை சிறக்க நமக்கான முன்மாதிரியாக வாழ்ந்த நமது நபி முஹம்மது அவர்களின் மீலாதை மகிழ்வுடன் நாம் கொண்டாடுவோம்.

இந்த உலகம் இப்போது எங்கு நோக்கி?

இந்த உலகம் இப்போது எங்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றால் சற்றேறக்குறைய அறியாமைக்கால நடவடிக்கைகளுக்கு மிக நெருக்கமாக சென்று கொண்டிருப்பதை உணர முடியும்.

நஜ்ஜாஷி மன்னரிடம் ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் தங்களது ஈமானிய வாழ்க்கை முறைக்கு முன்னதாக தாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்று ஒரு பட்டியல் போட்டார்களே அதற்கொப்ப இருப்பதை நாம் உணர முடியும்.

 

أيها الملك، كنا قومًا أهل جاهلية، نعبد الأصنام ونأكل الميتة، ونأتي الفواحش، ونقطع الأرحام، ونسيء الجوار، ويأكل القوي منا الضعيف،

மன்னரே! நாங்கள் நன்மை தீமையை பிரித்தறியத் தெறியாத அறியாமை கொண்ட மக்களாக இருந்தோம். கற்சிலைகளை வணங்கி வந்தோம். செத்துப் போன பிராணிகளைக் கூட உண்டு வந்தோம். அருவெறுப்பான ஆபாசமான செயல்களையே விரும்பி செய்தோம். உறவுகளை மதியாமல் உடைத்து துண்டித்து வாழ்ந்தோம். எங்கள் அருகாமையில் வாழ்ந்தோரின் உரிமைகள் எதையும் வழங்காமல் மறந்து வாழ்ந்து வந்தோம். எங்களில் வலிமையானவர்கள் பலவீனமானவர்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமைகளை தர மறுத்தோம்.

இன்றைய நமது சமூகம் வாழும் போக்கு அறியாமை கால மக்களின் வாழ்க்கைப் போங்குகளுடன் ஒத்துப் போகிறதா? இல்லையா?

எனவே, இத்தகைய வாழ்க்கை முறையில் இருந்து நிச்சயம் ஒரு மாற்று வாழ்க்கை நமக்கு தேவைப்படுகிறது.

அந்த வாழ்க்கை நமது நபி (ஸல்) அவர்களிடம் தான் இருக்கிறது.

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا 

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. ( அல்குர்ஆன்: 33: 21 )

முதலில் நமது நபி ஸல் அவர்களை யார்? என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அகில உலக மக்களைப் பொருத்தவரை நமது நபி ஸல் அவர்கள் அருட்கொடை.

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ‏

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. ( அல்குர்ஆன்: 21: 107 )

நமக்கு நமது நபி ஸல் அவர்கள் "நம் மீது நம் இறைவன் பொழிந்த பேருபகாரம்" இங்கே தான் நமக்கான நமது நபி ஸல் அவர்களுடனான தொடர்பு என்ன என்பதை இறைவன் தெளிவு படுத்துகின்றான்.

لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர். ( அல்குர்ஆன்: 3: 164 )

لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏

(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். ( அல்குர்ஆன்: 9: 128 )

அருட்கொடைக்கும் பேருபகாரத்திற்கும் இடையேயான வித்தியாசத்தை நாம் புரிந்து கொண்டால் தான் "முன்மாதிரி" எனும் அடிப்படையை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அருட்கொடையை அனுபவிப்பவர்களைப் பொறுத்து இது வேறுபடும்.

சிலர் அருட்கொடையின் மகத்துவத்தை உணர்ந்திருப்பர், அனுபவிப்பர் ஆனால் அதற்கான சரியான இடத்தை வழங்க மாட்டார்கள்.

இன்னும் சிலர் உண்டு அருட்கொடையை உதாசீனப்படுத்துவர், ஏனோ தானோ வென்று அந்த அருட்கொடையோடு நடந்து கொள்வர்.

அருட்கொடையின் மகத்துவத்தை உணர்ந்திருப்பர், அனுபவிப்பர் ஆனால் அதற்கான சரியான இடத்தை வழங்க மாட்டார்கள். இவர்களில் இரண்டு வகையினர் உண்டு.

ஒரு வகையினர், இவர்கள் அபூதாலிபைப் போன்றவர்கள் தி ஹன்ட்ரட் நூலை எழுதிய மைக்கேல் ஹெஜ் ஹார்ட் உலகின் தலைசிறந்த நூறு மனிதர்களை வரிசைப்படுத்தும் போது நமது நபி ஸல் அவர்களுக்கு முதலிடம் வழங்கியவர். இவர் மாநபி ஸல் எனும் அகிலத்தின் அருட்கொடையை புரிந்துள்ளார். அவர்களின் வாழ்க்கையின் ஊடாக கவரப்படுகிறார் ஆனால், மாநபி ஸல் அவர்களின் வாழ்வியல் கோட்பாடுகளை ஏற்க முன் வர வில்லை. இது போன்றே பெர்னாட் ஷா, மகாத்மா காந்தி, தந்தை பெரியார் போன்றவர்கள்.

இரண்டாம் வகையினர், அருட்கொடையின் மகத்துவத்தை உணர்ந்திருப்பர், அனுபவிப்பர் அதற்கான சரியான இடத்தையும் வழங்குவர். இவர்கள் மன்னர் நஜ்ஜாஷியைப் போன்றவர்கள். 

இன்றளவும் நஜ்ஜாஷியைப் போல மாநபி ஸல் அவர்களின் வாழ்வியலை தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தை நோக்கி சாரை சாரையாய் வருபவர்கள் இவர்கள்.

நபி ஸல் அவர்களின் வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமும் உண்டு என்பது தான் சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.

வாழ்க்கையில் முன்மாதிரி

ஒரு செல்வந்தருக்கு மாநபி ஸல் அவர்களின் ஹிஜாஸுக்கும் ஷாமுக்கும் வியாபாரியாக சென்று வந்து பெரும் தனவந்தராக வாழ்ந்தார்களே அந்த வாழ்க்கையில் முன்மாதிரி இருக்கிறது.

ஒரு ஏழைக்கு மாநபி (ஸல்) அவர்கள் அபூதாலிப் பள்ளத்தாக்கில் மூன்றாண்டுகள் தடுத்து வைக்கப்பட்டார்களே அந்த வாழ்க்கையில் முன்மாதிரி இருக்கிறது.

ஒரு ஆட்சியாளருக்கு மாநபி ஸல் அவர்கள் மதீனா வந்த பிறகு அந்த மக்களை வழி நடத்தியதிலும், அந்நிய மக்களை அரவணைத்துச் சென்றதிலும், பத்ர், ஹுனைன் மக்கா வெற்றியின் போது மாநபி ஸல் அவர்கள் நடந்து கொண்ட விசாலமான அந்த குணத்திலும் முன்மாதிரி இருக்கிறது.

ஒரு தந்தைக்கு, ஒரு கணவனுக்கு, ஒரு தலைவனுக்கு, ஒரு நீதிபதிக்கு, ஒரு வீரனுக்கு, ஒரு இளைஞனுக்கு, கல்வியை கற்றுக் கொள்ளும் ஒருவருக்கு, கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஒருவருக்கு, சாமானிய ஒருவருக்கு, சாதனையாளர் ஒருவருக்கு, ஊடகவியலாளருக்கு, அறிவியலாளருக்கு, விஞ்ஞான அறிவு உள்ளவருக்கு, குடும்பஸ்தருக்கு, ஆசிரியருக்கு இப்படியாக உலகின் எல்லா துறைகளுக்குமான முன்மாதிரியாக மாநபி ஸல் அவர்கள் வாழ்ந்து காட்டி சென்றுள்ளார்கள்.

முன்மாதிரியான வாழ்க்கையை பின்பற்றினால் என்ன மாற்றம் ஏற்படும்

لَمَّا أُنْزِلَتْ هذِه الآيَةُ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} [الشعراء: 214] ، دَعا رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ قُرَيْشًا، فاجْتَمَعُوا فَعَمَّ وخَصَّ، فقالَ: يا بَنِي كَعْبِ بنِ لُؤَيٍّ، أنْقِذُوا أنْفُسَكُمْ مِنَ النَّارِ، يا بَنِي مُرَّةَ بنِ كَعْبٍ، أنْقِذُوا أنْفُسَكُمْ مِنَ النَّارِ، يا بَنِي عبدِ شَمْسٍ، أنْقِذُوا أنْفُسَكُمْ مِنَ النَّارِ، يا بَنِي عبدِ مَنافٍ، أنْقِذُوا أنْفُسَكُمْ مِنَ النَّارِ، يا بَنِي هاشِمٍ، أنْقِذُوا أنْفُسَكُمْ مِنَ النَّارِ، يا بَنِي عبدِ المُطَّلِبِ، أنْقِذُوا أنْفُسَكُمْ مِنَ النَّارِ، يا فاطِمَةُ، أنْقِذِي نَفْسَكِ مِنَ النَّارِ، فإنِّي لا أمْلِكُ لَكُمْ مِنَ اللهِ شيئًا، غيرَ أنَّ لَكُمْ رَحِمًا سَأَبُلُّها ببَلالِها.

الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم الصفحة أو الرقم: 204 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : من أفراد مسلم على البخاري

மக்காவின் நபித்துவத்தின் ஆரம்ப நாட்களில் நபி (ஸல்) அவர்களுக்கு அஷ்ஷுஅரா அத்தியாயத்தின் 214 வது வசனம் இறக்கியருளப்பட்ட போது "இறை மார்க்கத்தை எடுத்துரைப்பதற்காகவும் தங்களது குடும்ப உறவுகளை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் ஸஃபா மலை உச்சியில் ஏறி நின்று, “யா ஸபாஹா! யா ஸபாஹா!!என்று சப்தமிட்டார்கள். (பெரும் படையொன்று சூழ்ந்துகொண்டதை அல்லது ஏதேனும் பேராபத்து வந்துவிட்டதை அறிவிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்.)

பிறகு குறைஷி வமிசத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்தார்கள்: ஃபஹ்ர் குடும்பத்தாரே! அதீ குடும்பத்தாரே! அப்து முனாஃபின் குடும்பத்தாரே! அப்துல் முத்தலிபின் குடும்பத்தாரே! என்று அழைத்தார்கள்.

அவர்களது அழைப்பைச் செவியேற்று இவ்வாறு அழைப்பவர் யார்? என வினவ சிலர் முஹம்மதுஎன்று கூறினர். உடனே குறைஷியர்களில், அபூலஹப் மற்றும் பலரும் அங்கு குழுமினர். வர இயலாதவர்கள் தங்கள் சார்பாக ஒருவரை அவர் சொல்வதைக் கேட்டு வருமாறு கூறியனுப்பினார்கள்.

அனைவரும் ஒன்று கூடியபோது நபி (ஸல்) இம்மலைக்குப் பின்னாலுள்ள கணவாயில் உங்களைத் தாக்குவதற்காக குதிரை வீரர்கள் காத்திருக்கிறார்கள் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அம்மக்கள் ஆம்! உங்களை நம்புவோம்; உங்களை உண்மையாளராகவே கண்டிருக்கிறோம்; பொய்யுரைத்துக் கண்டதில்லைஎன்றனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையான வேதனை வருமுன் நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன். எனக்கும் உங்களுக்கும் உள்ள உதாரணம், ஒருவர் எதிரிகளைப் பார்த்து அவர்கள் தன்னை முந்திச் சென்று தனது கூட்டத்தினரைத் திடீரெனத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக மலை உச்சியில் ஏறி யா ஸபாஹா!என்று அழைத்தவரைப் போன்றாவேன்.

பிறகு, நபி (ஸல்) அவர்கள் அம்மக்களை சத்தியத்தின் பக்கம் அழைத்து அல்லாஹ்வின் வேதனை குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள். ஒவ்வொரு கூட்டத்தாரின் பெயர்களைத் தனித்தனியாகவும், பொதுவாகவும் குறிப்பிட்டுக் கூறினார்கள்.

குறைஷியரே! அல்லாஹ்விடமிருந்து உங்களது ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.

கஅபு இப்னு லுவய்யின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மை தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது.

முர்ரா இப்னு கஅபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

குஸைய்யின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மை தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது.

அப்துல் முனாஃபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.

அப்து ஷம்ஸ் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஹாஷிம் கிளையாரே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அப்துல் முத்தலிபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது.

அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது. அல்லாஹ்வுடைய தூதரின் மாமியான அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது..

அல்லாஹ்வின் தூதர் முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! எனது செல்வத்திலிருந்து விரும்பியதை கேட்டு பெற்றுக்கொள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் உங்களது நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை விட்டு உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.

எனினும், மக்களே! உங்களுடன் இரத்த பந்தம் எனும் உறவு இருக்கிறது. உரிய முறையில் இரத்தப் பந்தத்திற்கானக் கடமைகளை நிறைவேற்றுவேன்என்று கூறி முடித்தார்கள்.

بعد سنوات من الدعوة، أسلم عدد كبير من قريش، وفي النهاية، وبعد فتح مكة، دخل معظم أفراد القبيلة في الإسلام.

وينتمي إليها الخلفاء الراشدون وخلفاء الدولة الأموية وخلفاء الدولة العباسية.

قبيلة كعب بن لؤي هي جزء من قبيلة قريش، وهم مسلمون مثلهم مثل بقية قريش. بعد ظهور الإسلام، أسلم العديد من أفراد قبيلة كعب بن لؤي، بمن فيهم صحابة كبار مثل سعيد بن زيد وأبو محذورة

قبيلة "مرة بن كعب" هي قبيلة عربية قديمة، وهي جزء من قبيلة قريش. ينتسب إليها النبي محمد صلى الله عليه وسلم من جهة والده، وكذلك عدد من الصحابة الكرام مثل علي بن أبي طالب وعثمان بن عفان. ام حبيبة وابوها ابو سفيان.

மாநபி (ஸல்) அவர்கள் யார் யாரையெல்லாம் அழைத்து எச்சரிக்கை செய்தார்களோ அவர்களில் பெருங்கொண்ட எண்ணிக்கையினரை தாம் வாழும் காலத்திலேயே இஸ்லாத்தின் பால் கொண்டு வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் புகழ் பெற்ற ஸஹாபாக்களாக திகழ்ந்தார்கள். அஹ்லுல் பைத்களாகவும், நான்கு கலீஃபாக்களாகவும், ஆக்கினார்கள்.

மேலும், சில ஸஹாபாக்களின் வம்ச வழியே உமைய்யா மற்றும் அப்பாஸிய கலீஃபாக்களின் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட சில நபித்தோழர்களில் சிலரும் இவர்களில் அடங்குவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக எந்த ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து எச்சரித்தார்களோ அந்த ஃபாத்திமா (ரலி) அவர்களை சுவனத்தின் தலைவியாக, உலகின் ஆகச் சிறந்த நான்கு பெண்களில் ஒருவராக, அவர்கள் பெற்றெடுத்த இரு மகன்களை சுவனத்து இளைஞர்களின் தலைவராக, அவர்களின் கணவரை பார் போற்றும் வீரராக, சுவனத்தின் சோபனம் பெற்ற ஒருவராக மாநபி ஸல் அவர்கள் உருவாக்கினார்கள்.

இவைகளுக்கெல்லாம் அடிப்படையாய் விளங்கியது அவர்களின் "முன்மாதிரி"யான வாழ்வியல் போங்குகள் தான் என்றால் அது மிகையல்ல.

தடம் மாறிச் சென்றவரை தடம் பதிக்க வைத்த முன்மாதிரி முஹம்மது ஸல் அவர்கள்...

மாநபி ஸல் அவர்களின் மிக அருகாமையை, அண்மையைப் பெற்றிருந்த நூற்றுக்கணக்கான நபித்தோழர்களில் வஹீயை எழுதி வந்த நபித்தோழர்கள் முதன்மையானவர்கள் ஆவார்கள்.

வஹீயை எழுதி வந்தவர்கள் எத்தனை பேர் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பின் படி 25 நபித்தோழர்கள் ஆவர்.

இந்த 25 நபித்தோழர்கள் தவிர்த்து பெயர் அறியாத கிறிஸ்துவராக இருந்து இஸ்லாத்தை தழுவிய ஒருவரும் வஹீயை எழுதுபவராக இருந்தார். ஒரு கட்டத்தில் அவரும் வஹீயை எழுதிவந்த அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபிஸ் ஸர்ஹ் எனும் நபித்தோழரும் மதம் மாறினர். 

அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபிஸ் ஸர்ஹ் , அபு யஹ்யா அல்-குராஷி அல்-ஆமிரி, உஸ்மான் இப்னு அஃப்ஃபான் ரலி அவர்கள் இவர்களின் தாயாரிடம் தாய்ப்பால் அருந்தியதன் மூலம் அவரின் சகோதரர் ஆவார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை முன்பாக இஸ்லாத்தை தழுவி, மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்தார்கள். மாநபி ஸல் அவர்களின் அண்மையைப் பெற்றார்கள்.

في السنة الثامنة للهجرة، كان فتح مكة، وكان هُناك أحد عشر شخصاً (ثمانية رجال وثلاث نساء) أمر النبي بقتلهِم ولو وجدوا مُتعلقين بأستار الكعبة، وكان عبد الله منهُم، ولم يُقتلوا جميعاً وإنما قُتل بعضهم وعفى عن بعضهم، وكان عبد الله بن أبي السرح ممن عُفي عنهم،

ஹிஜ்ரி எட்டு மக்கா வெற்றி கொண்ட அந்த தருணத்தில் ஆண்களில் எட்டு பேரையும் பெண்களில் மூன்று பேரையும் மக்காவில் எங்கே கண்டாலும் கஅபாவின் திரையைப் பிடித்து தொங்கினாலும் கொல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள். அந்த எட்டு ஆண்களில் அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபீ ஸர்ஹ் அவர்களும் ஒருவர்.

பெருமானார் (ஸல்) அவர்கள் கொல்லுமாறு ஆணை பிறப்பித்த அனைவரும் கொல்லப்படவில்லை. சிலர் கொல்லப்பட்டனர். சிலர் மன்னிப்பு வழங்கப்பட்டனர். மன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபீ ஸர்ஹ் அவர்களும் ஒருவர்.

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ أَبِى سَرْحٍ يَكْتُبُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَزَلَّهُ الشَّيْطَانُ فَلَحِقَ بِالْكُفَّارِ فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُقْتَلَ يَوْمَ الْفَتْحِ فَاسْتَجَارَ لَهُ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَأَجَارَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. رواه النسائي (4069) وأبو داود

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபி-ஸர்ஹ் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ எழுதுபவராக இருந்தார்கள். பின்னர் ஷைத்தான் அவரை நழுவச் செய்து, அவர் குஃப்ரில் சேர்ந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) அவரைக் கொல்ல உத்தரவிட்டார்கள், ஆனால் உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்கள் அவருக்குப் அபயம் - பாதுகாப்புத் தேடினார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு (அபயம்) ப்பாதுகாப்பு அளித்தார்கள். ( நூல்: அன்-நஸாயி (4069) மற்றும் அபு தாவூத் )

وكان أخ عثمان بن عفان في الرضاعة، فأختبأ في منزله - أي منزل عُثمان - ولما وجده عُثمان قال له عبد الله، يا أخي إني والله أخترتُك فأحتسبني ها هنا وإذهب إلى مُحمد وكلمه في أمري، فإن محمداً إن رآني ضرب الذي فيه عيناي إن جُرمي أعظم الجُرم وقد جئت تائباً فقال له عُثمان بل تذهب معي.

மக்கா வெற்றி கொள்ளப்பட்டு மாநபி ஸல் அவர்களின் கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியலில் தாமும் இடம் பெற்றிருப்பதை அறிந்த அப்துல்லாஹ் இப்னு சஅத் இப்னு அபீ ஸர்ஹ் (ரலி) அவர்கள் தமது பால் குடிச் சகோதரர் உஸ்மான் ரலி அவர்களிடம் தஞ்சம் புகுந்தார்.

பின்னர் உஸ்மான் ரலி அவர்களிடம் "என் சகோதரரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மையே நான் என்னை காக்கும் கேடயமாக தேர்ந்தெடுத்துள்ளேன். என் விஷயம் குறித்து நீர் தான் மாநபி ஸல் அவர்களிடம் பேச வேண்டும். ஏனெனில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர் செய்யக் கூடாத பாவத்தை செய்து விட்டேன். நான் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து வந்திருக்கிறேன். என் விஷயம் குறித்து நீர் தான் மாநபி ஸல் அவர்களிடம் பேச வேண்டும்" என்று கூறினார்.

அப்போது, உஸ்மான் ரலி அவர்கள் என்னுடன் வா! என்று அவரை அழைத்துக்கொண்டு மாநபி ஸல் அவர்களை சந்திக்க வந்தார்கள்.

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ نَصْرٍ، قَالَ: زَعَمَ السُّدِّيُّ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ، اخْتَبَأَ عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ عِنْدَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَجَاءَ بِهِ حَتَّى أَوْقَفَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، بَايِعْ عَبْدَ اللَّهِ، فَرَفَعَ رَأْسَهُ، فَنَظَرَ إِلَيْهِ ثَلَاثًا، كُلُّ ذَلِكَ يَأْبَى، فَبَايَعَهُ بَعْدَ ثَلَاثٍ، ثُمَّ أَقْبَلَ عَلَى أَصْحَابِهِ، فَقَالَ: «أَمَا كَانَ فِيكُمْ رَجُلٌ رَشِيدٌ يَقُومُ إِلَى هَذَا حَيْثُ رَآنِي كَفَفْتُ يَدِي عَنْ بَيْعَتِهِ، فَيَقْتُلُهُ؟» فَقَالُوا: مَا نَدْرِي يَا رَسُولَ اللَّهِ مَا فِي نَفْسِكَ، أَلَّا أَوْمَأْتَ إِلَيْنَا بِعَيْنِكَ؟ قَالَ: «إِنَّهُ لَا يَنْبَغِي لِنَبِيٍّ أَنْ تَكُونَ لَهُ خَائِنَةُ الْأَعْيُنِ»

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், அப்துல்லாஹ் இப்னு சஅத் இப்னு அபீ ஸர்ஹ் (ரலி) அவர்கள், உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்களிடம் ஒளிந்து கொண்டார். பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் அவரை அழைத்து வந்து நபி (ஸல்) அவர்களிடம் நிறுத்தினார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே! அப்துல்லாஹ்வுக்குப் பைஅத் செய்யுங்கள்என்று கூறினார்கள்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி மூன்று முறை அவரைப் பார்த்தார்கள். அந்த மூன்று முறையும் பைஅத் செய்ய மறுத்தார்கள். மூன்று முறைக்குப்பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர் தங்கள் தோழர்களை நோக்கி, “நான் இவருக்குப் பைஅத் செய்ய என் கையைத் தடுத்தபோது, இவரைப் பிடித்துக் கொல்ல ஒரு புத்திசாலி மனிதர் கூட உங்களில் இல்லையா?” என்று கேட்டார்கள்.

அதற்கவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மனதில் என்ன இருந்தது என்று எங்களுக்கு எப்படித் தெரியும்? உங்கள் கண்ணால் எங்களுக்குச் சைகை செய்திருக்கக்கூடாதா?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரு நபிக்கு கண்களால் சைகை செய்யும் துரோகம் இருக்கக் கூடாதுஎன்று கூறினார்கள்.( நூல்: அபூதாவூத்: 4359 )

وهكذا عاد عبد الله بن أبي السرح إلى مُجتمع الإسلام بعد توبته فكان لا يظهر وجهه للرسول ويفر منه وإذا قابله صدفةً يُسلم عليه ولا يضع عينه في عين الرسول خجلاً من فعله فقال عثمان بن عفان للنبي محمد: بأبي أنتَ وأمي، لو ترى أبن أبي السرح يفرُ منك كلما رآك فتبسَّم النبي محمد ثم قال: «أو لم أبايعه وأؤمنه؟» فقال: بلى، أَيْ رسول الله، ولكنه يتذكر عظيم جُرمه في الإسلام، فقال النبي: «الإسلام يَجُبُّ ما كان قبله». فرجع عُثمان إلى عبد الله بن سعد فأخبره، فكان يأتي فَيسلم على النبي صَلَّى الله عليه وسلم، مع الناس

பெருமானார் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபீ ஸர்ஹ் (ரலி) அவர்களை மன்னித்ததன் பின்னர் தமது வாழ்க்கையை அழகாக்கிக் கொண்டார்கள்.

எப்போதெல்லாம் நபி (ஸல்) அவர்களை நேராக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் மாநபி (ஸல்) அவர்களை பார்ப்பதை தவிர்த்து ஓடி ஒளிந்து கொள்வார்கள். அப்படி பார்க்கும் ஏதேனும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் ஸலாம் சொல்லி தன்னுடைய துரோகச் செயலை நினைத்து தலை கவிழ்ந்தவராக சென்று விடுவார்கள். நபி ஸல் அவர்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தே வந்தார்கள்.

இந்த விஷயத்தை நபி ஸல் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள் உஸ்மான் ரலி அவர்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும்! அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பாருங்கள்! உங்களைப் பார்த்தால் உங்களை விட்டும் அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபிஸ் ஸர்ஹ் ஓடி ஒளிந்து கொள்கின்றார்" என்று சொன்ன போது மாநபி ஸல் அவர்கள் புன்னகைத்தார்கள். 

பின்னர், "நான் அவரிடம் உறுதிமொழி வாங்கினேனே! அவரின் ஈமானை ஏற்றுக் கொண்டுள்ளேனே? என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அதற்கு, உஸ்மான் ரலி அவர்கள் "ஆமாம் அல்லாஹ்வின் தூதரே! ஆனாலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர் அவர் பெரிய பாவமான காரியம் ஒன்றை செய்து விட்டார் அல்லவா? அது தான் அவரைத் தடுக்கிறது போலும்" என்று கூறினார்கள்.

அப்போது, மாநபி (ஸல்) அவர்கள் "இஸ்லாம் தான் முன் நிகழ்ந்த பாவங்களை அழித்து விடுமே!" என்று மறுமொழி பகர்ந்தார்கள்.

அங்கிருந்து விடைபெற்று வந்த உஸ்மான் ரலி அவர்கள் நேராக அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபிஸ் ஸர்ஹ் ரலி அவர்களிடம் வந்து நடந்த நிகழ்வைக் கூறினார்கள்.

அதற்குப் பிறகு மாநபி ஸல் அவர்களைக் கண்டால் அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபிஸ் ஸர்ஹ் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களுக்கு ஸலாம் கூறலானார்கள். ( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபத்தில் அஸ்ஹாப் )

شارك عبد الله في الفتوح بعد انتقال النبي صلى الله عليه وسلم إلى جوار ربه، وولاه عمر بن الخطاب على الصعيد ثم ولاه عثمان بن عفان بزمن خلافته مصر في سنة 27هـ، وفي مدة ولايته فتح فتوحاً عظيمة في بلاد النوبة والسودان سنة 31 من الهجرة، وعقد عهداً بينه وبين ملك النوبة بأن يؤمَّن التجار ويحافَظ على المسجد الذي بناه المسلمون في دنقلة.

تولى بناء وقيادة الاسطول الإسلامي في معركة ذات الصواري. وانتصر على البيزنطيين وأغرق 900 سفينة من اسطول قسطنطين الثاني.

كما غزا إفريقية عدة مرات سنة سبع وعشرين و31 هـ و33 هـ حتى بلغ تونس.

قال الليث بن سعد: كان عبد الله بن سعد والياً لعمر على الصعيد، ثم ولاه عثمان مصر كلها، وكان محموداً. غزا إفريقية، فقتل جرجير صاحبها.

 وبلغ السهم للفارس ثلاثة آلاف دينار، وللرجل ألف دينار. ثم غزا ذات الصواري، فلقوا ألف مركب للروم، فقتلت الروم مقتلة لم يقتلوا مثلها قط. ثم غزوة الأساود، وقال إن عبد الله أسلم يوم الفتح ولم يتعد ولا فعل ما ينقم عليه بعدها وكان أحد عقلاء الرجال وأجوادهم.

பெருமானார் ஸல் அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர் 

அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபீ ஸர்ஹ் (ரலி) மகத்தான வெற்றி வீரராக வலம் வந்தார்கள்.

உமர் (ரலி) ஆட்சிக் காலத்தில் சயீத் எனும் பகுதியின் கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். பின்னர் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 27 -ல் மிஸ்ரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள்.

இவர்களின் தலைமையில் ஹிஜ்ரி 27 -ல் அனுப்பப்பட்ட படைப்பிரிவின் மூலமாக பைசாந்தியப் பகுதியின் நூபா நகரம், சூடான் முழுமைக்கும் ஹிஜ்ரி 31 -ன் துவக்க காலத்தில் இஸ்லாமிய ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்த படையெடுப்பின் போது இவர்களது புத்தி சாதுர்யமான நடவடிக்கைகள் காரணமாக பைசாந்தியப் பேரரசின் 900 கப்பல்கள் படை வீரர்களுடன் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.

தொடர்ந்து வடஆப்ரிக்காவை நோக்கி நகர்ந்த இவர்களின் தலைமையிலான படைப்பிரிவு ஹிஜ்ரி 31 -ன் இறுதியில் ஆப்ரிக்காவின் முழு நிலப்பகுதியையும் இஸ்லாமிய ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

இந்த வெற்றியின் போது கிடைத்த கனீமத்தில் குதிரை வீரர்களுக்கு மூவாயிரம் தீனாரும், காலாட்படை வீரர்களுக்கு ஆயிரம் தீனாரும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து ரோமை நோக்கி ஆயிரம் வாகனத்தில் படை வீரர்களுடன் பயணித்து ரோமர்களை வரலாறு காணாத படைச் சேதத்தை சந்திக்க வைத்தார்கள். இந்த போருக்கு தாதுஸ் ஸவாரீ என்று பெயர். அங்கிருந்து அஸ்வாத் எனும் பகுதிக்கு புறப்பட்டு அங்கேயும் வெற்றிகளை குவித்து இஸ்லாமிய ஆளுகையின் பரப்பளவை விசாலப் படுத்தி தமது வீரத்தால் பெரும் பங்கு வகித்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபீ ஸர்ஹ் (ரலி) அவர்கள்.

இரண்டாம் முறையாக மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை தழுவிய அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபீ ஸர்ஹ் (ரலி) அவர்கள் இஸ்லாமிய வரலாற்றின் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறிப்போனார்கள்‌.

குறிப்பாக, "அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்கிய இந்த இரண்டாம் கட்ட வாழ்க்கையை மிகப் பேணுதலோடும் எவ்வித விமர்சனங்களும் தம்மை நோக்கி வந்து விடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி கண்ணும் கருத்துமாக இஸ்லாம் கடுமையான பாவம் என்று எச்சரிக்கை செய்யும் எதையும் செய்து விடாமல் கவனமாக வாழ்ந்தார்கள்" என்று அல்லாமா தகபீ (ரஹ்) அவர்கள் ஸியரு அஃலாமின் நுபலா வில் பதிவு செய்கிறார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )

بعد مقتل عثمان اعتزل عبد الله السياسة ونجا بنفسه من الفتنة، وخرج إلى عسقلان فظل فيها عابداً وذكر صلاح الدين الصفدي في كتابه الوافي في الوفيات أنه: حين مات عبد الله بن سعد بن ابي سرح دعا الله فقال: اللهم اجعل خاتمة عملي صلاة الفجر فتوضأ في ليلته وصلى وقرأ في الركعة الأولى أم القرآن (سورة الفاتحة) والعاديات وفي الثانية أم القرآن وسورة ثم سلم عن يمينه وذهب يسلم عن يساره فقبض ومات ودُفِن في عسقلان.

وذكر يزيد بن أبي حبيب: " لما احتضر ابن أبي السرح وهو في عسقلان، وكان خرج إليها فاراً من الفتنة، فجعل يقول من الليل: آصبحتم؟ فيقولون: لا. فلما كان عند الصبح، قال لمولاه: يا هشام ! إني لأجد برد الصبح فأنظر. ثم قال: اللهم أجعل خاتمة عملي الصبح، فتوضأ، ثم صلى، فقرأ في الأولى بأم القرآن والعاديات، وفي الآخرى بأم القرآن (سورة الفاتحة) وسورة وسلم عن يمينه، وذهب يُسلم عن يساره فمات ".

وكانت وفاته قبل اجتماع الناس على معاوية ولم يبايع علياً ولا معاوية. ووفاته سنة ست أو سبع وثلاثين للهجرة

யஜீத் இப்னு அபீ ஹபீப் (ரஹ்) அவர்களும், ஸலாஹுத்தீன் அஸ் ஸிஃப்தீ (ரஹ்) அவர்களும் கூறுகின்றனர்:- "அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபூ ஸர்ஹ் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டதன் பின்னர் மக்களிடையே நிலவிய குழப்பங்களில் இருந்து தவிர்ந்து வாழும் பொருட்டு அஸ்கலான் நோக்கி விரைந்து அங்கேயே தங்கிக் கொண்டார்கள். தாங்கள் வகித்து வந்த அத்தனை பொறுப்புகளையும் துறந்தார்கள். வாழ்வின் நிறைவுப் பகுதியை அடைந்த அவர்கள் அஸ்கலானின் மாபெரும் வணக்கசாலியாக திகழ்ந்தார்கள்.

அவர்கள் அல்லாஹ்விடம் இப்படி பிரார்த்தனை செய்வார்களாம்.

அல்லாஹ்வே! என் (செயலின் இறுதியாக) இறுதி முடிவை ஃபஜ்ர் தொழுகை(யை)யாக ஆக்குவாயாக! 

ஒரு நாள் இரவு காலைப்பொழுது வந்து விட்டதா? என்று கேட்க, அருகில் இருந்தவர்கள் இல்லை என்று கூறினார்கள். பின்னர் சில மணித்துளிகள் கழித்து, தமது பணியாளரிடம் "இதோ! நான் அதிகாலைப் பொழுதின் குளிர்ந்த காற்றை உணர்கிறேன்" என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வே! என் (செயலின் இறுதியாக) இறுதி முடிவை ஃபஜ்ர் தொழுகை(யை)யாக ஆக்குவாயாக! என்று பிரார்த்தனை செய்து விட்டு, ஃபஜ்ர் தொழுகைக்காக உளூ செய்து  தக்பீர் கட்டி முதல் ரக்அத்தில் சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் சூரத்துல் ஆதியாத்தும், இரண்டாம் ரக்அத்தில் சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் இன்னொரு சூராவும் ஓதி தொழுகையை முடித்து வலது புறம் ஸலாம் கொடுத்து பின்னர் இடது புறம் கொடுத்தார்கள். அந்த நிலையிலேயே அவர்களின் ரூஹும் கைப்பற்றப்பட்டது. (இன்னா லில்லாஹி....)

وقال عنه الإمام الذهبي: «وهو أحد النجباء العقلاء الكُرماء من قريش» ولم يزد على ذلك.

அல்லாமா தகபீ ரஹ் அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபூ ஸர்ஹ் (ரலி) அவர்கள் குறைஷிகளில் பெரும் கொடையாளராகவும், பெரும் அறிவாற்றல் நிறைந்தவராகவும், தலைசிறந்த மனிதராகவும் விளங்கினார்கள். 

சற்றேறக்குறைய அவர்களின் வஃபாத், மக்கள் முஆவியா (ரலி) அவர்களிடம் பைஅத் செய்து கொண்டிருந்த நாட்களில் நிகழ்ந்தது. மேலும், அவர்கள் முஆவியா (ரலி) அவர்களிடமும் பைஅத் செய்ய வில்லை. அலீ (ரலி) அவர்களிடமும் பைஅத் செய்ய வில்லை. இந்த குழப்பத்தில் இருந்து தவிர்ந்து கொள்ளவே அஸ்கலான் வந்தார்கள். ( நூல்: அல் வாஃபி பில் வஃபிய்யாத், ஸியரு அஃலாமின் நுபலா )

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் மீதான நம் நேசத்தை நாம் அதிகரிப்போம்!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நபி ஸல் அவர்களின் மீதான நேசத்தை அதிகப் படுத்தி தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

2 comments:

  1. إِنَّهُ لَا يَنْبَغِي لِنَبِيٍّ أَنْ تَكُونَ لَهُ خَائِنَةُ الْأَعْيُنِ»

    ஆகா..

    ReplyDelete