Thursday, 9 October 2025

I love 💕 muhammad sallallahu alaihi wasallam!! يا رسول الله، والله إني لَأُحِبُّك

 I love 💕 muhammad sallallahu alaihi wasallam!! يا رسول الله، والله إني لَأُحِبُّك


உத்தர பிரதேசத்தின் கான்பூரில் மீலாதுன் நபியை முன்னிட்டு, கடந்த 04/09/2025 அன்று'ஐ லவ் முஹமது' (I Love Mohammad) என்ற பேனர் வைக்கப்பட்டது சர்ச்சையாகியது.

இதுதொடர்பாக எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவானதைத் தொடர்ந்து, உத்தர பிரதேசம் மற்றும் நாட்டின் பல நகரங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பல்வேறு நகரங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 1700 வழக்குகளும் போடப்பட்டுள்ளது, மேலும் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

இரு தரப்பினரிடையே பகையுணர்வை தூண்டுதல் மற்றும் வெறுப்பை பரப்புதல் ஆகியவற்றை குறிக்கும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 196 மற்றும் 299ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யுனைடெட் அகெய்ன்ஸ்ட் ஹேட்' அமைப்பைச் சேர்ந்த நதீம் கான் பிபிசி-யிடம், கூறும் போது "கான்பூரில் நடந்த சம்பவம் முஸ்லிம்களிடையே கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால் இது முதல் சம்பவம் அல்ல. நிலைமை படிப்படியாக இந்த நிலையை அடைந்துள்ளது. ரமலான் மாதத்தில் மொராதாபாத்தில் வீட்டில் தொழுகை நடத்தியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு மொட்டை மாடியில் தொழுகை நடத்தத் தடை விதிக்கப்பட்டது. இப்போது நபிகள் நாயகத்தின் பதாகைக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களைத் தேர்ந்தெடுத்துக் குறிவைப்பதற்கும், அவர்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்கும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது" என்றார்.

சிறிய சம்பவங்கள் பெரிதாக்கப்பட்டு, முஸ்லிம்கள் குறிவைக்கப்படுவதாகவும், அவர்களின் மத உணர்வுகளைத் தூண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நபிகள் நாயகத்தின் மீது அன்பை வெளிப்படுத்தினால் வழக்குப் பதிவு செய்யப்படுமானால், ஒவ்வொரு முஸ்லிமும் நபிகள் நாயகத்தை தங்கள் உயிரைவிட அதிகமாக நேசிக்கிறார்கள் என்பதால் இந்தியாவின் 30 கோடி முஸ்லிம்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுமா என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் பிரதாப்கடி கேள்வி எழுப்பினார்.

கான்பூர் சம்பவத்திற்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்திலும் போராட்டங்கள் நடந்துள்ளன. 'ஐ லவ் முஹமது' விவகாரத்தில் பல மாநிலங்களில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் 'ஐ லவ் முஹமது' படங்களை இடுகையிட்டுள்ளனர். இந்த சுவரொட்டியைப் பலர் தங்கள் சுயவிவரப் படமாக (புரொஃபைல் பிக்சர்) வைத்துள்ளனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விவேக் குமார், "மைய அளவில் ஏதேனும் ஒரு கொள்கையின் கீழ் முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகிறார்கள் அல்லது இது ஒரு பிரசாரம் என்று கூற முடியாது. ஆனால், சிறிய சம்பவங்கள் மற்றும் அவற்றின் எதிர்வினைகள் மூலம் சிறுபான்மையினர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு உருவாகி வருவது தெரிகிறது" என்றார்.

பேராசிரியர் விவேக் குமார், "ஒரு குழு தாங்கள் பலவீனமானவர்கள் அல்லது வித்தியாசமானவர்கள் என்று உணர வைக்கப்படுகிறார்கள்" என்றார். ( நன்றி: பிபிசி தமிழ், 25/09/2025 )

ஒரு கிராமத்தில் ஊர்வலம் சென்றதுடன் முடிந்திருக்க வேண்டிய “ஐ லவ் முஹம்மது” என்ற ஒரு முழக்கம் உத்தரப் பிரதேசத்தின் பிற பகுதிகளுக்கும் பரவி, தொடர்ந்து மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரகாண்ட் , குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் “ஐ லவ் முஹம்மது” என்ற முழக்கத்துடன் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற காரணமாக அமைந்திருக்கின்றன.

மாநபி (ஸல்) அவர்களின் மீதான நேசத்திற்கு வரையறை கூறுவதற்கும், எல்லைகள் வகுப்பதற்கும் இந்த சண்டாள சங்கிகளுக்கு எள்ளளவும் கூட தகுதியில்லை.

இப்படித்தான் நபி (ஸல்) அவர்களை நேசித்தார்கள் எங்கள் முன்னோர்கள்...

وقد سُئِل علي ـ رضي الله عنه ـ كيف كان حبكم لرسول الله ـ صلى الله عليه وسلم ـ؟، قال: " كان والله أحب إلينا من أموالنا وأولادنا، وآبائنا وأمهاتنا، ومن الماء البارد على الظمأ ".

ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களிடம் ”நபி (ஸல்) அவர்களின் மீது நபித்தோழர்களான உங்களுக்கு எந்த அளவு அன்பு இருந்தது?” என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு, அலீ (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். எங்களுடைய சொத்துக்கள், நாங்கள் பெற்றெடுத்த மக்கள், எங்களைப் பெற்றெடுத்த அன்பு அன்னையர்கள், ஆகியவர்களை விடவும், கடுமையான தாகத்தின் போது கிடைக்கும் குளிர்ந்த நீரை விடவும் நாங்கள் நபி {ஸல்} அவர்களை நேசித்தோம்” என்று கூறினார்கள். 

நபி {ஸல்} அவர்களின் தோழர்கள் அனைவருமே அப்படித்தான் நபி {ஸல்} அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்கள்.

உங்களது தந்தையை விட மனிதர்களில் நேசத்திற்குரியவர் எவரும் எங்களுக்கு இருக்கவில்லை. உங்களது தந்தைக்குப் பிறகு உங்களை விட நேசத்திற்குரியவர் எவருமில்லை என உமர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களை பார்த்துக் கூறினார்கள். (நூல்: அஹ்மத்)

உஹத் யுத்தத்தின் போது ஓர் இரவு எனது தந்தை என்னை அழைத்து மகனே! இந்த யுத்தத்தில் நபித்தோழர்களில் முதலாவதாக கொல்லப்படுபவர்களில் ஒருவராக நான் இருப்பேன் என கருதுகிறேன். எனக்குப் பிறகு மிகச் சிறந்தவரான நபி (ஸல்) அவர்களை விட யாரையும் உனக்கு விட்டுச் செல்லவில்லை. எனக்கு கடன் இருக்கின்றது. அதனை நீ ஒப்படைத்துவிடு. மேலும் உனது சகோதரிகளுக்கு நல்லதை உபதேசிப்பாயாக எனக்கூறினார் (அடுத்த நாள் காலை நடந்த யுத்தத்தில் என் தந்தை கொல்லப்பட்டார்) என ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)

عن رسول الله صلى الله عليه وسلم فيقول أنس رضي الله عنه: "لما كان يوم أحد انهزم ناس عن رسول الله صلى الله عليه وسلم، وأبو طلحة بين يديه مجوبا عليه بحجفة (محيط به بترس ليحميه)، وكان راميا شديد النزع كسر يومئذ قوسين أو ثلاثة، وكان الرجل يمر معه الجعبة من النبل، فيقول رسول الله صلى الله عليه وسلم: انثرها لأبي طلحة، ثم يشرف (يتطلع وينظر) إلى القوم، فيقول أبو طلحة: يا نبي الله بأبي أنت، لا تشرف ألا يصيبك سهم، نحري دون نحرك) رواه البخاري. أي: جعل الله نحري أقرب إلى السهام من نحرك لأصاب بها دونك، وحاصله: أفديك بنفسي يا رسول الله.

உஹத் யுத்தத்தின் போது மக்கள் நபிகளாரை விட்டும் பிரிந்து சென்றனர். அபூ தல்ஹாவோ நபியவர்களுக்கு முன்னால் நின்று தமது கேடயத்தால் தடுத்துக் கொண்டிருந்தார்கள். அபூ தல்ஹா (ரழி) மிக துல்லியமாக அம்பு வீசக் கூடிய மனிதர். அன்றைய தினம் இரண்டு அல்லது மூன்று வில்லுகளை உடைத்தார்கள். எவரேனும் ஒருவர் அம்புக்கூட்டுடன் செல்வதைக்கண்டால் அதனை அபூதல்ஹாவிடம் போட்டு விட்டு செல்! என நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள். அந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலிருந்து மக்களை (அவர்களது நிலவரங்களை காண்பதற்கு) எட்டிப் பார்த்தார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும். எட்டிப்பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில்; ஒன்று உங்களைத் தாக்கி விடக்கூடும். என்மாரப்பு உங்கள் மார்ப்புக்கு (நெஞ்சிப்பகுதிக்கு) கேடயமாக இருக்கும் என கூறினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி.)

உங்களைப் பார்த்த மகிழ்ச்சியே போதும் நபியே!

جاءت أم سعد بن معاذ، وهي كبشة بنت رافع ـ رضي الله عنها ـ تعدو نحو رسول الله ـ صلى الله عليه وسلم ـ وقد وقف على فرسه، وسعد بن معاذ آخذ بعنان فرسه، فقال سعد: " يا رسول الله! أمّي!، فقال: مرحبا بها، فدنت حتى تأملت رسول الله ـ صلى الله عليه وسلم ـ وقالت: أما إذ رأيتُك سالما فقد أشوت (هانت) المصيبة، فعزّاها رسول الله ـ صلى الله عليه وسلم ـ بعمرو بن معاذ ابنها، ثم قال: ( يا أمّ سعد، أبشري وبشّري أهليهم: أنّ قتلاهم ترافقوا في الجنة جميعا، وقد شفّعوا في أهليهم، قالت: رضينا يا رسول الله، ومن يبكي عليهم بعد هذا؟، ثم قالت: يا رسول الله ادع لمن خلّفوا فقال: اللهم أذهب حزن قلوبهم، واجبر مصيبتهم، وأحسن الخلف على من خُلّفوا ) .

உஹது யுத்தம் நடைபெற்று முடிந்து நபி ஸல் அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட நபித்தோழர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிக் கொண்டு குதிரையின் மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.

குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது, அங்கே ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் தாயார் கப்ஷா பிந்த் ராஃபிஉ (ரலி) அவர்கள் வந்தார்கள்.

இதைக் கண்ட ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் நபி ஸல் அவர்களிடம் தமது தாயார் வந்திருப்பதாக கூறினார்கள்.

அப்போது, அவர்களை நோக்கி திரும்பி "உங்கள் வருகை நல்வரவாகட்டும்! என்று வர வேற்றார்கள். பிறகு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போனார்கள் நபி ஸல் அவர்கள்.

அப்போது, அருகில் வந்து நின்ற கப்ஷா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களை நான் பார்த்து விட்டேன். உஹது யுத்த களத்தில் இருந்து உங்களைப் பற்றி ஏதேதோ செய்திகள் சொல்லப்பட்டு செய்வதறியாது துடித்துப் போயிருந்தேன்! இதோ! உங்களை கண்டு விட்டேன். இது போதும் என் வாழ்வில் எனக்கேற்படும் எந்த துன்பமும் ஒன்றுமே இல்லை!" என்று கூறினார்கள்.

அப்போது நபி ஸல் அவர்கள் உஹதில் ஷஹீதான அவர்களின் இன்னொரு மகனான அம்ர் இப்னு மஆத் (ரலி) அவர்களுக்காக இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்கள்.

பின்னர், உம்மு ஸஅதே! என்றழைத்து நீங்களும்,:யுத்த களத்தில் கொல்லப்பட்டு ஷஹீதான குடும்பத்தார்களும் சோபனத்தை பெற்றுக் கொள்ளுங்கள்!; இறை வழியில் கொல்லப்பட்ட ஷஹீதுகள் அனைவரும் சுவனத்தில் நெருக்கமாக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் குடும்பத்தார்களுக்காக அவர்களுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.

அப்போது, உம்மு ஸஅத் (ரலி) அவர்கள் "நாங்கள் பொருத்திக் கொண்டோம்! அல்லாஹ்வின் தூதரே! இவ்வளவு மகத்தான சோபனங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் யார் தான் அழுது கொண்டிருப்பார்கள்?.

அல்லாஹ்வின் தூதரே! இவ்வளவு மகத்தான சோபனம் வழங்கப்பட காரணமாக இருந்த இந்த உஹது யுத்தத்தில் சில காரணங்களால் பங்கேற்க முடியாமல் போனவர்களுக்காக நீங்கள் துஆ செய்யுங்கள்! என்று கேட்டார்கள்.

அதற்கு, நபி ஸல் அவர்கள் "யாஅல்லாஹ்! கவலைகளால் நிரம்பி இருக்கும் அவர்களின் உள்ளங்களில் இருந்து கவலைகளை அகற்றுவாயாக! அவர்களின் காரியங்களில் பொறுமையை வழங்கியருள்வாயாக! எவரெல்லாம் நியாயமான காரணங்களால் இந்த யுத்தத்தில் பங்கேற்க முடியாமல் போனார்களோ அவர்களுக்கு சிறந்த மாற்றத்தை வழங்கியருள்வாயாக!" என்று துஆ செய்தார்கள். ( நூல்: தபகாத் இப்னு ஸஅதுல் குப்ரா )

என் இழப்புகளை ஈடு செய்திட முடியும் நபியே! நீங்கள் நலமுடன் இருந்தாலே போதும் நபியே!

عن سعد بن أبي وقاص ـ رضي الله عنه ـ قال: ( مرَّ رسول الله ـ صلى الله عليه وسلم ـ بامرأة من بني دينار وقت أصيب زوجها وأخوها وأبوها مع رسول الله ـ صلى الله عليه وسلم ـ في أُحُد، فلما نُعوا لها قالت: ما فعل رسول الله ـ صلى الله عليه وسلم ـ؟، قالوا: خيراً يا أم فلان، هو بحمد الله كما تحبين، قالت: أرونيه حتى أنظر إليه، قال: فأشير لها حتى إذا رأته قالت:كل مصيبة بعدك جَلل (صغيرة) ) .

உஹதில் ஷஹீதாக்கப்பட்ட ஒவ்வொரு நபித்தோழர்களின் குடும்பத்தார்களையும் சந்தித்து நபி ஸல் அவர்கள் இரங்கல் கூறி ஆறுதல் படுத்திக் கொண்டிந்த தருணம் அது.

அந்த தருணத்தில் பனூ தீனார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பத்தில் தமது தந்தை, தமது கணவர், தமது இரு மகன்கள் ஆகியோரை உஹது களத்தில் இழந்திருந்தார். அவர்கள் நால்வரும் ஷஹீதாக்கப்பட்டிருந்தனர்.

அப்போது அந்த பனூ தீனார் கோத்திரத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணியிடம் நபித்தோழர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஷஹீதாக்கப்பட்ட விஷயம் குறித்து சொல்லப்பட்டது. மேலும், நபித்தோழர்கள் அது குறித்து ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தனர். அப்போது அந்தப் பெண்மணி "நபி ஸல் அவர்கள் எப்படி இருக்கின்றார்கள்? என்று கேட்டார்.

அதற்கு, நபித்தோழர்கள் "இன்னாரின் தாயே! அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! நீங்கள் விரும்புவது போன்றே மாநபி ஸல் அவர்கள் நலமுடன் இருக்கின்றார்கள்" என்றனர்.

அதற்கு அந்தப் பெண்மணி "நபி ஸல் அவர்களை நான் இப்போது பார்க்க வேண்டும். பார்த்து நான் அதை உறுதி செய்து கொள்ள வேண்டும்". என்றார்.

அப்போது, நபித்தோழர்கள் "ஓரிடத்தில் நபி ஸல் அவர்கள் நிற்பதை சுட்டிக் காட்டினார்கள்".. மாநபி ஸல் அவர்களைக் கண்ட அந்தப் பெண்மணி "உங்களைக் கண்டு கொண்டேன்! உங்களைக் கண்டதன் பின்னர் எனக்கு ஏற்பட்ட அனைத்து சோதனைகளும் சாதாரணமானவையே!" என்று கூறினார். ( நூல்: அஹ்மத் )

அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபத்தில் அஸ்ஹாப் என்ற நூலிலும், அல் இஸாபா ஃபீ தம்யீஸிஸ் ஸஹாபா என்ற நூலிலும் மிகவும் விரிவான முறையில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.

அந்தப் பெண்மணியின் பெயர் ஸுமைரா பிந்த் கைஸ் (ரலி) என்றும், அவருடைய இரு மகன்களின் பெயர் ஸுலைம் (ரலி) நுஃமான் (ரலி) என்றும் அவரது கணவர் பெயர் ஹாரிஸ் இப்னு ஸஅலபா (ரலி) என்றும், தந்தை பெயர் கைஸ் (ரலி) என்றும் கூறப்பட்டுள்ளது.

மாநபி (ஸல்) அவர்கள் மீது அந்த மேன்மக்கள் வைத்திருந்த நேசம் மாநபி (ஸல்) அவர்களைப் பார்க்க வேண்டும். அவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலை அவர்களின் இதயங்களைத் தூண்டிக் கொண்டே இருந்தது. தவிர அவர்களின் அப்போதைய இழப்புகள் அவர்களுக்கு பெரிதாகவே தெரியவில்லை.

நபி (ஸல்) அவர்களை பார்ப்பதை விட உயர்ந்தது எதுவும் இல்லை!

وقال الإمام أحمد: حدثنا عبد الله بن محمد، ثنا أبو خالد الأحمر، عن الحجاج، عن الحكم، عن مقسم، عن ابن عباس: أن رسول الله بعث إلى مؤتة فاستعمل زيدا، فإن قتل زيد فجعفر، فإن قتل جعفر فابن رواحة، فتخلف ابن رواحة، فجمع مع النبي فرآه فقال له: «ما خلفك؟».

فقال: أجمع معك.

قال: «لغدوة أو روحة خير من الدنيا وما فيها».

وقال أحمد: ثنا أبو معاوية، ثنا الحجاج، عن الحكم، عن مقسم، عن ابن عباس قال: بعث رسول الله

عبد الله بن رواحة في سرية فوافق ذلك يوم الجمعة

قال: فقدم أصحابه وقال: أتخلف فأصلي مع رسول الله الجمعة ثم ألحقهم.

قال: فلما صلى رسول الله رآه فقال: «ما منعك أن تغدو مع أصحابك؟».

فقال: أردت أن أصلي معك الجمعة ثم ألحقهم.

فقال رسول الله صلى الله

«لو أنفقت ما في الأرض جميعا ما أدركت غدوتهم».

 அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்த நபித்தோழர்களில் ஒருவராவார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மூத்தா யுத்தத்திற்கான படைப்பிரிவை அனுப்பும் போது, வழக்கத்திற்கு மாறாக தளபதிகளாக மூன்று நபித்தோழர்களின் பெயர்களை அறிவித்தார்கள்.

ஆரம்பமாக, ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார்! அவர் காயமுற்றால் ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார். அவரும் காயமுற்றால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார். அவரும் காயமுற்றால் இஸ்லாமியப் படை வீரர்கள் அடுத்த தளபதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறி படையை வழியனுப்பி வைத்தார்கள்.

படை புறப்பட்டுச் சென்ற நாள் வியாழன் மாலையாக இருந்தது. விடிந்தால் வெள்ளிக்கிழமை.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தளபதிகளை நியமிக்கும் அந்த விதத்தைப் பார்த்தே நிச்சயம் தாம் மூத்தா யுத்தத்தில் ஷஹீதாகி விடுவோம் என்று உறுதியாக நம்பினார்கள்.

ஆகையால், ”எப்படியும் நாம் ஷஹீதாகி விடுவோம். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை இனி பார்க்க முடியாது. கடைசியாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் பின் நின்று ஜும்ஆ தொழுகையை முடித்து விட்டுச் செல்வோம்” என்று மதீனாவிலேயே இருந்து விட்டார்கள்.

ஜும்ஆ தொழுகைக்கான பாங்கு சொல்லப்படவே, நபி {ஸல்} அவர்கள் தம்மைப் பார்த்து விடாதவாறு ஒரு ஓரமான இடத்தில் அமர்ந்து கொண்டார்கள்.

தொழுகை முடிந்து வெளியே செல்லும் போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களைப் பார்த்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை அழைத்து ”நேற்றே நான் யுத்தத்திற்கான படைப்பிரிவை அனுப்பி வைத்தேனே! ஏன் நீங்களும் அவர்களுடன் செல்லாமல் இருந்து விட்டீர்? உம்மை செல்ல விடாமல் செய்த காரியம் எது?” என்று வினவினார்கள்.

அப்போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இறுதியாக உங்களுக்குப் பின்னால் நின்று ஜும்ஆ தொழுகையை தொழுதிடும் ஆவல் தான் என்னைத் தாமதப்படுத்தி விட்டது. இதோ அல்லாஹ்வின் தூதரே! யுத்த களத்தை நோக்கித் தான் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். விரைவாகச் சென்று வழியில் படைப்பிரிவில் சேர்ந்து கொள்வேன்” என்று பதில் கூறினார்கள்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “அப்துல்லாஹ்வே! பூமி முழுவதையும் நீர் செலவழித்தாலும் கூட, முன்னால் சென்று விட்ட படைப்பிரிவினர் அடைந்த நன்மைகளை உம்மால் அடைந்து கொள்ள முடியாதே!” என்று நபி {ஸல்} அவர்கள் பரிவோடு கூறினார்கள்.

அப்போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உங்களோடு நான் இருக்கும் ஒரு காலைப் பொழுதோ, அல்லது மாலைப் பொழுதோ இந்த உலகமும், உலகின் அனைத்துச் செல்வங்களும் எனக்கு கிடைப்பதை விட மேலாக நான் கருதுகின்றேன்!” என்று கூறி, விடை பெற்று யுத்தகளம் நோக்கி விரைந்தார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மத் )




1 comment: