சிறுபான்மையினர் நலன் காத்த இஸ்லாம்!!!
1992ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மத ரீதியான, மொழி ரீதியான, இன ரீதியான சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களின் உரிமை குறித்த சாஸனத்தை பிரகடனம் செய்தது. அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் தேதியை சிறுபான்மையினர் உரிமை தினமாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது.
கலாச்சார ரீதியாக, மொழி, இன ரீதியாக, தேச ரீதியாக சிறுபான்மையினராக இருப்பவர்களின் அடையாளங்கள் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டுமென்கிறது ஐ.நாவின் பிரகடனம். சிறுபான்மையினரின் நிலையை மேம்படுத்துவது என்பது அந்தந்த நாட்டு அரசுகளின் கடமை என்றும் கூறுகிறது இந்த சாஸனம்.
இதையடுத்து இந்தியாவில் 1992ல் தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சிறுபான்மையினருக்கான ஆணையம் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் ஆகிய ஐந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டார்கள். 2014 ஜனவரி 27ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, ஜைனர்களும் மத சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டார்கள்.
இந்தியாவில் சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் இந்தத் துறை செயல்பட்டு வந்த நிலையில், 2006ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி இதற்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது.
சிறுபான்மையின் பொருள்:-
சிறுபான்மை என்பதற்கு அனைவரும் ஏற்றுக்கொண்ட ஓர் வரையறை கிடையாது.
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை, மதம், மொழி, இனம் என்னும் அடிப்படையில் அங்கு வாழும் மக்கள் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்று வகைப்படுத்தப்படுகின்றார்கள்.
அரசியல் அறிவியலாளர் ஆண்ட்ரே லீபிச்சை பொறுத்தவரை, ஒரு சிறுபான்மையானது இரு முக்கியக் கூறுகளைக் கொண்டது: “சமத்துவமின்மை, தாழ்வுநிலை —வெறும் எண்ணிக்கை சார்ந்த தாழ்வுநிலை அல்ல, உண்மையான பொருளில் தாழ்வுநிலை”.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆஸாத் சிறுபான்மை என்பதற்கு வழங்கிய வரையறை 1940ம் ஆண்டு ராம்கர் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் ஆற்றிய தலைமையுரையில் அவர் குறிப்பிட்டதாவது:
அரசியல் சொல்வழக்கில் சிறுபான்மை எனும் வார்த்தைக்கு… ஒரு பலவீனமான சமுதாயம் (ஜமாஅத்) என்று பொருள். அது எண்ணிக்கையிலும் ஆற்றலிலும் (சலாஹியத்) பலம்குன்றியதாக இருக்கும் காரணத்தால் ஒரு பெரிய, பலம்வாய்ந்த சமூகத்துக்கு முன்னால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் இருக்கும்… இங்கே எண்ணிக்கை என்பது எவ்வளவு முக்கியமோ, அதேயளவு ஆற்றல் (நவ்யியத்) என்பதும் முக்கியமானது. ( நன்றி: மெய்பொருள்.காம், 26/03/2020 )
இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை எப்படியிருக்கிறது?
சிறுபான்மையினர் உரிமைக்கென தனியாக அமைச்சகம், ஆணையம் ஆகியவை செயல்பட்டுவந்தாலும் இந்தியாவில் மதச் சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுவது, தாக்கப்படுவது, கலவரங்களின்போது அவர்களது சொத்துகள் சூறையாடப்படுவது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன.
அரசுகள் சிறுபான்மையினர் நலன் குறித்துப் பேசினாலும், அரசின் அமைப்புகள், காவல்துறை போன்றவை சிறுபான்மையினரை அணுகும் விதத்தில் பாரபட்சம் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. சிறுபான்மையினர், அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ற விதத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை என்கிற புகாரும் இருக்கிறது.
இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களின் சிறைகளில், அந்த மாநிலங்களில் உள்ள சிறுபான்மையினரின் சதவீதத்தைவிட அதிக அளவிலேயே சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த சிறைக் கைதிகள் இருப்பதை தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வட மாநிலங்களில் மட்டுமல்லாமல் தற்போது தென் மாநிலங்களிலும் சிறுபான்மையினரை அச்சுறுத்தவது நடக்க ஆரம்பித்துள்ளது.
மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. சமீப காலமாக தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளங்கள் போன்றவற்றில் சில பிரிவினர் உட்புகுந்து பிரச்சனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
தற்போது மதுரையில் திருப்பரங்குன்றம் தீபத்தை வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ள பிரச்சினை தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களிலும் பிரதிபலிக்க தொடங்கியிருப்பதை உணர்த்துகிறது.
ஜனநாயகத்தில் ஆட்சி என்பது பெரும்பான்மையினரால் தேர்வுசெய்யப்படலாம். ஆனால், அங்கே உள்ள சிறுபான்மையினரின் மகிழ்ச்சிதான் அந்த ஜனநாயகத்தின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. சிறுபான்மையினர் உரிமை தினம் சுட்டிக்காட்டுவது அதைத்தான்.
பொதுவாகவே உலகம் முழுவதும் சிறுபான்மையினராக இருப்பதென்பது ஒரு அரசியல் ஊனம்தான்; ஆகவேதான் பெரும்பான்மையினர் அதிகாரத்தை வைத்துக்கொள்ளட்டும். சிறுபான்மையினருக்கு வாழ்வதற்கான உரிமையைக் கொடுங்கள் என்ற கோஷம் வலுவாக முன் வைக்கப்படுகிறது.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பகைமை மற்றும் வன்ம பேச்சுக்கள் 2024ஆம் ஆண்டில் மிக உச்சத்தை எட்டியதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் Think Tank என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மப் பேச்சுகள் 2024ஆம் ஆண்டில் 74.4 விழுக்காடு அதிகரித்ததைச் சுட்டிக்காட்டும் அமெரிக்க ஐக்கிய நாட்டை தலைமையிடமாகக் கொண்ட இந்த Think Tank அமைப்பு, இஸ்லாமியர்களை வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியவர்களாக சித்தரிக்கும் போக்கு கடந்த ஆண்டில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டதாக புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கிறது.
இந்தியாவில் வாழும் 22 கோடிக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் தங்கள் வருங்காலம் குறித்த ஒருவித அச்சத்தில் வாழ்வதாகக் கூறும் இந்த அமைப்பு, 2023ல் 668ஆக இருந்த வன்மப் பேச்சுகள் 2024ல் 74.4 விழுக்காடு அதிகரித்து 1165ஆக இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
2024ல் பொதுத் தேர்தல் நடந்ததால் வன்மப்பேச்சுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது எனவும், மொத்த வன்மப்பேச்சுகளுள் 98.5 விழுக்காடு இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்ததாகவும் இவ்வமைப்பின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. ( நன்றி: வாட்டிகன் நியூஸ், 11/02/2025 )
"சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) இந்தியாவில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை; எனவே, அந்நாட்டைக் கவனத்துக்குரிய நாடுகளின் பட்டியலில் வைக்க வேண்டும் என்று 2020 -ல்அறிக்கை வெளியிட்டது. ( நன்றி: கலைஞர் செய்திகள், 29/04/2020 )
மனித உரிமைகளுக்காகச் செயல்படும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, இந்திய அரசு மத சிறுபான்மையினருக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 'உலக அறிக்கை 2024'இல், மனித உரிமைகள் மீதான இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் கொள்கைகள் குறித்துப் பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
வியாழன் அன்று வெளியிடப்பட்ட உலக அறிக்கை 2024இல், உரிமைகளை மதிக்கும் ஜனநாயக நாடு என்ற பெயரில் உலகளாவிய தலைமைக்கு உரிமை கோரும் இந்திய அரசின் திட்டம் இந்தக் குற்றச்சாட்டுகளின் மூலம் பலவீனமடைந்துள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் கிட்டத்தட்ட 100 நாடுகளில் மனித உரிமைகள் சார்ந்த கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் உலக அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகிறார்கள்.
740 பக்கங்கள் கொண்ட அதன் சமீபத்திய அறிக்கையில், மணிப்பூரில் நடந்த இன மோதல்கள் முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், ஜம்மு காஷ்மீர் அரசியல் வரை அனைத்தையும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ( நன்றி: பிபிசி தமிழ், 12/01/2024 )
2023ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
ஆண்டனி பிளிங்கன் கூறியதாவது: இந்தியாவில், மதமாற்ற தடுப்புச் சட்டங்கள், வெறுப்பு பேச்சு மற்றும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ( நன்றி: தினமலர், 27/06/2024 )
இஸ்லாத்தில் சிறுபான்மை பெரும்பான்மை எனும் சொல்லாடல்…
இஸ்லாத்தில் சிறுபான்மை பெரும்பான்மை எனும் சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதா? ஏதேனும் வரையறை வழங்கப்பட்டுள்ளதா? என்று பார்த்தோமேயானால் சிறுபான்மை பெரும்பான்மை எனும் சொல்லாடல் இடம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது.
ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் குறைவாகவும், ஏற்க மறுத்தவர்கள் அதிக எண்ணிக்கையிலும் எல்லா இறைத்தூதர்களின் காலகட்டத்திலும்
வாழ்ந்துள்ளார்கள்.
அவர்களைப் பற்றிய வரலாறுகள் கூறுகின்ற இடங்களில் இந்த சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதை அல்குர்ஆனில் பார்க்கலாம்.
அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டவர்கள் அதிக எண்ணிக்கையிலும், அதை எதிர் கொண்டவர்கள் சிறிய எண்ணிக்கையிலும் வாழ்ந்துள்ளார்கள். அவர்களின் வரலாறுகள் கூறப்படுகின்ற இடங்களில் இந்த சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதை அல்குர்ஆனில் பார்க்கலாம்.
قَالَ
الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِ كَمْ مِّنْ فِئَةٍ قَلِیْلَةٍ
غَلَبَتْ فِئَةً كَثِیْرَةً بِاِذْنِ اللّٰهِ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ
ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 2: 249 )
فَأَرْسَلَ
فِرْعَوْنُ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ
(அவ்வாறு அவர்கள் சென்றதும்) ஃபிர்அவ்ன் (ஆட்களைத்) திரட்டுபவர்களைப் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தான்.
إِنَّ
هَٰٓؤُلَآءِ لَشِرْذِمَةٌۭ قَلِيلُون
"நிச்சயமாக இவர்கள் மிகவும் சொற்பத் தொகை(சிறுபான்மை) யினர் தான். ( அல்குர்ஆன்: 26: 53,54 )
وَاذْكُرُوْۤا
اِذْ اَنْتُمْ قَلِیْلٌ مُّسْتَضْعَفُوْنَ فِی الْاَرْضِ تَخَافُوْنَ اَنْ
یَّتَخَطَّفَكُمُ النَّاسُ فَاٰوٰىكُمْ وَاَیَّدَكُمْ بِنَصْرِهٖ وَرَزَقَكُمْ
مِّنَ الطَّیِّبٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
“நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகை(பான்மை)யினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் - இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!” ( அல்குர்ஆன்: 8: 26 )
لَقَدْ
نَصَرَكُمُ اللّٰهُ فِیْ مَوَاطِنَ كَثِیْرَةٍ وَّیَوْمَ حُنَیْنٍ اِذْ
اَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَیْـًٔا وَّضَاقَتْ
عَلَیْكُمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّیْتُمْ مُّدْبِرِیْنَ ۟
நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்:) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள். ( அல்குர்ஆன்: 9: 25 )
عن
ثوبان مولى رسول الله ﷺ قال: قال رسول الله ﷺ :« يُوشِكُ الأممُ أن تداعَى عليكم
كما تداعَى الأكَلةُ إلى قصعتِها . فقال قائلٌ : ومن قلَّةٍ نحن يومئذٍ ؟ قال : بل
أنتم يومئذٍ كثيرٌ ، ولكنَّكم غُثاءٌ كغُثاءِ السَّيلِ ، ولينزِعنَّ اللهُ من
صدورِ عدوِّكم المهابةَ منكم ، وليقذِفَنَّ اللهُ في قلوبِكم الوهْنَ . فقال قائلٌ
: يا رسولَ اللهِ ! وما الوهْنُ ؟ قال : حُبُّ الدُّنيا وكراهيةُ الموتِ»
இறைத் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இப்படி ஒரு காலம் வரும் முஸ்லிம்களாகிய உங்களைத் தாக்குவதற்காக ஏனைய சமூகத்தவர்கள் அனைவரும் ஒன்று திரளும் ஒரு காலம் மிக விரைவில் வரும். உலக மக்களெல்லாம் ஒன்றிணைந்து முஸ்லிம்களை தாக்குவார்கள். ஓர் உணவுத் தட்டில் இருக்கும் உணவைப் பங்குபோட்டு உண்பதற்காக ஏனையோரையும் அழைப்பது போல். அப்போது அங்கிருந்த ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அக்காலத்தில் அந்த அளவுக்கு நாம் சிறுபான்மையாக இருப்போமா?” என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள், “இல்லை, நீங்கள் அதிக எண்ணிக்கையில்தான் இருப்பீர்கள். ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகளைப் போல் உறுதியற்றவர் களாகவே இருப்பீர்கள்.” ஒருவருக்கொருவர் முரண்பட்டவராக இருப்பீர்கள் உங்களிடம் ஒற்றுமை இருக்காது. உங்களைப் பற்றிய அச்சத்தை எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் அகற்றி விடுவான். உங்கள் உள்ளங்களில் “வஹ்ன்” குடிகொண்டு விடும் என்று கூறினார்கள். “வஹ்ன்” என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “இவ்வுலக வாழ்வின் மீது அதீத பற்றும், மரணத்தை வெறுக்கும் தன்மையுமே அது” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : ஸவ்பான்(ரழி), ( நூல்: அபூதாவூத் )
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்மையானவர்கள்.
இந்த உலகத்தில் அரசியல், ஆன்மிகம், சமூகவியல் ஆகிய துறைகளில் ஒரு சேர மகத்தான வெற்றிபெற்று, அழுத்தமான தாக்கத்தை எற்படுத்தி, அளப்பெரிய செல்வாக்குடன் வாழ்ந்து, அழியாப் புகழ் பெற்றவர்களில் இறுதித் துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்மையானவர்கள்.
இஸ்லாம் அதிகாரத்தில் இருக்கும் பொழுதும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் சூழலிலும் எப்படி வாழவேண்டும் என்பதை அவரது வாழ்வியல் நடைமுறைகள் தெளிவுபடுத்துகின்றன. ஆன்மிகம் – அரசியல் என்று இரு மகத்தான பொறுப்பிற்கு தலைமை ஏற்றிருந்த இறுதித் துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிற மத (சிறுபான்மை) மக்களுடன் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை வரலாற்றை வாசிக்கும் போது உணர்ந்து கொள்ளலாம்.
கொடுங்கோண்மை கோலோச்சிய ஒரு பெரும்பான்மை சூழலில் ஒற்றை மனிதராக வேர்விட்டு முளைத்து விழுதுகளாய் படர்ந்து பரவியிருந்த சமூகச் சீர்கேடுகளை சீர்திருத்தம் செய்ய முனைந்து நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையை ஆணித்தரமாகப் பிரசாரம் செய்து, அந்கு புரையோடியிருந்த அனைத்து வகையான சமூகத் தீமைகளையும் களைந்த காரணத்தால் பெரும்பான்மை சமூகம் அவர்களை நசுக்க முனைந்தது.
சிறுபான்மை சூழலில் ஆரம்பிக்கப்பட்ட தனது சீர்திருத்தப் பாதையில் ஏராளமான கொடுமைகளை சந்தித்தார்கள். அவரை ஏற்றுக் கொண்ட, பல நண்பர்கள் எதிரிகளால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு, கொன்று குவிக்கப்பட்டர்கள். முஹம்மத் நபி ﷺ அவர்கள் மீதும் கொலை வெறித் தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டதால், ஊரை விட்டே ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணம் மேற்கொண்டார்கள்.
தனது பிரசாரத்தை ஆரம்பித்த மக்கா சூழல் மிக மோசமாகக் காணப்பட்டது. தான் முன்வைத்த ஓர் இறைக் கோட்பாட்டில் அவர்கள் எந்த சமரசமும் செய்யவில்லை. அதே வேளை தன்னை சூழ வாழ்ந்த பெரும்பான்மை மக்களுடன் அவரது அணுகுமுறை அவர்கள் வியப்படையும் வகையில் மிக நெருக்கமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.
இந்த நெருக்கமும் வித்தியாசமும் மதீனா வந்த பிறகும் தொடர்ந்தது, ஹுதைபிய்யா ஒப்பந்தத்தில் புதிய பரிமாணத்தை தொட்டது. மக்கா வெற்றியின் போது வியத்தகு மாற்றத்தை உருவாக்கியது.
இஸ்லாம் தவிர்ந்த வேறு எந்த மதத்திலும் பிற மதத்தினருக்கு உதவுவது மார்க்க ரீதியாக கட்டாயக் கடமையாக ஆக்கப்பட்டதில்லை. எந்த மதத்திலும் இத்தகைய ஒரு சட்டத்தைக் காணவே முடியாது. நபி (ஸல்) அவர்கள் தனது இஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கு முஸ்லிம் அரசின் கருவூலத்திருந்து வழங்கினார்கள்.
عن أنس
بن مالك رضي الله عنه: أن رجلًا سأل النبي صلى الله عليه وسلم غنمًا بين جبلين،
فأعطاه إياه، فأتى قومه فقال: أيْ قومِ، أسلموا، فوالله إن محمدًا ليعطي عطاءً ما
يخافُ الفقر، قال أنسٌ رضي الله عنه: "إن كان الرجل ليسلم ما يريد إلا
الدنيا، فما يسلم حتى يكون الإسلام أحب إليه من الدنيا وما عليها"؛ رواه مسلم
ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தின் பெயரால் உதவி கேட்டார். இரு மலைகளுக்கிடையே அடங்கும் அளவுக்கு அவருக்கு ஆடுகளை வழங்கினார்கள். அவர் தனது சமுதாயத்திடம் சென்று ‘என் சமுதாயமே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், நிதி நெருக்கடியைப் பற்றி அஞ்சாமல் முஹம்மத் வாரி வழங்குகிறார்’ எனக் கூறினார். ( நூல் : முஸ்லிம் 4627 )
روى أبو
داود عن صفوان بن سليمٍ عن عدةٍ من أبناء أصحاب رسول الله صلى الله عليه وسلم عن
آبائهم دِنْيةً (متَّصِلي النسب) عن رسول الله صلى الله عليه وسلم قال: ((ألا مَن
ظلم معاهَدًا أو انتقصه أو كلفه فوق طاقته أو أخذ منه شيئًا بغير طيب نفسٍ - فأنا
حَجيجه (خَصمه) يوم القيامة))؛ (حديث صحيح) (صحيح أبي داود للألباني حديث 2626
எவர் (முஸ்லிமல்லாத) உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்ற ஒருவருக்கு அநீதியிழைக்கின்றாரோ அல்லது அவரின் உரிமையை குறைக்கின்றாரோ அலலது அவரது சக்திக்கு மேல் அவருக்கு பொறுப்புக்களை சுமத்துகின்றாரோ அல்லது அவரின் மனவிருப்பின்றி அவரிடம் இருந்து ஏதேனுமொன்றை பெறுகின்றாரோ அவருக்கு எதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்.'' (நூல்: அபூதாவூத்)
பிற மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அநீதியிழைத்தல் அல்லது அவரது சக்திக்கு மேல் ஒன்றைச் செய்யுமாறு அவரைப் பணித்தல் அல்லது அவரின் நியாயமானதோர் உரிமையை பறித்தல் முதலான அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களை இந்நபி மொழி எவ்வளவு தூரம் கடுமையாக எச்சரிக்கின்றது என்பதனை அவதானிக்கலாம். மற்றுமொரு நபிமொழி பின்வருமாறு:
''எவர் முஸ்லிமல்லாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை இம்சிக்கின்றாரோ நான் அவரது எதிரியாவேன். நான் எவரது எதிரியாக இருக்கின்றேனோ மறுமையில் அவருக்கெதிராக வாதிடுபவனாக இருப்பேன்.'' (தாரீகு பக்தாத் - அல்கதீபுல் பக்தாதி)
وَعَنْ
عَبْدِاللَّهِ بْنِ عمر رضي الله عنهما، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ قَتَلَ
مُعَاهَدًا لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا لَيُوجَد مِنْ
مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا. أَخْرَجَهُ الْبُخَارِيُّ
''எவர் உடன்படிக்கை செய்து வாழும் ஒரு முஸ்லிமல்லாத (சிறுபான்மை) ஒருவரைக் கொலை செய்கிறாரோ அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார். அவரைப் பொறுத்தவரையில் சுவனத்தின் வாடை நாற்பது ஆண்டு தொலைவில் இருக்கும்.'' (நூல்: ஸஹீஹுல் புகாரி)
இவ்வாறு முஸ்லிமல்லாதாரின் ஓர் உரிமையில் கூட கை வைப்பதனை அல்லது அவர்களுக்கு அநீதி இழைப்பதனை ஒரு பெரும் குற்றச் செயலாகவும் பெரும் பாவமாகவும் கருதுகின்ற தனித்துவமான மார்க்கமாக இஸ்லாம் விளங்குகின்றது.
இஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மையாக வாழும்….
இஸ்லாமிய ஆட்சியின் (கிலாபத்தின்) நான்காவது கலீபாவாகிய (ஜனாதிபதி) அலி (ரலி) (கி.பி.656 – 661) அவர்களினால் தனது ஆட்சியின் கீழிருந்த அஸார்பைஜான் மாகாணத்தின் ஆளுநர் ஸயீத் இப்னு ஸாரியா அல் குஜாயீ (ரலி) அவர்களுக்கு தங்களது கைப்பட அரபு (கூஃபி) எழுத்து வடிவில் எழுதிய கடிதத்தில்...
“அஸர்பைஜானிலுள்ள (ஆர்மீனியக்) கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு, அவர்களின் சொத்துரிமை, சமுதாய அந்தஸ்து,அவர்களின் கௌரவம் அத்துடன் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் மதசுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இக்கட்டளை எல்லா அதிகாரிகளினாலும், அவர்களுக்குப் பின் வரும் அதிகாரிகளினாலும் பின்பற்றப்பட வேண்டும். அங்குள்ள, கிறிஸ்தவர்கள்; முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதற்காக இம்சைக்குட்படுத்தப்படவோ,
கௌரவக் குறைவாகவோ நடத்தப்படக் கூடாது. அவர்கள் நாட்டுக்கும், அரசுக்கும் துரோகமிழைக்காமல் விசுவாசமாக இருக்கும் வரையில் அவர்கள் துன்புறுத்தப்படவோ,
இம்சைக்குட்படுத்தவோ கூடாது. தங்களுடைய மதத்தை சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் அனுஷ்டிக்க அனுமதியளிக்கப்பட வேண்டும்.
“இஸ்லாம் சமாதானத்தைப் போதித்து சமுதாயத்தின் நிலையை அபிவிருத்தி செய்யும்படிதான் கூறுகிறது. நாங்கள் எங்கிருந்தாலும் எங்கு போனாலும் சமூகங்களுக்கிடையில் நட்புறவையும், ஒத்துழைப்பையும் உருவாக்குவது எமது கடமையாகும். எனவே, முஸ்லிம்கள் எல்லாமக்கள் மத்தியிலும் நட்புறவையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதோடு– எக்காரணம் கொண்டும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது தவறாக உபயோகிக்கவோ கூடாது. சிறுபான்மையினரை அவமானப்படுத்தக்கூடாது.
மேலும், தங்களது வீடுகள், நிலம் மற்றும் வியாபரத் தளங்களிலிருந்து வெளியேற்றப்படக்கூடாது, அவர்களுடைய மதகுருமார்கள் தகுந்த மரியாதையோடு கவனிக்கப்பட வேண்டும்.
“மடாலயங்கள் சிறப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களுடைய மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும் – தமது மதப்பிரச்சாரங்களை சுதந்திரமாக மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும். தேவாலயங்களில் நிகழ்த்தப்படும் மதப்பிரச்சாரங்கள் தடைசெய்யப்படக்கூடாது. அவர்கள்,தங்களது வணக்கஸ்தலங்களை நிர்மாணிப்பதற்கு நிலம் கேட்டால் தகுதியான – பெறுமதி மிக்க நிலங்கள் வழங்கப்பட வேண்டும். யார் இந்த கட்டளைகளை மீருகின்றார்களோ - அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் ரசூல் (ஸல்) அவர்களுக்கும் விரோதமாக செயல்படுகிறார்கள் என்று கருதப்பட்டு – இறை கோபத்துக்குள்ளாவார்கள்.”
இந்தக் கட்டளைகளை உள்ளடக்கிய கடிதம் (பத்திரம்) அன்றைய இஸ்லாமிய ஆட்சியில் (கிலாபத்தில்) – எந்தளவு முஸ்லிமல்லாத சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு மதசுதந்திரம் உட்பட, மதசகிப்புத்தன்மையோடு கூடிய நேசத்தன்மை மற்றும் சமூக அந்தஸ்து என்பன வழங்கப்பட்டிருந்தன என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
1905ஆம் ஆண்டு கிழக்கு ரஷ்யாவின் அஸார்பைஜான் மாகாணத்திலுள்ள ஆர்தபைன் எனும் கிறிஸ்தவ மடாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கலிபா ஹஸரத் அலி (ரலி) அவர்களால் வரையப்பட்ட ஒரு சமாதான உடன்படிக்கைப் பத்திரம் சிறந்ததோர் அத்தாட்சிப் பத்திரமாக உள்ளது.
அதன் விவரங்கள் முதலில் ரஷ்ய
பத்திரிகைகளில் வெளிவந்தன. அடுத்து, “ஹப்லுல் மதீன்”என்ற பத்திரிகையில்1906ஆம் ஆண்டு அல்-ஹுகம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இதன் பிரதிகள் துருக்கி, கெய்ரோ மற்றும் பெய்ரூத் ஆகிய நகரங்களில் வெளியிடப்பட்டன. அதன் அசல் பிரதி இன்றும் ரஷ்யாவிலுள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. (நன்றி: இம்போட் மிர்ரர்.காம் 14/07/2016 )
அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் வெற்றி கொண்ட எகிப்தில் கிருத்தவர்களும் இருந்தார்கள். அவர்கள் யாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நிர்பந்திக்கப் படவில்லை.
கிருத்தவர்கள் தங்களுடைய வீதியில் ஏசுநாதரின் சிலையை வைத்திருந்தார்கள். இஸ்லாத்தில் சிலைவணக்கம் கூடாது, என்றாலும் அவர்களுக்கு முழு மத சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஒரு நாள் அவர்களுடைய அந்த சிலை தாக்கப்பட்டிருந்தது. சிலையின் மூக்குப்பகுதி உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட கிருத்தவர்கள் ஆத்திரமடைந்தனர்.
கண்டிப்பாக இஸ்லாமிய இராணவத்தினர் யாராவது தான் இதை செய்திருக்க வேண்டும். அவர்கள் தான் சிலைவணக்கத்திற்கு எதிரானவர்கள், என்று கூறி இந்தத் தகவலை ஊர் முழுவதும் பரப்பினர். மாலை நேரத்திற்குள் எல்லா பகுதிக்கும் செய்தி பரவிவிட்டது. இதற்கு கண்டிப்பாக பலிவாங்க வேண்டும், என்ற நோக்கத்துடன் கிருத்தவர்களுடைய ஒரு குழு பேராயரின் தலைமையில் எகிப்தின் ஆட்சியர் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களிடம் சென்றனர்.
அம்ர் (ரலி) அவர்கள் தூதுக்குழுவினரை வரவேற்று கண்ணியப்படுத்தி வந்த நோக்கம் பற்றி விசாரித்தார்கள். சிலை உடைத்த சம்பவத்தைக் கூறி இதை ஒரு முஸ்லிம் வீரர் தான் செய்திருக்க வேண்டுமென்று கூறினர். அம்ருபினுல் ஆஸ் (ரலி) அவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள்.
நீங்கள் ஏசுவின் மீது தெய்வபக்தி கொண்டிருப்பதால் உங்களில் யாரும் அப்படி செய்திருக்க மாட்டார்கள். இஸ்லாத்தில் சிலை வணக்கம் கூடாது, என்பதால் எங்களில் யாராவது ஒரு நபர் தான் செய்திருக்க வேண்டும், என்று ஒப்புக்கொண்டார்கள்.
பிறகு, நீங்கள் அந்தச் சிலையை சரி செய்து கொள்ளுங்கள். அதற்கான செலவை நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். என்றும் கூறினார்கள். ஆனால், உடைந்த மூக்கு எங்களிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை வைத்து சரிசெய்வது சாத்தியமில்லை. நாங்கள் ஏசுவை கடவுளின் குமாரனாக நம்பியிருக்கிறோம். இப்படிபபட்ட விஷயத்தில் சில பைசாக்களை வாங்கிக்கொண்டு எப்படி பொறுமையாக இருக்க முடியும்?, என்று கேட்டார்கள்.
எகிப்தின் ஆட்சியர், அப்படியானால் என்ன செய்யலாம்? என்று கேட்டார்கள். அப்போது கிருத்தவர்கள் முஸ்லிம்களின் மதப்பற்றைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் நீங்கள் முஹம்மது (ஸல்) உடைய சிலையை வைத்தால் நாங்களும் அதே போன்று..... என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
இந்த வாசகத்தைக் கேட்டவுடன் அம்ருப்னுல் ஆஸுடைய முகம் சிவந்துவிட்டது. கோபத்தில் வாளை எடுக்க நாடினார்கள். அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அடுத்த வினாடி வந்திருந்த குழுவினரின் தலைகள் உருண்டிருக்கும்.
எனினும் தங்களை கட்டுப்படுத்திக்கொண்டார்கள். சினத்தை அடக்கிக் கொண்டார்கள். கோபத்தின் வேகத்தில் அங்குமிங்கும் நடந்து கெண்டிருந்தார்கள். கிருத்தவர்கள் இன்று, முதல் தடவையாக ஆட்சியாளரின் கோபத்தப் பார்க்கிறார்கள்.
சிறிது நேரத்திற்குப் பின் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் நீங்கள் நாகரிகமற்றவர்களாக இருக்கிறீர்கள். நபியை அவமரியாதை செய்கிறீர்கள். உங்களை கொன்று விடவேண்டுமென்றே உள்ளம் நாடுகிறது. நாங்கள் எங்களுடைய நபியின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம்? என்று உங்களுக்குத் தெரியாது.
எங்களுடைய பிள்ளைகள் எங்களுக்கு முன்னால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடக்கலாம். எங்களுடைய சொத்துக்களெல்லாம் சூறையாடப்படலாம். ஏன் எங்களையே கூட துண்டு துண்டாக வெட்டபட்டாலும் பரவாயில்லை. இவற்றையெல்லாம் கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால் எங்களின் உயிரினும் மேலான எங்கள் நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஒரு சிறு வார்த்தையைக் கூட எங்களால் தாங்கிக் கொள்ளமுடியாது.
நீங்கள் இப்படிப் பேசி எங்களுடைய உள்ளத்தை தாங்கமுடியாத துயரத்தில் ஆழ்த்திவிட்டீர்கள். இஸ்லாத்தில் சிலை வணக்கம் கூடாது, என்பது உங்களுக்குத் தெரியாதா? நாங்கள் சிலையை மாரியாதைக்குரிய பொருளாக கருதுவதுமில்லை. நாங்கள் சிலைகளை செய்வதுமில்லை. விற்பதுமில்லை.
நபியவர்களுக்கு சிலை வடிப்பது பற்றி எங்களுடைய கற்பனையில் கூட வரமுடியாது. உங்களுடைய இந்த வேண்டுகோள் வீணானது. இப்பொழுது உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே நீங்கள் தகுதியற்றவர்களாகி விட்டீர்கள். எனினும் நான் உங்களை புறக்கணிக்கவில்லை. இது தவிர ஏதாவது நல்ல யோசனை இருந்தால் சொல்லுங்கள்.
உங்களுடைய மனதும் திருப்தியடைய வேண்டும். நீங்கள் கண்ணியமாகக் கருதும் ஏசுநாதரின் சிலை உடைக்கப் பட்டிருபபதால் உங்களுடைய மனம் வேதனைப்பட்டிருக்கும். நபி (ஸல்) அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விட எங்களில் யாராவது ஒருவருடைய மூக்கை கூட நீங்கள் வெட்டிக்கொள்ளலாம், என்று அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதைக் கேட்டுவிட்டு தூதுக்குழவினர் உங்களை வேதனைப் படுத்தியதற்காக நாங்கள் கைசேதப்படுகிறோம்.
நீங்கள் நபியின் மீது இவ்வளவு பிரியம் வைத்திருப்பீர்கள், என்று நாங்கள் நினைக்கவில்லை. இல்லையானால் நாங்கள் இப்படி அவமரியாதையாக எதையும் பேசியிருக்க மாட்டோம். என்று கூறிவிட்டு நீங்கள் கூறியது போலவே முஸ்லிம்களில் யாராவது ஒருவரின் மூக்கை நாங்கள் வெட்டிக் கொள்கிறோம். அதற்காக மக்களை ஓரிடத்தில் ஒன்று திரட்டுங்கள். எல்லாருக்கும் முன்னால் இது நடக்க வேண்டும் என்று கூறினார்கள்.
(ஒரு சிலை உடைப்புக்காக படைப்புகளில் சிறந்த ஒரு மனிதரின் மூக்கை உடைக்க வேண்டும், என்று கோருகின்றனர். எனினும் மதஉணர்வுக்கு மரியாதை கொடுத்து இந்த கோரிக்கையை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டனர்.) மறுநாள் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு மைதானத்தில் திரண்டனர். அங்கு இஸ்லாமிய இராணுவமும் இருந்தது. ஆனால் அவர்கள் யாருக்கும் எதற்காக இங்கு அழைக்கப் பட்டிருக்கிறோம், என்று தெரியாது.
கடைசியில் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் ஒரு குதிரையில் வந்து இறங்கினார்கள். பாதிரியும் அங்கு வந்து சேர்ந்தார். மக்களுக்கு முன்னால் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் நின்று நாம் ஏன் இங்கு கூடியிருக்கிறோம்? என்று தெரியுமா, என்று கேட்டுவிட்டு வீதியில் வைக்கப்பட்டிருந்த ஏசுநாதரின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மனவேதனையடைந்த கிருத்தவர்கள் தங்கள் சார்பாக ஒரு குழுவை என்னிடம் அனுப்பிவைத்தனர். அவர்கள் கிருத்தவர்கள் யாரும் அச்சிலையை உடைக்கமாட்டார்கள். இந்த வேலையை ஒரு முஸ்லிம் தான் செய்திருக்க வேண்டும், என்று கூறினர்.
நானும் அவர்களுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஏனெனில் கிருத்தவர்கள் ஏசுநாதரின் சிலையை கண்ணியப்படுத்துபவர்கள். எனவே, அவர்கள் அப்படிச் செய்திருக்க முடியாது. முஸ்லிம்களில் யாராவது தான் உடைத்திருக்க வேண்டும். இஸ்லாத்தில் சிலை வணக்கம் கூடாது. அதில் நம்பிக்கையும் இருக்கக் கூடாது. சிலை வடிப்பதோ அதை விற்பதோ இஸ்லாத்தில் விலக்கப்பட்டிருந்தாலும் மாற்று மதத்தவர்களின் மதநம்பிக்கையை நாம் புண்படுத்தி அவர்களுடைய மனவேதனைக்கு காரணமாககக் கூடாது, என்றும் நமக்கு கட்டளையிட்ப பட்டிருக்கிறது.
எனவே, அவர்களுடைய இந்த மனவேதனைக்கு பலிவாங்குவதற்காக நம்மில் யாராவது ஒருவரின் மூக்கை அவர்கள் அறுத்துக் கொள்ளலாம், என்று முடிவாகியிருக்கிறது, என்று கூறிவிட்டு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் தலைமைப் பாதிரியிடம் நான் தான் ராணுவத் தளபதியாக இருககிறேன். இந்நகரத்திற்கு ஆட்சியாளராக இருக்கிறேன்.
இந்நகர மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து பத்திரத்தில் நான் தான் எழுதிக்கொடுத்திருக்கிறேன். எனவே மக்களுக்கு ஏதாவது கஷ்டம் நேர்ந்தாலும் அதற்கு நான் தான் முழுப் பொறுப்பு. எனவே, என்னுடைய மூக்கை வெட்டிக்கொள்ளுங்கள், என்று கூறி வாளை உருவி பாதிரியிடம் கொடுத்தார்கள்.
மக்கள் திகைத்துப் போய் நின்றனர். இதைக் கண்ட ஒரு ராணுவ தளபதி, ஏன் எங்களில் ஒருவருடைய மூக்கு வெட்டப்படக்கூடாது? என்று கேட்டார். அவருக்கு பதில் சொல்வதற்கு முன் இஸ்லாமியப் படையின் ஒவ்வொரு வீரரும் முன்வந்தனர். ஆனால் அம்ருபினுல் ஆஸ் (ரலி) அனைவரையும் கண்டித்தார்கள். யாரும் இங்கு வரவேண்டாம், என்று உத்தரவிட்டார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் ஒரு ராணுவ வீரர் கூட்டத்திலிருந்து ஓடி வந்தார்.
தன்னுடன் உடைந்த ஒரு மூக்கையும் கொண்டு வந்தார். நான் தான் உடைத்தேன். என்னுடைய மூக்கை வெட்டுங்கள், என்று கூறினார். இதை எதிர்பார்க்காத நகர மக்கள் திகைத்துப் போய் நின்றனர். உடனே பாதிரி வாளை அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களிடம் கொடுத்து விட்டு நீங்கள் கிருத்துவ மதத்துக்கு முழுமையான முன்மாதிரி. நீதம், நேர்மையின் மறுஉருவமாக இருக்கிறீர்கள். யாருடைய மதத்தை நீங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறீர்களோ அவர் எவ்வளவு பரிசுத்தமான புனிதாராக இருப்பார்!
அந்த மனிதர் (நபி ஸல்) அவர்களுடைய காலத்தில் நான் இருந்திருந்தால் அவர்களுடைய பாதங்களை கழுவிக் குடித்திருப்பேன். ஈஸா (அலை) அவர்களுடைய சிலையை உடைப்பது தவறு தான். ஆனால் அந்த தவற்றுக்காக உங்களிடம் பலிவாங்குவது மிகப்பெரும் அநியாயம். நான் பேராயர் என்ற அடிப்படையில் மக்களின் சார்பாக உங்களை மன்னித்துவிட்டேன். உங்களுடைய ஆட்சி கியாமத் நாள் வரை இருக்கட்டும், என்று கூறினார்.
பாதிரியின் இந்த உரை மக்களுடைய மனதையும் தட்டியெழுப்பியது. பிறகு தலைமைப் பாதிரி முன்வந்து அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களுடைய கரத்தைப் பிடித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். இதைப் பார்த்து விட்டு கிருத்தவர்களில் அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். (நூல்: குஸ்தாகெ ரஸூல் கீ சஸா பஜபானெ சைய்யித்னா முஹம்மத் முஸ்தஃபா (ஸல்)...) (நன்றி: நிஜாம் யூஸுஃபி.ப்ளாக்ஸ்பாட்)
No comments:
Post a Comment