Tuesday, 9 June 2026

கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்!!

 

கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உலகில் அனுபவிப்பதற்கு நமக்கு எண்ணற்ற வாழ்க்கை வசதிகளை வழங்கியிருக்கின்றான்.

நமக்கு அவன் வழங்கியிருக்கும் உயிர், பிறப்பு, வாலிபம், , மனைவி மக்கள், பெற்றோர்கள், சொந்த பந்தம், நட்பு வட்டம், குடும்பம், வாழ்வாதாரம், செல்வம், வீடு, வாகனம். நாம் சுவாசிக்கும் காற்று, தாகம் தீர்க்கும் தண்ணீர்.

நமக்கு வழங்கி இருக்கும் ஆரோக்கியம், ஹிதாயத், அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி அவர்கள், ஷரீஅத் என அவன் இந்த உலகில் நமக்கு வழங்கி இருக்கும் வசதிகளை பட்டியல் போட்டால் அது நீண்டு கொண்டே போகும்.

அத்துனை வாழ்க்கை வசதிகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருட்கொடைகள் என்றே கூறுகின்றான்.

وَمَا بِكُمْ مِّنْ نِّعْمَةٍ فَمِنَ اللّٰهِ  

மேலும், எந்த நிஃமத் (பாக்கியம் - அருட்கொடை) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்; ( அல்குர்ஆன்: 16: 53 )

وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا 

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! ( அல்குர்ஆன்: 16: 18 )

ஆனால், நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் ஒன்றே ஒன்றை மட்டும் அவன் நமக்கு வழங்கிய அன்பளிப்பு என்று அடையாளப் படுத்துகிறான்.

அது, அந்த ஒன்றே ஒன்று நமக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்கிய நம்முடைய மக்கட் செல்வம் ஆகும்.

لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ یَخْلُقُ مَا یَشَآءُ یَهَبُ لِمَنْ یَّشَآءُ اِنَاثًا وَّیَهَبُ لِمَنْ یَّشَآءُ الذُّكُوْرَ 

அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே, தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். 

اَوْ یُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا وَیَجْعَلُ مَنْ یَّشَآءُ عَقِیْمًا اِنَّهٗ عَلِیْمٌ قَدِیْرٌ 

அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன். ( அல்குர்ஆன்: 42: 49, 50 )

அல்லாஹ்வின் தூதர் அவர்களும் நமது மக்கட் செல்வங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு வழங்கிய அன்பளிப்பு என்றே அடையாளப் படுத்துகிறார்கள்.

وقد روى الحاكم (3123) عن عائشة رضي الله عنها قالت : قال رسول الله صلى الله عليه وسلم: إِنَّ أَوْلَادَكُمْ هِبَةُ اللهِ لَكُمْ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவித்தார்கள்: "நிச்சயமாக உங்கள் குழந்தைகள் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அன்பளிப்புகள் ஆவர்" என்று நபி அவர்கள் கூறி விட்டு அஷ் ஷூரா அத்தியாயத்தின் 42 -ம் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

அனபளிப்புகளோடு உலகும்… நாமும்…

உலக வழக்கில் நமது அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பரிசுப் பொருட்களே அன்பளிப்பு எனப்படும். அன்பளிப்பின் மூலம் நமக்கிடையே அன்பை அதிகரிப்பதும் சுமூக உறவு நீடிக்கச் செய்வதுமே நோக்கமாகும்.

உலக வழக்கில் நமக்கு அன்பளிப்பு வழங்கிய ஒன்றை நாம் எவ்வளவு பாதுகாக்கின்றோம். நமக்கு அன்பளிப்பு வழங்கியவரை நாம் எப்படி கண்ணியம் செய்கிறோம், மதிக்கின்றோம்.

அல்லாஹ் நமக்கு வழங்கிய அன்பளிப்பை அதே போன்று பாதுக்கின்றோமா? அன்பளிப்பு வழங்கிய அல்லாஹ்வோடு நாம் எவ்வாறு நடந்து கொள்கின்றோம்? என்பதை இந்த தருணத்தில் சிந்தனை செய்து பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.

அல்லாஹ் வழங்கிய அன்பளிப்பான இந்த குழந்தைகளோடு மனித சமூகம் எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை நாம் பார்க்கும் போது நமக்கு கவலையே ஏற்படுகிறது.

சர்வதேச அளவில் குழந்தைகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை நாள்தோறும் நாம் ஊடகங்கள் வாயிலாக பார்த்து வருகிறோம்.

Globally, it is estimated that up to 1 billion children aged 2–17 years have experienced physical, sexual, or emotional violence or neglect in the past year. (Thanks: WHO world helth organisation article Violence against children 07/05/ 2026 ) 

வேர்ல்ட் ஹெல்த் ஆர்க்கனைஷேஸன் கடந்த மே மாதம் ஏழாம் தேதி வெளியிட்ட "குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்" எனும் கட்டுரையில் 

"உலகளாவிய அளவில் 2 வயது முதல் 17 வயது வரையிலான ஒரு பில்லியன் குழந்தைகள் மன ரீதியான, உடல் ரீதியான, பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு" உள்ளாவதாக தெரிவித்துள்ளது.

ஒரு பில்லியன் என்பது 100 கோடிக்கு சமமாகும். (விக்கிப்பீடியா)

இந்தியாவின் (NCRB) தேசிய குற்றப் பதிவு ஆணையம் ஆண்டுதோறும் வெளியிடும் ஆண்டறிக்கையை ஆதாரமாகக் கொண்டு "சைல்ட் ரைட்ஸ் அன்ட் யூ" என்ற குழந்தை உரிமை தன்னார்வ அமைப்பு நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நாள்தோறும் 350 குற்றங்கள் நிகழ்வதாக மதிப்பிட்டுள்ளது.

மேலும், நமது நாட்டில் குழந்தைகள் பிறப்பிலிருந்தே, இல்லை இல்லை பிறப்பதற்கு முன்பிருந்தே பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்கிறது இன்னொரு புள்ளி விவரம்.

கருக்கலைப்பு, கொலை செய்வது, தற்கொலைக்கு தூண்டுவது, அடித்து துன்புறுத்துவது, வீட்டை விட்டு துரத்துவது, பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்முறை நிகழ்த்துவது, கல்வியை மறுத்து வேலையில் ஈடுபடுத்துவது, கடத்துவது, கடத்தி பிச்சை எடுக்க வைப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது என இந்திய தண்டனைச் சட்டம் தண்டனைக்குரிய குற்றங்கள் என்று வரையறுத்துள்ள இவை அனைத்தும் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிறது.

நம் வீட்டு குழந்தைகளோ, நம் சமூகத்து குழந்தைகளோ இந்த பட்டியலில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமையும் பொறுப்பும் ஆகும்.

கவனம் தேவை, விழிப்புணர்வு முக்கியம்..

கோடை விடுமுறை முடிந்து ஜூன் நான்காம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு நம் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர்.

கடந்த இரண்டு மாதங்களாக எப்போது பள்ளிகள் திறக்கப்படும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ஓய்வு எடுக்கலாம் என்று காத்திருந்த பெற்றோர்கள் பலர் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பர்.

இனி நம் வீட்டு குழந்தைகளை அதட்டுவது, மிரட்டுவது, உருட்டுவது, அதைச் செய், இதைச் செய்யாதே, இங்கே போகாதே, அங்கு போ, படி படி படி என அரங்கேறுவது அன்றாட நிகழ்வாகிப்போகும்.

ஒரு குழந்தை கீழே விழுந்து அடிபட்டு ரத்தம் வழிந்தால், அந்த குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த குழந்தைக்கு வலிக்கும் என்றும் வெளிப்படையாக நம் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால், குழந்தைகளுக்கு மனதில் ஏற்படும் காயம் பல நேரங்களில் கவனிக்கப்படுவதில்லை. அதுவும் அந்த காயம் குழந்தைகளுக்கு மிக நெருக்கமான உறவுகளால் உள்ளாக்கப்பட்டால் அதன் பாதிப்பு சிலருக்கு தீவிரமாக இருக்கும். 

தொடர் பாதிப்புகள் ஏற்பட்டால் அது குழந்தையின் நடத்தையை, மனநலனை வெவ்வேறு விதங்களில் பாதிக்கக் கூடும். 

இதை குழந்தைப் பருவ மன அதிர்ச்சி (Childhood Trauma) என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் விளைவுகள் பிற்காலத்திலும் குழந்தையை பாதிக்கும் விதத்தில் இருக்கக் கூடும் என்று எச்சரிக்கை செய்கின்றனர்.

குழந்தைகளை மோசமாக பாதிக்கக்கூடிய பெற்றோரின் 4 செயல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

1) வார்த்தைகள் மூலம் காயப்படுத்துவது...

உதாரணமாக உடல் சற்று பருமனாக இருக்கும் குழந்தை பள்ளிக்கூடங்களில், நண்பர் வட்டத்தில், குடும்பங்களில் கேலி செய்யப்பட வாய்ப்புண்டு. 'குண்டு', 'அரிசி மூட்டை' போன்ற வார்த்தைகள் சாதாரணமாக நாம் காதுபட கேட்கக்கூடியவை. 

ஒரு குழந்தை தொடர்ந்து இதுபோன்ற உருவகேலிக்கு ஆளாகும் போது அதுவும் மன அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். 

அதே போன்று உடல் சற்று மெலிந்து காணப்படும் குழந்தை பள்ளிக்கூடங்களில், நண்பர் வட்டத்தில், குடும்பங்களில் கேலி செய்யப்பட வாய்ப்புண்டு. 'ஒல்லிக்குச்சி', 'ஒட்டடை கம்பு' போன்ற வார்த்தைகள் சாதாரணமாக நாம் காதுபட கேட்கக்கூடியவை. 

அதே போன்று எடுத்ததற்கெல்லாம் திட்டுவது, அருவெறுப்பாக பேசுவது, ஆபாசமாக பேசுவது இதுவும் குழந்தைகளை வெகுவாக பாதிக்கக் கூடியவை ஆகும்.

ஒரு குழந்தை தொடர்ந்து இதுபோன்ற உருவகேலிக்கும், ஏச்சு பேச்சுக்கும் ஆளாகும் போது அதுவும் மன அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். 

இது பிற்காலத்தில் குழந்தைக்கு தன்னம்பிக்கை குறைவு போன்ற சிக்கல்களை உருவாக்கலாம்.

2) உணர்வுகளை காயப்படுத்துவது..

பாலியல் துன்புறுத்தல், தினமும் அடி-உதை இவை போன்றவை மட்டும் மன அதிர்ச்சிக்கு காரணம் அல்ல. உடல் ரீதியான துன்புறுத்தல் இல்லாத போதும் குழந்தையின் உணர்வு ரீதியான தேவைகள் பூர்த்தி செய்யப்படாத போதும், அது மன அதிர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.

நல்லவைகளை செய்யும் போது பாராட்டாமல் இருப்பது. ஊக்கப்படுத்தாமல் விட்டு விடுவது, பரிசுகள், அன்பளிப்புகள் வழங்கி அரவணைக்காமல் இருப்பது. அன்பு செலுத்தாமல் பாசம் காட்டாமல் புறக்கணிப்பது போன்றவைகள் உணர்வு ரீதியாக நாம் ஏற்படுத்தும் காயங்கள் ஆகும்.

3) கவனம் செலுத்தாமல் இருப்பது...

மதரஸாவிலே பள்ளிக்கூடத்திலே, தெருவிலே, குழந்தைகளிடம் இருந்து வெளிப்படும் ஆற்றலை வீட்டிற்கு வெளியே இருக்கும் எல்லோரும் கவனித்து உற்சாகப் படுத்தி, ஊக்குவிக்கும் போது வீட்டில் உள்ள யாரும் அதை கண்டும் காணாமல் கடந்து செல்லும் போது குழந்தைகளின் ஆழ் மனதில் நாம் ஏற்படுத்தும் காயங்கள் ஆகும். இது மன அதிர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.

4) நிபந்தனையுடன் கூடிய அன்பு...

"நான் சொல்வதை நீ செய்தால் மட்டுமே நான் உன்னை நேசிப்பேன்". நீ இவ்வளவு மார்க் எடுத்தால் மட்டுமே நீ ஆசைப்பட்டதை வாங்கித் தருவேன்". என்று நிபந்தனை இட்டு குழந்தைகள் மீது அன்பு செலுத்துவது, அக்கறை காட்டுவது.

தனது குழந்தைப் பருவ ஆசைகளை, தேவைகளை பூர்த்தி செய்வதை விட பெற்றோரின் அன்பை தொடர்ந்து பெறுவதே முக்கியமானதாக மாறி, உணர்வு ரீதியாக மிகவும் பாதிக்கப்படும் அபாயம் குழந்தைகளுக்கு இயற்கையாக ஏற்படும். இது மன அதிர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.

மன அதிர்ச்சி என்றால் என்ன?

குழந்தைப் பருவ மன அதிர்ச்சி (Childhood Trauma) என்றால் என்ன? என்பது மில்லியன் டாலர் கேள்வி என்கிறார் சென்னையை சேர்ந்த மனநல மருத்துவர் வெங்கடேஸ்வரன்.

எனது வீட்டின் மீது மேலிருந்து ஒரு கல் விழுகிறது என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த கல் எங்கு விழும், என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாருக்கும் தெரியாது. என் வீட்டில் உள்ள கண்ணாடியை உடைக்கலாம், செடிகளை சேதப்படுத்தலாம், எதன் மீதும் விழாமல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமலும் இருக்கலாம். அதுபோல தான் மன அதிர்ச்சி. ஒருவருக்கு மிகுந்த மன அதிர்ச்சி ஏற்படுத்தக் கூடிய விசயங்கள் வேறு சிலருக்கு மிக எளிதில் கடந்து செல்லக் கூடியதாக இருக்கும்" என்கிறார் வெங்கடேஸ்வரன்.

 

"ஒரு கடினமான மனிதர் நல்ல முறையில் தன்னிடம் நடந்துக் கொள்ள வேண்டும் என்று முயல்வது" குழந்தைப்பருவ மன அதிர்ச்சி அனுபவித்தவர்களின் தெளிவான அறிகுறி என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த மன அதிர்ச்சி மருத்துவர் பேட்ரிக் தீஹென்.

"குழந்தைப் பருவ மன அதிர்ச்சி (Childhood Trauma) என்பது இதுதான் என்று விளக்கக்கூடிய ஒரு விஷயம் அல்ல. உலக அளவில் பிரபலமான மன அதிர்ச்சி மருத்துவர் காபர் மேட் (Gabor Mate), "மன அதிர்ச்சி என்பது உங்களுக்கு என்ன நடந்தது என்பதல்ல, உங்களுக்கு ஒரு விஷயம் நடந்ததன் விளைவாக உங்களுக்குள் என்ன நேர்ந்ததோ அதுவே மன அதிர்ச்சி" என்கிறார்.

மன அதிர்ச்சிக்கான காரணங்கள் என்ன?

"பெற்றோர் பிரிந்து செல்வது, வறுமை, பெற்றோரை இழப்பது, பள்ளியில் கேலி கிண்டல் செய்யப்படுவது, உருவ கேலி செய்யப்படுவது, நண்பர்களால் ஒதுக்கப்படுவது என பல்வேறு காரணங்களால் குழந்தைகள் பாதிக்கப்படலாம். சொல்லப்போனால் ஏதாவது ஒரு உள ரீதியான சிக்கலை ஒவ்வொரு குழந்தையும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார். சிலருக்கு அது குறைவாக இருக்கலாம், சிலருக்கு அதிகமாக இருக்கலாம்" என்கிறார் மருத்துவர் வெங்கடேஸ்வரன்.

குழந்தைப் பருவ மன அதிர்ச்சி காரணமாக பிந்தைய நாட்களில் பதற்றம் மற்றும் மன உளைச்சல் ஏற்படலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. யூரோபியன் ஜர்னல் ஆப் ட்ராமா அண்ட் டிஸ்ஸசோசியேஷன் என்ற ஆய்விதழில் வெளிவந்த கட்டுரையில், "ஒரு அழுத்தமான சூழலில் இருக்கும் குழந்தையின் உடம்பில், ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் விடுவிக்கப்படும். இது தன்னை சுற்றி நடக்கும் விசயங்களுக்கான உடலின் எதிர்வினையாகும். இது தொடர்ந்து ஏற்பட்டால் மூளையில் மாற்றங்கள் ஏற்படக் கூடும். ஒரு அசாதாரண சூழல் நிலவும் போது மூளைக்கு நரம்பு மண்டலம் எச்சரிக்கைகளை அனுப்பும். இதன் காரணமாக ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகமாக விடுவிக்கப்பட்டு, உடல் எப்போதுமே ஒருவித எச்சரிக்கை உணர்வுடனே இருக்கும். குழந்தைப்பருவத்தில் இது அடிக்கடி நேர்ந்தால், அதிகப்படியான கார்டிசால் சுரப்பிகள் வெளியிடப்படுவதால் பிந்தைய ஆண்டுகளில் பதற்றம் மற்றும் மன உளைச்சல் ஏற்படக் கூடும்" என்று விளக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் பிற்காலத்தில் இதுபோன்றவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு, மன ரீதியான பாதிப்புகளின் தாக்கம், 'தான்' என்ற உணர்வும், சுயமதிப்பும் குறைவாக இருக்கக் கூடும். பிறர் தன்னை 'சரி' என்று கூறும் போதே அவர்கள் மதிப்புள்ளவர்களாக தங்களை கருதிக் கொள்வர்". ( நன்றி: பிபிசி தமிழ், 17/04/2025 )

1) வார்த்தைகள் மூலம் காயப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்..

கேலி செய்வது, பட்டப் பெயர் சூட்டி அழைப்பது, மோசமான வார்த்தைகளால் திட்டுவது, சபிப்பது, சாபமிடுவது போன்றவைகளை பெற்றோர்களும், உறவுகளும் ஆசிரியர்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக பிற முஸ்லிமை திட்டுவதை இஸ்லாமிய மார்க்கம் பெரும்பாவங்களில் ஒன்றாக குறிப்பிடுகிறது.

மேலும், கெட்ட வார்த்தைகள் பேசுவது, ஆபாசமாக பேசுவது அருவருப்பாக பேசுவது ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்க முடியாது என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

فقد أخرج الترمذي من حديث عبدالله بن مسعود رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم قال: ((ليس المؤمن بالطعان، ولا اللعان، ولا الفاحش، ولا البذيء)).

ஒரு முஃமின் திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ: கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ

அப்படியிருக்கும் போது சின்னச் சின்ன காரணங்களுக்காக குழந்தைகளை திட்டுவதையும், ஆபாசமாக அருவருப்பாக பேசுவதையும் இஸ்லாம் எப்படி அங்கீகரிக்கும்.

பின் வரும் நபிமொழியின் கருத்தை கூர்ந்து கவனித்தால் அல்லாஹ்வே மன்னித்து விடுகிற, அல்லது அல்லாஹ்வே கண்டும் காணாமல் கடந்து போகிற ஒரு பிரிவினரை அவர்களின் சில செயல்களுக்கு எதிர்வினையாக பெற்றோர்கள் திட்டுவதும், ஏசிப் பேசுவதும் எப்படி ஏற்புடையதாகும்.

عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَبْلُغَ وَعَنِ الْمَعْتُوهِ حَتَّى يعقل ". رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد, وَرَوَاهُ الدَّارِمِيُّ عَنْ عَائِشَةَ وَابْنُ مَاجَهْ عَنْهُمَا

அலீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- "மூன்று பேரை விட்டும் (செயல்களுக்கான) பேனா உயர்த்தப்பட்டுவிட்டது" (செயல்பாடுகள் பதிவு செய்யப்பட மாட்டாது) பாவங்கள் மற்றும் செயல்கள் பதிவு செய்யப்படாத மூன்று பேர்: 1) தூங்குபவர்: அவர் விழிக்கும் வரை. 2) சிறுவர்/சிறுமியர்: அவர்கள் பருவமடையும் (வயதுக்கு வரும்) வரை. 3) மனநலம் பாதிக்கப்பட்டவர்: அவர் தெளிவு பெறும் (புத்தி சுவாதீனம் அடையும்) வரை. (இந்த மூன்று நபர்களின் செயல்களுக்கு இறைவன் தண்டனையோ அல்லது பொறுப்போ வழங்குவதில்லை.) என்று நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ, அபூதாவூத் )

நாசமாகப் போ, நீ ஒரு காலமும் உருப்பட மாட்டாய், நீ விளங்க மாட்டாய் என்பது போன்ற வார்த்தைகளைக் கொண்டு திட்டுவதால் ஏற்படும் மோசமான விளைவுகளைப் பார்ப்போம்.

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ، وَيَحْيَى بْنُ الْفَضْلِ ، وَسُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، قَالُوا : حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ أَبُو حَزْرَةَ ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : لاَ تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ ، وَلاَ تَدْعُوا عَلَى أَوْلاَدِكُمْ ، وَلاَ تَدْعُوا عَلَى خَدَمِكُمْ ، وَلاَ تَدْعُوا عَلَى أَمْوَالِكُمْ ، لاَ تُوَافِقُوا مِنَ اللهِ تَبَارَكَ وَتَعَالَى سَاعَةَ نَيْلٍ فِيهَا عَطَاءٌ ، فَيَسْتَجِيبَ لَكُمْ.قَالَ أَبُو دَاوُدَ : هَذَا الْحَدِيثُ مُتَّصِلٌ ، عُبَادَةُ بْنُ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ ، لَقِيَ جَابِراً.

நீங்கள் உங்களுக்கு எதிராகப் பிரார்த்திக்காதீர்கள். உங்களுடைய குழந்தைகளுக்கு எதிராகப் பிரார்த்திக்காதீர்கள். உங்களுடைய பணியாளர்களுக்கு எதிராகப் பிரார்த்திக்காதீர்கள். உங்களுடைய பொருளாதாரங்களுக்கு எதிராகப் பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் (பிரார்த்தனை) ஒப்புக் கொள்ளப்படும் நேரம் ஒன்று உள்ளது. அவ்வாறு ஒப்புக் கொள்ளப்படும் நேரத்தில் நீங்கள் ஏதுவாகப் பிரார்த்தித்து, அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளக் காரணமாகி விடாதீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி), ( நூல்: அபூதாவூத் )

சுடுசொல் சொல்லாத நபி அவர்கள்....

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ سَمِعَ سَلاَّمَ بْنَ مِسْكِينٍ قَالَ : سَمِعْتُ ثَابِتًا يَقُولُ ، حَدَّثَنَا أَنَسٌ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ

خَدَمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَشْرَ سِنِينَ فَمَا قَالَ لِي أُفٍّ ، وَلاَ لِمَ صَنَعْتَ ، وَلاَ أَلاَّ صَنَعْتَ.

நான் நபி அவர்களுக்குப் பத்து ஆண்டுகளுக்குப் சேவகம் புரிந்தேன். அவர்கள், “சீஎன்றோ ஏன் (இப்படிச்) செய்தாய்?” என்றோ நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?” என்றோ கூறியதில்லை. அறிவிப்பவர் அனஸ் (ரலி), ( நூல்: புகாரி )

நபி அவர்களிடம் அனஸ் ரலி அவர்கள் சிறுவராக இருக்கும் போது பத்து ஆண்டுகள் சேவகம் செய்தார்கள்.

இன்று பெற்றோர்கள் பலரும் தம் சொல்லை குழந்தைகள் கேட்காததற்காகவே திட்டுகிறார்கள். விளையாட்டு கவனத்தில் அனஸ் (ரலி) அவர்கள் நடந்து கொண்ட செயலுக்கு மாநபி அவர்கள் நடந்து கொண்ட விதம் நம்மை சிந்திக்க தூண்டுகிறது.

حَدَّثَنِي أَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ زَيْدُ بْنُ يَزِيدَ ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ يُونُسَ ، حَدَّثَنَا عِكْرِمَةُ وَهُوَ ابْنُ عَمَّارٍ ، قَالَ : قَالَ إِسْحَاقُ : قَالَ أَنَسٌ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا ، فَأَرْسَلَنِي يَوْمًا لِحَاجَةٍ ، فَقُلْتُ : وَاللَّهِ لَا أَذْهَبُ ، وَفِي نَفْسِي أَنْ أَذْهَبَ لِمَا أَمَرَنِي بِهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَخَرَجْتُ حَتَّى أَمُرَّ عَلَى صِبْيَانٍ وَهُمْ يَلْعَبُونَ فِي السُّوقِ ، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَبَضَ بِقَفَايَ مِنْ وَرَائِي ، قَالَ : فَنَظَرْتُ إِلَيْهِ وَهُوَ يَضْحَكُ ، فَقَالَ : يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ ؟ قَالَ قُلْتُ : نَعَمْ ، أَنَا أَذْهَبُ ، يَا رَسُولَ اللَّهِ قَالَ أَنَسٌ : وَاللَّهِ لَقَدْ خَدَمْتُهُ تِسْعَ سِنِينَ ، مَا عَلِمْتُهُ قَالَ لِشَيْءٍ صَنَعْتُهُ : لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا ؟ أَوْ لِشَيْءٍ تَرَكْتُهُ : هَلَّا فَعَلْتَ كَذَا وَكَذَا

 

அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போகமாட்டேன் என்று சொன்னேன். ஆனால், என் மனதில் நபி அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது. நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா? என்று கேட்டார்கள். நான், ஆம்; செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னேன்.அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ( நூல் : முஸ்லிம் )

2) உணர்வுகளை காயப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்...

தனது நண்பரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை சமூக ஆர்வலர் எஸ். ஜெயஸ்ரீ என்பவர் இப்படி விவரிக்கின்றார்.

"எனது நண்பர் ஒருவர் தனது பெற்றோரை தன்னுடன் வைத்துக் கொண்டார் என்றாலும், அவர்கள் மேல் அன்பு காட்டாது, அவர்கள் செய்யும் செயல்களால் எரிச்சலடைவது, அவர்கள் மீது எப்பொழுதும் கோபத்தைப் பாய்ச்சுவது என்று இருந்தார். இதை அவதானித்துக் கொண்டிருந்த குழந்தைகள் மத்தியில் தனது தாத்தா, பாட்டி இருவர்தான் நம் குடும்ப நிம்மதியின்மைக்குக் காரணம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அந்த குழந்தைகளும் தனது தாத்தா, பாட்டியை தூஷிக்கத் துவங்கிவிட்டனர். அந்த முதியோர்களின் நிலை குறித்து வேறு நபர் மூலம் எனக்குச் செய்தி கிடைக்கவே சம்பந்தப்பட்ட எனது நண்பரிடம் நானே சென்று மென்மையாக விஷயம் கேட்டதில் மனதில் உள்ளவற்றை கொட்டித் தீர்த்து விட்டார்.

அவர் தம் பெற்றோர் மீது கூறிய பிரதானக் குற்றச்சாட்டுகள், அவர் சிறு பிள்ளையாக இருக்கும் போது அவரது சின்னச் சின்ன ஆசைகளைக் கூட நிறைவேற்றவில்லை. இன்னும் அவரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தாங்கள் இஷ்டத்துக்கு என்னை அதட்டிப் பணிய வைத்தனர். தன்னை மகனாகவே அவர்கள் மதித்ததில்லை. அதனால் ஏற்பட்ட வெறுப்பு மனதில் ஆழமாய் பதிந்து அவர்கள் பேசும்போது எனக்கு பெரும் கோபத்தையும், எரிச்சலையும் உண்டுபண்ணுகிறது.

இதனால் ஏற்பட்ட கோபத்தை தன் பிள்ளைகள் மேலும் காட்ட என் குடும்பமே நிம்மதியின்றி தவிக்கின்றது, என்று கண்ணீர் மல்கக் கூறினார்." ( நன்றி : தினமணி 11-01-06 )

உணர்வுகளை மதிக்க வேண்டும்...

 

عن سهل بن سعد رضي الله عنه قال: ((أُتي النبي صلى الله عليه وسلم بقدح فشرب منه، وعن يمينه غلام أصغر القوم، والأشياخ عن يساره فقال: يا غلام، أتأذن لي أن أعطيه الأشياخ؟ قال: ما كنتُ لأوثر بفضلي منك أحد يا رسول الله، فأعطاه إياه))؛ [متفق عليه]، والغلام ابن عباس رضي الله عنهما.

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்:- "நபி அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), 'சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான்விட்டுக் கொடுக்க மாட்டேன்'' என்று கூறினார். எனவே, நபி அவர்கள், (அந்தப் பாலில்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்துவிட்டார்கள். ( நூல்: புகாரி ) அந்தச் சிறுவர் அப்பாஸ் (ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் ரலி அவர்கள்.

அதட்டாமல்... மிரட்டாமல்...

أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، يَقُولُ :- كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ

நான் இறைத்தூதர் அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. அறிவிப்பவர்: உமர் இப்னு அபீஸலமா (ரலி) ( நூல்: புகாரி-5376 ) 

3) கவனம் செலுத்தாமல் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்...

حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْعَبْدِ اللهِ بْنِ دِينَارٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَأَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ حَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ قَالَ عَبْدُ اللهِ فَاسْتَحْيَيْتُ فَقَالُوا يَا رَسُولَ اللهِ أَخْبِرْنَا بِهَا ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم هِيَ النَّخْلَةُ قَالَ عَبْدُ اللهِ فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا.

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள் அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, “அது பேரீச்ச மரம்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்என்றார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), ( நூல்: புகாரி ) 

பாராட்டுங்கள்! பரிசுகள் வழங்குங்கள்!! பார் போற்றும் ஆற்றல் வாய்ந்தவராக மிளிர்வார்கள்....

ஸைத் இப்னு ஸாபித் {ரலி} அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மக்கள் தங்களின் மழலைச் செல்வங்களை கொண்டு வந்து துஆசெய்யுமாறு மாநபி அவர்களிடம் வேண்டி நின்றனர்.                                                     

எங்களின் கோத்திரத்தார்களான பனூ நஜ்ஜார்களும் தங்களின் மழலைச் செல்வங்களோடு என்னையும் அழைத்து வந்திருந்தனர். என்னை நபி அவர்களின் முன் கொண்டு நிறுத்தி நான் குர்ஆனின் சில சூராக்களை மனனமிட்டு இருப்பதாக புகழ்ந்து கூறினார்கள்.                                                    

அப்போது நபி அவர்கள் என்னிடம் சில வசனங்களை ஓதிக் காட்டுமாறு கேட்டார்கள். இறுதியாக நான் சூரா அல்-கஹ்ஃபைமுழுமையாக ஓதினேன். இதனைக் கேட்ட நபி அவர்கள் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். அப்போது எனக்கு வயது 11 ஆகும்.                            

பின்னர் ஒரு நாள் மாநபி அவர்கள் என்னை அழைத்து ஸைதே! நீர் யூதர்களின் ஹீப்ரு மொழியைக் கற்றுக் கொள்ளும்! யூதர்கள் எனக்காக கடிதம் எழுதுவதிலும், எனக்கு வரும் கடிதத்தை படிப்பதிலும் எனக்கு திருப்தி இல்லை. ஏனெனில், அவர்கள் தவறு செய்திடும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. எனவே, நீர் யூத மொழியை கற்க வேண்டுமென நான் விரும்புகின்றேன்எனக் கூறினார்கள். நான் பதினைந்தே நாட்களில் ஹீப்ரு மொழியைக் கற்று அதில் புலமையும் பெற்றேன். அதன் பின் அண்ணலாரின் ஆயுட்காலம் வரை நான் தான் அவர்களது அனைத்து கடிதங்களையும் எழுதினேன், படித்தேன். ( நூல்: அஹ்மத்,பாகம்:5, பக்கம்:186, )

 

أن أول مشاهده غزوة الخندق -أو الأحزاب-، وكان ينقل التراب مع المسلمين، فقال رسول الله صلى الله عليه وآله وسلم: «أَمَا إِنَّهُ نِعْمَ الْغُلَامُ»،

விடலைப் பருவத்தை தொட்டு நிற்கிற ஜைத் இப்னு ஸாபித் (ரலி) அகழ் யுத்தத்தின் போது அகழ் தோண்டும் பணிகளில் தமது வயதுக்கும் மீறிய ஆற்றலை வெளிப்படுத்தும் போது "சிறுவர்களில் ஜைத் இப்னு ஸாபித் சிறந்தவராவார்" என்று நபி அவர்கள் பாராட்டினார்கள்.

ففي غزوة تبوك حمل عُمارة بن حزم أولا راية بني النجار، فأخذها النبي منه فدفعها لزيد بن ثابت فقال عُمارة: «يا رسول الله! بلغكَ عنّي شيءٌ؟» فقال له الرسول: « لا، ولكن القرآن مقدَّم

ஹிஜ்ரி 5-ம் ஆண்டு ஷவ்வாலில் ஃகந்தக் யுத்தம் நடைபெற்றது. எந்த யுத்தம் நடைபெற்றாலும், அந்த யுத்தத்தில் கலந்து கொள்ளும் கோத்திரத்தார்களை வழி நடத்திட அவர்களில் மிகச் சிறந்த ஒருவரை தளபதியாக நியமித்து, அவர்களின் கையில் இஸ்லாமியக் கொடியை கொடுப்பது நபிகளாரின் வழக்கம். அன்று பனூ நஜ்ஜார் கோத்திரத்தாரின் தளபதியாக உமாரா இப்னு ஹஸ்ம் {ரலி} அவர்கள் கொடியோடு வழி நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். படை புறப்படும் முன் அணி அணியாக ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த நபி அவர்கள் உமாராவிடம் இருந்து கொடியை வாங்கி, முதன் முதலாக களம் காணும் ஸைத் இப்னு ஸாபித் {ரலி} அவர்களிடம் கொடுத்து இவர் உங்களை வழி நடத்துவார்என்று கூறினார்கள்.    அப்போது, உமாரா {ரலி} அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எந்த விதத்தில் ஸைத் {ரலி} என்னை விட உயர்ந்தவராகி விட்டார்? எனக் கேட்டார்கள்.                             

அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உமாராவே!அப்படி இல்லை குர்ஆன் தான் எப்போதுமே முன்னிலை பெற வேண்டும். ஸைத் உம்மை விட குர்ஆனில் அதிக பகுதியை மனனமிட்டிருக்கின்றார்ஆதலால் அவர் தலைமை வகிப்பதே தகுதியாகும். என்று மாநபி அவர்கள் அவர்கள் உமாராவிடம் கூறினார்கள். அப்போது ஸைத் இப்னு ஸாபித் {ரலி} அவர்களுக்கு வயது 15 ஆகும்.

( நூல்: இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:284. )

11-ஆம் வயதில் மாபெரும் ஆற்றல் ஒளிந்திருக்கும் சிறுவராக மாநபி அவர்களால் அடையாளம் காணப்பட்ட இவர்கள் உடனடியாக இஸ்லாத்தின் செய்திப் பிரிவு மற்றும் தகவல் தொடர்புப் பிரிவு மற்றும் இறைத்தூதை {வஹீயை} பதிவு செய்யும் பணி, மொழிபெயர்ப்பாளர் பணி என செயலாற்றும் திறன் உள்ளவராக மாநபியவர்களால் மாற்றம் கண்டார்கள்.                                                      

தலைமைத் துவத்திற்கான ஆற்றலை 15-ஆம் வயதில் பெற்றுள்ளதாக நபி அவர்களால் அறியப்பட்டார்கள். ஸைத் {ரலி} அவர்களின் 20-ஆம் வயதில் நபி அவர்கள் இந்த உம்மத்தின் சட்ட விவகாரங்களில், வாரிசுச் சட்ட விவகாரங்களில் மிகத் தேர்ச்சி பெற்றவர் ஸைத் இப்னு ஸாபித் {ரலி} ஆவார்என புகழாரம் சூட்டினார்கள். ( நூல்: இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:27,284 )

அபூபக்ர் {ரலி} அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற யமாமா யுத்தத்தில் ஏராளமான ஹாஃபிள்கள் (கொல்லப்பட்டதால்) ஷஹீதாக்கப் பட்டதால் ஆட்சியாளர் அபூபக்ர் {ரலி} அவர்கள் ஸைத் {ரலி} அவர்களை குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபடுத்தினார்கள்.

உமர் {ரலி} அவர்கள் தங்களின் ஆட்சிக்காலத்தில் மூன்று முறை தங்களுக்குப் பதிலாக இடைக்கால ஆட்சியாளராக ஸைத் {ரலி} அவர்களை நியமித்தார்கள். இரண்டு முறை ஹஜ்ஜுக்குச் செல்லும் போதும், ஒரு முறை அரசியல் பயணமாக ஷாமுக்குச் சென்ற போதும் ஃகலீஃபாவாகநியமித்தார்கள்.

உஸ்மான் {ரலி} அவர்களும் தங்களின் ஆட்சிக் காலத்தில் ஹஜ் செய்யச் சென்ற போது இடைக்கால ஆட்சியாளராக ஸைத் {ரலி} அவர்களையே நியமித்தார்கள்.

இமாம் மஸ்ரூக் {ரஹ்} அவர்கள் கூறுகிறார்கள்: அதிகமான மார்க்க ஞானமுள்ள, மார்க்க விஷயங்களில் எவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம் இருந்ததோ அப்படிப்பட்ட ஸஹாபிகளில் ஒருவராகவும் மிக உயர்ந்த நீதிபதிகள், காரிகள், சட்டவல்லுனர்களில் ஒருவராகவும், ஸைத் இப்னு ஸாபித் {ரலி} விளங்கினார்கள்.

 இதே ஸைத் {ரலி} அவர்கள் பத்ரிலும்,உஹதிலும் கலந்து கொள்ள ஆர்வப்பட்ட போது நபி அவர்கள் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி மறுத்து விட்டார்கள். ( நூல்: இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:283,284,285. )

وقال أبو هريرة: “مات حبر الأمة ولعل الله أن يجعل في ابن عباس منه خلف”.

ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் இந்த உலகை விட்டு விடை பெற்று சென்ற போது "இந்த உலகை விட்டும் கல்வியே இடம் பெயர்ந்து விட்டது" என்று அபூஹுரைரா ரலி கூறினார்கள். 

4) நிபந்தனையுடன் கூடிய அன்பு தவிர்க்கப் பட வேண்டும்...

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ : سَمِعْتُ أَبِي ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا حَدَّثَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم

أَنَّهُ كَانَ يَأْخُذُهُ وَالْحَسَنَ فَيَقُولُ اللَّهُمَّ أَحِبَّهُمَا فَإِنِّي أُحِبُّهُمَا.

நபி அவர்கள் என்னையும், ஹஸன் (ரலி) அவர்களையும் கையிலெடுத்து, “இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கின்றேன். நீயும் நேசிப்பாயாக!என்று பிரார்த்திப்பார்கள்.அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி), (புகாரி: 3735)

عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذُنِي فَيُقْعِدُنِي عَلَى فَخِذِهِ، وَيُقْعِدُ الحَسَنَ عَلَى فَخِذِهِ الأُخْرَى، ثُمَّ يَضُمُّهُمَا، ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ ارْحَمْهُمَا فَإِنِّي أَرْحَمُهُمَا»

 

(நபியவர்களின் வளர்ப்புப் பேரரான) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்கள்:- இறைத்தூதர் அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தம் ஒரு தொடையின் மீதும் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீ (ரலி) அவர்களைப் பிடித்து தம் இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, ‘இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்களின் மீது அன்பு செலுத்துவாயாக!என்றார்கள் ( நூல்: புகாரி: 6003)

பெரியவர்களிடம் பேசுவதைப் போன்று குழந்தைகளிடம் அதிக அன்புடன் உரையாட வேண்டும். 

عَنِ ابْنِ عَبَّاسٍ – وَلَا أَحْفَظُ حَدِيثَ بَعْضِهِمْ مِنْ بَعْضٍ – أَنَّهُ قَالَ:- كُنْتُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا غُلامُ، أَوْ يَا غُلَيِّمُ، أَلا أُعَلِّمُكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهِنَّ؟» فَقُلْتُ: بَلَى. فَقَالَ: «احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ أَمَامَكَ، تَعَرَّفْ إِلَيْهِ فِي الرَّخَاءِ، يَعْرِفْكَ فِي الشِّدَّةِ، وَإِذَا سَأَلْتَ، فَاسْأَلِ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْتَ، فَاسْتَعِنْ بِاللَّهِ، قَدْ جَفَّ الْقَلَمُ بِمَا هُوَ كَائِنٌ، فَلَوْ أَنَّ الْخَلْقَ كُلَّهُمْ جَمِيعًا أَرَادُوا أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَكْتُبْهُ اللَّهُ عَلَيْكَ، لَمْ يَقْدِرُوا عَلَيْهِ، وَإِنْ أَرَادُوا أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَكْتُبْهُ اللَّهُ عَلَيْكَ، لَمْ يَقْدِرُوا عَلَيْهِ، وَاعْلَمْ أنَّ فِي الصَّبْرِ عَلَى مَا تَكْرَهُ خَيْرًا كَثِيرًا، وَأَنَّ النَّصْرَ مَعَ الصَّبْرِ، وَأَنَّ الْفَرَجَ مَعَ الْكَرْبِ، وَأَنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا»

சிறுவனே! உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத் தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான்என்று அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்.

நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய். நீ சந்தோஷமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப் பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு.

நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. அவர்கள் உனக்குத் தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்குத் தீங்கு செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன; ஏடுகள் காய்ந்து விட்டனஎன்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ( நூல்: அஹ்மத்: 2803) 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவன் நமக்கு தந்திருக்கின்ற அன்பளிப்பான குழந்தைகளோடு அழகிய முறையில் அளவளாவிட, உறவாடிட உதவி செய்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment