Thursday 2 May 2024

அர்ஷின் நிழலில் இளைப்பாற ஆசைப்படுவோம்!!!

 

அர்ஷின் நிழலில் இளைப்பாற ஆசைப்படுவோம்!!!


தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக கொளுத்துவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

மாநிலம் முழுதும் கடும் வெயில் வாட்டுவதுடன், வெப்ப அலையும் தாக்குவதால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. ஈரோடு, கரூர், சேலம், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் நேற்று பதிவானது.

இந்த முறை கோடை வெயிலுக்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தல பகுதிகளும் தப்பவில்லை. வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் இப்பகுதிகளுக்கு படையெடுக்கும் நிலையில், ஊட்டியிலும், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டி வரலாற்றில் முதன்முறையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்று பதிவாகியிருக்கிறது. 

1951 – ஆம் ஆண்டில் இருந்து ஊட்டியில் பதிவான வெப்பநிலையில் இதுவே அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு, தமிழகத்தில் கடலோரம் அல்லாத வடக்கு உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 14 மாவட்டங்களுக்கு  மே 1 ஆம் தேதி வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலெர்ட்விடுக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் மே 3 ஆம் தேதி (இன்று) வரை வெப்ப அலை தாக்கம் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு உள்மாவட்டங்களில் மே 1 முதல் நான்கு நாட்களுக்கு, இயல்பான அளவை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகலாம். காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, கூடுதலாக உஷ்ணம் உணரப்படும். கடலோரப் பகுதிகளில் காற்றில் 80 சதவீதம் அளவுக்கும், கடலோரம் அல்லாத உள்மாவட்ட பகுதிகளில், 50 சதவீதம் அளவுக்கும் ஈரப்பதம் இருக்கும்.

இதனிடையே வெயில் உக்கிரமாக உள்ளதால், பகலில் வீட்டை விட்டு, தேவையின்றி வெளியே வர வேண்டாம் என, பொதுமக்களை அரசும் அறிவுறுத்தியுள்ளது. காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, உஷ்ணம் அதிகமாக உணரப்பட்டு, அசவுகரியமான சூழல் ஏற்படுகிறது.

எனவே, வெப்ப அலை வீசும் இடங்களில், குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மாற்று திறனாளிகள் போன்றோர், சாலைகளில் சுற்ற வேண்டாம் என அரசு மேலும் அறிவுறுத்தி உள்ளது. ( நன்றி: https://amazingtamilnadu.in/?p=6348&amp=1 ஏப்ரல்/30/2024 )

 

கோடை வெயில் என்றாலே அதன் உஷ்ணம், அதன் வெப்பம் ஆகியவற்றில் இருந்து நம்மை பாதுகாக்க நமக்கு அதிகம் தேவைப்படுவது தண்ணீரும், நிழலும் தான்.

நாம் வாழும் இந்த உலகத்தில் இன்று இந்த இரண்டும் கேள்விக்குறியாகி உள்ளது என்றால் அது மிகையல்ல.

பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் ஆறுகளில், ஏரிகளில் சாக்கடை மற்றும் கழிவுநீர் கலப்பதால் நமது நீராதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

நான்கு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை, ஸ்மார்ட் சிட்டி, மாதாந்திர மின் பராமரிப்பு போன்ற காரணங்களால் சாலை நெடுகிலும், தெருவின் நெடுகிலும் அடர்ந்து படர்ந்து பரந்து விரிந்து நிழல் தந்து கொண்டிருந்த மரங்கள் எல்லாம் இன்று பலிகடா ஆக்கப்பட்டுள்ளது.

விளைவு கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்கும் எவ்வித முகாந்திரமும் இன்றி நாம் பரிதவித்துக் கொண்டிருக்கின்றோம்.

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்று பழமொழிக்கு ஒப்ப இன்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் நிழல் தரும் மரங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிழலே இல்லாத ஒரு சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாப்பானாக!

வெயிலின் உஷ்ணத்தால், வெப்ப அலைகளால் ஏற்படும் கொடிய பாதிப்புகளில் இருந்து நம்மையும், நம்மில் முதியோர், சிறுவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளிகள் அனைவரையும் பாதுகாத்து அருள்புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

நிலையற்ற இந்த புவி வாழ்வு மட்டுமல்ல, நிலையான மறுமை வாழ்வின் மஹ்ஷர் பெருவெளியில் நமது தலைக்கு நேர் மேலாக தகிக்கும் சூரியனை நாம் காண இருக்கிறோம்.

இன்றைக்கு ஏசி, ஏர்கூலர், ஃபேன் என அவரவர் தத்தமது வசதிக்கு தக்கவாறு ஏதாவது வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெயிலின் கோரத்தில் இருந்து ஓரளவாவது நாம் தப்பித்துக் கொள்கின்றோம். நம்மை தற்காத்துக் கொள்கின்றோம்.

நாளை மறுமையில் தலைக்கு நேர் மேலாக தகிக்கும் சூரியனின் வெப்பத்தில் இருந்து, வெப்ப அலைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள நாம் என்ன செய்யப் போகிறோம்? எதை வைத்து நாம் நம்மை பாதுகாக்க போகிறோம்?

وعن المِقْدَاد قَالَ: سَمِعْتُ رسولَ الله ﷺ يَقُولُ: تُدْنَى الشَّمْسُ يَومَ القِيَامَةِ مِنَ الخَلْقِ حتَّى تَكُونَ مِنْهُمْ كَمِقْدَارِ مِيل، قَالَ سُلَيمُ بْنُ عَامرٍ الرَّاوي عَن المِقْدَاد: فَوَاللَّهِ مَا أَدْرِي مَا يَعْني بِالمِيلِ، أَمَسَافَةَ الأَرضِ أَمِ الميل الَّذي تُكْتَحَلُ بِهِ العَيْنُ؟ فَيَكُونُ النَّاسُ عَلَى قَدْرِ أَعْمَالِهمْ في العَرَقِ، فَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلى كَعْبَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلى رُكْبَتَيْهِ، ومِنْهُمْ مَنْ يَكون إِلى حِقْوَيْهِ، ومِنْهُمْ مَنْ يُلْجِمُهُ العَرَقُ إِلجامًا، قال: وَأَشَارَ رَسُولُ اللَّه ﷺ إِلى فِيه. رواه مسلم.

"மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு மிகவும் சமீபமாக இருக்கும். சூரியனுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு மைல் தூரம் தான் இடைவெளி இருக்கும். (அதன் வெப்பத்தால்) மக்கள் தங்களுடைய செயல்களுக்குத் தக்கவாறு வியர்வையில் மூழ்கி இருப்பார்கள். ஒருவரின் செயல் எந்தளவு தீயதாக இருக்குமோ, அந்தளவுக்கு வியர்வை அதிகமாக இருக்கும். சிலரின் வியர்வை கரண்டைக்கால் வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை முழங்கால் வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை இடுப்பு வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை வாய் வரை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் தமது வாயின் பக்கம் கையால் சமிக்கை செய்து காட்டி கூறுவார்கள்". (அறிவிப்பாளர்: மிக்தாத் (ரலி), நூல் : முஸ்லிம்)

தலைக்கு மேல் மிகச் சமீபமான தூரத்தில் சூரியன் உதிக்கும் மறுமை நாளில் சூரிய வெப்பத்தில் இருந்தும், வியர்வையில் இருந்தும் மனிதர்கள் தப்பிக்க ஒரே வழி, இறைவனுடைய நிழல் மட்டுமே. அப்போது வேறெந்த நிழலும் இருக்காது.

இத்தகைய சிரமமான சமயத்தில் இறைவனின் நிழல் இளைப்பாறுவதற்காக தேவைப்படுகிறது. 

அத்தகைய இறைவனின் நிழல் குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சில நபர்கள் யார் தெரியுமா?  அந்த நபர்களில் நாம் இருக்கின்றோமா? என்பதை இந்த தருணத்தில் நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டிருக்கின்றோம்.

நிழல் என்பது இன்பமயமான ஓர் அருட்கொடை!.

وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِمَّا خَلَقَ ظِلَالًا وَجَعَلَ لَكُمْ مِنَ الْجِبَالِ أَكْنَانًا وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمُ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُمْ بَأْسَكُمْ كَذَلِكَ يُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ

தான் படைத்தவற்றிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு நிழல்களை ஏற்படுத்தினான். மலைகளில் உங்களுக்காகக் குகைகளையும் ஏற்படுத்தினான். வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான். ( அல்குர்ஆன்: 16: 81 )

இந்த உலகத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள இன்பமான அருட்கொடைகளைப் பற்றி மறுமைநாளில் விசாரிக்கும் போது, நிழல் தொடர்பாகவும் நம்மிடம் விசாரிக்கப்படும்.

حدثنا أبو كُرَيب، قال: ثنا يحيى بن أبي بكير، قال ثنا شيبان بن عبد الرحمن، عن عبد الملك بن عُمَير، عن أبي سَلَمة، عن أبي هريرة، قال: قال النبيّ صلى الله عليه وسلم لأبي بكر وعمر: " انْطَلِقُوا بِنا إلى أبي الهَيْثَم بنِ التَّيَّهانِ الأنْصَارِيّ"، فانطلق بهم إلى ظلّ حديقته، فبسط لهم بساطا، ثم انطلق إلى نخلة، فجاء بِقِنْوٍ، فقال رسول الله صلى الله عليه وسلم: " فَهَلا تَنَقَّيْتَ لَنا مِنْ رُطَبِهِ؟" فقال: أردت أن تَخَيَّرُوا من رطبه وبُسره، فأكلوا وشربول من الماء؛ فلما فرغ رسول الله صلى الله عليه وسلم، قال: " هَذَا وَالَّذِي نَفْسِي بِيدهِ مِنَ النَّعِيمِ، الَّذِي أنْتُمْ فِيهِ مَسْئُولُونَ عَنْهُ يَوْمَ القِيامَةِ، هَذَا الظِّلُّ البارِدُ، والرُّطَبُ البارِدُ، عَلَيْهِ الماءُ البارِدُ" .

ஒருநாள் பகல் அல்லது இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர் பசியின் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து அன்சாரித் தோழர் ஒருவருடைய வீட்டிற்குச் சென்றார்கள். வீட்டிற்கு வந்த மூவரையும்  அந்த அன்சாரித் தோழரான) அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் தமது தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்காக அவர் ஒரு பாயை விரித்தார். பிறகு பேரித்தம் மரங்கள் நோக்கிச் சென்று ஒரு குலையை கொண்டு வந்து வைத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எங்களுக்காக கனிந்த பேரித்தம் பழங்களை பறித்திருக்கக் கூடாதா?” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! செங்காய் மற்றும் கனிந்த பேரித்தம் பழங்களில் இருந்து தேர்வு செய்யவே நாடினேன்என்று கூறினார். அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். (அன்சாரித் தோழர் குடிப்பதற்காகக் கொண்டு வந்த) அந்த நீரைப் பருகினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! குளிர்ந்த நிழல், கனிந்த பழம், குளிர்ச்சியான நீர் இதுவும் அருட்கொடைகளில் உள்ளதாகும். இது பற்றியும் மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்என்று கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ( நூல்: திர்மிதீ, முஸ்லிம் )

தமக்கும் இந்த உலகிற்கும் இடையேயான தொடர்புக்கு உவமையாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நிழல்...

عَنْ عَبْدِ اللهِ قَالَ:- اضْطَجَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَصِيرٍ ، فَأَثَّرَ فِي جَنْبِهِ ، فَلَمَّا اسْتَيْقَظَ ، جَعَلْتُ أَمْسَحُ جَنْبَهُ ، فَقُلْتُ : يَا رَسُولَ اللهِ ، أَلاَ آذَنْتَنَا حَتَّى نَبْسُطَ لَكَ عَلَى الْحَصِيرِ شَيْئًا ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا لِي وَلِلدُّنْيَا ؟ مَا أَنَا وَالدُّنْيَا ؟ إِنَّمَا مَثَلِي وَمَثَلُ الدُّنْيَا كَرَاكِبٍ ظَلَّ تَحْتَ شَجَرَةٍ ، ثُمَّ رَاحَ وَتَرَكَهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கடினமான பாயின் மீது ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அது அவர்களுடைய தோள்பட்டையின் ஓரத்தில் தழும்பை ஏற்படுத்தியிருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்விழித்த போது அவரது தோள்பட்டையை தடவிக் கொடுத்த நிலையில், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு நீங்கள் கட்டளையிட்டிருக்கக் கூடாதா? நாங்கள் இந்தக் கடினமான பாயின் மீது ஏதேனுமொன்றை (விரிப்பாக) விரித்திருப்போமே?” என்று நான் கேட்டேன்.

 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன தொடர்பு? எனக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள உதாரணம் ஒரு பயணி ஆவார். அவர் ஒரு மரத்தின் அடியில் நிழல் பெறுகிறார். பிறகு (அதிலே) ஓய்வு எடுக்கிறார். பிறகு அதை விட்டுச் சென்று விடுகிறார். இதுவே எனக்கும் இந்த உலகத்திற்குமுள்ள தொடர்புஎன பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் (ரலி), ( நூல்: அஹ்மத் )

இறைவனை வழிபடும் நிழல்...

وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُمْ بِالْغُدُوِّ وَالْآصَالِ

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன. ( அல்குர்ஆன்: 13: 15 )

أَوَلَمْ يَرَوْا إِلَى مَا خَلَقَ اللَّهُ مِنْ شَيْءٍ يَتَفَيَّأُ ظِلَالُهُ عَنِ الْيَمِينِ وَالشَّمَائِلِ سُجَّدًا لِلَّهِ وَهُمْ دَاخِرُونَ

அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அவர்கள் பார்க்கவில்லையா? அதன் நிழல் வலம் மற்றும் இடப்புறங்களில் சாய்ந்து அல்லாஹ்வுக்கு விழுந்து பணிகின்றன. ( அல்குர்ஆன்: 16: 48 )

அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலுக்கு சான்று பகரும் நிழல்...

أَلَمْ تَرَ إِلَى رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ وَلَوْ شَاءَ لَجَعَلَهُ سَاكِنًا ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَيْهِ دَلِيلًا

உமது இறைவன் எவ்வாறு நிழலை நீட்டுகிறான் என்பதை நீர் அறியவில்லையா? அவன் நினைத்திருந்தால் அதை நிலையானதாக ஆக்கியிருப்பான். சூரியனை அதற்கு ஆதாரமாக ஆக்கினோம். பின்னர் அதை நம்மளவில் இலேசாகக் கைப்பற்றிக் கொள்வோம். ( அல்குர்ஆன்:  25: 45 )

நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட நிழல்...

أَنَّ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَتْهُ أَنَّهَا قَالَتْ

لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ قَالَ لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ مَا لَقِيتُ وَكَانَ أَشَدَّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ الْعَقَبَةِ إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَالِيلَ بْنِ عَبْدِ كُلَالٍ فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ فَانْطَلَقْتُ وَأَنَا مَهْمُومٌ عَلَى وَجْهِي فَلَمْ أَسْتَفِقْ إِلَّا وَأَنَا بِقَرْنِ الثَّعَالِبِ فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا أَنَا بِسَحَابَةٍ قَدْ أَظَلَّتْنِي فَنَظَرْتُ فَإِذَا فِيهَا جِبْرِيلُ فَنَادَانِي فَقَالَ إِنَّ اللهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ وَمَا رَدُّوا عَلَيْكَ وَقَدْ بَعَثَ (بَعَثَ اللهُ) إِلَيْكَ مَلَكَ الْجِبَالِ لِتَأْمُرَهُ بِمَا شِئْتَ فِيهِمْ فَنَادَانِي مَلَكُ الْجِبَالِ فَسَلَّمَ عَلَيَّ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ فَقَالَ ذَلِكَ فِيمَا شِئْتَ إِنْ شِئْتَ أَنْ أُطْبِقَ عَلَيْهِمُ الْأَخْشَبَيْنِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللهُ مِنْ أَصْلَابِهِمْ مَنْ يَعْبُدُ اللهَ وَحْدَهُ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا

 

ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது அகபா” (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும்.

ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். கர்னுஸ் ஸஆலிப்என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன்.

அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடு வதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, “முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)என்று கூறினார். உடனே, “(வேண்டாம்) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)என்று சொன்னேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி). ( நூல்: புகாரி )

நபித்தோழருக்கு வழங்கப்பட்டம் நிழல்...

عن جَابِرَ بْنَ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ

جِيءَ بِأَبِي يَوْمَ أُحُدٍ قَدْ مُثِّلَ بِهِ حَتَّى وُضِعَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَقَدْ سُجِّيَ ثَوْبًا فَذَهَبْتُ أُرِيدُ أَنْ أَكْشِفَ عَنْهُ فَنَهَانِي قَوْمِي ثُمَّ ذَهَبْتُ أَكْشِفُ عَنْهُ فَنَهَانِي قَوْمِي فَأَمَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَرُفِعَ فَسَمِعَ صَوْتَ صَائِحَةٍ فَقَالَ مَنْ هَذِهِ فَقَالُوا ابْنَةُ عَمْرٍو ، أَوْ أُخْتُ عَمْرٍو قَالَ فَلِمَ تَبْكِي ، أَوْ لاَ تَبْكِي فَمَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا حَتَّى رُفِعَ

 

உஹுதுப்போர் தினத்தன்று உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல் மீது ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது.  அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தையை)ப் பார்க்க நாடினேன்.  எனினும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்துவிட்டனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன்.  மீண்டும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிரேதத்தை  தூக்கும்படி) கட்டளையிட்டார்கள். (பிரேதம்) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் யார் அந்தப் பெண்?” என்று கேட்டார்கள். அம்ருடைய மகள்என்றோ  அல்லது அம்ருடைய சகோதரிஎன்றோ (கூடியிருந்தோர்) கூறினர்.  நபி (ஸல்) அவர்கள் நீ ஏன் அழுகிறாய்?” அல்லது நீ அழ வேண்டாம்  என்று கூறிவிட்டு, “பிரேதம் தூக்கப்படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து அதற்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) ( நூல்: புகாரி )

மூஸா நபியின் சமூகத்திற்கு வழங்கப்பட்ட நிழல்...

وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ

பனூ இஸ்ராயீல் சமுதாயமாகிய) உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!” (என்று கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ( அல்குர்ஆன்:  2: 57 )

وَقَطَّعْنَاهُمُ اثْنَتَيْ عَشْرَةَ أَسْبَاطًا أُمَمًا وَأَوْحَيْنَا إِلَى مُوسَى إِذِ اسْتَسْقَاهُ قَوْمُهُ أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ وَظَلَّلْنَا عَلَيْهِمُ الْغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْهِمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ

(பனூ இஸ்ராயீல் சமுதாயமான) அவர்களைப் பன்னிரண்டு கிளைகளைக் கொண்ட சமுதாயங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமுதாயத்தினர் அவரிடம் தண்ணீர் கேட்ட போது உமது கைத்தடியால் இப்பாறையில் அடிப்பீராக!என்று அவருக்கு அறிவித்தோம். உடனே அதில் பன்னிரண்டு நீரூற்றுக்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா (எனும் உண)வை இறக்கினோம். உங்களுக்கு நாம் வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!” (என்று கூறினோம்) அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்கே தீங்கிழைத்தனர். ( அல்குர்ஆன்: 7: 160 )

 

சுவனத்தின் நிழலும்... சுவனவாசிகளின் சுகமான அனுபவமும்...

சுவனவாசிகளுக்கு சுவனத்தில் வழங்கப்படும் அருட்கொடைகளில் ஒன்று நிழல். இது குறித்து அல்குர்ஆனில் அல்லாஹ் சுவனத்தைப் பறிச் சொல்கின்ற, சுவனவாசிகளுக்கு வழங்கப்படும் இன்பங்கள் குறித்துப் பேசுகிற சுமார் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிடுகின்றான்.

إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ (41) وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ (42) كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (43) إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ

(இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் விரும்புகிற கனிகளிலும் இருப்பார்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்!” (எனக் கூறப்படும். இவ்வாறே நன்மை செய்தோருக்கு நாம் கூலி வழங்குவோம். ( அல்குர்ஆன்: 77: 41-44 )

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ

إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِئَةَ عَامٍ لاَ يَقْطَعُهَا

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி), ( நூல்: புகாரி )

حَدَّثَنِي أَبُو سَعِيدٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ

إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ الْجَوَادَ الْمُضَمَّرَ السَّرِيعَ مِئَةَ عَامٍ مَا يَقْطَعُهَا

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி), ( நூல்: புகாரி )

நரகத்தின் நிழலும்.... நரகவாசிகளின் வேதனையும்...

وَاَصْحٰبُ الشِّمَالِ مَاۤ اَصْحٰبُ الشِّمَالِؕ فِىْ سَمُوْمٍ وَّحَمِيْمٍۙ‏

‏ وَّظِلٍّ مِّنْ يَّحْمُوْمٍۙ‏

(அடுத்த சாரார்) இடது புறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன? அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். ( அல்குர்ஆன்: 56: 41-43 )

اِنْطَلِقُوْۤا اِلٰى ظِلٍّ ذِىْ ثَلٰثِ شُعَبٍۙ‏ اِنَّهَا تَرْمِىْ بِشَرَرٍ كَالْقَصْرِ‌ۚ‏

நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி நடங்கள்! அது நிழல் தரக் கூடியது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும். ( அல்குர்ஆன்: 77: 30-32 )

அர்ஷின் நிழலில் இடம் பெறுவோர்...

 

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ

: سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ الإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ

அல்லாஹ் தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு கூட்டத்தார் உனக்கு தனது நிழலில் (அடைக்கலம்) அளிப்பான்: 

1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 4. அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோதும் நான்       அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்என்று கூறியவர். 6. தமது வலக்கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ( நூல்: புகாரி, முஸ்லிம் )

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم:-

إِنَّ اللَّهَ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ أَيْنَ الْمُتَحَابُّونَ بِجَلاَلِى الْيَوْمَ أُظِلُّهُمْ فِى ظِلِّى يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلِّى

அல்லாஹ் மறுமை நாளில், “என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள் எங்கே? எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்என்று கூறுவான். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி), ( நூல்: முஸ்லிம் )

عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ:فَأَشْهَدُ بَصَرُ عَيْنَىَّ هَاتَيْنِ – وَوَضَعَ إِصْبَعَيْهِ عَلَى عَيْنَيْهِ – وَسَمْعُ أُذُنَىَّ هَاتَيْنِ وَوَعَاهُ. قَلْبِى هَذَا – وَأَشَارَ إِلَى مَنَاطِ قَلْبِهِ – رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَهُوَ يَقُولُ « مَنْ أَنْظَرَ مُعْسِرًا أَوْ وَضَعَ عَنْهُ أَظَلَّهُ اللَّهُ فِى ظِلِّهِ

உபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:- :பிறகு அபுல்யசார் (ரலி) அவர்கள் தம் கண்கள்மீது இரு விரல்களை வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: இந்த என்னிரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப் பகுதியில் கையை வைத்து) இந்த உள்ளம் மனனமிட்டது. பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருகின்றான்.  ( ஹதீஸின் ஒரு பகுதி) - ( நூல்: முஸ்லிம் )

عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أدبوا أولادكم على ثلاث خصال حب نبيكم، وحب أهل بيته، وعلى قراءة القرآن، فإن حملة القرآن في ظل الله، يوم لا ظل إلا ظله، مع أنبيائه وأصفيائه. أخرجه الديلمي. وفي إسناده ضعف.

அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "உங்கள் குழந்தைகளுக்கு மூன்று நற்பண்புகளை ஒழக்கமாக கற்றுக் கொடுங்கள்! 1. நபி ஸல் அவர்கள் மீது நேசம் வைப்பதை ஒழுக்கமாக கற்றுக் கொடுங்கள். 2. நபி ஸல் அவர்களின் குடும்பத்தார்கள் மீது நேசம் கொள்ள கற்றுக் கொடுங்கள். 3. குர்ஆனை ஓதி வரக் கூடியவர்களாக உருவாக்குங்கள். ஏனெனில், குர்ஆன் உடையவர்கள் நாளை நிழலே இல்லாத நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் அவன் தேர்ந்தெடுத்த வர்களுடனும்,  நபிமார்களுடனும் இருப்பார்கள். ( நூல்: தைலமீ )

عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أهل الجوع في الدنيا، هم الذين يقبض الله أرواحهم، وهم الذين إذا غابوا لم يفقدوا، وإذا شهدوا لم يعرفوا، أخفياء في الدنيا، معروفون في السماء، إذا رآهم الجاهل، ظن بهم سقما، وما بهم سقما إلا الخوف من الله يستظلون يوم القيامة، يوم لا ظل إلا ظله. أخرجه الديلمي.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "உலகில் வறுமையின் காரணமாக பசி பட்டினியால் வாழ்ந்தவர்கள் அவர்களின் ஆன்மாக்களை அல்லாஹ் கைப்பற்றி விடுவான். அவர்கள் இந்த உலகில் வாழும் காலத்தில் ஏதேனும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளாமல் போனால் அவர்கள் தேடப்படமாட்டார்கள். அவர்கள் கண் முன்னால் கடந்து போனால் அவர் இன்னின்னவர் தான் என்று அறிந்து கொள்ளவும் பட மாட்டார்கள். உலக மக்களிடம் தான் அவர்கள் அப்படி. ஆனால், வானலோகத்தில்  மலக்களிடம் அவர்கள் நன்கு அறியப்பட்டவர்கள். அப்படியே உலகில் யாரேனும் அவரைப் பார்த்தால் ஏதோ ஒரு நோயாளி போன்றே கருதிக் கொள்வார்கள். உண்மையில் அவர்கள் அல்லாஹ்வின் அச்சத்தால் தான் தோற்றத்தில் அவ்வாறு இருக்கின்றார்கள். இவர்கள் நாளை மறுமையில் அர்ஷின் நிழலில் நிழல் வழங்கப்படுவாகள்"  என் நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். ( நூல்: தைலமீ )

عن يزيد الرقاشي - وهو سيء الحفظ - عن أبي أمامة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة في ظل العرش يوم القيامة: رجل حيث توجه، علم أن الله معه، ورجل دعته امرأة إلى نفسها فتركها من حشية الله، ورجل يحب الناس لجلال الله. أخرجه الديلمي والطبراني في " الكبير

 

அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "மூன்று பண்புகள் உள்ள மனிதர்கள் அர்ஷின் நிழலில் இளைப்பாறுவார்கள். 1. வாழ்வில் எல்லா நிலைகளிலும் அல்லாஹ் தம்மோடு இருக்கின்றான் என்று அறிந்து கொண்டவர். 2. ஒரு பெண் பாவமான செயலின் பக்கம் அழைத்தும் அல்லாஹ்வின் அச்சத்தால் அந்த பாவத்தை செய்யாமல் விட்டவர். 3. அல்லாஹ்வின் மீதுள்ள கண்ணியம் காரணமாக மக்களை நேசித்தவர் " என்று நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். ( நூல்: தப்ரானீ, தைலமீ )

عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة في ظل العرش، يوم القيامة، يوم لا ظل إلا ظله: واصل الرحم، يزيد الله في رزقه، ويمد في أجله. وامرأة مات زوجها وترك عليها أيتاما صغارا. فقالت: لا أتزوج، أقيم على أيتامي، حتى يموتوا، أو يغنيهم الله. وعبد صنع طعاما، فأضاف ضيفه، وأحسن نفقته، فدعا إليه اليتيم والمسكين، فأطعمهم لوجه الله.

أخرجه أبو الشيخ ابن حيان في " الثواب " ولأصبهاني والطبسي في " ترغيبهما "، والديلمي في " مسند الفردوس "

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "மூன்று பண்புகள் கொண்ட மனிதர்கள் அர்ஷின் நிழலில் இளைப்பாறுவார்கள். 1. உறவைப் பேணி வாழ்பவர். 2. குழந்தைகளைப் பெற்றுள்ள நிலையில் கணவனை இழந்த பெண். அந்த யதீமான குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் அடுத்த திருமணத்தை செய்யாமல் அந்த குழந்தைகளுக்காக வாழ்ந்த பெண். 3. நல்ல முறையில் செலவு செய்து, உணவை தயார் செய்து விருந்தாளிகளை கண்ணியப்படுத்தி, ஏழை எளிய மக்களை, அநாதைகளை அழைத்து அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே ஆதரவு வைத்து உணவு வழங்கியவர் " என்று நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். ( நூல்: இப்னு ஹிப்பான் )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் அர்ஷின் நிழலில் இளைப்பாறும் நற்பேற்றைத் தந்தருள்வானாக! அர்ஷின் நிழலைப் பெற்றுத் தரும் நற்பண்புகளைக் கொண்ட நல்லடியார்களாக ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!