Sunday, 3 April 2022

அருள்மறைச்சாரல் – தராவீஹ் சிந்தனை:-3. தூய்மையான சந்ததிகளை (பரம்பரையை) கட்டமைப்போம்!!!

 

அருள்மறைச்சாரல்தராவீஹ் சிந்தனை:-3.

தூய்மையான சந்ததிகளை (பரம்பரையை) கட்டமைப்போம்!!!



அல்ஹம்துலில்லாஹ்!! 3 –வது தராவீஹ் தொழுகையை சிறப்பாக நிறைவு செய்து விட்டு நாம் ஆசையோடு நேற்றிருக்கும் 3-வது நோன்பை நிறைவு செய்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் ஆலு இம்ரான் சூராவின் 14 –வது வசனத்தில் இருந்து 11/4 ஜுஸ்வு ஓதப்பட்டிருக்கின்றது. ஆலு இம்ரான் சூரா நிறைவு செய்யப்பட்டு, 186 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

 இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட ஆலு இம்ரான் சூராவின் 38–ஆவது வசனம் ஒரு இறைநம்பிக்கையாளன் தமது சந்ததிகள் விஷயத்தில் எந்த மாதிரியான ஆசையை ரப்பிடம் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து அல்லாஹ் குறிப்பிட்டுப் பேசுவதை அவதானிக்க முடிகின்றது.

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்: இறைவனே, உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக. நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்”. (திருக்குர்ஆன் 3:38)

முன்மாதிரி கட்டமைப்பாளர்…

நபி இப்ராஹீம் (அலை) அவர்களது வரலாறு குறிப்பிட்டுக் காட்டும் நுட்பமான நுணுக்கமான மிகப் பெரும் பாடம் இதுதான். மிகவும் தூய்மையான ஒரு பரம்பரையை கட்டமைக்க - உருவாக்க அவர்கள் அரும்பாடுபட்டார்கள். 

வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் வல்லோன் அல்லாஹ்விடம் அந்த சிந்தனையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். 

முதல் வாய்ப்பாக அமைந்த மனித  சஞ்சாரமற்ற பாலை வனத்தில் தனது மனைவியையும் பச்சிளம் பாலகனையும் இறைக் கட்டளையின் காரணமாக விட்டு வருகின்ற போது இப்ராஹிம் (அலை) வெளிப்படுத்திய வார்த்தைகளை அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது:

رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

 இறைவா எனது பரம்பரையை உனது மாளிகைக்கு அருகில் பயிர்ப் பச்சைகள் எதுவுமற்ற பாலைவனத்தில் குடியமர்த்தியுள்ளேன். இறைவா! அவர்களை தொழுகையை நிலைநாட்டக் கூடியவர்களாக ஆக்கிவிடு. அவர்களின் பால் பேரார்வம் கொள்ளும் விதமாக மக்களின் உள்ளங்களை ஆக்கிவிடு. அதன் கனிவர்க்கங்களிலிருந்து அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவர்களுக்கு ஆகாரம் அளித்துவிடு” ( அல்குர்ஆன்: 14: 37 )

இரண்டாம் வாய்ப்பு அமைந்த போது தன் உள்ளக்கிடக்கையை இப்படி வெளிப்படுத்தினார்கள் என்று அல்குர்ஆன் சான்றுரைக்கின்றது.

وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ

இப்ராஹீமின் ரப்பு இப்ராஹீமை பல சோதனைகளைக் கொண்டு சோதித்தான். பின்னர் இப்ராஹீமே உம்மை மக்களுக்கு இமாமாக ஆக்குகிறேன் என்று கூறியபோது தனது பரம்பரையிலிருந்தும் அப்படி (இமாம்களை) ஆக்கி விடு என்று பிரார்த்தித்தார். ( அல்குர்ஆன்: 2: 124 ). 

மூன்றாம் வாய்ப்பு அமைந்த போது முன்பை விட மகத்தான ஆசையை வெளிப்படுத்தினார்கள்.

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ (128) رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் ; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்).

எங்கள் இறைவா! என் சந்ததியினரான அவர்களில் இருந்தே அவர்களுக்கு ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர் உனது திருவசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து இன்னும் அவர்களைத் தூமையாக்குவார். நிச்சயமாக! நீயே மிகைத்தோனும், ஞானம் நிறைந்தோனுமாக இருக்கின்றாய்”.                         ( அல்குர்ஆன்:2: 128, 129 )

தனக்காகவும் தனது சுய நலன்களுக்காக மட்டும் வாழாமல் இன்னும் பல வருடங்கள் கழித்து வரவுள்ள தனது தலைமுறையின், சமூகத்தின் நலன் மற்றும் எதிர்காலம் குறித்து சிந்தித்தார்கள். அதற்காக தன்னையே அர்ப்பணித்தார்கள்.

إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ حَنِيفًا وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِينَ

எனவேதான் நபி இப்ராஹீமை (அலை அவர்களை) ப் பார்த்து அல்குர்ஆன் நிச்சயமாக இப்ராஹீம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுகின்ற ஹனீஃபாக ஒரு தனி சமூகமாக இருந்தார். அவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கவில்லை” (அல்குர்ஆன்: 16: :127) என்று உயர்த்திக் கூறுகின்றது.

இந்த வசனத்தை விளக்குகின்ற ஷஹீத் செய்யிது குத்துப் (ரஹ்) அவர்கள் “அல்லாஹ் நபி இப்ராஹீமை நேர்வழிக்கும் கட்டுப்பாட்டுக்கும் நன்றி தெரிவிப்பதற்கும் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருப்பதற்கும் முன்மாதிரியாக குறிப்பிடுகிறான்” என்கின்றார்கள்.

மேலும், அவரை தனிப்பெரும் சமூகமாக குறிப்பிடுகின்றான். ஒரு தனிச் சமூகம் பெற்றிருந்த அனைத்து நலவுகளையும் அவர் பெற்றிருந்தார் என்று குறிப்பிடுகிறான். தனி மனிதனாக இருந்து ஒரு சமூகத்தைப்பிரதிபலித்தார்.

மேலும், அவரது சிந்தனையின், ஆசையின் விளைவாக அவரது பரம்பரையில் அதிகமான இறை தூதர்களை அல்லாஹ் அனுப்பினான். 

கடைசியாக நபிமார்களின் முத்திரையாக நபி  முஹம்மத் {ஸல்} அவர்களை

அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

நபி இப்ராஹீமின் இன்னொரு தலைமுறைக்காக வேண்டிய பிரார்த்தனை நிறைவேற பல ஆயிரம் வருடங்கள் சென்றுள்ளதை ஷஹீத் செய்யித் குதுப் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ( தஃப்ஸீர் ஃபீ ளிழாலில் குர்ஆன் )

வெறும் விருப்பமாக இல்லாமல் மிகச் சிறந்த அடிப்படையில் தங்களது சந்ததிகளை இறைவனுக்கு உகந்தவர்களாக உருவாக்கினார்கள்.

இப்ராஹீம் (அலை) தனது மகன் இஸ்மாயீலை முறையான அடிப்படையில் வளர்த்தக் காரணத்தினால் தான் அரும்பெரும் தியாகங்களை இறைவனுக்காக செய்வதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் தயாரானார்கள்.

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَابُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَاأَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறுஎன்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்என்று பதிலளித்தார். இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்என்று அவரை அழைத்துக் கூறினோம்.        ( அல்குர்ஆன்: 37: 102 )

தூய்மையான பரம்பரையை உருவாக..

நல்லொழுக்கமும்.. கல்வியும் அவசியம்..

عن أيوب بن موسى بن عمرو بن سعيد بن العاص، عن أبيه عن جده أن رسول الله -صلى الله عليه وسلم- قال: ( ما نحل والد ولده من نحل أفضل من أدب حسن ) رواه الترمذي.

தந்தை தன் தனயனுக்கு வழங்கும் அன்பளிப்புகளில் நல்லொழுக்கக் கல்வியை விட வேறு எந்த சிறந்த அன்பளிப்பையும் வழங்கிட முடியாது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அய்யூப்பின் மூஸா (ரலி), திர்மிதி)

عن أبي سعيد وابنِ عباسٍ قالا: قال رسول الله صلى الله عليه وسلم: ((مَن وُلِد له ولدٌ، فليحسن اسمَه وأدبَه، فإذا بلغ فليزوِّجه، فإنْ بلَغ ولم يزوِّجه فأصاب إثمًا، فإنَّما إثمُه على أبيه

எவருக்கு குழந்தை பிறக்கிறதோ அவர், அந்த குழந்தைக்கு அழகான பெயர் சூட்டி, ஒழுக்கமும் கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும், பருவ வயதை அடைந்து விட்டால், அவனுக்கு அவர் திருமணத்தையும் நடத்திவைக்க வேண்டும். இவ்வாறு செய்யாத பட்சத்தில் அந்தக்குழந்தை கேட்டில் விழும்போது, அதன் பாவம் குழந்தையின் தந்தையின் மீதும் சரிசமமாக போய் சேரும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: பைஹகீ)

தன்னிறைவு பெற்றவர்களாக வாழச் செய்வது அவசியம்..

குழந்தைகளின் வருங்கால வாழ்க்கைக்காக செல்வங்களை சேமித்து வைப்பது சிறந்த செயலாகும். இவ்வாறு செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                 ( நூல் : புகாரி (3936) )

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”தம் சின்னஞ் சிறிய பிள்ளைகளுக்குச் செலவிடுகின்றவரைவிட அதிக நற்பலன் அடைந்துகொள்ளும் மனிதர் யார்? (ஏனெனில்) அவர் தம் பிள்ளைகளைச் சுய மரியாதையோடு வாழச் செய்கிறார். அல்லது அவர் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு உதவி, அவர்களைத் தன்னிறைவுடன் வாழச் செய்கிறான்என்றும் கூறினார்கள் என ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                            ( நூல் : முஸ்லிம் (1817) )

தீனின் மாண்புகளையும், நபி {ஸல்} அவர்களின் கண்ணியத்தையும், ஷரீஆவின் கோட்பாடுகளையும் பேணிப்பாதுகாக்கின்றவர்களாக உருவாக்குவது அவசியம்..

தபூக் யுத்தத்தின் போது மாநபியை இழிவாகப் பேசிய தமது ( ஜுலாஸ் இப்னு ஸுவைபித் (ரலி) ) தந்தையைக் கண்டித்த உமைர் இப்னு ஸஅத் (ரலி) அவர்களைப் போன்றும், பத்ர் யுத்தத்தில் அபூஜஹ்லை கொன்று குவித்த முஆத் (ரலி), முஅவ்வித் (ரலி) போன்றும், ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃபின் கொடுங்கோன்மைக்கு முன்பாக கஅபாவின் மாண்புகளைக் காப்பாற்ற நெஞ்சுயர்த்தி நின்று தனியொரு நபராக போராடி உயிர் நீத்த ஷஹீத் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) போன்றும், பொய்யன் முஸைலமாவின் முன்பாக மாநபி {ஸல்} அவர்களின் கடிதத்தைக் கொடுத்து, உயிருள்ளவரை பெருமானார் {ஸல்} அவர்களை உதாசீனப்படுத்த மாட்டேன் என உரத்துக் கூறி ஷஹாதா உயிர் நீத்த ஹபீப் இப்னு ஜைத் (ரலி) போன்றும், குழப்பமான காலங்களில் வாழ்ந்த போதும் ஷரீஆவின் கோட்பாடுகளை பேணி வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) போன்றும் நம் சந்ததிகள் உருவாகுவார்கள் என்றால் நிச்சயமாக தூய்மையான பரம்பரை இந்த உலகில் கட்டமைக்கப்படும்.

எனவே, தலைமுறைகளைத் தாண்டியும் நின்றிலங்குகின்ற பரைம்பரையை கட்டமைப்போம்! அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!

Saturday, 2 April 2022

அருள்மறைச் சாரல் - தராவீஹ் சிந்தனை:-2. தூய்மையானவற்றிலிருந்து பொருளீட்டுவோம்!!!

 

அருள்மறைச் சாரல் - தராவீஹ் சிந்தனை:-2.

தூய்மையானவற்றிலிருந்து பொருளீட்டுவோம்!!!

 


அல்ஹம்துலில்லாஹ்!! 2 –வது தராவீஹ் தொழுகையை சிறப்பாக நிறைவு செய்து விட்டு நாம் ஆசையோடு எதிர்பார்த்து காத்திருந்த முதல் நோன்பை நோற்று நிறைவு செய்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் சூரத்துல் பகராவின் 177 – வசத்தில் இருந்து 11/4 ஜுஸ்வு ஓதப்பட்டிருக்கின்றது. சூரத்துல் பகரா நிறைவு செய்யப்பட்டு, ஆலு இம்ரான் சூராவின் 13 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

 இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அல் பகரா அத்தியாயத்தின் 267 –ஆவது வசனம் ஒரு இறைநம்பிக்கையாளனின் பொருளீட்டலும், செலவு செய்தலும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அல்லாஹ் குறிப்பிட்டுப் பேசுவதை அவதானிக்க முடிகின்றது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ

“இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்த தூய்மையானவற்றிலிருந்து செலவு செய்யுங்கள்!” ( அல்குர்ஆன்: 2: 267 )

 

பொருளாதாரம் மனித வாழ்வுக்கு இன்றியமையாதது. எனினும் அதனை இஸ்லாம் கூறும் வரையறைகளுடன் பெற வேண்டும், பயன்படுத்த வேண்டும்.
பொருளாதாரம் தொடர்பில் இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

1. பொருளாதாரத்தை சம்பாதித்தல்.
2.
அதனைச் செலவு செய்தல்.

நமது பொருளீட்டலும், நாம் செய்யும் செலவும் இஸ்லாம் வலியுறுத்தும் நல்ல வழியில் ( தூய்மையானதாக - ஹலாலாக) அமைய வேண்டும். இறைவன் தடுத்துள்ள (ஹராமான) வழியில் அமைந்திருக்கக்கூடாது.

ஹராமான தொழில், அதன் மூலம் பெறப்படும் வருமானம், அதில் இருந்து செய்யப்படும் செலவினங்கள் இவற்றை விட்டும் ஒரு உண்மையான இறைநம்பிக்கையாளர் தவிர்ந்து வாழ வேண்டும்.

ஏனெனில், ஒரு இறைநம்பிக்கையாளரின்   உலக வாழ்க்கையிலும் நாளை மறுமை வாழ்க்கையிலும் மகத்தான பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் ஆற்றல் அதற்கு உண்டு.

இறைத்தூதர்களான நபிமார்கள் ஆகுமான உணவை உண்பதற்காகவும், தமது குடும்பத்தாரின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் 
தமக்கு தெரிந்த, தம்மால் முடிந்த தூய்மையான தொழில்களின் மூலம் சம்பாதித்து பொருளீட்டினார்கள்.

عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «ما بعث الله نبيا إلا راعي غنم»
 فقال له أصحابه: وأنت يا رسول الله؟ قال: «وأنا رعيتها لأهل مكة بالقراريط » .
ويقول عليه الصلاة والسلام: كنت أرعاها لأهل مكة بالقراريط :يعني كل شاة بقيراط، والقيراط الذي هو جزء من الدينار أو الدرهم.

ويقول عليه الصلاة والسلام: كنت أرعاها لأهل مكة بالقراريط :يعني كل شاة بقيراط، والقيراط الذي هو جزء من الدينار أو الدرهم

அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லைஎன நபி (ஸல்) கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘நீங்களுமா?’ என்று கேட்டார்கள். ஆம், மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்என்று நபி (ஸல்) பதிலளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

قوله صلى الله عليه وسلم: ((ما أَكَل أحدٌ طعامًا قطُّ خيرًا مِن أن يأكُل مِن عَمَلِ يَدِه، وإنَّ نبيَّ اللهِ داودَ عليه السلام كان يأكُل مِن عَمَلِ يَدِه))؛ رواه البخاري.

ஒருவர் தம் கையால் உழைத்து, உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ணமுடியாது. நபி தாவூத் (அலை) அவர்கள் தங்களின் கையால் உழைத்து, உண்பவராக இருந்தார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: மிக்தாம் (ரலி), நூல்: புகாரி)

நபி தாவூத் (அலை) அவர்களைப் பற்றி இவ்வாறு சிறப்பித்து கூறப்படுவதற்கு காரணம் அவர்கள் மன்னராக இருந்தபோதிலும் போர்க்கவசங்களை தமது கையால் செய்து, அதிலிருந்து வரும் வருமானத்தில் தான் அவர் உண்பார்.

وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَاجِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ (10) أَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

தாவூதுக்கு (அலை) நாம் நமது அருளை வழங்கினோம். மலைகளே, பறவைகளே, அவருடன் சேர்ந்து துதியுங்கள் (எனக் கூறினோம்). போர்க் கவசங்களைச் செய்வீராக, அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராகஎன (கூறி) அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம். நல்லறத்தைச் செய்யுங்கள், நீங்கள் செய்பவற்றை நான் பார்ப்பவன்எனவும் கூறினோம்’. (திருக்குர்ஆன் 34:10,11)

நியாயமான சம்பாத்தியத்தின் மூலம் கிடைத்த உணவினால் தான் நல்ல உணர்வு ஏற்படும்; நல்ல செயலும் ஏற்படும்.

பொருளீட்டலும் முக்கியம், செலவும் முக்கியம். இரண்டுக்குமே அல்லாஹ் விடம் பதில் சொல்லியே தீர வேண்டும். இரண்டுமே தூய்மையான வழியில் அமைய வேண்டும்.

ورد في الحديث عن الرسول - صلى الله عليه وسلم

أنه قال

 (لا تزول قدما عبدٍ يوم القيامة حتى يسأل عن عمره فيم أفناه؟ وعن علمه فيم فعل فيه؟ وعن ماله من أين اكتسبه وفيم أنفقه؟ وعن جسمه فيم أبلاه

 رواه الترمذي 

நாளை மறுமையில் பின்வரும் நான்கு கேள்விகளுக்கு பதில் கூறாமல் எந்த ஒரு அடியானின் இரண்டு பாதங்களும் நகர முடியாது. 1) உனது ஆயுளை நீ எவ்வாறு கழித்தாய்?, 2) உனது வாலிபத்தை நீ எவ்வாறு அமைத்தாய்?, 3) உனது பொருளாதாரத்தை நீ எவ்வாறு சம்பாதித்தாய்?, அதை எந்த விதத்தில் செலவளித்தாய்?, 4) நீ கற்றதின் படி எவ்வாறு நடந்தாய்? என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி)

வணக்கத்தின் அடிப்படையே ஹலாலான வருமானம்தான்.

 وقال صلى الله عليه وسلم: " العبادة عشرة أجزاء: تسعة منها في طلب في طلب الحلال

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். வணக்கம் பத்து பாகம் என்றால் அதில் ஒன்பது பாகம் ஹலாலான வழியில் பொருளீட்டுவதாக இருக்கும்.

கொஞ்சம் ஹராம் இருந்தாலும் தொழுகை கூடாது.

وقال صلى الله عليه وسلم: " من اشترى ثوباً بعشرة دراهم وفي ثمنه درهم حرام لم يقبل الله صلاته مادام عليه منه شيء 

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.பத்து திர்ஹத்துக்கு வாங்கிய ஆடை. அதில் ஒரு திர்ஹம் ஹராமாக இருந்தாலும் அது இருக்கும் வரை தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது.

  " مَنِ اشْتَرَى ثَوْبًا بِعَشَرَةِ دَرَاهِمَ ، فِي ثَمَنِهِ دِرْهَمٌ حَرَامٌ ، لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاةً مَا دَامَ عَلَيْهِ " ثُمَّ وَضَعَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ فَقَالَ : صَمْتًا إِنْ لَمْ أَكُنْ سَمِعْتُه 

مشکوة

ஒரு முறை உமர் (ரலி)அவர்கள் (தங்களின் மாணவர்களிடம்)ஒருவர் பத்து திர்ஹத்திற்கு ஒரு ஆடையை வாங்கினார்.ஆனால் அதில் ஒரு திர்ஹம் ஹராமாக இருந்தாலும்,அந்த ஆடையை அணிந்திருக்கும் காலெமல்லாம் அருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.என்று கூறிவிட்டு தன் காதுகளில் விரல்களை நுழைத்து விட்டுச் சொன்னார்கள்:இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் சொன்னதாக நான் கேட்கவில்லை என்றால் என் காதுகள் செவிடாக்கட்டும். (நூல்:அஹ்மத்) 

ஹராம் இருந்தால் தர்மம் கூடாது.

وقال صلى الله عليه وسلم: " من أصاب مالاً من مأثم فوصل به رحماً أو تصدق به أو أنفقه في سبيل الله جمع الله ذلك جميعاً ثم قذفه في النار

ஒருவர் ஹராமான வழியில் சம்பாதித்த பொருளைக்கொண்டு இரத்த உறவுகளுக்கு செலவு செய்தால், அல்லது யாரேனும் ஒருவருக்கு தர்மம் செய்தால், அல்லது அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தால் நாளை மறுமையில் அனைத்தையும் ஒன்று சேர்ப்பான். பின்னர் நரகில் வீசி விடுவான் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

وقال صلى الله عليه وسلم: من اكتسب مالاً من حرام فإن تصدق به لم يقبل منه

ஒருவர் ஹராமான வழியில் சம்பாதித்த பொருளைக்கொண்டு தர்மம் செய்தால் அத்தர்மம் ஏற்றுக்கொள்ளப்படாது. என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

عن النبي صلى الله عليه وسلم قال 

  يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه 

أمن الحلال أم من الحرام

».

ஒரு காலம் வரும் தான் எதிலிருந்து வருமானத்தைப் பெறுகின்றானோ அதன் வழி ஹலாலா? ஹராமா? என்பதை மனிதன் ஒரு போதும் பொருட்படுத்த மாட்டான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி)

في حديث كعب بن عجرة قال «مر النبي علي رجل، فرأي أصحاب رسول الله من جلده ونشاطه، فقالوا: يا رسول الله، لو كان هذا في سبيل الله! فقال رسول الله: «إن كان خرج يسعي علي ولده صغارا، فهو في سبيل الله، وإن كان خرج يسعي علي أبوين شيخين كبيرين، فهو في سبيل الله، وإن كان خرج علي نفسه يعفها فهو في سبيل الله، وإن كان خرج يسعي رياء ومفاخرة؛ فهو في سبيل الشيطان

ஒரு மனிதரின் வலுவையும் சுறுசுறுப்பையும் கண்ட நபித்தோழர்கள் (நபியிடம்) அல்லாஹ்வின் தூதரே இவர் அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதில் ஈடுபட்டுக்கொண்டு) இருந்தால் நன்றாயிருக்கும் என்றார்கள். அதற்கு நபியவர்கள் இவர் தனது சிறு பிள்ளைகளுக்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். வயதான பெற்றோருக்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார்.தான் சுயமரியாதையுடன் வாழ்வதற்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். முகஸ்துதிக்காகவும் பெருமையடித்துக்கொள்வதற்காகவும் புறப்பட்டுச் சென்றால் அவர் ஷைத்தானின் பாதையில் தான் இருப்பார்; என்று கூறினார்கள்;.
நூல் தப்ரானி: 15619.


رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ () لِيَجْزِيَهُمُ اللَّهُ أَحْسَنَ مَا عَمِلُوا وَيَزِيدَهُمْ مِنْ فَضْلِهِ وَاللَّهُ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ ()

இன்னும் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் எத்தகையோர் எனில், இறைவனை நினைவு கூருவதை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவது மற்றும் ஜகாத் கொடுப்பதை விட்டும், வியாபாரமும், கொள்வினை, கொடுப்பினையும் அவர்களைப் பாராமுகமாக்கி விடுவதில்லை; இதயங்கள் நிலைகுலைந்து, பார்வைகள் நிலைகுத்தி விடக்கூடிய ஒரு நாள் குறித்து அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் ஏன் இப்படிச் செய்கின்றார்கள் என்றால் அவர்கள் செய்த மிக அழகிய  செயல்களுக்குரிய கூலியை அல்லாஹ் அவர்களுக்கு அருள்வதற்காகவும், அவனுடைய அருளால் இன்னும் அதிகமாக அவர்களுக்கு வழங்குவதற்காகவும் தான்!”                                                   ( அல்குர்ஆன்: 24: 37, 38 )

மாநபி {ஸல்} அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களின் நடை முறையை இந்த வசனம் குறிப்பிடுகின்றது. நபித்தோழர்களை பொருத்தமட்டில் தொழுகைக்கான அழைப்பு காதில் விழுந்து விட்டால் அவர்கள் கடைவீதியில் எந்த நிலையில் நின்றிருந்தாலும் அப்படியே போட்டு விட்டு பள்ளிக்கு விரைந்து சென்று விடுவார்கள்.                                      ( நூல்: தஃப்ஸீர் அல் மள்ஹரீ )

சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட நபித்தோழர்களில் அபூபக்ர், உமர், உஸ்மான், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், தல்ஹா, ஜுபைர் இப்னு அவ்வாம், ஸஅத் இப்னு அபீ வக்காஸ் ( ரலியல்லாஹு அன்ஹும் ) ஆகியோர் மாபெரும் வணிகர்கள் மற்றும் செல்வந்தர்கள்.

وقال أبو عمر: كان تاجرًا مجدودًا في التجارة، فكسب مالا كثيرًا وخلف ألف بعير وثلاثة آلاف شاة ومائة فرس ترعى بالبقيع، وكان يزرع بالجرف على عشرين ناضحًا

فكان يدخل من ذلك قوت أهله سنة.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் குறித்து வரும் செய்தி மிகவும் ஆச்சர்யமானது. ஒரு முறை அவர்களின் சரக்கு சந்தைக்கு சென்று திரும்பும் போது ஓராண்டு முழுவதுக்கும் அவர்களின் குடும்பம் சும்மா உட்கார்ந்து அனுபவிப்பதற்குத் தேவையான லாபங்களை ஈட்டுமாம்.

தல்ஹா (ரலி) அவர்கள் குறித்து சொல்லப்படும் போது எவராவது அவரிடம் உதவி கேட்கும் நோக்கத்தில் அவரைச் சந்திக்கச் சென்றால் அவர் கேட்கும் முன்பாக அவர் கேட்க நினைத்ததை விட அதிகளவிலான உதவிகளைச் செய்வார்களாம்.

 

وهذا خباب بن الأرت كان حدادًا، وعبد الله بن مسعود كان راعيًا، وسعد بن أبي وقاص كان يصنع النبال، والزبير بن العوام كان خياطًا،وسلمان الفارسي كان حلاقًا ومؤبرًا للنخل، وخبيرًا بفنون الحرب، والبراء بن عازب وزيد بن أرقم كانا تاجرين

இன்னும், நபித்தோழர்களில் கப்பாப் (ரலி)  அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஸல்மான் ஃபார்ஸி (ரலி) ஜைத் இப்னு அர்க்கம், பர்ராஉ இப்னு ஆஸிப் (ரலி) ஆகியோரும், அப்துல்லாஹ் இப்னு உமர், அபுத்தர்தா, அபூதல்ஹா, அபுத்தஹ்தாஹ், அபூஸுஃப்யான், முஆவியா, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், உம்முல் முஃமினீன் ஜைனப் பிந்த் ஜஹ்ஷ், ஜுலைபீப் (ரலி) அவர்களின் மனைவி (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும் பெரும் லாபம் ஈட்டும் வணிக நிறுவனங்களின் நிறுவனர்களாக இருந்துள்ளனர்.

இமாம்களில், அபூஹனீஃபா, அப்துல்லாஹ் இப்னு முபாரக், (ரஹ்-அலைஹிமா) ஆகியோரும் ஹதீஸ் மற்றும் தஃப்சீர் துறையில் சிறந்து விளங்கிய ஏராளமான அறிஞர் பெருமக்களும் வணிகத்தில் சிறந்து விளங்கினர்.

இப்படியாக, வணிகத்தில் சிறந்து விளங்கிய மேன்மக்களான நமது முன்னோர்கள் ஒவ்வொருவரும் தங்களின் மரணத்தின் போது விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பீடுகள் அவர்களின் மொத்த குடும்ப அங்கத்தினர்களும் தலைமுறைக்கும் சும்மா இருந்து அனுபவிக்கும் அளவுக்கு இருந்தது.

அவர்களின் வணிக வெற்றிக்கும், அபாரமான வளர்ச்சிக்கும் பின்புலனாக இருந்தது வணிகத்தில் பக்தி தான்.

அல்லாஹ்வைப் பற்றிய பயம், ஹலாம், ஹராம் பற்றிய விழிப்புணர்வு, நேர்மை, நாணயம், உண்மை, வாய்மை, நுகர்வோரை ஏமாற்றாமல் இருத்தல், பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்யாமல் இருத்தல், பதுக்கல் வியாபாரம் செய்யாமல் இருத்தல் போன்ற வியாபார பண்பாடுகளின் ஊற்று தான் இந்த பக்தி என்பது.

தூய்மையற்ற பொருளீட்டல் ரஹ்மானின் முன்பாக குற்றவாளியாக்கி விடும் என்பதையும், அதன் மூலம் பெற்ற பொருளாதரத்தில் இருந்து செலவழித்த செலவுகளும், தர்மம் போன்ற வழிபாடுகளும் ஏற்றுக் கொள்ளப்படாமல் போகும் என்பதையும், நரகில் வீசப்படும் வழிபாடுகளாக ஆகிவிடும் என்பதை உணர்வோம்!

எனவே, தூய்மையான வழியில் பொருளீட்டுவோம்! தூய்மையான வழியில் செலவளிப்போம்!