Wednesday, 26 March 2025

மஅஸ்ஸலாமா யா ரமழான்! என் வாழ்க்கையில் மீண்டும் நீ வர வேண்டும் யா ரமழான்!!!

 

மஅஸ்ஸலாமா யா ரமழான்!

என் வாழ்க்கையில் மீண்டும் நீ வர வேண்டும் யா ரமழான்!!!


ரமழானின் நிறைவுப் பகுதியில் ரமழானின் இறுதி ஜும்ஆவில் நாம் வீற்றிருக்கின்றோம்.

ரமழான் இன்னும் ஓரிரு நாட்களில் விடை பெற இருக்கிறது. ஆனால் நாம் விடை கொடுக்கும் மனோ நிலையில் இல்லை.

மாறாக, இனம் புரியாத ஒரு  ஏக்கமும், பரிதவிப்பும், மனதளவில் பெரும் பாரமாகவும் இருக்கின்றது.

இந்த ரமழான் நமக்கு எவ்வளவு நன்மையானதாக இருந்தது. இந்த ரமழான் நமக்கு இறையருளைக் கேட்டுப் பெறும் பாக்கியத்தை தந்தது.

இந்த ரமழான் நமக்கு இறைவனின் மன்னிப்பை பெறும் அனுகூலத்தை உருவாக்கித் தந்தது.

இந்த ரமழான் நமக்கு நரக விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை தந்தது.

இந்த ரமழான் நமக்கு சொர்க்கத்தின் இன்பத்தை அனுபவிக்கும் ஆசையைத் தந்தது.

இந்த ரமழான் இறையச்சமுள்ள வாழ்க்கையை வாழ வழிகாட்டியுள்ளது.

இந்த ரமழான் அமலில் ஒரு உயிர்ப்பைத் தந்துள்ளது.

இந்த ரமழான் லைலத்துல் கத்ரை அடைந்து மேலான ரப்பின் நெருக்கத்தை பெற்றிடுவோம் என்ற உத்வேகத்தை தந்தது.

இத்தனையும் தந்து நம்மை மகிழ்வித்த ரமழான் தான் நம்மை விட்டு பிரிந்து செல்ல,  விடை கொடுக்க தயாராகி வருகிறது.

இந்த ரமழானை என் வாழ்நாளின் கடைசி ரமழானாக ஆக்கி விடாதே யாஅல்லாஹ்!

இன்னும் ஏராளமான ரமழானை என் வாழ்க்கையில் சந்தித்து என் அகமும் புறமும் சீரடைந்து, என் உலக வாழ்வும், மறுமை வாழ்வும் சிறப்புற்று விளங்கிட காரணமாக ஆக்கிவை யாஅல்லாஹ்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! மீதமிருக்கும் ரமழானின் நாட்களை இந்த துஆவால் அலங்கரிப்போம்!

விடை பெறக் காத்திருக்கும் இந்த ரமழானின் ஊடாக நாம் ஐந்து சிந்தனைகளை பாடமாக, படிப்பினையாக பெற வேண்டிய கடமையும் கடப்பாடும் நமக்கு இருக்கிறது.

1. அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியுமா? ரமழான் விடை பெறுவதை...

நமக்கு நன்மை பயக்கும் ஒன்று நம்மை விட்டு விடை பெறுகிறது என்றால், அல்லது நாம் அதற்கு விடை கொடுக்கின்றோம் என்றால் அதற்காக நாம் கவலையை வெளிப்படுத்த வேண்டும்.

عن عبد الله بن عباسٍ رضي الله عنهما أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم لمكة: «ما أطيبكِ من بلد، وأحبَّكِ إليَّ! ولولا أن قومي أخرجوني منكِ ما سكنتُ غيركِ»

நபி {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தின் போது மக்கா நகரை நோக்கி மக்காவே நீ உலகிலேயே எனக்கு மிகவும் விருப்பமான பூமி. அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமான தேசம். என் சமூகம் என்னை விரட்டியிருக்காவிட்டால் நான் உன்னை விட்டுச் சென்றிருக்க மாட்டேன் என்று கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அபூயஃலா ).

மாநபி {ஸல்} அவர்களின் சோதனை நிறைந்த மக்கா வாழ்வில் மாநபி {ஸல்} அவர்களுக்கு மனதிற்கு ஆறுதலையும், அமைதியையும் தந்த ஆலயம் அது.

عن أنسٍ رَضِيَ اللهُ عنه، أنَّ فاطِمةَ رَضِيَ اللهُ عنها قالتْ حينَ قُبِضَ رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ:
فَلَمَّا دُفِنَ، قالَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلَامُ: يا أنَسُ، أطَابَتْ أنْفُسُكُمْ أنْ تَحْثُوا علَى رَسولِ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ التُّرَابَ؟!

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்து விட்டு நபித்தோழர்களாகிய நாங்கள் வந்த போது என்னிடம் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மேனியில் மண்ணை போடுவதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது?" என்று கேட்டார்கள். ( நூல்: இப்னுமாஜா )

அகிலத்தின் அருட்கொடை அல்லவா? நமது நபி (ஸல்) அவர்கள். நம்மின் மீது பொழியப்பட்ட பேருபகாரம் அல்லவா? மாநபி ஸல் அவர்கள். நம்முடைய உயிரையும் விட மேலானவர்கள் அல்லவா? நமது நபி (ஸல்) அவர்கள்.

ஆகையால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரிவை அவர்களின் அருகில் இருந்து கண்டு களித்த அந்த மேனாள் சமூகத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

عن أنس رضي الله عنه قال: قال أبو بكر رضي الله عنه بعد وفاة رسول الله صلى الله عليه وسلم لعمر: انطلق بنا إلى أم أيمن نزورها كما كان رسول الله صلى الله عليه وسلم يزورها فلما انتهينا إليها بكت فقالا لها: ما يبكيك؟ ما عند الله خير لرسوله صلى الله عليه وسلم فقالت: ما أبكي أن لا أكون أعلم أن ما عند الله خير لرسوله صلى الله عليه وسلم ولكن أبكي أن الوحي قد انقطع من السماء فهيجتهما على البكاء فجعلا يبكيان معها.

உம்மு ஐமன் (ரலி) அவர்கள் அண்ணல் நபியின் மரணத்தால் கடும் துயரத்திற்கு ஆளானார்கள். மனம் நொந்து அழுது அழுது கடுமையான பலவீனம் ஏற்பட்ட பிறகும் அவர்களின் அழுகை நிற்கவே இல்லை! இதனைக் கேள்விப்பட்டதும் அபூபக்கர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வந்து உம்மு ஐமனைத் தேற்றினார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் இவ்வாறு கூறினார்கள். ஏன் இவ்வளவு தூரம் கவலைப்படுகின்றீர்கள்! நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடத்தில் மிகச் சிறந்த சன்மானங்கள் உள்ளன.அதற்கு உம்மு ஐமன் (ரலி) அவர்கள் இதுதான் எனக்குத் தெரியுமே! நான் அழுது கொண்டிருப்பது இறைச் செய்தியின் வருகை (வஹீ) நின்று விட்டதே என்பதற்காகத்தான்!என்று பதில் அளித்தார்கள். இதனைக் கேட்டதும் அவர்கள் இருவரின் நெஞசமும் இளகியது. அவர்களும் அழலாயினர். ( நூல்: முஸ்லிம் ).

ஆனால் தபகாத் இப்னு சஃத் எனும் நூலில் இவ்வாறு உள்ளது:- மக்கள் உம்மு ஐமன் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறி மரணம் ஏற்படுவது இயற்கையே எனப் புரியவைத்தபோது, ‘இறைவனின் விதிப்படி நபியவர்கள் மரணம் அடைந்தது குறித்து எனக்குத் தெரியும்! இறைச் செய்தியின் வருகை தடைப்பட்டு விட்டதே என்பதற்காகத் தான் நான் அழுகின்றேன்என்று பதில் அளித்தார்கள்.

இப்படித்தான் நமக்கான ஒரு அருட்கொடை, ஒரு பாக்கியம் நம்மை விட்டும் விடை பெறுகிறது என்றால், நம்மை விட்டும் பிரிகிறது என்றால் நமது நபி ஸல் அவர்களைப் போலவே, நமது நபி ஸல் அவர்களின் தோழர்களைப் போலவே நாமும் கவலைப்பட வேண்டும்.

2. தப்பிப்போன அமலுக்காக அழுவதும், கவலை கொள்வதும்....

ரமழானில் ஏதேனும் காரணங்களால் நோன்பு நோற்க முடியாமலோ அல்லது நன்மையான காரியங்களை செய்ய முடியாமலோ அல்லது இரவு வணக்கங்களில் ஈடுபட முடியாமலோ போயிருந்தால் தப்பிப்போன அந்த அமலுக்காக நாம் வருந்துவதும் அதற்காக அல்லாஹ்விடம் அழுது மன்றாடுவதும் விரும்பத்தக்க அம்சமாகும்.

عن أبي موسى الأشعري رضي الله عنه، قال: أرسلني أصحابي إلى رسول الله صلى الله عليه وسلم أسألهُ الحُملان لهم، إذ هم معه في جيش العسرة، وهي: غزوة تبوك، فقلت: يا نبي الله، إن أصحابي أرسلوني إليك لتحملهم، فقال: (والله لا أحملكم علي شيء) و وافقته وهو غضبان ولا أشعر، ورجعتُ حزينًا من منع النبي صلى الله عليه وسلم، ومن مخافة أن يكون النبي صلى الله عليه وسلم وجد في نفسه عليَّ.[أخرجه البخاري]

அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: தபூக் யுத்தத்திற்கான ஆயத்தப்பணிகளில் நபி ஸல் அவர்களும் நபித்தோழர்களும் ஈடுபட்டிருந்த தருணம் அது.

அந்த நேரத்தில் என்னுடைய நண்பர்கள் சிலர் போரில் பங்கு பெற ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால், தபூக் வரை வருவதற்கு அவர்களிடம் வாகனம் ஏதும் இல்லை. ஆகவே அவர்கள் என்னிடம் வந்து "நபி ஸல் அவர்களிடம் என்னை சிபாரிசு செய்யுமாறு வேண்டிக் கொண்டார்கள்.

அவர்களும் போரில் கலந்து கொள்ளும் பொருட்டு அவர்களுக்காக நபி ஸல் அவர்களை வாகனம் ஏற்பாடு செய்து தர சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களின் ஆசைக்கிணங்க நானும் அவர்களின் விஷயமாக நபி ஸல் அவர்களிடம் பேசினேன். அப்போது நபி ஸல் அவர்கள் "அவர்களுக்காக வாகனம் எல்லாம் ஏற்பாடு செய்து தரும் அளவுக்கு என்னிடம் வாகனம் ஏதும் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக!  அவர்களுக்காக வாகனம் எல்லாம் ஏற்பாடு செய்து தர முடியாது" என்று கூறினார்கள்.

நபி ஸல் அவர்கள் கோபமாக இருந்தது தெரியாமல் அந்த நேரத்தில் போய் நான் கேட்டு விட்டேன். நபி ஸல் அவர்களின் கோபத்திற்கு ஆளாகி விட்டோமே?! என்று நான் மிகவும் கவலையடைந்தேன். என் மீது மேலும் கோபமாகி என்னை வர வேண்டாம் என்று தடுத்து விடுவார்களோ" என்ற பயம் எனக்கு தொற்றிக் கொண்டது.

لقد حزن رضي الله عنه لأن رسول الله صلى الله عليه وسلم، لم يكن عنده ما يحملهم عليه. قال الله عز وجل

 (وَلا عَلَى الَّذينَ إِذا ما أَتَوكَ لِتَحمِلَهُم قُلتَ لا أَجِدُ ما أَحمِلُكُم عَلَيهِ تَوَلَّوا وَأَعيُنُهُم تَفيضُ مِنَ الدَّمعِ حَزَنًا أَلّا يَجِدوا ما يُنفِقونَ)

 التوبة:92]قال الإمام القاسمي رحمه الله: دلت الآية على جواز البكاء وإظهار الحزن على فوات الطاعة، وإن كان معذورًا،

நிலைமை இப்படி இருக்கும் போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
(
போருக்குச் செல்ல) அவர்களுக்கு நீர் வாகனம் அளிப்பதற்காக - (அதனைக் கேட்டு) உம்மிடம் வந்த நேரத்தில், "எதன் மீது உங்களை நான் ஏற்றிச் செல்வேனோ, அத்தகைய (வாகனத்)தை நான் பெற்றுக்கொள்ளவில்லையே!" என்று நீர் கூறினீர்; (அப்போது போருக்காக) அவர்கள் செலவு செய்கின்றவற்றைப் பெற்றுக் கொள்ளவில்லையே என்ற துக்கத்தால் தம் கண்கள் கண்ணீர் வடித்தவாறு திரும்பிச் சென்றுவிட்டார்களே, அவர்கள்மீதும் (போருக்குச் செல்லாதது பற்றி) எவ்விதக் குற்றமும் இல்லை." என்ற இறை வசனத்தை இறக்கியருளினான்.

இந்த ஆயத்திற்கு விளக்கம் தரும் அல்லாமா காஸிமீ (ரஹ்) ஏதேனும் அனுமதிக்கப்பட்ட காரணம் ஒன்றிற்காக ஒரு அமலை செய்ய முடியாமல் போனதற்காக கவலைப்படுவதும், அதற்காக அழுகையை வெளிப்படுத்துவதற்கும் அனுமதி இருக்கிறது என்பதை இந்த ஆயத் உணர்த்துகிறது" என்கிறார்கள்.

3.  மன ஈடுபட்டுடன் தான் அமல் செய்தோமா? என சுய பரிசோதனை செய்ய வேண்டும்...

மன ஈடுபட்டுடன் தான் ரமழானில் நமது அமல்கள் இருந்தனவா? நமது ஸதக்காவில் ரியா - முகஸ்துதி இருந்ததா? நமது இரவு வழிபாட்டில் சோம்பேறித்தனமும், அசட்டையும் இருந்ததா? நம்முடைய நோன்பில் தக்வா - இறையச்சம் இருந்ததா? என ஒவ்வொருவரும் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

يقول ابن رجب رحمه الله: "من استغفر بلسانه وقلبه على المعصية معقود، وعزمه أن يرجع إليها بعد الشهر ويعود، فصومه مردود وباب القبول عليه مسدود". وقد حذرنا القرآن عن هذا المسلك غير الرشيد وهذا المسلك غير السديد فقال سبحانه: {ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا}. وقال سبحانه: {ولا تبطلوا أعمالكم}.

இப்னு ரஜப் ஹம்பலீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- ஒருவர் (ரமழானில்) அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினார். அவர் நாவு தான் மன்னித்து விடு இறைவா! மன்னித்து விடு இறைவா! என்று சொன்னதே தவிர. அவரின் உள்ளமோ சதா அந்த பாவத்தோடே தொடர்பில் இருக்கிறது. அவர் ரமழான் முடிந்ததும் மீண்டும் அந்த பாவமான காரியத்தை செய்ய உறுதியுடன் இருந்து, ரமழான் முடிந்ததும் அந்த பாவமான காரியத்தை செய்து விடுகிறார் எனில், அவரின் நோன்பு அவரிடமே திருப்பி தரப்படும். மக்பூலிய்யத்தின் அவரின் விஷயத்தில் அடைக்கப்பட்டு விடும்" என்று கூறி விட்டு அல்குர்ஆனின் இரண்டு வசனங்கள் நமக்கு இதை எச்சரிக்கை செய்கிறது என்று மேற்கோள் காட்டினார்கள்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَـكُمْ‏

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு (அல்லாஹ் சொன்ன மாதிரி) வழிப்படுங்கள்; இன்னும், இத்தூதருக்கும் (இறைத்தூதர் சொன்ன மாதிரி) கீழ்ப்படியுங்கள்; உங்கள் அமல்களைப் பாழாக்கிவிடாதீர்கள். ( அல்குர்ஆன்: 47: 33 )

وَلَا تَكُوْنُوْا كَالَّتِىْ نَقَضَتْ غَزْلَهَا مِنْۢ بَعْدِ قُوَّةٍ اَنْكَاثًا 

நீங்கள் உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டுதுண்டாக ஆக்கியவளைப் போல் ஆகிவிடாதீர்கள். ( அல்குர்ஆன்: 16: 92 )

4. "அப்துல்லாஹ்" வாக இருக்க ஆசைப்பட வேண்டும்...

இந்த உலகில் நாம் எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்திருக்கலாம். நம்மை பிறர் எப்படி வேண்டுமானாலும் பெயர் கூறி அழைக்கலாம். ஆனால், அல்லாஹ்வுக்கு ஒரு மனிதனிடம் மிகவும் பிடித்தது ஒரு மனிதனிடம் காணப்படும் "அப்திய்யத்" தான்.

அவன் நம்மை அவனது அப்தாக அடியானாக அங்கீகரிக்க வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டும். அவனை சந்திக்கும் அந்த நாளில் அப்துல்லாஹ் வாக, அல்லாஹ்வின் அடிமையாக, அடியானாக நாம் இருக்க ஆசைப்பட வேண்டும்.

மாநபி (ஸல்) அவர்களின் திருப்பெயரை அல்குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஹம்மது என்று மூன்று இடங்களிலும், அஹமது என்று ஒரு இடத்திலும் (மொத்தம் நான்கு இடங்களில்) கூறுகின்றான்.

ஆனால், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னை சந்திக்க விண்ணேற்றப் பயணம் அழைத்துச் சென்ற நிகழ்வைக் கூறும் போதும் சரி, அழைத்துச் சென்று அவன் உரையாடிய போதும் சரி அங்கே நபி ஸல் அவர்களைக் குறிப்பிடும் போது "அப்து" என்றே சொல்கின்றான்.

سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

தன்னுடைய அடியாரை ஓரிரவில் (கஃபாவாகிய) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவுப் பயணம் செய்வித்த ஒருவன் (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால், அதனைச் சுற்றியுள்ள பகுதியை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு நாம் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். ( அல்குர்ஆன்: 17: 1 )

فَاَوْحٰۤى اِلٰى عَبْدِهٖ مَاۤ اَوْحٰىؕ‏

அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார். ( அல்குர்ஆன்: 53: 10 )

950 ஆண்டு காலம் தூதுத்துவப் பணியை மேற்கொண்டு இந்த உலகில் ரிஸாலத் எனும் நபித்துவத்தின் கனத்தை மிகவும் உணர்ந்தவரான நபி நூஹ் (அலை) அவர்களிடம் காணப்பட்ட "அப்திய்யத்தை"க் கொண்டே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஆனந்தம் அடைகின்றான்.

ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ‌ؕ اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا‏

நாம் நூஹுடன் (கப்பலில்) ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் அடியாராகவும்,  நன்றி செலுத்தக் கூடியவராகவும்  இருந்தார். ( அல்குர்ஆன்: 17: 3 )

நபி ஜகரிய்யா (அலை) அவர்களின் வாழ்க்கையை நமக்கு அறிமுகம் செய்யும் இறைவன் "அப்த்" என்றே அறிமுகம் செய்கின்றான்.

ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَـبْدَهٗ زَكَرِيَّا

(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருளை நினைவு கூர்வதாகும். ( அல்குர்ஆன்: 19: 2 )

அப்திய்யத் என்பதன் இலக்கணமே வாழ்க்கையில் முற்றிலுமாக, முழுவதுமாக இறைக் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்வதோடு வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும், எல்லாக் காலங்களிலும் அவனை வணங்கி வழிபட்டு வாழ்வதிலே தான் இருக்கிறது.

இந்த உலகில் எல்லோராலும் புகழப்படுகிற புகழப்பட்டுக் கொண்டே இருக்கிற முஹம்மதும் அஹ்மதும் (ஸல்) ஆன அந்த நபியோ சதா வாழ்நாளில் எப்போதும் அல்லாஹ்வுக்கு அப்தாகவே இருக்க விரும்பினார்கள்.

 

قَامَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ حتَّى تَوَرَّمَتْ قَدَمَاهُ، فقِيلَ له: غَفَرَ اللَّهُ لكَ ما تَقَدَّمَ مِن ذَنْبِكَ وما تَأَخَّرَ، قالَ: أفلا أكُونُ عَبْدًا شَكُورًا.

ஏன்? இவ்வளவு சிரமப்பட்டு இரவு வணக்கங்களில் ஈடுபடுகின்றீர்கள்? என்ற அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வினாவிற்கு, "நான் நன்றியுள்ள அடியானாக ஆக வேண்டாமா?" என்று தழுதழுத்த குரலில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் அளித்த பதிலே நமக்கு போதுமானதாகும்.

ஜகரிய்யா (அலை) அவர்களும் அவர்களின் குடும்பத்தார்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்று கூறும் இறைவன் 

فَاسْتَجَبْنَا لَهٗ

 وَوَهَبْنَا لَهٗ يَحْيٰى وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ‌ اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا ‌ وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ‏

நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள்; இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள்; மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள். ( அல்குர்ஆன்: 21: 90 )

வணக்க வழிபாடுகள் என்பது வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்க வேண்டுமே தவிர வாழ்க்கையில் ஒரு பகுதியில் மாத்திரம் அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ரமழான் நிறைவு பெற்றதன் பின்னரும் நாம் நம்முடைய வணக்க வழிபாடுகளை, அமல்களைத் தொடர வேண்டும்.

அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான "அப்த்" ஆக "அப்துல்லாஹ்" வாக நாம் அவனை சந்திக்கும் நாளில் சென்றால் தான் அவனுக்கு முன்னால் அழைக்கப்படும் போது  நாம் ஸஜ்தா செய்த வண்ணம் இருக்க முடியும்.

தீனில் நிலைத்திருப்பதின் அம்சம் நாம் செய்யும் இபாதத்திலும் நிலைத்திருப்பது தான். இந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஏவியதையே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கும் ஏவி இருக்கின்றான்.

وَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ‌ۚ

எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக்கொண்டே இருப்பீராக! மேலும், நீர் கட்டளையிடப்பட்டதில் நிலைத்திருப்பீராக! ( அல்குர்ஆன்: 42: 13 )

فَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ

ஆகவே, (தூதரே!) நீர் ஏவப்பட்டவாறு (நேர் வழியில்) உறுதியாக இருப்பீராக! ( அல்குர்ஆன்: 11: 112 )

 

اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰه ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏

நிச்சயமாக எவர்கள்: "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக (நிலைத்து) நின்றார்களோ, அவர்கள் மீது வானவர்கள் இறங்கி "நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் படாதீர்கள்: நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறுவார்கள்).

نَحْنُ اَوْلِيٰٓـؤُکُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ وَلَـكُمْ فِيْهَا مَا تَشْتَهِىْۤ اَنْفُسُكُمْ وَلَـكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ 

"நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும், (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது; அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்." ( அல்குர்ஆன்: 41: 31 )

நாளை மறுமையில் இன்னாரின் மகன் இன்னாரே நீ சுவனம் புகுந்து கொள்! என்று சொல்வதில்லை. மாறாக, என் "அப்த்'களில்  அடியார்களில் ஒருவராக நீ இடம் பெற்று சுவனத்தில் நுழைந்து கொள்! என்று சொல்லி மகிழ்வுறுகின்றான்.

يٰۤاَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَٮِٕنَّةُ ارْجِعِىْۤ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً‌

فَادْخُلِىْ فِىْ عِبٰدِىۙ وَادْخُلِىْ جَنَّتِى

(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) "சாந்தியடைந்த ஆத்மாவே!" நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவனால்) திருப்தி கொள்ளப்பட்ட நிலையிலும் மீளுவாயாக! நீ என் அடியார்களில் சேர்ந்துகொள்வாயாக! மேலும், "நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக!"  (என்று இறைவன் கூறுவான்). ( அல்குர்ஆன்: 89: 27-30 )

5.  நிறைவு பெறுவது இபாதத் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நிறைவு பெறப் போவது ரமழான் மாத்திரமே! இபாதத் அல்ல என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه»، «من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه» ـ «من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه»..

ரமழான் மாதத்தில் நாம் நோன்பு நோற்றோம், ரமழான் மாதத்தில் நாம் இரவு வணக்கத்தில் ஈடுபட்டோம், ரமழான் மாதத்தில் நாம் லைலத்துல் கத்ரை தேடினோம். 

எதற்காக? அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் மீது கடமையாக்கிய கட்டளையை நிறைவேற்றுவதற்காக! மாநபி ஸல் அவர்கள் நமக்கு கட்டளை பிறப்பித்தார்கள் என்பதற்காக! நமக்கு இறைவன் புறத்திலிருந்து ஏராளமான தாராளமான நன்மைகள் கிடைக்க வேண்டும், கருணையாளனான ரப்பிடமிருந்து கடந்து போன காலங்களில் நாம் செய்து விட்ட பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்காக!

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் நோன்புகளை ஏற்றுக் கொள்வானாக! நம் இரவு வணக்கங்களை ஒப்புக் கொள்வானாக! லைலத்துல் கத்ரை அடைந்தவர்களின் பட்டியலில் நம் அனைவரையும் சேர்த்தருள்வானாக! 

கடந்து போன காலங்களில் நாம் செய்து விட்ட பாவங்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது மன்னிப்பை வழங்கியருள்வானாக!

கடந்து போன காலங்களில் நாம் செய்து விட்ட பாவங்களுக்கு மன்னிப்பை வழங்கிய ரமழான் தான் நம்மை விட்டும் நிறைவு பெற்றுச் செல்கிறதே தவிர. அதைப் பெற்றுத் தர காரணமாக நோன்பு எனும் இபாதத் அல்ல.

இன்னும் நாம் நம் வாழ்வில் அடுத்தடுத்து ஷவ்வாலின் ஆறு நோன்பு, அரஃபா நோன்பு, ஆஷூரா நோன்பு, அய்யாமுல் ஃபீள் உடைய மாதத்தின் மூன்று நோன்புகள், திங்கள் வியாழன் என வாரத்தில் இரண்டு நோன்புகள் என ஸுன்னத்தான நோன்புகளை நோற்று அதன் நன்மைகளை அடைய ஆர்வமும் ஆசையும் கொள்வோம்.

இதே போன்று கடந்து போன காலங்களில் நாம் செய்து விட்ட பாவங்களுக்கு மன்னிப்பை வழங்கிய ரமழான் தான் நம்மை விட்டும் நிறைவு பெற்றுச் செல்கிறதே தவிர. அதைப் பெற்றுத் தர காரணமாக இரவு வணக்கம் எனும் இபாதத் அல்ல.

நம் வாழ்வில் அடுத்த ரமழான் வரை பதினோறு மாதங்களில் இன்னும் எத்தனையோ இரவுகள் இருக்கிறது. அந்த இரவுகளில் நின்று வணங்கி  அதன் நன்மைகளை அடைய ஆர்வமும் ஆசையும் கொள்வோம்.

கடந்து போன காலங்களில் நாம் செய்து விட்ட பாவங்களுக்கு மன்னிப்பை வழங்கிய ரமழானும், லைலத்துல் கத்ர் எனும் இரவும் தான் நம்மை விட்டும் நிறைவு பெற்றுச் செல்கிறதே தவிர. அதைப் பெற்றுத் தர காரணமாக புனித மிக்க இரவும், அதில் செய்யும் வணக்கம் எனும் இபாதத்தும் அல்ல.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் அருள்மறையில் சத்தியமிட்டுக் கூறும் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் புனித மிக்க  இரவுகள் இருக்கிறது. பாக்கியமான இரண்டு ஈதுப் பெருநாட்களின் இரவுகள் இருக்கிறது. மகத்தான மிஃராஜ் இரவு, பரக்கத்தான பராஅத் இரவு, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு என பல பாக்கியமான இரவுகளை வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்தி மகத்தான நன்மைகளைப் பெற்று மனிதப் புனிதர்களாக மாற சபதமேற்போம்.

எனவே, நம்மை விட்டு ஒரு மகத்தான மாதம் ரமழான் மாதம் மட்டுமே விடை பெற்றுச் செல்கிறது. இபாதத்தும், நன்மையும் அல்ல என்பதை புரிந்து நாம் பதினோரு மாதங்களையும் பாக்கியமாக கருதி இபாதத் செய்வோம்.

ஈதுப் பெருநாளையும், ஸதகத்துல் ஃபித்ரையும் மார்க்கம் கடமையாக்கி இருப்பதை நன்றாக ஊன்றிக் கவனித்துப் பாருங்கள்! என் அடியார்கள் முப்பது நாட்கள் நோன்பு நோற்று பலகீனமாகி இருப்பார்கள், இரவு வணக்கத்தில் ஈடுபட்டு களைத்துப் போய் இருப்பார்கள். தான தர்மங்கள் நன்மையான காரியங்களுக்கு செலவு செய்து தளர்ந்து போய் இருப்பார்கள் என்று அல்லாஹ் ஷவ்வால் முதல் நாளை கொண்டாட்ட நாளாகவா ஆக்கினான்?

நமது நபி (ஸல்) எனது உம்மத் போதுமான அளவிற்கு வணக்க வழிபாடுகள் செய்து விட்டார்கள். நல்லறங்களில் பொருளாதாரத்தை செலவழித்து விட்டார்கள். 

இறைவா! ரமழான் முடிந்த மறுநாளை அறுசுவை உணவுகளை உண்டு உழவும் நாளாக, புத்தாடைகளை உடுத்தி மகிழும் நாளாக, தனக்கும் தன் குடும்பத்தாருக்கு மட்டும் செலவழித்து குதூகலிக்கும் நாளாக்கித்தா! என்றா கேட்டார்கள்?

எனவே, அமல்கள் என்பது இந்த உலகம் நிறைவு பெறும் வரை நடந்து கொண்டே இருக்கும். எப்போது அமல்கள் நிற்கிறதோ அப்போது இந்த உலகின் இயக்கம் முடிந்து மறுமை வந்து விடும் என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

மாநபி (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறிய இரண்டு சூராக்களின் வசனங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُ  وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌  اِنَّهٗ كَانَ تَوَّابًا

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும். மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும்போதும், உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹ் (துதி) செய்வீராக! மேலும், அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக! நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக்கொள்பவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 110: 1-3 )

فَاِذَا فَرَغْتَ فَانْصَبْ وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ

எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) சிரத்தை எடுத்துக்கொள்வீராக! மேலும், (முழு மனத்துடன்) உம் இறைவன்பால் சார்ந்துவிடுவீராக! ( அல்குர்ஆன்: 94: 7-8 )

இந்த ரமழானை என் வாழ்நாளின் கடைசி ரமழானாக ஆக்கி விடாதே யாஅல்லாஹ்!

இன்னும் ஏராளமான ரமழானை என் வாழ்க்கையில் சந்தித்து என் அகமும் புறமும் சீரடைந்து, என் உலக வாழ்வும், மறுமை வாழ்வும் சிறப்புற்று விளங்கிட காரணமாக ஆக்கிவை யாஅல்லாஹ்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Tuesday, 25 March 2025

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 26. உணவு எனும் உன்னதமான அருட்கொடை!!!

 

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 26.

உணவு எனும் உன்னதமான அருட்கொடை!!!



25 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 26 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அபஸ அத்தியாயம் முதல் அஷ் ஷம்ஸ் வரையிலான 12 அத்தியாயங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அபஸ அத்தியாயத்தின் 24 -ஆம் வசனம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு வழங்கி இருக்கிற உன்னதமான ஒரு அருட்கொடையைப் பற்றி சிந்திக்குமாறு தூண்டுகிறது.

فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِه

எனவே, மனிதன் தன் உணவின் பக்கம் (அது எவ்வாறு பெறப்படுகிறது என்பதை) சிந்தித்துப் பார்க்கட்டும்!".

இவ்வுலகில் படைக்கப்பட்டிருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத ஒன்று உணவு. அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு வளங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முன்னதாகவே அனைத்து உயிரினங்களுக்காக இப்பூமியில் ஏற்படுத்தி வைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான். 

உயிரினங்களில் எந்த உயிரினமும் தமது உணவுகளை ஏற்பாடு செய்துகொண்டு பிறப்பதில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.

وَكَاَيِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ‌‌ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன். ( அல்குர்ஆன்: 29: 60 )

وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

இன்னும், எந்த உயிரினமும் - அவற்றின் உணவு அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்தேதவிர பூமியில் இல்லை; மேலும், அவை தங்கும் இடத்தையும் அவை அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான்; இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன. ( அல்குர்ஆன்: 11: 6 )

ஒரு நீல திமிங்கலம் சுமார் 120 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 3,600 கிலோ (8,000 பவுண்டுகள்) வரை கிரில் சாப்பிடுகிறது. ஒரு நீல திமிங்கலத்தின் வயிற்றை நிரப்ப 1,000 கிலோ (2,200 பவுண்டுகள்) உணவு தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சாம்பல் திமிங்கலங்கள் 130 முதல் 140 நாட்கள் உணவளிக்கும் காலத்தில் சுமார் 150,000 கிலோ (340,000 பவுண்ட்) உணவை உண்கின்றன - ஒரு நாளைக்கு சராசரியாக 1,089 கிலோ (2,400 பவுண்ட்) உணவு உட்கொள்ளப்படுகிறது. ஒரு சாம்பல் திமிங்கலத்தின் வயிற்றை நிரப்ப 300 கிலோ (660 பவுண்ட்) உணவு தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சாம்பல் திமிங்கலங்கள் உணவளிக்கும் பருவத்தில் அவற்றின் மொத்த உடல் எடையில் சுமார் 16% முதல் 30% வரை அதிகரிக்கும். ( நன்றி: https://seaworld.org/animals/all-about/baleen-whales/diet/ )

யானைகள் ஒரு நாளைக்கு சுமார் 12–18 மணி நேரம் புற்களை உண்பதிலும், மரப்பட்டைகள், வேர்கள், இலைகள் மற்றும் சிறிய தண்டுகளை மேய்வதிலும் செலவிடுகின்றன, ஒரு நாளைக்கு 150 முதல் 300 கிலோ வரை உணவை உட்கொள்கின்றன. ( நன்றி: https://www.worldanimalprotection.org.au/education/animal-facts/elephants/ )

ஏகத்துவத்தை ஏற்க மறுத்து இணை வைப்பாளர்களாக, இறை நிராகரிப்பாறர்களாக வாழ்ந்த மக்கா குறைஷிகள் கூட  தங்களுக்கு உணவு வழங்குவது அல்லாஹ்தான் என்பதை நன்கு விளங்கியிருந்தனர்.

قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ يَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَ مَنْ يُّخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَمَنْ يُّدَبِّرُ الْاَمْرَ‌ فَسَيَـقُوْلُوْنَ اللّٰهُ‌ فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ‏

உங்களுக்கு வானத்திலிருந்தும்,  பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்?  இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?”  என்று (நபியே!) நீர் கேட்பீராக!. உடனே அவர்கள் அல்லாஹ்எனப் பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக!" ( அல்குர்ஆன்: 10: 31)

அல்லாஹ் மனித சமூகத்தைப் படைத்து மனித சமூகம் இவ்வுலகில் இன்புற்று வாழ ஏராளமான அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான்.  அவன் வழங்கிய அருட்கொடைகளில் அடிப்படையானதும் மனிதன் உயிர் வாழ அவசியமானதுமான உணவையும் படைத்துள்ளான். 

அந்த உணவுகளையும் கூட பல்வேறு உணவு வகைகளாக பல சுவைகளில், பல்வேறு நிறங்களில், பல்வேறு பருவ காலங்களில் மனிதன் ருசித்து இன்புற தானியங்களையும், தாவரங்களையும், கனிகளையும் படைத்திருப்பாதாக கூறுகிறான்.

 

وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَيْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ ‌كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ‌ ‌ وَلَا تُسْرِفُوْا‌ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْن

படரவிடப்பட்ட, படரவிடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். ( அல்குர்ஆன்: 6: 141 )

 وَ فِى الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِيْلٌ صِنْوَانٌ وَّغَيْرُ صِنْوَانٍ يُّسْقٰى بِمَآءٍ وَّاحِد وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰى بَعْضٍ فِى الْاُكُلِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَ

பூமியில் அருகருகில் அமைந்த பல பகுதிகள் உள்ளன. திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும், கிளைகளுடையதும் கிளைகளே இல்லாததுமான பேரீச்சை மரங்களும் உள்ளன. ஒரே தண்ணீர் தான் அவற்றுக்குப் புகட்டப்படுகின்றது. (இவ்வாறு இருந்தும்) சுவையில் ஒன்றை விட மற்றொன்றைச் சிறந்ததாக்கியுள்ளோம். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. ( அல்குர்ஆன்: 13: 4 )

மனித சமுதாயத்தை படைத்த அல்லாஹ் மனிதன் ஒரே விதமான தாவர உணவை மட்டும் உண்ணாமல் இறைச்சியையும் உண்டு மகிழுவும் அதை செரிக்கும் விதமாக உடல் அமைப்பை கொண்டு மனிதனை படைத்துள்ளான்.

وَهُوَ الَّذِىْ سَخَّرَ الْبَحْرَ لِتَاْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْيَةً تَلْبَسُوْنَهَا‌ وَتَرَى الْـفُلْكَ مَوَاخِرَ فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர் ( அல்குர்ஆன்: 16: 14 )

وَالْاَنْعَامَ خَلَقَهَا‌ ۚ لَـكُمْ فِيْهَا دِفْ ٴٌ وَّمَنَافِعُ وَمِنْهَا تَاْكُلُوْنَ‏

கால்நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கதகதப்பு(ள்ள ஆடையணிகளும்) இன்னும், (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள். ( அல்குர்ஆன்: 16: 5 )

பசி, பட்டினி.....

பசியுடன் இருந்து உண்ண உணவின்றி வாடும் போது தான் உணவின் அருமை நமக்கு தெரியும்.

சுமார் 700 கோடி மக்கள் வாழும் இந்த பூமியில் எல்லா நிலைகளிலும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளோம். 

82 கோடி மக்களுக்கும் மேலானோர் போதிய உணவில்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

பல நாடுகளில் பட்டினி என்பதே தலையாய பிரச்சனையாக உள்ளது. 280 கோடி மக்களால் சத்தான உணவுகளை வாங்க முடியவில்லை என்கிறது 2024 ம் ஆண்டில் ஐநாவால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரம். ( நன்றி: மாலைமலர், 16/10/2024 )

உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவை வீணடித்தல்...

உலகளவில் அதிகளவு உணவு உற்பத்தி செய்யப்படுகிறது, ஆனால் அதில் மூன்றில் ஒரு பங்கு - 1.3 பில்லியன் டன் - வீணாக்கப்படுகிறது. ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) கூற்றுப்படி , வீணாக்கப்படும் உணவு 1.26 பில்லியன் மக்களுக்கு உணவளிக்க போதுமானது: இது உலகம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.

உலகின் பல பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை ஒரு பெரிய சவாலாக உள்ளது, குறிப்பாக வளரும் நாடுகளில். 2020-ல், 12% உலக மக்கள் தொகைக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை, இது 928 மில்லியன் மக்களைப் பிரதிபலிக்கிறது. ( நன்றி: wfpusa.org )

உலகளாவிய அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் 947 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உணவு தூக்கி எறியப்படுகிறது.

கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோருக்குக் கிடைக்கும் உணவுகளில் 17% நேரடியாக குப்பை தொட்டிக்குச் செல்கிறது என்பதை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் வீணாகும் உணவுகள் பற்றிய குறியீடு வெளிப்படுத்தியது. அதில் 60% வீட்டில் நிகழ்கிறது.

ராப் அமைப்பைச்சேர்ந்த ரிச்சர்ட் ஸ்வன்னெல் "ஒவ்வொரு ஆண்டும் வீணாகும் 947 மில்லியன் டன் உணவு, 40 டன் சரக்கை ஏற்றக்கூடிய 23 மில்லியன் ட்ரக்குகளை நிரப்பும். அதாவது இந்த ட்ரக்குகளை ஒன்றுக்கொன்று தொடும்படி நிறுத்தினால், அது பூமியை ஏழு முறை வட்டமிட போதுமானது." பிபிசி ந்யூஸிடம் தெரிவித்தார். ( நன்றி: பிபிசி தமிழ், 14/03/2021 earth.org 2023 )

உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் 5-ல் 1 பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் 63 கோடி டன், உணவகங்களில் 29 கோடி டன், சில்லறை கடைகளில் 13 கோடி டன் என உலக அளவில் 105 கோடி டன் உணவு விரயம் செய்யப்படுகிறது. வீடுகளில் ஒரு நாளைக்கு 100 கோடி உணவுகள் வீணாக்கப்படுகின்றன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதன்படி, உலக அளவில் வீடுகளில் ஒரு நாள் வீணாகும் உணவைக் கொண்டு 100 கோடி மக்களின் பசியைத் தீர்க்க முடியும். ( நன்றி: தமிழ் திசை இந்து, 30/03/2024 )

நபி ஸல் அவர்களின் பிரதானமான துஆக்களில் ஒன்றாக பின் வரும் துஆவும் இருந்தது.

عن أبي هريرة-رضي الله عنه مرفوعاً: «اللهم إني أعوذ بك من الجوع، فإنه بِئْسَ الضَّجِيعُ،

"யாஅல்லாஹ்! உன்னிடம் பசியின் கொடுமையில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன். ஏனெனில், அது உறக்கத்தை பாழாக்கி விடுகிறது" என்று.

பசியால் சோதிக்கப்பட்ட ஈஸா (அலை) அவர்களின் சமூகம் பசியுடன் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஈஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ்விடம் இருந்து உணவுத் தட்டை பெற்றுத் தருமாறு வேண்டி நின்றனர்.

மேலும், தங்களுக்கு ஏன் உணவு தேவைப்படுகிறது? என்பதற்கான காரணத்தையும் அந்த சமூகம் முன் மொழிந்ததை அல்குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான்.

اِذْ قَالَ الْحَـوَارِيُّوْنَ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيْعُ رَبُّكَ اَنْ يُّنَزِّلَ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ‌ قَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ

"மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக, உணவு மரவையை (ஆகாரத்தட்டை) இறக்கிவைக்க முடியுமா?" என்று சீடர்கள் கேட்டபோது அவர், "நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.

قَالُوْا نُرِيْدُ اَنْ نَّاْكُلَ مِنْهَا وَتَطْمَٮِٕنَّ قُلُوْبُنَا وَنَـعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَـنَا وَنَكُوْنَ عَلَيْهَا مِنَ الشّٰهِدِيْنَ‏

அதற்கவர்கள், "நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்துகொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக்கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்" என்று கூறினார்கள்.

قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَـنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنْكَ‌ۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ‏

மர்யமுடைய மகன் ஈஸா, "அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! வானத்திலிருந்து எங்கள்மீது ஓர் உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களுக்குப்பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும், எங்களுக்கு உணவளிப்பாயாக! நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்!" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

قَالَ اللّٰهُ اِنِّىْ مُنَزِّلُهَا عَلَيْكُمْ‌ۚ فَمَنْ يَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّىْۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ

 

அதற்கு அல்லாஹ், "நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், அகிலத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்" என்று கூறினான். ( அல்குர்ஆன்: 5: 112 - 115 )

திண்ணைத் தோழர்களின் வறுமையும்... பசியும்....

عن أبي هريرة رضي الله عنه قال: لَقَد رَأَيت سبعين من أهل الصُّفَّةِ، مَا مِنهُم رَجُل عَلَيه رِدَاء، إِمَّا إِزَار، وإِمَّا كِسَاء، قد رَبَطوا في أعناقِهم، فمنها ما يبلغُ نصف الساقين، ومنها ما يبلغ الكعبين، فَيَجْمَعُهُ بيده كَرَاهِيَةَ أن تُرى عورَتُه.  

[صحيح] - [رواه البخاري]

நபித் தோழர் அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள்:- " நான் எழுபது அஹ்லுஸ் ஸுப்பாக்களை-திண்ணைத் தோழர்களைப் பார்த்தேன்.அவர்களில் எவரிடமும் தங்களின் மேல் பாகத்தை மறைக்கும் துணி எதுவும் இருக்கவில்லை.அவர்களிடம் ஒரு கைலி அல்லது ஒரு போர்வை மாத்திரமே இருந்தது.அதனை அவர்கள் கழுத்தில் சேர்த்துக் கட்டியிருந்தனர். அதில் சிலது பாதிக் கெண்டைக் காலையும்,இன்னும் சிலது கரண்டைக் காலையும் எட்டியிருந்தது. எனவே தங்களின் அவ்ரத் தெரிந்து விடுமோ என்பதை விரும்பாத அவர்கள் அதனைத் தம் கைகளால் கூட்டிப் பிடித்துக் கொண்டனர்". என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி )

தொழுகைக்கு வருவோரிடம் சொல்லி இவர்களை உணவுக்காக அழைத்துச் செல்லும் படி நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள். தாமும் அழைத்துச் செல்வார்கள்.

தர்மப்பொருள்கள் ஏதேனும் வந்தால், அதனை நபி(ஸல்) அவர்கள் சாப்பிடாமல், திண்ணைத் தோழர்களுக்கு அனுப்பி விடுவார்கள். அன்பளிப்பு ஏதேனும் வந்தால், அதைத் திண்ணைத் தோழர்களுடன் சேர்ந்து தாமும் சாப்பிடுவார்கள். 

நபி(ஸல்) அவர்கள் தமது பெரும்பாலான நேரங்களில் இவர்களுடன் அமர்ந்திருப்பது வழக்கம். அவர்களோடு அளவளாவுவார்கள். உணவு வீட்டிலிருந்தால் இவர்களை அழைத்து உணவு வழங்குவார்கள். நபித்தோழர்கள் இவர்களுள் ஒரிருவரை தம்மோடு வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவருந்தச் செய்வது உண்டு. பேரீச்சங் குலைகளைக் கொண்டு வந்து இவர்கள் வசிக்கும் திண்ணையில் இவர்களுக்காக சிலர் தொங்கவிடுவதும் உண்டு. ( நூல்: ஃபத்ஹுல் பாரீ )

பசியின் வலி...

أَخبَرنا أَبُو يَعْلَى، حَدثنا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، حَدثنا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَصَابَنِي جَهْدٌ شَدِيدٌ، فَلَقِيتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه، فَاسْتَقْرَأْتُهُ آيَةً مِنْ كِتَابِ اللهِ، فَدَخَلَ دَارَهُ وَفَتَحَهَا عَلَيَّ، قَالَ: فَمَشَيْتُ غَيْرَ بَعِيدٍ، فَخَرَرْتُ لِوَجْهِي مِنَ الْجَهْدِ، فَإِذَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَائِمٌ عَلَى رَأْسِي، فَقَالَ:"يَا أَبَا هُرَيْرَةَ"، قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ، قَالَ: فَأَخَذَ بِيَدِي فَأَقَامَنِي وَعَرَفَ الَّذِي بِي، فَانْطَلَقَ إِلَى رَحْلِهِ، فَأَمَرَ لِي بِعُسٍّ مِنْ لَبَنٍ، فَشَرِبْتُ.

 

ثُمَّ قَالَ: "عُدْ يَا أَبَا هُرَيْرَةَ" فَعُدْتُ، فَشَرِبْتُ، ثُمَّ قَالَ:"عُدْ يَا أَبَا هُرَيْرَةَ" فَعُدْتُ، فَشَرِبْتُ حَتَّى اسْتَوَى بَطْنِي وَصَارَ كَالْقِدْحِ، قَالَ: وَرَأَيْتُ عُمَرَ فَذَكَرْتُ له الَّذِي كَانَ مِنْ أَمْرِي، وَقُلْتُ لَهُ: مَنْ كَانَ أَحَقَّ بِهِ مِنْكَ يَا عُمَرُ؟ وَاللهِ لَقَدِ اسْتَقْرَأْتُكَ الآيَةَ وَلأَنَا أَقْرَأُ لَهَا مِنْكَ، قَالَ عُمَرُ: وَاللهِ لأَنْ أَكُونَ أَدْخَلْتُكَ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي حُمْرُ النَّعَمِ. [7151]

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்:- ”எனக்கு (பசியினால்) கடும் சோர்வு ஏற்பட்டது. எனவே, நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதும்படி கேட்டேன். உடனே அவர்கள் தம் வீட்டினுள் நுழைந்து குர்ஆன் வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள்(அங்கிருந்து வெளியேறி) சற்று தூரம்தான் நான் நடந்திருப்பேன். அதற்குள் சோர்வினாலும் பசியினாலும் நான் முகம் குப்புற விழுந்துவிட்டேன். (மூர்ச்சை தெளிந்து பார்த்தபோது) என் தலைமாட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் (என்னை நோக்கி), ‘அபூ ஹுரைரா!என்று அழைத்தார்கள். நான், ‘இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன், இறைத்தூதர் அவர்களே; கட்டளையிடுங்கள்என்று பதிலளித்தேன். அவர்கள் என் கரத்தைப் பிடித்து என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். எனககு ஏற்பட்டிருந்த நிலையைப் புரிந்துகொண்டார்கள். என்னைத் தம்முடன் அழைத்துக்கொண்டு தம் இல்லம் சென்றார்கள். எனக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் பால் வழங்க உத்தரவிட்டார்கள். நான் அதிலிருந்து (பால்) அருந்தினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் இன்னும் அருந்துங்கள், அபூ ஹிர்!என்று கூறினார்கள். அவ்வாறே நான் மறுபடியும் அருந்தினேன். பிறகு மீண்டும் (அருந்துங்கள்)என்றார்கள். நான் வயிறு நிரம்பும் வரை மீண்டும் அருந்தினேன். எனவே, வயிறு (உப்பி) பாத்திரத்தை போன்றாகி விட்டது. பிறகு, நான் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் எனக்கு நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தேன். ‘(என் பசியைப் போக்கும் பொறுப்பினை) உங்களைவிட அதற்கு மிகவும் தகுதியுடையவரிடம் அல்லாஹ் ஒப்படைத்து விட்டான், உமரே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட நான் இறைவசனத்தை நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்துகொண்டே அதை எனக்கு ஓதிக் காட்டும்படி உங்களிடம் கேட்டேன்என்று சொன்னேன். உமர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (என் வீட்டிற்கு) அழைத்துச் சென்று (உங்களுக்கு உணவளித்து) இருந்தால், அதுவே எனக்கு (விலை உயர்ந்த) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட விருப்பமானதாய் இருந்திருக்கும்என்று கூறினார்கள். ( நூல்: புகாரி ) 

 

عن أنس بن مالك – رضي الله عنه – قال : قال أبو طلحة لأم سليم : لقد سمعت صوت رسول الله ضعيفاً أعرف فيه الجوع ، فهل عندك من شيء ؟ قالت : نعم ، فأخرجت أقراصاً من شعير ثم أخرجت خماراً لها فلفت الخبز ببعضه ، ثم دسته تحت يدي ولاثتني ببعضه ، ثم أرسلتني إلى رسول الله قال : فذهبت به فوجدت رسول الله في المسجد ومعه الناس ، فقمت عليهم ، فقال لي رسول الله

أرسلك أبو طلحة ؟” فقلت : نعم قال : ” بطعام ؟ ” قلت : نعم . فقال رسول الله لمن معه : ” قوموا ” فانطلق وانطلقت بين أيديهم حتى جئت أبا طلحة فأخبرته ، فقال أبو طلحة : يا أم سليم قد جاء رسول الله والناس وليس عندنا ما نطعمهم ، فقلت : الله ورسوله أعلم ، فانطلق أبو طلحة حتى لقي رسول الله فأقبل رسول الله وأبو طلحة معه ، فقال رسول الله: ” هلم يا أم سليم ، ما عندك ؟ ” فأتت بذلك الخبز ، فأمر به رسول الله فقُمت وعصرت أم سُليم عكة فآدمته ثم قال رسول الله فيه ماشاء الله أن يقول ، ثم قال : ” ائذن لعشرة ” فأكل القوم كلهم والقوم سبعون أو ثمانون . [حديث صحيح : اخرجه البخاري ].

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் அபூ தல்ஹா (ஸைத் அல்அன்சாரி(ரலி) தம் துணைவியார் உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம், ‘நான் நபி(ஸல்) அவர்களின் குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியை அறிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். எனவே, உம்மு சுலைம்(ரலி) வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து வந்தார்கள். பிறகு, உம்மு சுலைம் அவர்கள் தங்களின் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் ரொட்டியைச் சுருட்டி என்னுடைய கை (அக்குளு)க்குக் கீழே மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாக ஆக்கினார்கள். பிறகு என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன்னால் (போய்) நின்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னை அபூ தல்ஹா அனுப்பினாரா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்என்று சொன்னேன். உணவுடனா அனுப்பியுள்ளார்?’ என்று அவர்கள் கேட்க, நான் ஆம்என்றேன்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், ‘எழுந்திருங்கள்என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் வந்(து விவரத்தைத் தெரிவித்)தேன். உடனே அபூ தல்ஹா(ரலி) (என் தாயாரிடம்) உம்மு சுலைமே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு உணவளிக்க நம்மிடம் உணவு இல்லையே!என்று கூறினார்கள். (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி), ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா(ரலி) (தாமே நபி(ஸல்) அவர்களை முன்சென்று வரவேற்பதற்காகப்) போய் இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அபூ தல்ஹா அவர்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டுவா!என்று கூறினார்கள். உடனே உம்மு சுலைம் அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம்(ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைக் கூறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியுங்கள்என்று (அபூ தல்ஹாவிடம்) கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதியளித்தார்கள். அப்போது அவர்கள் (பத்துப் பேரும்) வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே) வர அனுமதி அளியுங்கள்என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா(ரலி) அனுமதியளிக்க, அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, ‘மேலும் பத்துப் பேருக்கு அனுமதியுங்கள்என்று கூற, அபூ தல்ஹாவும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். (அப்படி உண்ட) அந்த மக்கள் எண்பது பேர் ஆவர். ( நூல்: புகாரி )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு எவ்விதச் சிரமமும் இன்றி நாம் பசித்திருக்கும் போது உணவளித்து வரும் தயாளத்தன்மைக்காக சாப்பிட்டு முடித்ததும் மாநபி ஸல் அவர்களின் வழியில் அல்லாஹ்வுக்கு அழகிய நன்றியை செலுத்துவோம்!

 كانَ رسولُ اللَّهِ صلَّى اللَّه عليه وسلم إذا رفعتِ المائدةُ من بينِ يديْهِ يقولُ الحمدُ للَّهِ حمدًا كثيرًا طيِّبًا مبارَكًا فيهِ غيرَ مودَّعٍ ولاَ مستغني عنْهُ ربُّنا .

الراوي : أبو أمامة الباهلي  المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 3456 | خلاصة حكم المحدث : صحيح |

நபி ஸல் அவர்கள் ( சாப்பிட்டு முடித்த பின் ) தமது உணவு விரிப்பை எடுக்கும் போது " அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்த இன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா " என்று பிரார்த்திப்பார்கள்

பொருள் ( அதிகமான தூய்மையான வளமிக்க எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது இறைவா இப்புகழ் முற்றுப் பெறாதது கைவிடப்படக் கூடாதது தவிர்க்க முடியாதது ஆகும் ) என்று அபூ உமாமா ( ரலி) அறிவிக்கிறார்கள்

( நூல் : திர்மிதீ  )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் பசி பட்டினியில் இருந்தும், உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவுத் தேவையில் இருந்தும் பாதுகாப்பானாக! வாழும் காலமெல்லாம் தடையில்லாத ரிஜ்கைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!