Friday, 6 March 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 18. மனிதனே! நீ யார்?

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 18.

மனிதனே! நீ யார்?



17 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 18 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அஹ்ஸாப் அத்தியாயத்தின் 9 வசனங்கள் உட்பட ஸபஃ அத்தியாயம், அல் ஃபாத்திர் அத்தியாயம் மற்றும் யாஸீன், அஸ் ஸாஃப்ஃபாத் அத்தியாயங்கள் என 373 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

இன்றைய அமர்வில் நாம் தராவீஹ் சிந்தனையாக இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அஹ்ஸாப் அத்தியாயத்தின் 72 வது வசனத்தில் மனிதனைக் குறித்த அல்லாஹ்வின் விமர்சனத்தை பற்றி பார்க்க இருக்கிறோம்.

குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதனிடம் காணப்படும் ஒன்பது குணங்களை பட்டியலிடுகின்றான். அதில் இன்று ஓதப்பட்ட அஹ்ஸாப் அத்தியாயத்தின் 72 வது வசனத்தில் கூறப்படும் குணமும் ஒன்றாகும்.

1) பலகீனமானவனாக...

 وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفً

மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். ( அல் குர்ஆன்: 4: 28 )

2. பொறுமையின்மை உள்ளவனாக.

إِنَّ الْإِنسَانَ خُلِقَ هَلُوعًا

நிச்சயமாக மனிதன் பதற்றம் கொண்டவனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.

( அல் குர்ஆன்: 70: 19 )

3. அவசரக்காரனாக...

خُلِقَ الْإِنسَانُ مِنْ عَجَلٍ

மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்;( அல்குர்ஆன்: 21: 37 )

وَكَانَ الْإِنسَانُ عَجُولًا

மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 17: வசனம் 11)

4. அநியாயக்காரனாக..

إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ

நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 14: 34 )

5. நன்றிகெட்டவனாக…

وَكَانَ الْإِنسَانُ كَفُورًا

இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.

( அல்குர்ஆன்: 17: 67 )

إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ

நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். ( அல்குர்ஆன்: 22: 66 )

إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 100: 6 )

6. நிராகரிப்பாளனாக..

إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ مُّبِينٌ

நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 43: 15 )

7. கஞ்சனாக..

وَكَانَ الْإِنسَانُ قَتُورًا

மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்( அல்குர்ஆன்: 17: 100 )

8. சர்ச்சைக்குரியவனாக மற்றும் தர்க்கம் செய்பவனாக..

وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا

எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 18: 54 )

9. அறிவிலியாக..

إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا

நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 33: 72 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதன் குறித்து அடையாளப் படுத்தி கூறியிருக்கும் எந்தக் குணமும் அவ்வளவு நல்ல குணங்கள் அல்ல.

இந்தக் குணங்களில் எந்த குணத்தை கொண்டவனாகவும் ஒரு முஸ்லிம் இருந்து விடக் கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

1)   மனிதர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம் ஆனால், ஒரு முஸ்லிம் இறைநம்பிக்கையிலும், உடல் வலிமையிலும், மன உறுதியிலும் பலமானவனாக இருக்க வேண்டும்.

 

عن ابي هريرة قال: قال رسول اللَّهِ ﷺ:- الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا

وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- பலஹீனமான முஃமினை விட பலமான முஃமின் இறைவனுக்கு மிகவும் விருப்பமானவன். இருவரில் நன்மை உண்டு. அல்லாஹ்விடத்தில் உதவி தேடுங்கள் சோர்வடைய வேண்டாம் நீங்கள் ஆசை பட்டு அது கிடைக்காமல் மீறி நடந்தால் நான் இப்படி செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும் என்று கூறாதீர்கள். அல்லாஹ் நாடியதே நடக்கும்! 

(அது செய்திருந்தால் இது செய்திருந்தால் என்ற வார்த்தை) ஷைத்தானின் அமல்களை திறந்து விடும்" என்று நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லீம் )

ஈமானில் பலம்...

أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَ:- أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ، فَلَمَّا قَفَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَفَلَ مَعَهُ، فَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِالْعِضَاهِ ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ سَمُرَةٍ، وَعَلَّقَ بِهَا سَيْفَهُ، وَنِمْنَا نَوْمَةً، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُونَا، وَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ، فَقَالَ : ” إِنَّ هَذَا اخْتَرَطَ عَلَيَّ سَيْفِي وَأَنَا نَائِمٌ، فَاسْتَيْقَظْتُ وَهُوَ فِي يَدِهِ صَلْتًا ، فَقَالَ :مَنْ يَمْنَعُكَ مِنِّي ؟ فَقُلْتُ : اللَّهُ ” ثَلَاثًا. وَلَمْ يُعَاقِبْهُ وَجَلَسَ

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்கள்: நான் இறைத்தூதர் அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) இறைத்தூதர் அவர்கள் திரும்பியபோது நானும் அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள்மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, இறைத்தூதர் அவர்கள் (அங்கு) தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர் அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்; அப்போது தம் வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள். நாங்கள் ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது, இறைத்தூதர் அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம். அங்கே நபி அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது நபி அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது இவர் என்னுடைய வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார். அந்த வாள் உருவப்பட்டு இவரின் கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம், ‘என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?’ என்று கேட்டார். நான், ‘அல்லாஹ்என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்என்று கூறினார்கள். பிறகு அவரை நபி அவர்கள் தண்டிக்கவில்லை (மன்னித்துவிட்டுவிட்டார்கள்.) ( நூல்: புகாரி )

உடல் பலம்..

روى الشيخان عن عبدالله بن عمرو بن العاص رضي الله عنهما قال: كنت أصوم الدهر، وأقرأ القرآن كل ليلة، قال: فإمَّا ذُكِرت للنبي صلى الله عليه وسلم، وإمَّا أرسل إليَّ فأتيتُه، فقال لي: ((ألم أُخبر أنك تصوم الدهر، وتقرأ القرآن كل ليلة؟))، فقلت: بلى يا نبي الله، ولم أرد بذلك إلا الخير، قال: ((فإن بحسبك أن تصوم من كل شهر ثلاثة أيام))، قلت: يا نبي الله، إني أُطيق أفضل من ذلك، قال: ((فإن لزوجك عليك حقًّا، ولزَوْرِكَ عليك حقًّا، ولجسدك عليك حقًّا))، قال: ((فصم صوم داود نبي الله صلى الله عليه وسلم، فإنه كان أعْبَدَ الناس))، قال: قلت: يا نبي الله، وما صوم داود؟ قال: ((كان يصوم يومًا، ويفطر يومًا)) قال: ((واقرأ القرآن في كل شهر))، قال قلت: يا نبي الله، إني أُطيق أفضل من ذلك، قال: ((فاقرأه في كل عشرين))، قال قلت: يا نبي الله، إني أطيق أفضل من ذلك، قال: ((فاقرأه في كل عشر))، قال قلت: يا نبي الله، إني أطيق أفضل من ذلك، قال: ((فاقرأه في كل سبع، ولا تزد على ذلك؛ فإن لزوجك عليك حقًّا، ولزورك عليك حقًّا، ولجسدك عليك حقًّا))، قال: فشدَّدْتُ فشدَّدَ عليَّ، قال: وقال لي النبي صلى الله عليه وسلم: ((إنك لا تدري، لعلك يطول بك عمر))، قال: فصرت إلى الذي قال لي النبي صلى الله عليه وسلم، فلما كبِرت وَدِدْتُ أني كنت قبلت رخصةَ نبي الله صلى الله عليه وسلم؛ (البخاري، حديث: 1975 /مسلم حديث:1159).

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "நான் உயிரோடு வாழும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்பேன்; இரவெல்லாம் நின்று வழி படுவேன்" என்று நான் சொல்லிக் கொண்டிருந்த செய்தி அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (என்னிடம்), "நீர் இவ்வாறு கூறினீரா?" என்று கேட்டார்கள். "நான் அவ்வாறு கூறத்தான் செய்தேன், அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அதற்கு அவர்கள், "இது உம்மால் முடியாது; (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள் நோன்பை) விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) உறங்குவீராக! (சிறிது நேரம்) நின்று வழிபடுவீராக! மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள்வீராக! ஏனெனில், ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அதைப் போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள் உண்டு. (இதன்படி மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோன்பு நோற்பதற்குச் சமமாகும்.) இது வருடமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்" என்று சொன்னார்கள்.

நான், "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்யமுடியும்!" என்று கூறினேன். "(அப்படியானால்) ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுவீராக!" என்று அவர்கள் கூறினார்கள். நான், "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்ய முடியும், அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னேன். "(அப்படியானால்) ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவீராக! இதுதான் (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். நோன்புகளில் இதுவே நடுநிலையானதாகும்" என்று கூறினார்கள். "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்ய முடியும்" என்று நான் சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், "அதைவிடச் சிறந்தது எதுவுமில்லை" என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குறிப்பிட்ட மூன்று நாட்களை நான் ஏற்றுக் கொண்டிருப்பது, என் மனைவி மக்களையும் என் சொத்து பத்துக்களையும்விட எனக்கு மிகவும் விருப்பானதாகும் (என்பதை முதுமையடைந்துவிட்ட இந்நிலையில் உணர்கிறேன்). ( நூல்: புகாரி )

2)   மனிதர்கள் அவசரக்காரர்களாக இருக்கலாம் ஆனால் ஒரு முஸ்லிம் அப்படி இருக்கக்கூடாது.

وقال عليه الصلاة والسلام: (التأني من الله، والعجلة من الشيطان

நிதானம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உள்ளது. அவசரம் ஷைத்தானின் குணங்களில் இருந்தும் உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள்.

மனிதனை தாழ்வு படுத்துகிற எல்லா அம்சங்களும் அவசரத்தில் இருக்கிறது என்பதால் தான் பெருமானார் அவர்கள் அவசரம் சைத்தானின் குணம் என்றார்கள்.

وقال عمرو بن العاص: لا يزال المرء يجتني من ثمرة العجلة الندامة.

அவசரப்படுதலின் முடிவை கவலையாகவே மனிதர்கள் பெற்றுக் கொள்வார்கள் என அம்ரு பின் ஆஸ் ரலி கூறினார்கள்

அவசரத்திற்கான தீமையை பெருமானார் அவர்கள் இப்படியும் உணர்த்தினார்கள்.

يستجاب للعبد ما لم يستعجل

அவசரப் படாதவரை மக்களின் துஆ ஏற்கப்படும்.

இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய தகவல் அவசரம் என்பதன் பொருள் நேரம் வருதற்கு முன் அல்லது ஒரு காரியம் நிறைவடைவதற்கு முன் அதற்கு முந்துவதாகும். 

عن عمر بن عبد العزيز أن ابنه عبد الملك قال له: "ما لك لا تنفذ الأمور؟ فوالله ما أبالي لو أن القدور غلت بي وبك في الحق". قال له عمر: "لا تعجل يا بني، فإن الله ذم الخمر في القرآن مرتين، وحرمها في الثالثة، وإني أخاف أن أحمل الحق على الناس جملة، فيدفعوه جملة، ويكون من ذا فتنة".

உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் பெரும் அரசியல் குழப்பங்கள், ஊழல் மோசடிகள், பிரச்சினைகள் நிறைந்த சூழலிலேயே கலீபா பதவியை ஏற்றார்கள். எனினும் அப்பிரச்சினைகளையும் மோசடிகளையும் உடனடியாக முற்றுமுழுதாக மாற்றும் முயற்சியில் அல்லது தடுக்கும் செயல்பாட்டில் அவர் இறங்கவில்லை. படிப்படியாகவே அவற்றை ஒழித்தார்கள். ஒருமுறை உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களிடம் அவருடைய மகன் கேட்டார்: தந்தையே எதற்காக நீங்கள் தயங்குகின்றீர்கள்? பிரச்சினைகளை உடனடியாக முடிக்க வேண்டியதுதானே. உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் என்ன தயக்கம்?”. தந்தை கூறினார்: அருமை மகனே! நீ அவசரப்படுகின்றாய். மதுபானத்தை அல்லாஹ் இருமுறை இழிவுபடுத்தினான். பின்னர் மூன்றாம் முறையே அதனைத் தடை செய்தான். ஒரு விஷயம் உண்மையாகவே இருந்தாலும் மக்களின் மீது திணிப்பதை நான் பயப்படுகின்றேன். அவ்வாறு திணித்தால் மக்கள் ஒரேயடியாக மறுத்துவிடலாம் என்று நான் அஞ்சுகிறேன்”. ( நூல்: ஸீரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் லிஇமாமி இப்னு அப்துல் ஹிகம் ரஹ்)

3)   மனிதர்கள் அநியாயம் செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒரு முஸ்லிம் அநியாயம் செய்பவனாக இருக்க கூடாது.

يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا».

ஹதீஸே குதுஸி ஒன்றில் அல்லாஹ் கூறுகின்றான் ; என் அடியார்களே அநியாயம் செய்வதை என் மீது நான் தடை செய்து விட்டேன். உங்களிடையேயும் அதை நான் தடுத்திருக்கிறேன். எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதீர்கள். ( நூல்: முஸ்லிம் )

وعن ابن عمرَ رضي اللَّهُ عنهما: أَن رسولَ اللَّه ﷺ قَالَ: المسلمُ أَخو المسلم، لا يَظلِمُه، ولا يُسْلِمُهُ، ومَنْ كَانَ فِي حاجةِ أَخِيهِ كانَ اللَّهُ فِي حاجتِهِ، ومَنْ فَرَّجَ عَنْ مُسلمٍ كُرْبةً فَرَّجَ اللَّهُ عَنْهُ بها كُرْبةً مِنْ كُرَبِ يوم القيامةِ، وَمَنْ سَتَرَ مُسْلمًا سَتَرَهُ اللَّهُ يَومَ الْقِيامَةِ مُتَّفَقٌ عَلَيهِ

நபி அவர்கள் கூறினார்கள்:- ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமைநாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். அறிவிப்பவர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ( நூல்: முஸ்லிம் )

இஸ்லாம் அநியாயம் செய்வதை மூன்று வகையாக வகைப்படுத்துகிறது. 1,மனிதன் இறைவனுக்குச் செய்கின்ற அநியாயம். 2. ஒரு மனிதன் தனக்குத் தானே செய்து கொள்கின்ற அநியாயம். 3. ஒரு மனிதன் பிற மனிதர்களுக்கு செய்கின்ற அநியாயம்.

நபி அவர்கள் எவருக்கும் அநியாயம் செய்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள்.

عن عبدِ اللَّهِ بنِ مسعودٍ قالَ كُنَّا يومَ بدرٍ كلُّ ثلاثةٍ على بعيرٍ كانَ أبو لبابةَ وعليُّ بنُ أبي طالبٍ زميلَي رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وعلى آلِه وسلَّمَ قالَ وكانت عُقبَةُ رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وعلى آلِه وسلَّمَ قالَ فقالا نحنُ نمشي عنكَ قالَ ما أنتما بأقوى منِّي ولا أنا بأغنى عنِ الأجرِ منكما

நாங்கள் பத்ர் யுத்தத்தின் பயணத்தில் இருந்தோம். ஒட்டகங்கள் குறைவாக இருந்ததினால் மூன்று நபர்களுக்கு ஒரு ஒட்டகம் என்று நபி அவர்களால் எங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அதில் மூவரும் முறை வைத்து பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் அபூலுபாபா (ரலி), அலி (ரலி), நபி அவர்கள் ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் ஒதுக்கப்பட்டது.

இருவர் ஒட்டகத்தின் மீது அமர வேண்டும். ஒருவர் ஒட்டகத்தை வழிநடத்த வேண்டும். இது தான் முறை. ஆனால், அந்த இரு நபித்தோழர்களும் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஒட்டகத்தில் இருந்து இறங்க வேண்டாம். நீங்களே அதில் பயணித்து வாருங்கள்! நாங்கள் இருவரும் இறங்கிக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். அப்போது, நபி அவர்கள் நீங்கள் இருவரும் என்னை விட பலசாலிகளும் அல்ல. மேலும் நன்மையைப் பெறுவதில் நான் ஒன்றும் தேவையற்றவனும் அல்ல என்று கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மது )

4)   மனிதர்கள் நன்றி கெட்டவர்களாக இருக்கலாம் ஆனால் ஒரு முஸ்லிம் நன்றி கெட்டவனாக இருக்க கூடாது.

أحد السلف كان أقرع الرأس .. أبرص البدن .. أعمى العينين .. مشلول القدمين واليدين .. وكان يقول: ("الحمد لله الذي عافاني مما ابتلى به كثيراً ممن خلق، وفضلني تفضيلاً"). فمر به رجل فقال له: مما عافاك؟؟ أعمى وأبرص وأقرع ومشلول .. فمما عافاك؟ >فقال: ويحك يا رجل؛ جعل لي لساناً ذاكراً، وقلباً شاكراً، وبدناً على البلاء صابراً، اللهم ما أصبح بي من نعمه أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك، فلك الحمد ولك الشكر.

முன் வாழ்ந்து மறைந்த ஸலஃபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவர் வழுக்கைத் தலை உடையவராகவும், உடல் குஷ்டரோகமுடையவராகவும், இரு கண்கள் பார்வையற்றவராகவும், இரு பாதங்கள் மற்றும் இரு கைகளும் இயங்காதபடி சூம்பிப்போனவராகவும் இருந்தார். அவர், “படைத்த படைப்பினங்களில் அதிகமானோரைச் சோதித்ததை விட்டு என்னைப் பாதுகாத்துச் சுகமளித்ததோடு, என்னை நன்றாகவே சிறப்பித்திருக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!என்று கூறக்கூடியவராக இருந்தார்.

 

அப்போது, அவருக்குப் பக்கத்தில் சென்றுகொண்டிருந்த ஒருவர் அவரிடம்: எதைக்கொண்டு அல்லாஹ் உங்களுக்குப் பாதுகாப்பும் சுகமும் அளித்திருக்கின்றான்? நீங்கள் ஓர் குருடர்; குஷ்டரோகமுடையவர்; வழுக்கைத் தலையர்; இயங்காதபடி கைகளும் பாதங்களும் சூம்பிப்போனவர்; இப்படியிருக்க, எப்படி அல்லாஹ் உங்களுக்குப் பாதுகாப்பும் சுகமும் அளித்திருக்கின்றான்?” என்று கேட்டார். அதற்கு அவர், “மனிதரே! உமக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! பேசும் நாவையும், நன்றி செலுத்தும் உள்ளத்தையும், சோதனையைப் பொறுமையுடன் தாங்கிக்கொள்வதற்கான உடலையும் அல்லாஹ் எனக்குத் தந்திருக்கின்றானே!என்று கூறினார்.

5)   மனிதர்கள் தர்க்கம் செய்பவர்களாக இருப்பார்கள் ஆனால் ஒரு முஸ்லிம் தர்க்கம் செய்பவனாக இருக்க கூடாது.

أنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ طَرَقَهُ وفَاطِمَةَ بنْتَ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ لَيْلَةً، فَقالَ لهمْ: ألَا تُصَلُّونَ، قالَ عَلِيٌّ: فَقُلتُ: يا رَسولَ اللَّهِ، إنَّما أنْفُسُنَا بيَدِ اللَّهِ، فَإِذَا شَاءَ أنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ حِينَ قُلتُ ذلكَ، ولَمْ يَرْجِعْ إلَيَّ شيئًا، ثُمَّ سَمِعْتُهُ وهو مُدْبِرٌ يَضْرِبُ فَخِذَهُ ويقولُ: {وَكانَ الإنْسَانُ أكْثَرَ شيءٍ جَدَلًا} [الكهف: 54]. خلاصة حكم المحدث : [صحيح] الراوي : علي بن أبي طالب | المحدث : البخاري | المصدر : صحيح البخاري

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா (ரலி அவர்களிடமும் ஒரு (நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம் நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா? என்று கேட்டார்கள். நான். அல்லாஹ்வின் தூதரே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான் என்று சொன்னேன்.

நான் இப்படிச் சொன்னபோது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு நபி அவர்கள் திரும்பிச் சென்றபடி தமது தொடையில் தட்டிக்கொண்டே மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான் என்று சொல்லி கொண்டிருந்ததை நான் கேட்டேன். அறிவிப்பவர்: அலீ (ரலி) ( நூல்: புகாரி )

وقال البخاري: حدثنا يسرة بن صفوان اللخمي، حدثنا نافع بن عمر، عن ابن أبي مليكة، قال: كاد الخيران أن يهلكا، أبو بكر، وعمر رضي الله عنهما، رفعا أصواتهما عند النبي ﷺ حين قدم عليه ركب بني تميم، فأشار أحدهما بالأقرع بن حابس أخي بني مجاشع، وأشار الآخر برجل آخر، قال نافع: لا أحفظ اسمه، فقال أبو بكر لعمر رضي الله عنهما: ما أردت إلا خلافي، قال: ما أردت خلافك، فارتفعت أصواتهما في ذلك فأنزل الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ الآية، قال ابن الزبير رضي الله عنهما فما كان عمر يسمع رسول الله ﷺ بعد هذه الآية حتى يستفهمه، ولم يذكر ذلك عن أبيه يعني أبا بكر انفرد به دون مسلم

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அறிவித்தார்:- பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூபக்ர் (ரலி), ‘(இறைத்தூதர் அவர்களே!) கஅகாஉ இப்னு மஅபத் இப்னி ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்என்று கூறினார்கள். உமர் (ரலி), ‘இல்லை; அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்என்று கூறினார்கள். அபூபக்ர்(ரலி) (உமர் அவர்களிடம்), ‘நீங்கள் எனக்கு மாறுசெய்யவே விரும்புகிறீர்கள்என்று சொல்ல, உமர் (ரலி), ‘உங்களுக்கு மாறுசெய்வது என் நோக்கமல்லஎன்று பதிலளித்தார்கள். இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக்கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே, ‘இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முன்னர் (கருத்துக் கூற) முந்தாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்எனும் (திருக்குர்ஆன் 49:1) வசனம் அருளப்பட்டது. ( நூல்: புகாரி )

6)   மனிதர்கள் அறிவீனர்களாக இருக்கலாம் ஆனால் ஒரு முஸ்லிம் அறிவீனனாக இருக்க கூடாது.

قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ 

மூஸா கூறினார் அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் இருக்க அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்என்று கூறினார். ( அல்குர்ஆன்: 2: 67 )

وَإِلَّا تَصْرِفْ عَنِّى كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ ٱلْجَٰهِلِينَ﴿12:33﴾

(அதற்கு) யூசுஃப், "என் இறைவனே! இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்" என்று (பிரார்த்தித்தவராக) கூறினார். ( அல்குர்ஆன்: 12: 33 )

அறியாமையை அகற்றும் மார்க்கக் கல்வியைக் கற்பதற்காக ஒரு குழுவினர் தம்மை அர்ப்பணிப்பது அவசியம் என்ற கருத்து பின்வரும் குர்ஆன் வசனத்திலிருந்து தெரிய வருகிறது:

وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ

'விசுவாசிகள் அனைவருமே (மதீனாவிலிருந்து) யுத்தத்திற்காகச் செல்ல வேண்டியதில்லை. அவர்களது ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருசாரார் மார்க்கத்தில் ஆழமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வெளியேறிச் சென்றிருக்கக்கூடாதா? அவர்களது சமூகத்தவர்கள் (ஜிஹாதிலிருந்து) அவர்களிடம் திரும்பிவந்தவுடன் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக இவ்வாறு செய்திருக்கலாமல்லவா? (இதன் மூலம்) அவர்கள் (அந்த அவர்களது சமூகம்;) எச்சரிக்கையாக நடந்துகொள்ளலாம் '( அல்குர்ஆன்: 9: 122 )

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் "அறிவின்றி செயல்படுபவன் சீர்திருத்துவதை விட அதிகமாக சீர்குலைப்பான்" என்றார்கள்.

قال الإمام أحمد: ولولا العلم كان الناس كالبهائم، وقال أيضا: الناس أحوج إلى العلم منهم إلى الطعام والشراب؛ لأن الطعام والشراب يحتاج إليه في اليوم مرتين أو ثلاثا، وحاجته إلى العلم بعدد أنفاسه"، 

من كتاب أعلام الموقعين لابن القيم ج2 ص 182.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: மனிதர்கள் உணவு குடிபானத்தைவிட அறிவின் பால் அதிக தேவையுடையவர்கள். ஏனெனில், மனிதன் ஒரு நாளில் உணவு மற்றும் குடிபானம் போன்றவற்றில் ஒரு தடவை அல்லது இரு தடவைகள் தேவையுடையவனாக இருக்கின்றான். மாற்றமாக, அவன் அறிவின்பால் ஒரு நாளில் விடும் மூச்சுக்களின் அளவு தேவையுடையவனாக இருக்கின்றான்”. ( அல்-ஆதாபுஷ் ஷரீஆ)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا، يَنْتَزِعُهُ مِنَ الْعِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ، حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا، اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا، فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا ‏"‏‏. قَالَ الْفِرَبْرِيُّ حَدَّثَنَا عَبَّاسٌ قَالَ حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ هِشَامٍ نَحْوَهُ‏.‏

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ளமாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காதபோதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத்தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழிகெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கெடுப்பார்கள். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: புகாரி )

மனித சமுதாயமே! உன் நிலையைப்பற்றி இவ்வளவு தெளிவாக மாமறை கூறுகிறதே! உன் வாழ்கையை எப்படி அமைத்துக்கொள்ள போகிறாய்? என்ற இந்த கேள்வியை நம் மனக் கண் முன்னே கொண்டு வந்து, இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Thursday, 5 March 2026

ஜகாத் வரியல்ல.... அது ஓர் உயரிய இபாதத்!! ZAKAT: AN ACT OF WORSHIP, NOT A FINE & TAX

 

ஜகாத் வரியல்ல.... அது ஓர் உயரிய இபாதத்!!

ZAKAT: AN ACT OF WORSHIP, NOT A FINE & TAX



அல்லாஹ்வின் மகத்தான கருணையால் ரமழானுடைய மத்திய பகுதியான அருளாளன் அல்லாஹ்வின் மன்னிப்பு நிறைந்த இரண்டாவது பத்தின் ஜும்ஆ தினத்தில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் மன்னிப்பை வழங்கியருள்வானாக!

இஸ்லாத்தின் பிரதானமான ஐந்து கடமைகளில் ஒன்று ஜகாத்.

ஜகாத் கடமையின் மீதான இஸ்லாமிய மக்களின் பார்வையில் மாற்றம் வர வேண்டும்.

ஏனெனில், ஜகாத் கடமையை நம்மில் பலரும் செல்வந்தர்கள் தம்மிடம் உள்ள செல்வத்திற்காக செலுத்துகிற வரியாகவே கருதுகின்றார்கள்.சிலர் சுமையாகவும், சிலர் தண்டனையாகவும், பாரமாகவும் கருதுகின்றார்கள்.

அவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்று தான் முனாஃபிக் எனும் நயவஞ்சகர்களுக்கு மட்டுமே அல்லாஹ்வின் கட்டளை, அல்லாஹ்விற்கு செய்யப்படு வணக்க வழிபாடுகள் சுமையாகவும், பாரமாகவும் தெரியும் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் வன்மையாக விமர்சித்துக் கூறுகின்றான். 

ஜகாத் செல்வந்தர்கள் செலுத்த வேண்டிய வரி என்பதாக இஸ்லாம் எங்கும் சொல்ல வில்லை.

மாறாக, ஜகாத் என்பது ஓர் இபாதத். எப்படி நாம் உடல் உறுப்புகள் மூலமாக வணக்க வழிபாடுகள் செய்கின்றோமோ, அது போன்று நமக்கு அல்லாஹ் வழங்கி இருக்கும் பொருளாதார வளத்தின் மூலமாக அல்லாஹ் வழிகாட்டி இருக்கும் மக்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு நாம் செய்யும் ஓர் இபாதத் - வணக்க வழிபாடாகும்.

தொழுகை -உடல் உறுப்புகள் சார்ந்த வணக்க வழிபாடு என்றால், ஜகாத் -பொருள் சார்ந்த வணக்க வழிபாடு.

தொழுகையில் எப்படி அல்லாஹ்வை உடல் உறுப்புக்களால், குனிந்து, நிமிர்ந்து, மொழிந்து வணங்குகின்றோமோ, அதுபோன்றுதான் கடமையாக்கப்பட்ட அளவை செல்வத்திலிருந்து, அவன் கட்டளையிட்டுள்ள பிரிவினருக்கு நாம் எடுத்துக் கொடுக்கும் பொழுது அல்லாஹ்வை வணங்குகின்றோம்.

இஸ்லாமிய மார்க்கத்தில் நல்அமல்கள் என்பது ஆயிரக்கணக்கில் இருக்கிறது. ஆனாலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நல்அமல்களில் இருந்து இரண்டு பெரும் நல்அமல்களை மட்டுமே அல்குர்ஆனில் இணைத்துச் சொல்கின்றான்.

அல்குர்ஆனில் நேரடியாக ஜகாத் என்ற கடமையை 30 இடங்களில் பிரயோகிக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜகாத்தையும், தொழுகையையும் 27 இடங்களில் இணைத்துக் கூறுகின்றான்.

இது மாத்திரமின்றி மக்காவில் துவக்க காலத்தில் அருளப்பட்ட இறைவசனங்களில் நேரடியாக இல்லாவிட்டாலும் ஜகாத்தோடு தொடர்புடைய ஏழைகளுக்கு உணவளித்தல், ஏழைகளுக்கு செலவு செய்தல் போன்ற செலவுகள் தூண்டப்பட்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ

            தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். ( அல்குர்ஆன்: 2 : 43 )

       தொழுகையோடு ஜகாத்தையும் இணைத்து அல்லாஹ் சொல்வதிலிருந்து, தொழுகையை எப்படி ஒரு உயர்ந்த இபாதத்தாக அங்கீகரித்து இருக்கின்றானோ அதுபோன்று ஜகாத்தையும் உயர்ந்த இபாதத்தாக அங்கீகரித்து இருக்கின்றான். எனவே, ஜகாத் கொடுப்பவர் இபாதத் செய்கிறார்.

இரண்டாவதாக நன்மையை ஆதரவு வைத்து செய்யப்படும் இருபெரும் நல்அமல்களில் ஒன்றாக ஜகாத் இருக்கிறது.

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

            நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகைகளை நிலைநிறுத்தி, ஸகாத் கொடுத்தார்களோ அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். ( அல்குர்ஆன்: 2 : 277 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நல் அமல்களை பொதுவாக சொல்லிவிட்டு அந்த நல் அமல்களில் இருந்து நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய இரண்டு அமல்களை குறிப்பிட்டுச் சொல்கிறான்.

எனவே, ஜகாத் வழங்கும் ஒருவர் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இம்மையிலும் மறுமையிலும் எனக்கு நன்மைகளையும் நற்கூலி களையும் கொடுப்பான் என்று ஆதரவு வைத்து இந்த ஜகாத்தை கொடுக்க வேண்டும். எப்படி மற்ற மற்ற இபாதத்களுக்கு நன்மைகள் கிடைக்குமோ அது போன்றே ஜகாத் கொடுப்பதன் மூலமாக ஜகாத் கொடுக்கும் செல்வந்தர்கள் நன்மைகளை பெறுவார்கள்.

மூன்றாவதாக இந்த ஜகாத் என்பது உயரிய ஒரு நோக்கத்துடன் கடமையாக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான்.

பொதுவாக இஸ்லாம் ஒவ்வொரு கடமையையும் ஒரு நோக்கத்துடன் கடமையாக்கியுள்ளது போலவே ஜகாத்தின் உயர் நோக்கமாக தஜ்கியாஎனப்படும் தூய்மைப்படுத்தலை கொண்டுள்ளது.

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا

நபியே அவர்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை எடுத்து அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மைப் படுத்துவீராக” ( அல்குர்ஆன்: 09:103 )

 

ஜகாத் கொடுக்கும் செல்வந்தர் அதனைப் பெறுபவர் என இரு தரப்பாருக்கும் புறரீதியாகவும் உளரீதியாகவும் ஏற்படுத்தும் தூய்மைப்படுத்தலே இதுவாகும்.

ஜகாத்தைப் பெறுபவர் வறுமை, ஏழ்மை போன்ற சிரமமான காரணிகளில் இருந்து புற ரீதியாக விடுபடுவதும், ஜகாத்தை வழங்குபவர் கஞ்சத்தனம், உலோபித்தனம், பேராசை போன்ற உளரீதியான காரணிகளில் இருந்து விடுபடுகிறார். 

மூன்று வகையான செல்வந்தர்கள்...

இந்த உலகில் மூன்று வகையான செல்வந்தர்கள் இருப்பதாக குர்ஆன் கூறுகிறது.

ஒறுவர் தன்னிடம் இருக்கும் செல்வம் முழுவதும் தன் அறிவால், தன் ஆற்றலால், தன் முயற்சியால், தன் உழைப்பால் உருவானதாக சொல்லும் செல்வந்தர்கள்.

اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰی فَبَغٰی عَلَیْهِمْ ۪ وَاٰتَیْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَتَنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِی الْقُوَّةِ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْفَرِحِیْنَ

நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்என்று கூறினார்கள்.

وَابْتَغِ فِیْمَاۤ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِیْبَكَ مِنَ الدُّنْیَا وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَیْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِی الْاَرْضِ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ

மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).

قَالَ اِنَّمَاۤ اُوْتِیْتُهٗ عَلٰی عِلْمٍ عِنْدِیْ اَوَلَمْ یَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًا وَلَا یُسْـَٔلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ 

(அதற்கு அவன்) கூறினான்: எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள். ( அல்குர்ஆன்: 28: 76-78 )

இது போன்ற மனோ நிலையில் உள்ள செல்வந்தர்கள், இவர்கள் காரூணின் வகையறாக்கள். இவர்களின் முடிவு மோசமாகவே இருக்கும்.

இரண்டாமவர்,

وَالَّذِیْنَ یَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا یُنْفِقُوْنَهَا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று சோபனம் கூறுவீராக!

یَّوْمَ یُحْمٰی عَلَیْهَا فِیْ نَارِ جَهَنَّمَ فَتُكْوٰی بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ ؕ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ ۟

(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). ( அல்குர்ஆன்: 9: 34,35 )

இவர்கள் செல்வத்தை சேகரித்து வைத்திருப்பர். ஆனால், அதை அல்லாஹ் காட்டிய அவனுடைய வழியில் செலவு செய்ய மாட்டார்கள். இவர்கள் தாங்கள் மட்டுமே சுகம் அனுபவிக்கும் நோக்கில் செல்வத்தை சேகரித்து வைத்திருக்கும் செல்வந்தர்கள். இவர்கள் யஹூதிகளின் வகையறாக்கள். இவர்களின் முடிவும் மிக மோசமாகவே இருக்கும்.

மூன்றாமவர், அடுத்து அல்லாஹ் புகழ்ந்து போற்றும் நல்லடியார்களாக செல்வந்தர்கள். சுமார் 10 இடங்களில் அல்லாஹ் "நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து அவர்கள் செலவு செய்வார்கள்" என்று கூறுகின்றான்.

الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِالْغَیْبِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ 

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். ( அல்குர்ஆன்: 2: 3 )

وَالَّذِیْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً وَّیَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّیِّئَةَ اُولٰٓىِٕكَ لَهُمْ عُقْبَی الدَّارِ 

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது. ( அல்குர்ஆன்: 13: 22 )

இவர்கள் தம்மிடம் உள்ள செல்வத்தை, தம் வியாபாரம் மூலம் கிடைக்கும் வருமானத்தை, தாம் சேமித்து வைத்துள்ள சேமிப்பை அல்லாஹ்வால் தமக்கு வழங்கப்பட்டுள்ள செல்வமாகவே அவர்கள் கருதுவார்கள்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதே சொற்றொடரில் அனைந்துள்ள 10 க்கும் மேற்பட்ட வசனங்களிலும் இடம் பெற்றுள்ள "நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து அவர்கள் செலவு செய்வார்கள்" என்ற பதத்திற்கு விளக்கம் தரும் முஃபஸ்ஸிரீன்கள் - அருள்மறை விரிவுரையாளர்கள் "கடமையான ஜகாத், மற்றும் உபரியான ஸதகா" மற்றும் நன்மையான வழிகளில் செலவு செய்வார்கள் என்ற விளக்கத்தை தருகின்றார்கள்.

இவர்கள் உண்மை முஃமின்கள், இவர்களின் முடிவு சுகபோக வாழ்வுக்கு சொந்தமான சுவனமாகும்.

நாம் எந்த வகை செல்வந்தர்களாக இருக்கின்றோம்? நாம் எந்த வகை செல்வந்தர்களாக இருக்க வேண்டும்? நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

நோக்கம் உயர்வானால் இலக்கு எளிதாகும்..

ஒருவர் செல்வத்தை திரட்டுவதற்கு உலகியல் ரீதியாக பல்வேறு காரணங்களும், நோக்கங்களும் இருந்தாலும் செல்வத்தை திரட்டும் வழியில் ஈடுபட்டுள்ள ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுடைய பாதையில் தேவையுள்ள அடியார்களுக்கு செலவளிப்பதற்காக இந்த செல்வத்தை சம்பாதிக்கிறேன் என்ற எண்ணம் வைப்பாரேயானால் உண்மையில் அந்த செல்வத்தை திரட்டும் செல்வந்தரின் முயற்சி அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய ஒரு வணக்கமாக கருதப்படும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறைநம்பிக்கையாளர்கள் - முஃமின்களைப் பற்றி அவர்கள் மூன்று பிரிவுகளாக இந்த உலகில் செயல்படுகின்றார்கள் என்று அல்குர்ஆனில் சிலாகித்துக் கூறுகின்றான். 

إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِنْ ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِنَ الَّذِينَ مَعَكَ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ عَلِمَ أَنْ لَنْ تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ عَلِمَ أَنْ سَيَكُونُ مِنْكُمْ مَرْضَى وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ 

            "நிச்சயமாக உமது இறைவன் அறிவான், “நிச்சயமாக நீர் இரவின் மூன்றில் இரண்டு பகுதிகளை விட குறைவாக, இன்னும் அதன் பாதி, இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி நின்று வணங்குகிறீர்; இன்னும், உம்முடன் இருப்பவர்களில் ஒரு கூட்டமும் நின்று வணங்குகிறார்கள்.அல்லாஹ்தான் இரவையும் பகலையும் (அவ்விரண்டிற்குரிய நேரங்களை) நிர்ணயிக்கிறான். நீங்கள் அதற்கு (-இரவு முழுக்க வணங்குவதற்கு) சக்திபெறவே மாட்டீர்கள் என்று அவன் நன்கறிவான். ஆகவே, அவன் உங்களை மன்னித்தான். ஆக, குர்ஆனில் (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! உங்களில் நோயாளிகள் இருப்பார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் அருளை தேடியவர்களாக பூமியில் பயணம் செய்வார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்என்று அல்லாஹ் அறிவான். ஆகவே, அ(ல்லாஹ்வின் வேதத்)திலிருந்து (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! தொழுகையை நிலை நிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். ( அல்குர்ஆன்: 73 : 20 )

ஒரு பிரிவினர் வணக்க வழிபாடுகளில் இரவில் நின்று கொண்டிருப்பார்கள். இரண்டாம் பிரிவினர் இந்த பூமியில் பயணம் செய்து அல்லாஹ்வுடைய செல்வத்தை தேடி கொண்டிருப்பார்கள். மூன்றாம் பிரிவினர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்து கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறான். 

       இந்த மூன்று பிரிவினரையும் முஃமின்கள் - இறைநம்பிக்கையாளர்களுடைய பிரிவினர் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகின்றான் என்றால், அல்லாஹ்வுடைய செல்வத்தை அவனுடைய கிருபையை அவர்கள் தேடுவார்கள் என்று சொன்னதிலிருந்து, அல்லாஹ்வுடைய அந்த செல்வத்தை அல்லாஹ் ஹலாலாக்கிய முறையிலே வழியில் தேடுவார்கள், அல்லாஹ் விரும்பக்கூடிய வழியிலேயே செலவு செய்வதற்காக தேடுவார்கள். என்று பொருள் படும் என்று சில முஃபஸ்ஸிரீன்கள் விளக்கம் தருகிறார்கள்.

எனவே, ஜகாத் கொடுப்பதை ஏதோ நம் மீது நம்முடைய செல்வத்திற்காக கடமையாக்கப்பட்ட ஒரு வரி என்று நினைக்காமல் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எனக்கு ஜகாத் கொடுக்கும் பாக்கியத்தை வழங்கியுள்ளான், அல்லாஹ்வுக்கும் எனக்கும் உண்டான தொடர்புக்கு இந்த ஜகாத்தை வழியாக அமைத்துள்ளான் என்று ஒரு செல்வந்தர் நினைத்து வழங்க வேண்டும்.

ஜகாத் வழங்கும் செல்வந்தர்கள் கவனத்திற்கு...

1) முதலில் குடும்ப உறவுகளில் உள்ள ஏழைகள் மற்றும் வறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எங்கெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு கூறுகின்றானோ அங்கெல்லாம் குடும்ப உறவுகளைத்தான் முதலில் குறிப்பிடுகின்றான்.

நபி அவர்களும் நபித்தோழர்கள் சிலர் தங்களது செல்வத்தை, பொருளாதாரத்தை அல்லாஹ்விற்காக அறவழியில் செலவு செய்யுமாறு தந்த போது தந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்குமாறு பணித்தார்கள்.

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

 உங்களுக்கு விருப்பமானவற்றை இறைவழியில் அர்ப்பணிக்காத வரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும், எதனை நீங்கள் அர்ப்பணித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

وقال الإمام أحمد: حدثنا روح، حدثنا مالك، عن إسحاق بن عبد الله بن أبي طلحة، سمع أنس بن مالك يقول: كان أبو طلحة أكثر أنصاري بالمدينة مالا وكانَ أحبَّ أمواله إليه بيْرَحاءُ -وكانت مُسْتقْبلة المسجد، وكان النبي صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيّب-قال أنس: فلما نزلت: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } قال أبو طلحة: يا رسول الله، إن الله يقول: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } وإن أحبَّ أموالي إلَيَّ بيْرَحاءُ وإنها صدقة لله أرجو بِرَّها وذُخْرَها عند الله تعالى، فَضَعْها يا رسول الله حيث أراك الله [تعالى] فقال النبي صلى الله عليه وسلم: "بَخٍ، ذَاكَ مَالٌ رَابِحٌ، ذَاكَ مَالٌ رَابِح، وَقَدْ سَمِعْتُ، وَأَنَا أرَى أنْ تجْعَلَهَا فِي الأقْرَبِينَ". فقال أبو طلحة: أفْعَلُ يا رسول الله. فَقَسَمها أبو طلحة في أقاربه وبني عمه. أخرجاه

இந்த இறை வசனம் இறங்கிய போது அபூ தல்ஹா அன்ஸாரி (ரலி) அவர்கள். தங்களுக்கு மிகவும் விருப்பமான பைருஹா தோட்டத்தை அறமாக அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் தந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அபூ தல்ஹா அளித்த தோட்டத்தை வறுமையில் வாடிய அபூ தல்ஹா (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர்களுடைய மக்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்கள். (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்)

2) இரண்டாவது தமது வீட்டின் அருகாமையில் உள்ளோர், தமது மஹல்லா, தமது ஊர் மக்களில் உள்ள ஏழைகள் மற்றும் வறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை நபி அவர்கள், யமனுக்கு ஆளுநராக நியமித்தார்கள். அவர்களை அனுப்பி வைக்கும் போது நபி அவர்கள் கூறினார்கள்.

وعن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل حين بعثه إلى اليمن : "فأخبرهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم

நபி அவர்கள் முஆதே (ரலி) அங்குள்ள செல்வந்தர்களிடமிருந்து முறையாக வசூலித்து, அத்தொகையை அங்கு வாழ்ந்த ஏழைகளுக்கு வழங்குவீராக! , 

நபி  அவர்களின் கட்டளைப்படி அங்குள்ள செல்வந்தர்களிடமிருந்து முறையாக வசூலித்து, அத்தொகையை அங்கு வாழ்ந்த ஏழைகளுக்குவறியவர்களுக்கும் முறையாக பகிர்ந்தளித்தார்கள்.

இதன் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் கணிசமாக ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து ஜகாத் கொடுக்கும் செல்வந்தர்களின் எண்ணிக்கை கூடியது.

3) உங்களிடம் உதவி பெறும் ஒருவர் தன்னிறைவு பெற்றவராக மாறி அடுத்த ஆண்டோ அல்லது அதற்கடுத்த ஆண்டோ பிறருக்கு வழங்கும் நிலைக்கு, உதவும் நிலைக்கு உயர வேண்டும்.

مَرَّ عبدالله بن عمر (رضي الله عنهما) مع أصحاب له في بعض نواحي المدينة، فوضعوا سُفرةً، فمرَّ بهم راعي غنمٍ، فسلَّمَ، فقال ابن عمر: هَلُمَّ يا راعي، هَلُمَّ، فأصِب من هذه السفرة، فقال: إني صائمٌ، فقال ابن عمر: أتصوم في هذا اليوم الحار وأنت في هذه الجبال ترعى هذه الغنم؟ فقال: أي والله أُبادر أيامي الخالية، فقال له ابن عمر - وهو يريد أن يختبر ورعه وتقواه -: بِعْنا شاةً من هذه الغنم نُعطيك ثمنها ونعطيك من لحمها، فقال: إنها ليستْ لي، إنها غنم سيدي، فقال ابن عمر: فما عسى سيدك فاعلًا إذا فقدها، فقلت: أكلها الذئب؟ فولَّى الراعي مدبرًا، وقد رفع أُصبعه إلى السماء، يقول: أين الله؟ فجعل ابن عمر يرددها: أين الله؟ أين الله؟ فلما قدم ابن عمر المدينة بعث إلى مولاه - مولى الراعي - فاشترى منه الغنم واشترى منه الراعي، فأعتق الراعي ووهب له الغنم". (رواه الاحمد فى الزهد، الداء والدواء لابن القيم )

ஒரு நாள் இப்னு உமர் ரலி அவர்கள் மதீனாவின் சுற்றுப் புறங்களை சுற்றிப் பார்க்க நண்பர்களுடன் சென்றார்கள். ஒரு மர நிழலில் நண்பர்களுடன் அமர்ந்து தேநீர் பருக அமர்ந்தார்கள். அப்போது அங்கே ஆட்டிடையர் ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டே இவர்களின் அருகே கடந்து சென்றார். கடந்து செல்லும் போது அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஸலாம் கூறினான். அப்போது, இப்னு உமர் ரலி அவர்கள் அந்த ஆட்டியரை தம்மோடு அமர்ந்து சாப்பிட அழைத்தார்கள். அதற்கவன்"நான் நோன்பு நோற்றுள்ளேன்" என்றார். கடுமையான வெயில் காலத்தில், அதுவும் பாலைவன சுடு மணலில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் நீ நோன்பு நோற்றிருக்கின்றாயா? என்று ஆச்சர்யம் மேலிட கேட்டு விட்டு, நாங்கள் காசு தருகிறோம். உன் மந்தையில் இருக்கும் ஆட்டில் ஒரு ஆட்டை எங்களுக்கு நீ தந்து விடு. நாங்கள் அதை அறுத்து எங்களுக்கு போக மீதமுள்ள இறைச்சியையும் உனக்கு தந்து விடுகின்றோம்? என்ன சொல்கின்றாய்? தருகின்றாயா? என்று இப்னு உமர் ரலி அவர்கள் கேட்டார்கள்.

அதற்கவர், இந்த ஆடுகளின் உரிமையாளர் நான் இல்லை. இது என் எஜமானின் மந்தை என்று பதிலளித்தார்.

அப்போது, இப்னு உமர் ரலி அவர்கள் இவ்வளவு பெரிய மந்தையில் ஒரு ஆடு இல்லாமல் போனதையா உன் எஜமான் கேட்கப் போகின்றார். அப்படியே கேட்டாலும் ஓநாய் இழுத்துச் சென்று விட்டது என்று கூறி விடு என்று கூறினார்கள்.

அதற்கு அந்த ஆட்டிடையர் ஏதோ சிந்தித்தவனாக வானத்தை நோக்கி தன் ஆட்காட்டி விரலை உயர்த்தி "அப்படி என்றால் அல்லாஹ் எங்கிருக்கின்றான்? (அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இதை எல்லாம் பார்த்து கொண்டு தானே இருக்கின்றான் என்ற கருத்து பட) என்று மூன்று முறை கேட்டார்.

 

அங்கிருந்து விடை பெற்று மதீனா வந்த இப்னு உமர் (ரலி) அவர்கள் தம்முடைய பணத்தை தமது அடிமை ராஃபிஇ அவர்களிடம் கொடுத்து அந்த மந்தையின் உரிமையாளரிடம் ஒட்டுமொத்த மந்தையையும், அந்த இடையனையும் விலைக்கு வாங்கி வருமாறு கூறினார்கள். ராஃபிஇ அவர்களும் அது போன்றே செய்தார்.

பின்னர், அந்த இடையனை அழைத்து உரிமை விட்டு அந்த மந்தை முழுவதையும் அந்த இடையனுக்கே அன்பளிப்பாக வழங்கினார்கள். ( நூல்: அஸ் ஸுஹ்து லிஇமாமி அஹ்மத், அத் தாவு வத் தவாஃ லிஇமாமி இப்னுல் கய்யிம் )

நேற்று வரை ஆட்டு இடையனாக இருந்த ஒருவர் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்களின் உதவியால் அவர் மேய்த்த ஆட்டு மந்தைக்கே உரிமையாளராக மாறிப் போனார்.

நாம் வழங்கும் ஜகாத்தில் என்றைக்கு இந்த மாற்றம் நிகழுமோ அன்று தான் ஜகாத்தின் உண்மையான கன பரிமாணத்தை நாம் உணர முடியும்.

4) நான்காவதாக உங்கள் ஜகாத் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட அல்லாஹ்விடம் அதிகம் துஆ செய்யுங்கள்..

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَعْطَيْتُمْ الزَّكَاةَ فَلَا تَنْسَوْا ثَوَابَهَا أَنْ تَقُولُوا اللَّهُمَّ اجْعَلْهَا مَغْنَمًا وَلَا تَجْعَلْهَا مَغْرَمًا – إبن ماجة

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நீங்கள் ஜகாத்தை வழங்கினால் அதற்கு இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் நன்மைகளை மறந்து விடாதீர்கள். எனவே, அதனைக் கவனத்தில் கொண்டு அல்லாஹ்வே! நான் வழங்கிய இந்த ஜகாத்தை பல்கிப் பெருகுவதாக ஆக்குவாயாக! நான் வழங்கிய இந்த ஜகாத்தை ஒன்றுமில்லாததாக ஆக்கி விடாதே!என்று பிரார்த்தனை செய்யுங்கள்என நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னுமாஜா )

5) நிறைவாக, உங்களின் கூலியை பெற தயாராக இருங்கள்...

وَالْمُقِيمِينَ الصَّلَاةَ وَالْمُؤْتُونَ الزَّكَاةَ وَالْمُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أُولَئِكَ سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا

தொழுகையையும் கடைப்பிடித்துத் தொழுபவர்கள்; ஜகாத்தும் கொடுத்து வருபவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகிய இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம். (அல்குர்ஆன்4 : 162)

ஜகாத் கொடுப்பவர்களுக்கு என்ன கூலி? குர்ஆனுக்கு விரிவுரை செய்யும் மார்க்க அறிஞர்கள் சொல்கின்றார்கள், எந்த இடங்களில் அல்லாஹ் மகத்தான கூலி என்று சொல்கிறானோ, அது அல்லாஹ்வுடைய சுவர்க்கமாகும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் பொருளாதாரத்தில் பரக்கத் செய்வானாக! அவனுடைய உயரிய இபாதத்தான ஜகாத்தை வழங்கும் மேன்மக்களில் ஒருவராக நம்மையும் நம் சந்ததியினர் அனைவரையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!