Wednesday, 22 October 2014

மகிழ்ச்சியை மலரச்செய்வோம்!



                  மகிழ்ச்சியை மலரச்செய்வோம்!



  
பொதுவாக எல்லா மனிதர்களும் வாழ்க்கையில் விரும்புகிற மிகப் பெரிய ஒரு விஷயம் இருக்குமானால் அது மகிழ்ச்சியும், சந்தோஷமும் தான்.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் தாங்கள் விரும்புகிற அந்த மகிழ்ச்சிக்காக, சந்தோஷத்திற்காக அரும்பாடு படுகின்றார்கள்.

என்றாலும், அதை எல்லா மனிதர்களாலும் அடைந்து கொள்ள முடிவதில்லை.

ஆதலால், சமூகத்தில் மகிழ்ச்சியை பெறுவதற்கான ஏக்கமும், சந்தோஷத்தை அடைவதற்கான தேடுதலும் பெருகிக் கொண்டே இருக்கிறது.

சில போது, அரும்பாடு பட்டும் அவர்களுக்கு அவர்கள் விரும்பிய மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைக்காத போது விரக்தியின் விளிம்பிற்கே வந்து விடுகின்றனர்.  தவறான வழிகளைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையை பாழாக்கி விடுகின்றனர்.

ஆதலால் தான், இஸ்லாம் தன் சக முஸ்லிம் ஒருவனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மலரச்செய்கிற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை இபாதத் வழிபாடு என்று கூறுகிறது.

அத்தகைய உயரிய பண்பை கொண்டிருக்கிற ஓர் முஸ்லிமிற்கு சோபனங்களும், சன்மானமும் கொடுத்து கௌரவிக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, படைத்த ரப்பின் நேசத்தையும் மேலான சுவன வாழ்வையும் வழங்கி சிகரத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.

وقد قال النبي – صلى الله عليه وسلم 
 أحب الناس إلى الله عزَّ وجل أنفعهم للناس ، وأحب الأعمال إلى الله عزَّ وجل سرور تدخله على مسلم ، أو تكشف عنه كربه ، أو تقضي عنه ديناً ، أو تطرد عنه جوعاً ، ولو أن تمشي مع أخيك في حاجته أحب إليَّ من أن أعتكف في المسجد شهراً

ஒரு கிராமவாசி மாநபி {ஸல்} அவர்களின் சபைக்கு வந்துஅல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்கு பிரியமான செயல் எது? என்று வினவினார்.

 அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} “மனிதர்களில் அல்லாஹ்விற்கு மிகவும் நேசத்திற்குரியவர் சக மனிதர்களுக்கு எல்லா வகையிலும் பயன் தருகின்றவரே! செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது ஒரு முஸ்லிம் தன் சக முஸ்லிமின் வாழ்க்கையில் ஏற்படுத்துகிற மகிழ்ச்சியும், சந்தோஷமும் ஆகும்.

அந்த மகிழ்ச்சி என்பது அவனுடைய ஒரு கஷ்டத்தை நீக்குவதின் மூலமாகவோ, அல்லது அவனுடைய கடனை அடைப்பதின் மூலமாகவோ, அல்லது அவனுடைய பசியை, வறுமையை போக்குவதின் மூலமாகவோ அமைந்திருந்தாலும் சரியே!

மீண்டும், கேள்வி கேட்ட அந்த கிராமவாசியை நோக்கிநீர் உம் சகோதரர் ஒருவரின் தேவையை நிறைவேற்றுவதற்காக நடந்து செல்வதென்பது ஒரு மாத காலம் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பதை விட எனக்கு மிகப் பிரியமானதாகும்என்று பதில் கூறினார்கள்.

وفي رواية للطبراني "
 " إن أحب الاعمال إلى الله تعالى بعد الفرائض : إدخال السرور على المسلم ، كسوت عورته ، أو أشبعت جوعته ، أو قضيت حاجته

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இன்னொரு அறிவிப்பின் படி..

அல்லாஹ்வின் கடமைகளை சரிவர செய்கிற ஓர் அடியானின் செயல்களில் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான செயல் தன் சக முஸ்லிமின் வாழ்வினில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகும். அந்த மகிழ்ச்சி என்பது அவன் மானத்தை மறைக்க ஆடை கொடுப்பதின் மூலமாகவோ, அல்லது அவன் பசியை நீக்குவதன் மூலமாகவோ, அவனுடைய தேவைகளை நிறைவேற்றுவதின் மூலமாகவோ அமைந்திருந்தாலும் சரியே!” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

              ( நூல்:தப்ரானி, ஸில்ஸிலத் அஸ் ஸஹீஹ் லில் அல்பானீ )

ஒரு முஸ்லிமால் தன் சக முஸ்லிமின் வாழ்வில் என்னென்ன வழிகளிலெல்லாம் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியுமோ அத்துணை வழிகளையும் கையாளுமாறு இஸ்லாம் தூண்டுகிறது.

முடியாது போனால், முகமலர்ச்சியோடும், புன்முறுவல் பூத்த முகத்தோடும் ஒரு முஸ்லிமை சந்தித்து மகிழ்ச்சி படுத்துமாறு இஸ்லாம் வழியுறுத்துகிறது.

சோபனமும்.. சன்மானமும்..

فعن جعفر بن يزيد، عن جعفر بن محمد عن أبيه عن جده رضي الله عنهم قال: قال عليه الصلاة والسلام
ما أدخل رجلٌ على مؤمنٍ سروراً إلا خَلَقَ الله عزَّ وجل من ذلك السرور ملكاً يعبد الله عزَّ وجل ويوحِّده، فإذا صار العبد في قبره، أتاه ذلك السرور فيقول: أما تعرفني ؟! فيقول له: مَن أنت ؟ يقول: أنا السرور الذي أدخلتني على فلان، أنا اليوم أونس وحشتك، وألَقِّنك حجتك، وأثبتك بالقول الثابت، وأشهدك مشاهدك يوم القيامة، وأشفع لك إلى ربك، وأريك منزلتك في الجنة

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “இறைநம்பிக்கையாளன் ஒருவன் தன் சக முஸ்லிமின் வாழ்வில் ஏற்படுத்துகிற மகிழ்ச்சியின் பிரதிபலனாக அல்லாஹ் ஒரு வானவரை படைக்கிறான். அந்த வானவர் அல்லாஹ்வை வணங்குகின்றார்.

அந்த இறைநம்பிக்கையாளர் இறந்து, கப்ரில் வைக்கப்பட்ட பிறகு அந்த மகிழ்ச்சிக்கு அழகிய தோற்றம் கொடுத்து அல்லாஹ் கப்ருக்கு அனுப்புகின்றான். அது அவன் முன்னால் வந்து நின்றுநான் யார் என்பதை நீ அறிவாயா?” என்று கேட்கும்.

அப்போது, அந்த முஃமின் நீயார்? என்று கேட்பார். அதற்கு அந்த உருவம் நான் தான் உலகில் இன்ன மனிதனின் வாழ்வில் நீ ஏற்படுத்திய மகிழ்ச்சி என்று சொல்லி விட்டுதொடர்ந்துஇன்று நான் உன்னுடைய வெருட்சியை நீக்க வந்திருக்கின்றேன். உம் ஆதாரத்தை நிலை நிறுத்தவும், உம்மை வானவர்களின் கேள்வியின் போது சிறந்த பதிலை கொண்டு தரிபடுத்தவும் வந்திருக்கின்றேன்.

மறுமை நாளில் உனக்கு சாட்சியாகவும், உம் இறைவனிடத்தில் சிறந்த பரிந்துரையாகவும் நான் இருப்பேன்.

மேலும், சுவனத்தில் உம் இருப்பிடம் எது என்பதை இப்போது உமக்கு காண்பித்து தரவே நான் இங்கு வந்துள்ளேன்!” என்றும் அது சொல்லும்.

                                               ( நூல்: தர்ஃகீப் வத் தர்ஹீப் )

وعن عائشة رضي الله عنها قالت: قال عليه الصلاة والسلام

من أدخل على أهل بيتٍ من المسلمين سروراً لم يرضَ الله له ثواباً دون الجنة

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “எந்த ஒரு முஸ்லிம் தன் சக முஸ்லிம் ஒருவரின் வாழ்வில் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறாரோ சுவனத்தை தவிர வேறெதையும் கூலியாக வழங்குவதை அல்லாஹ் விரும்புவதில்லைஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

நபி {ஸல்} அவர்களின் முன்மாதிரி

وروى عقيل عن ابن شهاب أن يتيماً خاصم أبا لبابة في نخلة فقضى بها رسول الله صلى الله عليه وسلم لأبي لبابة فبكى الغلام. فقال رسول الله صلى الله عليه وسلم لأبي لبابة أعطه نخلتك فقال لا فقال: " أعطه إياها ولك بها عذق في الجنة " . فقال لا. فسمع بذلك أبو الدحداح فقال لأبي لبابة: أتبيع عذقك ذلك بحديقتي هذه قال نعم فجاء أبو الدحداحة رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله، النخلة التي سألت لليتيم إن أعطيته إياها ألي بها عذق في الجنة؟ قال: نعم

ஒரு அநாதை வாலிபருக்கும், நபித்தோழர் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கும் ஒரு பேரீத்தமரம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது.

இறுதியாக, நபி {ஸல்} அவர்களிடம் இந்த வழக்கு கொண்டு வரப்பட்டது. அண்ணலார் இருவரையும் அழைத்து மரம் சம்பந்தமாக விசாரித்தார்கள்.

ஆதாரங்களின் அடிப்படையில் அந்த மரம் அபூலுபாபா (ரலி) அவர்களுக்குச் சொந்தமானது என்பதை அறிந்து கொண்ட நபி {ஸல்} அவர்கள் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கு உரியதென தீர்ப்பளித்தார்கள்.

இதைக் கேட்ட அந்த வாலிபரின் முகம் முற்றிலும் மாறிப்போய் விட்டது. அழுதார், இது நாள் வரை தமது சொந்தமெனக் கருதி வந்த மரம் தமக்குரியதாக இல்லை என்றதும் நிலைகுலைந்து போனார்.

அதைக் கண்ணுற்ற அண்ணலார், அந்த அநாதை வாலிபரின் வாழ்வில் இழந்த அந்த சந்தோஷத்தை மீண்டும் கொடுக்க விரும்பினார்கள்.

அபூலுபாபா (ரலி) அவர்களை அருகே அழைத்த நபி {ஸல்} அவர்கள் அந்த மரத்தை ஆதரவற்ற அந்த வாலிபருக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுங்களேன்என்று தமது விருப்பத்தை விண்ணப்பித்தார்கள்.

ஆனால், அபூலுபாபா (ரலி) அவர்களோ தம்மால் அப்படி தர இயலாது என்று கூறி விட்டார்கள்.

நபி {ஸல்} அவர்கள் விடவில்லை. ”அபூலுபாபா அவர்களே! நீங்கள் அந்த மரத்தை அவருக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டீர்களென்றால், அதற்குப் பகரமாக சுவனத்தில் உங்களுக்கு மதுரமான கனிகள் தரும் ஓர் உயர்ந்த சோலையை பெற்றுத்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்என்று கூறி மீண்டும் கேட்டார்கள்.

இரண்டாவது முறையாகவும் தம்மால் தர இயலாது என அபூலுபாபா (ரலி) அவர்கள் கூறிவிட்டார்கள்.

இந்தக் காட்சிகளை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு நபித்தோழரான அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள் நேராக அபூலுபாபா (ரலி) அவர்களின் அருகே சென்று மதீனாவின் இன்ன பகுதியிலே இருக்கிற 100 பேரீத்தமரங்கள் கொண்ட ஒரு சோலையை நான் தருகிறேன் எனக்கு அந்த ஒரு பேரீத்த மரத்தை தருவீர்களா?” என்று கேட்டார்கள்.

உடனடியாக, அதற்குச் சம்மதம் தெரிவித்தார் அபூலுபாபா (ரலி) அவர்கள். அடுத்து அதற்கான ஒப்பந்தமும் செய்து கொண்டார்கள்.  

இப்போது, அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள், மாநபி {ஸல்} அவர்களின் அருகே வந்துஅல்லாஹ்வின் தூதரே! நான் அபூலுபாபா (ரலி) அவர்களிடம் இருந்து அந்த மரத்தை என்னுடைய நூறு பேரீத்தமரங்கள் நிறைந்த ஒரு சோலையை விலையாகக் கொடுத்து வாங்கி விட்டேன்.

அந்த ஆதரவற்ற வாலிபருக்கு அந்த மரத்தைக் கொடுத்து உங்களின் விருப்பத்தையும் நான் நிறைவேற்றுகின்றேன்!

ஆனால், நீங்கள் அவருக்கு அளித்த உத்தரவாதத்தை எனக்கும் அளிப்பீர்களா?” என்று ஏக்கத்தோடு கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அகமும், முகமும் மலர்ந்தவர்களாக ஆம்! உமக்கும் நான் அந்த உத்தரவாதத்தை தருகின்றேன்என்று கூறினார்கள்.

பின்னர், அந்த வாலிபரை அழைத்து வாஞ்சையோடு அணைத்து அந்த மரம் இனி உமக்கு சொந்தமானது என்று கூறினார்கள்.

இதைக்கேட்ட அந்த வாலிபர் மிகவும் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

ثم قتل أبو الدحداحة شهيداً يوم أحد فقال رسول الله صلى الله عليه وسلم: " رب عذق مذلل لأبي الدحداحة في الجنة " .

வாய் மொழியாகச் சொன்ன அந்த உத்தரவாதத்தை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உஹத் யுத்தகளத்திலே வீரமரணம் அடைந்து ஷஹீதாகக் காட்சி தந்த அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்களை ஆரத்தழுவி, தங்களது புனித மடியில் கிடத்தி விட்டுகனிகள் தரும் மதுரமான எத்தனையோ சோலைகள் சுவனத்தில் அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனஎன்று கூறி உறுதிபடுத்தினார்கள்.

                    ( நூல்:  الإستيعاب في معرفة الأصحاب,பாகம்:3, பக்கம்:102 )

முஸ்லிம் ஒருவரின் வாழ்வில் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திட நபி {ஸல்} அவர்கள் எந்த அளவிற்கு முயற்சி மேற்கொண்டார்கள் என்பதை இந்த வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

அல்லாஹ்வின் முன்மாதிரி

وخرج عن أبي هريرة قال: جاء رجل إلى رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: إني مجهود. فأرسل إلى بعض نسائه فقالت: والذي بعثك بالحق ما عندي إلا ماء. ثم أرسل إلى الأخرى فقالت مثل ذلك، حتى قلن كلهن مثل ذلك: لا والذي بعثك بالحق ما عندي إلا ماء. فقال: من يضيف هذا الليلة رحمه الله؟ فقام رجل من الأنصار فقال: أنا يا رسول الله. فانطلق به إلى رحله فقال لامرأته: هل عندك شي؟ قالت: لا، إلا قوت صبياني. قال: فعلليهم «2» بشيء فإذا دخل ضيفنا فأطفئي السراج وأريه أنا نأكل، فإذا أهوى ليأكل فقومي إلى السراج حتى تطفئيه. قال: فقعدوا وأكل الضيف. فلما أصبح غدا على النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: (قد عجب «3» الله عز وجل- من صنيعكما بضيفكما الليلة).
فنزلت هذه الآية وَيُؤْثِرُونَ عَلى أَنْفُسِهِمْ وَلَوْ كانَ بِهِمْ خَصاصَةٌ

ஒரு நாள் இரவு நேரம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபையில் அபுல் முதவக்கில் எனும் ஏழை ஸஹாபியொருவர் வருகை புரிந்தார். வந்தவர் நேராக மாநபி {ஸல்} அவர்களின் அருகே வந்துஅல்லாஹ்வின் தூதரே! நான் கடுமையான பசியில் இருக்கிறேன். எனக்கு சாப்பிட ஏதாவது உணவு தாருங்கள்என்று கேட்டார்.

நபி {ஸல்} அவர்கள் தங்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு ஒருவரை அனுப்பி, வீட்டில் ஏதேனும் உணவு இருந்தால் வாங்கி வாருங்கள்! என்று கூறினார்கள்.

சென்றவர், திரும்பி வந்துஅல்லாஹ்வின் தூதரே! வீட்டில் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லையாம்!” என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகக் கூறினார்.

பின்பு, ஒருவர் பின் ஒருவராக தங்களின் அத்துணை துணைவியர்களின் இல்லத்திற்கு அனுப்பினார்கள் {ஸல்} அவர்கள்.

அத்துணை துணைவியர்களும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய பதிலையே கூறினார்கள்.

பின்னர், உணவு கேட்ட அந்த ஏழை ஸஹாபியை நோக்கி நம்மிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லைஎன்று கூறிவிட்டு சபையினரை நோக்கிநம்முடைய இந்த விருந்தாளியை மகிழ்ச்சிபடுத்துபவர்கள் யாரும் இருக்கின்றீர்களா? அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.” என்று அறிவிப்புச் செய்தார்கள்.

அப்போது, அந்த சபையில் இருந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள்நான் அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்தி அனுப்பி வைக்கிறேன்என்று கூறி அழைத்துச் சென்றார்கள்.

வீட்டிற்குள் நுழைந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள்நடந்த சம்பவங்களை விவரித்து விட்டு, வீட்டில் ஏதாவது உணவு இருக்கிறதா? என்று கேட்டார்கள்.

அதற்கு, அவர்களின் மனைவி நமது குழந்தை சாப்பிடுவதற்கான அளவே உணவு இருக்கிறது என்றார்.

அது கேட்ட அபூதல்ஹா (ரலி) நம் குழந்தையை எப்படியாவது உறங்க வைத்து விடு! உணவு பரிமாறப்படும் இடத்தில் நம் மூவருக்கும் சேர்த்தே உணவுத்தட்டை எடுத்து வை! விருந்தாளியின் தட்டில் நான் உணவை வைத்ததும் நீ விளக்கை அணைத்து விடு! நாம் இருவரும் உணவை உண்பது போல் பாவனை செய்வோம்என்று கூறினார்கள்.

அது போன்றே அங்கு நடந்தேறியது. வயிறு நிரம்பிய அந்த ஏழை ஸஹாபி மகிழ்ச்சியோடு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

மறுநாள் காலை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} சபையில் நபித்தோழர்கள் குழுமியிருந்த போதுமாநபி {ஸல்} அவர்கள், அபூதல்ஹா (ரலி) அவர்களை அழைத்து நடந்த சம்பவங்களை நபித்தோழர்களிடத்தில் விவரித்து விட்டு, நேற்றிரவு நீரும் உம்முடைய மனைவியும் நடந்து கொண்ட அந்த விதம் குறித்து அல்லாஹ் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுப் போனான்என்று கூறிவிட்டு..

இதோ இப்போது தான் ஜிப்ரயீல் (அலை) வந்து இந்த செய்தியை கூறிவிட்டு ஓர் இறைவசனத்தை அல்லாஹ் இறக்கியருளியதாக கூறி ஓதிக் காண்பித்தார்கள்.

وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கிறார்கள். என்பது மட்டுமல்ல. அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிற வளங்களை தங்களுக்கு மட்டுமே தேவையானதாக அவர்கள் மனதளவில் கூட அவர்கள் நினைப்பதில்லை.

மேலும், தாங்களே தேவையுள்ளவர்களாய் இருந்தாலும் கூட, தங்களை விட பிறருக்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள்.”

                                             ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ )

இங்கே, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் சக முஸ்லிம் ஒருவரின் பசியை நீக்கி, மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு மனிதர் குறித்து ஒரு இறைவசனத்தை இறக்கியருளி சம்பந்தப்பட்ட அபூதல்ஹா அவர்களுக்கு மகிழ்ச்சியை, சந்தோஷத்தை ஏற்படுத்தினான்.

நபித்தோழர்களின் முன்மாதிரி

كان أبو بكر إذا صلى الفجر خرج إلى الصحراء .. فاحتبس فيها شيئاً يسيراً .. ثم عاد إلى المدينة ..
فعجب عمر من خروجه .. فتبعه يوماً خفية بعدما صلى الفجر ..
فإذا أبو بكر يخرج من المدينة ويأتي على خيمة قديمة في الصحراء .. فاختبأ له عمر خلف صخرة ..
فلبث أبو بكر في الخيمة شيئاً يسيراً .. ثم خرج ..
فخرج عمر من وراء صخرته ودخل الخيمة .. فإذا فيها امرأة ضعيفة عمياء .. وعندها صبية صغار ..
فسألها عمر : من هذا الذي يأتيكم ..
فقالت : لا أعرفه .. هذا رجل من المسلمين .. يأتينا كل صباح .. منذ كذا وكذا ..
قال فماذا يفعل : قالت : يكنس بيتنا .. ويعجن عجيننا .. ويحلب داجننا .. ثم يخرج ..
فخرج عمر وهو يقول : لقد أتعبت الخلفاء من بعدك يا أبا بكر .. لقد أتعبت الخلفاء من بعدك يا أبا بكر

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் அது. அபூபக்ர் (ரலி) அவர்கள் சுபுஹ் தொழுகையை முடித்து விட்டார்களென்றால் உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேறி மதீனாவில் இருக்கிற ஒரு பாலைவனப் பகுதியை நோக்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் கழித்து தான் அங்கிருந்து திரும்பி வருவார்கள். இதை நீண்ட நாட்களாக கவனித்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களுக்கு கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்கு செல்கின்றார்கள்? எதற்காகச் செல்கின்றார்கள்? என்பதை அறிய வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டது.

ஒரு நாள் அபூபக்ர் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் பின் தொடர்ந்து  சென்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தவர்களாக மிக விரைவாக சென்று கொண்டிருந்தார்கள்.

பாலைவனத்தை விட்டும் சற்று விலகி ஒரு ஓரமாக இருந்த குடிசைக்குள் அபூபக்ர் (ரலி) நுழைந்தார்கள்.

நுழையும் முன் தம்மை யாராவது பார்க்கின்றார்களா? என தம் பார்வை எட்டும் தூரம் வரை பார்த்து விட்டு உள்ளே நுழந்தார்கள்.

உள்ளே சென்ற கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் நீண்ட நேரத்திற்குப் பின்னர் அந்த குடிசையில் இருந்து வெளியேறி மிக விரைவாக சென்று விட்டார்கள்.

தூரத்தில் ஓரிடத்தில் ஒளிந்து கொண்டு இவைகளையெல்லாம் கண்காணித்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) சென்ற சிறிது நேரத்திற்குப் பின் அந்த குடிசையில் ஸலாம் சொல்லி, அனுமதி கேட்டு நுழைந்தார்கள்.

உள்ளிருந்து ஒரு பெண் பதில் ஸலாம் கூறி, உமர் (ரலி) அவர்களை உள்ளே வர அனுமதி வழங்கினார்கள்.

உள்ளே சென்ற உமர் (ரலி) அவர்கள் அங்கு கண்ட காட்சியைக் கண்டு அப்படியே நின்று விட்டார்கள்.

ஆம்! அங்கே பார்வையற்ற மிகவும் பலவீனமான பெண் ஒருத்தி தனது சிறிய குழந்தையுடன் அங்கே அமர்ந்திருந்தாள்.

அப்பெண்மணியிடம் உமர் (ரலி) இப்போது உம் வீட்டுக்கு வந்து சென்ற அம்மமனிதர் யார்? என்று கேட்டார்கள்.

அதற்கு அப்பெண்மணிஅவர் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால், அவர் நிச்சயமாக ஒரு முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும்என்று பதில் கூறிவிட்டு..

தினமும் காலை நேரத்தில் இங்கு வருவார். என் வீட்டை பெருக்கி சுத்தம் செய்து, என் வீட்டு வேலைகளை செய்து விட்டு, என் வீட்டின் ஒட்டகையில் இருந்து பால் கறந்து என் குழந்தைக்கு அமுதூட்டி விட்டு, எனக்குத் தேவையான உணவை தயார் செய்து தந்து விட்டுச் செல்வார்என்று கூறினார்.

இதைக் கேட்டதும் அங்கிருந்து வெளியேறிய உமர் (ரலி) அவர்கள்அபூபக்ர் அவர்களே! உமக்குப் பின்னால் வருகிற ஆட்சியாளர்கள் இது போன்று ஏழைகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஒளியை ஏற்றக்கூடியவர்களாக இருக்க வேண்டுமே!” வழி நெடுக திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே வந்தார்கள்.

( நூல்: இஸ்தம்தஃ பிஹயாத்திக லி இமாமி முஹம்மத் அப்துர்ரஹ்மான் அல் அரீஃபீ, தற்போதைய இமாம், மஸ்ஜித் அல் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) மிஸ்ர், எகிப்து )

இங்கே, கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆதவரற்ற ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் சந்தோஷத்தை ஏற்படுத்திட எந்த அளவு பாடுபட்டிருக்கின்றார்கள் என்பதை சிந்திக்க கடமைப் பட்டிருக்கின்றோம்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் உமர் (ரலி) அவர்கள் இரவு நேரங்களில் நகர்வலம் வருவதை வழமையாகக் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

ஆனால், எதை அடிப்படையாகக் கொண்டு நகர்வலம் வருவதையும், குடிமக்களின் பிரச்சனைகளை, தேவைகளை உடனடியாக நிறைவேற்றினார்கள் என்பதையும் மேற்கூறிய சம்பவத்தின் மூலம் நம்மால் உணர முடிகிறது.

மேன்மக்களின் முன்மாதிரி

كان عبدالله بن المبارك
يحج عاماً ويغزو في سبيل الله
 عاماً آخر، وفي العام الذي أراد فيه الحج.. خرج ليلة ليودع أصحابه قبل سفره..
 وفي الطريق وجد منظراً ارتعدت له أوصاله. واهتزت له أعصابه
وجد سيدة في الظلام تنحني على كومة أوساخ وتلتقط منها دجاجة ميتة.. تضعها تحت ذراعها.. وتنطلق في الخفاء.. فنادى عليها وقال لها: ماذا تفعلين يا أمة الله؟
فقالت له: يا عبد الله – اترك الخلق للخالق فلله تعالى في خلقه شؤون، فقال لها ابن المبارك: ناشدتك الله أن تخبريني بأمرك.. فقالت المرأة له: أما وقد أقسمت عليّ بالله.. فلأخبرنَّك

فأجابته دموعها قبل كلماتها : إن الله قد أحل لنا الميتة..أنا أرملة فقيرة وأم لأربع بنات غيب راعيهم الموت واشتدت بنا الحال ونفد مني المال وطرقت أبواب الناس فلم أجد للناس قلوبا رحيمة فخرجت ألتمس عشاء لبناتي اللاتي أحرق لهيب الجوع أكبادهن فرزقني الله هذه الميتة .. أفمجادلني أنت فيها؟

وهنا تفيض عينا ابن المبارك من الدمع وقال لها: خذي هذه الأمانة وأعطاها المال كله الذي كان ينوي به الحج.. وأخذتها أم اليتامى، ورجعت شاكرة إلى بناتها
وعاد ابن المبارك إلى بيته، وخرج الحجاج من بلده فأدوا فريضة الحج، ثم عادوا، وكلهم شكر لعبد الله ابن المبارك على الخدمات التي قدمها لهم في الحج.

يقولون: رحمك الله يا ابن المبارك ما جلسنا مجلسا إلا أعطيتنا مما أعطاك الله من العلم ولا رأينا خيرا منك في تعبدك لربك في الحج هذا العام
فعجب ابن المبارك من قولهم، واحتار في أمره وأمرهم، فهو لم يفارق البلد، ولكنه لايريد أن يفصح عن سره

وفي المنام يرى رجلا يشرق النور من وجهه يقول له: السلام عليك يا عبدالله ألست تدري من أنا؟ أنا محمد رسول الله أنا حبيبك في الدنيا وشفيعك في الآخرة جزاك الله عن أمتي خيرا
يا عبد الله بن المبارك، لقد أكرمك الله كما أكرمت أم اليتامى.. وسترك كما سترت اليتامى، إن الله – سبحانه وتعالى – خلق ملكاً على صورتك.. كان ينتقل مع أهل بلدتك في مناسك الحج.. وإن الله تعالى كتب لكل حاج ثواب حجة وكتب لك أنت ثواب سبعين حجة.


அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் கலையில் மிகப்பெரிய வல்லுநர். ஒரே நேரத்தில் அவருடைய வகுப்பிலே ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஹதீஸ் பாடம் பயில அமர்ந்திருப்பார்கள்.

ஒரு ஆண்டும் ஹஜ் மற்றும் நபிகளாரை ஜியாரத் செய்யவும் அடுத்த ஆண்டு அல்லாஹ்வின் பாதையில் போருக்காக செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறெ அந்த ஆண்டு ஹஜ் செய்ய முடிவெடுத்து, தம் தோழர்களோடு பயணம் செய்ய ஆயத்தமானார்கள்.

பயணம் செய்வதற்காக ஒரு வாகனத்தை வாங்க சந்தைக்கு வருகின்றார்கள். வழியில் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரலி) அவர்கள் கண்ட காட்சி அவர்களின் இதயத்தை ரணமாக்கி, இரு விழிகளில் இருந்தும் கண்ணீரை வரவழைத்து விட்டது.

அங்கே ஒரு பெண்மணி செத்துப் போன ஒரு வாத்து, அல்லது கோழியின் இறக்கைகளை உறித்துக் கொண்டும், அதன் இறைச்சியை எடுத்து தான் கொண்டு வந்திருந்த பாத்திரத்தில் போட்டுக் கொண்டிருப்பதையும் கண்டார்கள்.

அப்பெண்மணியின் அருகே சென்ற இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் அப்பெண்மனியை நோக்கி அல்லாஹ்வின் அடிமையே! என்ன காரியம் செய்து கொண்டிருக்கின்றாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, அப்பெண்மணிபடைத்தவனுக்கும், படைக்கப்பட்ட ஒரு படைப்புக்கும் தொடர்பான விவகாரம் இது! இதில் தலையிட உமக்கு அதிகாரமில்லை, உம் வேலையைப் பார்த்து விட்டுச் செல்லும்!” என்றார்.

அதற்கு, அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள்அல்லாஹ்வை முன்னிறுத்திக் கேட்கிறேன்! உம்மைப் பற்றி எமக்கு நீங்கள் அவசியம் சொல்ல வேண்டும்என்றார்கள்.

அப்பெண்மணி வாயைத் திறந்து வார்த்தைகளைக் கொட்டும் முன்பாக, அவர்களின் கண்கள் கண்ணீரை கொண்டு வந்து கொட்டியது.

தழுதழுத்த குரலில் அப்பெண்மணிஅல்லாஹ் என் போன்ற ஒன்றுமில்லாத ஏழைகளுக்கு இந்த செத்துப்போன பிராணிகளை ஹலாலாக ஆக்கியிருக்கின்றான்.

நானோ கணவன் இல்லாத விதவைப்பெண், அங்கே என் வீட்டிலோ என்னுடைய நான்கு பெண்மக்களும் உண்ண உணவில்லாமல் பசியால் குடல் வெந்து துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நானும், என்னைச் சுற்றியிருக்கிற மனிதர்கள் அனைவரிடத்திலும் உதவி கேட்டு மன்றாடி விட்டேன். ஒருவரின் இதயத்தில் கூட இரக்கம் சுரக்கவில்லையே!?”

ஏதோ, அல்லாஹ்வாவது எங்களின் இந்த பரிதாப நிலை கண்டு, அருள் புரிந்து இந்த செத்தப் பிராணியை தந்திருக்கின்றான்.

ஆனால், நீரோ இப்போது என்னிடம் வந்து தர்க்கித்துக் கொண்டிருக்கின்றீர்என்று கூறினாள்.

இதைக் கேட்டதும் தான் தாமதம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள்.

ஒரு வழியாக, நிதானித்து விட்டு தம் கையிலிருந்த பணப்பையை அந்தப் பெண்மணியிடத்திலே கொடுத்து விட்டு உடனடியாக திரும்பி விட்டார்கள்.

அப்பெண்மணியோ நன்றிப் பெருக்கோடும், மகிழ்ச்சியோடும் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் செல்லும் திசை நோக்கி அவர்களின் உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நண்பர்கள் குழு நீண்ட நேரமாகியும் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் வராததால் வழியில் வந்து சேர்ந்து கொள்வார் எனக் கருதி ஹஜ்ஜுக்கு புறப்பட்டுச் சென்று விட்டனர்.

ஹஜ்ஜுடைய காலம் முடிந்து ஹஜ்ஜுக்குச் சென்ற அவர்களின் நண்பர்கள் ஊர் திரும்பினர்.

வீட்டில் இருந்த அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களைச் சந்தித்த நண்பர்கள் ஒவ்வொருவரும்அப்துல்லாஹ்வே! அல்லாஹ் உமக்கு அருள் புரியட்டும்! உம்முடைய வழிகாட்டலால் தான் நாங்கள் எங்களின் ஹஜ்ஜை மிக எளிமையாக அமைத்துக் கொள்ள முடிந்தது.

கஅபாவில் வைத்து நீர் எங்களோடு நடந்து கொண்ட அந்த அழகிய பண்பாடுகள் இருக்கிறதே இப்போது நாங்கள் நினைத்தாலும் ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது.

அல்லாஹ் உமக்கு வழங்கிய கல்வியறிவைக் கொண்டு எங்களின் எல்லோருடைய ஹஜ்ஜையும் மிகச் சரியாக அமைத்துக் கொள்ள உதவி புரிந்தீர்!

அதே நேரத்தில், ஹஜ்ஜுடைய காலத்தில் நீர் உம்முடைய ரப்பை வணங்கிய அந்த முறை, வணக்க வழிபாட்டில் காட்டிய ஈடுபாடு, ஹஜ்ஜுடைய கிரியைகளில் நீர் செலுத்திய கவனத்தைப் போன்று வேறெவரும் செலுத்தியதை நாங்கள் பார்த்ததில்லை.

மொத்தத்தில் உம்மைப் போன்று ஓர் சிறந்த மனிதரை இந்த உலகத்தில் நாங்கள் பார்த்ததே இல்லை!” என்று கூறி நன்றி சொல்லிக் கொண்டனர்.

அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்ன இவர்களுக்கு என்ன ஆகிவிட்டது? நான் எங்கே ஹஜ்ஜுக்கு சென்றேன்? வந்தார்கள், வாழ்த்தினார்கள், நன்றி கூறினார்கள் என்ன நடக்கிறது?” என்று தமக்குத் தாமே பேசிக் கொண்டார்கள்.
அன்றைய இரவு கனவில் பெருமானார் {ஸல்} அவர்களைக் கனவில் காணும் அரும்பாக்கியத்தை, பெரும்பேற்றை பெற்றார்கள் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள்.

கனவில் வந்த பெருமானார் {ஸல்} அவர்கள்அப்துல்லாஹ்வே உமக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்! நான் யார் என்று நீர் அறிவீரா? நான் தான் முஹம்மது {ஸல்} இந்த உலகத்தில் நீர் நேசிக்கின்ற, நாளை மறுமையில் உமக்கு பரிந்துரை செய்யவிருக்கின்ற உம்முடைய நபி!

ஆரம்பமாக, என் உம்மத்தினரின் சார்பாக உமக்கு அல்லாஹ் நல்ல நலவுகளைத் தர வேண்டுமென நான் துஆ செய்கிறேன்.

அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களே! நீர் ஓர் ஆதரவற்ற குடும்பத்திற்கு சந்தோஷத்தை வழங்கியது போன்று அல்லாஹ் உமக்கும் சந்தோஷத்தை வழங்குவான்! நீர் அவர்களின் நிலையைக் கண்டு, அவர்களுக்கு உதவியதை மறைத்தது போன்று அல்லாஹ் நாளை மறுமையில் உம்முடைய குறைகளையும் மறைப்பான்!

நீர் செய்த காரியம் அல்லாஹ்வை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பலனாக அல்லாஹ் உம்முடைய தோற்றத்தில் ஒரு வானவரை அனுப்பி, உமக்குப் பகரமாக ஹஜ் கிரியைகளைச் செய்ய வைத்தான்.

மேலும், உம் ஊரிலிருந்து ஹஜ்ஜுக்காக சென்ற அத்துணை பேர்களின் ஹஜ்ஜுடைய கூலியை உமக்கு வழங்கி உம்மை கௌரவித்து இருக்கின்றான்.

மேலும், நீர் ஒரு முஸ்லிமின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, தவறான பாதையில் செல்ல இருந்த ஒரு முஸ்லின் குடும்பத்தை நேர்வழியின் பால் திருப்பி விட்டதால் அல்லாஹ் உமக்கு எழுபது ஹஜ் செய்த நன்மையை சன்மானமாக வழங்கி கௌரவிக்கின்றான்!” என்று கூறினார்கள்.

 ( நூல்: அல் பிதாயா வந் நிஹாயா லி இமாமி இப்னு கஸீர், பாகம்:13, பக்கம்:611 )

நிறைவாக, ஓர் முஸ்லிமின் வாழ்வில் நாம் ஏற்படுத்துகின்ற மகிழ்ச்சி என்பது அல்லாஹ்வை ஆனந்தப்படுத்துகிறது.

பல்வேறு சோபனங்களுக்கும், உயர்வுக்கும் நம்மை அழைத்துச் சென்று மிக உயர்வான சுவனபதியில் நம்மை அமர வைத்து விடுகிறது.

நம்முடைய வாழ்வில் நாம் ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் மகிழ்ச்சியை மலரச்செய்திடும் அழகிய பணிகளில் நம்மை ஈடுபடுத்துவோம்!

வல்ல ரஹ்மானின் அருளையும், அன்பையும் அள்ளிச் செல்வோம்!

அல்லாஹ் நம் அத்தகைய மேலான பாக்கியத்தை உங்களுக்கும், எனக்கும் தந்தருள வேண்டும் என்கிற துஆவோடு நிறைவு செய்கின்றேன்! ஆமீன்!

                              வஸ்ஸலாம்!!



2 comments:

  1. சிறு பிழை திருத்தம்: “
    மேலும், உம் ஊரிலிருந்து ஹஜ்ஜுக்காக சென்ற அத்துணை பேர்களின் ஹஜ்ஜுடைய கூலியை உமக்கு வழங்கி உம்மை கௌரவித்து இருக்கின்றான்.” என்று தவறாக மொழியாக்கம் செய்து விட்டேன். சரியான பொருள் இது தான் “ஹஜ் செய்யும் ஒவ்வொரு ஹாஜிக்கும் ஒரு ஹஜ்ஜுடைய ஸவாபை அல்லாஹ் வழங்கினான். ஆனால், உமக்கோ” அடுத்த பேரோகிராப்பை இணைத்து வாசித்துக் கொள்ளவும்.
    தவறுக்கு வருந்துகின்றேன்.

    ReplyDelete