Saturday 3 June 2017

ஒன்பதாம் நாள் தராவீஹ் பயான்!! இல்லம் வல்லோன் அளித்த ஓர் ஒப்பற்ற அருட்கொடை!!!



ஒன்பதாம் நாள் தராவீஹ் பயான்!!
இல்லம் வல்லோன் அளித்த ஓர் ஒப்பற்ற அருட்கொடை!!!



ஒன்பதாம் நாள் தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், எட்டாம் நாள் நோன்பை நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், இன்றைய நாளில் நாம் செய்த தான தர்மங்களையும், இதர வணக்க, வழிபாடுகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்கி வாழ்வின் இறுதிவரை தொடர்ந்து வணக்க, வழிபாடுகளில் இன்பத்தோடு ஈடுபட அருள்புரிவானாக! ஆமீன்!

இன்றைய தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களில் ஒரு இடத்தில் அல்லாஹ் அஸ்திவாரம் குறித்து பேசுகின்றான்...

أَفَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى تَقْوَى مِنَ اللَّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَمْ مَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (109)

அல்லாஹ் கூறுகின்றான்: “இறையச்சத்தையும், இறைதிருப்தியையும் நோக்கமாகக் கொண்டு தம் கட்டடத்தை நிர்மாணித்தவர் சிறந்தவரா? அல்லது வெள்ளத்தால் அரிக்கப்பட்ட உறுதியற்ற ஓடைக்கரையின் மீது தனது கட்டடத்தை நிர்மாணித்து, பிறகு அக்கட்டடத்துடன் சேர்ந்து தானும் நரக நெருப்பில் நேராக வந்து விழுந்து விட்டானே அவன் சிறந்தவனா?”                     ( அல்குர்ஆன்: 9: 109 )

இந்த இறைவசனம் நயவஞ்சகர்கள் கட்டிய மஸ்ஜித் ளிரார் குறித்து நேரடியாகப் பேசினாலும், பொதுவாக எந்த ஒரு கட்டிடமானாலும் அது இறையச்சத்தையும், இறைதிருப்தியையும் நோக்கமாகக் கொண்டு கட்டப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.

அல்லாஹ் மூன்று அம்சங்களின் மூலமாக மனிதனுக்கு மனநிம்மதியைக் கொடுப்பதாக கூறுகின்றான்.

ஒன்று இல்லம், இன்னொன்று இல்லத்தரசி, இன்னும் ஒன்று அல்லாஹ்வின் திக்ர் ஆகியவை ஆகும்.

وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا

மேலும், அல்லாஹ் உங்களுக்காக உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான்.                                     ( அல்குர்ஆன்: 16: 80 )

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا

“மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான்; நீங்கள் அவர்களிடம் மன அமைதியைப் பெற வேண்டும் என்பதற்காக!”.                  ( அல்குர்ஆன்: 30: 21 )

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ ()

“மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதால் நிம்மதி அடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதால் தான் உள்ளங்கள் நிம்மதி அடைகின்றன”.                     ( அல்குர்ஆன்: 13: 28 )

ஆகவே, மன அமைதியையும், நிம்மதியையும் தருகிற இல்லம் உண்மையில் வல்லோன் வழங்கிய அருட்கொடைகளில் ஒப்பற்ற ஓர் அருட்கொடை ஆகும்.

நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் எத்துனையோ அருட்கொடைகளை அனுபவிக்கின்றோம்.

என்றாலும், அவைகளின் மதிப்புகளை நாம் உணர்வதில்லை. அது போன்று தான் இறைவனின் மாபெரும் அருட்கொடையான வீடுஇல்லத்தின் மதிப்பு குறித்தும் நாம் உணரவில்லை.

வீடே இல்லாதவனுக்குத் தான் வீட்டின் மதிப்பும், அருமையும் தெரியும்.

இன்று உலகத்தில் கோடான கோடி பேர்கள் வீடில்லாமல், குழந்தை குட்டிகளோடு நாடோடிகளாக மரங்களுக்கு கீழேயும், மேம்பாலத்தின் விளிம்புகளிலும், ஆற்றுப் படுகைகளிலும் படுத்து உறங்கிக் கொண்டு அலைந்து திரிகின்றார்கள்.

இன்னும் சிலர், சொந்த வீடு இருந்தும் இயற்கைப் பேரிடர், யுத்த மேகம், உள் நாட்டுப் போர் ஆகியவைகளால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாமில் ஒரு நேர சாப்பாட்டிற்கு வரிசையில் நின்று கொண்டிருக்கின்றார்கள்.

ஆதலால் தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல் அவர்கள் தங்களது துஆவில் ரிஜ்கில் – வாழ்வாதாரத்தில் அபிவிருத்தியைக் கேட்பதற்கு முன்னால் இல்லத்தின் விசாலத்தைப் பற்றி அல்லாஹ்விடம் முறையிட்டார்கள்.

وقد كان الرسول - صلى الله عليه وسلم - يدعو، فيقول: (اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِي فِي دَارِي وَبَارِكْ لِي فِي رِزْقِي)
   ابن أبي شيبة(29384) صحيح
                                       
இறைவா! என்னுடைய பாவத்தை மன்னித்து விடுவாயாக! என் வீட்டை விசாலமாக்குவாயாக! என் வாழ்வாதாரத்தில்ரிஜ்கில் அபிவிருத்தி செய்வாயாக!

                            ( நூல்: இப்னு அபீ ஷைபா, ஹதீஸ் எண்: 29384 )

நற்பேறுக்கான அடையாளம் இல்லம்.

ولقول الرسول - صلى الله عليه وسلم - : (أَرْبَعٌ مِنَ السَّعَادَةِ : الْمَرْأَةُ الصَّالِحَةُ ، وَالْمَسْكَنُ الْوَاسِعُ ، وَالْجَارُ الصَّالِحُ ، وَالْمَرْكَبُ الْهَنِيءُ ، وَأَرْبَعٌ مِنَ الشَّقَاوَةِ : الْجَارُ السُّوءُ ، وَالْمَرْأَةُ السُّوءُ ، وَالْمَسْكَنُ الضِّيقُ ، وَالْمَرْكَبُ السُّوءُ.).
  ابن حبان (4032 ) صحيح

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

நான்கு விஷயங்கள் ஓர் அடியானுக்கு ஸாலிஹான நல்ல மனைவி, விசாலமான அமைதி நிலவும் வீடு, நல்லவராக இருக்கும் அண்டை வீட்டான், இலகுவான வாகனம் ஆகியவை அமையப் பெறுமானால் அவன் நற்பேற்றை பெற்றவனாவான்.

அதே போன்று ஓர் அடியானுக்கு தீய நடத்தையுள்ள மனைவி, கெட்டவராக இருக்கும் அண்டை வீட்டான், நெருக்கடியும் அசௌகர்யமும் நிலவும் வீடு, பயனற்ற வாகனம் ஆகியவை அமையப் பெறுமானால் அவன் துர்பாக்கியம் பெற்றவனாவான்.”

                              ( நூல்: இப்னு ஹிப்பான், ஹதீஸ் எண்: 4032  )

قال صلى الله عليه وسلم : " طوبى لمن ملك لسانه ووسعه بيته وبكى على خطيئته " .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “தன்னுடைய நாவை கட்டுப்படுத்தினானே அத்தகைய ஒருவனுக்கும், தனது பாவத்தை நினைத்து அழுகின்றானே அத்தகைய ஒருவனுக்கும், தனது இல்லத்தை எல்லா வகையிலும் விசாலமாக ஆக்கிக் கொண்டானே அத்தகைய ஒருவனுக்கும் சோபனம் உண்டாகட்டும்!
وقال صلى الله عليه و سلم : " سلامة الرجل من الفتنة أن يلزم بيته " .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “குழப்பத்திலிருந்து தான் பாதுகாக்கப்பட வேண்டும் என ஒரு மனிதன் விரும்பினால், அவன் வீட்டில் வசிப்பதை அவசியமாக்கிக் கொள்ளட்டும்!”


வீட்டின் அமைப்பும்சமூகத்தின் கனவுகளும்….

இன்று சமூகத்தில் வீட்டை உருவாக்குவதில் மனிதர்கள் பல்வேறு கனவுகளைச் சுமந்தவர்களாக வலம் வருகின்றார்கள்.

சில போது வீட்டை அமைப்பதில் காட்டுகின்ற அக்கறையும், அதீத ஆர்வமும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறிடும் துணிச்சலைத் தந்து விடுகின்றது.

அதனால், வீண்விரயம் வட்டி, இன்னொருவனின் உரிமையப் பறித்தல் போன்ற பாவங்களைச் செய்திட மனிதன் துணிந்து விடுகின்றான்.

 நாம் பார்த்திருக்கின்றோம், சில பேர் பக்கத்து வீட்டுக்காரனின் இடத்தை அபகரித்து தன் வீட்டைக் கட்டி விட்டு வீட்டின் முகப்பிலேஇது என் இறைவனின் அருட்கொடைஎன்று போட்டிருப்பார்கள்.

வீட்டின் வரைவிலக்கணத்தைப் பற்றி அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அஹ்மத் அல் அன்ஸாரி அல் குர்துபீ (ரஹ்) அவர்கள், மேற்கூறிய இறைவசனத்தின் விளக்கத்தில் கூறுகின்ற போது..

وكل ما علاك فأظلك فهو سقف وسماء، وكل ما أقلك فهو أرض، وكل ما سترك من جهاتك الأربع فهو جدار، فإذا انتظمت واتصلت فهو بيت.

உன் தலைக்கு மேல் நிழல் தருபவைக்கு முகடு என்றும், உன்னைச் சுமந்து தாங்கி நிற்பவைகளுக்கு தரை என்றும், உன்னை நான்கு புறத்திலும் மறைப்பதற்கு சுவர் என்றும் கூறப்படும் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த கட்டிடத்திற்குபைத்வீடு என்று சொல்லப்படும்.”

மனிதன் தனது அயராத உழைப்பினூடே சிறிது நேரம் ஓய்வெடுப்பது அவசியம். இந்த ஓய்வு என்பது அவனுக்கு வீட்டில் தான் கிடைக்கின்றது.

மேலும், உடல் ஓய்வோடு உள்ளமும், சிந்தனையும், சீர் பட அல்லாஹ் வீட்டில் தான் அமைதியை, மன நிம்மதியை அருளியிருப்பதாக இந்த வசனத்தில் தெளிவு படுத்தி இருக்கின்றான்.                            ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ )


வீட்டை நிர்மாணிப்பதில் முன்னோர்களின் ஈடுபாடு

وحين نقول بيته فلنذكر تماما، ماذا كان ذاك البيت..؟ فحين همّ سلمان ببناء هذا الذي يسمّى مع التجوّز بيتا، سأل البنّاء: كيف ستبنيه..؟
وكان البنّاء حصيفا ذكيا، يعرف زهد سلمان وورعه.. فأجابه قائلا:" لا تخف.. انها بناية تستظل بها من الحر، وتسكن فيها من البرد، اذا وقفت فيها أصابت رأسك، واذا اضطجعت فيها أصابت رجلك"..!
فقال له سلمان: "نعم هكذا فاصنع".

கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் நபித்தோழர் ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் ஷாமின் கவர்னராக இருந்த தருணம் அது.

தங்களுக்கென அது வரை எந்த ஒரு வீட்டையும் அவர்கள் கட்ட வில்லை. பெரும்பாலும் மரங்களின் நிழல்களிலும், மஸ்தித்களிலும் தங்கிக் கொள்வார்கள்.

மதாயின் பகுதியில் வசித்து வந்த ஸல்மான் (ரலி) அவர்களை ஒரு நாள் ஹுதைஃபா (ரலி) அவர்கள் சந்தித்து, தோழரே! நீங்கள் ஏன் உங்களுக்காக ஒரு வீட்டை கட்டிக் கொள்ளக் கூடாது? என்று கேட்டார்.
அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள்எதற்காக வீட்டை கட்ட வேண்டும்? என்று கேட்டார்கள்.

அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள்ஓய்வெடுக்கவும் இன்ன பிற சுய தேவைகளுக்கும் உங்களுக்கு பயன் தருமல்லவா? என்று கூறினார்கள்.

அது கேட்ட ஸல்மான் அதைத் தான் மதாயின் நகர மரங்களின் நிழல்களில் பெற்றுக் கொள்கின்றேனே என்று கூறி மறுத்து விட்டார்கள்.

வற்புறுத்திக் கூறவே, வீடு கட்ட சம்மதித்து கொத்தனாரை வரவழைத்தார்கள்.

கொத்தனாரிடம் ஸல்மான் (ரலி) அவர்கள், எப்படி வீட்டைக் கட்டப் போகின்றாய்? என்று கேட்டார்கள்.

ஸல்மான் (ரலி) அவர்களின் உலகப் பற்றற்ற வாழ்வையும், எளிமையையும் நன்கு விளங்கி வைத்திருந்த கொத்தனார் இப்படிக் கூறினார்.

கவர்னர் அவர்களே! கவலை கொள்ளாதீர்கள்! நான் தங்களுக்காக கட்டித் தரப்போகும் வீடு வெயில் காலங்களில் நிழல் தரும், குளிர் காலங்களில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். நீங்கள் எழுந்து நின்றால் அதன் முகடு உங்கள் தலையின் உச்சியைத் தொடும், நீங்கள் படுத்திருந்தால் அதன் சுவர்கள் உங்களின் கால்களைத் தட்டும்!” என்றார் கொத்தனார்.

அவர் சொன்ன பதிலைக் கேட்டு, அகமகிழ்ந்தவராகஆம்! இப்படித்தான் என் இல்லம் அமைந்திருக்க வேண்டுமென்று நானும் விரும்பினேன்என்றார்கள் ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்கள்.

( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:336 )

ولقد مر الإمام علي بن أبى طالب -رضي الله عنه- على رجل يبني بيتًا، فقال له:
قَدْ كُنْتَ مَيْتا فَصِرْتَ حيّا وَعَنْ قَلِيْلٍ تَصِيْرُ مَيْتا
بنيت بدار الفناء بيتاً فَابْنِ بِدارِ البَقَاءِ بَيْتا

ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் ஒரு நாள் மதீனாவின் வீதியில் வந்து கொண்டிருக்கும் போது, ஒருவர் தமது வீட்டை கட்டிக் கொண்டிருந்தார். அவரை அழைத்து அலீ (ரலி) அவர்கள் சொன்னார்களாம்.

 ! இன்னவரே! நீர் உயிரற்றவராய் இருந்தீர்! பின்பு நீர் உயிர் கொடுக்கப்பட்டீர்! சில காலத்திற்குப் பின்னர் மீண்டும் உயிரற்றுப் போவீர்!

ஆனாலும், நீர்! அழியும் உலகில் வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கின்றீர்! அழியா உலகான மறுமையில் நீர் இன்பமாக இருப்பதற்காகவும் ஓர் வீட்டை உருவாக்கிக் கொள்வீராக!

وكتب بهلول على حائط من حيطان قصر عظيم بناه أخوه الخليفة هارون الرشيد يا هارون رفعت الطين ووضعت الدين رفعت الجص ووضعت النص إن كان من مالك فقد أسرفت إن الله لا يحب المسرفين وإن كان من مال غيرك ظلمت إن الله لا يحب الظالمين

மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் மிகப் பிரம்மாண்டமான முறையில், அதிக செலவில் ஓர் அரண்மனையைக் கட்டினார்கள்.

அந்த அரண்மனையைக் கண்டு அதிர்ந்து போன, அந்த காலத்தில் வாழ்ந்த மாமேதை புஹ்லூல் (ரஹ்) அவர்கள் அரண்மனையின் சுவரில்

ஹாரூனே! மண்ணை உயர்த்தி சத்திய சன்மார்க்கத்தை நீர் தாழ்த்தி விட்டீர்! வைரக் கல்லை உயர்த்தி சத்திய தீனின் நெறியான குர்ஆன்ஹதீஸைத் தாழ்த்தி விட்டீர்!

ஹாரூனே! அறிந்து கொள்ளுங்கள்! இந்த அரண்மனை சொந்த வருமானத்தில் கட்டப்பட்டிருந்தால் அது இஸ்ராஃப்வீண் விரயமாகும். அல்லாஹ் வீண் விரயம் செய்பவர்களை ஒரு போதும் நேசிப்பதில்லை.”

அவ்வாறின்றி, பொதுச் சொத்திலிருந்து கட்டப்பட்டிருந்தால் அது அநியாயம் ஆகும். அல்லாஹ் அநியாயம் செய்பவர்களையும் ஒரு போதும் நேசிப்பதில்லை.” என்று எழுதினார்கள்.

( நூல்: தஃப்ஸீர் ரூஹுல் பயான், அந் நஹ்ல் 80 –வது வசனத்தின் விளக்கத்தில் )

வீடு கட்ட வேண்டும் என்ற பேராசையில் உழல்பவர்களுக்கும், பிறரின் புகழுக்காக ஆடம்பரமாகவும், உயரமாகவும் பயன்பாட்டிற்கு அதிகமாகவும் வீடு கட்டுகின்ற ஒவ்வொருவருக்கும் முன்னோர்களின் வரலாற்றில் பாடங்கள் நிறைய உண்டு.

அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக! ஆமீன்! மன அமைதியும், நிம்மதியும் தவழும் இடமாக நம்முடைய இல்லங்களை அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment