பத்தாம் நாள் தராவீஹ் பயான்!!
நற்குணம் எனும் அழகிய அருட்கொடை!!!
பத்தாம் நாள்
தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், ஒன்பதாம் நாள் நோன்பை நிறைவு செய்தும்
அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், இன்றைய நாளில் நாம்
செய்த தான தர்மங்களையும், இதர வணக்க, வழிபாடுகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்கி வாழ்வின் இறுதிவரை தொடர்ந்து வணக்க,
வழிபாடுகளில் இன்பத்தோடு ஈடுபட அருள்புரிவானாக! ஆமீன்!
இன்றைய தொழுகையில்
ஓதப்பட்ட இறைவசனங்களில் ஒரு இடத்தில் அல்லாஹ் நபி யூஸுஃப் {அலை} அவர்களின்
நற்குணம் குறித்து அழகு பட பேசுகின்றான்...
قَالُوا تَاللَّهِ
لَقَدْ آثَرَكَ اللَّهُ عَلَيْنَا وَإِنْ كُنَّا لَخَاطِئِينَ () قَالَ لَا
تَثْرِيبَ عَلَيْكُمُ الْيَوْمَ يَغْفِرُ اللَّهُ لَكُمْ وَهُوَ أَرْحَمُ
الرَّاحِمِينَ ()
யூஸுஃப்ஃபின்
{அலை} சகோதரர்கள், யூஸுஃபிடம் {அலை} “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உண்மையில்
அல்லாஹ் எங்களை விட உமக்குச் சிறப்பை வழங்கியுள்ளான். மேலும், திண்ணமாக, நாங்கள்
தவறிழைத்தவர்களாகவே இருந்தோம்” என்றனர்.
அதற்கு, யூஸுஃப்
{அலை} “இன்று உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை, அல்லாஹ் உங்களை மன்னிப்பான்.
அவன் எல்லோரையும் விட அதிகம் கருணை புரிபவனாவான்” என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 12: 91, 92 )
தண்டிக்கும்
அதிகார பீடத்தில் அமர்ந்திருந்த போதும் கடந்த காலத்தில் தம் சகோதரர்கள் செய்த
குற்றத்தை மன்னித்து கருணையோடு நடந்து கொண்டதை அல்லாஹ் இங்கே குறிப்பிடுகின்றான்.
தனக்கு தீங்கு
செய்தவர்களை மன்னிப்பதென்பது அழகிய நற்குணம் ஆகும். தனக்கு தீங்கு செய்தவர்களை மன்னிக்கும்
ஒருவருக்கு அல்லாஹ் வழங்கும் கூலி மகத்தானதாகும்.
அல்லாஹ் மூன்று
பேர்களுக்கு வழங்குகிற கூலியின் அளவீட்டை தன்னோடு இணைத்துச் சொல்வான்.
1. நோன்பாளி.
2. அல்லாஹ்வின்
பாதையில் ஹிஜ்ரத் செய்த நிலையில் மரணத்தை தழுவியவர். ( பார்க்க: அல்குர்ஆன்: 4:
100 )
3. தனக்கு
தீங்கிழைத்தவரை மன்னிப்பவர். ( பார்க்க: அல்குர்ஆன்: 42: 40 )
நற்குணங்களில்
ஒன்றான மன்னிக்கும் மனோபாவம் கொண்டவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் சோபனம் இதுவென்றால்
நற்குணங்களின் உறைவிடமாக ஒருவர் இருந்தால் அல்லாஹ் அவருக்கு வழங்கும் சோபனங்கள் எவ்வளவு
உயர்வானதாக இருக்கும்!?. வாருங்கள் நற்குணங்களை கொண்டிருக்கிற ஓர் முஃமினுக்கு
அல்லாஹ் கொடுக்கிற சன்மானங்களையும் ஒரு சில வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய
அமர்விலே பார்ப்போம்.
أبو
داود،
وأحمد، من حديث عائشة
قالت: سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول
"إن المؤمن ليدرك بحسن خلقه درجة الصائم القائم"
وصححه الألباني.
அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ஓர் உண்மை
முஃமின் தன் நற்குணத்தால் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் வணங்கக்
கூடியவரின் பதவியை அடைந்து விடுவார்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )
إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحاسنكم أخلاقا
ஜாபிர் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “தன் குணத்தால் அழகானவரே, உங்களில் யாவரிலும் எனக்கு மிக
விருப்பமானவர். மறுமை நாளில் (சுவனத்தில்) எனக்கு மிக அருகில் இருப்பவர்” என நபி
{ஸல்} கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
சக முஸ்லிமை மன்னிப்பது....
حدثنا أبو منصور محمد بن القاسم العتكي ، ثنا أبو عبد الله محمد بن
أحمد بن أنس القرشي ، ثنا عبد الله بن بكر السهمي ، أنبأ عباد بن شيبة الحبطي ، عن
سعيد بن أنس ، عن أنس بن مالك رضي الله عنه ، قال : بينا رسول الله صلى الله عليه
وسلم جالس إذ رأيناه ضحك حتى بدت ثناياه ، فقال له عمر : ما أضحكك يا رسول الله
بأبي أنت وأمي ؟ قال : « رجلان من أمتي جثيا بين يدي رب العزة ، فقال أحدهما : يا
رب خذ لي مظلمتي من أخي ، فقال الله تبارك وتعالى للطالب : فكيف تصنع بأخيك ولم
يبق من حسناته شيء ؟ قال : يا رب فليحمل من أوزاري » قال : وفاضت عينا رسول الله
صلى الله عليه وسلم بالبكاء ، ثم قال : « إن ذاك اليوم عظيم يحتاج الناس أن يحمل
عنهم من أوزارهم ، فقال الله تعالى للطالب : » ارفع بصرك فانظر في الجنان فرفع
رأسه ، فقال : يا رب أرى مدائن من ذهب وقصورا من ذهب مكللة باللؤلؤ لأي نبي
هذا أو لأي صديق هذا أو لأي شهيد هذا ؟ قال : هذا لمن أعطى الثمن ، قال : يا رب
ومن يملك ذلك ؟ قال : أنت تملكه ، قال : بماذا ؟ قال : بعفوك عن أخيك ، قال : يا رب فإني قد
عفوت عنه ، قال الله عز وجل : فخذ بيد أخيك فأدخله الجنة « فقال رسول الله صلى الله عليه وسلم
عند ذلك : » اتقوا الله وأصلحوا ذات بينكم فإن الله تعالى يصلح بين المسلمين « »
أخرجه الحاكم. وقال هذا حديث صحيح الإسناد ولم يخرجاه.
அபூ உமாமா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு முறை எங்களிடையே அமர்ந்திருந்த நபிகளார் {ஸல்} அவர்கள் திடீரென புன்முறுவல் பூத்தார்கள்.
அண்ணலாரின் முன்பற்கள் தெரியுமளவிற்கு புன்முறுவல் பூத்தார்கள். ஒன்றிரண்டு தடவை இது போல் மாநபி புன்னகைத்து பார்த்திருந்த நபித்தோழர்கள் ”அல்லாஹ்வின் தூதரே! எங்களுடைய தாய்-தந்தையர் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். எதற்காக தாங்கள் புன்னகைத்தீர்கள்” என்று வினவினார்கள்.
சபையிலிருந்த உமர் {ரலி} அவர்களும் “என்னுடைய தாயும்-தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். தங்களுடைய சிரிப்பிற்கு காரணம் என்ன அல்லாஹ்வின் தூதரே!?” என வினவினார்கள்.
அதற்கு அண்ணலார் “ என்னுடைய உம்மத்தைச் சார்ந்த இரண்டு அடியார்கள் அல்லாஹ்வின் சந்நிதானத்திற்கு முன்னால் தங்களுடைய வழக்கை முறையிட்டவாறு அமர்ந்திருக்கின்றார்கள்.
ஒருவர், இன்னொருவர் மீது “இறைவா! இவர் என் மீது அநீதம் இழைத்திருக்கிறார். அதற்கான ஈட்டை வாங்கிக் கொடு” என் முறையிடுகிறார்.
அவரிடம் இருந்து எதை நான் ஈடாக உனக்கு பெற்றுத்தருவது? அவரிடம் தான் நன்மைகள் ஒன்றும் இல்லையே! அப்படி இருந்தால் அல்லவா, நான் அவரிடம் இருந்து உமக்கு பெற்றுத்தர முடியும்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.
ஆனால், அந்த அடியானோ “அப்படியென்றால் என்னுடைய குற்றங்களை எடுத்து அவரிடம் சேர்த்து விடு” என்று முறையிடுகின்றான்.
இதைச் சொல்லும் போதே சுந்தர நபியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
“அந் நாள் மிகவும் மோசமான நாளாகும். எப்படியாவது, ஏதாவது ஒரு வழியில் தன் பாவச் சுமைகளை கொஞ்சம் இறக்கி வைக்கமுடியாதா? என ஒவ்வொரு மனிதனும் அலைபாய்வான்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்விடம் முறையிட்டுக் கொண்டிருக்கும் அந்த அடியானைப் பார்த்து, ஓ அடியானே! உன்னுடைய பார்வையை கொஞ்சம் மேலே உயத்திப் பார்” என்று அல்லாஹ் கூறினான். அவர் அங்கே முத்துக்களாலும், மாணிக்க கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட சுவனத்து மாளிகையை காண்கிறார்.
அங்கே எல்லா வகையான அருட் கொடைகளும் கொட்டிக் கிடப்பதை கண்டு விட்டு, ஆச்சர்ய மேலிட இறைவா! இது யாருடைய மாளிகை? எனக் கேட்டார்.
”இதன் விலையை யார் தருகிறாரோ அவருக்கே இது சொந்தம்” என அல்லாஹ் கூறினான்.
இதனுடைய விலையை யாரால் தான் கொடுக்க முடியும்? இதனை வாங்கிட யாரிடம் தான் செல்வம் கொட்டிக்கிடக்கின்றது? என அந்த அடியான் அல்லாஹ்விடம் சொன்னான். அதற்கு அல்லாஹ் உன்னால் கூட அதை விலை கொடுத்து வாங்க முடியும் என்றான்.
நானா? என்னிடம் எங்கே இருக்கின்றது அவ்வளவு பொன்னும் பொருளும்? என்றான் அந்த அடியான். அப்போது அல்லாஹ் “ நீ இந்த அடியானை மன்னித்து விட்டால் இந்த மாளிகையை உனக்கு தருகிறேன்” என்றான். ”அப்படியானால் இதோ, இப்போதே நான் அவரை மன்னித்து விடுகிறேன்” என்றான் அந்த அடியான்.
அல்லாஹ் தன் கருணையால் அவ்விருவரையுமே சொர்க்கத்தில் நுழையச் செய்தான்” என தங்களின் புன்முறுவலுக்கான காரணத்தைக் கூறினார்கள்.
( நூல்: ஹாகிம் )
சக முஸ்லிமை மகிழ்ச்சியோடு வைத்திருப்பது!
وروى عقيل عن ابن شهاب أن
يتيماً خاصم أبا لبابة في نخلة فقضى بها رسول الله صلى الله عليه وسلم لأبي لبابة
فبكى الغلام. فقال رسول الله صلى الله عليه وسلم لأبي لبابة أعطه نخلتك فقال لا
فقال: " أعطه إياها ولك بها عذق في الجنة " . فقال لا. فسمع بذلك أبو
الدحداح فقال لأبي لبابة: أتبيع عذقك ذلك بحديقتي هذه قال نعم فجاء أبو الدحداحة
رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله، النخلة التي سألت لليتيم إن
أعطيته إياها ألي بها عذق في الجنة؟ قال: نعم
ஒரு அநாதை வாலிபருக்கும், நபித்தோழர் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கும் ஒரு பேரீத்தமரம்
சம்பந்தமாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது.
இறுதியாக, நபி {ஸல்} அவர்களிடம் இந்த வழக்கு கொண்டு
வரப்பட்டது. அண்ணலார் இருவரையும் அழைத்து மரம்
சம்பந்தமாக விசாரித்தார்கள்.
ஆதாரங்களின் அடிப்படையில் அந்த மரம் அபூலுபாபா
(ரலி) அவர்களுக்குச் சொந்தமானது என்பதை அறிந்து கொண்ட நபி {ஸல்} அவர்கள் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கு உரியதென தீர்ப்பளித்தார்கள்.
இதைக் கேட்ட அந்த வாலிபரின் முகம் முற்றிலும் மாறிப்போய் விட்டது. அழுதார், இது நாள் வரை தமது சொந்தமெனக் கருதி வந்த
மரம் தமக்குரியதாக இல்லை என்றதும் நிலைகுலைந்து போனார்.
அதைக் கண்ணுற்ற அண்ணலார், அந்த அநாதை வாலிபரின் வாழ்வில் இழந்த
அந்த சந்தோஷத்தை மீண்டும் கொடுக்க விரும்பினார்கள்.
அபூலுபாபா (ரலி) அவர்களை அருகே அழைத்த நபி {ஸல்} அவர்கள் ”அந்த மரத்தை ஆதரவற்ற அந்த வாலிபருக்கு
அன்பளிப்பாக கொடுத்து விடுங்களேன்” என்று தமது விருப்பத்தை
விண்ணப்பித்தார்கள்.
ஆனால், அபூலுபாபா
(ரலி) அவர்களோ தம்மால் அப்படி தர இயலாது என்று கூறி விட்டார்கள்.
நபி {ஸல்} அவர்கள் விடவில்லை. ”அபூலுபாபா அவர்களே! நீங்கள் அந்த மரத்தை அவருக்கு
அன்பளிப்பாக வழங்கிவிட்டீர்களென்றால், அதற்குப் பகரமாக சுவனத்தில் உங்களுக்கு
மதுரமான கனிகள் தரும் ஓர் உயர்ந்த சோலையை பெற்றுத்தர நான் பொறுப்பேற்றுக்
கொள்கின்றேன்” என்று கூறி மீண்டும் கேட்டார்கள்.
இரண்டாவது முறையாகவும் தம்மால் தர இயலாது என அபூலுபாபா (ரலி) அவர்கள் கூறிவிட்டார்கள்.
இந்தக் காட்சிகளை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு
நபித்தோழரான அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள் நேராக அபூலுபாபா (ரலி) அவர்களின் அருகே சென்று ”மதீனாவின் இன்ன பகுதியிலே இருக்கிற
100 பேரீத்தமரங்கள்
கொண்ட ஒரு சோலையை நான் தருகிறேன் எனக்கு அந்த ஒரு பேரீத்த மரத்தை தருவீர்களா?” என்று கேட்டார்கள்.
உடனடியாக, அதற்குச் சம்மதம் தெரிவித்தார் அபூலுபாபா (ரலி) அவர்கள்.
அடுத்து அதற்கான
ஒப்பந்தமும் செய்து கொண்டார்கள்.
இப்போது, அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள்,
மாநபி {ஸல்} அவர்களின் அருகே வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அபூலுபாபா (ரலி) அவர்களிடம் இருந்து அந்த மரத்தை என்னுடைய
நூறு பேரீத்தமரங்கள் நிறைந்த ஒரு சோலையை விலையாகக் கொடுத்து வாங்கி விட்டேன்.
அந்த ஆதரவற்ற வாலிபருக்கு அந்த மரத்தைக் கொடுத்து உங்களின் விருப்பத்தையும்
நான் நிறைவேற்றுகின்றேன்!
ஆனால், நீங்கள் அவருக்கு அளித்த உத்தரவாதத்தை
எனக்கும் அளிப்பீர்களா?” என்று ஏக்கத்தோடு கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அகமும்,
முகமும்
மலர்ந்தவர்களாக ஆம்! உமக்கும் நான் அந்த உத்தரவாதத்தை
தருகின்றேன்” என்று கூறினார்கள்.
பின்னர், அந்த வாலிபரை அழைத்து வாஞ்சையோடு அணைத்து
அந்த மரம் இனி உமக்கு சொந்தமானது என்று கூறினார்கள்.
இதைக்கேட்ட அந்த வாலிபர் மிகவும் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.
ثم قتل أبو الدحداحة شهيداً
يوم أحد فقال رسول الله صلى الله عليه وسلم: " رب عذق مذلل لأبي الدحداحة في
الجنة " .
வாய் மொழியாகச் சொன்ன அந்த உத்தரவாதத்தை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உஹத் யுத்தகளத்திலே வீரமரணம்
அடைந்து ஷஹீதாகக் காட்சி தந்த அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்களை ஆரத்தழுவி, தங்களது புனித மடியில் கிடத்தி விட்டு “கனிகள் தரும் மதுரமான எத்தனையோ சோலைகள்
சுவனத்தில் அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்களின் வருகைக்காக காத்திருக்கின்றன” என்று கூறி உறுதிபடுத்தினார்கள்.
( நூல்: الإستيعاب في معرفة الأصحاب,பாகம்:3,
பக்கம்:102 )
ஆக நற்குணங்கள் எனும் அழகிய
அருட்கொடையால் அபரிமிதமான நன்மைகளையும், அண்ணலாரின் அண்மையையும், உயர்
மாளிகைகளையும் பெற முடியும் என்பதை மேற்கூறிய நபிமொழிகளும், நிகழ்வுகளும் நமக்கு
உணர்த்துகின்றன.
அல்லாஹ் நம் அனைவருக்கும்
நற்குணங்களோடு வாழ்ந்திடும் நல்ல தௌஃபீக்கை தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment