Thursday, 18 August 2022

நாட்டிற்கு தேவை நீதிபதிகளே! "நிதிபதி"கள் அல்ல!!

 அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


20/01/1444. 19/08/2022. 

வெள்ளிக்கிழமை.

நாட்டிற்கு தேவை நீதிபதிகளே! 

"நிதிபதி"கள் அல்ல!!

கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 12ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில்  கடந்த 08/08/2022 அன்று மக்களவையில் பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "உச்சநீதிமன்றத்தின் மூலம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் உங்கள் எண்ணம் தவறானது என உணர்ந்துகொள்ள வேண்டிய நேரம் இது. கடந்த 50 ஆண்டுகளாக என்னுடைய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அனுபவத்திலிருந்து இதை கூறுகிறேன்" என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், "ஒருவேளை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்கினாலும், அந்த தீர்ப்பு கள யதார்த்தத்தை மாற்றிவிடாது" என்றும் விமர்சித்துள்ளார். 

மேலும், அவர் பேசியதாவது, "நான் உச்சநீதிமன்றத்தில் பங்கெடுத்து இந்த ஆண்டுடன் 50 வருடங்கள் முடிவடைகிறது. இந்த 50 ஆண்டுக்கால அனுபவத்திலிருந்து சொல்கிறேன். உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன். நீங்கள் முற்போக்கான தீர்ப்புகள் குறித்து பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால், அது களத்தில் அமல்படுத்தப்படுவதற்கு நிறைய வேறுபாடுகள் உள்ளன. 

மேலும், மிகவும் சென்ஸ்டிவ்வான வழக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்றும், வழக்கின் தீர்ப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை சட்டத்துறைக்கு முன்பே தெரிந்திருக்கும் எனவும் சிபல் குறிப்பிட்டுள்ளார். "உச்சநீதிமன்றம் குறித்து விமர்சிக்க எனக்கு விருப்பம் இல்லைதான். ஆனால் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் பேசவில்லையெனில் வேறு யார் பேசுவார்? 

யதார்த்தம் என்னவெனில் நமக்கு நன்கு தெரிந்த சர்ச்சைக்குரிய விஷயங்கள் சில குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்டு பின்னர் தீர்ப்பு வெளியாகிறது. குறிப்பிட்ட வழக்குகளை குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு என ஒதுக்கும் போது அதன் மூலம் நீதிமன்றம் சுதந்திரமாக செயல்பட முடியாது" என விமர்சித்த கபில்,

"நீதித்துறை இவ்வாறு இருக்கும்போது மக்கள் மனம் மாறாவிட்டால் நிலைமை மாறாது. நமது மக்கள் கருணை உள்ள சர்வாதிகாரம் என்கிற மனோநிலைக்கு வந்துவிட்டனர். சக்திவாய்ந்தவர்களின் கால்களில் மக்கள் விழுகிறார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. மக்கள் வெளியே வந்து தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கக் கோர வேண்டிய நேரம் வந்துவிட்டது. நமது சொந்த உரிமைகளுக்கா எழுந்து நின்று அதற்காக போராடும்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும்" என சிபல் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ( நன்றி: one india tamil. Mon Aug 8, 19:20 )

இந்த விமர்சனத்தை வைத்த இரண்டு நாட்களில் அவர் சொன்னதை மெய்பபிப்பது போன்று "2002 குஜராத் கோத்ரா கலவர வழக்கில் பாதிக்கப்பட்ட பில்கீஸ் பானு" கூட்டு பாலியல் & கொலை வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 11 கொடூர குற்றவாளிகளை  நாட்டின் சுதந்திர  தின பவள விழாவையொட்டி   குஜராத் மாநில அரசு விடுதலை செய்துள்ளது.

மகத்தான இந்த உத்தரவைப் பிறப்பித்த குஜராத் அரசு " உச்ச நீதிமன்றம் பில்கிஸ் பானு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அவருக்கு அரசு வேலையும், பாதுகாப்பான வீடும் குஜராத் அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2019 ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இதனை குஜராத் மாநில அரசு இன்று வரை மதிக்கவில்லை. 

ஆனால், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வழக்கின் கொடுங்குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பது நாட்டின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவால் ஆகும் என்பதை நாம் உணர வேண்டும்.

நீதிமன்றங்களும்... நீதிபதிகளும்....

நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடி மகிழும் இந்த நேரத்தில் இந்த தேசத்தின் மக்கள் 1950 ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தின் தலைமையின் கீழ் பெறப்படும் நீதி பரிபாலனத்தை மிகவும் கவனமாக அவதானித்து வருகிறார்கள்.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள், தமது தீர்ப்பால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நீதிபதிகள் என உச்ச நீதிமன்றத்திற்கு பல அடையாளங்களும் பெருமிதமும் இருந்தாலும் சாதாரண அடித்தட்டு இந்திய குடிமகனுக்கு தகுந்த நேரத்தில் நீதியும் நியாயமும் கிடைக்கிறதா என்றால்? அது சந்தேகத்திற்கு இடமின்றி இல்லை என்றே சொல்லலாம். தற்போதைய பில்கீஸ் பானு விவகாரத்தில் அது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகம் என்ற ஒற்றை காரணத்தினால்...

கபில் சிபல் குறிப்பிட்டதைப் போன்று "தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது ஆனால், கள நிலவரமோ கள யதார்த்தமோ வேறு மாதிரியாக இருக்கிறது" என்பது முற்றிலும் உண்மையே!

உதாரணமாக பாபர் மசூதி தீர்ப்பை கூறலாம். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என எல்லா ஊடகங்களும் குறிப்பிட்டன. ஆனால், முஸ்லிம் சமூகத்தின் ஆலயம் என்பதால் மட்டுமே உண்மைக்கும் ஆதாரங்களுக்கும் எதிரான தீர்ப்பை வழங்க முடிந்தது.

நாட்டில் 60000 நீதிமன்றங்கள், 17 லட்சம் வழக்கறிஞர்கள் இருந்தும் சிறுபான்மை சமூக மக்களின் நீதி தேடி அலையும் விவகாரங்களின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய  உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த...

சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜ்ஜு 21-07-2022 அன்று நிலுவையிலுள்ள வழக்குகளை கீழ்வருமாறு பட்டியலிட்டுள்ளார் :

உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள்  (01-07-2022 வரை)     – 72,062

உயர் நீதி மன்றங்களில் உள்ள நிலுவை வழக்கு.  (15-07-2022 வரை)        – 59,45,709

மாவட்ட மற்றும் கீழமர்வு நீதிமன்றங்களில் உள்ள நிலுவை (15-07-2022 வரை)  – 4,19,79,353

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோர் இந்தியாவில் உள்ள சிறை கைதிகளில் 76% சதவிகித நபர்கள் விசாரணையின்றி சந்தேகத்தின் அல்லது அனுமானத்தின் அடிப்படையில் சிறையிலடைக்கப்பட்டவர்களே என்று தேசிய குற்ற ஆவணக்குழும்ம் – National Crime Records Bureau NCRB-  கூறுகிறது.

இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் நான்கு பேர்களில் மூன்று பேர் விசாரணையின்றி அடைக்க பட்டுள்ள கைதிகளாவர் . மொத்தமுள்ள 4,88,511 கைதிகளில் 3,71,848 கைதிகள்-அதாவது 76.1% நபர்கள் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டோர், மீதமுள்ள 1,12,589 பேர் அதாவது 23% பேர் தண்டிக்கப்பட்வர்கள் ஆவர் . இதெல்லாம் NCRB ன் 2020 ம் ஆண்டு புள்ளிவிவரம்.

விசாரணையின்றி அடைக்கப்பட்ட கைதிகளில் முஸ்லீம்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரான எஸ்.சி, மற்றும் எஸ்.டி பிரிவினரும், சீக்கியர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அதாவது, இந்திய (2011)  மக்கள் தொகையில் அவர்களது பங்கை காட்டிலும், கைதிகளில் அவர்கள் பங்கு அதிகமுள்ளதாக NCRB  புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உதாரணமாக இந்திய மக்கள் தொகையில் 14.2% உள்ள முஸ்லீம் மதப்பிரிவு மக்கள் விசாரணையின்றி அடைபட்டுள்ள கைதிகளில் 19.6% உள்ளனர்.

எனவே தான் கபில் சிபலின் ஆதங்கம் நியாயமானது உண்மையானது என முஸ்லிம் சமூகம் கருதுகிறது.

இஸ்லாத்தின் பார்வையில் நீதியும்... நீதிபதிகளும்...

வணக்க வழிபாடுகளை எப்படி இறைவனுக்காக மட்டுமே செய்ய வேண்டும் என இஸ்லாம் கட்டளை இடுகிறதோ அதே போன்று மக்களுக்கிடையே நீதி பரிபாலனம் செய்வதையும் அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டும் என இஸ்லாம் கட்டளை பிறப்பிக்கிறது.

அந்த வகையில் நீதி பரிபாலனம் என்பது மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ‌ ؕ اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا‌ فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ‌ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராக ஆகிவிடுங்கள். உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுங்கள். (யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ அவர்) செல்வந்தராக இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். எனவே, நீதி செலுத்துவதில் சுய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் மாற்றிக் கூறினாலோ அல்லது (சாட்சி கூற) மறுத்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்:4:135)

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا‌ ؕ اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌ وَاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்கு சாட்சியாளர்களாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பு நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதி செலுத்துங்கள்! அதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்:5:8)

இந்த இரு வசனங்களை விருப்பு வெறுப்பின்றி படித்துப் பாருங்கள்! நீதிக்கு சாட்சியாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்ற அற்புதமான வசனங்கள் இவை.

அதாவது நீதி வழங்கும் போது சுய விருப்பத்தைப் பின்பற்றக் கூடாது. யாருக்காக நாம் சொல்கிறோமோ அவன் செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று இறைவன் அழுத்தமாகப் பதிய வைக்கின்றான்.

மேலும், சாட்சியைப் புரட்டினாலோ, சாட்சியைப் புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்; அநியாயக்காரர்களை தண்டிக்க  அல்லாஹ் போதுமானவன் என்ற கருத்தில் இறைவன் அச்சுறுத்துகின்றான்.

மேலும்,  ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை காரணமாக, குரோதம் காரணமாக நீதி செலுத்த விடாமல், அநியாயமாக நடக்க உங்களை உங்கள் உள்ளம் தூண்டி விட வேண்டாம் என்று கூறி, நீதிக்குத்தான் சாட்சியாக இருக்க வேண்டும் என்று இறைவன் தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றுகின்றான்.

உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒட்டு மொத்த மனிதர்களுக்கும் இந்த வசனம் அதி உன்னதமான பாடத்தை நடத்துகின்றது.

இறைவனை வணங்க தொழுகையில் ஈடுபடும் ஒருவர் கோபத்தோடு இருந்தாலோ, உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்தாலோ அவர் தொழுகையில் ஈடுபடக்கூடாது என்று கட்டளை பிறப்பிப்பது போன்றே நீதி பரிபாலனம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் நீதிபதி கோபத்தோடு இருக்கும் நிலையில் தீர்ப்பளிக்க வேண்டாம் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ عُمَيْرٍ، سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرَةَ، قَالَ

كَتَبَ أَبُو بَكْرَةَ إِلَى ابْنِهِ، وَكَانَ بِسِجِسْتَانَ، بِأَنْ لاَ تَقْضِيَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ يَقْضِيَنَّ حَكَمٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ»

அப்துர்ரஹ்மான் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- " (என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் (ஈரான்-ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். “நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்க வேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்’’ (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்). (நூல்: புகாரி)

வழக்காடுபவரின் சாதுரியத்தைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு தீர்ப்பளிக்க கூடாது..

வழக்காடுபவரின் சாதுரியத் தன்மையை வைத்துத் தீர்ப்பு சொல்வது குறித்து நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

أَنَّهُ سَمِعَ خُصُومَةً بِبَابِ حُجْرَتِهِ فَخَرَجَ إِلَيْهِمْ، فَقَالَ: «إِنَّمَا أَنَا بَشَرٌ، وَإِنَّهُ يَأْتِينِي الخَصْمُ، فَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَبْلَغَ مِنْ بَعْضٍ، فَأَحْسِبُ أَنَّهُ صَادِقٌ فَأَقْضِي لَهُ بِذَلِكَ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ مُسْلِمٍ، فَإِنَّمَا هِيَ قِطْعَةٌ مِنَ النَّارِ فَلْيَأْخُذْهَا أَوْ لِيَتْرُكْهَا»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் அறைவாசலில் (நின்று) சிலர் சப்தமிட்டுத் தகராறு  செய்து கொள்வதைக் கேட்டார்கள். ஆகவே, வெளியே வந்து அவர்களிடம் சென்று, “நான் மனிதன்தான். என்னிடம் வழக்காடுபவர் வருகின்றார். (அவரது அந்தரங்க நிலை எனக்குத் தெரியாது.) உங்களில் ஒருவர் மற்றவரைவிட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர் உண்மையே பேசுகிறார் என்றெண்ணி நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து விடுகிறேன்.

ஆகவே, அடுத்த முஸ்லிமுக்குரிய உரிமையை (உண்மை தெரியாமல்) யாருக்குரியதென நான் தீர்ப்பளித்துவிடுகிறேனோ (அவர் அதைப் பெற வேண்டாம். ஏனெனில்,) அதுவெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டுதான். (இதை நினைவில் கொண்டு விரும்பினால்) அதை அவர் எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது விட்டுவிடட்டும்’’ என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் உண்மை நீதிபதிகளுக்கு உரிய அடையாளங்களைக் கூறுகின்றான். 

நபி தாவூது [அலை] நபி சுலைமான் [அலை] அவர்களிடம் வந்த ஒரு  வழக்கையும், அதற்கு அவர்கள் வழங்கிய தீர்ப்பையும் கூறிவிட்டு, நீதிபதிகளிடம் இருக்கவேண்டிய மூன்று அம்சங்களை உபதேசமாக அல்லாஹ் கூறுகின்றான். 

இதை கல்விக்கடல் இமாம் ஹசன் பசரீ [ரஹ் ] அவர்கள் , திருக்குர்ஆனிலிருந்து நமக்கு பகுத்துத் தருகின்றார்கள்.

1. நீதி வழங்க கையூட்டும் எதுவும் வாங்கக் கூடாது! என்பதாகும்.

கையூட்டு வாங்கிக் கொண்டு நீதி வழங்கினால் நீதி சேர வேண்டியவருக்கு சேராது என்பது அனைவருக்கும் அறிந்த பேருண்மையாகும். அவர்கள் கையூட்டு வாங்காதிருக்க வழி , நீதிபதிகள் தன்னிறைவு கொள்ளுமளவு வாழ்க்கைப்படி அளிக்க வேண்டும். அதற்கு மேலும் அவர்கள் வாங்கினால், அவர்களை உடனடியாக எந்த இரக்கமும் காட்டாமல் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

2. மக்களை அஞ்சாமல் மாபெரும் வல்லோனாகிய அல்லாஹ்வை மட்டும் அஞ்ச வேண்டும் என்பதாகும்.

நீதிபதிகள் தீர்ப்பு வாசிக்கும் பொழுது அந்த நீதிதேவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான். அதில் அநீதி இருக்குமானால், அல்லாஹ் தங்களுக்கு தண்டனை வழங்கிவிடுவான்  என்ற அச்சம் இருக்கவேண்டும். சத்தியத்தை வாசிக்கும் பொழுது  , அதன் விளைவாக எவ்வளவு பெரிய தீங்கு விளையும் என்றிருந்தாலும், அச்சத்தியத்துக்கு ஒரு போதும் துணைபோகக் கூடாது. மனிதர்களை அஞ்சி தீர்ப்பு வழங்குவது  மக்களின் வயிற்றிலடிப்பதாகும். நீதிபதிகள் நீதியை நிலை நாட்டுவதனால், அவர்களுக்கு கெட்ட ஆபத்துகள் ஏற்படும் என்றால் அவர்களுக்கு தக்க பாதுகாப்புத்தருவது அரசின் கடமை.

3. அற்ப ஆசைகளுக்கு அடி பணியக்கூடாது என்பதாகும்.

ஏனென்றால் , வேண்டாத ஆசைகள் வளர வளரத்தானே அதை நிறைவேற்றிக் கொள்ள தீய வழிகளைக் கையாள நேரிடும். பண முதலைகளின்  பண மூட்டையைக் கண்டதும் பல்லிளிக்க நேரிடும்? எனவே அளவு கடந்த ஆசை நீதிபதிகளுக்கு கூடாது.

நீதிபதிகள் தம்மிடம் வழக்காடுபவர்களை தமது குடும்பத்தவராக மதிக்க வேண்டும். தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் எந்தவொரு தீர்ப்பை விரும்புவார்களோ அதையே மற்றவருக்கும் விரும்புதல் வேண்டும்.

وعن أبي هريرة  قالَ: قالَ رسُولُ اللَّه ﷺ: سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ في ظِلِّهِ يَوْمَ لا ظِلَّ إلَّا ظِلُّهُ: إِمامٌ عادِلٌ، وشابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّه تَعالى، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ في المَسَاجِدِ، وَرَجُلانِ تَحَابَّا في اللَّه: اجتَمَعا عَلَيهِ، وتَفَرَّقَا عَلَيهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ، وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخافُ اللَّه، ورَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فأَخْفَاها، حتَّى لا تَعْلَمَ شِمالُهُ مَا تُنْفِقُ يَمِينهُ، ورَجُلٌ ذَكَرَ اللَّه خالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ متفقٌ عَلَيْهِ.

மறுமையில் அல்லாஹ்வின் நிழலில் இன்பமடைவோரில், ''தமக்கும் வழங்கும் தீர்ப்பு போன்றே மற்றவருக்கும் வழங்கும் நீதிபதிகள் இருப்பர் '' என்று நபி பெருமானார் [ஸல்] நவின்றுள்ளார்கள். 

இந்த நாட்டின் பிரதமர் 75 வது பவள விழா சுதந்திர தின உரையில் பெண்களின் பாதுகாப்பு பேணப்படும் என்று உறுதி கூறுகிறார். அடுத்த நாள் பில்கீஸ் பானு எனும் பெண்ணின் உரிமையை அவரின் சொந்த மாநிலம் அவர் முதல்வராக இருந்து பணியாற்றிய  அரியணையில் அமர்ந்திருக்கும் அரசு பற்றிப் பறிக்கிறது. இது எந்த மாதிரியான நியாயம்? என்று தெரியவில்லை.

நீதித்துறையில் உள்ள ஊழலும் அரசின் கையிலுள்ள அதிகாரமும் இதை ஆளுபவர்களின் எண்ணத்திற்கேற்ப வளைக்க பெரிதும் உதவுகிறது. இதனால் பாதிக்கப்படுவது இந்திய மக்களே.

பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கடைசி புகலிடமாக கருதப்படும் உச்ச நீதி மன்றம் தனது கடமையில் இருந்து நழுவுவதையும் கடந்த சில ஆண்டுகளில் கண்ணுற்றோம், இன்றும் காண்கிறோம்.

தேர்தல் நன்கொடைபத்திர வழக்கு, ஆதார் வழக்கு, அரசியல் பிரிவு 370 ரத்து, இந்திய குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்த வழக்குகளை உச்ச நீதி மன்றம் உரிய விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் இழுத்தடிப்பது உண்மையில் இந்திய மக்களுக்கு மறுக்கப்படும் நீதிதானே! இதனால் பயன்பெறுவது  Luxurious litigant  ஒன்றிய அரசுதான் என்பதை மறுக்கவியலுமா?

எனவே, நீதிபதிகள் நீதி பரிபாலன விஷயத்தில் இறைவனை பயந்து அஞ்சி தீர்ப்பு வழங்க வேண்டும்.

ஏனெனில், இறைவனின் கோபமும் தண்டனையும் கடுமையானது.

اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ ؕ

நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகக் கடுமையானது". ( அல்குர்ஆன்: 85: 12 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அநியாயம் விளைவிக்கும் நீதிபதிகளிடம் இருந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து அருள் புரிவானாக!!

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!


2 comments:

  1. அருமையான காலத்திற்கு ஏற்ற தலைப்பு உஸ்தாத்....

    இந்த தலைப்பில் சிந்தித்து சுயமாக குறிப்பெடுக்கலாம் என்ற ஆவலுடன் முயற்சி செய்து கொண்டிருந்தேன், உங்களுடைய இந்த முயற்சி என்னுடைய முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறது....

    அல்ஹம்துலில்லாஹ்....

    எங்களுடைய கல்வி ஞானத்திற்காகவும் துவா செய்யுங்கள் உஸ்தாத்.....

    நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது எவ்வாறு சந்திப்பது என்று தெரியவில்லை....

    ReplyDelete
  2. மாஷா அல்லா அருமையான கட்டுரை குறுகிய செய்திகளோடு முடித்து விட்டீர்களே மௌலானா இன்னும் கொஞ்சம் எழுதினால் மிக நன்றாக இருக்குமே மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மௌலானா

    ReplyDelete