Thursday 25 August 2022

குப்பைகளை இங்கே கொட்டாதீர்!!!

 

குப்பைகளை இங்கே கொட்டாதீர்!!!

இந்த உலகத்தில் குப்பைகள் இல்லா  இடமில்லை என்று சொல்லும் 

அளவுக்கு குப்பைகள் குவிந்து வருகின்றன.

நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளால் வரும் ஆபத்துக்களை பற்றி பேசும் அளவுக்கு  நம்மிடம் நாமே கொட்டும் குப்பைகளால் ஏற்படும் ஆபத்துக்களை உணராமல் இருந்து வருகிறோம்.

ஒரு புறம் நம் வயிறு குப்பைகள் நிரப்பப்படும் குப்பை தொட்டியாக மாறி வருகிறது.

இன்னொரு புறம்  நம் ஐந்து புலன்கள்  மூலம் ஒவ்வொரு கணமும் கணக்கின்றி நம் மனதில் குப்பைகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் நம் வயிற்றிலும் மனதிலும் குவிந்துள்ள குப்பைகளை நாம்  அறிவதில்லை  ,அறிய முடிவதும் இல்லை அவற்றை அகற்றும் வழியும் தெரியவில்லை

உண்மையை சொல்லவேண்டுமெனில் அதை அகற்றும் எண்ணமே இங்கே நம்மில் பலருக்கும் இல்லை.

ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மண்ணில் எந்த குப்பையைப்

போட்டாலும் பூமி அதை உரமாக மாற்றி உயிர்களும் தாவரங்களும் உயிர் வாழ வகை செய்திடுகிறது.

இன்று அதில் கூட மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மிகப் பெரிய எச்சரிக்கை எல்லாம் விடப்படுகிறது.

ஆனால், நம் வயிற்றில் விழும் குப்பைகள் நம் மனதில் விழும் குப்பைகளால் நாம் உயிர் வாழ்வதே இன்று கேள்விக்குறியாகி வருகிறது.

வயிறு குப்பை தொட்டியானால்?....

இன்று மனித சமூகம் சந்திக்கும் பல்வேறு நோய்களுக்கு காரணம் வயிறு குப்பை தொட்டியாக இருப்பது தான் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய், இதய நோய், சர்க்கரை நோய் இந்த வரிசையில் தற்போது உடல் பருமன் பாதிப்பும் சேர்ந்துள்ளது. 

1975ஆம் ஆண்டிற்கு பிறகு உலகில் உள்ள மக்கள் தொகையில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக  உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 135 மில்லியன் மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியன் ஜர்னல் ஆஃப் கம்யூனிட்டி மெடிசின் தெரிவித்துள்ளது. உடல் பருமனாகி விட்டால் அத்துடன் சேர்ந்து பல்வேறு விதமான நோய்களும் வரத் தொடங்கும்.

உடல் பருமன் எதனால் உண்டாகிறது? இது எப்படிப்பட்ட பாதிப்புகளை உண்டாக்கும் என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

உடலில் அதிக கொழுப்பு சேர்வதால் உடல் பருமனாகிறது. ஒருவரின் உடல் நிறை குறியீட்டெண்ணை ( Body Mass Index (BMI)) வைத்து அவர் பருமனாக உள்ளாரா, இல்லையா? என்பதை அறிய முடியும். BMI 25-க்கு மேல் இருந்தால் அதிக எடை என்று அர்த்தம், இதுவே 30-க்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்று அர்த்தம். இதை ஒருவரின் உடல் எடை மற்றும் உயரத்தை வைத்து கணிக்கப்படுகிறது.

உடல் நோய் மற்றும் உளவியல் நோய்...

உடலில் அதிக கொழுப்பு சேர்தல், அதிக சர்க்கரை சேர்தல், எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் இருத்தல் போன்றவற்றால் தான் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நீண்ட கால பாதிப்புகள் தரும் நோய்கள் உருவாகலாம். இத்துடன் சில வகையான புற்றுநோய்களும் ஏற்படலாம், மேலும் ஒருவருக்கு உடல் பருமனாக இருந்தால் அது அவரின் முழு உடலில் செயல்பாட்டை பாதிக்கும். என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் பருமனாக இருப்பதால் பலரின் கேலி கிண்டலுக்கு ஆளாக வாய்ப்பு அதிகம். இது ஒருவரின் மனநலனை நேரடியாக பாதிக்கும். இதனால் தங்களது வாழ்க்கையின் மீது வெறுப்பு அதிகம் இருப்பது போன்று உணர்வார்கள். தனிமை, மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளும் இவற்றால் ஏற்படுகிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வயிறும் நம் கடமையும்...

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் நாம் அதிகம் பேண வேண்டியது நமது வயிற்றைத்தான். 

நாம் சாப்பிடக்கூடிய உணவுகளும், அருந்தக்கூடிய பானங்களும் வயிற்றினுள் சென்று அதை செரிமானமாக்கி நமது உடலுக்குத் தேவையான சக்திகளை வழங்கக்கூடிய வேலைகளைச் செய்வது நமது வயிறுதான். பல இயந்திரங்கள் சேர்ந்து செய்யக்கூடிய மிகப்பெரிய வேலைகளை நமது வயிற்றில் இருக்கக்கூடிய உறுப்புகள் செய்து முடிக்கின்றன. 

அவைகள் நம் கற்பனைக்கு எட்டாத காரியங்களை எல்லாம் நமக்குத் தெரியாமலேயே செய்து கொண்டிருப்பது வல்ல இறைவன் நம் மீது புரிந்த மிகப்பெரிய கருணையாகும்.

முதலில் நாம் அதற்காகவே ஒரு முறை நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம். (அல்ஹம்துலில்லாஹ்) எல்லாப்புகழும் இறைவனுக்கே! 

மிகவும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய வயிற்றுக்குள் கண்டதையும் கண்ட நேரத்தில் சாப்பிட்டு அல்லது அளவுக்கதிகமாக சாப்பிட்டு, அதன் காரணமாக நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறோம். 

உணவும் நமது கடமையும்...

உணவு உண்ணும் விஷயத்தில் மக்கள் பல தரப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.

வாழ்வதற்காக உண்பவர்கள் சிலர் இருக்கிறார்கள், இவர்கள் இலட்சியவாதிகள் தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்பவர்கள். 

உண்பதற்காகவே சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உணவு உண்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள். நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள். அப்படியே சாப்பிட்டாலும் கட்டுப்பாடுகளை எல்லாம் பேண மாட்டார்கள். இன்னும் சிலர் உணவே இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டு வாழ்பவர்கள்.

 

இந்த மூன்று வகையினர் தான் உடல் ரீதியான  பல வியாதிகளையும், உடல் பருமனையும் விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். 

எனவே, உணவு விஷயத்தில் நாம் பல்வேறு வழிகாட்டல்களை தெரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். அதுவும் இஸ்லாமிய வழிகாட்டல்களை நாம் பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம்.

உணவும் இஸ்லாமிய வழிகாட்டலும்...

மனித வாழ்வில் உணவு என்பது இன்றியமையாத ஒன்று என்பதை ஆதம் (அலை) அவர்களைப் படைத்து சுவனத்தில்  உலவ விட்ட போதே அல்லாஹ் உணர்த்தி விட்டான். மேலும் உண்ணும் உணவில் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியம் என்பதையும் அல்லாஹ் அப்போதே வரையறுத்தும் விட்டான்.

உணவுக் கட்டுப்பாட்டை மீறியது தான் இந்த உலகுக்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அனுப்பப்பட்டதற்கான பிரதான காரணம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள  வேண்டும். . எச்சரிக்கையும்....

1.       அளவை மீறிச்சாப்பிடக் கூடாது. 

 "உண்ணுங்கள், பருகுங்கள்; 'இஸ்ராஃப்' - வீண் விரயம் செய்யாதீர்கள்; நிச்சயமாக (அல்லாஹ்வாகிய) அவன் 'இஸ்ராஃப்' - வீண் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை."
(
அல்குர்ஆன்: 7:31)

இங்கே 'இஸ்ராஃப்' என்பதன் நேரடிப் பொருள் 'எல்லையை மீறுதல்' என்பதாகும். எல்லையை மீறுதல் பல வகைப்படும். அதில் அளவை மீறிச் சாப்பிடுதலும் ஒரு வகையாகும். இதன் காரணமாகவே அளவை மீறிச் சாப்பிடுதல் அனுமதிக்கத் தக்கதல்ல என விரிவுரையாளர்கள் சிலர் விளக்கம் தருகிறார்கள். ( நூல்: மஆரிபுல் குர்ஆன் )

روي عن أمير المؤمنين علي (رضي الله عنه) لابنه الحسن (رضي الله عنه): (يا بني!.. ألا أعلمك أربع كلماتٍ تستغني بها عن الطب؟.. فقال: بلى، قال: لا تجلس على الطعام إلا وأنت جائعٌ، ولا تقم عن الطعام إلا وأنت تشتهيه، وجوّد المضغ، وإذا نمت فاعرض نفسك على الخلاء.. فإذا استعملت هذا استغنيت عن الطب.. وقال: إنّ في القرآن لآيةً تجمع الطب كله: ﴿…كُلُواْ وَاشْرَبُواْ وَلاَ تُسْرِفُواْ﴾).

அலீ ரலி அவர்கள் தங்களுடைய மகன் ஹஸன் ரலி அவர்களுக்கு செய்த உபதேசத்தில் ஒன்று:- மகனே!   மருத்துவமனை வாழ்க்கையை விட்டும் உன்னை தூரமாக்கிடும் நான்கு விஷயங்களை உனக்கு கூறட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு, ஆம் தந்தையே அவசியம் கூறுங்கள்! என்று ஹஸன் ரலி அவர்கள் பதில் கூறவே, 1. பசித்தால் மட்டுமே உணவை உண்ணு. 2. இன்னும் உண்ண வேண்டும் எனும் ஆசை வரும் போதே உணவுத் தட்டில் இருந்து எழுந்து விடு. 3. உணவை மென்று விழுங்குவாயாக! 4. அனைத்து சிந்தனைகளையும் தூக்கி வைத்து விட்டு உறங்குவாயாக! இவைகளை சரியாக பேணி வந்தால் மருத்துவமனை வாழ்க்கையை விட்டும் தூரமாகி விடுவாய். ஏனெனில், குர்ஆனில் ஒரு வசனம் ஒட்டுமொத்த நோய்க்கான நிவாரணிகளை கூறுகிறது என்று சொல்லி அல்குர்ஆன்: 7:31 வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

قال عمر - رضي الله عنه -:

 أيها الناس، إياكم والبطنة من الطعام، فإنها مكسلة عن الصلاة، مفسدة للجسد، مورثة للسقم، وإن الله تبارك وتعالى يبغض الحبر السمين، ولكن عليكم بالقصد في قوتكم، فإنه أدنى من الإصلاح، وأبعدَ من السَرَف، وأقوى على عبادة الله، وإنه لن يهلك عبد حتى يؤثر شهوته على دينه. [موسوعة ابن أبي الدنيا 4/ 92].

ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஒருமுறை தங்களது குத்பாவில் நீங்கள் வயிறு நிரம்ப உண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். அப்படி வயிறு நிரம்ப உண்ணுவதால் தொழுகையில் சோம்பலும் உடலுக்கு நோவினையும் உண்டாகிறது. எனவே உணவில் நடுநிலையைக் கையாளுங்கள். அது உங்களின் பெருமையை தூரமாக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும். வணக்கம் புரிய சக்தி தரும். அறிந்து கொள்ளுங்கள்! மனிதன் தனது மார்க்கத்தை விட மனோ இச்சையை தேர்ந்தெடுக்கா தவரை அவன் அழியமாட்டான்என்று கூறியுள்ளார்.

பிரபல மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பார்ட் என்பவர் மிக நீண்ட ஆய்விற்கு பிறகு எப்போதும் தேவையை விட அதிகம் சாப்பிடும் மனிதர்களுக்கு கீழ்க்கண்ட நோய்கள் துளிர்விடுவதாக கூறியுள்ளார்.

 

1. Brain Diseases (மூளை சம்பந்தப்பட்ட நோய்கள்)

 

2. Eyes Diseases (கண் சம்பந்தப்பட்ட நோய்கள்)

 

3. E.N.T. Diseases (காது. மூக்கு,தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள்)

 

4. Chest & Loung Diseases (தோள் புஷம், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள்)

 

5. Heart & Volves Diseases (இதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்)

 

6. Gall Bladder Diseases (பித்தப்பை சம்பந்தப்பட்ட நோய்கள்)

 

7. Diabetese (நீரழிவு நோய்)

 

8. High Blood Pressure (அதிக இரத்த அழுத்தம்)

 

9. Depression (மன அழுத்தம்)

 

மேலும் அவர் தேவையை விட அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மேற்கண்ட நோய்களின் அறிகுறிகள் தாக்குவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதால் அனைவரும் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)

பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உணவை நன்றாக அரைத்து சாப்பிடாவிட்டால் பற்கள் வெகுசீக்கிரம் பழுதடைந்து விடுகிறது. வாயில் ஒரு பக்கமாகவே அரைத்து சாப்பிட்டாலும் மறுபக்கம் பழுதடைந்து விடுகிறது. எனவே உணவை நன்றாக அரைத்துச் சாப்பிடுங்கள். மட்டுமின்றி சரியாக அரைக்காமல் அப்படியே முழுங்கினால் குடலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வயிறு அழற்சி (Stomack Inflamation)உண்டாகிறது. வயிற்று அமிலத்தன்மை (Stomack Asititie) குறைவு ஏற்பட்டு நோய் உண்டாவதுடன் செரிமானம் (Digestive System) சரியாக ஏற்படுதில்லைஎன்று கூறுகிறார்கள். (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)

2.       ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவை உண்ணக் கூடாது.

ஆரோக்கியமும், உணவு உண்ணும் பாக்கியமும்  இறைவன் அடியார்களுக்கு வழங்கும் மகத்தான அருட்கொடையாகும்.

فعن عبيد الله بن مِحْصَن الأنصاري –رضي الله عنه- أن رسول الله صلى الله عليه وسلم قال " 

من أَصْبَحَ مِنْكُمْ آمِنًا في سِرْبِهِ، مُعَافًى في جَسَدِهِ، عِنْدَهُ قُوتُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ له الدُّنْيَا ".رواه الترمذي ( 2346)

அப்துல்லாஹ் இப்னு மிஹ்ஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: எவர் படுக்கையில் இருந்து நிம்மதியோடு எழுகின்றாரோ, எழுந்த அன்றைய நாளில் உடலில் ஆரோக்கியத்தை உணர்கின்றாரோ, எழுந்த அன்றைய நாளில் உணவை உண்கின்றாரோ அவருக்கு இந்த உலகம் முழுவதும் கிடைத்ததற்குச் சமமாகும்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                  ( நூல்: திர்மிதீ )

இப்படிப்பட்ட ஆரோக்கியத்தை வீணாக்கும் பழுது படுத்தும் உணவுகளை உண்பதை விட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

உணவுகளை இரண்டு வகையாக இஸ்லாம் பிரிக்கின்றது . 1) ஹலால் (சாப்பிட அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவு). 2) ஹராம் (சாப்பிட அனுமதிக்கப்படாத தூய்மையற்ற உணவு) அந்த வகையில் மனித ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் உணவு முறைகளை‌த் தடுக்கிறது இஸ்லாம்.
மனிதனின் ஆரோக்கியத்திற்கு எதிராக இருக்கும் அத்தனை உணவுகளும் தடுக்கப்பட்ட (ஹராம்) உணவுகளாகும்.

நம்பிக்கை கொண்டோரே, நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்என்று திருக்குர்ஆன் (2:172) சுட்டிக்காட்டுகிறது. 

உங்கள் கரங்களால் உங்களை நீங்களே அழிவுக்குள்ளாக்காதீர்கள். (அல்குர்ஆன்: 2: 195 ) 

3.  வயிறு புடைக்க சாப்பிடக் கூடாது.
மிக்தாம் இப்னு மஅதீகரிப் (ரலி) அறிவிக்கின்றார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "ஆதமின் மகன் (மனிதன்) இட்டு நிரப்பக் கூடிய பைகளில் வயிறை விட மோசமானது வேறெதுவுமில்லை. ஆதமின் மகனுக்கு அவனது முதுகை நிமிர்த்தக் கூடிய சில கவளங்களே போதும். அதற்கு மேலும் அவன் உண்டே ஆக வேண்டுமானால் (வயிற்றின்) மூன்றில் ஒரு பாகத்தை தனது உணவுக்காகவும், இன்னொரு மூன்றில் ஒரு பாகத்தை தனது பானத்திற்காகவும், மற்றொரு மூன்றில் ஒரு பாகத்தை தனது சுவாசத்திற்காகவும் அவன் ஒதுக்கிக் கொள்ளவும்." ( நூல்: திர்மிதீ  மாஜா முஸ்னத் அஹ்மத் )

அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "வயிறுதான் உடலின் தடாகம் போன்று இருக்கிறது. உடலின் அனைத்து குருதிக் குழாய்களும் நரம்புகளும் அதிலிருந்து பருகுகின்றன. வயிறு சீராக இருக்குமானால் அனைத்து நாளங்களும் அதிலிருந்து ஆரோக்கியமான உணவைப் பருகிச் செல்லும். வயிறு சீர்குலைந்து இருக்குமானால் அனைத்து நாளங்களும் நோய்களைக் கவ்விக் கொண்டு உடல் முழுதுக்கும் பரவிச் செல்லும். ( நூல்: பைஹகீ )

4. தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு உண்ண வேண்டும்.

உணவு உண்பதைப் பொறுத்த வரையில் வயதுக்கு ஏற்ற உணவு, உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு, ஆண் பெண் என்ற வேறுபாட்டிற்கு தக்க உணவு, பசியின் அளவுக்கு ஏற்ப உணவு, ருசிக்கு தக்க உணவு என அவரவர் அந்தந்த தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளையே உண்ண வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டுகிறது. وقال سعيد بن جبير: صنعت لابن عباس - رضي الله عنه - وأصحابه ألوانا من الطعام والخبيص، فقال لي: يا سعيد إنا قوم عرب، فاصنع لنا مكان هذه الألوان الثريد (1)، ومكان هذه الأخبصة الحيس (2)، ولولا أنك رجل منا أهل البيت ما قلت لك. [موسوعة ابن أبي الدنيا 4/ 124].

ஸயீத் இப்னு ஜுபைர் ரலி அவர்கள் இப்னு அப்பாஸ் ரலி மற்றும் அவர்களின் தோழர்களுக்காக ஒரு முறை (கலர் கலரான) வகை வகையான உணவுகளைத் தயார் செய்து வைத்தார்கள். அதைப் பார்த்த இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் நாங்கள் அரபுகள் எங்கள் பகுதியின் உணவுகளை எங்களுக்கு இன்னின்ன வகையில் (கலரில்) தயார் செய்து தாருங்கள் " என்று கூறினார்கள்.

இன்றைக்கு மேற்கத்திய, ஐரோப்பிய, அரபுலக, சைனீஸ், பர்மீய உணவு வகைகளை நாம் உண்டு வருகிறோம்.

அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கே அந்தந்த பகுதிகளின் உணவுகள் வெகுவாக ஒத்துக் கொள்ளும். மேலும், அந்தந்த தட்பவெப்ப நிலையைப் பொறுத்து அவர்களின் உடலுக்கு தேவையான கலோரிகளை கொடுக்கும்.

1. வயதுக்கு ஏற்ற உணவு.

குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்கு தாய்ப்பாலே குழந்தையின் பிரதான உணவாகும்.

وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا لَا تُضَارَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَهُ بِوَلَدِهِ

தம் குழந்தைகளுக்கு பால்குடியை நிறைவு செய்ய வேண்டும் என்று தந்தையர்களில் எவராவது விரும்பினால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரண்டாண்டு காலம் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். இந்நிலையில், அத் தாய்மார்களுக்கு நல்ல முறையில் உணவளிப்பதும், உடை கொடுப்பதும் குழந்தைகளின் தந்தையர்கள் மீது பொறுப்பாகும்

ஆனால், எவர் மீதும் அவரது சக்திக்கு ஏற்பவே தவிர பொறுப்பு சுமத்தப்பட மாட்டாது. தாயும் தனது குழந்தைக்கு பாலூட்டும் காரணத்தால் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட மாட்டாள். தந்தையும் தனது குழந்தையினால் சிரமத்திற்கு உள்ளாக்கப் படமாட்டார்”. பார்க்க: முழு இறைவசனத்தையும்              ( அல்குர்ஆன்: 2: 233 )

ஆனால், இன்று பல்வேறு காரணங்களால் குழந்தை பருவத்தில் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமலேயே பல்வேறு குழந்தைகள் ஆரோக்கிய கேடுகளுக்கு ஆளாகின்றன.

இரண்டு ஆண்டுகள் கழித்து தாய்ப்பால் நிறுத்திய பின்னர் எளிதில் ஜீரணமாகும் அல்லது நாம் உண்ணும் உணவை நம் குழந்தைகளுக்கு உண்பதற்கு வழங்க வேண்டும். பின் வரும் சம்பவத்தில் 3 வயதைத் தொட்டு நிற்கும் குழந்தைக்கு அவர்கள் உண்ணும் உணவான ரொட்டியை குழந்தைக்கு உண்ணக் கொடுத்தார்கள் என்பதைப் பார்க்க முடிகின்றது.

மாயிஸ் (ரலி) அவர்களுக்கு விபச்சாரம் செய்ததற்கான குற்றவியல் தண்டனை வழங்கப்பட்டு சில நாட்கள் கூட கழிந்திருக்காத நிலையில் அண்ணலாரையும், நபித்தோழர்களையும் அதிர்ச்சியடையச் செய்த ஓர் சம்பவம் நபிகளாரின் சபையில் நடந்தேறியது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்திற்கு அஸ்த் குலத்தின் கிளையான ஃகாமிதிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வருகை தந்தார்கள்.

வந்த அந்தப் பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். எனக்கு உரிய தண்டனையை நிறைவேற்றி என்னை தூய்மை படுத்துங்கள்! என்றார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணியை திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்பெண் மறு நாளும் அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து நின்று முன்பு சொன்னது போலவே சொன்னார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் திரும்பிச் செல்லுமாறு கூறிய போது, அப்பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னை திருப்பியனுப்புகின்றீர்கள்? மாயிஸ் இப்னு மாலிக் {ரலி} அவர்களின் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போன்றல்லவா என் விஷயத்திலும் நடந்து கொள்கின்றீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக இருக்கின்றேன்என்று கூறினார்.

நபி {ஸல்} அவர்கள் ஆச்சர்யத்தோடு நீயா அது?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ஆம்என்றார்.

அப்படியானால் உமது வயிற்றினுள் உள்ள குழந்தையை பெற்றெடுத்து விட்டு வா!என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அப்பெண்மணி ஒரு துணியில் அந்தக் குழந்தையை சுற்றியெடுத்துக் கொண்டு, மாநபி {ஸல்} அவர்களிடம் வந்து இது நான் பெற்றெடுத்த குழந்தைஎன்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், “நீ சென்று அந்தக் குழந்தைக்கு அமுதூட்டு! பால்குடி மறக்கடிக்கப்பட்ட பின் வா! என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

அமுதூட்டும் காலம் நிறைவடைந்த பின்னர், அக்குழந்தையை அழைத்துக் கொண்டு, அக்குழந்தையின் கையில் ரொட்டித் துண்டு ஒன்றை கொடுத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது என் குழந்தை உணவை உட்கொள்ள ஆரம்பித்து விட்டதுஎன்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அக்குழந்தையை அன்ஸாரிகளில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.

அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, அவருக்காக மார்பளவு குழி தோண்டப்பட்டது.

பின்னர் அக்குழிக்குள் அப்பெண் நிறுத்தி வைக்கப்பட்ட பின் கல்லெறியுமாறு மக்களுக்கு கட்டளையிட, மக்கள் அவர் மீது கல்லெறிந்து அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றினார்கள்.

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்து அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். பீறிட்டு வந்த இரத்தம் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முகத்தில் தெரித்தது.

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் அப்பெண்ணை சபித்தார்கள்; ஏசினார்கள்.

இதை அருகில் நின்று கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அப்பெண்மணி அழகிய முறையில் தவ்பா பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார்.

பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்.என்று கூறினார்கள்.

பிறகு அப்பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு நபித்தோழர்களை பணித்தார்கள்.

அவருக்காக ஜனாஸா தொழுகையை தாமே தொழவைத்தார்கள். பின்னர் அப்பெண்மணி நல்லடக்கமும் செய்யப்பட்டார்.

( நூல்: முஸ்லிம், பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா, புகாரி, பாபு மன் தரகல் ஃபவாஹிஷ், ஹதீஸ் எண்: 6820, 6824, மிஷ்காத், கிதாபுல் ஹுதூத், பக்கம்: 310 )

5.பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும்..

*وعن معاذ بن جبل - رضي الله عنه - قال: ثلاث من فعلهن فقد تعرض للمقت؛ الضحك من غير عجب، والنوم من غير سهر، والأكل من غير جوع. [الحلية (تهذيبه) 1/ 185].

முஆத் இப்னு ஜபல் ரலி அவர்கள் கூறினார்கள்:- மூன்று விஷயங்களை எவர் செய்கிறாரோ அவர் நோவினைக்கு உள்ளாவார். அதில் ஒன்று "பசியில்லாத போதும் சாப்பிடுபவர்" என்று.

இன்று வளர்ச்சியடைந்த நகர்ப்புறங்களில் அனைத்து நேரங்களிலும் உணவகங்களில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருப்பதை நாம் பார்க்கின்றோம்.

முன்மாதிரி மனிதர்களின் உணவு உண்ணும் பழக்கங்கள்...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயுள் முழுவதும் (தமது மரணம் வரை) எப்பொழுதும் இரண்டு தினங்கள் தொடர்ந்து கேழ்வரகு ரொட்டியையும் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை." ( அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: திர்மிதீ. )

"அபூஹுரைரா (ரலி) அவர்கள் (ஒரு நாள்) தம் முன்னே பொறிக்கப்பட்ட ஓர் ஆட்டை(ச் சாப்பிடுவதற்காக) வைத்திருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களை(த் தம்முடன் சாப்பிட வருமாறு) அழைத்தார்கள். ஆனால் அன்னார் அவர்களுடன் சாப்பிட மறுத்து "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டியால் வயிறு நிரம்பாத நிலையிலேயே இந்த உலகிலிருந்து சென்று விட்டார்கள்" என்று கூறினார்கள்."

அறிவிப்பவர்: சயீத் (ரஹ்); (நூல்:புகாரி-541)

وعَنْ نَافِعٍ قَالَ : كَانَ ابْنُ عُمَرَ لاَ يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ ، فَأَدْخَلْتُ رَجُلًا يَأْكُلُ مَعَهُ ، فَأَكَلَ كَثِيرًا ، فَقَالَ : يَا نَافِعُ ! لاَ تُدْخِلْ هَذَا عَلَيَّ ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ :
( الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ ) رواه البخاري (5393) ومسلم (2060)

இப்னு உமர் ரலி அவர்கள் எப்போதும் யாராவது ஒரு மிஸ்கீனுடன் தான் உணவு உண்ணுவார்கள். அப்படி ஒரு நாள் ஒரு மிஸ்கீனுடன் உணவு உண்டார்கள். அவர் அதிகமாக உண்டார். உணவு உண்டு சென்றதும் தமது பணியாளர் நாஃபிஉ ரலி அவர்களை அழைத்து " இனி இவரை நம்மோடு உணவு உண்ண அழைத்து வர வேண்டாம். ஏனெனில், நபி ஸல் அவர்கள் கூறினார்கள் " ஒரு இறைநம்பிக்கையாளர் ஒரு குடலில் உண்பார். மாற்றான் ஏழு குடலில் உண்பான்" என்றார்கள். ( நூல் புகாரி)

روي عن عائشة رضي الله عنها أنها قالت : ( أول بلاء حدث في هذه الأمة بعد نبيها الشبع ؛ فإن القوم لما شبعت بطونهم سمنت أبدانهم ، وضعفت قلوبهم ، وجمحت شهواتهم )

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு உண்டான முதல் பித்அத் வயிறு நிறையச் சாப்பிடுவதுதான். மனிதர்களின் வயிறு நிரம்பி விடும் போது அவர்களின் உள்ளங்கள் உலகின் பக்கம் சாயத் துவங்கி விடுகின்றன."

روى أسد بن موسى من حديث عون بن أبي جحيفة عن أبيه قال
أكلت ثريدا بلحم سمين فأتيت النبي صلى الله عليه وسلم وأنا أتجشأ ، فقال : « كفَّ عنا جشاءك ، فإن أكثرهم شبعا في الدنيا أطولهم جوعا يوم القيامة »

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சபையிலே நான் ஏப்பம் விட்டேன். அதற்கு (நபி) அவர்கள் "உமது ஏப்பத்தை எங்களை விட்டும் தடுத்து வைப்பீராக. ஏனெனில், இவ்வுலகில் அதிகம் தனது வயிற்றை நிரப்புபவர்களே மறுமையில் நீண்ட நேரம் பசிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்" எனக் கூறினார்கள்.

عن أبي هريرة رضي الله عنه قال: دخلت على النبي صلى الله عليه وسلم وهو يصلي جالسا, فقلت: يا رسول الله! اراك تصلي جالسا فما أصابك؟ فقال النبي صلى الله عليه وسلم: الجوع يا أبا هريرة! فبكيت, فقال: لا تبك يا أبا هريرة, فانّ شدة الحساب يوم القيامة لا تصيب الجائع اذا احتسب في دار الدنيا.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் நான்  அல்லாஹ்வின்  தூதர் {ஸல்} அவர்களின் வீட்டிற்கு  அண்ணலாரைக்  காண்பதற்காகச்  சென்றேன்.அப்போது, அண்ணலார் வீட்டில் உட்கார்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.

நான் நபி {ஸல்} அவர்கள் தொழுது முடிக்கும் வரை காத்திருந்து விட்டு, தொழுது முடித்த  பின் அல்லாஹ்வின் தூதரே! தாங்கள்  உட்கார்ந்து தொழ நான் கண்டேனே!  உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?” என  வினவினேன்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்:-  அபூஹுரைராவே! பசி தான் காரணம்  என்றார்கள். அதைக் கேட்டதும் நான் அழுது  விட்டேன். அப்போது, அல்லாஹ்வின் தூதர்  {ஸல்} அவர்கள் என்னை நோக்கி அபூஹுரைராவே! இப்போது  நான் என்ன  சொல்லிவிட்டேன்! என்று அழுகின்றீர்கள்?”  நாளை மறுமை நாளில் கேள்வி கணக்கின்  கஷ்டத்தை உணரும் பட்சத்தில் உலகில் பசியோடு இருக்கும் நிலை ஒன்றும் பெரிதாகத் தெரியாது என்று பதில் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )

ஒரு நாள் நபி {ஸல்} அவர்கள் தமது அருமை  மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களின்  வீட்டிற்கு பேரர்களான ஹஸன், ஹுஸைன்  ( ரலி அன்ஹுமா ) இருவரையும்  பார்க்கச் சென்றார்கள்.

வீட்டில் பேரர்கள் இல்லாததைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் ஃபாத்திமாவே!  குழந்தைகளை காணவில்லையே எங்கே  சென்றிருக்கின்றார்கள்?  என்று  கேட்டார்கள்.

உங்களது மருமகன் தான் அவர்களை ( ஓர்  இடத்தின் பெயரைச் சொல்லி) அங்கே  விளையாட அழைத்துச் சென்றிருக்கின்றார் என்று ஃபாத்திமா (ரலி) பதில் கூறினார்கள்.

குறிப்பிட்ட இடத்தில் அன்னையர் திலகம்  கூறியவாறே தம் மகன்களோடு அலீ (ரலி)  அவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை நபி {ஸல்} அவர்கள் கண்டார்கள்.

அண்ணலாரைக் கண்டதும் பேரர்கள் 

இருவரும் பாசத்தோடு நபி {ஸல்} அவர்களின் கரங்களில் தஞ்சம் புகுந்தனர்.  அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பேரர்களின் தலையை அன்பாக வருடி விட்டார்கள்.

பின்னர், அலீ (ரலி) அவர்களை நோக்கி அலீ அவர்களே! இந்த உச்சி வெயிலில் ஏன்  குழந்தைகளை விளையாட அழைத்து வந்தீர்கள்?”  என்று அன்பு கலந்த கண்டிப்போடு  வினவினார்கள்.

அதற்கு, அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! வீட்டில் உண்பதற்கு உணவேதும் இல்லை. ஏற்கனவே, இருவரும் நேற்றிலிருந்துஒன்றும் உண்ணவில்லை. நானும்,  ஃபாத்திமாவும் தான். விளையாட அழைத்து வந்தால்  விளையாட்டின்  கவனத்தில்  உணவை மறந்து விடுவார்கள் அல்லவா? அது தான் அழைத்து வந்தேன் என்று பதில்  கூறினார்கள்.                  ( நூல்: திர்மிதீ )

ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள்  கூறுகின்றார்கள்: நாங்கள் அல்லாஹ்விற்காக மேற்கொண்ட  யுத்தம் ஒன்றின் பயணத்தின் போது உண்ண உணவில்லாமல் சிரமப்பட்டோம். பல நாட்கள் இப்படியே கழிந்தது. ஒரு நாள் எனக்கு பசி  தாங்க வில்லை. அங்கிருந்த முள் மரம்  ஒன்றின் இலை, தளைகளைப் பறித்து கழுவி சாப்பிட்டேன். அனைத்துத் தோழர்களும்  என்னைப் பார்த்து சாப்பிட்டனர். இறுதியில்  எங்களின் மலம் கால்நடைகளின்  புழுக்கையைப் போல் இருப்பதை நாங்கள்  உணர்ந்தோம்.       ( நூல்: புகாரி )

ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்விற்காக மேற்கொண்ட யுத்தம்  ஒன்றின் பயணத்தின் போது உண்ண  உணவில்லாமல் சிரமப்பட்டேன். ஒரு நாள்  இரவு சிறுநீர் கழிப்பதற்காக ஓரிடத்தில்  ஒதுங்கினேன். அப்போது என் சிறுநீர் பட்ட  இடத்தில் ஏதோ சரசர வென்று சப்தம்  வருவதை உணர்ந்து அதைக் கையால் எடுத்துப் பார்த்தேன். அது காய்ந்து போன  ஒட்டகத்தின் தோலின் ஒரு பகுதியாக  இருந்தது. மறுநாள் காலை அதை நான் சுத்தமாக கழுவி,நன்கு காயவைத்து, பொடியாக்கி, பின்பு நன்கு உலர வைத்து அதை தண்ணீரோடு  சேர்த்து சாப்பிட்டேன்”.                 ( நூல்: திர்மிதீ )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்  தங்களது வறுமை நிலையை மறுமை நாளின் நிலையோடு ஒப்பிட்டு சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினார்கள்.

 

பின்நாளில் இதே ஸஅத் இப்னு அபீ வக்காஸ்  (ரலி) அவர்கள் தங்கள் சொத்தின் மூன்றில்  இரண்டை, சரிபாதியை அல்லாஹ்வின்  மார்க்கத்திற்காக அர்ப்பணிக்க முன் வந்த  செய்தியை வரலாறு பதிவு செய்திருக்கின்றது

இதே ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் ஜனாஸாவை மலக்குமார்கள் சுமந்ததோடு, 70000 வானவர்கள் ஜனாஸா  தொழுகையிலும் கலந்து கொண்டு துஆச்  செய்யும் நற்பேற்றைப் பெற்றார்கள் எனும்  செய்தி வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.

இப்னு உமர் ரலி அவர்கள் கூறினார்கள்:- நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நாள் முதற் கொண்டு இன்று வரை வயிறு நிரம்ப சாப்பிட்டதில்லை " என்று கூறினார்கள்.

 

قدم عبد الله بن عدي مولى ابن عُمَر من العراق، فزاره وسلّم عليه وقال: أُهديتٌ لك هديةً. قال: ما هي؟. قال: جوارش. قال: وما جوارش؟. قال: يهضم الطعام. قال: ما ملأتُ بطني طعامًا منذ أربعين سنةً. فما أصنع به؟.

 

ஒரு தடவை இராக்கில் இருந்து வந்த அவர்களின் பணியாளர் அப்துல்லாஹ் இப்னு அதீ  மருத்துவ குணம் வாய்ந்த ஒரு உணவை இப்னு உமர் ரலி அவர்களிடம் கொடுத்தார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் இது என்ன? என்று கேட்டார். அவர் அந்த உணவைப் பற்றி சொன்னதும் இப்னு உமர் ரலி (சுவையான உணவுகளை) வயிறு நிரம்ப உண்டு நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டது என்று கூறி அதைப் பெற மறுத்து விட்டார்கள். ( நூல்: அல் மவ்ஸூஅத்து லி இப்னி அபித்துன்யா )

ஆகவே, குப்பைகளைக் கொட்டும் குப்பைத் தொட்டி போன்று கண்ட கண்ட உணவுகளை நம் வயிற்றினில் குப்பையைப் போடுவது போன்று போடுவதிலிருந்து நம்மை பாதுகாப்போம்!

கொடும் நோய், ஆரோக்கிய இழப்பு ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுவோம்!!

2 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அருமையான கட்டுரை பாரக்கல்லாஹ் ஹஜ்ரத்

    ReplyDelete