Monday, 17 April 2023

லைலத்துல் கத்ர் – ஓர் தனித்துவமான மகத்துவம்!!

 

லைலத்துல் கத்ர் – ஓர் தனித்துவமான மகத்துவம்!!

ரமழான் – (1444 – 2023) – தராவீஹ் சிந்தனை:- 27.


ரமழான் மாதத்தின் தனித்துவமான மகத்துவங்களில் நான்கு அம்சங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

1. ரமழானில் செய்யப்படுகிற ஃபர்ளான, சுன்னத்தான வணக்க வழிபாடுகள்,  நல்லறங்கள், தான தர்மங்களுக்கு 70 முதல் 700 மடங்கு வரை கூலி வழங்கப்படுவது.

2. நோன்பு திறக்கும் ஒரு நோன்பாளி இன்னொரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவி புரிந்தால் அந்த நோன்பாளியின் நன்மையை அப்படியே குறைவில்லாமல் வழங்கப்படுவது.

3. மற்றெல்லா அமலுக்கும் அந்த அமலுக்கான கூலி முன்னரே அளவீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நோன்புக்கான கூலியை பொறுத்தவரை அதற்கு அல்லாஹ்வே நேரடியாக கூலி வழங்குவது. அல்லது அல்லாஹ்வே அந்த நோன்பாளிக்கு கூலியாக ஆகுவது.

4. லைலத்துல் கத்ர் இரவில் வணக்க வழிபாடுகள், நல்லறங்கள் செய்வதற்கு 1000 மாதங்கள் வணக்க வழிபாடுகள்  செய்த நன்மைகளை வழங்குவது.

அந்த வகையில் ரமளானின் இந்த நான்கு தனித்துவமான அம்சங்களைப் பூரணமாக பெறும் ஒரு இறைநம்பிக்கையாளர் நாளை மறுமை நாளில் மிகப் பிரம்மாண்டமான நன்மைகளில் குவியல்களோடு வருவார். சுவனத்தின் உயர்ந்த அந்தஸ்துகள் பலவற்றிற்கு அவர் சொந்தமாவார் என்று கூறினால் அது மிகையாகாது.

உதாரணத்திற்கு ஒரு இறைநம்பிக்கையாளனின் ஒரு ரமழானின் இந்த நான்கு தனித்துவமான அமல்களின் நன்மைகளை கணக்கீடு செய்வோம்.

ஒரு நோன்பாளி தினந்தோறும் தான் நோன்பு திறக்கும் நேரத்தில் இன்னொரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவுகிறார் என்றால் அவருக்கு 30 நோன்பு நோற்ற நன்மைகள் வழங்கப்படுகின்றன.

அப்படியென்றால் இவர் நோற்ற 30 நோன்புடன் சேர்த்து இன்னொரு 30 நோன்பின் நன்மைகள் அவருக்கு வழங்கப்படும். 30+30=60.

நோன்புக்கு என்ன கூலி கிடைக்கும்? அது அல்லாஹ் மாத்திரமே அறிந்த விஷயம். 60 நோன்பின் கூலிகளை அவர் பெறுகிறார்.

ஒரு நோன்பாளி ஒரு ஃபர்ளான தொழுகையை இமாம் ஜமாஅத்தோடு நிறைவேற்றுகிறார் என்றால் அவருக்கு சாதாரணமான நாளில் கிடைக்கும் நன்மை 27 மடங்கு. இப்போது ரமழானில் அவர் நிறைவேற்றி இருப்பதால் குறைந்த பட்சமாக 70 மடங்கு நன்மைகள் என்று வைத்தால் 70×27= 1890 மடங்கு நன்மைகள். அதுவே 700 மடங்கு நன்மைகள் என்று வைத்தால் 700×27= 18,900 மடங்கு நன்மைகள் அவருக்கு கிடைக்கும்.

 நாளொன்றுக்கு ஐந்து நேரத்தொழுகைகளை சாதரணமான நாளில் அவர் இமாம் ஜமாஅத்தோடு தொழுதால் 135 மடங்கு நன்மைகள் கிடைக்கும். இதுவே ரமழானாக இருப்பதால் 70 மடங்கு நன்மைகள் என்று வைத்தால் 135×70= 9450 மடங்கு நன்மைகள் கிடைக்கும். இதுவே 700 மடங்கு நன்மைகள் என்று வைத்தால் 135×700 = 94500 மடங்கு நன்மைகள் கிடைக்கும். 

இதுவே ரமழானின் 30 நாட்களில் 150  வக்த் தொழுகைகள். 70 மடங்கு நன்மைகள் என்று வைத்தால் 30×9450=28,3500 மடங்கு நன்மைகள் கிடைக்கும். 700 மடங்கு நன்மைகள் என்று வைத்தால் 30×94500= 2,83,5000 மடங்கு நன்மைகள் கிடைக்கும்.

இது போன்றே ஒருவர் தொழுத இதர சுன்னத்தான தொழுகைகள், நஃபிலான தொழுகைகள் ஃபர்ளான ஜகாத், உபரியான தான தர்மங்களின் நன்மைகளை அளவீடு செய்து பார்த்தால் பிரமிப்பையும், வியப்பையும் தான் நாம் அடைவோம்.

அதே போன்று தான் ஒரு இறைநம்பிக்கையாளர் ஒரு லைலத்துல் கத்ர் இரவை மட்டுமே தன் வாழ்நாளில் அடைந்துள்ளார் எனில் அவர் ஆயிரம் மாதங்கள் அதாவது 83 ஆண்டுகள் ஒருவர் வணக்கங்களில் ஈடுபட்டுப் பெறுகிற நன்மைகளைக் காட்டிலும் அதிகமான நன்மைகளை இந்த ஓர் இரவை அடைவதின் மூலம் பெறுகிறார். 

அப்படியானால், 63 வயது வரை வாழும் பாக்கியத்தை பெற்ற ஒருவர் தன் வாழ்நாளில் 50 க்கும் அதிகமான ரமழானில் அனைத்து தொழுகைகளையும் இமாம் ஜமாஅத்தோடு தொழுது, நோன்பு நோற்று, பல நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க உதவி செய்து 50 லைலத்துல் கத்ர் இரவை பெற்று இந்த உலகை விட்டும் அவர் ஸாலிஹான முறையில் விடைபெறுகிறார் என்றால் அவரின் மண்ணறை எவ்வளவு விசாலமாக இருக்கும். எவ்வளவு பிரகாசமானதாக இருக்கும். அவரின் மறுமை வாழ்வு எவ்வளவு சிறப்பிற்குரியதாக இருக்கும்!! 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் இப்படியான பென்னம்பெரும் நன்மைகளின் குவியலோடு நாளை மறுமையில் அவனைச் சந்திக்கும் நற்பேற்றை வழங்கியருள்வானாக!!

இப்போது தெரிகிறதா? ஏன் பெருமானார் ஸல் அவர்கள் ரஜபில் இருந்தே ரமழானை ஆதரவு வைத்து துஆ கேட்க சொன்னார்கள் என்று.

இப்போது புரிகிறதா? ஏன் ஸலஃபுகளான மேன்மக்கள் ரமழானின் நல்லறங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கபூல் செய்ய வேண்டும் என்று ஆறு மாத காலத்திற்கு துஆ செய்துள்ளார்கள் என்று.

ரமழான் ஒரு இறைநம்பிக்கையாளனின் வாழ்வில் முழுமையாக கிடைக்கும் என்றால் அவனை விட இந்த உலகில் பாக்கியசாலி யாரும் கிடையாது. அவன் வாழ்நாள் முழுவதும் ரமழான் முழுமையாக கிடைத்து விட்டது என்றால் அவனை விட நாளை மறுமையில் பெரும் பாக்கியசாலி யாரும் கிடையாது.

அந்த வகையில் தனித்துவமான நான்கு மகத்துவங்களில் நான்காவது மகத்துவமான லைலத்துல் கத்ர் இரவை ஆதரவு வைத்து நாம் இந்த இரவில் அமர்ந்திருக்கின்றோம்.

இந்த இரவு குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் ரமழானின் துவக்க நாளில் மேன்மக்களான நபித்தோழர்களுக்கு நினைவூட்டி இருக்கின்றார்கள்.

அந்த நினைவூட்டல் இரண்டு செய்திகளைத் தாங்கி நிற்கிறது. ஒன்று "பஷாரத்" எனும் சோபனம். இன்னொன்று "தஹ்றீ(தீ)ர்" எனும் கடும் எச்சரிக்கை.

பஷாரத்தில் கவனம் செலுத்தும் நாம் தஹ்றீ(தீ)ர் எனும் எச்சரிக்கையில் அதிக விழிப்புணர்வோடும், கவனத்தோடும் இருக்க கடமைப் பட்டுள்ளோம்.

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَدْرٍ عَبَّادُ بْنُ الْوَلِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِلَالٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِمْرَانُ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏دَخَلَ رَمَضَانُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏إِنَّ هَذَا الشَّهْرَ قَدْ حَضَرَكُمْ وَفِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ مَنْ حُرِمَهَا فَقَدْ حُرِمَ الْخَيْرَ كُلَّهُ وَلَا يُحْرَمُ خَيْرَهَا إِلَّا مَحْرُومٌ ‏

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:- ரமழான் நுழைந்ததும், நபி ஸல் அவர்கள் " இதோ ரமழான் மாதம் உங்களிடம் வந்துள்ளது. இந்த மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு இருக்கின்றது. எவர் அந்த இரவை (இழந்து) பாழாக்கி விடுகின்றாரோ, அவர் (நலவுகள்) நன்மைகள் அனைத்தையும் (இழந்தவர்) பாழாக்கியவர் ஆவார். அந்த இரவின் நன்மையை (இழப்பவர்) பாழாக்குபவர் யாரெனில் (நலவுகளை) நன்மைகளை பெறுவதை முற்றிலும் இழந்தவர் ஆவார் " என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னு மாஜா )

பாக்கியம் நிறைந்த, அருளும், ஸலாமும் இலங்குகிற, வானவர்களின் தலைவர் வருகை தருகிற, வானவர்கள் விஜயம் செய்கிற இந்த பாக்கியமான இரவை தவற விடுகிற, இரவை அடைந்தும் பாழாக்கி விடுகிற நஸீபு கெட்டவர்களின் பட்டியலில் இருந்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மைக் காப்பாற்றுவானாக!

தவற விட்டவர்கள், பாழாக்குபவர்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் விடும் எச்சரிக்கை மிகவும் கடுமையானது.

ஒன்று:- நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுகிறார். இன்னொன்று:- இது போன்ற நன்மையான காரியங்களை செய்வதை விட்டும் அவர் தடுக்கப்பட்டு விடுகிறார்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்!! ஆமீன்!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!

அல்லாஹ் எப்படி வேண்டுமானாலும் நம்மை விட்டும் நன்மையை நன்மையான காரியங்களை நாம் செய்வதை விட்டும் தடுத்து விடுவான். அவன் அத்துனை ஆற்றல் கொண்டவன்.

وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ‌ۚ وَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ‌ ؕ يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏

அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் உள்ளான். ( அல்குர்ஆன்: 10: 107 )

عن ابن عَبَّاسٍ قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ : " لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ أَقْبَلَ نَفَرٌ مِنْ صَحَابَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا : فُلَانٌ شَهِيدٌ فُلَانٌ شَهِيدٌ ، حَتَّى مَرُّوا عَلَى رَجُلٍ فَقَالُوا فُلَانٌ شَهِيدٌ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( كَلَّا ، إِنِّي رَأَيْتُهُ فِي النَّارِ فِي بُرْدَةٍ غَلَّهَا أَوْ عَبَاءَةٍ ) ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( يَا ابْنَ الْخَطَّابِ ! اذْهَبْ فَنَادِ فِي النَّاسِ أَنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا الْمُؤْمِنُونَ ) قَالَ : فَخَرَجْتُ فَنَادَيْتُ : أَلَا إِنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا الْمُؤْمِنُونَ " .

இப்னு அப்பாஸ் (ரழி), தனக்கு உமர் (ரழி) அவர்கள் தெரிவித்ததாகப் பின்வரும் சம்பவத்தை அறிவிக்கின்றார்கள் : கைபர் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் நபி (ஸல்) அவர்களது தோழர்களிற் சிலர் அங்கு வந்தனர். மேற்படி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி 'அவர் ஷஹீத், இவர் ஷஹீத்", என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஒரு நபரை (அவரது ஜனாஸாவைக்) கடந்து சென்ற அவர்கள் 'இவரும் ஷஹீத்" என்றனர். அதுகேட்ட நபி (ஸல்) அவர்கள் ''நீங்கள் அப்படிக் கூற வேண்டாம். அவர் யுத்தத்தில் கிடைத்த கனீமத் பொருட்களில் ஒன்றான ஓர் ஆடையை அல்லது மேலங்கியைத் (திருட்டுத் தனமாக) அபகரித்துக் கொண்டார். அந்த ஆடையுடன் அவரை நான் நரகில் கண்டேன்"" என்று கூறி விட்டு, ''உமர் இப்னு கத்தாபே! நீர் சென்று முஃமீன்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள்"" என்று மக்களுக்கு மத்தியில் சொல்வீராக"" என்றார்கள்.

( நூல்: ஸஹீஹ் முஸ்லிம், கிதாபுல் ஈமான் - 182 )

போரில் கலந்து கொள்வதென்பது சாமானியமான காரியம் அல்ல. அதிலும் போரில் எதிரிகளால் கொல்லப்படும் பாக்கியம் ஷஹீத் எனும் அந்தஸ்து வழங்கப்படுவதற்கு காரணமாக அமையும்.

போரில் கலந்து கொண்டு, கடுமையான முறையில் போரிட்டு இறுதியில் எதிரிகளால் கொல்லப்பட்ட ஒருவருக்கு அல்லாஹ் "ஷஹீத்" எனும் நலவு, நன்மை கிடைப்பதை தடை செய்து விட்டான்.

எனவே, நாம் மிகவும் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இந்த உலகில் வாழ வேண்டும்.

நன்மையான, நலவுகள் தருகிற அமல்களை காரியங்களை செய்ய முடியாமல் போகிற போது நாம் கவலை கொள்ள வேண்டும்.

நன்மையான, நலவுகள் தருகிற அமல்களை காரியங்களை செய்து கொண்டிருக்கும் நாம் சில போது தவற விடுகிற போது நாம் கவலை கொள்ள வேண்டும்.

عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى على جنازة فله قيراط، ومن تبعها حتى يقضى دفنها فله قيراطان أحدهما أو أصغرهما مثل أحد فذكرت ذلك لابن عمر فأرسل إلى عائشة فسألها عن ذلك، فقالت: صدق أبو هريرة، فقال ابن عمر: لقد فرطنا في قراريط كثيرة

இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு ஹதீஸினை சொல்லிக்காட்டினார்கள். எவர் ஒருவர் ஜனாஸாவுடைய தொழுகை தொழுவாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மை கிடைக்கும் , எவர் மைய்யித்தை அடக்கம் செய்யும் வரை அதனுடன் இருப்பாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மை கிடைக்கும், அவற்றில் ஒவ்வொன்றும் உஹத் மலைக்கு சமமானதாகும்.

ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) இந்த ஹதீஸ் குறித்து ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவியபோது அவர்களும் ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) கூறியது உண்மையான செய்திதான் என்றதும், ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) நாம் காரணமே  இல்லாமல் வீணாக பலகீராத் நன்மைகளை இழந்து விட்டோமே என கவலையோடு சொன்னார்கள். ( நூல்: ஜாமிவுத்திர்மிதி )

எது பாக்கியமின்மை?

இந்த உலகில் பலர் தம்மிடம் இல்லாத ஒன்றை வேறு ஒருவரிடம் இருப்பதைப் பார்த்து நாம் அந்த பாக்கியம் இல்லாதவர் என்று கவலை கொள்கிறார். அதை அடைவதற்கும் பெறுவதற்கும் முயற்சி செய்கிறார்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் குழந்தைப் பேறு இருப்பவர்களைப் பார்த்தும், ஒரு ஏழை செல்வந்தரைப் பார்த்தும், பதவி, அதிகாரம் இன்றி வாழ்பவர்கள் பதவி அதிகாரம் பெற்று செல்வாக்குடன் வாழ்பவரைப் பார்த்தும் அவரோடு தம்மை ஒப்பிட்டும் தம்மை பாக்கியம் இல்லாதவராக கருதுகிறார்.

உண்மையில் இது மட்டும் பாக்கியம் அல்ல. மாறாக, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்கிய எத்துனையோ அருட்கொடைகளை அனுபவித்துக் கொண்டு தம்மால் அல்லாஹ் ரப்புல் ஆலமீனுக்கு நன்றி செலுத்த முடியவில்லையே? அவனுக்குரிய வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற முடிய வில்லையே என்று தம்மை விட எல்லாவற்றிலும் கொஞ்சமாக வழங்கப்பட்ட ஒரு நல்லடியாரிடம் இருக்கும் இபாதத்தோடு, வாழ்வியலோடு தம்மை ஒப்பீடு செய்து தம்மை  அவரைப் போன்ற பாக்கியம் நமக்குக் கிடைக்கவில்லையே என்று தம்மை சரி செய்து கொள்வது தான் மகத்தான பாக்கியம் ஆகும்.

நம்மில் எத்தனை பேர் கவலைப்படுகின்றோம்?..

حَدَّثَنَا عبداللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عبداللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: الَّذِي تَفُوتُهُ صَلاَةُ العَصْرِ، كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உரிய நேரத்தில் தொழாமல்) யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடுமோ அவர் தம் குடும்பமும் தமது செல்வமும் அழிக்கப்பட்டவரைப் போன்றவரே ஆவார். அறிவிப்பவர்:  இப்னு உமர் (ரலி) ( நூல்: புகாரி (552).. )

عن أبي سعيد الخدري رضي الله عنه أنّ رسول الله صلى الله عليه وسلم قال:

«يقول الله عزَّ وجلَّ: إنَّ عَبْداً صَحَّحْتُ لَهُ جِسْمَهُ، وَوَسَّعْتُ عَلَيْهِ فِيِ المَعيشَةِ، تَمْضِي عَلَيْهِ خَمْسَةُ أعْوَامٍ لا يَفِدُ إليَّ لَمَحْرُومٌ»

அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:-  நிச்சயமாக ஒரு அடியாருக்கு நான் உடல் ஆரோக்கியத்தை கொடுத்து, செழுமையான வாழ்வாதாரத்துடன் விசாலமான வாழ்க்கையை வழங்கி ஐந்து ஆண்டுகள் கடந்தும் (ஹஜ்ஜுக்கு) வரவில்லையோ அந்த அடியான் ஒரு போதும் என்னை வந்து சேர முடியாது. அந்த அடியார் நன்மை செய்யும் (ஹஜ் செய்யும்) பாக்கியத்தை இழந்தவர் ஆவார் ". ( நூல்: தப்ரானீ )

இந்த நபிமொழி ஹஜ் தொடர்பானது என்று முஸ்லிம் ஷரீஃபின் விளக்கவுரையில் இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

وفي حادثة أخرى في السياق نفسه ، أن رجالاً أسلموا في مكة ، فأرادوا أن يأتوا رسول الله صلى الله عليه وسلم في المدينة ليتفقهوا في دينهم ويزدادوا من الخير، فأبى أزواجهم وأولادهم عليهم ذلك فأطاعوهم ، وبقوا في مكة. وبعد زمن أتوا رسول الله صلى الله عليه وسلم فرأوا الناس قد فقهوا في الدين ، فتحسروا على ما فاتهم ، وهمّوا أن يعاقبوا أهليهم وأولادهم،فأنزل الله قوله تعالى "يأيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدواً لكم فاحذروهم، وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم". تفسير ابن كثير عند الآية 14 من سورة التغابن.

மக்காவைச் சேர்ந்த சிலர் நபி ஸல் அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொள்ளும் முன்பாக இஸ்லாத்தை தழுவினார்கள். 

ஹிஜ்ரத் கடமையாக்கப்பட்டு நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த பிறகு, இஸ்லாத்தை தழுவிய அவர்களும் தங்கள் மனைவி, மக்களிடம் சென்று தாங்கள் ஹிஜ்ரத் பயணம் மேற்கொள்ள போவதாகவும், மதீனா சென்றதன் பின்னர் மாநபி (ஸல்) அவர்களுக்கு வஹீயின் மூலமாக பல்வேறு இறைக்கட்டளைகள் அருளப்பட்டு மேம்பட்ட வாழ்க்கையை மதீனாவில் இருக்கும் முஸ்லிம்கள் வாழ்வதாகவும், தாங்களும் சென்று தங்கள் ஈமானையும் வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர். இதற்கு அவர்களின் மனைவி மக்கள் மறுப்பு தெரிவித்து ஹிஜ்ரத் செல்லக் கூடாது என்று தடுத்து விட்டனர். அவர்களும் அவர்களின் சொல் கேட்டு அங்கேயே தங்கி விட்டனர். எனினும், அவர்களால் மக்காவில் இருக்க முடியாமல் ஓரிரு ஆண்டுகள் கழித்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தடைந்தனர்.

மதீனா வந்தடைந்ததன் பின்னர் தான் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கைப் போங்கின் பல்வேறு மாற்றங்களை அதன் விளைவாக அந்த மக்கள் பெற்ற பயன்களைப் பார்த்து வியந்தனர்.

இப்போது வந்த துணிவு அப்போதே வந்நிருக்க்கூடாதா? என்று ஆதங்கம் அடைந்தனர். கொஞ்ச காலம் தாமதமாக வந்ததினால் எவ்வளவு மகத்தான நன்மைகளை நாம் இழந்து விட்டோம் என்று வருந்தினார்கள். இதற்கு காரணமாக இருந்த தங்களுடைய மனைவி மக்கள் மீது கோபம் கொண்டனர்.  அவர்களைத் தண்டிக்க விரும்பினர்.  இந்த நேரத்தில் தான்  அவர்களை மன்னித்து விடுமாறு கூறி அல்லாஹ் ரப்புல் ஆலமீன்  தகாபுன் அத்தியாயத்தின் 14 வது வசனத்தை இறக்கியருளினான்.

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ مِنْ أَزْوَٰجِكُمْ وَأَوْلَٰدِكُمْ عَدُوًّۭا لَّكُمْ فَٱحْذَرُوهُمْ ۚ وَإِن تَعْفُوا۟ وَتَصْفَحُوا۟ وَتَغْفِرُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ﴿64:14﴾

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன். ( அல்குர்ஆன்: 64: 14 )

         قال أبو حاتم الأصم : فاتـتـني صلاة الجماعة فلم يعزني إلا أبو إسحاق البخاري ،ولقد ماتت لي بنت فعزاني أكثر من عشرة آلاف ،                   

ஹாத்தமுல் அஸம்மு (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- எனக்கு ஒரு நாள் ஒரு நேர ஜமாஅத் தொழுகை தவறிவிட்டது. அபூ இஸ்ஹாக் அல் புகாரி (ரஹ்) அவர்களைத் தவிர வேறு யாரும் என்னிடம் வந்து கவலை (இரங்கல்) தெரிவிக்கவில்லை. ஆனால் எனது மகள் இறந்த போது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் என்னிடம் வந்து கவலை (இரங்கல்) தெரிவித்தனர்.

وهذا الإمام الشافعي –رحمه الله- يقول: ما فاتني أحد كان أشدّ عليَّ من الليث وابن أبي ذئب . فقد كان -رحمه الله- يتمنى لو لقي هذين العالمين ليأخذ العلم منهما . قال الإمام الذهبي معلقاً على ذلك : وللشافعي تسعة أعوام .

இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் இமாம் லைஸ் (ரஹ்) இமாம் இப்னு அபீ திஃபு (ரஹ்) ஆகியோரிடம் மார்க்கக் கல்வியை பயில வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார்களாம். அவர்களிடம் கல்வி பயில முடியாமல் போனது குறித்து பெரிதும் கவலை கொண்டார்களாம். இமாம் தகபீ (ரஹ்) அவர்கள் ஒரு செய்தியை கூறுகிறார்கள் "இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? இமாம் இப்னு அபீ திஃபு (ரஹ்) அவர்களைச் சந்தித்து கல்வி பயில இமாம் ஷாஃபிஈ ரஹ் வரும் போது இமாம் இப்னு அபீ திஃபு (ரஹ்) அவர்கள் இந்த உலகை விட்டும் விடை பெற்றிருந்தார்கள். இதற்கும் முன்பாகவே, இமாம் லைஸ் (ரஹ்) அவர்கள் இந்த உலகை விட்டும் விடை பெற்றுச் சென்று விட்டார்கள். இத்தனைக்கும் அப்போது இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களின் வயது 9 தான்.

وقد كان السلف أيضاً يندمون إذا فاتهم شيء من الخير .. فابن عباس رضي الله عنهما-يقول "ما ندمت على شيء فاتني إلا أني لم أحج ماشياً . فرغم كثرة ما حج ابن عباس إلا أنه يرى أنه فرّط في عدم ذهابه للحج ماشياً ،لأنه يرى أن فضل الحج ماشياً أعظم أجراً

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள முடிய வில்லையே என்று பெரிதும் கவலைப்பட்டார்களாம். ஏனெனில், நடந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும். வாகனத்தில் செல்லும் போது அந்த நன்மைகள் கிடைக்காமல் போகிறதே என்று அங்கலாய்த்து கொள்வார்களாம்.

فعندما ماتت أم الحسن البصري ودفنها بكى بكاء شديداً ، فقيل له : تبكي وأنت إمام المسلمين ، وأنت الذي كنت تصبرنا ؟ . فقال : أبكي والله لأنه كان لي بابان إلى الجنة فأغلق أحدهما .

இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் அவர்களின் தாயார் மரணித்த போது கடுமையாக தேம்பி தேம்பி அழுதார்களாம். சுற்றியிருந்த மக்கள் " நீங்கள் முஸ்லிம்களின் இமாமாக இருக்கின்றீர்கள்? எங்களுக்கு இது போன்ற இழப்புகள் ஏற்படும் போது எங்களை பொறுமையாக இருங்கள் என்று கூறும் நீங்கள் இப்போது உங்கள் தாயாரின் இறப்புக்காக இப்படி அழுகின்றீர்களே?" என்று கேட்டார்கள். அப்போது இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் என் சுவனத்தின் இரண்டு வாசல்களில் ஒரு வாசல் அடைபட்டு விட்டதே" என்று நினைத்து கவலையில் அழுகிறேன் " என்றார்கள்.

حال الصحابي الجليل كعب بن مالك عندما بقي في المدينة متخلفاً عن اللحاق برسول الله صلى الله عليه وسلم وصحابته إلى غزوة تبوك، فقد عبَّر عن حاله قائلاً: فطفقت إذا خرجت في الناس بعد رسول الله يحزنني أني لا أرى إلا رجلاً مغموصاً عليه في النفاق أو رجلاً ممن عذره الله عز وجل

நபி (ஸல்) அவர்கள் சென்ற பிறகு நான் மக்கள் மத்தியில் சென்றபொழுது "நயவஞ்சகனென்று இழித்துக் கூறப்பட்டவனையும் (பெண்கள் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகளைப் போன்ற) இயலாதவர்களையும் தக்க காரணம் உடையவர்களையும் தவிர என்னைப்போல் போருக்குக் கிளம்பாதிருந்த எவரையும் நான் காணவில்லை. இது எனக்கு மிகுந்த துயரம் அளிக்கலானது" என்றார்கள்.

நாம் செய்யாமல் தவற விட்ட நல்லறங்களுக்காக நாம் தவ்பா செய்து மீளுவோம்!!

إِنَّا بَلَوْنَاهُمْ كَمَا بَلَوْنَا أَصْحَابَ الْجَنَّةِ إِذْ أَقْسَمُوا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ (17) وَلَا يَسْتَثْنُونَ (18) فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِنْ رَبِّكَ وَهُمْ نَائِمُونَ (19) فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ (20) فَتَنَادَوْا مُصْبِحِينَ (21) أَنِ اغْدُوا عَلَى حَرْثِكُمْ إِنْ كُنْتُمْ صَارِمِينَ (22) فَانْطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ (23) أَنْ لَا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِسْكِينٌ (24) وَغَدَوْا عَلَى حَرْدٍ قَادِرِينَ (25) فَلَمَّا رَأَوْهَا قَالُوا إِنَّا لَضَالُّونَ (26) بَلْ نَحْنُ مَحْرُومُونَ (27) قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُلْ لَكُمْ لَوْلَا تُسَبِّحُونَ (28) قَالُوا سُبْحَانَ رَبِّنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ (29) فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَلَاوَمُونَ (30) قَالُوا يَاوَيْلَنَا إِنَّا كُنَّا طَاغِينَ (31) عَسَى رَبُّنَا أَنْ يُبْدِلَنَا خَيْرًا مِنْهَا إِنَّا إِلَى رَبِّنَا رَاغِبُونَ

நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.

அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை;

எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.

 (நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.

இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.

நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்” (என்று கூறிக் கொண்டனர்).

எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்;
 எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது” (என்று). உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர். ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்என்று கூறினார்கள்.

(பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்” (என்றும் கூறிக்கொண்டனர்.)

அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?” என்று கூறினார்.
எங்கள் இறைவன் தூயவன்; நாம் தாம் நிச்சயமாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்என்றும் கூறினர். பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோக்கினர். அவர்கள் கூறினார்கள்: எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.

எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்” (எனக் கூறினர்) ( அல்குர்ஆன்: 68: 17 – 32 )

No comments:

Post a Comment