Thursday, 28 December 2023

மூன்று பிரச்சினைகள்.. தீர்வு ஒன்றே!

 

மூன்று பிரச்சினைகள்.. தீர்வு ஒன்றே!


இன்றைய சமூகத்தில் மிகப் பிரதானமான குற்றச்சாட்டுகளாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மூன்று விஷயங்கள் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஆகும்.

இன்றைய இளைய தலைமுறையினர் முதியோரை மதிப்பதில்லை.

இன்றைய பிள்ளைகள் பெற்றெடுத்த தாய் தந்தையரை மதிப்பதில்லை.

இன்றைய தம்பதியரிடைய புரிதல் இல்லை. எனவே, ஆண் புறத்தில் இருந்து தலாக்கும், பெண்கள் புறத்தில் இருந்து குலாவும் பெருகி வருகிறது என்பதாகும்.

இந்த மூன்று பிரதான பிரச்சினைகளுக்கும் இஸ்லாம் ஒரே விஷயத்தை தீர்வாக முன் வைக்கிறது.

இளைய தலைமுறையினர் முதியோரை கருணையோடு பார்க்காததன் விளைவே அவர்கள் இன்று மதிப்பின்றி நடத்தப்படுகிறார்கள்.

பிள்ளைகள் உள்ளத்தில் தங்களுடைய தாய் தந்தையர் மீதான கருணை இல்லாததன் விளைவே இன்று பெற்றோர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

தம்பதிகளிடையே பரஸ்பரம் அன்பும் குறிப்பாக கருணையும் இல்லாது போனதால் இன்று இரு தரப்பினரிடம் இருந்தும் வெளிப்படும் "பிரிவு" கோஷம்.

மூன்று தரப்பாருக்கும் மிக முக்கியமான ஒன்று "கருணை" யின் தேவையாகும்.

கருணையின் அடிப்படையில் இயங்கும் ஒரு இளைய தலைமுறையினராலேயே முதியோர்கள் மதிக்கப்படுவர்.

கருணை பிரவாகமெடுத்து ஓடும் ஒரு சந்ததிகளாலேயே பெற்றோர்கள் பேணப்படுவர்.

கருணையை அணிகலனாகக் கொண்டிருக்கும் ஒரு ஆணால் பெணணும், ஒரு பெண்ணால் ஆணும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவர். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாடிய வரையிலும் இணைந்து வாழ்வர்.

கருணை தான் அடிப்படை காரணம் என்று நாம் ஏன் இந்த முடிவுக்கு வருகிறோம் என்றால் இந்த மூன்று தரப்பார் குறித்து இடம் பெறும் இறைவசனமும், நபிமொழியும் அவ்வாறு சுட்டிக் காட்டுகிறது.

சிறார்கள் விஷயத்தில்...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்த இருவர்.

عمرو بن شعيب عن أبيه عن جده قال: قال رسول الله ﷺ: ليس منا من لم يرحم صغيرنا، ويعرف شرف كبيرنا[1]. حديث صحيح رواه أبو داود والترمذي، وقال الترمذي: حديث حسن صحيح

"நம்முடைய சிறார்களின் மீது கருணையோடு நடக்காதவர்களும், நம்முடைய முதியோர்களின் கண்ணியம் அறிந்து மதிக்காதோரும் நம்மைச் சார்ந்தவரல்ல" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இங்கே நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் வார்த்தை (يرحم) கருணை.

பெற்றோர்கள் விஷயத்தில்...

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!என்று கூறிப் பிரார்த்திப்பீராக! ( அல்குர்ஆன்: 17: 24 )

இங்கேயும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் (الرَّحْمَةِ) - (ارْحَمْ) என்று கருணையை குறிப்பிடுகின்றான்.

தம்பதியர் விஷயத்தில்...

وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً

اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. ( அல்குர்ஆன்: 30: 21 )

இங்கேயும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் (وَّرَحْمَةً) என்று கருணையை குறிப்பிட்டுள்ளான்.

ஆனால், நாம் இன்று பார்த்துப் பழகி இருக்கும் இந்த மூன்று தரப்பார்களிடமும் கருணை குடி கொண்டுள்ளதா? என்று சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

பொதுவாக நாம் இந்த உலகில் இறைவனின் ஏதாவதொரு அருட்கொடையை பெற வேண்டுமானால் ஒன்று அதற்காக நாம் முயற்சி மேற்கொள்வோம். இரண்டாவது அல்லாஹ்விடம் அது குறித்து பிரார்த்தனை செய்வோம்.

கருணை குறித்தான விஷயத்திலும் அப்படித்தான். நம் உள்ளத்தில் கருணை சுரக்க வேண்டுமானால் அந்த பண்பை நாம் உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அத்தோடு அல்லாஹ்விடம் அந்த பண்பு நம்மிடம் ஏற்படுவதற்கு துஆச் செய்ய வேண்டும்.

ஆனால், இந்த மூன்று தரப்பார்களின் விஷயத்தில் இஸ்லாமிய மார்க்கம் ஒருவர் இன்னொருவர் விஷயத்தில் துஆச் செய்வது என்கிற நிலைப்பாட்டை கடைப்பிடிக்க சொல்கிறது.

ஆம்! இஸ்லாத்தில் ஆக உயர்ந்த அமல் - செயல் எது? என்ற கேள்விக்கு மாநபி ஸல் அவர்கள் அளித்த பதில் என்ன?

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ؟ قَالَ
«تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் ஸலாம் சொல்வதுமாகும்என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), நூல்:  புகாரி 6236

عن عبد الله بن سلام -رضي الله عنه- قال: "لما قدم رسول الله -صلى الله عليه وسلم- المدينة استشرفه الناس، فقالوا: قدم رسول الله -صلى الله عليه وسلم- فخرجت فيمن خرج، فلما رأيت وجهه -صلى الله عليه وسلم- عرفت أن وجهه ليس بوجه كذاب، فكان أول ما سمعته صلى الله عليه وسلم يقول: "يا أيها الناس: أفشوا السلام، وأطعموا الطعام، وصلوا الأرحام، وصلوا والناس نيام؛ تدخلوا الجنة بسلام".

மனிதர்களே! உங்களிடையே ஸலாம் கூறுவதை பரப்புங்கள். பசித்தவருக்கு உணவளியுங்கள். உறவினர்களை ஆதரியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அப்துல்லா இப்னு ஸலாம்(ரலி), ( நூல்:  திர்மிதீ,  ரியாளுஸ்ஸாலிஹீன்: 849 )

இந்த உம்மத் தவறாக புரிந்து கொண்ட நபிமொழிகளில் இதுவும் ஒன்று.

முதல் ஹதீஸின் படி அறிந்தவருக்கு ஸலாம் சொல்வது என்றால் மாமா, மச்சான், சாச்சா, பெரியத்தா, சாச்சா, மாமி, மதனி, சாச்சி, பெரியம்மா, மற்றும் பழக்க வழக்கங்கள் அடிப்படையில் தமக்கு அறிமுகமானவர்களுக்கு ஸலாம் கூறி மகிழ்கிறது.

இரண்டாம் ஹதீஸின் படி, உங்களுக்கு இடையே ஸலாத்தை பரப்புங்கள் என்றால் பக்கத்து வீட்டுக்காரர், பக்கத்து கடைக்காரர், பக்கத்தில் தொழுபவர், மஹல்லா வாசி, நண்பர்கள், இயக்க, அரசியல் தோழர்கள், சக நிர்வாகிகள் என்று ஸலாத்தை பரப்பி மகிழ்கிறது.

ஆனால், இலகுவாக இந்த உம்மத் மறந்து போன ஒன்று எதுவென்றால்
ஒரு கணவன் தமது மனைவிக்கு ஸலாம் சொல்வது, ஒரு மனைவி தமது கணவருக்கு ஸலாம் சொல்வது, ஒரு தந்தையும், தாயும் தமது மக்களுக்கு ஸலாம் சொல்வது, மக்கள் தமது தாய் தந்தையருக்கு ஸலாம் சொல்வது, சகோதர சகோதரிக்கும் சகோதரி சகோதரனுக்கும் ஸலாம் சொல்வது.

இன்று இந்த பழக்கம் இந்த உம்மத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரிடையே மட்டும் தான் காணப் படுகின்றன.

ஒரு தந்தை தமது மக்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கருணையைப் பெற்றுக் கொடுக்காமல் தமது அந்திம பிராயத்தில் தமது மக்களிடம் இருந்து கருணையை எப்படி பெற்றுக் கொள்ள முடியும்?

ஒரு கணவன் தமது மனைவிக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கருணையைப் பெற்றுக் கொடுக்காமல் தமது பிரச்சினைகளின் போது எப்படி கருணையை  எதிர்பார்க்க முடியும்?

ஒரு மனைவி தமது கணவனுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கருணையைப் பெற்றுக் கொடுக்காமல் தமது பிரச்சினைகளின் போது   எப்படி கருணையை எதிர் பார்க்க முடியும்?

ஒரு பெரியவர் தமது பேரனுக்கு அல்லது பேரன் பேத்தி வயதில் உள்ளவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கருணையைப் பெற்றுக் கொடுக்காமல் தமது வயது முதிர்வின் போது  அவர்களிடம் இருந்து எப்படி கருணையை எதிர் பார்க்க முடியும்?

முதலில் நாம் நம் வீடுகளில் நுழையும் போது ஸலாம் சொல்லும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். நம் வீட்டில் உள்ள அனைவரும் வீட்டில் நுழையும் போது ஸலாம் சொல்வதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் இல்லங்களில் நுழையும் போது, அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்ட அருள் மிகு நல்வாழ்த்தை (கருணையை) கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் தமது வசனங்களை நீங்கள் விளங்கி கொள்வதற்காக உங்களுக்கு தெளிவாக்கியுள்ளான்.                            (அல்குர்ஆன் 24 : 61)

عَنْ اَنَسٍ ؓ قَالَ: قَالَ لِيْ رَسُوْلُ اللهِ ﷺ: يَا بُنَيَّ! اِذَا دَخَلْتَ عَلَي اَهْلِكَ فَسَلِّمْ يَكُوْنُ بَرَكَةً عَلَيْكَ وَعَلي اَهْلِ بَيْتِكَ.

மகனே! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றால், நீ ஸலாம் கூறு! அது உனக்கும், உன் வீட்டில் இருப்போருக்கும் அபிவிருத்தியாக இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அறிவிப்பவர் :  அனஸ் (ரலி) நூல் :  திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 861

நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் பெருமானாரை விட அதிக வயது குறைந்தவர்கள். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வரும்போது ஸலாம் கூறி நுழையும் பழக்கம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். குறிப்பாக ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி கயவர்கள் அவதூறுகளைப் பரப்பியதால் நபி (ஸல்) அவர்கள் அவர்களின் மீது சந்தேகம் கொண்ட நேரத்திலும் ஸலாம் சொல்வதை கைவிடவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து ஸலாம் கூறிவிட்டு நீங்கள் எப்படி இருக்கிறாய்? என்று கேட்டார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2661)

பிறரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் ஸலாம் கூற வேண்டும் என்றால் நம்முடனே வாழ்க்கையில் பெரும் பகுதி கழிக்கின்ற நம் குடும்பத்தார்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை ஸலாம் கூற கடமைப்பட்டுள்ளோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதை பின் வரும் நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ «إِذَا لَقِيَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإِنْ حَالَتْ بَيْنَهُمَا شَجَرَةٌ أَوْ جِدَارٌ، أَوْ حَجَرٌ ثُمَّ لَقِيَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ أَيْضًا»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ, அல்லது சுவரோ அல்லது கல்லோ குறுக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தாலும் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­)  நூல் : அபூ தாவூத் (4523)

சிறார்களுக்கு ஸலாம் கூறுவது

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ «أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ» وَقَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ»

(ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துவந்தார்கள்என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி), ( நூல் : புகாரி ).

வீட்டிற்குள் நுழையும் போது ஸலாம் சொல்வதால் கிடைக்கும் அந்தஸ்து...

عَنْ أَبِي أُمَامَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: ثَلاَثَةٌ كُلُّهُمْ ضَامِنٌ عَلَي اللهِ، إِنْ عَاشَ رُزِقَ وَكُفِيَ، وَإِنْ مَاتَ أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ: مَنْ دَخَلَ بَيْتَهُ فَسَلَّمَ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ إِلَي الْمَسْجِدِ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ فِي سَبِيلِ اللهِ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ.
رواه ابن حبان، (والحديث صحيح): ٢ /٢٥٢

மூன்று நபர்கள் அல்லாஹ்வுடைய பொறுப்பில் உள்ளனர், அவர்கள் உயிர் வாழ்ந்தால் அவர்களுக்கு இரணம் அளிக்கப்படும், அவர்களுடைய வேலைகளில் உதவி செய்யப்படும், அவர்கள் மரணித்துவிட்டால் அல்லாஹுதஆலா அவர்களைச் சுவனத்தில் நுழையவைப்பான். அவர்களில் முதலாமவர், தமது வீட்டில் நுழைந்ததும் ஸலாம் சொல்பவர் இரண்டாமவர், பள்ளிக்குச் செல்பவர் மூன்றாமவர், அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்பட்டவர்என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸலாம் சொல்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்...

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فَرَدَّ عَلَيْهِ السَّلَامَ، ثُمَّ جَلَسَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَشْرٌ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، فَرَدَّ عَلَيْهِ، فَجَلَسَ، فَقَالَ: «عِشْرُونَ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، فَرَدَّ عَلَيْهِ، فَجَلَسَ، فَقَالَ: «ثَلَاثُونَ»

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார். நபியவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ”(இவருக்கு) இருபது (நன்மைகள்)என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹுஎன்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் ”(இவருக்கு) முப்பது (நன்மைகள்)என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி), நூல் : அபூதாவூத்

உயர்வு கிடைக்கும்...

عَنْ اَبِى الدَّرْدَاءِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللّهِ ﷺ: اَفْشُوا السَّلاَمَ كَىْ تَعْلُوْا.
رواه الطبرانى واسناده حسن مجمع الزوائد:٨/٦٥

நீங்கள் உயர்வு அடைய ஸலாமைத் தாராளமாகப் பரப்புங்கள்என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)

அன்பு அதிகரிக்கும்...

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ تَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتَّي تُؤْمِنُوْا، وَلاَتُؤْمِنُوْا حَتَّي تَحَابُّوْا، اَوَلاَ اَدُلُّكُمْ عَلي شَيْءٍ اِذَا فَعَلْتُمُوْهُ تَحَابَبْتُمْ؟ اَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ.
رواه مسلم باب بيان انه لا يدخل الجنة الا المؤمنون…رقم:١٩٤

நீங்கள் முஃமினாக ஆகாதவரை (உங்கள் வாழ்க்கை ஈமான் உள்ள வாழ்க்கையாக ஆகாதவரை) சுவர்க்கத்தில் நுழைய முடியாது, நீங்கள் ஒருவர் மற்றவரை நேசிக்காதவரை உண்மை விசுவாசி ஆகமுடியாது.

உங்களுக்கிடையில் நேசத்தை உண்டாக்கும் செயலை உங்களுக்கு நான் சொல்லவா? (அது தான்) உங்களுக்கிடையே ஸலாமைத் தாராளமாகப் பரப்புவது என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸலாம் அல்லாஹ் முதன் முதலாக மனித சமூகத்திற்கு வழங்கிய சோபனமும், காணிக்கையும் ஆகும்.

وعن أبي هريرة، رضي اللّه ستون ذراعاً، فلما خلقه قال: اذهب فسلم على أولئك، نفر من الملائكة، جلوس، فاستمع ما يحيونك، فإنها تحيتك وتحية ذريتك، فقال: السلام عليكم، فقالوا: السلام عليك ورحمة الله، فزادوه: ورحمة الله، فكل من يدخل الجنة على صورة آدم، فلم يزل الخلق عنه، عن النبي صلى الله عليه وسلم قال: (خلق الله آدم على صورته، طوله ينقص بعد حتى الآن)
أخرجه البخارى, – باب: بدء السلام- 5463.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்என்று சொன்னான்.

அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும் உங்களின் மீது சாந்தி பொழியட்டும்என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், ‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்என்று பதில் கூறினார்கள். இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.
எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள்.

ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 3326.

ஸலாம் சொல்லதன் தாத்பரியம் என்ன தெரியுமா?

هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ‌ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ‏

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை. அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்;. சாந்தியளிப்பவன் தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். ( அல்குர்ஆன்: 59: 23 )

திருமறைக் குர்ஆன் விரிவுரையாளராகிய இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தங்களுடைய அஹ்காமுல் குர்ஆனில், மேற்கூறிய இறைவசனத்திற்கு விளக்கம் தரும் போது "அஸ்ஸலாம்" என்பது அல்லாஹ்வினுடைய ஒரு பண்புப் பெயராகவும் இருக்கின்றது, (அல்லாஹு ரகீபுன் அலைக்கும்) அதாவது, அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலனாகவும் இருக்கின்றான்.

மேலும், இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தங்களுடைய அஹ்காமில் குர்ஆனில்,

இஸ்லாம் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? ஒருவர் உங்களுக்குச் ஸலாம் உரைப்பதன் மூலம், என்னிடமிருந்து ஏற்படும் தீங்குகளிலிருந்து நீங்கள் முழுவதும் பாதுகாப்புப் பெறுகின்றீர்கள் என்று உங்களுக்குச் ஸலாம் உரைக்கக் கூடியவர் அறிவிக்கின்ற அறிவிப்பாகும்.

இன்னும் ஸலாம் என்பது, அல்லாஹ்வை நினைவு கூரக் கூடியதாகவும், அல்லாஹ்வை நினைவுபடுத்தக் கூடியதாகவும், சக முஸ்லிம்களின் மீது அன்பு பாராட்டுவதாகவும், இன்னும் அது ஒரு மிகச் சிறந்த பிரார்த்தனையாகவும், இன்னும் முக்கியமாக ஒருவரது கரங்கள் மற்றும் நாவிலிருந்து ஏற்படும் தீங்குகளிலிருந்து பாதுகாப்பைப் பிரகடனப்படுத்தக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றது.

மிகப் பெரிய கஞ்சன்..

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَعْجَزُ النَّاسِ مَنْ عَجِزَ فِي الدُّعَاءِ، وَاَبْخَلُ النَّاسِ مَنْ بَخِلَ فِي السَّلاَمِ.

மக்களில் மிகவும் இயலாதவர் துஆச் செய்ய இயலாதவர், (துஆச் செய்யாதவர்) மக்களில் மிகவும் கருமித்தனம் உடையவர் ஸலாம் சொல்வதில் கருமித்தனம் செய்பவர்என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித் )

கியாமத் நாளின் அடையாளம்

عَنِ ابْنِ مَسْعُوْدٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ مِنْ اَشْرَاطِ السَّاعَةِ اَنْ يُسَلِّمَ الرَّجُلُ عَلَي الرَّجُلِ لاَ يُسَلِّمُ عَلَيْهِ اِلاَّ لِلْمَعْرِفَةِ. رواه احمد:١ /٤٠٦

(முஸ்லிம் என்ற காரணம் அல்லாமல்) அறிமுகத்தின் காரணமாக (அறிமுகமானவருக்கு) மட்டும் ஸலாம் சொல்வது கியாமத் நாளின் அடையாளங்களில் ஒன்றுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹமத்)

துஃபைல் பின் அபீ பின் காப் அவர்கள் அறிவித்ததாக இமாம் மாலிக் அவர்களின் முஅத்தா வில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது,

அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள், எந்தவித பொருள்களும் வாங்கவோ அல்லது விற்கும் நோக்கமின்றி, மக்களுக்கு ஸலாம் சொல்வதற்கென்றே கடைத் தெருப்பக்கம் வரக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இதன் மூலம் மக்களுக்கு முந்திக் கொண்டு ஸலாம் சொல்வதன் சிறப்புப் பற்றி அவர்கள் அறிந்து, அவர்கள் அதற்கு அளித்திருக்கக் கூடிய முக்கியத்துவத்தை நாம் உணர முடிகின்றது.

குறிப்பாக சிறார்களுக்கு பெரியோரும், தாய் தந்தையர் மக்களுக்கும், கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் ஸலாம் சொல்வது அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரும் பலம் ஆகும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவன் புறத்தில் இருந்து நாம் பெற்றுக் கொடுக்கும் கருணையை மீண்டும் நம்மிடமே திருப்பி அனுப்புகின்றான் ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் காலங்கள் தேவையைப் பொறுத்து.

எனவே, பிறருக்கு நாம் ஸலாம் சொல்லது போல நமக்குள்ளும், நமது குடும்பத்திற்குள்ளும் நாம் ஸலாம் சொல்வோம்!

No comments:

Post a Comment