Thursday 30 May 2024

ரஃபாவின் மக்களை காத்தருள்வாய் ரப்பே!!!

 

ரஃபாவின் மக்களை காத்தருள்வாய் ரப்பே!!!


All eyes on Rafah (அத்தனை கண்களும் ரஃபாவை கண்ணீருடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது) என்ற தொடர் இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் தொடராக மாறியுள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து நாம் பார்க்கலாம்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகின் பல்வேறு நாடுகளும் குரல் கொடுப்பதைக் குறிப்பதாகவே இந்தத் தொடர் இருக்கிறது.

ரஃபா என்பது பாலஸ்தீன மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றாகும். காசாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சுமார் 50%, அதாவது 10 லட்சம் பேர் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ரஃபா நகர் எகிப்து எல்லையை ஓட்டி அமைந்துள்ளது. அங்குப் பல அகதிகள் முகாம்களும் உள்ளன.

காசாவில் உள்ள ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை ஓயப்போவதில்லை என்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது. 

இதன் காரணமாக காசாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஹமாஸ் தாக்குதல்களை நடத்தி வந்தது. ஏற்கனவே, வடக்கு காசாவில் தனது தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில், அடுத்து தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்தது.

இதனால் ரஃபாவில் தாக்குதல் நடத்தினால் அது பேரழிவைத் தரும் என்று உலக நாடுகள் எச்சரித்தன. அவ்வளவு என் அனைத்து விஷயங்களிலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா கூட ரஃபா மீது தாக்குதல் வேண்டாம் என்றே இஸ்ரேலை எச்சரித்தது.

அதேபோல சர்வதேச நீதிமன்றமும் காசா பிராந்தியத்தில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியது. இருப்பினும், இந்த எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதலைத் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் ஏவுகணைகளில் ஒன்று ரஃபாவில் உள்ள புலம்பெயர்ந்த மக்களின் முகாமை தாக்கியது. இதில் 45 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐநாவின் UNRWA அமைப்பு இந்த கொடூர தாக்குதல் குறித்து மிகவும் காட்டமான சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில், "பூமியில் உள்ள நரகமாகக் காசா மாறிவிட்டது. காசா மக்கள் தாக்குதலில் இருந்து தப்பித்துப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முயல்கிறார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக காசாவில் பாதுகாப்பான இடம் என்றே ஒன்று இப்போது இல்லை" என்றார்.

இந்தச் சூழலில் தான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ரஃபா தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது என்றும் அது பெரிய தவறு தான் என்றும் கூறினார். பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடாது என்று பல்வேறு முயற்சிகளை தாங்கள் எடுத்த போதிலும் அதையும் தாண்டி இந்த தவறு நடந்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார். இருப்பினும், ஹமாஸை அழிக்கும் நடவடிக்கை தொடரும் என அவர் கூறியது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்தே All eyes on Rafah என்ற சொற்றொடர் இணையத்தில் பரவ தொடங்கியுள்ளன. shahv4012 என்ற இன்ஸ்டா யூசர் முதலில் இந்த போஸ்டரை பகிர்ந்தார். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அந்த போஸ்டரில் All eyes on Rafah என்ற சொற்றொடர் முதலில் இடம்பெற்றிருந்தது. ( நன்றி: ஒன் இந்தியா, 30/05/2024 )

பொய் பேசும் "அரக்கர்கள்"..

ரஃபாவில் ஹமாஸின் தளபதிகள் மற்றும் வீரர்கள் ஒளிந்திருக்கின்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதாள அறையில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளது. பிணைக் கைதிகளும் அங்கே தான் எங்கோ அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் ஆகவே எங்கள் இலக்குகளை அடையும் வரை ஹமாஸை அழிக்கும் வரை எங்கள் போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு அறிவித்துள்ளான்.

இதற்கு முன்னர் இராக் கின் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது பேரழிவு ஆயுதங்கள் இருக்கிறது என்றது. ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கிய போதும் இதே குற்றச்சாட்டை முன் வைத்தது.

இறுதியில் இராக்கும், ஆப்கானிஸ்தானும் இல்லாமல் போனதும் இலட்சக்கணக்கான மக்களின் உயிர் பறி போனதும் தான் மிச்சம்.

எனவே, இவர்கள் இஸ்லாத்திற்கெதிரான துவேஷத்தை மனதில் வைத்துக் கொண்டு வெளியே கபட வார்த்தைகளைக் கூறி கூசாமல் பொய் பேசுவார்கள்.

காலம் காலமாக இந்த உலகில் ஏகத்துவ வாதிகளை எதிர் கொள்ள தைரியம் இல்லாமல் இப்படியான புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவதையே வழக்கமாக வைத்துள்ளார்கள் இஸ்லாமிய விரோதிகள்.

وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِىْۤ اَقْتُلْ مُوْسٰى وَلْيَدْعُ رَبَّهٗ‌ۚ اِنِّىْۤ اَخَافُ اَنْ يُّبَدِّلَ دِيْنَكُمْ اَوْ اَنْ يُّظْهِرَ فِى الْاَرْضِ الْفَسَادَ‏

மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்: மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்என்று. ( அல்குர்ஆன்: 40: 26 )

உண்மை இது தான்...

தீக்குண்டத்தார்கள் என்று அல்குர்ஆன் கூறும் ஒரு சமூகத்தார் தங்களுடைய சமூகத்தில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக (குழந்தைகள் உட்பட) மொத்தமாக ஒரு சமூகத்தையே அழித்தார்கள் என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது.

 

وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ (1) وَالْيَوْمِ الْمَوْعُودِ (2) وَشَاهِدٍ وَمَشْهُودٍ (3) قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ (4) النَّارِ ذَاتِ الْوَقُودِ (5) إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ (6) وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ (7) وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ (8) الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (9)

உறுதியான கோட்டைகளைக் கொண்ட வானத்தின் மீது சத்தியமாக!  வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது  சத்தியமாக! மேலும், பார்க்கின்றவர்  மீதும்,  பார்க்கப்படும் பொருளின் மீதும் சத்தியமாக! தீக்குண்டத்தார் அழிக்கப்பட்டார்கள்!

அது எத்தகைய தீக்குண்டமெனில்,  அதில் நன்கு கொழுந்து விட்டெரியும் 

எரி பொருள் இருந்தது. அவர்கள் அதன்ஓரத்தில் அமர்ந்திருந்து இறை  நம்பிக்கையாளர்களுக்குத் தாம் செய்துகொண்டிருந்த அக்கிரமச் செயல்களைப் பார்த்து  ரசித்த வண்ணம் இருந்தார்கள்.அந்த இறைநம்பிக்கையாளர்களிடம் தீக்குண்டத்தார்கள்  பகைமை பாராட்டிக்கொள்ள காரணம் இதைத் தவிர  வேறெதுவும் இருக்கவில்லை.

யாவற்றையும் மிகைத்தவனும்  தனக்குத்தானே புகழுக்குரியவனும் வானங்கள்  மற்றும் பூமியின்  ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனுமாகிய  அல்லாஹ்வின்  மீது அவர்கள் நம்பிக்கை  கொண்டுள்ளார்கள் என்பது தான்!       ( அல்குர்ஆன்: 85: 1- 9 )

சோதனை மட்டும் தான் இந்த உம்மத்திற்குச் சொந்தமா?

முஸ்லிம் உம்மத் இந்த உலகில் எல்லா காலத்திலும் சோதனைகளை எதிர் கொண்டு வந்திருக்கிறது.

இனி வரும் காலங்களிலும் மறுமை நாள் வரையிலும் இந்த உம்மத் சோதனைகளை எதிர் கொள்ள காத்திருக்கிறது.

சோதனைகளில் இருந்து மகத்தான விடுதலையையும், மீட்சியையும் இந்த உம்மத் எல்லா காலங்களிலும் பெற்றும் இருக்கிறது.

பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் இணைவைப்பாளர்கள், இறைமார்க்கத்தின் மீது விரோதம் கொண்டவர்களின் எதிர்ப்பு அதன் மூலமாக உருவான கொலை, பகிஷ்கரிப்பு, ஊர் விலக்கம், ஒப்பந்தம் போர் என பல்வேறு முனைகளில் சோதனை.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனைத்து சோதனைகளில் இருந்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொன்றில் இருந்தும் இந்த உம்மத்தை மீட்டெடுத்தான், பாதுகாத்தான், வெற்றியை வழங்கினான்.

பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவிற்கு பின்னர் நபித்தோழர்களின் காலகட்டம், அதன் பின்னர் தாபிஈன்கள், இமாம்கள் காலகட்டம் என தொடர்ந்து கடந்த 1400 ஆண்டுகளாக இந்த உம்மத் சோதனைக்கு உள்ளாவதும் அதிலிருந்து மீட்சி பெறுவதுமாக பல்வேறு அம்சங்களை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தரவுகளை நிகழ்வுகளை குறிப்பிடலாம்.

 

இறுதி நபித்துவத்துக்கு சோதனை வந்தது. இறைக் கட்டளைகளை செய்ய மறுத்த சோதனை வந்தது. கஅபாவின் மூலமாக சோதனை வந்தது. ஹஜருல் அஸ்வதின் ஊடாக சோதனை வந்தது. குர்ஆனின் மூலமாக சோதனை வந்தது. இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களின் ஊடாக சோதனை வந்தது. அல் அக்ஸா வின் வாயிலாக சோதனை வந்தது.

இந்த உம்மத்தின் சோதனை முற்றுப் பெற்று விட்டதா? இல்லை, இன்றும் அதே சோதனை வெவ்வேறான கால கட்டங்களில் வெவ்வேறான வடிவங்களில் இந்த உம்மத்தை வந்தடைந்து கொண்டே தான் இருக்கிறது.

எனினும், எல்லா காலத்திலும் இந்த உம்மத்திற்கே வெற்றி கிடைத்துள்ளது.

அஸ்வதுல் அன்ஸீயில் துவங்கி முஸைலமாவைத் தொடர்ந்து மிர்ஸா குலாம் காதியானி என்று இன்று வரை இறுதி நபித்துவத்துக்கான சோதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

குர்ஆன் படைக்கப்பட்டது என்ற வாதத்தில் துவங்கி குர்ஆன் தீவிரவாத்தை ஊக்குவிக்கிறது என்ற ஃபாசிஸ பிரச்சாரத்தின் ஊடாக இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களின் மீதான சோதனை மேற்கத்திய, ஐரோப்பிய கலாச்சார பிண்ணனியில் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

சிலுவைப் படையினரில் துவங்கி நெதன்யாகு அன்ட் கோ வாயிலாக இன்று வரை அல் அக்ஸா வின் சோதனை இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

எந்தவொரு சோதனைகளுக்கும் முகம் கொடுக்காமல், எந்தவொரு சோதனைகளையும் எதிர் கொள்ளாமல் இந்த உம்மத் இந்த உலகில் பயணிக்கவோ, சாதிக்கவோ முடியாது.

இந்த உலகில் மட்டுமல்ல நாளை மறுமையிலும் வெற்றி பெற முடியாது.

اَحَسِبَ النَّاسُ اَنْ يُّتْرَكُوْۤا اَنْ يَّقُوْلُوْۤا اٰمَنَّا وَهُمْ لَا يُفْتَـنُوْنَ‏

நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?

وَلَقَدْ فَتَـنَّا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ فَلَيَـعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ صَدَقُوْا وَلَيَعْلَمَنَّ الْكٰذِبِيْنَ‏

நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். ( அல்குர்ஆன்: 29: 2, 3 )

அல்லாஹ் கை விட மாட்டான் என்ற எண்ணம் ஆழ் மனதில் இடம் பெற வேண்டும்.

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ‏

 

உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. ( அல்குர்ஆன்: 93: 3 )

ஏனெனில், இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவுவதை அல்லாஹ் தமது மீது கடமையாக்கி இருக்கிறான்.

فَانْتَقَمْنَا مِنَ الَّذِيْنَ اَجْرَمُوْا وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِيْنَ

குற்றவாளிகளிகளைப் பழி வாங்கினோம் - மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும். ( அல்குர்ஆன்: 30: 47 )

ثُمَّ نُنَجِّىْ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا‌ كَذٰلِكَ‌ۚ حَقًّا عَلَيْنَا نُـنْجِ الْمُؤْمِنِيْنَ

(அவ்வாறே வேதனை வரும் போது) நம் தூதர்களையும், ஈமான் கொண்டவர்களையும் நாம் இவ்வாறே காப்பாற்றுவோம் - (ஏனெனில்) ஈமான் கொண்டவர்களைக் காப்பாற்றுவது நமது கடமையாகும். ( அல்குர்ஆன்: 10: 103 )

அல்லாஹ்வின் திட்டம் என்ன?

ஃபிர்அவ்னிடம் இருந்து பேரழிவுகளை பனூ இஸ்ரவேலர்கள் சந்தித்ததாக கூறும் அல் குர்ஆன்...

اِنَّ فِرْعَوْنَ عَلَا فِى الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِيَـعًا يَّسْتَضْعِفُ طَآٮِٕفَةً مِّنْهُمْ يُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَيَسْتَحْىٖ نِسَآءَهُمْ‌ ؕ اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِيْنَ‏

நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.

( அல்குர்ஆன்: 28: 4 )

அந்த பேரழிவுகளுக்குப் பின்னர் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் போட்டு வைத்த திட்டத்தையும் பேசுகிறது.

அந்த திட்டம் இது தான்....

وَنُرِيْدُ اَنْ نَّمُنَّ عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْا فِى الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَٮِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِيْنَۙ‏

ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம்.

وَنُمَكِّنَ لَهُمْ فِى الْاَرْضِ وَنُرِىَ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا مِنْهُمْ مَّا كَانُوْا يَحْذَرُوْنَ‏

இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்). ( அல்குர்ஆன்: 28: 5, 6 )

வெற்றியின் தாரக மந்திரம் என்ன?

 

சோதனையான கால கட்டத்தில் இந்த உம்மத்தின் வெற்றிக்கான காரணிகளை அல்லாஹ் ஐந்து முக்கிய அம்சங்களில் வைத்துள்ளதாக அல் குர்ஆன் குறிப்பிடுகிறது.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِيْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்.

وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌ۚ‏

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 8: 45, 46 )

அந்த ஐந்து அம்சங்கள் என்ன?

أحدها: الثبات، الثاني: كثرةُ ذكره سبحانه وتعالى، الثالث: طاعتُه وطاعةُ رسولِه، الرابع: اتفاقُ الكلمة وعدمُ التنازعِ الذي يوجبُ الفشلَ والوهن وهو جندٌ يُقويِّ به المتنازعون عدوَّهم عليهم، فإنّهم في اجتماعهم كالحِزمةِ من السهام لا يستطيع أحد كسرها فإذا فرقها وصار كلٌّ منهم وحده كسرها كلها.

الخامس: مِلاكُ ذلك كلِّه وقِوامُه وأساسُه وهو الصبر،

1. உறுதியாக இறுதி வரை போராடுவது. (நிலைகுலையாமை) 2. அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்வது. 3. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவது. 4. ஒற்றுமையுடன் இணைந்து போராடுவது. 5. போராட்ட களத்தில் பொறுமை காப்பது.

ختم ابنُ القيم كتابَه الفروسيةَ بهذه الآيةِ وقال بعدها: أمر الله المجاهدين فيها بخمسة أشياءَ ما اجتمعت في فئةٍ قطُّ إلا نُصِرَت وإن قلَّت وكثر عدوُّها:

இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் சூரா அல் அன்ஃபால் அத்தியாயம் 45 மற்றும் 46 வது வசனத்திற்கு விளக்கம் தருகிற போது...

"மேற்கூறிய இறைவசனத்தில் போராட்ட களங்களை சந்திப்பவர்களை நோக்கி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஐந்து முக்கிய அம்சங்களை கடைபிடிக்குமாறு வலியுறுத்துகின்றான். இந்த ஐந்து அம்சங்களும் எந்த போராளிக் குழுக்களிடம் இடம் பெற்றுள்ளனவோ அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி சமீபமாக்கப்படும். அவர்கள் குறைவாக இருந்து எதிரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் சரியே.

 

 فهذه خمسةُ أشياءَ تُبتنى عليها قبةُ النصر ومتى زالت _أو بعضُها_ زال من النصر بحسب ما نَقص منها،

அல்லாஹ்வின் உதவியை சமீபமாக்கும் இந்த ஐந்து அம்சங்களில் ஒன்று குறைந்தாலும் அல்லது சிலது இல்லாமல் போனாலும் அல்லாஹ்வின் உதவியும் அதற்கேற்றவாறே இருக்கும்.

 وإذا اجتمعت قوَّى بعضُها بعضاً وصار لها أثرٌ عظيم في النصر، ولما اجتمعت في الصحابة لم تقم لهم أمة من الأمم ، وفتحوا الدنيا ودانت لهم البلاد والعباد، ولما تفرقت فيمن بعدهم وضعُفت آل الأمر إلى ما آل.

மேலும், இந்த ஐந்து அம்சங்களும் ஒன்றை இன்னொன்று வலுப்படுத்தும். மேலும், அல்லாஹ்வின் உதவியை அனுபவிப்பதில் இன்பத்தை பெற்றுத் தரும்.

இந்த ஐந்து அம்சங்களும் நபித்தோழர்களிடம் இடம் பெற்றிருந்த காரணத்தால் தான் அவர்கள் மனித சமூகத்தையும் உலகையும் வெற்றி கொண்டார்கள்.

பின் வந்தவர்கள் இந்த ஐந்து அம்சங்களையும் கை விட்டதன் காரணமாக இன்று வரை நாம் மிகப் பெரிய பலவீனத்தை சந்தித்து வருகிறோம்.

தொடர் போராட்டங்களை எதிர் கொள்ளும் ஒரு சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கும் சன்மானம் என்ன?

இந்த ஐந்து அம்சங்களும் இடம் பெற்றுள்ள ஒரு சமூகம் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக போராட்ட களங்களை சந்திக்குமேயானால் அந்த சமூகத்தின் மேன்மை குறித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பின் வருமாறு வாக்களிக்கின்றான்.

لِلَّذِيْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِيْمٌ‌ۚ‏اَلَّذِيْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْۢ بَعْدِ مَاۤ اَصَابَهُمُ الْقَرْحُ

அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்;அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது.

اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏

மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்என்று அவர்கள் கூறினார்கள்.

وَّاتَّبَعُوْا رِضْوَانَ اللّٰهِ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَظِيْمٍ‏فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوْٓءٌ

 

இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான். ( அல்குர்ஆன்: 3: 172 - 174 )

50 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் இருந்தும், கோடிக்கணக்கான முஸ்லிம்கள் இருந்தும் இன்று கேட்பாரற்று அகதிகளாக இருக்கும் அந்த மக்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை வல்லோன் அல்லாஹ் தான் உயர்த்த முடியும். மாற்ற முடியும்.

ஆகவே, நாம் அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திட, வாழ்க்கை மாறிட வல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்!

அல்லாஹ்வே! கையறு நிலையில் இருந்து அம்மக்களை காப்பாற்றுவாயாக!  தனித்து விடப்படுவதில் இருந்து அம்மக்களை பாதுகாப்பாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

1 comment:

  1. ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளிடமும்,ரஃபா மக்களுக்கு பிரத்தியேகமாக துஆ செய்ய சொல்லி அனுப்புவோம்.

    ReplyDelete