Thursday 6 June 2024

அல்லாஹ் வழங்கும் முடிவுகளை பொருந்திக் கொள்வோம்!!!

 

அல்லாஹ் வழங்கும் முடிவுகளை பொருந்திக் கொள்வோம்!!!


வாழ்க்கையில் அனைவரும் ஏதேனும் சோதனைகளை சந்தித்து வருகிறோம்.

சிலருக்கு நாட்பட்ட சோதனைகள் இருக்கலாம். சிலருக்கு காலம் கடந்து தலைமுறை தலைமுறையாக சோதனைகள் இருக்கலாம்.

எல்லா சோதனைகளுக்கும் தீர்வு உண்டு. இந்த உலகில் தீர்வே இல்லாமல் எந்த சோதனைகளும் இல்லை.

சோதனைகளுக்கு தீர்வாக வரும் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முடிவுகளை ஏற்றுக் கொள்கிற விஷயத்தில் மனிதர்கள் பல்வேறு வகையினாராக இருக்கின்றனர்.

ஒரு இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை அவன் எதிர் கொள்ளும் பிரச்சினையின் தீர்வாக வரும் முடிவு எதுவாக இருந்தாலும் அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டி விட்டு மனதார ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இது தான் சாமானிய இறைநம்பிக்கையாளர் முதற் கொண்டு ஈமானிய உச்சத்தில் இருக்கும் இறைத்தூதர் வரை இஸ்லாம் கடைபிடிக்க தூண்டும் அளவுகோல் ஆகும்.

فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏

நபியே!  அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். ( அல்குர்ஆன்: 3: 159 )

وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏

இன்னும் உறுதியாக நம்பிக்கை கொண்டோர் எல்லாம், அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும்என்று கூறினார்கள்.

( அல்குர்ஆன்: 14: 11 )

وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ

உறுதியாக நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள். ( அல்குர்ஆன்: 14: 12 )

அத்தியாயம் யூசுஃப் பல்வேறு படிப்பினை புதையல்களை தன்னகத்தே கொண்டுள்ள மகத்தான அத்தியாயம் ஆகும்.

மிக முக்கியமாக வாழ்க்கையில் தொடர்படியாக பிரச்சினைகளை, சோதனைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு  ஆறுதலையும், மீண்டு வரும் வழிகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எப்படியும் நம்மைப் பாதுகாத்து காப்பாற்றி விடுவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை படிப்பினையாக வழங்குகிற அத்தியாயம் ஆகும்.

அங்கே நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு அறியாத பருவத்தில் இருந்து இளமைப் பருவம் வரை பிரச்சினையும் சோதனையும் சூழ்ந்தது.

 

அங்கே நபி யஅகூப் (அலை) அவர்களுக்கு முதலில் யூசுஃப் பின்னர் புன்யாமீன் தொடர்ந்து குற்றம் செய்து வரும் இதர மகன்கள் என பிரச்சினையும் சோதனையும் இருந்தது.

அங்கே நாட்டு மன்னனுக்கு பிரச்சினையும் சோதனையும் காத்திருந்தது.

சகோதரனுக்கு இழைத்த மாபெரும் தீங்கின் காரணமாக குற்ற உணர்வால் உந்தப்பட்ட யூசுஃபின் சகோதரர்களுக்கு சகோதரர் யூசுஃபின் அன்பும், வல்லோன் அல்லாஹ்வின் மன்னிப்பும் தேவைப்பட்டது.

அரசியும் குற்ற உணர்வால் உந்தப்பட்டு அல்லாஹ்வின் அடைக்கலத்தை ஆதரவு வைத்து காத்திருந்தார்.

எல்லோருக்குமான பிரச்சினைகளை அவர்கள் சந்தித்த சோதனைகளை வரிசையாக பட்டியலிடும் அல்லாஹ் அவர்களின் ஒவ்வொருவரின் சோதனைகளில் இருந்து அவர்கள் எவ்வாறு வெளியேற்றப்பட்டார்கள். பாதுகாக்கப்பட்டார்கள் என்று அணிவகுத்து கூறுகின்றான்.

ஆக, நான் ஆரம்பத்தில் சொன்னது போன்று எல்லா சோதனைகளுக்கும் தீர்வு உண்டு. இந்த உலகில் தீர்வே இல்லாமல் எந்த சோதனைகளும் இல்லை. என்பதை அத்தியாயம் யூசுஃப் பறை சாற்றி நிற்கின்றது.

யூனுஸ் (அலை) அவர்களை மீன் வயிற்றில் இருந்து ஈடேற்றம் தந்த அல்லாஹ் இது போன்றே இறைநம்பிக்கையாளர்களுக்கும் அவர்களின் சோதனைகளில் இருந்து ஈடேற்றம் நல்குவதாக அறிவிக்கின்றான்.

யூனுஸ் (அலை) அவர்களின் சமூகத்தை கடும் வேதனையில் இருந்து காப்பாற்றிய பிறகு, இது போன்றே இறைநம்பிக்கையாளர்களுக்கும் அவர்களின் சோதனைகளில் இருந்து ஈடேற்றம் நல்குவதாக அல்லாஹ் அறிவிக்கின்றான்.

ஆக நமக்கான எந்த சோதனையும் நமக்கு நிரந்தரமானதல்ல.

நாம் மிகவும் எதிர்பார்த்த தேர்தல் முடிவு இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது தான்.

ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக நமக்கு பெரிய சோதனையாக, முஸ்லிம் சமூகத்திற்கு வெளிப்படையாகவே தீங்கு செய்து வந்த ஃபாசிச கும்பல் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இருப்பது நமக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த முடிவை நாம் எதிர் பார்த்திருக்கா விட்டாலும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

ஏனெனில், எந்தக் காலத்திலும் எந்தக் காரியத்தின் முடிவும் நம் கையில் இல்லை.

எல்லாம் நம்மை படைத்த அல்லாஹ்வின் கையில் இருக்கிறது என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

தற்போது ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான இந்த மாற்றத்தை அடுத்த தேர்தலில் முழுமையான ஆட்சி மாற்றத்திற்கான அஸ்திவாரமாக அல்லாஹ் அமைத்திடுவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன் 

 

நமது விருப்பங்கள் எதுவாயினும் அல்லாஹ்வின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்..

حدثنا موسى بن إسماعيل حدثنا عبد الواحد حدثنا عاصم عن أبي عثمان عن أسامة بن زيد قال كان ابن لبعض بنات النبي يقضي فأرسلت إليه أن يأتيها فأرسل إن لله ما أخذ وله ما أعطى وكل إلى أجل مسمى فلتصبر ولتحتسب   فأرسلت إليه فأقسمت عليه فقام رسول الله صلى الله عليه وسلم وقمت معه ومعاذ بن جبل وأبي بن كعب وعبادة بن الصامت فلما دخلنا ناولوا رسول الله الصبي ونفسه تقلقل في صدره حسبته قال كأنها شنة فبكى رسول فقال سعد بن عبادة أتبكي ؟ فقال إنما يرحم الله من عباده الرحماء

رواه البخاري

உஸாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்களின் அன்பு மகளார் ஜைனப் (ரலி) அவர்கள் என் மகன் உயிர் பிரியும் தருவாயில் உள்ளான்; எனவே, தாங்கள் வருகை தரவேண்டும்என்று சொல்லியனுப்பினார்கள்.

 

அதற்கு, அண்ணலார் தங்கள் மகளாருக்கு ஸலாம் கூறியனுப்பினார்கள், மேலும், “அல்லாஹ் வாங்கிக் கொள்வதனைத்தும் அவனுடையதேயாகும். ஒவ்வொரு விஷயமும் அவனிடம் முடிவானதும், காலநிர்ணயம் நிச்சயிக்கப்பட்டதுமாகும்.

 

எனவே, நீ மறுமையில் கூலி பெரும் எண்ணத்துடன் பொறுமையை மேற்கொள்வாயாக!என்றும் சொல்லியனுப்பினார்கள்.

 

இதற்குப் பின்னரும் ஜைனப் (ரலி) அவர்கள் அண்ணலார் அவசியம் வருகை தர வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியனுப்பினார்கள்.

தங்களது மகளாரின் வற்புறுத்தல் காரணமாக அண்ணலார் தங்களின் தோழர்கள் முஆத் இப்னு ஜபல், ஸஅத் இப்னு உப்பாதா, உபை இப்னு கஅப், ஸைத் இப்னு ஸாபித், (ரலி அன்ஹும்) ஆகியோருடன் ஜைனப் (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள்.

குழந்தை அண்ணலாரிடம் கொண்டு வரப்பட்டது. அண்ணலார் தம் மடியின் மீது குழந்தையை அமர்த்திக் கொண்டார்கள். அப்போது, அக்குழந்தையின் உயிர் சிறிது, சிறிதாகப் பிரிந்து கொண்டிருந்தது. இந்தக் காட்சியைக் கண்டு நபி {ஸல்} அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமென வழிந்தோடலாயிற்று.

அப்போது, ஸஅத் இப்னு உப்பாதா (ரலி) அவர்கள் இது என்ன? தாங்கள் அழுகின்றீர்களே?” என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளத்தில் வைத்துள்ள கருணை உணர்ச்சியாகும்என்று இன்னொரு அறிவிப்பில் அழுகை உணர்வுகளின் வெளிப்பாடாகும்என்று கூறினார்கள்.                 ( நூல்: புகாரி )

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளார் தமது தந்தையான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தால் துஆச் செய்து ஏதேனும் மாற்றம் நிகழும் என்றெண்ணி மீண்டும் மீண்டும் அழைத்திருப்பார்கள்.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மகளாரிடம் கூறிய அறிவுரை "அல்லாஹ்வின் முடிவை ஏற்றுக் கொள்!" என்பது தான்.

அல்லாஹ்வின் நியதி இது தான்....

حدثنا مالك بن إسماعيل: حدثنا زهير، عن حميد، عن أنس رضي الله عنه قال: كان للنبي ﷺ ناقة تسمى العضباء، لا تسبق، قال حميد: أو لا تكاد تسبق، فجاء أعرابي على قعود فسبقها، فشق ذلك على المسلمين حتى عرفه، فقال: (حق على الله أن لا يرتفع شيء من الدنيا إلى وضعه). طوله موسى، عن حماد، عن ثابت، عن أنس، عن النبي صلى الله عليه وسلم.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- நபிகள் நாயகம் அவர்களிடம் 'அள்பா' என்று பெயர் வைக்கப்பட்ட ஓர் ஒட்டகம் ஒன்று இருந்தது. அந்த ஒட்டகம் பந்தயத்தில் வேறு எந்த வொரு ஒட்டகமும் முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய) தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஓர் ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அந்த ஒட்டகம் நபிகள் நாயகம் அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லீம்களுக்கு மன வேதனையை அளித்தது. இதை அறிந்த நபிகள் நாயகம் அவர்கள் "உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்" என்று கூறினார்கள். ( நூல்: புகாரி:- 2,872 / 6,501 )

மாநபி (ஸல்) அவர்களின் ஒட்டகம் தோற்றுப் போய் விட்டதே என்று அங்கலாய்த்துக் கொண்ட தம் தோழர்களிடம் மாநபி ஸல் அவர்கள் கூறிய அறிவுரை மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.

நபி (ஸல்) விரும்பிய தாயிஃபும், அல்லாஹ் வழங்கிய முடிவும்...

عَنِ ابْنِ شِهَابٍ ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ، أَنَّ عَائِشَةَ , رَضِيَ اللَّهُ عَنْهَا , حَدَّثَتْهُ أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ , صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا رَسُولَ اللَّهِ , هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ ؟ قَالَ : " لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ ، وَكَانَ أَشَدَّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ الْعَقَبَةِ إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَا لَيْلِ بْنِ عَبْدِ كُلالٍ فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ

ஒரு முறை ஆயிஷா  (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் உங்களது வாழ்வில் உஹது யுத்த்த்தை விட மிக சோதனையான ஒரு கட்ட்த்தை சந்தித்த்துண்டா? என்று கேட்ட போது நபி (ஸல்) ஆமாம் தாயிபில் தாயிப் வாசிகளை சந்தித்ததே என் வாழ்வில் மிகச் சோதனையான கால கட்டம் என்று கூறினார்கள்.

 

பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் முடிவைப் பொருந்திக் கொண்ட விதம்...

«اللهم إليك أشكو ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس، اللهم يا أرحم الراحمين أنت رب المستضعفين وأنت ربي إلى من تكلني؟ إلى بعيد يتجهّمني أو إلى عدو ملكته أمري، إن لم يكن بك عليّ غضب فلا أبالي ولكن عافيتك هي أوسع، إني أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات، وصلح عليه أمر الدنيا والآخرة من أن تنزل بي غضبك أو تحل بي سخطك لك العتبى حتى ترضى لا حول ولا قوة إلا بك»

அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் எனது திறமைக் குறைவையும் மனிதர்களிடம் நான் மதிப்பின்றி இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன்! கருணையாளர்களிலெல்லாம் மிகப் பெரிய கருணையாளனே! நீதான் எளியோர்களைக் காப்பவன் நீதான் என்னைக் காப்பவன்!

நீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்? என்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடமா? அல்லது என்னுடைய காயத்தை நீ உரிமையாக்கிக் கொடுத்திடும் பகைவனிடமா? உனக்கு என்மீது கோபம் இல்லையானால் (இந்த கஷ்டங்களையெல்லாம்) நான் பொருட்படுத்தவே மாட்டேன். 

எனினும், நீ வழங்கும் சுகத்தையே நான் எதிர்பார்க்கிறேன். அதுவே எனக்கு மிக விசாலமானது. உனது திருமுகத்தின் ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசம் அடைந்தன் இம்மை மறுமையின் காரியங்கள் சீர்பெற்றன. அத்தகைய உனது திருமுகத்தின் ஒளியின் பொருட்டால் உனது கோபம் என்மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது அதிருப்தி என்மீது இறங்குவதிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். 

அல்லாஹ்வே! நீயே! பொருத்தத்திற்குரியவன். நீ பொருந்திக் கொள்ளும்வரை உன் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். 

அல்லாஹ்வே! பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருள் இல்லாமல் முடியாது.

தாயிஃப் நகரில்.....

நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு நபி (ஸல்) மக்காவிலிருந்து 60 மைல் தொலைவிலுள்ள தாம்ஃபிற்குச் சென்றார்கள். (இது கி.பி. 619 மே மாதம் இறுதி அல்லது ஜுன் மாத ஆரம்பத்தில் ஆகும்). நபி (ஸல்) அவர்கள் தங்களது அடிமை ஜைது இப்னு ஹாஸாவுடன் கால்நடையாகச் சென்றார்கள். திரும்பும்போதும் கால்நடையாகவே திரும்பினார்கள். வழியிலிருந்த ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் இஸ்லாமிய அழைப்பு கொடுக்கப்பட்டும், அக்கூட்டத்தால் எவரும் இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

قال عبد ياليل بن عمرو: إنه سيمرط (أي سيمزق) ثياب الكعبة إن كان الله أرسلك.

أما مسعود فقال: أما وجد الله أحدًا غيرك.

وأما الثالث حبيب فقد قال -وهو يحاول أن يصطنع الذكاء مع شدة غبائه- قال: والله لا أكلمك أبدًا، إن كنت رسولاً لأنت أعظم خطرًا من أن أرد عليك الكلام، ولئن كنت تكذب على الله ما ينبغي أن أكلمك.

وقال لهم: "إذ فعلتم ما فعلتم فاكتموا عني

நபி (ஸல்) அவர்கள் தாயிஃபிற்குச் சென்றடைந்தபோது அங்கு வசித்து வந்த ஸகீஃப் கூட்டத்தாரின் தலைவர்களும் அம்ர் இப்னு உமைர் அஸ்ஸகபிஎன்பவனின் பிள்ளைகளுமான 1) அப்து யாலில், 2) மஸ்ஊது, 3) ஹபீப் என்ற மூன்று சகோதரர்களிடம் சென்றார்கள். அவர்களிடம் இஸ்லாமைப் பரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரினார்கள். ஆனால், அவர்களில் ஒருவன் உன்னை அல்லாஹ் தூதராக அனுப்பியது உண்மையென்றால் நான் கஅபாவின் திரைகளைக் கிழித்து விடுவேன்என்று கூறினான். மற்றொருவன் அல்லாஹ்வுக்கு உன்னைத் தவிர நபியாக அனுப்ப வேறொருவர் கிடைக்கவில்லையா?” என்று கேட்டான்.

மூன்றாமவன், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உன்னிடம் ஒருபோதும் பேச மாட்டேன். நீ உண்மையில் தூதராக இருந்தால் உனது பேச்சை மறுப்பது எனக்கு மிக ஆபத்தானதாகும். நீ அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவராக இருந்தால் உன்னிடம் பேசுவதே எனக்குத் தகுதியல்லஎன்று கூறினான். அப்போது நபி (ஸல்) இதுதான் உங்கள் முடிவாக இருந்தால் நமது இந்த சந்திப்பை (மக்களுக்கு வெளிப்படுத்தாமல்) மறைத்துவிடுங்கள்என்று கூறினார்கள்.

நபி (ஸல்) தாயிஃபில் பத்து நாட்கள் தங்கி அங்குள்ள மற்ற எல்லா தலைவர்கள், பிரமுகர்களைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். ஆனால், அவர்களில் எவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாததுடன் தங்களது ஊரைவிட்டு உடனடியாக வெளியேறும்படியும் கூறி, நபி (ஸல்) அவர்கள் மீது வம்பர்களை ஏவிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் ஊரைவிட்டு வெளியே செல்ல முயன்றபோது அங்குள்ள வம்பர்களும் அடிமைகளும் ஒன்றுகூடி அவர்களை ஏசிப்பேசினர்.

இறுதியில் மக்களின் கூட்டம் அதிகமாகி அவர்கள் அனைவரும் இரு அணிகளாக நின்று கொண்டு, நபி (ஸல்) அவர்களின் மீது கற்களை எறிந்தனர். அதிகமான கற்களை நபி (ஸல்) அவர்களின் குதிகால் நரம்பை நோக்கி எறியவே அவர்களது பாதணிகளும் இரத்தக் கறைகளாயின. நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களது அடிமை ஜைது இப்னு ஹாஸா நபியவர்களைக் காப்பதற்காக தங்களையே கேடயமாக்கிக் கொண்டார்கள். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் )

யூனுஸ் (அலை) அவர்கள் விருப்பமும்... அல்லாஹ்வின் முடிவும்...

وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ (139) إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ (140) فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ (141) فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ (142) فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ (143) لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ يُبْعَثُونَ (144) فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ (145) وَأَنْبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِنْ يَقْطِينٍ (146) وَأَرْسَلْنَاهُ إِلَى مِائَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ (147)

யூனுஸ் (அலை) அவர்கள் ஒரு இலட்சம் அல்லது அதைவிட கூடுதல் எண்ணிக்கை  கொண்ட ஒரு சமூகத்திற்கு  நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். யூனுஸ்  (அலை) அவர்கள் சிலை வணக்கம் கூடாது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று போதித்தார். அந்த மக்கள் நபியின் போதனையை ஏற்கவில்லை. எனவே, உங்களுக்கு அழிவு வரும் என்று எச்சரித்து விட்டு ஊரை விட்டும் யூனுஸ்  (அலை) அவர்கள் வெளியேறிவிட்டார்கள். 

ஒரு நபி தனது ஊரை விட்டும் வெளியேறுவதென்றால் அல்லாஹ்வின் கட்டளை வர வேண்டும். யூனுஸ்  (அலை) அவர்கள் தனது சுய முடிவில் சென்றார்கள்.

அதே நேரத்தில் யூனுஸ்  (அலை) அவர்களின் சமூகத்தினர் வேதனையின் அடையாளத்தைக் கண்டு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டனர். அவர்களின் ஈமானும் தவ்பாவும் அவர்களை அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து பாதுகாத்தது.

அதே போன்று ஊரை விட்டு வெளியேறிய யூனுஸ் அலை அவர்கள் ஒரு துறைமுகத்திற்கு வந்தார்கள். 

ஒரு கப்பல் இருந்தது. அதில் மக்கள் நிறைந்திருந்தனர். இவர் போய் அந்தக் கப்பலில் ஏறிக் கொண்டார். கப்பல் கடலில் பயணித்தது. இடை நடுவில் கப்பல் அலை மோத ஆரம்பித்தது. இவ்வாறு ஆபத்து வந்ததால் கப்பலில் உள்ளவர்களின் பெயர்களை எழுதி சீட்டுக் குலுக்கி யாருடைய பெயர் வருகின்றதோ அவரைக் கடலில் குதிக்கச் சொல்வது அந்த காலத்தில் வாழ்ந்த அந்த மக்களின் மரபாகும். இந்த அடிப்படையில் சீட்டுக் குலுக்கிய போது யூனுஸ் நபியின் பெயர்தான் வந்தது. அவர் கடலில் குதித்தார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மிகப் பிரம்மாண்டமான ஒரு மீன் யூனுஸ் நபியை விழுங்கிக் கொண்டது. யூனுஸ் நபி மீனின் வயிற்றுக்குள் சென்றார். தான் சோதிக்கப்படுவதை அறிந்தும் கொண்டார். அவர் மீன் வயிற்றில் இருந்து கொண்டு,

فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (87)

உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. நீ தூய்மையானவன். நான் அநீதமிளைத்தோரில் ஆகிவிட்டேன்! (திருக்குர்ஆன் 21:87) என்று பிரார்த்தித்தார்.

அல்லாஹ் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்தான். மீன் அவரை கரையில் துப்பியது. அவர் கடற்கரையில் பலவீனமான நிலையில் இருக்கும் போது அல்லாஹ் சுரைக்காய் கொடியை வளரச் செய்து அவருக்கு நிழல் கொடுத்தான்.

யூனுஸ் (அலை) அவர்களும் சோதனையில் இருந்து மீண்டு கொண்டார்.

யூனுஸ் (அலை) சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் திருக்குர்ஆனில் 37:139- 148, 68:48-50, 21:87-88 ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளது.

ஆட்சி மாற்றத்திற்காக நாம் செய்த துஆக்களின் நிலை?

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஆட்சி மாற்றத்திற்காக நாம் துஆ செய்திருக்கின்றோமே? ஹாஜிகள் கஅபாவில் துஆ செய்தார்களே? அந்த துஆக்களின் நிலை என்ன? என்று நம் மனதில் கேள்வி எழுந்தால் அதற்கான பதிலை இரண்டு வகையில் நாம் பெறலாம்.

ஒன்று நாம் துஆச் செய்தோம். ஆனால், அந்த துஆவில் நமக்கு உறுதி இல்லை. ஏனெனில், நம்மில் பெரும்பாலானோர் அவர்கள் EVM மில் மோசடி செய்து வெற்றி பெற்று விடுவார்கள் என்று புலம்பிக் கொண்டு இருந்தோம்.

துஆவின் மீது நமக்கு நம்பிக்கை குறைந்து போனதும் ஒரு காரணம் எனலாம்.

 قال رسول الله "صلى الله عليه وسلم": (ادْعُوا الله وَأَنْتُمْ مُوقِنُونَ بِالْإِجَابَةِ، وَاعْلَمُوا أَنَّ اللهَ لَا يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ)، رواه الترمذي.

"அல்லாஹ் பதில் தருவான் என்ற உறுதியுடன் அவனிடம் துஆ செய்யுங்கள். கவனக்குறைவான மறதியான இதயத்திலிருந்து வெளிவரக்கூடிய பிரார்த்தனைக்கு அல்லாஹ் பதில் அளிக்க மாட்டான்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இல்லை,  இல்லை நாம் உறுதியாக நம்பியே துஆச் செய்துள்ளோம் என்றால் அல்லாஹ் அந்த நம்பிக்கையை ஒரு போதும் வீணாக்க மாட்டான்.

தற்போது அல்ல விரைவில் ஏதேனும் மாற்றம் நிகழழாம். அல்லது மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும். அல்லது நமது பாவங்கள் மன்னிக்கப்படலாம். அல்லது நமக்கு வர இருக்கும் ஆபத்து தடுக்கப்படலாம்.

ما منْ رجلٌ يدعو اللهَ بدعاءٍ إلا استُجيبَ لهُ, فإما أنْ يُعجِّل لهُ في الدنيا، وإما أن يدِّخرَ لهُ في الآخرةِ، وإما أنْ يكفِّر عنهُ ذنوبَهُ بقدرِ ما دعا ما لمْ يدعُ بإثمٍ أو قطيعةِ رحمٍ، أو يستعجلَ، قالوا يا رسولَ اللهِ،وكيف يستعجلُ ؟ قال : يقول دعوتُ ربي فما استجابَ لي

الراوي: أبو هريرة المحدث: الترمذي - المصدر: سنن الترمذي -الصفحة أو الرقم: 3677

அடியான் கேட்கின்ற அனைத்து துஆக்களுக்கும் அகீகாரம் உண்டு. அடியான் துஆ கேட்கும் போது மூன்றில் ஒரு விஷயம் நடைபெறும். 1,அவன் கேட்டது உலகத்திலேயே கிடைத்து விடும்.அல்லது 2, மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும்.அல்லது 3, அவன் கேட்ட துஆவின் அளவு அவன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

துஆவில் மூன்று விஷயங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். 1, பாவமான காரியம் குறித்து கேட்காமல் இருக்க வேண்டும். 2, துஆ கேட்பவன் உறவை முறிக்காதவனாக இருக்க வேண்டும். 3, அவசரம் காட்டாமல் இருக்க வேண்டும். {திர்மிதி}

இன்னொரு ஹதீஸில் அவனுக்கு வர இருக்கும் ஆபத்தை அல்லாஹ் நீக்குவதாக வந்திருக்கிறது.

 

يقول النبي "صلى الله عليه وسلم": (ما من مسلم يدعو الله عز وجل بدعوة ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث خصال: إما أن يعجل له دعوته، وإما أن يدخرها له في الآخرة، وإما أن يصرف عنه من السوء مثلها. قالوا: إذن نكثر، قال: الله أكثر) رواه أحمد

நாம் கேட்கும் எந்த துஆவும் வீணாகுவதில்லை. ஒழுங்காக முறைப்படி கேட்கப்பட்ட எந்த துஆவுக்கும் பலன் இல்லாமல் இல்லை. கபூலாகும் விதங்கள் மாறலாமே தவிர துஆக்கள் வீணாகாது. எனவே கேட்பதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கிடைக்க வில்லையே என்று கவலைப்படவும் கூடாது. சீக்கிரம் கபூலாக வேண்டும் என்று அவசரப்படவும் கூடாது.

ஏனெனில், மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னை அழிக்குமாறு துஆச் செய்து விட்டு நாற்பதாண்டு காலம் காத்திருந்தார்கள். அதன் பின்னரே ஃபிர்அவ்னை அல்லாஹ் அழித்தொழித்தான்.

ஒரு வேளை அல்லாஹ் ஃபிர்அவ்னுக்கும், ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்குமான முடிவை இந்த கூட்டத்திற்கும் இறுதி முடிவாக வைத்திருக்கலாம்.

எனவே, அல்லாஹ்வின் முடிவுகளை நம்புவோம்! அல்லாஹ் வழங்கும் முடிவுகளையே பொருந்திக் கொள்வோம்!!

அல்லாஹ்விடம் நாம் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருவோம்! அல்லாஹ் நமக்கு போதுமானவன்!

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

 எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!

எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!

எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக!

எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” ( அல்குர்ஆன்: 2: 286 )

No comments:

Post a Comment