Thursday, 19 December 2024

நம் மரணங்கள் மக்ஃபிரத்தும், ரஹ்மத்தும் நிறைந்ததாக அமையட்டும்!!

 

நம் மரணங்கள் மக்ஃபிரத்தும், ரஹ்மத்தும் நிறைந்ததாக அமையட்டும்!!

நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மரணம் அடைகிற போது அந்த மரணத்தின் ஊடாக நாம் அச்சமடைகின்றோம். நம்மிடம் ஒரு வித பயமும் நடுக்கமும் ஏற்படுகிறது.

சில போது பிறரது மரண செய்தியைக் கேட்டதும் நொந்து, உடைந்து கலங்கியும்  போகிறோம்.

உண்மையில் இறைநம்பிக்கையாளராக இருக்கும் நாம் மரணத்தின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால் மரணத்தைக் கண்டு ஒரு போதும் அஞ்சவோ நடுங்கவோ பயப்படவோ மாட்டோம், பிறரது மரண செய்தியைக் கேட்டதும் நொந்து, உடைந்து கலங்கிப் போகவும் மாட்டோம் என்பது தான் தெளிவான, நிதர்சனமான உண்மையாகும்.

மரணம் அது நிகழும்! 

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் சில நாட்களை வரையறுத்து வைத்திருக்கிறான். அவை முற்றுப் பெறுகின்றபோது அவரது உலக வாழ்வு முற்றுப்பெறுகிறது. 

وَلَن يُؤَخِّرَ ٱللَّهُ نَفْسًا إِذَا جَآءَ أَجَلُهَا وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ

எந்த ஓர் ஆத்மாவுக்கும் அதன் தவணை (அஜல்) வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் அதனைப் பிற்படுத்த மாட்டான். போவதில்லை. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவாக இருக்கிறான்.  ( அல்குர்ஆன்: 63: 11 )

எனவே, ஒவ்வொரு நாளும் முடிவடைகின்ற போது எனது ஆயுளின் ஒவ்வொரு பகுதி கழிந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.

மரணத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பியதாக சரித்திரம் கிடையாது.

وروي من حديث أنس قال قال رسول الله صلى الله عليه وسلم: " لما بعث الله نوحاً إلى قومه بعثه وهو ابن خمسين ومائتي سنة فلبث في قومه ألف سنة إلا خمسين عاماً وبقي بعد الطوفان خمسين ومائتي سنة فلما أتاه ملك الموت قال: يا نوح يا أكبر الأنبياء ويا طويل العمر ويا مجاب الدعوة كيف رأيت الدنيا قال: مثل رجل بني له بيت له بابان فدخل من واحد وخرج من الآخر "

உலகில் நீண்ட ஆயுளைப் பெற்ற இறைதூதர்களில் ஒருவரான நபி நூஹ் (அலை) அவர்கள். அவர் இவ்வுலகில் சுமார் 1000 வருடங்கள் வரை வாழ்ந்தவர்கள். அன்னாரின் உயிரைக் கைப்பற்றுவதற்காக வந்த மலக்குல் மௌத் அவரை நெருங்கி,

நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்ந்த மனிதரே! உலக வாழ்க்கையை நீர் எப்படிப் பார்க்கிறீர்கள்எனக் கேட்டார். அதற்கு அவர், “நான் இந்த உலகத்தை இரண்டு வாயில்கள் உள்ள ஒரு வீட்டைப் போல் காண்கிறேன். ஒரு வாயிலால் நுழைந்து அடுத்த வாயிலால் வெளியேறுவதைப் போன்று இருக்கிறதுஎனப் பதிலளித்தார்.

 

இன்று பலரும் யாருக்கேனும் மரணம் நிகழ்ந்ததாக கேள்விப்படும் போது அவருக்கு என்ன செய்தது? என்று விசாரிப்பதுண்டு. 

என்ன செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன? ஆம், ஒருவருக்கு மரணம் நிகழ்வதற்கு ஒரு மனிதனின் பிறப்பு ஒன்று போதாதா?. ஒருவர் பிறந்திருக்கிறார் என்றால் அவர் மரணிப்பார் என்பது உறுதி. அதுதான் மிகத் தெளிவான காரணம். இதைத் தவிர வேறு காரணங்களை எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

மரணம் ஒரு மௌன உபதேசி!

قال النبي ﷺ: "تركت فيكم واعظين؛ ناطقاً وصامتاً، الناطق القرآن، والصامت الموت.

உங்களிடத்தில் இரண்டு உபதேசிப்பவர்களை விட்டுசெல்கிறேன் (ஓன்று) பேசும் உபதேசி (மற்றொண்டு) மெளனமான உபதேசி. பேசும் உபதேசம் அல்குர்ஆன் , மெளனமான உபதேசி மவ்த் (மரணம் ).என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் இந்த உம்மத்தின் மனிதர்களுக்கு இரண்டு உபதேசிகளை விட்டுச் சென்றார்கள். 

1) பேசுகின்ற உபதேசி

2) மௌன உபதேசி

இவை என்றும் எப்போதும் நம்மோடு பின்னிப் பிணைந்திருக்கின்ற இரண்டு பெரும் உபதேசிகள் ஆகும். 

வேறு எந்த உபதேசங்களும் அவசியப்படாத அளவுக்கு இவ்விரு உபதேசிகளும் நமது வாழ்வை சீரமைக்கப் போதுமானவை. 

பேசுகின்ற உபதேசிதான் புனித அல்குர்ஆன். இது எம்மோடு பேசிப் பேசி நமக்கு எப்போதும் உயிரோட்டம் தந்து கொண்டேயிருக்கிறது. பேசாமலேயே எமக்கு உயிரோட்டம் தருகின்ற அடுத்த மௌன உபதேசி தான் மரணம்.

மனிதன் மரணத்தை நினைத்துப் பார்க்கின்ற அளவுக்கு அவன் அதன் மூலம் நல்லுணர்ச்சி பெறுவான். மனிதனுக்கு மரணம் ஒன்றே போதுமான உபதேசியாக இருக்கிறது.

அந்த வகையில் நான்கு நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்த கோவை S. A பாஷா பாய் அவர்களின் மரணம்.

கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைவாசிகளில் கைதியாகவே, விடுதலையாகாமலே மரணம் அடைந்த மூன்றாவது சிறைவாசி ஆவார்கள்.

35 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் வாடிய 84 வயது நிரம்பிய பாஷா பாய் கடந்த ஓராண்டு காலமாக உடல் நலக்குறைவு காரணமாக, பரோலில் வெளிவந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16/12/2024 அன்று வஃபாத் ஆனார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அன்னாரின் பிழைகளை மறைத்து மன்னித்து அருள் புரிவானாக!

அன்னாரின் மண்ணறை வாழ்க்கையை வெளிச்சமாக்கி விசாலமாக்கி சுவனத்தின் பூஞ்சோலையாக ஆக்குவானாக!

அன்னாரின் மஹ்ஷர் வாழ்க்கையை எளிதாக்கி மாநபி ஸல் அவர்களின் ஷஃபாஅத்துக்கு உரியவராக்கி மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நஸீபாக ஆக்குவானாக! அன்னாரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பொருந்திக் கொள்வானாக!

அன்னாரின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய நினைத்த தமிழ்நாடு சங்கிகளின் கனவு தவிடு பொடியாகி இருக்கிறது.

இறுதி ஊர்வலத்தை முன் வைத்து பெரிய அளவில் ஏதாவது செய்து விடலாம் என்றே தமிழ்நாடு பாஜக தலைவரும், கோவை மாவட்ட பாஜக தலைவரும் போட்டி போட்டுக் கொண்டு அறிக்கை போர் நடத்தினர்.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. ஊர்வலத்தின் ஊடாக பிரச்சினை செய்வதும், கலவரம் செய்வதும், வன்முறை செய்து கடைகளை சூறையாடுவதும், உயிர்களை கொல்வதும் அவர்களின் சங்கிகளின் கடந்த கால வரலாறுகளாகும்.

ஆனால், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதையாய் பாஷா பாய் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க நாடு தழுவிய அளவில் இருந்து பயங்கரவாதிகள், என்ஐஏ வால் தேடப்படும் தீவிரவாதிகள் வருகை தர இருக்கிறார்கள். இந்த இறுதி ஊர்வலத்தின் மூலமாக பெரும் பதற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் என்று அரை வேக்காட்டுத் தனமாக அறிக்கை விட்டார் கோவை மாவட்ட சங்கிகளின் தலைவர்.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பாஷா பாய் அவர்களின் இறுதி ஊர்வலம் எவ்வித ஆராவாரமும், கோஷமும் இன்றி அமைதியான முறையில் சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று பூமார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஹைதர்அலி திப்புசுல்தான் மசூதியில் புதன்கிழமை மாலை நல்லடக்கம்  செய்யப்பட்டது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு பல்வேறு பாஸிட்டிவ்வான, நெகட்டிவ்வான விமர்சனங்களுக்கு சொந்தக்காரரான கோவை பாஷா பாய் தமது கேரியரில் முதன் முதலாக கோபப்பட்டதும் ரோஷப்பட்டதும் நியாயமான ஒரு காரணத்திற்காக.

ஆம்! அவருக்கு வந்த அந்த கோபமும் ரோஷமும் நபி ( ஸல்) அவர்களுக்காகவும்,  உம்மஹாத்துல் முஃமின்களுக்காகவும் வந்தது. 

அந்த கோபமும் ரோஷமும் தன் ஹபீப் முஹம்மது ஸல் அவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தாரான அவர்களின் தூய துணைவியர்களுக்காகவும் என்பதால் அந்த ரோஷத்திற்கான நற்கூலியை அவருக்கு உயர்ந்தோன் அல்லாஹ் நிரப்பமாக வழங்குவானாக! என்று நாம் பிரார்த்தனை செய்ய கடமைப் பட்டுள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக அவர்களிடம் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் தான் நேர்மறையான எதிர்மறையான விமர்சனங்களின் பால் பாஷா பாய் அவர்களை அழைத்துச் சென்று குடும்பம் பந்தம் உறவு என்பதில் இருந்து அவர்களைப் பிரித்து கால் நூற்றாண்டு காலம் கொடுஞ்சிறை வாசத்தை அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் பரிசளித்தது.

என்ன செய்தார் கோவை பாஷா பாய் அவர்கள்?..

1982 ஆண்டு கோவையில் கோவை திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 

ஒரு பட்டிமன்றம் நடந்தது. ஆபாசத்தில் மிஞ்சியது ராமாயணமா?மகாபாரதமா?

என்பது பட்டிமன்றத்தின் தலைப்பு. 

இதற்கும் இஸ்லாமியர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பொதுவாக இஸ்லாமியர்கள் மாற்று மத நம்பிக்கைகள், கடவுளர்கள் குறித்து எங்கும் எப்போதும் விமர்சித்தும் பேசுவதில்லை ஆதரித்தும் பேசுவதில்லை. 

ஆனால் இந்து முன்னணி மேற்படி பட்டிமன்ற நிகழ்வை, முஸ்லிம்கள் 

குறித்தும் நபி ( ஸல்) அவர்கள் குறித்தும் அவர்களின் மனைவியர்கள் குறித்தும் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் பேசுவதற்கான கருவியாக பயன்படுத்த 

முடிவு செய்தது. 

அதன் விளைவாக 1982 ம் ஆண்டு ஜூன் மாதம் 20 அன்று கோவை வ.உ.சி மைதானத்தில் இந்து முன்னணி பட்டிமன்றம் ஒன்றை நடத்தியது.  அதன் தலைப்பு காமத்தில் விஞ்சி நிற்பது கன்னி மேரியா? கதீஜாவா?  மணியம்மையா?   

அதில் அவர்கள் முஸ்லிம்களையும் நபி( ஸல்) அவர்களையும் அவர்களின் மனைவியர்களையும் எவ்வளவு அசிங்கமாகவும் அருவருப்பாகவும் பேச வேண்டும் என்று நினைத்தார்களோ அதை விட அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசினார்கள். 

இதன் தொடர்ச்சியாக 1984 ஆம் ஆண்டு ஜூலை 04 ம் தேதி கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் இதுபோன்று அநாகரீகமாக பேசினார். 

அப்போது இந்த கோவை பாஷா பாய்க்கு, ரோஷம் வந்த அளவுக்கு வேறு யாருக்கும் வரவில்லை. அதன் விளைவாக மதுரை ரயில் நிலையத்தில் வைத்து அவர்  ராமகோபாலனை தலையில் தாக்கினார். ஆனால் அந்த தாக்குதல் அவர் எதிர்பார்த்த பலனை தராமல் போயிற்று!  

இத்தகைய சூழ்நிலையில் கோவையில் துப்பாக்கிச் சூடு,குண்டு வெடிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. இவை அனைத்திற்கும் சூத்திரதாரி இவர்தான் என அதிகார வர்க்கம் முடிவு செய்து அவர் தலையிலேயே எல்லா பழியையும் போட்டுவிட்டது. 

அவருக்கு வந்த ரோஷம் நபி ( ஸல்) அவர்களுக்காகவும் உம்மஹாத்துல் முஃமின்களுக்காகவும் வந்த ரோஷம் என்பதால் அந்த ரோஷத்திற்கான நற்கூலியை அவருக்கு உயர்ந்தோன் அல்லாஹ் நிரப்பமாக வழங்கியருள்வானாக! 

ஜனாஸாவைப் பின் தொடர்வதும்.... தொழுகையில் பங்கேற்பதும், நல்லடக்கத்தில் கலந்து கொள்வதும்....

இறுதி மரியாதை செலுத்தும் நோக்கில் சென்றவர்கள் பயங்கரவாத & வன்முறை செயல் செய்யும் திட்டத்தோடு வந்திருக்கின்றார்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தமான குற்றச்சாட்டு.

ஏன் முஸ்லிம் சமூகம் இறுதிச் சடங்கில் பங்கேற்க இவ்வளவு முக்கியத்துவம் தருகிறது? என்பதை முதலில் சங்கிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلَامِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ».  

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1240]

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) கூறுகின்றார்கள் :

'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் அவரின் இறுதி சடங்கில் பின்துயர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தல், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ்) என்று பதிலுரைத்தல்

இறுதி சடங்கில் பின் தொடர்ந்து வருவதன் நோக்கமே அவருக்கான ஜனாஸா (பிரேத) தொழுகையில் பங்கேற்று அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவே.

ஜனாஸா (பிரேதம்) தொழுகை நோக்கம் என்னவெனில் இறந்தவரின் நல்வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகும். 

ஒருவரது பிரேதத் தொழுகையில் பலர் கலந்து கொள்வது அவர் ஓர் இறை நம்பிக்கையாளர் என்பதற்கு அவருக்காக இறைவனிடம் அவர்கள் சாட்சியம் அளிப்பதைப் போன்று உள்ளது. 

அத்துடன் அவர்களெல்லாம் அவருக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்கின்றனர். ஆகவே அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.

روى مسلم في صحيحه عن ابن عباس رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما من رجل مسلم يموت، فيقوم على جنازته أربعون رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيه.

"மரணத்தை தழுவிய ஒரு முஸ்லிமின் ஜனாஸாவில் இணைவைக்காத நிலையில் உள்ள முஸ்லிம்கள் நாற்பது நபர்கள் பங்கேற்று தொழுகையில் கலந்து கொண்டு அவருக்காக துஆ செய்தால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்கின்றான்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

وعن عائشة رضي الله عنها: ما من ميت يصلي عليه أمة من المسلمين يبلغون مائة كلهم يشفعون له إلا شفعوا فيه. رواه مسلم

மரணத்தை தழுவிய ஒரு முஸ்லிமின் ஜனாஸாவில் இணைவைக்காத நிலையில் உள்ள முஸ்லிம்கள் நூறு நபர்கள் பங்கேற்று தொழுகையில் கலந்து கொண்டு அனைவரும் அவருக்காக துஆ செய்தால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்கின்றான்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

 

எனவே, தன் மீது கடமையானதை நிறைவேற்றவும், தம் சகோதரனின் மீது இறைவனின் கருணையும் மன்னிப்பும் கிடைக்க வேண்டும் என விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் ஜனாஸாவை பின் தொடர்வார். இது முஸ்லிம் சமூகத்தின் இயல்பான ஒரு பண்பாடாகும்.

1)   சில மரணங்கள் நம் குற்ற உணர்ச்சியை தூண்டி விடும்!

طلب عمر من الزمرة الشاكية أن تعدد نقاط شكواها، واحدة واحدة.. فنهض المتحدث بلسان هذه المجموعة وقال: نشكو منه أربعا: " لا يخرج الينا حت يتعالى النهار.. وا يجيب أحدا بليل.. وله في الشهر يومان لا يخرج فيهما الينا ولا نراه،وأخرى لا حيلة له فيها ولكنها تضايقنا، وهي أنه تأخذه الغشية بين الحين والحين "..

وجلس الرجل: وأطرق عمر مليا، وابتهل الى الله همسا قال: " اللهم اني أعرفه من خير عبادك.. اللهم لا تخيّب فيه فراستي "..

ودعاه للدفاع عن نفسه، فقال سعيد: أما قولهم اني لا أخرج اليهم حتى يتعالى النهار..

" فوالله لقد كنت أكره ذكر السبب.. انه ليس لأهلي خادم، فأنا أعجن عجيني، ثم أدعه يختمر، ثم اخبز خبزي، ثم أتوضأ للضحى، ثم أخرج اليهم "..

وتهلل وجه عمر وقال: الحمد للله.. والثانية..؟! وتابع سعيد حديثه: وأما قولهم: لا أجيب أحدا بليل.. فوالله، لقد كنت أكره ذكر السبب.. اني جعلت النهار لهم، والليل لربي "..

أما قولهم: ان لي يومين في الشهر لا أخرج فيهما...

" فليس لي خادم يغسل ثوبي، وليس بي ثياب أبدّلها، فأنا أغسل ثوبي ثم أنتظر أن يجف بعد حين.. وفي آخر النهار أخرج اليهم ".

وأما قولهم: ان الغشية تأخذني بين الحين والحين..

" فقد شهدت مصرع خبيب الأنصاري بمكة، وقد بضعت قريش لحمه، وحملوه على جذعه، وهم يقولون له: أحب أن محمدا مكانك، وأنت سليم معافى..؟ فيجيبهم قائلا: والله ما أحب أني في أهلي وولدي، معي عافية الدنيا ونعيمها، ويصاب رسول الله بشوكة..

فكلما ذكرت ذلك المشهد الذي رأيتهو أنا يومئذ من المشركين، ثم تذكرت تركي نصرة خبيب يومها، أرتجف خوفا من عذاب الله، ويغشاني الذي يغشاني "..

وانتهت كلمات سعيد التي كانت تغادر شفتيه مبللة بدموعه الورعة الطاهرة..

ولم يمالك عمر نفسه ونشوه، فصاح من فرط حبوره.

" الحمد للله الذي لم يخيّب فراستي " !

ஹிம்ஸ் மாகான மக்களின் பிரதிநிதிகள் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்.

தமது நகர கவர்னர் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களின் மீது மூன்று முக்கிய குற்றச்சாட்டுக்களை ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களிடம் சமர்பித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட கவர்னர் வரவழைக்கப்பட்டார் ஹிம்ஸ் மாகாண பிரதிநிதிகள் எதிரே அமர வைக்கப்பட்டனர்.

ஹிம்ஸ் மாகாண பிரதிநிதிகள்: நன்கு வெளிச்சமான பின்பு தான் மக்களை சந்திக்க வருகை தருகிறார்

ஸயீத் (ரலி) : அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர்கள் இப்படி குற்றம் சுமத்துவதை நான் வெறுக்கிறேன். ஏனெனில், என் வீட்டில் பணியாளர்கள் கிடையாது, என் மனைவியோடு வேலை பார்த்துக் கொள்கிறேன். அவர்களோடு காலை உணவை தயார் செய்வதில் ஈடுபடுவேன். பின்பு காலை உணவை சாப்பிடுவேன்.பிறகு உளு செய்வேன்,பின்பு அவர்களிடம் வருகை புரிவேன்.என்றார்கள்.

ஹிம்ஸ் பிரதிநிதிகள் : இரவில் சென்று முறையிட்டால் எங்களின் முறையீட்டிற்கு பதில் தருவதில்லை.

ஸயீத் (ரலி) : இந்தக்குற்றச்சாட்டையும் நான் மறுக்கிறேன். ஏனெனில், பகலை மக்களின் சேவைக்காகவும், இரவை அல்லஹ்வின் வணக்கத்திற்காகவும் பயன் படுத்துகிறேன்.

ஹிம்ஸ் பிரதிநிதிகள்: மாதத்தில் ஒரு நாள் எங்களின் எந்த அலுவல்களையும் கவனிப்பதில்லை.

ஸயீத் (ரலி) : என் ஆடைகளை சுத்தம் செய்யும் பணியாள் என்னிடம் இல்லை. என் ஆடைகளை துவைத்து, காயப் போட்டு அது உலர்வது வரை காத்திருப்பேன், மறுநாள் அந்த ஆடைகளை அணிந்து கொண்டு மக்களின் சேவைகளில் ஈடுபடுவேன் என்றார்.

அடுத்து என்ன குற்றச்சாட்டு? என்று வினவினார் உமர் (ரலி)

அவ்வப்போது இவர் மயக்கமடைந்து விழுந்து விடுகிறார்”.

அதற்கு பதிலளித்தார் ஸயீத். நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்முன் குபைப் இப்னு அதீ (ரலி) கொல்லப்படுவதை என் கண்ணால் பார்த்தேன். குரைஷிகள் அவரை அறுத்து, வெட்டி, குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கிக் கொண்டிருந்தனர். ரத்தம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அவரிடம் கேட்டனர், ‘உனக்கு பதிலாக இப்பொழுது இங்கு முஹம்மத் இருந்திருக்கலாமே என்று நினைக்கிறாய்தானே?’ அதற்கு குபைப், ‘முஹம்மத் மீது ஒரு முள் குத்தக்கூட நான் எனது குடும்பத்துடன் பாதுகாப்பாய் இருந்து விட மாட்டேன்என்று கூறினார். அவர்களது ஆக்ரோஷம் அதிகமடைந்து அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றனர். ஒரு சாட்சியாக நின்று கொண்டு அவரைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேனே, என்ற எண்ணமும் கைச்சேதமும் ஏற்படும் போதெல்லாம் அல்லாஹ்வின் தண்டனையை நினைத்து உள்ளம் நடுங்கி விடுகிறது! என்னையறியாமல் மயங்கி விழுந்து விடுகிறேன்”.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக ஸயீத் (ரலி) அவர்களை மகிழ்ச்சிப் பொங்க பார்த்து புன்னகைத்தார்கள். ( நூல்: குலஃபாவுர் ரசூல், பக்கம்:131 )

2)   சில மரணங்கள் நம் மனதின் ஏக்கங்களை வெளிப்படுத்த தூண்டும்!

عن عوف بن مالك قال: صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة رجل من الانصار، فحفظت من دعائه وهو يقول: «اللهم اغفر له وارحمه، وعافه واعف عنه، وأكرم نزله، ووسع مدخله، واغسله بالماء والثلج والبرد، ونقِّه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس، وأبدله دارًا خيرًا من داره، وأهلًا خيرًا من أهله وزوجًا خيرًا من زوجه، وأدخله الجنة وأعِذْه من عذاب القبر -أو من عذاب النار-» قال: حتى تمنيت أن أكون أنا ذلك الميت

நபி ஸல் அவர்கள் அன்ஸாரி தோழர் ஒருவரின் ஜனாஸா தொழுகையை தொழ வைத்தார்கள். அந்த தொழுகையில் அவருக்கு "அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்

பொருள்: இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக! பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக! அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்தப்படுவது போல் இவரது பாவத்திலிருந்து இவரைச் சுத்தப்படுத்துவாயாக! இவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பத்தாரை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இங்குள்ள ஜோடியை விட சிறந்த ஜோடியை இவருக்குக் கொடுத்தருள்வாயாக! கப்ரின் வேதனையை விட்டும், நரகின் வேதனையை விட்டும் இவரைப் பாதுகாத்து இவரைச் சொர்க்கத்தில் புகச் செய்வாயாக!

இந்த துஆவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த போது மனனம் செய்து கொண்டேன். இந்தச் சிறப்பான துஆவின் காரணத்தால் அந்த மய்யித்தாக நான் இருக்கக் கூடாதா என்று எண்ணினேன். அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி) ( நூல்: முஸ்லிம் )

3)   சில மரணங்கள் நம் மரணமும் இப்படியான மரணமாக அமைய வேண்டும் என்று ஆசைப் பட தூண்டும்!

 

خرج صلى الله عليه وسلم إلى تبوك، وفي ليلة من الليالي نام هو والصحابة، وكانوا في غزوة في سبيل الله، قال ابن مسعود - رضي الله عنه وأرضاه -: قمت آخر الليل فنظرت إلى فراش الرسول - صلى الله عليه وسلم - فلم أجده في فراشه، فوضعت كفي على فراشه فإذا هو بارد، وذهبت إلى فراش أبي بكر فلم أجده على فراشه، فالتفت إلى فراش عمر فما وجدته، قال: وإذا بنور في آخر المخيم، وفي طرف المعسكر، فذهبت إلى ذلك النور ونظرت، فإذا قبر محفور، والرسول - عليه الصلاة والسلام - قد نزل في القبر، وإذا جنازة معروضة، وإذا ميت قد سجي في الأكفان، وأبو بكر وعمر حول الجنازة، والرسول - صلى الله عليه وسلم - يقول لأبي بكر وعمر: « دليا لي صاحبكما».

فلما أنزلاه نزله - صلى الله عليه وسلم - في القبر، ثم دمعت عيناه - صلى الله عليه وسلم - ثم التفت إلى القبلة ورفع يديه وقال: «اللهم إنّي أمسيت عنه راض فأرض عنه، اللهم إنّي أمسيت عنه راض فارض عنه».

قال: قلت من هذا؟ قالوا: هذا أخوك عبد الله ذو البجادين مات في أول الليل. قال ابن مسعود: فوددت والله أني أنا الميت

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: தபூக் யுத்தத்திற்காக எதிரிகளின் இருப்பிடத்திற்கே நபித்தோழர்களை அண்ணலார் அழைத்துச் சென்றிருந்த தருணம் அது.

முதல் நாள் இரவு திடீரென நான் கண்விழித்தேன். அண்ணலாரின் கூடாரத்தில் அண்ணலாரைப் பார்த்தேன். ஆனால், நபி {ஸல்} அவர்கள் அங்கு இல்லை.

உடனடியாக நபி {ஸல்} அவர்களைத் தேடியவாறு அபூபக்ர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்கு வந்தேன். அங்கு அண்ணலாரும் இல்லை, அபூபக்ர் (ரலி) அவர்களும் இல்லை.

அங்கிருந்து நேராக உமர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்குச் சென்று தேடினால், அங்கு உமர் (ரலி) அவர்களும் இல்லை.

மூவரையும் தேடிக் கொண்டிருக்கும் போது படை வீரர்கள் முகாமிட்டிருந்த பகுதியின் எல்லைப் பகுதியிலிருந்து நெருப்பு மூட்டப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

அதன் அருகே விரைவாகச் சென்று பார்த்தேன். அங்கு அண்ணலார் {ஸல்} அவர்களும், அபூபக்ர்(ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களும் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.

அங்கே, கப்ர் ஒன்று தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு ஜனாஸாவும் வைக்கப்பட்டிருந்தது.

 

அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் இறந்து போன அந்த மனிதர் யார்? என்று வினவினேன்.

அதற்கு அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உமது தோழர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் (ரலி) அவர்கள் தான் என்று கூறினார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் மண்ணறைக்குள் இறங்கினார்கள். பின்னர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்களின் உடலை குழிக்குள் இறக்குமாறு கூறினார்கள்.

பின்னர், மண்ணறைக்குள் நின்றவாறு வானை நோக்கி கையை உயர்த்தி யாஅல்லாஹ்! இன்று மாலை நேரத்தை அடைகிற போது இந்த அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்கள் வாழ்வை  நான் பொருந்திக் கொண்டேன்! உன்னுடைய தூதராகிய நான் பொருந்திக் கொள்கிற நிலையில் அவர் இவ்வுலகில் வாழ்ந்தார்! எனவே யாஅல்லாஹ் நீயும் அவரைப் பொருந்திக் கொள்வாயாக!என்று இருமுறை துஆ செய்தார்கள். பின்னர் தாங்களே நல்லடக்கமும் செய்தார்கள்.

அப்போது நான் இறந்து போன அப்துல்லாஹ் துல் பஜாதைனாக இருந்திருக்கக் கூடாத என ஏங்கினேன்.  ( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல்ஃகாபா )

நம் ஜனாஸாக்களில் "இவர்கள்" பங்கேற்று சிறப்பிக்கும் அளவுக்கு நாம் வாழ வேண்டும்!

1)   ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள்.

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَاقَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُولُ ‏ ‏أُهْدِيَتْ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حُلَّةُ حَرِيرٍ فَجَعَلَ أَصْحَابُهُ يَمَسُّونَهَا وَيَعْجَبُونَ مِنْ لِينِهَا فَقَالَ أَتَعْجَبُونَ مِنْ لِينِ هَذِهِ ‏ ‏لَمَنَادِيلُ ‏ ‏سَعْدِ بْنِ مُعَاذٍ ‏ ‏خَيْرٌ مِنْهَا ‏ ‏أَوْ أَلْيَنُ ‏ ‏رَوَاهُ ‏ ‏قَتَادَةُ ‏ ‏وَالزُّهْرِيُّ ‏ ‏سَمِعَا ‏ ‏أَنَسًا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஒரு முறை) நபி(ஸல்) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களின் கைக்குட்டைகள் இதை விடச் சிறந்தவை அல்லது இதை விட மென்மையானவை ஆகும் என்று கூறினார்கள். அறி: அல்பர்ராஉ (ரலி).( நூல்: புகாரி : 3802 )

عن جابر، سمعت النبي يقول: "اهتز العرش لموت سعد بن معاذ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் இறப்பிற்காக அர்ஷ் அசைந்தது. இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வந்துள்ளதாவது:

ஒரு மனிதர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், பராஉ (ரலி) அவர்கள், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸா) பெட்டிதான் அசைந்தது' என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள் என்று சொன்னதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன.

நபி (ஸல்)   அவர்கள், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் இறப்பிற்காக அளவில்லா கருணையாளனின் அரியணை அசைந்தது என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் என்று பதிலளித்தார்கள். நூல்: ஸஹீஹுல் புகாரி 3803

விளக்கம்: இந்த நபி மொழி சஅத் (ரலி)  அவர்களின் சிறப்பை கூறும் நபிமொழியாகும் மறுக்க முடியாத அளவிற்கு முதவாத்திரான தரத்துடன் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தியை ஸஹாபாக்களில் ஜாபிர் (ரலி) அனஸ் (ரலி) உஸைத் பின் ஹுளைர் (ரலி) இப்னு உமர் (ரலி) அபு ஸஈது (ரலி) ஆயிஷா (ரலி) இன்னும் பலரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாம் தஹபி  (ரஹ்) அவர்கள் கூறினார்கள் இது முதவாத்திரான ஹதீஸாகும் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் தான் கூறினார்கள் என்று நான் சான்றளிக்கிறேன்.அல் உலுவ்வுலிஅலீயில் கஃப்ஃபார் 89

மேற்கூறிய ஹதீஸின் விளக்கமாக ஃபவாயிதுத் தமாம் என்ற நூலில் அல்லாஹ்வின் தூதர்  (ஸல்)  அவர்கள் கூறினார்கள்;  மேன்மையும் மகத்துவமும் மிக்க றப்பின் மகிழ்ச்சியால்  சஅத் (ரலி) அவர்களின் மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் அசைந்தது.அறிவிப்பாளர் அபு ஸஈதுல் குத்ரி (ஸல்) (நூல்: :ஃபவாயிதுத் தமாம்16 )

حينما سمع النبي أحد المنافقين يقول: ما رأينا كاليوم، ما حملنا نعشًا أخف منه قط. فقال رسول الله: "لقد نزل سبعون ألف ملك شهدوا سعد بن معاذ، ما وطئوا الأرض قبل ذلك اليوم".

ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் ஜனாஸாவை மலக்குமார்கள் சுமந்ததோடு, 70000 வானவர்கள் ஜனாஸா தொழுகையிலும் கலந்து கொண்டு துஆச் செய்யும் நற்பேற்றைப் பெற்றார்கள் எனும் செய்தி வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.

2)   முஆவியா இப்னு முஆவியத்துல் முஸனிய்யீ ரலி  

توفي في حياة رسول الله صلى الله عليه وسلم.

روى حديثه محبوب بن هلال المزني، عن ابن أبي ميمونة، عن أنس بن مالك قال: نزل جبريل على النبي عليهما السلام وهو بتبوك، فقال: يا محمد، مات معاوية بن معاوية المزني بالمدينة، فيجب أن نصلي عليه: قال: نعم، فضرب بجناحه الأرض، فلم تبق شجرة ولا أكمة إلا تضعضعت، ورفع له سريره حتى نظر إليه، فصلى عليه وخلفه صفان من الملائكة، في كل صف ألف ملك، فقال النبي صلى الله عليه وسلم لجبريل عليه السلام: يا جبريل، بم نال هذه المنزلة ؟ قال بحبه " قلْ هُوَ الله أَحَدٌ " ، وقراءته إياها جائياً وذاهباً، وقائماً وقاعداً، وعلى كل حال.

وقد روى: في كل صف ستون ألف ملك.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு தபூக்கிலே இருந்த தருணம் அது..

என்றைக்கும் இல்லாத அளவு சூரியனின் ஒளி வெண்மையாகவும், பிரகாசமாகவும் இருந்தது.

அப்போது, வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வருகை தருகின்றார்கள்.

நபிகள் {ஸல்} அவர்கள் ஆச்சர்யம் மேலிட ஜிப்ரயீலே! என்றைக்கும் இல்லாத அளவிற்கு சூரியனின் பிரகாசம் இன்று மிகவும் வெண்மையாய் அமைந்திருக்கின்றதே காரணம் தான் என்னவோ?” என ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினார்கள்.

அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இன்று தங்களின் தோழர் முஆவியா இப்னு முஆவியத்துல் முஸனிய்யி (ரலி) மதீனாவில் இறந்து விட்டார்கள். (இன்னா லில்லாஹ்..)

அவருக்காக நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்த விரும்புகின்றீர்களா?” என அண்ணலாரிடம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கேட்டார்கள்.

ஆம் என நபிகளார் பதில் அளித்ததும், ஜிப்ரயீல் (அலை) அவர்கள் தங்களது இறக்கையை பூமியில் அடித்தார்கள்.

தபூக்கில் இருந்தவாரே அண்ணலார் மக்காவையும் மதீனாவையும் கண்டார்கள்.

பின்பு, அண்ணலார் தோழர்களிடம் நடந்த விவரத்தைக் கூறி ஜனாஸா தொழுகைக்குத் தயாராகுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.

பின்பு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஜனாஸா தொழவைத்தார்கள். நபிகளாரோடு ஜிப்ரயீல் (அலை) அவர்களும், இரண்டு ஸஃப் நிறைய வானவர்களும், (ஒவ்வொரு ஸஃப்ஃபிலும் எழுபதினாயிரம் வானவர்கள் நின்றனர்), நபித்தோழர்களும் கலந்து கொண்டார்கள்.

தொழுது முடித்த பின்னர், ஜிப்ரயீலை நோக்கிய நபிகளார் ஜிப்ரயீலே! எதன் காரணத்தினால் முஆவியா இப்னு முஆவியத்துல் முஸனிய்யீ இந்த உயர் அந்தஸ்தை அடைந்தார்எனக் கேட்டார்கள்.

அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் உலகில் வாழும் காலங்களில் அவர் அல் இஃக்லாஸ் அத்தியாயத்தை மிகவும் நேசித்தார்; அமர்ந்த நிலையில், நின்ற நிலையில், பசித்திருந்த நிலையில், படுத்த நிலையில், நடந்த நிலையில் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் அதை ஓதியும் வந்தார்ஆதலால் அல்லாஹ் அவருக்கு இந்த அந்தஸ்தை வழங்கி கௌரவித்துள்ளான்என பதில் கூறினார்கள்.

 

இந்தச் செய்தி அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் வாயிலாக முஸ்னத் அபூ யஃலா வில் 4268 –வது ஹதீஸாகவும், இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் தங்கள் சுனனில் பாகம்: 4, பக்கம்:50 –லும், அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்களின் வாயிலாக இமாம் தப்ரானீ (ரஹ்) அவர்கள் முஃஜமுல் கபீரில் 7537 –வது ஹதீஸாகவும் பதிவு செய்திருக்கின்றார்கள்.

அல்லாமா இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் தங்களின் அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப் எனும் நூலில் மேற்கண்ட மூன்று அறிவிப்புக்களையும் பதிவு செய்து விட்டு இந்தச் செய்தி வலுவான அறிவிப்புத் தொடர்களின் மூலம் இடம் பெற வில்லையென்றாலும் இது முன்கர் வகையைச் சார்ந்த ஹதீஸ் அல்ல என்றும் சான்று பகர்கின்றார்கள்.மேலே தரப்பட்டிருக்கின்ற அரபி வாசகம் உஸ்துல் ஃகாபா நூலில் இடம் பெற்றுள்ளது.  ( நூல்: அல் இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:364,365. மற்றும் உஸ்துல் ஃகாபா )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் மரணங்களை அவனுடைய மேலான மன்னிப்பையும், கருணையையும் கொண்டதாக ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

1 comment:

  1. மாஷா அல்லா அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் நற்பாக்கியங்களை அருள்வானாக ஆமீன்

    ReplyDelete