அதிசயமே அசந்து
போகும் வாக்கு
திருட்டு அதிசயம்!!!
இந்திய அரசியல்
அமைப்பு சட்டத்தின்படி அனைவருக்கும் வாக்குரிமை உள்ளது.
படித்தவர், படிக்காதவர்,
பணக்காரர், ஏழை, நீதிபதி,
அதிகாரி, முதல்வர், பிரதமர் என எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரே ஒரு வாக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய எதிர்
கட்சி தலைவர் ராகுல் காந்தியின் ஆதாரங்கள் அடிப்படையிலான வாக்கு திருட்டு
குற்றச்சாட்டு "அரசியல் சாசனம் வழங்கிய இந்த உரிமையை முறைகேடுகள் ஊடாக பாஜக
பறித்துள்ளதும்,
அதற்கு தேர்தல் ஆணையமும் துணை போய் இருக்குமோ என்று எழும்
சந்தேகத்தையும் புறம் தள்ளி விட முடியாது.
அரசியல்
அரங்கிலும் நாட்டு மக்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த விவகாரம்
குறித்து ஊடகங்கள் காத்து வரும் மௌனம் என்பது தேர்தல் ஆணையத்தின் மீதான சந்தேகத்தை
வலுப்படுத்துவதாய் அமைந்திருப்பதை மறுக்க முடியாது.
79 வது சுதந்திர
தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் இந்திய ஜனநாயகத்தின் தனிப் பெரும் மரியாதையும், அதிகாரமும் வழங்கப்பட்ட அமைப்பான "தேர்தல் ஆணையம்" விசாரணை
வளையத்திற்குள் வந்திருப்பது உள்ளபடியே நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக
அமைந்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.
உலக வரலாற்றில்
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத ஆட்சியாளர்களை, ஏமாற்றிய ஆட்சியாளர்களை கேள்வி பட்டிருக்கின்றோம்.
மக்களின்
வாக்குரிமையையே திருடி,
மக்களை ஏமாற்றிய முதல் ஆட்சியாளரை இந்த உலகம் இப்போது தான்
கண்டிருக்கிறது.
வாக்காளர் யார்?
மக்களாட்சி என்பது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் சாசனத்தின் மக்கள்
பிரதிநிதித்துவ சட்டம் 1951
”வாக்காளர்” என்றால் என்னவென்று பகுதி
1, பிரிவு 2-ல், உட்பிரிவு (e)
-ல் வரையறுத்திருக்கிறது.
பிரிவு 2(e)வாக்காளர் எனில் தொகுதி ஒன்றின் தொடர்பில் நபரொருவரின் பெயர் அப்போதைக்கு
செயல்லாற்றலிலுள்ள வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு மற்றும் மக்கள்
பிரதிநிதித்துவச் சட்டம் 1950,
பிரிவு 11ல் குறிப்பிடப்பெற்ற
ஏதேனும் தகுதிக் கேடுகளுக்கு உட்படாத நபர் எனப் பொருள்படும்.
அதாவது வாக்காளர்
என்றால்,
இந்தியக்குடிமகனாக இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில்
பெயர் இருக்க வேண்டும். மற்றும் இதே சட்டத்தின் பிரிவு 11ல் வாக்காளராக இருப்பவருக்கு சில தகுதிக் குறைபாடுகள் இருக்ககூடாது எனச்
சொல்கிறது. அந்தக் குறைப்பாடுகள் எதுவெனில்
1. கிரிமினல் குற்றம் புரிந்து தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது.
இந்திய தண்டனைச்
சட்டத்தின் பிரிவு 171
E (Punishment for Bribery) அல்லது 171F-ன் கீழ் (Punishment
for undue influence or persination at an election)அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவு 125 / பிரிவு 136 -ன் உட்பிரிவு (2)
கூறு (அ) வின் கீழ் தண்டிக்கப்படத்தக்க ஒர் குற்றத்திற்காக
குற்றத் தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பின் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து
அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.
2. புத்தி சுவாதீனம் அற்றவராக இருக்கக்கூடாது.
வாக்குரிமை கடந்து வந்த பாதை....
வாக்குரிமையின்
வரலாறு மிக நீண்டதாகும். வாக்குரிமைக்காக பல போராட்டங்களும், புரட்சிகளும் தியாகங்களும் நிகழ்ந்துள்ளன. இது பற்றி (Garner) கார்னர் எனும் நூலாசிரியர், "சென்ற நூற்றாண்டில், வாக்குரிமை தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டது, மக்களாட்சியின் வரலாற்றில் மிக முக்கியமாக குறிப்பிடத்தக்கதாகும் என்கிறார்.
வாக்குரிமை
பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த, பாலினம், சொத்து,
கல்வித் தகுதி போன்றவை காலப்போக்கில் மறைந்து போயின. இன்று, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நாடுகளில் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
எனினும்,
வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற நிலை நோக்கி உலகம்
சென்று கொண்டிருக்கிறது. ஆரம்ப காலங்களில், பின்வரும் தகுதிகள்
விதிக்கப்பட்டிருந்தன. அவையாவன.
1) சொத்துரிமை அல்லது வரி செலுத்துதல்
பத்தொன்பதாம்
நூற்றாண்டில் சொத்துடைமை என்பது, வாக்குரிமைக்கான
அடிப்படைத் தகுதியாக இருந்தது. அதேபோல், வரி செலுத்துவோரும்
வாக்குரிமை பெற்று வந்தனர்.
சொத்து
உள்ளவர்களும்,
வரி செலுத்துவோரும் நம்பகத்தன்மையுடையவர்கள். எனவே அவர்கள்
அரசாங்க செயல்பாடுகளில் பங்கு பெறலாம் என்று இதற்கு நியாயம் கற்பிக்கப்பட்டு
வந்தது. உதாரணமாக,
ஜப்பானிய நாட்டில், 1925 ஆம் ஆண்டு வரை, வரி செலுத்துவோருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டு வந்தது. இதனால், வரி செலுத்தாதோருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்தது.
2) கல்வித் தகுதி:
ஜே.எஸ்.மில் போன்ற
அரசியல் சிந்தனையாளர்கள்,
கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை
அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், பொது நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது என வாதிட்டனர். பிரேசில், சிலி (Chile)
போன்ற நாடுகளில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு வாக்குரிமை
மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசியல் முதிர்ச்சி இருக்கும்
என்பதும்,
எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு அரசியல் முதிர்ச்சி இருக்காது
என்பதும் ஏற்க முடியாத வாதமாகும்.
3) பாலினத்தகுதி
ஆரம்ப காலம் முதலே
ஆண்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடத் தக்கவர்கள் என்பதும், பெண்கள் வீட்டுப் பணியில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்பதும் எழுதப்படாத விதியாக
இருந்து வந்திருக்கின்றது. பெருமளவில் பெண்களுக்கு பொது வாழ்வில் பங்கு
மறுக்கப்பட்டு வந்திருக்கிறது, வாக்குரிமையும் இதற்கு
விதிவிலக்கல்ல.
பிரிட்டன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் கூட சென்ற நூற்றாண்டின் இடையில் தான்
பெண்களுக்கு வாக்குரிமை வழங்க முன்வந்தன. ஆனால் சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத்
தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது என்பது பெருமைப்படத்தக்க
ஒன்றாகும். தற்போது மூன்றாம் பாலினத்தவரும் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
4) தேசியத் தகுதி
தற்கால அரசுகள்
தங்கள் குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்குகின்றன.
5) வயதுத் தகுதி
வயது என்பது ஒரு
முக்கியத் தகுதியாகும். உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் முதிர்ச்சி பெற்றவர்களே
நன்கு முடிவெடுக்க இயலும் என்பதால் வயது ஒரு தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
உலகளவில் 18 வயது என்பது முதிர்ச்சியுற்ற வயதாகக் கருதப்படுவதால், பல நாடுகளிலும் 18
வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகிறது -
இந்தியாவில்,
முதலில் 21 வயது நிரம்பியவர்களுக்கு
வாக்குரிமை வழங்கப்பட்டு வந்தது.
பின்னர், 1989 ஆம் ஆண்டு முதல் 18
வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகிறது.
குறிப்பாக இளைஞர்கள் ஆர்வத்துடன் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மறைந்த
பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் இந்த உரிமைமையை வழங்கினார்கள்.
தேர்தல் ஆணையம்
& தேர்தல் ஆணைய அதிகாரம்...
இந்திய தேர்தல்
ஆணையம் 1950-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 324(1)-ஆவது பிரிவின்படி,
குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல், மக்களவைத் தேர்தல், மாநிலங்களவைத் தேர்தல்,
மாநில சட்டப்பேரவைத் தேர்தல், மாநில சட்டமேலவைத் தேர்தல் ஆகியவற்றையும் இந்தியத் தேர்தல் ஆணையமே நடத்தி
வருகிறது.
பஞ்சாயத்துத்
தேர்தல்,
மாநகராட்சித் தேர்தல் உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தல்களை
அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில தேர்தல் ஆணையங்கள் நடத்தி வருகின்றன. 1992-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 73-ஆவது அரசமைப்புச் சட்டத்
திருத்தம் இதற்கு வழிவகுக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படும்
அமைப்பாகும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கீழ், மாநில தேர்தல் ஆணையம் வராது.
1989-ஆம் ஆண்டு வரை
ஒரேயொரு தேர்தல் ஆணையர் மட்டுமே இருந்து வந்தார். 1989-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 1990-ஆம் ஆண்டு ஜனவரி வரை 3 தேர்தல் ஆணையர்கள் இருந்தனர். பின்னர், 1990-ஆம் ஆண்டு ஜனவரி
முதல் 1993-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே இருந்தார். அதன் பிறகு, தற்போது வரை 3
தேர்தல் ஆணையர்கள் இருந்து வருகின்றனர். இந்தியத் தேர்தல்
ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையரைத் தவிர, எத்தனை ஆணையர்கள்
இருக்கலாம் என்பதை குடியரசுத் தலைவரே முடிவு செய்வார்.
பதவிக் காலம்
& ஊதியம்
தேர்தல் ஆணையர்கள்
மூவரும் பதவியேற்ற தினத்தில் இருந்து 6 ஆண்டுகளோ அல்லது 65 வயது பூர்த்தியாகும் வரையோ அப்பதவியில் நீடிப்பர். இந்திய அரசமைப்புச்
சட்டத்தின் 324(2)-ஆவது பிரிவின்படி,
தேர்தல் ஆணையர்கள் மூவரையும் குடியரசுத் தலைவரே
நியமிப்பார். தேர்தல் ஆணையர்கள் மூவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக
சம்பளம் பெறுவர்.
வாக்காளர் பட்டியல்
மக்களவை மற்றும்
சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறும் முன்பு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட
வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பணியாகும். தேர்தல் பதிவு அதிகாரியே வாக்காளர்
பட்டியலைத் தயாரிப்பதற்கு முழுப் பொறுப்பு உடையவர் ஆவார். மக்கள் பிரதிநிதித்துவச்
சட்டத்தின் அடிப்படையில்,
மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் பதிவு அதிகாரியை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமிக்கும். மக்களவை
மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பது, பெயரை நீக்குவது,
திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும்
தேர்தல் பதிவு அதிகாரி மேற்கொள்வார். அவருக்கு உதவி புரிய, துணை அதிகாரிகளையும் இந்தியத் தேர்தல் ஆணையம் நியமிக்கும். ( நன்றி: தினமணி, 22/04/2019 )
தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு சிறப்பம்சங்கள்!!
1) உச்ச நீதிமன்ற
நீதிபதிக்கு இணையான அந்தஸ்து மற்றும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
2) இந்தியா
முழுவதும் அல்லது இந்தியாவின் எந்த பகுதியிலும் நடைபெறும் எந்த தேர்தல்களிலும்
தேர்தல் நடைபெறும் போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளில், முடிவுகளில் நாட்டின் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. தேர்தல் நடந்து
முடிந்த பிறகே தலையிட முடியும்.
இது இந்திய
தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உள்ள பிரத்யேக சிறப்பம்சங்களாகும். உலகில் வேறெந்த
நாட்டிலும் இத்தகைய அதிகார உச்ச வரம்பு வழங்கப்படவில்லை. ( நன்றி: Tnpsc thervupettagam,
விரிவாக பார்க்க https://www.tnpscthervupettagam.com/articles-detail )
எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு என்ன?
காங்கிரஸ் கட்சி
தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி ஐந்து விதமான
பாஜக சீட்டிங் குறித்து விலாவாரியாகப் பேசினார். அவர் பேசுகையில், “நமது அரசியலமைப்பின் அடித்தளம், ‘ஒருவருக்கு ஒரு
வாக்கு கிடைக்கும்’
என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டதுதான். தேர்தலில் சரியான
நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? போலி நபர்கள் வாக்காளர்
பட்டியலில் சேர்க்கப்படுகிறார்களா? வாக்காளர் பட்டியல்
துல்லியமானதா என்பதை பார்க்க வேண்டும். சில காலமாக, சில புள்ளி விவரங்களின் அடிப்படையில் பொதுமக்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எந்தவொரு ஜனநாயகத்திலும்,
ஒவ்வொரு அரசியல் கட்சியையும் தாக்கும் ஒன்றுதான் ஆட்சிக்கு
எதிரான நிலை. ஏதோ ஒரு காரணத்துக்காக, ஜனநாயகக் கட்டமைப்பில்
ஆட்சிக்கு எதிரான போக்கால் பாதிக்கப்படாத ஒரே கட்சியாக பாஜக மட்டும்தான்
தெரிகிறது.
கர்நாடகாவின்
பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில், 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் நடந்திருந்தால், நாடு முழுவதும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். ஐந்து விதமாக
வாக்குகள் திருடப்பட்டுள்ளன. போலி வாக்காளர்கள், போலி முகவரி,
ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள்,
படிவம் 6 தவறாக பயன்படுத்தப்படுவது
ஆகியவை அந்த ஐந்து வகை.
நாட்டிலுள்ள
இளைஞர்களின் வாக்குகள் திருடப்படுகின்றன. வாக்குகளை யார் திருடுகிறார்கள் என்பது
உங்களுக்குத் தெரியும். முன்பு, எங்களிடம் ஆதாரம் இல்லை, ஆனால் இப்போது எங்களிடம் நூறு சதவீதம் ஆதாரம் உள்ளது. அனைத்துத் தரவுகளும்
கிடைத்துள்ளன. இந்த வாக்குத் திருட்டு பல தொகுதிகளில் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இப்போது சாக்குப்போக்கு சொல்லக்கூடாது. அவர்கள் எங்களுக்கு
சிசிடிவி காட்சிகள் மற்றும் மின்னணு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும். இது எனது
கோரிக்கை மட்டுமல்ல,
அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் ஆகும். இது
சவாலானதும் கூட.
எங்களிடம் உள்ள
லட்சக்கணக்கான ஆவணக் காகிதத்தை அடுக்கி வைத்தபோது அது 7 அடி உயரம் இருந்தது. அதை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்த வேண்டியிருந்தது. யாராவது
இரண்டு முறை வாக்களித்திருக்கிறார்களா அல்லது வாக்காளர் பட்டியலில் அவர்களின்
பெயர் இரண்டு முறை வந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க நான் விரும்பினேன் என்று
வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு தாளிலும் உள்ள ஒவ்வொரு புகைப்படத்துடனும் அவர்களின்
படத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதுதான் செயல்முறை. இது மிகவும் கடினமானது.
இதை நாங்கள்
எதிர்கொண்டபோது,
தேர்தல் ஆணையம் ஏன் எங்களுக்கு மின்னணு தரவை வழங்கவில்லை
என்பதை உணர்ந்தோம். அவர்கள் அதை கவனமாக ஆய்வு செய்ய விரும்பவில்லை. இந்தப் பணி
எங்களுக்கு ஆறு மாதங்கள் எடுத்தது. 30-40 பேர் இடைவிடாமல்
வேலை செய்து,
பெயர்கள், முகவரிகள் மற்றும்
படங்களை ஒப்பிட்டுப் பார்த்தனர். மேலும் இது ஒரு தொகுதிக்கு மட்டுமே.
தேர்தல் ஆணையம்
எங்களுக்கு மின்னணு தரவை வழங்கியிருந்தால், அதற்கான நேரம் வெறும் 30 விநாடிகள் மட்டுமே இருந்திருக்கும். அதனால்தான் இந்த வடிவத்தில் எங்களுக்கு
தரவு வழங்கப்படுகிறது. அதனால் அது பகுப்பாய்வு செய்யப்படவில்லை. இந்த ஆவணங்கள்
மின்னணு கேரக்டர் அங்கீகாரத்தை அனுமதிக்காது; நீங்கள் அவற்றை ஸ்கேன்
செய்தால்,
நீங்கள் தரவைப் பிரித்தெடுக்க முடியாது. தேர்தல் ஆணையம்
வேண்டுமென்றே இயந்திரத்தால் படிக்க முடியாத ஆவணங்களை வழங்குகிறது. இது எங்களுக்கு
விசித்திரமாகத் தோன்றியது.
மகாதேவபுரா
தொகுதியில் மட்டும் 11,965
போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். போலி மற்றும்
தவறான முகவரிகள் மூலம் 40,009
வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு
மத்திய தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் 40,009 வாக்காளர்களுக்கு
போலியான வீட்டு முகவரி இடம்பெற்றுள்ளது. இதில் சிலருடைய வீட்டு முகவரயின் கதவு எண்
‘0’ என்று இருக்கிறது. இது இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குற்றம் ஆகும். நான்
அரசியல்வாதி. நான் மக்களிடம் பேசுகிறேன். இதை எனது உறுதிமொழியாக எடுத்துக்
கொள்ளலாம்”
என்றார்.
இந்நிலையில்
ராகுல்காந்தி கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்று
தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்திருக்கிறது. இது, அவரது வாயை அடக்கும் முயற்சி என்றே கூறப்படுகிறது. ( நன்றி: தமிழ் நியூஸ் நவ், 13/08/2025 )
இந்த விவகாரம்
இந்த அளவுக்கு சூடு பிடிக்க பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR எனப்படும் சிறப்புத் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை தான் காரணமாக அமைந்தது.
இந்த SIR நடவடிக்கை ஒருதலைப்பட்சமாக இருப்பதாகச் சொல்லி பல்வேறு தரப்பினரும் உச்ச
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரணை
செய்து வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்சி
ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்து வருகிறது.
அப்போது வரைவு
வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள்
நீக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல்
மற்றும் கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் தெரிவித்தனர்.
இரு தரப்பு
வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீக்கப்பட்ட
வாக்காளர்களின் வகரங்களை அளித்தால், தேர்தல் ஆணையத்தைக்
கேள்வி கேட்க முடியும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், வாக்காளர் பட்டியல் குறித்து நிறையக் கேள்விகள் கேட்க இருப்பதாகவும்
அனைத்திற்கும் தயாராக இருக்கும்படியும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு 13/08/2025
அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குறிப்பாக, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிக நீக்கம் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
( நன்றி: ஒன் இந்தியா,
12/08/2025 )
வாக்காளர்
பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்தும் டெல்லியில் 11/08/2025
அன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல்
ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லி போலீசாரால்
கைது செய்யப்பட்டனர். ( நன்றி: இந்து தமிழ் திசை, 11/08/2025 )
இந்நிலையில், வாக்காளர் வரைவு பட்டியலில் இறந்து போனதாக கூறி நீக்கப்பட்ட 12 வாக்காளர்களுடன் ராகுல் காந்தி தேநீர் அருந்தி பதிவிட்ட பதிவு பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி அவர்
தனது எக்ஸ் தள பதிவில்,
"வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன.
ஆனால் 'இறந்தவர்களுடன்'
தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. இந்த
தனித்துவமான அனுபவத்தைத் தந்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி! ( நன்றி:
தினத்தந்தி,
13/08/2025 )
பொறுப்புணர்ந்து செயல் பட வேண்டும்....
மக்கள் அரசை
ஏமாற்றுவதும் அரசு மக்களை ஏமாற்றுவதும் குற்றம் தான்.
மக்களை அரசு
ஏமாற்றும் போது அதன் விளைவுகள் பாரிய அளவில் இருக்கும் என்பதை உலகில் பல அரசுகள்
மக்கள் புரட்சியால் வீழ்ந்ததை நாம் வாழும் காலத்தில் கண்டு வருகிறோம்.
வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சி நல்ல ஒரு உதாரணம்
ஆகும்.
நாட்டை
நிர்வகிக்கக் கூடிய தலைவரும் மக்கள் பணிக்காக பாராளுமன்ற அமைச்சர்களாக
உறுப்பினர்களாக பதவி வகிப்போரும் தங்கள் பதவிகளை மக்கள் நலனுக்காக, சேவைக்காக,
சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிக்க வேண்டியவர்களாக
உள்ளனர்.
தங்கள் பதவி
பட்டங்களில் இருந்து கொண்டு நாட்டை சூரையாடுவதோ அல்லது பரம்பரைக்கு சொத்து
சேர்ப்பதோ இவர்களுடைய பணியல்ல. நாட்டையும் நாட்டு மக்களின் வாழ்க்கை நிலையையும்
முன்னேற்றுவதே இவர்களுடைய பணியாகும். முக்கள் நம்பிக்கையுடன்
ஒப்படைத்த பொறுப்பை இவர்கள் மோசடி செய்கிறார்கள்.
இந்த உலகில்
பலரும் பல பொறுப்புக்களில் உள்ளார்கள். ஒவ்வொருவருடைய பொறுப்பு பற்றி மறுமையில்
விசாரிக்கப்படுவதுடன் தண்டிக்கவும் படுவார்கள் என்கிறது இஸ்லாம்.
عَنِ
ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:
«أَلَا كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالْأَمِيرُ
الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ
رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ
عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ، وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ
رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلَا فَكُلُّكُمْ رَاعٍ،
وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»،
அறிந்து
கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புத் தாரிகள் உங்கள் பொறுப்புக்கள் பற்றி
மறுமையில் விசாரிக்கப் படுவீரகள். தலைவரும் பெறுப்பாளியே அவர் பொறுப்பு குறித்து
விசாரிக்கப்படுவார். ஒருவர் தன் மனைவி குறித்து பொறுப்பாளி. அவர் பொறுப்பு
குறித்து விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தன் கணவனின் வீட்டுக்கு பொறுப்புத்
தாரியாவாள். அவள் பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவாள். ஒரு ஊழியர் தன் எஜமானன்
விஷயத்தில் பொறுப்புத்தாரி யாவார். அவன் தன் பொறுப்புப் பற்றி விசாரிக்கப்படுவான்.
ஓவ்வொருவரும் பொறுப்புத்தாரிகள். தங்கள் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவார் என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:இப்னு உமர்(ரலி) ( நூல்: புகாரி, முஸ்லிம் )
உலகில் தங்கள்
பொறுப்பில் நீதமாக நடந்து கொண்டவர்கள் மறுமையில் மக்கள் முன்னிலையில்
கொளரவப்படுத்தப்படும் காட்சியையும் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு
குறிப்பிடுகிறார்கள்.
قَالَ:
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمُقْسِطِينَ
عِنْدَ اللهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ
وَجَلَّ، وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ، الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ
وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا
தமது அதிகாரம், தமது குடும்பம்,
தாங்கள் வகிக்கும் பொறுப்புக்கள் ஆகியவற்றில் நீதமாக நடந்து
கொண்டவர்கள்,
அல்லாஹ்விடத்தில் ஒளியிலான மேடைகளில் இருப்பார்கள் என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர். அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி). நூல்:
முஸ்லிம்.)
உலகத்தில்
குறிப்பிட்டதொரு இடத்தில் இருந்து கொண்டு தங்கள் பணியில் முறையாக நடந்து
கொண்டவர்கள் மறுமையில் கோடான கோடி மக்கள் முன்னிலையில் ஒளியிலான மேடையின் மீது
நிறுத்தப்பட்டு எடுத்து காட்டப்படுகிறார்கள்.
ஷரீஆவின் பார்வையில் வாக்குரிமை...
வாக்குரிமை என்பது
ஷரீஆவின் பார்வையில் பிரதானமான நான்கு அம்சங்களில் நோக்கப்படுகின்றது.
கலாநிதி முஸ்தபா
அல்ஸிபாஈ,
முஹம்மத் பல்தாஜீ, பத்ஹி அபுல் வர்த், அப்துல் கரீம் ஸைதான்,
அப்துல் ரகுமான் அல்பர், யூஸுப் கர்ளாவி, முஹம்மத் அஹ்மத் ராஷித் போன்ற சம கால அறிஞர்கள் பலர் வாக்குரிமை குறித்து
ஆய்வு செய்து பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.
1. ஷஹாதத் –
சாட்சி பகர்தல்.
2. ஷஃபாஅத் –
பரிந்துரை வழங்குதல்.
3. அமானத் –
நம்பகத்தன்மை.
4. வகாலத் –
பொறுப்பேற்றல். இந்த நான்கு நிலைகள் ஆகும்.
இந்த
வாக்குரிமையில் தான் தேர்தல் ஆணையம் கைவரிசை காட்டியுள்ளது.
ஆட்சி, அதிகாரம் வழங்கப்படுவதும், கழற்றப்படுவதும்...
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ
تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ
مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ
ؕ بِيَدِكَ الْخَيْرُؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
“அல்லாஹ்வே! ஆட்சியின்
அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப்
பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை
இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும்
ஆற்றலுடையவன்’’
என்று கூறுவீராக! ( அல்குர்ஆன்: 3: 26 )
இன்றைக்கு ஆட்சிக்
கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் தமது பலத்தினாலும் திறமையினாலும் ஆற்றலினாலும்
அறிவினாலும் அனுபவத்தினாலும் தான் தாம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பதாக
நினைக்கின்றார்கள்.
ஆனால் நல்லவர்களாக
இருந்தாலும் கொடூர குணம் கொண்டவர்களாக இருந்தாலும் ஆட்சியையும் பதவியையும்
வழங்குவது இறைவனே! கெட்டவர்களுக்குக் கூட இறைவன் ஆட்சியைக் கொடுத்துக்
கேவலப்படுத்துவான்.
இங்கு கவனிக்க
வேண்டிய விஷயம் என்னவென்றால், " நீ நாடியோரிடமிருந்து
ஆட்சியை (ப்பறித்துக் கொள்கிறாய்) கழற்றி விடுகிறாய்"
இந்த வார்த்தை மிகவும் முக்கியமானது.
ஆட்சியில் இருந்து கழற்றி விடப்படுவதற்கான காரணங்கள்....
وَاِذْ قَالَ
مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَعَلَ فِيْكُمْ
اَنْۢـبِيَآءَ وَجَعَلَـكُمْ مُّلُوْكًا وَّاٰتٰٮكُمْ مَّا لَمْ يُؤْتِ اَحَدًا مِّنَ
الْعٰلَمِيْنَ
மூஸா தம்
சமூகத்தாரை நோக்கி,
“என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும்
அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே
நபிமார்களை உண்டாக்கி,
உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்” என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும். ( அல்குர்ஆன்: 5: 20 )
பனூ இஸ்ராயீலின்
மக்கள் பல தலைமுறைகளாக ஆட்சி பீடத்தை அலங்கரித்தனர். சுமார் 35 க்கும் மேற்பட்ட ஆட்சியாளர்கள் அதில் பலர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக
நூறாண்டுகளுக்கு நெருக்கமாக அரியணையில் அமர்ந்துள்ளார்கள். கிழக்கு மேற்கு வடக்கு
தெற்கு என எல்லா திசைகளிலும் அவர்களது ஆட்சி பரந்து விரிந்து இருந்ததாக வரலாறு
கூறுகிறது.
ஆனால், அவர்களின் நன்றி கெட்ட தன்மை, அநீதி, கொடுங்கோன்மை உல்லாச மனப்பான்மை போன்றவைகளால் ஆட்சி பீடத்தில் இருந்து
அல்லாஹ்வால் கழற்றி விடப்பட்டனர் என்கிறது வரலாறு.
மிகப்பெரும் மோசடி எது?
وَعَنْ
أَبي سَعِيدٍ الخُدْرِي: أنَّ النَّبيَّ ﷺ قَال: لِكُلِّ غَادِرٍ لِواءٌ عِندَ
اسْتِه يَوْمَ القِيامةِ، يُرْفَعُ لَهُ بِقَدْرِ غَدْرِهِ، ألَا وَلا غَادر
أعْظمُ غَدْرًا مِنْ أمِيرِ عامَّةٍ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவன்
ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். அது அவனது
மோசடியின் அளவுக்கு (உயரமாக) ஏற்றப்படும். அறிந்து கொள்ளுங்கள்: பொதுமக்களுக்குத்
தலைமைப் பொறுப்பை ஏற்று,
மோசடி செய்தவனைவிட மாபெரும் மோசடிக்காரன் வேறெவருமில்லை. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
குழப்பமும்... கொடுங்கோன்மையும்...
اِنَّ
فِرْعَوْنَ عَلَا فِى الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِيَـعًا يَّسْتَضْعِفُ
طَآٮِٕفَةً مِّنْهُمْ يُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَيَسْتَحْىٖ نِسَآءَهُمْ
اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِيْنَ
நிச்சயமாக
ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன்
விட்டும் வைத்தான்;
நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
وَنُرِيْدُ
اَنْ نَّمُنَّ عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْا فِى الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَٮِٕمَّةً
وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِيْنَۙ
ஆயினும் (மிஸ்ரு)
பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும்
நாடினோம். ( அல்குர்ஆன்: 28:
4-5 )
இரட்டை சாட்சியம்…
இஸ்லாமிய வரலாற்றில்
விதிவிலக்காக ஒருவரின் சாட்சியம் இருவரின் சாட்சியத்துக்கு நிகராக அங்கீகாரம்
பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது.
1) நபி (ஸல்) அவர்களின் சாட்சியம்.
சபையில் இல்லாத
ஒருவருக்காக மாநபி ஸல் அவர்களே அவரின் சார்பாக சாட்சியம் வழங்கியது.
وكان
رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قبل الصلح قد بعث عثمان بن عفان إلى
مكة رسولا، فجاء خبر إلى رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بأن أهل مكة
قتلوه، فدعا رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حينئذ إلى المبايعة له
على الحرب والقتال لأهل مكة، فروي أنه بايعهم على الموت. وروي أنه بايعهم على ألا
يفروا. وهي بيعة الرضوان تحت الشجرة، التي أخبر الله تعالى أنه رضي عن المبايعين
لرسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تحتها. وأخبر رسول الله صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أنهم لا يدخلون النار. وضرب رسول الله صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ بيمينه على شماله لعثمان، فهو كمن شهدها. وذكر وكيع عن إسماعيل
بن أبي خالد عن الشعبي قال: أول من بايع رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يوم الحديبية أبو سفيان الأسدي. وفي صحيح مسلم عن أبي الزبير عن جابر
قال: كنا يوم الحديبية ألفا وأربعمائة، فبايعناه وعمر آخذ بيده تحت الشجرة وهي
سمرة
ஹிஜ்ரி 6, துல்கஅதா மாதம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தாங்கள் கண்ட கனவின் அடிப்படையில் உம்ரா செய்ய 1400 தோழர்களுடன் மக்கா நோக்கி பயணமானார்கள்.
நபி {ஸல்}
தங்களின் நிலையையும், நோக்கத்தையும் உறுதியாகத்
தெளிபடுத்திக் கூறவும்,
குறைஷிகளிடம் ஒரு தூதரை அனுப்ப விரும்பியும் உமர் (ரலி)
அவர்களை அழைத்தார்கள்.
ஆனால், உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அங்கு சென்ற பின் எனக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால்
எனக்காக களமிறங்கிப் போராடும் அதீ இப்னு கஅப் கிளையைச் சார்ந்த எவரும் அங்கில்லை.
எனவே, உஸ்மான் (ரலி) அவர்களை அனுப்புங்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தை அவர் தான்
சரியான முறையில் குறைஷிகளிடம் எடுத்து வைப்பார்!” என்று கூறினார்கள்.
நபியவர்கள்
உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்து “நீர் குறைஷிகளிடம் சென்று, நாம் போருக்காக வரவில்லை; உம்ராவிற்காகத்தான்
வந்திருக்கின்றோம் என்று எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு அவர்களை சத்திய தீனின்
பக்கம் அழையுங்கள்! மேலும்,
மக்காவில் இருக்கும் முஸ்லிகளைச் சந்தித்து வெற்றி
நமக்குத்தான் என்ற நற்செய்தியைக் கூறுங்கள்! அல்லாஹ் அவனது மார்க்கத்தை மிக
விரைவில் மக்காவில் ஓங்கச் செய்வான்.
ஆகவே, யாரும் இறைநம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்களிடம்
சொல்லுங்கள்! என்று கூறினார்கள்.
உடனே, உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். வழியில் பல்தஹ்
எனும் இடத்தை கடந்த போது சில குறைஷிகளை சந்தித்தார்கள். தங்களின் உரையாடலின் போது
தாங்கள் மக்காவிற்கு செல்வதின் நோக்கத்தை குறைஷிகளிடம் தெரிவித்தார்கள் உஸ்மான்
(ரலி) அவர்கள்.
அதற்கு குறைஷிகள் ”நீர் சொல்வதை நாங்கள் கேட்டு விட்டோம். நல்ல விஷயம் தான். நீர் உமது நோக்கத்தை
நிறைவேற்ற மக்காவிற்குச் செல்லலாம்” என்றனர்.
கூட்டத்தில்
இருந்த அபான் இப்னு ஸயீத் இப்னு அல் ஆஸ் என்பவர் எழுந்து உஸ்மான் (ரலி) அவர்களை
வரவேற்று,
பின்னர் தம் குதிரைக்கு கடிவாளமிட்டு அதில் தன் பின்னால்
அமரவைத்து,
அவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்து மக்காவிற்கு அழைத்து
வந்தார்.
மக்கா வந்ததும்
குறைஷித்தலைவர்களிடம்,
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் ஆசையை உஸ்மான் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், நீங்கள் வேண்டுமானால் கஅபாவை வலம் வர அனுமதிக்கின்றோம். ஆனால், நபியவர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்று குறைஷிகள் கூறிவிட்டனர்.
ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் நபிகளார் இல்லாமல் தாம் வலம் வர இயலாது என மறுத்து
விட்டார்கள்.
குறைஷிகள் உஸ்மான்
(ரலி) அவர்களை கையில் காப்பு இட்டு மக்காவில் ஓரிடத்தில் தடுத்து வைத்து விட்டனர்.
இந்த பிரச்சனையில் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கும் வரை உஸ்மான் அவர்களை அனுப்பாமல்
தடுத்து வைத்திடுவோம் என அவர்கள் முடிவெடுத்தனர்.
ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் எனும் செய்தி
மக்காவிலும்,
மக்காவிற்கு வெளியிலும் மிக விரைவாக பரவியது.
இப்படியே
முஸ்லிம்களுக்கும் வந்து கிடைத்தது. இந்தச் செய்தி மாநபி {ஸல்}
அவர்களிடம் சொல்லப்பட்ட போது “குறைஷியர்களிடம் போர் செய்யாமல் இவ்விடத்தை விட்டு நாம் நகரக்கூடாது.” என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்.
மேலும், தங்களது தோழர்களைப் போருக்காக உடன்படிக்கை செய்து தர அழைத்தார்கள். ஸஹாபாக்கள்
உயிர் இருக்கும் வரை போராடுவோம் என்பதாகவும், அதற்காக உயிரைக் கொடுக்க
தாங்கள் தயாராக இருப்பதாகவும் நபிகளாரிடம் ஒப்பந்தம் செய்தார்கள்.
அபூ ஸினான் அல்
அஸதீ (ரலி) என்பவர்தான் முதன் முதலில் ஒப்பந்தம் செய்தார். ஸலமா இப்னு அக்வஃ (ரலி)
அவர்களோ மூன்று முறை ஒப்பந்தம் செய்தார். அதாவது, மக்கள் ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்த போதும், பின்பு நடுவிலும், பின்னர் இறுதியிலும் ஒப்பந்தம் செய்தார்.
நபி {ஸல்}
அவர்கள் தங்களின் ஒரு கையால் மற்றொரு கையைப் பிடித்துக்
காட்டி “இந்தக் கை உஸ்மான் சார்பாக” என்று கூறினார்கள்.
அதாவது, உஸ்மான் (ரலி) உயிருடன் இருந்தால் இதிலும் பங்கெடுத்து இருப்பார் என்பதை
உணர்த்தும் முகமாக நபிகளார் இதைச் செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்கள் ஒரு மரத்திற்கு கீழ் இந்த உடன்படிக்கையை
வாங்கினார்கள்.
அப்போது உமர்
(ரலி) அவர்கள் நபியின் கையைத் தாங்கி பிடித்து இருந்தார்கள்.
மஃகில் இப்னு
யஸார் (ரலி) அவர்கள் மரத்தின் ஒரு கிளையைச் சாய்த்து நபிகளாருக்கு நிழல் தரும்
வண்ணமாக பிடித்திருந்தார்கள்.
இந்த
உடன்படிக்கையைத் தான் “பைஅத்துர் ரிள்வான்”
– அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இறைபொருத்தத்திற்குரிய
உடன்படிக்கை”
என இஸ்லாமிய வரலாறு சான்று பகர்கின்றது.
அல்லாஹ்வும், இது குறித்து திருமறையில்......
لَقَدْ
رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ
فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ
فَتْحًا قَرِيبًا
“இறை நம்பிக்கையாளர்கள்
உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது
அல்லாஹ் அவர்களை குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை
அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது
நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு
வெகுமதியாக வழங்கினான்.”
என்று ( அல்குர்ஆன்: 48: 18 ). குறிப்பிடுகின்றான்.
நிலைமை
இவ்வாறிருக்க,
முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க
ஆயத்தமாகி விட்டார்கள். எனும் செய்தி குறைஷிகளுக்குத் தெரியவரவே, இனியும் உஸ்மான் (ரலி) அவர்களை தடுத்து வைத்திருப்பது தங்களுக்கு நல்லதல்ல
என்று கருதி உஸ்மான் (ரலி) அவர்களை விடுதலை செய்துவிட்டனர்.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்களும், நபித்தோழர்களும்
புறப்பட்டு சில எட்டுக்கள் தான் வைத்திருப்பார்கள். அதற்குள் உஸ்மான் (ரலி)
அவர்கள் அங்கே வந்து விடுகின்றார்கள். ( நூல்: தஃப்ஸீர் அல்
குர்துபீ,
9/100-102, தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:199.
)
இதே நிகழ்வில் இறை
திருப்தியை நிறைவாக பெற்றிட வேண்டும் என்ற உந்துதலில் ஸலமா இப்னு அக்வஃ (ரலி)
அவர்கள் மூன்று முறை இந்த உடன்படிக்கையில் சாட்சியம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
2) மாநபி ஸல் அவர்களின் கண்ணியம் கலங்கப்படாதிருக்க மாநபித் தோழர் குஸைமா இப்னு
ஸாபித் (ரலி) வழங்கிய சாட்சியம்.
حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ أَنَّ الْحَكَمَ بْنَ نَافِعٍ حَدَّثَهُمْ
أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ أَنَّ
عَمَّهُ حَدَّثَهُ وَهُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا
مِنْ أَعْرَابِيٍّ فَاسْتَتْبَعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
لِيَقْضِيَهُ ثَمَنَ فَرَسِهِ فَأَسْرَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ الْمَشْيَ وَأَبْطَأَ الْأَعْرَابِيُّ فَطَفِقَ رِجَالٌ يَعْتَرِضُونَ
الْأَعْرَابِيَّ فَيُسَاوِمُونَهُ بِالْفَرَسِ وَلَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ فَنَادَى الْأَعْرَابِيُّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا
الْفَرَسِ وَإِلَّا بِعْتُهُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَ الْأَعْرَابِيِّ فَقَالَ أَوْ لَيْسَ قَدْ
ابْتَعْتُهُ مِنْكَ فَقَالَ الْأَعْرَابِيُّ لَا وَاللَّهِ مَا بِعْتُكَهُ فَقَالَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَى قَدْ ابْتَعْتُهُ مِنْكَ
فَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ هَلُمَّ شَهِيدًا فَقَالَ خُزَيْمَةُ بْنُ
ثَابِتٍ أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بَايَعْتَهُ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ بِمَ تَشْهَدُ فَقَالَ
بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَةَ خُزَيْمَةَ بِشَهَادَةِ رَجُلَيْنِ
நபி (ஸல்) அவர்கள்
ஒரு கிராமவாசியிடம் ஒரு குதிரையை விலைபேசி முடித்தார்கள். அந்தக் கிராமவாசி
(அதற்கான கிரயத்தைப் பெறுவதற்காக) நபி (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்தார். நபி
(ஸல்) அவர்கள் விரைந்து நடக்க, அந்தக் கிராமவாசி மெதுவாக
நடந்து வந்தார். நபி (ஸல்) அவர்கள் விலைபேசி வாங்கியதை அறியாத சிலர் அந்தக்
கிராமவாசியிடம் கூடுதல் விலைக்கு அந்தக் குதிரையைக் கேட்கலானார்கள். அப்போது கிராமவாசி
நபிகள் நாயகத்தை உரத்த சப்தத்தில் அழைத்து, “நீங்கள் இதை வாங்குவதாக
இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் மற்றவருக்கு விற்று விடுவேன்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். “நான் தான் உன்னிடம் விலை பேசி வாங்கி விட்டேனே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தக் கிராமவாசி “அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை உங்களுக்கு விற்கவில்லை” என்றார். “இல்லை நான் உன்னிடம் இதை விலைக்கு வாங்கி விட்டேன்” என்று நபியவர்கள் கூறினார்கள். அப்போது கிராமவாசி “இதற்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார். அப்போது
குஸைமா என்ற நபித்தோழர் கிராமவாசியைப் பார்த்து “நீ நபிகள் நாயகத்திடம் விற்றாய் என்று சாட்சி கூறுகிறேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் குஸைமாவிடம் “நீ எப்படி சாட்சி கூறினாய்?” என்று கேட்டார்கள். “உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் சாட்சி கூறினேன்” என்றார். அப்போது நபி ஸல் அவர்கள் அவரது சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்கு
சமமாக ஆக்கினார்கள். ( நூல் : அபூதாவூத் 3130, அஹ்மத் 20878 )
பெருமானார் (ஸல்)
அவர்களின் கண்ணியம் காக்க குஸைமா இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் வழங்கிய
சாட்சியத்திற்கு மாநபி (ஸல்) பிரதி உபகாரமாக "இரட்டை சாட்சிக்கு சமம்"
எனும் அந்தஸ்து அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட போது இந்த உம்மத்திற்கு மகத்தான பேற்றை
வழங்கியதை உணர முடிகிறது.
இல்லையெனில்
அல்குர்ஆனின் மூன்று முக்கிய இறைவசனங்கள் இடம் பெறாமல் போயிருக்கும்.
ஸைத் இப்னு ஸாபித்
அல்அன்சாரி(ரலி) -
வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக
இருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் குர்ஆனை ஒன்று திரட்டும் பொறுப்பை
ஏற்றிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.
فقمتُ
فتتبَّعتُ القرآنَ أجمعُه من الرِّقَاع والأكتاف، والعُسُب وصدور الرجال، حتى
وجدتُ من سورة التوبة آيتيْن مع خُزيمة الأنصاري لم أجدْهما مع أحد غيره، {لقد
جاءكم رسولٌ من أنفسِكم عزيزٌ عليه ما عَنِتُّم حريصٌ عليكم} [التوبة: 128] إلى
آخرهما، وكانت الصُّحُفُ التي جُمِعَ فيها القرآنُ عند أبي بكر حتى توفَّاه اللهُ،
ثم عند عمر حتى توفَّاه الله، ثم عند حفصة بنت عمر. [صحيح] - [رواه
البخاري]
(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
………………….எனவே,
நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன்
(சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள்,
போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம்
செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு
திரட்டிபோது) 'அத்தவ்பா'
எனும் (9 வது) அத்தியாயத்தின்
(கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்களிடமிருந்து
பெற்றேன்;
இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.
(அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள்
துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும்
இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர்
கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே
நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின்
(அர்ஷுன்) அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128 , 129) (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ
பக்ர்(ரலி) அவர்களிடம்,
அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது.
பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச்
செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம்
இருந்தது. இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், '(அவ்விரு வசனங்கள்) 'குஸைமா'(ரலி) அல்லது 'அபூ குஸைமா'(ரலி) அவர்களிடம் இருந்தன' என (ஐயப்பாட்டுடன்)
அறிவிக்கப்பட்டுள்ளது. ( நூல்: புகாரி 4679, மேலும் பார்க்க
புகாரி 4986,4989,7191)
قال
البخاري : حدثنا أبو اليمان ، أخبرنا شعيب ، عن الزهري قال : أخبرني خارجة بن زيد بن
ثابت ، عن أبيه قال : لما نسخنا الصحف ، فقدت آية من " سورة الأحزاب "
كنت أسمع رسول الله صلى الله عليه وسلم يقرؤها ، لم أجدها مع أحد إلا مع خزيمة بن
ثابت الأنصاري - الذي جعل رسول الله صلى الله عليه وسلم شهادته بشهادة رجلين - : (
من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه ) . انفرد به البخاري دون مسلم .
وأخرجه أحمد في مسنده ، والترمذي والنسائي - في التفسير من سننيهما - من حديث
الزهري ، به . وقال الترمذي : " حسن صحيح
ஸைத் இப்னு
ஸாபித்(ரலி) அறிவித்தார்கள்: "நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில்
பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்'
அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்)
இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி)
அவர்களிடம் தான் பெற்றேன். (ஒரு வழக்கின் போது) அவரின் சாட்சியத்தை இரண்டு மனிதர்களின்
சாட்சியத்திற்குச் சமமாக நபி(ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள். அந்த இறைவசனம் இதுதான்:
"அல்லாஹ்விடம்
தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில்
உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை
நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டிருக்கின்றனர்". ( அல்குர்ஆன்: 33: 23 ) ( நூல்: புகாரி தஃப்ஸீர் இப்னு கஸீர் )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் தேர்தல் ஆணையத்திற்கும், மத்திய பாஸிச அரசுக்கும் நீதிமன்றத்தின் வாயிலாக
தக்க தண்டனையை வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!
Aameen
ReplyDelete