அருள்மறைச் சாரல் - தராவீஹ் சிந்தனை 01.
தவறுகளை நியாயப்படுத்த வேண்டாம்!!
முதல் நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு முதல் நோன்புக்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ரமழானின் 30 நாட்கள், நோன்பையும், இதர வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கல் இன்றி உடல் ஆரோக்கியத்துடன், மன நிறிவோடு, இன்பத்தோடு பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அல்குர்ஆனின் பெரிய அத்தியாயமான, வரிசைப்படி இரண்டாவதாக இடம் பெற்றுள்ள அத்தியாயமான 286 வசனங்களைக் கொண்ட, இறைத்தூதர் முஹம்மது நபி ﷺ அவர்களின் அமுதவாயால் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கிற அல் பகரா அத்தியாயத்தின் 176 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றன.
عن أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قالَ: ((إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ
அபூஹரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: "உங்கள் இல்லங்களை (தொழுகை மற்றும் ஓதல் நடைபெறாத) மண்ணறைக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள்! அல்பகரா எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் விரண்டோடி விடுகிறான். ( நூல்: முஸ்லிம், திர்மிதி, அஹமது )
عن أَبِي مَسْعودٍ رَضِيَ اللهُ عَنْهُ قالَ: قالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَنْ قَرَأَ بِالآيَتَيْنِ مِنْ آخِرِ سورَةِ الْبَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ))
யார் பகரா அத்தியாயத்தின் கடைசி இரண்டு ஆயத்துகளை ஓதுகிறாரோ அது அவருக்கு (ஷைத்தானிடமிருந்து பாதுகாக்க) போதுமானதாகும்" என நபி ﷺ அவர்கள் கூறியதாக அனஸ் ரழி அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: புகாரி )
عن أَبي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ، اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ الْبَقَرَةَ وَسُورَةَ آلِ عِمْرَانَ فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ أَوْ كَأَنَّهُمَا فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا.اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ؛ فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ، وَتَرْكَهَا حَسْرَةٌ؛ وَلَا تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ).
அபூ உமாமா அல் பாஹிலி (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: "குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில் குர்ஆன் ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும்! இரு ஒளிச்சுடர்களான அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில் அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். அல்பகரா அத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைக் எடுத்துக் கொள்வது வளம் சேர்க்கும். அதைக் கை விடுவது இழப்பைத் தரும் இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள்". ( நூல்: முஸ்லிம், அஹ்மத் )
وعن النواس بن سمعان قال : سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول : " يؤتى بالقرآن يوم القيامة وأهله الذين كانوا يعملون به تقدمه سورة البقرة وآل عمران كأنهما غمامتان ، أو ظلتان سوداوان بينهما شرق ، أو كأنهما فرقان من طير صواف تحاجان عن صاحبهما " رواه مسلم .
நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- நபி ﷺ அவர்கள், “மறுமை நாளில் குர்ஆனும் அதன்படி செயலாற்றியவர்களும் அழைத்து வரப்படுவர். அப்போது அல்பகரா அத்தியாயமும் ஆலு இம்ரான் அத்தியாயமும் அவர்களுக்கு முன்னே வரும்” என்று கூறி விட்டு இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) மூன்று உவமைகளைக் கூறினார்கள். அவற்றை நான் இதுவரை மறந்திடவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் (நிழல் தரும்) மேகங்களைப் போன்று அல்லது நடுவே ஒளியுள்ள இரு கரும் நிழல்களைப் போன்று அல்லது அணி அணியாகப் பறக்கும் இரு பறவைக் கூட்டங்களைப் போன்று (முன்னே வந்து) தம்மைக் கையாண்டவருக்காக (இறைவனிடம்) வாதாடும்". ( நூல்: முஸ்லிம், திர்மிதி )
இவை அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு குறித்து நபி ﷺ அவர்கள் சிறப்பித்துக் கூறும் செய்திகளாகும்.
அல் பகரா அத்தியாயத்தின் துவக்க வசனங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறை நம்பிக்கை கொண்ட மக்களின் பண்புகளை கூறுவதோடு அவர்களின் சிறப்புகளையும் எடுத்துக் கூறி மாண்பு நிறைந்த அல்குர்ஆன் அவர்களையே வழி நடத்துகிறது என்று சோபனம் கூறி ஈருலகிலும் அவர்களே வெற்றி பெற்றோர் என்று உறுதி படுத்துகிறான்.
தொடர்ந்து முனாஃபிக்கள் - நயவஞ்சகர்கள் குறித்து பேசுவதோடு, அவர்களிடம் காணப்பட்ட இறை விரோத பண்புகளையும் அடையாளப்படுத்துகின்றான்.
அத்தகைய இறைவிரோத பண்புகளில் ஒன்றாக "தாம் செய்த தவறை நியாயப்படுத்துதலை" குறிப்பிடுகின்றான்.
அல் பகரா அத்தியாயத்தின் 11 மற்றும் 12 வசனத்தில்...
وَاِذَا
قِیْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ قَالُوْۤا اِنَّمَا نَحْنُ
مُصْلِحُوْنَ
“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰكِنْ لَّا یَشْعُرُوْنَ
நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. ( அல்குர்ஆன்: 2: 11, 12 )
மனிதராகப் பிறந்த எவருமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. தவறு என்று உணர்ந்த பின் அந்தத் தவறை ஒப்புக் கொள்ள தயாராக இருக்கின்றோமா என்பது ஒரு இறைநம்பிக்கையாளனை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும்.
வாழ்வில் பல தருணங்களில் நாம் தவறு செய்திருந்தாலும் கூட. தவறை ஒத்துக் கொண்ட தருணங்கள் என்பது சிலதே!
தவறுகளே செய்யாமல் வாழ்வது என்பது மகத்தான வாழ்க்கை! அந்த வாழ்க்கையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தான் நாடிய சில நல்லடியார்களுக்கே வழங்குகின்றான்.
قال
إسماعيل بن هشام، عن بعض أصحاب فتح الموصلي قال: دخلت عليه يوماً وقد مد كفيه
يبكي، حتى رأيت الدموع من بين أصابعه تنحدر.
فدنوت
منه لأنظر إليه فإذا دموعه قد خالطتها صفرة.
فقلت:
بالله يا فتح بكيت الدم؟ فقال: لولا أنك حلفتني بالله عز وجل ما أخبرتك، بكيت دماً.
فقلت:
على ماذا بكيت الدموع؟ وعلى ماذا بكيت الدم؟ فقال: بكيت الدموع على تخلفي عن واجب
حق الله عز وجل، وبكيت الدم على الدموع خوفاً أن تكون ما صحت لي الدموع.
قال
الرجل: فرأيت فتحاً بعد موته في المنام.
فقلت:
ما صنع الله بك؟ فقال غفر لي، قلت: فما صنع في دموعك؟ فقال: قربني ربي عز وجل وقال
لي: يا فتح؛ الدمع على ماذا؟ قلت: يا رب على تخلفي عن واجب حقك.
قال:
فالدم لم بكيت؟ فقلت: يا رب على دموعي خوفاً أن لا تصح لي فقال لي: يا فتح ما أردت
بهذا كله؟ وعزتي لقد صعد إلي حافظاك أربعين سنة بصحيفتك ما فيها خطيئة.
أدرك فتح عيسى بن يونس وأقرانه وأسند عن عيسى وتوفي سنة عشرين ومائتين.
ஃபத்ஹுல் மூஸிலி (ரஹ்) அவர்கள் இறைநேசச் செல்வர்களில் இறையச்சம் நிறைந்தவர்களாக வாழ்ந்தவர்கள் .
ஒருநாள் ஃபத்ஹுல் மூஸிலி (ரஹ்) அவர்கள் அழுதவண்ணமாக அமர்ந்திருந்தார்கள். காண வந்தவர் திடுக்கிட்டு ஃபத்ஹ் அவர்களே ! ஏன் அழுகிறீர்கள் ? என்ன நடந்து விட்டது ? எதற்காக இப்படி இரத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு ஃபத்ஹுல் மூஸிலி (ரஹ்) அவர்கள் இறைவன் விதித்த கட்டளைகளை நான் சரிவர நடத்தினேனா? இல்லையா? என்ற அச்சத்தால் அழுகிறேன் என்று சொன்னார்கள்.
ஃபத்ஹுல் மூஸிலி (ரஹ்) அவர்கள் மண்ணுலகை விட்டு மறைந்த பின் அவர்களைக் கனவில் கண்ட அவர்களுடைய நண்பர் , அல்லாஹ் உங்களை எப்படி நடத்தினான்? என்று கேட்டார். "அல்லாஹ் என் பிழைகளை மன்னித்தான்" என்று பத்ஹுல் மூஸிலி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
இரத்தக்கண்ணீர் சிந்தி அழுதீர்களே! அதைப் பற்றி இறைவன் என்ன சொன்னான்? என்று கனவு கண்ட நண்பர் கேட்டார். இறைவன் என்னை தன்னருகில் அழைத்து எதற்காக இரத்தக் கண்ணீர் சிந்தி அழுதீர்கள்? என்று கேட்டான்.
"இறைவா நீ இட்ட கட்டளைகளை நான் முழுமையாக நிறைவேற்றினேனா? இல்லையா? என்பதை எண்ணிய போது விழிகளில் இரத்தம் கசியும் வரை அழுதேன்" என்று கூறினேன் . அப்போது இறைவன் ஃபத்ஹே! இப்படி இரத்தக் கண்ணீர் சிந்தி அழுவதை நான் விரும்பவில்லை . ஏனெனில் உங்களுடைய நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குரிய குறிப்புகளையும் வானவர்கள் தினமும் என் சமூகத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள்.
அந்தக் குறிப்பேட்டில் "நீங்கள் குற்றம் செய்ததாக ஒரு வரி கூட இடம் பெறவில்லை என்று இறைவன் கூறினான்" என பத்ஹுல் மூஸிலி (ரஹ்) அவர்கள் தங்களுடைய நண்பரிடம் கனவில் சொன்னார்கள். ( நூல்: ஸிஃபதுஸ் ஸஃப்வா )
தவறு செய்பவர்கள் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு, மனந்திருந்தி வாழ வேண்டும். மனிதர்களில் இந்த வகையினர்தான் சிறப்புக்குரியவர்கள்.
قال أهل التفسير كان في ابتداء الأمر إذا أفطر الرجل حل له الطعام والشراب والجماع إلى أن يصلي العشاء الآخرة أو يرقد قبلها فإذا صلى العشاء أو رقد قبلها حرم عليه الطعام والنساء إلى الليلة القابلة ثم إن عمر بن الخطاب رضي الله عنه واقع أهله بعدما صلى العشاء فلما اغتسل أخذ يبكي ويلوم نفسه فأتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني أعتذر إلى الله وإليك من نفسي هذه الخاطئة إني رجعت إلى أهلي بعدما صليت العشاء فوجدت رائحة طيبة فسولت لي نفسي فجامعت أهلي فهل تجد لي من رخصة فقال النبي صلى الله عليه وسلم ما كنت جديرا بذلك يا عمر فقام رجال واعترفوا بمثله فنزل في عمر وأصحابه.
நோன்பு கடமையாக்கப்பட்ட துவக்க காலத்தில் நோன்பு திறந்ததன் பின்னர் சிறிது நேரமே அடுத்த நோன்புக்கான ஆயத்த பணிகளுக்கு நேரம் வழங்கப்பட்டது.
அதாவது, இஷாவுடைய நேரத்திற்கு குடிப்பது, உண்பது மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபடுவது என அனைத்திற்கும் அனுமதி இருந்தது.
நபித்தோழர்களான ஸஹாபாக்கள் மிகுந்த கவனத்தோடு இதை கையாண்டார்கள்.
எனினும் ஒரு சந்தர்ப்பத்தில் உமர் ரலி அவர்கள் இஷா தொழுகைக்கு பிறகு தமது மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபட்டு விட்டார்கள். இதை நினைத்து அழுதவர்களாக, தம்மைத் தாமே பழித்துக் கொண்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் சபைக்கு வருகை தந்து, அல்லாஹ்வின் தூதரே! ﷺ நான் இஷாத் தொழுகைக்கு பிறகு வீட்டிற்கு சென்றேன். மனைவியிடம் இருந்து வெளிப்பட்ட நறுமணத்தின் ஈர்ப்பால் மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபட்டு தவறு செய்து விட்டேன். எனக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள்! என்று கூறினார்கள். சபையில் இருந்த ஒரு நபித்தோழரும் இவ்வாறு கூறினார்.
அப்போது, நபி ﷺ அவர்கள் இந்த தவறை ஈடு செய்யக்கூடிய எந்த ஒரு பரிகாரமும் இன்னும் வழங்கப்பட வில்லை என்று கூறிய அந்த தருணத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்பகரா அத்தியாயத்தின் 187 -வது வசனத்தை இறக்கியருளி நோன்பு திறந்ததில் இருந்து ஸஹர் நேரம் வரை எல்லாவற்றுக்கும் அனுமதி வழங்கினான்.
தமக்கும் தமது மனைவிக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு தவறை ஒப்புக் கொண்டு மாநபி ﷺ அவர்கள் முன் வந்து நின்று அதற்கான பரிகாரத்தை வேண்டி நின்றார்கள் என்றால் அவர்களின் இதயத் தூய்மையை என்ன வென்று சொல்வது?
செய்த தவறை மறைக்காமல், நியாயய்படுத்தாமல்
ஒத்துக் கொண்ட ஓர் உத்தம மனிதரின் ஒப்பற்ற செயலை அங்கீகரித்த அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் ஒட்டுமொத்த இந்த உம்மத்திற்கும் விலக்களித்து சட்ட வழிகாட்டலை வழங்கினான்.
عَنْ أَبِي إِدْرِيسَ الخَوْلاَنِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ، يَقُولُ: كَانَتْ بَيْنَ أَبِي بَكْرٍ وَعُمَرَ مُحَاوَرَةٌ، فَأَغْضَبَ أَبُو بَكْرٍ عُمَرَ فَانْصَرَفَ عَنْهُ عُمَرُ مُغْضَبًا، فَاتَّبَعَهُ أَبُو بَكْرٍ يَسْأَلُهُ أَنْ يَسْتَغْفِرَ لَهُ، فَلَمْ يَفْعَلْ حَتَّى أَغْلَقَ بَابَهُ فِي وَجْهِهِ، فَأَقْبَلَ أَبُو بَكْرٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَبُو الدَّرْدَاءِ وَنَحْنُ عِنْدَهُ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا صَاحِبُكُمْ هَذَا فَقَدْ غَامَرَ» قَالَ: وَنَدِمَ عُمَرُ عَلَى مَا كَانَ مِنْهُ، فَأَقْبَلَ حَتَّى سَلَّمَ وَجَلَسَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَصَّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الخَبَرَ، قَالَ أَبُو الدَّرْدَاءِ: وَغَضِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجَعَلَ أَبُو بَكْرٍ يَقُولُ: وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لَأَنَا كُنْتُ أَظْلَمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " هَلْ أَنْتُمْ تَارِكُونَ لِي صَاحِبِي، هَلْ أَنْتُمْ تَارِكُونَ لِي صَاحِبِي، إِنِّي قُلْتُ: يَا أَيُّهَا النَّاسُ، إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا، فَقُلْتُمْ: كَذَبْتَ، وَقَالَ أَبُو بَكْرٍ: صَدَقْتَ " قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: " غَامَرَ: سَبَقَ بِالخَيْرِ " البخاري
அபுத்தர்தா (ரலி) அறிவித்தார்கள்:- (ஒரு சமயம்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்குமிடையே நடந்த
வாக்குவாதத்தில் அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) அவர்களை கோபப்படுத்திவிட்டார்கள்.
அப்போது உமர் (ரலி) கோபத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். உடனே அபூபக்ர்
(ரலி) உமர் (ரலி) அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தம்மை மன்னித்து விடுமாறு
வேண்டினார்கள். ஆனால்,
உமர் (ரலி) மன்னிக்காமல் அபூபக்ர் (ரலி) அவர்களின்
முகத்திற்கு முன்னால் (தம் வீட்டுக்) கதவைச் சாத்தினார்கள். எனவே, அபூபக்ர் (ரலி) நபி ﷺ
அவர்களை நோக்கி வந்தார்கள்.
(அப்போது) நாங்கள் நபி ﷺ அவர்களுடன் இருந்தோம். (அபூ பக்ர்(ரலி) வருவதைக் கண்ட) நபி ﷺ அவர்கள் 'இதோ உங்கள் தோழர் வழக்காடிவிட்டு வந்திருக்கிறார்' என்று கூறினார்கள். (பிறகு) உமர்(ரலி) அவர்களும் தம்மால் ஏற்பட்டுவிட்ட செயலுக்கு வருந்தியவராக நபி ﷺ அவர்களை நோக்கி வந்து சலாம் (முகமன்) கூறி அமர்ந்தார்கள். (நடந்த) செய்தியை நபி ﷺ அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். (அப்போது) நபி ﷺ அவர்கள் கோபப்பட்டார்கள். (இதைக் கண்ட) அபூ பக்ர் (ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! (வாக்கு வாதத்தை தொடங்கி வைத்ததால் உமரை விட) நானே அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன், நபி ﷺ அவர்களே!' என்று கூறலானார்கள். அப்போது நபி ﷺ அவர்கள் , '(மக்களே!) என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டுவிடுவீர்களா? (ஒரு காலத்தில்) 'மக்களே! நான் உங்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று சொன்னேன். அப்போது நீங்கள் 'பொய் சொல்கிறீர்' என்று கூறினீர்கள். ஆனால், அபூ பக்ர் அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்' என்றார்கள். ( நூல்: புகாரி )
தவறுகளை ஒப்புக் கொண்டு பிரார்த்தனை செய்வது...
நபி ﷺ அவர்கள் பாவ மன்னிப்பின் தலைசிறந்த துஆ என்று ஒன்றை நமக்கு கற்றுத்தந்து, அந்த துஆ நம்மை சொர்க்கத்திற்கே அழைத்து செல்லும் என அதன் சிறப்பையும் எடுத்துக் கூறி, இறைவனுக்கு மிக மிக பிடித்தமான துஆ என்று அடையாளப்படுத்தி எதை நமக்கு கற்றுத்தந்தார்களோ அந்த துஆவிலும் கூட நாம் செய்த பாவங்களை, தவறுகளை ஒப்புக் கொண்டு, பின் மன்னிப்பு கேட்கும் வகையிலே தான் அதன் வாசக அமைப்பு அமைந்திருக்கின்றது.
وعنْ شَدَّادِ بْنِ أَوْسٍ عن النَّبِيِّ ﷺ قالَ: سيِّدُ الاسْتِغْفار أَنْ يقُول الْعبْدُ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لاَ إِلَه إِلاَّ أَنْتَ خَلَقْتَني وأَنَا عَبْدُكَ، وأَنَا عَلَى عهْدِكَ ووعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صنَعْتُ، أَبوءُ لَكَ بِنِعْمتِكَ علَيَ، وأَبُوءُ بذَنْبي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ يغْفِرُ الذُّنُوبِ إِلاَّ أَنْتَ. منْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا، فَماتَ مِنْ يوْمِهِ قَبْل أَنْ يُمْسِيَ، فَهُو مِنْ أَهْلِ الجنَّةِ، ومَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وهُو مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبل أَنْ يُصْبِح، فهُو مِنْ أَهْلِ الجنَّةِ رواه البخاري.
ஷத்தாத் பின் அவ்ஸ் ரலி அவர்கள் அறிவித்தார்கள்:- "அல்லாஹும்ம ! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த'' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவ மன்னிப்புக் கோரலாகும்.
பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளில் இருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெ வரும் இல்லை.
யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாள் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகல் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்" என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
நபிமார்கள் பாவங்கள் செய்வதை விட்டும் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டவர்கள் என்பது தான் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை.
என்றாலும் தங்களிடையே நிகழ்ந்த சில தவறுகளைக் கூட அல்லாஹ்விடம் அவர்கள் ஒப்புக் கொண்டதை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் அழகு பட பதிவு செய்துள்ளான்.
قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ (23 الاعراف)
"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று (பிரார்த்தித்துக்) கூறினர். ( அல்குர்ஆன்: 7: 23 )
மூஸா (அலை)
قَالَ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (16 القصص)
அன்றியும் அவர் "என் இறைவனே! நிச்சயமாக நான் எனக்கே தீங்கிழைத்துக் கொண்டேன். நீ என்னுடைய குற்றத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார். ஆகவே, (இறைவனும்) அவருடைய குற்றத்தை மன்னித்துவிட்டான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 28: 16 )
யூனுஸ் நபி (அலை)
وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம்முடைய தூதராக ஆக்கினோம்.) அவர் கோபமாகச்
சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார்.
(ஆதலால்,
அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்)
இருளிலிருந்த அவர் (நம்மை நோக்கி) "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன்
வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில்
ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தனை
செய்தார். ( அல்குர்ஆன்: 21:
87 )
செய்த தவறை நியாயப் படுத்துபவனுக்கும், ஒத்துக் கொள்ளாதவனுக்கும் உதாரணமாகிறது...
عَن الحَارِثِ بْنِ سُوَيْدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ، حَدِيثَيْنِ: أَحَدُهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالآخَرُ عَنْ نَفْسِهِ، قَالَ: «إِنَّ المُؤْمِنَ يَرَى ذُنُوبَهُ كَأَنَّهُ قَاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخَافُ أَنْ يَقَعَ عَلَيْهِ، وَإِنَّ الفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ» البخاري
ஹாரிஸ் இப்னு சுவைத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்:- அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் எங்களுக்கு இரண்டு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டார்கள். மற்றொன்றைக் தாமாகக் கூறினார்கள். (அவையாவன:)
இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தன்னுடைய மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான். ( நூல்: புகாரி )
தன்னுடைய தவறை நியாயப்படுத்திக் கொண்டிருந்தால் அவருக்கு மறுமையில் கடுமையான இழிவு ஏற்படும் என்று இறைவன் எச்சரிக்கின்றான்.
قُلْ
هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا
الَّذِينَ
ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ
يُحْسِنُونَ صُنْعًا
أُولَٰئِكَ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا
“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’’ என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.
அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். ( அல்குர்ஆன்: 18:103-105 )
தவறுகளைச் செய்து கொண்டு தாங்கள் அழகிய செயல்களைச் செய்கின்றோம் என்று நினைப்பவர்கள் சுவனவாசி இல்லை என்று அல்லாஹ் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்கின்றான்.
اَفَمَنْ زُيِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ فَرَاٰهُ حَسَنًا فَاِنَّ اللّٰهَ يُضِلُّ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ
யாருக்குத் தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அவனும் அழகானதாகக் கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். ( அல்குர்ஆன்: 35: 8 )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் நாம் செய்யும்
தவறுகளை ஒப்புக் கொண்டு அல்லாஹ்வின் திருமுன் சரணடைபவர்களாக ஆக்கியருள்வானாக!
ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:
Post a Comment