அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை 03.
மனம் குளிரும்
மழலைப்பேறு!!
மூன்றாம் நாள்
தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, இரண்டாம் நாள் நோன்பை
நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமும், ஈமானுக்கு உரமும் தருகிற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில்
அமர்ந்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் அனைவரின் அமர்வையும் கபூல் செய்தருள்வானாக!
நம்முடைய
நோன்புகளையும்,
தராவீஹ் தொழுகைகளையும் தான தர்மங்களையும், இதர வணக்க வழிபாடுகளையும் ஏற்றுக் கொள்வானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் சூரா ஆலு இம்ரான் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட ஆலு இம்ரான் அத்தியாயத்தில் வசனம் 36 மர்யம் (அலை) வசனம் 39
யஹ்யா (அலை) வசனம் 45 ஈஸா (அலை) என ஆலு
இம்ரான் எனப்படும் இம்ரானின் குடும்பம் பெற்ற மழலைப் பேறு என்பது அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் வழங்கிய மகத்தான பாக்கியம் என்பதாக குறிப்பிடுகிறான்.
இன்று Infertility குழந்தையின்மை என்பது ஆண்கள், பெண்கள் என இரண்டு
பேரையுமே மனதளவில் பெரிய அளவில் பாதிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.
இந்தியாவில்
திருமணமானவர்களில் 10
முதல் 14 சதவிகிதத்தினர்
குழந்தையின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
அதிலும் மாநகரங்களில்
இது அதிகமாக இருக்கிறது. ஆறு இணையர்களில் ஒருவர் குழந்தையின்மையால்
பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
“குழந்தையின்மை என்று
சொன்னாலே அதற்கு பெண்கள் தான் காரணம் எனக் கூறுவார்கள். உண்மையில் 20% குழந்தையின்மைக்கு இருவருமே காரணம். மீதமுள்ள 40% ஆண்களும்,
40% பெண்களும் காரணமாக இருக்கிறார்கள்” என டாக்டர். ஷோபா குப்தா என்பவர் கூறுகிறார்.
சமீப வருடங்களாக
ஆண்களிடத்தில் குறைவான விந்தணு எண்ணிக்கையும் பெண்களிடத்தில் குறைவான
கருமுட்டைகளும் இருப்பதை அதிகமாக பார்க்க முடிகிறது.
இந்தியாவில் 1975 – 80 கால கட்டத்தில்,
ஆயிரம் மக்கள் தொகைக்கு 36.7 குழந்தைகள் பிறந்தன. அதுவே 2015 – 20 கால கட்டத்தில் பாதியாகக்
குறைந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதாவது
இந்த கால
கட்டத்தில் குழந்தை பிறப்பு என்பது 18.9 ஆக சுருங்கி
விட்டது. இதுவும் கூட 2045-50
ஆண்டு வாக்கில் 12.1 ஆக சரியும்
என்றும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
குழந்தையின்மை
பிரச்சினையால் பாதிக்கப்படும் தம்பதியர் இரண்டு தீர்வுகளை நோக்கி நகர்ந்து
செல்கிறார்கள்.
ஒன்று செயற்கை
கருத்தரிப்பு - Artificial
conception , இன்னொன்று, குழந்தை தத்தெடுத்தல் - Adopted child.
இயற்கையான
முறையில் அல்லாமல் மருத்துவ உதவியுடன் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையைத்தான் Artificial conception
- செயற்கைக் கருத்தரிப்பு என்று பரவலாக அறியப்படுகிறது.
இவற்றில்
தொழில்நுட்பங்களைப் பொறுத்து (IUI) ஐயூஐ, (IVF)ஐவிஎஃப்,
(ICSI)ஐசிஎஸ்ஐ போன்றவை உள்ளன.
Intrauterine insemination (IUI) ஐயூஐ என்ற முறையாகிறது கணவனின் விந்தணுவை மனைவியின் கருப்பைக்குள் விந்தணுவை
இன்ஜெக்ட் ஊசி மூலம் செலுத்தும் முறையாகும்.
ஐவிஎஃப் என்றால் in vitro
fertilization (இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன்) அதாவது மனைவியின் (பெண்ணின்)
கருப்பையில் மருந்து மூலமாக கரு முட்டையை வளர வைத்து, பின்னர் அனஸ்தீசியா மூலமாக மனைவியின் கரு முட்டையை வெளியே எடுத்து, பின்னர் கணவரின் விந்தணுவைப் பெற்று அதை சோதனைக் கூடத்தில் கருவாக வளர வைத்து
சில நாள்களில் பெண்ணின் கருப்பையில் மீண்டும் செலுத்துவது இது தான் (IVF) ஐவிஎஃப்.
(IVF) ஐவிஎஃப் -ல்
இதுவல்லாத இன்னும் மூன்று முறைகள் உள்ளன.
கணவனின் விந்தணு -
மனைவியின் கருமுட்டை - வேறொரு பெண்ணின் கருவறை (IVF) ஐவிஎஃப் -ன் இரண்டாம் முறை இது.
வேறொரு ஆண்
விந்தணு - மனைவியின் கருமுட்டை - வேறொரு பெண்ணின் கருவறை (IVF) ஐவிஎஃப் -ன் மூன்றாம் முறை இது.
வேறொரு ஆண்
விந்தணு - வேறொரு பெண்ணின் கருமுட்டை - மனைவியின் கருவறை (IVF) ஐவிஎஃப் -ன் நான்காம் முறை இது.
பெறப்பட்ட
விந்தணுவை கருமுட்டையுடன் இணைத்து ஒரு தட்டில் அல்லது சோதனைக் குழாய் ஒன்றில்
இரண்டு முதல் நான்கு நாட்கள் வளர்த்து பெண் கருவறைக்குள் செலுத்தி பத்து முதல்
பதினைந்து நாட்கள் கழித்து இரத்தப் பரிசோதனை மூலம் கருவுறுதலை உறுதி செய்து
குழந்தை பெற்றெடுக்க வைத்தல். இது தான் செயற்கை கருத்தரிப்பு - Artificial conception
ன் வழிமுறைகள் ஆகும்.
இந்த வழிமுறைகளைப்
பின்பற்றி "21
வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட
பெண், 21
வயது முதல் 55 வயது வரம்பிலுள்ள
ஆண் அல்லது தம்பதிகள் இந்த மருத்துவ உதவிப் பெறலாம்." என்கிறது இந்திய
சட்டம்.
திருமணம் ஆனவர்
திருமணம் ஆகாத யாரும் இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதும் இந்திய
சட்டம் வழங்கும் உரிமையாகும்.
IVF Clinic எனப்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு
முதலிடத்தில் உள்ளதாக செயற்கைக் கருத்தரிப்பு மற்றும் வாடகைத் தாய் வழிமுறைப்
பதிவேட்டின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2026 ஜனவரி நிலவரப்படி, இந்தியாவில் 2650
பதிவுசெய்யப்பட்ட ஐவிஎஃப் கிளினிக்குகள் உள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 669
ஐவிஎஃப் மையங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில்
கருவுறுதல் விகிதம் 1.3
ஆகக் குறைந்துள்ளதே இம்மையங்கள் அதிகரிப்புக்கு முக்கியக்
காரணமாகக் கூறப்படுகிறது.
2.2 என்பதில் இருந்து 2,0 என்று மாறி தற்போது 1.3
என்பதாக குறைந்துள்ளது.
ஒரு பெண் தன்
மகப்பேறு வயதில் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார் என்பதன் சராசரி எண்ணிக்கையே
கருவுறுதல் விகிதம் ஆகும்.
டெல்லி, மேற்கு வங்கம்,
மஹாராஷ்டிரா மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைவாக
இருந்தபோதிலும் ஐவிஎஃப் கிளினிக்குகள் தமிழ்நாட்டைவிட ஐந்தில் ஒரு பங்குக்குக்
குறைவாகவே உள்ளன.
குழந்தையின்மை
பிரச்சினையால் பாதிக்கப்படும் இஸ்லாமிய தம்பதியருக்கு இஸ்லாம் எவ்வாறு
வழிகாட்டுகிறது என்பதை இன்றைய தராவீஹ் சிந்தனையின் ஊடாக நாம் பார்க்க
இருக்கின்றோம்.
உலக வாழ்க்கையில் நாம் பெற்றிருக்கின்ற அருட்கொடைகளில் எல்லாம் மிக உயர்ந்த
அருட்கொடை குழந்தைச் செல்வம் ஆகும் .
முதலில் குழந்தை
பாக்கியம் என்பது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் யாருக்கு நாடுகின்றானோ அவர்களுக்கே
வழங்குகின்றான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
لِلّٰهِ
مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ یَخْلُقُ مَا یَشَآءُ یَهَبُ لِمَنْ یَّشَآءُ
اِنَاثًا وَّیَهَبُ لِمَنْ یَّشَآءُ الذُّكُوْرَ ۟
அல்லாஹ்வுக்கே
வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.
اَوْ یُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا وَیَجْعَلُ مَنْ یَّشَآءُ
عَقِیْمًا اِنَّهٗ عَلِیْمٌ قَدِیْرٌ
அல்லது
அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும்
சேர்த்துக் கொடுக்கின்றான்;
அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் -
நிச்சயமாக,
அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன். (
அல்குர்ஆன்: 42:
49,50 )
குழந்தைகள் இந்த
உலகத்தில் அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற ஒரு நிஃமத் (அருட்கொடை)
என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
“ஏராளமான பொருள்களையும்
புதல்வர்களையும் (தந்து) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.” ( அல்குர்ஆன்: 17:
06 )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் அல்குர்ஆனில் குழந்தைகளை ஜீனத் - அலங்காரம் என்று வர்ணிக்கின்றான்.
செல்வமும்
பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்.” ( அல்குர்ஆன்: 18:
46 )
குழந்தைகள்
கண்களுக்கு குளிர்ச்சியானவர்கள் (குர்ரதுல் அஃயுன்) என்றும் அல்குர்ஆனில் அல்லாஹ்
அடையாளப் படுத்துகின்றான்.
“மேலும் அவர்கள் எங்கள்
இறைவா! எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததியரி டமும் இருந்து எங்களுக்குக்
கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!” (25: 74)
இத்தகைய மகத்தான
அருட்கொடையை ஆதரவு வைக்கிற ஒரு இஸ்லாமிய தம்பதியருக்கு இஸ்லாம் மூன்று விதமான
வழிகாட்டலை வழங்குகிறது.
1) spritual - ஆன்மீக வழிகாட்டல்
2) Psychology உளவியல் வழிகாட்டல்
3) மருத்துவ வழிகாட்டல்
1) spritual - ஆன்மீக வழிகாட்டல்...
1) குழந்தை பாக்கியம் வேண்டி துஆச் செய்ய வேண்டும்..
இறைவனிடம் பல
வருடங்களாக பிரார்த்தனை செய்து குழந்தை பிறக்காவிட்டாலும் அல்லாஹ்வின் மீது
வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருக்க
வேண்டும். அவன் நாடினால் முதிய வயதில் கூட குழந்தை பாக்கியத்தை கொடுத்துவிடுவான்.
ஸக்கரிய்யா (அலை)
அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். முதிய வயதை அடைந்த
போதும் அல்லாஹ்விடத்திலே குழந்தை பாக்கியத்தை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
என் இறைவா! என்
எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம்
பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின்
உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக
இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! ( அல்குர்ஆன்: 19: 4 )
2) நம்பிக்கை இழந்து விடக்கூடாது.
இப்ராஹீம் அலை
அவர்களுக்கு வயது முதிர்ந்த நிலையில் குழந்தை பாக்கியம் வழங்கப் பட்ட போது..
وَلَقَدْ
جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی قَالُوْا سَلٰمًا قَالَ سَلٰمٌ
فَمَا لَبِثَ اَنْ جَآءَ بِعِجْلٍ حَنِیْذٍ
நிச்சயமாக நம்
தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) “ஸலாம்”
(சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்”
(என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர்
அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில்
தாமதிக்கவில்லை.
فَلَمَّا
رَاٰۤ اَیْدِیَهُمْ لَا تَصِلُ اِلَیْهِ نَكِرَهُمْ وَاَوْجَسَ مِنْهُمْ خِیْفَةً
قَالُوْا لَا تَخَفْ اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمِ لُوْطٍ
ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப்
பயமும் ஏற்பட்டுவிட்டது;
(ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால்
அனுப்பப்பட்டிருக்கிறோம்”
என்று கூறினார்கள்.
وَامْرَاَتُهٗ
قَآىِٕمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنٰهَا بِاِسْحٰقَ وَمِنْ وَّرَآءِ اِسْحٰقَ
یَعْقُوْبَ
அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம்.
قَالَتْ
یٰوَیْلَتٰۤی ءَاَلِدُ وَاَنَا عَجُوْزٌ وَّهٰذَا بَعْلِیْ شَیْخًا اِنَّ هٰذَا
لَشَیْءٌ عَجِیْبٌ
அதற்கு அவர்
கூறினார்: “ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர்
முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!”
قَالُوْۤا
اَتَعْجَبِیْنَ مِنْ اَمْرِ اللّٰهِ رَحْمَتُ اللّٰهِ وَبَرَكٰتُهٗ عَلَیْكُمْ
اَهْلَ الْبَیْتِ اِنَّهٗ حَمِیْدٌ مَّجِیْدٌ
(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும்
(அருளும்,
பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக!
நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும்
இருக்கின்றான்”
என்று பதிலளித்தார்கள். ( அல்குர்ஆன்: 11: 69 -73 )
3) நல்ல குழந்தைகள் கிடைக்கவும் துஆச் செய்ய வேண்டும்:
இறைத்தூதர்கள்
தங்களுக்கு குழந்தை பாக்கியத்தை வேண்டும் போது நல்ல குழந்தைகளைத் தருமாறு
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
எனக்குப் பின்
உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக
இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்)
பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!” என்று (ஸக்கரிய்யா)
கூறினார். ( அல்குர்ஆன்: 19:
6 )
ஸக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச்
செவியுறுபவன்”
என்று தம் இறைவனிடம் வேண்டினார். ( அல்குர்ஆன்: 3: 38 )
2) Psychology உளவியல் வழிகாட்டல்..
நாம் இனிமேல்
குழந்தை பெறவே மாட்டோம். நமக்கு குழந்தை பாக்கியமே கிடையாது என்று நினைத்து
விடக்கூடாது. மாறாக,
1) அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று இந்த நிலை என்று மனதில் நினைத்து கொள்ள
வேண்டும்.
وَنَبْلُوْكُمْ
بِالشَّرِّ وَالْخَیْرِ فِتْنَةً
பரீட்சைக்காக
கெடுதியையும்,
நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். ( அல்குர்ஆன்: 21:
35 )
2) பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும்.
قَالَ
رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ
أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ
أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ
صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ .
நபி ﷺ கூறினார்கள்: ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை.
அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நலவாக அமைந்துவிடுகிறது. இது ஓர் இறை
விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும்
விஷயம் ஏற்பட்டால்,
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாய்
அமைகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு
நலவாய் அமைகிறது. அறிவிப்பவர்: ஸுஹைப், (ரலி), ( நூல்: முஸ்லிம் )
3) கடமைக்கு இணையாமல் குழந்தை பாக்கியம் ஆதரவு வைத்து இணைய வேண்டும்.
இன்றைய வாழ்வில்
தம்பதியர் இல்லற வாழ்வில் ஈடுபடுவது என்பது இயந்திரத் தனமானமானதாக மாறி விட்டது.
மாறாக, உளவியல் ரீதியாக மனம் ஒன்றித்தே தம்பதியர் இல்லற வாழ்வில் ஈடுபட வேண்டும்
என்றும்,
அதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
عَنْ
ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «لَوْ أَنَّ
أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ: بِسْمِ اللَّهِ،
اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا؛
فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ، لَمْ يَضُرَّهُ
شَيْطَانٌ أَبَدًا»
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன்
தாம்பத்திய உறவுகொள்ள விரும்பும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான் வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்… இறைவா! எங்களைவிட்டு
ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும்
ஷைத்தானை விலக்கிவைப்பாயாக) என்று பிரார்த்தித்து, அந்த உறவினால் அந்தத் தம்பதியருக்கு விதிக்கப்பட்டு குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை. என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
4) நமது துஆ ஒரு
போதும் வீணாகாது எனும் நம்பிக்கை வேண்டும்.
நாம் கேட்கக்கூடிய
துஆவில் அல்லாஹ் ஐந்து விஷயங்களை கையாளுகிறான். 1, நாம் கேட்டதைத் தருகிறான். அல்லது நாம் கேட்டதைத் தராமல் அதற்கு பகரமாக அதை
விட சிறந்த ஒன்றைத் தருகிறான். அல்லது நமக்கு வர இருக்கும் ஒரு ஆபத்தைத் தடுத்து
விடுகிறான். அல்லது எதையும் தராமல் அதற்கு பகரமாக மறுமையில் நம் அந்தஸ்தை
உயர்த்துகிறான். அல்லது அதற்கு பகரமாக நம் பாவங்களை அழித்து விடுகிறான்.
قال
النبي "صلى الله عليه وسلم": (ما من مسلم يدعو الله عز وجل بدعوة ليس
فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث خصال: إما أن يعجل له دعوته،
وإما أن يدخرها له في الآخرة، وإما أن يصرف عنه من السوء مثلها. قالوا: إذن نكثر،
قال: الله أكثر) رواه أحمد الراوي: أبو هريرة المحدث: الترمذي - المصدر: سنن
الترمذي -الصفحة أو الرقم: 3677
அடியான் கேட்கின்ற
அனைத்து துஆக்களுக்கும் அகீகாரம் உண்டு. அடியான் துஆ கேட்கும் போது மூன்றில் ஒரு
விஷயம் நடைபெறும். 1,அவன் கேட்டது உலகத்திலேயே கிடைத்து விடும்.அல்லது 2, மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும்.அல்லது 3, அவன் கேட்ட துஆவின் அளவு அவன் பாவங்கள் மன்னிக்கப்படும். துஆவில் மூன்று விஷயங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். 1, பாவமான காரியம் குறித்து கேட்காமல் இருக்க வேண்டும். 2, துஆ கேட்பவன் உறவை முறிக்காதவனாக இருக்க வேண்டும். 3, அவசரம் காட்டாமல் இருக்க வேண்டும். ( நூல்: திர்மிதி )
நாம் குழந்தை
பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்கிறோம். ஆனால், குழந்தை பாக்கியம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது என்றால், ஒரு வேளை அந்த குழந்தை பாக்கியத்தால் நமக்கு வர இருக்கும் ஆபத்தை தவிர்க்கவே
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாடுகிறான் என்பதாக உளப்பூர்வமாக நம்ப வேண்டும். ஏனெனில், நூஹ் அலை அவர்களுக்கு அல்லாஹ் குழந்தை பாக்கியம் வழங்கி, இறுதியில் இப்படி சொன்னான்.
வெள்ளப்
பிரளயத்தில் சிக்கி நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் தம் மகனை காப்பாற்றுமாறு
வேண்டிய நூஹ் அலை அவர்களைப்பார்த்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன்...
وَنَادٰی
نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِیْ مِنْ اَهْلِیْ وَاِنَّ وَعْدَكَ
الْحَقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِیْنَ
நூஹ் தன்
இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி
வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார்.
قَالَ
یٰنُوْحُ اِنَّهٗ لَیْسَ مِنْ اَهْلِكَ اِنَّهٗ عَمَلٌ غَیْرُ صَالِحٍ فَلَا
تَسْـَٔلْنِ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ اِنِّیْۤ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ
الْجٰهِلِیْنَ
அ(தற்கு இறை)வன்
கூறினான்: “நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம்
செய்கிறேன்.”
( அல்குர்ஆன்: 11: 45-46 )
3) மருத்துவ வழிகாட்டல்...
குழந்தையின்மை
பிரச்சினை என்பது ஆண் பெண் உடலில் ஏற்படும் சில குறிப்பிட்ட குறைபாடுகளால்
ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, இஸ்லாம் மருத்துவ
சிகிச்சை மேற்கொள்ள எந்த தடையும் விதிக்கவில்லை.
تَدَاوَوْا
فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ لَهُ دَوَاءً
غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ
».
அல்லாஹ்வின்
அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல்
அல்லாஹ் இறக்கவில்லை என்று நபி ﷺ
அவர்கள் கூறினார்கள். அறி: உஸாமா பின் ஷரீக் (ரலி) ( நூல்: அபூதாவூத்,
திர்மிதீ )
எல்லா நோய்க்கும்
அல்லாஹ் பூமியில் நிவாரணத்தை அருளியிருக்கிறான் என்றும், அதை நாம் தேடிப் பெற்று சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் எனவும் நபிகளார்
வலியுறுத்துகிறார்கள்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
قَالَ : مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلاَّ أَنْزَلَ لَهُ شِفَاءً.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. அறி: அபூஹுரைரா (ரலி),
( நூல்: புகாரி )
عَنْ
جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ
« لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ
بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ
».
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்கூறினார்கள்: ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக
அமைந்துவிட்டால்,
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம்
ஏற்படும்.
அறி : ஜாபிர் (ரலி),
(
நூல்: முஸ்லிம் )
நாம் மேற்கொள்ளும்
மருத்துவ சிகிச்சை முறைகள் இஸ்லாம் தடுக்காத மருத்துவ சிகிச்சைகளாக இருக்கும் வரை.
وَعَنْ
أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ اللَّهَ
لَمْ يَجْعَلْ شِفَاءَكُمْ فِيمَا حَرَّمَ عَلَيْكُمْ. أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ،
وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
உம்மு ஸலமா (ரலி)
அவர்கள் அறிவித்தார்கள்: "அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்களுக்கு ஹராமாக
ஆக்கியதில் நிச்சயமாக அவன் உங்களுக்கான நிவாரணத்தை ஆக்கவில்லை" என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னு ஹிப்பான், பைஹகீ )
கடந்த காலங்களில்
குழந்தையின்மை பிரச்சினையை எதிர் கொண்ட இஸ்லாமிய தம்பதியர் மூன்று முறைகளை
கையாண்டு வந்துள்ளனர்.
1) அல்லாஹ்வின் விதி
இதுவென்றால் அப்படியே கபூல் செய்து கணவன் மனைவியாக வாழ்ந்து கொள்வோம்.
2) விவாக விலக்கு
பெற்று வேறொரு திருமண பந்தத்தின் மூலம் குழந்தை பாக்கியம் பெற்றுக் கொள்வோம்.
3) உறவு முறையில் ஒரு
குழந்தையை தத்தெடுத்துக் கொள்வோம்.
ஆனால், 1978 க்கு பிறகு மருத்துவ உலகம் டெஸ்ட் டியூப் பேபி எனும் சாதனை ஒன்றை நிகழ்த்த
அதன் பின்னர் குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படும் தம்பதியர் டெஸ்ட் டியூப்
பேபி முறையை நோக்கி நகர ஆரம்பித்தனர்.
லெஸ்ஸி - -ஜான்
பிரவுன் தம்பதியினருக்கு,
ஒன்பது ஆண்டுகளாக குழந்தை இல்லை என, மருத்துவர் பேட்ரிக் ஸ்டெப்டோவை அணுகிய போது, அவர் தான்,
'டெஸ்ட் டியூப்' குழந்தை பிறக்க முதன்
முதலில் வழிவகுத்தார்.
ஜூலை 25, 1978ல் தான்,
உலகின் முதல், 'டெஸ்ட் டியூப்' குழந்தை பிறந்தது.
இங்கிலாந்து
நாட்டில்,
ஓல்ட் ஹாம் ஜெனரல் மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு, லுாயீஸ் ஜாய் பிரவுன் என, பெயர் சூட்டினர்.
அவரும் வளர்ந்து, திருமணமாகி,
ஒரு குழந்தைக்கும் தாயாகி, 48 வயதிலும் முழு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்.
இன்று உலகில் ஒரு
கோடிக்கும் மேற்பட்ட,
'டெஸ்ட் டியூப்' குழந்தைகள் உள்ளனர்.
தற்போது
குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படும் இஸ்லாமிய தம்பதியரும் டெஸ்ட் டியூப்
பேபி முறையை நோக்கி மெல்ல நகர ஆரம்பித்துள்ளனர்.
டெஸ்ட் டியூப்
பேபியின் வடிவம் தான் இன்று Artificial conception செயற்கை கருத்தரிப்பு என்ற பெயரில் இயங்கி வருகிறது. இதில் தொழில்நுட்பங்களைப்
பொறுத்து (IUI)
ஐயூஐ, (IVF)ஐவிஎஃப், (ICSI)ஐசிஎஸ்ஐ போன்றவை உள்ளன என்று நாம்
துவக்கத்திலேயே குறிப்பிட்டோம்.
செயற்கை
கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் இஸ்லாமிய தம்பதியர் IUI முறையையும்,
IVF -ல் முதல் முறையையும் மேற்கொள்ளலாம் என இஸ்லாமிக் ஃபிக்ஹ்
அகாடமி மற்றும் கராரத் அல் மஜ்மா மக்கா அல் முகர்ரமா ஃபிக்ஹ் தீர்ப்பாயம் ஃபத்வா
தந்துள்ளன.
மற்ற முறைகள்
அனைத்தும் இஸ்லாம் தடுத்திருக்கும் ஜினா - விபச்சாரத்தின் வழிமுறைக்கு ஒப்பாக
இருப்பதாக குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஹராம் என்று
ஃபத்வா வழங்கி இருக்கின்றது.
எனவே, குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படும் இஸ்லாமிய தம்பதியர்
விழிப்புணர்வோடு செயல்பட்டு இஸ்லாமிய வழிகாட்டலை மேற்கொண்டு மனம் குளிரும் மழலையர்
பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட விழையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் மகத்தான குழந்தை பாக்கியத்தை நமக்கும் நமது சந்ததியினருக்கும் சமூகத்தில்
யாரெல்லாம் குழந்தை பாக்கியம் வேண்டி ஆதரவு வைத்துள்ளார்களோ அனைவருக்கும்
வழங்கியருள்வானாக!
ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:
Post a Comment