Tuesday, 24 February 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 08 அல்லாஹ்விற்காக பொருளாதாரத்தை தியாகம் செய்ய முன் வருவோம்!

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 08

அல்லாஹ்விற்காக பொருளாதாரத்தை தியாகம் செய்ய முன் வருவோம்!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் ஏழாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, எட்டாம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

இன்றைய தராவீஹ் தொழுகையில் அல் அன்ஃபால் அத்தியாயமும் அத் தவ்பா அத்தியாயத்தின் 93 வசனங்களும் ஓதப்பட்டு இன்றுடன் அல்குர்ஆனின் 3 -ல் ஒரு பகுதி 10 ஜுஸ்வுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இன்று ஓதப்பட்ட 168 வசனங்களில் அல் அன்ஃபால் அத்தவ்பா இரண்டு சூராவிலும் சேர்த்து சுமார் 6 இடங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பொருளாதாரத்தை தியாகம் செய்ய அழைப்பு விடுக்கின்றான்.

அத்துடன் நில்லாது அதனால் ஏற்படும் நன்மைகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அறிவுறுத்துகின்றான்.

اَلَّذِیْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ اَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللّٰهِ وَاُولٰٓىِٕكَ هُمُ الْفَآىِٕزُوْنَ 

எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.

یُبَشِّرُهُمْ رَبُّهُمْ بِرَحْمَةٍ مِّنْهُ وَرِضْوَانٍ وَّجَنّٰتٍ لَّهُمْ فِیْهَا نَعِیْمٌ مُّقِیْمٌ 

அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.

خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا اِنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْم

அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அவர்களுக்கு) மகத்தான (நற்) கூலி உண்டு. ( அல்குர்ஆன்: 9: 20-22 )

பொருளாதாரத்தை அல்லாஹ்விற்காக தியாகம் செய்வதால், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதால், அர்ப்பணிப்பதால் ஆறு விதமான நன்மைகள் வழங்கிடுவாதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உத்திரவாதமும் அளிக்கின்றான்.

1) அல்லாஹ்விடம் மகத்தான அந்தஸ்து கிடைக்கும்.

2) ஈருலகிலும் வெற்றியாளர்.

3) ஈருலகிலும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும்.

4) ஈருலகிலும் அல்லாஹ்வின் திருப்தியை பெறுவார்.

5) மறுமையில் சுவனம் கிடைக்கும்.

6) மகத்தான கூலி வழங்கப்படும்.

ஒரே நேரத்தில் ஆறு விதமான நன்மைகளைப் பெற்றுத்தரும் சிறந்த காரியமாக பொருளாதார தியாகம் அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

اقترن جهاد المال بجهاد النفس في القرآن في عَشَرة مواضع، تقدَّم فيها جهاد المال على الجهاد بالنفس في تسعة مواضع، وتقدَّم جهاد النفس على جهاد المال في موضع واحد، ولذلك حِكَمٌ وأسرارٌ، وقف عليها المفسرون، رحمهم الله.

உயிராலும், பொருளாலும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்க அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் சுமார் பத்து இடங்களில் அறை கூவல் விடுகிறான்.

அதில் ஒன்பது இடங்களில் உயிரை விட பொருளாதாரத்தையே முற்படுத்தி கூறுகின்றான்.

இன்று ஓதப்பட்ட தவ்பா அத்தியாயத்தில் 5 இடங்களிலும் 20,41,44, 81, 88, அந்நிஸா 95,அல் அன்ஃபால் 72, அல் ஹுஜுராத் 15, அஸ் ஸஃப் 11, 

ஒரேயொரு இடத்தில் மட்டுமே தவ்பா 111, பொருளாதாரத்தை விட உயிரை முற்படுத்தி கூறுகின்றான்.

ஏன் அல்லாஹ் உயிரை விட பொருளாதாரத்தை முற்படுத்தி கூறுகின்றான் என்பதற்கு முஃபஸ்ஸிரீன்கள் - இறைமறை விரிவுரையாளர்கள், அறிஞர் பெருமக்கள் ஏராளமான விளக்கங்களை அள்ளித் தந்துள்ளனர்.

எனினும் அதில் இரண்டு விளக்கங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

1) மனிதன் பொருளாதாரத்தின் மீது அளவு கடந்த நேசம் வைத்தவனாக இருக்கின்றான். அவ்வளவு எளிதில் அவனால் பொருளாதாரத்தை செலவு செய்திட இயலாது.

وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّۭا جَمًّۭا

இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.

( அல்குர்ஆன்: 89: 20 )

2) பொருளாதார தேடல் என்பது முடிவற்றதாக இருக்கிறது.

اَلْهٰىكُمُ التَّكَاثُرُ

செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது.

حَتّٰی زُرْتُمُ الْمَقَابِرَ 

நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. ( அல்குர்ஆன்: 102: 1, 2 )

3) பொருளாதாரமே அவனை நிலைத்திருக்கச் செய்கிறது என்று எண்ணுகிறான்.

ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُ

(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُ

நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். ( அல்குர்ஆன்: 104: 2, 3 )

இரண்டு, ஒரு உயிர் என்பது ஒரு உயிர் தான். ஒன்று ஷஹீதின் அந்தஸ்து. அல்லது கனீமத்துடன் கூடிய வாழ்க்கக். ஆனால், அறப்போரில் பொருளாதார பங்களிப்பு என்பது போர் வீரர்களுக்கு ஆயுதம் வாங்கவும், வாகனம், உணவு இதர செலவுகள், ஷஹீதுகளின் சந்ததிகளுக்கு காப்பீடுகள் என பல்வேறு நிலைகளில் அது உதவுவதாக இருக்கிறது. ஆகவே தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உயிரை விட பொருளாதாரத்தை முற்படுத்தி கூறுகின்றான் என்று விளக்கம் தருகிறார்கள்.

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் இந்த உம்மத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து முதலாவதாக ஸலாம் கூறப்பட்ட பாக்கியம் பெற்றவர்கள்.

முன்மாதிரி முதல் பெண் அன்னை கதீஜா (ரலி)...

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் இந்த உம்மத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து முதலாவதாக சுவனத்தை கொண்டு நேரடியாக சோபனம் பெற்றவர்கள்.

அவர்கள் வாழும் காலத்தில் அவர்கள் தொழுததில்லை. காரணம் தொழுகை கடமையாக்கப்பட வில்லை.

அவர்கள் வாழும் காலத்தில் நோன்பு நோற்றதில்லை. காரணம் நோன்பு கடமையாக்கப்பட வில்லை. இதர வணக்க வழிபாடுகள் ஏதும் செய்ததில்லை.

மாறாக, இந்த தீனுக்காக, இந்த தீனின் வளர்ச்சிக்காக தங்களுடைய வாழ்வில் சம்பாதித்து சேமித்து வைத்திருந்த முழுப் பொருளாதாரத்தையும் செலவளித்தார்கள்.

அவர்களின் கடைசி காலத்தின் பெரும்பான்மையான பகுதிகள் பசியோடும் பட்டினியோடும் தான் கழிந்ததாக வரலாறு சொல்கிறது.

ஆம்! அவர்களின் உயிர் இந்த உலகை விட்டும் பிரிந்த அந்த நாட்கள் மிகவும் கடினமான நாட்கள்.

ஊர் விலக்கம் செய்யப்பட்டு மக்காவை விட்டும் தொலை தூரத்தில் அபூதாலிப் பள்ளத்தாக்கில் தனிமைப்படுத்தப்பட்டார்களே அந்த மூன்றாண்டுகளில் மூன்றாவது ஆண்டில் நிகழ்ந்தது.

ஆனாலும் அன்னை கதீஜா ரலி அவர்கள் அல்லாஹ்விற்காக அத்தனை செல்வத்தையும் அர்ப்பணம் செய்து வலி மிகுந்த அந்த நாட்களை அல்லாஹ்வின் திருப்திக்காக ஏற்றுக் கொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்களே முன் மொழிந்தார்கள்.

وقال الإمام أحمد أيضا : ثنا علي بن إسحاق ، أخبرنا عبد الله ، أخبرنا مجالد ، عن الشعبي ، عن مسروق ، عن عائشة ، قالت : كان النبي صلى الله عليه وسلم إذا ذكر خديجة أثنى عليها بأحسن الثناء ، قالت : فغرت يوما . فقلت : ما أكثر ما تذكرها ، حمراء الشدق ، قد أبدلك الله خيرا منها . قال : " ما أبدلني الله خيرا منها ، قد آمنت بي إذ كفر بي الناس ، وصدقتني إذ كذبني الناس ، وواستني بمالها إذ حرمني الناس ، ورزقني الله ولدها إذ حرمني أولاد النساء " . تفرد به أحمد أيضا ، وإسناده لا بأس به ، ومجالد روى له مسلم متابعة ، وفيه كلام مشهور . والله أعلم .

நபி அவர்கள் கூறினார்கள்: மக்கள் என்னை நிராகரித்த போது அவர் என்னை ஏற்றுக் கொண்டார். மக்கள் என்னைப் பொய்யாக்கிய போது அவர் என்னை உண்மைப்படுத்தினார். மக்கள் எதையுமே எனக்குத் தராமற் தடுத்துக் கொண்ட போது அவர் தமது சொத்துக்களை எல்லாம் எனக்காக அர்ப்பணித்தார்” ( நூல்: அஹ்மத் )

ஒரு முறை நபி அவர்கள் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சொன்னார்கள், “இறைவன் மீது ஆணையாக! எனக்கு கதீஜாவைத் தவிர வேறு நல்ல துணைவி கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக மக்கள் என்னை நபியாக ஏற்க மறுத்த பொழுது என்னைக்கொண்டு ஈமான்கொண்டார்கள். மக்கள் என்னை பொய்யன் என்றபோது, என்னை வாய்மையாளன் என உண்மைப்படுத்தி வைத்தார்கள். மக்கள் எனக்குப் பொருளாதாரத் தடை விதித்தபோது தனது திரண்ட செல்வத்தை வாரிவழங்கி என்னை ஊக்குவித்தார்கள்.அன்னார் மூலமாகவே குழந்தைச் செல்வங்களை வல்ல நாயன் எனக்கருள்பாலித்தான்!“ ( நூல்: ஸுர்கானி, பாகம் – 03, பக்கம் – 24 )

عن علي قال: سمعت رسول الله صلى الله عليه وسلم، يقول: «خيرُ نسائها مريمُ بنتُ عمران، وخيرُ نسائها خديجةُ بنتُ خويلد»، وأشار وكيع إلى السماء والأرض.

அலீ ரலி அவர்கள் அறிவித்தார்கள்: இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை) ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்நபி அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் வகீஉ (ரஹ்) அவர்கள் வானமும் பூமியும் தோன்றிய காலம் முதற்கொண்டு இந்த பூமியில் தோன்றிய பெண்களிலேயே சிறந்தவர்கள் இந்த இரண்டு பெண்களும் ஆவார்கள் என்று கையால் சமிக்ஞை செய்து காட்டினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

عَنْ أَبَي هُرَيْرَةَ قَالَ أَتَى جِبْرِيلُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْكَ مَعَهَا إِنَاءٌ فِيهِ إِدَامٌ أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ فَإِذَا هِىَ أَتَتْكَ فَاقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنْ رَبِّهَا عَزَّ وَجَلَّ وَمِنِّى وَبَشِّرْهَا بِبَيْتٍ فِى الْجَنَّةِ مِنْ قَصَبٍ لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்:- ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா அவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர் தன்னுடன் குழம்பு, உணவு, பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்துச் சொல்லுங்கள். சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு, துன்பங்கள் இல்லாத, முத்தாலான மாளிகையுண்டு என்ற நற்செய்தியையும் சொல்லுங்கள்என்று கூறினார். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

முன்மாதிரி முதல் ஆண் அபூபக்ர் (ரலி)...

ஆண்களில் அபூபக்ர் சித்தீக் ரலி அவர்கள் அல்லாஹ்விற்காக தமது பொருளாதாரம் முழுவதையும் அர்ப்பணித்தவர்கள்.

நபி அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்பட்ட சில நாட்களுக்கு பின்னால் இருந்து நபி அவர்கள் இந்த உலகை விட்டும் விடை பெற்றுச் செல்லும் நாள் வரை நபி அவர்களுடன் ஊரிலும், வெளியூரிலும், பயணத்திலும், யுத்த களத்திலும் நிழலாக தொடர்ந்தவர்கள்.

அல்லாஹ்விற்காக செலவழிக்க வேண்டும் என்றால் அப்படித்தான் செலவு செய்வார்கள்.

அல்லாஹ்விற்காக தியாகம் செய்ய வேண்டும் என்றால் அப்படித்தான் பொருளாதாரத்தை தியாகம் செய்வார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அபூபக்ர் ரலி அவர்கள் செலவினம் குறித்து முன் மொழிந்த வார்த்தை...

روى الإمام أحمد، عن أبي معاوية، عن الأعمش، عن أبي صالح، عن أبي هريرة، عن النبي - صلى الله عليه وسلم - قال: «ما نفعني مال قط ما نفعني مال أبي بكر. فبكى أبو بكر، وقال: وهل أنا ومالي إلا لك يا رسول الله»

அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவித்தார்கள்: அபூபக்ர் ரலி அவர்களின் பொருளாதாரம் எனக்கு பயனளித்தது போன்று வேறெந்த பொருளாதாரமும் எனக்கு பயனளிக்கவில்லை என்று நபி அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூபக்ர் ரலி அவர்கள் அழுதவர்களாக "அல்லாஹ்வின் தூதரே! என் பொருளாதாரம் என்ன என் பொருளாதாரம்? நானும் என் பொருளாதாரமும் உங்களுக்கே அர்ப்பணம் அல்லாஹ்வின் தூதரே" என்று கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

وروى الترمذي (3661) وحسنه عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا لِأَحَدٍ عِنْدَنَا يَدٌ إِلَّا وَقَدْ كَافَأنَاهُ ، مَا خَلَا أَبَا بَكْرٍ ، فَإِنَّ لَهُ عِنْدَنَا يَدًا يُكَافِئُهُ اللَّهُ بِهِ يَوْمَ القِيَامَةِ، وَمَا نَفَعَنِي مَالُ أَحَدٍ قَطُّ مَا نَفَعَنِي مَالُ أَبِي بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا، أَلَا وَإِنَّ صَاحِبَكُمْ خَلِيلُ اللَّهِ وصححه الألباني في "صحيح الترمذي" .

 حديث حسن غريب

நபி அவர்கள் தங்களின் மரண நாட்களை எண்ணிக் கொண்டிருந்த அந்த தருணங்களில் தங்களின் தோழர்களை ஒன்று திரட்டி,

 

என் அருமைத் தோழர்களே! உலகில் வாழும் காலத்தில் எமக்கு யாரெல்லாம் ஆதரவாய், உபகாரியாய் இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த உலகத்திலேயே, நான் உயிரோடு வாழும் காலத்திலேயே பிரதி உபகாரம் செய்து விட்டேன்! இதோ! இருக்கின்றோரே உங்களின் சகோதரர் அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் நேசர் ஆவார். அல்லாஹ்வைத் தவிர மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது எனும் கட்டளை மாத்திரம் இல்லையானால், அபூபக்ர் (ரலி) அவர்களையே நான் என்னுடைய உற்ற நண்பராக தேர்ந்தெடுத்து இருப்பேன்.

அவரின் பொருளாதாரம் எனக்கு பயன் பட்டது போன்று உங்களில் வேறெவரின் பொருளாதாரமும் எனக்குப் பயன் பட்டதில்லை. அப்படிப் பட்ட அபூபக்ர் அவர்களுக்கு மட்டும் என்னால் இந்த உலகில் பிரதி உபகாரம் செய்ய எதுவும் இல்லை. ஆகையால், என் சார்பாக நாளை மறுமையில் அல்லாஹ் அவருக்கு பிரதி உபகாரம் வழங்குவான்என்று கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )

وأخرج سعيد بن الأعرابي عن ابن عمر رضي الله عنهما قال: أسلم أبو بكر رضي الله عنه يوم أسلم وفي منزله أربعون ألف درهم فخرج إلى المدينة في الهجرة وماله غير خمسة آلاف كل ذلك ينفقه في الرقاب والعون على الإسلام.

இப்னு உமர் ரலி அவர்கள் அறிவித்தார்கள்: அபூபக்ர் ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற போது அவர்களின் வீட்டில் நாற்பதாயிரம் திர்ஹம் இருந்தது. அவர்கள் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வரும் போது அவர்களின் வீட்டில் வெறும் ஐந்தாயிரம் திர்ஹம்களே இருந்தது. முப்பத்தைந்தாயிரம் திர்ஹம்களையும் அடிமைகளை உரிமை விடுவதற்கும், சன்மார்க்க காரியங்களுக்கு உதவுவதிலுமே அவர்களின் பொருளாதாரம் செலவிடப்பட்டது. ( நூல்: அஹ்மத் )

وقال يعقوب بن سليمان في تأريخه: حدثنا الحميدي، قال: حدثنا سفيان، حدثنا هشام عن أبيه: أسلم أبو بكر وله أربعون ألف درهم، فأنفقها في سبيل الله؛ أعتق بلالاً، وعامر بن فهيرة، وزنيرة، والنهدية، وابنتها، وجارية بني المؤمل، وأم عبيس.

யஅகூப் இப்னு சுலைமான் (ரஹ்) அவர்கள் தங்களது தாரீக் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்:- அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற போது அவர்களின் வீட்டில் நாற்பதாயிரம் திர்ஹம் இருந்தது. அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையிலேயே செலவு செய்தார்கள். அடிமைகளை விடுதலை செய்தார்கள்.

அவர்களால் உரிமை விடப்பட்டவர்களில் பிலால் ரலி, ஆமிர் இப்னு ஃபுகைரா ரலி, ஜின்னீரா (ரலி - அன்ஹா), நஹ்திய்யா (ரலி - அன்ஹா) மற்றும் அவரது மகள், பனுல் முஅம்மல் கோத்திரத்தாரிடம் பணி செய்து வந்த ஓர் அடிமைப் பெண், உம்மு ஈஸா (ரலி) போன்றோர் அடங்குவர்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக நாளொன்றுக்கு ஒரு தண்டனை எனும் விதமாக புதுப்புது தண்டனைகளை, சித்ரவதைகளை பிலால் (ரலி) அவர்களின் மீது உமைய்யா இப்னு கலஃப் கட்டவிழ்த்து விட்டிருந்தான்.

 

أن النبي صلى الله عليه وسلم قال عندما بلغه ما يلقى بلال من التعذيب: ((لو كان عندنا شيء، لابتعنا بلالاً))،.

 أن أبا بكر اشترى بلالاً وهو مدفون في الحجارة بخمس أواقٍ ذهبًا، فقالوا: لو أبيت إلا أوقية واحدة لبعناكه، فقال أبو بكر: لو أبيتم إلا مائة أوقيه لأخذته

அப்படியாக நாட்கள் கடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் பெருமானார் {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் பிலால் போன்று இஸ்லாத்திற்காக சித்ரவதைகளை தாங்கிக் கொண்டிருப்பபவர்களை நம்மிடம் பணம் மட்டும் இருந்தால் எவ்விலை கொடுத்தாவது அவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம்என கவலையோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் பிலால் (ரலி) அவர்களை உமைய்யா சித்ரவதை செய்து கொண்டிருக்கும் போது அங்கு சென்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் என் இறைவன் அல்லாஹ்! என்று சொல்லும் ஒரே காரணத்திற்காகவா இந்த அடிமையைத் துன்புறுத்துகிறீர்கள்? கொலை செய்து விட வேண்டும் என்று துடிக்கின்றீர்கள்? அவருக்கான விலையைச் சொல்லுங்கள். நான் வாங்கிக் கொள்கிறேன்என்றார்.

உமைய்யா, அபூபக்ர் (ரலி) அவர்களை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு விலையைச் சொன்னான். பேரம் பேசாமல், கேட்ட தொகையை மறுக்காமல் உடனே அத்தொகையைக் கொடுத்து பிலாலை வாங்கினார் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

ஐந்தோ அல்லது. ஏழோ அல்லது நாற்பதோ அவாஃகின் தங்கம் விலையாகக் கொடுத்தார் என்று பல்வேறு அறிவிப்புகள் உள்ளன.

பிலாலை அழைத்துக் கொண்டு, வா போவோம்என்று நடக்க ஆரம்பித்த அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அதிகமான விலை கொடுத்து ஏமாறி விட்டீரே. இதை விட மிகக் குறைவான ( ஒரே ஒரு காசுக்குக் ) விலைக்குக் கேட்டிருந்தாலும் பிலாலைத் தந்திருப்பேனே?” என ஏளனமாகக் கேட்டான் உமைய்யா.

நீதான் ஏமாறி விட்டாய் உமைய்யா. இதைவிட அதிகமான விலையை நீ கேட்டிருந்தாலும் கொடுப்பதற்கு நான் தயாராகவே இருந்தேன் 

இன்னொரு அறிவிப்பில் நூறு அவாக் தங்கம் கேட்டிருந்தாலும் அவருக்காக நான் கொடுத்திருப்பேன்என்று பதில் அளித்து அங்கிருந்து பிலால் (ரலி) அவர்களுடன் விடை பெற்றார் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

தம்மோடு அழைத்து வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கி விட்டோம் என்று பிலாலைத் தம் அடிமையாக ஆக்கிக் கொள்ளவில்லை. மாறாக, பெருமானார் {ஸல்} அவர்களின் சமூகத்திற்கு அழைத்து வந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியவனாக நான் பிலாலை விடுதலை செய்கின்றேன்என்று அந்த நொடிப்பொழுதே விடுதலை அளித்துவிட்டார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

 

அவர்கள் அளித்த அந்த விடுதலையை அடி, உதையிலிருந்து விடுதலை என்று வெறுமெனே சொல்லிவிட முடியாது. மாறாக, மகத்தான, மாபெரும் விடுதலை என்று தான் சொல்ல வேண்டும். ( நூல்: உஸ்துல் ஃகாபா, ரிஜாலுன் வ நிஸாவுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, ஸியரு அஃலா மின் நுபலா )

روى أبو داود (1678)، والترمذي (3675) عن عُمَرَ بْنِ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: "أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا أَنْ نَتَصَدَّقَ، فَوَافَقَ ذَلِكَ مَالًا عِنْدِي، فَقُلْتُ: الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا، فَجِئْتُ بِنِصْفِ مَالِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟)، قُلْتُ: مِثْلَهُ، قَالَ: وَأَتَى أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بِكُلِّ مَا عِنْدَهُ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟) قَالَ: أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ، قُلْتُ: لَا أُسَابِقُكَ إِلَى شَيْءٍ أَبَدًا" والحديث حسنه الألباني في "صحيح أبي داود".

உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- நபி அவர்கள் ஒரு நாள் தர்மங்களைக் கொண்டுவந்து நீங்கள் இங்கு பள்ளியில் ஒன்று சேருங்கள் என்று எங்களுக்கு ஒரு கட்டளை கொடுத்தார்கள். அப்போது என்னிடத்தில் அதிகமாக செல்வம் இருந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள் முடிவு செய்தார்கள்.

இன்று நான் அபூபக்ரை முந்துவதற்கு உண்டான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று தன்னுடைய செல்வத்தில் பாதியை எடுத்துக்கொண்டு நபி அவர்களிடம் வருகிறார்கள். நபி அவர்கள் அவர்கள் கேட்டார்கள்.

உமரே! உங்களுடைய குடும்பத்திற்கு எதை வைத்து விட்டு வந்தீர்கள். அதற்கு, உமர் ரலி அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே!இங்கு கொண்டுவந்த அளவிற்கு அங்கு என் குடும்பத்திற்கு இருக்கின்றது. பாதியைக் கொண்டு வந்துவிட்டேன். பாதி குடும்பத்திற்கு வைத்து விட்டு வந்தேன். அப்போது அங்கிருந்த அபூபக்கரை பார்த்து நபி அவர்கள் கேட்டார்கள்.

 

அபூபக்ரே! உங்களது குடும்பத்தாருக்கு எதை வைத்து விட்டு வந்தீர்கள்? அதற்கு, அபூபக்ர் ரலி அவர்கள்"நான் அவர்களுக்காக அல்லாஹ்வையும், ரஸூலையும்" வைத்து விட்டு வந்தேன்.

அப்போது உமர் ரலி அவர்கள் "அபூபக்ரே! ஒருக்காலும் நான் எதிலும் உங்களை முந்தி விட முடியாது என்று. ( நூல் : அபூதாவூத் )

அல்லாஹ்விற்காக வாரி வாரி பொருளாதரத்தை வழங்கிய மேன்மக்களுக்கு அல்லாஹ் வழங்கிய மேன்மை!

وروى جبير بن نفير، عن عوف بن مالك أَنه رأَى في المنام قبة من أَدَم في مرج أَخضر، وحول القبة غَنَم رَبوض تجتر وتَبعر العجوة، قال: قلت: لمن هذه القبة ؟ قيل: هذه لعبد الرحمن بن عوف. فانتظرناه حتى خرج فقال: يا ابن عوف، هذا الذي أَعطى الله عز وجل بالقرآن، ولو أَشرفت على هذه الثنيه لرأَيت بها ما لم تر عينك، ولم تسمع أذنك، ولم يخطر على قلبك مثله، أَعد. الله لأَبي الدرداء إِنه كان يدفع الدنيا بالراحتين والصدر.

அவ்ஃப் இப்னு மாலிக் அல் அஷ்ஜயீ (ரலி) எனும் சீரிய நபித்தோழர். ஃபத்ஹ் மக்காவின் போது அஷ்ஜயீ கோத்திரத்தாரின் அணியை தலைமையேற்று வழி நடாத்தி தமது கோத்திரத்தாரின் கொடியை நபிகளாரின் ஆணைக்கிணங்க பிடித்தபடி மக்காவில் நுழையும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்.

ஒரு நாள் கனவொன்று கண்டார்கள். அந்தக் கனவில் பரந்து விரிந்த ஓர் சோலைவனம். நிழல் படர்ந்த அடர்த்தியான மரங்கள். அதன் நடுவே உயர்ந்த மாடங்கள் கொண்ட ஓர் அழகிய கூடாரம். முழுக்க தோலினால் ஆன அழகிய கூடாரம் அது. தம் வாழ்நாளில் அதுவரை கண்டிராத கூட்டம் கூட்டமாக செம்மறி ஆட்டின் மந்தை!

இவ்வளவு உயர்ந்த இந்த பூஞ்சோலை யாருக்குரியது?” என வினவினாராம் அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள். தூரத்தில் இருந்து இது அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரியதுஎன்று அசரீரி வந்தது.

அசரீரியைக் கேட்டுக் கொண்டே முன்னெறிய போது கூடாரத்தின் உள்ளிருந்து வெளியேறிய அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், அவ்ஃப் இப்னு மாலிக்கிடம் சொன்னார்களாம்: அவ்ஃபே! இது அல்லாஹ் நமக்கு தருவதாக குர்ஆனில் வாக்களித்திருந்தவைகளாகும்.

அதோ தெரிகிறதே அந்த மேடான பகுதிக்குச் சென்றால் அங்கே நீர் கற்பனைக்கு எட்டாதவைகளை எல்லாம் காண்பீர்என்றார்கள்.

அப்போது அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அது யாருக்கு உரியது அபூ முஹம்மத் அவர்களே?” என்று வினவ, வல்ல ரஹ்மான் தோழர் அபூதர்தா (ரலி) அவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான்.

ஏனெனில், அவர் உலகில் வாழும் போது தமது முழு ஆற்றலையும் பயன் படுத்தி உலக வளங்களை விட்டும், சுக போக வாழ்வை விட்டும் ஒதுங்கி வாழ்ந்தார். ஆதாலால் இன்று மிகப்பெரிய செல்வந்தனாக மாறிப்போனார்என்று அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் பதில் கூறினார்களாம். இதை ஜுபைர் இப்னு நஃபீர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}…., உஸ்துல் காபா )

அல்லாஹ்வின் வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)

மக்காவில் பெரும் செல்வந்தராக வாழ்ந்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக எல்லாவற்றையும் துறந்து ஹிஜ்ரத் செய்து வந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் கையில் வைத்திருந்த இரண்டு திர்ஹம்களைக் கொண்டு மதீனாவின் புகழ்பெற்ற கடை வீதியான பனூகைனுகா கடை வீதிக்கு வழிகாட்டப்பட்டார். 

அல்லாஹ்வின் திருப்பெயரை முன் மொழிந்து கடை வீதிக்குள் நுழைந்த அவர் மாவு, நெய், பாலாடைக்கட்டி என சிறு வணிகம் செய்து லாபம் ஈட்டினார்.

 

உயர்ந்த எண்ணங்களோடும், இலட்சியத்தோடும் அவர்கள் சில திர்ஹத்தோடு வாழ்வைத் துவங்கிய போது அவர்களுக்கு வயது 37 அல்லது 40 தான். அவர்கள் இப்பூவுலகைப் பிரியும் போது 75 வயது.

சற்றேறக்குறைய 35 ஆண்டுகளில் மிகப் பெரும் செல்வந்தராக உருவெடுத்தார்கள். அல்லாஹ்வின் வணிகர் என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வரலாற்றில் இடம் பெற்றார்கள்.

فقال:لقد رأيتني لو رفعت حجرا لوجدت تحته فضة وذهبا.

எந்தளவு அவர்கள் உயர்ந்த இடத்திற்கு வந்தார்கள் என்றால், அவர்களே சொல்வார்களாம்: ஒரு கல்லைத் தொட்டு தூக்கினால் கூட அதன் அடியிலிருந்து தங்கத்தையோ, வெள்ளியையோ பெற்றுக் கொண்டே இருக்கின்றேன். நான் தொட்டதெல்லாம் துலங்கிற்று. என் கை பட்டதெல்லாம் பொன்னாகியதுஎன்று

ما وعده الرسول -صلى الله عليه وسلم-: عبد الرحمن بن عوف في الجنة.

எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணல் நபி அவர்களின் அருள் நிறைந்த வாயால் உலகிலேயே சுவனத்தைக் கொண்டு சோபனம் பெறும் பேற்றையும் பெற்றார்கள்.

ஆம் சுவனத்தைக் கொண்டு சோபனம் பெற்ற பதின்மரில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களும் ஒருவர்.

அவர்களின் பொருளாதாரத்தை சத்திய சன்மார்க்கத்திற்காகவும், ஏழை எளியோருக்காகவும் வாரி வழங்கியதைப் பற்றிய செய்திகளைப் பார்த்தாலே அவர்கள் பெற்றிருந்த செல்வம் எவ்வளவு என்பதை வியப்பின் விளிம்பில் நின்று தான் நாம் உணர முடியும்.

وبلغ من جود عبد الرحمن بن عوف أنه قيل: أهل المدينة جميعا شركاء لابن عوف في ماله، ثُلث يقرضهم، وثُلث يقضي عنهم ديونهم، وثلث يصِلَهم ويُعطيهم.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் செல்வத்தில் மதீனா வாசிகள் அனைவருக்கும் பங்கிருந்ததாம். ஆம்! செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை மக்களுக்கு கடனாக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை மக்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை அவர்களுக்கு தானமாக வழங்குவார்களாம்.

باع في يوم أرضا بأربعين ألف دينار، ثم فرّقها في أهله من بني زهرة، وعلى أمهات المؤمنين، وفقراء المسلمين. وقدّم يوما لجيوش الاسلام خمسمائة فرس، ويوما آخر الفا وخمسمائة راحلة. وعند موته، أوصى بخمسن ألف دينار في سبيل الله، وأ،صى لكل من بقي ممن شهدوا بدرا بأربعمائة دينار،

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் மரண நேரத்தில் செய்த வஸிய்யத்தில் என் செல்வத்தில் 50000, தீனாரை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்து விடுங்கள். பத்ரில் கலந்து கொண்டவர்களில் இப்போது எவரெல்லாம் உயிருடன் இருக்கின்றார்களோ அவர்களில் ஒவ்வொருவருக்கும் 400 தீனார் வீதம் கொடுத்து விடுங்கள்என்று சொல்லி இருந்தார்களாம்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹயாத்தோடு வாழும் காலத்தில் தமது பொருளாதாரத்தில் சரிபாதியை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தார்கள். ஒரு போரின் போது 500 வாகனங்களையும், இன்னொரு போரின் போது 1500 வாகனங்களையும் அர்ப்பணித்தார்கள்.

மதீனாவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான அடகு வைக்கப்பட்ட சுமார் 30000 வீடுகளை தன் சொந்தப் பணத்தில் மீட்டுக் கொடுத்தார்கள்.

ஒரு தடவை 700 ஒட்டகங்களையும், அவை சுமந்து வந்த வியாபாரப் பொருட்களையும் முஸ்லிம்களுக்கு தானமாக வழங்கினார்கள். பிரிதொரு முறை 500 குதிரைகள் சுமந்து வந்த பொருட்களை மக்களுக்கு வாரிக் கொடுத்தார்கள்.

ஒரு முறை தங்களுக்கு சொந்தமான ஒரு இடத்தை விற்று, அதன் மூலம் வந்த 40000 தீனாரை அண்ணலாரின் அருமைத் துணைவியர்களுக்கும், ஏழைகளுக்கும், அவர்களின் சொந்த உறவுகளில் பனூ ஜஹ்ரா குடும்பத்தினரில் சிரமப்படுவோருக்கும் வழங்கினார்கள். ( நூல்: இஸ்தீஆப், தபகாத் இப்னு ஸஅத், ஸியரு அஃலா மின் நுபலா, உஸ்துல் காபா, ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}.... )

அல்லாஹ்விற்காக நமது பொருளாதாரத்தை செலவு செய்ய, தியாகம் செய்ய, அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்க முன் வருவோம்!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் பொருளாதாரத்தை தந்து, அவனுக்காக மனமுவந்து செலவு செய்யும் மனதை தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment